Thursday, November 27, 2008

அக்கா ( பாகம் 4)

"கொஞ்சம் ஊதிக்கிட்டு வரயா?"

சரின்னு தலை ஆட்டுவேன்.

இதுவும் ஒரு வைத்தியம் தானாம். நம்ம மதீனாக்காதான் சொன்னாங்க, சாயந்திரமா தொழுகை முடியும் நேரத்துக்குப் பள்ளிவாசலில் புள்ளையை வச்சுக்கிட்டு நின்னாப் போதும். தொழுகை முடிச்சுவரும் பெரியவுங்க மந்திரம் சொல்லி புள்ளை முன்நெத்தியிலே ஊதுவாங்க. உடம்பு சீக்கிரம் நல்லா ஆயிருமுன்னு. ஒரு ஆறு ஆறறைக்கு அங்கே இருந்தாப் போதுமாம். நான் எதுக்கு இருக்கேன்? புள்ளையைத் தூக்கிக்கிட்டுப் போவேன். அப்ப நம்ம தரணி (மூனாவது) அடம் புடிச்சுக் கூடவே வரணுங்கும். அதுவும் சின்னப்புள்ளைதானே? அம்மாந்தூரம் நடந்து வருமா? ரெண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்குமுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் கூடக் குறையவும் இருக்கலாம்.
அவளை ஏமாத்திட்டுப் போகறதுக்குள்ளே இந்தா அந்தான்னு நேரமாயிரும்.
தொழுகை முடிஞ்சுறப்போகுதேன்னு புள்ளையைத் தூக்கிக்கிட்டு லொங்குலொங்குன்னு ஓட்டமும் நடையுமா மூச்சுவாங்கப் போய்ச்சேருவேன்.
புள்ளை எலும்பும் தோலுமாத்தான் இருந்துச்சு கனமில்லாமன்னு வையுங்க.


சாயந்திரம் கொஞ்சம் சீக்கிரமாப் புள்ளைகளுக்குச் சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருந்தால்......ஏதோ ப்ரோக்ராம் போட்டுக்கிட்டு இருக்காங்கன்னு கண்டுபிடிச்சுறலாம். அன்னிக்கு வியாழக்கிழமையா இருந்தா என் சந்தேகம் உறுதிதான். சினிமா. இன்றே இப்படம் கடைசின்னு நோட்டீஸ் ஒட்டிருவாங்க. வெள்ளிக்கிழமைக்குத்தான் புதுப்படம் போடுறது. புள்ளைங்களுக்குப் பாயை விரிச்சு வரிசையாப் படுக்க வச்சு, தானும் கூடவே படுத்துக்கிட்டு கதை சொல்லித் தூங்க வைக்கப் பார்க்கும். சின்னப்புள்ளைங்களுக்குக் கவனம் ஜாஸ்தி. ஏமாத்தறது ரொம்பக் கஷ்டம். விளையாட்டுக் காமிச்சாலும் வெள்ளாண்டுக் கிட்டேக் காரியத்துலே கவனமா இருக்குங்க. எல்லாத்துக்கும் நேரம்காலம் தெரியுதுன்னா பாருங்க. எமப் பசங்க. நேரமாக ஆக பாத்ரூம் போயிட்டு வரேன்னு போகும். பெரிய பொண்ணு, பின்னாலயே எனக்கும் வருதுங்கும். அக்கா போறமாதிரி போய் திரும்ப வந்து படுத்துக்கும். நாந்தான் வேலிப்பக்கம் நிக்கும் மதீனா அக்காகிட்டே நிலவரத்தை அப்பப்ப சொல்லுவேன். இன்னும் அஞ்சு நிமிசத்துலே வந்துரும். 'இப்பத்தான் சின்னதுக்குக் கண்ணு இழுத்துக்கிட்டுப் போகுது'ம்பேன்:-) எப்பவும் மதீனாக்காதான் அக்காவுக்குக் கூட்டு.

அக்கா, சட்னு எழுந்து அப்படியே கட்டுன புடவையோடு கிளம்பிரும். ஆனா எங்க வீட்டுலே இருந்தப்பச் செஞ்ச அழிசாட்டியம்? புடவையை நல்லா இஸ்திரி போடலை, ப்ளவுஸைச் சரியாத் தைக்கலை, இது நொள்ளை, அது நொட்டைன்னு ஆடுனதெல்லாம் இப்ப ஒன்னுமே இல்லை. புடவை மாத்திக் கட்டுனாப் புள்ளைங்க கண்டுபுடிச்சுருமில்லே! மதீனா அக்காவோட தம்பி, மச்சினன், வீட்டுக்காரர்ன்னு யாராவது கொட்டாய்வரைக் கொண்டுபோய் விட்டுட்டு வருவாங்க. சினிமா விடும் நேரத்துக்கு மாமா போய் இட்டாருவாரு. ஒருநாள் நானும் கூடப்போனேன். தரை டிக்கெட் எடுக்கறாங்க ரெண்டு பேரும். ஆத்துமணல் போட்டு . நல்லாத்தான் வச்சுருக்கு. ஆனாலும் எனக்கென்னவோ..... பெஞ்சுதான் பிடிக்கும். அதுக்கப்புறம் நானு எங்க மாமாகூடவே படத்துக்குப் போயிருவேன். மூத்த பொண்ணு ராணியும் எங்ககூட வரும். கலியாணம் கட்டுன புதுசுலேதான் அக்கா, மாமா கூட ஜோடியாப் போய்க்கிட்டு இருந்துச்சாம். இப்பெல்லாம் தனித்தனியாப் படம் பாக்கப்போறாங்க. புள்ளைங்களைக் கூட்டிக்கிட்டு ஒண்ணாமண்ணாப் போலாமுல்லெ? நைநைன்னு ஒரே பிடுங்கலாம். ஆனாலும் ஒரு படத்தையும் விட்டுறமாட்டாங்க.....

சினிமாப் பாட்டெல்லாம் ஒருதடவை பார்த்துட்டுவரும்போதே எனக்கு மனசுலே 'கபால்'லு ஒட்டிக்கும். அச்சுஅசலா அப்படியே பாடுவேன். இங்கே அக்கா வீட்டுலே' மின்சாரம் இல்லாத சம்சாரம்'. அதனால் நாந்தான் ரேடியோ. அக்கா முந்தியெல்லாம் எங்க வீட்டுலே இருந்தப்ப பாட்டுப் பொஸ்தகமெல்லாம் வச்சுக்கிட்டு நல்லாப் பாடும். இப்ப பாட்டாவது பொஸ்தகமாவதுன்னு இருக்கு.

பொஸ்தகமுன்னதும் இன்னொன்னு நினைவுக்கு வருது. எங்க வீட்டுலே கல்கி, ஆனந்தவிகடன் வாங்குவாங்க. குமுதம் மட்டும் நல்ல குடும்பப் பத்திரிக்கை இல்லைன்னு எங்க அம்மாவுக்கு ஒரு அபிப்பிராயம். (தமிழே படிக்கத் தெரியாது அவுங்களுக்கு. அப்ப யார் அந்த உண்மையைப் 'போட்டுக் கொடுத்துருப்பாங்க?') வாராவாரம் காலையில் புத்தகம் வரும் நாளில் நான் காத்துக்கிட்டு(?) இருந்து (அதான் வெளியிலே விளையாடிக்கிட்டு இருப்பேனே எப்பப் பார்த்தாலும்) கையிலே கிடைச்சதும் அங்கியே உக்காந்து ஜோக்ஸ் எல்லாம் எழுத்துக்கூட்டிப் படிச்சுட்டுத்தான் உள்ளேயே கொண்டு போவேன். அதுக்குள்ளே அக்காக்கள் தொடர்கதை மட்டும் படிச்சுட்டு ரெண்டே நிமிஷத்துலே தரேன்னு எங்கிட்டே கெஞ்சுவாங்க. அண்ணன் பார்த்தா ஓடிவந்து பிடுங்கிக்கிட்டுப் போயிரும். நான் யாருக்கும் பிடிகொடுக்காம, 'ஜோக் புரிஞ்சே இருக்காது அதுக்கே ஒரேதாச் சிரிச்சுக்கிட்டு இருப்பேன்'.

புத்தகம் கையிலே கிடைச்சதும் எல்லா வேலையையும் அப்படியே போட்டுட்டு அக்கா அவசர அவசரமாத் தொடர்கதையைப் படிக்கும். அப்படி ஒரு கதைப் பைத்தியமா இருந்த அக்கா இப்போல்லாம் படிக்கறதே இல்லை. அடுப்புக்கிட்டே உக்காந்து கடுகு, மொளகாய், பருப்புன்னு பொட்டலம் கட்டிவரும் துண்டுப் பேப்பர்களை மட்டும் படிப்பதைக் கவனிச்சேன். மாமா, பள்ளிக்கூட லைப்ரெரியில் இருந்து புத்தகம் கொண்டுவரலாமேன்னு கேட்டப்ப, அக்கா சொன்ன பதில் அப்படியே என் நெஞ்சை நிறுத்திருச்சு.

ஆரம்பத்துலே மாமா, கதைப் புத்தகங்கள் நாவல் எல்லாம் கொண்டுவந்து கொடுத்துக்கிட்டுத்தான் இருந்தாராம். ரெண்டு குழந்தைகளானபிறகு வீட்டுலே வேலையும் கூடிப்போனதால் ராத்திரி படுக்கும் நேரம் மட்டும் கிடைக்கும் ஓய்வில், தலைமாட்டுலே சிம்னி விளக்கை வச்சுக்கிட்டுக் கொஞ்சம் படிப்பாங்களாம் அக்கா. அப்படி ஒருநாள் படிக்கும்போது, உடல் அலுப்பில் கொஞ்சம் கண்ணயர்ந்து போய் புத்தகம் விளக்கின்மேலே விழுந்து, விளக்கும் சரிஞ்சு மண்ணெண்ணெய் எல்லாம் கொட்டித் தீப்பிடிச்சுக்கிச்சாம். நல்ல வேளை மண்தரை. இல்லேன்னா தீ பரவி இருக்கும். லைப்ரெரி புத்தகம் எரிஞ்சு போச்சு. அன்னையிலே இருந்து புத்தகம் வீட்டுக்கு வருவதும் நின்னுபோச்சு. 'இனிமேல் கவனமா இருப்பேன். கொண்டு வாங்க' ன்னு சொல்ல அக்காவுக்கு நாவு இல்லாமப் போயிருச்சே(-:

இங்கே எனக்குப் பிடிச்சது இந்த மண்தரைதான். ஏன்னா..... நான் செய்யும் குழப்படிகளை உடனே மறைச்சுறலாம். சின்னச் சின்ன வேலைகளா நிறைய இருந்துச்சு அங்கே. அதுலே முக்கியமான ஒன்னு, விளக்குச் சிமினிகளைத் தொடைச்சு, மண்ணெண்ணை ஊத்தி வைப்பது. தினம் என்னதான் கவனமா இருந்தாலும் கொஞ்சம் எண்ணெய் கீழே சிந்திரும். மண்தரையிலே சட்னு இஞ்சிப்போகுமுன்னாலும் வாசனைகாட்டிக் கொடுத்துருமே...... வாசத்தெளிக்கன்னு சாணியை வெளியே ஒரு மூலையில் வச்சுருப்பாங்க. அதுலே கொஞ்சம் கொணாந்து பூசிவச்சுருவேன். ஆனாலும் அக்காவுக்கு மூக்கு பவர் ஜாஸ்தி:-)

தரை மொழுகறதுலே அக்காவுது ஒரு தனி டெக்னிக். முதல்லே நல்லா வீட்டைப் பெருக்கிரும். அப்புறம் சாணிகரைச்சு வாளியிலே வச்சுக்கிட்டு சாணித்துணியை அதுலே முக்கி, வீட்டுக்கடைசிச் சுவர் மூலையில் ஆரம்பிக்கும். கவுத்துப்போட்ட சி மாதிரி கைக்கு எட்டுன தூரத்துக்கு அரைவட்டமா மொழுகிக்கிட்டே வாளியையும் இழுத்துக்கிட்டே பின்னாலே நகர்ந்து வரும். பின்னாலே சுவருக்கு ஒரு மூணடி வரும்போது நிறுத்திரும். ரெண்டு எட்டு பக்கவாட்டுலே வச்சு, முதலில் ஆரம்பிச்ச சுவருக்குக் கிட்டே போகும். பழையபடி ஏற்கெனவே பூசுன இடத்துலே கொஞ்சம் ஓவர்லேப் ஆறதுபோல வேலையைத் தொடரும். அதான் 60 அடி நீளத்துக்கு ஒரே கூடமாட்டம் நீண்டு கிடக்கே அங்கே. கடைசியா விட்டுப்போன மூணடி இடத்தைப் பக்கவாட்டுலே திரும்பி உக்காந்து மெழுகிக்கிட்டே வாசக் கதவுக்கு
வந்துரும். பாதத்தைச் சுத்தி இருக்கும் இடம்தான் இப்ப பாக்கி. டக் னு வாளியை வெளியே எட்டி வச்சுட்டு நிலைப்படி தாண்டி வெளியே நின்னுக்கிட்டு குனிஞ்சு உள்பக்கமா கடைசியா மெழுகி முடிக்கும். இதுக்குள்ளே சாணித்தண்ணியெல்லாம் மண்தரையிலே அப்படியே இஞ்சிக்கும்.
தரையும் காய ஆரம்பிச்சுருக்கும்.

