Wednesday, June 13, 2007

நியூஸிலாந்து பகுதி 69

இது மூணாவது டெர்ம் லேபருக்கு. 2005 வருசத் தேர்தலிலும் வெற்றிதான். ஆனால் கூட்டில்லாம முடியாது. கிடைச்ச இடம் 50. 'டக்'ன்னு நேஷனல் 48 இடம் புடிச்சுருச்சு. இந்த ரெண்டு சீட் வித்தியாசம் கூட கேக் பங்கு வச்சதுதான். தேர்தலில் ஓட்டு வாங்கி ஜெயிச்சது ரெண்டு கட்சிக்கும் தலா 31. என்ன செய்யலாம்? கூட் கூட் கூட்டுதான். வேற வழி?



நியூஸி ஃபர்ஸ்ட், கிரீன் கட்சி ரெண்டும் தேர்தலில் ஒரு இடம்கூட ஜெயிக்கலை. ஆனா 'கேக்' பங்கா 7, 6 ன்னு கிடைச்சது. மவொரிக் கட்சிக்கு 4 இடம். லேபர், யுனைட்டட் ப்ராக்ரசிவ் கட்சியுடன் கூட்டும், நியூஸி ஃபர்ஸ்ட் & யுனைட்டட் ஃப்யூச்சர் ரெண்டும் ஆதரவு தரேன்னு சொன்னதாலெ அவுங்களொடு சேர்ந்தும் 'அரசுக் கட்டிலைப் பிடிச்சாங்க'. ச்சும்மா ஆதரவு யாருங்க கொடுப்பாங்க? நியூஸி ஃபர்ஸ்ட் விண்ட்ஸ்டன் பீட்டர்ஸ் வெளியுறவு அமைச்சர். யுனைட்டட் ஃப்யூச்சர், Peter Dunne ரெவின்யூ அமைச்சர். க்ரீன் கட்சியும் குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு மட்டும் வெளியே இருந்து ஆதரவு தர்றோம்னுச்சு.


ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சில 'புது' வாக்குறுதிகளாவது கொடுத்தாகணும் இல்லையா? போன முறை கொடுத்ததுதான் இப்பவுமுன்னு இருந்தா மக்கள்ஸ்க்கு ஆதரவு தரும் ஆர்வம் குறைஞ்சுறாது? அரசியல்வாதிகளுக்கு மாணவர்மீதுதான் கண். இளைய தலை முறையாச்சே..................அவுங்களைக் குஷிப் படுத்தறது ரொம்பவே முக்கியம்:-)\
மாணவர்கள் வாங்குன கடனுக்கு இனிமே வட்டியே இல்லைன்னு சொல்லி இருக்காங்க.ஆனா ஒரு கண்டிஷன். இது, படிச்சு முடிச்சுட்டு இங்கே நியூஸியிலேயே இருந்து வேலை பார்க்கறவங்களுக்கு மட்டும். நல்லதுதான். அவுங்க சம்பாரிச்சுக் கடனைக் கட்டினால்தான், பிற்காலத்தில் வாழ்க்கையில் செட்டில் ஆகும்போது வீடு வாங்கக் கொள்ள வங்கிகள் கடன் தரும். வங்கிக் கடன் வாங்காம வீட்டைக் கனவில்கூட வாங்க முடியாத நிலைதான் இப்ப இருக்கு. நிறையப்பேர் கடன் வாங்கிப் படிச்சுட்டு வெளி நாட்டுக்கு வேலைக்குப் போயிடறாங்க. மாணவர்களுக்கு எந்த விதமான ஜாமீனும் இல்லாம, 'திருப்பிக் கட்டுவாங்கன்ற நம்பிக்கை'யில் மட்டுமே அரசாங்கம் கடன் கொடுக்குது.



கவர்னர் ஜெனரலின் பதவிக்காலம் முடிஞ்சது. இந்தியர்களுக்குப் பெருமை தரும் விதமா 'ஆனந்த் சத்யானந்த்' என்றஃபிஜி இந்தியர் கவர்னர் ஜெனரலா 2006 வருஷம் பதவிக்கு வந்தார். இவர் இங்கே நியூஸியில் பிறந்து வளர்ந்தவர்தான்.ஆனாலும் வெள்ளையரல்லாத ஒருத்தர் அதுவும் நம்ம இனத்தவர் இந்தப் பெரிய பதவிக்கு வந்ததை மனமாரப் பாராட்டத் தோணுது. ஐயோ கடவுளே...... நானும் ரேசியல் மாதிரி பேசறேனா(-:





டோனால்ட் தாமஸ் ப்ராஷ்(Donald Thomas Brash) ன்னு டாலர் நோட்டுலே கையெழுத்துப் போட்டுக்கிட்டு, நாட்டின் பொருளாதாரத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தவர் எதிர்க்கட்சியா செயல் பட்ட நேஷனலுக்குத் தலைவரானார். டான் ப்ராஷ்( Don Brash) இங்கத்து ரிஸர்வ் பேங்க் கவர்னரா இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தலைமை இருந்ததாலேதான் 48 இடம் 2005லே கிடைச்சதுன்னு(ம்) பேசுனாங்க.மக்களுக்குப் பேசச் சொல்லிக் கொடுக்கணுமா என்ன? கருத்துக்களை அப்படியே அள்ளித் தெளிச்சுருவொம்லெ!



