Monday, June 11, 2007

ஆகாயத்தில் தொட்டில் கட்டி....................





இன்னிக்குப் பறக்க வேண்டியதாப் போச்சு:-) அதுவும் ரொம்ப ஸ்பெஷல்லா...........


காலையில் கோபால் ச்சீனாவுக்குக் கிளம்பிப் போயிட்டார்.காலையில் மைனஸ் 5 டிகிரி வேற. நமக்குத்தான் சாக்குக் கிடைச்சிருச்சேன்னு நிதானமா வேலைகளைச் செய்யலாமுன்னு தமிழ்மணத்துலே புகுந்து புறப்பட்டுக்கிட்டு, நியூஸிப் பதிவு எழுதி அதைப் பதிஞ்சுன்னு ஆமை வேகம்.




சூரியன் வர ஆரம்பிச்சதே 12 மணிக்கு. அதை யாராவது வேஸ்ட் செய்யலாமா? கடமைகளை முடிச்சுக்கிட்டு 'அக்கடா'ன்னு வெயிலு காய்ஞ்சுக்கிட்டு புத்தகம் படிக்கலாமுன்னு உக்காந்தேங்க. ட்ர்ரிங் ட்ர்ரிங்.........போன் அடிக்குது.




மகள். 'பலூன் ரைடு போகலாமா'ன்னு கேக்கறாள். ஆஹா.......... எவ்வளவு நாள் கனவு? போனாப்போச்சு.
என்னைக்குன்னு கேட்டால், இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பணும்னு சொல்றாள். கையும் ஓடலை, காலும் ஓடலை. என்னென்ன எடுத்துக்கணுமுன்னு கேட்டால்,நல்ல ஜாக்கெட், கைக்கு க்ளவுஸ், ஸ்கார்ஃப் போதுமாம். அரக்கப் பரக்க எல்லாத்தையும் 'தேடி' எடுத்தேன். 'டாண்'னு மகளும் வந்து கூட்டிட்டுப் போனாள்.




ரேஸ் கோர்ஸ் பக்கம் காரை நிறுத்திட்டுக் காத்திருந்தோம். அங்கே வந்து சந்திப்பாராம் பலூன்காரர்.
கொஞ்ச நேரத்தில் 'பஜேரோ'வில் வந்து சேர்ந்தாங்க பாலும் டீனும். ( Paul & Dean)டீன் தான் பைலட். பால் உதவியாளர். பாலும் டீனும் தகப்பனும் மகனும் வேற.
மகள் வேலை செய்யுமிடத்தில் பால் வேலை செய்யறார். அவர் மகனுக்கு' ஹாட் ஏர் பலூன் பைலட்'வேலைக்குப் பயிற்சி நடக்குது. அடுத்த மாசம் 'கமர்சியல் லைஸன்ஸ்' வாங்கறதுக்கான பயிற்சி.மொத்தம் இத்தனை மணி நேரம் பறந்துருக்கணுமுன்னு கணக்கெல்லாம் இருக்காம்.



காரை அங்கேயே விட்டுட்டு, அவுங்களோடு கிளம்பிப் போனோம். வழக்கத்துக்கு மாறா சில நாட்கள்,வருசத்துக்கு நாலு இல்லை அஞ்சு முறை சிட்டியில் இருந்து பறக்க அனுமதி தருவாங்களாம். இன்னிக்கு அது போல ஒரு rare chance. பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்துக்கு வந்து சேர்ந்தோம். வண்டியின் பின்னால் ஒரு விநோதமான ட்ரெய்லர் இருந்துச்சு.




ஒரு அச்சடிச்ச தாளில் எங்க பெயர், எடை எல்லாம் குறிப்பிடச் சொன்னாங்க. எடையை யாரிடமும் சொல்வதில்லைன்னு வாக்களித்தார் பால்:-)



முதலில் ஒரு சாதாரண பலூனைக் காத்து நிரப்பி மேலே பறக்க விட்டதும் அது பறந்துபோனதை வச்சு,காத்து வீசும் திசையைக் கணக்குப் போட்டார் டீன். அடுத்து, ட்ரியிலரைத் திறந்தால்......... ஒரு பெரிய பிரம்புக் கூடை.அது உள்ளே நாலு பக்கமும் நாலு கேஸ் ஸிலிண்டர்கள். நடுவிலே கொஞ்சம் போல இடம்.




அதை உள்ளே காமிச்சு பக்கவாட்டில் இருந்த கயிற்றுக் கைப்பிடிகளை எப்படிப் பிடிச்சுக்கணும், கீழே இறங்கும்போது எந்த நிலையில் நாங்க உக்காரணுமுன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அங்கே எங்கே இடம் எல்லாம் ? ஒருவர் மீது ஒருவர் சாய்ஞ்சு.................தான்:-) உள்ளே ஏறக் கூடையில் ஒரு ஜன்னல் போல சதுரமான இடவெளி இருக்கு. அதுலே காலை வச்சு உள்ளே இறங்கணுமாம். பலூன் தரையில் இறங்கினபிறகு, என்ன நடந்தாலும் (???) நான் சொல்லும்வரையில்வெளியே இறங்க முயற்சிக்கக் கூடாதுன்னு எச்சரிக்கை வேற.





