Friday, December 16, 2011

அடடா..... என்ன அழகு!

அடிபடாமப் பத்திரமாப் பாதுகாத்து பொதிஞ்சு வைக்கணுமா? அடுக்கடுக்கா அடுக்கும்போது ஒன்னையொன்னு இடிச்சுருமோ? நோ சான்ஸ்! அழகாப் Pபேக்கிங் பண்ணக் கத்துக்கணுமா? இயற்கையின் படைப்பில் இதைக் கொஞ்சம் எட்டிப்பாருங்க.

அடடா........ என்னமா அடுக்கி வச்சுருக்கு? என்ன கரிசனம் பாருங்களேன்! பிஞ்சுக்குழந்தையின் விரல்களோ! கருஞ்சிகப்பு கவருக்குள்ளே மெல்லிஸா நீளமான இளம் பிங்க் நிறத்தில் என்ன ஒரு வரிசைப்பா!

இன்னிக்கு மாய்ஞ்சு மாய்ஞ்சு ரசிக்கிறேனே...... இதே 'நான்' ஒரு காலத்தில் இதைப் பார்த்ததும் 'காணாமப் போயிருக்கேன்'! கண்ணெதிரில் இருந்தால் ( வேண்டாவெறுப்பா)உதவணுமே ...என்ன ஒரு நல்ல எண்ணம்.

பாட்டி வீட்டில் இருக்கும்போது....வாசலில் கீரைக்காரம்மா வந்து நின்னால் போதும். கூடையை இறக்குமுன் புழக்கடை வழியா நான் வெளியேறிடுவேன். இதே ட்ரீட்மெண்ட்தான் அந்தப் பிஞ்சு விரல்களுக்கும்.

ஆனால்.....வடை செஞ்சு முடிக்கும்போது மொதல் ஆளா 'டாண்'ன்னு வந்து நிக்கறதுலே மட்டும் என்னை மிஞ்சமுடியாது:-))))

வாழ்க்கையில் முதல்முதலா நானே துணிஞ்சு ஒரு சமயம் சண்டிகர் சிங்ளாக் கடையில் இருந்து ஒன்னு வாங்கிவந்தேன். இந்த ஊருக்குமே இது கிடைப்பது அபூர்வம்தானாம். நம்மைப்போல காய்ஞ்சதுங்களுக்காகவே மொந்த வாழைக்காய், கப்பக்கிழங்கு, முருங்கைக்காய், சின்ன வெங்காயம் வெள்ளைப்பூசணின்னு அப்பப்ப கேரளாவில் இருந்து வருது. வந்து இறங்கும்போதே 'காய்ச்சல்'தான்.

மறுநாள் 'ஆய' ஆரம்பிச்சதும் அழகு ஒவ்வொன்னா வெளிப்பட்டுச்சு. தடிமனா இருக்கும் கருஞ்சிகப்பு மூடியைத் திறந்தால்.......வரிசை அடுக்கு. பூக்கள்!


ஒவ்வொன்னா எடுத்துப்பிரிச்சுத் திறக்கணும்.நட்டநடுவில் ஒரு நரம்பு. கிள்ளித் தூக்கிப்போடு. அடுத்து ஒன்னொன்னிலும் ஒரு கண்ணாடி இதழ். அடி ஆத்தீ! கண்ணாடியைத் திங்கலாமோ? இதையும் தூக்கி வீசத்தான் வேணும். இப்போ கையில் உள்ளதை தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் மிதக்கவிடணும். உம்..... இன்னொரு விஷயம் விட்டுப்போச்சே. ஒரு சின்னக் கிண்ணத்தில் ரெண்டு ஸ்பூன் எண்ணெய் எடுத்துப் பக்கத்தில் வச்சுக்குங்க. விரல்களில் நம்ம விரல்களில் கறைபடியாம இருக்க லேசா அதை அப்பப்பத் தொட்டுக்கணும். ஒரு வரிசை முடிஞ்சதும் அடுத்த தடித்த மூடியைத் திறக்கணும். இப்படி ஒவ்வொன்னா முடிச்சுக்கிட்டே வரும்போது விரல்களின் பருமன் சீராக் குறைஞ்சுக்கிட்டே வரும். இனி உரிச்சு எடுக்கமுடியாமல் கட்டக்கடைசியா இள மஞ்சள் நிறத்தில் குட்டியா ஒரு கூம்பு. மாசுமருவில்லாமல் மொழுமொழுன்னு பட்டுத்துணியில் செஞ்சதுபோல் இருக்கும் அந்த அழகை.....வீசவேண்டியதுதான்.

