Thursday, October 31, 2013

எங்கூர் திவாலிக் கொண்டாட்டம்

கொஞ்ச நேரம் ஆகும்  நம் கண்கள் இருட்டுக்குப் பழக!  வண்ண விளக்குகள் மட்டும் ரொம்ப உசரத்துலே இருந்து சன்னமா ஒளி வீசுது. வரிசையா வெள்ளையில் பந்தல்கூடாரங்கள்.

பகல் மூணு மணியில்  இருந்தே மேளாவில் சாப்பாட்டுக் கடைகளும் மற்ற கடைகளும் திறந்து வச்சு பயங்கரக்கூட்டமா இருந்துச்சு நாங்க போகும்போது. பாதி அரங்கம்  கடைகளுக்கும் மீதிப்பாதி ஸ்டேஜ் ஷோவுக்குமா பிரிச்சு வச்சது நல்லாத்தான் இருக்கு.


பதினைஞ்சு   உணவுக்கடைகளும் ஒருபக்கம் வரிசை கட்டி நிக்க, இன்னொரு புறம்  வர்த்தக வகைப் பந்தல்கள்.  பேங்க், ட்ராவல்ஸ், விஷன் ஏஷியான்னு  சாட்டிலைட் டிவி சமாச்சாரங்கள், டெலிகாம்,  இன்ஷூரன்ஸ்,  இண்டீரியர் டெகரேஷன், ரேடியோ ஸ்டேஷன் இப்படி இதுகளுக்கிடையில்  அழகு அலங்காரம் என்று ஒரு ஜல்ஸா துணிக்கடை (ஃபேஷன் ஷோ ஒன்னு பதிவில் பார்த்தோம் பாருங்க அவுங்க கடைப்பொருட்கள்)  மெஹந்தி வச்சுவிடும்  கடை(பாடி ஆர்ட்!) ஆர்ட் ஆஃப் லிவிங் யோகா 'ஏஜண்ட்' ஒருத்தரும் பந்தல் போட்டுருக்கார். உள்ளெ எட்டிப் பார்த்தால் யாருக்கோ தோள்பட்டை மஸாஜ் நடந்துக்கிட்டு இருந்துச்சு. நம்ம கலை கலாச்சாரம் எல்லாம் கொஞ்சமாவது எடுத்துச் சொல்லும் ஸ்டால்கள் ஒன்னுமே இல்லை.  போனாப்போகுதுன்னு  அகல்விளக்குக்கு கலர் ஏத்திக்கோன்னு ஒரு சில்ட்ரன் ஆக்டிவிட்டி.


குழந்தைகளுக்கு விளையாடும் பகுதின்னு  ஒரு இடம் ஒதுக்கி இருந்தாங்க. மத்தபடி பாதிக்கூட்டம் ஏற்கெனவே அரங்குப்பகுதியில் இடம் பிடிச்சு உக்கார்ந்துட்டாங்க.  எல்லோர் கையிலும்  ஸ்டால்களில் வாங்கிப்போன சாப்பாடுகள்.பாவ்பாஜி, பேல்பூரி, சமோஸான்னு அங்கங்கே இருந்தாலும் உள்ளூர் ரெஸ்ட்டாரண்டுகள்  வழக்கமான பட்டர் சிக்கன்,நான், நவ்ரத்தன் குருமா, பாலக் பாஜின்னு இந்தியன் உணவையே  வச்சுருந்தாங்க. ஒன்னு ரெண்டு ஸ்டால்களில் மசால் தோசை (பத்து டாலர்!) தந்தூரி பேலஸ் உரிமையாளர் மனைவி, 'உங்க மசால் தோசா நம்ம கடையில் இருக்கு வாங்க வாங்க'ன்னு  கூப்பிட்டாங்க. (கொல்லன் தெருவில் ஊசி விற்கும் முயற்சி)கூட்டம் லைன் கட்டி நின்னது தோஸா ஹட் என்ற கடையில். இங்கத்து தோசையின் ருசி அப்படி மக்களை ஈர்ப்பதில் என்ன ஆச்சர்யம்? மாவு ஆட்டுனது  நம்ம துளசிவிலாஸ் கிரைண்டர் ஆச்சே:-))))

பஞ்சாபி தாபாவில்  பளபளன்னு செப்புப் பாத்திரங்களின் அணிவகுப்பு சூப்பர்!
பெரிய ஐஸ் கட்டி வச்சு  சின்ன நீர்த்தாரை மூலம் அதுலே தாஜ்மஹலைச் செதுக்கிக்கிட்டு இருந்தார் ஒரு கலைஞர். (இங்கேயும் தாஜ் தானா!)
ரெண்டு மூணு கடைகளில் மேங்கோ லஸ்ஸி மூணு, நாலு டாலர்களில் விற்பனை. நம்ம ஸ்வாமி நாராயன் மந்திரும் ஸ்டால் போட்டுருந்தாங்க. போட்டிக்கு யோகி டிவைன் சொஸைட்டியினரும்:-)


எலெக்ட்ரிக் தந்தூர் வச்சு சுடச்சுட 'நான் ' ஒரு பக்கம்!

இந்த வருச ஸ்பெஷல்ஸ் ரெண்டு சமாச்சாரம்.  ஒன்னு  ஒடிஸாவிலிருந்து  வந்த நாட்டியக் கலைஞர்கள். ரெண்டாவது அரங்கத்தினுள்ளேயே பட்டாஸ் (ஃபயர்வொர்க்ஸ் டிஸ்ப்ளே) கொளுத்துதல். நம்ம ஊரில்  பட்டாஸ், மத்தாப்பு எல்லாம் மனம்போன நாளில் வாங்கவும் முடியாது கொளுத்தவும் முடியாது.  ப்ரிட்டிஷ் நரகாசுரனை வதைச்ச  நாளான கைஃபாக்ஸ் டே நவம்பர் 5க்குத்தான் பட்டாஸ் வெடிக்கணும். அதுக்கு  நாலுநாள் முந்திதான் பட்டாஸே கடைக்கு வரும். நவம்பர் அஞ்சு மாலையோடு  விற்பனை முடிவு. இதெல்லாம் முந்தி பலமுறை எழுதி இருக்கேன். சாம்பிளுக்கு ஒன்னு  ' சரித்திரத்தில் நரகாசுரன்'  இங்கே:-))))


அந்த சமயம் கிடைக்கும்  கம்பி மத்தாப்புகளை வாங்கி ஸ்டாக் வச்ச்சுக்கிட்டால்  அக்டோபர் மாதத்துலே வரும் தீபாவளிக்கு ஆச்சு. ஓசைப்படாமல் தோட்டத்தில் நாலு  மத்தாப்பைக் கொளுத்துவோம். சம்ப்ரதாயத்தை மீறலாமோ:-)))

நகரக் கவுன்ஸிலே  அனுமதி கொடுத்து வருசத்தில் நாலுமுறை ஃபயர் ஒர்க்ஸ் டிஸ்ப்ளே இருக்கும். அதுக்குப்போய் 'கண்ணால்'கண்டு மகிழ்வதோடு சரி. ஆனா பிரமாதமா இருக்கும் என்பதும் உண்மையே! குறைஞ்சபட்சம் ஹண்ட்ரட் தௌஸண்ட் டாலர்  கோவிந்தா. எல்லாம் நம்ம வீட்டுவரிப் பணம்.

