இது மூணாவது டெர்ம் லேபருக்கு. 2005 வருசத் தேர்தலிலும் வெற்றிதான். ஆனால் கூட்டில்லாம முடியாது. கிடைச்ச இடம் 50. 'டக்'ன்னு நேஷனல் 48 இடம் புடிச்சுருச்சு. இந்த ரெண்டு சீட் வித்தியாசம் கூட கேக் பங்கு வச்சதுதான். தேர்தலில் ஓட்டு வாங்கி ஜெயிச்சது ரெண்டு கட்சிக்கும் தலா 31. என்ன செய்யலாம்? கூட் கூட் கூட்டுதான். வேற வழி?
நியூஸி ஃபர்ஸ்ட், கிரீன் கட்சி ரெண்டும் தேர்தலில் ஒரு இடம்கூட ஜெயிக்கலை. ஆனா 'கேக்' பங்கா 7, 6 ன்னு கிடைச்சது. மவொரிக் கட்சிக்கு 4 இடம். லேபர், யுனைட்டட் ப்ராக்ரசிவ் கட்சியுடன் கூட்டும், நியூஸி ஃபர்ஸ்ட் & யுனைட்டட் ஃப்யூச்சர் ரெண்டும் ஆதரவு தரேன்னு சொன்னதாலெ அவுங்களொடு சேர்ந்தும் 'அரசுக் கட்டிலைப் பிடிச்சாங்க'. ச்சும்மா ஆதரவு யாருங்க கொடுப்பாங்க? நியூஸி ஃபர்ஸ்ட் விண்ட்ஸ்டன் பீட்டர்ஸ் வெளியுறவு அமைச்சர். யுனைட்டட் ஃப்யூச்சர், Peter Dunne ரெவின்யூ அமைச்சர். க்ரீன் கட்சியும் குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு மட்டும் வெளியே இருந்து ஆதரவு தர்றோம்னுச்சு.
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சில 'புது' வாக்குறுதிகளாவது கொடுத்தாகணும் இல்லையா? போன முறை கொடுத்ததுதான் இப்பவுமுன்னு இருந்தா மக்கள்ஸ்க்கு ஆதரவு தரும் ஆர்வம் குறைஞ்சுறாது? அரசியல்வாதிகளுக்கு மாணவர்மீதுதான் கண். இளைய தலை முறையாச்சே..................அவுங்களைக் குஷிப் படுத்தறது ரொம்பவே முக்கியம்:-)\
மாணவர்கள் வாங்குன கடனுக்கு இனிமே வட்டியே இல்லைன்னு சொல்லி இருக்காங்க.ஆனா ஒரு கண்டிஷன். இது, படிச்சு முடிச்சுட்டு இங்கே நியூஸியிலேயே இருந்து வேலை பார்க்கறவங்களுக்கு மட்டும். நல்லதுதான். அவுங்க சம்பாரிச்சுக் கடனைக் கட்டினால்தான், பிற்காலத்தில் வாழ்க்கையில் செட்டில் ஆகும்போது வீடு வாங்கக் கொள்ள வங்கிகள் கடன் தரும். வங்கிக் கடன் வாங்காம வீட்டைக் கனவில்கூட வாங்க முடியாத நிலைதான் இப்ப இருக்கு. நிறையப்பேர் கடன் வாங்கிப் படிச்சுட்டு வெளி நாட்டுக்கு வேலைக்குப் போயிடறாங்க. மாணவர்களுக்கு எந்த விதமான ஜாமீனும் இல்லாம, 'திருப்பிக் கட்டுவாங்கன்ற நம்பிக்கை'யில் மட்டுமே அரசாங்கம் கடன் கொடுக்குது.
கவர்னர் ஜெனரலின் பதவிக்காலம் முடிஞ்சது. இந்தியர்களுக்குப் பெருமை தரும் விதமா 'ஆனந்த் சத்யானந்த்' என்றஃபிஜி இந்தியர் கவர்னர் ஜெனரலா 2006 வருஷம் பதவிக்கு வந்தார். இவர் இங்கே நியூஸியில் பிறந்து வளர்ந்தவர்தான்.ஆனாலும் வெள்ளையரல்லாத ஒருத்தர் அதுவும் நம்ம இனத்தவர் இந்தப் பெரிய பதவிக்கு வந்ததை மனமாரப் பாராட்டத் தோணுது. ஐயோ கடவுளே...... நானும் ரேசியல் மாதிரி பேசறேனா(-:
டோனால்ட் தாமஸ் ப்ராஷ்(Donald Thomas Brash) ன்னு டாலர் நோட்டுலே கையெழுத்துப் போட்டுக்கிட்டு, நாட்டின் பொருளாதாரத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தவர் எதிர்க்கட்சியா செயல் பட்ட நேஷனலுக்குத் தலைவரானார். டான் ப்ராஷ்( Don Brash) இங்கத்து ரிஸர்வ் பேங்க் கவர்னரா இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தலைமை இருந்ததாலேதான் 48 இடம் 2005லே கிடைச்சதுன்னு(ம்) பேசுனாங்க.மக்களுக்குப் பேசச் சொல்லிக் கொடுக்கணுமா என்ன? கருத்துக்களை அப்படியே அள்ளித் தெளிச்சுருவொம்லெ!
இவர் வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்காம, அரசாங்க உதவி வாங்குறவங்களைப் பத்தியெல்லாம் கொஞ்சம் மனம் நோகும்படிப் பேசிட்டார். போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு மவொரிகளைப் பத்தியும் சில வார்த்தைகளை விட்டுட்டார். இவர் நிறவேறுபாடு பார்க்கறவர்னு பேச்சு ஆரம்பிச்சது. 'அப்படியெல்லாம் இல்லையாக்கும், என் மனைவி சிங்கப்பூர் பெண்மணி'ன்னு சமாளிச்சார். இங்கேதான் அப்பப்பக் கருத்துக் கணிப்புன்னு எதாவது நடந்துக்கிட்டே இருக்குமே. அதுலெ இவரோட புகழ்(??) 'டுபுக்'னு இறங்கிருச்சு. கட்சிக்குள்ளெ ஒரே சோகம். பேசாம இவரைத் தூக்கிட்டாங்க. இப்ப எதிர்கட்சித் தலைவரா 'ஜான் கீ'( John Key) ன்றவர் இருக்கார். அடுத்த வருசம் 2008லே பொதுத் தேர்தல் வருது. இன்னும் ஒரு வருசத்துக்குள்ளே மக்கள் மனசுலே இடம் பிடிக்க எல்லாக் கட்சிகளும் 'லோ லோ'ன்னு அலையறாங்க.
வேலையில்லாத் திண்டாட்டம் இப்ப 3.7 %தான். போனவருஷம் 11.5 பில்லியன் டாலர்கள் கூடுதலா கஜானாலே இருக்குன்னு அரசாங்கம் சொல்லியாச்சு. டாலர் மதிப்பு ஸ்டடியா இருக்கு. இதெல்லாம் குறிப்பிடத்தக்க நல்ல விஷயங்கள்தானே?
இங்கத்துப் பார்லிமெண்டுலே 30 சதவீதம் அங்கத்தினர் பெண்கள். இதுவே இன்னும் போகப்போக அதிகமாகலாம்.அரசியலுக்கு வர்றதுலெ இப்ப பெண்கள் அதிக ஆர்வம் காட்டறாங்க. பல ஊர்களில் பெண்கள்தான் மேயராக இருக்காங்க.எங்க ஊருக்கு அடுத்த வருஷம் மேயர் தேர்தல் உண்டு. ரெண்டு பெண்கள்தான் போட்டி போடறாங்க. பெண்கள் பூசாரிகளாஆகலாமா கூடாதான்னு விவாதம் நம்ம நாட்டுலே நடந்துக்கிட்டு இருக்கறதைப் படிச்சப்பத்தான் ஞாபகம் வந்தது,இங்கே நியூஸியில் 1989லேயே முதல்முறையா ஒரு பெண் 'Penny Jamieson' பிஷப் பதவிக்கு வந்துருக்காங்க.
ஊழல்கள் இல்லாத நாடுகளின் வரிசையில் முதலாவது இடம் பிடிச்ச மூணு நாடுகளில் நியூஸியும் ஒண்ணு.மத்த ரெண்டு நாடுகள் பின்லாந்தும், ஐஸ்லாந்தும். 9.6 ன்னு சொல்றாங்க. இது 2006 வருஷக் கணக்கு. அப்படியும் அரசியல்வாதிகள் சிலர் ச்சின்ன ஊழல்கள் செஞ்சுட்டு, அது தொலைக்காட்சி, பத்திரிக்கைன்னு எல்லா இடத்திலும் தொவைச்சுக் காயப் போட்டுடறதாலே இன்னும் மோசமா ஆகாம இருக்கு.
சீரியஸ் ஃப்ராடு ஆஃபீஸ்னு ஒண்ணு இருக்கு. அவுங்களுக்கு வேலையே கண்ணுலே விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டுப் பார்க்கறதுதான். பாராளுமன்றத்தின் மவொரி இனத்து பெண் அங்கத்தினர், ஒரு குறிப்பிட்டச் செலவுக்காகக் கொடுத்த அரசு நிதியை, தன்னோட உடல் இளைக்கறதுக்கான அறுவை சிகிச்சைக்குச் செலவு செஞ்சுட்டாங்க. இவுங்களொட அறுவை சிகிச்சையையும், அழகான உடலையும் பாராட்டி, ஒரு பெண்கள் பத்திரிக்கையில் வந்துச்சு. இது போதாதா? பொதுக் காசைத் தனக்குச் செலவு செஞ்சுக்கிட்டக் குற்றம் நிரூபிக்கப்பட்டு இப்ப ரெண்டே முக்கால் வருஷம் சிறை தண்டனை கிடைச்சிருக்கு. குற்றத்துக்கு உடந்தையா இருந்த அவுங்க கணவருக்கு ரெண்டு வருஷம் ( home detention) ஹவுஸ் அரெஸ்ட்.
ஒரு மந்திரி, வீடு மாறிப்போகும்போது அவரோட பூனைகள் ரெண்டை அங்கேயே விட்டுட்டுப் போயிட்டார். 11 நாள் கழிச்சுத்தான் அதுகளைக் கொண்டு போக வந்தார்னு பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லி, RSPCA அவர்மேலே மிருகவதைக் குற்றம் சாட்டி அவருக்கு எச்சரிக்கை விட்டுச்சு. இவரே ஒரு சமயம் குடிச்சுட்டு கார் ஓட்டுனதாக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அடைஞ்சார். இதெல்லாம் மந்திரி பதவியில் இருக்கும்போது நடந்துச்சு.
பிரதமரின் கார் குறிப்பிட்ட வேகத்தைவிட அதிகமாப் போச்சுன்னு போலீஸ் கேஸ் புக் பண்ணினது, கோர்ட்லே வழக்கு பதிவாகி ஓட்டுனருக்குத் தண்டனையும், உள்ளெ இருந்த பிரதமருக்கு எச்சரிக்கையும் கிடைச்சது.
ஒரு பாராளுமன்ற அங்கத்தினர், ரெஸ்டாரண்ட்லே சாப்புட்டுட்டுப் பணம் கொடுக்காம போயிட்டார்னு தொலைக்காட்சிகளில் எல்லாம் போட்டு நாறடிச்சாங்க. அவர் 'தண்ணி'யிலே இருந்ததாலெ பணம் கொடுக்க விட்டுப்போச்சுன்னு சொன்னாங்க.
ஒரு பார்லிமெண்ட் அங்கத்தினர் மகளும், அவுங்க நண்பரும் சேர்ந்து இன்னொரு நண்பரின் காருக்குத் தீவச்சுட்டாங்கன்னு குற்றம் பதிவாகி தண்டிச்சதுன்னு சிலதைச் சொல்லலாம்.
காவல்துறை ரொம்பவும் சிறப்பாச் செயல்படுது. ட்ராஃபிக் போலிஸ்ன்னு தனியா ஒண்ணும் இல்லை. மக்களும் சாலைவிதிகளை மதிச்சு நடந்துக்கறதாலே இதுக்குண்டான அவசியமும் அவ்வளவா இல்லை. எப்பவாவது ட்ராஃபிக் லைட்கள்வேலை செய்யலேன்னா மக்களே 'வலது பக்கம் முன்னுரிமை' கடைப்பிடிச்சிருவோம். இங்கே அடிக்கடி ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட சைக்கிள் ரேஸ், ஓட்டமுன்னு இருந்தால் அன்னிக்கு மட்டும் விளையாட்டு வீரர்கள் ஓடிவரும் சாலைகளில் உள்ள ட்ராஃபிக் லைட்களைச் செயல்படாம முடக்கி வச்சு, சில காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்கு பண்ணுவாங்க.
ஆனா 'ஹைவே'யில் அதிக வேகமாப் போறவங்களைப் பிடிக்க Highway Patrol கார்கள் ஒளிஞ்சிருக்கறதைப் பார்த்திருக்கேன். நகரத்தில் முக்கியமான இடங்களில் 'ரெட் லைட்' கெமரா வச்சுருக்காங்க. விதிகளை மீறுபவர்களைஅது போட்டொ பிடிச்சுக் காமிச்சுக் கொடுத்துரும். அபராதம் கட்டச் சொல்லி நோட்டீஸ் வந்துரும். 'நான் யார் தெரியும்லெ'ன்னு ' வீர வசனம்' எல்லாம் பேசமுடியாது:-)
இங்கே தெற்குத்தீவில் அவ்வளவா கூட்டம் இல்லாததாலும், நான் இங்கே வசிக்கிறதாலும் இதை இப்படிக் கவனிச்சிருக்கேன்.ஒருவேளை ஆக்லாந்து நகரில் ( 11 லட்சம் மக்கள் இருக்காங்க அங்கே) போக்குவரத்துக்குன்னு காவலர்கள் இருக்கலாம்.
காவலர்கள் பொதுவா கைத்துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வச்சுக்கறதில்லை. வெறுங்கைப் போலிஸ்தான். இப்ப சமூக விரோதிகளை வளைக்கும் இடத்தில் போறவங்க மட்டும் 'பெப்பெர் ஸ்ப்ரே' வச்சுருக்காங்க. யாரையாவது அரெஸ்ட் செஞ்சாலும் யாரையும் யாரும் அடிக்கறதெல்லாம் இல்லை. சிறைச்சாலைகளில் கூட அடிஉதையெல்லாம் இல்லை. ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னே ஒரு குற்றவாளியை அடிச்சுட்டார்னு ஒரு காவலரை வேலையைவிட்டுத் தூக்கிட்டாங்க. பல வருசத்து முன்னே காவலர்கள் சிலர் தன்னைக் கற்பழிப்பு செஞ்சதா ஒரு பெண்மணி குற்றம் சாட்டினதைத் தொடர்ந்து நாடே கொந்தளிச்சுப் போச்சு. குற்றம் நிரூபணமானதும் தண்டனை கிடைச்சது. பெண்மணிக்கு நஷ்ட ஈடும் ஒருபெரும்தொகை கிடைச்சது. இப்ப மூணு மாசம் முன்பு இன்னுமொரு பெண் இதைப்போல குற்றம் சாட்டிக் கடைசியில் அவுங்களெ பணத்துக்கு ஆசைப்பட்டுப் போலியாக் குற்றம் சாட்டுனாங்கன்னு தெளிவாயிருச்சு.
காவல்துறையைப் பார்த்து யாரும் பயப்படவேணாம். நட்பாவும் மரியாதையாயும் நடந்துக்குறாங்க. அரசாங்க உத்தியோகம்பார்க்குற பிரிவில் அதிக சம்பளம் ( பிரதமரை விடவும்) வாங்குவது இங்கத்து போலிஸ் கமிஷனர்தான்னு விவரம்கிடைச்சப்ப எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. இங்கே காவல்துறைக்கு சங்கம்கூட இருக்கு!
ஆரம்பப் பள்ளிகளுக்கு அப்பப்ப வந்து பிள்ளைகளுக்கு சாலைவிதிகள், இன்னும் சமூகத்துலே என்னென்ன செய்யக்கூடாதுன்னு பசங்க வயதுக்கேத்தபடி கலந்துரையாடல் நடத்திட்டுப் போவாங்க அந்தந்தப் பகுதியில் இருக்கும் காவலர்கள்.
பொதுவா பொருட்கள் திருட்டுப்போனா காவலர்கள் அதில் அதிகக் கவனம் செலுத்தறது இல்லை. முதலில் நம்மைக் கேக்கும் கேள்வி இன்ஷூரன்ஸ் இருக்கா? ஆமாம்னு சொன்னா என்னென்ன திருடு போச்சுன்னு ஒரு பட்டியல் போட்டுத்தரச் சொல்றாங்க. அதுக்கப்புறம் நாம் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு க்ளெய்ம் செய்யும்போது நாம் அங்கே தரும் பட்டியலும், போலிஸ் அவுங்களுக்கு அனுப்பும் காப்பியும் ஒரே மாதிரி இருந்தா நமக்கு இன்ஷூரன்ஸ் பணம் கிடைச்சிரும்.
நம்ம வீட்டுலே திருடன் வந்தப்ப இப்படித்தான் நடந்துச்சு. நாந்தான் கதைகளிலும், சினிமாவிலும் வர்றதை வச்சுக்கிட்டு,எந்த சாமான்களையும் தொடாம( திருடனோட கைரேகை அழிஞ்சுருமுல்லெ!) இருந்தேன். மனித உடம்புக்கோ, உயிருக்கோஅடி/காயம்/ஆபத்து ஏதும் இல்லைன்னா அதை ரொம்ப சீரியஸ்ஸா எடுத்துக்கறதில்லையாம்.