டீன் 'மளமள'ன்னு பிரம்புக்கூடைக்கு நாலு பக்கமும் கம்பிகளைப் பொருத்தி, அதுக்கு ஒரு உறை போட்டுக் கட்டி,அது சேரும் இடத்தில் ஒரு ப்ரேம் அதுக்குள்ளெ கேஸ் எரியும் கருவி( அடுப்பு?) ன்னு அடுக்கினார். பால் அதுக்குள்ளே ஒரு பெரிய ராட்சஸ அளவுலே இருந்த பையைப் பிரிச்சுப் பலூன் துணியை எடுத்துப் புல்வெளியில் இழுத்துப் போட்டார்.சுமார் இருபத்தி அஞ்சு , முப்பது மீட்டர் நீளம் இருக்கும். (அஞ்சாறு புடவை நீளம் இருந்துச்சுங்களே)





பலூன் துணியில் இருந்த பலவகையான கயிறுகளையும் அதன் முனையில் இருக்கும் கொக்கிகளையும் கூடையோடுசேர்த்து அதுக்குண்டான வளையத்தில் மாட்டினார் டீன். இப்ப எங்களைக் கூப்பிட்டு, 'பலூன் துணியின் பக்கவாட்டுக் கைப்பிடியை ஆளுக்கொரு பக்கம் புடிச்சுக்கணும். கீழே உள்ள கயித்தின் மீதுக் காலை அழுத்திவச்சுக்கணுமுன்னு சொல்லிட்டு, ஒருவேளை உங்களை அப்படியே தூக்குச்சுன்னா விட்டுருங்க. ஆனா கயித்து இடைவெளியில் காலை வச்சுறாதீங்க'ன்னார். எனக்கோ 'திக் திக்'!




பெரிய ஃபேன் ஒண்ணு வச்சு இப்போ பலூனுக்குள்ளெ வெறுங்காத்தை நிரப்பறது ஆரம்பமாச்சு. கெட்டியாப் புடிச்சுக்கிட்டு நிக்கறோம். அப்படியே இழுக்குது எங்களை. பல்லை ஒரே கடி, உனக்காச்சு எனக்காச்சுன்னு. பலூனின் தலைப்பக்கம் இணைச்சிருக்கும் கயிறைக் கெட்டியாகப் புடிச்சுக்கிட்டு பாலன்ஸ் பண்ணறார் பால். பலூன் அப்படியே உயரத் தூக்குது.இப்போ அடுப்பைப்பத்த வச்சதும், ட்ராகன் வாயிலே வர்றது மாதிரி தீ பாயுது பலூனுக்குள்ளே. அப்படியே எங்களைத் தூக்கப்பாக்குது. சமாளிக்க முடியலை, விட்டுட்டோம். துணிப்பக்கம் தீ பாயறதுபோல இருந்ததாலே தீயை அணைச்சுட்டு,இன்னொருதடவை குளிர் காத்து ரொப்பறதுலே ஆரம்பிச்சு, இந்த முறை அடுப்பை வேற ஆங்கிளில் திருப்பிவிட்டார் டீன்.




பலூன் மெதுவா எழும்பி உயரமா நிக்குது. இப்ப அடுத்த சாலஞ்சு, உள்ளே ஏறிப்போறது. மகள் 'டக்'ன்னு காலை வச்சு ஏறிஉள்ளே இறங்கிட்டாள். நானு? கட்டத்துக்குள்ளே ஒரு கால் காத்துவெளியில் ஒரு கால். பால் வந்து உதவுனார். உள்ளே இப்போ நாங்க மூணு பேர். பக்கத்தில் காரோடு கட்டி இருக்கும் கயிறை அறுத்துக்கிட்டு போறதுக்குத் துடிக்குது பலூன்.இன்னொரு முறை கடைசி நிமிஷ பாதுகாப்புக் காரியங்களையெல்லாம் சரி பார்த்துட்டு கட்டி இருந்த கயிறைத் தளர்த்துனதும் அப்படியே மெதுவா உயருது பலூன். பத்தே விநாடிகள்தான். அதுவரை நின்னுக்கிட்டுருந்த புல்வெளி எங்கியோ கீஈஈஈஈஈஈஈ........ழே!




காத்துத் தென்கிழக்குப் பக்கமா வீசுதாம். மேலே போகப்போக வீடுகள் அழகா பொம்மை வீடுகளா மாறிப்போச்சு. கீழே தெருக்கள்அதில் ஓடும் கார்கள் எல்லாம் வேடிக்கையா இருக்கு. நம்ம அதிர்ஷ்டம் பாருங்க, நம்ம வீடு இருந்த பக்கம் பலூன் நகருது. தேடும் கண்களுக்கு வீடு அகப்பட்டதும் ஒரே குஷிதான். அட........ இது அந்த ரவுண்டபெளட்டா? ச்சிக்சிக்ன்னு கார்கள் அதுக்குள்ளே நுழைஞ்சு வலம் வருதே. தெரிஞ்ச கட்டடங்களைப் பார்க்கும் பிரமிப்பு அடங்கவே நேரம் ஆச்சு.புல் தரையெல்லாம் க்ளாஸி போட்டோ ப்ரிண்ட் போல் அட்டகாசம்.




1200 அடி உயரத்தில் இருக்கோமாம். 22 'நாட்' காத்துன்னு டீன் ஒயர்லெஸ் ரிஸிவரில் சொல்லிக்கிட்டு இருக்கார்.இன்னிக்கு அருமையான நீலவானமுள்ள வெய்யில். அதுவரை பாக்கியம்தான். ஒரு ஆட்டமும் இல்லாம மிதந்துபோய்க்கிட்டு இருக்கு நம்ம தொட்டில். அப்பப்ப பலூனுக்கு சூட்டை அனுப்பும் வால்வு திறந்து தீ பாயும் சத்தம்.தலைக்கு மேலே தீ.




ஊரைவிட்டு வெளியில் வந்தாச்சு. ஏர்ஃபோர்ஸ் வச்சுருந்த விக்ரம் (Wigram) ஏர்ப்போர்ட். இன்னும் அந்தப்பக்கம் இருக்கும் புதுக் குடியிருப்புங்க. ஹைய்யோ.......இவ்வளவு அழகா இதெல்லாம்? திறந்த வாயை மூடாம லயிச்சுட்டேன்.