இவர் வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்காம, அரசாங்க உதவி வாங்குறவங்களைப் பத்தியெல்லாம் கொஞ்சம் மனம் நோகும்படிப் பேசிட்டார். போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு மவொரிகளைப் பத்தியும் சில வார்த்தைகளை விட்டுட்டார். இவர் நிறவேறுபாடு பார்க்கறவர்னு பேச்சு ஆரம்பிச்சது. 'அப்படியெல்லாம் இல்லையாக்கும், என் மனைவி சிங்கப்பூர் பெண்மணி'ன்னு சமாளிச்சார். இங்கேதான் அப்பப்பக் கருத்துக் கணிப்புன்னு எதாவது நடந்துக்கிட்டே இருக்குமே. அதுலெ இவரோட புகழ்(??) 'டுபுக்'னு இறங்கிருச்சு. கட்சிக்குள்ளெ ஒரே சோகம். பேசாம இவரைத் தூக்கிட்டாங்க. இப்ப எதிர்கட்சித் தலைவரா 'ஜான் கீ'( John Key) ன்றவர் இருக்கார். அடுத்த வருசம் 2008லே பொதுத் தேர்தல் வருது. இன்னும் ஒரு வருசத்துக்குள்ளே மக்கள் மனசுலே இடம் பிடிக்க எல்லாக் கட்சிகளும் 'லோ லோ'ன்னு அலையறாங்க.



வேலையில்லாத் திண்டாட்டம் இப்ப 3.7 %தான். போனவருஷம் 11.5 பில்லியன் டாலர்கள் கூடுதலா கஜானாலே இருக்குன்னு அரசாங்கம் சொல்லியாச்சு. டாலர் மதிப்பு ஸ்டடியா இருக்கு. இதெல்லாம் குறிப்பிடத்தக்க நல்ல விஷயங்கள்தானே?



இங்கத்துப் பார்லிமெண்டுலே 30 சதவீதம் அங்கத்தினர் பெண்கள். இதுவே இன்னும் போகப்போக அதிகமாகலாம்.அரசியலுக்கு வர்றதுலெ இப்ப பெண்கள் அதிக ஆர்வம் காட்டறாங்க. பல ஊர்களில் பெண்கள்தான் மேயராக இருக்காங்க.எங்க ஊருக்கு அடுத்த வருஷம் மேயர் தேர்தல் உண்டு. ரெண்டு பெண்கள்தான் போட்டி போடறாங்க. பெண்கள் பூசாரிகளாஆகலாமா கூடாதான்னு விவாதம் நம்ம நாட்டுலே நடந்துக்கிட்டு இருக்கறதைப் படிச்சப்பத்தான் ஞாபகம் வந்தது,இங்கே நியூஸியில் 1989லேயே முதல்முறையா ஒரு பெண் 'Penny Jamieson' பிஷப் பதவிக்கு வந்துருக்காங்க.




ஊழல்கள் இல்லாத நாடுகளின் வரிசையில் முதலாவது இடம் பிடிச்ச மூணு நாடுகளில் நியூஸியும் ஒண்ணு.மத்த ரெண்டு நாடுகள் பின்லாந்தும், ஐஸ்லாந்தும். 9.6 ன்னு சொல்றாங்க. இது 2006 வருஷக் கணக்கு. அப்படியும் அரசியல்வாதிகள் சிலர் ச்சின்ன ஊழல்கள் செஞ்சுட்டு, அது தொலைக்காட்சி, பத்திரிக்கைன்னு எல்லா இடத்திலும் தொவைச்சுக் காயப் போட்டுடறதாலே இன்னும் மோசமா ஆகாம இருக்கு.




சீரியஸ் ஃப்ராடு ஆஃபீஸ்னு ஒண்ணு இருக்கு. அவுங்களுக்கு வேலையே கண்ணுலே விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டுப் பார்க்கறதுதான். பாராளுமன்றத்தின் மவொரி இனத்து பெண் அங்கத்தினர், ஒரு குறிப்பிட்டச் செலவுக்காகக் கொடுத்த அரசு நிதியை, தன்னோட உடல் இளைக்கறதுக்கான அறுவை சிகிச்சைக்குச் செலவு செஞ்சுட்டாங்க. இவுங்களொட அறுவை சிகிச்சையையும், அழகான உடலையும் பாராட்டி, ஒரு பெண்கள் பத்திரிக்கையில் வந்துச்சு. இது போதாதா? பொதுக் காசைத் தனக்குச் செலவு செஞ்சுக்கிட்டக் குற்றம் நிரூபிக்கப்பட்டு இப்ப ரெண்டே முக்கால் வருஷம் சிறை தண்டனை கிடைச்சிருக்கு. குற்றத்துக்கு உடந்தையா இருந்த அவுங்க கணவருக்கு ரெண்டு வருஷம் ( home detention) ஹவுஸ் அரெஸ்ட்.




