Tuesday, October 30, 2012

கல்யாண 'மாலை'


இது யோகாதானே?

ஙே....   ஒரு விநாடிக்கும் குறைவா முழிச்சாலும் சட்ன்னு சுதாரிச்சுக்கிட்டு ஆமாம்  இது ஒரு வகை யோகாதான்.  ரொம்பவும் கவனமா மனசை ஒருமுகப்படுத்திச் செய்யவேண்டிய விஷயம்.

ஏம்மா....ஒரு வெள்ளைக்காரம்மா கேட்டதுக்கு இப்படிச் சொல்லிட்டேனேன்ன  கோபாலைக் கொஞ்சம் பெருமையோடு பார்த்தேன். சும்மாச் சொல்லக்கூடாது!  மனுசர் அடிச்சு விட்டாலும்.....

எப்படிங்க? எப்படி இப்படியெல்லாம்....?

அது தானே வருதும்மா.......  சரியா நாஞ்சொன்னது?

ரொம்பச் சரி. கவனம் பிசகாமல்  ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அது ஒரு வகை தியானம். தியானம்  இஸ் பார்ட் ஆஃப் யோகா. (எனக்கு மட்டும் சமாளிக்கத் தெரியாதா?)

ஆனா சும்மாச் சொல்லக்கூடாது.  வரவர இவர் நல்லாவே தேறிட்டார்!!!!!

நிறையப்பேர்....  கோலத்தைப்பற்றி நாம் எடுத்து வச்சுருக்கும் ப்ரிண்ட் அவுட்லே  இருப்பதைக் கவனமா வாசிக்கிறாங்க.


சாப்பாட்டுக்கடைகளில்  கூட்டம் அம்முதுன்னு ரிப்போர்ட் வருது. நம்ம கோபால்தான் ஊருளவாரம் போய்ப்பார்த்து வந்து சேதி சொல்றார். ரங்கோலித்தோழி புடவை ஷோ, சாப்புடப்போறேன், டீ குடிச்சுட்டு வரேன்னு நாலைஞ்சு முறை இடத்தைவிட்டு  எஸ் ஆகிக்கிட்டு இருக்காங்க.  அந்த சைடு போற பசங்க போற போக்குலே கொஞ்சம்  கலர் அரிசி எடுத்து காலி இடத்தில் நிரப்பிக்கிட்டுப் போறாங்க. நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன ? மேலே விழுந்து எல்லாத்தையும் கொட்டி வச்சு வாறாமல் இருந்தால் போதாதா???

' சாப்புட எதாவது வாங்கியாரட்டுமா ?'ன்னு தனக்குத் தேவையானதையெல்லாம் பட்டியல் போட்டுக்கிட்டே இருக்கார் நம்ம கோபால். டெமோ முடியட்டும். ஸ்டாலில் வேற ஆளில்லை. விட்டுட்டுப்போக முடியாது.  ஒருவழியா அஞ்சேகாலுக்கு ரங்கோலி திரும்பி வந்தாங்க. அட ! அழகா எல்லாம் செஞ்சுருக்காங்களேன்னு பாராட்டு வேற!

காஃபி கிடைக்குதான்னு பார்க்கலாமா?  போய்ப் பார்த்தா  எல்லாம்  உள்ளுரில் இருக்கும் இந்தியச் சாப்பாட்டுக்கடைகளே.  உலகப்பொதுவான இண்டியன் மெனு(??)  பட்டர் சிக்கன் ரோகன் ஜோஷ், நான், நவ்ரத்தன் குர்மா, மட்டர் பனீர் ..... போதுண்டா சாமி:(

உள்ளுர்லே சுமார் 42 இந்திய சாப்பாட்டுக்கடைகள்  இருக்கு,  அஞ்சாறு ரெஸ்ட்டாரண்டும்  மீதி எல்லாம் டேக்கவே கடைகளுமா.  அதுலே பாதி எண்ணிக்கை இங்கே ஸ்டால் போட்டுக்கிட்டு அதே சமாச்சாரங்களை அயராமல் விக்கறாங்க.

வேற எதாவது கிடைக்குமான்னு தேடுனால் கிறைஸ்ட்சர்ச்  கேரளா அசோஸியேஷன் ஸ்டால் கண்ணில் பட்டது.  கிட்டப்போனதும் மேங்கோ லஸ்ஸியை எடுத்துக் கையில் கொடுத்த ஜஸ்டின் ( இப்போதைய ப்ரெசிடெண்ட்) என்ன சாப்புடறீங்கன்னார்.  பெரிய  ஹாட் ப்ளேட் வச்சு தோசையும் ஆப்பமும் பக்கத்துலே பக்கத்துலே போட்டுக்கிட்டு இருக்காங்க. திருப்பிப்போட்டா தோசை. போடலைன்னா ஆப்பம்.ரொம்ப ஈஸி:-))))  ஆனால்  வேற வேற மாவு கேட்டோ!

ரெண்டு பேருக்கும் ஆப்பம் சொன்னதும் காசு வாங்கிக்க மாட்டேன்றார்.  ஏன்? நான் கல் கொடுத்த கருணை மாதா!!  மாவு அரைக்க  வெட் க்ரைண்டர் நாந்தான் நேத்து கடன் கொடுத்துருந்தேன்:-)
 இலவசமா? அதெல்லாம்  தேவை இல்லை. காசு வாங்கிக்கலைன்னா எனக்கு ஆப்பம் வேணாம். வேற எங்கியாவது சாப்புட்டுக்கறேன்னதும்  சரின்னு காசை வாங்கிக்கிட்டார்.  லாபநோக்கு இல்லாம (அவுங்கவுங்க) சமூகத்துக்கு எதாவது  சேவை செய்யும்  சங்கங்கள்  ஃபண்ட் ரெய்ஸிங் & நாமும் இருக்கோமுன்னு சமூகத்துக்கு அறிவிப்பு  செஞ்சுக்க இங்கே ஸ்டால்ஸ் போட்டுருக்காங்க.  பதிவு செஞ்சுக்கிட்ட சங்கங்களுக்கு மட்டும்   குறைந்த தொகைக்கு இடம் கொடுத்துருக்கு.  மற்ற ஸ்டால்களுக்கு  400ன்னு சொன்னாங்க.

தீபாவலி விருந்துன்னு  தனி ஏற்பாடு ஒன்னும் இல்லை. இது பப்ளிக் ஃபங்ஷனா போயிருச்சுல்லே? ஊருக்கே  சோறு போட முடியுமா சிட்டிக் கவுன்ஸில் கொடுக்கும் ஃபண்டிங்லே?  ஃபுட் ஸ்டால்களில்  அவுங்கவுங்க காசு கொடுத்து வாங்கிக்கணும்.