அடுத்து ஒரு பூந்தொடைப்பம் எடுத்துக்கிட்டு உள்ளே பாயும். பரபரன்னு தரையிலே ஈரம் முழுசும் காயறதுக்குள்ளே பெருக்கிக்கிட்டே வரும். சாணித்தூள் எல்லாம் திப்பிதிப்பியா கூட்டறதுலே வந்துருமா. இப்பத் தரை பிசிறில்லாமப் பட்டாட்டம் இருக்கும். இத்தோட விடாது. அடுத்துக் கோலமாவு எடுத்து அழகா பெருசா நடுவிலே கோலம் போடும். சுவரை ஒட்டி நீளமா ஒரு பார்டர் கோலம் வேற. லேசா இருக்கும் ஈரத்துலே கோலமாவு பச்சக்ன்னு ஒட்டிப் பிடிச்சுக்கும். அதுக்குப்பிறகு அந்த ஏரியா முழுசும் 144 போட்டாப்போலதான். யாரும் காலு எடுத்து உள்ளே வச்சுறமுடியாது. சுமார் ஒரு மணிநேரம் இந்தக் காபந்து. எனக்கு அப்பத்தான் உள்ளே நோட் புக்கை மறந்துட்டேன், பேனாவுக்கு இங்க் போடனுமுன்னு எதாவது வேலை இருக்கும் உள்ளாற போறதுக்குன்னே. எதுன்னு சொல்லு, நான் எடுத்தாறென்னு வையும். என்னமோ ஒரு கணக்கு வச்சு அந்த நேரம் ஆனதும் இன்னொருக்கா பூந்துடைப்பத்தாலே பெருக்கும். கோலப்பொடி எல்லாம் மண்ணாட்டம் வந்துரும். ஆனாலும் கோலம் மட்டும் பிசிறில்லாம பளிச்சுன்னு பசை போட்டு ஒட்டுனது கணக்கா இருக்கும். இனிமே யாரு வேணாலும் உள்ளே போலாம். ஆடலாம், பாடலாம், கீழே புரண்டு உருளலாம். 'கேட் ஓப்பன்'னு கத்திக்கிட்டேப் புள்ளைங்களோட சேர்ந்து நானும் ஓடுவேன்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதே கதைதான். திண்ணைகளுக்கும் அளவுக்குத் தகுந்தாப்போல கோலம் இருக்கும். பிசிறில்லாமல் விதவிதமா ரொம்ப அழகாக் கோலம் போடும் அக்கா. எங்க சின்னக்கா இருக்கு பாருங்க அதுக்கு ஒரே ஒரு அஞ்சு புள்ளிக்கோலம்தான் தெரியும். வருசம் முன்னூத்து அறுவத்தஞ்சு நாளும் அதேதான் முன்வாசலில். நான் சின்னக்கா வீட்டுக்குப் போகும்போதுதான் அந்த அலுத்துப்போன முன்வாசல் வேற கோலத்தைப் பார்க்கும். எனக்கும் இந்தக் கோலப் பைத்தியம் இருந்துச்சு. நாங்க ஆத்தூர் என்ற ஊருலே இருந்தப்ப, அங்கே எங்க வகுப்புலே இருந்த பொண்ணுங்களுக்கெல்லாம் கோலம்தான் உயிர். பாடநோட்டுகள் எல்லாத்துலேயும் கடைசிப் பக்கத்தைப் புரட்டுனா கோலமே கோலம். நானும் உடனே அந்த ஜோதியில் கலந்துட்டேன். தினம் மாய்ஞ்சு மாய்ஞ்சுப் பெரிய கோலங்களா வாசலில் போடுவேன். நம்ம வீட்டுப் பின்பக்கம் ஒரு மசூதி. அங்கே கட்டிடத்தைச் சுத்தி நிறைய மண்மேடுகளா இருக்கும். எல்லாம் மனுசங்களைப் பொதைச்ச இடமாம். பூசணிக் கொடிகள் தானா வளர்ந்து பரவலா, மார்கழி மாசம் எக்கச் சக்கமான பூக்களோடு இருந்தது எனக்கு வசதியாப் போச்சு. கோலத்து மேலே சாணி உருண்டையில் பூக்களை நட்டு அலங்கரிப்பேன்.
ரெண்டடிக் கட்டைச்சுவர்தான். குதிச்சுப்போய்வர அஞ்சு நிமிசமே ஜாஸ்தி.தொடரும்.........

Wednesday, November 26, 2008

The Tram is fully packed :-)

"ஏங்க என்னைப் பார்த்தா டூரிஸ்ட் மாதிரி இருக்கா?"

"ஏன் இல்லாம? ஆமா.....எதுக்கு இப்ப டூரிஸ்ட் லுக் வேணும்?"

"ட்ராமுலே போகப்போறேன்ல. அதான்......."

தீபக் அண்ணன் சொன்னார், 'இந்த ட்ராம் டிக்கெட் ரெண்டு நாளைக்குச் செல்லுமாம். நாளைக்குக் காலையில் நாங்க கிளம்பிப்போயிருவோமே. நீங்க வேணுமுன்னா பயன் படுத்திக்குங்களேன்.'

ஆஹா..... வரணுமுன்னு இருக்கறது வழியில் நிக்காது. எவ்வளோ நாளா இந்த ட்ராமுலே போகணுமுன்னு நினைச்சுருக்கேன். மெட்ராஸ்லே அந்தக் காலத்துலே ட்ராம் வண்டி(?)யில் போவோமுன்னு பாட்டி தன் கொசுவர்த்திகளைச் சுத்தும்போது ( இந்த கொ.வ. சுத்துவது பரம்பரைப்பழக்கம். ஹிஹி) நமக்கு இதையெல்லாம் அனுபவிக்கும் வாய்ப்பு இல்லாமப் போச்சேன்னு நினைச்சுக்கறதுதான்.

இங்கே நம்மூர்லே ஹெரிட்டேஜ் சொஸைட்டின்னு ஒன்னு இருக்கு. இவுங்க இங்கே இருந்த பழங்காலச் சமாச்சாரங்களையெல்லாம் பராமரிச்சுத், திரும்பவும் கொண்டுவரணுமுன்னு அதிகம் ஆர்வம் காட்டுவாங்க. நம்மூரில் 'ஒரு ஹிஸ்டாரிக் பார்க்' ஃபெர்ரிமெட் (அட! நம்ம பெரியமேடு!) என்ற இடத்தில் அமைச்சு அந்தக் கால கிறைஸ்ட்சர்ச் நகரத்தை ஓரளவு நிர்மாணிச்சு வச்சுருக்காங்க. தீம் பார்க் மாதிரின்னு அங்கே வேலை செய்யறவங்க அந்தக் கால உடைகளை அணிஞ்சுக்கிட்டு இருப்பாங்க. பெண்கள் உடைகள்தான் பிரமிப்பைத் தரும்.உடல் முழுவதும் மூடி முகம் மட்டுமே வெளியில் தெரியும். குளிருக்கு அடக்கமா இருந்துருக்கும். அச்சாபீஸ், குதிரைக்கு லாடம் செய்யும் கொல்லன் பட்டறை, ரொட்டி சுடும் பேக்கரி, பழையகால ரயில் எஞ்சின், குதிரை வண்டின்னு ஏகத்துக்கும் இருக்கு. எல்லாம் இயக்கத்திலும் இருக்கு.

(அங்கே நாங்க போனப்ப ஒரு நிகழ்ச்சி நடந்துபோச்சு. காரில் விட்டுட்டுப் போயிருந்த கைப்பையை, களவாண்டுட்டாங்க. இந்தக் கதையை அப்புறம் ஒருநாள் சொல்றேன்)

வெறும் 150 வருசச் சரித்திரம் என்றதால் தோண்டி எடுக்க எளிதா இருக்கு பாருங்க. மேலும் நிறையப்பேர் அங்கங்கே இதை எழுதி வச்சுட்டுப் போயிருக்காங்க. அந்தக் காலப் பதிவர்கள். இதையெல்லாம் ஆவணப்படுத்தி வைக்குது இந்த ட்ரஸ்ட். இதுலே நம்மைப் பத்தியும் ஒரு இடத்தில் இருக்குன்றதை இங்கே சொல்லிக்கவா? சமயம் பார்த்துக் கொஞ்சம் மேளமும் கொட்டத்தான் வேணும்:-))))


'ஓல்ட் கிறைஸ்ட்சர்ச்' என்ற தலைப்பில் johannes C Andersen எழுதுன புத்தகம் ஒன்னு எங்க லைப்ரரியில் கழிச்சுக்கட்டுன மூட்டையில் கிடைச்சது. இவர் ரெண்டு வயசுக் குழந்தையா டென்மார்க்கிலே இருந்து 1875 லே நியூஸி வந்தவர். அவருடைய கொசுவத்திகளை எழுதிவச்சதையெல்லாம் அழகாப் படங்களொடு (நம்மையே பீட் பண்ணிட்டாருப்பா. ஆனா அதெல்லாம் கருப்பு வெள்ளை) புத்தகமா, 1949 லே உள்ளூர் அச்சகத்துலேயே அச்சிட்டு பதிப்பிச்சு இருக்கார். அந்த அச்சகமே இப்ப 'சரித்திரம்' ஆகிருச்சு. புத்தகத்தை இதுவரை வாசிக்க நேரம் கிடைக்காம இருந்து இப்ப மூணுமாசமாக் கொஞ்சம் கொஞ்சமா வாசிச்சுக்கிட்டு இருக்கும்போது ஏகப்பட்ட 'அட! அப்படியா!!' ன்னு சொல்லும் சமாச்சாரங்கள் கிடைச்சது. ஒரு நாள் ஒரு பகுதின்னு குறிச்சுவச்சுக்கிட்டு அங்கேயெல்லாம் போய்ப் பார்க்கணும். நல்ல வெய்யில் வரட்டுமுன்னு காத்துருக்கேன்.

இங்கே நம்மூர்லேதான் வெள்ளையர்கள் முதல்முதலாக் காலடி எடுத்துவச்சுக் குடியேறுனது. இதைத்தான் இப்பவும் மெயின்லேண்ட்ன்னு குறிப்பிடுவாங்க. அதனாலே எதுன்னாலும் இங்கெ இருந்துதான் ஆரம்பிச்சதுன்னு வையுங்க.
1880 வது வருசம்தான் பொதுமக்கள் பயனுக்குன்னு போக்குவரத்துக்காக ட்ராம் வண்டி ஓட ஆரம்பிச்சது. ஆரம்பத்துலே குதிரைகள் இழுத்துக்கிட்டுப் போயிருக்கு. அப்புறம் நீராவி சக்தியாலே ஓடி இருக்கு. தனியார் கம்பெனிகள் ட்ராம்லைன் போட்டுருக்காங்க. அமெரிக்காவிலிருந்து மரங்களைக் கொண்டுவந்து மரச்சட்டங்களா அறுத்து இழைச்சுக் கட்டுமானம் நடந்துருக்கு. உள்ளே பித்தளையால் ஆன கைப்பிடி, குமிழ் இதெல்லாம் உள்ளூர் கம்பெனிகளே செஞ்சுருக்காங்க. சுருக்கமாச் சொன்னா, கீழே பொருத்தும் இரும்புச் சக்கரங்களை மட்டும் இறக்குமதி சரக்கு.
ஆரம்ப நாட்களில் ஓட்டுனரும் நடத்துனரும்


அந்தக் காலப்போக்குவரத்து


1903 வருசம் இதெல்லாம் மின்சாரத்தாலே ஓட ஆரம்பிச்சது. அதுக்காக பாதையின் ரெண்டு பக்கமும் தூண்கள் நட்டு வலைப்பின்னலா மின்வசதி செஞ்சதும் உள்ளூர் கம்பெனிதான். ரெண்டாம் உலகப்போர் முடியும்வரை ட்ராம் போக்குவரத்து ரொம்ப நல்லாவே செயல்பட்டுக்கிட்டு இருந்துச்சு. ட்ராம் லைன்கள் எல்லாம் இதுக்குள்ளே தேய்ஞ்சுபோய் மீண்டும் புதுப்பிக்கணுமுன்னு வந்தப்ப, அது எதுக்கு வீண் செலவு. பேசாம டீஸலில் ஓடும் பஸ்களை வச்சுக்கலாமுன்னு சிட்டிக்கவுன்ஸில் முடிவு செஞ்சாங்க. இங்கெல்லாம் இந்த நகரசபைகள்தான் நம்மூர் மாநில அரசுபோல் செயல்படுது. ஒவ்வொரு பகுதியா சேவையை நிறுத்திக்கிட்டே வந்து 1954 -ல் கட்டக்கடைசியா நின்னே போச்சு. கடைசி நாளில் நகரமக்கள் எல்லாம் சேர்ந்து இதுக்கு ஒரு வழியனுப்புவிழாவை அமர்க்களமாச் செஞ்சு ட்ராம் பெட்டிகளை ஃபெர்ரிமேட்க்கு இடம் மாத்துனாங்க.

கடைசி நாளில் கோலாகலம்


இதெல்லாம் நடந்து ஒரு 41 வருசம் கழிச்சு, சுற்றுலாப் பயணிகளைக் கவரும்விதமா பழைய காலச் சூழலைக் கொண்டுவர ட்ராம் வண்டியைப் பழையபடி ஓடவைக்கலாமுன்னு அதே சிட்டிக்கவுன்ஸில் முடிவு செஞ்சது. 'ஹிஸ்டாரிக்கல் ஹெர்ரிடேஜ் ட்ரஸ்ட்' இந்த முடிவை வெகுவாக வரவேற்று, பழைய ட்ராம் பொட்டிகளையே மறுபடிச் செப்பனிட்டு, பழைய நிலைக்குக் கொண்டுவந்தாங்க. இதுக்கே சில மில்லியன் டாலர்கள் செலவாச்சாம். புதுசா ட்ராம் லைன் போட்டாங்க. ஆனால் இது முழு ஊருக்கும் இல்லாம ஒரு 25 நிமிஷ ஓட்டத்துக்கு மட்டும் வர்ற மாதிரி ரெண்டரை கிலோமீட்டர் நீளம்தான்.

