Monday, October 31, 2005

தீபாவளி வாழ்த்துக்கள்!!!!

சக வலைஞர்களே, வாசகர்களே, ரசிகப் பெருமக்களேன்னு ஆரம்பிக்கலாமுன்னு பார்த்தாஎங்கியோ போய் உக்காந்துக்கிட்டுச் சொல்றதுபோல இருக்கே(-:


சரி சரி, எதுக்கு இந்தக் கஷ்டமெல்லாம்? நம்ம வழியிலேயே சொல்லிறலாம்.
எல்லோருக்கும் என் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.


கோபாலும் தீபாவளி வாழ்த்துக்களை, அவர்சார்பா உங்களுக்குச் சொல்லும்படிதுண்டுக்கடுதாசியிலே எழுதிக்காமிச்சார்.


ஏன், ஏன் ஏன்? எழுதிக்காமிக்கணும்? சொல்லமாட்டாராம்மா?அது எப்படிங்க?
தீபாவ்ளி ஸ்வீட்டுன்னு, மேங்கோ பர்ஃபியா இல்லே அல்வாவான்னு தெரியாம ரெண்டுக்கும் இடைப்பட்ட சாதனம் ஒண்ணு செஞ்சேனில்லையா, அதை 'டேஸ்ட்'செஞ்சப்ப இருந்து வாயைத்திறக்காம, சத்தம்கித்தம் போடாம 'ச்சுப்'னு இருக்கார்.எல்லாத்துக்கும் செய்கை, இல்லேன்னா துண்டுக்கடுதாசின்னு ஆகிப்போச்சு.


இப்படின்னு தெரிஞ்சிருந்தா போனவாரமே தீபாவளி ஸ்வீட் செஞ்சுருக்கலாம்(-:


'guy-fawkes'அண்ணன் புண்ணியத்துலே பட்டாஸ் கிடைச்சுருது. டும் டம்னுவெடிக்கறதுக்குக் கிடைக்காது. ஒளிமட்டும்தான். ஒலிக்குத் தடா.
சாஸ்திரத்துக்கு(?) கொஞ்சம் கம்பி மத்தாப்பூக் கொளுத்தித் தீபாவளியை முடிச்சுக்கவேண்டியதுதான்.


அதான் டில்லியிலே, நம்ம அருணா சொன்னதுபோல 'தீபாவெடி' வெடிச்சுட்டாங்கல்லே(-:


இந்த வருசம் சந்தோஷமாக் கொண்டாட முடியாம மனசுக்குக் கஷ்டம் வர்றமாதிரிசில பல சம்பவங்கள் நடந்துருச்சு. இயற்கை அழிவு ஒரு பக்கமுன்னா, மனுஷங்களோடஅலட்சியத்தினாலும், கவனக்குறைவாலும், மத நல்லிணக்கம் இல்லாம மனுஷனைமனுஷனே எதிரியாப் பாவிக்கிற மனோவியாதியாலேயும் விரும்பத்தகாத பல நிகழ்வுகள்நடந்துக்கிட்டு இருக்கு.


இந்தக் கெட்டெண்ணங்கள் எல்லாம் ஒழிஞ்சு, நல்ல ஒரு புதிய சிந்தனையுள்ள உலகம்எல்லாருக்கும் கிடைக்கணும். இதுதான் நான் மனமார வேண்டறது. பண்டிகைக் காலத்தில்மனவெறுப்புங்களையெல்லாம் துடைச்சுப் போட்டுட்டு சந்தோஷமா இருக்கலாம், இருக்கமுடியும்,இருக்கணும்.


எல்லோருக்கும் தீபாவளி, ரமலான் நல்வாழ்த்துக்கள்.


என்றும் அன்புடன்,

துளசி.

Friday, October 28, 2005

ஆன்மீகம் VS சோஷியல்.

தீபாவளி ஸ்பெஷல் 2

அடக்கடவுளே!

ஒரே நாளுலே எதுக்கு ரெண்டு இடத்துலே விழா? எங்கேன்னு போறது? ரெண்டுமே முக்கியமானது.

ஆன்மீகம் இலவசம்.( ஆச்சரியமா இருக்குமே!)

சோஷியல் காசு.

இதுலே பாருங்க, வயசான காலத்துலே ஆன்மீகமா இருக்கறது ரொம்பவே முக்கியமுன்னாலும், இந்தசோஷியல் விழா இன்னொரு வகையிலே முக்கியமாப் போச்சு.

'இந்தியன் சோஷியல் அண்ட் கல்சுரல் கிளப்'போட 'தந்தை'( ஃபவுண்டர்) கோபால்தான். ஆரம்பிச்சது 1997லே.நல்லாத்தான் நடந்துக்கிட்டு வருது. போகாட்டா முடியுமோ? அதுவுமில்லாம, இன்னைக்கு வசூலாகற காசெல்லாம்காஷ்மீர் பூகம்ப நிவாரண நிதிக்குப் போகுது. நாலு டிக்கெட்டுன்னா நாலு டிக்கெட். நஷ்டப்படுத்தலாமோ?


முதல்லே சோஷியலுக்குப் போயிட்டு அங்கே இருந்து ஆன்மீகம்னு முடிவாச்சு.


ஏழுமணிக்கு விழா ஆரம்பம். உதவறதுக்காக கொஞ்சம் சீக்கிரமாப் போனோம். மேடை அலங்காரத்தையெல்லாம்சரிபார்த்துட்டு, தீபாவளி ஜோதிக்காக 200 மெழுகுவத்தி( டீ லைட் கேண்டில்)களை ஏத்திவச்சோம். ஜனங்க வரஆரம்பிச்சாங்க. ரெண்டு எம்.பி.ங்க வேற வந்தாங்க. அதுலே ஒருத்தர் மந்திரி. இவுங்கதான் போன கவர்மெண்ட்டுலேஇம்மிக்ரேஷன் மந்திரியா இருந்தாங்க. அவுங்க ஆஃபீஸ்லே ஒருத்தர் செஞ்ச குழப்படியாலே இவுங்க பதவியைபறிச்சுட்டாங்க. இந்தமுறை இவுங்க காமர்ஸ் மினிஸ்ட்டர். இவுங்க ரெண்டுபேரும் நமக்கு முந்தியே நல்லாத் தெரிஞ்சவுங்கன்றதாலே கொஞ்ச நேரம் 'கப்பா' மாறிக்கிட்டு இருந்தோம். மற்ற எம்.பி. மதுரைக்குப் போய்வந்தவர். மீனாக்ஷிடெம்பிள் பத்திச் சொல்லிச்சொல்லிச் சந்தோஷப்பட்டார். மீனாக்ஷியைப் பத்தியும் இன்னைக்கு ஒரு டான்ஸ் இருக்குன்னு சொல்லிபதிலுக்கு நானும் அவரைக் குஷிப்படுத்தினேன்.முதல் நிகழ்ச்சியே சாப்பாடு. இந்தமுறை வழக்கமா இல்லாம வேற மெனு.இதையும் சொல்லவா, இல்லே சிலர் கண் வைக்கறாங்கன்னு சொல்லாம விடவா? மறுபடியும் ஒருத்தர்(!) கேட்டுக்கிட்டதுக்கு இணங்கமெனுவைப் போடறேன்.


புது மெனு. சிம்பிள். பேல்பூரி, பாவ் பாஜி, தஹி வடா. ஒருவழியா எட்டுமணிக்குக் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆச்சு.ஆரம்பமே ஒருபரதநாட்டியம். குருவாயூர் கிருஷ்ணனைப் பத்திப் பாட்டு. ரெண்டு குட்டிகள் வளரே நன்னாயிட்டுச் செய்து.அப்புறம் மந்திரியம்மா பேசுனாங்க. எப்படி? அடுத்த எலக்ஷன்லே ஓட்டுக்கு இப்பவே அஸ்திவாரம் போட்டமாதிரி.இங்கே நம்ம பார்லிமெண்ட்லே தீபாவளி கொண்டாடப் போறதைச் சொன்னாங்க. போகப்போக ஒருவேளை தீபாவளிக்குலீவு கிடைச்சாலும் கிடைக்கலாம்! ஸ்தானம் உரப்பிச்சு:-)))


ஒரு பண்டிட் வந்து 'பூகம்பத்துலே உயிர் இழந்தவுங்களுக்காக' ஸ்பெஷலா பிரார்த்தனைகள் செஞ்சார்.'காயத்ரி'யோடுமுடிச்சார்.


பாட்டுங்க ஆரம்பிச்சது. இந்த 'கரியோக்கி' வந்தப்புறம் எவ்வளவு வசதியாப் போச்சு பார்த்தீங்களா? ஒரு BGMமும்இல்லாமப் பாடுனா வெறிச்சுன்னு இருக்குல்லே? நம்ம நண்பர் ஒருத்தர்( அய்யோ, இங்கே எல்லாரும் நண்பர்கள்தான்.தெரியாதவுங்க அபூர்வம். அப்படி ஒண்ணுரெண்டுபேர் இருந்தாலும் தெரிஞ்சுக்கவேண்டியதுதான்!) ஒரு பெங்காலிப் பாட்டுபாடுனார். அப்புறம் லண்டனிலே இருந்து வந்த ஒருத்தர் ரெண்டு பாட்டுப் பாடிட்டு, இன்னும் வந்து பாடுவேன்னு 'தம்கி'கொடுத்துட்டுப்போனார்.அதுக்கப்புறம் ஒரு இளைஞர்( பையன்னு சொன்னா நல்லா இருக்காதுல்லே?) 'குச் ந கஹோ,குச் பீனா கஹோ' ரொம்ப அருமையா அட்டகாசமாப் பாடுனார். அவர்பேர் ஜிகர். ஜிகர்தண்டாதான்!


கோபால் சில கரியோக்கி டிஸ்க் தமிழ்ப்பாட்டுங்க வாங்கிவந்துருக்கார். விடப்போறதுல்லே. நானும் ஒரு தமிழ்ப்பாட்டுப்பாடிரணும். எதுக்கு அந்தக் குறையை வைக்கிறது? 'பூப்பூக்கும் ஓசை, அதை கேட்கத்தான் ஆசை' நல்லா வருது.(டச் வுட்)


சலாம் நமஸ்தே படப்பாடல் ஒண்ணுக்கு இங்கே இருக்கற டான்ஸ் ட்ரூப் ஆடுச்சு. இவுங்கதான் நேத்து சங்கம்விழாலே 'ரசிகா' ஆடுனவுங்க. அப்புறம் மதுரை மீனாக்ஷியைப்பத்தி ஒரு அசல் பரதநாட்டியம். இவுங்களும் இங்கேஇருக்கற பரதநாட்டியப் பள்ளி மாணவிகள்தான். நம்ம தோழியோட மகள்தான் இங்கே ஸ்கூல் நடத்தறாங்க. வாரம் ஒருநாள் வகுப்பு.டீச்சர் இங்கே மருத்துவர். ரொம்ப பிஸி.அதனாலே நேரம் கிடைக்கிறது கஷ்டம். இவுங்களுது கொஞ்சம் பெரிய மாணவிகளுக்கு. இவுங்க இல்லாம இன்னொருத்தரும்( அவுங்களும் இன்னொரு தோழியின் மகள்தான்)ச்சின்னப்புள்ளைங்களுக்குச் சொல்லித்தராங்க.இவுங்களோட மாணவிகள் 'என்ன தவம் செய்தனை'க்கு ஆடுனாங்க. சவுத் இந்தியன் டான்ஸ், பரதநாட்டியத்தைப் புகழ்ந்து மேடையிலே பேச்சு போனப்ப, 'என்னவோ நாங்கதான் இதுக்கு அத்தாரிட்டி'மாதிரி பெருமையா உக்காந்துக்கிட்டு ஆமோதிச்சுக்கிட்டு இருந்தோம்:-)


நண்பர் இங்கே 'க்ரோசரி பிஸினெஸ்' செய்றார். சாப்பாடு முழுசும் அவரே ஸ்பான்சார் செஞ்சதுமட்டுமில்லாம,பூகம்ப நிதிக்கு ஒரு பாக்ஸ் வச்சு, அதுலே எவ்வளவு டொனேஷன் சேருதோ அதுக்கு மேட்ச் பண்ணி தானும் தரேன்னுஅறிவிச்சதாலெ பலரும் அதுக்கு நிதிஉதவி செஞ்சோம். நாமாவது இங்கே பத்திரமா குடும்பத்தோட இருக்கோம், பண்டிகைகொண்டாடிக்கிட்டு. பூகம்பத்துலே மாட்டிக்கிட்டவங்க பாவம்தானே?


ஆடறபுள்ளைங்களுக்குத்தான் அலைச்சலாப் போயிருச்சு. ரெண்டு விழாவுலேயும் கலந்துக்கிட்டு ஆடறதாலே இங்கே முடிச்சுட்டுஅங்கே ஓடறதும், அங்கே முடிச்சுட்டு இங்கே ஓடியாறதுமா இருந்தாங்க. அஞ்சுநிமிஷ ட்ரைவ் தூரம்தான்றதாலேசரியாப்போச்சு.


இடைவேளை. டிஸ்ஸர்ட் டைம். ஃப்ரூட் ஸாலட், ஐஸ்க்ரீம், லட்டு, பர்பின்னு சிம்பிளா முடிச்சுக்கிட்டோம். அதுக்கப்புறம்'தாண்டியா'வுக்காக சேர்களையெல்லாம் எடுத்திட்டு ஹாலை ஒழுங்கு செஞ்சாங்க. நாங்க என்ன ஆடவா போறோம்?பக்தி வந்துருச்சு...ஓடு ஆன்மீகத்துக்கு....... ஓடினோம்.


அங்கே ஹவன், பூஜையெல்லாம் முடிஞ்சு, கலை நிகழ்ச்சிகளும் அநேகமா முடியுற சமயம். கடைசி டான்ஸ் மேடையிலே!நம்ம'ஹரே கிருஷ்ணா'வைச் சேர்த்த ரெண்டு குட்டிப்பொண்ணுங்க ஆடறாங்க. முடிஞ்சதுன்னு பார்த்தா அதுக்கப்புறமும்இன்னும் ஒரு நடனம் இருந்துச்சு. மணியும் பத்தரை ஆயிருச்சு.அப்புறம் பரிசளிப்பு. சாப்பாடு ஆரம்பிச்சது.வழக்கமான ஃபிஜி இந்தியன் மெனு. 'ஃபிர்ஸே ஆலூ பைங்கன் பாபா, ஃபிர்ஸே ஆலூ பைங்கன்'!!!
கடவுள் என்ன ரெண்டு வயிறா கொடுத்திருக்காரு? அதனாலே அவுங்க வேண்டுகோளை 'நாசுக்கா' மறுத்துட்டு தெரிஞ்சவங்களோடே(!) கொஞ்சமா கப்பா மாறிட்டு வீடுவர்றப்ப கிட்டத்தட்ட 12 மணி.


த்ரீ டவுன். சிக்ஸ் டு கோ...... ஆச்சு இந்த சனிக்கிழமை மறுபடி மூணு இடத்துலே. போதாக்குறைக்குப் பொன்னமான்னுஒரு பர்த்டே பார்ட்டிவேற. நடக்கற காரியமா? 'ப்ரைவேட் கெட் டு கெதெர்'களை தள்ளிவச்சுட்டு, CFCESSAக்குப்போகணும். இது என்னவா?


Christchurch Fiji Cultural Education Social Sports Association.


ஆம்! அநேகமா அதே பாட்டு, அதே நடனம், அதே ஜனங்கள்......( கங்கைக்கரைத் தோட்டம்....)

Thursday, October 27, 2005

தங்கச்சரிகைச் சேலை.........

இது தீபாவளி ஸ்பெஷல்----1


தங்கச்சரிகைச் சேலை.........

தங்கச் சரிகைச் சேலை எங்கும் பளபளக்க..........

தனியாக வந்தேனைய்யா.......

வந்து நின்று சபைக்கு...வந்தனம் தந்தேனய்யா......

இதோ ஆரம்பிச்சாச்சு தெருக்கூத்து. கட்டியக்கார(ன்)ர் வந்து விளக்கிட்டார் கதை என்னான்னு.


அயோத்தியாவுலே மக்கள் ஆடிப்பாடிக்கிட்டு இருக்காங்க. ரெண்டுபேர் வந்து ராமனையையும்சீதையையும் பத்திப் பேசிக்கிட்டு இருக்காங்க. அப்ப இதோ ராமரே வந்துட்டார். நல்ல தலை அலங்காரம்.சிவந்த உடுப்பு, காலிலே சலங்கை. தகதிமி தகதிமி தங்கத்தோம்....ஆடறார். அடுத்த நிமிஷம் சீதையும்வந்தாச்சு. தங்கச் சரிகைபோட்டச் சிகப்புச்சேலை என்ன, நகை நட்டென்ன, இடுப்பிலே ஒட்டியாணமென்ன,தலைக்குக் கிரீடம் என்ன, நீண்ட கூந்தலென்ன(இடுப்புக்குக்கீழேவரை) சலங்கையும் கொலுசும்போட்டகாலென்ன, ஒரே ஒருகாதில் மாட்டியிருந்த கம்மலென்ன ...ஆஹா ஆஹா ஆஹா....


நல்ல களைபொருந்திய அம்சமான முகம்.பையன் யாருன்னே பிடிபடலை. வேசம் கலைஞ்சாட்டிப் பார்க்கணும்.ராமனை விட்டுட்டு அந்த கதைபேசும் ரெண்டுபேரோட பயங்கர ஆட்டம் போடறாங்க சீதா. கொஞ்சநேரத்துலே ராமரும்சேர்ந்து ஆடிட்டு ஓய்வா உக்காந்துக்கறார். ஆனா சீதாவோட ஆட்டம்தான் தூள்!


ரெண்டுபேர் நாட்டுநடப்பையெல்லாம் சொல்லிக்கிட்டுப் பேசறப்போ ராவணனும் வந்துட்டார். அச்சு அசலா ராமனோட அலங்காரமேதான். ஆனா நிறம் மட்டும் வேற! நீலக்கலர். மீசையும் கொஞ்சம் பெருசு!
ராமாயணம்தான். மேடையைச் சுற்றி ஆடி ஆடி சண்டைபோட்டு ராவணனை சம்ஹாரம் செஞ்சுட்டார் ராமன்.


இங்கே கிறைஸ்ட்சர்ச் நகரத்துலே மொதல்முறையா தெருக்கூத்து.

அபி, யே லாஸ்ட் ஐட்டம் ஏக் ஃபன்னி தெர்க்கூத். லடுக்கன்லோக் பஹூத் கோஷிஷ்கர்க்கி ஆப்க்கோ ஹஸானாசாஹ்த்ரா.....

மேடையிலேயே நாலுபேர் ஓரமா உக்காந்து 'டோலக்,ஜால்ரா, பின்பாட்டுன்னு அமர்க்களப்படுத்தறாங்க.



நடுநடுவில் பத்து , இருபது நாற்பது நூறு,முன்னூறு ன்னு டாலர்ங்க சன்மானம் கிடைக்குது. பேரை அறிவிச்சும், எங்கெயிருந்து வந்தவுங்கன்னு சொல்லியும் காசு சேர்ந்துக்கிட்டே இருக்கு. மொய் வந்துக்கிட்டு இருக்கு:-))


காசு சேர்றதும் நல்லதுக்குத்தான். இன்னிக்கு கிட்டத்தட்ட 400 பேருக்கு இலவசமா சாப்பாடு பந்தி நடந்துருக்கு.இதுல்லாம இனியும் விசேஷங்கள் வருசம் முழுக்க நடக்கத்தான் போகுது.


அதுசரி. எதுக்காக இந்த விழான்னு யாருமே கேக்கலியே? சரி சரி நானே சொல்லிடறேன். சொல்லாட்டா விடவாபோறீங்க?:-))


எல்லாம் 'திவாளி'தான். இங்கே தீபாவளி சீஸன் ஆரம்பிச்சாச்சு! இந்தவருசம் ஒம்போது தடவை கொண்டாடணும்.



எல்லாரையும் முந்திக்கிட்டு அக்டோபர் 22 சனிக்கிழமை ஃபிஜி சவுத் இந்தியன் சன்மார்க்கசங்கம் ( நம்ம குப்புசாமிபூஜை நடத்துவாங்களே, அவுங்கதான்) திவாளி கொண்டாடியாச்சு.


மொதல்லே ஒருமணிநேரம் பூஜை. அதுக்கப்புறம் 40 நிமிஷம் கலைநிகழ்ச்சி. அதுக்கப்புறம் சாப்பாடு. மெனு என்னான்னுசொல்லமாட்டேன். கண்ணு வைக்கிறாங்க சிலர்:-) அதுக்கப்புறம் இன்னும் சில நடனங்கள். அப்புறமாத்தான் தெர்க்கூத்.தமிழே தெரியாதவங்கன்னாலும் பாதிக்குப்பாதி கலைநிகழ்ச்சியிலும் தமிழ்ப்பாட்டுக்குத்தான் ஆடுனது.


என்னதவம் செய்தனை..... யசோதா.....

ரசிகா ரசிகா ரசிக ரசிக ரசிகா....

நெஞ்சினிலே நெஞ்சினிலே....(ஹிந்தி வெர்ஷன்)மதுபன்மே ...............ராதா கைசே ந ஜலே ராதா கைசே ந ஜலே (லகான் படப்பாட்டு)

ஏ.ஆர்.ரெஹ்மான் பாட்டுங்க இப்படி ரெண்டு மூணு, நாலு மொழிகளிலே வந்து நமக்கெல்லாம் நல்லது(!)செஞ்சுக்கிட்டு இருக்கு பாருங்க.

அப்புறம் ஒரு தில்லானா....

ச்சின்னக் குழந்தைகள் சேர்ந்து 'தர்ஷன் தோ கனுஷ்யாம்நாத் மோரே அக்கியான் ப்யாஸி...'பாட்டுக்குஅருமையா ஆடுச்சுங்க. நடுவிலே ஒரு குட்டிப் பாப்பா கையிலே குழலோட கிருஷ்ணனா. செல்லம்போலஇருந்தாங்க எல்லாரும்.


நிகழ்ச்சி முடியறப்பயே ராத்திரி பதினொன்னரை ஆயிருச்சு. நம்ம தெருவிலேயே இருக்கற ஹால்ன்றதாலேரெண்டு நிமிஷத்துலே வீட்டுக்கு வந்துட்டோம்.