சமீபகாலமா ஆசியர்கள் குடியேறின பிறகு குற்றங்கள் அதிகரிச்சு இருக்கறதா தகவல்கள் வந்துக்கிட்டு இருக்கு(-:
நியூஸி காவல்துறை இண்ட்டர்போலில் அங்கம் வகிக்குது.
பொதுவா 'காவல்துறை உங்கள் நண்பன்' என்பது ரொம்பச் சரி.
முடிவுரை
எதோ எனக்குத் தெரிஞ்ச அளவுலே ஒரு சரித்திரத்தைச் சொல்லி இருக்கேன். சரித்திரமுன்னு இருக்கும்போது வருஷங்களையும்,எண்களையும் தவிர்க்க முடியாதுல்லையா? அதான் அங்கங்கே எண்களைக் குறிப்பிட வேண்டியதாப் போச்சு. நீங்க இதுவரை படிச்ச வேற சரித்திரப் புத்தகங்களோட நடையிலிருந்து இதன் நடை முற்றிலும் வேறுபட்டு இருந்துருக்கும்.ஏன்னா..........நான் சரித்திரத்தை எழுதலை. சொல்லி இருக்கேன். நான் அடிப்படையில் ஒரு 'கதை சொல்லி'!
வெளியில் இருந்து பார்க்கும்போது உலகத்துலேயே மிகச் சிறந்தநாடாகத் தெரியும் நியூஸியில் குற்றங்கள் நடக்கறதே இல்லைன்னு நினைச்சுறாதீங்க. இங்கேயும் உலகில் பொதுவா நடக்கறது நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. மனுஷங்கதானேஇதைச் செய்யறாங்க. இங்கேயும் மனுசங்கதானே இருக்கோம்? குறைஞ்ச அளவு மக்கள் தொகை இருக்கறதாலே,எதோ அங்கொண்ணு இங்கொண்ணு நடக்கறமாதிரித் தெரியும். ஆனா விகிதாச்சாரம் வச்சுப் பார்த்தால் ஏறக்குறைய ஒரே மாதிரியாகலாம். இதெல்லாம் தனிமனிதனின் குணக்கேடுகளால் நடக்கற குற்றங்கள். அரசியல்வாதிகளும்சில நாடுகளில்(???) நாம் பார்க்கறதுபோல அவ்வளவு மோசமில்லைன்னுதான் நினைக்கிறேன். மக்களுக்குநன்மை செய்யணும் என்ற எண்ணமும், சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்தாம இருக்கணும் என்ற எண்ணமும், நியூஸியை 'நியூக்ளியர் ஃப்ரீ' நாடாவே வச்சுக்கணும் என்ற எண்ணமும் ஒரு வேறுபாடு(ம்) இல்லாம எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொதுவா இருக்கு. இதை உண்மையாவே நாம் பாராட்டத்தான் வேணும். மேலும் உலகின் மற்ற எல்லா நாடுகளையும் போல்தான் அரசாங்கம் மக்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு திட்டங்கள் பல கொண்டு வருது. ஆனா அது பாதியில் நிக்காமஎல்லா மக்களுக்கும் பரவலாப் போய்ச்சேருது. அதுலேயும் அங்கங்கே ஆதாயம் பார்க்க நினைக்கும் அரசியல்வாதிகளோ,அவர்களது அடிப்பொடிகளோ 'இன்னும் இங்கே இல்லை'ன்றதுதான் ஒரு பெரிய ஆறுதல். எதுக்கெடுத்தாலும் தலையைச் சொறிஞ்சுக்கிட்டோ, சொறியாமலோ கை நீட்டும் ஆட்கள் எந்த மட்டத்திலும் இல்லை. இன்னும் சொல்லப்போனாஇந்த நாட்டுலே 'டிப்ஸ் ( Tips) வாங்கும் & கொடுக்கும் வழக்கமே இல்லை. அண்டை நாடான ஆஸியிலும் இப்படித்தான்.அறவே இந்தப் பழக்கம் இல்லாததால், மத்த நாடுகளுக்குப்(அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட) போகும்போது இப்படிக்கொடுக்கணும் என்ற உணர்வே இல்லாம 'ஏன் இந்த ஆள் பெட்டியைக் கொண்டுவந்து வச்சுட்டு இங்கேயே நின்னுக்கிட்டு இருக்கார்?'னு முழிச்சிருக்கேன். டாக்ஸிகளில் கூட மீட்டருக்கு மேலே 'போட்டு'த் தர்றது இல்லை. நாங்கதான் சிலசமயங்களில் சில்லறை இல்லைன்னு பத்து, இருபது செண்ட் குறைச்சுக் கொடுத்துருக்கோம்.
இயற்கை அழகை எடுத்துக்கிட்டா, இந்த நாட்டில் அழகான அம்சங்கள் அப்படியே கொட்டிக்கிடக்கு. அதையெல்லாம் நசிச்சுச் சீர்கேடு செய்யும் அளவுக்குப் 'பூமி பாரம்' இல்லாததும் ஒரு காரணமா இருக்கலாம்.நமக்கு விருப்பம் உள்ள மதத்தில் இருக்கவோ, விரும்புன மாதிரி வழிபாடுகள் நடத்தவோ எந்தத் தடையும் இல்லாம எல்லாரும் சுதந்திரமா இருக்கலாம். இங்கே வசிக்கும் மக்கள் அனைவருக்கும் பொதுவான சட்டங்களும் உரிமைகளும் இருக்கு. சட்டத்தின் முன்னால் எல்லாரும் ஒண்ணுதான்.
நன்றி உரை
இதுவரை நான் 'சொல்லிய' நியூஸி சரித்திரத்தைப் பொறுமையாப் படிச்ச நண்பர்களுக்கும், அவ்வப்போது பின்னூட்டமிட்டும்,தனி மடல்களிலும் உற்சாகப் படுத்திய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எழுதுன தொடர்களில் என் மனசுக்கு ரொம்பத் திருப்தியைக் கொடுத்தது இந்தத் தொடர்தான். இதுக்காக சரித்திரத்தில் பின்நோக்கி ஒருபயணம் செஞ்சதும், இதுக்காகவே நிறைய சரித்திரப் புத்தகங்களைப் படிச்சதும் மனநிறைவையே தந்துச்சு. இங்கிருக்கும் நூலகமும், வலையும், நான் தன்னார்வத்தொண்டு செஞ்சுக்கிட்டு இருந்த குழந்தைகள் நூலகமும் ரொம்பவே உதவியா இருந்துச்சு. இங்கே என் கிவி நண்பர்களிடமும், இன்னும் பல முதியோரிடமும் பல நிகழ்வுகளைப் பற்றிக்கேட்டுத் தெரிந்து கொண்டதும் ஒரு நல்ல அனுபவமா அமைஞ்சது.
இந்தத் தொடர் எழுத என்ன ஊக்குவிச்ச முதல் ஆளான தோழி மதிக்குத்தான் முதல் நன்றியைச் சொல்லணும்.அப்புறம், இது சம்பந்தமான என் வேலைகளில் குறுக்கிடாம அப்பப்ப (எனக்கு நிறைய நேரம் கிடைக்குறமாதிரி)வெளிநாடுகளுக்குப் போயிட்ட கோபாலுக்கும், நான் கணினியில் 'டொக் டொக்'ன்னு தட்டச்சு செய்யும்போதெல்லாம் 'எப்படியோ போ'ன்ற பார்வை பார்த்துட்டுக் காலடியில் சத்தமே போடாமல் (சைலண்ட் மியாவ்)ஒரு தொந்திரவும் செய்யாம இருந்த கோபாலகிருஷ்ணனுக்கும்(ஜி.கே, கோகி) நன்றியைச் சொல்லியே ஆகணும்.
எதாவது குற்றம் குறையோ அல்லது தவறான தகவல்களோ இருந்தால் சொல்லுங்க. காரணம் என் கவனக்குறையாகத்தான் இருக்கணும். சொன்னால் திருத்திக் கொள்வேன். அதெல்லாம் சரித்திரத்தைத் திருத்தி எழுதிருவொம்லெ:-))))
அனைவருக்கும் நன்றி & வணக்கம்
Wednesday, June 13, 2007
நியூஸிலாந்து பகுதி 69
Posted by
துளசி கோபால்
at
6/13/2007 10:04:00 AM
21
comments
Labels: காவல்துறை, நியூஸிலாந்து, பொதுவானவை
Monday, June 11, 2007
நியூஸிலாந்து பகுதி 68
அடடே........... நல்ல நாடா இருக்கும்போல! பேசாம வந்து இருந்துறலாமா? தாராளமா வாங்களேன்.
இங்கே வந்து குடியேறவும், விதிகள் 2004 லே இருந்து தளர்த்தப்பட்டு இருக்கு. ஆட்சிக்கு லேபர் வந்தது முதல் 'பாயிண்ட் சிஸ்ட்டம்' கொண்டு வரப்பட்டிருக்கு. படிப்பு, அனுபவம், வயசுன்னு பலதுக்கு ஒவ்வொண்ணுக்கும் ஒரு மதிப்பெண் பாயிண்ட்ஸ் கொடுத்துருக்காங்க. அரசாங்கம் நிர்ணயித்த பாயிண்ட்ஸ் உங்களுக்கு இருந்தால் உங்க நாட்டிலே இருக்கும் நியூஸி ஹை கமிஷனுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். இப்ப எல்லா விவரங்களும் இணையத்துலேயே இருக்கு. உங்க விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இங்கே வந்தபிறகு வேலை தேடிக்க வேண்டியது உங்க சமர்த்து. ஆனா முதல் ரெண்டு வருஷத்துக்கு உதவித் தொகை கிடைக்காது.
இதெல்லாம் சமீபத்துலே மாற்றி அமைச்சது. இதுக்கு முன்னே சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி நிறையப்பேர் ஆதாயம் பார்த்துட்டாங்க. அரசாங்கம் இப்பத்தான் கொஞ்சம் முழிச்சுக்கிட்டது. இன்னும் உலக அரங்கில் நியூஸி 'naive'ன்னுதான் பேரெடுத்திருக்கு. நாங்க வந்த காலக்கட்டத்தில் இங்கே வேலை கிடைச்சால் மட்டுமே குடியேற முடியுமுன்னு இருந்துச்சு. அப்ப வந்தவங்க எல்லாம் வந்த மறுநாளில் இருந்து வேலைக்குப் போனாங்க.அரசாங்கத்துக்கும் சுமையா இல்லாம வரி செலுத்தும் மக்களாவே இருந்தது அந்தக்காலம்......
வரின்னு சொன்னதும் இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. இங்கே எல்லா இடங்களிலும் 'பேய்' வரி அந்தந்த நிர்வாகத்தினராலேயே வசூலிக்கப்பட்டு அரசாங்கத்துக்குப் போயிரும். வரி ஏய்ப்பு என்றதுக்கு இடம் இல்லை. அதென்ன பேய் வரி? நாந்தான் இப்படிச் சொல்றேன். இது 'Pay As You Earn' என்ற வகை. PAYE.
சரியான பேய்தான்:-) வரியை எடுத்துக்கிட்டுத்தான் மிச்சச் சம்பளப்பணம் நம்ம கைக்கு வரும். அதைச் செலவு செய்யும் சமயம் GST ன்னு இன்னும் ஒரு 12.5% பிடுங்கிருவாங்க. பல்லைக் கடிச்சுக்கிட்டு நாலு காசு மிச்சம்பண்ணி வங்கியில் சேமிச்சால்................ அதுக்குக் கிடைக்கும் வட்டியில் 20% வரியாப் போயிரும். welfare state என்ற பெயர் இருக்கறதால் உதவித் தொகைகளுக்குப் பணம் எப்பவும் வேண்டித்தானே இருக்கு?
65 வயசானவுடன், superannuation ன்னு ஓய்வூதியம் தருது அரசு. இன்னிக்குக் கணக்குலே ஒரு ஜோடிக்கு வாரத்துக்கு 511 டாலரும் 40 செண்டும். ரெண்டு வாரத்துக்கொருமுறை உங்க வங்கிக் கணக்குக்குப் பணம் வந்து சேர்ந்துரும். இதுலே தனி மனிதரா இருக்கறவங்களுக்கு, ஜோடியில் ஒருத்தர் மட்டும் 65 வயசானவரா இருத்தல், தனியாவே வசிக்கிறவங்க, தனி மனிதரா இருந்துக்கிட்டு மத்தவங்களோட வீட்டைப் பகிர்ந்து வாழுறவங்கன்னு பலவிதங்களுக்குத் தகுந்தாப்புலே பலவகை ஓய்வூதியம் இருக்கு. இவுங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வரி உண்டு.வருஷக் கடைசியில் அந்த வரிகளில் இருந்து கொஞ்சம் பணம் திருப்பித் தருவாங்க.
முதியோர்கள் எண்ணிக்கை வரவரக் கூடிக்கிட்டே போகுது. மக்களோட ஆயுட்காலம் வேற இப்பெல்லாம் நீடிச்சுக்கிட்டு வருதுல்லையா?அரசாங்கம் 'இனியும் இந்த பாரத்தைத் தாங்க முடியாது. உங்க ஓய்வுக்கு நீங்களே சேமிச்சுக்குங்க' ன்னு சொல்ல ஆரம்பிச்சுருக்காங்க.அந்த வயசை உங்க டீச்சர் எட்டு முன்பு இது அமுலுக்கு வந்தாலும் வந்துரும். எதுக்குமே வரிச் சலுகைன்னு கொடுக்காததால் சேமிப்பு, அதுவும் ஓய்வூதியம் வரும் தொகைக்குண்டான சேமிப்புன்றது ரொம்பக் கஷ்டம்தான்.
விலை மோரில் வெண்ணெய் எடுக்கறவங்களும் இருக்காங்கதான். வேற நாட்டில் இருந்து வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இங்கே பிள்ளைகளோடு சேர்ந்து இருக்கணுமுன்னு 'ரீ யூனியன்'னு சொல்லிக்கிட்டு வந்து, இங்கே தனியா வீடு எடுத்து தங்கிக்கிட்டு இங்கத்து 'சூப்பர்' வாங்கற ஆளுங்களும் இல்லாமலில்லை. அதான் சட்டத்துக்குள்ளெ இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தத் தெரிஞ்சவுங்களும் உண்டுதானே. மொதல்லே விவரம் புரியாம இதுக்கெல்லாம் கூடக் கொடுத்துக்கிட்டு இருந்த அரசாங்கம், இப்பக் கொஞ்சம் முழிச்சுக்கிட்டு குறைஞ்ச பட்சம் எவ்வளவு நாள் இங்கே தங்கி இருந்துருக்கணுமுன்னு சில நிபந்தனைகளை விதிச்சிருக்கு.
முதியோர்களுக்கும், கிடைக்கும் தொகை பலசமயம் போதவில்லைன்னும் இருக்கு. சொந்தமா வீடு இருக்கறவங்களுக்குப் பரவாயில்லை. வாடகை வீட்டில் வசிக்கும் முதியோருக்கு, கிடைக்கும் தொகையில் பாதி வாடகைக்கேப் போயிருது. இங்கே வீட்டு வாடகை, வாரக் கணக்குத்தான். சொந்த வீடு வைத்திருப்போர் அதிகம் உள்ள நாடுகளில் நியூஸியும் ஒண்ணுன்றதாலே 65 வயசுவரை வீடுன்னு ஒண்ணு சொந்தமா வச்சுக்காதவங்க ஒரு 25% இருக்குமாம்.
இதைப்போல்தான் இங்கே பிரசவத்துக்குண்டான செலவுகள் எல்லாமே இலவசமுன்னு இருக்கறதாலே, வெளி நாடுகளில் இருந்து விசிட்டர் விஸாவுலே வந்துட்டு இங்கே குழந்தை பிறந்த பிறகு திரும்பிப் போறவங்களும் இருந்தாங்க. இவுங்களுக்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்ன்னு இலவசத்துக்கு இலவசம், அப்புறம் அந்தக் குழந்தைக்கு இங்கத்துக் குடியுரிமை. இதையும் இப்ப மாற்றி அமைச்சுருக்காங்க. குடியுரிமை இல்லேன்னா, பி.ஆர் இருக்கறவங்களுக்கு மட்டுமே இலவசம். மத்தவங்களுக்கு இல்லைன்னு சொல்லி இருக்கு அரசு. குழந்தை மட்டுமில்லை, இதய அறுவை சிகிச்சைக் கூட இப்படிச் செஞ்சுக்கிட்டுப் போனவங்க இருக்காங்க. இதனாலே மக்கள் செலுத்தும் வரிப்பணம் விரயமாகுது. எல்லாம் ஒரு ஒழுங்கு முறைக்குள்ளெ வரணுமுன்னு மக்கள் விரும்பறாங்க.
இங்கேயுள்ள சுற்றுலாத்துறையும் அருமையான வசதிகள் செஞ்சு வச்சுருக்கு. பனிமலைச் சிகரங்களில் மலை ஏற, இங்குள்ள காடுகளில் சுற்றித்திரியன்னு வரும் பயணிகள், எதாவது ஆபத்துலே மாட்டினாலும் நல்ல முறையில் அவுங்களைத் தேடிக் கண்டுபிடிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்யறாங்க.