ஒரு மந்திரி, வீடு மாறிப்போகும்போது அவரோட பூனைகள் ரெண்டை அங்கேயே விட்டுட்டுப் போயிட்டார். 11 நாள் கழிச்சுத்தான் அதுகளைக் கொண்டு போக வந்தார்னு பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லி, RSPCA அவர்மேலே மிருகவதைக் குற்றம் சாட்டி அவருக்கு எச்சரிக்கை விட்டுச்சு. இவரே ஒரு சமயம் குடிச்சுட்டு கார் ஓட்டுனதாக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அடைஞ்சார். இதெல்லாம் மந்திரி பதவியில் இருக்கும்போது நடந்துச்சு.




பிரதமரின் கார் குறிப்பிட்ட வேகத்தைவிட அதிகமாப் போச்சுன்னு போலீஸ் கேஸ் புக் பண்ணினது, கோர்ட்லே வழக்கு பதிவாகி ஓட்டுனருக்குத் தண்டனையும், உள்ளெ இருந்த பிரதமருக்கு எச்சரிக்கையும் கிடைச்சது.




ஒரு பாராளுமன்ற அங்கத்தினர், ரெஸ்டாரண்ட்லே சாப்புட்டுட்டுப் பணம் கொடுக்காம போயிட்டார்னு தொலைக்காட்சிகளில் எல்லாம் போட்டு நாறடிச்சாங்க. அவர் 'தண்ணி'யிலே இருந்ததாலெ பணம் கொடுக்க விட்டுப்போச்சுன்னு சொன்னாங்க.





ஒரு பார்லிமெண்ட் அங்கத்தினர் மகளும், அவுங்க நண்பரும் சேர்ந்து இன்னொரு நண்பரின் காருக்குத் தீவச்சுட்டாங்கன்னு குற்றம் பதிவாகி தண்டிச்சதுன்னு சிலதைச் சொல்லலாம்.





காவல்துறை ரொம்பவும் சிறப்பாச் செயல்படுது. ட்ராஃபிக் போலிஸ்ன்னு தனியா ஒண்ணும் இல்லை. மக்களும் சாலைவிதிகளை மதிச்சு நடந்துக்கறதாலே இதுக்குண்டான அவசியமும் அவ்வளவா இல்லை. எப்பவாவது ட்ராஃபிக் லைட்கள்வேலை செய்யலேன்னா மக்களே 'வலது பக்கம் முன்னுரிமை' கடைப்பிடிச்சிருவோம். இங்கே அடிக்கடி ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட சைக்கிள் ரேஸ், ஓட்டமுன்னு இருந்தால் அன்னிக்கு மட்டும் விளையாட்டு வீரர்கள் ஓடிவரும் சாலைகளில் உள்ள ட்ராஃபிக் லைட்களைச் செயல்படாம முடக்கி வச்சு, சில காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்கு பண்ணுவாங்க.






ஆனா 'ஹைவே'யில் அதிக வேகமாப் போறவங்களைப் பிடிக்க Highway Patrol கார்கள் ஒளிஞ்சிருக்கறதைப் பார்த்திருக்கேன். நகரத்தில் முக்கியமான இடங்களில் 'ரெட் லைட்' கெமரா வச்சுருக்காங்க. விதிகளை மீறுபவர்களைஅது போட்டொ பிடிச்சுக் காமிச்சுக் கொடுத்துரும். அபராதம் கட்டச் சொல்லி நோட்டீஸ் வந்துரும். 'நான் யார் தெரியும்லெ'ன்னு ' வீர வசனம்' எல்லாம் பேசமுடியாது:-)





இங்கே தெற்குத்தீவில் அவ்வளவா கூட்டம் இல்லாததாலும், நான் இங்கே வசிக்கிறதாலும் இதை இப்படிக் கவனிச்சிருக்கேன்.ஒருவேளை ஆக்லாந்து நகரில் ( 11 லட்சம் மக்கள் இருக்காங்க அங்கே) போக்குவரத்துக்குன்னு காவலர்கள் இருக்கலாம்.



காவலர்கள் பொதுவா கைத்துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வச்சுக்கறதில்லை. வெறுங்கைப் போலிஸ்தான். இப்ப சமூக விரோதிகளை வளைக்கும் இடத்தில் போறவங்க மட்டும் 'பெப்பெர் ஸ்ப்ரே' வச்சுருக்காங்க. யாரையாவது அரெஸ்ட் செஞ்சாலும் யாரையும் யாரும் அடிக்கறதெல்லாம் இல்லை. சிறைச்சாலைகளில் கூட அடிஉதையெல்லாம் இல்லை. ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னே ஒரு குற்றவாளியை அடிச்சுட்டார்னு ஒரு காவலரை வேலையைவிட்டுத் தூக்கிட்டாங்க. பல வருசத்து முன்னே காவலர்கள் சிலர் தன்னைக் கற்பழிப்பு செஞ்சதா ஒரு பெண்மணி குற்றம் சாட்டினதைத் தொடர்ந்து நாடே கொந்தளிச்சுப் போச்சு. குற்றம் நிரூபணமானதும் தண்டனை கிடைச்சது. பெண்மணிக்கு நஷ்ட ஈடும் ஒருபெரும்தொகை கிடைச்சது. இப்ப மூணு மாசம் முன்பு இன்னுமொரு பெண் இதைப்போல குற்றம் சாட்டிக் கடைசியில் அவுங்களெ பணத்துக்கு ஆசைப்பட்டுப் போலியாக் குற்றம் சாட்டுனாங்கன்னு தெளிவாயிருச்சு.