ஒரு செட்லே தடிதடியா ரெண்டு ஆப்பம்.  சைட் டிஷ்ஷா கோபாலுக்குக் குருமா. எனக்கு தேங்காய்ச் சட்டினி.  தின்ன முடியாமத் தூக்கிக் கடாசவேண்டியதாப்போச்சு எனக்கு:( ப்ச்.... வேற கடையில் அட்லீஸ்ட் இன்னொரு கேரளாக் கடை இருக்கே அங்கே என்னன்னு பார்த்திருக்கலாம்.!  அங்கெதான் எலக்ட்ரிக் ஆப்பச் சட்டி இருந்துச்சு!

அஞ்சரைக்கு மெயின் ஸ்டேஜ்லே நிகழ்ச்சிகள்ஆரம்பிக்குது.  வந்தே மாதரம்.......... கூடவே நியூஸி நேஷனல் ஆந்தம் காட் ஆஃப் நேஷன்ஸ் பாட்டும் முழங்குது. எங்களுக்கு மகள் வீட்டில் சின்னதா ஒரு  கடமை இருக்குன்னு  ஸ்டாலை அப்படியே விட்டுட்டு(அதான் அஞ்சுமணியோடு டெமோ முடிஞ்சுருச்சுல்லே)  மகள் வீட்டுக்குப்போனோம்.  அங்கே ஜூபிடருக்கு சாப்பாடு கொடுத்துட்டு மறுபடி விழாவுக்கு  போறோம்.  கார் உள்ளே நுழையும்  வாசலில்  பார்க்கிங் சார்ஜ் வசூல் பண்ணிக்கிட்டு இருக்காங்க.  அஞ்சு டாலராம்!  நாங்க ஸ்டால் ஆளுங்களாச்சே. அதனால் எங்களுக்கு சார்ஜ் இல்லை.

ஆனால்....   எனெக்கென்னமோ இது கொஞ்சம் அநியாயமா இருந்துச்சு.  சிட்டிக் கவுன்ஸில்  நடத்தும் விழாவுக்கு பப்ளிக் காசு கொடுத்து வரணுமா?  டூ பேட்:(  வரவர எங்கூர் கவுன்ஸில் அல்பமாப் போய்க்கிட்டு இருக்கு:(

ஸ்டேஜ் லே ஒருத்தர் தப்லா வாசிச்சுக்கிட்டு இருந்தார்.  அதுக்குப்பிறகு  ஒரு ஜோடி வந்து ரெண்டு ஹிந்திப்பாட்டு பாடிட்டுப்போனாங்க.  இந்த விழாவின் ஹைலைட் ரங்கஷ்ரீ  டான்ஸ் க்ரூப்.  பதினைஞ்சு பேர் கொண்ட ஒரு குழு நியூஸிக்கு வந்துருக்காங்க.  குஜராத் மாநிலத்தில் ஆமடாவாத்(அஹமதாபாத்) நகரில் இருந்து. இந்தியப்பண்பாட்டுக் கலைக்கழகம் ஏற்பாடு செஞ்சுருக்கு.  நியூஸியின் முக்கிய நகரங்களில் நடக்கும் தீவாலிக் கொண்டாட்டத்துலே ஆடி மகிழ்விக்கன்னாலும் நவராத்ரி  கர்பா ஸ்பெஷலிஸ்ட் இவுங்க.  குஜராத் நாட்டுப்புறக் கலைகளை படிப்பிக்கும் Rangashree School of Fine Arts, பள்ளி. 15 வருசம் ஆச்சு இதை ஆரம்பிச்சு.  1987 வது வருசம் குஜராத் பஞ்ச நிவாரண  நிதிக்காக, கலைநிகழ்ச்சிகள் நடத்த ஆரம்பிச்சு இன்னிக்கு  நாட்டுப்புறக் கலைகளை பயிற்றுவிக்கும் கல்விக்கூடமா ஆகி இருக்கு!  துபாய், மஸ்கட்ன்னு  வெளியே போய் நிகழ்ச்சிகள் நடத்தி  அதுக்கப்புறம் யூரோப், அமெரிக்கான்னு விஜயம் செஞ்சு இப்போ  நியூஸிக்கு இந்த வருசம் வந்துருக்காங்க.

சும்மாச் சொல்லக்கூடாது .... அட்டகாசமான நடனங்கள்.  அறுவடை முடிஞ்சு தானியம் சுத்தம் செய்ய  வட்டமான முறம் வச்சுக்கிட்டு ஆடுனதும் மண்குடங்களைத் தலையில் சுமந்து கையில் தீபங்களுடன் ஆடுனதும் பெண்கள்  இரண்டு கைகளையும்  மாற்றிக் கோர்த்துப் பிடிச்சுக்கிட்டு (வலது கையால் இடது பக்கம் உள்ளவரையும் இடது கையால் வலது பக்கம் உள்ளவரையும் கைகோர்த்துப்பிடிச்சு கடைசிவரை கைகளை விலக்காமலேயே ஒரு முழு நடனம் ஆடுனது எனக்கு ரொம்பவே பிடிச்சுருந்துச்சு.

மூன்று நடனங்களில் ஆண்கள். ஒன்று ஆண்கள் மட்டும், மற்ற இரண்டிலும்  பெண்களுடன் சேர்ந்து  ஆடுனாங்க. கடைசிப்பாட்டா வந்தேமாதரம் பாடி ஆடுனது நல்லாவே இருந்துச்சு.  இந்தக்குழு மொத்தம் எட்டு வகை நடனங்கள்  ஆடுனாங்க.  இடையிடையே உள்ளூர் கலைஞர்களியும் ஊக்கு விக்கணுமேன்னு  ஏற்பாடு. ஃபிஜி இந்தியர்கள்  குழு, இந்திய இந்தியர்கள் குழு, கேரளா பாய்ஸ்,  இலங்கைத் தமிழர் நடத்தும் பரதநாட்டியப் பள்ளி மாணவிகள், கேரளப்பெண்மணி நடத்தும் பரதநாட்டியப்பள்ளி மாணவிகள் இப்படி ரெண்டு பரத நாட்டிய நிகழ்ச்சிகள், கேரளா அசோஸியேஷன் பெண்களின் திருவாதிரக்களி, பஞ்சாபி மாணவர்களின் பாங்க்ரா நடனம் இப்படி  கலந்துகட்டி ஏராளமான ஐட்டங்கள். எல்லாத்துக்கும் திருஷ்டி பரிகாரமா பாலிவுட் ஒர்க்ஸ்ன்னு  பாலிவுட் பாட்டுக்கு தேகப்பயிற்சி(மாதிரி) ஒன்னு.  நல்லவேளை... எங்க பாட்டி எப்பவோ காலமாயிட்டாங்க.  ஒருவேளை மேலுலகத்தில் இருந்து பார்த்துட்டு 'நிப்பு தொக்கின கோத்திலாக'ன்னு (தெலுங்குப் பழமொழி) சொல்லி இருக்கலாம்.  உண்மைதான் விலுக் விலுக்ன்னு என்னமோ வலிப்பு வந்தது போல....... என்னமோ போங்க:(

பாங்க்ரா டான்ஸ்க்கு மேடை ஏறுனதும் இங்கே யாராவது பஞ்சாபிகள் இருக்கீங்களான்னு  வந்த அறிவிப்புக்கு , சொன்னா நம்ப மாட்டீங்க..... அரங்கத்துலே இருந்தவர்களில்  95 சதமானம்  கைதூக்கிட்டு மேடைக்குக்கீழே போய் ஆட்டத்தில் கலந்துக்கிட்டாங்க!!!! பல்லே பல்லே பல்லே........  போற போக்கைப் பார்த்தா சீனர்களைவிட வேகமா வந்திறங்குறாங்க போல!