'நேஷனல் பார்க்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துன நாடுகளில் நியூஸியும் ஒண்ணு. இங்கே இதுவரை இப்படிப் பதினாலு பார்க்குகள் இருக்கு. மொத்தம் எட்டு மில்லியன் ஹெக்டேர் நிலங்கள். அங்கங்கே தங்கும் இடங்கள், மற்ற வசதிகள் எல்லாம் ரொம்ப நல்லமுறையில் ஒழுங்கு செஞ்சிருக்காங்க. இதைப் பத்தித் தனியா ஒரு பதிவு அப்புறமா எழுதுவேன். காடுகளுக்குள்ளே நுழையும்போது, அங்கிருக்கும் வரவேற்பறை/ தகவல் அலுவலகத்தில் உள்ள ரெஜிஸ்டரில் நீங்க எத்தனை மணிக்கு, இல்லேன்னா எத்தனையாவது நாள் திரும்பறதா உத்தேசமுன்னு எழுதி வச்சுட்டுக் காட்டுக்குள்ளேப் போகணும். அதே போல திரும்ப வந்தவுடன் அதில் வந்துட்டோமுன்னு பதிஞ்சுட்டுப் போகணும். குறிப்பிட்ட நாளில்/நேரத்தில் நீங்க திரும்ப வரலைன்னா, உடனே 'சர்ச் பார்ட்டி' உங்களைத் தேடக் கிளம்பிருவாங்க. இதுலே முக்காலே மூணுவீசம் சர்ச் பார்ட்டி ஆளுங்க தன்னார்வத் தொண்டர்கள்தான்.
நிறைய இடங்களில் இப்படி தன்னார்வத் தொண்டர்கள் பல்வேறு விஷயங்களில் உதவி செய்யறாங்க. இவுங்க இல்லாட்டா அரசாங்கம் தன்னுடைய கடமைகளை ஒழுங்காச் செஞ்சு முடிக்கறதுகூடக் கஷ்டமுன்னு உணர்ந்திருக்கு. வருஷம் ஒருமுறை இந்தத் தொண்டர்களின் பணிக்கு அங்கீகாரம் தெரிவிக்கறதுக்காக அந்தந்தத் துறைகளில் விருந்துக்கு ஏற்பாடு செஞ்சு,அரசு நன்றி தெரிவிக்குது. பொதுவா இங்குள்ள மக்கள் பலர் வாரம் சில மணி நேரங்களைச் சமூகத்தின் நலனுக்குச் செலவளிக்கறதுக்குத் தயாராவே இருக்காங்க. நானும் ஒரு குழந்தைகள் லைப்ரரியில் 12/13 வருசம் வேலை செஞ்சுருக்கேன். அந்தப் பகுதிக்கு சிட்டிக் கவுன்சில் புதுசா ஒரு பெரிய லைப்ரரியைக் கட்டுனதாலே, நம்மளுதை மூட வேண்டி வந்ததால்தான் வேலை போயிருச்சு. புதுசைப் பத்திய விவரம் இங்கே ( இப்ப அதுக்குப் பதிலா பதிவெழுதும் வேலை வந்துருச்சு.....எல்லாம் உங்க போறாத காலம்!)
Posted by
துளசி கோபால்
at
6/11/2007 10:26:00 AM
26
comments
Labels: நியூஸிலாந்து, பொதுவானவை
Friday, June 08, 2007
நியூஸிலாந்து பகுதி 67
மேற்படித் தமிழ்க்குடும்பங்களிலே ஒரு மூணு குடும்பம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். பாக்கியெல்லாம் நம்ம இலங்கைத் தமிழர்கள். இவ்வளவு(!) பேர் இருக்கோமே, நமக்குன்னு ஒரு தமிழ்ச்சங்கம் ஆரம்பிச்சா நல்லதுன்னு முடிவு செஞ்சு, டிசம்பர் மாசம்(1995) சங்கத்தைப் பதிவு செஞ்சோம். இங்கே இந்தமாதிரிக் காரியங்களுக்குக் குறைஞ்சது 15 பேர் இருந்தாவே போதும். சங்கத்தின் முதல் காரியதரிசியா இருந்தது உங்க 'டீச்சர்'தான். சங்கத்தின் முதல் விழாவா 1996 பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டது. சங்கத்தின் முக்கியக் கொள்கை என்னன்னா....... தமிழ் மொழியை வருங்கால சந்ததிக்களுக்குச் சொல்லிக் குடுக்கறது. பண்டிகை நன்னாளில் தமிழ்ப் பள்ளிக்கூடமும் தொடங்கி, இப்பவும் நடந்துக்கிட்டு இருக்கு. மாநகர கவுன்சிலில் இருந்து பள்ளிக்கூடத்துக்கும், சங்கத்தின் சில விழாக்களுக்கும் உதவித் தொகை கிடைக்குது. இந்த சமூகத்தில் தமிழருக்குன்னு ஒரு 'இடம்' உறுதியாச்சு. அப்ப மத்த ஆட்கள்?

இங்கே இந்தியர்கள்னு பார்த்தா இந்தியா, ஃபிஜித் தீவு, சிங்கை, மலேசியா, தெற்கு ஆப்பிரிக்கான்னு பலநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து சேர்ந்துருக்கறதாலே இந்தியர்களுக்குன்னு ஒரு சங்கம் வேணுமுன்னு ஒரு எண்ணம் இருந்துக்கிட்டே இருந்துச்சு. ஏற்கெனவே இங்கே 'கிறைஸ்ட்சர்ச் இண்டியன் அசோஸியேஷன்' என்ற பெயரில் ஒண்ணு நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஆனால் அதுலே 100% அங்கத்தினர்களும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற மாநிலத்துக்காரகளுக்கு அவுங்க சங்கத்தில் இடமில்லைன்னு சொல்லிட்டாங்க. இதனாலே மற்ற இந்தியர்கள் அத்தனை பேருக்கும் கொஞ்சம் மனக்கசப்பு.இதுக்கு எதாவது செய்யணுமுன்னு 1997வது வருசம், 'இண்டியன் கல்ச்சுரல் & சோஸியல் க்ளப்' என்ற பெயரில் நம்ம கோபால் ஒரு அமைப்பைத் தொடங்கினார். 100 குடும்பங்கள் இதில் உடனே அங்கமானாங்க. 'பிரஸிடெண்ட்'ன்னு ஒரு பெத்த பேர் வந்துச்சு. இந்திய சுதந்திர தினத்தின் பொன்விழாவை இந்த அமைப்பில் முதல்விழாவாக் கொண்டாடுனாங்க. இது பத்தாவது வருஷம், அந்த அமைப்புக்கு. ( இப்ப ரெண்டு வருசமா இதோட தலைவர் குஜராத்தி இனத்தைச் சேர்ந்தவர்தான்! )
இதைப்போல் இங்கே நகரில் இருக்கும் 'எத்னிக்' குடும்பங்கள் அவுங்கவுங்களுக்குன்னு ஒரு சங்கம் தொடங்கிட்டு,அவுங்க பின்புலத்தை மறக்காம இருக்காங்க. ஒரு சமயம் 'நகரத் தந்தை'யுடன் பேசிக்கிட்டு இருக்கும்போது 150பல்வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்த அமைப்புகள் இருக்குன்னு சொன்னார். இதில் சமீபத்துலே அதாவது போனவருஷம்(2006)தொடங்குனது, 'தெலுகு அசோஸியேஷன்.

இந்தப் பல்வகை சமூகத்தினர் பயனுக்காக இங்கே அரசாங்கமே ஒரு 'கம்யூனிட்டி ரேடியோ' ஒலிபரப்பு வச்சிருக்கு.ரொம்பக் குறைந்த கட்டணம்தான். வாரம் ஒரு மணி நேரம் இந்த சேவையைப் பயன்படுத்திக்கிட்டு இந்த இந்தியன் சங்கம்ஒலிபரப்பு செய்யுது. இதில் நம்ம சமூகத்துக்குத் தெரிவிக்கும் தகவல்கள், பாட்டு, பேட்டி, சமையல் குறிப்புன்னு ஒலிபரப்பறோம். அவுங்களே நமக்கு இலவசப் பயிற்சி தருவாங்க. நானும் ஆரம்பத்தில் சில வருஷங்கள் இந்த ரேடியோ ப்ரோக்ராம் நடத்திக்கிட்டு இருந்தேன். (Best presenter award ம் கிடைச்சது. இருக்கற பத்து பதினைஞ்சுலே இதுக்கு அப்படி என்ன சிறப்பு? ஆனாலும் மகிழ்ச்சியாத்தான் இருந்துச்சு) என்னுடைய நாட்களில் வழக்கமான ஹிந்திப்பாட்டுக்களுடன், தென்னிந்திய சினிமாக்களின் பாடல்களையும் சேர்த்துக்குவேன். இந்தியான்னா ஹிந்தி மட்டுமா என்ன? இது முழுக்க முழுக்க தன்னார்வத் தொண்டர்களால்தான் நடக்குது. இப்ப இங்கே இருக்கும்மற்ற அமைப்புகள் இந்த சேவையை நல்ல முறையில் பயன்படுத்தறாங்க. வாரம் நாலு நாள் இந்தியன் நிகழ்ச்சிகள் உண்டு. இன்னும் தமிழ்ச் சேவை தொடங்கலை.
இதுக்கு நடுவிலே இந்தியத் திரைப்படங்களுக்கு பாடல் காட்சிகள் சுட்டுத்தள்ள நியூஸிக்கு வர ஆரம்பிச்சாங்க. எப்பவும் ஐரோப்பாவுக்கே போகும் கூட்டம் இந்தப் பக்கம் வந்தது எங்களுக்கும் மகிழ்ச்சியாத்தான் இருந்துச்சு. இயற்கைக் காட்சிகள்தான் இங்கே அள்ள அள்ளக் குறையாமக் கொட்டிக் கிடக்குதே. 'பாலிவுட்' என்ற வார்த்தை இங்கே உள்ள வெள்ளைக்காரர்களுக்கு ரொம்பப் பழக்கமாயிருச்சு. அதிலேயும் ஒரு ஹிந்திப்படம், (1999 களில் இங்கே வந்து எடுத்தது) 'கஹோ நா ப்யார் ஹை' இந்தியாவில் நியூஸியின் அழகை விளம்பரப்படுத்திச்சு. அதுக்கப்புறம் 'சரமழை' போல தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்னு எல்லா தென்னிந்திய மொழிப் படத் தயாரிப்பாளர்களும் அவுங்கவுங்க பங்குக்கு, இருந்த அழகையெல்லாம் அள்ளிக்கிட்டுப் போனாங்க.

2003 வருஷம் இந்த நாட்டின் ஜனத்தொகை 40 லட்சத்தைத் தொட்டுச்சு. இன்னிக்குக் கணக்குக்குப் பார்த்தா 41,82022.
2002, 2005 தேர்தல்களிலும் லேபரே ஜெயிச்சதாலே அவ்வளவா மாற்றங்கள்னு இல்லாம ஒரே நிலைப்பாட்டில்தான் நாடு போய்க்கிட்டு இருக்கு. மாற்றங்கள்னு சொன்னால் இந்த அரசியல் கட்சி கூட்டுகள்தான். 2005 வது வருஷம் பொதுத்தேர்தல் வரும்போது வேலை இல்லாத் திண்டாட்டம் 'வரலாறு' காணாத அளவில் குறைஞ்சிருந்துச்சு.

Posted by
துளசி கோபால்
at
6/08/2007 09:43:00 AM
18
comments
Labels: திரைப்படம், நியூஸிலாந்து, பொதுவானவை
Wednesday, June 06, 2007
நியூஸிலாந்து பகுதி 66
படிக்கும் மாணவர்களுக்குக் கொடுக்கற கடனுக்கான வட்டியைக் குறைச்சாங்க. இது இப்பப் புதுசாச் சேர்ந்த மாணவர்களுக்குதான். ஆனா 2001 வருசத்துக்கு முன்னாலே வாங்குனவங்க அப்ப இருந்த வட்டியைக் கட்டணுமுன்னும் சொன்னாங்க. அதுசரி, படிச்சு முடிச்ச பிறகு தானே? அப்பப் பார்த்துக்கலாம்........... கடனில்லாத மாணவனைப் பார்க்கறது இங்கே அபூர்வம்.
அதுவுமில்லாம, இங்கேதான் படிக்கற வயசுன்னு ஒண்ணும் இல்லையே. யாரு வேணா எப்ப வேணாப் படிக்கலாம்.ரிட்டயர் ஆனபிறகு படிக்கிறேன்னு கடன் வாங்கிக்கிட்டுப் படிச்சவங்க பலர் இருக்காங்க. இவுங்க எப்பப் படிச்சு முடிச்சு,அப்புறம் எப்ப( எப்படி?) வேலைக்குப் போய்க் கடனைக் கட்டுவாங்க? எல்லாம் காந்திக் கணக்குதான்.
2002 தேர்தலில் ஓட்டுப்பதிவு கூட குறைஞ்சு போச்சு. வழக்கமா 89% ஓட்டுப்போடும் மக்கள்ஸ், இந்த முறை 77% பதிவுதான் செஞ்சிருந்தாங்க. 'எப்படியோ போங்க'ன்ற மனப்பான்மை வந்துருச்சோ என்னவோ! நேஷனல் கட்சிக்கு 27 இடம்தான்.லேபருக்கு 52. பாராளுமன்றத்துலே மொத்தம் 121 இடங்களாச்சே. அதனாலே 61 இருந்தாத்தானே 'அரியணை' ஏற முடியும்?என்ன செஞ்சிருப்பாங்கன்றீங்க? மறுபடி கூட்டோ கூட்டு.

'மருத்துவப் பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கலை. ஆஸ்பத்திரிகளில் போனா அதி முக்கிய அறுவை சிகிச்சைத் தவிர,பல்வேறு விதமான அறுவை சிகிச்சைகளுக்கு வெயிட்டிங் லிஸ்ட் என்னும் காத்திருப்பு கூடுதலா இருக்கு. நோயாளிகளோட வரிசை ரொம்ப மெதுவா இருக்கு. அவுங்கவுங்க முறை வர்றதுக்குள்ளே ஆளே போயிருவாங்க'ன்னு கூக்குரல் எழுந்தது.போதுமான மருத்துவத்துறை ஆட்கள் இல்லைன்றதும் ஒரு முக்கிய காரணமா இருந்துச்சு. செவிலிகள் பற்றாக்குறை வேற.இங்கே செவிலியர் படிப்பு முடிஞ்சவுங்களுக்கு, அண்டை நாடான ஆஸ்தராலியாவில் வேலை சுலபமா அதிக சம்பளத்தோடக் கிடைச்சது. மேலும் நியூஸிகளுக்கு ஆஸிக்குப் போகவும், அங்கே வேலை செய்யவும் தடை ஏதும் இல்லை.விஸான்னு எதுவும் வாங்கவும் வேணாம். கூடக் காசுன்னதும் மக்கள்ஸ் போகாம இருப்பாங்களா? மேலும் பிரிட்டனிலும் வேலைவாய்ப்பு இந்தத் துறையில் ஏராளம்.
இப்பத்து அரசாங்கம் இதுக்கு எதாவது வழி செய்யணுமுன்னு மத்த நாட்டுச் செவிலியர்களுக்கு இங்கே வேலைக்கானஅனுமதி கொடுக்கும் விதிகளைக் கொஞ்சம் தளர்த்துச்சு. இதைப் பயன்படுத்திக்கிட்டு, நம்ம கேரள நாட்டுச் செவிலியர்கள் நிறையப்பேர் வந்து இப்போ இங்கே வேலை செய்யறாங்க. டாக்டர்கள் விஷயம்தான் இன்னும் ஒரு முடிவுக்கு வரலை(-:
டாக்டர்கள் இங்கே வந்து வேலை செய்யணுமுன்னா மட்டும் ஆயிரம் கண்டிஷன்கள். அவுங்களை மீண்டும் தேர்வு எழுதவச்சே முக்காவாசிப்பேரை உண்டு இல்லைன்னு ஆக்கிருவாங்க. அதுவும் மூணு முறைக்கு மேலே தேர்வுஎழுத அனுமதி இல்லை. ரெண்டு முறை தேர்வில் தோத்துப்போய், மூணாவதுக்குப் பயந்துக்கிட்டு வேற எதாவது வேலை செய்யப் போயிரும் டாக்டர்களையும் நாங்க சந்திச்சு இருக்கோம். டாக்ஸி ஓட்டியாக்கூட வேலை செய்யறாங்க. பேசாம அவுங்க நாட்டுலேயே இருந்திருக்கலாம். படிச்ச படிப்பு ஏத்த மரியாதையாவது மிச்சமாயிருக்குமுன்னு நான் புலம்புவேன்.
இங்கே எல்லாருக்கும் ஒரு குடும்ப டாக்டர் இருக்கணுமுன்னு ஒரு ஏற்பாடு இருக்கு. எல்லாப் பகுதிகளிலும், G.P. ன்னு சொல்லும் ஜெனரல் ப்ராக்டிஷனர்ஸ் சிலர் சேர்ந்து மருத்துவ மனை வச்சுருப்பாங்க. படுக்கை வசதிகள் எல்லாம் இல்லை. பகல் நேரம் காலை 9 முதல் மாலை 5.30 வரை டாக்டரைப் பார்க்கும் க்ளினிக்தான். இங்கே மருத்துவர்கள் மனம்போனபடி ஃபீஸ் வாங்க முடியாது. அரசு நிர்ணயிக்கும் தொகைதான். இதுலே மக்கள்ஸ் வருமானம் அனுசரிச்சு குறைச்சலாவோ,கூடுதலாவோ வாங்குவாங்க. உதாரணத்துக்கு ஒரு நோயாளிக்கு 100 டாலர்ன்னு அரசு சொன்னா, வருஷத்துக்கு 36,000 வருமானம் இருக்கறவங்ககிட்டே 50 வாங்குவாங்க. 16 வயசுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, அரசாங்க உதவி வாங்கறவங்களுக்கு, குறைஞ்ச வருமானம் உள்ளவங்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்குன்னு இன்னும் குறைச்சலா வாங்குவாங்க. இதுலே துண்டு விழும் காசு அரசு, மருத்துவர்களுக்குக் கொடுத்துரும்.