இன்றைக்கு முக்கிய விருந்தாளி  நம்ம ஊர் மேயர்தான்.  இங்கெல்லாம் நகரக்கவுன்ஸிலும்  மேயர் பதவியும்  நம்ம இந்தியாவில் இருக்கும் மாநில அரசு போலச் செயல்படும். முதலமைச்சருக்குள்ள அத்தனை அதிகாரமும் மேயருக்கு உண்டு, கருப்புப் பூனைப் பாதுகாப்பு தவிர:-)))) ரெண்டு வாரம் முன்பு கவுன்ஸில் தேர்தல் நடந்தது. எல்லாம் போஸ்ட்டல் ஓட்டுகள்தான்.  எலெக்‌ஷன் டேன்னு தனியா வைப்பதில்லை.

புது மேயர் பதவிக்கு வந்துருக்காங்க.   லேடி மேயர் கேட்டோ! நமக்கு நல்லாத் தெரிஞ்சவுங்கதான். உள்ளூர் எம் பியும் கூட. இவுங்க உள்ளூர் தேர்தலில் நிக்கறாங்கன்னு உறுதியானதும்  அப்போதைய மேயர், தன் தோல்வி உறுதியாச்சுன்னு  தீர்மானிச்சு  வரும் தேர்தலுக்கு நிக்கப் போறதில்லைன்னு அறிவிச்சுட்டார்.  புத்திசாலி. சும்மா நின்னு மூக்கு உடையணுமா?   எழுபதாயிரத்துச் சொச்சம் ஓட்டு வாங்கி ஜெயிச்சாங்க நம்ம லியான்.  தேர்ந்த அரசியல்வியாதி.  அந்தந்த விழாக்களில் பங்கேற்கும்போது  அந்த மொழியில் ரெண்டு சொற்கள் பேசிருவாங்க.(நம்மூர் கூட்டங்களில் வரும்  வடக்கர்கள் 'வனக்கம்' சொல்வது போல:-)

இங்கேயும் சரியான நேரத்துக்கு  செல்ஃப்  ட்ரைவிங்  செஞ்சு  வந்தாங்க. போனாப்போகட்டுமுன்னு  கட்டிடத்துக்குப் பக்கத்துலே காரை நிறுத்த இடம் வச்சுருந்தோம்:-) ரெண்டு நாட்டு தேசிய கீதமும் பாடினதும் 'நமஸ்தே' சொல்லி குத்துவிளக்கேத்தி  விழாவை தொடங்கி வச்சாங்க. மேயர் ஆனதும் கலந்து கொள்ளும்  முதல் கம்யூனிட்டி நிகழ்ச்சி இதுதான். (மேயரை எப்படி அட்ரஸ் செய்யணும். ப்ரொட்டகால் என்னன்னு தெரியாததால்  நான் போய்ப் பேசலை. நமக்கு ரெண்டுவரிசை முன்னாலேதான் உக்கார்ந்துருந்தாங்க)

உள்ளூர் எம் பி ஒருத்தர்  ஜம்முன்னு புடவை கட்டிக்கிட்டு வந்துருந்தார். பார்க்க ரொம்பவே நல்லாவும் இருந்துச்சு.

நேற்று பத்திரிகையில் வந்த ஒரு செய்தி. இங்கே கிறைஸ்ட்சர்ச் மேயருக்கு ஒரு தனி கார் ( Audi 2 L) லீஸுக்கு எடுத்துக்கும் சம்ப்ரதாயத்தைத் தேவை இல்லைன்னு ஒதுக்கிட்டாங்க.  'எனக்கு ஆடம்பரமான வண்டியே வேணாம்.  லீஸுக்கு எடுக்கும் காரும் தேவை இல்லை. பொது விழாக்களுக்குப் போகும் சமயம் மட்டும் ஒரு ட்ரைவர் வச்சுக்க எதாவது வழி உண்டா?'ன்னு  கவுன்ஸிலர், மேயர்களுக்குச் சம்பளம் நிர்ணயிக்கும் கமிஷனிடம் கேட்டுருக்காங்களாம்.  ஸோ பார்க்கிங் ப்ராப்ளம் அவுங்களுக்கும் வந்துருச்சு போல:-))))


PINகுறிப்பு:  நிறைவுப்பகுதி நாளை.


Wednesday, October 30, 2013

மனைவியைக் கடத்தியவனுடன், கணவன் சண்டை!

இவனுக்கு நேர்ந்த கதியைப் பார்த்துட்டுத்தான் 'தாடி' பிறன்மனை விழையாமை எழுதி இருப்பாரோ!!!
இதையே  திருமூலர் கூடச் சொல்லித்தான் வச்சார் இப்படி.... .

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனிஉண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடர் உற்றவாறே.
கத்திக் கதறி அழுதுகிட்டே போன மனைவி, மரத்தடியில் உக்கார்ந்து, எப்படியும் புருசன் வந்துருவாருன்னு  காத்திருக்காள்.

பத்துத்தலைக்காரனுடன் போர் நடக்குது.மயக்கம் போட்ட தம்பியைப்பார்த்து  அண்ணங்காரன்  துடிக்க,  சம்யசஞ்சீவியா சஞ்சீவி மலையைத் தூக்கிட்டு வர்றார் அண்ணனின் பக்தர்.காட்டுக்குப்போனவங்கதிரும்பி வந்ததைப்பார்த்து  வழி காமிக்க விளக்கேத்தி வச்சு  ஊர்மக்கள் எல்லோரும் கூடி நின்னு மகிழ்ச்சியா ஆடிப்பாடறாங்க.

இதெல்லாம் வார்லி சித்திரவகையைச் சேர்ந்தது.

மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில் உள்ள ஆதிவாசிகளின் கைவண்ணம் இவை.  தமிழ்நாட்டுலே அரிசி மாவுக் கோலம்தரையில் போடுவோமே அதேபோல அரிசிமாவைப் பயன்படுத்திச் சுவரில்  வரையும் சித்திரங்கள். செம்மண்ணால் சுவரை மெழுகிட்டு அதில் அரிசிமாவைக் கொண்டு வரைகிறார்கள். அசாத்யப்பொறுமை இருக்கணும் முதலில். பெரும்பாலும் அன்றாட வாழ்க்கைச் சித்திரங்களே! சிலசமயம் இதிகாசங்கள்!