1995 இல் ஆரம்பிச்சப்பப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கும், உள்ளூர் ஆட்களுக்கும் ரொம்ப சல்லிசா டிக்கெட் வச்சு ஒரு ரெண்டுவாரம் வரை வெள்ளோட்டம் விட்டாங்க. அப்ப எப்படியோ இதை நான் தப்ப விட்டுட்டேன்.
அதுக்குப் பிறகும் ட்ராமைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு நாளைக்குப் போகணுமுன்னு தோணும். சரியான வாய்ப்பு அமையலை. காரில் போகும்போது ட்ராம் நம்மைக் கடக்கும் சமயம், அதுக்குத்தான் முன்னுரிமைன்னு இருப்பதால் காரில் இருந்தே பார்ப்பேன். எல்லா வியாபாரத்தையும் போல் இதுவும் நட்டத்துலே போக ஆரம்பிச்சதும், ட்ராமிலே போய்க்கிட்டே சாப்பாடு சாப்பிட, ரெஸ்டாரண்ட் ட்ராம்னு கொண்டுவந்தாங்க.
எல்லாம் 'யுனீக் எக்ஸ்பீரியன்ஸ்'னு சொன்னாலும், செலவு செஞ்சதையெல்லாம் ஒரே நாளில் எடுக்கணுங்கறமாதிரி டிக்கெட் விலையை வச்சால் உள்ளூர்க்காரன் எத்தனை முறை போவான் சொல்லுங்க. முழுக்க முழுக்கச் சுற்றுலாப் பயணிகள்தான் பயன்படுத்தறாங்க இப்பெல்லாம். புரிஞ்சதுங்களா.....நான் எதுக்கு டூரிஸ்ட் லுக் இருக்கான்னு கேட்டது....

இந்த ட்ராம் டிக்கெட் விலை இப்போ 15 டாலர் ஒரு ஆளுக்கு. கொள்ளையடிக்கிறான்னு நினைச்சுப்பேன். இங்கே முப்பது டாலர் அழறதுக்குப் பதிலா அடுத்த தெருவில் இருக்கும் கேஸீனோ ( இதுக்குப்போகவும் நடக்க வேணாம் இலவச பஸ் ஓடிக்கிட்டே இருக்கு நகரச் சதுக்கத்தைச் சுற்றி) போய் நல்லா விளையாடிட்டு வரலாமுன்னு தோணும்.

ரீஜெண்ட் தெருவழியா ட்ராம் வருது. இது காலத்தால் உறைஞ்சு போன கட்டிடங்கள் உள்ள ரொம்பவும் பழையகாலத் தெரு. கீழே ச்பெஷாலிட்டிக் கடைகளா காஃபி லவ்வர்ஸ், சிக்ஸ் சேர் மிஸ்ஸிங், டெடிபேர் ஷாப் தெருவின் ரெண்டு பக்கமும் இருக்கு. மாடியில் சின்னச்சின்ன அபார்ட்மெண்ட்ஸ். இள நீலம், க்ரீம், இளம்பச்சைன்னு ஒரு கலர் ஸ்கீம் வச்சு பெயிண்ட் அடிச்சு இருக்காங்க. மாடிகள் தெருவின் ரெண்டு பக்கமும் ஒரே மாதிரி ஒன்னை ஒன்னு பார்த்தாப்போல எதிரும் புதிருமா இருக்கு. சின்னத் தெரு என்றதால் தரை முழுசும் டைல்ஸ் பாவி, ரோஜாச்செடிகள் வச்சு அலங்கரிச்சு இருக்கு.
பின்னால் 'press'தெரியுது பாருங்க அதுதான் உள்ளூர் பத்திரிக்கை அச்சாகும் இடம்.

ரீஜண்ட் தெரு

பத்திரிக்கைக்காரனுக்கு இன்னும் நூறு ஆயுசு. இதைத் தட்டச்சு செய்யும் சமயம், வாசலில் வந்து 'ப்ரெஸ் பேப்பர் ப்ரமோஷன் தரோம் அரைவிலைக்கு. ஒப்பந்தம் ஒன்னும் இல்லை. தினம் வீட்டுலே டெலிவரி செய்வோம். வேணுமா?'ன்னு கேட்டுட்டுப்போறார் ஒரு இளைஞர். யோசிச்சுச் சொல்றேன்னு சொல்லி இருக்கலாம். அதை விட்டுட்டு, மாலை ஏழுமணிக்கு வா. மால் வெட்டறவர்கிட்டே கேக்கலாமு' ன்னு சொல்லி அனுப்பி இருக்கேன். வேணும் என்பதை நானும், இல்லை என்பதை கோபாலும் சொன்னா ஈவனா ஆச்சு:-))))

ஸ்டேஷன்


ட்ராம் ஸ்டேஷன்னு சொல்லி அட்டகாசமா கட்டி இருக்காங்க. ரெண்டு தெருவைச் சுத்தி ஓடுது. மொத்தம் பதினோரு நிறுத்தங்கள். எங்கே வேணுமுன்னாலும் இறங்கிக்கலாம் ஏறிக்கலாம். அன்லிமிட்டட் ரைடு. மாலை ஆறுவரை ரெண்டு வண்டிகளும், அதுக்குப்பிறகு இரவு 9 வரை ஒரே ஒரு வண்டியுமா சேவை. ஒரு டிக்கெட்டுலே ரெண்டு நாளைக்கு விடாமச் சுத்திக்கிட்டும் இருக்கலாம்.

ஸ்டாப்

ட்ராம் ஓட்டுனர் போறவழியில் இருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களையும், காட்சிகளையும் வர்ணிச்சுச் சொல்லிக்கிட்டே ஓட்டுறார். பழைய கிறைஸ்ட்சர்ச் நகரப் புத்தகம் வேற இப்பப் படிச்சுக்கிட்டு இருக்கேனா..... அவர் சொல்றதுக்கு பொருள் நல்லாவே புரியறது மட்டுமில்லாம....சரியாச் சொல்றாரான்னும் பரிசோதிக்க முடிஞ்சது:-))))

ஓட்டுனர் வரவேற்பு உரை

ஏவான் நதிப் பாலம்

நகரச் சதுக்கம். பின்புலத்தில் கதீட்ரல்

ஞாயித்துக்கிழமை மாலை அஞ்சுமணிக்கு ட்ராமில் ஏறுனோம். சரியா 25 நிமிசம். கடைசி ரெண்டு நிறுத்தத்துக்கு இடையில் வரும்போது ,'தடதட தட தட'ன்னு நம்மூர் நீராவி எஞ்சின் காலத்துப் பாஸெஞ்சர் ரயிலில் கேட்ட அதே சப்தம். மஜாவா இருந்துச்சு. காட்சிகளும் கூட இதுலே உக்கார்ந்து பார்த்துக்கிட்டு வரும்போது, வித்தியாசமான கோணத்தில் ஏதோ வெளிநாட்டுலே இருப்பது போல இருந்துச்சுங்க.

ஓசிப் பயணச் சிரிப்பு


லைன்லே நிறுத்திட்டேன்:-)


போன பதிவில் சரித்திரம் படைச்சேன்னு சொன்னதுலே ஒரு தட்டச்சுப் பிழை வந்துருச்சு.

சரித்திரம் படிச்சேன்னு இருந்துருக்கணும்:-))))

எல்லா நிறுத்தத்துலேயும் ஆட்கள் இறங்குவதும் ஏறுவதுமா இருக்காங்க. சுற்றுலாக் கூட்டம். ட்ராம் இஸ் ஃபுல்லி பேக்டு. தீபக் பையா இத்தனை பேருக்குமா இப்படி ஓசி டிக்கெட் கொடுத்துட்டாரு!!!!

Tuesday, November 25, 2008

சனிதோறும் 'தீபாவளி'

இது ஒரு சரித்திர 'தீபாவளி'

கொஞ்சம் சொல்றதுக்கே அநியாயமாத்தான் கிடக்கு. ஆனாலும் சரித்திரத்தைச் சொல்லாம விட்டுட்டேன்னு நாளைமக்காநாள் ஒரு பேச்சு வந்துறக்கூடாதில்லையா? போனமாசம் அக்டோபர் 11க்குத் தொடங்குன தீபாவளி விழா இந்த நவம்பர் மாசம் 22 தேதியோட ஒரு முடிவுக்கு வந்துருக்கு (இப்போதைக்குன்னு நினைப்பு)

சனிக்கிழமை தோறும் எண்ணெய்தேய்ச்சுக் குளிப்பாங்களாமே....அதே போல சனிக்கிழமைதோறும் தீபாவளி. விதவிதமாக் கொண்டாடுனோம்.

சனிக்கிழமை வந்துட்டாப்போதும்...தீபாவளிதான்.

ஃபிஜி இந்தியர்களின் ராமாயண மண்டலிகளே நாலு இருக்கு. அந்தக் கணக்குலே நாலு விழா. அதுலே ஒரு விழாவுக்குப் போனோம்.
வழக்கமான கொண்டாட்ட நிகழ்ச்சிகளோடு இலவச விருந்து. நிகழ்ச்சியின் குறிப்பிடவேண்டியது நேடிவ் ஃபிஜியன்களின் நடனம். ரொம்ப நல்லா இருந்துச்சு. படமாப் பிடிச்சுக்காம இவர் வீடியோவா எடுத்துட்டார். ஒரு நாள் யூட்யூப்லே ஏத்திறலாம்.நல்ல கூட்டம்தான். மறுநாளே தென்னிந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் விழா. எல்லா வட இந்தியர்களும் திவாளி, திவாலின்னும்போது 'தீபாவளி' ன்னு சொல்வது தென்னிந்தியர்கள்தானே. பேனரிலும் அப்படியே போட்டுருந்தாங்க.
இங்கேயும் நல்ல கூட்டம். அதாவது நேத்து அங்கே வந்தவங்க எல்லாம் இன்னிக்கு இங்கே:-) நேத்து உள்ளே நுழைஞ்சதும் 'மூ மீட்டா கர்னேகேலியே ஏக் ஏக் பர்ஃபி'. இன்னிக்கு சின்ன ப்ளாஸ்டிக் டப்பாவுலே குலாப் ஜாமூன்(ட்ரை) முறுக்கு, பஜ்ஜியா & மிக்ஸர்ன்னு கொஞ்சம்கொஞ்சம் நிறைச்சு ஆளுக்கு ஒன்னு. கையோடு அதை எடுத்துக்கிட்டுப்போய் இடம் பார்த்து உக்கார்ந்துக்கலாம். கண்ணுக்கு விருந்து நடக்கும்போது வாய் மட்டும் ஏன் சும்மா இருக்கணும்? :-)

நடனம், பாட்டுன்னு மட்டும் இல்லாமல் பாரம்பரிய நிகழ்ச்சியாக 'டெர்கூத்' நடந்துச்சு. போனவருசம் ராமராவண யுத்தம். இந்த முறை மாடர்ன் டெர்கூத்.

பூரி, வெஜிடபுள் பிரியாணி, பருப்பு, தக்காளி சட்னி, சாலட், ஆலு பைங்கன், கத்து என்று இலவச விருந்து.

இந்தி சினிமா பாதிப்பால் பயங்கர திறந்தவெளிகளாய் முதுகுகள். வெளியே வரும்போது குளிருக்குப் பயந்து எல்லாரும் ஜாக்கெட், கோட் என்று போத்திக்கிட்டப்பத் தோழியிடம்,

"க்யா...ஸப் கிடுக்கி பந்த் ஹோஹயா?"

" க்யா கரூ(ன்)? தண்டி ஹை"

கோபால் வேற ஊரில் இல்லை. தனியாக் கிளம்பிப்போக போரா இருக்குன்னு நடுவிலே நாலைஞ்சு தீவாளியை விட்டுட்டேன். இந்த வெள்ளிக்கிழமை வந்துட்டார். சனிக்கிழமை கடைசி தீவாளி. வீட்டுலே விருந்தினர் ஃபிஜியில் இருந்து வந்துருக்காங்க. அவுங்களையும் கூடவே இழுத்துக்கிட்டுப் போனோம். கிறைஸ்ட்சர்ச் மாநகரத்தின் சரித்திரத்தில் முதல் முறையாக நகர்மையச் சதுக்கத்தில் மேளா ஸ்டைலில் நடத்தறோம். சிட்டிக்கவுன்ஸில் முழுக்க முழுக்க ஸ்பான்ஸார் செஞ்சுருக்கு. இந்த விழாவை நடத்துவது இண்டியன் சோஸியல் & கல்ச்சுரல் க்ளப். இந்த மாபெரும் க்ளப்பினைத் 'தோற்று'வித்த'வர்' உங்களுக்கெல்லாம் நல்லாவே பரிச்சயமான ஒருத்தர்தான் என்பதை இங்கே அறிவிக்கும் கடமையைப் பெருமையாகச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

அவர் பெயர் மூன்றெழுத்து. முதல் எழுத்து 'கோ'. கடைசி எழுத்து 'ல்'
இடையில் உள்ள எழுத்து என்னவா இருக்கும்? கண்டுபிடிக்க முடியலைன்னா ஒரு க்ளூ தரேன். 'குழந்தை *ல் குடிக்கும்.'

1997 வருசம் ஆரம்பிச்ச இந்த க்ளப் இதுவரை வருசாவருசம் திவாளி கொண்டாடுனாலும், சிட்டிக் கவுன்ஸில் முன்னூறோ நானூறோ நிதி உதவி செய்றது வழக்கம்தான். ஆக்லாந்து வெலிங்டன் நகரில் இந்தியர்கள் நிறைய இருப்பதால் அங்கே இதையும் ஒரு முக்கிய விழாவா பொதுமக்கள் அனைவரும் வந்து போகக்கூடியதாக் கொண்டாடுறாங்க. நம்மூர்லே இது முதல் முறை. பப்ளிக் ஈவண்ட் இன் சிட்டி ஸ்கொயர். இந்திய உணவுக் கடைகள், மேக்கப் சாதனங்கள் விற்கும் கடைன்னு ஸ்டால்கள் போட்டுருந்தாங்க. சின்னப் பிள்ளைகள் வர்ணம் தீட்டி மகிழ கலரிங்க் சாமான்களும், தீபாவளி சம்பந்தமுள்ள அச்சடிச்ச படங்களுமா ஒரு ஸ்டாலில் இலவசமா வச்சுருந்தோம்.
சுடச் சுடத் தோசை செஞ்சு, மசாலா நிரப்பி அஞ்சு டாலருக்கு விற்பனை நடந்துக்கிட்டு இருந்துச்சு. வெஜிடேரியன்களுக்காக கீரையும், பனீரும் சேர்த்த கபாப் சுட்டு, சப்பாத்தியில் வச்சுச் சுருட்டி வித்துக்கிட்டு இருந்தாங்க. மற்ற இறைச்சி உணவுகளும் ஸ்டால்களில் இருந்துச்சு. ஒரு லட்டு, பர்பி, இன்னும் ரெண்டு மிட்டாய்களை வச்சு பாக்கெட்ஸ் ஒரு இடத்தில். பூரி, ஃப்ரைடு ரைஸ், பஜ்ஜியா, பேல்பூரின்னு அமர்க்களம் போங்க. கரமா கரம் சாய் கூட வச்சுருந்தாங்க.