நரம்புகளும் கண்ணாடி இதழ்களுமா கழிச்சுக்கட்டுவது அதிகமாத்தான் இருக்கு. இல்லே?

தண்ணீரில் போட்டு வச்சுருக்கும் பூக்களை உங்கள் விருப்பத்திற்கு கறியாகவோம் கூட்டாகவோ இல்லை 'என் விருப்பத்திற்கு' வடையாகவோ சமைப்பது இனி உங்கள் கையில்.

எதுவா இருந்தாலும் முதல் விதி ஒன்னு இருக்கு. கொதிக்கும் தண்ணீரில் சுத்தப்படுத்தியப் பூக்களை ரெண்டு நிமிஷம் போட்டு எடுத்துத் தண்ணீரை ஒட்டப்பிழிஞ்சு எடுத்துறனும். பார்த்து...... கை பத்திரம் . கொதி நீர், பயங்கர சூடு கேட்டோ! துளையுள்ள காய்வடிகட்டும் தட்டு இருந்தால், அதில் போட்டு, நீரை வடியவிட்டு எடுத்துப் பிழிஞ்சு வச்சுக்குங்கோ. அடுத்த விதி... அதைப் பொடியா நறுக்கிக்கணும்.

ஆச்சா...... வாங்க, இனி சுடலாம்.

கடலைப்பருப்பு - ஒரு கப்
பச்சை மிளகாய் - 4 அல்லது 5
இஞ்சி - ரெண்டங்குலத்துண்டு( தோல் சீவியது)
பெருங்காயத்தூள் - அரைத்தேக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2 ( பொடியா அரிஞ்சது)
சோம்பு (விருப்பம் என்றால் மட்டும்)- ஒரு தேக்கரண்டி.

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வச்சு தண்ணீரை வடிச்சுட்டு பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கெட்டியா, கரகரன்னு அரைச்சு எடுத்துக்குங்க. இதுலே நறுக்கி வச்சுருக்கும் வாழைப்பூ, வெங்காயம், சோம்பு சேர்ப்பதாக இருந்தால் சோம்பு எல்லாத்தையும் சேர்த்துப் பிசைஞ்சுக்கணும். (முதலில் ஒரு துளி எடுத்து மிளகு சைஸில் உருட்டி, விநாயகா, வடை நல்லபடியா வரணுமுன்னு வேண்டிக்கிட்டு ஜன்னல் ஓரம் வச்சுடணும். இது ஆப்ஷனல்) கைப்பிடி மாவு எடுத்துச் சின்ன உருண்டைகளா உருட்டி வடை ஷேப்புலே தட்டி ஏற்கெனவே அடுப்பில் சூடாகிக்கிட்டு இருக்கும் எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுக்கணும்.லேசாச் சிவந்தமாதிரி இருக்கட்டும்.அப்பத்தான் மொறுமொறுன்னு இருக்கும்.(படம் பார்க்க)

கடலைப்பருப்பு ஊறவச்சு அரைக்க நேரம் இல்லைன்னா பொட்டுக்கடலையை ரெண்டு மூணு ஸ்பூன் தண்ணி தெளிச்சு அரைச்சுக்கலாம். மற்றபடி ஷேப் எல்லாம் முன்னே சொன்னது போலவே:-))))

பதிவர் சந்திப்புக்கு வாழைப்பூ வடை செஞ்சுருக்கலாம்தான். ஆனால் இன்னும் பூ வரலை. மரத்துக்கு வயசு வெறும் ஏழுதான்!

PIN குறிப்பு: படம் வீணாகுதேன்னு எழுதிய பதிவு:-)
59 comments:

said...

அருமை அம்மா. எந்த விஷயம் என்றாலும் அதில் உங்கள் முத்திரை இருக்கிறது. அருமையான பதிவு.
வாழ்த்துகள் அம்மா.

said...

ஒ..சூப்பர்.. இதை செய்யத்தெரியாதவங்களுக்கு உபயோகமா இருக்கும். பின்குறிப்புக்கு என்ன அவசியம்..
நானும் வாழப்பூவைக்கண்டா ஓடர பார்ட்டி தான்..
ஆனா திங்கன்னா முதல் ஆள்..:))

said...

