நலம் நலம் நலம்.
பண்டிகைக்கு இன்னும் ரெண்டே நாள்தான் இருக்குன்னு ஜனம் அங்கே இங்கேன்னு கடைசி நிமிச ஷாப்பிங் செய்ய அலை மோதிக்கிட்டு இருக்கு. ஊரோடு ஒத்து வாழணும் என்ற கணக்கில் சாயங்காலம் நாமும் போகலாமுன்னு நினைப்பு. இன்னிக்குத்தான் வேலையில் கடைசி நாள். குறைஞ்சபட்சம் இனி 10 நாளைக்கு எல்லா இடங்களிலும் விடுமுறை.
மேஜர் நிலநடுக்கம் வந்தபின் இது முதல் கிறிஸ்மஸ். மக்கள்ஸ் மனசில் 'நிலையாமை' இடம் பிடிச்சதால் இன்றே இங்கே இப்போதேன்னு வாழ்க்கை. நாமும் இந்த 24 வருசங்களில் வழக்கமில்லாத வழக்கமா இந்த வருசம் கொஞ்சம் மின்விளக்கு அலங்காரம்(!!!!) ஜன்னலில் போட்டு வச்சுருக்கோம்.
இன்று மதியம் தலை வலிக்குதுன்னு வழக்கமில்லாத வழக்கமா ஒரு பத்து நிமிசம் படுக்கலாமுன்னு போய்ப் படுத்தேன். கையில் 'ராயர் காப்பி க்ளப்'. ரெண்டு பக்கம் கடந்திருக்கும். கண்ணை லேசா அசத்துது. அப்போ.....தடதடன்னு வீடே ஆட்டம். அப்படி ஒரு குலுக்கல். எழுந்து வெளியே ஓடலாமுன்னா தரையில் நிக்கமுடியலை அப்படியே தள்ளுது. எல்லாம் ஒரு 20 விநாடிகள்தான்.
நின்னவுடன் என்ன செய்யலாம் எதாவது சாமான்கள் விழுந்துச்சான்னு பார்க்க நாலடி எடுத்து அடுத்த ஹாலுக்குள் போகுமுன் இன்னொரு தடதட...... சாமி அறையில் ஷோகேஸ் கதவு ஆடுன வேகத்தில் தானே திறந்து பார்பி டால்( பாவம்ப்பா...புடவை கட்டுன இண்டியன் பார்பி) விழுந்துட்டாள். கூடவே சிலபல யானைகளும் புள்ளையார்களும்.
கோபால் உடனே ஆஃபீஸில் இருந்து ஓடிவந்தார். 'நான் இருக்கேன்'னதும் திரும்ப ஓடிப்போனார். போதும் வேலை பார்த்ததுன்னு எல்லோரும் நினைச்சபடியால், ஒரு மணி நேரத்தில் கிளம்பி வந்துட்டார். அதுக்குள்ளே நண்பர்கள் ஃபோனில் கூப்புட ஆரம்பிச்சு நலம் விசாரிக்க ஆரம்பிச்சுருந்தாங்க. நாங்களும் ரெண்டு பக்கத்து வீடுகளிலும் இருக்கும் அயல்வாசிகள் நலமான்னு எட்டிப்பார்த்துட்டு வந்தோம். எதுத்த வீட்டுக்காரர் ஓடிவந்து நலமான்னு கேட்டுட்டுப் போனார். அப்பப் பார்த்து ஒன்னு வந்துச்சு ரொம்ப ஃபோர்ஸோடு. க்ளிங்ன்னு கண்ணாடி விழுந்த சப்தம். நின்னு பார்க்க நேரமில்லைன்னு நானும் கோபாலும் வெளியே பாய்ஞ்சோம்.
இந்த ரெண்டு மணி நேரத்துக்குள்ளே சின்னச்சின்னதா ஒரு பத்துப்பதினைஞ்சு தடதடப்புகள். கதவு ஜன்னல்கள் எல்லாம் ஆடி ஓய்ஞ்சு நிக்குதுகள். பெருசா ஒரு மூணு!
5.8,
5.3,
6.0
மஹாலக்ஷ்மி கீழே விழுந்துட்டாப்பா:(
டிவியில் நிகழ்ச்சிகள் எல்லாம் நிறுத்திட்டு லைவ் ரிப்போர்ட்டுகள். எல்லா ஷாப்பிங் செண்டர்களையும் மூடியாச்சு. சூப்பர்மார்கெட்டுகள் அடைப்பு. கீழே விழுந்து உடைஞ்ச ஒயின் பாட்டில்கள் க்ளீனிங் அப் இருக்கே!
ஏர்ப்போர்ட் காலி பண்ணீயாச்சு. ஓடிக்கொண்டிருந்த ரயில்களை நிறுத்திவச்சுட்டாங்க.
26,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. மலை முகடுகளில் இருந்து பாறைகள் விழ ஆரம்பிச்சுருக்கு. ஆறு & கடல்பக்கத்து இடங்களில் இந்த லிக்யூஃபேஷன் பொங்கி வழிஞ்சு எல்லா 'அழுக்குகளும்' சேர்ந்து வீடுகளைச் சுற்றிக் குளம் கட்டி நிக்குது.
பதினைஞ்சு நிமிசத்துக்கு ஒரு தடவை டைம்டேபிள் போட்டுக்கிட்டு ஆட்டம் தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு. இன்னும் ஒரு நாலைஞ்சு நாட்களுக்கு பெருசு பெருசா வரக்கூடுமாம். பேட்டர்ன் இப்படின்னு நிபுணர்கள் டிவியில் வந்து சொல்லிக்கிட்டு இருக்காங்க.
சிவில் டிஃபென்ஸ் பிரிவு, இழப்புகளையும் சேதாரங்களையும் பார்வையிடப் புறப்பட்டாச்சு. ஏற்கெனவே சேதாரம் ஆகி காலி செய்யப்பட்ட பல கட்டிடங்கள் தானே தன்னை இடிச்சு தரையோடு தரையாகிக் கிடக்காம். வீட்டை விட்டு வெளியில் போகாதே. தேவை இல்லாம செல்ஃபோன் பயன்படுத்தாதே. எதாவது சொல்லணுமுன்னா டெக்ஸ் மெஸேஜ் (SMS) கொடுத்துக்கோன்னு டிவியில் வந்து எங்களை 'மிரட்டி' வச்சுருப்பதால் உங்களுக்கு சேதி எழுதிகிட்டு இருக்கேன். நாட்டு நடப்பு இனி டிவியில் தான். பார்த்து ஆகணும்.
இப்போதைக்கு நம்ம வீட்டில் மின்சாரம் & தண்ணீர் இருக்கு. ஆனால் எப்போ எதுவரைன்னு சொல்ல முடியாது. பொழைச்சுக்கிடந்தா புது வருசத்தில் பார்க்கலாம்.
தனி மடலிலும் சாட் லைனிலும் வந்து விசாரித்த நட்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்று இந்த நிமிசம் நான் இருக்கேன். மகளும் வந்துருக்காள். மூவரும் ஒர் கூரையின் கீழ் இருக்கோம்.
அனைவருக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.
Friday, December 23, 2011
மறுபடியும்............ ஆ......ட்டம்:(
Posted by துளசி கோபால் at 12/23/2011 05:32:00 PM 79 comments
Labels: அனுபவம்
Wednesday, December 21, 2011
கத்திக்குத் தப்ப வழி உண்டா?
மாருக்குப் பக்கத்தில் என்னமோ சின்னக் கட்டி போல இருக்கே..... அப்புறம் பார்த்துக்கலாமுன்னு கொஞ்சம் அசட்டையா(??) இருந்தது இப்போ தப்பாப் போயிருச்சு போல :(
மகளிடம் லேசுபாசாய்ச் சொன்னதும் லோக சங்கதிகளில் தெளிவா இருக்கும் மகளுக்கு ஒரு சின்ன அதிர்ச்சி. என்னம்மா இவ்ளோ நாளா ஏன் ஒன்னும் சொல்லலைன்னு லேசாய் கடிஞ்சுக்கிட்டு மருத்துவரைப் பார்க்க..... எதுக்கும் ஒரு விசேஷ மருத்துவரைப்போய்ப் பாருங்கன்னு அவர் சொல்லி இருப்பார்.
அங்கே ஒரு மருத்துவப் பரிசோதனையும் நடந்தது. சேதிக்காகக் காத்திருந்த மகளுக்கு இன்னொரு அதிர்ச்சி. எல்லாம் நண்டுவளை சமாச்சாரம்தான். சட்டுப்புட்டுன்னு எடுத்து எறியலாமுன்னா..... அறுவை சிகிச்சை தாங்கும் உடம்பா? ரேடியேஷன், கீமோதெரப்பி இதையெல்லாம் வலி பொறுத்து சமாளிக்கத் தெம்பு இருக்குமான்னு ஒரு பயம்.