கொஞ்சம் வயது போனவர்கள் டாக்டர் செலவைப் பார்த்துப் பயந்து, தங்கள் உடல்நிலையில் அக்கறை காட்டலைன்னு செய்தி வர ஆரம்பிச்சது. இது ஆபத்தாச்சே. ரொம்ப மோசமான நிலைக்குப் போயிட்டா அரசாங்கம்தானே கவனிக்கணும்? முன்னெச்சரிக்கையா இருக்கலாமுன்னு லேபர் ஆட்சியில் இதைக் கொஞ்சம் குறைச்சாங்க. 50 வயசுக்குமேலே இருக்கறவங்களுக்கு யாரா இருந்தாலும் இருந்தாலும் குறைவான காசுதான். இன்னிக்குக் கணக்குக்கு ஒரு தடவை டாக்டரைப் பார்க்க 28 $ கொடுத்தாப் போதும்.
மருத்துவர் எழுதிக்கொடுக்கும் மருந்தை வாங்கிக்க மருந்துக் கடைகளில் போனா, அங்கேயும் ஒரு சில மருந்துகளைத் தவிர மத்த மருந்துகளுக்கு அரசு மானியம் கிடைக்கும். இதை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துனதாலே மக்களுக்கு மருந்துச் செலவு குறைஞ்சது.
மருத்துவக் காப்பீடு எடுத்துக்கிட்டோமுன்னாதான் நல்லது. ஆனாலும் தனியார் ஆஸ்பத்திரிகள் இல்லாததால் எதுக்கெடுத்தாலும் அரசாங்க மருத்துவ மனைகளையே நம்பி இருக்கணும். இப்ப ஒரு பதினைஞ்சு வருஷமா ஹெல்த் இன்ஷூரன்ஸ் கம்பெனியே முக்கிய நகரங்களில் மருத்துவ மனைகளைத் திறந்திருக்கு. காப்பீடு இல்லாம உள்ளே கால் வைக்கமுடியாது. ஆர்கனைஸ்டு சர்ஜரிகள் மட்டும் இங்கே நடத்துறாங்க. அரசாங்க ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் மட்டுமே இங்கேயும் அறுவை சிகிச்சை செய்ய முடியும். இதுக்கும் நம்ம குடும்ப மருத்துவர்கள் மூலமாத்தான் போகணும்.
இங்கே உள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கெல்லாம் போனா நாம் காசு எதுவுமே கொடுக்க வேணாம். அரசாங்கமே பார்த்துக்கும். ரத்தப் பரிசோதனைக்கெல்லாம் குடும்ப டாக்டர் பரிந்துரைக்கணும். ரிஸல்ட்டும் அவுங்களுக்குத்தான் போகும். எக்ஸ்ரே, MRI இதெல்லாமும் காத்திருக்கக் கூடிய வகைன்னா அரசாங்க மருத்துவ மனையிலேயே இலவசமா செஞ்சுக்கலாம். நமக்குக் காப்பீடு இருக்குன்னா, இதுக்குண்டான தனியார் நிலையங்களில் செஞ்சுக்கலாம்.
டாக்டர் எழுதிக்கொடுக்கும் மருந்துகளை நீண்டகாலம் எடுக்கணுமுன்னா மூணு மாசத்து சப்ளை கிடைக்கும். அதுவுமேஒரு மாசத்துக்குண்டான மருத்தைக் கொடுத்துட்டு அது முடியும் சமயம் இன்னொரு மாசத்துக்குன்னு கொடுப்பாங்க.மருந்துக் கடைகளுக்குத்தான் இந்தப் பொறுப்பு. முதல் மாசத்துக்கு வாங்கும் சமயம் காசு கொடுக்கறதோட சரி. அதுக்கப்புறம் அடுத்த ரெண்டு மாச சப்ளைக்குக் காசு கொடுக்க வேணாம்.
மருந்துப்பேரைத் தெரிஞ்சு வச்சுக்கிட்டு, அப்படியே போய் கடையில் வாங்கிக்கறதெல்லாம் இங்கே முடியாது. தலைவலி மாத்திரைதான் இப்படிக் கிடைக்கும். கை வைத்தியமா ஆண்ட்டிபயாடிக் வாங்கித் தின்னுற கதையெல்லாம் போச்சு.எதுவும் மருத்துவர் சொல்லாமக் கிடைக்காது. பொதுவாவே இங்கே மருந்துக்களை அவ்வளவாப் பரிந்துரைக்கவே மாட்டாங்க இந்த மருத்துவர்கள். நமக்குத்தான் டாக்டர் க்ளீனிக்போயிட்டு, வெறுங்கையா வர்றது என்னவோ போலிருக்கும்:-)))))) முழ நீள மருந்துச்சீட்டுக்குப் பழக்கப்பட்டவங்களாச்சே நாம். அப்புறம் 'டானிக்' எழுதி வாங்கிக்கறது? மூச்...பேசப்படாது ஆமாம்.
50 வயசுக்கு மேலே இருக்கும் பெண்களுக்கு மார்பகப்புற்று நோய் பரிசோதனை (மம்மோகிராம்) ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை முற்றிலும் இலவசமாக்கினாங்க.....வரப்பிரசாதமுன்னே சொல்லலாம். பலருக்கும் பயனா இருக்கு.
பிரசவத்துக்குத் தாய்மாருக்குக் கொடுக்கும் லீவையும் அதிகப்படுத்துனாங்க. பிரசவ சமயத்துலே குழந்தையோட அப்பாவுக்கும் 2 வாரம் லீவு சம்பளத்தோடு கிடைக்கும். குழந்தை வளர்ப்பில் ரெண்டு பேருக்கும் பங்கு இருக்கணுமில்லையா?அதுக்கப்புறமும், இன்னும் லீவு வேணுமுன்னா ஒரு வருஷம்வரை சம்பளமில்லாம லீவு தாயோ, தகப்பனோ எடுத்துக்கலாம். அவுங்க வேலைக்கு ஆபத்து இல்லை. அப்புறம் போய்ச் சேர்ந்துக்கலாம். 'பார்ட்னர்ஸ் ' எல்லாரும் தனிக் குடித்தனமாவே இருக்கறதாலே இதெல்லாம் ரொம்ப உதவியாத்தான் இருக்கு.
Posted by
துளசி கோபால்
at
6/06/2007 09:25:00 AM
22
comments
Labels: நியூஸிலாந்து, பிரதமர், பொதுவானவை
Monday, June 04, 2007
நியூஸிலாந்து பகுதி 65
இந்த முறையும் முழுமையான மெஜாரிட்டி இல்லை. மறுபடியும் 'கூட்டு'தான். லேபருக்கு, லிஸ்ட் ஸீட்( கேக்)உள்பட 49 கிடைச்சது. இன்னும் குறைஞ்சது 12 வேணும். நேஷனலுக்குக் கிடைச்சது எல்லாம் சேர்த்து 39. அவுங்களுக்கு இன்னும் 22 வேணும். மறுபடி 'பேச்சு வார்த்தைகள்' தொடங்குச்சு.

2000 வருசம் பிறக்கறதையொட்டி உலகநாடுகள் கவனம் எல்லாமே நியூஸி பக்கம் திரும்புச்சு. காரணம்? இதுசரியா 'டேட் லைன்'லே இருக்கற நாடாச்சே! ஒரு புதுநாள் ஆரம்பிக்கிறப்ப முதல் சூரியன் இங்கேதான் உதிக்கும்.Y2K ன்னு ஒரே பேச்சா இருந்தது உங்களுக்கெல்லாம் நினைவு இருக்குல்லே? 2000 வருஷம் பிறந்தவுடனே கணினிகள் செயல்படாதுன்னு ஒரே கசமுசா. அது உண்மையா இல்லே வதந்தியான்னு யாருக்குமே தெரியாது. கணினி போச்சுன்னா,நாடே செயல்படாது. அப்படி எதாச்சும் ஆச்சுன்னா, அவசர நிலமையில் என்னென்ன செய்யணுமோ அதைக் கடைப்பிடிக்கணுமுன்னுச் சொன்னாங்க. கையில் நாலு டாலராவது இல்லேன்னா எப்படி? அதான் ATM எதுவுமே வேலை செய்யாதே.கையிலே காசு இருந்தாலும், சூப்பர் மார்கெட்லே 'டில்' வேலை செய்யாது. எல்லாமே கணினியோட இணைச்சு வச்சுருக்குல்லே! இன்னும் ச்சின்ன தெருமுக்குக் கடைகள் இந்த அளவுக்கு வரலை. பார் கோடை ஸ்கேன் செய்யாம விலையை மட்டும் டில் லில் போட்டுச் சாமான் வாங்கலாம். நல்ல காலமுன்னு சொல்லணும்:-) ஆனா.........விலை கூடுதல்தான். தேவைன்னு வந்துட்டா? 'கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை'ன்னு இருக்க முடியாதேன்னு முன் ஜாக்கிரதையா கொஞ்சம் காசு, இன்னும் சாப்பாட்டுச் சாமான்கள், முக்கியமா குடிதண்ணீர் எல்லாம் டெலிஃபோன் புத்தகப் பின்னட்டையில் சொன்னதெல்லாம் எடுத்து வச்சுக்கிட்டோம்.
அதென்ன பின்னட்டை, டெலிபோன் புத்தகம்? அவசர நிலமையில் அதாவது வெள்ளம், பூகம்பம், புயல்ன்னு இயற்கைச் சீற்றம் ஏற்பட்டா அரசு நெருக்கடி நிலை அறிவிப்பாங்கல்லே?அப்ப முன்னேற்பாடா என்னென்ன செய்யணும், எந்தெந்த இடங்கள் சிவில் டிஃபென்ஸ்க்கு இருக்குன்னு அந்தப் பின்னட்டையில் விவரம் இருக்கும். அநேகமா அந்த வட்டாரத்துலே இருக்கற பள்ளிக்கூடங்கள்தான் இதுக்குன்னு பயன் படுத்துவாங்க. போன் வச்சிருக்கமோ இல்லையோ, இந்த டெலிபோன் டைரக்டரி மட்டும் நாட்டில் ஒரு வீடு விடாம எல்லா வீட்டுக்கும் வருஷம் ஒரு தடவை விநியோகம் உண்டு. போன் புத்தகம், வெள்ளைப் பக்கம்,மஞ்சள் பக்கம் ( இது 'அந்த' மஞ்சள் இல்லை) ரெண்டும் ஒரு பையில் போட்டு வீட்டு வாசலில் வச்சுட்டுப் போயிருவாங்க. புதுப்புத்தகம் வந்ததும் போன வருசப் பழசை அதே பையில் திருப்பி வச்சுட்டு, அந்தப் பையை வாராவாரம் குப்பைசேகரிப்பு வண்டி வரும் நாள் வெளியே வச்சுட்டா அதை எடுத்துக்கிட்டுப் போயிருவாங்க. பழைய பேப்பர்கள், தினசரி நம்ம தபால் பெட்டியில் வரும் ஜங்க் பேப்பர்கள் எல்லாம் இப்படி மறுசுழற்சிக்குப் போயிரும்.
உலகநாடுகள் எல்லாத்தையும் போலவே இங்கேயும் குப்பை ரொம்ப பிரச்சனைதான். இப்ப நாலைஞ்சு வருஷமா,ரீ சைக்கிள் கூடைன்னு ஒண்ணு நகராட்சி எல்லா வீட்டுக்கும் கொடுத்துருக்கு. அதுலெ இந்தப் பேப்பர்கள்,பால், ஜூஸ் வர்ற ப்ளாஸ்டிக் பாட்டில்கள், உணவுப்பொருட்கள் வர்ற டின்கள், இன்னும் முக்கியமா பூனை, நாய் வச்சிருக்கும் வீடுகளில் அதுங்களுக்கு சாப்பாடு வர்ற டின்கள்( குறைஞ்சது வீட்டுக்கு ஒரு பூனை நிச்சயம்) இதெல்லாம்வச்சுட்டா அதை ரீ சைக்கிளுக்குக் கொண்டு போயிருவாங்க. நம்மூட்டுலே நிறைய குப்பை சேருதுன்னா இன்னும் ஒண்ணோ ரெண்டோ கூடைகள் வேணுமுன்னு நகராட்சிகிட்டே கேட்டு வாங்கிக்கலாம். இலவசம்தான். எப்படியாவது குப்பைகள் ஒழிஞ்சாச் சரிதானே எல்லாருக்கும்.
பாருங்க, என்னவோ சொல்ல வந்து எங்கியோ போயிட்டேன். புது வருசம் 2000 பிறந்து, நல்லவேளை ஒண்ணும் ஆகலை.மத்த நாடுகளும் அப்பாடான்னு பெருமூச்சு விட்டுச்சு. இது மட்டுமில்லை உலக அளவுலே எது வெளியிட்டாலும்,அது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், விஸ்டா, இல்லே வீடியோ கேம்ன்னு எதுன்னாலும் முதல் விற்பனை நியூஸியில்தான்.
எந்தப் பண்டிகைன்னாலும் ஊர் உலகத்துக்கு முந்தி நாங்க கொண்டாடிருவொம்லெ:-) உலகின் முதலா இருக்க இப்படியும் ஒரு வழி இருக்கு:-)
'தம்பா' என்ற கப்பலில் உயிர் தப்பி வந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் ஆஸ்த்ராலியா அருகில் கடலில்தவிச்சப்ப, ஆஸ்தராலியா அரசாங்கம் அவுங்களை அகதிகளா ஏத்துக்க மறுத்துருச்சு. அப்ப அந்த அகதிகளுக்குஇடம் கொடுத்தது நியூஸி அரசுதான். மொத்தம் 76 பேர். மூழ்கிக்கிட்டு இருந்த இந்தோநேஷியன் படகில் இருந்து காப்பாத்தப்பட்டவங்க இவுங்க. 2001 -ல் நடந்த இந்த சம்பவம் உலகநாடுகளில் அப்ப கவனிக்கப்பட்டுச்சாம்.
அகதிகளுக்கு அப்ப அரசாங்கம் 'வாரி வழங்குனது' பலருக்கு அதிருப்தியைத் தந்துச்சு. அரசாங்க வீடுகள், வாராவாரம் தரும் உதவித் தொகை, குறைந்த செலவில் மருத்துவக் கட்டணம், இன்னும் மற்ற வசதிகள் எல்லாம் செஞ்சு கொடுத்து,கூடவே ஒரு குடும்பத்துக்கு 20,000 டாலர்கள் காசும் கொடுத்தாங்க. அவுங்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தரவும் அநேக தன்னார்வத்தொண்டு ஆர்வலர்கள் முன்வந்தாங்க. இது இல்லாம பொது மக்கள் நிறைய வீட்டுப்பொருட்களைப் புதுசா வாங்கி அவுங்களுக்குக் கொடுத்தாங்க. எல்லாம் நல்ல விஷயங்கள்தான்.
வாழ வசதி செஞ்சு கொடுத்தது போதாதா? இங்கேயே எவ்வளவோ ஏழைகள் இருக்கும்போது இது போல மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்குனது சரியில்லை என்றது அவுங்க எண்ணம். அதுக்கேத்த மாதிரி, பல அகதிகளும்ஆடம்பர வாழ்க்கையைத் தொடங்குனாங்க. அகதிகள்ன்னு சொன்னா எல்லா நாட்டு அகதிகளையும் ஒண்ணுபோல நடத்தவேணாமா? தம்பா அகதிகள் ஸ்பெஷலா இருந்தாங்க. ஒரு வேளை 'ஆஸ்தராலியா வேணாமுன்னு சொன்னவங்களுக்கு நாங்க எப்படி நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுத்தோமு'ன்னு உலகத்துக்குக் காட்டிக்கிற ஆர்வமோ என்னவோ?
Posted by
துளசி கோபால்
at
6/04/2007 10:23:00 AM
19
comments
Labels: நியூஸிலாந்து, பொதுவானவை
Friday, June 01, 2007
நியூஸிலாந்து பகுதி 64

மவொரி, வெள்ளையர்கள் கலப்பினத்தைச் சேர்ந்த ஜ்யார்ஜ் என்றவர் தனக்குப் பதினேழு வயசானப்ப ( 1974), தான் ஆண் உடலில் இருக்கும் பெண் என்ற உண்மையைக் கண்டுக்கிட்டார். அதுக்கப்புறம் ஆஸ்தராலியாவுக்குப்போய் ஜ்யார்ஜீனாஎன்ற பெயரில் சிகப்பு விளக்குப் பகுதிகளின் இரவு விடுதிகளில் நடனம் ஆடிக்கிட்டு இருந்தார். அப்ப சிலரால் வன்புணரப்பட்டு, ரொம்ப பாதிப்பை அடைஞ்சுட்டு இங்கே நியூஸிக்கே திரும்ப வந்துட்டார். இங்கேயும் இரவு விடுதிகளில் நடனம் ஆடிக்கிட்டு இருந்து அப்புறம் நடிப்புத் தொழிலில் போகலாமுன்னு அதுக்காக முயற்சி செஞ்சு சில நாடகங்களில் நடிச்சார். கூடவே ரேடியோ ஹோஸ்டாவும் இருந்து டாக்(talk) ஷோ நடத்துனார். இதெல்லாம் நடந்து பத்து வருசங்கள் கழிச்சு 1984 லே அறுவை சிகிச்சை(sexual reassignment surgery)செஞ்சுக்கிட்டு முழுப்பெண்ணாவே மாறிட்டாங்க.
அவுங்க இருந்த ஊரான கார்ட்டெர்டன் (Carterton)லே பள்ளிக்கூடத்து 'போர்ட் ஆஃப் ட்ரஸ்ட்டீஸ்' தேர்தலில் ஜெயிச்சாங்க. அரசியல் ஆர்வம் வந்துருச்சு. 1995 லே அந்த ஊருக்கான மேயர் தேர்தலில் நின்னு ஜெயிச்சு, உலகின் முதல் & நியூஸியின் முதல் transsexual மேயர் ஆனாங்க.