மேடை அலங்கரிச்சு, ஒலி ஒளி ஏற்பாடெல்லாம் செஞ்சு அது ஒரு பக்கம். சதுக்கத்தில் போய் நின்னப்ப....... சிதார் இசையும், இந்திப் பாட்டுமா ஜேஜேன்னு இருக்கு. ஊரையே நம்ம இசையைக் கேக்கவச்சாச்சு.


மேடைக்கு அருகே தோழி (ஃபிஜி) ரங்கோலி போட்டுவச்சுருந்தாங்க. அரிசியில் வர்ணங்கள் சேர்த்து அழகா இருந்துச்சு. மக்கள் அதன்மேல் நடக்காமல் இருக்க ஒரு கம்பித்தடுப்பு. 6 கிலோ அரிசி. அஞ்சுமணி நேர உழைப்பு. இவுங்க குழுதான் இன்னிக்கு ராம்லீலா நடத்தப்போறாங்க. ராமன் இன்னும் வேலை முடிஞ்சு வரலை. ராவணனும் சீதாவும், அனுமாரும் ஜாலியாப் பேசிச் சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க. படம் எடுத்துக்கிட்டேன். அருகில் ஒரு அரக்கியும் உண்டு:-)

ராமன், அவசர அவசரமா வந்து சேர்ந்துக்கிட்டார், 'பார்க்கிங் நை மிலா'வாம். கலியுகராமன் டீ ஷர்ட்டில். பரவாயில்லை. ஸப் ச்சல்த்தா ஹை:-)

மாலை நாலரை மணிக்கு விழான்னு நாங்களும் சரியா அஞ்சே முக்காலுக்குப் போய்ச்சேர்ந்தோம். இப்போதைய க்ளப்பின் தலைவர் கையில் இருந்த நிகழ்ச்சிநிரலை வாங்கிப் பார்த்தேன். இன்னொரு ஸ்டாலில் ஒரு டாலர்னு வித்துக்கிட்டு இருப்பதால் வாங்கிக்கலைன்னு சொன்னேன்:-) நிரல் இருந்தாப் போதுமா? எப்பதான் நிகழ்ச்சியை ஆரம்பிக்கப்போறீங்க? இதுவும் இண்டியன் டைமுக்கா?ன்னு கேட்டதும், 'துள்சிஜி, ஸாடே ச்சே கோ ஜரூர் ஷுரூ கரேங்கா. ஆப் தேக்கியே'ன்னார்.

ஆறரைக்கு மேடை ஏறிட்டார்!. பல மைல் நீளத்துக்கு பேச்சுகள். உள்ளூர் தலைகள், ரெண்டு வாரம் முன்பு நடந்த பொதுத் தேர்தலில் தெரிஞ்செடுக்கப்பட்ட பாராளுமன்ற இந்திய அங்கங்கள், மீண்டும் அங்கமான சீனப்பெண்மணி இப்படி.....பேச்சோ பேச்சு. நம்ம ஆளுங்களுக்குக் கையில் மைக் பிடிச்சா விடமுடியறதில்லைப்பா.

இந்த முறை தோத்துப்போயிட்டா அடுத்த முறை ஜெயிக்கமாட்டாமா? மக்களோடு தொடர்பு இருக்கணுமேன்னு லேபர் கட்சியின் எத்னிக் லயசன் ஆப்பீஸர், நெத்திப் பொட்டு என்ன, மூக்குத்தி என்னன்னு இந்திய அலங்காரத்தில் வந்துருந்தாங்க. எகிப்து நாட்டுக்காரர். நம்ம தோஸ்துதான்.


மேளாவை, மல்ட்டிக் கல்ச்சர் விழாவா மாத்திட்டோம் பெல்லி டான்ஸ், மிடில் ஈஸ்டர்ன் டான்ஸ் எல்லாம் வச்சு:-))))) பஞ்சாபி பெண்கள் நடனம், குஜராத்தி கர்பா, பரத நாட்டியம், பாலிவுட் டான்ஸ், பாங்ரான்னு ஜமாய்ச்சுட்டோம்.

இந்த விழாக்களில் எல்லாம் ஒரு அதிசயமான ஒற்றுமை என்னன்னா சுதா ரகுநாதன். சொல்லிவச்சாப்போல எல்லாத்துலேயும் முதல் ஐட்டமே பரதநாட்டியம்தான். கணீர்ன்னு சுதாவின் குரலில், தமிழ்ப்பாட்டுக்கு நம்ம பசங்க தூள் கிளப்பிட்டாங்க. ஆரம்பமே தமிழ்ப் பாட்டுன்னு எங்களுக்கு வாயெல்லாம் பல்.


நம்ம வீட்டு விருந்தாளிக்கு ( தீபக் bhaiya) இங்கிருக்கும் இந்தியர்கள் பலரை ஒருச்சேரக் காட்டிட்டொம்லெ. (உங்க வரவை முன்னிட்டுத்தான் இன்னிக்கு தீபக் வந்ததால் திவாலி. ) அதுலே அவரை வேற அடையாளம் கண்டுக்கிட்டாங்க சில ஃபிஜி இந்தியன்ஸ். வந்து போனதுக்கு சாட்சி கிடைச்சுருச்சு:-))) அண்ணனும் அண்ணியும் உள்ளூர் ட்ராம்லே போகணுமுன்னு ஆசைப்பட்டாங்க. சதுக்கத்துலேயே ஒரு பக்கம் ட்ராம் ஸ்டாப் (!!) இருக்கேன்னு அங்கேயே அவுங்களை ஏத்தி அனுப்பிட்டு, சுத்திப் பார்த்துட்டு இதே இடத்துலே இறங்கி எங்களைத் தேடுங்கன்னேன்.

நாங்களும் தெரிஞ்சவங்களோடு கப்பா மாறிச்சுத்தித் திரிஞ்சப்ப ட்ராம்லே போனவங்களும் வந்துட்டாங்க. பூரி,சோளெ, பேல்பூரி, வெஜிடபுள் புலாவ், பாலக் ஷீஷ் கபாப் னு வாங்கித் தின்னு அங்கேயே டின்னரை முடிச்சுக்கிட்டோம். கடைசி நிகழ்ச்சியா வாணவேடிக்கை, பட்டாஸ் கொளுத்துவது எல்லாம் இருந்துச்சு. ஆனாலும் விருந்தினர் களைச்சுப்போனதாலும், மறுநாள் அதிகாலையில் அவுங்க தெற்குத்தீவு சுத்திப்பார்க்கக் கிளம்புவதாலும் பட்டாஸை அவுங்களே வெடிச்சுக்கட்டுமுன்னு வீட்டுக்கு வந்துட்டோம்.

யாருமே காசு கொடுத்து வாங்கிக்காமக் குவிஞ்சு கிடந்த நிகழ்ச்சிநிரல்களைக் கொண்டுவந்து கூட்டத்துக்கு விநியோகம் செய்ய ஆரம்பிச்சாங்க. இந்தா உனக்கு ஒன்னு, உன் பூனைக்கு ஒன்னு, உன் நாய்க்கு ஒன்னு, இந்தக் கைக்கு ஒன்னு அந்தக் கைக்கு ஒன்னுன்னு......மறுநாள் ஒரு 'சரித்திரம் படைக்கப்போறேன்'னு எனக்கே தெரியாது.......
===========================

Monday, November 24, 2008

அக்கா ( பாகம் 3 )

கும்பி கூழுக்கு அழுவுதாம் கொண்டை பூவுக்கு அழுவுதாம். நெசமாவா இருக்கும்? பூன்னு சொன்னதும் ஞாபகம் வருது. கடைசி வீட்டுலே இருக்கற எபிநேசர் வாத்தியார் வீட்டுலே நிறைய கனகாம்பரம், மல்லின்னு பூச்செடிகள் வச்சுருக்காங்க. அங்கே கிணறுகூட இருக்கு. 100 பூவு பத்துகாசுன்னு விப்பாங்க. மல்லி மட்டும் ஒரு சின்ன உழக்குலே அளந்து போடுவாங்க. நாங்கதான் அவுங்களோட மெயின் கஸ்டம்மர். அஞ்சு தலைங்க இருக்கே. அதுவும் மல்லி சீஸன் வந்துருச்சுன்னா..... ஒருத்தர் மாத்தி ஒருத்தருக்கு ஜடைதச்சு விடறதே வேலை. பெரிய பித்தளைக் குண்டான் தண்ணியிலே மல்லி மொட்டுகளைப் போட்டுவச்சுக்கிட்டு ஊசியாலே கோர்த்துக்கிட்டு இருப்போம்.

என்னதான் விறுவிறுன்னு வேலையைப் பார்த்தாலும் இருட்டிரும் பூ தைச்சு முடிக்கும்போது. அக்கா மகளுங்க பலசமயம் அப்படியே ஆடாம உக்கார்ந்தே தூங்கிரும். தூக்கத்துலேயே பவுடர் பூசிப் பொட்டுவச்சு, நல்ல துணி மாத்திப் படுக்க வைக்கறதுதான். தூங்கற புள்ளையை அலங்கரிக்கக்கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க. ஆனா அழகாப் பூப்பின்னல் போட்டுக்கிட்டு முகத்தைச் சரிப்படுத்தலைன்னா நல்லாவா இருக்கும்? எனக்குத் தைக்கும்போதுமட்டும் உஷாரா இருப்பேன். நகைநட்டெல்லாம் போட்டுவிடுவாங்க. பட்டுப்பாவாடை அழுக்காயிருமுன்னு சின்னத்திண்ணையில் பாய்போட்டு உக்காந்துக்குவேன். அக்கம்பக்கம் போய் காமிக்க எல்லாம் முடியாது. இருட்டுலே பூச்சி பொட்டு இருக்குமாம். நல்லாக் காட்டுலே இருக்கு வீடுன்னு அழுகையா வரும்.

இம்புட்டுப் பூ இருக்கும் எபிநேசர் சார் வூட்டுலே மூணு அக்காங்க இருக்காங்க.
ஒருநாள் கூட இத்துனூண்டு பூவை அவுங்க தலையில் நான் பார்த்ததே இல்லை. எல்லாத்தையும் பறிச்சு வித்துருவாங்க. நாம போய்ச் சொன்னதும் பூப்பறிக்கப் பின்பக்கத் தோட்டத்துக்குப் போவாங்க. நானும் கூடவே போவேன்.
நல்லா குளுகுளுன்னு இருக்கும் அங்கே. ஒவ்வொரு கனகாம்பரச் செடிக்கும் வட்டவட்டமாப் பாத்தி கட்டி, தண்ணீர் தானே பாயறமாதிரிக் கொத்திக் கரை கட்டி வச்சுருப்பாங்க. கிணத்துலே தண்ணி இறைச்சுத் தரையிலே கொட்டுனாவே போதும். அப்படியே சரிஞ்சு சின்ன வாய்க்கலா ஓடும். நானும் அப்பப்பத் தண்ணி சேந்தி ஊத்துவேன். அதுலே கடைசி அக்கா எங்க ஸ்கூலில்தான் படிக்குது. இந்தவருசத்தோடு படிப்பை முடிச்சுருமாம். அப்புறம் வாத்தியார் வேலைக்குப் படிக்கப்போகுதாம். நடுவுலே அக்கா போனவருசம் முடிச்சதாம். உடனே டீச்சர் ட்ரெயினிங் போகமுடியாம பயங்கரக் காய்ச்சல் வந்து இப்பத்தான் உடம்பு தேறியிருக்காம். இந்த ரெண்டு பேரையும் ஒன்னாவே ட்ரெயினிங் அனுப்பப்போறாராம் சார்.

கனகாம்பரத்தை, மொட்டுக்களைச் சேதாரம் பண்ணாம எப்படிப் பறிக்கணும்னு அவுங்கதான் சொல்லிக் கொடுத்தாங்க. நானும் இப்ப தேறிட்டேன்.ஆனா மல்லிச் செடிகிட்டே மட்டும் போகவிடமாட்டாங்க. அங்கே 'பேர் சொல்லாதது' இருந்தாலும் இருக்குமாம். ஊராமூட்டுப் புள்ளேன்ற பயம் போல. பயமுன்னதும் இன்னொன்னு நினைவுக்கு வருது.

போனவருசம்,(நான் இங்கே வர்றதுக்கு முந்தி) சார் எங்கியோ ஊருக்குப் போயிருந்தப்ப..... ராத்திரி திருடன் வந்துட்டானாம். வாத்தியாரம்மா ( வாத்தியார் வூட்டுப் பொம்பளைங்களை வாத்தியாரம்மான்னுதான் இங்கே எல்லாரும் கூப்புடறாங்க. நாங்கெல்லாம் வத்தலகுண்டுலே டீச்சர்னு கூப்புடுவோம்) சத்தம் கேட்டு முழிச்சுக்கிட்டாங்களாம். பக்கத்துலே மூணு பொட்டைப்பசங்களும் நல்லாத் தூங்குதுங்க. டார்ச் லைட் வெளிச்சத்துலே திருடன் பாட்டுக்கு பொட்டியைத் திறந்து கிளறிக்கிட்டு இருந்தானாம். 'டேய் திருடா.... எடுத்ததை வச்சுட்டுப் போடா'ன்னு மெள்ளச் சொன்னாங்களாம். அவன் அதைச் சட்டையே பண்ணாம அங்கே இங்கேன்னு துளாவிக்கிட்டே இருந்தானாம். இன்னும் கொஞ்சம் சத்தமா, தூங்கும் புள்ளைங்க எழுந்துக்கப்போதேன்னு பயந்துக்கிட்டே, ' இங்கே ஒன்னும் இல்லை போடா போடா'ன்னு சொன்னதுக்கு அவன் திரும்பிப் பார்த்துக் கத்தியைக் காட்டுனானாம். அம்புட்டுத்தான். கப் சுப்னு இருந்துட்டாங்களாம். எதையாவது எடுத்துக்கிட்டுப்போய்த் தொலையட்டும். மகள்களை ஒன்னும் பண்ணாம விட்டாச் சரின்னு நினைச்சாங்களாம். அந்தப் பேட்டையிலே எவனோ வாத்தியார் ஊருலெ இல்லேன்றதைத் தெரிஞ்சுக்கிட்டுத்தான் வந்திருப்பான்.