 இப்போ சில வருசங்களாக  வியாபார ரீதியிலும் சித்திர விற்பனை வெற்றியடைஞ்சு வருது. இந்தச் சித்திரக்கலைக்கு வயசு அஞ்சாயிரத்துக்கும்  மேலே!

நாலு நாளைக்கு முன் இந்த வகைச் சித்திரத்தைப் பார்க்க நேர்ந்தது.  எளிமை ஆனால் வரைவது கஷ்டம்!

ஃபில்ம் டிவிஷன் எடுத்த ஒரு பதினேழு நிமிச வீடியோ இணையத்தில் கிடைச்சது. நேரம் இருந்தால் பாருங்கள். அனுபவம் புதுமை! அவர்களுக்கு என் நன்றி. Thanks to  Film Division.தீபாவளி, நார்த்தீஸ்களுக்கு  ராமாவதாரம் சம்பந்தப்பட்டது. ஆனால்  தெற்கீஸான நமக்கோ கிருஷ்ணாவதாரம் தான் காரணம். அட! வெவ்வேற யுகம்! ஆனால்  ஒரே  மாசம் அடுத்தடுத்த நாளில் கொண்டாடுறோம். நம்ம தீபாவளியன்னிக்கு  நார்த்தீஸ் எல்லாம் தந்தேரஸ் கொண்டாடுவாங்க. இது மஹாலக்ஷ்மி பூஜை. தன் தேரஸ்( Dhan- தனம்- செல்வம்)ன்னு வேண்டறோம்.

 உண்மையிலே இது தனம் வேண்டிச் செய்யும் பூஜை இல்லை. நம்ம கிட்டே இருக்கும் காசு பணத்தில் கொஞ்சத்தை எடுத்து, நம்மைவிட ஏழ்மையில் இருக்கும் மக்களுக்கு 'தானம்' செய்யவேண்டியது நம்ம ஒவ்வொருவருடைய கடமை. இந்த 'தான்' எப்படியோ இப்ப 'தன்'னாகிப் போச்சு. மக்களும் விடாம சாமிகிட்டே எனக்கு இதைக்கொடு, அதைக்கொடுன்னு பேரம் பேசிக்கிட்டே இருக்கோம்:((((

வெளிநாட்டு மக்கள்ஸ்க்கு   கிறிஸ்மஸ்,ஈஸ்டரைத் தவிர்த்து  எதா இருந்தாலும் பலமுறை கொண்டாடித் தீர்த்தால்தான் திருப்தி:-) இந்தக் கணக்கில் நமக்கு இது ரெண்டாம் தீபாவளி. எதையும் ஊருலகத்துக்கு முன்னாடி செஞ்சிறணும் என்பது இங்கே முக்கியம்:-) நியூஸி பார்லிமெண்டில் கூட இப்ப சில வருசங்களா தீவுளி கொண்டாடுவது ஒரு வழக்கமாப் போச்சு. 2006  வருச மக்கள் கணக்கெடுப்பின் படி  அறுபத்தி நாலாயிரம்  ஹிந்துக்கள் நியூஸியில் இருக்காங்க(ளாம்)  the second largest faith-based community.ஆக்லாந்து, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன்  ஆகிய பெரிய நகரங்களிலும்  சிட்டிக்கவுன்ஸில் ஃபண்டிங் கொடுத்து பண்டிகையைக் கொண்டாட வைக்குது.  Good over evil என்பது கேட்ச்சிங் பாய்ண்ட் கேட்டோ:-)

எங்கூர் கொண்டாட்டம் மூணுநாளைக்கு முன்னால் நடந்து முடிஞ்சது.  இண்டியன் சோஸியல் அண்ட் கல்ச்சுரல் க்ளப் (ஸ்தாபகர் நம்ம கோபால்)  இதை முன்னின்று  கடந்த பலவருசங்களாக்கொண்டாடுது.  1997 இல் ஆரம்பிச்ச இந்த க்ளப்பில்  எல்லா வருசமும் அங்கத்தினர்கள் சேர்ந்து கொண்டாடிக்கிட்டு இருந்தோம்.  ஓரளவு கம்யூனிட்டி ஃபண்டிங் கிடைச்சுக்கிட்டு இருந்தது.  திடீர்னு இப்ப  ஆறு வருசமா wider communityக்கான பப்ளிக் ஃபங்ஷனாக் கொண்டாடிக்கிட்டு இருக்கோம்.  சிட்டிக் கவுன்ஸில்  கொஞ்சம் தாராளமாக் கொடுக்குது.  ஸ்பான்ஸார்களும் கிடைச்சுடறாங்க.  நடுவிலே 2011 வதுவருசம்  கொண்டாடலை. ஊரே நிலநடுக்கத்தில்  அழிஞ்சு போய்க் கிடக்கும்போது  பண்டிகையும் பட்டாஸும் கேக்குதா?

இந்த வருசம் நம்ம சிங்கப்பூர்  ஏர்லைன்ஸ், மெயின் ஸ்பான்ஸார். இங்கே எங்கூரில் இருந்து  இந்தியா போகணுமுன்னா சிங்கப்பூர் ஏர்லைன்ஸை விட்டால் வேறொன்னுமில்லை. போட்டி இல்லாம ஜாலியா இருக்காங்க. பீக் சீஸன் டிக்கெட் விலை கேட்டால்  ஆடிப்போயிருவோம்.  ஆனால் வேறு வழி? அப்பதானே நமக்கு லீவும் கிடைக்குது:(   நம்மகிட்டே  அடிச்சதுலே  கொஞ்சூண்டு கிள்ளிக் கொடுத்துருக்காங்க.

விழா நடக்குமிடம்  CBS Canterbury Arena.  எங்க நாட்டு மதத்துக்காக கட்டுனது.  எங்கள் மதம் ஸ்போர்ட்ஸ் தான். 1999 வது வருசம் உலக நெட்பால் போட்டிகள்  நம்மூரில் நடக்கப்போகுதுன்னு முடிவானதும் அவசர அவசரமா 1998இல் கட்டி முடிச்சுட்டாங்க.  ஆச்சு 15 வருசம்.  இதையே மற்ற நிகழ்ச்சிகளுக்கும்  வாடகைக்கும் விடறாங்க.  நெட் பால், பாஸ்கெட் பால் ஆட்டங்கள் என்றால் 7200 பேர்   அமரலாம். மற்ற இசை, நாடக நிகழ்ச்சின்னால்  8888 நபர்கள்!   இது தவிர  இருக்கைகளை  ஒரு பக்கம் ஒதுக்கிட்டு நடுவில் ஹோம் ஷோ, ட்ராவல் எக்ஸ்போ, கேம்பர் வேன், மோட்டர் ஹோம்  ஷோன்னு  இன்னும் சில நடக்கும்.  எப்படிப் பார்த்தாலும்  வருசத்துக்கு   52 வீக் எண்டுகள்தானே! அநேகமா எதாவது ஒன்னு நடத்திக்கிட்டுத்தான் இருப்பாங்க.