காவல்துறையைப் பார்த்து யாரும் பயப்படவேணாம். நட்பாவும் மரியாதையாயும் நடந்துக்குறாங்க. அரசாங்க உத்தியோகம்பார்க்குற பிரிவில் அதிக சம்பளம் ( பிரதமரை விடவும்) வாங்குவது இங்கத்து போலிஸ் கமிஷனர்தான்னு விவரம்கிடைச்சப்ப எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. இங்கே காவல்துறைக்கு சங்கம்கூட இருக்கு!




ஆரம்பப் பள்ளிகளுக்கு அப்பப்ப வந்து பிள்ளைகளுக்கு சாலைவிதிகள், இன்னும் சமூகத்துலே என்னென்ன செய்யக்கூடாதுன்னு பசங்க வயதுக்கேத்தபடி கலந்துரையாடல் நடத்திட்டுப் போவாங்க அந்தந்தப் பகுதியில் இருக்கும் காவலர்கள்.



பொதுவா பொருட்கள் திருட்டுப்போனா காவலர்கள் அதில் அதிகக் கவனம் செலுத்தறது இல்லை. முதலில் நம்மைக் கேக்கும் கேள்வி இன்ஷூரன்ஸ் இருக்கா? ஆமாம்னு சொன்னா என்னென்ன திருடு போச்சுன்னு ஒரு பட்டியல் போட்டுத்தரச் சொல்றாங்க. அதுக்கப்புறம் நாம் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு க்ளெய்ம் செய்யும்போது நாம் அங்கே தரும் பட்டியலும், போலிஸ் அவுங்களுக்கு அனுப்பும் காப்பியும் ஒரே மாதிரி இருந்தா நமக்கு இன்ஷூரன்ஸ் பணம் கிடைச்சிரும்.



நம்ம வீட்டுலே திருடன் வந்தப்ப இப்படித்தான் நடந்துச்சு. நாந்தான் கதைகளிலும், சினிமாவிலும் வர்றதை வச்சுக்கிட்டு,எந்த சாமான்களையும் தொடாம( திருடனோட கைரேகை அழிஞ்சுருமுல்லெ!) இருந்தேன். மனித உடம்புக்கோ, உயிருக்கோஅடி/காயம்/ஆபத்து ஏதும் இல்லைன்னா அதை ரொம்ப சீரியஸ்ஸா எடுத்துக்கறதில்லையாம்.





சமீபகாலமா ஆசியர்கள் குடியேறின பிறகு குற்றங்கள் அதிகரிச்சு இருக்கறதா தகவல்கள் வந்துக்கிட்டு இருக்கு(-:


நியூஸி காவல்துறை இண்ட்டர்போலில் அங்கம் வகிக்குது.
பொதுவா 'காவல்துறை உங்கள் நண்பன்' என்பது ரொம்பச் சரி.







முடிவுரை


எதோ எனக்குத் தெரிஞ்ச அளவுலே ஒரு சரித்திரத்தைச் சொல்லி இருக்கேன். சரித்திரமுன்னு இருக்கும்போது வருஷங்களையும்,எண்களையும் தவிர்க்க முடியாதுல்லையா? அதான் அங்கங்கே எண்களைக் குறிப்பிட வேண்டியதாப் போச்சு. நீங்க இதுவரை படிச்ச வேற சரித்திரப் புத்தகங்களோட நடையிலிருந்து இதன் நடை முற்றிலும் வேறுபட்டு இருந்துருக்கும்.ஏன்னா..........நான் சரித்திரத்தை எழுதலை. சொல்லி இருக்கேன். நான் அடிப்படையில் ஒரு 'கதை சொல்லி'!