மறுநாள் பூரா இதே பேச்சு.. பாவம் அந்தம்மா,பயந்துபோய் நின்னுச்சாம். சார்தான் திரும்பி வந்தபிறகு குதிச்சுக்கிட்டு இருந்தாராம். அவனை அடையாளம் பார்த்து வச்சேயா....ஆளைக் காமி. தொலைச்சுப்புடறேன்னு...... காமிச்சா மட்டும் இவர் என்ன செஞ்சுருப்பாராமுன்னு பள்ளிக்கூடத்துலே டீச்சர்ஸ் ரூமிலே ஒரே கலாட்டாவாம். மாமாதான் அப்பப்ப பள்ளிக்கூட நியூஸையெல்லாம் வீட்டுலே வந்து சொல்வார். அக்காவுக்குச் சிரிப்பா வரும். எல்லாம் ஓல்ட் நியூஸ்ன்னு சொல்லும். அதான்....காலையில் சார்ங்க எல்லாம் பள்ளிக்கூடம் கிளம்புனவுடன் லேடீஸ் மீட்டிங் ஆரம்பிச்சுருமே!!

நம்மூட்டுலே கிணறு இல்லேன்னு சொன்னேனே. அதனால மூனாவது வீட்டுலே இருந்து தண்ணி எடுத்துக்குவாங்க அக்கா. பக்கத்து வீட்டுக் கணக்கு வாத்தியார் கிணறு இருக்குதான். ஆனா அவுங்க சிலசமயம் அவ்வளவு இணக்கமா இல்லைன்னு அக்கா சொல்லும். அந்த லைனில் மொத்தமே மூணு கிணறுதான். . எபிநேசர் சார் வீடு கட்டக் கடைசி. அம்மாத்தூரம் யாரு போவான்னு இருக்கும். மூனாவது வீட்டுக்குச் சொந்தக்காரர், நம்ம ஹைஸ்கூல் கடைநிலை ஊழியர். அவர் பெயர் அன்னு. நாங்களும், அன்னண்ணேனோட அடுத்தப் பக்கத்து வீட்டுக்காரங்களும் தண்ணி எடுக்கன்னு அன்னு அண்ணன் வீட்டுக் கிணத்துக்கிட்டே சந்திப்போம் பாருங்க. அதுதான் லேடீஸ் க்ளப்.

நம்ம எபிநேசர் சார் மட்டும் வீட்டை, மனையின் முன்னாலே கட்டிப் பின்பக்கம் முழுசும் தோட்டம் போட்டுருக்கார். மத்தவங்க எல்லாரும் அவுங்கவுங்க மனையிலே முன்னாலே ரொம்ப இடம் விட்டுக் கடைசியில் வீட்டைக் கட்டி இருக்காங்க. ஒருத்தர் கட்டுனதைப் பார்த்து அடுத்தவுங்க கட்டிக்கிட்டாங்க போல! எல்லாரும் வேலி வேற போட்டு வச்சுக்கிட்டதாலே அப்படியே சுத்திக்கிட்டுப்போய் தண்ணி கொண்டாரணும். அவுங்கவுங்க தனியாத் தாம்புக்கயிறு வாங்கி வச்சுக்கிட்டுக் கொண்டுபோவோம், என்னாத்துக்கு நாளை மறுநாள் ஒரு பேச்சுன்னு.

நான் அங்கே போன சமயம், கணக்கு வாத்தியார் வேற ஊருக்கு மாத்தல் வாங்கிக்கிட்டுப் போயிட்டார். அந்த வீட்டுக்கு புதுசா வந்த கணக்கு வாத்தியார் குடிவந்துட்டார். கணேஷ் சார் ஒத்தைக் கட்டை. அப்பப்ப நம்ம வீட்டுலே இருந்து குழம்பு ரசம் கொண்டுபோய்க் கொடுப்பேன். அவர்தான் அப்புறம் வேலியை ஒரு ஆள் வர்றமாதிரிப் பிரிச்சு விட்டார். அவர் ஒரு பக்கம் பிரிச்சா நான் அந்தப் பக்கம் அன்னு அண்ணன் வீட்டுப் பக்கம் வழி செஞ்சேன். குறுக்காலே புகுந்து தண்ணி எடுத்தாற வசதியாப் போச்சு. கணேஷ் சார், அவுங்க கிணத்துலேயே தண்ணி மொண்டுக்கச் சொன்னார்தான். ஆனா அக்காதான் எதுக்கு வம்பு. இவர் குடித்தனம் இருக்கறவர்தானே? கணக்கு வாத்தியார் தண்ணியிலும் கணக்காவே இருக்கட்டுமுன்னு விட்டுருச்சு.

நான் போனபிறகு அக்காவுக்குக் கூடமாடன்னு உதவியாத்தான் இருந்தேன். ஆரம்பத்துலே தண்ணி எடுக்கும்போதுதான் தேங்காநாரு அப்படியே கையிலே உராய்ஞ்சு உள்ளங்கையெல்லாம் தோலுறிஞ்சு செகசெகன்னு ஆகிப்போச்சு. அக்காதான் அழுதுகிட்டே தேங்காய் எண்ணெய் தேய்ச்சு விட்டு, இனிமே நானே எடுத்துக்கறென்னு சொல்லுச்சு. ஆனா அதுவும் பாவம்தானே எவ்வளோன்னு வேலை செய்யும்? இதுலே பொழுதன்னிக்கும் புள்ளைத்தாய்ச்சி. எனக்கு அப்புறம் கை பழகிப்போச்சுன்னு வையுங்க. பாதி வழி குடத்தைக் கொண்டுவந்தா மீதி வழி அக்கா சுமந்துபோய் எல்லாத்துலேயும் தண்ணி ரொப்பிக்கும். எல்லாத்துலேயுமுன்னா சின்னச் சொம்பு டம்ப்ளர்னு ஒன்னு விடாது.


காலையில் தண்ணி எடுக்கறது கொஞ்சம் கொஞ்சமா சாயங்காலமுன்னு ஆச்சு. எல்லாருக்கும் காபி, இட்லி, சட்னி எல்லாம் செஞ்சு, மூத்த ரெண்டு பசங்களைக் குளிப்பாட்டிப் பள்ளிக்கூடத்துக்கு
ரெடியாக்கி அதுங்களுக்கு சடை போட்டு, எனக்கும் சடை பின்னிவிட்டு, மத்த சின்னதுக்கும் பால் பாட்டில் தயார் செஞ்சு இட்லி ஊட்டிவிட்டுன்னு காலை நேரத்துலே ஒரே களேபரமா இருக்கும். இந்த அழகுலே விறகு ஈரமா இருந்தா விடிஞ்சது(-: காபி கூட ஃபில்ட்டர்லே போடமாட்டாங்க. அடுப்புலே தண்ணி கொதிக்கவச்சு அதுலே காப்பித்தூளையும் பாலையும் ஊத்திக் காய்ச்சும். முதல்லே எனக்கு நாக்குக்கு நல்லாவே இல்லை. ஒன்னும் சொல்லாம இருக்கப் பழகிக்கிட்டேன். மாமா ஒரு வேலையும் கூடமாடச் செஞ்சு நான் பார்த்ததே இல்லை. அவர் காலேல எந்திரிச்சு வெளையாடப் போயிருவார். ஒம்போது மணிக்கு வந்து குளிச்சு, இட்லி தின்னுட்டு ஒம்பதே முக்காலுக்கு பள்ளிக்கூடம் கிளம்பிருவார். அவர்கூடவே நானும் போயிருவேன்.

பள்ளிக்கூடத்துப் போகும் வழியில் ஒரு பெரிய மொட்ட மைதானம் இருக்கு. எனக்கு அதைத் தனியா தாண்டிப்போக பயமா இருக்கும். பெரிய பெரிய கழுகுங்க ஒரு சின்னப்புள்ளை உசரத்துலெ மஞ்சமூக்கோடு அங்கே நிக்கும். யாரையும் ஒன்னும் செய்யாதாம். பொணம்தின்னிக் கழுகான்னு கேட்டால் இல்லையாம். ஆனாலும்...........

இதுக்கு நடுவிலே அக்காவுக்கு நாலாவது பொண் குழந்தை பிறந்தாச்சு. வீட்டுலேதான் பிரசவம். நானு பள்ளிக்கூடத்துலே இருந்து வரேன், வீட்டுலே ஒரு புதுப் பாப்பா! மதீனாக்காதான் கூடமாட உதவி செஞ்சுக்கிட்டு இருந்துச்சு.
பாப்பாவுக்கு ரேணுகான்னு பெயர் வச்சாங்க அக்கா. இப்போ மூனாவது குழந்தை முதல் இந்த பெயர்வைக்கும் இலாக்கா அக்காவுக்கு மாற்றிட்டாங்க போல. இன்னிக்கு இதை எழுதும்போது, 'ஏன் நான் ஒரு பெயரைத் தெரிஞ்செடுக்காமல் இருந்தேன்?' னு எனக்கே புரியலை. ஜனனின்னு வச்சுருக்கலாம். எனக்கு ரொம்பப் பிடிச்ச பெயர்.

இந்தக் குழந்தை பிறந்ததுலே இருந்து என்னுடைய காலை நேரத்து உதவிகளில் மாற்றம் வந்துருச்சு. குழந்தைக்கு எப்பப் பார்த்தாலும் வயித்துக் கோளாறு. ரெண்டே நிலைதான். 'போகும்'. 'போகவே போகாது'. உள்ளூர் அரசாங்க ஆசுபத்திரியில் இருந்து மருந்து வாங்கிக்கிட்டு வரணும். ஆசுபத்திரிகள் நல்ல நிலையில்தான் இயங்கிக்கிட்டு இருந்துச்சு அப்பெல்லாம்.
போகாம இருக்கும் போது போகறதுக்கும், போய்க்கிட்டே இருக்கும்போது போகாமல் இருக்கவுமுன்னு ரெண்டு சீட்டு எழுதி வாங்கியாச்சு. குறைஞ்சது வாரம் ரெண்டு முறை மருந்து வாங்கப்போவேன். அக்காவுக்குத் தெரியும் எந்த சீட்டுன்னு. எடுத்துக்கிட்டுப்போய், அவுட் பேஷண்ட் பார்க்கும் வரிசையில் நின்னு டாக்டர்கிட்டே காமிச்சால் கையெழுத்து போடுவார். அதை அப்படியே கம்பவுண்டர்கிட்டே கொடுத்தால் கலக்கி வச்சுருக்கும் தண்ணி மருந்து எடுத்து நான் கொண்டு போகும் சீசாவில் ஊத்தித் தருவார். ரெண்டு சீட்டு, ரெண்டு சீசா. கூட்டம் எல்லாம் இருக்காது. நாலைஞ்சு பேர் நின்னா அதிகம். பள்ளிக்கூடம் போகற பொண்ணுன்னு எனக்கு முன்னுரிமை கொடுப்பார் டாக்டர்.

ஒவ்வொருமுறை ஆசுபத்திரி போய்வரும்வழியில் எல்லாம் மனசு சஞ்சலத்தோடு இருப்பேன். அந்த டாக்டரைப் பார்க்கும்போது அம்மா, அவுட்பேஷண்ட்டைப் பார்த்துக்கிட்டு இருக்கும்போது நான் பள்ளிக்கூடம் கிளம்பி தூர இருந்தே கை ஆட்டிட்டுப்போனது எல்லாம் நினைவுக்கு வரும். அழுகையா வரும் . அதை மறைக்க விறுவிறுன்னு நடந்து வீட்டுக்கு வருவேன். சுமார் மூணு நாலு கிலோமீட்டர் தூரம் இருக்கும் வீட்டுக்கும் ஆசுபத்திரிக்கும்.

( இப்போ இதைத் தட்டச்சு செய்யும்போது அம்மாவின் நினைவு ரொம்ப வந்து மனசுலே கனமா இருக்கு. மானிட்டரைப் பார்க்க முடியாமல் கண்ணுலே கண்ணீர் தளும்பி வழியுது. அப்புறமா தொடரலாம் என்ன)

தொடரும்..........

Friday, November 21, 2008

அக்கா ( பாகம் 2 )

என்னவோ ஏதோன்னு பதறிப்போனப் போனப் பாட்டி, 'வீட்டுக்குள்ளே' போனபிறகுதான் மெதுவா அக்காவைக் கேட்டதுக்கு வீட்டுக்கூரையைக் கண்ணாலே காமிச்சது. மாமாவை ராஜகுமாரனா நினைச்சுக்கிட்டு, அவர் வீட்டையும் அரண்மனையாக் கற்பனை செஞ்சு வச்சுருந்துருக்கும் போல. பாவம். கூரை வீடு. தரையும் சாணி மொழுகுன மண்தரை. இருபதடி அகலத்துலே அறுபதடி நீளத்துக்குப் பள்ளிக்கூடம் மாதிரி ஒரு வீடு. ஜன்னல் என்ற பெயரே இல்லை. வாசக் கதவுதான் இருக்குற ஒரே தொறப்பு. உள்ளெ நுழைஞ்சாக் கடைசியிலே ஒரு ரெட்டை அடுப்பு. இதுகூட இந்தப் பக்கம் இருந்த பாஷாபாய் சம்சாரமும், அவுங்க அத்தாச்சியுமாச் சேர்ந்து போட்டுக் கொடுத்ததாம்.

