எதிர்க்கட்சித் தலைவியா இருந்த ஹெலன் க்ளார்க்குக்கு பெரிய இடி! ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள் தாந்தான் முதல் பெண் பிரதமரா ஆகப்போறொமுன்னு இருந்தாங்களே. சட்டசபையில் எதிரும் புதிருமா ரெண்டு பெண்கள்.இந்தக் கணக்குலே பார்த்தால் இதுவும் உலகில் முதல்முறைதானே?
இந்த மந்திரி சபைக்கு இன்னும் ரெண்டு வருசம் ஆயுள் இருக்கு.
சமையலில் குழம்பு தாக்குப் பிடிக்கிற மாதிரி கூட்டு இருக்காதுல்லே? சீக்கிரமாக் கெட்டுரும்தானே? அதே கதைதான் இந்த அரசியல் கூட்டுலேயும். உள்ளுக்குள்ளெ புகைய ஆரம்பிச்சது. இந்த அழகுலே போனா, வரப்போற தேர்தலில் நம்ம கட்சி நிலைக்கறது கஷ்டமுன்னு நியூஸி ஃபர்ஸ்ட்க்குத் தோணிருச்சு. இதே தோணல் பிரதமருக்கும். கூட்டோட ஸ்ட்ரெஸ் தாங்க முடியலை. இப்பப் பார்த்து ஆக்லாந்து பன்னாட்டு விமான நிலையத்தைத் தனியாருக்கு வித்தாங்க. இதனால் கூட்டுலே பிரதமருக்கும் உதவிப் பிரதமருக்கும் ஏகப்பட்ட கருத்து வேற்றுமை. முடிவு? உதவிப் பிரதமர் பதவிக்கு(ம்) ஆப்பு. பதவி பறிபோனாலும் கூடவே இருக்கணுமுன்னு தலையெழுத்தா என்ன? கொஞ்ச நாளில் வின்ஸ்டன் பீட்டர், கூட்டுக்குக் கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கிக்கிட்டார். அவர் மட்டும்தான் வாபஸ். அவர் கட்சியில் இருந்த மத்தவங்க எல்லாரும் அல்வாக் கிண்டித் தலைவருக்கு ஊட்டிட்டுக் கட்சியில் இருந்து வெளியே வந்து, அலையன்ஸ் கட்சியில் சேர்ந்துக்கிட்டு ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுத்துட்டாங்க. அடுத்த தேர்தல்வரை வண்டி இப்படியே ஓடுச்சு. 'யஹாங் ஸே வஹாங், வஹாங்ஸே யஹாங்':-)))))
ச்சீனாவுக்கு(1997) ஹாங்காங் திரும்பக் கிடைச்ச சமயம், நிறையப்பேர் அங்கிருந்து பிஸினெஸ் மைக்ரேஷன்லே நியூஸி வர்றதுக்கு முயற்சி செஞ்சாங்க. குறைஞ்சது அரை மில்லியன் டாலர் இங்கே நியூஸியில் முதலீடு செய்யணுமுன்னு அரசாங்கம் சொல்லுச்சு. அதுவுமில்லாம அதுவரை ஹாங்காங் பிரிட்டிஷ் வசம்தானே இருந்துச்சு.அப்ப ஒரு அம்பதாயிரம் பேர் இங்கே வந்துட்டாங்க. கடந்த சில வருசங்களா ஃபிலிப்பினோப் பெண்கள், மலேசியப் பெண்கள் இங்கத்து 'கிவி' ஆட்களைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு நியூஸிக்கு குடிவந்தாங்க. அப்புறம் கொரியா, ஜப்பான்னு சில இடங்களில் இருந்து கொஞ்சமுன்னு வெவ்வேறு நாடுகளில் இருந்து புது ஜனங்கள் வந்துக்கிட்டுத்தான் இருந்தாங்க. ஐரோப்பியர்கள் வருவது ரொம்பவே குறைஞ்சு போச்சு.சீனாவிலே இருந்தும் ஏராளமான ஜனங்கள் வியாபார விஸா வாங்கி வந்து குடியேறுனாங்க.சமோவா, இன்னும் மத்த பஸிபிக் தீவுகளில் இருந்து நிறையப்பேர் வந்துக்கிட்டு இருந்தாங்க. நியூஸி பல்வேறு கலாச்சாரம் கொண்ட மக்கள் இருக்கும் நாடா மாறிக்கிட்டு இருந்துச்சு. அரசியலில் பெண்களின் பங்கு கூடிக்கிட்டுப் போச்சு. ஒரு ச்சீனப் பெண்மணி பார்லிமெண்ட் அங்கத்தினராகவும்( லிஸ்ட் எம்.பி) ஆனாங்க.
குடும்ப வன்முறைகளில் கஷ்டப்பட்டவங்க எண்ணிக்கையில் ஆசியப் பெண்கள் நிறைய இருந்தாங்க. ஆங்கிலமொழி தெரியாத பலர், தேவையான சமயங்களில் உதவிக்கு எங்கே போய் யாரிடம் கஷ்டத்தை விளக்கிச் சொல்லறதுன்றது ஒருபிரச்சனையா இருந்துச்சு. அதுவுமில்லாம , குடும்பத்தில் நடக்கறதை வெளியே போய் சொல்றது ஒரு அவமானமுன்னு எண்ணம். இதைக் கவனிச்ச சில ஆசியப் பெண்கள் ஏழு பேர் சேர்ந்து 'சக்தி'ன்னு ஒரு அமைப்பைத் தொடங்குனாங்க. இது இப்பபெரிய அளவில் வளர்ந்து ஆசியப் பெண்களுக்கு மட்டுமில்லாம பொதுவா எல்லாருக்கும் உதவுது. எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகள் இருக்கு. சீனா, தாய்லாந்து, மலேயா, வியட்நாம், கம்போடியா, கொரியா, இந்தியா, ஜப்பான், பர்மா,பாகிஸ்தான், பங்களாதேஷ், இரான், இராக், ஆஃப்கானிஸ்தான், ஆஃப்ரிக்கா, ஸ்ரீலங்கான்னு பலநாடுகளைச் சேர்ந்த 20,000பெண்கள் இதன்மூலம் உதவியடைஞ்சிருக்காங்க. பல ஆசிய மொழிகளிலும் 'சக்தி' என்ற சொல்லுக்கு 'பலம் (ஸ்ட்ரெந்த்) என்ற பொருள் இருக்கறதாலே இந்தப் பெயர் ரொம்பப் பொருத்தமா அமைஞ்சுருச்சு. பெண்கள் நலனுக்காகவே அரசு ஒரு புது இலாக்கா ஏற்படுத்துச்சு.