இங்கே அநேகமா எல்லா ஊர்களுக்கும் ஒரு மேயர் இருப்பாங்க.( நம்மூர் பஞ்சாயத்து மாதிரியா?) அதிலும் பெண் மேயர்கள் ரொம்ப அதிகம்தான். (மேயராவே இருக்கணும். இருந்தா மேயராத்தான் இருப்பேன்னு சொல்லிக்கிட்டு அதேபோல மேயராவும் ஒருத்தர் இருந்துக்கிட்டு இருக்கார். அவரைப் பத்தி முந்தி ஒரு சமயம் எழுதுனது இங்கே)
ஜ்யார்ஜினா 1999 தேர்தலில் லேபர் சார்பா நின்னு ஜெயிச்சு பாராளுமன்ற அங்கத்தினர் ஆனாங்க. உலகின் முதல் 'திருநங்கை' எம்.பி. இவுங்க என்ற பெருமையும் கிடைச்சது. 'ஓரினச் சேர்க்கையாளர்கள் சட்டப்படித் திருமணம் செஞ்சுக்க அங்கீகாரம் வேணும். அவுங்களுக்கு தனிமனித உரிமைப்படி எல்லா உரிமைகளையும் கொடுக்கணுமு'ன்னு இவுங்க அரசாங்கத்துகிட்டே வலியுறுத்துனாங்க. ஏற்கெனவே 1986லேயே ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சமூகத்தில் வெளிப்படையாக அங்கீகாரம் உண்டு என்ற சட்டம் வந்தாலும் மக்கள் முழுமனசோட அதை ஏத்துக்கலைன்னு இவுங்க நினைச்சாங்க.
இந்த சமயத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் நடத்துன ஒரு ஊர்வலத்தில்(Hero Parade) கலந்துக்கிட்டாங்க நம்ம ஜென்னி ஷிப்லி. இதுவரை நேஷனல் கட்சித்தலைவர்கள் யாருமே செய்யத் துணியாத ஒரு காரியம். இன்னும் சொல்லப்போனா பிரதமர் என்ற பதவியில் உள்ள யாருமே இதுவரை இப்படி ஒரு ஊர்வலத்தில் பங்கேற்றதே இல்லை. நேஷனல் கட்சி இன்னும் பழைய பஞ்சாங்கமா இருக்கவேணாமுன்னு செஞ்ச புரட்சியோ புரட்சி இது.
அப்ப 1998லே இருந்த கலாச்சார மந்திரி 'மரீ ஹேஸ்லர்', நியூஸிக்கொடியை வேற மாதிரி மாத்தணுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இதுக்கு(ம்) ஆதரவு தெரிவிச்சாங்க ஷெப்லி. உடனே கொடியை எப்படி புதுசா வடிவமைக்கலாமுன்னு மக்களிடத்தில் கேட்கவும் செஞ்சாங்க. பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் எல்லாம்கூட இந்த ப்ராஜெக்டில் கலந்துகிட்டு வரைஞ்சு தள்ளுச்சுங்க. அதுலே இருக்கும் யூனியன் ஜாக் வேணுமா வேணாமான்னு அங்கங்கே அறிக்கைகள், கருத்துக்கணிப்புகள் எல்லாம் வந்துச்சுதான். இன்னும் முடிவாத் தீர்மானம் ஆகலை. இப்ப இருக்கும் கொடியும் 1869 முதல் புழக்கத்தில் இருக்கு.



இப்ப இருக்கும் நியூஸிக் கொடியும், ஆஸிக் கொடியும் சட்னு பார்த்தா ஒண்ணுபோலவே இருக்கு. அதனாலெ குழப்பம் ஏற்படுது(!), (இது என்னவோ உண்மைதான். ஆஸியிலே அஞ்சு நட்சத்திரம்! ஒரு பெரிய நட்சத்திரம் இடதுபக்கம் கீழே இருக்கு)மவொரிகளின் கலாச்சாரத்தைக் கொடியில் 'கோடி' காட்டலை, இங்கிலாந்தின் காலனியா இருந்தோமுன்னுஇன்னும் யூனியன் ஜாக் நினைவூட்டிக்கிட்டே இருக்குது, அதைப் பார்த்ததும் மனசில் தேசிய உணர்வு எழும்பலை. அதனால் கொடியை மாத்தியே தீரணுங்கறது ஒரு கூட்டத்தின் எண்ணம்.
இன்னொரு கூட்டம், 'கூடவே கூடாது........யார் சொன்னா தேசிய உணர்வை எழுப்பலைன்னு? நியூஸிலாந்து மக்கள் தேர்ந்தெடுத்த கொடி இது 104 வருசமா இருக்கு.இந்தக் கொடியின்கீழ் உலக யுத்தங்களில் கலந்துக்கிட்டுப் போராடி வீரமரணம் அடைஞ்சவங்களுக்கு மரியாதை தரும் நிமித்தம் இதே வடிவம்தான் இருக்கணும். எவ்வளவு அழகா நம்ம தென் வானத்தில் இருக்கும் சதர்ன் க்ராஸ் கொடியில் அமைஞ்சிருக்கு. அதுவும் அஞ்சு முனை நட்சத்திரம்! இந்த நட்சத்திரம் வழிகாட்டித்தானே ஆதிகாலத்தில் இங்கே வந்தார் கேப்டன் குக். இந்த நாட்டின் சரித்திரத்தைச் சொல்லும் விதமா அதுலே யூனியன் ஜாக் இருக்கறது பொருத்தம்தான்'னுசொல்றாங்க.
சரி. பொது மக்கள் இப்ப என்னதான் நினைக்கறாங்கன்னு ஒரு ரெஃபரண்டம் நடத்திடலாமுன்னு நினைச்சா அதுக்குக் குறைந்த பட்சமா 10 % வாக்காளர்கள் மனுவில் கையெழுத்துப் போடணும். இங்கே எந்த ஒரு விஷயத்துக்கும்இது பொருந்தும். இந்தக் கொடி விஷயத்தில் ஒரு லட்சம் பேர்தான் (2005 தேர்தல் சமயம்)கையெழுத்துப் போட்டுருந்தாங்க.அந்த வருஷம் பதிவு செஞ்சிருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,847,396. அதனாலே ரெஃபரண்டத்துக்கே ஆதரவில்லைன்னு கைவிடவேண்டியதாப் போச்சு. பார்க்கலாம் அடுத்த தேர்தல் சமயத்தில் போதுமான கையெழுத்தைச் சேர்க்க முடியுதான்னு.


Posted by
துளசி கோபால்
at
6/01/2007 09:12:00 AM
15
comments
Labels: கொடி, நியூஸிலாந்து, பொதுவானவை
Wednesday, May 30, 2007
நியூஸிலாந்து பகுதி 63

எதிர்க்கட்சித் தலைவியா இருந்த ஹெலன் க்ளார்க்குக்கு பெரிய இடி! ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள் தாந்தான் முதல் பெண் பிரதமரா ஆகப்போறொமுன்னு இருந்தாங்களே. சட்டசபையில் எதிரும் புதிருமா ரெண்டு பெண்கள்.இந்தக் கணக்குலே பார்த்தால் இதுவும் உலகில் முதல்முறைதானே?
இந்த மந்திரி சபைக்கு இன்னும் ரெண்டு வருசம் ஆயுள் இருக்கு.
சமையலில் குழம்பு தாக்குப் பிடிக்கிற மாதிரி கூட்டு இருக்காதுல்லே? சீக்கிரமாக் கெட்டுரும்தானே? அதே கதைதான் இந்த அரசியல் கூட்டுலேயும். உள்ளுக்குள்ளெ புகைய ஆரம்பிச்சது. இந்த அழகுலே போனா, வரப்போற தேர்தலில் நம்ம கட்சி நிலைக்கறது கஷ்டமுன்னு நியூஸி ஃபர்ஸ்ட்க்குத் தோணிருச்சு. இதே தோணல் பிரதமருக்கும். கூட்டோட ஸ்ட்ரெஸ் தாங்க முடியலை. இப்பப் பார்த்து ஆக்லாந்து பன்னாட்டு விமான நிலையத்தைத் தனியாருக்கு வித்தாங்க. இதனால் கூட்டுலே பிரதமருக்கும் உதவிப் பிரதமருக்கும் ஏகப்பட்ட கருத்து வேற்றுமை. முடிவு? உதவிப் பிரதமர் பதவிக்கு(ம்) ஆப்பு. பதவி பறிபோனாலும் கூடவே இருக்கணுமுன்னு தலையெழுத்தா என்ன? கொஞ்ச நாளில் வின்ஸ்டன் பீட்டர், கூட்டுக்குக் கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கிக்கிட்டார். அவர் மட்டும்தான் வாபஸ். அவர் கட்சியில் இருந்த மத்தவங்க எல்லாரும் அல்வாக் கிண்டித் தலைவருக்கு ஊட்டிட்டுக் கட்சியில் இருந்து வெளியே வந்து, அலையன்ஸ் கட்சியில் சேர்ந்துக்கிட்டு ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுத்துட்டாங்க. அடுத்த தேர்தல்வரை வண்டி இப்படியே ஓடுச்சு. 'யஹாங் ஸே வஹாங், வஹாங்ஸே யஹாங்':-)))))
ச்சீனாவுக்கு(1997) ஹாங்காங் திரும்பக் கிடைச்ச சமயம், நிறையப்பேர் அங்கிருந்து பிஸினெஸ் மைக்ரேஷன்லே நியூஸி வர்றதுக்கு முயற்சி செஞ்சாங்க. குறைஞ்சது அரை மில்லியன் டாலர் இங்கே நியூஸியில் முதலீடு செய்யணுமுன்னு அரசாங்கம் சொல்லுச்சு. அதுவுமில்லாம அதுவரை ஹாங்காங் பிரிட்டிஷ் வசம்தானே இருந்துச்சு.அப்ப ஒரு அம்பதாயிரம் பேர் இங்கே வந்துட்டாங்க. கடந்த சில வருசங்களா ஃபிலிப்பினோப் பெண்கள், மலேசியப் பெண்கள் இங்கத்து 'கிவி' ஆட்களைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு நியூஸிக்கு குடிவந்தாங்க. அப்புறம் கொரியா, ஜப்பான்னு சில இடங்களில் இருந்து கொஞ்சமுன்னு வெவ்வேறு நாடுகளில் இருந்து புது ஜனங்கள் வந்துக்கிட்டுத்தான் இருந்தாங்க. ஐரோப்பியர்கள் வருவது ரொம்பவே குறைஞ்சு போச்சு.சீனாவிலே இருந்தும் ஏராளமான ஜனங்கள் வியாபார விஸா வாங்கி வந்து குடியேறுனாங்க.சமோவா, இன்னும் மத்த பஸிபிக் தீவுகளில் இருந்து நிறையப்பேர் வந்துக்கிட்டு இருந்தாங்க. நியூஸி பல்வேறு கலாச்சாரம் கொண்ட மக்கள் இருக்கும் நாடா மாறிக்கிட்டு இருந்துச்சு. அரசியலில் பெண்களின் பங்கு கூடிக்கிட்டுப் போச்சு. ஒரு ச்சீனப் பெண்மணி பார்லிமெண்ட் அங்கத்தினராகவும்( லிஸ்ட் எம்.பி) ஆனாங்க.
குடும்ப வன்முறைகளில் கஷ்டப்பட்டவங்க எண்ணிக்கையில் ஆசியப் பெண்கள் நிறைய இருந்தாங்க. ஆங்கிலமொழி தெரியாத பலர், தேவையான சமயங்களில் உதவிக்கு எங்கே போய் யாரிடம் கஷ்டத்தை விளக்கிச் சொல்லறதுன்றது ஒருபிரச்சனையா இருந்துச்சு. அதுவுமில்லாம , குடும்பத்தில் நடக்கறதை வெளியே போய் சொல்றது ஒரு அவமானமுன்னு எண்ணம். இதைக் கவனிச்ச சில ஆசியப் பெண்கள் ஏழு பேர் சேர்ந்து 'சக்தி'ன்னு ஒரு அமைப்பைத் தொடங்குனாங்க. இது இப்பபெரிய அளவில் வளர்ந்து ஆசியப் பெண்களுக்கு மட்டுமில்லாம பொதுவா எல்லாருக்கும் உதவுது. எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகள் இருக்கு. சீனா, தாய்லாந்து, மலேயா, வியட்நாம், கம்போடியா, கொரியா, இந்தியா, ஜப்பான், பர்மா,பாகிஸ்தான், பங்களாதேஷ், இரான், இராக், ஆஃப்கானிஸ்தான், ஆஃப்ரிக்கா, ஸ்ரீலங்கான்னு பலநாடுகளைச் சேர்ந்த 20,000பெண்கள் இதன்மூலம் உதவியடைஞ்சிருக்காங்க. பல ஆசிய மொழிகளிலும் 'சக்தி' என்ற சொல்லுக்கு 'பலம் (ஸ்ட்ரெந்த்) என்ற பொருள் இருக்கறதாலே இந்தப் பெயர் ரொம்பப் பொருத்தமா அமைஞ்சுருச்சு. பெண்கள் நலனுக்காகவே அரசு ஒரு புது இலாக்கா ஏற்படுத்துச்சு.
Posted by
துளசி கோபால்
at
5/30/2007 09:50:00 AM
20
comments
Labels: நியூஸிலாந்து, பொதுவானவை
Friday, May 18, 2007
நியூஸிலாந்து பகுதி 61
'ச்சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்'னு நியூஸியின் முதல் சூதாட்ட விடுதி(casino) திறந்தாங்க. அதுவும் எந்த ஊருலே? நான் இருக்கற கிறைஸ்ட்சர்ச் மாநகரத்துலே! இந்த ஊர்லேதான் சுற்றுலாப் பயணிகள் அதிகம்.அவுங்களுக்குப் பொழுது போக்காம். உள்ளூரு சனம் ச்சும்மா இருப்போமா? உள்ளே அருமையான ரெஸ்டாரண்ட்இருக்காம். ஆனா உள்ளே அனுமதி 20 வயசுக்கு மேலே இருக்கறவங்களுக்கு மட்டும். ட்ரெஸ் கோட் இருக்கு.ஜீன்ஸ், ஸ்போர்ட்ஸ் ஷூ எல்லாத்துக்கும் தடா. ஆசையா இருக்கு, உள்ளே வேடிக்கை பார்க்கவாவது போகலாமுன்னு.11 வயசு மகளை வீட்டுலே விட்டுட்டுப் போக மனசு வரலை(-:
இங்கே அரசாங்க விதிப்படி 16 வயசு வரை பிள்ளைகளைத் தனியா வீட்டுலே விட்டுட்டுப் போகக்கூடாது. பார்த்துக்க வீட்டாளுங்க இல்லைன்னா ஒரு 'பேபி சிட்டரை' ஏற்பாடு செஞ்சுக்கலாம். வர்ற பேபி சிட்டர் எப்படி இருப்பாங்களோ?நமக்கு இதெல்லாம் பழக்கமில்லாத காரணத்தால் எதுக்கு வம்புன்னு நாங்களே பார்த்துக்குவோம். தனியா விட்டுட்டுப்போன சேதி தெரிஞ்சா போலிஸ் கேஸ் புக் பண்ணிருவாங்க.
நல்லா இருந்த மக்களுக்கு இதைக் காமிச்சுட்டு, இப்ப அரசாங்கம் சூதாட்டப் பழக்கத்துக்கு 'அடிமை'யா ஆனவங்களுக்கு'ஹெல்ப் லைன்' வச்சுருக்கு. ஏற்கெனவே லாட்டோ விளையாட்டுலே கணக்கு வழக்கில்லாம செலவு பண்ணுறவங்க அதிகமாகிக்கிட்டு வர்றாங்க. வெறும் லாட்டோன்னு இல்லாம, ஒரு டாலர், 2, 5, 10ன்னு சுரண்டல் சீட்டுவேற வந்துக்கிட்டு இருக்கு. இதுலே பார்த்தீங்கன்னா............. அரசாங்கத்துக்கிட்டே உதவிப்பணம் வாங்குற மக்களில் பலர் வாராவாரம் கிடைக்கும் தொகையில் கணிசமானதை இங்கே அழறாங்க. எப்படியாவது பணக்காரனா ஆயிரணும்.அதுவும் கொஞ்சம்கூட உழைக்காமல். உலகம் பூராவும் இப்படிப்பட்ட மக்கள் இருக்காங்க(-:
இந்த நாடு வடக்கு, தெற்குன்னு ரெண்டு பெரிய தீவுகள் கொண்டது. இங்கிருந்து அங்கே போகணுமுன்னா ஃபெரிலேபோகணும். இல்லைன்னா விமானம். ஏற்கெனவே ஒரு கடல்வழிப் போக்குவரத்து நடந்துக்கிட்டு இருக்கு. மூணு மணிநேரம் ஆகும். இப்ப இன்னும் வேகமாப் போறதுக்காக இன்னொரு தனியார் கம்பெனி முன்வந்துச்சு. ஒன்னரை மணி,இன்னும் அதிகமாப் போனா ரெண்டு மணி நேரத்துலெ போயிரலாமாம். மெதுவாப் போறதுலே போனோமுன்னா, பலசமயங்களில் டால்ஃபின் மீன்கள் நம்மோடு வரும்.
நியூஸிதான் விளையாட்டுக்களில் ரொம்ப ஆர்வம் காட்டுற நாடுன்னு சொல்லி இருக்கேனில்லை. அமெரிக்கா கோப்பைன்னு சொல்லி ஒரு படகுப்போட்டி நடக்குதுல்லே? பாய்மரப் படகு. இந்தப் போட்டி ஆரம்பிச்சு முதல்132 வருஷம் அமெரிக்கர்களே ஜெயிச்சுக்கிட்டு இருந்தாங்க. அதுக்கப்புறம், 1983லே ஆஸ்தராலியா ஜெயிச்சுருச்சு.அதுக்கப்புறம் நடந்த மூணு போட்டிகளில் கப் மறுபடியும் அமெரிக்கா பக்கமே போயிருச்சு. ஆஸ்தராலியா ஜெயிச்சா நாங்களும் ஜெயிச்சே ஆகணுமே. அப்படி ஒரு உறவு & அன்பு(!!) எங்களுக்குள்ளே இருக்குல்லே?
