Monday, February 27, 2017

முக்தி முக்தின்னு நினைக்கவச்சுப் பாடாய்ப் படுத்திய முக்திநாதர் இங்கே! ( நேபாள் பயணப்பதிவு 13 )

இதோ முக்திநாத் கோவிலின் நுழைவு வாசல்.  மேலே மூணு கலசங்களோடு ஒரு அமைப்பு.  கொஞ்சம் கேரளா ஸ்டைலோ?  அதுலே  அஞ்சு கண்ணாடி மாடங்களில்  பொம்மைகள் போல ஒன்னு. என்ன சாமின்னு  தெரியலை.  மரப்பொம்மை மாதிரி....   சட்னு பார்த்தால் கார்ட்டூன் கேரக்டர்ஸ்....
அதுக்குக் கீழே  ஒருபக்கம் மூடி இருக்கும் பெரிய கேட். கேட்டில் சக்கர டிஸைன். (தர்ம சக்ரம்!)     பத்துப்பதினைஞ்சு  படி ஏறணும். நேபாள வழக்குப்படி பெரிய மணியைக் கட்டித்தொங்க விட்டுருக்காங்க.  இவுங்க நாட்டுலே மணிகளுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்குபோல.
கோவில்களுக்குப் போனால்.... எங்கே பார்த்தாலும் சின்னதும் பெருசுமா மணிகளே! காண்டாமணிகளை  ரெண்டு தூண்களுக்கிடையில்  சங்கிலி போட்டுத் தொங்க விட்டுருக்காங்க. சின்னப்புள்ளைங்களுக்குக்கூட எட்டும் உயரத்தில்தான்!

அஸ்ட்ராலியாவில்  ப்ரிஸ்பேன் நகரின் சவுத் பேங்க்கில் ஒரு நேபாளக்கோவில்  இருக்கு.  இந்நாட்டு மக்களின் அன்பளிப்பு. முழுக்க முழுக்க மரக்கட்டிடம். அங்கேயும் இப்படி ஒரு பெரியமணி உண்டு.  அதனால்   இதெல்லாம் நமக்குப் பரிச்சயம் உள்ளவைகள்தான்...

 நம்ம துளசிதளத்தில் ஏற்கெனவே  நிறைய எழுதி இருக்கேன். ஆமாம்.... எதை விட்டு வச்சுருக்கேன்.... :-)


வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கும்போதே  கோபாலும் துர்காவும் வந்துட்டாங்க. முதல்லே கெமெராவைக் கொடுங்கன்னு  கையை நீட்டுனதும், 'உனக்காக வர்ற வழியில் படமெல்லாம் எடுத்துக்கிட்டே வந்தேன்னு' சொன்னார் நம்மவர்.  பிஸ்னுவுக்குக் காசு கொடுக்கணும். எவ்ளோன்னு கேட்ட துர்காவிடம், அஞ்சுன்னு கையைக் காட்டுன பிஸ்னு, என்னிடம்  'இன்டியாக்கா தீன் சௌ, நேப்பாலி பாஞ்ச்'ன்னார்.  நான் நம்மவரிடம் கொஞ்சம் காசு கூடுதலாத் தரச் சொன்னேன். மூட்டையைத் தூக்கி வந்த பஸந்திக்கு  இன்னிக்கு விருந்து வைக்கணும்:-)  இது பஸந்திக்குன்னு சொல்லியே கொடுத்தேன். பாவம்..... செல்லம்.பிஸ்னுவுக்கு நன்றி சொல்லிட்டுப் படியேறினேன்.  காண்டாமணியை அடிச்சு, நம்ம வரவை முக்திநாதருக்குச் சொன்னார் கோபால்:-) பக்கத்துலேயே சின்னதா  மூணு ப்ரேயர் வீல்ஸ் இருக்கு.  புத்தர் கோவிலா என்ன?  எதுக்கும் இருக்கட்டுமுன்னு  அதை ஒரு சுத்து சுத்தினேன்.  மூணு கோடி மந்திரம் சொல்லியாச்.  வலப்பக்கம்  ரெண்டு மூணு வரிசைகளில் மணிகள்  கட்டிவுட்டுருக்காங்க. கேட்டு வழியா அந்தாண்டை போனோம். இடதுபக்கம் இன்னொரு பெரிய ப்ரேயர்வீல்.  நம்மாட்கள் சுவரில் ஆட்டோக்ராஃப் போட்டுக் கெடுத்துருக்காங்க போல..... போடாதேன்னு ஒரு அறிவிப்பு.
தலையில் மஞ்சள்துணி கட்டிய  நேப்பாளமக்கள் அங்கங்கே....
வனப்பகுதிதான். இடையில்  கல்பாவிய படிகள்.   ரெண்டு மூணு மீட்டர் தரை.... அங்கிருந்து கொஞ்ச உயரத்தில்  இன்னொரு   ரெண்டு மூணு மீட்டர் நீளத் தரை இப்படிக்கொஞ்சம் கொஞ்சமா மேலெழும்பிப்போகும் படிகள். ரொம்ப ஓடாம நிதானமா நடந்து போகணுமுன்னு துர்கா சொன்னார்.  மேலே போகப்போக  சுவாசிக்க எனக்குக் கஷ்டமாப் போயிருமோன்னு  அவருக்கு பயம்...
நிதானமா ஏறிப்போய்க்கிட்டு இருக்கேன்.  படிப்பாதை நீண்டு போய்க்கிட்டே இருக்கு.  வழியில் அங்கங்கே சின்னதா  யாகசாலைகள்.  வாசலில் கோலமும், சுவரில் சாத்திவச்ச போர்டில் தமிழுமா இருக்கு!!!