வெளியில் இருந்து பார்க்கும்போது உலகத்துலேயே மிகச் சிறந்தநாடாகத் தெரியும் நியூஸியில் குற்றங்கள் நடக்கறதே இல்லைன்னு நினைச்சுறாதீங்க. இங்கேயும் உலகில் பொதுவா நடக்கறது நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. மனுஷங்கதானேஇதைச் செய்யறாங்க. இங்கேயும் மனுசங்கதானே இருக்கோம்? குறைஞ்ச அளவு மக்கள் தொகை இருக்கறதாலே,எதோ அங்கொண்ணு இங்கொண்ணு நடக்கறமாதிரித் தெரியும். ஆனா விகிதாச்சாரம் வச்சுப் பார்த்தால் ஏறக்குறைய ஒரே மாதிரியாகலாம். இதெல்லாம் தனிமனிதனின் குணக்கேடுகளால் நடக்கற குற்றங்கள். அரசியல்வாதிகளும்சில நாடுகளில்(???) நாம் பார்க்கறதுபோல அவ்வளவு மோசமில்லைன்னுதான் நினைக்கிறேன். மக்களுக்குநன்மை செய்யணும் என்ற எண்ணமும், சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்தாம இருக்கணும் என்ற எண்ணமும், நியூஸியை 'நியூக்ளியர் ஃப்ரீ' நாடாவே வச்சுக்கணும் என்ற எண்ணமும் ஒரு வேறுபாடு(ம்) இல்லாம எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொதுவா இருக்கு. இதை உண்மையாவே நாம் பாராட்டத்தான் வேணும். மேலும் உலகின் மற்ற எல்லா நாடுகளையும் போல்தான் அரசாங்கம் மக்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு திட்டங்கள் பல கொண்டு வருது. ஆனா அது பாதியில் நிக்காமஎல்லா மக்களுக்கும் பரவலாப் போய்ச்சேருது. அதுலேயும் அங்கங்கே ஆதாயம் பார்க்க நினைக்கும் அரசியல்வாதிகளோ,அவர்களது அடிப்பொடிகளோ 'இன்னும் இங்கே இல்லை'ன்றதுதான் ஒரு பெரிய ஆறுதல். எதுக்கெடுத்தாலும் தலையைச் சொறிஞ்சுக்கிட்டோ, சொறியாமலோ கை நீட்டும் ஆட்கள் எந்த மட்டத்திலும் இல்லை. இன்னும் சொல்லப்போனாஇந்த நாட்டுலே 'டிப்ஸ் ( Tips) வாங்கும் & கொடுக்கும் வழக்கமே இல்லை. அண்டை நாடான ஆஸியிலும் இப்படித்தான்.அறவே இந்தப் பழக்கம் இல்லாததால், மத்த நாடுகளுக்குப்(அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட) போகும்போது இப்படிக்கொடுக்கணும் என்ற உணர்வே இல்லாம 'ஏன் இந்த ஆள் பெட்டியைக் கொண்டுவந்து வச்சுட்டு இங்கேயே நின்னுக்கிட்டு இருக்கார்?'னு முழிச்சிருக்கேன். டாக்ஸிகளில் கூட மீட்டருக்கு மேலே 'போட்டு'த் தர்றது இல்லை. நாங்கதான் சிலசமயங்களில் சில்லறை இல்லைன்னு பத்து, இருபது செண்ட் குறைச்சுக் கொடுத்துருக்கோம்.



இயற்கை அழகை எடுத்துக்கிட்டா, இந்த நாட்டில் அழகான அம்சங்கள் அப்படியே கொட்டிக்கிடக்கு. அதையெல்லாம் நசிச்சுச் சீர்கேடு செய்யும் அளவுக்குப் 'பூமி பாரம்' இல்லாததும் ஒரு காரணமா இருக்கலாம்.நமக்கு விருப்பம் உள்ள மதத்தில் இருக்கவோ, விரும்புன மாதிரி வழிபாடுகள் நடத்தவோ எந்தத் தடையும் இல்லாம எல்லாரும் சுதந்திரமா இருக்கலாம். இங்கே வசிக்கும் மக்கள் அனைவருக்கும் பொதுவான சட்டங்களும் உரிமைகளும் இருக்கு. சட்டத்தின் முன்னால் எல்லாரும் ஒண்ணுதான்.


நன்றி உரை



இதுவரை நான் 'சொல்லிய' நியூஸி சரித்திரத்தைப் பொறுமையாப் படிச்ச நண்பர்களுக்கும், அவ்வப்போது பின்னூட்டமிட்டும்,தனி மடல்களிலும் உற்சாகப் படுத்திய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எழுதுன தொடர்களில் என் மனசுக்கு ரொம்பத் திருப்தியைக் கொடுத்தது இந்தத் தொடர்தான். இதுக்காக சரித்திரத்தில் பின்நோக்கி ஒருபயணம் செஞ்சதும், இதுக்காகவே நிறைய சரித்திரப் புத்தகங்களைப் படிச்சதும் மனநிறைவையே தந்துச்சு. இங்கிருக்கும் நூலகமும், வலையும், நான் தன்னார்வத்தொண்டு செஞ்சுக்கிட்டு இருந்த குழந்தைகள் நூலகமும் ரொம்பவே உதவியா இருந்துச்சு. இங்கே என் கிவி நண்பர்களிடமும், இன்னும் பல முதியோரிடமும் பல நிகழ்வுகளைப் பற்றிக்கேட்டுத் தெரிந்து கொண்டதும் ஒரு நல்ல அனுபவமா அமைஞ்சது.