1995 வருஷம் இந்தக் கப்பை நியூஸி ஜெயிச்சு, இங்கே கொண்டாந்துருச்சு. நாடே கோலாகலமாயிருச்சு. வழக்கம்போல எல்லா ஊருக்கும் கொண்டாந்து காட்டிட்டுப் போனாங்க. நானும் போய் பார்த்தேன். இங்கே அநேகமா எல்லா ஊர்களிலும் விசேஷங்களுக்கு கூடறதுக்குன்னே ஒரு மைதானம்(??) /சதுக்கம் இருக்கும். எங்க ஊருக்கு இது சிட்டி ஸ்கொயர். அன்னிக்கு மட்டும் ஒரு லட்சம்பேர் கூடுனாங்க. ஊரோட ஜனத்தொகை மூணு லட்சம்தான்.
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் இந்த வருஷம் இங்கே கூடுனாங்க. மக்கள் தலைவர் நெல்சன் மாண்டேலா வந்துருந்தார். பயங்கர வரவேற்பு. மக்கள் உள்ளத்தை அப்படியே கொள்ளை அடிச்சுக்கிட்டு போனார்.
மவொரிகளுக்கு அந்தக் காலத்துலே அநீதி செஞ்சுட்டோமுன்னு அரசாங்கம் மன்னிப்புக் கேட்டுக்கிட்டு, அவுங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கலாமுன்னு அவுங்க குறை கேட்க ஒரு ட்ரிப்யூனல் அமைச்சதில்லையா? அது ரெண்டு குழுக்களுக்கு,170 மில்லியன், 40 மில்லியன் டாலர்களைக் கொடுத்துச்சு.
அட அத்தை விடுங்க......... ஓட்டுப்போட ஒரு லீவு உண்டா? பொல்லாத தேர்தல்......... சனிக்கிழமையாப் பார்த்து நடத்துறது என்னாங்க கணக்கு? அந்தந்த பேட்டையில் இருக்கும் பள்ளிக்கூடத்து ஹாலிலே போலிங் பூத் வச்சுடராங்க.காலையில் 9 மணிக்கு ஆரம்பிச்சு மாலை 7 வரை திறந்திருக்கும். அதுகூடப் பாருங்க, இங்கத்து சம்மர்தான் தேர்தலுக்கு.குளிர்காலமுன்னா யாரும் மெனெக்கெட மாட்டாங்களாம்.
தேர்தலுக்கு ஒரு மாசம் முன்னால்கூட வாக்காளராப் பதிவு செஞ்சுக்கலாம். ஒரு இமெயிலோ, இலவசத் தொலைபேசியோகூடப் போதும். என்ன செய்யணும், எப்படி ன்னு எல்லா விவரமும் கதறிக்கிட்டு ரெண்டு மூணு நாளுக்குள்ளே வந்துரும்.
வாக்குப்பதிவுக்கு ஊர்லே இருக்கமுடியாதா? ரெண்டரை வாரத்துக்கு முன்னெயே ஸ்பெஷலா ஓட்டுப் போட்டுக்கலாம்.
தேர்தலுக்கு ஒரு மாசம் இருக்கறப்பவே ஏற்கெனவே பதிவு செஞ்ச வாக்காளர்களுக்கு 'ஈஸி ஓட்டு கார்டு'ன்னு நம்ம விவரம் அடங்குன கடுதாசியை நம்ம வீட்டுக்குத் தேர்தல் வாரியம் அனுப்பி வைக்கும். அதைக் கொண்டுபோனாப் போதும்.
17 வயசானதும் பதிவு செஞ்சுக்கலாம். 18 வயசு ஆனதும் போட்டுறலாம் உங்க ஓட்டை:-)
ஆனா ஒண்ணு, நாமேதான் போய் ஓட்டுப்போடணும். வீட்டாண்டை வந்து கூட்டிக்கிட்டுப் போக மாட்டாங்க.நம்ம ஓட்டை யாராவது போட்டுக்கட்டுமுன்னு இருக்க முடியாது. என்னவோ போங்க.ம்ம்ம்ம்ம்,புலம்பல்தான்.
Posted by
துளசி கோபால்
at
5/18/2007 08:45:00 AM
22
comments
Labels: தேர்தல், நியூஸிலாந்து, பொதுவானவை
Wednesday, May 16, 2007
நியூஸிலாந்து பகுதி 60
நேஷனல் அரசு ஒரு காரியம் செஞ்சது. கூடுதல் பலம் வேணுமே....... அதுக்கு எதாவது டானிக், தாதுபுஷ்டி லேகியம்,மருந்து மாத்திரை? சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியிலிருந்து ஒருத்தரைத் தேர்ந்தெடுத்துச்சு. தன் கட்சியில் இருந்துஎடுத்தா 49/49 ன்னு சரிசமமா ஆயிருமே! லேபர் கட்சியின் எம்.பி.யான, பீட்டர் டாப்செல்(Peter Tapsell)க்கு இந்தப் பதவியைக் கொடுத்தாங்க. இது லேபர் கட்சிக்குக் கொஞ்சமும் பிடிக்கலை. ஆனா பீட்டர் டாப்செல் இதுக்கெல்லாம் கவலைப்படலை. அவர் மவொரி இனத்தைச் சேர்ந்தவர்ன்றதாலே அவ்வளவா தகராறு இல்லை. இவர்தான் மவொரி இனத்தைச் சேர்ந்த முதல் சபாநாயகர் என்ற அந்தஸ்த்தும் கிடைச்சது.
இப்படி ஒரு கழுத்தைப் பிடிக்கும் நிலமை வந்ததுக்கு நிதியமைச்சரின் நடவடிக்கைதான் காரணமுன்னு நினைச்சுக்கிட்டு, இந்த முறை 'பில் பிர்ச்' என்றவருக்கு நிதி அமைச்சர் பதவியைக் கொடுத்தார் பிரதமர். போனமுறையே இவருக்குக் கொடுக்கணுமுன்னுதான் எண்ணம் இருந்துச்சு. ஆனா அப்ப ரூத் ரிச்சர்ட்ஸனுக்குத்தான் கட்சிக்குள்ளே பலத்த ஆதரவு. ஒருமாதிரி வண்டி ஓடுச்சு 3 வருசம்.
பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுத்த முதல் நாடு நியூஸிதான்னு உங்களுக்குத்தான் ஏற்கெனவெ தெரியுமில்லையா?அது 1893 வது வருஷம். இந்த வருஷம் நூற்றாண்டு விழா. கொண்டாட்டம்தான். உயர்நீதி மன்றதுக்கு டேம் சில்வியாகார்ட்ரைட்(Dame Silvia Cartwright) முதல் பெண் நீதிபதியா ஆனாங்க. சாண்ட்ரா லீ என்ற மவொரிப் பெண்மணி,முழுக்க முழுக்க வெள்ளைக்காரர்கள் இருக்கும் தொகுதியிலே, தேர்தலில் நின்னு ஜெயிச்சு எம்.பி. ஆனாங்க.( அடடாடா.....சாதி ஓட்டு இப்படியா ஆகணும்?) ஹெலன் க்ளார்க் என்ற லேபர் கட்சி எம்.பி. எதிர்க்கட்சித் தலைவியா ஆனாங்க.இதுவரை எந்தப் பெண்களுமே கட்சித் தலைமைவரை வந்ததில்லை. ரொம்பப் புரட்சிகரமா இருந்துச்சு.
எம் எம் பி ( MMP, மிக்ஸட் மெம்பர் ப்ரபோர்ஷனல்) முறையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்யலாமான்னுகேட்டு ஒரு கருத்துக் கணிப்புத் தேர்தல் நடந்துச்சு. இது என்னன்னு விளக்கோ விளக்குன்னு மக்களுக்கு விளக்குனாங்க. பொதுத்தேர்தல் நடக்கும்போது எந்தெந்தக் கட்சிக்கு, மொத்தத்தில் எவ்வளவு ஓட்டு விழுதோ,அந்த விகிதாச்சாரப்படி அந்தந்தக் கட்சியில் இருந்து நபர்களைக் கட்சியின் மேலிடம் தெரிவு செஞ்சு அவுங்களையும் பாராளுமன்ற உறுப்பினர்(List M.P.) ஆக்குவாங்களாம். ( புகழ் பெற்ற(??) ஆளுங்களை நம்மூர் ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கற மாதிரி இருக்கே)
ஒரு பெரிய கேக். அதை விகிதாசாரப்படி வெட்டிப் பங்கு போடற மாதிரி தொலைக்காட்சி, தினப்பத்திரிக்கை, இன்னும்வீட்டு வீட்டுக்கு வரும் ஜங்க் மெயில்னு எல்லா இடத்திலும் காட்டிக் காட்டிச் சொன்னாங்க. நாங்களும் அதைப் புரிஞ்சுக்கிட்டு(???)ஆகட்டுமுன்னு அதுக்கு ஒரு ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தோம். அடுத்த பொதுத்தேர்தலில் இது நடைமுறைக்கு வருமுன்னு சொன்னாங்க. ஆகக்கூடி 'அல்வா'ன்ற ஒரு பொருள் இங்கே 'கேக்'காக மாறி இருந்துச்சு. அவுங்க ஊட்டுன அந்த(அல்வா) கேக்கை, 'ஆ.....'ன்னு வாய் திறந்து வாங்கிக்கிட்டோம்.
நியூஸியில் எடுத்த திரைப்படம் ' த பியானோ' உலக அளவுலே பேசப்பட்டுச்சு. காரணம் சில பல ஆஸ்கார்களை வாங்கிக் குவிச்சதால். சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த கதை, திரைக்கதைன்னு ரொம்பப் புகழ். சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் வாங்கின 'ஆனா பேக்வின்'(Anna Paquin) வயசு வெறும் 11 தான்.
Posted by
துளசி கோபால்
at
5/16/2007 09:12:00 AM
23
comments
Labels: தேர்தல், நியூஸிலாந்து, பொதுவானவை
Tuesday, May 15, 2007
ப்ரிஸ்பேன்
மக்கள்ஸ், பிரிஸ்பேன் நகரில் இருந்து வலைபதியும் நண்பர்கள் யாராவதுஇருந்தால் பின்னூட்டத்தில் உங்க மெயில் ஐடியோ இல்லே தொலைபேசி எண்களோ தெரிவிச்சீங்கன்னா.............. சந்திக்க முயற்சிப்பேன்.
வரும் வாரம் முழுசும் அங்கேதான் கேம்ப்:-)
உங்கள் சொந்த விவரங்கள்(???) அடங்கிய பின்னூட்டங்கள் வெளியிடப்படாது.
என்றும் அன்புடன்,
துளசி.
Posted by
துளசி கோபால்
at
5/15/2007 01:19:00 PM
16
comments
Labels: பதிவர் வட்டம், பொதுவானவை
Monday, May 14, 2007
நியூஸிலாந்து பகுதி 59
"சேர்த்த பணத்தைச் சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடுச் சின்னக்கண்ணு,
அவுங்க ஆறை நூறு ஆக்குவாங்கச் செல்லக்கண்ணு"
காசுலே கண்ணும் கருத்துமா இருக்கறது பெண்களுக்கு மட்டும் கைவந்த கலையோ? அதிக செலவு எங்கெங்கே அனாவசியமா(??) ஆகுதுன்னு பார்த்து அங்கெல்லாம் ஒரே போடாப் போட்டாங்க நாட்டின் புது நிதி அமைச்சரம்மா.ரூத் ரிச்சர்ட்ஸன். இந்தப் பதவிக்கு வந்த முதல் பெண்மணி! முதல் என்ன முதல் ? இவுங்கதான் ஒரே பெண்மணி. இவுங்களுக்கப்புறம் இன்றுவரைக்கும் வேறு பெண்கள் யாருமே நிதியமைச்சரா வரவேயில்லை(-:
பசங்களுக்குக் கொடுத்துக்கிட்டு இருந்த ஆறு $க்கு முதல் ஆப்பு(-: வெல்ஃபேர் கவர்மெண்டு ஆச்சே இங்கே. யாரும்பட்டினியா இருக்கக்கூடாதுன்றதுலெ அரசு கவனமா இருக்கும். அரசு கொடுக்கும் காசையும் கண்டமாதிரி செலவு செஞ்சுட்டு, சாப்பாட்டுக்காக 'சூப் கிச்சன்' போற ஆட்களும் உண்டுதான். வெல்ஃபேர் காசைக் கொஞ்சம் குறைச்சதும் அதை வாங்கிக்கிட்டு இருந்தவங்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டுச்சு. ஆனா, ரூத் ரொம்பக் கண்டிப்பானவங்களா இருந்தாங்க.உண்மைக்கும் சொன்னா, இன்னொருத்தரை நிதியமைச்சரா ஆக்கணுமுன்னு பிரதமருக்கு விருப்பம் இருந்துச்சு. ஆனாகட்சியில் ரூத் ரிச்சர்ட்ஸனுக்கு ஆதரவு நிறைய இருந்தது.
வேலை இல்லாதோர் எண்ணிக்கை ஏறிக்கிட்டே போச்சு. இதுவரை நியூஸியின் சரித்திரத்துலே முதல் முறையா ரெண்டு லட்சத்துக்கு மேல் வேலை இல்லாதவங்க. இவ்வளவு பேருக்கும் அரசாங்கம் காசு கொடுக்கணுமே! முழி பிதுங்கிப் போச்சு.
வேலை செய்யறவங்களுக்கும், முதலாளிகளுக்கும் ஒப்பந்தம் பண்ணிக்கிற சட்டம் ஒண்ணு கொண்டுவந்தாங்க.எம்ப்ளாய்மெண்ட் காண்ட்ராக்ட். தொழிற்சாலையில் வேலை செய்யறவங்கன்னா எல்லாத் தொழிலாளர்களுக்கும்சேர்த்து கலெக்டிவ்வா ஒரு ஒப்பந்தம். நிர்வாகத்துலே இருக்கறவங்களுக்கு தனித்தனி ஒப்பந்தமுன்னு ஆச்சு.வேலையில் இருந்து தூக்குனாங்கன்னா நஷ்ட ஈடு எவ்வளவு கிடைக்கும், வேலையில் இருந்தா எத்தனை நாள் சம்பளத்தோட லீவு, எத்தனை மணி நேர வேலை இப்படி எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் இந்த ஒப்பந்தங்கள்.இந்தக் காரணத்தாலே தொழிற்சங்கங்கள் கொஞ்சம் பலவீனமாச்சு.
ஃப்ரீ மார்கெட் பாலிஸி கொண்டு வந்தாங்க. பல்கலைக் கழகங்கள், ஆஸ்பத்திரிகள் எல்லாம் சேவை மனப்பான்மையைக் கொஞ்சம் ஒதுக்கிட்டு, பயன்படுத்தறவங்க பணம்(User Pay) கொடுக்கணுமுன்னு ஒரு திட்டம் வந்துச்சு. மாணவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் பல்கலைக் கழகங்களுக்கு வருமானம்னு ஆகிப்போனதால் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் வெளிநாட்டு மாணவர்களை வருந்திக் கூப்புட ஆரம்பிச்சது. உள்ளூர் மாணவர்களுக்கு ஒரு பங்குக் கட்டணமுன்னா,அதே படிப்புப் படிக்க வெளிநாட்டிலே இருந்து வரும் மாணவர்களிடம் ரெண்டு மூணு மடங்கு அதிகம் வாங்கலாமே!ஒவ்வொரு பல்கலைக்கழகமும் 'புள்ளை புடிச்சுக்கிட்டு வர்றதுக்காக' ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புச்சு.
'இங்கிலீஷ் டீச்சிங் ஸ்கூல்ஸ்' வேற முளைச்சது. எப்படி? மழை பேய்ஞ்ச மறுநாள் முளைக்கும் காளான்களைப்போல.முக்கியமா சீனர்கள் இங்கே ஆங்கிலம் படிக்கன்னு வந்தாங்க. இதெல்லாம் தனியார் செஞ்சுக்கிட்டது. அவுங்ககிட்டே இருந்து நல்ல பணவரவு. அந்தப் பசங்க இங்கே வெள்ளைக்காரர்கள் வீடுகளில் தங்கறதுக்கு இடம் ஏற்பாடு செஞ்சு கொடுக்கறது, இங்கே இருக்கறதுக்கு விஸா எல்லாம் அந்தப் பள்ளிக்கூடங்களே ஏற்பாடு செஞ்சாங்க. காசோ காசு மழைதான்.
பள்ளிக்கூடம் முடிச்சுட்டு மேல்கொண்டு படிக்க உள்நாட்டு மாணவர்களுக்கு அரசாங்கமே 'ஸ்டுடண்ட்ஸ் லோன்'கொடுக்க ஆரம்பிச்சது. அதுக்கும் வட்டி உண்டு. ஆனா ரொம்பக் குறைஞ்ச விகிதம். படிச்சு முடிச்சுட்டு அப்புறம் கட்டலாமுன்னு சொன்னாங்க.
அரசியல்வாதிகளுக்கு அவுங்க கவலை. ஒரு நாலு கட்சி ஒண்ணா சேர்ந்து ஒரு புது கட்சி ஆரம்பிச்சாங்க. லேபர் கட்சியிலே இருந்து பிரிஞ்சு போய், புது லேபர் கட்சின்னு தனிக்கட்சி ஆரம்பிச்ச ஜிம் ஆண்டர்டன்தான் இதையும் செஞ்சவர். நடந்து முடிஞ்ச தேர்தலில் இவர் மட்டும்தானே புது லேபர் சார்பா ஜெயிச்சார். ஒரே ஒரு ஸீட் வச்சுக்கிட்டு என்ன செய்யமுடியும்?