வலப்பக்கம்  கொஞ்சதூரத்தில்   ஒரு புத்தர் சிலை  கட்டிக்கிட்டு இருக்காங்க போல....  ஒரு இடத்தில்  பாதை பிரிஞ்சு ஜ்வாலாமாயிக்குப் போகும் வழின்னு அம்புக்குறி.  இருக்கட்டும். முதலில் நம்ம சாமி....
சட்னு தண்ணீர் பாயும் பலத்த  ஓசை. இரைச்சலோடு  ஒரு  கால்வாயில் தண்ணீர் ஓட  மேலே ஒரு பாலம். படிகளேறிப் பாலம் கடந்து  போனதும் அந்தாண்டையும் படிகள் மேலேறிப்போகுது.
வலதுபக்கம்  ஒரு பெரிய மாடத்துலே பெருசா ரெண்டு ப்ரேயர் வீல்ஸுக்கான இடங்கள். ஒன்னுலே மட்டும்  ப்ரார்த்தனைச் சக்கரம் இருக்கு. தண்ணீர் வரும்  வேகத்தில் கீழே உள்ள ஒரு அமைப்பு சுத்தும்போது,  அதோடு இணைக்கப்பட்டக் கம்பியில்  இருக்கும் அந்த ப்ரேயர் வீலும் சுத்துது. தானே தானாய் கோடிகோடியாய் மந்திரங்கள்...........  ஓம் மணி பத்மே ஹ்ஹூம்.....  ஓம் மணி பத்மே ஹூம்..........................
இடது பக்கம் போகும் படிகளில் ஏறிப்போறோம்,  மாடி வீடுக்குப் போறதுமாதிரி....  மேலே போனதும்..........  ஹா......
அதோ கோவில்!  மூணடுக்கு மாடம். உச்சியில் கலசம்!   வாசலுக்கு முன்னால் ஒரு திறந்த வெளி முற்றம். ரெண்டு பக்கமும் செவ்வகமா ரெண்டு  தண்ணீர் தொட்டிகள்.  தீர்த்தக்குளம்!! ஒன்னு பாவங்கள் களைய, இன்னொன்னு புண்ணியம் சேர்க்க! சரஸ்வதி குண்ட், லக்ஷ்மி குண்ட்  என்ற பெயரில் இருக்கு. இதுலே  எது புண்ணியம் சேர்க்க, எது பாவம் கரையன்னு தெரியலையே.... (நான் நினைக்கிறேன்....  பணத்தாலேதான் பாவம் அதிகமாகுது. பாதாளம் வரைக்கும் பாயுதே....   இப்பத்தானே நாட்டு நிலவரத்துலே பணத்தாலேயே கோட்டை கட்டி அதுக்குள்ளே நின்னு ஆட்டி வச்சவங்களைப் பத்தி ஊர் உலகமே பேசிக்கிட்டு இருக்கே !!!)
சுத்திவர மொட்டைமாடிபோல கம்பித்தடுப்பில் கைப்பிடிச்சுவர். ரெண்டுமூணு பேர்  ஈர  உடைகளைக் காயப்போட்டுக்கிட்டு இருக்காங்க.
கோவிலைச் சுத்தி  அரைவட்டமா ஒரு சிமெண்டுத்தரைப் பாதை. இடதுபக்கம்  கோமுகங்களில் நீர்த்தாரை! நூத்தியெட்டு  தாரைகள். நூத்தியெட்டு தீர்த்தங்கள்.  உண்மையில்  அதுக்கு மேலே   அருவியில் இருந்து  கீழே இறங்கிவரும்  கால்வாய்த் தண்ணீர்  ரெண்டு கிளையாப் பிரிஞ்சு எல்லா  கோமுகங்கள் வழியாகவும் தாரையா ஊத்துது. முக்திதாரா !மானஸரோவரில் இருந்து  வரும் தண்ணீர்தான் இங்கே அருவியாகக் கீழே இறங்கி வருதாமே!  அதில்லை....  இது கண்டகி நதித் தண்ணீர்னு  ஒருபக்கம் சொல்லிக்கிட்டு இருக்காங்க.   திபெத் கிட்டே இருந்து இமயமலையில்  இருபதினாயிரத்துச் சொச்சம்  அடி உயரத்துலே இருந்து  இறங்குற தண்ணீர்  இந்த அருவியா வருதான்னு தெரியலையே.........
இந்தத் தீர்த்தங்களில் மக்கள் குளிக்க  வசதியான ஒரு ஏற்பாடு.  அங்கங்கே இடைவெளிவிட்டுக் கம்பித்தடுப்பு உண்டு.  உள்பக்கம்போய் அதைப் பிடிச்சுக்கிட்டே நடந்து போனால் போதும்.... 108 தீர்த்தமாடிய புண்ணியம் கிடைச்சுரும்! கீழே விழும் தண்ணீர் அங்கே தேங்காமல் வடிஞ்சு போயிருது.  இல்லேன்னா இடைவிடாது கொட்டும் தண்ணீர் அங்கே வெள்ளக்காடா ஆகி இருக்கும். அந்த நூற்றியெட்டில் ஒன்னுலே  உள்ளங்கை  ஏந்தி தீர்த்தம் பிடிச்சுத் தலையில் தெளிச்சுக்கிட்டு, அதுக்குண்டான பலனை நம்ம கணக்கில் சேர்த்துக்கிட்டேன். எல்லாம் போதும்!பாதையின் வலதுபக்கம் திண்ணையாட்டம் கட்டைச்சுவர். சுவருக்கு அந்தாண்டை கீழ் மட்டத்தில் கோவிலின் பிரகாரம்.  எட்டி உள்ளே பார்த்தால் இங்கேயும் மணிகளே மணிகள்!   உள்பக்கத்தில்  சுவரையொட்டிச் சின்னதா இருக்கும்  அமைப்பில் வரிசையா பித்தளை  வட்ட  அகல்கள்  வச்சுருக்காங்க.  கோவிலை வலம் வந்தபின் கோவிலுக்குள் நுழையறோம்.

வெளி முற்றத்தில்  டொனேஷன் என்று  ஒருத்தர்  உக்கார்ந்துருந்தார்.  சாமி தரிசனம் முடிச்சுட்டு அவரைப்  பார்க்கலாமுன்னு .....