முந்தி ஒரு காலத்துலே 'சார் தந்தி'ன்ற குரலைக் கேட்டதும் உடம்பெல்லாம் பதைபதைச்சு கண்ணுலே கரகரன்னு கண்ணீர் வழிய அழ ஆரம்பிச்சுருவாங்க பாருங்க அதே எஃபெக்ட்டுதான் இந்த 'ஆப்பரேஷன்' என்ற சொல்லுக்கும். பெருசோ சிறுசோன்றது பிரச்சனை இல்லை. 'சொல்' காதில் விழுந்ததும் மனசு அப்படியே நொறுங்கிப்போகுது:(
நெருங்கிய தோழி ஒருவரின் தாய். வயசு வேற 74. ஆபரேஷன் மற்றும் ரேடியேஷன், கீமோதொரபிக்கு அவர் உடல்நிலைமை தாங்காது என்று பயப்படுகிறார். சென்னையில் ஆயுர்வேதம் மற்றும் சித்தா மருத்துவத்தில் இந்நோய்க்கு மருத்துவம் இருக்கிறதா? இன்றைய நிலையில் அவர் வலியில்லாமல் தன் கடைசி காலத்தை கழிக்க வேண்டும் என்பது நம் விருப்பம். தோழிதான் என்ன செய்யறதுன்னு தெரியாமக் கிடந்து திண்டாடறார்.
அறுவை சிகிச்சை ஒன்றுதான் இப்போதைக்கு என்று இருந்தால் சர்ஜரி முடிந்தவுடன் ஆஃப்டர் கேர் நல்ல முறையில் இருக்கும் மருத்துவமனைகளையும் சொல்லுங்க. புற்று போல (அடடா.... இங்கேயும் புத்து புத்துன்னே வருது பாருங்க) சென்னை முழுக்க முளைச்சுருக்கும் பல 'மருத்துவ மனைகளில்' அறுவைக்குப்பின் இருக்கும் சிகிச்சையைப் பற்றிய ஒரு அறிவு இல்லாமலே போயிருக்கு என்பது, மூணு வாரத்துக்கு முன்னால் கிடைச்ச கசப்பு மருந்து.
மாற்று மருந்து தேடுதல் தொடர்ந்துக்கிட்டே இருக்கு. நம்ம பதிவுலக நண்பர்களுக்கு எதாவது கூடுதல் விவரங்களும் சிகிச்சை முறைகளும் தெரிஞ்சுருந்தால் தயக்கம் இல்லாம இங்கே சொல்லுங்க ப்ளீஸ்.
காத்திருக்கோம் உங்கள் பதில்களுக்காக.
Posted by துளசி கோபால் at 12/21/2011 01:48:00 PM 38 comments
Labels: அனுபவம்
Monday, December 19, 2011
பஸ் (ஓடிப்)போயிருச்சா? அச்சச்ச்சோ.....
மக்கள்ஸ் சொந்தமா பஸ்களை ஓடவிட்டுட்டு எல்லோரும் மொதலாளிமாரா இருந்தது 'யாருக்கோ' பிடிக்கலை:-( சந்தடி சாக்குலே நானும் ஒரு மூணு பஸ்ஸுக்குச் சொந்தகாரியானேன்னா பாருங்க. பதிவுலக நண்பர்கள் இங்கே வண்டி ஓட்டிக்கிட்டு ஆன்னா ஊன்னா பதிலடி கொடுத்துக்கிட்டும் ஆதரிச்சுக்கிட்டும் எதிர்வினைகள் கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. நல்லபடியா பதிவு போடும் மக்கள்ஸோட 'எழுத்துவேலைகள் அப்படியப்படியே நின்னுபோயிருந்துச்சு.
பஸ்ஸை நிப்பாட்டப்போறாங்கன்னு கூச்சல் கிளம்புனதும் இந்த கூகுள்+ மெள்ள மெள்ள வந்து இடம் பிடிச்சு நிக்குது இப்போதைக்கு. இதுலே நாம் இதுவரை 'கேள்விப்படாத நபர்கள் ' எல்லாம் உங்க வட்டத்துலே சேர்ந்துக்கவான்னு கேட்டுக்கிட்டே இருக்காங்களா..... யார் என்னான்னு ஒரு பிடியும் கிட்டமாட்டேங்குது . வேணாமுன்னு விடலாமுன்னா..... ஒருவேளை நம்ம 'ரசிகர்களா' இருந்துட்டா? தினமும் ஒரு பத்திருபது பேர் மெயில்பாக்ஸ் வழி வந்துக்கிட்டே இருக்காங்கப்பா.
கூகுள்ப்ளஸும் 'யாருன்னு தெரியலைன்னா சேர்த்துக்காதே. நிர்பந்தம் ஒன்னும் இல்லையாக்கும் கேட்டோ'ன்னாலும்.....
கடைசியா ஒரு வழி கண்டேன். அவுங்க வட்டத்துலே நமக்குத் தெரிஞ்சவங்க இருந்துட்டால்.....'ஆஹா...நண்பருக்கு நண்பர்' என்ற கணக்கு. நம்ம நட்டுதான் இப்போதைக்கு ஆபத்பாந்தவனா ஆதர்ஸக்குழந்தையா இருக்கான். இடதுபக்கம் ஒரு பார்வை. குழந்தை இருக்கானா...... சரி. நாமும் க்ளிக். ஆனா எதுக்கும் இருக்கட்டுமுன்னு 'ஜஸ்ட்'ன்னு ஒன்னு போட்டுவச்சு ஜஸ்டிஃபை பண்ணி இருக்கேன்.
அபி அப்பா , ஏற்கெனவே என்னை 'குலசேகரனை ஃபாலோ' பண்ண வச்சதுலே நம்ம கோபால் ஒரு கொலைவெறியோடு இருக்கார். இப்போ நட்டு படம் போட்டு வர்றவரும் அவரேன்னு தெரிஞ்சால் என்ன ஆகப்போகுதோ!!!
சரி. நீங்கெல்லாம் எப்படி இந்தப் பிரச்சனையை சமாளிக்கிறீங்கன்னு சொல்லுங்களேன்.
சீரியஸ் பதிவு என்றதால் நிலமையைக் 'கட்டுப்படுத்த' அழகுத்தெரப்பியா கொஞ்சம் படங்கள். எல்லாம் நம்மூட்டு ரோசாக்கள்.
Posted by துளசி கோபால் at 12/19/2011 02:42:00 PM 19 comments
Labels: அனுபவம்
Friday, December 16, 2011
அடடா..... என்ன அழகு!
அடிபடாமப் பத்திரமாப் பாதுகாத்து பொதிஞ்சு வைக்கணுமா? அடுக்கடுக்கா அடுக்கும்போது ஒன்னையொன்னு இடிச்சுருமோ? நோ சான்ஸ்! அழகாப் Pபேக்கிங் பண்ணக் கத்துக்கணுமா? இயற்கையின் படைப்பில் இதைக் கொஞ்சம் எட்டிப்பாருங்க.
அடடா........ என்னமா அடுக்கி வச்சுருக்கு? என்ன கரிசனம் பாருங்களேன்! பிஞ்சுக்குழந்தையின் விரல்களோ! கருஞ்சிகப்பு கவருக்குள்ளே மெல்லிஸா நீளமான இளம் பிங்க் நிறத்தில் என்ன ஒரு வரிசைப்பா!
இன்னிக்கு மாய்ஞ்சு மாய்ஞ்சு ரசிக்கிறேனே...... இதே 'நான்' ஒரு காலத்தில் இதைப் பார்த்ததும் 'காணாமப் போயிருக்கேன்'! கண்ணெதிரில் இருந்தால் ( வேண்டாவெறுப்பா)உதவணுமே ...என்ன ஒரு நல்ல எண்ணம்.
பாட்டி வீட்டில் இருக்கும்போது....வாசலில் கீரைக்காரம்மா வந்து நின்னால் போதும். கூடையை இறக்குமுன் புழக்கடை வழியா நான் வெளியேறிடுவேன். இதே ட்ரீட்மெண்ட்தான் அந்தப் பிஞ்சு விரல்களுக்கும்.
ஆனால்.....வடை செஞ்சு முடிக்கும்போது மொதல் ஆளா 'டாண்'ன்னு வந்து நிக்கறதுலே மட்டும் என்னை மிஞ்சமுடியாது:-))))
வாழ்க்கையில் முதல்முதலா நானே துணிஞ்சு ஒரு சமயம் சண்டிகர் சிங்ளாக் கடையில் இருந்து ஒன்னு வாங்கிவந்தேன். இந்த ஊருக்குமே இது கிடைப்பது அபூர்வம்தானாம். நம்மைப்போல காய்ஞ்சதுங்களுக்காகவே மொந்த வாழைக்காய், கப்பக்கிழங்கு, முருங்கைக்காய், சின்ன வெங்காயம் வெள்ளைப்பூசணின்னு அப்பப்ப கேரளாவில் இருந்து வருது. வந்து இறங்கும்போதே 'காய்ச்சல்'தான்.