இந்த சமயத்துலே நடந்த கல்ஃப் போரில், ஐக்கியநாடுகள் கேட்டுக்கிச்சுன்னு நியூஸியின் படைவீரர்கள் கலந்துக்கிட்டு இருந்தாங்க. இந்தப் புதுகட்சி ( அலையன்ஸ் கட்சி) அவுங்க கட்சிக் கொள்கைகளை அறிவிச்சது. என்னன்னா, எல்லாருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், வேலையில்லாத் திண்டாத்தைக் குறைக்கிறது, மக்கள் நலத்துக்கான வெல்ஃபேர்திட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது, பெண்களுக்கான உரிமைகள், மவோரிகளுக்கான உரிமைகள், சுற்றுப்புற சூழலைப் பாதுகாக்கறதுன்னு அருமையான கொள்கைகள். இதுலே முக்கியமான, கவர்ச்சிகரமானது என்னன்னா, GST ன்னு இருந்த வரியைத் தூக்கிடறது. ஏற்கெனவே அரசாங்கம் நடத்துன பல நிறுவனங்களை வெளி நாட்டுக்காரர்கள் வாங்கியதையும் இவுங்க எதிர்த்தாங்க.
இந்த சமயத்துலேதான் பனி மழை கூடுதலா வந்து அதிகப்பனியைத் தாங்க முடியாம நாட்டின் மிக உயர்ந்த மலைச்சிகரம் 'மவுண்ட் குக்', அப்ப மலைக்கு அடியில் வந்த நிலநடுக்கத்தாலே உச்சி இடிஞ்சு அப்படியே பெயர்ந்து விழுந்துருச்சு.இதனாலே சிகரத்தோட உயரம் ஏறக்குறைய 20 மீட்டர் குறைஞ்சு போச்சு. ஆனாலும் இப்பவும் இதுதான் நாட்டின் உயர்ந்தசிகரம். இந்த மலையைப் பத்தி ஏற்கெனவே நியூசிலாந்து பகுதி 43 லே சொல்லி இருக்கு. பாருங்க.
உச்சி இடியும் முன்பு ( காலை வெயிலில் )
உச்சி இடிஞ்ச பிறகு ( கடும் பனியில்)
'உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே' இது எப்படி இங்கத்து நிதி அமைச்சருக்குத் தெரிஞ்சது? நிதி நிலையைச் சரிக்கட்ட ரொம்பப் பாடு படவேண்டியதாப் போச்சு.நியூஸி வங்கியையே ஆஸ்தராலியா வாங்கிட்டாங்க. நியூஸி ரெயில்வேயைக்கூட அப்புறம் ஒரு தனியார் கம்பெனிக்கு வித்துட்டாங்க.
அரசாங்கம் வீடுகளை கட்டி வச்சு, குறைஞ்ச வாடகைக்குத் தந்துக்கிட்டு இருந்ததையும் நிப்பாட்டுனாங்க. வெளியிடத்தில் என்ன வாடகையோ அதேதான் இனிமேல் வசூலிக்கணுமுன்னு முடிவு செஞ்சாங்க. வருமானம் குறைச்சலா இருந்தவங்களுக்கு இது இன்னும் ஒரு இடியா விழுந்துச்சு.
போன அரசாங்கத்துலே 'ரோஜர்னாமிக்ஸ்' வந்ததைப்போல இப்ப 'Ruthanasia' (Ruth and euthanasia),என்ற சொல் பிரபலமாச்சு. மக்களுக்குப் பிடிக்காமப்போன நிதி அமைச்சரா இருந்தாங்க ரூத். அப்படியும் இவுங்க 3 வருஷம் பதவியிலே இருந்தாங்கதான். மூணு வருசம் ஓடி அடுத்த தேர்தல் வந்துச்சுங்க. ஜெயிச்சது யாரு?
கொசுறுச் செய்தி: கருத்துக்கணிப்பு.
இன்னிக்குக் காலையில்( 14/05/07) வந்த இந்தக் கருத்துக் கணிப்பு உங்கள் பார்வைக்கு.
ச்சும்மா........... உங்களுக்குச் சொல்லணுமுனுன்னு தோணுச்சு. அதனாலேதான்.........
Posted by
துளசி கோபால்
at
5/14/2007 09:23:00 AM
16
comments
Labels: நியூஸிலாந்து, பொதுவானவை
Friday, May 11, 2007
நியூஸிலாந்து பகுதி 58
இதைப் பெரிய அளவுலே கொண்டாடுனாங்க. எல்லா பெரிய நகரங்களிலும் தேர்த்திருவிழா போல கண்காட்சிகள்.ஒரு பத்து டாலர் நோட்டு இந்த விசேஷத்துக்காகவே புது டிசைனோட வந்துச்சு. மவொரித் தலைவர்களும் ஒண்ணு சேர்ந்து அவுங்க இனத்தையெல்லாம் கூட்டி நேஷனல் காங்ரெஸ் தொடங்குனாங்க. இந்த வைட்டாங்கி தினம் பிப்ரவரி மாசம் 6ஆம்தேதி கொண்டாடப்படுது. இந்த தினத்தை தேசீய விடுமுறையா அறிவிச்சது இப்ப ஒரு முப்பதுவருசத்துக்கு முந்திதான். அப்ப ஆண்டுக்கிட்டு இருந்த லேபர் கட்சிதான் இதுக்கு முன்கை எடுத்தது.

இந்தியா கிரிக்கெட் விளையாட்டுக்கு இங்கே வந்தாங்க. சச்சின் டெண்டூல்கர் ரொம்பச் சின்னப்பையனா இருந்தார்.காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டும் இந்த வருஷம் நியுஸிலாந்தில் நடந்துச்சு. அதுக்காக எலிஸபெத் மகாராணி வந்திருந்து விழாவை ஆரம்பிச்சு வச்சாங்க. ஒரே கோலாகலம்தான். விளையாட்டுப்போட்டிகள் ஆக்லாந்து நகரில்தான்னு இருந்தாலும், குடி மக்களைப் பார்க்க ராணியம்மா முக்கிய நகரங்கள் சிலதுக்குப் போனாங்க. அதுக்கென்ன? வடக்குத்தீவு,தெற்குத்தீவுலே ரெவ்வெண்டு ஊர்கள்தானே? எங்கூருக்கும் வந்தாங்க.நாங்களும் போய் 'பார்த்துட்டு' வந்தோம்:-)( இம்மாந்தூரம் வந்துருக்காங்க. நம்ம 'வீட்டுக்கு' வரலைன்னு நாம கோச்சுக்க முடியுமா?)
பெரிய நிறுவனங்கள் சில தனியார்வசம் விற்கப்பட்டன. அதுலே ஒண்ணு இங்கத்து டெலிகாம். இந்தியாவுக்குப் பேசணுமுன்னா நிமிஷத்துக்கு ரெண்டு டாலருக்கும் கூடுதலா வாங்கியே ரொம்பப் பணம் பண்ணிட்டாங்க. 'ஸ்டாப் வாட்ச்' வச்சுக்கிட்டுத்தான் தொலைபேசியையே தொடுவோம்.
செப்புக்காசுகள் ஒரு செண்ட், ரெண்டு செண்ட் காசுகள் இனிமே செல்லாதுன்னுமுடிவு செஞ்சு தூக்கிட்டாங்க. தயாரிப்புச் செலவு கூடுதலா ஆனதும் ஒரு காரணம். ஆனாலும் கடைகளில் ** 99 செண்ட்ன்னு அறிவிச்சுக்கிட்டு இருந்தாங்க.அதை ரவுண்டப் செய்யறோமுன்னு சில கடைகளில் 95 ன்னு 4 செண்ட் நஷ்டத்துக்கும், சில இடங்களில் முழு டாலராஎடுத்துக்கிட்டு ஒரு செண்ட் லாபமும் பார்த்தாங்க.

பூகம்பம் அடிக்கடிச் சின்னச்சின்னதா வரும் நாடுன்னாலும் 'பே ஆஃப் ப்ளெண்டி' என்ற ஊரில் ஒரு பூகம்பம் சொல்றாப்புலே வந்துச்சு. ஒரு அம்பத்தொம்பது வருசத்துக்கு முந்தி 1931 லே பெருசா ஒண்ணு வந்து 258 பேர் உயிரிழக்கும்படியானது. அந்தமாதிரி ஆகிருமோன்னு ரொம்பக் கவலையா இருந்துச்சு. ஆனா நல்லகாலம் அப்படிஉயிரிழப்புகள் நடக்கலை. ஒரே ஒருத்தர்தான் இறந்துட்டார். அதுவும், பூகம்பம் வந்துருச்சுன்ற செய்தியைக் கேட்டு,அதிர்ச்சியிலே இதயத்துடிப்பு நின்னு போச்சாம்(-:
கவர்னர் ஜெனரலின் பதவிக்காலம் முடிஞ்சு புது கவர்னர் ஜெனரல் வந்தாங்க.நாட்டின் சரித்திரத்துலே முதல் முறையா பெண் கவர்னர் ஜெனரல். அவுங்க பெயர் டேம் காதரீன் டிஸார்ட் (Dame Catherine Tizard )
கிறைஸ்ட்சர்ச் மாநகர வரலாற்றிலேயே முதல் பெண் மேயரா 'விக்கி பக்' ஆனதும் போனவருசம் (1989 லே)தான். இவுங்க தொடர்ந்து ஒன்பது வருஷம்( 3 தேர்தல்) இந்தப் பதவியில் இருந்தாங்க.
திடீர்னு இந்தப் பிரதமரும் வேலையை விட்டுட்டு விலகினார். அப்ப தேர்தலுக்கு ரெண்டு மாசம்தான் இருந்துச்சு. ஆட்சி சரியில்லை,சனங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஒண்ணும் செய்யலை, இந்தத் தேர்தலில் ஜெயிக்கறது ரொம்பக் கஷ்டமுன்னு ஆகியிருக்கு.அதான் விலகிட்டார்ன்னு சொன்னாங்க. மைக் மூர் என்பவர் பிரதமராப் பதவிக்கு வந்தார். சொல்லி வச்சது போலவே லேபர் தோத்துப் போச்சு. நேஷனல் கட்சி ஜெயிச்சாங்க. ஜிம் போல்ஜர் ( ஜேம்ஸ் போல்ஜர், செல்லமா ஜிம்னு கூப்புட்டாங்க)என்பவர் புதுப் பிரதமரா வந்தார். இந்த ஒரு வருஷம் மட்டும் 3 பிரதமர் பார்த்த நாடு இதுவாத்தான் இருக்கும்!
இங்கத்துப் பார்லிமெண்டில் அப்பெல்லாம் மொத்த சீட்கள் 97 தான். 18 வயசாச்சுன்னா நீங்க ஓட்டுப்போடலாம்.கிட்டத்தட்ட34 லட்சம் ஜனத்தொகை இருந்த காலக்கட்டம். P.R.லே இங்கே வந்தவங்களுக்கும் ஓட்டுரிமை இருக்கு. வாக்காளர்கள் எண்ணிக்கை 22 லட்சத்துக்குக் கொஞ்சம் கூடுதலா இருந்துச்சு. இந்தத் தேர்தலில் நேஷனல் கட்சி ஜெயிச்ச இடங்கள் 67. லேபருக்குச் சரியான அடி. வெறும் 29 இடம்தான் ஜெயிச்சாங்க. புது லேபர் கட்சி தொடங்குனாங்க பாருங்க, அவுங்களும் இந்த 97 இடத்திலும் போட்டி போட்டு ஒரே ஒரு இடம் ஜெயிச்சாங்க. ஜெயிச்சவர், அந்தக் கட்சியின் தலைவர் மட்டும்.
(இது அப்படியே நம்ம தமிழ்நாட்டுத் தேர்தலில் ஒருமுறை நடந்துச்சுலே?)
நேஷனல், லேபர், புது லேபர், க்ரீன்ஸ் ( வேல்யூஸ் கட்சிதான் க்ரீன்ஸ் கட்சின்னு இப்பப் புதுப்பெயர் மாத்திக்கிச்சு. வாஸ்து? )இப்படி பெரிய கட்சிகளா நாலு இருந்தாலும், 27 ச்சோட்டாமோட்டாக் கட்சிகள் இருக்கு. அவுங்களும் கொஞ்சம் இடங்களில் தேர்தலுக்கு நின்னாங்க. இதில்லாம சுயேட்சையா 39 பேர் நின்னாங்க. இவுங்களில் யாருமே ஜெயிக்கலை.
மனுஷங்க எல்லோரும் ஒண்ணுதான்,இல்லே?
Posted by
துளசி கோபால்
at
5/11/2007 09:03:00 AM
16
comments
Labels: நியூஸிலாந்து, பொதுவானவை
Tuesday, May 08, 2007
நியூஸிலாந்து பகுதி 57
பள்ளிக்கூடத்தை அரசு நடத்துனாலும், இன்னும் அது சம்பந்தப்பட்டப் பொறுப்புகளை முக்கியமா வரவு செலவுகளைக் கவனிச்சுக்க புதுசா ஒரு ஏற்பாடு உருவாச்சு. Board of Trusteesன்னு அந்தந்தப் பள்ளிக்கூடத்துக்குன்னு பெற்றோர்கள்,ஆசிரியர்கள், இன்னும் விருப்பம் இருக்கும் பொது மக்கள்னு யார்வேணுமுன்னாலும் இதுக்குண்டான தேர்தலில் பங்கு பெறலாம். அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் இதில் ஒரு உறுப்பினராக இருப்பார். உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும், மாணவர் சார்பாக ஒரு மாணவரும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
அரசாங்கம் பள்ளிகளுக்குத் தரும் மானியம் மட்டும் போதாதுன்னு பெற்றோர்கள் கிட்டே ஒரு விதமான டொனேஷன் வாங்கும் வழக்கம் இருக்கு. அது எவ்வளவுன்றதை இந்த போர்டு தீர்மானிக்கும். ஒரு குழந்தைக்கு இவ்வளவு, ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டப் பிள்ளைகள் பள்ளியில் இருந்தால் இவ்வளவுன்னு சொல்வாங்க. அதுவும் ரொம்பக் காசெல்லாம் கிடையாது. வருஷத்துக்கு 30$ வரைக்கும் இருக்கலாம். முதல் குழந்தைக்கு 30ம், அடுத்து வரும் குழந்தைகளுக்கு 20ம் வாங்கறதும் உண்டு. ஆனா எல்லாக் குடும்பத்துக்கும் இது ஒண்ணுபோலத்தான்.இதைக் கட்டாயம் தரணுமுன்ற நிர்பந்தமும் கிடையாது. முடியாதுன்னுக் கூட சொல்லலாம்.
அதே மாதிரி பள்ளியின் வருமானத்தைக் கூட்ட எதாவது 'ஃபண்ட் ரெய்சிங்' நிகழ்ச்சிகளும் நடத்துவது பள்ளிக்கூடத்துக்கான சீருடைகள் தெரிவு என்று எல்லாமே இவங்க பொறுப்புதான். இந்த போர்டு உறுப்பினர்கள் அப்பப்ப ஒன்றுகூடி விவாதிச்சு, பள்ளிக்கூடத்துக்கு வேண்டியதைச் செய்வாங்க. வருசக் கடைசியில் அரசாங்கத்துக்கு இவுங்க செஞ்ச விவரங்களோட அறிக்கையை அனுப்பணும்.
எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் குறைஞ்சது ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை School Fair நடத்துறது உண்டு. ( இந்த மாதிரி ஒருஸ்கூல்ஃபேர் படங்கள்தான் இந்தப் பதிவுலே போட்டிருக்கேன். )பெற்றோர்களுக்கும் வீட்டுலே இருக்கும் வேண்டாத சாமான்களைக் கழிச்சுக்கட்ட வழி கிடைச்சுருச்சு. ஒருத்தருக்குத் தேவை இல்லாதது அடுத்தவங்களுக்குத் தேவைப்படலாம் இல்லையா? எதைத்தான் பள்ளிக்கூடத்து ஃபேர்லே கொடுக்கறதுன்னு இல்லாம டி.வி, கட்டில், மேசை நாற்காலி முதற்கொண்டு, போடாம சும்மாக் கிடக்கற செருப்பு வரைக்கும் கொண்டு வந்து குமிச்சுருவாங்க. இப்பக் கொஞ்சவருஷமா கணினியும் வந்துருது:-))))
கேக் ஸ்டால்னு விதவிதமா பிஸ்கெட், மஃப்பின், கேக் பண்ணிக் கொண்டுவந்து கொடுப்பாங்க. நான் ஒரு சமயம் ரெண்டு பக்கெட் நிறைய முறுக்கு பண்ணிக் கொடுத்தேன். ஒரு சமயம் நானும் கோபாலுமா சேர்ந்து இண்டியன் சமையல்ன்னு ஃப்ரைடு ரைஸ், உருளைக்கிழங்கு கறி, அங்கே பள்ளி வளாகத்துலேயே செஞ்சோம். 120 பேருக்கு அதை வித்துட்டோம்:-)))))
வர்றவங்களுக்குப் போரடிக்காம இருக்க இசை நிகழ்ச்சி, face painting, மிஸ்ட்ரி பாட்டில்ஸ்ன்னு பேப்பர்லே பொதிஞ்சு வச்சுவிக்கறது( உள்ளே நல்ல சாமான்கள்தான் சாக்லேட், பிஸ்கட், மிட்டாய்ன்னு) குதிரை வச்சுருக்கறவங்க அதை இங்கே கொண்டு வந்து பிள்ளைங்களை சவாரிக்கு ஏத்தி விடறதுன்னு கலகலன்னு இருக்கும். பண்ணை வச்சு இருக்கும் பெற்றோர் காய்கறி, பழங்கள்னு கொண்டுவந்து விப்பாங்க. எல்லா வருமானமும் அன்னிக்குப் பள்ளிக்கூடத்துக்குத்தான். நான்கூட ஒரு பாட்டில் எலுமிச்சை வாங்குனேன்.