வாசல் முகப்பில் இந்த நாட்டு வழக்கப்படி உள்ளே இருக்கும் கடவுளின் ப்ரீவ்யூ.  சங்கு சக்கரம் மேற்கையிலும்,  வலது கீழ்க்கையில் கதையும்,  இடது கீழில் பெயர் தெரியாத எதோ ஒன்னையும் பிடிச்சுக்கிட்டு நிக்கறார் பெருமாள். அவருக்கு  வலதில் வீணை மாதிரி ஒன்றுடன் கைகளில் ஜெபமாலை, சுவடியோடு....   ஒருவேளை சரஸ்வதியோ!  இடப்பக்கம்...  மேலே ரெண்டு கைகளிலும் கலசமேந்தி ....  யாராக இருக்குமுன்னு தெரியலையே....  லக்ஷ்மியாக இருக்கலாமுன்னா.... காதாண்டை பாம்புகள் இருக்கே....    ரெண்டுபேரும் பத்மாஸனத்தில் இருக்காங்க.  ஒருவேளை புத்தராக இருக்குமோ?
புத்தமதத்துக்காரர்களுக்கு  இது Padmasambhava Chumig Gyatsa    என்னும் புத்தர் கோவில்.   நூத்துக்கணக்கான தீர்த்தம் உள்ள இடமுன்னு  சொல்றாங்க. ரொம்பச்சரி,  அதான் நூத்தியெட்டு இருக்கே!! Chumig Gyatsa means 'Hundred Waters' in Tibetan.


பெரிய கோவிலெல்லாம் இல்லை. ஜஸ்ட்  ஒரே ஒரு பிரகாரம். நடுவில்  ஒரு சந்நிதி. கேரள ஸ்டைலில் நாலு பாகமா இருக்கும் ரெட்டைக் கதவுகள். பித்தளைக் கவசத்துடன்.  சந்நிதியைச்சுத்தி திண்ணை அமைப்பு.  முன்பக்கம் கருவறை வாசலுக்கு ரெண்டு பக்கமும் மட்டும் கொஞ்சம் அகலமான திண்ணை. இடதுபக்கம் ஒரு உண்டியல். வலதுபக்கம் ஒரு  பெரிய மணைப்பலகையில்  பட்டர் ஒருத்தர் உக்கார்ந்துருந்தார்.  கோவிலில் மூணு பேர் ஏற்கெனவே தரிசனத்துக்கு வந்தவங்க, பட்டரிடமிருந்து என்னவோ வாங்கிக்கிட்டு இருந்தாங்க.

ரெண்டுபடி ஏறி சாமியை தரிசிக்கலாம்.    பித்தளைக் கதவின் கீழ்பாகம் மூடி இருக்க மேல்பாதி மட்டும் திறந்துருக்கு. உள்ப்பக்கமா  ஒரு சின்னப்பையர் எட்டுவயசு இருக்கலாம். (நேபாளிகளுக்கு வயசே தெரியறதில்லைப்பா!  ரொம்பக்குட்டிப் பையனோன்னு நினைச்சால்  பதினைஞ்சுன்னு சொல்வாங்க)  பௌத்தமதத்துக்கார சின்னப்பட்டர். மழிச்ச தலையும்,  மஞ்சள் சட்டையும், மெரூன் வேஷ்டியுமா ரொம்பவே க்யூட் :-)

முந்தியெல்லாம் எல்லா வட இந்தியக் கோவில்கள் போலவே நாமே உள்ளே போய்  சாமியைத் தொட்டுக் கும்பிட்டுப் பூஜைகள் செஞ்சுக்கலாம் என்று இருந்துருக்கு.  பக்தர்கள் பெருமாள் முகத்தைத் தடவித்தடவி மூக்கை டேமேஜ் செஞ்சுட்டாங்கன்னு  இப்ப ஒரு பத்துப்பனிரெண்டு வருசமா  வெளியே நின்னுக்கிட்டே ( ரொம்ப தூரமில்லை....சாமிக்கும் நமக்கும் ஒரு ஆறடி இருந்தால் அதிகம்!) கும்பிடும் முறை வந்துருச்சு. அதிலும்  சிலருக்கு  குறைஞ்சபட்சம் கருவறை நிலைப்படிக்கு உள்ளே  நின்னு ஸேவிக்கும் பாக்யம் லபிச்சுருக்கு!  அந்த சமயத்தில் அங்கிருக்கும் பட்டருக்குத் தோணுச்சுன்னா அனுமதிப்பாராக இருக்கும்.


பெரிய  ஆட்களை விட சட்டத்தை மதிப்பது சின்னப்பசங்கதான் என்பது இன்னொருமுறை எனக்கு அங்கே நிரூபணம் ஆச்சு. குழந்தைகள் எதுக்கும் சமரசம் பண்ணிக்க மாட்டாங்க!   யாரையும் உள்ளே விடக்கூடாதுன்னு  சொல்லி வச்சால்...அவ்ளோதான். யாரும் உள்ளே போகமுடியாது!  சிம்பிள்:-)

உள்ளே வரலாமான்னு கேட்டுவச்சேன், குட்டிப்பட்டரிடம்:-) கூடாதுன்னு தலையாட்டல்.  சரி. ஒரு படம் க்ளிக்கலாமா? அதுக்கும்  ஊஹூம்னு இன்னொரு தலையாட்டல். கண்களில் சின்ன மிரட்சி இருந்ததோ.... வாய்ச்சொல்லே கிடையாது!  புள்ளெ பயந்துருக்குமோ?

கண்ணால் அவனை ஐ மீன் பெருமாளை நல்லாப் பார்த்தால் ஆச்சுன்னு  உத்து உத்துப் பார்த்து மனசுக்குள் உள்வாங்கிக்கறேன். வாய் மட்டும் கேசவா நாராயணான்னு முணுமுணுத்துக்கிட்டே இருக்கு. இடைக்கிடையே தெரிஞ்ச சில ஸ்லோகங்கள்.  இதுக்குள் ஏற்கெனவே அங்கே வந்துருந்த பக்தர்கள் மூவரில் ஒருவர் சின்னத்தட்டில் கற்பூரம் கொளுத்தி  ஆரத்தி காமிக்கிறார்.  என் பக்கத்தில் நின்றபடிதான். கை சுழற்றுன வேகத்தில்  அரைக்கதவில் தட்டி உள்ளே விழுந்துருச்சு தட்டு...... குட்டிப்பட்டர் தட்டை எடுத்து நீட்டினார்.