நம்ம கேண்டர்பரி ப்ளெயின்ஸ். சதுரம் சதுரமா நிலங்கள். அதுலே இருக்கும் ஆடுகள், பசுக்கள், மான்கள், குதிரைகள் எல்லாம் திடீர்னு ஓடுதுங்க. என்னன்னா...பலூன் சத்தம் கேட்டு மிரளுதாம். முதல்லே மானா, குதிரையான்னு கவனமாப் பார்க்க வேண்டி இருக்கு.எல்லாம் ஒண்ணுபோல ஒரே திசையில் ஓடுறது பார்க்க அழகுதான். ஆனா ...........பாவம் இல்லையா அதுகள்?




பண்ணை வீடுகள் ஒவ்வொண்ணும் அமர்க்களமா இருக்கு. ஒரு வீட்டில் நம்மளை 'தலையை அண்ணாந்துக் கண்ணை உயர்த்திப் பார்த்தாங்க.' கையசைப்பு வேற. நாங்க ச்சும்மா இருப்பமா? கையை ஆட்டுனதில் இப்பக் கைவலிக்குது:-)



சில நிலங்களில் இருந்து ஒரு ச்சின்ன நாய் அளவிலே இருக்கும் முயல்கள் தலை தெரிக்க ஓடுதுங்க. இது hare வகையாம். அடடா என்ன துள்ளல்! என்ன வேகம்!!





இதுக்கிடையில் பால் வண்டியைக் கிளப்பிக்கிட்டு பலூன் போகும் திசையைத் தொடர்ந்து வர்றார். சில சமயம் அவர் வண்டி கண்ணுக்குத் தெரியுது. டீன் நாங்கள் போகும் திசையில் உள்ள ரோடுகளை அவருக்குச் சொல்லிக்கிட்டே வழிகாட்டுறார். திடீர்னு பார்த்தா.............. கையில் இருக்கும் வரை படத்தின் எல்லையைத் தாண்டி வெளியே போய்க்கிட்டு இருக்கோம். உயரே இருந்து பார்க்கும்போது மரக்கூட்டங்கள் எல்லாம் விசித்திரமாத் தெரியுது. நாம பொதுவா ப்ளேனில் இருந்து பார்க்கறதுக்கும் இதுக்கும் இப்படி ஒரு வித்தியாசமான்னு மனசு அடிச்சுக்குது.





தூரத்தில் லேக் எல்லஸ்மியர். அப்படின்னா இன்னும் கொஞ்ச தூரத்துலே கடல் வந்துருது. பலூனின் வேகத்தைப் பார்த்தா நாம் வேற ஒரு நாட்டுக்குப் போய் இறங்கப்போறோம் பாஸ்போர்ட் இல்லாம!




நம்மை அப்பப்பக் 'கண்டு பிடிச்சுக் கோட்டை விட்டு'க்கிட்டு இருக்கும் பாலுக்கு, 'எங்களுக்குச் சிரமமா இருக்கு.இறங்குறதுக்குப் பொருத்தமான இடம் கிடைக்கலை'ன்னு டீன் சொன்னதும் 'குபுக்'னு ஒரு ச்சின்ன பயம் எட்டிப்பார்க்குது. நிஜமான்னு தலையைத் திருப்பிக் கேக்கவும் முடியாத நிலை. படம் எடுத்துத் தள்ளிக்கிட்டே இருக்கா மகள்.அப்ப நானு? ரெண்டு கையிலும் கைப்பிடிக்குள்ள கயிறைப் பிடிச்சவதான். குரங்குப் பிடியோ இல்லை உடும்புப் பிடியோ எதோ ஒண்ணு.




ஒன்னரை மணி நேரமா வானவெளியில் மிதந்துக்கிட்டு இருக்கோம். லேண்டிங் பொஸீஷனை ஒரு முறை ப்ராக்டீஸ் செய்யச் சொன்னதும் கச்சிதமாச் செஞ்சு காமிச்சு 'வெரி குட்' வாங்குனோம். அங்கே இங்கேன்னு இடம் பார்த்து ஒருவழியா பொருத்தமான நிலத்துலே ( யார் வீட்டு நிலமோ?) இறங்கப் போறோமாம். சரசரன்னு உயரம் கம்மியாகிக்கிட்டே வருது.'வந்தாச்சு, வந்தாச்சு இன்னும் சில விநாடிகள்தான்'னு டீன் எங்களுக்குச் சொல்லிக்கிட்டே வர்றார். முழங்காலை மடிச்சு எதோ நாற்காலியில் உக்காந்துருக்காப்புலே ஒருத்தருக்குப் பின்னே ஒருத்தரா நானும்,பின்னால் மகளும். இதோ இதோன்னு தரையை உரசிக்கிட்டு ஒரு பத்து மீட்டர் உராய்ஞ்சுக்கிட்டே போய் கூடை அப்படியே சரிஞ்சு படுத்துச்சு. எதோ ராக்கெட்லே போனமாதிரி நாங்க படுத்த நிலையில் ஆகாயத்தைப் பார்த்து!




வெளியே குதிக்கறது எப்படின்னு ஆரம்பத்தில் இருந்த என் கவலை இப்ப அடியோடு மாறி, எப்படித் தவழ்ந்து வெளியேறப் போறோமுன்னு ஆச்சு. குப்புற இருந்தா தவழ்ந்துறலாம். இப்ப மல்லாந்து கிடக்கறேனே, ஆமையைத் திருப்பிப் போட்டது போல!




கூடையின் வெளிப்பக்கம் பிடிச்சுத் தொங்கின டீன் சுத்திக்கிட்டு வந்து என்னை வெளியே இழுத்துப் போடவேண்டியதாப் போச்சு:-)பாவம், மகள். டக்னு புரண்டு வெளியே வந்துட்டாள். ஹேப்பி லேண்டிங் ஆயிருச்சுன்னு எல்லாருக்கும் மகிழ்ச்சி.