இது தீபாவளி சீரி(ய)ஸ். ஒரேடியாச் சொல்லி உங்க வயித்தெரிச்சலை(மட்டும்) கொட்டிக்க விரும்பாததால் கொஞ்சம்கொஞ்சமாச் சொல்லி எல்லா எரிச்சலையும் கொட்டிக்கிறதா முடிவு:-)))))


இன்னும் வரும்
---------------------

தீபாவளி எப்பன்றதுலே சில பேருக்கு... சரி, ஒருத்தருக்குச் சந்தேகம் இருக்கு. அவுங்களுக்கு இந்தப் பதிவைசமர்ப்பணம் செய்யறேன். தீபாவளி, நம்ம வீட்டுலே இருக்கற காலண்டர்படி நவம்பர் 1.

Wednesday, October 26, 2005

Cell ஊஊஊஊஊஊஊஊ

அல்காடெல் வோடஃபோன் ப்ரீபெய்ட் ஒண்ணு 2000லே மகள் கொடுத்தா( அவளுக்குஜப்பான்லே இருந்து ஒண்ணு அப்பா கொண்டுவந்து தந்தாருல்லையா, அதனாலே பழசைக் கழிச்சுக்கட்டநான் இருந்தேனே!) அதையே வச்சுக்கிட்டு காலம் ஓட்டிக்கிட்டு இருந்தேன். வெறும் இன்கமிங் மட்டும்தான்.அதனாலே வருசாவருசம் 'டாப்' பண்ணறகாசு அப்படியே வளர்ந்துக்கிட்டு இருந்துச்சு.

அதுலேகூடப்பாருங்க ஒருவருசம் முடியறதுக்குள்ளே 'டாப்' பண்ணலேன்னா இதுவரை இருந்த காசெல்லாம் போயிருமாம். கவனமாத்தான் வருசாவருசம் 20 டாலர் போட்டுவச்சுடறது. ஒருக்கா பார்த்தா அதை மறந்துட்டேன்.அப்ப நான் ஊர்லெ இல்லே. வந்தபிறகுதான் ஞாபகம் வந்தது.

எப்பவாவது ஃபோனைக் கையிலே எடுத்துக்கிட்டுப் போனாத்தானே? அதுபாட்டுக்கு எப்பவும்போல சார்ஜர்லே குந்திக்கிட்டு இருக்கும், பாவமா. மிஸ்ஸுடு கால்ஸ்,டெக்ஸ்ட் ( இதுதானே எஸ் எம் எஸ்)வந்ததுன்னு மெயில் பாக்ஸ் ஃபுல்தான். 'வெளியே போறப்ப மறக்காமஎடுத்துக்கிட்டுப் போ'ன்னு கோபால் சொல்லிக்கிட்டே இருப்பார். ஞாபகமா மறந்துருவேன்!

அதுலே இருக்கற வசதிகளை ஒண்ணும் பயன்படுத்திக்கக் கத்துக்கவேயில்லை. இதுக்கு நடுவிலே வீட்டுலே ஒரு நகைசெட்டை எங்கியோ வச்சுட்டுத் தேடிக்கிட்டு இருந்தேன். வழக்கமா மகள்தான் அதைப் போட்டுக்கறது. அவள் கிட்டே கேட்டா,எடுக்கவே இல்லைன்னு சொல்லிட்டா. நித்தியப்படி வேலைகள்லே 'காணாமப் போனதைக் கண்டுபிடி'ன்னு ஒரு ஐட்டம்இருக்கு. (இப்பத் தேடல் லிஸ்டுலே இருக்கறது 150 வருச கமாமரேட் காசும், ஷிவாவோட டெத் சர்ட்டிஃபிகேட்டும்,மகள் 'டெண்டூல்கர்'பத்தி ஒரு ப்ரோஷர் செஞ்சு அதுலே அவரோட கையெழுத்து வாங்கிவச்சிருந்ததும். என்ன ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமில்லாமன்னு பார்க்கறீங்களா? எல்லாமே ஒரே கவர்லே போட்டு வச்சிருந்தேன். வீடு மாறுனப்பமிஸ்ப்ளேஸ் ஆயிருச்சு!)


ஒரு நாள் ஏதோ சேலையை எடுக்க பீரோலே அடித்தட்டுலே கையை விட்டப்ப ஒரு பெட்டி தட்டுப்பட்டுச்சு. எடுத்துப்பார்த்தா,'காணாமப்போன கார்னெட் செட்'! அடடா, மகளைக் குடைஞ்சுக்கிட்டு இருந்தோமேன்னு பாவமாயிருச்சு.அவளோ ஸ்கூலில் இருக்கா.


ஒரு டெக்ஸ்ட் கொடுக்கலாமுன்னு பார்த்தா, எப்படின்னு படிச்சுருந்தாத்தானே? போன்கூட வந்த கைடை எடுத்துக்கஷ்டப்பட்டுப் படிச்சு ,எப்படியோ தட்டுத்தடுமாறி ஒரு டெக்ஸ்ட் அனுப்புனேன். 'கெஸ் வாட்? ஃபவுண்ட் நெக்லேஸ் செட். சாரி, ப்ளேம்டு யூ' உடனே அதுக்குப் பதில் வருது,'ஐ டிட்ன் ட் நோ யூகுட் டெக்ஸ்ட்'


இப்பத்தான் போன மாசம், வேற ஃபோன் வாங்கிக்கணுமுன்னு தோணுச்சு. வீட்டுலே அதைப் பத்திச் சொன்னதுக்குஆதரவும் எதிர்ப்பும் வருது. கோபால் ஆதரிச்சு. 'எந்த மாடல் வேணுமுன்னு பார்த்துச் சொல்லு. சிங்கையிலிருந்துவாங்கியாரேன்'னும், மகள், 'அது என்னத்துக்கு தண்டம். ச்சும்மா வீட்டுலே சார்ஜர்லே உக்காரவா? எனக்கு வாங்கித்தாங்க.என்னோடதை அம்மா எடுத்துக்கட்டும்'னும். ங்க்கும்..... எப்பப்பார்த்தாலும் எனக்கு பழசா? முடியாத்....


அப்பப் பழசை என்ன செய்யலாம்? 'தூக்கிப்போடு'ன்னு ரெண்டு குரலில் ஒரே பதில். அப்படி மனசு வந்துருதா என்ன?எதாவது 'ட்ரேட் இன் ஆஃபர்' வருதான்னு பார்த்துக்கிட்டு இருந்தேனா, ஆப்டுச்சு ஒண்ணு போன மாசம்.
ரெண்டு மூணு மாடல் இதுலே பட்டுச்சுதான். ஆனா காசை தண்டம் பண்ணவேணாமுன்னு தீர்மானிச்சுட்டு, 500 ஆஇருந்தது இப்ப சேல் ப்ரைஸ் 400. அதுக்கு ட்ரேட் இன் செஞ்சா இன்னும் 100 கம்மின்னு இருந்ததைப் பார்த்து300க்கு ஒண்ணு வாங்கினேன். அவுங்க போட்டது ஒரே ஒரு கண்டிஷந்தான். கனெக்ட்டடா இருக்கணும், சார்ஜரும் இருக்கணும்.அதான் இருக்கே:-)) கனெக்ஷன்ன்னு சொன்னப்பத்தான் நினைவுக்கு வருது ஒண்ணு சொல்லணுமுன்னு. ஒருக்கா'டாப் பண்ண' மறந்துட்டேன்னு சொன்னேன் பாருங்க, அது. மககிட்டே என்ன செய்யலாமுன்னு கேட்டா, 'அது எக்ஸ்பைரிஆனது, ஆனதுதான். வேற கனெக்ஷன் எடுக்கணும்'னுட்டா.

ஒரு ஈ மெயிலு தட்டிவிட்டேன். பதில் வந்துச்சு.

'ஊர்லே இல்லை. அதனாலே டாப் பண்ண மறந்துட்டேன்.'

'மன்னிக்கணும். இனி புதுசா கனெக்ஷன் எடுக்கணும்'

'அதெப்படி. என்னோட காசெல்லாம் போச்சே. ரெகார்டுலே பாருங்க.தவறாம டாப் பண்ணியிருக்கு இந்தமுறையைத் தவிர.'

'ம்ம்ம்ம்ம்ம்ம் ஆமாம். இப்ப என்ன செய்யலாம்?'

'இப்ப 20க்குப் பதிலா 40 டாலர் டாப் செய்யநான் ரெடி. ஆனா பழசும் போகக்கூடாது.அதுலே 60 டாலர்ஏற்கெனவே இருக்கு' கணக்கை நீங்க ஆக்டிவேட் செஞ்சா, உடனே 40 க்கு டாப்பிங் அப்'


'சரி. இப்ப ரீகனெக்ஷன் தரோம். நீங்க டாப் அப் செஞ்சுடுவீங்கெல்லே?'

'ஷ்யூர். இட்ஸ் அ டீல்'


விடாம மெயிலு போட்டுப் போட்டு உயிரைவாங்கி ரீகனெக்டட் ஆச்சு. இப்ப அக்கவுண்டுலே 100 டாலர்.


பொண்ணுகிட்டே சொன்னதுக்கு அவ ஒரே வார்த்தைதான் சொன்னா,'மைகாட்'னு.


இங்கே எங்கேபார்த்தாலும் பசங்க கையிலே ஒரு செல்ஃபோன் ஒட்டிக்கிட்டு இருக்கு. டுக்குடுக்குன்னுஅதுங்க டெக்ஸ்ட் பண்ணிக்கிட்டே இருக்குதுங்க. 'டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்டு ஸோ மச்'


கைக்கு அடக்கமா புது போன் வந்துருச்சு. சோனி எரிக்ஸன் k700i. இதுலே கேமெரா, ஆர்கனைஸர்,மீடியாப்ளேயர்ன்னு 12 வசதிங்க இருக்காம். ஃபோனைவிட யூஸர் கைடு கனமா மொத்தையா இருக்கு.இன்னும் ஒண்ணும் படிக்கலை. இன்கமிங் கால் எடுக்க மட்டும் தெரிஞ்சுக்கிட்டேன்.


'அப்ப ஃபோனை வாங்கிட்டு என்னதான் செஞ்சே? இப்பவாவது வெளியே போறப்ப கையிலேகொண்டுபோறயா?'ன்னு கேக்கறீங்களா?


இனி ஒண்ணோண்ணாப் படிக்கணும்.


அப்ப ஃபோன்?


அது தன்பாட்டுக்கு தேமேன்னு சார்ஜர்லே குந்திக்கிட்டு இருக்கு!

Tuesday, October 25, 2005

மக்கள் வேண்டுகோளை முன்னிட்டு....





ப்ளொக்கருக்கென்மேல்என்னடி கோபம்என் படத்தைஒ(ழி)ளிச்சிடுது


ஒரு படத்துலே ப்ரவுண் வெஸ்ட்லே இருக்கறவர்தான் நம்ம 'கை கொடுத்த கணேஷ்'


நாலுவரி இல்லேன்னாலும் ப்ளொக்கருக்குக்கோபம் இன்னும் கூடிருமாமே?

Monday, October 24, 2005

எனக்கு 'சாமி' வந்துருச்சு!

கிறைஸ்ட்சர்ச்சில் விஜயதசமி

நம்ம வீட்டிலே விஜயதசமிக்கு ஒரு பூஜை நடந்தது. எல்லார்வீட்டுக்கும் நவராத்திரிக்குமஞ்சள் குங்குமம்/வெத்தலை பாக்கு வாங்கிக்கவும், சில வீடுகளுக்குக் கொலு பார்க்கவும்போற பழக்கம் இங்கே, இந்த ஊர்லே ஆரம்பிச்சுக் கொஞ்சநாளா நடந்து வருது.

வசதியை முன்னிட்டு, இதெல்லாம் வீக் எண்ட் மட்டுமுன்னு ஆகிப்போயிருச்சுல்லே. எல்லாருக்கும்ஒரு வழின்னா, இடும்பனுக்கு வேற வழி இல்லையோ? நான் தான் இங்கத்து 'இடும்பி'. அதனாலேகொலு முடிஞ்சு எல்லாரும்'அப்பாடா'ன்னு இருக்கறப்ப விஜயதசமிக்கு நம்ம வீட்டுக்குக் கூப்புடறதுவழக்கமாயிருக்கு. நம்ம வீட்டுலே 'சாமி' இருக்காருல்லே!
மொதல்லே எனக்கு 'சாமி வந்தது' எப்படின்னு சொல்லவா?

எடுங்க கொசுவத்தியை. ஆ.... கொளுத்தி பக்கத்துலே வச்சுக்குங்க. அந்தப் புகையை உத்துப்பாருங்க.அதுலே மசமசப்பாத் தெரியுதா... அதுதான்.....

வருசம் 1999. வெள்ளிவிழா மணநாள் கொண்டாட்டத்துக்காக உலகை 'இடம்' வந்துகிட்டு இருந்தோம்.இந்தியாவுலே 10 நாள். ஒம்போதாவதுநாள் வந்துச்சு. எல்லாஷாப்பிங்கும் முடிஞ்சது. பாக்கறவங்களைப் பார்த்து, சொந்தங்களைச் சந்திச்சு, திங்க ஆசைப்பட்டதுகளையெல்லாம் 'ஏக்கத்துடன் பார்த்து' முடிஞ்சது. பெட்டிகளையெல்லாம் அடுக்கியாச்சு.தைக்கக்கொடுத்த துணிகள் இன்னும் வரலை. அதுவந்தவுடனே எடுத்துவச்சுக்கிட்டுக் கிளம்பவேண்டியதுதான்.

பகல் சாப்பாட்டுக்குப் போயிட்டு அப்படியே ஸ்பென்சர் ப்ளாஸாவுலே ஒரு சுத்து. 'சிற்பி'னு ஒரு கடை கண்ணுலேபட்டுச்சு. ச்சும்மா ஒரு ரவுண்டு வரலாமுன்னு உள்ளே போனா, அன்பான வரவேற்பு. ச்சின்னதா எருக்கம் பிள்ளையார்இருந்தார். அவரைக் கொண்டுபோகலாமா, இங்கே உள்ளெ விடுவாங்களா இல்லை, மரம்ன்றதாலே தகராறு ஆயிடுமான்னுஒரேதா மனசுக்குள்ளெ குழப்பம்.

அப்ப ,'கண்டதை வாங்கறதுக்குப் பதிலா இந்தமாதிரி ஒண்ணு வாங்கிவையேன் வீட்டுலே'னு இவர் சொல்றார்.எந்தமாதிரின்னு திரும்பிப் பார்த்தா....... அட, ரோஸ்வுட்லே செஞ்ச அழகான ஸ்வாமி மண்டபம்!
'நிஜமாவே வாங்கிக்கட்டுமா?'ன்னு கேட்டேன். ஆமான்னு தலையை ஆட்டுறார். 'சாமி மண்டபம் மட்டும்வாங்குனா எப்படி? அதுக்குள்ளெ வைக்க 'சாமி' வேணாமா?'ன்னு கேட்டதுக்கு, 'என்ன வேணுமோ பார்த்துவாங்கிக்கயேன்'னு பதில் வருது. ஆஹா... இது போதாதா? வாழ்க்கையிலே மொதமொதலா நான் கேட்டு நச்சரிக்காமதானாய் வாங்கிக்கச் சொல்றார்:-)

அழகான மஹாவிஷ்ணு 40 செ.மீ. உயரம், அவருக்கு மேட்ச்சா ஒரு மஹாலக்ஷ்மி. போதுமா?ஊஹூம். போதாது. புள்ளையாரும் வேணுமே. நின்னுக்கிட்டு இருக்கற புள்ளையார். எல்லாரும்பயங்கரக்கனமா இருக்காங்க.

'அதெல்லாம் கவலைப்படாதீங்க, நாங்க நல்லா பேக் செஞ்சு அனுப்பிடறொம். 'ஸீ மெயிலில்' அனுப்புனாஅவ்வளவா செலவாகாது'ன்னு சொல்லிட்டாரு கடைக்காரர். அப்போ அங்கே ஒரு அருமையான சங்கீதம்,கேக்கறதுக்கு 'சாக்ஸஃபோன்'மாதிரி இருக்கு. ஆனா கர்நாடக சங்கீதம்! என்ன ம்யூஸிக் போட்டிருக்கீங்கன்னுகேட்டேன். அங்கெ இருந்த உதவியாளர் பெண்மணி, ஓடிப்போய் அந்த காஸட் கவரைக் கொண்டுவந்து காமிச்சாங்க.'கதரி கோபால்நாத்'னு போட்டிருக்கு. அதையும் மனசுக்குள்ளெ குறிச்சு வச்சுக்கிட்டேன்.

நாளைக்குக் காலையிலே உங்களுக்கு ஃபோன் செய்யறோம். நீங்க வந்து 'பேப்பர்ஸ்'லே கையெழுத்துப் போட்டுரணும்.மத்தவேலையெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்னு சொன்னாங்க.அங்கிருந்து கிளம்பி, பக்கத்துலெ ஒரு 'சோனி ம்யூஸிக்' கடையிலே நுழைஞ்சு அந்தக் கதரி கோபால்நாத், அப்புறம் இன்னும் சில ஸி.டிங்களை வாங்கிக்கிட்டுத் திரும்புனோம்.
இவ்வளவு நேரம் ஆனதுக்கப்புறம்கூட, என்னாலே என்ன நடந்துச்சுன்னு நம்பவே முடியலை. எதாவது வாங்கணுமுன்னு சொன்னாவே'எதுக்கும்மா கண்டதையும் வாங்கறே?'ன்னு சொல்றவர் தானே 'வாங்கிக்க வாங்கிக்க'னு எப்படிச் சொன்னார்?

'ஏங்க, சாமிக்கு இன்னும் சில பூஜைப்பொருட்கள் வாங்கணுமே'ன்னு சொல்லி தங்கமாளிகைக்குள்ளெ, கொஞ்சம்போலபூந்துவிளையாடிட்டு (நம்புங்க. எல்லாம் சாமிக்குத்தான்!)வீட்டுக்குப்போனோம்.

மறுநாள் காலையிலே பத்துமணிவாக்குலே ஃபோன் செஞ்சாங்க. போய் எல்லாவிவரமும் எந்த போர்ட், என்ன விலாசமுன்னு சொல்லி 'பேப்பர்ஸ்' எல்லாம் சரிபார்த்துக் கையெழுத்துப் போட்டுட்டுசொந்தக்காரங்களை, நண்பர்களைப் பார்த்துச் சொல்லிக்கிட்டு, இப்போதைக்குக் கடைசித்தடவையா நல்லஃபில்டர் காஃபி, முறுகலான நெய்ரோஸ்ட்ன்னு கொஞ்சம் உள்ளெ தள்ளிக்கிட்டு ஏர்ப்போர்ட்டுக்குப் போய் சேர்ந்தோம்.

சிங்கப்பூர், சிட்னின்னு சுத்திட்டு ஒருவழியா இங்கே வந்து சேர்ந்துட்டோம். சாமி அடுத்த ஆறுவாரத்துலே வந்துருவாருன்னுசந்தோஷமா இருந்துச்சு. எண்ணி ரெண்டே வாரத்துலே இங்கே 'கஸ்டம்ஸ்'கிட்டே இருந்து ஃபோன்வருது, நமக்குஒரு பார்ஸல் இந்தியாவுலே இருந்து வந்திருக்குன்னு. யார் அனுப்பினாங்கன்னு கேட்டா நம்ம 'சிற்பி'யோட விலாசம்சொல்றாங்க. இவரோ ஊர்லே இல்லே. எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை. ரெண்டுவாரத்துலே எப்படி...? கொரியன் ஏர்வேஸ்லே பறந்துவந்திருக்கார். என்னைவிட்டுட்டு அவராலே இருக்க முடியலை:-)
எல்லாப்பேப்பர்களையும்( நம்ம காப்பி) எடுத்துக்கிட்டுப் போனேன். ட்யூட்டி கட்டணுமுன்னு சொல்றாங்க. அப்புறம்டீ செஸ்ட் லே வந்திருக்கு. ஃப்யூமிகேட் செய்யணும். அதுக்கும் கூடுதலாக் காசு கட்டணுமுன்னு சொன்னாங்க.'இது எங்க மதசம்பந்தமான விக்ரஹங்க. சொந்த உபயோகத்துக்குக் கொண்டுவந்திருக்கேன். ட்யூட்டி, ஜிஎஸ்டி ( இங்கே எல்லாத்துக்கும் goods & service taxes 12 1/2% கட்டிரணும்) கட்டுறேன். ஆனா ஃப்யூமிகேட் செய்யக்கூடாதுன்னு கொஞ்சம் வாக்குவாதம் செஞ்சு ஒரு கண்டிஷனோட ஜெயிச்சேன். பெட்டியைத் திறக்கறப்ப எதாவதுபூச்சி இருந்தா உடனே அந்த மரப்பொட்டியைக்(உள்ளெ இருக்கறதை எடுத்துக்கிட்டுத்தான்) கொளுத்திடணும்.அங்கே கிளியரன்ஸ் வாங்கிக்கிட்டு பெட்டியைவாங்கிக்க வேற இடத்துக்குப் போனேன்.

ஒரு க்யூபிக் மீட்டர் பொட்டி. அங்கே இருந்தவங்களே நம்ம வண்டியிலே ஏத்திட்டாங்க. சாமியோட வீட்டுக்குவந்தேன்.மகளும் ஸ்கூலிலே இருந்து வீட்டுக்கு வந்துட்டா. ரெண்டுபேருமாச் சேர்ந்து பொட்டியைத்திறந்து சாமிங்களை வெளியேஎடுத்தோம். பொட்டியிலே ஒரு பூச்சி பொட்டும் இல்லே.