அவர் முழிச்சதைப் பார்த்து வெளியே உக்கார்ந்திருந்த பெரிய பட்டர் இன்னும் கொஞ்சம் கற்பூரத்தை அந்தத் தட்டில்வச்சு லைட்டரால் கொளுத்திக் கொடுத்தார். இந்த முறை நிதானமான ஆரத்தி. எதோ குறிப்பிட்ட  மந்திரம் போல  சொல்லிக்கிட்டே... சரியா மாமான்னு  இன்னொருவரைக் கேட்டார். அட! தமிழ்க்காரர்கள்தானா!   ஆஹா.....!!!

நாங்களும் சாமியைக் கும்பிட்டுக்கிட்டோம். இந்த மூவர் குழுவில் இருந்த பெண், வெளியே கீழே நின்னு  ஸ்லோகம் சொல்ல ஆரம்பிச்சாங்க. நமக்குத் தெரிஞ்சது என்பதால் நாங்களும் கூடவே சொன்னோம்.
கற்பூர ஆரத்தித் தட்டை எங்களுக்கும் காண்பிக்க,  தீச்சுவாலையில் உள்ளங்கைகளைக் காட்டிக் கண்ணில் ஒத்திண்டாச்சு. சின்ன பாக்கெட் கல்கண்டை சாமிக்குக் காமிச்சுட்டு அதைப் பிரிச்சு எங்களுக்கும் ப்ரஸாதம்  கொடுத்தாங்க.

நாந்தான் ஏற்கெனவே சொல்லி இருக்கேனே... பெரும்பாலும்  கோவிலுக்கு வெறுங்கையாத்தான் போவேன். பயணத்தில் தேங்காய் இத்யாதிகள்  வேணாமுன்னுதான்.  அவைகளைத் தின்னவும் முடியாமல், தூக்கிப்போடவும் முடியாமல்  காரில் வச்சு, பலநாள்  பயணம் முடியும்போது பூசணம் பிடிச்சுக் கிடக்கும். அதான் முக்கிய காரணம்.  இன்னொரு காரணம்..... சாமிக்கு என் மனசைப் பூரணமாக் கொடுக்கறேன். அதைவிட அவருக்கு வேறொன்னும் வேண்டாம், இல்லையோ?

நம்ம   உள்ளூர் கோவில்களிலேயே இப்படின்னா...  இந்த மாதிரிப் பயணத்துக்கு எதாவது கொண்டுவந்துருவேனாக்கும்? அவனுக்குத் தெரியாதா... நம்ம லட்சணம்! எதையும் எதிர்பார்க்கமாட்டாந்தானே:-)

சின்ன மேடையில் நடுவில் மூலவர் முக்திநாத். செப்புக்கவசம் போட்டுருக்காரோ? இல்லெ   செப்புச்சிலையேவா?    பாவம்.... அதுகூட பளபளன்னு இல்லாம  நிறம் மங்கிக்கிடக்கு. முகம்  வடக்கர்கள் முகம். காது வளர்த்துக்கிட்டு இருக்கார்! புத்தமதத்துக்காரர்களுக்கும் இந்தக்கோவிலும் மூர்த்தியும் பொது என்பதால் அவுங்க வேலையா இருக்கணும், இப்படிக் காதை வளர்த்து விட்டது! நாலு கைகள்.  மேல் வலக்கையில் சக்கரம், கீழ் வலக்கையில் சங்கு.  மேல் இடக்கையில் கதை, கீழ் இடக்கையில் தாமரை!  அமர்ந்த கோலம்தான்.
ஸ்ரீதேவி பூதேவின்னு  ரெண்டு தாயார்கள் இவருக்கு ரெண்டு பக்கங்களிலுமா... ஒருகையை உசத்தி நீட்டிக்கிட்டு நிக்கறாங்க. செப்புச்சிலைதான் போல.... பெருமாளுக்கு வலதுபக்கம் புத்தர் அமர்ந்த நிலையில்.  அவருக்கு முன்னால் சின்னதா ரெண்டு உருவங்கள். நரநாராயணர்கள்.  வலது முழங்காலண்டை  ரெண்டுமூணு சாளக்ராமங்கள். கொஞ்சம் பெருசுதான்!

பெருமாளின் இடது முழங்காலாண்டை  நம்ம ராமானுஜர், அடுத்தாப்லெ புள்ளையார். இப்பப் பெருமாளின்  பக்கம் பார்த்தால் இன்னொரு புத்தர் சிலை. தாய்லாந்து ஸ்டைலில் க்ரீடம் எல்லாம் வச்சுக்கிட்டு...  இவர் பத்மசம்பவராம்.  ஹா...   அந்த  Padmasambhava  இவர்தானா!!!    ஆனா....  என்ன சொல்லுங்க.....இவருக்கு முன்னால் நிக்கும்  பெரிய திருவடிதான்.........

 ஹைய்யோ!!  அழகுன்னா அழகு,  அப்படி ஒரு  அழகு!  வளைஞ்ச மூக்கு .... அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது!

பெருமாள் தாயார்களைத் தவிர்த்து மத்தவங்க எல்லாம் பித்தளைச்  சிலை   தான்.    மஞ்சள் முகம்:-)  நார்த் இண்டியன் ஸ்டைலில் எல்லோருக்கும்  ஜிலுஜிலுன்னு  சிந்தெடிக் ஜரிகை வச்ச பாலியஸ்டர் பட்டு உடுப்பு!  நம்மூரிலும் இது  சாமிக்குன்னு விக்கறாங்க இல்லே? நம்ம ஊரில்   மேலாடை கலாச்சாரம் (!)அனுசரிச்சு பாவாடை, துப்பட்டா போல ஒரு செட் கிடைக்குதே!  சாமி மேடைக்கு பேக் ட்ராப்பா செப்புத்தகட்டில் வேலைப்பாடு செஞ்சுருக்கும் ஒரு ஸ்க்ரீன்.

சாமி அலங்காரத்திலும் நம்ம  சௌத்தை அடிச்சுக்க முடியாதுப்பா!!!


உண்மையைச் சொன்னால்..... சாமி முன்னால் நின்னு கும்பிடும்போது  மனசுக்குள் ஒரு பரவசம், எனக்கா எனக்கான்னு  எனக்கு வருமே...  அது இங்கே மிஸ்ஸிங். ஆசைப்பட்டு வந்தோம். நூத்தியெட்டு திவ்யதேசக் கோவிலில்  இதுவும் ஒன்னு. தரிசனம் ஆச்சுன்ற பாவம்தான் மனசில். தானா வராதது தடியால் அடிச்சா வருமா?