ஞாயித்துக்கிழமைகளிலும் கடைகளைத் திறந்துக்கலாமுன்னு ஆரம்பிச்சதும் இந்த வருசம்தான். முக்கியமா சூப்பர்மார்கெட்டுகள் இதை வரவேற்றுச்சு. மக்களும்தான். லீவுன்னுட்டு முடங்கிக் கிடக்காம 'மால்' சுத்த வசதியாப் போச்சு.
இதுவரைக்கும் இங்கே ரெண்டே ரெண்டு டிவி சேனல்கள்தான் அரசு நடத்திக்கிட்டு இருந்துச்சு. இப்ப ஒரு தனியார் ஒளிபரப்பு மூணாவது சேனலா ஆரம்பிச்சது. அவுங்க நல்லா நடத்த ஆரம்பிச்சதும், முதல்லெ இருந்த ரெண்டுசேனல்களும் கொஞ்சம் தரத்தை(?)க் கூட்டுச்சு. இதுலே சேனல் ஒண்ணு, இங்கிலாந்து தேசத்து நிகழ்ச்சிகளுக்கு இங்கே ஆதரவா செயல் பட்டுச்சு. சேனல் ரெண்டு, அண்டை நாடான ஆஸ்தராலியா நிகழ்ச்சிகளை இங்கே காமிச்சது.மூணாவது சும்மா இருக்குமா? நான் அமெரிக்காவுக்குன்னுட்டு, அமெரிக்கன் நிகழ்ச்சிகள். எல்லாம் அங்கெ இருந்து இங்கேன்னு 'ரிப்பீட்டு'தான். நாடு சின்னதா இருக்கறதாலே நியூஸும் கொஞ்சமாத்தானே இருக்கும். பின்னே எப்படி நேரத்தை இட்டு நிரப்பறது? 'போதாக்குறைக்குப் பொன்னம்மா'ன்னுட்டு இந்த சானல் 3 என்னடான்னா, 24 மணி நேரமும்ஒளிபரப்புச்சு. மத்தவங்க ச்சும்மா இருக்கமுடியுமா? நாங்களுமுன்னு போட்டிக்கு வந்தாங்க. இதனாலே என்ன ஆச்சு?தேசிய கீதத்துக்கு ஆப்பு! தினமும் காலையிலே பத்து மணிக்கு ஆரம்பிச்சு, ராத்திரி பத்தரை, பதினொண்ணுவரை மட்டும் இருந்த குறிப்பிட்ட நேரத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆரம்பிக்கும் சமயம் நியூஸி தேசிய கீதம் பின்னணியில் ஒலிக்க, இங்கத்து இயற்கைக் காட்சிகள் அப்படியே திரையில் ஓடும். பார்க்கவே ரம்மியமான காட்சிகள். மாலை எட்டரை ஆச்சுன்னா பிள்ளைங்களுக்குப் படுக்கற நேரம் என்றதாலே 'குட் நைட் சில்ரன்'னு கார்டு காமிச்சுருவாங்க. எதாவதுவயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கும் காட்சிகள் உள்ள திரைப்படங்களோ, மத்த விஷயங்களோ அதுக்கு அப்புறம்தான் ஒளிபரப்பு. இப்படி இருந்த நேர்த்தியான ஒழுங்கு முறை எல்லாம் போய் 24 மணி நேரமும் 'லோ லோ'ன்னு தொலைக்காட்சிஓட ஆரம்பிச்சது. இந்த லட்சணத்துலே தேசிய கீதத்தை எப்பப் போடறது?
மவொரிகள், மீன் பிடிக்கும் உரிமை அவுங்களுக்குதான்னு சொல்லிக் கொஞ்சம் ஆர்ப்பாட்டமெல்லாம் செஞ்சு,ஆறுகளிலும், சில கடல் பகுதிகளிலும் அவுங்களுக்கு மட்டுமே மீன் பிடிக்க உரிமைன்னு அரசாங்கத்துக்கிட்டே இருந்து அனுமதி வாங்கிக்கிட்டாங்க. அதுக்குன்னு ஒரு சட்டம்கூட வந்துருச்சு. ச்சும்மாப் பொழுது போக்கா மீன் பிடிக்க விரும்பும் மத்தவங்களுக்கு என்ன இடம், எங்கேன்னு சொல்லி ஒரு லைசன்ஸ் வாங்கிக்கணும். இங்கே கட்டுமரம் எல்லாம் இல்லாததால் மீனவர் கடற்கரையில் குடி இருக்கும் நிலமை கிடையாது. எல்லாமே இயந்திரப்படகுகள். மீன் வியாபாரம் இன்னும் மவொரிகள் நடத்தும் நிறுவனங்களின் கைகளில்தான்.
இதுவரை லேபர் கட்சியின் தலைவரா இருந்தவர் கருத்து வேறுபாடு காரணம் தனியாப் பிரிஞ்சுபோய் 'புது லேபர் கட்சி'ன்னு தொடங்குனார். ( தி.க, திமுக, அதிமுகன்னு பிரிவுகளைப் பத்தித் தெரிஞ்சதாலே இது ஒண்ணும் அதிர்ச்சிதரும் புதுவிஷயமா எனக்குப் படலை.ஆனா....) மக்களுக்கு ரொம்ப ஆச்சரியமாப் போச்சு. அவர் கட்சிக்கும் ஆதரவாளர்கள் இருந்தாங்க.
Posted by
துளசி கோபால்
at
5/08/2007 07:27:00 PM
16
comments
Labels: நியூஸிலாந்து, பொதுவானவை
Monday, May 07, 2007
நியூஸிலாந்து பகுதி 56
1988லே ரெண்டு முக்கிய நிகழ்ச்சிகள் இங்கே நடந்துச்சு. ரெண்டுமே ஒரு ரெண்டு வார இடைவெளியில்.
1988 பிப்ரவரி மாதம் 23ந்தேதி. சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய நாள்:-) உங்க டீச்சராகிய நான், நாலரை வயசான மகளொடும், கணவரோடும் இங்கே குடியேறினேன். எண்ணி ரெண்டாவது வாரம் மார்ச் 7 தேதி. புயல்'போலா' ஊரையே பிரிச்சு மேஞ்சிருச்சு. ஹிந்தியிலே 'போலா'ன்னு சொன்னால் 'அப்பாவி, வெகுளி'ன்னு அர்த்தம்.ஆனா இந்த 'சைக்ளோன் போலா' அடிச்ச அடியிலே 90 மில்லியன் டாலர் நஷ்டக்கணக்கு. வடக்குத் தீவின் கிழக்குப்பகுதி பூராவும் பயங்கர சேதம். உயிர்ச்சேதமுன்னு சொன்னால் 3 பேர். இந்தப் பக்கங்களில் பண்ணைகளும், பழத்தோட்டங்களும் அதிகம் இருக்கு. கிவிப் பழங்கள் மிகவும் கூடுதலா விளையும் தோட்டங்கள். எல்லாத்துக்கும் பயங்கர சேதம். 1765 பண்ணையாளர்களுக்கு பாதிப்பு. இனி வருங்காலத்தில் வெள்ளம் வந்தால் என்னென்ன ஏற்பாடுகள் செஞ்சுக்கவேண்டி இருக்குமுன்னு திட்டங்கள் எல்லாம் தயாரிச்சு வச்சுக்கிட்டாங்க. ஆனா இதெல்லாம் சொல்லிட்டா வருது?
இறந்த மூணு பேரும் காருலே பயணம் செஞ்சுக்கிட்டு இருந்தப்ப, ஆத்துலே வெள்ளம் எதிர்பாராம வந்து ரோடை அப்படியே அரிச்சுக் காரை உருட்டிக்கிட்டுப் போயிருச்சு. அப்படியும் அந்த வண்டியில் இருந்த மத்த ரெண்டுபேரை ஒரு வழியாக் காப்பாத்துனாங்கதான்.ஆனா பாவம், இந்த மூணு பேருக்கு தப்பிக்கச் சான்ஸ் கிடைக்கலை.
இந்த சமயத்துலே வேலை இல்லாத் திண்டாட்டம் வேற சேர்ந்துக்கிச்சு. ஒரு லட்சம் பேருக்கு மேலெ வேலை இல்லாம இருந்தாங்க. அரசாங்கத்துக்குச் செலவு அதிகமாகுதுன்னு சின்ன ஊர்களில் இருந்த 432 தபால் ஆபீஸுகளை மூடும்படியாச்சு.
ஆனா அரசாங்கம் ச்சின்னப்பிள்ளைகளுக்குக் கொடுத்துக்கிட்டு இருந்த அலவன்ஸை நிறுத்தலை. ஒரு ரெண்டு மூணுவருஷமாக் கொடுத்துக்கிட்டுத்தான் இருக்காங்களாம். தாய்தகப்பனோட வருமானம் கணக்கில் எடுத்துக்காம, 16 வயசுக்குக் கீழே இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் வாரம் 6 டாலர் அரசாங்கம் தந்துக்கிட்டு இருக்கு. அந்தக் குழந்தையின்பெயரில் ஒரு பேங்க் கணக்கு ஆரம்பிக்கணும். அந்தக் கணக்குக்கு வாராவாரம் தானாவே இந்தக் காசு வந்து சேர்ந்துரும்.சேமிப்பின் அவசியத்தைக் குழந்தைகள் உணரணுமுன்னு தபால் இலாக்கா மூலம் சேமிப்புக் கணக்குக்கு வாரம் ஒரு நாள்னு பள்ளிக்கூடத்துலேயே வந்து பிள்ளைங்கள் கொடுக்குற காசை வரவு வச்சு அவுங்களுக்குன்னே ஒரு பாஸ் புக் கொடுத்துவச்சிருந்தாங்க.( எல்லாம் நம்மூர் போஸ்ட் ஆஃபீஸ் சேவிங்க்ஸ் பேங்க்தான்)பிள்ளைகளும் ஒரு அம்பது செண்ட் கிடைச்சாலும் அதுலே போட்டுச்சுங்க.
மக்களுக்குக் குடி இருக்க வீடுகள் பற்றாக்குறை அதிகமா இருந்துச்சு. அரசாங்கத்தாலே எல்லாருக்கும் வீட்டைக் கட்டிக்கொடுக்க முடியலை. வீடு சொந்தமா வாங்கிக்கலாமுன்னா வீட்டுக் கடனுக்கு வட்டி ஏறக்குறைய 19 சதமானம்.வட்டி கட்டுறதுமில்லாம, மக்கள் 20 சதமானம் முதல் வச்சுக்கிட்டுத்தான் வீடு தேடணும். அவ்வளவு பணம் அப்ப யார் கிட்டே இருக்கு? எப்படியாவதுஒரு வழி வேணுமேன்னு அரசாங்கம் முதல்முறையா வீடு வாங்கறவங்களுக்குக் குறைஞ்ச வட்டியில் கொஞ்சம் தொகைகடன் கொடுக்க முன்வந்துச்சு. வங்கிகளும் தொலைக்காட்சியிலும் ரேடியோவிலும் 'நாங்க கடன் தரோம் வாங்க வாங்க'ன்னு இடைவிடாமக் கூப்புட்டுக்கிட்டு இருந்துச்சு. நிரந்தர வருமானம் இருக்கும் வேலையில் இருந்தால் 'இவ்வளவு தொகையைக்கடன் தர்றோம். வீடு வாங்கிக்க'ன்னு முன் அனுமதி வேற கொடுத்துச்சு. அந்தக் காசுக்குத் தகுந்தபடி வீடு வாங்கிக்கலாம்.ஆனா அந்தக் காசுக்குள்ளெ அடங்கும் வீடுகள் அவ்வளவா நல்லா இல்லைன்றது வேற கதை! எப்பவுமே வீடுன்றது நம்ம பட்ஜெட்டை மீறும் விஷயம்தானே?
இன்னொண்ணு , இந்த நாட்டுலே வீட்டுவாடகை வாரம் இவ்வளவுன்ற கணக்குதான். மாச வாடகை கிடையாது. சம்பளமும் வாரம் இவ்வளவுன்னு கிடைக்கும். சம்பளம் வாங்குன கையோடு வாடகை கொடுத்துடலாம். இருக்க இடம் ரொம்ப முக்கியமாச்சே. ரெண்டு வார வாடகை அட்வான்ஸ் கொடுக்கணும். அந்தக் காசு இங்கே இருக்கும் ஒரு தனி நிறுவனத்துக்குப் போய்ச்சேரும். வீட்டைக் காலி செய்யும்போது, வீட்டுக்குச் சொந்தக்காரர்
வந்து பார்த்து எல்லாம் ஒழுங்காக இருக்குன்னுன்னு கையெழுத்துப் போட்டுத்தரணும். அதை அனுப்புனதும், அந்த நிறுவனம் அட்வான்ஸ் காசைத்
திருப்பி நமக்கு அனுப்பிரும். நாம் குடியிருந்த வீட்டில் எதாவது உடைச்சுக்கிடைச்சு வச்சுருந்தோமுன்னு வையுங்க, அதுக்குண்டான செலவை
அட்வான்ஸ் தொகையிலிருந்து எடுத்து உடமையாளருக்குத் தந்துருவாங்க.
ஒருநாள் திடீர்னு ஒரு செய்தியைக் கேட்டுட்டு அப்படியே திகைச்சு நின்னுட்டேன். வேலையை வேணாமுன்னுசொல்லி விலகிட்டார் நாட்டின் பிரதமர்!! காரணம் ? உடல் நிலை சரி இல்லையாம். இன்னுமொரு அதிர்ச்சி. என்னதான்உடம்பு முடியாமப் போனாலும் விடாப்பிடியா பதவியில் இருக்கும் மந்திரிகளை மட்டுமேப் பார்த்துப் பழக்கப்பட்டிருந்த மனசுக்கு இது நம்ப முடியாத நிகழ்ச்சியா இருந்தது.' ஜெஃப்ரி பால்மர் என்ற உதவிப் பிரதமர் இப்போ பிரதமர் நாற்காலியில் உக்கார்ந்தார்.
Posted by
துளசி கோபால்
at
5/07/2007 11:36:00 AM
16
comments
Labels: நியூஸிலாந்து, பொதுவானவை
Friday, March 02, 2007
தமிழில் ஒரு சந்தேகம்.
சமீபத்தில்(???) ஒரு படம் பார்த்தேன். கதாநாயகன் பெயர் 'தமிழ்'. இதுக்கு முன்னேகூட
ரெண்டொரு தமிழ்ப் படத்தில் இந்தப் பேரைப் பார்த்துருக்கேன். அப்ப வராத ஒரு சந்தேகம்
திடீர்னு மனசுலெ இப்ப வந்துருச்சு.
தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன், தமிழரசி, தமிழரசன், தமிழ்....... தமிழ்........ன்னு பல பெயர்களைச் சாதாரணமாத் தமிழ் நாட்டிலே பார்க்கறொமே. இதேபோல வேற யாராவது எந்த
மொழிக்காரர்களாவது அவுங்க மொழியைப் பேரா வச்சுக்கறாங்களா?
தெரிஞ்சவுங்க சொல்லுங்கப்பா.
தெலுங்கரசி, மலையாளச்செல்வன், கன்னடச் செல்வி, மராத்தி, இந்தின்னு
எங்கேயுமே இல்லையோ?
அப்ப இது நமக்கு மட்டுமே சிறப்பான ஒண்ணா?
இங்கே நியூஸியில் ' இங்கிலிஷ்'ன்னு சர் நேம் இருக்கு.
Posted by
துளசி கோபால்
at
3/02/2007 03:51:00 PM
41
comments
Labels: பொதுவானவை
Wednesday, February 21, 2007
நம்மில் யாராவது graphic designer ஆக இருக்கும் வாய்ப்பு உண்டா?
மக்கள்ஸ்,
இங்கே நம்ம தமிழ்ச்சங்கத்துக்கு ஒரு பேனர் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கு.
அதுக்குப் பொருத்தமான டிஸைன்களை வரைஞ்சு தரக்கூடியவர்களைத் தேடி
அலுத்துப் போயிட்டோம்.
நம்மில் யாராவது இந்தப் பணியைச் செய்து தர இயலுமா? கொஞ்சம் அலங்கார வேலைகள்
செய்ய வேண்டி இருக்கும். பேனரின் நீள அகலங்கள் 3 x 1.5 மீட்டர் வரணும்.
குறிப்பாகத் தமிழர்கள் ( இலங்கை & இந்தியா) செய்து தர இயலுமானால்
அவர்களுக்கு நம் அலங்கரிப்புத் தேவைகளை விளக்குவது சுலபம். எங்களுடைய
தமிழ்ச்சங்கத்தின் logo முக்கியம்.
இதற்காக ஒரு தொகையும் சங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது. தயவு செய்து
விருப்பம் உள்ளவர்கள், அல்லது உங்களுக்குத் தெரிஞ்ச நண்பர்கள் யாராவது
உதவ முடியும் என்று நீங்கள் நினைத்தால் பின்னூட்டம் மூலமாக உங்கள்
மெயில் ஐடியைத் தெரிவித்தால் ( அதை நான் வெளியிடமாட்டேன் என்பது உறுதி)
உங்களைத் தொடர்பு கொண்டு விளக்கங்கள் தர எண்ணம்.
தயவுசெய்து உதவணும். செய்வீங்கதானே?
ரொம்ப எதிர்பார்ப்புடன்,
துளசி
Posted by
துளசி கோபால்
at
2/21/2007 12:59:00 PM
12
comments
Labels: பதிவர் வட்டம், பொதுவானவை