டிக்கெட் கவுண்ட்டருக்குப் பக்கத்தில்  ஒரு கண்பதி.  விக்ன விநாயகர். இன்றைய நிகழ்ச்சி எந்த அசம்பாவிதமும் இல்லாம ஒழுங்க நடக்கணுமே..புள்ளையாரப்பா!

 டிக்கெட்டுன்னதும்  மனதை நிரடும் ஒன்றை இங்கே சொல்லிட்டுப் போறேன்.  நம்ம சிட்டிக் கவுன்ஸிலின் ஸ்டேடியம் இதுன்னாலும்  இதுக்கு ஒரு நாள் வாடகை இருபத்தியிரண்டு  ஆயிரம் டாலர்கள்.  கம்யூனிட்டிக்குக் குறைஞ்ச ரேட்டில் கொடுக்கப்டாதோ?  கொடுத்தாங்க. ஒரு பக்கம் கொடுக்கறமாதிரி கொடுத்துட்டு இன்னொரு பக்கம்  வாங்கறமாதிரி வாங்கவும் செஞ்சாங்க. இந்த வருசம் கார்பார்க் கட்டணம் இல்லை. ஆனால் அரங்குப் பகுதிக்குப் போக ஆளுக்கு அஞ்சு டாலர் கட்டணம்.  இது பிரச்சனை இல்லை. ஆனால்  காசை வாங்கிக்கிட்டு டிக்கெட் ஒன்னும் கொடுக்காம  கையை நீட்டுன்னு சொல்லி புறங்கையில் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்( திவாலி  ஃபெஸ்டிவல்)  போட்டு விட்டது எனக்குச் சரியாப் படலை.  என்ன கணக்கு? எத்தனை பேர் வந்தாங்கன்னு ஒரு விவரமும் கிடைக்காதில்லையா?  என்னமோ போங்க.  இதுலே சிட்டிக் கவுன்ஸில் இந்தக் காசை  எடுத்துக்குமாம். வாடகையில் துண்டு விழுவதை க்ளப் கொடுக்கணும் போல! இன்னும் விசாரிக்கலை.  அடுத்தமுறை  க்ளப் மீட்டிங்கில் கேக்கணும்.

இதுலே  புறங்கையில் ஸ்டாம்பு வாங்கினவுங்க எல்லாம் இன்னொரு கவுண்டரில் போய்  ஒரு படிவத்தில் நம்ம ஜாதகத்தையே  எழுதி அதை அங்கிருக்கும் பொட்டியில் போட்டுடணுமாம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்  குலுக்கிப் பார்த்து ரெண்டு ரிட்டர்ன்  ஃப்ளைட் பரிசா கொடுக்கப் போறாங்களாம். ஆயிரம் கண்டிஷன்களோடு ஆஃப் சீஸனில் கொடுப்பாங்க. நீங்களே வச்சுக்குங்கன்னுட்டு அரங்குக்குப்போகும் வழியில் நுழைஞ்சோம்.

அரங்கத்தின் நுழைவு வாயிலில் தாஜ்மஹால் டிஸைன். தீவாலிக்கும் தாஜுக்கும் என்ன சம்பந்தம்?  இந்தியான்னதும் வெள்ளையர்களுக்கு  உலக அதிசயத்தில்  ஒன்னான தாஜ்தான் நினைவுக்கு வரும் என்பது பொதுப்படையான ஊகம் போல!

ஒரு பெரிய ரங்கோலி போட்டு வச்சுருந்தாங்க.  பரவாயில்லாம  நல்லாவே இருக்கு. அதுக்கு அடுத்த டிஸ்ப்ளேதான் நாம் மேலே பார்த்த வார்லி சித்திரங்கள். எனக்கு ரொம்பப் பிடிச்சது !

PIN குறிப்பு:  பதிவின் நீளம் கருதி மீதி அடுத்த பதிவில்.

Friday, October 25, 2013

எலியும் கிலியும் !

 கண்ணெதிரில் ஆடாமல் அசையாமல் இருக்கும் எலியைப் பிடிக்க முடியலையேன்னு  பூனைக்கு மகா வருத்தம்.  தட்டிக்கொட்டி  டிங்கரிங் வேலைகளும் மராமத்தும் நடந்து கொண்டிருந்தாலும்  பழைய வண்டி எப்பவும் அதே வேகத்தில் ஓடமுடியாதில்லையா?

கொஞ்சநாளா மெஷினின் பாகங்கள் எல்லாம் ஒன்னொன்னா மக்கர் செய்ய ஆரம்பிச்சுருக்கு. அந்த வரிசையில் இப்போ ஒரு வாரமா சுட்டுவிரல்.   ஆளைக் காமிக்கவே முடியலையாக்கும் கேட்டோ!

கணினி மௌஸைக் கையில் பிடிக்கவோ,  க்ளிக் பண்ணவோமுடிவதில்லை. ரைட் க்ளிக் எப்போதுமேவா பயன்? ஊஹூம்........

இப்பதான் நடுவிரலுக்குப் புது ரோல் கொடுத்துப் பழக்கிக்கிட்டு இருக்கேன். கொஞ்சநாள் செல்லலாம் அதுக்குப் பாடம் படிக்க. அதுக்கும்தானே வயசாச்சு இல்லையோ?  கேன்னாட் டீச் நியூ ட்ரிக்ஸ் டு அன் ஓல்ட் டாக்:-)

அதுவரை?  வாசிக்கலாமே! படித்ததில் பிடித்ததுன்னு  நிறைய எழுதலாம். ஆனால்  கிலி பிடிச்சுக்கிடக்கே!

அன்பு எழுதிவரும் இமயமலைப் பயணம் இதுவரை வந்த ஆறு பகுதிகளையும் வாசித்தேன். (ஒரு சில எழுத்துப்பிழைகளை பொருட்படுத்த வேண்டியதில்லை) நன்றாக எழுதுகிறார்.  சாருவுடன் போன பயணம் இது என்பதையும் குறிப்பிடத்தான் வேணும்.

நம்ம பதிவர்களின் விடுபட்ட பதிவுகள் பலவற்றையும் பார்த்தேன்.படித்தேன் அண்ட்  ரசித்தேன். ஆனால் யாருக்கும் பின்னூட்டமிடலை. கை துருதுருன்னாலும் கைவலி  வேற இருக்கே! அதென்ன வலி குடியிருக்குமிடம்  ஒரு ஒற்றைவிரல்?  மஹா ஆச்சரியமான விஷயம்........