மறுநாள் 'ஆய' ஆரம்பிச்சதும் அழகு ஒவ்வொன்னா வெளிப்பட்டுச்சு. தடிமனா இருக்கும் கருஞ்சிகப்பு மூடியைத் திறந்தால்.......வரிசை அடுக்கு. பூக்கள்!
ஒவ்வொன்னா எடுத்துப்பிரிச்சுத் திறக்கணும்.நட்டநடுவில் ஒரு நரம்பு. கிள்ளித் தூக்கிப்போடு. அடுத்து ஒன்னொன்னிலும் ஒரு கண்ணாடி இதழ். அடி ஆத்தீ! கண்ணாடியைத் திங்கலாமோ? இதையும் தூக்கி வீசத்தான் வேணும். இப்போ கையில் உள்ளதை தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் மிதக்கவிடணும். உம்..... இன்னொரு விஷயம் விட்டுப்போச்சே. ஒரு சின்னக் கிண்ணத்தில் ரெண்டு ஸ்பூன் எண்ணெய் எடுத்துப் பக்கத்தில் வச்சுக்குங்க. விரல்களில் நம்ம விரல்களில் கறைபடியாம இருக்க லேசா அதை அப்பப்பத் தொட்டுக்கணும். ஒரு வரிசை முடிஞ்சதும் அடுத்த தடித்த மூடியைத் திறக்கணும். இப்படி ஒவ்வொன்னா முடிச்சுக்கிட்டே வரும்போது விரல்களின் பருமன் சீராக் குறைஞ்சுக்கிட்டே வரும். இனி உரிச்சு எடுக்கமுடியாமல் கட்டக்கடைசியா இள மஞ்சள் நிறத்தில் குட்டியா ஒரு கூம்பு. மாசுமருவில்லாமல் மொழுமொழுன்னு பட்டுத்துணியில் செஞ்சதுபோல் இருக்கும் அந்த அழகை.....வீசவேண்டியதுதான்.
நரம்புகளும் கண்ணாடி இதழ்களுமா கழிச்சுக்கட்டுவது அதிகமாத்தான் இருக்கு. இல்லே?
தண்ணீரில் போட்டு வச்சுருக்கும் பூக்களை உங்கள் விருப்பத்திற்கு கறியாகவோம் கூட்டாகவோ இல்லை 'என் விருப்பத்திற்கு' வடையாகவோ சமைப்பது இனி உங்கள் கையில்.
எதுவா இருந்தாலும் முதல் விதி ஒன்னு இருக்கு. கொதிக்கும் தண்ணீரில் சுத்தப்படுத்தியப் பூக்களை ரெண்டு நிமிஷம் போட்டு எடுத்துத் தண்ணீரை ஒட்டப்பிழிஞ்சு எடுத்துறனும். பார்த்து...... கை பத்திரம் . கொதி நீர், பயங்கர சூடு கேட்டோ! துளையுள்ள காய்வடிகட்டும் தட்டு இருந்தால், அதில் போட்டு, நீரை வடியவிட்டு எடுத்துப் பிழிஞ்சு வச்சுக்குங்கோ. அடுத்த விதி... அதைப் பொடியா நறுக்கிக்கணும்.
ஆச்சா...... வாங்க, இனி சுடலாம்.
கடலைப்பருப்பு - ஒரு கப்
பச்சை மிளகாய் - 4 அல்லது 5
இஞ்சி - ரெண்டங்குலத்துண்டு( தோல் சீவியது)
பெருங்காயத்தூள் - அரைத்தேக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2 ( பொடியா அரிஞ்சது)
சோம்பு (விருப்பம் என்றால் மட்டும்)- ஒரு தேக்கரண்டி.
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வச்சு தண்ணீரை வடிச்சுட்டு பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கெட்டியா, கரகரன்னு அரைச்சு எடுத்துக்குங்க. இதுலே நறுக்கி வச்சுருக்கும் வாழைப்பூ, வெங்காயம், சோம்பு சேர்ப்பதாக இருந்தால் சோம்பு எல்லாத்தையும் சேர்த்துப் பிசைஞ்சுக்கணும். (முதலில் ஒரு துளி எடுத்து மிளகு சைஸில் உருட்டி, விநாயகா, வடை நல்லபடியா வரணுமுன்னு வேண்டிக்கிட்டு ஜன்னல் ஓரம் வச்சுடணும். இது ஆப்ஷனல்) கைப்பிடி மாவு எடுத்துச் சின்ன உருண்டைகளா உருட்டி வடை ஷேப்புலே தட்டி ஏற்கெனவே அடுப்பில் சூடாகிக்கிட்டு இருக்கும் எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுக்கணும்.லேசாச் சிவந்தமாதிரி இருக்கட்டும்.அப்பத்தான் மொறுமொறுன்னு இருக்கும்.(படம் பார்க்க)
கடலைப்பருப்பு ஊறவச்சு அரைக்க நேரம் இல்லைன்னா பொட்டுக்கடலையை ரெண்டு மூணு ஸ்பூன் தண்ணி தெளிச்சு அரைச்சுக்கலாம். மற்றபடி ஷேப் எல்லாம் முன்னே சொன்னது போலவே:-))))
பதிவர் சந்திப்புக்கு வாழைப்பூ வடை செஞ்சுருக்கலாம்தான். ஆனால் இன்னும் பூ வரலை. மரத்துக்கு வயசு வெறும் ஏழுதான்!
PIN குறிப்பு: படம் வீணாகுதேன்னு எழுதிய பதிவு:-)
Posted by துளசி கோபால் at 12/16/2011 02:47:00 PM 59 comments
Labels: அனுபவம்
Wednesday, December 14, 2011
துணிந்தகட்டைகளுக்கு மட்டும்........... Christchurch Earthquake 7
என்னடா இப்படி அறம் 'பேசி' வைக்கிறாங்களேன்னு கொஞ்சம்கூட பயமில்லாம 'நான் துணிஞ்சகட்டை'தான்னு சொன்னதும், 'சரி மேலே படிக்கிறேன் கேளு'ன்னாங்க அம்மிணி.
உனக்குப் பதினைஞ்சு வயசாயிருச்சா? இல்லேன்னா ஒரு பெரியவங்க துணையோடுதான் வரணும். அதுவும் நாலைஞ்சு பசங்களுக்கு ஒரு துணை என்ற கதை எல்லாம் இல்லை. ஒரு 'பசங்' ஒரு துணை.
பதினைஞ்சு முதல் பதினெட்டு வயசுன்னா உன் ஃபோட்டோ அடையாள அட்டையோ இல்லை பொறப்பு சான்றிதழோ கொண்டு வா.
நல்லா நடக்கத் தோதான காலணி போட்டுக்கணும். ஹவாய் செருப்பு இல்லேன்னா, ஓப்பன் ஸேண்டல், ஹைஹீலுன்னு போட்டுக்கிட்டு வந்தால் அப்படியே திருப்பி அனுப்பிருவோம். ஒரு அவசரம் ஆபத்துன்னு வந்தால் கல்லு, வாய் பொளந்த ரோடு, கண்ணாடித்துண்டுகள் மேலெல்லாம் ஓடித் தப்பிக்கவேண்டி இருக்கும்.
ஆமாம் உனக்கு இங்லீஷூ தெரியுமா? அறிக்கை, மேல்விவரம் தகவல், எச்சரிக்கை எல்லாம் இங்கிலிபீஸுலேதான் சொல்வாங்க. மொழி தெரியலைன்னா தெரிஞ்ச ஒருத்தரைக் கூடக்கூட்டியாரணும்.
நீ சக்கரநாற்காலி பார்ட்டியா? அப்டீன்னா ஒருத்தருக்குத்தான் இடமிருக்கு. ஒருத்தரை மட்டும் நாங்க பார்த்துக்குவோம்.
கண்பார்வை சரி இல்லைன்னு வழிகாட்டும் நாய் வச்சுருக்கியா? நோ ப்ராப்லம். கூட்டிக்கிட்டு வந்துரு!
கடைசியா ஒன்னு சொல்லிக்கறேன். இது முற்றிலும் இலவசம் இல்லை. 'தங்கக்காசு' கொடுக்கணும்.