கலியாணத்துக்குன்னு வந்துருந்த எங்க பாட்டிக்கிட்டேயும் அம்மாகிட்டேயும் சொல்லி அக்கா அழுதுச்சாம். பாட்டிதான் சொன்னாங்க, கூரைவீடா இருந்தாலும் சொந்த வீடாச்சே''ன்னு. அதுவுஞ்சரித்தான். எங்களுக்குன்னு சொந்தமா வீடு இல்லைன்னாலும், அங்கங்கே வேலை மாத்தத்துலே போற இடங்களில் குவாட்டர்ஸ் இருக்கும். பாட்டிவீடு, அந்தக் காலத்துலே பெரிய தாத்தா(பாட்டியின் அப்பா) இருந்தப்பக் கட்டுனது. முத்தமெல்லாம் வச்ச பழையகால வீடு. இதெல்லாம் எனக்குச் சரியா நினைவில்லை. அப்ப எனக்கு அஞ்சோ ஆறோ வயசுதான்.

அக்காவைப் புருசன் வீட்டுலே வுட்டுட்டு நாங்க கிளம்பி வத்தலகுண்டு வந்தோம். அக்கா இல்லாம நாந்தான் ரொம்ப ஏங்கிப்போயிட்டேன்.. காய்ச்சல்வந்து பினாத்திக்கிட்டுக் கிடந்தேனாம். மூணாமாசம், அக்காவும் மாமாவும் வந்தாங்க. தாலிபிரிச்சுக் கட்டணுமுன்னு எதோ சடங்கு. அன்னிக்கும் இப்படித்தான் பள்ளிக்கூடத்துலே இருந்து ஓடிவரேன்.... வாசலில் அக்கா நிக்குது. நம்பமுடியாமக் கத்துனேன்.

அக்கா இருந்த பத்து நாளும் எனக்கு மஜாதான். மாமா எப்பவும் பத்துகாசு, இருபது காசு கொடுத்துக்கிட்டே இருந்தார். மாமாவும் அக்காவும் உள் அறையிலே இருப்பாங்க. நானு பொழுதண்ணிக்கும் ஓயாம அக்காகிட்டேயே ஓடுவேன். மாமா காசு கொடுத்து முட்டாய் வாங்கிக்கச் சொல்வார். பக்கத்துலே இருக்கும் பொட்டிக்கடைக்கு ஓடிப்போய் ஓடியார ரெண்டு நிமிசமே சாஸ்தி. என்னைக் கழட்டிவிடத்தான் மாமா காசு கொடுத்தாருன்னு இப்ப நினைச்சா..... சிரிப்பா வருது.

அப்புறம் அக்காவுக்கு பிரசவமுன்னு கூட்டியாந்து விட்டாங்க. நானும் அம்மாவும் போய்க் கூட்டியாறதாத்தான் ப்ளான். நான் என்ன பெரிய மனுசியான்னா.... என்னை விட்டுட்டு வண்டியேற வுட்டுருவேனா என்ன?
இந்த மாமா ரொம்ப மோசம். பள்ளிக்கூடத்துக்குத்தான் லீவு விட்டாச்சே. நானே கூட்டியாரேன்னு சொல்லிட்டாராம். சம்பிரதாயம் தெரியாத ஒரு ஜென்மம்.

மாமா நாடகம் போடறதுலே பெரிய ஆளு. அவரே நாடகம் எழுதி, சில நண்பர்களைச் சேர்த்துக்கிட்டு நடிப்பார். அதுலே 'ஆக்ட் கொடுக்க'ன்னு பொம்பளை நடிகைகளைப் பக்கத்து டவுனில் ஏற்பாடு செய்வாங்க. அவுங்களும் நாடகத்தன்னிக்குக் காலையில் வந்து சேருவாங்க. ஒரே அலப்பரைதான். மாமாவோட சிநேகிதர் கூட்டமும் உதவிக்கு வந்தாமாதிரி,
இங்கே ஆக்கறதும் அரிக்கறதும், கூத்தும் பாட்டுமா இருக்கும்.

'துரோகி'ன்னு ஒரு நாடகத்துலே இவர் ஒரு கையும் ஒரு காலுமா இல்லாதவரா நடிச்சார். அதுக்காக தினம் கையையும் காலையும் மடக்கிக் கட்டிக்கிட்டு தவ்விதவ்வி நடந்து பழகுவாராம். 'கண்ணே... பீங்கான் தட்டிலே உருளும் திராட்சை போன உன் கண்கள்' என்ற ஒரு டயலாக் ரொம்பப் பிடிச்சுப்போய், இவரோட நண்பர் எப்பவும் சொல்லிக்கிட்டுத் திரிவாராம். நாடகம் பயங்கர வெற்றியாம். அதுக்குப்பிறகு, இவர் தெருவுலே நடந்து போகும்போது, 'இதோ துரோகி போறான்'னு பொம்பளைங்க இவர் காதுபடச் சொல்லுவாங்களாம்.

இதையெல்லாம் சொல்லிச் சொல்லிச் சிரிச்சு ஒரே கலாட்டாவா இருக்கும் நம்ம வீட்டுலே. அதுவும் அம்மா இல்லாத நேரம் பார்க்கணுமே...... இதையெல்லாம் நடிச்சுக் காட்டுவார்.


அண்ணனும் மாமாவும் நல்ல ப்ரெண்ட்ஸ் போல வெளியே போறதும், ஊர் சுத்தறதுமா இருந்தாங்க. அம்மாகூட மருமகனை இன்னொரு மகன்னு சொல்ல ஆரம்பிச்சிருந்தாங்க. பழைய கோபமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக் காணாமப் போயிருந்துச்சு. அவரோட ஒரு அத்தை பண்ண காரியத்துக்கு இவர் என்ன செய்வாராம்?

ஆனா.... அந்த அத்தையாலேக் கெட்ட குடும்பத்துக்கு , எப்படியாவது தன்னாலே ஒரு நல்லது நடக்கணுமுன்னுதான் விடாப்பிடியா இருந்து அக்காவைக் கட்டுனாராம்.


அக்காவுக்கு ஒரு பொம்பளைப்புள்ளை பொறந்துச்சு. அவர்தான் தமிழ்ப்பெயர் வைக்கணும்னு 'சிலம்புச் செல்வி'ன்னு வச்சார். ஆனா நாங்க வீட்டுலே கூப்புடறது ராணின்னு. அதுக்கு அடுத்த வருசம் இன்னொரு பொண்ணு. அக்கா பிரசவத்துக்குன்னு வந்துட்டுப்போச்சு. குழந்தைக்கு அவ்வைன்னு பெயர் வச்சார். என்னடா இது கிழவிபெயரைப் பாப்பாவுக்கு வச்சுட்டாங்களே அம்மா நினைச்சாங்க. நாந்தான் 'அவ்வைக்கிழவி நம் கிழவி அருமை மிகுந்த பொன் கிழவி'ன்னு பாடிக்கிட்டுத் திரிஞ்சேனே! (அம்மாவுக்குத் தமிழ் அவ்வளவாத் தெரியாது என்பது இங்கே கொசுறுத் தகவல்) மூணாவதும் ஒரு பொண்ணு. மாமாவோட தமிழ்ப்பற்று கொறைஞ்சு போயிருச்சோ என்னவோ தரணி, ரேணுகான்னு பெயர்கள் வர ஆரம்பிச்சது.

இதுக்கிடையில் சின்னக்காவையும் சொந்தத்துலேயே கட்டிக்குடுத்தாங்க. எங்கம்மாவும் இறந்துட்டாங்க. அண்ணனும் வேலைக்குப்போனார். ( ரெண்டே வரியில் முடிச்சுட்டேன் இல்லை? என்னென்னமோ நடந்து போச்சு. இதெல்லாம் தனியாச் சொல்லணும். ராமாயணம் கெட்டது போங்க. அப்புறம் பார்க்கலாம்) நான் தான் இப்ப வீட்டுலே ஒரு பிரச்சனையா இருந்தேன்? படிப்புக் கெடவேணாமுன்னு அக்கா வீட்டுலே இருக்கும்படியா ஆச்சு. அக்காவின் செல்லமா இருந்த நான், 'இதுவும் நல்லதாப் போச்சு'ன்னு நினைச்சேன்.

அக்கா வீட்டுக்கு இதுக்குமுன்னாலே நாலைஞ்சுதடவை வந்து போனதுதான். இப்ப இங்கேயே இருக்கணுமுன்னு வந்தபிறகுதான் நல்லாக் கவனிச்சேன் அக்கா எப்படி மாறிப்போயிருக்குன்னு. மூணு குழந்தைங்க. இப்ப நாலாவது வயித்துலே. எல்லாம் 'ஞைஞை'ன்னு பிடுங்குதுங்க. பார்த்துப்பார்த்துச் சீலை கட்டும் பழக்கம் அறவே காணாம். மேட்சிங்கா ஜாக்கெட் இல்லை. ஒரு முடி இப்படி அப்படி பிசிறாம அழகாப் பின்னிப்போட்டுக்கும் சடை எங்கே போச்சு? ஏனோதானோன்னு அப்படிச்சீவி முடிஞ்சுக்குது.

வீட்டுக்கு முன்னாலே புதுசா ரெண்டு திண்ணை முளைச்சுருக்கு. வாசக்கதவு நடுசெண்டர்லே இல்லாம ஒரு ஓரமா வச்சதாலே ஒரு பக்கத் திண்ணை ரொம்பச் சின்னதாவும், மறுபக்கத் திண்ணை பெரூசாவும் இருந்துச்சு. நல்ல அகலமான திண்ணை. மாமாவோட ' டபுள் பெட்' திண்ணையில் சுருட்டி வச்சுருக்கு. மண்ணைக்குழைச்சுச் சுத்துச் சுவரு வச்சு, மேலே கூரையும் போட்டு இதுவே ஒரு கதவில்லாத அறைமாதிரி இருக்கு. சமையலுக்கான அடுப்பு இங்கே வந்துருக்கு. நல்ல வெளிச்சமா, புகை மண்டாம இருக்கு. இதுலே என்ன விசேஷமுன்னா மேலே கூரை வேய்ஞ்சது மட்டுமே வெளியே இருந்து கொண்டுவந்த ஆளாம். மத்தபடித் திண்ணை, சுவர் எல்லாம் 'கட்டுனது' அக்காவேதானாம். நெசமாவா இருக்கும்? கேட்டாச் சிரிக்குது. அவுங்க இடத்துலே கடைசியா வேலிக்குப் பக்கம் இருக்கும் பெரிய பள்ளம்தான் சாட்சி.
நம்ம பாஷாபாய் சம்சாரம் மதீனா அக்காதான் விறகு கொண்டுவந்த பையன்கிட்டே சொல்லிப் பள்ளம் தோண்டி மண்ணை அள்ளிப்போடச் சொல்லுச்சாம்.

வீடுமுழுசும் தரையெல்லாம் நல்லா மெழுகிக் கோலம் போட்டு வச்சு அழகா இருக்கு. திண்ணைகளிலும் கோலங்கள். பெரிய திண்ணை இல்லாம இத்தனை வருசம் எப்படி வாழ்க்கை நடந்துச்சுன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கும். சாப்பாட்டு மேசை, வீட்டுப்பாடம் எழுதும் இடம், மத்தியானத்துலே கொஞ்ச நேரம் அக்கடான்னு கண்ணயரும் கட்டிலு, யாராவது வந்தாங்கன்னா அவுங்க உக்காரும் பெஞ்சு, தரையெல்லாம் பெருக்கி மொழுகும்போது, யார்கால்லேயும் தட்டாமச் சாமான்சட்டெல்லாம் எடுத்துவைச்சுக்கற இடம், குட்டிப்பசங்களுக்குப் பால்புட்டி, காச்சுன பால் எல்லாம் எடுத்துப் பத்திரமா வைச்சுக்க, சாயந்திரம் உதிரிப்பூ கட்டுற இடம், புள்ளைங்களுக்குத் தலைசீவிப் பின்னிவிடறதுக்கு அதுகளை ஆடாம உக்காரவச்சு வகுடு எடுக்கன்னு ஆயிரம் வேலை அங்கேதான் நடக்குது. என்னைக் கொஞ்சுன காலமெல்லாம் போயே போச்சு. பிள்ளைங்க அந்த இடத்தைப் புடிச்சுக்கிச்சுங்க. இதுலே அந்த மூணாவது குழந்தை எப்பவும் என்கூடவே இருக்கும். நானும் தூக்கி வச்சுக்கிட்டே அங்கே இங்கேன்னு போயிட்டு வருவேன். நான் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது ரெடியா எனக்காகத் தெருப்பக்கம் வந்து காத்துக்கிட்டு நிக்கும்.

தொடரும்..............:-)

Wednesday, November 19, 2008

அக்கா ( பாகம் 1)

முன் உரை இல்லேன்னா முன் எச்சரிக்கை இப்படி அவுங்கவுங்களுக்கு எது தோதுப்படுதோ அது.
ஒரு அம்பது வருசங்களுக்கு முன்பு இருந்த காலக்கட்டத்தில் நடந்தவைகளை, வாழ்க்கை முறைகளை எங்காவது எழுதிவச்சுக்கலாமுன்னு(ஆமாம்.ரொம்ப முக்கியம்?) நினைச்சப்ப (மனக்)கண்ணில் வந்தவங்க 'இந்த' அக்கா. ஒரிரு பகுதிகளில் முடிக்கமுடியாத, பலசம்பவங்கள் இதில் பின்னிப்பிணைஞ்சு இருப்பதால் நெடுங்கதை, குறுநாவல், மினித்தொடர் இப்படி எதாவது ஒன்னில் அடைக்கமுடியுதான்னு பார்க்கிறேன்.
தலைப்பு : 'அக்கா அழுதாள்' னு வைக்கலாமான்னு ஒரு யோசனை.(அம்மா வந்தாள், காப்பியான்னு நினைச்சுக்கிட்டா? அதுவுமில்லாம அக்கா எப்பவுமா அழுதுக்கிட்டே இருந்தாள்? சரி. விடுங்க. 'அக்கா' அக்காவாவே இருந்தா என்ன குறைஞ்சுறப்போகுது?அக்கா ( பாகம் 1)

கலியாணம் முடிச்ச ஒரு மணி நேரத்திலே அக்கா கண்ணுலே மளமளன்னு கண்ணீர்.