துளசிதளத்தில் ஒரு நாலைஞ்சு இடுகைகளுக்குப் பதிலொன்னும் போடலை இதுவரை.  காரணம் விரல் வலி. வாசகர் வட்டம் மன்னிக்கணும் ப்ளீஸ்.

கை வலி என்பதால் வீட்டு வேலையில் இப்போ முக்கால் வாசி நம்ம கோபாலுக்கு. சமையல் அல்மோஸ்ட்  கத்துக்கிட்டார்னு நினைக்கிறேன்.
கொஞ்சம் மேலாகப் பார்த்தால் இடாலியக் குடும்பங்களுக்கும் இந்தியக் குடும்பங்களுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமை.(No wonder Sonia well settled in Indai)  The fortunate pilgrim  வாசிச்சுக்கிட்டு இருக்கேன். Mario Puzo .  என்ன ஒரு ரைட்டர்ப்பா! அந்தக் காலத்தில் Khartoum தலை இல்லாம  கனவில் வந்து பயமுறுத்தி இருக்கு:-)

சன் டிவியில் விருந்தினர் பக்கத்தில் நம்ம பா ராவைப் பார்த்தேன்.  கையில் மின்னும் புது மோதிரம் ஷிர்டி சாய்பாபா உருவம் பதித்ததாம்!
ஊர் விவகாரங்கள் ஏகப்பட்டவை பாக்கி நிக்குது.  ஒருநாள் நிதானமாகப் பார்க்கலாம்.

மற்றபடி  எல்லோருக்கும் அன்பும் நன்றியும். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

என்னுடைய வியப்பெல்லாம்,  எப்படி ஒருவிரலுக்கு மட்டும் இவ்ளோ வயசாகி இருக்கு? !!!!!

என்றும் அன்புடன்,
டீச்சர்.Tuesday, October 22, 2013

ஓடி வா வா கஜாமுகானே !!!

காத்ரீன்,  மேடையிலேறி மைக் பிடிச்சு,  புள்ளையார் வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி விருந்தினர்களுக்குச் சொல்லிக்கிட்டு  இருந்தாங்க.  'வீ ஆல்வேஸ் டு கணேஷ் வந்தனா பிஃபொர் வீ  ஸ்டார்ட்   எனி  ப்ரேயர்ஸ் , ரிச்சுவல்ஸ் அண்ட் அன் ஈவண்ட்'.

மேடையில் இருந்த இசைக்குழு பாட ஆரம்பிச்சாங்க.  'ஜெய்  கண பதி தேவா'  ஹிந்தி பஜன். சரியாச் சொன்னால் போஜ்புரி ஹிந்தி.  அடுத்து இன்னொரு பாடல். என்னமோ தமிழ்ச் சொல் காதுலே விழுதேன்னு கவனிச்சேன். ஓடி வா வா கஜாமுகானே... அய்யப்பசாமி கஜாமுகானே....

ஆதிகாலத்துலே (1879களில்) ஃபிஜிக்குக் கரும்புத்தோட்ட வேலைக்குப்போன தமிழ்மக்கள்  கூடவே கொண்டுபோன பொக்கிஷங்களில் ஒன்னு. நூத்தி நாப்பது வருசங்களுக்கு முன் சாமிப் பாட்டுகள் எப்படி இருந்துருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.  உண்மையில் சொன்னால் நாகரிக உலகில் இதுமட்டும் மாறவே இல்லை! அந்த ட்ரெடிஷன் பழமை மாறாமல் அப்படிக்கப்படியே இருக்கு! இசைக்குழுவுக்கும் சரி,  கூடி இருந்த ஃபிஜி இந்தியர்கள், வெள்ளைக்காரர்கள், சீனர்கள் கொரியர்கள் இப்படி  யாருக்கும்  மருந்துக்கும் தமிழில் ஒரு சொல் தெரியாது எங்கள் இருவரைத்தவிர!


எது எப்படியாயினும் தமிழ்ப்பாட்டு கேட்டதும் அட! என்று ஒரு வியப்பும் மகிழ்ச்சியும் வந்ததே உண்மை.

விழா நிகழ்ச்சி மாலை ஆறுக்குன்னு தெரிஞ்சதால் ஆறரைக்குப்போய்ச் சேர்ந்தோம். முதலில் சாப்பாடு.  இந்த முறை சாப்பாட்டை பாலிஸ்டைரீன்  பாக்ஸில் பரிமாறி, ஆட்கள் வரவர எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.  தட்டில் விளம்பி, மக்கள்ஸ் அதைக்கீழே போட்டு, சுத்தம் செஞ்சுன்னு நடக்கும் அட்டகாசங்களைக் குறைச்சுக்க இந்த ஏற்பாடு.  ஆனாலும் நம்மாட்கள் இதையுமே கீழே போட்டு வாரி எடுத்ததும் உண்மையே:(


நிலநடுக்கத்துக்குப்பின் ஹால் கிடைப்பது கஷ்டமாகி வருது. தப்பித் தவறிக் கிடைக்குமிடத்திலும்   சுத்தமாத் திருப்பித்தரணும் இல்லையா?

திரையைத் திறந்தவுடன் ஆரம்ப வரவேற்பு கொடுத்தவர்கள் அஞ்சு  ப்ளஸ் ரெண்டுன்னு  ஏழுபேர் உள்ள ஜப்பான் இளைஞர் குழு.   ட்ரம்ஸ் அட்டகாசம்!  அடடா..... என்ன ஒரு கோஆர்டிநேஷன்!!! கலக்கிட்டாங்க போங்க.

நிகழ்ச்சியை ஆரம்பிச்சு வச்ச இப்போதைய தலைவர்,  நிகழ்ச்சிகளுக்கு நடுவில் சாப்பாட்டுக்குன்னு இடைவெளி விட்டால்  அடுத்த பாதி மேடை நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் இரைச்சலும் குழறுபடியும் ஆகிறதுன்னுதான்  போன வருசம் முதல்,  வந்ததும்  ஆறு மணிமுதல் ஏழு மணிவரை சாப்பாடு முடிஞ்சு போனால்,  நிம்மதியா மேடை நிகழ்ச்சிகளைப் பார்க்கமுடியும் என்று  ஏற்பாடு செஞ்சதாவும்,  ஆனால் மக்கள்ஸ் பலர்  ஏழரை எட்டுன்னு லேட்டா வந்துட்டு  சாப்பாடு வேணும் என்று நெருக்கடி கொடுப்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டார். வேறென்னதான் செய்யலாமுன்னு நீங்களே சொல்லுங்கன்னு வேண்டுகோளும் வைத்தார். ஐடியா ஒன்னும் இதுவரை மனசில் வரலை:(