அதுக்குள்ளே பால், பண்ணையின் சொந்தக்காரரைக் கூட்டிக்கிட்டு வந்துட்டார். பண்ணையின் அடுத்த பக்கமிருந்து மூணு ச்சின்னப் பசங்களும் அவுங்க அம்மாவும் ஓடி வந்தாங்க. எல்லார் முகத்திலும் ஏகப்பட்ட சந்தோஷம், ஆச்சரியம்.




'Thanks for letting us to land'னு நான் சொன்னதும் ஒரே சிரிப்பு. எங்களுக்குத்தான் அதிர்ஷ்டம். இங்கே வந்து இறங்குனீங்க. பிள்ளைகளுக்கு ஒரே எக்ஸைட்மெண்ட். நாளைக்குப் பள்ளிக்கூடத்துலே போய் சொல்லி பெருமைப்பட்டுக்குவாங்கன்னு அந்தம்மா சொன்னாங்க.




'சினிமா வசனம்' மாதிரி, 'இப்ப இது எந்த இடம்?' னு கேட்டேன். 'லேக் சைடு' என்ற இடமாம். 'லீஸ்டன்' என்ற பெரிய(?)ஊருக்குப் பக்கம். கிறைஸ்ட்சர்ச் எவ்வளவு தூரமுன்னு கேட்டேன். ஒரு மணி நேரப் பயணமாம். லீஸ்டனே ரொம்பச் சின்னது. மொத்தமக்கள் தொகை 1203. அப்ப இங்கே எவ்வளோ இருப்பாங்க? 400 தேறுனாலே அதிகம்.




அந்த ஏரியாவில் 97.7 சதவீதம் வெள்ளைக்காரர்கள் இருக்கும் பண்ணை வீடுகள்தான். புதுசா ரெண்டு வேற்றின மக்களைப் பார்த்த ஆச்சரியம் பிள்ளைங்க முகத்தில். '2 ப்ரேவ் இண்டியன் விமன்'னு நாளைக்கு எங்களைப்பத்திச்சொல்லுங்கோன்னு சொன்னதும் பிள்ளைகளுக்குச் சிரிப்புத்தாங்கலை. இதுக்குள்ளே மூணு பலூன்களில் 'ஹீலியம்' நிரப்பிப் பசங்க கையிலே கொடூத்தார் பால். பிள்ளைங்க பேர், என்ன படிக்கிறாங்கன்னு கொஞ்சம் குசலம் விசாரிச்சேன்.




நல்ல வேளை, அவுங்க பண்ணையில் இந்த இடத்தில் இன்னும் விதைப்பு ஆரம்பிக்கலை. போனவாரம்தான் மறுபக்கத்தில் தொடங்கி விதைச்சுக்கிட்டு வராங்களாம். பச்சைப்பட்டாணி, முட்டைக்கோஸ், காலி ஃப்ளவர் எல்லாம் விதைப்பாங்களாம்.விவசாயம் அவ்வளவா லாபமா இல்லை இப்பெல்லாம்னு சொன்னாங்க. ஆனா இங்கே இருக்கும் பிரபல நிறுவனமான 'வாட்டீஸ் கம்பெனி'யுடன் ஒப்பந்தம் இருக்கறதாலே அவுங்களே எல்லாத்தையும் வாங்கிக்கிறாங்களாம். வாட்டீஸ் தான் உறையவச்ச காய்கறிகள், டின்னில் வரும் காய்கறிகள்னு பலவகையில் பதப்படுத்தின வகைகளை சூப்பர் மார்கெட் செயினுக்குப் பண்ணறவங்க.




பலூன் வேலை செய்யும் விதம், தீ பாயும் விதம் எல்லாம் பிள்ளைகளுக்குக் காமிச்சு விளக்குனார் டீன். எவ்வளவு செலவாகும் இந்தப் பயணத்துக்கு அந்தம்மா கேட்டாங்க. ஒரு ஆளுக்கு $280 டாலர்கள்னு பால் சொன்னார்.
மொத்தம் 400 கிலோ எடை அந்தக் கூடைத் தொட்டிலும், மற்ற உபகரணங்களும், பலூனும். இது பயிற்சி பலூன் என்றதாலே பெரிய சிலிண்டர் வச்சுருக்கு. சுற்றுலாப் பயணிகள் வகைன்னா ச்சின்ன சிலிண்டர் இருப்பதால்,கொஞ்சம் நல்லா அசையக் கொள்ள இடம் தாராளமா(???) இருக்கு(மா)ம். சில பெரிய பலூன்களில் 22 பேர்வரைப் போகமுடியுமாம்.



பழையபடி பலூன் துணிகளைச் சுருட்டி, எல்லாத்தையும் ஒழுங்கா பேக் பண்ணி ட்ரெயிலரில் அடைச்சுக்கிட்டு,மறுபடி நன்றி சொல்லிட்டு அவுங்க இமெயில் ஐடியும் வாங்கிக்கிட்டு வந்தேன். படங்களை அனுப்பத்தான். அனுப்பியாச்சு.




ஒருமணி நேரம் பயணம் செஞ்சுக் காரை விட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தோம். பலூனில் பறந்ததுக்கு அதுவும் 'க்ரூ' மெம்பராப் பறந்ததுக்கு ஒரு சான்றிதழ் கிடைச்சது. வர்ற வழியெல்லாம் இந்த ஆட்டை மேலே இருந்து பார்த்த ஞாபகம் இருக்கு.இந்த மாடு ரொம்ப ஃபெமிலியரா இருக்குன்னு ஒரே கலாட்டா. அப்பாவும் மகனுமா இது ஒரு டீம் வொர்க். மேலே பறந்து போகறதைவிட, எந்த இடத்துக்குப் பலூன் போகுதுன்னு தரையில் இருந்து பார்த்துக்கிட்டே அங்கே வந்து சேர்றதுதான் ரொம்பக் கஷ்டம். இல்லையா?