படத்திற்காக பதிவா!
வடை சாப்பிடத் தூண்டும் வகையில் இருக்கு.

இங்க வாழைப்பூ ரூபாய் 20 க்கு கிடைக்கிறது. அவ்வப்போது வாங்கி பருப்புசிலி செய்வதுண்டு. வத்தக்குழம்புக்கும்,மோர்க்குழம்புக்கும் நல்ல காம்பினேஷன்.வடை செய்ததில்லை.செய்து பார்க்கிறேன்.

கிராமத்தில் இருக்கும் கணவரின் பெரியம்மா வீட்டிற்கு ஒரு அம்மா வருவாங்க. அவங்க வாழைப்பூவின் மடலை பிரித்து பூவை தனியாக எடுக்காமலேயே அழகா ஆய்ந்து தருவாங்க.

said...

அட்டகாசமா இருக்கு பூ. மொறுமொறு வடைக்கு நன்றி. சொல்லும் போதே தெரிஞ்சிருக்குமே முத்துலெட்சுமி போல் வடைக்கு முந்து, (வாழைப்)பூவைக் கண்டால் பிந்து என:)!

said...

இந்த பூ பெண்களின் கருப்பைக்கு மிகவும் உகுந்ததாம்.

ஆயுர்வேதத்தில் வாழைப்பூவை பச்சையாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட சொல்கிறார்கள்.

said...

என் விருப்பத்திற்கு உசிலி :)))

said...

வடை சூப்பர்!! நமக்கு இந்த அளவு பொறுமை எல்லாம் இல்லீங்க. யாராவது செஞ்சு கொடுத்தா சாப்பிடலாம்.

said...

ஹாஹாஹா. கடைசி வரி என்னை நல்லா புரிஞ்சு வெச்சுருக்கீங்கன்னு சொல்லிடுச்சு! நான் எழுத வந்ததே இதை ஒரு வாரம் முந்தி பண்ணியிருக்க ப்டாதா இல்லே நான் தான் ஒரு வாரம் பிந்தி வந்துருக்க ப்டாதா.. அவ்வ்வ்வ்! (நிஜமாவெ) வட போச்சே!!!!!

said...

ஹை.. வடை. மொறுமொறுன்னு செம்ம டேஸ்ட்.

பொடியா நறுக்க சோம்பல் படற சமயங்கள்ல எங்கூட்ல வாழைப்பூ பஜ்ஜியாவும் அவதாரம் எடுக்கும் :-))

said...

வாவ்.. வாழைப்பூவுக்குள்ள இருக்குற அரும்பைக் கூட சமைக்க முடியுமா? சூப்பர் டீச்சர்..

ஆனா இதுக்கெல்லாம் ரொம்ப பொறுமை வேணும்ல...டீச்சர் யூ ஆர் கிரேட் :-)

said...

வாழைப்பூவை ரசித்து எங்களையும் ரசிக்க வைச்சுட்டீங்க.

said...

பதிவிற்கு நன்றி. உள்ளே கடைசியாக இருக்கும் அந்தக் கூம்பைத் தூக்கிப்போடவேண்டாம். பெண்களின் வயிற்றுவலிக்கு அதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சிறந்த பலன் கிடைக்கும்

said...

ம்ம்.. சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு.. படங்களைப் பார்த்து ஏக்கம் மனசுக்குள் கிளர்கிறது..

said...

படங்கள் சூப்பரு ;-))

said...

வாழைப்பூவில் வரைந்த சித்திரம் அழகு.

இது என் முதல் வரவு.

said...

தமிழ்மணம் 2

said...

வாழைப்பூ வடை, உசிலி இரண்டும் எனக்கு மிகமிகப் பிடிக்கும். வாழைப் பூ படங்கள் அழகாயிருக்குன்னா, நீங்க கலைநயத்தோட செய்யற விதத்தை வர்ணிச்சிருக்கறது மனசைக் கொள்ளை கொள்ளுது துளசி மேடம்! பிரமாதம்!

said...

வாழைப்பூ வடைக்கு
வாழ்த்துக்கள்..

said...

//கட்டக்கடைசியா இள மஞ்சள் நிறத்தில் குட்டியா ஒரு கூம்பு. ....வீசவேண்டியதுதான்.//

ஏன்? அதை அப்படியே நறுக்கி பயன்படுத்தலாமே? நாங்கள் அப்படித்தான் செய்வது!!