பிரகாரம் வலம் வரலாமுன்னு  ஒரு சுத்து போய் சந்நிதி முன் வாசலுக்கு வந்ததும்  பெரியபட்டர் நமக்கு குங்குமக் குழைசல் நெத்தியிலே வச்சு  ஆசி வழங்கும் பாவனையில்  கை உயர்த்திக் காமிச்சார். எதோ  புத்தகங்கள்,  ஸ்லோகப் புத்தகம்  சைஸில் எடுத்துக் காமிச்சு வேணுமான்னார்.  ஹிந்தி.  தட்டுத்தடுமாறி வாசிக்கணுமேன்னு  வேணாமுன்னு சொன்னேன்.

அவருக்குக் கொஞ்சம் தக்ஷிணை  கொடுத்துட்டு, பெருமாள் உண்டியலிலும் கொஞ்சம் 'ரூ'  போட்டுட்டுக் கருவறையை ஒட்டி இருக்கும் திண்ணை அமைப்பில் உக்கார்ந்து கையோடு கொண்டுபோயிருக்கும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் (பெரிய எழுத்து) எடுத்து வாசிக்க ஆரம்பிச்சோம்.


நாலாவது பக்கம்  வரும்போதே...மனசுக்குள் ஒரு மாதிரி இருக்கு, தொண்டை அடைச்சுக்கிட்டுக் கண்ணில் குபுக்னு கண்ணீர் வந்துருச்சு.  என்னமோ மனசுலே.... பெருமாளே... நல்லபடியா தரிசனம் கொடுத்தியேன்னு....

 வாய்விட்டு வாசிப்பதைக் கொஞ்சம்  நிறுத்திக்கிட்டு  மனசுக்குள் வாசிக்கிறேன். நம்மவர் அவர்பாட்டுக்கு தனக்குப் பக்கத்தில் என்ன நடக்குது, சத்தத்தைக் காணமேன்னு கூட உணராமல் அவர் பாட்டுக்குச் சத்தமா படிச்சுக்கிட்டே போறார்..... நான் என்னையே ஆசுவாசப்படுத்திக்கிட்டு இருக்கும்போது......

நமக்கு முன்வந்த மூவர் குழுவில் ( ரெண்டு ஆண்கள், ஒரு பெண்) மூத்தவர்  பிரகாரம் வலம் வர்றார். நம்மைத் தாண்டிப் போய் வலப்பக்கம் திரும்புனவர், அடுத்த நொடியில் ரிவர்ஸ் கியரில் என் முன் வந்து நின்னு , 'உங்களுக்கு ஸர்ப்ப தோஷம் இருக்கு'ன்னார். முன்னால்  யாரோ நிக்கறாங்க என்ற உணர்வில் தலை நிமிர்ந்த நம்மவர்  'யாருக்கு?'ன்னு கேட்டதும்  அவர் என்னைக் கை காமிச்சார். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.......

'நாங்க  ராகு கோவிலில்  அபிஷேகம் பூஜை பண்ணி இருக்கோமு'ன்னு கோபால் சொல்ல,  அதுக்கு அவர்  அதெல்லாம் சரிவராது. நீங்க  ஸர்ப்ப யாகம் பண்ணனும் என்றார். நம்மவர் பயந்து போயிட்டார் போல.... 'அதுக்கு என்ன செய்யணும், எந்தக் கோவிலில்னு'  கேட்டுக்கிட்டு இருக்கார்.....

'நாகேஸ்வரத்துலேயே பண்ணிக்கலாம். இல்லேன்னா  நான் ஒரு இடம் சொல்றேன்னா'ரா........   'யாகம் பண்ணினால்... உங்க கண்ணுக்குக்கீழே இருக்கும் கருப்பு கூட போயிரும்னு'   கூடவே ஒரு அழகுக் குறிப்பும்! வெளியே பார்க்கலாம்,   விவரம் தாங்கன்னதும் அவர் வலத்தைத் தொடர்ந்தார்.

என்னம்மா இப்படிச் சொல்றார்ன்னதும், நம்ம ' படம் எடுக்கும்' சமாச்சாரம் எப்படி இவருக்குத் தெரிஞ்சது?    நான் 'படம் எடுக்கறதை'ப் பார்த்துக் கண்டுபிடிச்சுருப்பாரோன்னு  எனக்கு சம்ஸயம்னேன். அப்புறம் கொஞ்சம் முழிச்சுப் பார்த்துட்டு, சகஸ்ரநாமத்தைத் தொடர்ந்தோம். இவர் அப்பப்ப நிறுத்திட்டு,  'உன் கண்ணு பாம்பு மாதிரிதான் இருக்கு.  கோபமா இருக்கும்போது அசல் பாம்புதான்னார்.  மூச்சு விடும்போதுகூட  பாம்பாட்டம் சீறல்.....    நான்,  அது ஆஸ்த்மா மூச்சுன்னு சொல்லலை:-)

  பாவம்... கோபால். அவருக்கு பாம்புன்னா கொஞ்சம் அதிகமாவே  பயம்தான். இவரை அப்பப்ப பயமுறுத்த எனக்கும் ஒரு சான்ஸ் கிடைச்சுருக்கு பாருங்க:-)  கையால் 'படம் எடுத்து'க் காமிக்கலாம்.... ஆடு பாம்பே.... நெளிந்தாடு பாம்பே....   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........  :-)

இதுக்குள்ளே நம்மைக் காணோமேன்னு துர்கா தேடிக்கிட்டு வந்தார். கெமெராவைக் கொடுத்து அவரையும் 'படம் எடுக்க' வச்சேன்:-)
இன்னொருக்கா ப்ரகார  வலம். அப்போதான்  இடப்பக்க சுவரில் புள்ளையார் இருப்பதைக் கவனிச்சு கும்பிடு போட்டுட்டு ஒரு க்ளிக்.  இன்னொருபக்கம்  யாகசாலை இருக்கு. யாககுண்டத்துக்குப்பக்கம் இன்னும் சில சிலைகள். நம்ம ஆண்டாள், ராமானுஜர், மணவாள மாமுனிகளாம்! அட!   இங்கே வந்தா உக்கார்ந்துண்டு  இருக்காய்! தூமணி மாடம் மனசுக்குள் ஆச்சு.