கழுத்துலே தாலிவாங்குனக் கொஞ்ச நேரத்துலே பொண்ணு இப்படிக் கண்ணீர்விட்டதைப் பார்த்தால்...............

மாப்பிள்ளை பொண்ணு ஊர்வலத்தில் குனிஞ்ச தலை (அவ்வளவா) நிமிராம நடந்துவந்த அக்கா, மாப்பிள்ளை வீட்டைத் தலைநிமிர்ந்து பார்த்துச்சு. கண்ணுலே குத்தாலம்........

மேலே சொன்ன மூணும் குறிப்பது ஒரே விஷயம்தான். அக்கா அழுதாள் என்றதைத்தான்.......

தாய்வீட்டை விட்டுப்பிரியும் வருத்தம் இருக்கத்தானே செய்யும்? அம்மாவுக்கும் லேசா அழுகைவந்தாலும் வயசுப்பொண்ணை எவ்வளோ நாள்தான் வீட்டுலே வச்சுருக்க முடியும்?

அக்கா அழுவறதைப் பார்த்தால் எனக்கும் அழுகாச்சி வருது. 'எல்லாம் இந்த ஆளால் வந்த வினை'ன்னு கோவமா அந்த மாமாவைப் பார்த்தேன்.

மாமா முகத்தில் ஒரு எக்காளம். அதுவும் என்னைப் பார்த்து...... அன்னிக்கே நினைச்சாராம். என்னிக்கு?

அதான் அக்காவைப் பொண்ணு பார்க்க வந்திருந்தாரே....அப்ப.

எனக்கென்ன தெரியும் அக்காவைப் பார்க்க வந்துருக்காங்கன்னு? பள்ளிக்கூடம் விட்டுப் 'பொந்து'வழியா ஓடியாந்தேன் வழக்கம்போல. என்னிக்குத்தான் வாசக்கேட்டு வழியா வர முடியுது? அடிக்குப் பயந்தே வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு பாருங்க..... எப்பவும் 'கொடுப்பதில்' இருக்கும் சுகம் 'வாங்கும்போது' இருக்குமா? :-))))

வாசத்திண்ணையில் நாலைஞ்சுபேர் உக்காந்துருந்தாங்க. ஆசுபத்திரிக்கு வர்ற ஆளுங்க சிலசமயம் இப்படி இங்கே வந்து உக்காந்துருக்கறதுதான். அதான் நான் ஒரு பார்வையில் அளந்துட்டு உள்ளே ஓடுனேன். பள்ளிக்கூடத்துலே நடந்ததை எல்லாம் ஒன்னுவிடாம ஒப்பிக்கணுமுல்லே?

அக்காவுக்குப் பட்டுப்பொடவை கட்டி அலங்காரம் நடக்குது. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துருக்காங்களாம். என்னடா இது புதுக்கதை?

வாசத்திண்ணையில் இருக்கறது அவுங்கதானாம். வெளியே பாய்ஞ்சேன். வெள்ளையும் சள்ளையுமாப் போட்டுக்கிட்டு உக்காந்துருந்த கூட்டத்தில் ஒரு ஆள்தான் பளிச்ன்னு இருந்தார். வேட்டிகளுக்கு நடுவில் ஒரு பேண்ட். என்னைப்பார்த்துச் சிரிச்சார். ஆனா.....

" யாரு மாப்பிள்ளை? பெரியபெரிய பல்லுவச்சுக்கிட்டு இருக்காரே...அவரா?"
எந்தக் காலத்துலே மெல்லப் பேசியிருக்கேன்? எப்பவும் கத்தற கத்தல்தான். எட்டூருக்குக் கேக்கும். இப்பத் திண்ணைவரை கேக்காதா என்ன? சின்னதா மணி அடுக்குனாப்போல இருந்த என் 'அரிசிப் பல்லை' அவரும் கவனிச்சிருப்பாருல்லே?

பொண்ணு பார்த்துட்டு உறவுமொறை அது இதுன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு அம்மா குரலில் லேசான கோவம்.

"வேணாம் இது சரிப்படாது"

" அப்படிச் சொல்லாதீங்க. உங்க பொண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு. கட்டுனா அதைத்தான் கட்டுவேன்"

அம்மா....சடார்னு கையெடுத்துக் கும்புட்டாங்க.

"கெஞ்சிக்கேட்டுக்கறேன்... கொடுக்கறதா எண்ணம் இல்லை. போயிட்டு வாங்க"

'என்னைக்கிருந்தாலும் நாந்தான் உங்க மருமகன்'னு சொன்னதோட அந்தப் பல்ல(ன்)ர் என்னைப்பார்த்துச் சிரிச்சார். வந்தவங்க எல்லாரும் கிளம்பிப் போனாங்க. அண்ணந்தான் பஸ் ஸ்டாண்டுவரை கொண்டுவிடப்போனார்.

ரெண்டு மூணு நாளா அக்கா சோகமா இருக்கறாப்புலே தோணுச்சு. அம்மாவும் 'இந்த இடமே வேணாம், பட்டது போதுமு'ன்னுத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

அதுக்கப்பிறகுதான் கடுதாசிகள் வர ஆரம்பிச்சது. எல்லாம் கார்டுலே எழுதி அனுப்புறதுதான். ரகசியமா பாழா? ஒவ்வொன்னுலேயும் உங்க பொண்ணை எனக்கேக் கட்டித்தரணுமுன்னு வேண்டுகோள் வச்சுக்கிட்டு இருந்தார். அன்னிக்கும் சரி, இப்பவும் சரி எவ்வளோ தைரியமா இவர் பேசுனாருன்னு

பெரியக்கா நம்ம ஆரோக்கியம் அக்காட்ட சொல்லிக்கிட்டு இருக்கும். ஒரு நாள் வந்த லெட்டருலே. 'கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிச்சாலும் உங்க பொண்ணைத்தவிர வேற யாரையும் கட்டமாட்டேன்'னு எழுதி இருந்தாராம். அண்ணன் நாடகமாட்டம் அதை நடிச்சு வேற காமிக்கும்.

எங்க அம்மாவுக்கு ஆலோசகர்ன்னு யாரும் இல்லை. நம்ம சங்கத்தலைவர் ராவுத்தர் தாத்தாதான் பெரியவர் என்ற முறையில் எப்பவாவது யோசனை சொல்வார். அப்புறம் ஊருலே இருந்து எங்க பாட்டி வந்தாங்க. தினம் வீட்டுலே இதே பேச்சுத்தான்.

"நல்ல உத்தியோகத்துலே இருக்கார். சீர்செனத்தின்னு எதையுமே கேக்கலை. பொண்ணைக் கொடுத்தாப் போதுமுன்னு ஒத்தைக் கால்லெ நிக்கறார். ஊர் உலகத்துலே எல்லாருமேவா கெட்டவங்க? நல்லவங்களும் இருக்கமாட்டாங்களா? பார். இப்ப ஒரு வருசமா விடாமக் கடுதாசு போட்டுக்கிட்டுக் காத்துக்கிட்டு இருக்காரு நீ என்ன சொல்லப்போறென்னு"

பேச்சு ஆரம்பிச்சாப்போதும்..... கைவேலையை விட்டுட்டு, இந்த அறையிலே என்னவோ தேடறாப்போல வந்து அக்கா உக்காந்துக்கும். கண்ணுலே லேசான சோகம். இதுவும் ஒரு வகைக் காதல்தானோ என்னவோ? அதான் சினிமா எக்கச்சக்கமாப் பார்க்கறாங்களே. நம்மூட்டுலேயும் சினிமாப் பாட்டுதான் எப்பவும். அம்மா வர்றவரை ரேடியோ சத்தமாப் பாடிக்கிட்டு இருக்கும். (இந்த ரேடியோவை என் கைக்கு எட்டாத உயரத்தில் சுவத்துலே ஸ்டாண்ட் அடிச்சுவச்சுருந்தாங்க. அதுலே ஒரு மேஜிக் ஐன்னு ஒன்னு பச்சைக்கலர்லே போய்ப்போய் வரும். அதைப்பத்தி இன்னொருநாள் சொல்றேன்) சோகப்பாட்டு வரும்போது அக்காவோட மொகம் இன்னும் சோகமா மாறிரும்.

கரைப்பார் கரைச்சால் கல்லும் கரையுமாம். அம்மா மனசும் கரைஞ்சுருச்சு. கலியாணப் பத்திரிக்கை அடிச்சு அனுப்புனார் மாப்பிள்ளை. அந்தச் செலவுகூட நானே பார்த்துக்கறேன்னு ஒரு வீம்பு. வழக்கமா இருக்கும் ரோஸ், மஞ்சள்ன்னு இல்லாம புதுவிதமா ஒரு இளநீலமா ஆகாயக்கலர்லே இருந்துச்சு. சீர்திருத்தத் திருமணம். அது என்னன்னு நாங்க எங்கெ கண்டோம்?

மாப்பிள்ளை வீட்டுக் கல்யாணமா இருக்கே அதுதான் பெரிய சீர்திருத்தமுன்னு அண்ணன் சொல்லிக்கிட்டு இருந்தார். மாமா ( இனிமே பல்லர்ன்னு சொல்லக்கூடாது இல்லே?) தமிழ்ப் பற்று நிறைய இருக்கறவராம். தமிழரசுக்கழகமுன்னு ஒன்னு இருக்காமே. அதுலே சேர்ந்துருக்காராம். அந்தக் கழகத்தலைவர் தலைமை வகிச்சுத் தாலி எடுத்துத்தர, இவர் வாங்கிக் கட்டுவாராம். அய்யர், அக்னி எல்லாம் இல்லையாம்.

கலியாணப் பொண்ணுக்குப் புடவை, வழக்கமான காஞ்சீபுரம் பட்டுப்புடவையா எடுக்காம, பனாரஸ் பட்டுன்னு வெலவெலன்னு ஒன்னை வாங்கியிருந்தார். (அதை பிற்காலத்தில் நாந்தான் கட்டிக் கிழிச்சேன்.அதைபத்தி அப்புறம் சொல்றேன்)

இதையெல்லாம் அம்மா கொஞ்சம்கூட எதிர்பார்க்கலைன்னு அவுங்க முகமே சொல்லுச்சாம். அப்புறம் ஒரு நாள் அண்ணன் சொல்லிக்கிட்டு இருந்தார். மாமாவுக்கு அப்பா இல்லை. குழந்தையா இருந்தப்பவே இறந்துட்டாராம். அவரோட அம்மா இளையதாரமா வாழ்க்கைப்பட்டவங்க. மூத்த தாரத்தோட பொண்ணுதான் மாமா படிக்கக் கொள்ளன்னு எல்லா உதவியும் செஞ்சுருக்காங்க. அவருக்கும் அக்கான்னா உயிர். அவரோட அக்காவைச் சொல்றேன். அட! பரவாயில்லையே, இந்த விசயத்துலே நானும் மாமாவும் ஒன்னு!

எப்பவும் விளையாடிக்கிட்டே இருக்கணுமுன்னு பட்டப் படிப்பை முடிச்சவுடன் உடற்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படிச்சவர். இங்கத்து ஹைஸ்கூலில் பி.டி மாஸ்டரா இருக்கார். வீட்டுக்கு ஒரே ஆம்பளைன்றதாலே எதுவா இருந்தாலும் இவர் சொல்படித்தான் நடக்கும்.
அவுங்க அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்க. அந்தம்மா, பக்கத்து ஊர்லே தனியா, சாப்பாட்டுக்கடை நடத்திக்கிட்டு இருந்தாங்க.

மாமா இங்கே வேலை கிடைச்சுவந்த புதுசுலே ஊருக்கு ஒதுக்குப்புறமா, ஆனா பள்ளிக்கூடத்துக்குப் பக்கம் ரொம்ப சல்லிசா இடம் விலைக்கு வருதுன்னு நாலைஞ்சு வாத்தியாருங்க வாங்கிப்போட்டப்ப இவரும் புத்திசாலித்தனமா ஒரு இடம் வாங்கிப்போட்டுருக்கார். எல்லார் மாதிரியும் வீடும் கட்டிக்கிட்டார். அதென்னவோ சொல்லிவச்சாப்புலே அநேகமா எல்லாமே, ஒரு வீட்டைத்தவிர கூரைவீடுகள்தான். அந்த வரிசையிலே, ஏழோ எட்டோ வீடுகள். மொதவீடே இவரோடதுதான். பக்கத்து வீட்டுலே இருந்த கணக்கு வாத்தியார், அவருடைய மாமனார் உதவியோட ஒரு சீமை ஓடு போட்ட கல்வூடு கட்டிக்கிட்டார். கிணறுகூட எடுத்தார். அங்கிருந்துதான் இவரும் நாலைஞ்சு வாளித் தண்ணி எடுத்துக்குவார். மாமா, தனியாளாப் பொங்கித் தின்னுக்கிட்டு வேலைக்குப் போனவர். அதுகூட எப்பவாவதுதானாம். பள்ளிக்கூட நாளிலே , அங்கே எதுத்தாப்லே இருந்த நாயர் கடையில் காலை, பகலுன்னு சாப்பாடு பிரச்சனையில்லாம நடந்துரும். சாயந்திரம் க்ளப்புலே போய் பேட்மிண்டன் வெளையாடிட்டு, வர்ற வழியிலேயே ஓட்டலில் ராச்சாப்பாடு ஆயிரும்.

கல்யாணப் பொண்ணை வாசலில் அழவிட்டுட்டு நான் வேற என்னமோ சொல்லிக்கிட்டு இருக்கேன்........

தொடரும்......:-)

Sunday, November 16, 2008

நடுத் தோட்ட வீதியிலே, நடந்து நான் போகயிலே

வெயில் எப்போதாவதுதான் வருது. வசந்தகாலம், ரெட்டைப்படை எண்ணில் காலநிலை வந்துச்சுன்னு கும்மாளம் போட முடியாம, திடுக் திடுக்குன்னு அண்டார்ட்டிகாலே இருந்து இந்த சதர்லீ வந்து, ' ரொம்பத்தான் ஆடாதே. அடங்கு'ன்னு மிரட்டிட்டுப் போகும். அப்படியெல்லாம் நாம் அடங்கிட்டாலும்............. அது கொஞ்சம் அடங்குன நேரம் பார்த்து,
ட்ரெட்மில்லை ஓரங்கட்டிட்டு, நடைப்பயிற்சிக்குக் கிளம்பினோம்.