சண்டிகர் வாழ்க்கையில் கண்கூடாப் பார்த்தது..... எங்கே பார்த்தாலும்  'இங்கிலாந்து , கனடா, நியூஸிலாந்து, அஸ்ட்ராலியாவுக்கு  போகணுமா?  போகணுமா? போகணுமா?' ன்ற அறிவிப்புகள். படிக்க வர்றோமுன்னு விசா வாங்கிடறாங்க. இங்கே வந்து அதைத்தவிர மற்ற எல்லாமும் நடக்குது:(  பல்கலைக்கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நண்பர் சொன்னது.....  இவுங்க கொண்டுவரும்  கல்வி சம்பந்தமான அத்தாட்சிகள் முக்காலே மூணு வீசம் பொய்!!!!  எல்லாத்துலேயும் போலிகள் உருவாகாதா என்ன? என்னமோ போங்க......

ஒன்பது மணி அளவில் நிகழ்ச்சிகள் முடிஞ்சாலும்   கொண்டாட்ட மூடில் இருந்த சனம்  பாங்க்ராவைத் தொடர்ந்துக்கிட்டே இருந்துச்சு. நாங்க கிளம்பி நம்ம ஸ்டால் எந்த கதியில் இருக்குன்னு போய்ப்பார்த்தால்  எல்லா கலர் அரிசிகளையும் ஒன்னாச்சேர்த்து  ஒரு மாதிரி கருப்பு நிறமாக்கி ஒரு பாத்திரத்துலே போட்டு வச்சுருக்காங்க யாரோ.  அதையும் எடுத்து  சிலர் சொந்த டிஸைனில்  அங்கங்கே ரங்கோலி  போட்டுப்பார்த்துக்கிட்டு இருந்தாங்க.

பேப்பர்களையும் ஃபெல்ட் பென்களையும் வச்சுட்டு வந்துருந்தேன். அதுலே பசங்க கோலம் வரைஞ்சும் படங்கள் வரைஞ்சும் பொழுது போக்கி இருக்கு.  ஒரு பொடியன் தன்னுடைய படத்தை வரைஞ்சு  எனக்கு ப்ரபோஸ் பண்ணி இருக்கான்.  செல் நம்பரெல்லாம்  கொடுத்துருக்கு! அதுலே அவுங்கப்பாவோ அம்மாவோ ஒரு நோட் போட்டு வச்சுருக்காங்க. நிறைய மாடுகள் இருக்குன்னு.


என்ன சொல்றீங்க?  கல்யாணம் பண்ணிக்கவான்னு கோபால்கிட்டே கேட்டதுக்கு,  வேணாம். நிறைய மாடுகள்ன்னா  பண்ணையில் எக்கச்சக்க வேலை இருக்குமேம்மா...... உன்னால செய்ய முடியாது(நான் ஒருத்தன் படறபாடு போதாதா? அவன் பாவம். பொழைச்சுப்போகட்டும் )ன்னார்!!!!!!!!!

நான் கஷ்டப்பட்டால் இவருக்குத் தாங்காது கேட்டோ!!!!

ஹாஹாஹாஹா..

நம்ம ஸ்டால் மட்டும்தான் எல்லோருக்கும் இலவசம். மற்ற சிலர்  காசு வாங்கிக்கிட்டுத்தான்  ஆக்டிவிட்டீஸ் செய்யவிட்டாங்க.

கேரளா அசோஸியேஷன் ஸ்டாலில் செஞ்சு வச்சுருந்த சமோசாக்களையும் வடைகளையும்  யாரும் வாங்கலை. எல்லோரும் தோசையும் ஆப்பமுமா  வெட்டி இருக்காங்க.  மாவெல்லாம் காலி!   பாக்கியைப் பங்கு வச்சதிலே நமக்கு ரெண்டு சமோஸாவும் ரெண்டு வடைகளுமா கொண்டு வந்து கையில் திணிச்சாங்க.  கோலக் கடையைக் கட்டிட்டு,  வடையை ருசிச்சுக்கிட்டே வீடுவந்து சேர்ந்தோம்.

ஆச்சு, இனி நவம்பர் 10  தேதிக்கு ஃபிஜி இந்தியர்களுடனும்  13 தேதிக்கு நம்ம துளசிவிலாஸிலும் தீவாலி கொண்டாடணும். செஞ்சுருவோம்.....

அனைவருக்கும் முன்கூட்டிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.



பின்குறிப்பு:  படங்கள் உபயம் கோபால். புதுக்கெமெரா ஒன்னு  Canon1100D வாங்கி இருக்கு. இவரையும் பிட் வகுப்புலே சேர்த்துவிடணும்:-)








Wednesday, October 24, 2012

நவராத்ரிக்கு நட்ட நடுவில் ஒரு தீவாலி!!!!



" ஏய்...யாரங்கே... நாளைக்கு தீவாலி கொண்டாடிக்கோ."

"என்னங்க ஏமான்... இப்பதான் நவராத்ரி ஆரம்பிச்சுச் சரியா அஞ்சாம் நாள் விழா நடந்துக்கிட்டு இருக்கு. இப்பப்போய்.... இன்னிக்கு பஞ்சமி. அடுத்த அமாவாசை வரைக்கும் காத்திருக்கலாமே..."

"ஏய்.... காசு தர்றவன் நான். உதவிக்கு(??) ஒரு ஆள் தர்றவன் நான். உனக்கு பண்டிகை கொண்டாடிக்கணுமா வேணாமா? நல்லா யோசிச்சு சட்னு பதில் சொல்லு."

"அது இல்லைங்க ஏமான்.... பண்டிகைக்கு சில சாஸ்த்திரம் விதிகள் இப்படி இருக்குல்லே......."

"உங்க ஆளுங்க மட்டும் கொண்டாடிக்கிட்டாப் போதுமுன்னா அது சரி. இப்ப நாடே கொண்டாடப்போகுது. மத்த ஊர்களில்  கொஞ்சம் சீக்கிரமா முடிச்சுடறோம். போனாப்போகுதுன்னு  இந்த ஊருலே  ரெண்டு வாரம் பிந்தி வச்சுருக்கேன். என்ன சொல்றே? வேணுமா வேணாமா?"


குபேரன் சொல்லைத் தட்ட முடியுதா?

 "  சரிங்க ஏமான். எல்லாம் உங்க விருப்பம் போலவே செஞ்சுறலாம்."