இலங்கையில் வாழைப்பூவை அப்படியே - அப்படியே என்றால் முழுதாக, எதையும் - மடலைக்கூட நீக்காமல் - பொடியாக அரிந்து பயன்படுத்துவார்களாம். ஒரு சமையல் தளத்தில் பார்த்து அதிசயித்தேன்!!

நீங்களும் பாருங்க: http://www.arusuvai.com/tamil/node/12541

said...

//இலங்கையில் வாழைப்பூவை அப்படியே - அப்படியே என்றால் முழுதாக, எதையும் - மடலைக்கூட நீக்காமல் - பொடியாக அரிந்து பயன்படுத்துவார்களாம். ஒரு சமையல் தளத்தில் பார்த்து அதிசயித்தேன்!!//

ஹுசைனம்மா சொல்வது உண்மைதான். இலங்கையில் இந்த அரும்புகளைத் தூர எறிந்து விட்டு வாழைப்பூவின் இளம் மடல்களை முழுவதுமாக வெட்டிச் சமைப்பார்கள். நல்ல சுவையாக இருக்கும். இந்த 'அரும்புச் சமையல்' நமக்குப் புதிது. :-)

said...

நல்ல அனுபவ பதிவு. இங்கு கடைகளில் சல்லிசா கிடைச்சாலும் யாரும் அவ்வளவா வாங்குவதில்லை. வாழைப்பூவும் முருங்கை கீரையும் செம காம்பினேஷன். ரெண்டையும் சேர்த்து பொறியல் செய்தால் திறக்காத வாயும் திறக்கும், நிறையாத மனசும் நிறையும்.

said...

முதலில் ஒரு துளி எடுத்து மிளகு சைஸில் உருட்டி, விநாயகா, வடை நல்லபடியா வரணுமுன்னு வேண்டிக்கிட்டு ஜன்னல் ஓரம் வச்சுடணும். //

நானும் எந்த பலகாரம் செய்தாலும் இப்படித்தான் பிள்ளையார் பிடித்து வைத்து விட்டு முதலில் செய்த பலகாரத்தை பிள்ளையாருக்கு கொடுத்து விட்டு அப்புறம் தான் சாப்பிடுவது.

எனக்கும் வாழைப்பூவை ஆய்வது என்றால் கஷ்டம் தான்.

படங்கள் அருமை.

said...

எந்த வடை எந்த ஊரிலே சாப்பிட்டாலும் அது

துளசி மேடம் பண்ற வடைக்கு ஈடாகுமோ ?

இங்கே கிடைக்கும் அப்படின்னு சொல்றாகளே !

http://youtu.be/61eFGat3S30

subbu rathinam

said...

துளசிமா அந்தக் கூம்பை தூக்கிப் போட வேண்டாம். பச்சடி செய்யலாம்.
வடை பார்க்கவே நாவில் ஊறுதே வெள்ளம். அநியாயம் நாங்க இல்லாத போது இந்த மாதிரி செய்து கண்ணுக்குக் காட்டற்து.
அனுப்புங்கொ ஒரு பார்சல்:)

said...

அழகுடன் சுவைக்கின்றது.

ரிஷான் கூறிவிட்டார் இலங்கை சமையல் பற்றி.

said...

வாழைப்பூ சமையலைப் பற்றி சொல்ல நான் லாயக்கில்லை.
ஆனால் இதை இவ்வளவு கலையளகோடு டிஸபிளே பண்ணி அழகான புகைப்படங்களாகத் தந்த உங்கள் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

said...

போன வாரம் தைரியம் வரவழைச்சிட்டு (அவங்கப்பா லீவுல இருந்தாங்க) வாழப்பூ வாங்கி .. வடை செய்து அசத்திட்டேன்ல.. அதோட இனி எப்ப வாங்கபோறேனோ என்னவோன்னு ஆதி சொன்ன பருப்பு உசிலியும் அதே வாழப்பூவில் கொஞ்சம் செய்துட்டேன்..:)

said...

வாங்க ரத்னவேல்.

கண்ணைக் கொஞ்சம் அகலத் திறந்தால் படுவதெல்லாம் பதிவு என்ற கொளுகை:-))))))

நன்றி.

said...

