எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?
எனக்காக ஒரு யானை அங்கே காத்திருக்குதுன்னு தெரியாமலேயே ஒரு இடத்துக்குப் போய்க்கிட்டு இருக்கோம்.பசிஃபிக் ஃபேர் (Pacific Fair) இங்கே நிறைய துணிக்கடைகளும், ஒரு சூப்பர் மார்கெட்டும்தான் முந்தி இருந்துச்சு. நல்ல நல்ல ப்ராண்டட் லேபிள் துணிகள் இங்கே கொஞ்சம் மலிவாக் கிடைக்கும். 'ஃபேக்டரி அவுட்லெட்'ன்னு மத்த இடங்களில் வித்துத் தீராத(??) துணிகள் கொட்டிக்கிடக்கும். போற வழியிலே 'காஸ்கேட் வாட்டர் கார்டன்'னு
'பஸிஃபிக் ஃபேர்' இருந்த மைதானம் முழுசும் இப்பக் கட்டிடங்களால் நிறைஞ்சு வழியுது. கொஞ்சநாள் நாம வராம இருந்துட்டா,அதுக்காக இப்படியா? மைதானம் இல்லாததாலே பார்க்கிங்கூட மாடியிலே(-: கீழே இறங்குனா எதோ பழையகாலக் கிராமத்துக்குள்ளே புகுந்தமாதிரி இருக்கு செட்டிங். இங்கே காலநிலை நல்லா இருக்கறதாலே எல்லாமே ஓப்பன் ப்ளான் கடைகள்தான்.தெருவிளக்கு, தெருப்பெயர் சொல்லும் வழிகாட்டிப் பலகை, பார்க் பெஞ்சுன்னு போட்டு வச்சுருக்காங்க. அங்கே நம்ம யானை நின்னுக்கிட்டு இருக்கு. எனெக்கென்ன பயமா? ஓடிப்போய் அதைத் தடவிக்கொடுத்தேன். தாமரைக்குளம் அமைச்சு அதுலே நீராழிமண்டபம் மாதிரி ஓய்வெடுக்கும் இடங்கள். குளத்துக்குத் தண்ணீர் பாயும் குட்டி நீர்வீழ்ச்சி. திமிங்கிலம், முதலை, டால்ஃபின், இன்னும் கார்ட்டூன் மனுஷரெல்லாம் அங்கங்கே. குழந்தைகளைக் கொண்டுவரும் மக்கள்ஸ்க்கு நிம்மதியான இடம். பட்டிக்காட்டுக்குப் பக்கத்துலே பட்டணத்து செட் போட்ட மாதிரி நவநாகரீகமான மால் கட்டிடம் ஒட்டிக்கிட்டே இருக்கு. நாம் தேடிவந்த துணிக்கடைகள் ஒண்ணையும் காணோம். கான்செப்ட்டே மாறிப்போச்சு!
மாலுக்குள்ளே நுழைஞ்சால்........... நியூஜெர்ஸி மென்லோ மாலுக்குள்ளெ( அங்கெயெல்லாம் நாம வந்துருக்கொம்லெ!) வந்துட்டமோன்னு ஒரு நினைப்பு! அசப்புலே அப்படியே இருக்கு. அங்கிருந்து கிளம்பி ப்ரிஸ்பேன் போற ரோட்டைப் புடிச்சோம். 77 கிலோ மீட்டர்தான். வழியிலேயே ஒரு மாலில் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு மூணரைக்கு மணிக்கு கங்காரு பாயிண்ட் வந்துசேர்ந்தோம். ராத்தூக்கம் இல்லாத களைப்பு. கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு, பக்கத்துக் கடையில் பால், காஃபி,டீ ன்னு சில அயிட்டங்களை வாங்கிக்கிட்டோம்.
இந்தக் காபி டீ விஷயத்துலே, அங்கங்கே ஹொட்டல்களில் இப்பெல்லாம் அறையிலேயே இதுக்கு ஏற்பாடு இருக்குன்றதுஒரு நல்லதுன்னாலும், நம்ம 'ருசிகண்ட பாழாப்போன நாக்கு'க்குப் பச்சைப்பால் ஊத்திக் குடிக்கும் காஃபி இன்னும் பழகமாட்டேங்குது. டீ பரவாயில்லை, சமாளிச்சுரலாம். அதிலும் பால்னு ஒரு ரெண்டு ஸ்பூன் அளவு வரும்( ஒரு காஃபிக்கு இதுபோதுமாம்.யார் இந்தக் கணக்கைப் போட்டாங்களோ?)குட்டியான குப்பி மூணு, நாலைச் சேர்த்தால்தான் ஒரளவாவது நிறம்வரும். அதுக்குள்ளெ அந்தக் காபி, சூடாறி ஜில்லிட்டுப்போயிருது. ( எங்க பாட்டி இந்த சூட்டை, 'பூனை மூ* * *ம் னுசொல்வாங்க!) பரவாயில்லைன்னுட்டுக் கொஞ்சம் பாலை சூப்பர் மார்கெட்லே இருந்து வாங்கிக்கறதுதான். இங்கேயும் மைக்ரோவேவ் அவன் இருக்கு. நல்ல சூடாப் பாலைக் காய்ச்சி ஒரு காஃபி குடிக்கலாமுன்னா........... மைக்ரோ அவனுக்குண்டான பாத்திரம் இல்லை. அடுப்புலே வச்சுக் காய்ச்சணுமுன்னா காய்ச்சுக்கலாம். அதுக்கப்புறம் அந்தப் பாத்திரத்தைத் தேய்ச்சுக் கழுவணும். வாழைப் பழத்தை உரிச்சு மட்டும்தான் தருவாங்களாம். நாமே தின்னணுமாமே!