நியூஸிலாந்து தொழிலாளர் தின அரசு விடுமுறை எப்பவும் அக்டோபர் மூணாவது வாரக்கடைசியில் லாங் வீக் எண்டா வரும். அன்னிக்கு வச்சுக்கலாம் விழாவைன்னுட்டாங்க.

" அக்டோபர் முதல்வாரக்கடைசியில் ஆக்லாந்து நகரிலும், ரெண்டாவது வாரக்கடைசியில் வெலிங்டன் நகரிலும் கொண்டாடறாங்க.  உங்க அதிர்ஷ்டம் லாங்வீக்கெண்டா கிடைச்சுருச்சு!!!!"

"சரிங்க ஏமான். சரிங்க ஏமான்."


நாலு மாசத்துக்கு முன்னே (22 ஜூலை 2012)  'மீட்டிங் வச்சுருக்கு  வா' ன்னதும் போனோம். நல்ல மழையும் குளிருமான மாலை நேரம். எங்களுக்கு இங்கே விண்ட்டர் சீஸன். அதுவும் மிட் விண்ட்டர்.  சிட்டிக் கவுன்ஸில் ஏற்பாடு செஞ்ச ஈவண்ட் மேனேஜர், மீட்டிங் நடக்கப்போகும் ஹால் சாவியைக் கொண்டு வர மறந்துட்டேன்னு அசட்டுச் சிரிப்பு சிரிச்சதும்....

அபுக்ன்னு இருந்துச்சு. கிழிஞ்சது போ....முதல்நாள் அழகே இப்படீன்னா.... நாங்கெல்லாம் அப்போதான் ஜுரத்தில் விழுந்து எந்திரிச்ச ஆளுங்க.  ரெண்டு மணி நேரம் மழையில் நிக்க யாராலே முடியும்? நீங்களே பேசிட்டு மெயிலில் சேதி அனுப்புங்கன்னுட்டு எல்லோரும் கிளம்பிப் போயாச்சு.

1997 வது வருசம் இன்டியன்  சோஸியல் அண்ட் கல்ச்சுரல் க்ளப் ஆரம்பிச்சதுலே இருந்து  சிட்டிக்கவுன்ஸில் தீபாவளி கொண்டாட ஃபண்டிங் கொடுத்து வருது. தலைமை மாறி மாறிப்போய் கடைசியில் தேசிய குணத்தைத் தூக்கிப்பிடிக்கும் மக்கள் ஆட்சிக்கு வந்து ......  போதுண்டா சாமின்னு ஆனதெல்லாம்  இங்கே பார்த்துக்குங்க.  

காசுன்னதும் ஆட்டையைப்போட்டாங்கன்னு புகார் எல்லாம் கொடுத்து வக்கில் நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்கு ஆட்டையைப்போடாத(?) மக்கள் பிரிவு ஜரூராச்சுன்னதும் சிட்டிக் கவுன்ஸில்  நாங்களே ஒரு ஈவண்ட் மேனேஜரை ஏற்பாடு செய்யறோம். அவுங்க பேச்சையாவது கேட்டு நடங்கன்னுருச்சு.


இவ்ளோ கலாட்டாக்களுக்கு நடுவுலே நிலநடுக்கம் வந்து,  ஊரே பாதிக்கும் மேலே காணாமப்போனக்  காரணத்தால் 2010, 2011 வருசங்களில் தீபாவளிக் கொண்டாட்டம் ஒன்னும் நடக்கலை:(

அப்புறம் இன்னொரு மீட்டிங். இது GOPIO வுக்காக. Global Organaisation of people of Indian Origin. (இப்படித்தான் ஆளாளுக்கு ஒன்னு தொடங்கிருவாங்க)

என்னென்ன செய்யலாமுன்னு ஐடியா கொடுங்கன்னதும் தீபாவளிக்குக் கோலம் போடலாம். அதையே சில்ரன்ஸ் ஆக்டிவிட்டியா வச்சுக்கலாமுன்னு  வாயை விட்டது தப்பாப் போயிருச்சு. ஆமாமாம். நல்ல ஐடியான்னு ஊக்குவிச்சு அதுக்கு என்னென்ன பொருட்கள் வேணுமுன்னு லிஸ்ட் கொடுங்க. வாங்கிறலாமுன்னாங்க.

நிறைய மீட்டிங்ஸ் அந்த ஈவண்ட் மேனேஜரோடு நடந்துச்சு. க்ராஃப்ட் ஸ்டால், சாப்பாட்டுக்கடைகள், இந்திய சமாச்சாரங்கள் விற்பனை செய்யும் கடைகள் இப்படி (வடநாட்டு வழக்கப்படி மேளா) அததுக்கு உண்டான ஏற்பாடுகள், கடை போட கட்டணம் எல்லாம் முடிவு செஞ்சாங்க.

நிலநடுக்கம் வந்தால் மக்கள் தப்பிச்சு ஓட வசதியான இடம் வேணுமேன்னு தேடுனதிலே எங்கூர் CBS Arena முதல்முறையா பப்ளிக் ஃபங்ஷன் நடத்திக்க இடம் (வாடகைக்குத்தான்) தரேன்னுச்சு. இண்டோர் ஸ்டேடியம் என்பதால்  குளிர் வாட்டாதுன்னு  எங்களுக்கு (அல்ப )சந்தோஷம் வேற! நாலாயிரம் சதுர மீட்டர் பரப்பளவு இருக்கே!

இந்த வருசம் நம்ம குடும்ப விழா சம்பந்தமா பயணம் இருந்ததால் நீங்க செய்யறதை செஞ்சுக்குங்க. கொண்டாட்ட சமயத்துலே வந்து கலந்துக்கறோமுன்னு சொல்லி இருந்தோம்.

வந்து பார்த்தப்ப தீவாலி 2012 என்ற பெயர்  Abacus Institute of Studies - Diwali 2012.ன்னு மாறி இருக்கு. ஸ்பான்ஸார்களை தேடுனப்ப இவுங்க பெயர் ரைட்ஸ் கொடுங்கன்னு சொல்லி நல்லதா ஒரு தொகை கொடுத்தாங்கன்னு விவரம் கிடைச்சது. உள்ளுர் வங்கி, ட்ராவல் பிஸினெஸ் இப்படி இன்னும் சில பேர்  ஸ்பான்ஸார் லிஸ்ட்டுலே ஒரு பக்கமா சேர்ந்துக்கிட்டாங்க.கூடுதலா  காசு வந்தா சிட்டிக் கவுன்ஸில் வேணாமுன்னா சொல்லும்.

கல்ச்சுரல் டெமோ ஸ்டாலுக்கு பொறுப்பு ஏத்துக்கிட்டவங்க  ஒரு நாலைஞ்சு முறை ஃபோன் செஞ்சு  கோலத்துக்கு தயாரான்னு விசாரிச்சாங்க. ரங்கோலி போட ஒரு வட இந்தியத் தோழி கிடைச்சாங்க. நானும் இன்ஸ்ட்டண்ட் ரங்கோலி அச்சுகள் சில கிரியிலே இருந்தும், வள்ளுவர் கோட்டத்துலே சில வருசத்துக்கு முன்னே நடந்த ஓணத்திருவிழாவிலும் வீட்டு உபயோகத்துக்காக வாங்கி வச்சுருந்தேன். நம்ம வீட்டுலே ரெண்டு மூணு கோலப்புத்தகங்கள் வேற இருக்கே!!! சமாளிச்சுடலாம்.