இவ்வளவும் சொன்னவ ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லலை பாருங்க. இது எங்களுக்கு 'ஓசிப் பயணம்' :-) கைக்காசு செலவில்லாம, ஒரு இனிமையான, புதுமையான அனுபவம் கிடைச்சதுக்கு முதலில் மகளுக்கும், அப்புறம் பால் & டீனுக்கும் நன்றி சொல்லிக்கறேன். எனக்குன்னு வாய்க்குது பாருங்களேன்:-))))






55 comments:

said...

டீச்சர்,

படங்கள் அனைத்தும் அட்டகாசம்... :)

said...

அப்பா, என்ன ஒரு பயணம்.
பயணத்தைவிட நீங்க ஏறி இறங்கினதுதான் ரொம்ப சூப்பர்.

அழகாப் படங்கள் வேற.
இதுக்கு சர்டிஃபிகேட்.ஹ்ம்ம்.

உண்மையாவே லக்கி சான்ஸ்.தேடிவந்துத் தூக்கிட்டுப் போன மகள் வாழ்க.
பால்,டீன் வாழ்க. கூடவே கூட்டிக்கிட்டுப்போன மாதிரி பதிவு எழுதின துளசி வாழ்க.
க்ரண்ட்கான்யான் பக்கம் பறக்கலாமானு டிக்கெட் விலை கேட்கப்போனா ஆளுக்கு 100 டாலர்னு சொன்னாங்க. சீச்சி,இந்தப் பலூன் நல்லாவே இல்லைனு விட்டுட்டேன்.
இப்போ அந்த குறையில்லாம நீங்க எழுதிட்டீங்க.

said...

வீர தீர பராக்ரமம்........
சுவையாகப் படிக்கக் கொடுத்தீர்கள்...
ஆஆமா!பயணம் முழுதும் கண்ணை
இறுக மூடிக்கொண்டீர்களாமே-மகள்
சொன்னாள்!

said...

எனக்கும் இதில் போகனும்,பங்கி ஜம்ப் பண்ணனும் என்று ரொம்ப நாள் ஆசை.எப்ப நிறைவேறுகிறது என்று பார்ப்போம்.
அதுவரை flight gear ஓட்டி பாத்துக்கிறேன்.

said...

வாழ்த்துக்கள் !! " நெஞ்சில் துணிவிருந்தால் நிலவிற்கும் போய்வரலாம்..." நாகேஷ் குழந்தைகளுடன் பறப்பது (சாந்தி நிலயம்) நினைவிற்கு வந்தது. ்

//எனக்குன்னு வாய்க்குது பாருங்களேன்:-))))//

நல்ல மனசிற்கு வாய்க்காமல் என்ன ?

said...

பலூன் பதிவர்....பலூன் பாவை(!)...ம்ம்ம்ம், ஹி..ஹி.. ஏதாவது பட்டம் குடுக்கனும்னு மட்டும் தோணுது....ஆனானானானா சமயத்துல ஒன்னும் தோணமாட்டேங்குது....

கூட பறந்த மாதிரி ஒரு எஃபெக்ட் குடுத்துட்டீங்க தாயே...ஜெட் லாஃக் மாதிரி நான் இப்ப பலூன்லாஃக்...ல இருக்கேன்...ஹி..ஹி...

நல்லபதிவு....வாழ்த்துக்கள்.

said...

நானும் திறந்த வாயை மூடாம படிச்சு முடிச்சேன். இன்னும் கோபால் சாரே பார்த்திருப்பாரோ இல்லையோ !! வயலில் பலூனின் நிழலைப் பிடித்திருப்பது மிக பொருத்தமான ஷாட்.

said...

இது ஒண்ணுதான் விட்டு வச்சிருந்தீங்க. அதையும் செஞ்சாச்சு.
இனி ராக்கெட்ல போறதுதான் பாக்கி போல இருக்கே

said...

வாங்க இராம்.

மேலே இருந்து எடுத்தபடங்கள் எல்லாம் மகள்.
தரைப்படம் மட்டும் நான். 'க்ரெடிட் கோஸ் டு மகள்':-)

said...

வாங்க வல்லி.

அவுங்க ஆஃபீஸ்லே எதோ பேச்சு வந்தப்ப, 'அம்மா பலூன்லே போகணுமுன்னு
ரொம்பநாளாச் சொல்லிக்கிட்டு இருக்காங்க'ன்னு சொன்னாளாம்.
'அதான் கிடைக்கணுங்கறது கிடைக்காமப் போகாது' !!!

பறக்கறப்பயே 'டைட்டில்' மனசுக்குள்ளே வந்துருச்சு:-)))))

பயணிகள்ன்னா ச்சும்மா ஏறிப்போறவங்க. நாங்கதான் எல்லா ஆயுத்த வேலைகளுக்கும்
கூட நின்னு செஞ்சோமேப்பா. அதான் 'க்ரூ மெம்பர்' சர்டிஃபிகேட்:-)))))

said...

சிஜி வாங்க.

//கண்ணை இறுக மூடி.........................//

இதானே வேணாங்கறது? கண்ணுக்கு 'க்ளிப்' போட்டுத் திறந்து வச்சுருந்ததை
மகள் சொன்னாளாமே!

said...

வாங்க குமார்.

பஞ்சி ஜம்ப் என்னாலே முடியாது. இப்ப அதுக்கு உடல்நிலை சரிப்படாது. அதுக்கு
ஆயிரம் கண்டிஷன் இருக்கு. ஆனா பஞ்சி ஜம்ப் இடத்தில் இருந்து மத்தவங்க
குதிக்கிறதை நேரில் பார்த்த அனுபவம் இருக்கு. இங்கே குவீன்ஸ் டவுன் தான் இதன்
ஆரம்பகால பிறப்பிடம்.