நேத்தும் சர்ஃபர்ஸ் பாரடைஸ் அபார்ட்மெண்ட்லே மைக்ரோ அடுப்புக்கேத்த பாத்திரம் இல்லை(-: இவ்வளவு செய்யறவங்க ஒரு ரெண்டு மூணு டாலர்லே ஒண்ணு வாங்கி வைக்கக்கூடாதா? அவுங்ககிட்டே சொல்லணும். நமக்கும் இது ஒரு பாயிண்டாப் போச்சு. ட்ரிப்புக்கு எடுத்துப்போற சாமான்கள் லிஸ்ட்லே இனி சேர்க்க வேண்டியது , ஒரு கத்தி,காதுக்கு அடைப்பான், ஒரு மைக்ரோ வேவ் ப்ளாஸ்டிக் பாத்திரம். கண்ணாடிப் பாத்திரம் வேணாம். அதுவேற ஒடைஞ்சு கிடைஞ்சு வச்சு............
நம்ம அறை பால்கனியில் இருந்து பார்த்தால் நேரெதிரே ஒரு உயரமான கட்டிடத்தில் ஒரு பையன் தங்க நிறத்தில் ஜொலிச்சுக்கிட்டுக்,கையில் ஒரு ஊதுகுழலை வச்சு ஊதும் சிலை. அது என்னன்னு போய்ப் பார்க்காட்டா எனக்குத் தலை வெடிச்சுரும்.
சதர்ன்க்ராஸ் மோட்டல் நல்ல வசதியா இருக்கு. அலமாரியிலே ஒரு எடைபார்க்கும் கருவியும் வச்சுருக்காங்க. ஊர் திரும்பும்போது 'இன்னும் எவ்வளவு எடை கூடியிருக்குன்னு பார்த்துக்கோ'ன்னு எச்சரிக்கை விடறாங்க போல. இது இருக்கறது மெயின் தெருவும்,Walmsley street ம் சேரும் இடம். இங்கிருந்து ரெண்டு நிமிஷம் இதே வாம்ஸ்லி தெருவில் நடந்தால் ரிவர் டெர்ரஸ் வருது. ப்ரிஸ்பேன் நதியை ஒட்டியே போகும் ரோடு இது. எதிரே மினுங்கும் நதி. அக்கரையில் நகரின் ஸ்கைலைன். பார்க்கவே அட்டகாசம். இந்த சிடி & ரிவர்வியூவுக்காகவே இங்கெல்லாம் இடத்தோட விலை ஆகாசத்துக்கே தாவிருச்சு. சாதாரண சிங்கிள் ரூம் அபார்ட்மெண்ட் வெறும் 1.3 மில்லியன் தானாம்.
இருட்ட ஆரம்பிச்சது. அப்படியே ஆத்தங்கரைவரை போனோம். கரையெல்லாம் ஒண்ணும் இல்லை. பார்க் டெர்ரஸ் முழுசும் இடுப்புயரச் சுவர்கட்டி வச்சுருக்கு. அதுக்கு அந்தப் பக்கம் அதல பாதாளத்தில் இருக்கு நதி. சுவருக்கும், தெருவுக்கும் இடையே இருக்கும் நடைபாதையெல்லாம் ரொம்ப அழகா விதவிதமான மரங்கள், அதுக்கிடையில் உட்கார்ந்து ஓய்வெடுக்க இருக்கைகள், பார்பக்யூ செஞ்சு சாப்பிட்டுக்க, ட்ரேயோடு கூடிய கேஸ் அடுப்புகள்னு எதோ பிக்னிக் ஏரியாவா ஆக்கி வச்சுருக்கு நகரசபை.
சுவத்துக்கு அந்தப் பக்கம் ஒரு ரெண்டடி இடம் இருக்கும். அங்கெல்லாம் இயற்கையாவே முளைச்ச(??) மரங்கள், புதர்கள், செடிகொடிகள். இதுகளுக்கிடையில் அங்கங்கே ரெண்டடி உயரக் காங்க்ரீட் தூண்கள் இருக்கு. ஒவ்வொரு தூணுக்குப் பக்கத்திலும் ஒண்ணுரெண்டு ஆட்கள், ஹெல்மெட்டும் தலையுமா! வடக்கயிறு போட்டு அந்தத் தூணில் இறுக்கி முடிச்சுப் போட்டுக்கிட்டு இருக்காங்க.'ராக் க்ளைம்பிங்' கீழே பாதாளம்வரை இறங்கிட்டு, மறுபடி ஏறி வருவாங்களாம். பொழுதுபோக்குகள் இப்படி! இதுக்கும் நகரசபை ஏற்பாடு பண்ணி வச்சிருக்கு. சரி, இப்படி ஏறி இறங்கறதை பகலில் வெளிச்சத்தில் வச்சுக்கக்கூடாதோ? கேட்டால், இப்பத்தான் வேலையில் இருந்து வந்தாங்களாம். இப்ப உடற்பயிற்சி நேரமாம். இந்த ஜனங்களுக்குச் சோம்பல் இல்லைப்பா!!
தொடரும்.............