கலர்ப்பொடிகள், அரிசிமாவு, பிள்ளைங்க கோலம் போட்டுப் பழக வெள்ளைத்தாள் ஒரு ரீம், கலர்க்கலரா ஃபெல்ட் பேனாக்கள் வேணுமுன்னு சொன்னேன். ஹோலி கொண்டாட வாங்குன கலர்ப்பொடிகள் இருக்கு. அரிசிமாவு வாங்கியாறேன்னு சொல்லி ஒரு நாள் பேப்பர் அண்ட் ஃபெல்ட் பேனாக்களைக் கொண்டுவந்து கொடுத்துட்டு அப்படியே கோலம் போட்டு வைக்க பலகைகள் நாலைஞ்சு கொடுத்துட்டுப் போனாங்க. கலர் பவுடர்?

வோ தோ ஹோ  ஜாயேகா......

கொண்டாட்ட நாள் வந்ததும்  போய்ச் சேர்ந்தோம்.  கோபால்  வரவர முன் ஜாக்கிரதை முத்தண்ணா ஆகிட்டார்.  கோலம், தென்னிந்திய கலைகள்ன்னு கொஞ்சம் வலையில் தேடி நாலைஞ்சு கோலப்படங்களும், பரதநாட்டியக் கலைஞர், கதகளி ஆட்டக்காரர், தஞ்சைக்கோவில், மீனாட்சி அம்மன் கோவில் இப்படி  ஏழெட்டுப் படங்களை ஏ3 யில் ப்ரிண்ட் எடுத்து வச்சதையும் எடுத்துக்கிட்டார்.

மதியம் மூணு மணிக்கு விழா தொடங்குது. பகல் பனிரெண்டரைக்கே வந்துருங்கன்னு தகவல்.  அவசரக்கோலம் அள்ளித் தெளிசாலாகாதா?  சாப்பாட்டுக்கடைன்னா முன் ஏற்பாடுகள்  அதிகம். நம்மது வெறும் டெமோதானே?  ரெண்டு மணிக்குப்போய்ச் சேர்ந்தோம்.  கூடாரம் கூடாரமாப்போட்டு  பாதி ஸ்டேடியத்தை நிரப்பி இருந்தாங்க. எல்லாம் ஓப்பன் கூடாரவகைகள்.

வெறும் டெமோவுக்குன்னு நம்ம ஸ்டால் மட்டும் இல்லாம, புடவை கட்டுவது எப்படி? தலையில் டர்பன் சுற்றுவது எப்படின்னு  சிலதும் ஒடிஸ்ஸி  நடனம், பரதநாட்டியம் இப்படி ரெண்டு மூணுக்கும் இடம் ஒதுக்கி இருந்துச்சு. இந்திய உடை வகைகள்ன்னு ஒரு நிகழ்ச்சி வேற வச்சுருந்தாங்க.  பாவாடை தாவணி வேணுமுன்னதால் மகளுடையதைக் கடன் கொடுத்தேன்.

எங்களுக்கு ஒதுக்கி இருந்த கூடாரத்துலே கொண்டு போன கோலவகைகளை மேசையில் பரப்பி, கோல பார்டர்கள் வச்சு அலங்கரிச்சு,  கோபால் கொண்டுவந்த போஸ்ட்டர்களை வச்சு அலங்கரிச்சுட்டோம்.  வட இந்தியத்தோழி  மோனிகா,  பலகையில்  சாக்பீஸால் வரைஞ்சுகிட்டு வந்துருந்தாங்க.  அதுலே கலர்ப்பொடி போட்டு நிரப்பணும்.

பனிரெண்டரைக்கே வந்துருவேன். நீங்களும் வந்துருங்கன்னு சொன்ன  நம்ம ஏற்பாட்டாளர் ஆளையே காணோம். ரெண்டரைக்கு  வந்தவங்க அவுங்க பாட்டுக்கு  நம்ம ஸ்டாலைக் கடந்து  மேடை ஏற்பாடுகள் நடக்கும் இடத்துக்குப் போறாங்க. பவுடர் பவுடர்ன்னு  கூவறோம்.  என்ன பவுடர்ன்னு திருப்பிக் கேக்கறாங்க.  நான் தென்னிந்தியக் கோலம். கையால் வரைஞ்சு காமிச்சுருவேன். நார்த் இந்தியா ரங்கோலி?  பாவம். மோனிகா..........  பயந்துபோய் நிக்கறாங்க.

 "நானா கொண்டு வரணும்?  "

அடப்பாவி............. சொன்னது ஒன்னும் நினைவில்லையா? 

 "வோ தோ ஹோ  ஜாயேகா...... "

 "கபி?  தின் கதம் ஹோனேகே பாத்?  "

" ஓ.....  ஹோ  ஜாயேகா...... "

ரெண்டரைக்கே மக்கள்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க.  நம்ம ஸ்டால் பக்கம் ஆட்கள் பார்வையிட வர்றாங்க.  கோலம்போடு கோலம் போடுன்னு கோபால் கூவ.... பரபரன்னு ஒரு அஞ்சாறு  வெள்ளைப் பேப்பர்களில்  சின்னச்சின்னக் கோலமா வரைஞ்சு தள்ளிட்டேன்.  சின்னப்புள்ளைகளை வாவான்னு கூப்பிட்டு கோலம் போட்டுப்பாருங்கன்னு ஊக்கு விக்கறார் கோபால். அதுகள் முழிக்க,  சுலபமான கோலம் சொல்லித் தரேன்னு , ரெண்டு புள்ளி, மூணு புள்ளி வகைகளில் ஆரம்பிச்சேன். ஒரு புள்ளின்னா இன்னும் சுலபமா இருந்துருக்கும்!!




 எங்க பேட்டை பார்லிமெண்ட் அங்கம் மீகன் வுட்ஸ் வந்துருந்தாங்க. கோலம் போட வராதாம்!!!! சரி... அப்ப போஸ் கொடுத்துட்டுப் போங்க:-))))



அங்கே  இங்கேன்னு பாய்ஞ்சு இண்டியன் கடை போட்டுருக்கும் அஷோக்கிடம் சொல்லி அவர் கடையிலிருந்து  கலர் வருமுன்னு சொல்லிட்டு போயிட்டாங்க.  இண்டியன் க்ளப் தலைவி கலர் போட்ட அரிசிகளை நாலைஞ்சு கிண்ணங்களில் கொண்டு வந்ததும் கொஞ்சம் உசுரு வந்துச்சு.  மோனிகாவிடம் கொடுத்தேன்.  பிள்ளைகளும்  அரிசியை எடுத்து  ரங்கோலி போட ஆரம்பிச்சு பலகை கொஞ்சம் கொஞ்சமா  அழகாகிக்கிட்டே இருந்துச்சு.