இந்தத் தொடர் எழுத என்ன ஊக்குவிச்ச முதல் ஆளான தோழி மதிக்குத்தான் முதல் நன்றியைச் சொல்லணும்.அப்புறம், இது சம்பந்தமான என் வேலைகளில் குறுக்கிடாம அப்பப்ப (எனக்கு நிறைய நேரம் கிடைக்குறமாதிரி)வெளிநாடுகளுக்குப் போயிட்ட கோபாலுக்கும், நான் கணினியில் 'டொக் டொக்'ன்னு தட்டச்சு செய்யும்போதெல்லாம் 'எப்படியோ போ'ன்ற பார்வை பார்த்துட்டுக் காலடியில் சத்தமே போடாமல் (சைலண்ட் மியாவ்)ஒரு தொந்திரவும் செய்யாம இருந்த கோபாலகிருஷ்ணனுக்கும்(ஜி.கே, கோகி) நன்றியைச் சொல்லியே ஆகணும்.


எதாவது குற்றம் குறையோ அல்லது தவறான தகவல்களோ இருந்தால் சொல்லுங்க. காரணம் என் கவனக்குறையாகத்தான் இருக்கணும். சொன்னால் திருத்திக் கொள்வேன். அதெல்லாம் சரித்திரத்தைத் திருத்தி எழுதிருவொம்லெ:-))))


அனைவருக்கும் நன்றி & வணக்கம்

21 comments:

said...

ஒரு பாராளுமன்ற அங்கத்தினர், ரெஸ்டாரண்ட்லே சாப்புட்டுட்டுப் பணம் கொடுக்காம போயிட்டார்னு தொலைக்காட்சிகளில் எல்லாம் போட்டு நாறடிச்சாங்க. அவர் 'தண்ணி'யிலே இருந்ததாலெ பணம் கொடுக்க விட்டுப்போச்சுன்னு சொன்னாங்க

கொஞ்சம் பெரிய பதிவாக போய் விட்டது.
காசு கொடுத்தா தானே செய்தியா வரும்?என்னவோ போங்க பல விஷயங்கள் வித்தியாசமாக இருக்கு.
நானும் ஒரு தடவை இங்கு மெட்ராஸ் உட்லேண்ட்ஸில் சாப்பிட்டு விட்டு எழுத்து வந்துவிட்டேன்.கொஞ்ச தூரம் வந்த பிறகு,ஏதோ ஒன்று குறைகிறது என்று மனது சொல்ல நினைத்து நினைத்து பிறகு காசு கொடுக்க மறந்தது ஞாபகம் வந்தது.திரும்ப வந்து மன்னிப்பு கேட்டால்...பரவாயில்லை தம்பி,இப்படி போகிறவர்களை நாங்கள் கேட்பதில்லை என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார், ஹோட்டல் முதலாளி.
வசிக்க நல்ல நாடு தான்..
நேற்று குடியேற்ற விதிமுறைகளை படிக்க படிக்க கண்ணில் நீர் தாரை தாரையாக வருகிறது.:-))
(உ-ம்) வெளிநாட்டு பட்டப்படிப்பை அங்கீகரிக்க அங்குள்ள ஒரு அலுவலகத்துக்கு 450 டாலர் வைத்து ஒரிஜினல் சர்டிபிகேட்டை அனுப்பனுமாம்.அதை முடிக்க 1 மாதம் ஆகுமாம்.ஒரிஜினல் சர்டிபிகேட்டை அனுப்பும் அளவுக்கு தைரியம் வரவில்லை.

said...

முதல் பாதி ஒரே குழப்பம்- எனக்கு.ஒரு வேளை அரசியல் என்பதால் என்னவோ!
ஆனால் மறு பாதி சும்மா சிரிப்பு வெடிகளை அள்ளிப்போட்டுள்ளீர்கள்.

said...

வாங்க குமார்.

பதிவு கொஞ்சம் பெருசாத்தான் போச்சு.
'டக்'னு முற்றும் போட்டுட்டு, முடிவுரை, நன்றி உரை இதுகளை இன்னுமொரு பதிவாப் போடலாமான்னு
யோசிச்சேன்.
அப்புறம் இன்னிக்கு நாள் வேற நல்லா இருக்கே, இன்னிக்கே முடிக்கலாமுன்னுதான் அதையும் சேர்த்து
இந்தப் பதிவுலே போட்டாச்சு.

சரித்திர வகுப்பு முடிஞ்சதுன்னு அங்கங்கே நம்ம வகுப்பு மாணவர்கள் கொண்டாடுற சத்தம் உங்களுக்குக்
கேக்குதா? :-))))) அதான் நல்ல நாளுன்னு சொன்னேன்:-)

அடுத்த 'சரித்திர வகுப்பு' ஆரம்பிக்கப்போதுன்னு யாருகிட்டேயும் சொல்லிறாதீங்க:-)

ஆமாம்,

//நேற்று குடியேற்ற விதிமுறைகளை படிக்க படிக்க
கண்ணில் நீர் தாரை தாரையாக வருகிறது.:-))

இது ஆனந்தக் கண்ணீர்தானே?

தொடர்ந்து கொடுத்த ஊக்கத்துக்கு நன்றி.

said...