வாங்க கயலு.

இப்படிச் சொல்லிட்டு கடைசியில் 'காற்றுள்ளபோதே துற்றிக்கொள்'ன்னு கையில் எடுத்தாச்சு இல்லை! அதுவும் டூ இன் ஒன்:-)))))

said...

வாங்க கோவை2தில்லி.

வாழைப்பூ உசிலி இதுவரை செஞ்சதில்லை:(

அந்த கிராமத்துப் பெரியம்மா பூ ஆயும் விதம் ஆச்சரியமா இருக்கே!!!!!!

எப்படி? எப்படி??????

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நானும் ஓடிஒளியும் ரகம்தான்:-))))
ஆனால் அது அந்தக் காலம். இப்போ? ஏன் விட்டுவைப்பானேன்னு.....:-))))

said...

வாங்க கோவை2தில்லி.

அட! இப்படி ஒரு மருத்துவ குணமா?

தெரிஞ்சுருந்தால் பேசாம தின்னுருக்கலாமோ? அடுத்த ஜென்மத்துக்குப் பயன் ஆகி இருக்குமே:-))))))

said...

வாங்க விஜி.

உசிலி எல்லாம் கோவை2தில்லி வரிசையில் நில்லுங்க. வடை வரிசைதான் நம்மது:-))))

said...

வாங்க தெய்வசுகந்தி.

அந்த 'யாராவது' கிட்டே நமக்கும் கொஞ்சம் பரிந்துரை செய்யுங்கப்பா:-)

said...

வாங்க பொற்கொடி.

நம்ம மரத்துப் பூவை எதிர்பார்த்தால்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இது நம்ம சண்டிகர் வாழ்க்கையில் செஞ்சு பார்த்தது, கேட்டோ:=-)))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

அட! வாழைப்பூ பஜ்ஜியா? இது தடிக் காராசேவ் மாதிரி இருக்காதோ பார்க்க:-))))

தனித்தனியாப் போடாம நாலைஞ்சு சேர்த்து மாவில் முக்கிப்போடணுமா?

said...

வாங்க ரிஷான்.

பொறுமை இல்லைன்னா சமைக்கவே முடியாது. உங்க கோபால் அண்ணாவுக்குச் சமையல் சொல்லித்தரும் வேலை/வேளையில்
கையில் கரண்டி இருந்தாலுமே(!) நான் பொறுமையோடு இருந்தேன்னு சொல்லிக்கறேன்:-)

said...

வாங்க ராம்வி.

சின்னச்சின்ன அழகுகள் கொட்டிக்கிடக்குப்பா. 'இயற்கை'க்கு ரசனை ரொம்பவே அதிகம்!!!!

said...

வாங்க பிரகாசம்.

மருத்துவக் குறிப்புக்கு நன்றி. சிலருக்காவது பயனாகும் .

said...

வாங்க ரிஷபன்.

விட்டுவந்த சின்னசின்ன சந்தோஷங்கள் இப்படி ஏராளமா இருக்குல்லே? எனக்கும் பல சமயம் ஏக்கம்தான்:(

said...

வாங்க கோபி.

நன்றிப்பா.

said...

வாங்க மகேந்திரன்.

முதல் வருகைக்கும். த ம + போட்டதுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அப்பப்ப வந்துபோய்க்கிட்டு இருங்க.

said...

வாங்க கணேஷ்.

ரசனைக்கு நன்றிகள். மீண்டும் வருக.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

said...

வாங்க ஹுஸைனம்மா.

அடடா...... விஷயம் தெரியாம வீசிப்புட்டேனே:(

சுட்டிக்கு நன்றி. அதிசயமா இருக்கு.அப்படியே எல்லாத்தையும் சரசரன்னு வெட்டிடலாமா!!!!!! இப்படி முழுப்பூவும் சமைச்சால் அளவு கூடிப்போகாது? நான் சமையல் அளவைச் சொன்னேன்:-)))))

said...

ரிஷான்,

//இலங்கையில் இந்த அரும்புகளைத் தூர எறிந்து விட்டு வாழைப்பூவின் இளம் மடல்களை முழுவதுமாக வெட்டிச் சமைப்பார்கள். நல்ல சுவையாக இருக்கும்//

அப்போ வாழைப்பழத்தை? தோலைமட்டும் சாப்பிடுவாங்களோ!!!!