இதுக்கிடையிலே   இந்தப் பகுதியிலேயே ஒரு ஓரமா  சின்னதா ஒரு மேடையில்  புடவை ஷோ, பரத நாட்டியம் ஷோ, பாலிவுட் டான்ஸ்,பாங்ரா டான்ஸ்ன்னு   நடக்குது.  மக்கள் கூட்டம் மேடையைச் சுத்தி. நமக்கோ...பாட்டுச் சத்தம் கேக்குதே தவிர  ஒன்னுமே தெரியலை.  தெரிஞ்சதெல்லாம்  பார்வையாளர் முதுகுகளே!

நம்ம ஸ்டாலில் மட்டும் கூட்டம் குறையவே இல்லை. பசங்களுக்கு ஆக்டிவிட்டி ஒருத்தர் மாத்தி ஒருத்தர்ன்னு என்பதால்  வந்துக்கிட்டே இருக்காங்க.  நானும் கோலம் சொல்லிக்கொடுத்து அவுங்களையே வரையவிட்டு  அந்தக் காகிதத்தை அவுங்களுக்கே கொடுத்துக்கிட்டு இருந்தேன்.  மூணு முதல் அஞ்சு வரைதான் நமக்கு டெமோ என்பதால்  அப்புறம் பார்த்துக்கிட்டாப் போச்சுன்னு தோணல்.



கேரளா கிளப் # 2  ஸ்டாலில் புதுசா இருந்த ஆப்பச் சட்டி!!!

என்னால் ஸ்டாலை விட்டு நகர முடியலைன்னு கோபால் போய் படங்கள் எடுத்துக்கிட்டு வந்தார். அவருக்கு நன்றிகள்.,

பதிவின் நீளம் கருதி, மீதி நாளை:-)



Friday, October 19, 2012

இஷ்ட தெய்வம் இருக்கும், இஷ்டக் கோவில்!!


"ரொம்பப் பணக்காரக்கோவிலு போல! நவகிரஹம்கூட தங்கக் கவசம் போட்டுருக்கு "

ஒரு மூணு வருசத்துக்கு முன்னே  இதே சமயம் பெரியத்தை சொன்னது மனசில் வந்துபோச்சு.

எல்லாக் கோவிலும் பணக்காரக்கோவில்தான். என்ன ஒன்னு.... சாமிக் காசை முழுங்காம இருக்கும் நிர்வாகம் அமையணும்.  இங்கே அமைஞ்சுருக்கு! அடையார் அநந்தபத்மநாபன் கோவில்.

இந்தப் பயணத்தில் ஊனுடம்பில் ஒரு மூணுமுறை போய்வந்தேன். ஆனால் கடந்த மூணு வருசத்தில் தினம் ஒருமுறையாவது உள்ளே போய்  சுத்தாமல் வந்ததில்லை.  ஞானக்கண் இருக்கே! இஷ்ட தெய்வங்கள் வரிசையில் பெருமாள்தான் இருக்கார் ஆனால் இஷ்டக்கோவில் வரிசையில் முதலிடம் இதுக்குத்தான். ரெண்டாவது இடம் நம்ம சிங்கைச் சீனு.  இந்த ரெண்டு இடங்களிலும் நிம்மதியா சந்நிதிக்கு எதிரில் ஒரு பக்கம் உக்கார்ந்து மனசு போதுமுன்னு சொல்லும்வரை எம்பெருமாளைக் கண் எதிரில் பார்த்தபடியே இருக்க தடை ஏதும் இல்லை.  ஒரு ஜருகோ.... இல்லை போ போ என்ற கூச்சலோ இல்லாத இடங்கள்.

கோவிலுக்கு வயசு இப்போ அம்பது. பொன்விழா ஆண்டு நடக்குது.  போனமாசம் கும்பாபிஷேகம் நடந்து எல்லாமே பளிச் பளிச்.  கேட்டைக் கடந்தால் தங்கக்கொடி மரம் ஜொலிக்கும் வளாகம். நமக்கிடது பக்கம் புள்ளையார். இஷ்ட சித்தி விநாயகர். இவருக்கு ரெண்டு அவுட்ஃபிட் இருக்கு. தங்கக்கவசம் ஒன்னு. வெள்ளை சிகப்பு பச்சைன்னு தகதகன்னு வெளிச்சம்போடும் கல்வச்ச கவசம் ஒன்னு. நாளின் முக்கியத்துவத்துக்கு ஏத்தபடி போட்டுக்குவார். தெருவில் இருந்து பார்த்தால்கூட கண்ணுக்குப் புலப்படுவார். அதுக்கேத்தபடி சுத்துச்சுவரில் இவருக்கு முன்னால் மட்டும் கம்பிகள் . புதுசா கம்பிக்கு இந்தாண்டை தெருவில் சின்னதா ஒரு தொட்டி! உள்ளே கருங்கல் பதிச்சு இருக்கு. சிதர்தேங்காய் உடைக்க உண்டாக்கிய ஏற்பாடு. அப்பாடா.... இப்பவாவது தோணுச்சே!  (செட்டி நாடு கோவில்களில்தான் முதல்முதலா இப்படி ஒன்னு பார்த்து , ஐடியா சூப்பர்ன்னு அதிசயிச்சேன்) 

நம்ம புள்ளையாருக்குக் கவசம் போரடிச்சால் சந்தனக்காப்பு!  அதுலேகூடப் பாருங்க அநந்தபத்மநாபனைப்போல ஒரு ஸ்டைல் காமிக்கிறதை!!!!

வலது பக்கம் நவகிரகங்களுக்கான தனிச் சந்நிதி.  எல்லோருக்கும் தங்கக் கவசங்கள். சுற்றி வந்து கும்பிட,  ஆள்போகும் அளவில் குட்டிப்பிரகாரம். கொடிமரத்துக்கு அந்தாண்டை கைகூப்பிய நிலையில் நிற்கும் பெரிய திருவடி. அவர் கண் எதிரில் ஒரு நாற்பதடி  தூரத்தில் கருவறை. அநந்தன் மேல் பள்ளி கொண்ட பரந்தாமன் பதுமநாபன்.

ரொம்பப்பெரிய பிரமாண்டமான கோவில் கிடையாது. கோட்டைவாசல் கதவுகளைக் கடந்தால் உட்ப்ரகாரத்துக்குள் இருப்போம்.  உள்ளதே ஒரு பிரகாரம்தான்.  நடுவில் கருவறை. தலை, மார்பு, திருவடித்தாமரைன்னு மூன்று வாசல்களில் பரமனை சேவிக்கலாம்.  அச்சு அசலா திரு அநந்தபுரம் டிஸைனே!