நம்ம ஹாலிலே மண்டபத்தைச் செட் செஞ்சு சாமிங்களை வச்சாச்சு. அட்டகாசம இருக்காங்க. வீட்டுக்கே ஒரு அம்சம்வந்தமாதிரி இருக்கு. அன்னிக்குச் சின்னதா ஒரு பூஜை செஞ்சாச்சு. இவ்வளவுதூரம் மெனக்கெட்டு வந்தவங்களைச்சரியா உபசரிக்கவேணாமா? எனக்குக் கடவுள் மேலே பக்தி இருக்குன்னாலும், அவ்வளவா பூஜைபுனஸ்காரமெல்லாம்செய்யத்தெரியாது. நான் சோம்பேறி வேற.ஆனா ஒண்ணு, மனசாட்சிக்கு விரோதமில்லாம நடந்துக்குவேன். இந்த 'சாமி'யோ தானாய்த்தான் இங்கே நம்ம வீட்டுக்கு வந்திருக்கார். அவருக்குத் தெரியாதா, நான் எவ்வளவுதூரம் பூஜையெல்லாம் நியமப்பிரகாரம் செய்வேன்னு?

எங்க இவர் டூர் முடிச்சுத் திரும்பிவந்தபிறகு, ஒரு சனிக்கிழமையன்னிக்கு கொஞ்சம் விஸ்தரிச்சுப் பூஜை செய்யலாமுன்னுமுடிவு செஞ்சு, அதேபோல இங்கே இருக்கற நம்ம நண்பர்களைக் கூப்பிட்டு புள்ளையாருக்கும், பெருமாளுக்கும்,தாயாருக்கும் விசேஷ பூஜை செஞ்சுட்டு விஷ்ணு சகஸ்ரநாமம் படிச்சோம். பூஜை முடிஞ்சு பிரசாதம், இரவு சாப்பாடுன்னுஅமோகமா நடந்துச்சு. முப்பது பேருக்குச் சமைக்கவும் முடிஞ்சது. கொஞ்சம் திட்டம் போட்டுச் செஞ்சா மூணுநாள்வேலை. எங்க தோழி ஒருத்தர் பூஜையெல்லாம் நல்லா சம்பிரதாயமாச் செய்வாங்க. அவுங்களையே நம்ம வீட்டுப்பூஜைக்குப் 'பண்டிட்'டா நியமனம் செஞ்சுட்டோம். 'லேடி பண்டிட்!' எவ்வளவு முன்னேறிட்டேன், பார்த்தீங்களா?
அப்புறம் விஜயதசமியன்னிக்கு ஒரு பூஜை செய்யலாமுன்னு தோணிச்சு. அது அப்படியே வருசாவருசம் விஜயதசமிப்பூஜைன்னே ஆயிருச்சு.

இந்தவருசம் வீடு மாத்திவந்துட்டோமில்லையா. இந்த வீட்டுலே மொதத்தடவையாச்சேன்னு கொஞ்சம் கூடுதலானநண்பர்களைக் கூப்புட்டோம். நமக்குத் தெரிஞ்சவுங்கன்னு பார்த்தா ஒரு இருநூத்துக்குமேலே ஆட்கள் இருக்காங்கதான்.ஆனா வீடு கொள்ளாதே. அதனாலே ஒரு 60 பேரைக் கூப்புட்டோம். அதுலே ஒரு நாலுபேர் வரலை.



சாமிப் பிரசாதம் மட்டும் நான் செய்யலாமுன்னும், இரவுச் சாப்பாடு இங்கே இருக்கற இந்தியன் ரெஸ்டாரண்ட்டுலேஏற்பாடு செய்யலாமுன்னும் முடிவாச்சு.

சக்கரைப் பொங்கல்வெண்பொங்கல்எலுமிச்சை சாதம்தேங்காய் சாதம்தயிர் சாதம்சுண்டல்( வெள்ளைக்கடலை)பாயாசம்
இது பிர'சாத' வகை.

ஜீரா ரைஸ்நான் ரொட்டிஉருளை காலிஃப்ளவர் கறிசன்னா மசாலாமிக்ஸட் வெஜி. கறிமட்டர் பனீர்தயிர்வடைகுலாப் ஜாமூன்
இது வெளியிலே ஏற்பாடு செஞ்சது.

பொதுவா இங்கே விசேஷங்களிலே வேலை ஈஸியா இருக்கட்டுமுன்னு டிஸ்போசபிள் தட்டுதானேஉபயோகிக்கறோம். குழம்பு ஊத்துனா அது ஒருபக்கம் வழிஞ்சுக்கிட்டு ஓடுறப்ப ஒரு பதட்டம் வந்துருதில்லே?

நம்ம ரெஸ்டாரண்டு ஓனரே வீட்டு விசேஷங்களுக்கு இருக்கட்டுமுன்னு அம்பது ஸ்டீல் தட்டுங்களும்,அம்பது ஸ்டீல் க்ளாஸும் இந்தியாவுலே இருந்து கொண்டாந்திருக்கார். நம்ம வீட்டுப் பூஜைக்குத் தரேன்னுசொல்லிட்டார். புத்தம் புதுசு. நம்ம வீட்டுலேதான் ஓப்பனிங் செரிமனி. அதைவச்சு சம்பிரதாயமாபந்திவச்சு விளம்பி ஜமாய்ச்சாச்சு. ச்சும்மா சொல்லக்கூடாது. சாப்பாடு நல்ல ருசியா இருந்துச்சுன்னுஎல்லாரும் ஒண்ணுபோலச் சொன்னாங்க.

அன்னைக்கு இரவு எல்லா விருந்தினர்களும் போனபிறகு, நம்ம நண்பர் 'கணேஷ்' வந்து பாத்திரங்களைச்சுத்தம் செய்யக் கைகொடுத்தார். அவர்மட்டும் வரலேன்னா, நாங்க காலி!

புள்ளையாரே 'கணேஷ்' ரூபத்துலே வந்துட்டார்.

இந்தவருஷம் அமோகமா நடந்துச்சு. அடுத்தவருசம்? பொழைச்சுக் கிடந்தாப் பாக்கலாம்.

பி.கு:
இந்தப் பதிவை தாணுவுக்குத் தெரியாமப் படிக்கவும்.

Friday, October 21, 2005

கர்வா ச்சவுத்.






ஹிந்தி சினிமாக்களிலே 'நல்ல குடும்பப் படமு'ன்னா கட்டாயமா ஒரு 'ஸீன்' இருக்கும் இப்படி. நல்ல ஆடைஅலங்காரத்தோட
ஒரு தட்டுலே பூஜைசாமான்கள் குறிப்பா ஒரு அகல்விளக்கு எரிஞ்சுக்கிட்டு இருக்கும், அதைவச்சுக்கிட்டு ஆடிப்பாடி
ஒரு சல்லடையாலே நிலாவைப் பாப்பாங்க. அதுக்கப்புறம் அந்தச் சல்லடையை அப்படியே திருப்பி அவுங்கவுங்க
கணவனைப் பாக்கறமாதிரி 'சீன்' வருமுல்லே.

அது ஒரு விரதம். அதுக்குப் பேர் 'கர்வா ச்சவுத்'ன்றவரைக்கும்தான் எனக்குத் தெரியும். நாலுநாளைக்கு முந்தி,வட இந்தியத்தோழி
ஒருத்தர், 'இங்கே நம்ம ஊர்லே முதல்முறையா இந்த விரதத்துக்குள்ள பூஜையை நம்ம ஹரே கிருஷ்ணா கோயிலிலே
செய்யப்போறோம். நீங்க கட்டாயம் வரணுமு'ன்னு சொன்னாங்க. 'எங்களுக்கு இந்த விரதம் இல்லையே'ன்னு சொன்னேன்.
'ஆனா இதைப் பத்தித் தெரியும்தானே?'ன்னு கேட்டப்ப 'ஆங்... சினிமாவுலே பார்த்திருக்கேன்'னும் சொன்னேன். இப்ப
நேரிலே பார்க்க ஒரு ச்சான்ஸ். விடமுடியுமா? ச்சலோன்னுட்டு நேத்துச் சாயங்காலம் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அங்கே சுமார் ஒரு நாப்பதுபேர் வட்டமா உக்காந்திருந்தாங்க. எல்லார் முன்னாலேயும் ஒரு தட்டு. அதுலே ஒரு
விளக்கு எரியுது. பழம், வளையல், சில்க் கைகுட்டை இப்படி என்னவோ இருக்கு.கூடவே தட்டு பக்கத்துலே
ஒரு ச்சின்னச் சொம்பு( லோட்டா). வட்டத்துக்கு நடுவிலே கொஞ்சம் பழக்குவியல்.

கூட்டத்துலே இருந்த வயதுலே மூத்தவங்களான ஒருத்தர், பூஜைய ஆரம்பிக்கலாமுன்னு சொல்லி, கதையச்
சொன்னாங்க. ( கதை பின்னாலே வருது, பொறுங்க)

சொல்லிக்கிட்டு இருக்கப்பவே அப்பப்ப நிறுத்தி ஒரு பாட்டுப் பாடுனாங்க.அப்ப அவுங்கவுங்க முன்னாலே இருந்த தட்டை உயர்த்திக்
கும்பிட்டுட்டு அதை வலப்பக்கமா அடுத்தவங்களுக்குக் கொடுத்தாங்க. இப்படி எல்லாத்தட்டும் வலம் வருது. அவுங்கவுங்க தட்டு
அவுங்கவுங்களுக்கு வந்து சேர்றவரை அந்தப் பாட்டு ரிப்பீட்டு. ஒரு சுத்து முடிஞ்சதும் கதையைத்
தொடர்ந்து சொன்னாங்க. அப்புறம் தட்டுவலம் + பாட்டு. இப்படியே ஏழுமுறை ஆச்சு. சிலர் பாதியிலே வந்து சேர்ந்துக்கிட்டாங்க.
எல்லாருக்கும் ஏழு முடிஞ்சப்ப இவுங்களுக்கு ரெண்டு மூணுமட்டும் முடிஞ்சிருந்ததாலே அவுங்க தட்டைமட்டும் பாடிக்கிட்டே
வலம்வரச்செய்து அவுங்களுக்கும் ஏழு முடிச்சாங்க.

நமக்குத்தான் தட்டு இல்லையே. அதனாலே என்னைக்கடந்துபோற தட்டுங்களை ஒவ்வொண்ணாக் கவனிச்சுக்கிட்டு இருந்தேன்.
ஒவ்வொன்னும் ஒரு வகை. மண்அகல்விளக்கு, மாவுலே செஞ்ச விளக்கு, பித்தளை விளக்கு, சிலது ஆயில் பர்னருக்கு வைக்கிற
டீ லைட் கேண்டில் இப்படி.
பழமும் வாழை, ஆப்பிள், ஆரஞ்சு இப்படி ரகம்ரகம்.
சிலதட்டுலே என்ன இருக்குன்னே தெரியாம துணியாலே மூடி இருந்துச்சு.
ரெண்டு மூணு தட்டுலே ச்சின்னதா பூரி ஒண்ணு.

லேடீஸ் எல்லாம் நல்ல அலங்காரமா வந்திருந்தாங்க, நகையும் நட்டுமா! சிலருக்கு மூக்குத்தி வேற( எல்லாம் ஒட்டு மூக்குத்திதான்!).
ஆனா எல்லாருக்கும் கலர்கலரா கைநிறைய வளையல்கள்.

பூஜை ஆறுமணிக்கு முடிஞ்சது. இப்ப இங்கெ 'டே லைட் சேவிங்' இருப்பதாலே உண்மையான நேரம் அப்ப அஞ்சு
மணிதான். இவுங்கல்லாம் காலையிலே சூரியன் வரமுந்தியே குளிச்சுச் சாப்பிடணுமாம். அதுக்கப்புறம் தண்ணிக்கூடக்
குடிக்காம விரதம் இருந்து சாயங்காலமா நிலா வந்தபிறகுதான் அதைப் பார்த்துட்டுச் சாப்புடணுமாம். சிலர் சல்லடையாலே
பார்ப்பாங்களாம். சிலர் தட்டுலே தண்ணீர் நிறைச்சு அதுலே பிரதிபலிக்கிற சந்திரனைப் பார்ப்பாங்களாம்.

நம்ம நவராத்திரி பண்டிகை முடிஞ்சு பவுர்ணமி வருதுல்லே. அது கழிஞ்ச தேய்பிறை நாலாம்நாள் சதுர்த்திதான்
இந்த விரதம். கர்வான்னா ஒரு (மண்) சொம்பு. ச்சவுத் நாலாம்நாள்.

கோயிலிலே எடுத்த ஒரு படம் இதோடு போடறேன். வருமான்னு தெரியலை. ப்ளொக்கர் மனசு வைக்கணும்.



இதோ கதை.



ஏழு அண்ணன்மாருக்கு ஒரே ஒரு தங்கச்சி இருந்தாங்களாம். தங்கச்சியைக் கல்யாணம் செஞ்சு
கொடுத்தப்பிறகு, ஒரு விரதநாள் வந்துச்சாம். இது கல்யாணமான பொண்ணுங்க கடைப்பிடிக்கவேண்டிய விரதமாம்.
இந்த விரதம் எடுக்கறதுக்காக தங்கச்சி, தாய் வூட்டுக்கு வந்திருக்கு.

காலையிலிருந்து ஒண்ணும் சாப்புடாம தங்கை விரதம் இருக்காங்களாம். ராத்திரிக்கு நிலா வந்தபிறகு அதைப் பார்த்துட்டுத்தான்
விரதம் முடிக்கணுமாம். அருமைத்தங்கச்சி இப்படிப் பட்டினி கிடக்கறதைப் பார்த்துப் பொறுக்கமுடியாமப் போச்சாம் இந்த
அண்ணனுங்களுக்கு. என்னடா செய்யலாமுன்னு யோசிச்சுப் பார்த்துட்டு, பக்கத்துலே இருந்த மலை உச்சியிலே போய் கொஞ்சம் தீ கொளுத்துனாங்களாம்.
அந்த வெளிச்சம் தெரிஞ்சப்ப, தங்கச்சிக்கிட்டே நிலா வந்துருச்சு பாரு, அந்த வெளிச்சம்தான் தூரத்துலே தெரியுதுன்னு காமிச்சாங்களாம்.

தங்கச்சியும் சரி, இது நிலாவெளிச்சமுன்னு நம்பி, விரதத்தை முடிச்சுக்கிட்டுச் சாப்பாடு சாப்புட்டுட்டாங்களாம்.
அங்கே ஊர்லே தங்கச்சி புருஷனுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம செத்துடறார். காரணம்?விரதத்தைச் சரியா முடிக்காம பாதியிலே விட்டது.
இந்த விவரம் தெரியாத தங்கச்சி புருஷனுடைய ஊருக்குஓடறாங்க. அப்ப வழியிலே நம்ம பார்வதி பரமேஸ்வரனைப்
பாக்கறாங்க. அழுதுகிட்டே இந்த நிலைவந்ததுக்குக் காரணம் கேட்டப்ப, பார்வதி சொல்லிட்டாங்க, நீ இந்த விரதத்தைச் சரியாச்
செய்யலேன்னு. அப்பத்தான் தங்கச்சிக்கு விளங்குது இந்த அண்ணன்மாருங்க செஞ்ச சதி.

பார்வதி & பரமேஸ்வரங்கிட்டே மன்றாடுறாங்க, இது அவுங்க( தங்கச்சி) செஞ்ச பிழையில்லேன்னு. மனம் இரங்குன
சாமிங்க, 'உன்புருஷனுக்கு திரும்ப உயிர் தரோம். ஆனா சீக்காளியா இருப்பான்'னு சொல்லிட்டாங்க.

ஆமாம், தங்கச்சி தங்கச்சின்னே சொல்லிக்கிட்டு வரேன்லெ. பொண்ணு பேரு வீராவதி. அதோட புருஷந்தான்
பக்கத்தூரு ராஜா. வீராவதி அங்கே போய்ச் சேர்ந்தப்ப, ராஜா மயக்கமா கிடக்குறாரு. உடம்பெல்லாம் ஒவ்வொரு
மயிர்க்காலிலும் முள்ளுமாதிரி ஒண்ணு குத்தியிருக்கு. வீராவதி அழுதுக்கிட்டே ஒவ்வொருமுள்ளா எடுத்துப் போட்டுக்கிட்டுப் பக்கத்துலேயே
உக்காந்திருக்காங்க. நாளு ஒண்ணொண்ணாக் கடந்துபோகுது. அப்ப அடுத்த வருசம் விரதம் இருக்கற நாளு வந்துருது. இந்தவருசம் கட்டாயம்
நியமப்படி விரதம் இருந்து புருஷன் நல்ல சுகமாவறதுக்காக சாமி கும்புடணுமுன்னு தீர்மானிச்ச வீராவதி, தாதியைக் கூப்பிட்டுப் புருஷனைப்
பார்த்துக்கச் சொல்லிட்டு பூசைக்கு வேண்டிய 'கரவா'ன்னு சொல்ற மண்சொம்பு வாங்கக் கடைக்குப் போனாங்க.

ராஜா உடம்புலே அப்பப்ப எடுத்த எல்லா முள்ளும் போக ஒரே ஒரு முள் பாக்கி இருக்கு. தாதி அதைப் பிடுங்கிப்
போட்டுருது. ராஜா மயக்கத்துலே இருந்து கண் முழிச்சுடறார். பக்கத்துலே இருந்த தாதியைத் தன் மனைவின்னு(!) நினைச்சுகிடறார்.
இந்தத் தாதியும் ஒண்ணும் சொல்லாம நைஸா இருந்துருது. வீராவதி விரதம் முடிச்சுட்டு வந்து பார்த்தா, ராஜாவும்
தாதியும் சந்தோஷமா இருக்காங்க. வீராவதிக்குத் துக்கம் தாங்கலை. அந்த வீட்டுலே இது இப்பத் தாதியா இருக்கு.

இப்படியே ரொம்பநாளாயிருச்சு. ஒருசமயம் ராஜா, ஊருக்குப் போறார். எதாவது வேணுமான்னு மனைவியை( பழைய தாதி)
கேக்கறாரு. அந்தம்மா பெரிய லிஸ்ட்டா கொடுக்குது. சரி, இந்த வேலைக்காரம்மாவுக்கு( ஒரிஜனல் மனைவி,வீராவதி) எதாவது
வேணுமுன்னா வாங்கியாரலாம்னு பெரிய மனசுபண்ணி அந்தம்மாகிட்டே கேக்கறார்.ஒரேமாதிரி ரெண்டு பொம்மை வாங்கித்தாங்கனு
சொன்னாங்க. அதெமாதிரி வாங்கியாந்தார்.

அந்தப் பொம்மைங்களைவச்சுக்கிட்டு 'ரோலி கி கோலி ஹோகயி,கோலி கி ரோலி ஹோகயி'ன்னு பாடிக்கிட்டே இருக்கு அந்த
வீராவதி. ராஜா இதைக் கவனிச்சுக்கிட்டே இருக்கார். ஒருநாள் வீராவதிகிட்டே கேக்கறார், என்ன பாட்டு அதுன்னு.
'ராணியா இருந்தவ வேலைக்காரி ஆயிட்டா, வேலைக்காரியா இருந்தவ ராணியா ஆயிட்டா'னு பாடறேன்னு சொன்னாங்க.
' அதுக்கு என்னா அர்த்தமு'ன்னு சொல்லுன்றார் ராஜா. வீராவதி இதுவரை நடந்ததையெல்லாம் சொன்னவுடனே ராஜாவுக்கு
உண்மை என்னன்னு புரிஞ்சுடுது(!)

ராணியா இதுவரை இருந்த தாதியை விலக்கிட்டு, வீராவதியை ராணி ஸ்தானத்துலே வச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ்றார்.

இந்த விரதத்தை முறைப்படிச் செய்யாட்டா இப்படிப்பட்ட கஷ்டமெல்லாம் வரும். அதனாலே எல்லாரும் கவனமா
முறைப்படி இந்த விரதம் அனுஷ்டிக்கணுமுன்னு அர்த்தம்.

பின் குறிப்பு:

வீட்டுக்குத் திரும்பி வர்றப்ப எங்க இவர்கிட்டே இந்தக் கதையைச் சொன்னேன். 'நீ விரதம் இருந்திருக்கியா?'ன்னு
கேட்டார். 'என்னாலே விரதமெல்லாம் இருக்கவே முடியாது. அன்னிக்குப் பார்த்துதான் அகோரப் பசி எடுக்குமு'ன்னு
சொன்னேன்.
'நான் இருந்திருக்கேன்'னு சொன்னார்.
'அதான் உங்களுக்கு நல்ல பொண்டாட்டி கிடைச்சிருக்கேன்'னு சொன்னேன்:-)


வீட்டுக்கு வந்து 'நெட்டுலே' இதைப் பத்திக் கொஞ்சம் தேடி இன்னும் சிலவிஷயம் படிச்சேன். அதைப் பத்தி இன்னொருநாள்
சொல்றேன். சத்தியவான் சாவித்திரி, ஃப்ரெண்ட்ஷிப் டே ன்னு கொஞ்சம் போட்டிருக்கு.

(சொந்த மனைவிக்கும் வேலைக்காரிக்கும் வித்தியாசம் தெரியாத புருஷனுக்காக விரதம் வேறயா? இந்த ஊருலேதான்
வேலைக்கு உதவியாளரும் இல்லையே)

அட தேவுடா!!!!!

நியூஸிலாந்து பகுதி 20

மவோரி கதைகள் # 5



எமனை ஏமாத்த முடியுமா?


இறப்புக்குன்னே ஒரு சாமி இருக்காங்க. மக்கள் மண்டையைப் போட்டுட்டு மேலே போனபிறகு, அவுங்க ஆத்மாவைக்
காப்பாத்திப் பாதுகாக்கற சாமி. பேரு 'ஹினே நூயி டெ பொ'. இது மட்டும்தான் இங்கே பொம்பிளைசாமி!

பிறக்கற ஜனங்க சாகாம இருப்பாங்களா? இன்னிக்கும் மரணத்தை எப்படி வெல்லணுமுன்னு ஆராய்ச்சிங்க
நடந்துக்கிட்டுத்தானே இருக்கு. மக்களுடைய வாழ்நாள் நீண்டு இருக்கே தவிர, ஒருநாள் இல்லாட்டா ஒருநாள்
போகாம இருக்கவே முடியாது. ஆதிகாலத்துலே இருந்தே மனுஷன் மரணத்தை முறியடிக்கப் பாக்கறான்,இல்லே?