இளவரசர் வில்லியம் வந்தப்பக் கூட்டிக்கிட்டுப்போய்க் காமிச்சீங்க. போகட்டும் அவர் நம்ம வருங்கால ராஜா. குடிமக்கள் பட்ட கஷ்டம் என்னன்னு தெரிஞ்சுக்கும் கடமை இருக்குல்லே? அப்புறம் ரேச்சல் ஹண்ட்டரைக் கூட்டிக்கிட்டுப்போய்க் காமிச்சீங்களே அது எதுக்கு? நம்ம நாட்டு நம்பர் ஒன் மாடல்(முந்திய சூப்பர் மாடல் அழகி(??!!) என்றதும் மனசில் கருணை வந்துருச்சா? அப்ப உள்ளூர் மக்களுக்கு ஏதும் வசதி செஞ்சு தரமாட்டீங்களா? 'சம்பவம்' நடந்த இடத்தை அப்படியே காபந்து பண்ணி மூடி வச்சுட்டா........... அங்கே என்ன ஆச்சோன்னு நாங்க பதைபதைக்க மாட்டாமா? ங்ய் ங்ய்ன்னு நாங்க விடாமப் போராடுனதுக்குப் பலன் கிடைச்சது.
நவம்பர் 5 முதல் டிசம்பர் 11 வரை ஆறுவாரத்துக்கு வீக் எண்டுகளில் மட்டும் ரெட் ஸோன் டூர் ஒன்னு ஸெரா CERA ( Christchurch Earthquake Recovery Authority) ஏற்பாடு செஞ்சு கொடுத்துச்சு. தனி பஸ்ஸுலே கூட்டிப்போய்க் காமிப்பாங்க. விருப்பம் இருந்தால் 0800 RING CERA வில் கூப்பிட்டு இருக்கையைப் பதிவு செஞ்சுக்குங்கன்னு சொன்னாங்க.
அங்கே தொலைபேசுனப்ப அடுத்த முனையில் இருந்த அம்மணி பேசுன 'அறம்' தான் பதிவின் ஆரம்பத்தில் நீங்க படிச்சது. இதுக்குமேலே துணிஞ்சால் மட்டும் வான்னதும் நான் துணிஞ்சுட்டேன்னேன். முதல் செய்தி, எல்லா இடங்களும் ஏற்கெனவே பதிவாகிருச்சு. எதாவது கேன்ஸலேஷன் இருக்கான்னு பார்க்கிறேன். ஒரு இடம் ஞாயிறு மாலை 7 மணிக்கு இருக்கு. பரவாயில்லையா? ஊஹூம்.... எனக்கு ரெண்டு இடம் வேணும்( அவ்ளோ குண்டா? ச்சீச்சீ...ரெண்டு பேருக்குங்க) இன்னும் கொஞ்சம் நேரம் தேடிப்பார்த்துட்டு அதிகாலை பஸ்ஸுலே இருக்கு. ஹௌ ஏர்லி? 9.20. ஆஹா..... எடுத்துக்கறேன். அடுத்த கட்டமா பதிவு ஆரம்பிச்சது. . முழுப்பெயர் நம்ம ஸர் நேமோட சேர்த்து ஒவ்வொரு எழுத்தா ஃபொனெடிக் கோடுலே சொல்லணும் அப்புறம் பிறந்த தேதி. வீட்டு விலாசம், தொலைபேசி எண்கள் (நல்லவேளை. உயில் எழுதிட்டயா? யார் பேருக்குன்னு கேக்கலை) எதாவது ஆகிருச்சுன்னா, தகவல் பதிய விவரம் வேணுமே.
ஈமெயில் ஐடி சொல்லு. டிக்கெட்டை அனுப்பறேன்னதும் சொன்னேன். அஞ்சு நிமிசத்தில் ஈ-டிக்கெட் வந்துருச்சு. அதை ப்ரிண்ட் பண்ணிக்கணும். சரியா 20 நிமிசத்துக்கு முன்னால் க்ரான்மர் சதுக்கத்துக்கு வந்துறணுமாம். பயணம் முழுசும் பஸ் கதவு மூடியே இருக்கும். திறக்கப்படமாட்டாது. (அட! அப்ப எதுக்கு suitable footwear? ஓ....ஆபத்துலே இறங்கி ஓடித் தப்பிக்கவா?) எப்படியும் உயிரோடு திரும்பி வந்துருவோம் என்ற நம்பிக்கையில் பகல் சாப்பாட்டை ஆக்கி வச்சுட்டுக் கிளம்பினேன்:-)
க்ரான்மர் சதுக்கத்தில் நமக்குப் பார்க்கிங் இலவசம். மூணு தொகுதியாத் தனித்தனி கூடாரம் அடிச்சு வச்சுருக்காங்க. ஒவ்வொரு கூடாரத்துக்குப் பக்கத்திலும் அடுத்த வண்டி புறப்படும் நேரம். அவசரகாலத்தில் செய்யவேண்டியவை என்னென்ன தகவல் பலகை. அதுலேயும் கடைசி வரி...... இதையெல்லாம் வாசிச்ச பிறகும் டூர்லே வரேன்னா சொல்றே? சரியான 'தில்' பார்ட்டியா இருக்கே! நீ செத்தாலும் செத்துருவேன்னு இன்னொரு 'அறம்' :-)
மூணு பஸ்ஸுகள் வரிசையா நிக்குது. எங்க பயணத்துக்கு செக்கின் செஞ்சுக்க வரிசையில் நின்னோம். கூடாரத்தின் முகப்பில் இருந்த பணியாளர்களில் ஒருவர் சிரித்தமுகத்துடன் 'வாங்க' என்றார். எங்களுக்கு முன்னால் ரெண்டு பேர் வரிசையில். எங்களுக்குப்பின் வந்து சேர்ந்துக்கிட்டவர்களில் ஒரு பெண்மணி காலை விந்திவிந்தி நடந்து வந்தார். கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக். இதைப்பார்த்த பணியாளர் 'சடார்' என்று அவர் அமர்ந்திருந்த இருக்கையைத் தூக்கிக் கொண்டுவந்து அந்தப் பெண்மணிக்கு போட்டு 'இதுலே உக்கார்ந்துக்குங்க' என்றார். இப்படிச் சின்னச்சின்ன சமாச்சாரங்களால்தான் இந்த மக்கள் மேலும் நாட்டின் மேலும் உள்ள மதிப்பு என் மனசுலே உசந்த இடத்தைப் பிடிச்சுருது.
முதல் இரண்டு பஸ்ஸுகளும் 9க்கு ஒன்னும் 9.10க்கு ஒன்னுமாக் கிளம்பிப்போச்சு. அடுத்து நம்மது. ப்ரிண்ட் அவுட்டாக் கொண்டு போயிருந்த டிக்கெட்டைப் பார்த்துட்டு அவுங்க கிட்டே இருந்த பட்டியலைச் சரிபார்த்துக்கிட்டு 'ஆஜர்' போட்டாங்க. பக்கத்துலே மூடிபோட்ட ஒரு ப்ளாஸ்டிக் பக்கெட் உண்டியல். 'தங்கம்' அவ்வளவு மதிப்பில்லைன்னு நோட்டாப் போட்டோம். நம்மூர்லே ஒரு டாலர், ரெண்டு டாலர் நாணயங்கள் தங்க நிறத்தில் இருக்கு. பஸ்ஸுலே ஏறி உசரமா இருக்கும் இருக்கைகளில் உக்கார்ந்தோம். ரெண்டே நிமிசத்தில் வண்டி நிறைஞ்சது.
செஞ்சிலுவை அங்கி போட்ட 'ஷான்' எல்லோரையும் வரவேற்று விளக்கங்கள்(do's & don'ts ) கொடுத்தார். தேவைப்பட்டால் முதலுதவியும் அவர் செய்வார்.இன்னொருமுறை 'அறம்' வாசிச்சுட்டு கூட வர்றீங்களா இல்லை இறங்கிப் போறீங்களான்னார். இதுக்குள்ளே 'அறம் அறிக்கை' முழுசும் எனக்கு மனப்பாடமாகி இருந்துச்சு:-) 'ஆபத்து' ஏற்பட்டால் நம்மைக் காப்பாத்த ஒரு செக்யூரிட்டி இளைஞர் பஸ்ஸின் பின் கதவுப்பக்கம்.
ஒரு சின்ன சர்ச்சைக்கூட விட்டுவைக்கலை பாருங்க:(
சம்பவம் நடந்த இடங்களைப் பார்க்கும்போது மக்கள் உணர்ச்சிவசப்படுவது சகஜம். மன அழுத்தம் கூடும் இப்படிப்பட்ட சமயங்களில் நண்பர்கள் உறவினர்களுடன் மனம் விட்டுப் பேசுங்க. அப்படி யார்கிட்டேயும் பேசமுடியாதுன்னா இந்த 0800 *********** எண்ணுக்குத் தொலைபேசுங்கன்னு சொன்னார். ஸேரா ஏற்பாடு செஞ்சுருக்கு இந்த கவுன்ஸிலிங்கை.!