கோவில் அடையாறுக்கு வந்ததில் திருவாங்கூர் மகாராஜா சித்திரைத்திருநாளின் பங்கே முழுக்க முழுக்கன்னு சொல்லலாம். மதராஸில் இருக்கும் அரசரின் சொந்த இடத்தில் கோவில் கட்டலாமா என்று ஆலோசனைகள் வந்தப்ப.... மக்கள் வந்து போக ஏதுவா உள்ள பொது இடத்தில் கட்டலாமுன்னு சொல்லி அதுக்கான ஏற்பாடுகளையும் செஞ்சு நிலம் வாங்கித்தந்ததும்  இவரே!  கார்னர் சைட் ஆனது இன்னும் விசேஷம்.

 வாசல் கடந்து ஒரு அடி உள்ளே வச்சு பெருமாளைப் பார்த்தபடி நிற்கிறோம். பிரகாரத்தின் முன்பகுதியில் இரண்டு மூலைகளிலும் நமக்கு வலப்பக்கம் ஹனுமனுக்கும் இடதுபக்கம்  கருடருக்கும் தனித்தனியாக சந்நிதிகள். மூணடி உயரம் உள்ள சிலைகள்.

கருவறையின் வெளியே ஒரு பத்தடி அகல முன்மண்டபம். கூடவே ஒரு நாலடி உசரக்  கம்பித்தடுப்பு. பட்டர்கள் நடமாட்டம் நம் பார்வையில் குறுக்கிடுவதில்லை. நிம்மதியாக தரிசனம் செய்யலாம். அடியும் முடியும் நடுவில் உடலுமாக் காண்பிக்கிறான். ஆனால் தேடிவரும் மக்களைத் திரும்பிப் பார்க்கக்கூடாதோ?  அலட்சியமா வானம் பார்த்த பார்வை. வலது கை நீட்டி தாழே இருக்கும் சிவனுக்கு ஒரு தடவல்.

முன்பக்கம்  தரையில் பக்கத்துக்கொன்றாக தேவியர் இருவரும், முனிவர்கள் இருவரும்.  நடுவில் சின்ன மரமேடையில் உலோகச்சிலைகள். (உற்சவர் என்று சொல்ல இயலாது. )ஆரத்தியும் தீர்த்தமும் சடாரியும்  அப்பப்ப லபித்துக்கொண்டே இருக்கு.


இந்தக் கருவறை முன்மண்டபத்துக்கு தரைக்கும் சுவர்களுக்கும் டைல்ஸ் மாற்றும்வேலை போன வருசம்(2011) ஆரம்பிச்சுருந்தாங்க. நியூஸி திரும்புமுன் சென்னை போனபோது பார்த்தது. இப்போ எல்லா வேலைகளும் முடிஞ்சு பொன்வண்ண டைல்ஸ்களும், பொற்தகடு போர்த்திய  மூன்று செட் கதவுகளும், மேலே வரிசைகட்டி நின்னு  மின்னும் மணிகளுமா  கண்ணை அப்படியே இழுத்துவச்சுக் கட்டிப்போடுதே!!!!



சந்நிதிகளை வலம்வரலாம் என்று இடப்பக்கம் பெரியதிருவடியைச் சுற்றிவந்து வணங்கி  நேராக நடக்கிறோம்.  கோவில் வாகனங்கள் ஹனுமன், பெரிய திருவடி, வெள்ளையானை, சிங்கம் எல்லாம் தூசி புகாமல் பத்திரமாக அததுக்குரிய  ஸீத்ரூ ப்ளாஸ்டிக் மூடிகளுக்குள் ! நமக்கு இடது பக்கத்தில் மடைப்பள்ளி.
மடைப்பள்ளிச் சுவரில் கொஞ்சம் உசரத்தில் புதுசா ஒரு அன்னபூரணி! சமீபத்திய வரவு. புடைப்புச் சிற்பம். கையில் கலசமும் கரண்டியுமா இருக்காள்.  முகத்தில் பெருசா ரெண்டு முட்டைக் கண்கள்.  அதுலே லேசா ஒரு கோபம் தெரியுதோ?  ஏய்.... சத்தம் கித்தம் போடாம லைனில் வரிசையா வந்தாத்தான் சோறு..... முக சாடையும் லேசா ஆணைப்போல இருக்கே! அன்னபூரணிக்குக் கண்களில் கனிவும், லக்ஷ்மீகரமான களையுள்ள முகமும் இருக்கவேணாமா? கருணைதெய்வமா இருக்கவேண்டியவளை இப்படிச் செஞ்சது யார்?


வலப்பக்கம் கருவறைச்சுவரில் ஸ்ரீ சுதர்சனர். இவருக்கு நேரெதிரா இப்ப ஒரு புது வாசல் வந்துருக்கு! வெளியே எட்டிப் பார்த்தால் உணவுக்கூடம் கட்டும் ஏற்பாடு. கூடவே கழிப்பறைகள்.  அவசியமானவைகள்.  ரொம்ப நல்லது.

பிரகாரத்தில் மேற்கொண்டு காலை வீசிப்போட்டால் மூலையில் பெரிய கண்ணாடி அறை அமைப்பில் தங்க ரதம். கோவிலுக்கு ஒரு தொகை கட்டினால்  நாம் குறித்த நாளில் ஜொலிக்கும் தங்கரதத்தை நாமே உள்பிரகாரத்தைச் சுற்றி இழுத்து வலம் வரலாம்.

இது இல்லாமல் கோவிலுக்கு ஒரு பெரிய தேரும் உண்டு. எல்லா மாசங்களிலும் திருவோணம் நட்சத்திர தினங்களில் வீதியுலா கோவிலையொட்டி இருக்கும் நாலுவீதிகளிலும் சுற்றிவரும். இதுக்கும் விருப்பம் இருந்தால் நாம் ஒரு தொகை கட்டி ஸ்பான்ஸார் செஞ்சுக்கலாம். வருசத்துக்கு பனிரெண்டு நாட்கள் மட்டுமே என்பதால் ஏகப்பட்ட டிமாண்ட். இதைத்தவிர விசேஷ நாட்களிலும் ப்ரம்மோத்ஸவ காலங்களிலும் பெரியதேர் புறப்பாடு உண்டு. ரொம்ப சிஸ்டமேடிக்கா உற்சவர்களை ஆடாமல் அசையாமல்  ஃபோர்க்லிஃப்டில் வச்சு  தேரில் ஏத்தறதும் இறக்குறதும் எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.




தங்கத்தேரைப் பார்த்துட்டு .இப்ப வலப்பக்கம் திரும்பறோம். அலர்மேல்மங்கைத்தாயாரும் ஸ்ரீநிவாஸனுமா பெரிய படங்கள்.  கீழே சின்ன மண்டபத்தில் குழலூதும் ஸ்ரீவேணுகோபாலன். பெருசு ஒன்னும் சிறிசு ரெண்டுமா மூணு சிலைகள்.  நமக்கு வலப்பக்கம் கருவறையின் பின்புறச்சுவர். மாடத்தில் லக்ஷ்மிநரசிம்மர். அவருக்கு நேரெதிரா கோவிலின் பின்வாசல். பிரகாரத்துலேயே கோவிலின் தலவிருட்சம்.மரத்தின் உடல்மட்டும் காமிக்குது. தலைப்பக்கம் மேற்கூரைக்கு வெளிப்பக்கம்!