மொஇ ன்ற பேர் இருந்த ஒரு மவோரி , எப்படியாவது மரணத்தை வெல்லணுமுன்னு திட்டம் போட்டார். இந்த ஒரு
காரணத்துக்காகவே அவருக்கு 'ஹீரோ வொர்ஹிப்'!
அவர் நினைச்சார், 'இந்தமரணத்துக்குரிய சாமியை அழிச்சிட்டா(!) மக்கள் எல்லோரும் மரணபயம் இல்லாம ஜீவிக்கலாமே'ன்னு

இந்தக் காரியத்துக்கு யார்யார் கூட்டு சேரறீங்கன்னு ரகசியமா விசாரிச்சார். வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த சில
பறவைங்க ,'நாங்களும் உனக்குத் துணையா இருப்போம்'னு சொல்லுச்சுங்க. சரியான நேரத்துக்காக காத்துக்கிட்டு
இருக்காங்க.

ஒரு நாள், ஹினே நூயி டெ பொ நல்ல உறக்கத்துலே இருந்தாங்க. அப்ப மொஇ,மத்த பறவைங்க கிட்டே சொல்றார்,
நீங்க எல்லோரும் ஒரு அனக்கமும் இல்லாம கொயட்டா இருங்க. நான் போய் 'சாவுச் சாமி'மேலே பாய்ஞ்சு அதோட
உடம்புக்குள்ளே நுழைஞ்சு அவுங்களைக் கொல்லப்போறேன். இந்தத் திட்டம் 'பக்கா'வா இருக்குன்னு.

பறவைங்க எல்லாம் மூச்சை அடக்கிக்கிட்டு சைலண்டா நிக்குதுங்க. மொஇ மெள்ள ஓசைப்படாம தூங்கற சாமிகிட்டே
போறார். இதோ கிட்டப் போயாச்சு. இன்னும் ஒரு அரைநொடியிலே உடம்புலே புகுந்துரலாம். அப்பப் பார்த்து 'ஃபேன் டெயில்'
பறவை வாலைச ஆட்டிக்கிட்டே 'ஆ'ன்னு சத்தமாக் கத்திருச்சு.

சத்தம் கேட்டு திடுக்குன்னு எழுந்த 'சாவுச்சாமி எமனி'( எமனோட பெண்பால்?) நிலமை என்னன்றதை நொடியிலே
புரிஞ்சுக்கிட்டு, நம்ம மொஇ யை ப்பிடிச்சுக் கொன்னுருச்சு.

அதுக்கப்புறம் 'யாரும் மரணத்தை வெல்லமுடியாது,இருக்கறவரைக்கும் இருக்கலாம். நேரம்வரும்போது
போகலாமு'ன்னு இருந்துடறாங்க. ஜனங்களும் செத்துக்கிட்டேதான் இருக்காங்க.

பாதாள லோகத்துலே நம்ம சாவுச் சாமி 'ஹினே நூயி டெ பொ' இப்பவும் அவுங்க ஆத்மாவையெல்லாம் பாதுகாத்து
வச்சுக்கிட்டு இருக்கு.

இப்ப எங்கியாவது ஃபேன் டெயில் பறவையைப் பார்த்தீங்கன்னாகூட அது ச்சும்மாவே இருக்காது. வால் ஆடிக்கிட்டே இருக்கும்!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Thursday, October 20, 2005

உதவி செய்யுங்க.

தம்பிங்களா & தங்கைகளா,

வீட்டுக்கு ஒரு JAM வந்திருக்கு. Imatன்னு போட்டுருக்கு. PDA with phone etc.
கைக்கு அடக்கமா இருக்கு.

ச்சும்மா எக்ஸ்ப்ளோர் செஞ்சுக்கிட்டு இருந்தப்ப நம்ம தமிழ்ப்ளொக் சைட் அதுலே வருது!
ஆனா எழுத்துங்க மட்டும் குட்டிக்குட்டி சதுரம்(-:

'என்னவோ இருக்கு, ஆனா என்னன்னு தெரியலையே' சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்:-)

எப்படி ஃபான்ட் மாத்தணுமுன்னு தயவுசெஞ்சு சொல்லுங்க. கை துறுதுறுன்னு இருக்கு.

இப்படிக்கு
அக்கா
(கணினி கைநாட்டு)

Wednesday, October 19, 2005

நியூஸிலாந்து பகுதி 19

மவோரி கதைகள் # 4

கதைக்குள்ளே போறதுக்கு முன்னாடி ஒரு மகிழ்ச்சியான விஷயம். ஊழல் குறைந்த நாடுகளோட லிஸ்ட்டுலே
நியூஸிக்கு ரெண்டாவது இடம் கிடைச்சிருக்காம். அட!

சரி. இனி கதை...


பெண்ணை உருவாக்கியது யார்?

ஒவ்வொரு மதமும் ஒண்ணொண்ணு சொல்லுதில்லே? இவுங்க என்ன சொல்றாங்கன்னு பாக்கலாமா?
பெண்ணை உருவாக்குனது ஒரு கூட்டு முயற்சின்றாங்க. ஆங்..அது தெரியாதா? ஒரு ஆணும், ஒரு பொண்ணும்
தானே தயாரிப்பாளர்கள்?

'ஹினே ஆஹு ஓநீ' தான் முதல் பெண்.

காடுகளின் கடவுளான டனே, கொஞ்சம் களிமண்ணை எடுத்து பெண்ணொட உருவத்தைச் செஞ்சார். அவரோட அண்ணன்
தம்பிங்க, அக்காதங்கைங்க எல்லாம் தேவலோகத்துலே போய் நல்லாத் தேடிப்பார்த்து, மத்த அவயவங்களைக் கொண்டு
வந்தாங்க.

கண்ணுலே இருக்கற வெள்ளைப் பகுதிக்கு, அந்தப் பக்கம் மிதந்து போய்க்கிட்டு இருந்த மேகத்துலே கொஞ்சம் எடுத்துக்
கிட்டாங்க. காத்துக்குக் கடவுளான டஃபிரிமடேஆ, அந்த உருவத்தோட நுரையீரலுக்கு மூச்சுக்காத்தைக் கொடுத்தார்.
அப்புறம் இன்னொரு கடவுள், அங்கிருந்த பறவைகளோட சிறகைக் கொஞ்சம் பிய்ச்செடுத்து தலைமுடியை உண்டாக்கினார்.
சண்டைக்கான கடவுள் டுமடாவெங்கா உடம்புலே இருக்கற தசைகளையெல்லாம் ஒழுங்குபடுத்தி எங்கெங்கே எதையெதை
வைக்கணுமோ அங்கங்கே அதையதை வச்சார்.

அமைதிக்கும் சமாதானத்துக்கும் உண்டான கடவுள் ரோங்கா, வயிற்று பாகத்தைக் கொடுத்தார். கடைசியிலே
எல்லாக் கடவுள்களுக்கும் மேலான சுப்ரீம் கடவுளான லொ ஆத்மா, இரத்தம் கொடுத்தார். இப்ப முழுப்
பெண்ணுருவமும் ரெடி.

கடைசியா டனே உயிரை அவளுடைய மூச்சுலே கலந்தார். அடுத்த நொடியிலே 'அச்சூ' ஹினே ஆஹு ஓநீ தும்முனா.
அதுதான் உயிர் வந்ததுக்கு மொதல் அடையாளம்.

இப்படித்தான் உலகின் முதல் பொண்ணு உருவாகியிருக்கா.

எப்படி சுப்ரீம் கடவுள் உட்பட எல்லாக்கடவுள்களும் சேர்ந்து நம்மை உண்டாக்கியிருக்காங்க பார்த்தீங்களா?
பெண்ணை 'சக்தி'ன்னு சொல்றோமே, அதுலே என்ன அதிசயம்?


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Tuesday, October 18, 2005

நியூஸிலாந்து பகுதி 18

சாமியோ சாமி......

வானமே தந்தை, பூமியே தாய் இப்படி எப்பவோ எங்கியோ, எந்த ஜென்மத்திலோ கேட்டமாதிரி
எனக்கு ஞாபகம். உங்களுக்கு?


கடலுக்குகொரு கடவுள் ---Tangaroa
காத்துக்கொரு கடவுள் ---Tawhirimatea
காட்டுக்கொரு கடவுள் ----Tane

சண்டைக்கொரு கடவுள் --- Tumatauenga
சமாதானத்துக்கொரு கடவுள் -- Rongo
சாவுக்கு? இருக்கே, இதுக்கும் ஒரு கடவுள். ஆனா இது, இதுமட்டும்தான் பொண்ணு.
( அழிக்கறதுக்குத்தான் பெண்ணா?) Hine-nui-te-po

தந்தையான ஆகாயம் ---Ranginui
தாயான பூமி -------Papatuanuku

இந்த எல்லா சாமிகளுக்கும் மேலான ஒரு 'சுப்ரீம் சாமி ---- Lo

நம்ம குடும்பத்துலே இறந்துபோன மூதாதையர்க்கெல்லாம் திதி பாத்து தர்ப்பணம் கொடுக்கமுடியாமப்
போச்சுன்னா, எல்லாருக்குமா சேர்த்து மாளய அமாவாசை( அதான் புரட்டாசி, மாசம் வர்ற அமாவாசை
அட இப்ப நடக்குது!)க்கு செஞ்சுறலாம். இல்லேன்னா அவுங்க ஆன்மாவெல்லாம் அங்கே(?) பரிதவிச்சுக்கிட்டு
இருக்கும்னு நம்ம சாஸ்த்திரத்துலேகூட இருக்குல்லே? எப்படியோ முன்னோர்கள் எல்லாம் நம்மைக்
கவனிச்சுக்கிட்டு இருக்காங்கன்ற எண்ணம் இங்கேயும் இவுங்க மத்தியிலே இருக்கு.

மராய்( Marae)ன்னு சொல்ற இவுங்களோட சமூகக்கூடம் ரொம்பவும் புனிதமான இடம். இறந்துபோன
முன்னோர்கள் எல்லாம் அந்த உள்புற சுவர்களிலே இருந்து( மரச்சிற்பங்களா) இருந்து பெரிய
பெரிய பளபளப்பான வட்டக் கண்ணாலே பார்த்துக்கிட்டே இருக்காங்கன்னு ஒரு ஐதீகம்.

மவோரி கார்விங்ன்னு சொல்ற இந்த மரவேலைப்பாடுகள் ரொம்ப அபூர்வமானது. மொதல்லே பார்க்கறதுக்கு
ஏன்னமோ பூதம் பூதமா முழிச்சுக்கிட்டு, நாக்கை நீட்டிக்கிட்டு இருக்குறமாதிரி( நம்ம கிராம தேவதைகள்?)
தோணும். ஆனா, எவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுன்றீங்க? கவனமா செதுக்கப்பட்ட சுவர்ப் பலகைகள்.

இந்த செதுக்குச் சிற்பங்கள்( கார்விங்'குக்கு தமிழிலே என்னன்னு சொல்றது?) எப்படி ஆரம்பிச்சதாம்?

அதுக்கும் ஒரு 'கதை' இருக்கு.

ருஆ ன்னு ஒருத்தர் இருந்தார். அவரோட மகன், பேர் 'மனுருஹி' ஒரு நாளு மீன் பிடிக்கப் போனவன், திரும்பிவரவே
இல்லை. மகனைக்காணோமேன்னு பரிதவிச்ச அப்பா ருஆ அவனைத் தேடிப் போறார். கடலுக்குப் போனவனைக்
கடல்லேதானே தேடணும்? அவரும் தண்ணியிலே குதிச்சுத் தேடிக்கிட்டே போறார். கடலுக்கு அடியிலே
மரச்சிற்பங்கள் எல்லாம் செதுக்கிவச்சிருக்கற ஒரு பிரமாண்டமான ஃபாரெனூயி( மீட்டிங் ஹவுஸ்) இருக்கறதைக்
கண்டிபிடிக்கறார். அது, கடல் கடவுள் 'டங்காரோஆ'வோடது. உள்ளெ மெதுவாப் போய்ப் பார்க்கறப்ப, அவரோட மகனை
இந்தக் கடவுள் ஒரு மரச்சிற்பமா மாத்திவச்சிருக்குது. ருஆவுக்கு பயங்கரக் கோவம். ஆயிரம் இருந்தாலும் அப்பாவாச்சே.
பிள்ளைப்பாசம் இருக்காதா? அங்கேயே ஒளிஞ்சிருந்து, இன்னும் என்ன நடக்குதுன்னு பார்க்கறார்.

கடல் சாமி 'டங்காரோஆ' வோட பிள்ளைங்க எல்லாம் தூங்கறதுக்குக்காக அந்த இடத்துக்கு வராங்க.படுத்துத் தூங்கிட்டாங்க.
அப்ப ஓசைப்படாம நம்ம ருஆ போய் அவரோட மகன் மனுருஹியோட சிற்பத்தையும், இன்னும் கைக்கு எட்டுன
சில சிற்பங்களையும் எடுத்துக்கிட்டு, அந்த ஃபாரெனூயிக்கு தீ வச்சுடறார். அப்புறமும் அந்தக் கதவுக்குப் பக்கத்துலே
ஒளிஞ்சு நிக்கறார். கையிலே 'படு'(patu)ன்னு சொல்ற தடியை வச்சிருக்கார். எரியற தீயிலிருந்துத் தப்பிக்கறதுக்காக
கடல்சாமியோட பசங்க வெளியே ஓடிவராங்க. அவுங்க வரவரத் தடியாலே ஒவ்வொருத்தரையும் ஒரே போடாப்
போட்டுக் கொன்னுக்கிட்டே இருக்கார். அப்படியும் சிலர் தப்பிச்சுப் போயிடறாங்க. அப்படிப் போனவங்கதான் 'சுறா மீன்,
ஸ்டிங்ரே,ஆக்டோபுஸ், ஸ்நாப்பர்'ன்னு சிலர். இவுங்களை இப்பவும் கடலிலே பார்க்கலாம்.

வருத்தத்தோட கரைக்குத் திரும்புன ருஆ, தன் மகனோட சிற்பத்தையும், இன்னும் கொண்டு வந்திருந்த சிற்பங்களையும்
மத்த மவோரிங்களுக்குக் காமிச்சு, அவுங்களுக்கெல்லாம் இந்த சிற்பக்கலையான 'ஃபகைரோ( whakairo)வைச்
சொல்லிக்கொடுத்தார். (இவுங்க மொழியிலே wha என்பதை ஃப ன்னு உச்சரிக்கிறாங்க)


*************************************************************************************

Monday, October 17, 2005

நியூஸிலாந்து பகுதி 17

மவோரி கதைகள் # 2


வானவில்

லேசா மழை தூறிக்கிட்டு இருக்கு. சூரியனும் இன்னும் வீட்டுக்குப் போகலை. நேரமோ சாயந்திரம்.
அட என்ன அது தொலைதூரத்துலே மினுங்கறது?

அதுவா , அதுதான் வானவில். நம்ம சாமி ஸ்ரீ ராமர் இருக்காரே, அவரோட கையிலே இருக்கற வில்.
இது ச்சின்னப் புள்ளையா இருந்தப்ப என் பாட்டி சொல்லிக் கேட்டது.

கொஞ்சம் விவரம் தெரிஞ்சு பள்ளியிலே படிக்கிறப்ப 'கதை' வேற மாதிரிப் போச்சுல்லே. ஆனா....
அதேதான் ராமன்ஸ் எஃபெக்ட்.( அட! இதிலும் அவர் பேரு ராமன் தான் பார்த்தீங்களா?)

போ, பாட்டி. சூரிய வெளிச்சத்துலே ஏழு கலர் இருக்கு. அதுதான் தண்ணியூடாப் பிரதிபலிச்சு இப்ப
வானவில் தெரியுது. நட்டநடுப் பகல் இப்படி வெய்யிலும் மழையும் ஒண்ணாவந்தாலும் வானவில் தெரியாது. ஆமாம்.

பாட்டிக்கு ஒரே பூரிப்பு. உன்னைப்போல படிச்சவளா நானு? எதோ என்னோட பாட்டி சொல்லித்தந்தது இப்படி. நீ உன் பேரப்
பசங்களுக்கு புதுசாச் சொல்வே,இல்லே?

ஒவ்வொரு நாட்டுலேயும் பாட்டிங்க வேறவேற கதை சொல்லிக்கிட்டு இருந்திருப்பாங்கல்லே? சரி. இங்கே பாட்டிங்க
என்ன சொன்னாங்களாம்?


அந்தக் காலத்துலே யூனுகு( Uenuku )ன்னு ஒருத்தர் இருந்தார். அவர் இங்கே எல்லாருக்கும் தலைவரா இருந்தார். அவருக்கும்
ஒரு தேவதைக்கும் காதல் ஏற்பட்டது. அந்த தேவதையின் பேரு ஹீனேபுகோஹூராங்கி( Hinepukohurangi ).ஒவ்வொரு
தேவதைக்கும் எதாவது ஒரு உத்தியோகம் இருக்குமாமே. அதையொட்டி, ஹீனே( ச்செல்லமா நான் சுருக்கிட்டேன்) மூடுபனி
(மிஸ்ட் )க்குரிய தேவதை.' இந்தக் காதல் விஷயம் வெளியே யாருக்கும் தெரியக்கூடாது. நமக்கு முதல் குழந்தை பிறந்தபிறகுதான்
சொல்லணுமு'ன்னு கண்டிப்பா யூனுகுகிட்டே சொல்லிட்டாங்க ஹீனே.

தினமும் இரவானதும் நம்ம ஹீனே பூமியிலே யூனுகுவோட ஃபாரெனூயி( தூங்கற இடம், sleeping house)க்கு
வந்து தங்கிட்டு, மறுநாள் காலையிலே திரும்ப அவுங்க வீடான ஆகாயத்துக்குப் போயிருவாங்க. பொழுது விடிஞ்சதான்னு
தெரியாம தூங்கிட்டா வம்பாச்சேன்னு ஹீனே ஒரு ஏற்பாடு செஞ்சாச்சு. தினமும் காலையிலே இருள் பிரியாத நேரத்துலேயே
ஹீனேவோட அக்கா ஹீனேவாய் வந்து வெளியே நின்னு குரல் கொடுக்கணும். அதைக் கேட்டதும் தங்கை எழுந்து
போயிடணும். இப்படியே ஒவ்வொருநாளும் நடந்துக்கிட்டே இருந்துச்சு.

தன்னுடைய அழகான துணையை ஊர்ஜனங்களுக்குக் காட்டமுடியாதது ரொம்ப வருத்தமா இருந்தது யூனுகுவுக்கு.
இது பொதுவான மனுஷ குணம்தானே? நம்ம கிட்டே இருக்கற நல்ல பொருளையோ, நம்ம குழந்தைகளையோ
ஊர் மெச்சுனாத்தானே ஒரு திருப்தி. ஆனா காதலியோட அன்புக் கட்டளையை மீற முடியலை. பொறுமையோ
எல்லை கடந்து போய்க்கிட்டு இருக்கு. இனியும் காத்துக்கிட்டு இருக்கமுடியாத நிலை வந்துருச்சு.
ஆனது ஆகட்டுமுன்னு ஒரு முடிவுக்கு வந்தாச்சு யூனுகு.

ஒரு நாள் ராத்திரி ஹீனே அசந்து தூங்குறப்ப, ஓசைபடாம எழுந்து, அந்த தூங்கும் விடுதியோட சுவர்களிலே
இருந்த எல்லா ஓட்டைகளையும் மேலே கூரையிலே பிரிஞ்சிருந்த ஓலைகளையும் களிமண்ணும் புல்லும் சேர்ந்த
கலவையாலே நல்லாப் பூசி மெழுகிட்டார். உள்ளே ஒரு வெளிச்சக் கீத்துகூட வரமுடியாம இருட்டா ஆயிருச்சு.

அதிகாலையிலே வழக்கம்போல ஹீனேவுக்கு விழிப்பு வந்துருச்சு.கண்ணைத்திறந்து பார்த்தா ஒரே கும்மிருட்டு.
சரி இன்னும் பொழுது புலரலை.இன்னும் கொஞ்சம் தூங்கலாமுன்னு தூங்கினாங்க.( உண்மையாச் சொன்னா
இந்தக் குட்டித்தூக்கம்தான் இனிமையா இருக்கும்.) அவுங்க அக்கா ஹீனேவாய், வழக்கம்போலக் காலையிலே
வந்து கூப்பிட்டாங்க. சுவருலே ஒரு எதுவுமே இடைவெளி இல்லாம பூசினதாலே சத்தம் உள்ளே கேக்கலை.
கூப்புட்டுக் கூப்புட்டுப் பார்த்துட்டு அவுங்க போயிட்டாங்க.

சூரியன் உச்சிக்கு வந்தாச்சு. யூனுகுவைத் தேடி அவுங்க ஜனங்கள் எல்லாம் வந்து, இன்னும் கதவு சாத்தியிருக்கறதைப்
பார்த்துட்டுக் கதவைத் திறந்தாங்க. உள்ளே பார்த்தாஅழகான ஹீனே! தூக்கத்துலே இருந்து திடுக்குன்னு எழுந்த ஹீனேக்கு
விஷயம் புரிஞ்சுடுச்சு. எவ்வளவு தந்திரமா நம்மளை இந்த யூனுகு ஏமாத்திட்டாருன்னு பயங்கரக் கோபம். எழுந்து
அப்படியே வானத்துக்குப் போயிட்டாங்க. அவ்வளவுதான்,திரும்ப வரவேயில்லை.

ஹீனேவோட பிரிவை யூனுகுவாலே தாங்க முடியலை. 'என்னடா இப்படி செஞ்சுட்டோம்'ன்னு நினைச்சு நினைச்சு
வருத்தப்பட்டு, எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்கணுமுன்னு எல்லா இடத்துலேயும் அலையறார். கண்டு பிடிக்க
முடியாமயே ஒரு நாள் இறந்துடறார். அப்ப சாமிங்கெல்லாம் இரக்கப்பட்டு, அவரை ஒரு வானவில்லா மாத்திடறாங்க.
வானவில் இருக்கறப்ப சிறு தூறலாயும் மூடுபனியாயும் இருக்குல்லே. அப்படி அவர் ஹீனே கூட சேர்ந்துடறார்.

இப்பக்கூட நீங்க கவனிச்சீங்கன்னா, வானவில்லையொட்டி ஒருவிதமான மிஸ்ட் இருக்குமே!