கணேஷா வந்தனாவுக்குப்பின் நியூஸிலாந்து தேசிய கீதம். நியூஸிக்கு ரெண்டு மொழி வெர்ஷன் உண்டு. மவொரி, ஆங்கிலம்.  இன்றைக்கு அங்கே பாடியது  இதுவரை நான் கேட்காத  முழு வெர்ஷன்.   முழுப்பாட்டு  ஏழு நிமிசம் வரும்.  மக்கள்ஸ்க்குப் பொறுமை இல்லாததால் பொதுவா  ரெண்டு நிமிசம் வரும் பாட்டையே பாடுவாங்க. இன்றைக்குத்தாம்  மொத்தமும் கேட்டேன்.  பாட்டுடன் திரையில் கண்ட காட்சிகளைப் பார்த்தால் ஆஹா... எவ்ளோ அழகான நாட்டில் இருக்கோம் என்ற திருப்தி வர்றதைத் தடுக்க முடியாது.  முந்தியெல்லாம் காலை 10க்கு டிவி ஆரம்பிச்சதும் முதலில்  தேசியகீதம் வரும். அப்புறம் இந்த 24 மணி நேரச்சேனல்களா ஆனவுடன் காணாமப்போனது தேசிய கீதமே:(

இந்தியாவில் இருந்த போதும் ஜயா டிவியில் 'செந்தமிழ்  நாடென்னும் போதினிலே' ன்னு ஆரம்பிக்கும்போது எனக்கு மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கும். நாட்டில் உள்ள மைனஸ் பாயிண்டையெல்லாம் புறம் தள்ளிட்டு  பாட்டும்  அதனோடு வரும் காட்சிகளும் அட்டகாசம் என்று அனுபவிப்பேன்.  இப்போ அங்கேயும் 24 மணி நேரச்சேனல் ஆனதால் இதுக்கு  ஆப்பு வச்சுட்டாங்கன்னு நினைக்கிறேன்.  தெரிந்தவர்கள் விபரம் சொல்லுங்கள்.

நியூஸி தேசிய கீதம்முடிஞ்சதும் உக்காரப் போனவங்களைத் தடுத்தாட்க்கொண்டது ஃபிஜியின் தேசிய கீதம்.  சொன்னா நம்பமாட்டீங்க..... ஆறு வருசம் அங்கே குப்பை கொட்டிய நாங்க, இப்போதான் முதல்முறையா இதைக் கேக்கிறோம்!! எத்தனை விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறோம்..... ஒரு இடத்தில்கூட கேட்டதில்லைன்னா.......... என்னன்னு சொல்றது:(

ஃபிஜியின் தேசிய கீதத்துக்கு மூணு வெர்ஷன் இருக்கு.  ஃபிஜியன் மொழி (இதுக்கு எழுத்துரு இல்லை. ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்தறாங்க.) ஆங்கிலம் அப்புறம் மூணாவதா ஹிந்தி மொழி. பொதுவா நிகழ்ச்சிகளில் ஆங்கிலம் மட்டுமே பாடுறாங்க. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால் நாங்க ஃபிஜியில் இருந்த காலத்துலே அங்கே டெலிவிஷன் ஒலிபரப்பு கிடையாது.  வீடுகளில் இருக்கும் டிவி, நாங்க விஸிஆர் வச்சுப் படம் பார்க்கமட்டுமே! அதான் தேசிய கீதம் காதில் விழலை.

சங்கத்தலைவர் மனைவி வந்து மேடையின் ஒருபுறம் அலங்கரிச்சு வச்சுருந்த  மஹாலக்ஸ்மி படத்துக்கு விளக்கேத்தி ஆரத்தி செஞ்சாங்க. மஹாலக்ஸ்மியை ஏன் வழிபடணும் என்று காத்ரீன் சபைக்கு விளக்கினாங்க.

நம்மூரில் கடந்த ஏழாண்டுகளாக பரதநாட்டிய வகுப்பு நடத்தும் அனுராதா, (இலங்கைத் தமிழர்) ஒரு நடனம் ஆடினார். எப்போதும்போல் நடனம் அருமை. போனவாரம்தான்  அவர்களுடைய நடன நிகழ்ச்சிக்குப் போய் வந்திருந்தோம். பல வயதுகளில்  ஒரு முப்பது மாணவிகள் நடனம் கற்றுக் கொள்கிறார்கள்.

அடுத்த நிகழ்ச்சியா பசங்க  கொரியன் டான்ஸ், பாலிவுட் ஐட்டம் ஸாங், நேபாளிகளின் நடனம் என்று சில பல இருந்தாலும் எல்லோரும் ஜல்ஸாவுக்குக் காத்திருந்தோம்.

கிறைஸ்ட்சர்ச் நகரில் முதல்முறையா நடக்கும் இண்டியன் துணிமணி வகைகளுக்கான ஃபேஷன் ஷோ இது.   வட இந்திய உடை வகைகளில் இப்போ என்ன ட்ரெண்ட் ன்னு தெரிஞ்சு போச்சு.  ஜிலுஜிலுன்னு கற்கள் பதிச்சது போல மின்னும்  ஸல்வார் செட், காக்ரா செட், புடவைகள்  எல்லாம் ஒரேஅமர்க்களம்.  அதிலும் வெள்ளைக்கார இளம்பெண்கள் இந்திய அலங்காரத்தில் ஜொலித்தார்கள்.  நம்ம நாட்டு ஆடை ஆபரணங்களுடன்,  நெற்றியில் பொட்டும் வச்சு  பூனை நடை நடந்தப்ப  அரங்கமே அதிர்ந்ததுன்னு சொல்லணும்.  பொதுவா இந்தத் தலைமுறையின் உயரம் கூடுதலாக இருப்பதால் புடவை பொருந்தி வருது.  குஜராத்தி ஸ்டைலில் புடவையுடன்  வந்த 'மாடல்' சூப்பர் கேட்டோ!  ஜப்பான், சீனா, கொரியா நாட்டுப்பெண்களும் புடவையில் வந்து கலக்குனாங்க. என்ன ஒன்னு........ நடையில் நளினம்தான் மிஸ்ஸிங்:-)


நம்ம ஃபிஜி இந்தியன் பெண்களும், சில இந்திய ஆண்களும் கூட மாடல்களாக வந்து பூனை நடை போட்டனர். உள்ளூரில் புதிதாக துணிக்கடை வைத்துள்ள ஒரு ஃபிஜி இந்தியரின் ஏற்பாடு இது. புது ஐட்டம் & புதுக் கடைக்குப் ப்ரமோ!  ஒரே கல்லில் மாம்பழம் ரெண்டு:-) ஃபிஜியன் மேகே  நடனம்,  ஜெய் ஹோ, கண்பதி பப்பா மோரியான்னு ஒரு ரீமிக்ஸ் பாட்டுக்கு நடனம்,  இன்னொரு பாலிவுட் டான்ஸ், இதுலே  சமோவன் இண்டியன் குழந்தைப் பொண் ஏழு வயசு,  அட்டகாசமாக ஆடினாள்.  இன்னும்  நாலுநாளில் கொண்டாடப்போகும் தீவாலி (இண்டியன் க்ளப்)  விழாவுக்கு இன்னுமொரு ப்ரமோ என்ற வகையில் பிரபு தேவா (ABCD) நடனம் ஒன்றை ஆடினார் ஒரு புது இளைஞர்.  பஞ்சாப் இறக்குமதின்னு நினைக்கிறேன்.