நானோ சும்மாவே அழுவேன். இப்போக் கேக்கணுமா? முன் ஜாக்கிரதையா ஏகப்பட்ட டிஷ்யூக்களை எடுத்துக்கிட்டுப் போயிருந்தேன்.
'நடந்த' வண்டி தெருமுனை திரும்புனதும் நின்னுச்சு. நாம் இப்போ ரெட்ஸோனுக்குள்ளே நுழையப்போறோம். யாருக்காவது கூட வரவேணாமுன்னு தோணுச்சுன்னா இப்ப இறங்கிடலாம். இது கடைசிச் சான்ஸ். இதுக்குப்பிறகு பயணம் முடியும் வரை எங்கேயும் வண்டிக் கதவுகள் திறக்கப்படாதுன்னு எச்சரிக்கை வந்துச்சு ஷானிடம் இருந்து.
கைவிரலைக் காமிச்சு 'இந்த மோதிரத்தை வச்சு என்னை அடையாளம் கண்டுபிடிச்சுருங்க'ன்னு கோபால் கிட்டே கிசுகிசுத்தேன்.
யாரும் வண்டியைவிட்டு இறங்கலை. தீரர்களா இருந்தோம். வண்டி மறுபடிக் கிளம்பி 'நடக்க' ஆரம்பிச்சது! இதுவரை கம்பி வலைக்குப்பின் ஏதோ அரசப்புரசலாத் தென்பட்டப் பகுதிக்குள்ளே போனால்....... 'கோஸ்ட் டவுன்'ன்னு சொல்வாங்க பாருங்க அதுபோல வெறிச்சோடிக்கிடக்கு. கலகலன்னு மக்கள் நடமாட்டம், வண்டிகள் ஓடும் சாலைகள், குறுக்கே புகுந்து வரும் ட்ராம் பாதைன்னு எல்லாமே கப்சுப். கட்டிடங்கள் பல இடிக்கப்பட்டு நிரவிவிட்டு காலி மனைகள் அங்கங்கே! ஆகாசத்தை முட்டும் ராக்ஷஸ க்ரேன்கள் தெருவுக்கு நாலு. ஏவான் நதிக்கரை ஓரம் விக்டோரியா சதுக்கம் இடுப்புயரப் புல்லில் ஒ(ழி)ளிஞ்சுருக்கு. (இதுதான் தமிழ்சினிமா டூயட் ஸ்பாட். இங்கே எடுக்கும் ஷூட்டிங்கில் இந்த இடத்தை விடவே மாட்டாங்க. அப்படி ஒரு பிரியம்)
சதுக்கத்தில் ஃபிப்ரவரி 25க்கு(2011) நடக்கப்போகும் சீனர்களின் லேண்ட்டர்ன் ஃபெஸ்டிவலுக்காக விளக்குகளைக் கட்டித்தொங்கவிட்டு அலங்கரிச்சுக்கிட்டு இருந்த சமயம் நிலநடுக்கம். எல்லோரும் துண்டைக்காணோம் துணியைக்காணோமுன்னு ஓடி இருக்காங்க. அடுத்த சில மணிகளில் நகர மையம் வேலித்தடுப்புக்குள்ளில் வந்துருச்சு. நடந்ததை எல்லாம் மௌனமாப் பார்த்துக் கண்ணீர் வடிக்கும் நிலையில் நிற்கும் மகாராணி விக்டோரியா !
பார்க்க இன்னும் நல்லாவே இருக்கும் கண்ணாடிச்சுவர் கட்டிடங்கள் எல்லாம் இடிபடக் காத்திருக்கு. வெளிப்பார்வைக்கு நல்லா இருக்கே தவிர உள்ளுக்குள் சேதம் கூடுதலாம். நில நடுக்கத்தின்போது இடமும் வலமுமாக் குலுங்குனதோடு மேலேயும் கீழேயுமா ஆடுனதில் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுபோய் கட்டிடத்தைத் தாங்கும் காங்க்ரீட் தூண்கள் எல்லாம் முறுக்கிக்கிட்டு நிக்குதாம். அட ராமா............
எங்கூரின் அதிக உசரமான கட்டிடம் என்ற பெருமையை இதுவரை தக்க வச்சுருக்கும் 'ப்ரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ்' பில்டிங்...... 'எப்போ? எப்போ? ன்னு இடிக்கப்படக் காத்திருக்கு அடடா......
மான்செஸ்ட்டர் தெருவில் திரும்பி உள்ளே போறோம். துல்சி ரெஸ்ட்டாரண்ட் இருந்த இடம் தரை மட்டம்:( சரி...போகட்டும் இன்னொருமுறை பிஸினெஸை ஆரம்பிக்கலாம். தெருவின் ரெண்டு பக்கமும் இத்தனை வகை யாவாரம் நடந்துக்கிட்டு இருந்துருக்கா என்ன? ஒன்னுமே கவனிக்காம ஏதோ கண் பட்டிக் கட்டிவிட்ட மாதிரியில்லே 'நகர்வலம்' நடத்தி இருக்கேன், கனகாலமா:(
சிடிவி இருந்த இடம் சிமெண்டுத்திடலா இப்போ:(
நடந்துக்கிட்டு இருந்த வண்டி நிதானிச்சு நின்னது. CTV பில்டிங் இருந்த இடம் தரைமட்டமா........... இப்போ...வெறும் கட்டாந்தரை! 106 உசுரை காவு வாங்கிய இடம். கண்ணுலே தெம்படவே கூடாதுன்னு முதல்லே இடிபாடுகளை அகற்றியிருக்காங்க. இதுலே 65 பேர் ஜப்பான் நாட்டு மாணவர்கள். சம்பவத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னால் வந்திறங்கினவங்க. முதல்நாள் தங்கப்போகும் ஊரைச் சுத்திக் காமிச்சுருக்காங்க. அழகான ஊரில் கொஞ்சநாள் இருக்கப்போறோமுன்னு ஒரே ஆனந்தம். மறுநாள் முதல் வகுப்பு. முதல்நாள் பள்ளிக்கூடம். லஞ்சு டைம். எமன் சாப்பிடக்கூட விடலை. அப்படியே அள்ளிக்கிட்டுப் போயிட்டான். அவனுக்கு அப்படி ஒரு பசி:( ப்ச்..............
வண்டி கிளம்பி 'நடக்க' ஆரம்பிச்சது. புக் ஷாப் ஒன்னுலே சம்மர் ஸேல் ஆரம்பிச்சு..... குவியல் குவியலா காத்திருக்கும் புத்தகங்கள். ஹூம்......அதிர்ஷ்டம் கெட்டது புத்தகங்களா...இல்லை வாசகர்களா?
எங்கே பார்த்தாலும் டெமாலிஷன் ஒர்க் நடந்துக்கிட்டு இருக்கு. தெருவோர மரங்கள் எல்லாம் மண்டையைப் போட்டுருச்சுங்க. நியூஸிலண்ட் போஸ்ட் உள்ளே எத்தனை முக்கிய கடிதங்களும் பார்ஸல்களும் மாட்டிக்கிச்சோ! வெறிச்சோடிக்கிடக்கும் வீதிகளும் காபந்து செஞ்சுக்கிட்டு இருக்கும் கண்டெய்னர்களுமா என்ன ஒரு காட்சி:(
நம்ம மெட்ராஸ் ஸ்ட்ரீட்
கட்டக்கடைசியா கதீட்ரலுக்கு முன்னால் போறோம். ஐயோ! மொட்டைக்கோபுரம்:( இதுவரைக் கட்டிக்காத்த உணர்ச்சிக் கொப்புளம் 'பட்'ன்னு உடைஞ்சது. யாரும் கவனிக்குமுன் கண்களைத் துடைச்சுக்கணுமுன்னு...... மெனெக்கெட்டுருக்க வேண்டாம். அநேகமா எல்லோர் நிலையும் இதே இதே! வண்டிக்குள் பேச்சரவம் காணோம்..
கொழும்புத்தெருவில் வந்து இடதுபுறம் திரும்பி மௌனசாட்சியா நிற்கும் மாட்சிமை தாங்கிய மகாராணி விக்டோரியாவைக் கடந்து புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தோம். மன அழுத்தத்துக்கு வடிகாலா ஏற்பாடு செஞ்சுருக்கும் கவுன்ஸிலிங் நம்பர்கள் அடங்கிய அட்டையை, வண்டியை விட்டு இறங்கும் ஒவ்வொருத்தருக்கும் விநியோகிச்சாங்க.