ஆசை எல்லாம் நேரம் வந்தால் நிறைவேறும். இத்தனை வயசுலே எனக்கு ஒரு சான்ஸ்
கிடைச்சதே!

said...

வாங்க மணியன்.

அட! சாந்தி நிலயத்தை மறந்தே போயிட்டேன். ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி.
வாழ்த்துகளுக்கு நன்றி.

நல்ல மனசுன்னா சொல்றீங்க? ஹைய்யா........ அதுக்கும் ஒரு நன்றி:-)))

பயங்கரத் த்ரில்லா இருந்துச்சு நேத்து.

said...

வாங்க பங்காளி.

பட்டம் கிடக்குது, விடுங்க. அதா இப்ப முக்கியம்? பறக்க விட்டாப்போச்சு:-))))

பலூன் லாக் வரலை:-) ஸ்மூத் லேண்டிங்:-))))

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க கபீரன்பன்.

கோபால் இந்தப் பதிவைப் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கணும். அந்த 'நேரம்' அவரும்
சிங்கைக்குப் பறந்துக்கிட்டு இருந்தார். ஆனால் அதுலே நம்ம த்ரில் வருமா? :-))))

ரெண்டு கேமெராவில் ஒரு முன்னூறு படங்கள் எடுத்துத் தள்ளிட்டோம். அதுலே
இருந்து ஒரு பத்து இருவதைத் தெரிவு செய்யறதுதான் கஷ்டமாப்போச்சு.

said...

வாங்க டெல்ஃபீன்.

வாழ்த்துகளுக்கு நன்றி. எப்படி வர்ணிக்கறதுன்னே தெரியலைங்க. அப்படி அட்டகாசமா
இருந்துச்சு எல்லாமே. என்ன ஒரு விநோதமான காட்சிகள். கொஞ்சம் மேலே
போனதும், விளையாட்டு மைதானப் புல்தரையில் பசங்க வீசி எறிஞ்சிருந்த ப்ளாஸ்டிக் ட்ரிங்
பாட்டில்கள் பளிச்சுன்னு மின்னுது. இப்படியா அசிங்கம் செய்யறதுன்னு ஆகிப்போச்சு(-:

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

'அனுபவம்தான் வாழ்க்கை'ன்னா அதைப் பூரணமா
அனுபவிச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்னுதான் சொல்லணும்:-)))))

said...

அக்கா!
கலக்கிட்டீங்க!, படங்கள் பிரமாதம். நமக்கும் இப்பிடி ஒரு ஆசை இருக்கு!

said...

கலக்கலோ கலக்கல்! எனக்கு Air/sky diving பண்ண ரொம்ப ஆசை. எங்க வீட்டிலிருந்து ஒரு மணி நேர தூரம் தான். ஆனா வயசாயிட்டுன்னு நண்பர்கள் பயங்காட்டுறாங்க. ஆனா லண்டன்ல பன்ஜி ஜம்பிங் போனது தான் ஞாபகம் வந்தது... அருமையான அனுபவம். ஆனா உங்க அனுபவத்துக்கு ஈடாகுமா? அருமையான புகைப் படங்களும், நேர்காணலும்.... அருமையோ அருமை!

said...

வாங்க யோகன்.

வாழ்நாளில் கட்டாயம் ஒருமுறையாவது இதை
அனுபவிக்கணும். அந்த ஆனந்தம் தனிதான்.

said...

வாங்க காட்டாறு.

//ஆனா வயசாயிட்டுன்னு நண்பர்கள் பயங்காட்டுறாங்க.//

காட்டாறையே தடுத்துட்டாங்களா? என்ன அநியாயம்!

இங்கெ ஆரம்பிச்ச 'பஞ்சி ஜம்ப்' இப்ப உலகமெல்லாம் பரவிருச்சுங்க.
ஒவ்வொண்ணும் ஒவ்வொரு த்ரில்தான். இங்கே ஆத்துக்குக் குறுக்கே பாலம் கட்டி
அதுலே குதிச்சுத் தலை தண்ணீரைத் தொட்டு வருது.

உங்க அனுபவம் எழுதுங்களேன்.

said...

டீச்சர்,

லேக் ஜியார்ஜ் போகும் போது விலை கட்டுப்படியாகலைன்னு சாய்ஸில் விட்டது. நீங்க என்னடான்னா பைசா செலவில்லாமல்.... ஹூம்!!

படங்கள் எல்லாம் சூப்பர். குறிப்பா ஆறாவது படம். அப்புறம் அந்த 14ஆம் படம் மாதிரி ஒட்டகங்களின் நிழலை ஒருவர் படமெடுத்தது பெரிய அவார்டெல்லாம் வாங்கிய படம் தெரியுமோ?!

//. எனக்குன்னு வாய்க்குது பாருங்களேன்:-))))//

இந்த மாதிரி பதிவெல்லாம் படிக்க எங்களுக்குன்னு வாய்க்குது பாருங்க!! :))))

said...

ஆஹா!!1
என்ன பயணம்!! அதுவும் ஓ.சி வேறையா??
கலக்குங்க!!

நான் ஒரு முறை இங்கே ஒரு பயிற்சி விமானத்துல ஆன் ஆர்பரை சுத்தி பார்த்தேன்!! நடுவுல என்னை ஓட்ட கூட விட்டாங்க!! அப்பவும் நான் எங்க ஊரை நிறைய படம் எடுத்தேன். எப்பயாச்சும் பதிவிட முடியுமான்னு பாக்கறேன்!! :-)

said...

வாங்க கொத்ஸ்.