இன்னும் ஏகப்பட்டவை பாக்கி இருக்குன்னாலும்  நமக்குப் பார்க்க சக்தி வேணாமோ?  இப்பவே பத்தரை ஆச்சுன்னு கிளம்பி வந்துட்டோம்.

எனிவே ஒன் திவாலி டௌன். ஃப்யூ மோர் டு கோ:-))))

PIN குறிப்பு: இந்தப் பதிவில் அவசியம் கருதி யூ ட்யூப் வீடியோ க்ளிப்பிங்ஸ் சில போடும்படியாச்சு. எல்லாம் மூணுநாலு நிமிசங்கள்தான். எதைவிட எதைப்போடன்ற குழப்பம்தான் கேட்டோ!!!

Friday, October 18, 2013

மாறாதது கடவுள் மட்டுமா??

என்றும் மாறாதது  சாமி மட்டுமா?  நம்ம வீட்டு மெனுவும்தான்:-)  விஜயதசமியன்னிக்கு ஒரு சின்ன அளவில்  பூஜை செய்ஞ்சுக்கறது   இப்போ ஒரு  பதினைஞ்சு வருசப்பழக்கம்.  சாமி வந்தாரில்லையா? பாவம் அவர் தேமேன்னு  இருந்தாலும் , நமக்கு இவ்ளோ செய்யும்  அவருக்காக  நாம் எதாவது செய்யணும் என்று ஆரம்பிச்சதுதான்.  குறைஞ்சபட்சம் வருசத்துக்கு ஒரு நாள் கூடி இருந்து குளிர வேணாமா?

சாமி வந்தது  இங்கே:-))))

 

சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல்,  எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், ததியன்னம், சுண்டல், பாயசம்  இதுதான் நைவேத்யத்துக்குள்ள மெனு. இந்தப் பதினைஞ்சு வருசமா மாறாதது இது ஒன்றே:-)

 பிர'சாதம்'  பெயர் பொருத்தம் சூப்பர்.  எல்லாம் சாத வகைகளே:-))))


சாயங்காலம் சாமி கும்பிட்ட பிறகு ராத்திரி டின்னரும் சேர்த்து வச்சுக்கிட்டா,  கெஸ்ட்டுகளுக்கு வீட்டுலே போய் சமைச்சுச் சாப்பிடும் வேலை மிச்சம். ஒருவேளையாவது  வீட்டம்மைகளுக்கு ரெஸ்ட் கிடைக்கட்டுமே!

 ஆதி காலத்துலே (1999)  எனக்கு நம்ம வீட்டுலேயே டின்னருக்கு சமைக்கும் தெம்பு இருந்தது.  முப்பது பேர்வரை வருவாங்க. அஞ்சாறு வருசத்துக்குப்பின்  ( அது நாம் புது வீடு மாறி வந்த வருசம் . சுநாமி நடந்து  மூணே மாசம்  ஆனநிலை.  கிரகப்பிரவேசம் என்று தனியா யாரையும் அழைச்சுக் கொண்டாடவும் இல்லை )  நட்பு வட்டம் கொஞ்சம் பெருசாகிப் போனதாலும் ,பிரசாதம் மட்டும் வீட்டுலே, டின்னர் சமாச்சாரம் வெளியிலேன்னு ஒரு ஏற்பாடு. உள்ளூரில் அப்போ ஆரம்பிச்சுருந்த புது இண்டியன் ரெஸ்ட்டாரண்ட்லே இருந்து வரவழைச்சோம். ஓனரும் அருமையா தன்கைப்பட நல்லா சமைச்சுக் கொடுத்தார். பூஜை புனஸ்காரங்களுக்கு நல்ல தட்டில் சாப்பாடு போடணுமுன்னு எவர்சில்வரில் அம்பது தட்டுகளும் அம்பது டம்ப்ளர்களும்  வாங்கி வந்துருந்தாராம்.  அதையும் பயன்படுத்திக்குங்கன்னு  தாராள மனசும் காமிச்சார்.  தட்டின் திறப்பு விழா நம்ம வீட்டில்தான்:-))))

இடையில் ஒரு ரெண்டு வருசம் இந்தியவாசம் என்றானதில் சென்னையில் இருந்தப்ப சங்கீதாவும், சண்டிகரில் இருந்தபோது கோபால்ஸ்ம் (கடை பெயரே அதுதான்) பூஜையில் உதவி செய்ஞ்சாங்க:-)


மீண்டும் இங்கே வந்து சேர்ந்தப்ப,  நிலநடுக்கம் காரணம் நம்ம நண்பர்கள் கூட்டம் நகரைவிட்டுப் புலம் பெயர்ந்து போனதால்  எண்ணிக்கையில் குறைஞ்சு போச்சு. இருபத்தியஞ்சு,  இருபதுன்னு  தேய்ஞ்சு போய் இந்த வருசம்  பதினான்கே பேர் நம்ம ராஜலக்ஷ்மியையும் சேர்த்து. அதிசயத்திலும் அதிசயமாக மகளும் வந்திருந்தாள். நவராத்திரி ஒன்பதுநாளும் தவறாமல் கொலுவுக்கு வந்து போனதுக்கே ராஜலக்ஷ்மிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லணும்.

இந்தமுறை நாமே வீட்டுலே சமைச்சுக்கலாமுன்னு  கோபாலுக்கு ஒரு எண்ணம். சமையல் கத்துக்கறார் இல்லையோ?  நண்பர்களுக்கு அழைப்பு சொல்லும்போதே எதாவது சமைச்சுக் கொண்டுவரட்டான்னு கேட்டாங்க. செஃப் யாருன்னு தெரிஞ்சதால் பயம் வந்திருக்கலாம்:-) அதெல்லாம் ஒன்னும் வேணாம். சமாளிச்சுடலாம்.  சின்ன அளவுதானேன்னு சொல்லி இருந்தோம்.