நம்ம திருமங்கையும், பெரியாழ்வாரும் இந்த  முக்திநாத்  ஸ்ரீமூர்த்தியைப் மொத்தம் பனிரெண்டு பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்காங்க. அதனால் நூத்தியெட்டு திவ்யதேசக் கோவில்களில் இதுவும் சேர்த்தி. திருமங்கைக்கு பத்துக்குக் குறைஞ்சு பாடத்தெரியாது என்பதை நினைச்சுப் பார்த்தேன். அப்படித்தான் இருக்கணும்:-)
இதுலே பாருங்க.... ஏகப்பட்ட வசதிகள் நிறைஞ்சுருக்கும் 'இந்தக் காலத்துலேயே' இங்கே வந்து போக இவ்ளோ கஷ்டப்பட வேண்டி இருக்கும்போது  அவர்கள் வாழ்ந்த காலத்து நிலமை எப்படி இருந்துருக்கும்?

முக்திநாத் மூர்த்தியை ஸேவிக்கணுமுன்னு புறப்பட்டு வந்த நம்ம திருமங்கை ஆழ்வார், சாளகிராம் என்ற ஊர்வரை போயிருக்கார்.  குதிரையில் போயிருக்கலாம்.... மன்னன் கலியனுக்குக் குதிரை சவாரி புதுசா என்ன?  அப்போதைய காலத்து ட்ராவல் ஏஜன்ட்  என்ன சொன்னாரோ?

கண்டகி நதியில் மட்டுமே  சாளகிராம் கற்கள்  கிடைக்குது.  தாமோதர் குண்ட் என்ற இடத்திலிருந்து  புறப்பட்டு வரும் இந்த நதி, ஒரு வகை அபூர்வ வகைக் கற்களான சாளகிராம்களை  உருட்டிக் கொண்டு வந்துக்கிட்டு இருக்கு. அதை முதல்முதலாக் கண்டெடுத்த பகுதிதான் சாளகிராம் என்ற பெயரில் இருக்கு.  இந்த கிராமம் வரை வந்தவர்,  இங்கிருந்தே மனக்கண்ணால்   முக்திநாத் பெருமாளை ஸேவித்து, அவர் இருக்கும் திசை நோக்கி , அவருடைய வழக்கம்போல் பத்துப் பாசுரங்கள் பாடி இருக்கார். அதுக்குப்பின் அவர் முக்திநாத் கோவில்வரை வர முடியாமல் ஊர் திரும்பினதாக  ஒரு இடத்தில் வாசித்திருக்கேன்.... ப்ச்..... பாவம்....

கலையும்கரியும்பரிமாவும் திரியும்கானம்கடந்துபோய்,
சிலையும்கணையும்துணையாகச் சென்றான்வென்றிச்செறுக்களத்து,
மலைகொண்டலைநீரணைகட்டி மதிள்நீரிலங்கைவாளரக்கர் தலைவன்,
தலைபத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடைநெஞ்சே.

காத்மாண்டுவில் இருந்து இந்த சாளக்ராம் சுமார் 274 கிமீ தொலைவில் இருக்கு. அங்கிருந்து முக்திநாத கோவில்   இன்னொரு 279  கிமீ (இப்போதைய சாலைக் கணக்குப்படி  மொத்தம் 553  கிமீ!)

இந்த சாளகிராம் கற்களைப்பற்றி இன்னும் கொஞ்சம் என் தியரியைச் சொல்லணும்.  அடுத்து வரும் பதிவுகளில் சொன்னால் ஆச்சு. என்னடா உளறிக்கொட்டறாளேன்னு யாரும் அடிக்க வராமல் இருக்கணும் பெருமாளே!...

தொடரும்......... :-)Monday, February 20, 2017

பிஸ்னுவின் பஸந்தி..... ( நேபாள் பயணப்பதிவு 12)

நாம் பயணத்திட்டம் வகுக்கும்போது, நம்மவர் பல இடங்களில் தேடித்தேடித் தகவல்கள் சேர்த்துக்கிட்டு இருந்தார். எனக்கும் 'ஹோம் ஒர்க் ' செஞ்சுக்கிட்டுப் போறது பிடிக்கும். டீச்சர் பாருங்க.... நோட்ஸ் ஆஃப் லெஸன் எழுதிப் பழக்கம் இருக்கே:-)   'இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்' ன்னு செந்தில் சொன்னாலும் கூட  அந்த வெல்த்துக்கும் ஒரு அளவு இருக்குல்லே. கூடுதல் இன்ஃபர்மேஷன்  கடைசியில் நம்மை குழப்பத்தில் கொண்டு விட்டுருது பாருங்க....

 No குதிரை,  என்னால் முடியாதுன்னு நம்மவரிடம் சொன்னப்ப, மோட்டர்பைக்கில் கூடப் போகலாம். பில்லியனில் உக்கார்ந்து போகணும். அது பரவாயில்லையான்னார். நோ ஒர்ரீஸ்னு சொல்லி இருந்தேன். ஆளுக்கொரு பைக்!

இப்ப இங்கே நேரில் வந்து நின்னுக்கிட்டு இருக்கோம். பைக் ரைடுக்கு வழியே இல்லை. கொஞ்சநாள்  பைக்கில் கொண்டு விட்டுக் காசு சம்பாதிக்கும் வழி கண்டுபிடிச்சுருக்காங்க சிலர். அப்ப குதிரையை  வச்சுப் பிழைக்கும் மக்களுடைய வாழ்வாதாரம் போச்சேன்னு குதிரைக்காரர்கள் போராட ஆரம்பிச்சதும், வாயில்லா ஜீவனைப் பட்டினி போட முடியுமான்னு யோசிச்ச  பஞ்சாயத்து  நிர்வாகமோ என்னவோ....   மோட்டர்சைக்கிளைத் தடை பண்ணிருச்சு.
'என்னம்மா சொல்றே?' ன்ன நம்மவரிடம், 'நான் நடந்தெ வர்றேன்னு' சொல்லி நடக்க ஆரம்பிச்சேன். சரியா பாதையெல்லாம் கிடையாது. மக்கள் நடந்து நடந்து உண்டான பாதை.  ஆரம்பத்துலேயே     மெள்ள மெள்ள ஒரு மேட்டில் ஏறணும்....
முக்திநாத்துக்கு நுழைவு வாசல் ஒன்னு கட்டிவிட்டுருக்காங்க. அதன்வழியாத்தான் புது ரோடு வரப்போகுது.