*************************************************************************************

Saturday, October 15, 2005

நியூஸிலாந்து பகுதி 16

மவோரி கதைகள் # 1


ஹினேபாவ்

இந்த நாடு/ஊருலே ப்ளாக்ஸ் னு சொல்ற புதர்கள் எல்லா இடத்துலேயும் இருந்த காலக் கட்டம். இது நம்ம தென்ன
ஓலையைப் போல இருக்கும், பாக்கிறதுக்கு. இதைக் கிழிச்சுக் கிழிச்சு நார் நாரா எடுத்து பலவிதமான கூடைகள், தரையிலே
விரிக்கிற பாய், உடுத்திக்கிறதுக்குத் துணிகள், வீட்டுக்கு உள்புறம் சுவர்க்குமேலே கட்டிவிடற மறைவுன்னு பலவிதமா
முடைவாங்களாம். சரி. கதைக்குப் போகலாம்.

ஹினேபாவ் ன்னு பேரு இருந்த ச்சின்னப்பொண்ணு அவுங்க அப்பா, அம்மா, பாட்டின்னு எல்லோரோடயும் ஒரு
சின்ன கிராமத்துலே வசிச்சு வந்துச்சு. அந்த கிராமம் இருந்த இடம் மவுங்கரிரின்னு சொல்ற ஒரு எரிமலைக்குப்
பக்கத்துலே இருந்தது. ஒரு குறிப்பிட்ட 'ட்ரைப் குரூப்' ஜனங்க அங்கே இருந்தாங்க.

அவளோட குய்ஆ(பாட்டி) தன் பேத்திக்கு, கெட்டி(கூடை)ஃபரிகி( பாய்) ககஹு( துணி) எல்லாம்
முடையறதுக்குச் சொல்லிக் குடுத்தாங்க. அந்த கிராமத்துலே இருக்கற மத்த பொம்பிளைங்களும் இதையெல்லாம்
முடைவாங்கன்னாலும் நம்ம ஹினேபாவ் முடையறது கொஞ்சம் வித்தியாசமாவும் ரொம்ப அழகாவும், நேர்த்தியாவும்
இருந்துச்சு. இதைப் பார்த்த மத்த பொண்களுக்கு பொறாமை.( உலகம் தோன்றியவுடனே இந்த பொறாமையும்
வந்துருச்சு போல!) அதுலே சிலர் சொல்றது, இந்தப் பொண்ணு சூன்யக்காரி.அதனாலேதான் வித்தியாசமா முடைய
வருதுன்னு. போதாக்குறைக்கு நம்ம ஹினேபாவ்க்கு மாலை வெய்யல் போல பொன்னிறமான கூந்தல் வேற. அவளுடைய
கண்களும் பொனாமு ( இங்கே நியூஸி யிலே கிடைக்கிற ஒரு விதப் பச்சைக் கல், கொஞ்சம் ஜேட் போல இருக்கும்)
போல பச்சையா இருக்கு.

ஒருநாள் அந்த கிராமத்துலே இருக்கற பெரியவங்க, முதியோர்கள் எல்லாம் சேர்ந்து, இனிமே இந்த ஹினேபாவ் இங்கே
வசிக்கக்கூடாதுன்னு ஊரைவிட்டுத் துரத்திடறாங்க. அந்தப் பொண்ணு அழுதுகிட்டே ஊரைவிட்டு நடந்து போகுது.
ஒரு நாள் முழுக்க நடந்து ப்ளாக்ஸ் புதர்கள் நிறைய வளர்ந்திருக்கற ஒரு இடத்துக்கு வந்துருது. அங்கேயே ச்சின்னதா
ஒரு குடிசை கட்டிக்கிட்டு தங்கிருது. தினமும் பகல் முழுக்க ப்ளாக்ஸ் கீறியெடுத்து வகைவகையாப் பின்னிக்கிட்டே
இருக்கறதும், ராத்திரியானா நட்சத்திரங்களைப் பார்த்துக்கிட்டே கனவுலகத்துலே வாழறதுமா ஆயிருச்சு அதோட வாழ்க்கை.

மேகக்கூட்டத்தைக் காத்து பலமா வீசிக் கலைக்கறப்போ உண்டாகுற விதவிதமான டிஸைன்களையும், மழைத்துளிங்க
பக்கத்துலே இருக்கற ஏரித் தண்ணிலே விழும்போது தண்ணியிலே உண்டாகுற பேட்டர்ன்களையும் தன்னுடைய
பச்சைக் கண்ணாலே பார்த்து அதே போல பலவிதமான டிஸைனுங்களை தான் முடையுற பாய்களிலேயும், ட்டுகுட்டுகு
( சுவருங்களுக்கு போடற வால் பேனல்ஸ்)விலேயும் கொண்டுவந்துர்ற திறமையும் உண்டாயிருது. எப்பவும் சாமியைத்
துதிச்சுக்கிட்டே விடாம பின்னிக்கிட்டு இருக்கு இந்தப் பொண்ணு. காலம் ஓடிக்கிட்டே இருக்கு.

ஒருநாள் அந்தக் குடிசைக்குப் பக்கமா ஏதோ பேச்சு சத்தம் கேட்டு நம்ம ஹினேபாவ் ஓடிவந்து பார்த்தா, அங்கே
மூணு வாலிபப்பசங்க போறாங்க. இன்னொரு மனுஷஜீவியோட பேச்சை பலவருஷமா கேக்காம இருந்த ஹினேபாவுக்கு'
அந்த சத்தம் தேன்மழையா காதுலே வுழுது. சந்தோஷம் தாங்காம அவுங்களைப் பார்த்து,'கியோரா கொடாவ்'
( வாழ்த்துக்கள்)ன்னு சொல்லுது. இதைக் கேட்ட அந்த இளைஞர்கள்,' ஐய்யய்யோ, இது அந்த ப்ளாக்ஸ் முடையற
பொம்பிளையாச்சே. இது மந்திரமாயமெல்லாம் செய்யறதுலே கெட்டிக்காரின்னு ஊருக்குள்ளெ பேசுனது ஞாபகம்
வருது. நம்ம மேலே எதாவது மகுட்டு( சாபம்) போட்டுரப் போகுது. சீக்கிரமா இந்த இடத்தை விட்டுப் போயிரணும்'ன்னு
தங்களுக்குள் பேசிக்கிட்டே காலை வீசிப் போட்டு நடக்குறாங்க.

ஹினேபாவ் விடாம அவுங்க பின்னாலேயே ஓடிவந்து,'எங்கே போறிங்க?'ன்னு கேக்கறா. சில டோடொரா( ஒரு வகை மரம்)
வெட்டறதுக்காகப் போறோம். கிராமத்துக்கு ஒரு புது ஃபாரெனூயி( ட்ரைப் ஜனங்க கூடிப் பேசற வீடு) கட்டணும்னு சொன்னாங்க.
அப்ப உங்க டொஹூங்கா( பூசாரி) எங்கே? மரம் வெட்டறதுக்கு முன்னாலே அதுக்குண்டான கராக்கியா(ப்ரேயர்)
சொல்லவேணாமா?ன்னு கேக்கறா.

'மரம் வெட்டறதுக்கு எங்க புஜவலிமையே போதும். ஒரு கிழவன் வந்து மந்திரம் சொல்றேன்னு முணுமுணுத்தால்
தான் வெட்டமுடியுமா என்ன? ஏ, சூனியக்காரியே ஓடிப்போ, எங்க வழியிலே குறுக்கிடாதே'ன்னு சொல்லிட்டு
அந்த இளைஞர்கள் போய் பெரிய பெரிய மரங்களை வெட்டித் தூக்கிட்டுப் போனாங்க.

கொண்டு போன மரத்தை அறுத்து, அதுலே அந்த இனத்து( ட்ரைப்)கதைகளையெல்லாம் செதுக்கினாங்க. ஸ்பிரிச்சுவல்
பாதுகாப்புக்குன்னு ஒரு ட்டாபு( இது ஒரு தூண்) ஏத்திவச்சாங்க.பொம்பிளைங்க எல்லாரும் அவுங்க முடைஞ்சு வச்சிருந்த
ட்டுகுட்டுகு, ஃபரிகி எல்லாம் வச்சு அந்த ஃபாரெனூயி சுவத்தை அழகு செஞ்சாங்க. சுவத்துலே எல்லாம் பெரிய பெரிய
பாவா ( அபலோன்னு சொல்லுற அழகான நிறமுடைய சிப்பி) வை வட்டமா வெட்டி பதிச்சாங்க. இது அவுங்க
முன்னோர்கள் கண்ணாம். முன்னோர்கள் எல்லாம் இதுவழியாப் பார்த்து இவுங்களை ஆசீர்வதிப்பாங்களாம்.
எல்லாம் முடிஞ்சதும் 'ஹுயி' ( கூட்டம்) ஆரம்பிச்சது.

வையாட்டா( பாட்டுங்க) பாடி வழிபாடு நடத்துனாங்க. கதைகள் சொல்லப்பட்டன. அதுக்கப்புறம் பெரிய விருந்து.
இதுக்குள்ளே சூரியாஸ்தமனம் ஆயிருச்சு. முதல் முறையா புது ஃபாரெனூயி லே தூங்கறதுக்கு எல்லாரும் உள்ளே
போய் படுத்தாங்க. தூக்கம் வர்றவரைக்கும் பாட்டும் கதை சொல்லறதும் நடந்துக்கிட்டே இருந்துச்சு. வெளிச்சத்துக்காகவும்,
சூட்டுக்காகவும் உள்ளெ எரிஞ்சுக்கிட்டு இருந்த தீ மெல்ல அணைஞ்சு லேசா புகை வந்துக்கிட்டு இருந்தது.

எல்லோருக்கும் நல்ல தூக்கம். அப்பப்ப எதாவது இரவுப் பறவை பறந்து போற சத்தம், இல்லேன்னா ச்சின்னக்குழந்தை
ச்சிணுங்குற சத்தம், புது கட்டிடம் என்றபடியாலே மரச்சட்டம் எழுப்புற ச்சின்ன 'க்ரீச்' சத்தம் தவிர ஒரு அனக்கமும் இல்லே.

அப்ப ஏதோ குலுங்கற மாதிரி இருந்துச்சு. வயசான ஒரு பாட்டி சொன்னாங்க, இந்த வீடு கடவுளுக்குப் பிடிக்கலை'ன்னு.
இளவயசுக்காரங்க சொன்னாங்க, 'வாயை மூடிக்கிட்டுத் தூங்கு. இது லேசான நில நடுக்கம்'னு. அப்புறம் அவுங்களுக்குள்ளே
கிசுகிசுப்பான குரலிலே,'கிழவிக்கு வேற வேலை இல்லை. வயசாயிட்டாவே இந்தப் பிடுங்கல்தான். அதையெல்லாம்
கண்டுக்கக்கூடாது'ன்னு. கொஞ்ச நேரத்துலே சத்தம் எல்லாம் அடங்கிருச்சு. நல்ல ஆழமான தூக்கம்.

அந்த ராத்திரி அங்கெ இருந்த எரிமலையான மவுங்கரிரி, காடுகளின் கடவுளான 'ட்டனே மஹூட்டா' வோட
ஆசீர்வாதம் இல்லாமக் கட்டப்பட்ட அந்த ஃபாரெனூயியை வெறுப்போட பார்த்துச்சு. கோவம் கோவமா வருது.
தாங்கமுடியாம ஒரு குலுக்கல்.

காலையிலே உள்ளே தூங்கிக்கிட்டு இருந்த ஜனம் வெளியே போய்ப் பாக்குது. இதுவரை அவுங்களுக்குப்
பரிச்சயம் இல்லாத ஏதோ ஒரு புது இடத்துலே இருக்கறமாதிரி இருக்கு. என்னடான்னு பார்த்தா விஷயம்
விளங்கிட்டது. அவுங்களோட ஃபாரெனூயியை விட்டுட்டு கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே சாம்பல்.
காடு, ஏரி, மலைன்னு ஒண்ணையும் விட்டுவைக்கலை. புல்பூண்டு எல்லாம் போயே போச்சு. ஆறு,ஏரிகளிலே
ஒரு பொட்டுத்தண்ணி கூட இல்லை!

'நல்லவேளை , நம்மளை இந்த மவுங்கரிரி ஒண்ணும் செய்யலே.நம்மளைக் காப்பாத்திருச்சு. நம்ம மேலே இதுக்குக்
கோவம் இல்லே'ன்னு ஒரு இளைஞன் ஆனந்தக் கூச்சல் போட்டான்.

'ஆமாம் நம்மளை இப்ப எதுக்குக் காப்பாத்துச்சு? கொஞ்சம் கொஞ்சமா சாவடிக்க! எல்லாம் இந்த இளைஞர்களாலே
வந்த வினை.சரியான வழிபாடு செய்யாம மரத்தை வெட்டிக் காடுகளின் கடவுளுக்கு கோபத்தை உண்டாக்கிட்டீங்க.
இப்ப இந்த வீட்டுக்குள்ளேயே இருந்து எல்லாரும் சாகணும். சாப்பாடு, தண்ணிக்கெல்லாம் என்ன செய்யறது?
போங்க வாலிபப் பசங்களா. வெளியே போய் இங்கெ இருக்கற எல்லாருக்கும் எதாவது சாப்பாடு, குடிக்கத் தண்ணி
கொண்டு வாங்க'ன்னு ஒரு குய் ஆ ( பாட்டி) கத்துச்சு.

மரம் வெட்டிங்க மூணுபேரும் மெதுவா நடந்து போனாங்க. நடக்குறாங்க நடக்குறாங்க, நடந்துக்கிட்டே இருக்காங்க.
எங்கே பார்த்தாலும் சாம்பல் மூடுன பூமி. வழியும் தெரியலை வாய்க்காலும் தெரியலை. பசியும் தாகமும் உயிரை
வாட்டுது. ஒருநாளு பூராவும் நடந்தபிறகு ஒரு குடிசை கண்ணுலே தெம்படுது.

அது நம்ம ஹினேபாவோட குடிசைதான். அவளும் தப்பிச்சுட்டா! இவுங்களைப் பார்த்ததும் ,'முட்டாப் பசங்களா!
இனிமேலாவது உங்க காவ்மடூவா( பெரியவுங்க) சொல்லைக் கேளுங்க. இப்பத் திரும்பி போங்க. என்னாலே எதாவது
செய்யமுடியுமான்னு பாக்கறென்'னு சொல்லியனுப்புனா.

மாலை மயங்கற நேரத்துலே வழிபாட்டு துதிகளைச் சொல்லிக்கிட்டே, வருசக்கணக்கா முடைஞ்சு வச்சிருந்த பாய்ங்க,
சுவருக்குப் போடற அலங்காரம்ன்னு எல்லாத்தையும் சேகரிச்சு எடுத்துக்கிட்டு, வெளியே எதாவது சத்தம் வருதான்னு
கவனமா காது கொடுத்துக்கிட்டு உக்காந்திருந்தா. வாய்மட்டும் ப்ரேயர் சொல்லிக்கிட்டே இருக்கு. அப்ப வெகுதூரத்துலே
இருந்து ஏதோ பறவையோட சிறகு அடிக்கிறமாதிரி சத்தம் வந்துச்சு. அந்தச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமா நெருங்கிவந்துச்சு.
பிரகாசமான வெள்ளை நிறத்துலே ஒரு பெரிய பறவை அப்படியே மெதுவா அவளோட குடிசைக்கு முன்னாலே வந்திறங்குச்சு.

அது ஒரு ருரு(ஆந்தை). ஹினேபாவ், எடுத்துவச்ச பாய் பத்ராஸ்ங்களை எடுத்துக்கிட்டு மெதுவா வெளியே வந்து அந்தப் பறவையின்
மேலே ஏறி உக்காந்துக்கறா. வத்திப்போன ஆறு, ஏரிகளையெல்லாம் தாண்டி சாம்பல் பூமிக்குமேலே பறந்து போகுது.
அவளும் முடைஞ்சு வச்ச ஒவ்வொரு பாய், மத்ததெல்லாம் ஒவ்வொண்ணா கீழே போட்டுக்கிட்டே போறா. ராத்திரி
முழுசும் எல்லா இடத்துக்கும் பறவை பறந்துக்கிட்டே இருக்கு. ஒரு இடம் விடாம வுழுந்த ப்ளாக்ஸ் பாய்ங்க
அங்கேயே வேர்விட்டு வளர்ந்துருது. ஆறு, ஏரி யெல்லாம் திரும்பவும் தளதளன்னு தண்ணி ரொம்பிருது. எல்லாம்
முந்தி இருந்ததை விட ஜோரா ஆயிருது.

ஆனா ஒரோரு பாயும் போடப் போட ஹினேபாவோட மாவ்ரி( ஆத்மா) அவளைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா விலகுது.
மெலிஞ்சு மெலிஞ்சு அப்படியே காத்துலே கரைஞ்சு போயிடறா. பொழுது விடிஞ்சுருது. அந்தப் பறவை மட்டும் பறந்துக்
கிட்டு இருக்கு.

துக்கத்தோட தூங்கியெழுந்த கிராம ஜனங்க, வெளியே வந்து பார்த்தா, பளபளன்னு புது உலகம் பசுமையா
செழிப்பா இருக்கு. பூமி சரியாயிருச்சு. நம்மளை மன்னிச்சுட்டாங்கன்னு எல்லோரும் ஆனந்தப்படறாங்க.
அப்ப பாட்டி சொல்லுச்சு,'இதெல்லாம் திரும்ப வந்ததுக்குக் காரனம் நம்ம ஹினேபாவ்தான். அவளுக்குத்தான் நாமெல்லாம்
நிஜமாவே நன்றி சொல்லணும். சீக்கிரம் போய் அவளை இங்கே கூட்டிட்டு வாங்க. இனிமே அவ நம்ம கூடத்தான் இருக்கணும்.
ஓடுங்க, சீக்கிரம் கூட்டிட்டுவாங்க'ன்னு.

அந்த மூணு இளைஞர்களும் நாளெல்லாம் நடந்து அங்கே போய்ப் பாக்கறாங்க. குடிசைக் காலியா இருக்கு. எப்பவும்
அங்கே எரிஞ்சுக்கிட்டு இருந்த சிறு தீ கூட அணைஞ்சுபோய் அந்த இடமே 'ஜில்'லுன்னு இருக்கு.

ஹினேபாவ் இங்கே இல்லை. போயிட்டா. நாமதான் தாமதமா வந்துட்டோமுன்னு மூணுபேரும் அழறாங்க. அப்ப
காத்து மெதுவா வீசிக்கிட்டே வருது. ஒரு இளைஞனோட காதுலே வையாட்டா( பாட்டு) கேக்குது. 'அழுகையை
நிறுத்திட்டு கவனமாக் கேளுங்க, ப்ளாக்ஸ் பொம்பளை நமக்காகப் பாடுது'ன்னு சொன்னான். அப்ப இன்னொருத்தன்
சொன்னான்,'மேலே ஆகாயத்துலே அந்த மேகத்தைப் பாருங்க அதுலே ஹினேபாவோட முகம் தெரியுது'ன்னு.
மாலை சூரியனோட மஞ்சள் கிரணமா இருக்கற தலைமுடியோடு ஹினேபாவோட சிரிச்ச முகம் இவுங்களைப்
பார்த்துக்கிட்டு இருந்தது. அவுங்க மூணு பேரும் கிராமத்துக்குத் திரும்பிவராங்க.

மறுநாள், கிராமத்து ஜனங்க, முதியோர்களையும், பெரியவங்களையும் கூட்டிக்கிட்டு நன்றி தெரிவிக்க கடற்கரைக்குப்
போனாங்க. ஹினேபாவோட மாலைச் சூரியன் போல இருந்த பிரகாசமான தலை முடி அங்கே கடற்பாசியா நீள நீளமா
தண்ணியிலே மிதந்து வந்துச்சு. நிர்மலமான தெளிஞ்ச ஆத்துத் தண்ணியிலே பார்த்தவங்களுக்கு ஹினாபாவோட
பச்சைகண் அப்படியே மின்னிக்கிட்டு இருந்துச்சு. கிராமத்தோட சக்கரைவள்ளிக் கிழங்கு தோட்டத்துலே வேலை
செய்யறவங்க எல்லாம் பபாடுவானுக்கு(பூமி மாதா) துதி பாடிக்கிட்டே கிழங்கை நட்டுக்கிட்டு இருந்தாங்க. நம்ம
ஹினேபாவோட ப்ளாக்ஸ் முடையற மெல்லிய விரல் அந்தக் கிழங்குலே இருந்து சீக்கிரம் முளை வர்றதுக்காக
அதை வருடிக்கொடுத்த மாதிரி இருந்துச்சாம்.

பின்னுரை:

1.இதுதான் நான் முதல்முதலா செஞ்ச மொழிபெயர்ப்பு. கதை ன்றது படிக்கச் சுலபமா இருந்தாலும், அதை மொழி
பெயர்க்கறப்ப என் முழி பிதுங்கிருச்சு. இது நிஜமாவே கஷ்டமான வேலைதான். இரா.மு, டோண்டு எல்லாம் எப்படித்
தான் செய்யறாங்களோ?

2. இந்த மவோரி பெயர்கள் எல்லாம் எப்படி உச்சரிக்கணும், அதைத் தமிழிலே எழுதறப்ப எப்படி எழுதணும் என்றெல்லாம்
புரியாம திண்டாடிட்டேன். அப்புறம் ஒரு மவோரி தெரிஞ்ச(!) நண்பர்கிட்டேக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு எழுதுனேன்.

3. ஒரு கதைக்கே தாவு தீர்ந்து போச்சு. இன்னும் ஏகப்பட்டது இருக்கு. முயற்சி செய்யப்போறேன்.