கடந்த ஞாயிறோடு இதுவரை 18,000 பேர்களுக்கு இடம் ஒதுக்கி மிச்சம்மீதி இருக்கும் உடைந்த நகரைக் காமிச்சுருக்காங்க. இனி இந்த சர்வீஸ் கிடையாது. உயிர்ச்சேதம் ஏற்பட்டால் நகரம் தாங்காது என்பதால் கூடுதல் கவனம். சட்புட்ன்னு இடிக்கவேண்டியதை இடிச்சு நிரவி புது நகரை நிர்மாணம் செய்யணும். வேடிக்கை காமிச்சுக்கிட்டு இருந்தால் வேலை நடக்க வேணாமா?
பஸ் சர்வீஸ் இல்லைன்னா என்ன? (இந்த பஸ்ஸே நடந்து போகும் வேகத்தில்தான் போச்சு) நடந்து போய்ப் பார்க்கறோம் என்று 'ஆசை'ப்பட்ட மக்களுக்காக சின்னதா ஒரு வாக்கிங் டூர் ஆரம்பிச்சுருக்காங்க. கதீட்ரல் சதுக்கத்தில் நின்னு தேவாலயத்தை வெளியில் இருந்து பார்க்க மட்டுமே!
கதீட்ரல் ஸ்கொயர்
இதுக்கும் நிறைய ரூல்ஸ் இருக்கு. முதல்லே வருவது பொருத்தமான காலணி. நடைபாதை ஒன்னு அமைச்சுருக்கோம். அதுலேயே போகணும். ஃபென்ஸுக்கு இந்தப் பக்கம் இருந்துதான் பார்க்கணும். ஒரு மணி நேரத்துலே 300 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை. போயிட்டு 50 நிமிசத்துக்குள்ளே திரும்பி வந்துறணும். செல்ஃபோனை ஃபுல் சார்ஜ் பண்ணி வச்சுக்கணும். நீங்க எப்போ உள்ளே போறீங்கன்னு உங்க நண்பர்களுக்கோ குடும்பத்தினருக்கோ தெரிவிக்கணும். நிலநடுக்கம் வந்தால் 'கபால்'ன்னு தரையோடுதரையா படுத்துக்கணும். வழிகாட்டும் நாயைத்தவிர மற்ற செல்லங்களுக்கு அனுமதி இல்லை. அதி முக்கியமானது உங்க அடையாள அட்டையை உடம்புலே வச்சுக்கணும். சட்டைப்பை, பேண்ட் பாக்கெட் இப்படி. ஒருபோதும் கைப்பையிலே வச்சுக்கக் கூடாது. அடடா....முந்தியே தெரிஞ்சுருந்தா பச்சை குத்திக்கிட்டு வந்துருப்பமே:-)
PIN குறிப்பு:
பஸ்ஸுலே ஏறிப்போய்ப் பார்க்க விருப்பம் இருந்தா இங்கே க்ளிக்கவும். கூட்டிப்போய்க் காமிக்கிறாங்க ஸேரா சார்பில்.
Posted by துளசி கோபால் at 12/14/2011 12:51:00 PM 27 comments
Labels: christchurch, Earthquake, அனுபவம்
Monday, December 12, 2011
மகிழ்ச்சி வாங்கலையோ மகிழ்ச்சி...........
ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே
'மீண்டும் மீண்டும்.... மனசுலே இதுவந்து எட்டிப்பார்த்துட்டுக்கிட்டே இருக்கு. ஆனாலும் ஒரு மனுசனுக்கு இப்படி ஆகக்கூடாதுதான். ராமச்சந்திரக் கவிராயர் சொன்னது மிகையோ!!!!!
துளசிதளத்தில் கொஞ்சநாளா பதிவுகள் வழக்கத்தை அப்படியே புறந்தள்ளி விட்டுருக்கு. பயணம் இல்லாத நாட்களில் வாரம் மூணு என்றதைத் தூரத் தூக்கிப் போடும்படியா ஆகிருச்சே:(
எண்ணி இருபத்திநாலு நாளில் யமன் மீண்டும் வீட்டுக்கு வந்துட்டுப் போனான். போனமுறை ஒரு கணவரையும் இந்தமுறை அவர் மனைவியையும்:(
மாமனார் மரணத்தில் கொஞ்சம் ஆடித்தான் போயிருந்தோம். இத்தனை வயசுக்கும் தினம்தவறாமல் நடைப்பயிற்சி, கடைகண்ணின்னு தெம்பா நடந்துக்கிட்டு இருந்தவர் ஒரு நாள் காலையில் தவறி விழுந்து ( வீட்டுலேதான்) மருத்துவமனைக்குக் கொண்டுபோய் எம் ஆர் ஐ ஸ்கேன் செஞ்சு பார்த்துட்டு ஒன்னும் இல்லைன்னு மருத்தவர் சொல்ல வீட்டுக்கு வந்த அன்று மாலையே 'மீளாப் பயணம்' போயிட்டார். இனியும் 'அம்மா' ஊரில் இருக்கவேணாமுன்னு கடைசி மச்சினர் முடிவு பண்ணி சென்னைக்குக் கூட்டிவந்துட்டார். அவுங்களும் கடந்த சிலவருசங்களா ரொம்ப முடியாமக் கிடந்தாங்க. ஒருவிதத்தில் அம்மாவின் பயணத்தைத்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தோமுன்னும் சொல்லலாம். ஆனா.... நடந்தது வேற!
சென்னைக்கு வந்தபின் மூணாம்நாள் அம்மாவும் கழிப்பறைக்குப் போனவுங்க தவறி விழுந்துட்டாங்க. இடுப்பு எலும்பு முறிவு:( வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கும் மருத்துவமனையில் கொண்டு சேர்த்து 'அறுவை சிகிச்சை' செய்தால் இனி 'வாழும் காலம்' வரை வலி இல்லாமல் இருக்க முடியும் என்று மருத்துவர் எடுத்த முடிவின்படி எல்லாம் ஆச்சு.
கம்பெனி அலுவலா தாய்லாந்து போயிருந்த கோபால், அந்த வீக் எண்டில் அம்மாவைப்போய் பார்த்துவர ஏற்பாடு செஞ்சுருந்தார். சனிக்கிழமை இரவு விமானம். எதிர்பாராத விதமா வெள்ளி மாலையே போன வேலை முடிஞ்சதால் அன்னிக்கே சென்னை போயிடலாமுன்னா..... நம்ம நேரம் பாருங்க. போதிய பயணிகள் இல்லைன்னு வெள்ளிக்கிழமை சர்வீஸை கேன்ஸல் செஞ்சுருக்காங்க. இனி சனி இரவுதான் ப்ளைட். சனி வழக்கம்போல் விடிஞ்சது. அன்னிக்குக் காலை பத்தரை மணி அளவில் அம்மாவும் பயணப்பட்டுட்டாங்க. முதல்நாள் ப்ளைட் கேன்ஸலாகாம இருந்துருந்தால்..... கடைசிமுறை அம்மாவை உயிரோடு பார்த்திருக்கலாம். ப்ச்......
அம்மாவுக்கும் தாங்கமுடியாத வலியில் இருந்து நிரந்தர விடுதலை கிடைச்சுருச்சு. என்னவோ இவர் வருகைக்குக் காத்திருந்தாப்போல வாழ்க்கை முடிஞ்சு போச்சு. மறுநாள் ஞாயிறு பெஸண்ட் நகர் மின்மயானத்தில் எரியூட்டல் நடந்து முடிஞ்சு கடற்கரையில் பால் தெளிச்சு அஸ்தி கரைச்சுன்னு எல்லாம் ஆச்சு. நம்ம வீட்டுலே டபுள் ட்ராஜிடி :( தாய்க்கு செய்யவேண்டிய கடமையைச் செஞ்ச திருப்தியுடன் கோபால் ஊர் திரும்பினார்.
மகளுக்கு முழங்கால் சர்ஜரி காரணம் எனக்கு எங்கேயும் நகரமுடியாத நிலை. நானும் வீடு மருத்துவமனைன்னு அந்த சமயம் ஓடிக்கிட்டு இருந்தேன். அப்பப்ப தொலைபேசி நடப்பைச் சொல்லிக்கிட்டு இருந்தார் கோபால். தவிப்போடு இங்கிருந்தவளுக்கு கடவுள் ஒரு போனஸ் அனுப்பினார். பதிவர் சந்திப்பு. அதுபற்றி 'அவுங்களே எழுதுவாங்கன்னு நினைக்கிறேன். அருமையான பூங்கொத்தும் பூச்செடியுமாக் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போனாங்க. நியூஸிலாந்து புத்தகத்தில் வாசிச்சது எல்லாம் சரி இருக்கான்னு 'டபுள் செக்' செய்ய வந்தாங்களாம்:-))))))
எங்கூரில் வருசாந்திர 'ஸேண்ட்டா பரேடு' சொல்லிவச்சமாதிரி அன்னிக்குத்தான் வச்சுருந்தாங்க. பாதி ஊர் அழிஞ்சு போச்சுன்னாலும் நாள்கிழமைன்னா விட்டுடமுடியுதா? என்னால் போக முடியலைன்றதுக்காக ஊர்வலத்தில் வரும் அலங்கார வண்டி ஒன்னு நம்ம வீட்டுக்கு முன்னால் நின்னு அலங்கரிச்சுக்கிட்டு இருந்துச்சு.