டின்னருக்கு சிம்பிளா  ஒரு சாம்பார், ரசம், ரெண்டு கறிகள் போதும் என்றதால்  ஞாயிறு  காலையில்  மேற்கண்டவைகளை சமைச்சு முடிச்சோம்.  அதுலேயே லஞ்சுக்கும் கொஞ்சம் எடுத்துக்கலாம். முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி பொரியல்,  உருளைக்கிழங்கு காரம் போட்ட கறி. முருங்கைக்காய் சாம்பாரில் போட்ட ஃப்ரோஸன் முருங்கைக்காய்,  மரத்தில் செஞ்சது போல. தனியா அரைமணிக்கூறு வேகவைத்தும் கூட கட்டை,கட்டைதான்!  கூடவே சில கத்தரிக்காய்களையும் போட்டதால்  ஒருவழியா ஒப்பேத்தமுடிஞ்சது.

தோழிகளும்   வெல்லச் சாதம், புதினா வடை, மைசூர் பாகு,  ஃப்ரைடு ரைஸ், வத்தக்குழம்புன்னு  கொண்டு வந்து விருந்தை ஜாம்ஜாமென்று நடத்திக்கொடுத்துட்டாங்க.இந்த முறை அதிசயமா வெத்தலையும் மாவிலையும் ( ரெண்டும் பப்பத்து) கிடைச்சது இண்டியன் கடையில்.  பாக்கு?  பச்சைப்பாக்கு   வச்சுருக்காங்க. தூள் பண்ணிக்கிட்டாலும்  வாயில் போட்டதும் நெஞ்சடைப்பு நிச்சயம். வீக்கெண்டில் ஆம்புலன்ஸ் வர அஞ்சு நிமிசத்தாமதம் என்பதால் ரிஸ்க் எடுக்கலை நான். வாசனைத் தூள் பாக்கு கிடைக்குதான்னு  ஒரு கண் வச்சுக்கணும் இனிமேல்.

மாவிலைகளால் கும்பவாஹினியை  அலங்கரிச்சேன்.  கூந்தலும் அமைஞ்சது.  ஏது?சவுரியான்னு கேட்ட தோழிக்கு.... வுல் என்றேன்:-))))
மாலை ஏழுமணிக்கு பூஜையை ஆரம்பிக்கலாம் என்ற ஏற்பாடு. நமக்கு இங்கே டே லைட் ஸேவிங்ஸ் தொடங்கிட்டதால்  ஏழுமணிக்குப் பளிச்ன்னு சூரியன்:-)  சாகற காலத்துலே சங்கரா சங்கரான்றது போல இங்கத்து சூரியனுக்கு  மறையும் நேரம்தான் தன்னுடைய கடமை நினைவுக்கு வரும்.  ஒரு அரைமணி பளிச்சிட்டதும் மீண்டும் தூக்கமே:-)
பல ஆண்டுகளுக்குப்பின் சூரியன் இப்படி வந்துட்டுப்போனார்:-)
பூஜைன்னு வச்சால் விஸ்தரிச்சு ஒன்னுமில்லை கேட்டோ. அதெல்லாம்  நம்ம பண்டிட் கஸ்தூரி இங்கிருந்த காலத்தோடு போச்சு. பதினாறு நாமங்களைச் சொல்லி புள்ளையாரைக் கும்பிட்டுவிட்டு,  எம் எஸ் எஸ் அம்மாவின் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஸிடி ப்ளேயரில் ஓடவிட்டு, கூடவே நாமும் சொல்லிக்கிட்டே போகணும். ஜஸ்ட் அரைமணிக்கூர்.  மக்கள்ஸ்க்கு  தமிழிலும் ஆங்கிலத்திலுமா ப்ரிண்டவுட் எடுத்து வச்சுருப்பதைக் கொடுத்தால் ஃபாலோ பண்ணிக்கிட்டே வருவாங்க.
அப்புறம் நெய்விளக்கு ஆரத்தி எடுத்து, நைவேத்யங்களைக் கை காமிச்சால் ஆச்சு. நண்பர்கள் அனைவரும் தீபாராதனை செய்து மலர் தூவி வழிபடுவார்கள்.இந்த முறை மகளிர் குழுவினர்  எல்லோரும் அவரவர் மொழியில் (மூணு தெலுங்கு, ஒரு மலையாளம், ரெண்டு தமிழ்) இருக்கும் ஸ்லோகப் புத்தகத்தைக் கொண்டு வந்ததால்  மகனர்களுக்கு மட்டும் ஆங்கில 'எஸ் வி எஸ் என்' கொடுத்தோம்.

சொல்ல ஆராம்பிச்சதும், 'அட தொடங்கியாச்சா?'ன்னு  வந்த ராஜலக்ஷ்மி,  கொலுவைக்கிட்டப்போய் பார்த்துட்டு நட்ட நடுவில் உக்கார்ந்து  தெய்வீக ஒலியில் லயித்துப்போனது அருமை!

எல்லாம் நல்லபடியாக நடந்து முடிஞ்ச மகிழ்ச்சியில் டின்னர் ஆரம்பமாச்சு. நம் வீட்டு வழக்கப்படி, லேடீஸ் ஃபர்ஸ்ட், அப்புறம் மற்றவர்கள்.  பரிமாறும்  வேலை மிச்சம் என்று அவரவர்க்குத் தேவையானதைத் தட்டில் போட்டு எடுத்துப்போய் கூடத்தில் உக்கார்ந்து  பேசிக்கிட்டே  சாப்பிட்டோம்.
கடைசி கெஸ்ட் போகும்போது மணி  ஒன்பதேமுக்கால்.  பாவம், ராஜலக்ஷ்மிதான்  ஒன்னும் சாப்பிடாமல் குறுக்கும் நெடுக்குமாப்போய் (பந்தி விசாரித்து) கொண்டு இருந்தாள்.

கிளறும் வேலைமுழுசும் கோபால் ஏற்றெடுத்தார். கிளறிக் கிளறியே தசைப் பிடிப்பு  முக்கால்வாசி சரியாச்சு அவருக்கும். கைகளுக்குப் பயிற்சி.    வேலை வாங்கியே எனக்கு ரொம்பக் களைப்பாப் போச்சுன்னா பாருங்க:-)))))


இந்த வருசப்பூஜை  இவ்வளவு நல்லா நடந்தது  சந்தோஷம். பொழைச்சுக் கிடந்தால் அடுத்த வருசம் எப்படி வருதோ அப்படி.

ஆச்சு  தசரா. நாளை முதல் தீபாவளி கொண்டாட ரெடியாகணும்.  இந்த வருசம் அநேகமாக ஆறுமுறைதான் கொண்டாடப் போறோம். முதல் தீவாலி நாளை மாலை. ஃபிஜி இண்டியர் குழு.

அனைவருக்கும் இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்து(க்)கள்.