அருஞ்சொற்கள்:


Hinepau ஹினாபாவ்
Flax ப்ளாக்ஸ்
Kuia பாட்டி
Kete கூடை
Whariki பாய் (Floor mat)
Kakahu துணி மரவுரி(Clothing)
Pounamu NZ Green Stone Jade
Makutu சாபம்
Karakia இறைவழிபாடு (Prayer)

Kia ora kou tou ---Greetings
totara ஒரு வகை மரம்tree
wharenui --- ஃபாரெனூயி (tribal meeting place) மவோரிங்க உச்சரிப்பு wha க்கு ஃபா

tohunga -priest

tapu - spiritual protection

tukutuku - சுவர்லே போடர அலங்கார டிசைன் உள்ள பாய் woven wall panel
hui gathering
paua -----abalone

tane mahuta -----god of the forest

kai ------food
kaumatua --- elders
ruru -----owl
mauri ----spirit
waiata --- song

kumara -- sweet potato

papatuanuku earth mother

ஏங்க, எதாவது புரிஞ்சதா?
***************************************************************

Friday, October 14, 2005

நியூஸிலாந்து பகுதி 15

மவோரிகளின் வருகை.

கிட்டத்தட்ட 1200 வருசத்துக்கு முன்னே பாலினீஷியன்கள் சிலர் ஒரு படகுலே ஏறிக்கிட்டு வேற இடத்தைத் தேடிப்
போறாங்க. அந்தப் படகுங்க 15 முதல் 25 மீட்டர் நீளமுள்ளதாம். அதுக்குக் கையாலெ முடைஞ்ச பாய்களையே
செயிலாக் கட்டியிருந்திருக்காங்க. ராத்திரி நேரத்துலே நட்சத்திரங்களை வச்சுத் திசைதெரிஞ்சுக்கிட்டுப் போறதும், பகலிலே
கடல்லே நீர்மட்டம் உயர்றதைவச்சுப் போறதுமா இருக்காங்க. கடல்பறவைகள் கூட்டமா இருந்தா பக்கத்துலேயே
கரை வந்திருமுன்னு பார்த்துக்கிட்டே இருக்காங்க. கிழக்குப் பாலினீஷியாவுலே இருந்து, இங்கே வந்து சேர அந்தக்
காலத்துலே எவ்வளவு நாளாகி இருக்கும்?

இப்பக் கணினியைவச்சுக் கண்டுபிடிச்சிருக்காங்க, இதுக்கு ஒருமாசமாவது ஆகியிருக்குமுன்னு! வந்தவுங்க
இங்கே என்னென்ன கொண்டுவந்தாங்களாம்? அதானே, ஊருக்குப் போறப்ப வெறுங்கையாவாப் போவாங்க?

எலி, நாய், சக்கரைவள்ளிக் கிழங்கு, டாரோன்னு சொல்ற இன்னொருவகைக் கிழங்கு, 'யாம்' னு சொல்ற ஒரு கிழங்கு
அப்புறம் சில காய்கள்(gourd) இப்படி. கரைக்கு வந்தபிறகு இங்கே ஏராளமான உணவுவகைங்க கிடைச்சிருக்கு.
மீன் பிடிச்சுத் தின்னுருக்காங்க. பறவைகளையும் பிடிச்சு ஸ்வாகா. அப்ப இங்கே மோஆ ( Moa)ன்னு ஒரு பெரிய
பறவையினம் இருந்திருக்கு.ஒரு பறவை சுமார் 200 கிலோ வருமாம். பறக்கத்தெரியாத/முடியாத பறவையினம்.
போதாதா என்ன?

நிறைய படகுங்க வந்துச்சு, ஆனா அதுலே ஒண்ணு மட்டுமே கடலிலே மூழ்காம இங்கே வந்து சேர்ந்துச்சுன்னும் சொல்றாங்க.
இல்லையில்லே, சில படகுங்க வெவ்வேற காலக் கட்டத்துலே வந்துச்சுன்னும் சொல்றாங்க. இவுங்கதான் மவோரிங்க.
வந்து இறங்குனவுங்க கூட்டமாக் கொஞ்சநாள் இருந்துட்டுக் கொஞ்சம் கொஞ்சமா பிரிஞ்சு போய் வசிக்க ஆரம்பிச்சிருக்காங்க.
இப்படி ஒவ்வொரு குழுவாப் போனவுங்க அவுங்க குழுவுக்கு ஒரு பேர் வச்சிருக்காங்க. இந்தக் குழுவுங்கதான் 'இவி' (iwi)ன்றது.

இந்தக் குழு மொத்தமும் ராத்திரி தூங்கறதுக்கு ஒரு இடம் அமைச்சுவச்சுக்கிட்டாங்க. பகலெல்லாம் உணவு தேடி
அலையறதும் இரவானா எல்லோரும் ஒரு கூரையின்கீழ் தூங்கறதுமா வாழ்க்கை நடக்குது. பெண்கள் எல்லாம் இங்கே கிடைக்கிற
ஓலைமாதிரி இருக்கற ஃப்ளாக்ஸ் ( flax)செடியை எடுத்து முடையறது வழக்கமாம். பாய், கூடைன்னு பின்னிக்கிட்டு இருந்திருக்காங்க.

அப்பெல்லாம் இவுங்க வாழ்க்கை வெறும் முப்பதே வருஷம்தானாம். ரொம்பக் கொஞ்சம்பேர்தான் நாப்பதுவயசைத்
தாண்டி வாழ்ந்திருக்காங்க. இவுங்ககிட்டே மருந்துவகைகள் ரொம்ப இல்லையாம்.ஆனா அப்ப வியாதிகளும் அதிகம்
இல்லையாமே! இவுங்க ஊரான பாலினீஷியாவைவிட இங்கே குளுர் கூடுதலா இருந்ததாலெ அதுக்கேத்தமாதிரி
இவுங்க வாழ்க்கைமுறையும் கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டே வந்துச்சு.ஒருவிதமான பேப்பர்மல்பெரிச் செடியிலிருந்து
'தாபா'( tapa)ன்னு சொல்ற துணிகளை செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. கூடவெ ப்ளாக்ஸ் நாருலே பின்னிய மத்த உடைங்களும்.
குளுர் தெரியாம இருக்க வீடுகளையும் கட்ட ஆரம்பிச்சிருக்காங்க. குளுர் காலத்துலே சாப்பாட்டுக்காகச் சக்கரைவள்ளிக்
கிழங்கை பிடுங்கி வீட்டுக்குள்ளெ வச்சுக் காப்பாத்தியும், மிச்சம்வர்ற கிழங்குகளை காலநிலை மாறும்போது மறுபடி
நட்டுவச்சு விவசாயமும் செய்திருக்காங்க. ஆனா இந்த ஜனங்க அப்ப நல்ல உழைப்பாளிகளா இருந்திருக்காங்க.


அங்கங்கே பரவிப்போன குழுக்களுக்குள்ளே அப்பப்பச் சண்டை வர்ரதும் ஒரு கிராமத்தை இன்னொரு கிராமத்து ஜனங்க
அட்டாக் செய்யறதும் நடந்துக்கிட்டு இருந்துச்சு. வீடுங்க எல்லாம் ரொம்பச் சின்னச்சின்னதா இருந்திருக்கு. எல்லாம் மண்ணு
வீடுங்க. ஒவ்வொரு கிராமத்துலேயும் சாப்பாட்டுச்சாமான்களை ஒளிச்சுவைக்க ஒரு இடம் வச்சிருந்தாங்களாம்.
சண்டை வந்துருச்சுன்னா, தப்பி ஓடிரலாம். எதையும் எடுத்துக்கிட்டு நேரம் வீணாக்கவேணாம் பாருங்க.

ஒவ்வொரு கிராமத்திலும் தூங்கறதுக்குன்னே கட்டுன இடம்தான் ஃபாரெனூஇ (wharenui. இவுங்க உச்சரிப்புலே
wha வுக்கு ஃப ) இங்கே தான் ஒவ்வொரு ட்ரைபும் சாயங்காலம் ஒண்ணாக்கூடி அன்னைக்கு நடந்த நிகழ்வுகளையெல்லாம்
பேசி, புள்ளைங்களுக்கு கதைகள் எல்லாம் சொல்லி ராத்திரியானா தூங்கிடறது.

இந்த நாடு கடக, மகர ரேகையைவிட்டு வெகுதூரம் விலகி இருக்கறதாலே சூரியவெளிச்சம் கோடையிலே நிறையவும்,
குளுருலே சீக்கிரம் இருட்டறதுமா இருக்குல்லே. இவுங்களோ ட்ராப்பிகல் இடத்துலே இருந்து வந்தவுங்க.
இவுங்க மொதல்லே வந்தப்பக் கோடையா இருந்திருக்கும் போல. பகல் பொழுது ரொம்ப நேரத்துக்கு இருக்குல்லே.
காலையிலே நாலரைக்கே வெளிச்சம் வந்துருது. ராத்திரி ஒம்பதரை வரை பகல் வெளிச்சம் இருக்குதே. இதைப்
பார்த்து அதிசயிச்சு இந்த நாட்டுக்கு அவோடீரோஆ( Aotearoa = land of the long day light)ன்னு பேர் வச்சிருக்காங்க.
சிலபேர் இத்குக்கு அர்த்தம் land of the long white cloudனு சொல்றாங்க. ஆனாலும் முந்தினதுதான் சரியான
விளக்கமா இருக்குதுல்லே?

இவுங்க மொழிக்கு எழுத்துரு கிடையாது. படிப்புன்னா எல்லாமே ஒருத்தருக்கொருத்தர் பேசி சொல்லித்தர்றதுதான்.
மூதாதையரோட வீரம், அப்ப நடந்த நிகழ்ச்சிகள் எல்லாமெ செவிவழிச் செய்தியாத்தான் சந்ததிகளுக்குப் போய்ச்
சேர்ந்திருக்கு.

இப்படியே ஒரு ஆயிரம் வருசம் போயிருச்சு. வெள்ளைக்காரங்க இங்கே வந்தப்ப, இங்கே ஏற்கெனவே சுமார் ஒரு
லட்சம் மவோரிஜனம் இருந்திருக்கு. இந்த மவோரிங்க 175 செ.மீ. உயரம் ! நல்ல திடகாத்திரமா இருந்திருக்காங்க.
(அப்ப வெள்ளைக்காரங்களோட சராசரி உயரம் 160 செ.மீ இருந்துச்சாம். ) உழைப்புக்கு அஞ்சாம இருந்திருக்காங்க.
சம்பாரிச்சதையெல்லாம் சேர்த்துவைக்கணும், பிற்கால சந்ததிக்குக் கொடுக்கணும் என்ற எண்ணம் இல்லாம எல்லோரும்
சேர்ந்து கிடைக்கறதையெல்லாம் பகிர்ந்தே வாழ்ந்திருக்காங்க. ( இந்த சேர்த்துவைக்காம செலவு செய்யற வழக்கம்
இன்னும் இருக்குதான். அந்தந்த வாரம் கிடைக்குற காசை ரெண்டு மூணு நாளுலேயே செலவு செஞ்சுடறாங்க)



இன்னும் வரும்


*********************************************************************

Wednesday, October 12, 2005

நியூஸிலாந்து. பகுதி 14

போடுங்கம்மா ஓட்டு.
************************


பொம்பிளைக்கு ஓட்டுரிமை கொடுத்தா, ஆம்பிளைங்க ஒண்ணுக்கும் உதவாதவங்கன்னு ஆயிராதா?

போச்சு போச்சு, ஆம்பிளைத்தனமே இல்லாமப் போகப்போகுது.

ஓ பொம்பிளைங்க சம்பாரிச்சுக்கிட்டு வரப்போறாங்களா? அப்ப நாம ஆம்பிளைங்கெல்லாம்
'ஏப்ரன்' கட்டிக்கிட்டு வீட்டு வேலை செய்யணுமாக்கும்?

சமூகத்துக்கு இயற்கையா இருக்கற ஒழுங்குமுறை போயிரும். இனி அவ்வளவொதான்.

'பப்'லே இனி மதுவே விக்கமாட்டாங்க, சந்தோஷமே போயிரும்.

ஒழுக்கக்கேடு நடந்துரும். பெண்மையே போயிரும்.

பொம்பிளைங்க இனிமே குடும்பத்தைக் கவனிக்க மாட்டாங்க.

லண்டன்லே இருக்கறவங்க மத்தியிலே நியூஸியோட மதிப்பே வுழுந்துரும்.

பொம்பிளைங்க ரொம்ப எளிதா உணர்ச்சிவசப்படுவாங்க. அவுங்க அரசியலுக்கு வந்தா
சமாளிக்கமுடியாமத் திணறப்போறாங்க.

இது எல்லாத்துக்கும் மேலே இன்னொருத்தர் சொன்னது
அய்யய்யோ, பொம்பிளைங்க பார்லிமெண்டுக்குள்ளே வந்துட்டாங்கன்னா ஆம்புளைங்க
கவனம் சிதறிடுமே. கவர்ச்சியாவுல்லே இருப்பாங்க.

நீங்க ஏன் இப்படிக் கவலைப்படறீங்க? எப்படியும் அவுங்க பார்லிமெண்டு அங்கத்தினரா
வர்றப்பவே அம்பது வயசாயிரும். அப்புறம் கவர்ச்சியாவது, மண்ணாவது!

ஒண்ணுவேணா செய்யலாம். ச்சும்மா சாதாரணமா. 'ப்ளெயின் லுக்'இருக்கறவங்கதான்
அரசியலுக்கு வரணும். அழகா இருக்கறவங்க வந்தா, வயசான கனவான்கள் நெஞ்சு
அப்படியே கவுந்துருமில்லெ.

அட்ராக்டிவா இருக்கற பொம்பிளைங்க வந்துட்டாங்கன்னா, என்னையே இங்கே வரவிடமாட்டா
என் பெண்டாட்டி.அப்புறம் பார்லிமெண்ட் அங்கத்தினரா இருந்து என்ன பிரயோஜனம்?

இப்படியெல்லாம் பேச்சுக்கள் நடந்துக்கிட்டு இருந்திருக்கு. எப்பவா?
1891 -1893 லே. எதுக்குன்னு புரியுதுல்லெ?


1891லே ஒம்போதாயிரம் பெண்கள் கையெழுத்துப் போட்டு கோரிக்கையை வச்சிருக்காங்க.
அதுக்கு அடுத்தவருஷம் பத்தொம்பதாயிரம் பேர் கையெழுத்துப் போட்டு அனுப்பினாங்க.
அப்பவும் ஒண்ணும் நடக்கலை. 1893லே 32000பேர் கையெழுத்து. அப்ப இங்கே இருந்த
ஓட்டுரிமை வயசுவந்த பெண்கள் தொகையிலே மூணுலே ஒரு பங்கு. அப்பத்து பார்லிமெண்ட்லே
இதுதான் பெரிய 'பெட்டிஷன்'

பொம்பிளைங்களுக்கு ஓட்டுரிமை கொடுத்தா 'குடிக்கறதுக்குத் தடை' வந்துருமுன்னு அப்ப
ஆம்பிளைங்க பயந்துட்டாங்களாம். ஹென்றி ஃபிஷ் ன்றவர் இதுக்கு எதிர்ப்பா ஒரு பெடிஷன்
கொடுக்கலாமுன்னு 5000 கையெழுத்து வாங்குனாராம். இதுலே பலபெண்களும் கையெழுத்துப்
போட்டுருக்காங்க. கடைசியிலே பார்த்தா அதுலே பலதும் கள்ளக் கையெழுத்தாம். பெண்களும்
அது ஓட்டுரிமை கேக்கற பெடிஷன்னு நினைச்சுக்கிட்டுத்தான் கையெழுத்துப் போட்டாங்களாம்.
ஒருவழியா இது பிசுபிசுத்துப் போச்சு ( கள்ள வாக்காளர் அட்டைகள் ஞாபகம் வருதா?)

இந்த உலகத்திலே பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுத்த முதல் நாடு நியூஸிதான்!
அப்ப இங்கேயும் மேல்சபை கீழ் சபைன்னு ரெண்டு இருந்துச்சு இங்கத்துப் பார்லிமெண்ட்டுலே.
1893 செப்டம்பர் 19க்கு இந்த சட்டம் பாஸ் ஆச்சு. மொத்தம் 20 ஓட்டுலே 18 கிடைச்சது.
அதுலேகூடப் பாருங்க ரெண்டுபேரு பொம்பிளைங்களை அமுக்கப் பாத்திருக்காங்க:-)


இதுக்குக் காரணகர்த்தாவே 'கேட் ஷெப்பர்ட்'என்ற அம்மணிதான்.
ஸ்காட்டிஷ் பெற்றோர்களைக் கொண்ட கேத்தரீன் பிறந்தது 1847லே. அதுக்கப்புறம்
அப்பா இறந்துபோய் ஆறு வருஷமானபிறகு.அவுங்களுக்கு 21 வயசானப்ப 1868லே
இங்கே நியூஸிக்கு அவுங்க அம்மா, சகோதர சகோதரிங்களோட வந்துடறாங்க.
இங்கே வந்து செட்டில் ஆனது கிறைஸ்ட்சர்ச் என்ற ஊருலே.( ஹை, இதுதான் நாங்க
இருக்கற இடமும்!)

இங்கே ஒரு வியாபரியான ஆலன் ஷெப்பர்ட் என்றவரைக் கல்யாணம் செஞ்சது 1871லே.
ஒருமகன் பிறந்தது 1880லே. மகன் டக்ளஸ் அவருடைய முப்பதாவது வயசுலே இறந்துட்டார்.
அதுக்கு அஞ்சு வருசம் கழிச்சு 1915லே கணவரும் இறந்துட்டார்.

1925லே இவுங்களோட 78வது வயசிலே இவுங்க ரெண்டாவது கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க.
அவரும் நாலுவருஷம் கழிச்சு இறந்துட்டார். 1934லே இவுங்களோட 87வது வயசிலே இவுங்களும்
இந்த உலகத்தை விட்டுப் போயிட்டாங்க. அவுங்க சேவையைப் பாராட்டி இப்ப புழக்கத்திலே இருக்கற
பத்து டாலர் கரன்ஸியிலே இவுங்க படத்தைப் போட்டு கவுரவம் செஞ்சிருக்கு நியூஸி அரசாங்கம்.


இவுங்களுடைய விடாமுயற்சியாலேதான் பெண்ணுரிமை நிலைநாட்டப்பட்டிருக்குன்னு இங்கே
இவுங்களுக்கு ஏகப்பட்ட மரியாதை பெண்கள் உலகத்திலே.

*****************************************************************

Tuesday, October 11, 2005

நியூஸிலாந்து. பகுதி13

இந்த நாட்டில் இல்லாதவை:

எருமை மாடு, பாம்பு, தேள், கரப்பான் பூச்சி,பல்லி,கொசு, எறும்பு பல இடங்களில் கிடையாது.

காட்டு மிருகங்களும் கிடையாது. அவைகளை இறக்குமதி செய்து உயிரியல் பூங்காக்களில் வைத்துள்ளனர்.

இந்த நாடு ஒரு தீவாக இருப்பதால் விஷப்பிராணிகளும் கிடையாது. இந்தத் தீவின் இயற்கை அழகைக் காப்பாற்றவும்,
மற்ற அழிவுகளில் இருந்து காப்பாற்றவும் பெரு முயற்சி எடுக்கப்படுகின்றது. எப்போதாவது இங்கே வரும் 'கண்டெயினர்
களில்' பாம்பு இருந்துவிடும். எல்லாவிதமான கண்டெயினர்களையும் ஃப்யூமிகேட் செய்துவிடுவதால் அந்த சாமான்களை
வெளியே எடுக்கும் போது செத்தபாம்பு அகப்படும். அந்தவாரம் முழுவதும் நமது தொலைக்காட்சிக்கு நியூஸ் கிடைத்துவிடும்.

அதன் காரணமாக பல விதமான பொருட்களை நாட்டின் உள்ளே கொண்டுவருவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.
நாட்டுக்குள் நுழையும்போது, உங்கள் பையில் ஒரு ஆரஞ்சுப் பழம் இருந்தால் கூட உடனடியாக 200 டாலர்கள் முதல்
10,000 டாலர்கள் வரை ( மூன்று லட்சம் ரூபாய்) வரை அபராதம் செலுத்த வேண்டும்!

பன்னாட்டு சேவைகள் உள்ள விமான நிலையங்களில் இதற்கான அறிவிப்பைப் பார்க்கலாம். 'நான் கவனிக்கவில்லை'
என்று யாரும் சொல்ல முடியாதபடி, உங்கள் கண்பார்வைக்குத் தப்பமுடியாத அளவில் அவை எங்கும் காணப்படும்.

செடி, விதைகள், பழங்கள், பறவை இறகுகள், முட்டை, கடல்பொருட்கள் சங்கு, பவழம் போன்றவை,பால் பொருட்கள்,
இறைச்சி என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். அதனால் உங்கள் 'ட்ராவல் ஏஜண்ட்' மூலம் நன்றாக விவரங்களைக்
கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

இங்கே வந்து வசிக்கும் எண்ணம் இருப்பவர்களுக்கு இதுவரை வந்த தகவல்கள் ஓரளவு உதவியாக இருக்கலாம்.
இந்த நாட்டின் நிறை குறைகளைத் தெரிந்துகொண்டுவந்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாமல்லவா?

********************************************************************

ஒருவழியா பழைய பாட்டு முடிஞ்சது. இனி நம்ம வழியைப் பாக்கலாம். இங்கே இருக்கும் 'பழங்குடி'யைப் பத்தி அடுத்து
ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்.

அதுக்கு முன்னாலே ஒரு விஷயம் இங்கே. நாளைக்குச் சொல்றேன். ரெண்டு படம் போட்டுரலாமுன்னா இந்த ப்ளொக்கர் சொல்பேச்சு கேக்கலையே(-:
*************************************************************************

Monday, October 10, 2005

நியூஸிலாந்து. பகுதி 12






கிறைஸ்ட்சர்ச் நகரம் : சென்ற பகுதியின் தொடர்ச்சி!
*****************************************

தினம் செய்திதாள் காசு கொடுத்து வாங்கணுமா? வேண்டாமா?

வேண்டாம். வாரம் நான்கு முறை செய்தித்தாள் நம் வீட்டுக்கே இலவசமாக வந்துவிடும்! இங்கே 'த ப்ரெஸ்' என்ற நாளிதழ் ஒன்றும்
தினமும் விற்பனைக்கு வருகிறது.வாரம் ஆறுநாட்கள். ஏழாவது நாளான ஞாயிறு அன்று விடுமுறை!அநேக வீடுகளில் வாரம் ஒருநாள்
சனியன்று மட்டுமே 'த ப்ரெஸ்' செய்தித்தாள் காசு கொடுத்து வாங்கப்படுகின்றது! ( நம்ம வீட்டிலும்தான்!)