அங்கங்கே   இங்கே  நியூஸியில் நம்ம வீட்டுலெ இருக்கும் செடிகளைப் பார்க்கும்போது  ஒரு க்ளிக்.  இங்கேயும் தங்கும் விடுதிகள்  இருக்கு. பேசாம இங்கே ஒருநாள் தங்கிட்டுக்கூடப் போகலாம்!  அதுக்கு  கீழேயே அனுமதி வாங்கி இருக்கணும்.  மேலே போன ஆட்கள்  இருட்டுனபிறகு(ம்) வரலைன்னா  'மேலே'யே போயிட்டாங்களோன்னு   தேடணுமே ........
நம்ம நியூஸியில் கூட  'மலையேறிப்பார்க்க, காட்டுக்குள் போக 'ன்னு வரும் மக்கள் உள்ளே போகுமுன் அங்கே வச்சுருக்கும் விஸிட்டர்ஸ்  நோட்டில்  பெயர் மற்ற விவரங்கள், என்றைக்கு உள்ளே போறோம். எப்போ திரும்பி வர்றோம் என்று பதிவு செஞ்சிட்டுப் போகணும். திரும்பி வந்தவுடன், நாம் ஏற்கெனவே எழுதிட்டுப்போன இடத்தில் 'வந்தாச்சு. திரும்பி வந்தாச்சு. வந்துட்டேன்'னு   சொல்லி,  வந்த நேரம், கையெழுத்து எல்லாம் பதிஞ்சுட்டுப் போகணும். தப்பித்தவறி எழுத மறந்துட்டால் அவ்ளோதான்.....    கான்ஸர்வெஷன் டிபார்ட்மென்ட் ஆட்கள் நம்மைத் தேட ஆரம்பிச்சுருவாங்க. இதுலே ஏகப்பட்ட தன்னார்வலர்கள் கூட்டமும் சேர்ந்தே தேடும்!  

அங்கங்கே சாளகிராம் விற்கும் கடைகள். சும்மாத் தெருவில் ஒரு பலகை போட்டு அதில் பரத்தி வச்சுருக்காங்க. கோலிகுண்டு சைஸ் முதல் கொஞ்சம் பெரிய கைப்பந்து சைஸ் வரை!  விலை அதுக்கேத்தாப்போல். எல்லாம் வர்றப்ப விசாரிக்கலாம்னு  லேசா உயர்ந்துபோகும் வழியில் ஏறிக்கிட்டு இருக்கோம். போலீஸ் செக் போஸ்ட் ஒன்னு. க்ளிக்:-)
கொஞ்சம் பெரிய (!)கிராமங்கள் போல சில இடங்களில் ரெண்டுபக்கமும் வீடுகள், சாலையும் அகலம்தான். மண்ணும் கல்லுமான சாலை.  அங்கே வசிக்கும்  மக்கள்  பைக்கில் போய் வந்துக்கிட்டு இருக்காங்க.

ஒல்லியான துர்கா விடுவிடுன்னு நடந்து போறார். அப்பப்ப ஞாபகம் வருது நாமும் கூடப் போறோம் என்பது:-) சட்னு நாம் போய்ச் சேரும்வரை காத்திருந்து கூடவே மெள்ள நடக்கறார். ஒரு அஞ்சாறு நிமிட்லே பழைய விடுவிடு நடை வந்துருது :-) நம்மவரும்  ஒரு நிதானத்துலே  துர்கா பின்னாடி போனாலும், அப்பப்ப நான் எந்த கதியில் இருக்கேன்னு பார்த்துக்கிட்டே அடி எடுத்து வைக்கிறார்.
ஒரு நாப்பது நிமிசமா நடக்கறேன்.... நம்ம ஆஸ்த்மா தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சது. அப்பப்ப இன்ஹேலரில் ஒரு இழுப்பு இழுத்துக்கறேன். இதைக் கவனிச்ச கோபாலும் துர்காவும் நான் நிக்கும் இடத்துக்குத் திரும்பி வந்தாங்க. 'இதுக்குத்தான் சொன்னேன்...பேசாம குதிரையில் வந்துருக்கலாமுல்லே'ன்னு நம்மவர் கடிஞ்சுக்கறார். அப்பப் பார்த்து எங்கிருந்தோ வந்தமாதிரி ஒரு குதிரை இறக்கத்தில் வருது.
குதிரைக்காரரை நிறுத்தி விசாரிச்ச துர்கா, 'பேசாம இதுலே ஏறிவாங்க'ன்னு சொல்றார். பரவாயில்லாம இருக்கு  குதிரை!  வெள்ளைக்குதிரை! கல்கியோ?

கொஞ்சம் தயங்குனதும், அதெல்லாம் பயமில்லை. பத்திரமாப் போயிடலாமுன்னு  குதிரைக்காரரும், கோபாலும் வற்புறுத்தவே  சரின்னு தலை ஆட்டினேன். பேச முடியாது. அதான் இழுக்குதுல்லே....  ஒரு சின்ன மேட்டுக்குப் பக்கம் குதிரையை நிறுத்தி அதில் ஏறிக்க  உதவி செஞ்சாங்க நம்மவரும் துர்காவும்.  முதல்முறை குதிரை சவாரி. என்னடா எனக்கு வந்த சோதனை? கையில் இருந்த கேமெரா, இடம் மாறி கோபாலின் கைக்குப் போயிருச்சு :-(
தடியா ஒரு மெத்தை போல இருக்கும் ஸீட்! அதுலே நடுவிலே ஒரு  மரக்கட்டைக் கைப்பிடி. கெட்டியாப் பிடிச்சுக்கணுமாம்.  பாதங்களை அதுக்கான  மிதி வளையத்துக்குள்  வச்சுக்கணும். எந்தப் பக்கமும் உடம்பைச் சரிக்காமல் நேரா நடுவா உக்காரணும். குதிரை கிளம்பிருச்சு.  கோபாலுக்கு டாடா காமிக்கக்கூட அவகாசமில்லை :-)


கோவிலுக்கான தோரண வாசலில் நுழையறோம். வெல்கம் டு த முக்திநாத் டெம்பிள்னு  வரவேற்பு. கூடவே இன்னொரு பெயரும் போட்டுருக்கு.