நடுத் தோட்ட வீதியிலே

நடந்து நான் போகையிலே

இப்படியே தெம்மாங்கு பாடிக்கிட்டே நம்ம தெருவில் இருக்கும் அழகையெல்லாம் கெமெராவில் வாரிக் கொண்டு வந்துருக்கேன்.

ஆரஞ்சுச் சிகப்பூ

சிம்பிளா ஒரு வெள்ளை

பளபளன்னு ஒரு பச்சை!


எதை விடுவது எதை எடுப்பது........ மாற்றான் தோட்டங்கள் எல்லாமே அட்டகாசமா இருக்கே!

எடுத்தது நூத்துச் சொச்சம். கொடுத்தது........


இதுக்குப்பெயர் ஸ்நோ பால். மொட்டு வரும்போதே பூ மாதிரிதான் இருக்கு. பச்சைப்பூக்கள். கொஞ்சமாக் கிள்ளி எடுத்துவச்சுப் பார்த்தேன். பூத்தவுடன் நிறம் மாறுமோன்னு. வச்சது அப்படிக்கப்படியே பச்சையாவே நின்னுபோச்சு.
ஆனால் மரத்தில் பறிக்காமல் விட்டவைகள் வெள்ளைப்பந்தா இருந்துச்சு சிலநாட்களுக்குப்பிறகு:-)))
Snow balls
சைனீஸ் பெல் (நம்ம உபயம்தான்)

நம்மூர் அவரைப்பூவைப்போல அமைப்பு. ஆனாக் கொத்துக்கொத்தா பூத்துக்குலுங்குது. மணமில்லாத மலர். இதுக்குப் பெயர் தெரியாத காலத்தில் இதை 'ராவணன் செடி'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். காரணப்பெயர்தான். நம்ம பழைய வீட்டு டெக்கில் கொடிபோலப் படர்ந்து இருந்துச்சு. அப்படியே வளர்ந்து சாஃபிட்டைத் துளைச்சு கூரைக்கு உட்புறம் போனதால் கொடியை அடியோடு வெட்டிட்டோம். ஆனாலும் விடாமல் வெட்ட வெட்ட வளர்ந்துக்கிட்டே இருந்துச்சு. ரவுண்டப் என்ற மருந்தைக்கூட அடிச்சுப் பார்த்தாச்சு. ஊஹூம்......


இது ரெண்டும் ராவணன் செடி

இதோட உண்மைப்பெயர் Wisteriaடபுள் கலரில் இருக்குல்லே இந்தக் கண்ணு வச்ச ரோடோஸ்

சாதாரண ரோடோஸ்

ரோடோக்கள்


Rhododendron


பின்புலத்தில் இருப்பது forget me not

நீலப்பூ


சிகப்பூ


அழுத்தமான பிங்க்


ஒரு வீட்டுலே..... அழகா அமைப்பா வச்ச்சுருக்காங்க புல்வெளியில் ஒரு பக்கம்


பூமரம்


நம்வீட்டு வாசலில் இருக்கும் Coleonema

Friday, November 14, 2008

நல்ல முடிவு எடுத்தாச்சு ......இப்போதைக்கு

அங்கே போய் நிக்கும்போது, (கேப்பாங்கன்னு நினைக்கிறேன்) மறக்காம நமக்கு என்ன விருப்பம், எங்கே எப்படின்னு தெளிவா எடுத்துச் சொல்லிறணும். அப்புறம் விதியைப் பழிச்சுக் காரியம் இல்லை. நினைவில் இருக்கணும் என்பதுதான் ரொம்பவே முக்கியம்.


சரி. வாங்க, வண்டி பிடிச்சு அப்படியே ஒரு 149 வருசத்துக்கு முந்திப்போய் இறங்கலாம். ஆச்சா.............. இப்போ எங்கே இருக்கோம். கேண்டர்பரி ஆஃப் நியூஸி. அங்கங்கே கூடாரம் போட்டு அலங்காரம் நடக்குது. இன்னிக்கு ஃபன்னி டே & பண்ணி டே. நடத்துவது Canterbury Pastoral Association . மாடு, பன்றி எல்லாமும் வந்துருந்துச்சுன்னாலும் அன்னிக்கு முக்கியமா மதிப்பீடு செஞ்சது 28 கிடை ஆடுகளுக்கு!

எல்லாரும் இங்கிலாந்துலே இருந்து இங்கே வந்து குடியேறுன குடியானவர்கள். நியூஸிலாந்து கம்பெனி என்ற பெயரில் இங்கிலாந்துலே ஆரம்பிச்ச ( ரியல் எஸ்டேட்?) கம்பெனியில் 150 பவுண்டு காசைக் கட்டிப்பிட்டுக் கப்பலில் ஏறுனவுங்க. இங்கே வந்தபிறகு அந்த காசு கட்டுன ரசீதைக் காமிச்சு லேண்ட் ஆஃபீஸுலே, ஊரு வரப்போகுதுன்னு ஒதுக்கிவைக்கப்பட்ட இடத்துலே முக்கால் ஏக்கர் இடமும், ஊருக்கு வெளியிலே அம்பது ஏக்கர் நிலமும் கிடைச்சது. அதுக்கெல்லாம் பக்காவா வரைபடம் போட்டு ஆளுங்க விருப்பம் கேட்டு, அவுங்கவுங்க தேர்ந்தெடுத்துக்கிட்டதுதான். ரெண்டு நாள்(!) இதே வேலையா பயங்கர பிஸி ஆயிருச்சாமே அந்த லேண்ட் ஆஃபீஸ்.


வெவ்வேற ஊருலே வருசா வருசம் நடந்துக்கிட்டு இருந்த இந்த விழா, அப்படியே நகர்ந்து நம்ம ஊரான கிறைஸ்ட்சர்ச்சுக்கு வந்துச்சு ஒரு மூணுவருசத்துலே. நம்ம ஆளுங்க சும்மா இருப்பாங்களா? அடுத்தவருசமே Canterbury Agricultural and Pastoral Association ன்னு ஒன்னை நிறுவி அதுக்காக ஒரு 14 ஏக்கர் இடத்தை வாங்கிப்போட்டாங்க. பிரமாதமா ஆரம்பிச்ச விழாவை , பயங்கரமழை வந்து ஒன்னுத்துக்கும் ஆகாமக் கெடுத்துவிட்டுருச்சு.

அடுத்துவந்த வருசங்களில் விழா நல்லாத்தான் நடந்துச்சுன்னு எழுதிவச்சுப்போயிருக்காங்க. ஊர்லே ஜனம் பெருகப்பெருகக் கால்நடைகளும் கூடுமுல்லே? இந்த இடம் பத்தாமப்போயிருச்சு. இன்னொரு இடத்தைப் பார்த்து (ஆடிங்டன் என்ற பகுதி) 29 ஏக்கர் பேசி முடிச்சாங்க. நிலத்தை வித்தவர் ரொம்ப தயாளு. இன்னொரு அஞ்சு ஏக்கரைக் கொசுறாவும் கொடுத்தார். 1887 இல் இருந்து நாங்க இங்கே வந்தப்பிறகும்கூட 1996 வரை அங்கேதான் விழா வருசாவருசம் நடந்துக்கிட்டு இருந்துச்சு.

குதிரைகளைப் பழக்கி வேலி தாண்டுறதுக்குப் பயிற்சி கொடுத்து (ஷோ ஜம்பிங்) அதை ஒரு விசேஷ நிகழ்ச்சியா ஆக்குனது இந்த ஆடிங்டன் வந்த பிறகுதான். குறைஞ்சது 4 அடி உயரம் தாண்டனுமாம்.(இப்ப இது இன்னும் கூடிப்போய் நமக்கே பார்க்கப் பரிதாபமா இருக்கு அந்தக் குதிரைகள் மிரண்ட பார்வையுடன் குதிக்கிறதைப் பார்த்தால். மனுசன் அடங்கமாட்டான் இல்லே?)

நியூஸிக்கு முதலில் குடியேற வந்த 4 கப்பல் மக்களை கவுரவப்படுத்தணுமுன்னு அவுங்க காலு குத்துன தினத்தைக் கேண்டர்பரி அனிவர்ஸரி டே ன்னு டிசம்பர்லே ஆரம்பிச்சது எல்லாம் சேர்த்து சும்மா ஒரு நாளு நடந்துக்கிட்டு இருந்த விழா கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து 1918 வது வருசம் முதல் ஷோ வீக் ஆகிப்போச்சு. காலம்போற போக்குலே கொஞ்சம் முன்னே பின்னேயானாலும் பரவயில்லைன்னு இப்போதைக்கு நவம்பர் மூணாவது சனிக்கு மூணு நாள் முன்னாலே விழா:-) எங்க மாநிலம் முழுசுக்கும் அந்தவாரம் வெள்ளிக்கிழமை விடுமுறைநாள். லாங்க் வீக் எண்டுன்னு போய்க்கிட்டு இருக்கு.

இந்தக் கப்பல் கதையை இன்னொருநாள் சொல்றேன். இன்னிக்கு விழாவைப் பார்க்கலாம். புது இடம் 250 ஏக்கர். பிரமாண்டமா வளர்ந்துபோயிருக்கும் திருவிழா. எதோ அம்யூஸ்மெண்ட் பார்க்குக்குப் போறாமாதிரி ஒரு அனுபவம். வகைவகையான (தலை சுத்திக்கிட்டு வரும் ) ராட்டினங்கள், தேன் வகைகள், சீஸ் வகைகள், ஆட்டுமந்தைகளை ஓட்டிக் கிடையில் சேர்க்கும் வேலைக்கார நாய்கள், அளவுக்கு மீறி வளர்ந்து நிக்கும் அபூர்வப் பூசணிக்காய்ன்னு , துப்பாக்கியால் பலூனைச் சுடுவது அது இதுன்னு நம்ம தீவுத்திடல் பொருட்காட்சிதான் போங்க! இங்கேயும் 12 வருசமாயிருச்சு. அடுத்தவருசம் ஒன்னரைச்சதம் கொண்டாட்டம் இன்னும் பெரிய அளவில் நடக்குமாம்.


எங்கூர் பந்தயத் திடல்

இவ்வளோ எல்லாம் நடக்கும்போது குதிரைப் பந்தயம் இல்லாம இருக்குமா? அதுவும் 1870லே இருந்து ச்க்கைப்போடு போட்டுக்கிட்டு இருக்கு. இங்கே நியூஸிக் கோப்பைப் போட்டியில் (இது நடப்பது நம்ம ஊர்லேதான்) கலந்துக்கறதே ஒரு மதிப்பான விஷயமுன்னு ஆயாச்சு. அண்டை நாடுகளில் இருந்தெல்லாம் (??) குதிரைகள் பறந்து வருது. அப்ப உள்நாட்டுக் குதிரைகள் வசதிகளோடு பயணம் செய்யணுமா இல்லையா?
அதுக்காக புதுசா வடிவமைச்ச குதிரை ஃப்ளோட்டுகளை ஒரு இடத்தில் பார்வைக்கு வச்சுருந்தாங்க. அடடா........அப்பத்தான் தீர்மானிச்சேன் அடுத்த பிறவியில் என்னவாப் பிறக்காப் போறேன்னு என்கிட்டே கேட்க்கும்போது கொஞ்சம் கூட யோசிக்காம ' நியூஸியிலே குதிரை' னு சொல்லணும்.
குதிரையாப் பிறக்கும்போது எப்படி நிக்கணுமுன்னு பயிற்சி

நின்னுக்கிட்டுப் போகும்போது ரெண்டு பக்கமும் அடிபடாமல் இருக்க மெத்துமெத்துன்னு இருக்கு. ரெண்டு தனித்தனி அறை. ஆனாலும் ஒருத்தரோடு ஒருத்தர் பேசிக்கிட்டேப் போகலாம். கஷ்டப்படாம ஏற சரிவான, கால் வழுக்காத உலோகத் தகடு. சின்னதா ஒரு குட்டி ஃப்ரிட்ஜ்.
சூடாச் சமைச்சுக்க (கொள்ளு அவிக்க?) ஒரு மைக்ரோ வேவ் அவன். உக்காந்து சாப்புட, எழுத்துவேலை இப்படிச் சமாச்சாரங்களுக்கு மேசைபோல ஒரு அமைப்பு. எல்லாத்துக்கும் சிகரம் வச்சதுபோல 'ஊத்திக்க' தலைகீழாய் தொங்கும் குப்பிகளோடு( குட்டிகளோடுன்னு அவசரத்துலே படிச்சுறாதீங்க) பார்! ரம் இருக்கான்னு பார்க்கணும்.

ஆமாம்.....குதிரைக்கு இதெல்லாம் வேணுமா? வரப்போற ஜென்மத்துலே குடிச்சுவேற பழகிக்கனும்.இந்தக் கப் டே கொண்டாட்டத்துக்கு, மகளிர் தொப்பிகள் விற்பனைதான் தூக்கலா இருக்கும். அலங்காரத் தொப்பிக்குன்னே விசேஷப் பரிசு உண்டு, ஒரே ஒரு கண்டிஷன் இருக்கும்போல, முகமே தெரியக்கூடாதுன்னு:-)
கச்சிதமான ஃப்ளோட்


இந்த வருசம் சிறப்பு விருந்தினர் கையாலே பரிசு வாங்க தொப்பியும் குதிரையும் ஆவலாக் காத்துக்கிட்டு இருக்கு. லண்டனில் இருந்து இளவரசி (Princess Royal) வந்துருக்காங்க இதுக்குன்னே.

நானும் போய் தொப்பி ஏதாவது தேறுதான்னு பார்க்கணும். இன்னிக்கு நல்ல வெய்யில் இருக்கு. மரியாதையாத் தோட்டவேலை கொஞ்சம் செஞ்சுக்கனும்.