ஆனால், நமக்கு அதைக் கட்டாயம் வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லாததால், இலவசப் பத்திரிக்கையே போதும்! 'கிறைஸ்ட்சர்ச் ஸ்டார்'
என்ற நாளிதழ் முன்பு மாலைப் பதிப்பாக வந்துகொண்டிருந்தது. விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் அதை இலவசமாகவே விநியோகிக்க
முடிவு செய்துவிட்டனர். இப்போது, வாரம் இருமுறை மட்டும் வெளிவரும் செய்திப் பத்திரிக்கையாக உள்ள இது, இந்த நகரிலுள்ள ஒவ்வொரு
வீட்டுக்கும் இலவசமாகவே வந்துவிடுகிறது. இதைத் தவிர 'கம்யூனிட்டி நியூஸ் பேப்பர்' வகையில் இன்னும் இரண்டு செய்தித்தாள்கள் வாரம்
இருமுறை வேறு நாட்களில் வந்துவிடும். இதையெல்லாம் இலவசமாகக் கொடுக்க நிதி எங்கிருந்து வருகிறது? கவலையே வேண்டாம்! அதில்
வரும் விளம்பரங்கள் மூலமாகவே தேவையானது கிடைத்துவிடுகிறதாம்!

'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்ற பழமொழிக்கு இங்கே அவசியமே இல்லை. முக்குக்கு முக்கு நம் ஊரில் பிள்ளையார்
கோவில்கள் இருப்பதைப் போலவே எங்கே பார்த்தாலும் 'சர்ச்'சுகள். இங்கே ஒரு மசூதி கூட இருக்கின்றது! ஆனால் ஹிந்துக்களுக்கென்று
சம்பிரதாயமான கோயில் இல்லையென்றாலும் 'ஹரே க்ருஷ்ணா' இயக்கத்தைச் சேர்ந்த ஒரு கோவில் உள்ளது! இங்கே ஞாயிறன்று சிறப்பு
வழிபாடு நடக்கும். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் இரவு உணவும் வழங்குகின்றனர்.

இந்த இலவச சமாச்சாரம் இதோடு போகவில்லை. இலவச பஸ் சேவையும் உண்டு. நகரத்தில் வண்டிகளை நிறுத்தப் போதுமான இடங்கள்
இல்லையென்ற குறையைப் போக்கவும்( ஒரு மணிக்கு நம் ஊர்க்காசில் ரூ.60 ஆகிவிடுமே!) நடு நகரில் உள்ள வியாபார நிறுவனங்களை
மக்கள் எளிதாக அடையவும் இங்கே இலவச பேருந்து சேவை ஒன்று உண்டு. பெட்ரோலினால் இயங்கினால் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு
வருமே என்று மின்சாரத்தால் இயங்கும் இந்தப் பேருந்து 'மஞ்சள் நிற வண்ணம்' கொண்டது! அங்கங்கே நிறுத்தங்கள் இதற்காகவே உண்டு.
ச்சும்மா சுத்தி சுத்தி வந்துகொண்டிருக்கும்!

இதுமட்டுமின்றி, பேருந்து சேவையை மேம்படுத்தவும், மக்களை இந்த சேவையைப் பயன்படுத்தத் தூண்டும் வகையிலும் ஒரு புதுவழி
கண்டுபிடித்துள்ளனர். இது 'மெட்ரோ கார்டு' சேவை. முதலில் ஒரு 10 டாலர் கொடுத்து ஒரு அட்டையை வாங்கிவிடவேண்டும். ஒவ்வொரு
முறை 'பஸ்' ஏறும்போது அதை அங்கேயுள்ள ஒரு பெட்டிபோன்ற அமைப்பில் வைத்தால் போதும். அது ஒன்னரை டாலரை அதிலிருந்து
எடுத்துக்கொள்ளும். மறுபடி இரண்டு மணி நேரத்திற்குள் நீங்கள் பஸ் ஏற நேரிட்டால் அது இலவசம். அதற்கு மேல் நேரமாகியிருந்தால்
மறுபடி ஒரு ஒன்னரை டாலர் அந்த அட்டையிலிருந்து கழிக்கப்படும். அதன்பின் எத்தனை முறை நீங்கள் பஸ்ஸில் ஏறினாலும் அது நாள் முழுக்க
இலவசமே! அட்டையில் காசு தீர்ந்துவிட்டால், ஓட்டுனரிடம் 10 டாலர்கள் கொடுத்தால் அவர் அதை உங்கள் அட்டையில் ஏற்றி விடுவார்!

மூன்று வருடங்களாக இன்னொரு சேவை அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இது 'ஆர்பிட்டர்' என்னும் பச்சை
வண்ண பேருந்து! எல்லா முக்கிய ஷாப்பிங் மால்கள், பல்கலைக் கழகம், முக்கிய பள்ளிகள் இவைகளை சென்றடையும்படி ஒரு வட்டப்பாதையில்
இது போகும்! ஆர்பிட்டர் பெயர்க் காரணம் புரிந்ததா? பதினைந்து நிமிட இடைவெளியில் சுற்றிக் கொண்டே யிருக்கும். 'மெட்ரோ கார்டு'
இதிலும் செல்லுபடியாகும்.

மற்ற இடங்களுக்குப் போகும் பேருந்துகள் எல்லாம் சிகப்பு நிறமுடையவையே! இந்த பஸ் கம்பெனியின் பெயரே 'ரெட்பஸ் கம்பெனி!'

இந்த டிசம்பர் 3 முதல் இன்னொரு புதிய பேருந்து சேவை ஆரம்பித்துள்ளது. 'மெட்ரோ ஸ்டார்' ஆரஞ்சு வர்ண பேருந்து! நாங்களும்
கலர் கலரான பஸ்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்!

இந்த நாட்டில் எந்தவிதமான பரிசோதனைகள், சோதனை ஓட்டம் என்று வந்தாலும் அதை முதலில் நம் 'கிறைஸ்ட்சர்ச்'நகரில்தான் வெள்ளோட்டம்
விடுவார்கள். அதனால் எல்லா வசதிகளும் எங்களுக்கே முதலில் கிடைக்கும்!


கரைவேட்டி ஆளுங்களுக்கு இந்த ஊர் ரொம்பவே பிடித்துவிடும். எங்கள் 'கேன்ட்டர்பரி'யின் கலரும் கறுப்பும் சிகப்பும்தான்! ரக்பி போட்டிகள்
நடக்கும் சமயம், போட்டியில் நம் கேண்டர்பரி அணி விளையாடுகிறதென்றால் அவ்வளவுதான்! அநேகமாக போட்டியைப் பார்க்கச் செல்லும்
அனைவரும் இந்தக் கறுப்பு சிகப்பைத் தங்கள் முகங்களில் வரைந்துகொண்டு போவார்கள். 'புலி வேஷம்'தான் ஞாபகம் வரும். ஆனால் இது
கறுப்பு, சிகப்புப் புலி! எங்கே பார்த்தாலும் கறுப்பு, சிகப்பு பலூன்கள் பறக்கும்!

கால நிலையைப் பொறுத்தவரை, இங்கே குளிர் கொஞ்சம்(!) அதிகமே! சில சமயம் ஒரே நாளில் நான்கு பருவ நிலைகளும் ஏற்படும்!
வெளியே போகும்போது ஒரு ஜாக்கெட்டோ, ஸ்வெட்டரோ கட்டாயமாக எடுத்துக் கொண்டே போகவேண்டும்.

இங்கே காற்றில் ஈரப்பதமே இல்லாததால், நமக்கு வேர்க்கவே வேர்க்காது! நல்லதாப் போச்சு! துணி அழுக்கு ஆகாது என்று இருந்தாலும்,
வியர்வை வராமல் இருப்பது உடல் நலத்துக்கு ஊறு அல்லவா? காலநேரம் பார்க்காது, எல்லா நேரமும் தெருவில் ஆட்கள் ஓடிக் கொண்டும்,
ஜாக்கிங் செய்துகொண்டுமிருப்பார்கள்! அப்படியாவது வியர்வை சிந்தலாமே என்றுதான்!

அருமையான நூலகங்கள் இங்கே இருக்கின்றன. மிகவும் வசதியாக அமர்ந்துகொண்டு ஒரு நாளையே அங்கே கழித்து விடலாம்!

ஷாப்பிங் செய்வதற்கு அருமையான இடம் இந்த ஊர். ஒரே கூரையின் கீழ் உள்ள பலவிதமான கடைகள். உள்ளேயே '·புட் கோர்ட்'
எனப்படும் உணவுக்கான இடங்கள். பல்வேறு நாட்டு உணவுகள் கிடைக்கும். எல்லா ·புட் கோர்ட்டுகளிலும் ஒரு இந்திய உணவகம்
கண்டிப்பாக உள்ளது! இங்கே இப்போது இந்திய உணவு உண்பதுதான் ·பேஷன்! 'ஷாப்பிங் மால்'என்று அழைக்கபடும் இவ்விடங்களில்
சினிமா திரை அரங்கங்களும் உள்ளன. சினிமா பார்த்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு அப்படியே ஷாப்பிங் செய்துகொண்டு வரலாம்!

இங்கே உள்ள ஜனத்தொகைக்கு ஏற்றபடி இல்லாமல் இப்போதெல்லாம் இந்த மால்களின் அளவுகள் விரிந்துகொண்டே
போகின்றன! ஏராளமாகச் செலவு செய்து அவைகளை மேம்படுத்திக் கொண்டே இருப்பதில் இந்த ஷாப்பிங் மால்களுக்குள்
பெரிய போட்டியே நடக்கிறது! மக்களுக்கு வாங்கும்/செலவு செய்யும் 'பவர்' கூடிவிட்டதாம்! கடனட்டையை வைத்துக்
கொண்டு கண்மண் தெரியாமல் செலவு செய்துவிட்டு பிறகு 'திட்டமிட்ட செலவு செய்யக் கற்றுக்கொடுக்கவென்றே
அரசாங்கம் ஏற்பாடு செய்கின்ற கவுன்சிலிங்குக்கு போய்வருகிறார்கள்.

Thursday, October 06, 2005

நியூஸிலாந்து. பகுதி 11

கிறைஸ்ட்சர்ச் நகரம் : நியூஸிலாந்தின் தோட்ட நகரம்!!!!

'கார்டன் சிடி' என்று வர்ணிக்கப்படும் இந்த நகரெங்குமே தோட்டங்கள்தான்! ' த மோஸ்ட் இங்கிலீஷ் ஸிடி ஆ·ப் நியூஸிலாண்ட்' என்ற
பெத்த பெயர் பெற்றது!


முதல் முதலில் 'பிரிட்டிஷ்'காரர்கள் வந்து இறங்கியது இங்கேதான்! கப்பலில் பல மாதங்கள் பயணம் செய்து வந்தார்களாம். வரும்போதே
நோய் வாய்ப்பட்டு பலரும் இறந்துவிட்டனராம்! குடும்பமாகவே எல்லோரும் வந்துள்ளனர்! இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்த விவசாயிகளே
இவர்கள்.


கப்பலில் வந்தவர்களின் பெயர், குடும்ப விவரம், அந்தக் குடும்பத்தில் வரும்போதே இறந்தவர்கள், அவர்கள் வந்தக் கப்பலின் பெயர்
போன்ற எல்லா விவரங்களும், நகரின் மையத்தில் உள்ள சதுக்கத்தில், கற்களில் பொறிக்கப்பட்டுத் தரையில் பதித்து வைக்கப்பட்டுள்ளது!


அவர்கள் வந்தவுடன், இங்கே ஒரு தேவாலயத்தைக் கட்டி இருக்கின்றனர். அதைச்சுற்றி எழுப்பப்பட்ட நகரம்தான் 'கிறஸ்ட்சர்ச்'
என்ன ஒரு பெயர்ப் பொருத்தம் பாருங்கள்!


அவர்களுக்குத் தெரிந்த முறையிலேயே எல்லாக் கட்டிடங்களும் கட்டப்பட்டதால், இங்கிலாந்துக்கு வெளியே உள்ள இன்னொரு இங்கிலாந்து
என்று தோன்றும் வகையிலே இங்கே நகர அமைப்பு உருவாகிவிட்டது!


வீட்டுக்கு வீடு தோட்டங்கள்தான்! இங்கேயுள்ளவர்கள் வளர்ப்பு மிருகங்களுக்குச் செலவிடுவது மிக அதிகம்! அதற்கு அடுத்த செலவு இந்த
தோட்டங்களுக்குத்தான்!


எங்கே பார்த்தாலும், 'கார்டன் சென்டர்' என்று அழைக்கப்படும் 'நர்ஸரிகள்' வகைவகையான வண்ண மலர்கள் கொண்ட செடிகளை
விற்பனை செய்கின்றன! வஸந்த கால மலர்கள், இலை உதிர் கால மலர்கள், கோடைக்கால மலர்கள், இன்னும் குளிர்கால மலர்கள்
என்று எல்லாக் காலங்களுக்கும் மலர்கள். 'மலர்களே மலர்களே' என்று பாடத் தோன்றும்!


அரசாங்க விடுமுறைகளுக்கு வியாபார நிலையங்களும் உட்பட்டது. அதை மீறி,கடைகளை திறந்து வைப்பவர்கள், அபராதம் கட்டவேண்டும்!
அபராதம் கட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் இந்த நர்ஸரிகள் வருடம் 365 நாட்களும் திறந்து இருக்கும். அன்றுதான் வியாபாரம் அதிகமாம்.
அதனால் அபராதம் பரவாயில்லையாம்!


வீடுகட்ட மனைகள் வாங்கினாலும், அவற்றில் 60% சதவீதம் இடத்தைத் தோட்டம் அமைக்க விட்டுவிடவேண்டும்! வெறும் 40% மட்டுமே
கட்டிடம்!


எந்த வீட்டுத் தோட்டம் சிறந்தது என்று போட்டியும் உண்டு! அதற்கானப் பரிசைப் பெறவேண்டுமென்று, பலர் எப்போதும் அவர்களுடைய
வீட்டுத் தோட்டமே கதியாக இருப்பார்கள். முதல் பத்து இடங்களைப் பெற்றவர்களுக்கு பரம ஆனந்தம்!


இந்தப் பத்து வீடுகளைச் சுற்றிக் காண்பிப்பதற்கு, ஒரு 'பஸ் டூர்'கூட உண்டு. அதற்கும் கட்டணம் கட்டி, வீடுவீடாகப் போய்ப் பார்த்து
மகிழ்வார்கள்! இந்த வீடுகளில் ஏதாவது ஒன்று விற்பனைக்கு வந்துவிட்டால் அவ்வளவுதான்! 'ப்ரைஸ் வின்னிங் கார்டன்' என்றச் சொல்
மட்டுமே அதன் மதிப்பை எங்கேயோ கொண்டு போய்விடும்! இதற்காகவே இவர்கள் இந்தப் பாடு படுகிறார்களோ என்று தோன்றும்!


நகரம் எங்கும், நகராட்சியால் பராமரிக்கப்படும் பூந்தோட்டங்களும் எப்போதும் புதுப் பொலிவோடு இருக்கும்! மூன்று மீட்டர் அகலம் உள்ள
நடைபாதையில் ஒரு மீட்டர் அகலம் புல்தரையாகவே இருக்கும்! பொதுவாக, அவரவர் வீட்டுக்கு முன் உள்ள நடைபாதைப் புற்களை
தங்களுடைய புல்வெளியில் புல் வெட்டும்போது கூடவே சேர்த்து வெட்டிப் பராமரிக்கும் பழக்கம் உள்ளது. கோடையில் புற்கள் வாடாமல்
இருக்க, இரவு நேரத்தில்,நகராட்சியின் 'தண்ணீர் லாரி' மூலம் நீர் தெளிக்கப்படும்!


நகரசபை வசூலிக்கும் வரிகளில் பெரும்பங்கு இந்த தோட்டப் பராமரிப்புக்கு போய்விடும்!


நகருக்கு உள்ளேயே 74 ஏக்கரில் ஒரு பெரிய தோட்டம் உண்டு. இதன் பெயர் 'ஹேக்ளி பார்க்'. இதன் நடுவிலே ஒரு ரோடு கிழக்கு
மேற்காகப் போகிறது! நகரின் மேற்கே இருக்கும் பேட்டைவாசிகள் இதைக் கடந்தோ, அல்லது சுற்றிக்கொண்டோதான்
போகவும் வரவும் முடியும்!


இதில் ஒரு பகுதி முழுவதும் விளையாட்டுக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கோல்·ப், ரக்பி, கிரிக்கெட் என்று சீஸனுக்குத் தகுந்தபடி.
ஒரு டென்னிஸ் கோர்ட்டும், நெட் பால் கோர்ட்டும் நிரந்தரமாகவே உள்ளன.


இங்கு விக்டோரியா லேக் என்ற சின்ன ஏரியும் உண்டு. அதைச் சுற்றி ஏராளமான வாத்துக்கள் குடியிருக்கின்றன. இங்கே 'டக் ·பீடிங்'
விசேஷம். தோட்டத்துக்குப் போகும்போது கொஞ்சம் (பிரெட்) ரொட்டித்துண்டுகளை கொண்டுபோனால் போதும். அந்த வாத்துக்களுக்கு
எப்படிதான் தெரியுமோ! பறந்து வந்து நம்மைச் சுற்றிக்கொள்ளும்.


குஞ்சு பொரிக்கும் சீஸன்களில், தாய் வாத்து தன் குஞ்சுகளுடன் மெயின் ரோடைக் கடந்து செல்லும் காட்சி சர்வ சாதாரணம்! எல்லா
மோட்டார் வாகனங்களும், அந்தக் குடும்பம் மறுபக்கம் போய்ச் சேரும்வரை பொறுமையோடு காத்திருக்கும்! இதெல்லாம் கூட இங்கே
சுற்றுலாப்பயணிக்களுக்கு added attraction!


இந்த நகரிலே உள்ள ஒரே நதியான 'ஏவொன் ரிவர்' நகரின் பல பாகங்களின் வழியாகப் போகிறது. அங்கங்கே நதியைக் கடக்க
பாலங்கள், போக்குவரத்திற்காகக் கட்டப்பட்டுள்ளன.


கிறைஸ்ட்சர்ச்சும் இதனைச் சுற்றியுள்ள இடங்களும் ( பதினெட்டுப் பட்டிகளும்) 'கேண்டர்பரி ' என்று அழைக்கப்படுகிறது. இங்கிலாந்திலும்
ஒரு 'கேண்டர்பரி' இருப்பது ஞாபகம் வருகிறதா? வழக்கம்போல 'பெயர் பஞ்சம்'தான்! இந்த ஊரிலும்,இதைச் சுற்றியும் ஒரே சமதளமாக நிலப்பரப்பு
இருப்பதால் 'கேண்டர்பரி ப்ளெயின்ஸ்'என்று சொல்கிறார்கள். ஆகவே 'சைக்கிள்'நிறைய உபயோகமாகிறது. மெயின் ரோடுகளிலும்
'சைக்கிள் பாத்'என்று சைக்கிளுக்காக தனிப்பகுதி இருக்கிறது. தார் ரோடுகளில் இதை வேறுபடுத்திக் காண்பிக்க செம்மண் கலரில் இந்தப்
பாதை இருக்கும். அங்கங்கெ 'சைக்கிள் சின்னமும்' இருக்கும்!


தெற்குத் தீவிற்கான பன்னாட்டு விமானத் தளமும் இங்கேதான் உள்ளது. அதன் அருகிலேயெ, தென் துருவத்தில் தங்கி ஆராய்ச்சி செய்து
வரும் விஞ்ஞானிகளுக்கு உணவு, மற்ற பொருட்கள், தபால் ஆகியவைகளைக் கொண்டுபோகும் சிறப்பு விமான தளமும் உண்டு! இங்கே
கோடைகாலமானால், பலமுறையும், குளிர் காலமானால் ஒரு சில முறையும் இந்தச் சேவை நடக்கும்! அதைப்பற்றிய அறிவிப்புகளை தொலைக்
காட்சியில் சொல்வார்கள்!


இந்த நகரிலே, 'அண்டார்டிக் சென்டர்' என்று ஒரு கட்டிடம் உண்டு. இங்கே தென் துருவத்தைப் பற்றிய விளக்கங்களும், அங்கே உள்ள
கடல்வாழ் உயிரினங்களும் இருக்கின்றன. நாளில் பலமுறை இவற்றைப் பற்றிய திரைப்படங்கள் காண்பிக்கப்படும். மேலும் தென் துருவத்தின்
பருவ நிலையையும் பனிப்புயலையும் செயற்கை முறையில் உருவாக்குகின்றனர். அந்தப் பனிக்குகைகளில் ஒரு முறை போய்வந்தால், கிட்டத்தட்ட
தென் துருவம் போன உணர்வு வந்துவிடும்! இது போன்ற அமைப்பு உள்ள இடம் உலகிலேயே இது ஒன்றுதான். சுற்றுலாவாசிகளுக்கு
இது சொர்க்கபூமி!



எல்லா ஐரோப்பிய நகரங்களுக்கும் பொதுவான ஒன்று என்னவென்றால், ஊருக்கு ஒரு பொதுச் சதுக்கம் இருக்கும். அந்த ஊரில்
முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கும் இடம்! இங்கேயும் 150 ஆண்டு பழக்கமான ஒரு தேவாலயம் இருக்கின்றது என்று கூறினேன்
அல்லவா? அதன் முன்புதான் இந்த ஊரின் முக்கிய சதுக்கம் இருக்கிறது! எப்போதும் சுற்றூலாப் பயணிகளை அங்கே பார்க்கலாம்.


இந்த ஊரின் 'டவுன் க்ரையர்' என்பவர் பழங்கால உடைகள் அணிந்து, கையில் ஒரு பித்தளை மணி ( நம் பூஜை மணிபோல இருப்பது)
அடித்துக் கொண்டே,பகல் 12 மணிக்கு, கையிலுள்ள சுருளை எடுத்துப் பிரித்து, அன்று நடக்க இருக்கும் முக்கிய நிகழ்வுகளைப் படிப்பார்!