அந்தக் காலத்துலே ஒரு தமிழ்ப் படத்துலே வைஜயந்திமாலா பாடுன பாட்டு.... 'அகிலபாரத பெண்கள் திலகமாய் அவனியில் வாழ்வேன் நானே....' மாதிரி டொக்டொக்குன்னு போறேனா? ....  ஊஹூம்... :-) குதிரையின் கடிவாளத்தைப் பிடிச்சுக்கிட்டு பக்கத்துலேயே நடந்து வர்றார் குதிரைக்காரர்.  கொஞ்சம் மேடான பகுதி வரும்போதெல்லாம் நாம் தலையைக் குனிஞ்சுக்கிட்டுத் தரையைப் பார்க்கணுமாம்.  இல்லேன்னா தலை சுத்துமாம்.

  தரை எங்கே? குதிரை முதுகுதான் கண்ணுக்குத் தெரியுது.  காட்சிகளை வேடிக்கை பார்க்க முடியலை  கண்களால். அதுக்காக வாயைச் சும்மா வச்சுருக்கலாமா?

குதிரைக்காரரிடம் பேச்சுக் கொடுக்கறேன். பெயர் பிஸ்னு.
ஹைய்யோடா...... விஷ்ணு!  நாம் சென்னை மக்கள்னு  தெரிஞ்சுக்கிட்டதும் அவருக்கும் ரொம்பவே உற்சாகமாப் போயிருச்சு. ரெண்டு வருசம் சென்னையில் வேலை செஞ்சுருக்காராம். நல்ல சனம், நல்ல சாப்பாடுன்னு  புகழ்ந்து பேசுனார்.  குனிஞ்ச தலை நிமிராமல் பேச்சு நடக்குது.  கல்யாணத்துலே கூட தலை குனியாத என்னை...இப்படி தலை குனிய வச்சுட்டாரே  பிஸ்னு :-)
நம்ம குதிரைக்குப் பெயர் பஸந்தி!  சூப்பரூ.....
பக்கவாட்டில் படிகள் மேலேறிப்போகுது. முதலில் படிகளூடே குதிரை போகுமோன்னு திகிலா இருந்தது உண்மை.  சைடுலே இருக்கும்   சின்ன, குறுகிய பாதையில் தான் குதிரை கொஞ்சம் கஷ்டப்பட்டு காலை  மேலே எடுத்து வைக்குது. கரடும் முரடுமா கற்கள். அதுமேலேதான் நடக்கணும். ஸ்லிப் ஆனால் போச்சு.  பாவம்..... பஸந்தி..


மன்னிச்சுக்கோ பஸந்தி......   குண்டா இருக்கேன்... மன்னிச்சுக்கோ...

பிஸ்னுவிடமும் 'குண்டா இருக்கேன், மன்னிச்சுக்கோங்க'ன்னதுக்கு சத்தம் போட்டுச் சிரிச்சவர்.... 'நீங்க குண்டே  இல்லை. யார் சொன்னது?  உங்க மாதிரி டபுள் சைஸ் ஆட்களையெல்லாம் பஸந்தி சுமந்துருக்கு'ன்னார்!  அப்பாடா.... ஒரு மன ஆறுதல்தான்.  எப்படியாவது    கொஞ்சம் இளைக்கணும்.  பேலியோவுக்கு மாறியே ஆகணுமுன்னு மூளையில் ஒரு முடிச்சைப் போட்டேன்!
நம்ம பிஸ்னு நல்லாவே ஹிந்தி பேசறார்.  நாங்க ஜாலியாப் பேசிக்கிட்டே போனோமா... சட்னு ஒரு இடத்துலே  இதோ கோவில் வந்துருச்சுன்னார். தலை நிமிர்ந்து பார்த்தால்.....  கோவில் வாசல் கேட்டில் இருக்கோம்.   காலை இந்தப் பக்கம் போட்டு,  கழுத்தாண்டைக்  கையை அண்டைக்கொடுத்து  என் தோளைப் பிடிச்சுக்கிட்டு அப்படியே மெள்ள  இறங்கிடலாமுன்னு சொன்னதும் அப்படியே ஆச்சு.(என்ன பஸந்தி.... இப்படிப்பண்ணிட்டே.... உன்னை நம்பித்தானே உன்னிடம் ஒப்படைச்சேன்.... நைஸா அப்படியே தள்ளி விட்டுருன்னு......    கோபாலின் மைண்ட் வாய்ஸ்......  )

இன்னும் இவுங்க வந்து சேரலை.  மெள்ள வரட்டும். இந்த பெஞ்சில் உக்கார்ந்துக்குங்கன்னு சொல்லிட்டு,  அங்கே ஒரு  இடத்தில் இருந்த பாத்திரத்தை எடுத்து, பக்கத்தில் இருந்தகுழாயில் தண்ணீர் பிடிச்சு பஸந்திக்குக் கொடுத்தார். அது தாகத்தோடு  இருக்கு போல. சட்னு குடிக்க ஆரம்பிச்சது.  சுத்திவர மலை. இந்தாண்டை பள்ளமாப்போகுது பாதாளம். கையில் கேமெரா இல்லையேன்னு நொந்துக்கிட்டு நின்னேன். ஜாக்கெட் பாக்கெட்டில் போட்டு வச்சுருந்துருக்கலாம்.... பதட்டத்திலே  தோணலை  :-(


தொடரும்........  :-)

PINகுறிப்பு:  நம்மவர் நமக்காக அங்கங்கே க்ளிக்கிட்டு வந்த படங்களை இங்கே போட்டுருக்கேன்:-)