ஒட்டக நிழல் அவார்ட் வாங்கிருச்சா? தெரியாமப்போச்சே (-:

ஆடு, மாடு, குதிரைன்னு எல்லா நிழல்களையும் கோட்டை விட்டுட்டேனே.
நல்லா வாகா இருந்துச்சே சூரியன்!

பேசாம நியூஸி டூர் வரும்போது நம்ம 'டீன்'கிட்டே சொல்லி ஒரு ட்ரிப் ஏற்பாடு
பண்ணிக்கலாம். 'Up Up Away' இப்ப நமக்குத் தெரிஞ்ச கம்பெனியா ஆயிருச்சு:-)))))

said...

வாங்க CVR.

//எப்பயாச்சும் பதிவிட முடியுமான்னு பாக்கறேன்!! //

அதென்ன இப்படிச் சொல்லிட்டீங்க? கட்டாயம் எழுதறீங்க. நாங்க(ளும்) படிக்கத்தான் போறோம்:-))))

said...

ம்ம்..ம்ம்.. ரொம்ப உசரத்துக்கு போய்ட்டீங்க..

said...

துளசி,

உங்களோட எழுத்து எங்களையும் பலூன்ல கூட்டிக்கிட்டு போனா மாதிரி இருந்திச்சி.. வாழ்த்துக்கள்!

படங்களும் அருமை. வாழ்த்துக்கள் உங்களுடைய மகளுக்கு..

said...

விண்கூடையில் பறந்திருக்கும் முதல் வலைப்பதிவு தாய்க்குலம் துளசி டீச்சர் அவர்களுக்கு இன்று முதல் விண்மங்கை என்று பட்டப் பெயர் சூட்டப்படுகிறது. ஏற்றுக் கொண்டவர்கள் ஆளுக்கு 1 டாலரை(விசிட்டிங் கார்டு அடிக்கணும்ல்ல) எனக்கு அனுப்பி வைக்கவும். வேண்டாம் என்பவர்கள் மறுபடியும் புகைப்படங்களைப் பார்த்துப் பார்த்து 'புகை' விடவும்.

said...

டீச்சர்....சூப்பர் படங்கள்....எனக்கும் இப்படி பறக்கணுமுன்னு ரொம்ப நாளா ஆசை... அது எப்போ நிறைவேறுமுன்னு தெரியலை....

said...

ரொம்ப மகிழ்ச்சிங்க. எனக்கும் இந்தக் கனவு இருக்கு. நிறைவேறும்னு நம்புறேன். :) நியூசிலாந்துக்கு வந்தா நீங்க கூட்டீட்டுப் போக மாட்டீங்களா? :)

அந்தப் படங்கள் மிக அருமை. இதே மாதிரி பலூன்ல ஏத்திச் சென்னை, பெங்களூர் எல்லாம் பாக்கனும்.

said...

படங்கள் அனைத்தும் அருமை

said...

துளசியக்கா,

அசத்தீட்டீங்க போங்க! எனக்கு ஒரே பொகையா இருக்கு! :)))

said...

வாங்க சாம்.

ரொம்ப உயரத்துக்குப் போனா(லும்) ரொம்பவும் கவனமா இருக்கணும்.
இறங்கி வந்துட்டா(லும்) இன்னும் கவனமா இருக்கணும்.

இல்லீங்களா?

said...

வாங்க டிபிஆர்ஜோ.

மகளுக்கு சொல்லிட்டேன். ரொம்ப சந்தோஷப்பட்டாள்.

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

said...

வாங்க உண்மைத்தமிழரே.

மொதல்லே இப்படி எதுக்கெடுத்தாலும் 'பட்டம்' கொடுப்ப ( விடுவ)தை நிறுத்துங்க.
( டாக்டர் மட்டும் விதி விலக்கு)

ஆமாம், இப்ப போனவாரம்தானே உலகில் புகைப்பழக்கத்தை நிறுத்தணுமுன்னு ஒரு நாள்
கொண்டாடுனாங்க. இப்ப 'புகை'விடச் சொல்றிங்களே(-:

அரசியல்வியாதிகளுடனான தொடர்பு எவ்வளவு தூரம் கொண்டு போயிருச்சுப் பாருங்க உங்களை!
எல்லாம் அந்த 'டாலர்' சமாச்சாரம்தான்:-))))

said...

வாங்க ப்ரசன்னா,

எல்லாம் நேரம் வரும். கவலை ஏன்?
யானைக்கொரு காலம் பூனைக்கொரு காலம் மாதிரி,
நானே யானை & பூனையா இருக்கறதாலே அடிச்சது ச்சான்ஸ்.:-))))

said...

வாங்க ராகவன்.

நியூஸியிலே நமக்கு இப்ப பலூன் கம்பெனி(யே) இருக்கு:-)))))
வலை மாநாட்டை பலூனில் நடத்திறமாட்டமா என்ன?

ச்சென்னை, பெங்களூர் மட்டும் எப்படிங்க? நம்மூர் கோயில்கள், தாஜ்மகால்
எல்லாம் மேலே இருந்து பார்த்தா அட்டகாசமா இருக்குமுல்லே?

said...

வாங்க நாகை சிவா.

இன்னும் கொஞ்சம் படங்களை ஃப்ளிக்கரில் போடலாமுன்னு இருக்கேன்.
நேரம் வரணும்.

said...

வாங்க இளவஞ்சி.

நீங்கதான் ஸ்காட்லாந்துப் படங்கள் போட்டு அசத்திக்கிட்டு இருக்கீங்க.

எதுக்குப் பொகை? அங்கேயும் பலூன் சவாரி இருக்கே!
ஜம்முன்னு கோட்டை கொத்தளங்களைப் பார்க்கலாமே!

said...

நல்லா இருக்கு படமும் பதிவும். பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே:))

said...