சில சமயம் இந்த ஊர் போலீஸ் பாத்தா பாவமா கூட இருக்கும், எந்த விதமான ஆயுதங்களும் இல்லாம இருக்கறதப்பாத்தா. இப்பத்தான் ஒரு வெஸ்ட் குடுத்துருக்காங்க.
//நேற்று குடியேற்ற விதிமுறைகளை படிக்க படிக்க
கண்ணில் நீர் தாரை தாரையாக வருகிறது.:‍))

இவ்வளவு விதிகள் இருந்தாலும் அத ஏமாத்தறவங்களும் கொஞ்சம்பேர் இருக்கத்தான் செய்யறாங்க.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

என்னதான் எழுதி முடிச்சுட்டாலும், உள்ளூர் ஆள் ஒருத்தராவது வந்து, 'சொன்னது சரி'ன்னு
ஆமோதிச்சாத்தானே ஒரு தைரியம் வருது!

ஆதரவுக்கு ரொம்ப நன்றிங்க.

said...

நியூசி சரித்திரத்தை தந்த மாதாமகி துளசி வாழ்க!

said...

கொத்ஸ்,

பதிவை 'முழுசும்' படிச்சீங்களா?

பரிட்சைக்கு இதுலே இருந்து கேள்வி வரும், ஆமா.:-)

said...

வரலாற்றைச் சுவைபடக் கூறுதல் எளியக் காரியம் அல்ல.
நீங்கள் வெற்றிகரமாகச் செய்தீர்கள்...
வாழ்த்துகள்!
புத்தகமாக்குங்கள்...

said...

வரலாற்றை சுவைபடக் கூறுதல் எளிய
காரியம் அல்ல..
நீங்கள் வெற்றிகரமாகச் சாதித்துள்ளீர்கள்..
வாழ்த்துகள்!
புத்தக வடிவம் எப்பொழுது?

said...

வாங்க சிஜி.

'வசிஷ்டர் வாயால்............' பேராசிரியரே சொல்லியாச்சு.

இதையே பெரிய ஆசியாக நினைக்கின்றேன்.

//புத்தக வடிவம் எப்பொழுது//

நீங்கெல்லாம் வாங்கறதா இருந்தா வெகுசீக்கிரமே போட்டுறலாம்:-))))

said...

ரொம்ப சுவையான சரித்திரப் பாடம் சொன்ன துளசி டீச்சருக்கு ஒரு பெரிய ஓஓஓ/.

சிரமமான வேலையை எளிமையாப் புரியறமாதிரிச் சொன்னதாலே சரித்திரமும் பிடித்துவிட்டது.

இவ்வளவு சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் ஒரு தேசம் இயங்கணும்னால் அத்தனை பேரும் ஒத்துழைக்கணும்.
இனிமேயும் இந்த நாடு சிறப்பாகவே வளரணும்னு வாழ்த்தறேன்.
நன்றிப்பா.

said...

நீண்ட பதிவா? யார் சொன்னது? விண்மங்கை இதையெல்லாம் கணக்குல எடுத்துக்காதீங்க.. எனக்குத் துணைக்கு ஒரு ஆள் வேணாமா? சொன்னா கேளுங்க.. அடுத்தப் பாகத்தை ஆரம்பிங்க தாயி..

ம்ம்ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..

படிக்கப் படிக்க.. இப்படித்தான் பெருமூச்சு வந்து, பின்னால அது பொறுமலாகி.. இப்ப அது பொறாமையாகி நிக்குது..

கொடுத்து வைச்சவுக நீங்க.. இப்படியரு நேர்மையான நாடு, நேர்மையான போலீஸ், நேர்மையான அரசியல்வாதிகள், துணிச்சலான நீதிமன்றங்கள், உண்மையான அரசியலமைப்பு.. ஆட்சி, அதிகாரம்..

எதை எதையோ காப்பி அடிக்கிறானுக இந்திய அரசியல்வாதிக. இதையெல்லாம் காப்பி அடிக்க மாட்டேங்கிறானுக..

said...

வாங்க வல்லி.
வாழ்த்துகளுக்கும், பொறுமையா இத்தனையும் படிச்சதுக்கும் நன்றிப்பா.

said...

வாங்க உண்மைத் தமிழரே.

பதிவு வழக்கத்தைவிட நீண்டு போனதுக்கு, குமாருக்கு காரணம் சொல்லி இருக்கு பாருங்க மேலே.

பெருமூச்சு விட்டு முடிச்சாச்சா? :-)))))

அடுத்த பகுதி வர்ற திங்களுக்கு வச்சுக்கலாம். ரெண்டு நாள் எல்லாருக்கும் லீவு. எனக்கும் இது எழுத
ஒண்ணேமுக்கால் வருஷம் ஆச்சு. நானும் கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேனே!

said...

//ஆனாலும் வெள்ளையரல்லாத ஒருத்தர் அதுவும் நம்ம இந்தியர் இந்தப் பெரிய பதவிக்கு வந்ததை மனமாரப் பாராட்டத் தோணுது. ஐயோ கடவுளே...... நானும் ரேசியல் மாதிரி பேசறேனா(-://

இல்லவே இல்லை!
இந்தியர் பெரிய பதவிக்கு வந்தது பெருமைன்னு சொன்னா - அது பெருமை உணர்ச்சி!