ஆகக்கூடி...
நாடுகள் தோறும் சமையல்கள் வேறு!

said...

வாங்க -தோழன் மபா, தமிழன் வீதி.

முதல் வருகைக்கு நன்றி.

இப்ப எதுக்காக முருங்கைக்கீரையை ஞாபகப்படுத்தினீங்க? ஹைய்யோ.... எனக்கு ரொம்பப்பிடிச்ச கீரை இது. இப்பவே தின்னாகணுமுன்னு மனசு கொதிக்குது. ஆனால் இருக்குமிடம் சரியில்லையே:(

விடமாட்டேன் அடுத்த முறை(யும்)

said...

வாங்க கோமதி அரசு.

ஆஹா.... நான் 'தனி' இல்லை:-))))

வருகைக்கு நன்றிகள்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

மீனாட்சி அக்கா செய்யும் வடை அதி சூப்பராச்சே!!!!!

said...

வாங்கோ வல்லி.

ச்சும்மா பச்சடின்னு சொல்லிட்டுப் போகப்டாது கேட்டோ!

செய்முறையைச் சொல்லிட்டு மறு வேலை பார்க்கவும்:-)


( ஏதோ இங்கே வாழைப்பூ கொட்டிக்கிடக்குறமாதிரிதான் அலையறேன்)

said...

வாங்க மாதேவி.

உங்கூர் சமையலை அப்பப்பக் கண்ணுலே கட்டுங்கப்பா.

said...

வாங்க டொக்டர் ஐயா.

உங்களுக்கு இருக்கும் வேலைச்சுமையில் நீங்க வாழைப்பூவை ஆய்ஞ்சு சமையலைச் செய்வீங்க நான் எதிர்பார்த்தா ...அது டென் மச் ஆகிடாதா?:-)))))

said...

வாழைப்பூ வடை பார்க்கும்போதே நாவூறுது. செய்முறையும் அசத்தல்.

அந்தக் கடைசிக் கூம்பை வீசுறதா? சமைக்கவேண்டாம், நாங்க அப்படியே சாப்பிடுவோம். லேசான துவர்ப்போட ரொம்ப நல்லா இருக்கும்.

அப்புறம் எப்ப ஆஸ்திரேலியா வரீங்க? வேறு பதிவில் கேட்டிருந்தீங்க. நான் இப்பதான் பார்த்தேன். இங்க பக்கம், சிட்னிதான். வாங்க மேடம். சந்திப்போம்.

said...

வலைச்சரத்தில் இன்று 16.1.13 உங்களின் இந்தப் பதிவு இடம் பெற்றிருக்கிறது. வாழ்த்துகள்!

http://blogintamil.blogspot.in/2013/01/blog-post_16.html

கடைசியில் வரும் கூம்பை தூக்கிப் போடுவதா? நாங்கள் அப்படியே சாப்பிட்டு விடுவோம் கொஞ்சம் துவர்ப்பு ருசியுடன் நன்றாக இருக்கும்.

எங்கள் வீட்டிலும் பருப்புசிலி செய்வோம். அடைமாவுடன் சேர்த்து வாழைப்பூ அடை செய்வோம்.

said...

வாங்க ரஞ்ஜனி.

கூம்பு சமாச்சாரம் தெரிஞ்சுக்கறதுக்குள்ளே கூம்பை வீசிப்போட்டதுக்கு இன்னும் மனசாறலைப்பா!

இனி எந்த ஜென்மத்தில் வாழைப்பூ கிடைக்குமோ:(

said...

துளசி மேடம் இந்த பதிவு இன்று மனோ மேடம் வழி (வலைசரம் வழி) இங்கு எட்டி பார்க்க ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைதது. வாவ் எனக்கு பிடித்த அயிட்டம். ஆனல் இதை இவ்வளவு அழகாக எழுதி மனதில் நீங்க இடம் பெற்று விட்டது. சூப்பர். நன்றி.

said...

அருமையான பதிவு. படங்களோட செய்முறை விளக்கம் போட்டது ரொம்ப அருமை.

:) நன்றி.

said...

அருமையான பதிவு. படங்களோட செய்முறை விளக்கம் போட்டது ரொம்ப அருமை.

:) நன்றி.

அன்புடன்,
மதுரக்காரன்
http://madurakkaran.wordpress.com/

said...

வாங்க மதுரைக்காரரே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.