உங்கள் கற்பனைக் குதிரையில் ஏறி ஒரு பழைய காலத்து, முடியாட்சி நடந்துகொண்டிருக்கும் தேசத் தலைநகருக்குப் போய்விடுங்கள்!
அங்கே தெருவில் மத்தியிலோ, கோட்டை வாசலிலோ ஒரு அரசாங்க வீரன் சுருட்டிய ஓலைகலைப் பிரித்துப் படித்து
அனைவருக்கும் அரச கட்டளையைத் தெரிவிப்பான் அல்லவா?


அதே, அதே, அதேதான்! இது இங்கே, இந்தச் சதுக்கத்தில் தினமும் நடக்கும் நிகழ்வு. இன்னொரு முக்கிய நிகழ்வு. இந்த நகருக்கு ஒரு
'விஸர்டு' மந்திரவாதி இருக்கிறார். அவர் தினமும் பகல் 12 மணிக்கு, 'டென் கமாண்ட்மெண்ட்ஸ்' படத்தில் 'மோசஸ்' கையில்
வைத்திருந்தது போன்ற ஒரு தடியுடன் வந்து, ஒரு சிறிய ஏணிமேல் ஏறி நின்றுகொண்டு அவ்வப்போது நடக்கும் உலக நிகழ்ச்சிகளைப்
பற்றிப் பேசுவார். அவர் வைத்திருக்கும் உலகப் படத்தில் இந்த நாடு தலைகீழாகக் காட்டப்பட்டிருக்கும். இந்த நாட்டின் அரசாங்கத்தின்
நடவடிக்கைகளும் இவர் நாவில் இருந்து தப்ப முடியாது! வீராவேசமாகப் பேசுவார்! இந்த நகரின் 'லேண்ட் மார்க்'குகளில் இவரும் ஒருவர்.
பார்ப்பதற்கு 'மனநோயாளி' போல இருக்கும் இவர் மிகவும் சிறந்த அறிவாளி. தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்று சில வருடங்களுக்கு
முன்புவரை, நம் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக வேலை செய்தவர். உலக விசாரம் மேலிட்டு வேலையை விட்டுவிட்டு, இப்படிப்
பிரசங்கம் செய்துகொண்டு இருக்கிறார்.


இன்று காலை வந்த தொலைக்காட்சிச் செய்தியின்படி, எங்கள் மந்திரவாதி, 'ஓமரு' என்னும் ஊருக்குப் போய்விட முடிவு செய்துவிட்டாராம்!


இங்கே உள்ள மிருகக் காட்சி சாலையும் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டியவைகலில் ஒன்று. எல்லா மிருகங்களும் திறந்தவெளியில்
ஏறக்குறைய அதன் இயற்கை அமைப்பிலான சூழலில் இருக்கும். இங்கே உள்ளூர்காரர்கள் அவர்களுக்குப் பிடித்த மிருகத்தை,'தத்து'
எடுத்துக் கொள்ளலாம்!


இந்த மிருகக் காட்சி சாலையின் பெயர் 'ஒரானா பார்க்' இங்கே வருடம் 50 டாலர் கட்டினால், 'ஒரானாவின் நண்பர்கள்' ஆகிவிடலாம்!
அந்த வருடம் முழுவதும் எத்தனை முறைகள் வேண்டுமானாலுமங்கெ போய்வரலாம்.


இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், எங்கே போனாலும் கட்டணம் மிகவும் அதிகம். அதிலும் அதை ரூபாயாக
மாற்றிக் கணக்குப் போட்டுப் பார்க்குபோது( நம்மை அறியாமலேயெ இது வந்துவிடும்!) 'கொள்ளை அடிப்பது'போல இருக்கும்! ஆகவே
உள்ளூர்காரர்கள் புதிதாக ஏதாவது விசேஷமாக வரும்போது ஒருமுறை செல்வதோடு சரி! ஆனால் உள்ளூர் ஆட்கள் அவர்களுக்கு ஆதரவு
தருவதில்லை என்று 'மூக்கால் அழுவார்கள்'! குறைந்த பட்சம் ஏதாவது தள்ளுபடி தரலாம் அல்லவா?




இன்னும் வரும்

நன்றி: சங்கமம் 2004

Wednesday, October 05, 2005

கொலு பாக்கலையோ கொலு.


நவராத்திரிக்கு கொலு வச்சா, எல்லோரையும் அழைக்கணுமா இல்லையா? அதுக்குத்தான் வலைவழியாக்
கூப்புடறேன். எல்லோரும் வந்து வெத்தலை,பாக்கு/மஞ்சள் குங்குமம் வாங்கிக்குங்க.( சுண்டலும் இருக்கு)

படம் போட்டாப் பத்தாது, கதையும் சொல்லணுமுன்னு நச்சரிக்கிற நண்பர்களுக்காக.

மொத்தம் அஞ்சே படிகள்.

முதல் படி: சாஸ்திர சம்பிரதாயத்தையொட்டி மரப்பாச்சிகள். பெருமாளும், தாயாரும். பக்கத்துலே ரெண்டு ச்சின்ன
அகல்விளக்குகள், நம்ம சித்ரா ரமேஷின் அன்பளிப்பு.

ரெண்டாம்படி: புள்ளையார் இல்லாம வேலை நடக்குமா? நடுவிலே நர்த்தன விநாயகர்( லேட்டஸ்ட் அடிஷன்
கோபால் பெங்களூரில் வாங்கிவந்தது)
அவருக்குத் துணையா ரெண்டு பவழப்பிள்ளையாரும், ரெண்டு பளிங்குப் பிள்ளையாரும். இதுலே பளிங்குப்
பிள்ளையார்கள் அமெரிக்கா ரிட்டர்ண்டு( கோபால் யு.எஸ்.லே இருந்து வாங்கியது)

மூணாம்படி: கண்ணப்பிள்ளையார் குழந்தை. சிங்கையில் வாங்கியது. குழந்தைன்னா பால் புட்டி வேணுமா இல்லையா?
ச்சின்னப்பாட்டில் பாலெல்லாம் யானைப்புள்ளையாருக்குப் பத்துமோ? அதாலே 'பால் கேன்' லே பாலும், பக்கத்துலே
இன்னொரு கேன் லே வெண்ணெயும்( கண்ணனுக்கு) வச்சிருக்கு.( இது ரெண்டும் ஜெனீவாவிலே வாங்குனது.
கூட இருக்கறது ரெண்டு தேவகன்னிகைகள்.( லோக்கல்)

நாலாம்படி: துளசி வீட்டுக்கொலுவிலே யானை இல்லாமயா? யானைகள், பூனை/புலி, பெங்குவின்( இருக்கற ஊருக்கு
அடையாளம் வேணாமா?) அப்புறம் உலக உருண்டை. அதோட தலையிலே ஒரு மவோரி அடையாளம்.

அஞ்சாம்படி: தீம் 'தாய்மை'

முயலம்மா குழந்தையைத் தொட்டில்லே போட்டுத் தூங்கவைக்குறாங்க. தாலாட்டு வேணுமா இல்லையா?
அதுக்கு மத்த முயல்குடும்ப அங்கத்தினர்கள் எட்டுப் பேர் உதவறாங்க. ட்ரம், அக்கார்டியன், ட்ரம்பெட்,வயலின்,
கிடார்னு அஞ்சுபேர் வாசிச்சுக்கிட்டு இருக்காங்க( விடிஞ்சது போ. இந்த சத்தத்துலே அந்தப் புள்ளை எப்படித்
தூங்கும்?) ஒருத்தர் பூக்கூடைநிறைய பூ கொண்டுக்கிட்டு வர்றார்.( மலர்ப்படுக்கையோ?) ரெண்டு பேர்
தர்ப்பூசணிப்பழமும்( ச்சும்மா ஒரு கீத்துதான்!) கேரட்டும் கொண்டுவந்திருக்காங்க.

'அம்மா'வையும் சேர்த்து ஒம்போது பேர். ஆக ஒரு குழந்தையை வளர்க்க ஒம்போது பேரு வேணுமுன்னு
சொல்லாமச் சொல்றாங்களோ இல்லை, ஒரு தாய்க்கு ஒம்போது வேலைங்க இருக்குன்னு சொல்றாங்களோ
தெரியலை.


ஆகக்கூடி அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன். கட்டாயமா வாங்க.

Tuesday, October 04, 2005

மாரியம்மா காளியம்மா திரிசூலியம்மா

புதுசு புதுசாப் 'பட்ட'ப்பேருங்க வந்துக்கிட்டு இருக்குங்க.
மொதல்ல பின்னூட்ட நாயகின்னாங்க.
அப்புறம் அம்மன் வேஷம்னாங்க
இப்ப என்னடான்னா 'சாமி செடி அக்கா'வாம்.

சரி, இவ்வளவு தூரம் நமக்கு ஒரு எஃபெக்ட் இருக்குன்னதும்
ச்சும்மா இருக்கமுடியுதுங்களா?

இன்னையிலே இருந்து நவராத்திரி வேற ஆரம்பம். பேருக்குத் தகுந்தாப்புலே இருக்க வோணாமா?

அதுதான் நவராத்திரியை முன்னிட்டு இந்தப் பதிவு. எல்லாரும் கன்னத்துலே போட்டுக்குங்க.
பதிவு நிஜமாவே சாமியைப் பத்திதான்!

***************************************************




கரூர் மாரியம்மன் கோவில்
************



எத்தனையோ ஊர் இருக்க, அதென்ன 'கரூர்'ன்னு கறாரா சொல்றாளேன்னு பாக்கறீங்களா?
என்ன இருந்தாலும் 'பிறந்த ஊர்' பாசம் இருக்காதா?



அக்கம்பக்கம் சுத்தி வர பதினெட்டுப் பட்டியிலெயும் ரொம்ப 'பேர் போன சாமி'தான் நம்ம கரூர் மாரியம்மன்.

யார் வீட்டுலே என்ன வியாதி வருதோ, எல்லாரும் நேந்துக்கறது இந்த அம்மன் கிட்டேதான். தாய்க்குத் தாயா
கருணை காட்டற தயாபரி!

வருசம் பூரா, எதாவது சின்னதோ, பெரியதோ நோய் நொடி வராம இருக்குமா மனுச சென்மத்துக்கு? எதுன்னாலும்
சரி, இருக்கவே இருக்கா நம்ம மகமாயி! அதனாலே வருசம் பூரா, இந்தக் கோயிலுலே நேர்த்திக்கடன் கழிக்கற
கூட்டமும் இருந்துகிட்டே இருக்கும்!



அதுலேயும் சித்திரை மாசம் வர்ற திருவிழா இருக்கே, இது இன்னும் விசேஷம்! ரெண்டு கையிலேயும் அக்கினிச் சட்டி
எடுத்துகிட்டு ஆடிகிட்டு வருவாங்க பாருங்க, ஒரே அமக்களமா இருக்கும். அந்தக் கொட்டு கேக்கறப்பவே நமக்கும்
கூடவே ஆடணும்னு ஒரு வேகம் வரும். கொஞ்சம் அசைஞ்சாப் போதும், 'சாமி வந்துருச்சு'னு நம்ம மேலெ மஞ்சத்
தண்ணி யாராவது ஊத்திருவாங்களேன்னு பொட்டைப் பசங்க எல்லாம் கவனமாக் காலை அசையாம வச்சிகிட்டு நிப்பாங்க!
அதையும் மீறி சிலபேரு ஆடறதும் உண்டு! அடி வேப்பிலையை! கொண்டா துண்ணூரை!


சித்திரை வெயிலுக்கு கேக்கணுமா? அந்த சூட்டோட, கையிலே இருக்கற மண்சட்டிச் சூடுவேற!


என்னதான், பச்சை வேப்பிலையை உள்ளங்கையிலே வச்சு, அதுக்கு மேலே தீச்சட்டி வச்சிருந்தாலும்,
'கன கன'ன்னு தீக்கங்கு கனன்று கிட்டே இருக்குமே!


கொட்டு மேளத்தோட அக்கினிச் சட்டி ஊர்வலம் வரும்போது, அவுங்க காலுக்கு ஊத்தறதுக்காக அரைச்ச மஞ்சள்
கலக்கின தண்ணி அண்டா அண்டாவா வச்சிருப்போம்!


கருவேப்பிலை, உப்பு எல்லாம் போட்டு அருமையான நீர் மோரு இன்னொரு பெரிய புது மண்குடத்துலே!
மண்குடம் ஏன்னா, அப்பத்தானே மோரு நல்லா ச்சில்லுன்னு இருக்கும்!


யாருக்காவது, நம்ம 'கே.பி. சுந்தராம்பாள் ஞாபகம்' இருக்கா? அவுங்களும், அவுங்க தம்பியும் வருசாவருசம்
இந்தக் கோயிலுக்கு வந்து, 'அக்கினிச் சட்டி' தூக்குவாங்க! மஞ்சள் நனைச்ச சீலை கட்டிகிட்டு, நெத்தி நிறைய
துண்ணூறு பூசிகிட்டு, தலையை அள்ளீ முடிஞ்சுகிட்டு, சாமி ஆடிகிட்டே வருவாங்க! நாங்க சின்னப் பசங்க எல்லாம்
ஓடிப் போய் காலுக்குத் தண்ணீ ஊத்துவோம்!


ஊர் முழுக்கத் திருவிழாக் கூட்டம். எங்கே பாத்தாலும் சின்னச் சின்ன கொட்டாய் போட்ட கடைங்க! கோயிலுக்கு வாரவுங்க,
அப்படியே வீட்டுக்குச் சாமான்கள வாங்குவாங்கல்ல! பொம்புளைங்க வாரதே, பாத்திரம் வாங்கறதுக்காகன்னு தோணும்!


எங்கே பாத்தாலும் தீனிக்கடைங்க முளைச்சிரும்! எல்லா வீட்டுத் திண்ணைங்களிலேயும் திருவிழாவுக்கு வந்த ஆளுங்க
இடம் பிடிச்சிருவாங்க! வூட்டு ஆளுங்க யாரும் ஒண்ணும் சொல்லமாட்டாங்க.போயிட்டுப் போட்டும்னு பெரிய மனசு
பண்ணுறதுதான். கல்மிஷம் இல்லாத கிராமத்து ஜனங்க! மத்தபடி குளிக்கக் கொள்ள, இருக்கவே இருக்கு 'அமராவதி ஆறு!'

திருவிழாவுக்கு ஒரு மாசம் இருக்க சொல்லவே, கோபுரத்துக்கு, மத்த இடங்களுக்கு புதுசா வர்ணம் அடிக்க ஆரம்பிச்சிருவாங்க!
கோயில் கோபுரம் ரொம்ப உயரமா, பெருசா இருக்கும். நுழைவாசல் கதவுங்களும் பெருசா இருக்கும். உள்ளே போனவுடனே
ஒரு கொடிமரம். அப்புறம் பலிபீடம். ஆனா, உயிர்ப்பலி கிடையாது. சும்மா ஆடுங்க, கோழிங்களைச் சுத்தி விடுவாங்க!


சாமியச் சுத்திவர, பெரிய பிரகாரம் இருக்கு. அங்கெயும் குட்டிக் குட்டியா நிறைய சாமிங்களுக்கு சந்நிதிங்க இருக்கு.


கோயிலுக்கு உள்ளே நிறைய புது மண் சட்டிங்களை அடுக்கி வச்சிருப்பாங்க. அந்தச் சட்டிங்கள்லே, வாய்க்குக் கொஞ்சம் கீழே
சின்னச் சின்னதா முக்கோண வடிவுலே ஓட்டைங்க இருக்கும். குட்டிக் குட்டி ஜன்னல்போல இருக்கும் அதன் மேலும் கீழும்
காவியாலும், சுண்ணாம்பாலும் கோலம் போட்டிருக்கும். பார்க்க ரொம்பவெ அழகாக இருக்கும்.


அந்த ஓட்டைங்க வழியாகப் போற காத்து, அதில் உள்ள தீ அணைஞ்சிராமல் எரிய உதவுமாம்! ஒரு சின்ன விஷயத்தையும்
விடாமல் வடிவமைச்சிருக்காங்க பாத்தீங்களா?


கோயிலுக்கு உள்ளே இந்தச் சட்டிகளுக்கு அருகிலெ, இன்னொரு சுவாரசியமான பொருள் குவிச்சு வச்சிருப்பாங்க! அது
மண்ணால் செஞ்ச பொம்மைங்க! பலவிதமான உருவத்துலே பொம்மைங்க இருக்கும்.தலையிலிருந்து,தொடைவரை உள்ள
ரூபம்தான்.தலையில் மேலெ மண் மூடாம சின்னதா திறந்திருக்கும். அடிப்பக்கமும் திறந்தே இருக்கும். போலீஸ், கள்ளன்,
பொண்ணு, பையன், சாமியார், கிழவன், கிழவின்னு பல தினுசா இருக்கும். இதெல்லாம் என்ன?


பொங்கப் பானைக்கு பக்கத்திலே, மாவிளக்குத் தட்டுலே, அம்மனுக்குப் படையல் வைக்கற இடத்துலென்னு பல இடங்களில்
இதைவச்சு, தலைமேலெ இருக்கற ஓட்டையிலெ வேப்பிலையை சொருகி வைக்கற 'ஸ்டாண்டு!' திருவிழா சமயத்துலெ எல்லா
வேப்பமரமும் மொட்டையா நிக்கும். ஆளுங்கதான் எல்லாக் கொப்புங்களையும் உடைச்சு, கோயில் உள்ளெ போட்டு
வச்சிருவாங்கல்லே!


சாமிக்கு பின்னாலெ நேரா வந்தா, கோயில் மதிள் சுவத்துலெ ஒரு சின்னக் கதவு, திட்டி வாசல் இருக்கும். அதைத் திறந்துகிட்டு,
அந்தப்பக்கம் போனா,அஞ்சாறு வீடுங்களும் அதைச் சுத்தி ஒரு பெரிய காம்பவுண்டு சுவரும் சுத்திவர இருக்கும். அந்த வீடுங்க எல்லாம்
கோயிலைச் சேர்ந்ததுதான். ஆனா, கோயில் அதை வாடகைக்கு விட்டிருந்தது! அதுலெ ஒரு வீடு யாருதுன்னு நினைக்கறீங்க?


சரியாத்தான் சொல்லிட்டீங்க. அது எங்க வீடுதான். ஆனா, நான் அங்கே இருக்கறது லீவு விடறப்பதான். தாத்தாவும்
பாட்டியும்தான் அங்கே இருந்தாங்க.அங்கெ எங்க பக்கத்து வீட்டுலெ என் வயசுலெயே ஒரு பையன் இருக்கான். அவன் பேரு
சுப்பிரமணி. பாட்டி இவனைப் பத்தி ஒரு சேதி சொன்னாங்க. இவன் ஒண்ணாங்கிளாஸ் முடிச்சுட்டு, திருப்பி ஒண்ணாங்கிளாஸ்லேயே
இருக்கானாம். ஏன்னா, அவன் சினேகிதன் ·பெயில் ஆயிட்டானாம். அதனாலெ இவன் அவனுக்குத் துணையா ஒண்ணாப்புலேயே
இருக்கானாம்! இந்த மாதிரி சினேகிதத்துக்கு மரியாதைக் கொடுத்தவன் நம்ம சுப்பிரமணி ! என் சினேகிதன்!


அப்ப எங்களுக்கு ஒரு ஏழு வயசிருக்கும். நான் அங்கே போயிட்டா எப்பவும் கோயிலுக்குள்ளெதான் விளையாடிகிட்டு
இருப்போம். கோயிலுக்குள்ளே எப்பப் பாத்தாலும் ஆளுங்க இருந்துகிட்டே இருப்பாங்க
தென்னம்பாளையை ரெண்டா வகுந்து, கீத்து முடைஞ்சுகிட்டு இருப்பாங்க நிறையப் பொம்பிளைங்க. பந்தல் போடறதுக்கு வேணுமே.
வாய் பேசப் பேச, கையுங்க மட்டும் பரபரன்னு முடைஞ்சுகிட்டே போகும். பாக்கறதுக்கு ரொம்ப நல்லாவே இருக்கும்!

கேக்கறதுக்கும்தான்! நான் அப்பவே ஊர்க்கதை கேக்கறதுலே கில்லாடியாச்சே!

அம்மன் சன்னிதிக்குப் போனா, நாங்க சின்னப் பசங்கன்னு நினைக்காம, பூசாரித்தாத்தா உடனே ஒரு பெரிய வில்லைக் கற்பூரத்தைக்
கொளுத்தி ஆராதனை காட்டிட்டு, எங்களுக்குத் துண்ணூறு கொடுப்பார். அப்படியெ எரியுற கற்பூரத்தோட அந்த விபூதித் தட்டை அங்கெ
இருக்கற மேடை மேலே வச்சிட்டுப் போயிருவார்!


சுப்பிரமணிக்கு, பூசாரியா இருக்கணும்ன்னு ஒரே ஆசை! 'பெரியவனா ஆனபிறகு என்ன வேலைக்குப் போவே?' ன்னு கேட்டா,
அவன் சொல்றது, 'கோயிலு பூசாரி வேலை'ன்னு!


அவனும் நானுமா, வேப்பிலைக் கொத்து வைக்கற 'ஸ்டாண்டு' பொம்மைங்களை, 'நைசா' ஒண்ணொண்ணா தூக்கிட்டு வந்துருவோம்!
அங்கேதான் குவிஞ்சு கிடக்கே! அதனாலே எடுத்தா தப்பு இல்லேன்னு எங்க நினைப்பு!


வீட்டுத் திண்ணையிலே எல்லாப் பொம்மைங்களையும் வரிசையா அடுக்கி வச்சிருவோம். இப்ப ஆராதனை செய்ய கற்பூரத்துக்கு எங்கே
போறது?


கரெக்ட். கோயிலுக்குத்தான்! நாங்க போனவுடனெ, பூசாரித்தாத்தா கற்பூரம் கொளுத்துவாரு! அவரு தட்டை வச்சிட்டுப் போனவுடனே,
'·பூ'ன்னு ஒரே ஊதா ஊதி அணைச்சிட்டு, கற்பூரத்தை எடுத்துகிட்டு ஓடிருவோம்! அப்புறம்?


அப்புறம் என்ன? எங்க சாமிங்களுக்கு ஒரே கற்பூர ஆரத்திதான்!

நன்றி: மரத்தடி
நவராத்திரி ஸ்பெஷல் 2004

*************************************************************************************