'அம்மா' படுக்கையில் விழுந்தவங்க இன்னும் அதிகக் கஷ்டப்படாமப்போனது ஒரு நிம்மதியைத் தந்தாலும் மனசுக்குள்ளே ஒரு சங்கடம். ஒரு நாள் உள்ளூரில் கடைக்குப்போன சமயம் லக்கிபேம்பூ, நியூஸியில் முதல்முறையா விற்பனைக்கு வந்துருந்துச்சு. இதுலே மூணு தண்டுகள் இருந்தா மகிழ்ச்சியைத் தருமாம். நமக்கு இப்போ வேண்டியதுதான்னு நினைச்சு ஒன்னு வாங்கியாந்தேன். பார்க்கலாம் ஒர்க் அவுட் ஆகுதான்னு!
PIN குறிப்பு: நாலு தண்டுகள் உள்ளதை வாங்கிறாதீங்க. அது மரணத்தைக் குறிக்குமாம். மற்றபடி 2 for Love & Marriage, 3 for Happiness 5 for Health
8 for Wealth and Abundance 9 for Good Fortune.
எது எப்படியோ.... செடி பார்க்க ஒரு அழகாத்தான் இருக்கு!
Posted by துளசி கோபால் at 12/12/2011 02:47:00 PM 48 comments
Labels: அனுபவம்
Thursday, December 01, 2011
எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்!!!!
மழலையர் பள்ளிக்கூடத்தில் காய்கறிகளின் அணிவகுப்பாம். பையன் எதாவது காயாகப்போகணும். அம்மா...சுத்தும்முத்தும் பார்க்கறாங்க. ஆற அமர உக்கார்ந்து அட்டை வெட்டி வர்ணம்பூசி அழகுபடுத்த நேரம் இல்லை. ஆஹா.... ஐடியா வந்துருச்சு. ஒரு பெரிய ப்ரவுன் பேப்பரை எடுத்து பையன் உசரத்துக்கு(பையன் கொஞ்சம் சின்னவன்)வச்சுப்பார்த்தால் சரியா இருக்கு. பையனைச்சுத்தி ஒரு உருளை மாதிரி சுத்தி ஒட்டுனாங்க. முகம் வரும் இடத்தில் ஒரு வட்டம் வெட்டுனாங்க. இன்னொரு ப்ரவுன் காகிதத்தால் கோமாளித் தொப்பி ஒன்னு கூம்பு வடிவத்தில் செஞ்சு தலைக்கு வச்சாங்க. சூப்பர்! தனக்கே ஒரு 'பேஷ்பேஷ்'
"அம்மா...நான் யாரும்மா?"
" செல்லம். நீ 'அஸ்பெரகஸ்' டா'
தலையை ஆட்டினான் பையன்.
"பார்த்துடா தொப்பி விழுந்துடப்போகுது."
இது காயாம்மா? அப்ப இதைப்பத்தி நாலுவரி பேசணுமாம்.
நாலுவரி என்னடா? நாப்பது வரிகள் கூடச் சொல்லலாம்.
அம்மாவுக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு வந்து சொல்லித் தர்றேன் செல்லம்.
ம்ம்ம்ம்ம் எல்லாம் ஒரு சாக்கு. விவரத்தைத் தேடிப்படிச்சுட்டுலே புள்ளைக்குச் சொல்லித்தரணும். (அசல்)ஹோம் ஒர்க்:-))))
வசந்தகாலத்துலே முளைக்கும் பயிர். ஒரு காலத்துலே காட்டுலே காடா வளர்ந்து கிடந்ததை இப்ப நாட்டுலே பயிர் பண்ணி சூப்பர் மார்கெட்டுலே கொண்டுவந்து ரொப்பிடறாங்க. நாமும் நோகாம வாங்கியாந்து சமைச்சுடலாம்.
ஐரோப்பாவின் மேற்குக் கரையோரங்களில் நிறைய விளையுதாம். வயசு என்னன்னா.....ஒரு இருபதாயிரத்துக்கும் மேலே இருக்கும். அஸ்வான் பகுதிகளில் (எகிப்து நாட்டில்) இதை உணவுக்கும் மருந்துக்கும் பயன்படுத்தி இருப்பதா 'சரித்திரம்' சொல்லுது. ஒருவேளை நம்ம கிளியோ (பாட்ராவின் செல்லப்பெயர்)வின் கூடுதல் அழகுக்குக் காரணமா இருந்துருக்குமோ? ஹா.....அப்படின்னா விடக்கூடாது . இதை வேகவச்ச தண்ணியால் முகம் கழுவினால் சருமத்தில் திட்டுதிட்டா இருப்பவை மறைஞ்சு முகம் பொலிவாகுமாம்(அழகுக்குறிப்பு!)
விளையும் காலத்தில் சமைச்சுத் தின்னுட்டு மிச்சம் மீதியைக் குளிர்காலத்துகாக வத்தல் போட்டு வச்சுக்குவாங்களாம் க்ரேக்கர்களும் ரோமானியர்களும். பதினைஞ்சாம் நூற்றாண்டுகளில் ஃப்ரான்ஸ் நாட்டுலே, சாமியார் மடங்களில் இதைப் பயிர் செஞ்சாங்களாம். காரணம்? களைப்பைப்போக்கி உற்சாகம் தரும் குணவிசேஷம். (சாமியார்கள்தான் உ.பா. பியரைக் கண்டுபிடிச்சது தனிக்கதை. (அதைபத்தி நம்ம வகுப்பில் பிறிதொரு சமயம் எப்பவாவது பார்க்கலாம்)பதினேழாம் நூற்றாண்டில் மன்னர் பதினாலாம் லூயி(ஸ்) இதை வளர்க்கன்னே கண்ணாடிக் கன்ஸர்வேட்டரிகள்கூட வச்சுருந்தாராம்.(உற்சாகம் வேண்டித்தானே கிடக்கு!)
மூணுவகை
இந்த அஸ்பெரகஸ் மூணு வகைகளில் கிடைக்குது. ஒன்னு பச்சை. இன்னொன்னு பச்சையும் கொஞ்சம் பர்ப்பிள் நிறமும் கலந்தவை. அடுத்தது வெள்ளை. வெள்ளைன்னா பால் வெள்ளை இல்லை. மங்கலான ஒரு வெள்ளை. இதுக்கு ஒயிட் கோல்ட், ஈடிபிள் ஐவரின்னெல்லாம் பெயர்கள் வச்சுருக்காங்க. இது ராயல் வெஜிடபுள் ஆச்சே! ஆனால் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற வகையில் இப்ப நமக்கும் தின்னக் கிடைக்குது:-) இப்போ உலகின் பல பகுதிகளிலும் இதைப் பயிர் செய்யறாங்க. 'சீனூஸ்' இதிலும் முதலில் நிக்கறாங்க என்பது உபரித் தகவல்.
முளைச்சுவரும் தண்டு
முளைகளை நட்டு தண்டுகள் வளர ஆரம்பிச்சதும் முளைச்சுவரும் தண்டுகளை அப்பப்ப எடுத்துருவாங்களாம். முதல் மூணு வருசத்துக்கு இப்படிச் செஞ்சா அடியில் வேர்களும் முளைகளும் நல்லாவே பரவிரும். இனி அடுத்து வரும் பதினைஞ்சு வருசங்களில் எல்லாம் பயங்கர அறுவடையா இருக்குமாம். சட்ன்னு வளரும் இந்தத் தண்டுகள் பொருத்தமான நிலமும் காலநிலையும் இருந்தால் ஏதோ மந்திரம் போட்டாப்புலே ஒரு நாளைக்கு பத்து அங்குலம்கூட வளர்ந்துருமாம். முதிர ஆரம்பிச்சவுடன் தண்டுகளின் அடிப்பகுதி கட்டையா மரம்போல ஆகிரும். சட்னு அறுவடை செஞ்சுறணும். கைப்பிடி அளவு கொத்துக்கொத்தாய் ஒரு ரப்பர் பேண்ட் போட்டுக் கட்டி கடைக்கு விற்பனைக்கு வந்துருது.