வாங்க பத்மா.

அருமையான பாட்டு. நம்ம மணியன் 'சாந்தி நிலையம்' படத்தை நினைவுபடுத்துனவுடனே,
இந்தப்பாட்டும் மனசுக்குள்ளெ வந்து நின்னுச்சுதான். இப்ப நீங்களும் சொல்லிட்டீங்க.

ஆமாம். எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாக் காணோமே(-:

said...

டீச்சர்,

கலக்கலான பயணம் & புகைப்படங்கள்.

இதப்படிச்சப்புறம் உங்க மேல ரொம்ப பொறாமையா இருக்குது !!

said...

வாங்க கதிரவன்.

எதுக்குப்பா பொறாமை?

என் மாணவர்களுக்குன்னே ஒரு ஸ்பெஷல்
பலூன் சவாரி ஏற்பாடு செஞ்சுட்டா ஆச்சு:-)

said...

துளசி பாக்கவே இவ்வளோ அருமையா இருக்கே.....அட்டகாசம் போங்க...நீங்க எழுதியிருக்கரது நம்மளே போன மாதிரி இருக்கு....வேகஸ் போரச்சேல்லாம் பறக்கணூம்னு நினைக்கரேன்....விலைய பாத்து பேசாம வந்துர்ரேன்.....champaigne வேர குடுப்பாங்களாம். உங்க பதிவ படிச்சு ரொம்ப inspire ஆயிட்டேன் அடுத்த தடவை நிச்சயமா போயிடணூம்...i mean பறந்துடணும்!!!

said...

வாங்க ராதா.

நமக்கு ஷாம்பெயின் எல்லாம் இல்லை(-:

இதுவே ஓசி. அதனாலே 'கப்சுப்'னு இருந்தோம்:-)))))

நிறையப்பேருக்கு இந்த பலூன் ஆசை இருக்குல்லே?

ப்ளேன், ஹெலிக்காப்டர் இதையெல்லாம் விட இதுலே பயணம் சுகம்.
கண்பார்வைக்குத் தோதான உயரத்துலே போறதால் நல்லா ரசிக்க முடியுது.

said...

ஆகா..அடுத்த வாரம், இங்கு நியுஜெர்சியிலும் இந்தப் பலூன் விழா ஒன்று உள்ளது.
டீச்சரை மனசுல தியானிச்ச்சிக்கிட்டு தெகிரியிமா ஏறிட வேண்டியது தான்!

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் டீச்சர்...காத்தாடி விடும் போது அடுத்த பையன் காத்தாடியை டீல் செய்வாங்க பசங்க...
பலூன் விடும் போது அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க இல்லையா? :-))

said...

வாங்க KRS.

பலூன் விழாவா? அட்டகாசமா இருக்கும். ச்சான்ஸை விட்டுறாதீங்க. பக்கத்து பலூன்காரரோட
அரட்டை அடிச்சுக்கிட்டே போகலாமே! இல்லேன்னா வானத்துலே வலைமாநாடு நடத்திருங்க:-))))

said...

நீங்க அதிர்ச்டசாலின்னு தான் முன்னமே தெரியுமே...

said...

அட இன்னிக்குத் தான் இதப் பார்க்குறேன். படங்களும் உங்கள் விவரனையும் அருமை. இங்கே ஒரே வயத்தெரிச்சல் தான் போங்க...

எதுக்கும் சொல்லிக்கிறேன் :

யெக்கோவ்...நாம இன்னிக்கு நேத்திக்கா பழக்கிட்டு வரோம். (முந்தா நேத்திக்கிலேர்ந்து பழகிட்டுவரோம்ல :)) )...நாங்க அஙகன வந்தா எங்களையும் கூட்டிக்கிட்டு போவீகளா??? கோபால் சாரை ரொம்ப கேட்டதா சொல்லுங்க...(எதுக்கும் ஐஸ் வச்சிக்கறேன் :)) )

said...

பளிச் பளிச் புகைப்படங்கள்!

பசுமையான புல்வெளிகள்!

பாய்ந்தோடும் மானினங்கள்!

பரவசமூட்டும் எழுத்து வண்ணம்!

உங்களிடம் பாடம் கேட்[ட]பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்!

மிகவும் ரசித்துப் படித்தேன்!

பற[க்கும்]ந்த பாவையே!

said...

வாங்க முத்துலெட்சுமி.

விடுமுறை நல்லாப் போச்சா?

அதிர்ஷ்டசாலிதாங்க. இல்லாட்டி உங்க நட்பெல்லாம் கிடைச்சிருக்குமா?

இதுலே தமாஷ் ஒண்ணும் இல்லை.
'சத்தியமான சொல்' னு ஒரு டிஸ்கி போட்டுக்கறேன்

said...

வாங்க டுபுக்குத்தம்பி.

நல்லாக்கீறீங்களா?

அட....... மொதல்லே கிளம்பி இங்கே வாங்க. இப்ப பலூன் 'கம்பேனி'யே
நம்மதாப் போச்சு:-)

பாவம் கோபால் சாரும் இன்னும் இத்தை அனுபவிக்கலை. உங்க ரெண்டு பேரையும்
பலூன்லே ஏத்தி வுட்டுரலாம். அப்படியே போய்க்கினே இருங்க.

said...

வாங்க VSK.

'சிவாஜி' பார்த்த குஷியில் கவிதையா எடுத்து விடறீங்க!

நீங்க வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

said...

ஜோரான படங்கள் கூடிய அழகான பதிவு. நல்ல பயணம். அனுவங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

said...

வாங்க பாரதத்தின் நவீன இளவரசரே.

ஒரு வருசம் ஆயிருச்சா பலூன்லே போய்!!!

நாள் எப்படிப் 'பறக்குது' பாருங்க.

வருகைக்கு நன்றிங்க.