ச்சீ இந்தியர் எல்லாம் பெரிய பதவிக்கு வந்துட்டாங்கன்னு சொன்னா - அது ரேஷியல்! :-)

said...

//டாக்ஸிகளில் கூட மீட்டருக்கு மேலே 'போட்டு'த் தர்றது இல்லை. நாங்கதான் சிலசமயங்களில் சில்லறை இல்லைன்னு பத்து, இருபது செண்ட் குறைச்சுக் கொடுத்துருக்கோம்.//

டீச்சர், என்னாது....இருபது செண்ட் "குறைச்சுக்" கொடுப்பீங்களா?
பதிலுக்கு அவர் "குரைக்க" மாட்டார் அல்லவா? :-)
இது எல்லாம் உங்களுக்கே அநியாயமாத் தெரியல! :-))

said...

நிறைவான தொடர் டீச்சர்.
மிகவும் இயல்பா பக்கத்து வீட்டு கதையைச் சொல்லுறா போல சொல்லி இருந்தீங்க!

பொதுவா அந்த ஊர்க்காரங்களே, அது பற்றி எழுதினா அலுப்பு தட்டும். வெள்ளையர்கள் சுய தம்பட்டம் அடிச்சிக்கறாங்க-ன்னு சொல்லிடலாம்.
ஆனா...இது போல் புலம்பெயர்ந்தவர்கள் அனுபவித்து எழுதும் போது, அதில் நிதர்சனம் பளிச்சிடுகிறது!
ஒரு நாடுன்னா மற்ற நாட்டைப் பார்த்து என்ன எல்லாம் கத்துக்கிட்டா நல்லா இருக்கும்னு ஒரு லிஸ்ட் போடக் கூடிய அளவில் இருக்கும்!

பேசாம இந்தத் தொடரைப் ப்ரிண்ட் எடுத்து, பைண்டு பன்ணி, உங்க அருகில் உள்ள நூலகத்தில் கொடுத்திடுங்க! யாருக்காச்சும் எப்பவாச்சும் உபயோகமா இருக்கும்!

said...

வாங்க KRS.

அதென்ன மூணு பின்னூட்டங்கள்? புதுசா நம்ம தமிழ்மணம் ஆரம்பிச்சு வச்சுருக்கும்
'அதிக மறுமொழிகளை எழுதியவர்கள்' பட்டியலில் பேர் வர்றதுக்கா? :-))))))

1. ரேசியல் இல்லைன்னு சொன்னதுக்கு நன்றி. பெருமைப் படத்தான் வேணும்.

2. 'குரைக்க' எல்லாம் மாட்டாங்க. அவர்கிட்டேயும் போதுமான சில்லறை இல்லாத
'குறை'தான் காரணம்:-)

3. இங்கதான் வச்சீங்க டீச்சருக்கு ஆப்பு!

// யாருக்காச்சும் ******* எப்பவாச்சும் ***** உபயோகமா இருக்கும்!//

அப்ப இப்ப யாருக்குமே இது உபயோகம் இல்லையா? (-:

அட தேவுடா.............

said...

// யாருக்காச்சும் ******* எப்பவாச்சும் ***** உபயோகமா இருக்கும்!//
அப்ப இப்ப யாருக்குமே இது உபயோகம் இல்லையா? (-:
அட தேவுடா.............//

டீச்சர்,
நான் சொன்னது நூலகத்தில் வைக்கும் போது.

நம் இந்தியர்கள் அதிலும் குறிப்பாக முதியவர்கள், பெரும்பாலும் அருகில் இருக்கிற நூலகம் செல்வதும் வழக்கம் இல்லியா? அப்போ அவங்களுக்கும் உபயோகமா இருக்கும்!
முகம்/பேர் தெரியாத யாருக்காச்சும், நேரம் காலம் இல்லாமல் எப்ப வேணும்னாலும் உதவியா இருக்கும்!
அதைச் சொல்ல வந்தேன்!

அதுக்குள்ள நீங்க சென்டிமெண்ட் ஆயிட்டீங்களே!
கொத்ஸ், நம்ம மாணவர் அணியைக் கூப்பிட்டு இன்னொரு முறை டீச்சருக்கு ஜோரா கை தட்டச் சொல்லுப்பா!

பி.கு.
இந்தப் பின்னூட்டம் 'அதிக மறுமொழிகளை எழுதியவர்கள்' பட்டியலில் வர்றதுக்கு இல்லை! இது எங்கள் டீச்சருக்காக மட்டும் தான்! :-)

said...

டீச்சர்!!
என்ன சொல்லுறதுன்னு தெரியல!!
உங்களை மாதிரி பதிவர்கள் தான் எங்களை போன்ற புது பதிவர்களுக்கு இன்ஸ்பிரேஷன்!!
மிக அற்புதமான பதிவுத்தொடர்!!
வளரட்டும் உங்கள் தமிழ்த்தொண்டு!! :-))

said...

வாங்க CVR.

//என்ன சொல்லுறதுன்னு தெரியல!!//

ஒண்ணும் சொல்ல வேணாம். பாக்கி 68 பகுதியையும் படிக்கிறேன்னு
சொல்லுங்க . அது போதும்:-)))))