முதல் வருசத்துத் தண்டுகள் நல்லா மெலிசா இளம்பீன்ஸ் போல இருக்கு. அடுத்து வரும் ஆண்டுகளில் உருவம் கொஞ்சம் கொஞ்சமா பெருத்துக்கிட்டே போகுது. தண்டுகளின் அளவைப்பார்த்தே செடியின் வயசைச் சொல்லிடலாமாம்! (அப்பாடா..... வயசானால் குண்டாவது எல்லாருக்கும் பொது!!)
Asparagus is a nutrient-dense food which in high in Folic Acid and is a good source of potassium, fiber, vitamin B6, vitamins A and C, and thiamin.
Asparagus has No Fat, contains No Cholesterol and is low in Sodium.
இவ்வளோ சத்துகள் நிரம்பியதை நாம் விடலாமா? வாங்கியாந்தாச்சு. வெள்ளைக்காரகளுக்கு எல்லாத்தையும் புழுங்கித் தின்னணும். அதிலும் அரியாமக்கொள்ளாம முழுசா அதே வடிவத்தில் அவிச்செடுக்கணும். இதுக்குத் தோதா ஒரு ஸ்டீமர் இங்கே கடைகளில் கிடைக்குது. கம்பிக்கூண்டுக்குள்ளில் வரிசையா நிக்கவச்சு அவிச்சு எடுக்கலாம். எவர்சில்வர் வகை. அஞ்சாறு வருசத்துக்கு முந்தி ஒரு 'ஸேல்' சமயம் ஒரு கடையில் இதுவும் போட்டுருந்தாங்க. 'உண்மை'விலை 17 டாலர். அன்னிக்குப் போனாப்போகுதுன்னு 3 டாலருக்குத் தர்றாங்களாம். நாம் அவிக்கும் ஆட்கள் இல்லை. எதுன்னாலும் கொஞ்சம் மசாலா சேர்த்துக் கறி செஞ்சால்தான் நம்ம 'பழைய வாசனை' மாறாமல் இருக்கும். அதுக்காக நமக்கெதுக்குன்னு விட முடியுதா? 'குச் காம் கோ ஆயேகா'ன்னு வாங்கியாந்தேன். கம்பிக்கூண்டை கரண்டி போட்டுக்க வச்சுக்கலாம். மூடிபோட்ட அடுக்கு சமையலுக்கு(ம்)ஆச்சு. கிட்டத்தட்ட மூணரை லிட்டர் கொள்ளுதே!சீனூஸ்களுக்கு சாமர்த்தியம் கூடுதல். எதையும் விட்டுவைக்கறதில்லைன்னு புலம்பிக்கிட்டே அட்டைப்பெட்டியைத் திருப்புனா....... ஹா.........என்ன ஒரு ஆச்சரியம்!!!!!!! மேட் இன் இண்டியா!!!!!!
எப்படி சமைக்கிறதுன்னு ரெண்டு நிமிசம் நின்னு பார்த்துட்டுப்போங்க.
தண்டுகளை நல்லா கழுவிட்டு அடிப்பகுதியில் அமுக்கிப்பார்த்தால் கட்டையாட்டம் இருக்கும் பகுதியை 'மடக்'ன்னு உடைச்சு வீசிடணும். இப்போ தலைப்பக்கம் இருக்கும் கூம்புகளை மட்டும் தனியா நறுக்கி எடுத்து ஒரு பக்கம் வச்சுருங்க. மீதி இருக்கும் பீன்ஸ் போல இருக்கும் தண்டுகளை பொடியா (ஸ்லைஸ்) அரிஞ்சுக்கலாம்.
ஒரு வாணலியில் ரெண்டு ஸ்பூன் எண்ணெய். சூடானதும் கொஞ்சம் அரைத் தேக்கரண்டி சீரகம்( பஞ்சாபி(தாளிப்பு) தடுக்கா!)போட்டு வெடிச்சதும் கருவேப்பிலை இருந்தால் சேர்த்துக்கலாம். (நேத்து வெங்காயம் பொடிசா நறுக்குனீங்களே அது இருந்தால் வீணாக்காமல் இதன் தலையில் போடுங்க.)ஒரு கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி, ஒரு தேக்கரண்டி கறிப்பவுடர், காரம் கூடுதலா வேணுமுன்னா அரைத் தேக்கரண்டி மிளகாய்த்தூள். உப்பு ஒரு அரைத் தேக்கரண்டி எல்லாம் சேர்த்து வாணலியில் இருக்கும் எண்ணெயில் போட்டு ஒரு பத்து விநாடிகளில் நறுக்கி வச்ச தண்டுகளைப்போட்டு லேசா வதக்கிட்டுக் கால்கப் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிசம் வேகவிடுங்க. அதுக்குப்பிறகு தனியா எடுத்து வச்சுருக்கும் தலைகளைப்போட்டு மூடிவச்சுட்டு கண் மூடிக் கண் திறங்க. ஒரு கிளறு கிளறி மூடிவச்சுட்டு அடுப்பை அணைச்சுடலாம்.
தலைப்பை ஒருக்கா மீண்டும் வாசிங்க. (தலைப்பு உதவி: கம்பர். நன்றி.)
அஸ்பெரகஸ் வேகறதுக்குள்ளே நடந்து முடிஞ்சுருச்சுன்னு ( "faster than cooking asparagus" )ஒரு பழமொழி இருக்குன்னா பாருங்க!
மருத்துவ குணங்கள் நிறைஞ்சது. கர்ப்பிணிகளுக்கு ரொம்பவே நல்லது. அல்ஸைமர் வந்தவங்களுக்கு கொடுத்தால் குணம் தெரியுது இப்படி ஏகப்பட்ட நல்லவைகள் இருக்கு. அப்ப கெட்டதா ஒன்னுமே இல்லையா? இருக்கே!
இதை உணவில் சேர்த்துக்கும் நாளில் ரெஸ்ட்ரூமுக்கு ஒன் பாத்ரூம் போகும்போது கையோடு கொஞ்சம் ரூம்ஸ்ப்ரே கொண்டு போங்க. அம்புட்டுதான் சொல்வேன்!
Posted by துளசி கோபால் at 12/01/2011 12:07:00 PM 41 comments
Labels: அனுபவம்
Tuesday, November 29, 2011
சீத்தலை சாத்தள் (புதிர்- விடை)
பின்னூட்டங்களில் விதவிதமான ஐடியா கொடுத்த அனைவருக்கும் நன்றி.
இதுக்கெல்லாம் கூடப் பயன்படித்திக்கலாமான்னு ஒரே வியப்புதான்:-)
சரியான விடையை ஒருத்தர் சொல்லி இருக்காங்க. படம் பாருங்க.
ஏஞ்சலீன் அவர்களுக்கு எல்லாருமாச் சேர்ந்து ஒரு 'ஓ' போடுங்க!!!!!!
ஓ ஃபார் Onion:-)
நகரவிடாமல் பிடிச்சு வச்சுக்கிட்டு நறுக்கித் தள்ளிறலாம். ரெண்டா வெட்டித் தோல் உரிச்சதும் ஒரே அமுக்:-)
Posted by துளசி கோபால் at 11/29/2011 10:44:00 PM 22 comments
Labels: அனுபவம்
Monday, November 28, 2011
சீத்தலை சாத்தள்
சரியா ரெண்டு வாரம் மனசை அலைபாயவிட்டுட்டு அதன்போக்கிலேயே போய்வந்தாச்சு. இனி அடங்கிருமுன்னுதான் நினைக்கிறேன்:-)
எழுதலையே தவிர........ வாசிப்புகளைக் குறைச்சுக்கலை. இத்தனைநாள் திடீர்னு எடுத்துக்கிட்ட விடுமுறையும் தோட்டவேலை, சமையல், ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் இப்படி நல்லாதான் போச்சு. Neat bug caught me. ஆனால்....மனக்குரங்கு மட்டும் ஒரு மூலையில் உக்கார்ந்து பிராண்டிக்கிட்டே இருந்துச்சுன்றதை ஒத்துக்கறேன். அதுவும் பகல் 2 மணி ஆனதும் கை பரபரக்கும், பொழுது விடிஞ்சுருச்சுன்னு! (இந்திய நேரம் அப்போ காலை ஆறரை) வாளாவிருந்தால் ஒரு மணிநேரத்தில் எல்லாம் ஆ(டி)றி அடங்கிப்போகும்.
அதை அடக்கவோ, இல்லை எழுதலாமுன்னு நினைச்சதை எப்படி ஆரம்பிக்கணுமுன்னு முடிவு செஞ்சுக்கத் தலை சொறியவேண்டியோ என்னவோ ...........இப்படி ஒரு பொருள்.
புதிரா இருக்கா? படம் பார்த்து என்னன்னு சொல்லுங்க:-)
Posted by துளசி கோபால் at 11/28/2011 02:10:00 PM 24 comments
Labels: அனுபவம்