இன்னும் நாலடியில் எதிர்மூலைக்குப்போயிருவோம். அழகான ஒரு அறை. கோவிலில் உள்ள எல்லா மூலவர்களுக்கான உற்சவர்களின் கூட்டம்! எனக்கு ரொம்பவே பிடிச்ச இடம். மினுமினுன்ற ஜொலிப்பில் தகதகன்னு கண்ணைப்பறிக்கும் அழகு!  ரெண்டு படி ஏறிக் கம்பிக்கதவுக்குப்பின்னே பார்க்கலாம். படிகளின் ஓரம் ரெண்டு யானைகள்.  புறப்பாடு தினங்களில் உற்சவர்களை வெளியே கொண்டுவந்து வச்சு அலங்கரிக்கிறாங்க. கண்கொள்ளாக் காட்சி.

இந்த அறைக்கு நேரெதிரே எதிர் மூலையில் ஆஞ்சநேயர் சந்நிதி வந்துருது,  மற்றபடி நமக்கு வலப்பக்கம் கருவறை வெளிச்சுவர் மாடத்தில் ஸ்ரீ விஷ்ணுதுர்கை.  இவளுக்கு நேரெதிரில் பிரமாண்டமான கதவு.  சொர்க்க வாசல். கருவறையைச் சுற்றி இருக்கும் நாலு வாசல்களுக்குமே பெரிய பெரிய கதவுகள்தான். நாலு நாலரை மீட்டர் உசரம் இருக்கும்! (இருக்குமோ???)

இந்த சொர்க்கவாசல் கதவு(ம்) இப்போ தங்கமே தங்கம்!!!!  அழகழகான  சின்னச் சின்ன தங்கப்படங்களை வச்சு அடுக்குனதைப்போல விஷ்ணுவின் பல அவதாரங்களையும் லீலைகளையும் விளக்கும் அமைப்பு! கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம். முழுக்கதவுக்கும் ஒரு கண்ணாடிச் சட்டம். டபுள் கதவு! நம்மாட்களைப் பற்றி முழுசும் தெரிஞ்சுவச்சுருக்கும் நிர்வாகத்தினரை என்ன சொல்லி பாராட்ட?  ஹ...ங்.... முழுசும் தங்கமா...... தொட்டுப்பார்க்கத் துடிக்கும் கைகளைப்பற்றி .....

கைகள் வெறுமையாப்போயிருதேன்னு பக்கத்துலே ஒரு மேசை அமைப்பில் பெருமாளுக்குச் சாத்திய மலர்களும் துளசியும், ஒரு அகலமான பாத்திரத்தில் குங்குமம். சில நாட்களில் சந்தனமும் உண்டு. இதெல்லாம் சந்தனக்காப்பு போட்ட மறுநாள் ஸ்பெஷல்.

ஆஞ்சநேயனை வணங்கி வலம் வந்து மறுபடியும் பெருமாளை ஒருமுறை ஸேவிச்சுக்கிட்டு  ஒரு அரைமணி முகமோ இல்லை மலரடிகளோ பார்த்துக்கிட்டே தூணோரம் சாய்ஞ்சுக்கலாம். விசேஷ நாட்களில்  கருவறை சமாச்சாரங்கள் எல்லாம்  ரெண்டு CCTV யில் நேரடி ஒளிபரப்பு. நல்லவேளை கேமெராவை கடவுளுக்குக் காமிக்கக்கூடாதுன்னு  யாரும் தடை சொல்லலை!

வெளியே போய் இடக்கைப் பக்கமுள்ள நவகிரகங்களைச் சுற்றி வணங்கிட்டு  தொட்டடுத்துள்ள ஹாலைக் கட்டாயம் எட்டிப் பார்ப்பேன். எதாவது நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளோ இல்லை விசேஷங்களோ நடந்துக்கிட்டுத்தான் இருக்கும் முக்கால்வாசி தினங்களில்.,ஏகப்பட்ட கச்சேரிகளும் கலை நிகழ்ச்சிகளுமா..... எல்லாமே  இலவசம்!  நவராத்ரி சமயமானால்  கோவில் கொலு இங்கேதான். கூடவே கலைநிகழ்ச்சிகளும் அமர்க்களப்படும். நல்ல பெரிய ஹால். நாற்காலிகளும் ஏராளம். இந்த ஹாலை கல்யாணம், நிச்சயதார்த்தம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஒரு தொகை கொடுத்து, வாடகைக்கு எடுத்துக்கலாம்.  மாடியில் பெரிய டைனிங் ஹாலும் உண்டு.



நவகிரக சந்நிதிக்கு முன்புறம் யாகசாலையும் தொட்டடுத்து பெரிய தேர் நிற்க ஷெட் ( இது தெருப்பக்கம் திறப்புள்ளது) இப்படி சகல வசதிகளோடு  எல்லாமே அம்சமா அமைஞ்சுருக்கு இங்கே!

நவகிரக சந்நிதிக்கும் ஹாலுக்கும் இடைப்பட்ட ஒரு எட்டு/ஒன்பது அடி அகல பாதை ஒன்னு நம்மைக் கொண்டுப்போய்ச் சேர்க்குமிடம் அரசமரத்தடி சிவன் சந்நிதி. நல்ல பெரிய மேடையில் மரமும் அதைச்சுற்றி நாகர்களும், பிள்ளையாரும் அபிஷேகப்பிரியனுக்கு தண்ணீர் தலையில் சொட்டிக்கொண்டே இருக்கும்படியான கலச அமைப்புமா இருக்கு. கூடவே ஒரு துளசி மாடமும்!

பாதை முழுசுக்கும் இப்போ அருமையான டைல்ஸ் பாவி இருக்காங்க. பாதையின் இரண்டு பக்கங்களிலும் வரிசையா பெஞ்சுகள்.  கோவிலுக்குப் போனால் கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு வரணும் என்ற சாஸ்த்திர சம்ப்ரதாயப்படி ஒரு அஞ்சு நிமிசம் உக்கார்ந்து ஆனந்திக்கலாம்.
பாதையின் நடுப்பகுதிக்குக்கிட்டே சொர்க்கவாசலின் வெளிப்புறக் கதவு இருக்கும்!

நாம் ஒரு நாள் போனது சனிக்கிழமையாக இருந்துச்சு. புரட்டாசி சனிக்கிழமை என்பதால் பெருமாள் முன்னே  பிரபந்தம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. தமிழ் ஓசை கேட்டு அவன் முகம் திரும்பாதான்னு  எனக்கொரு நப்பாசை இருந்ததென்னவொ நிஜம்.











Tuesday, October 16, 2012

நவராத்ரி 2012

அனைவருக்கும் வணக்கம்.

 வழக்கம்போல் அஞ்சே படிகள். கலிகாலத்துலே கைவிடப்பட்டவைகளைக் கொண்டு படிகள் ஒரு மேடையில்!


 பிஹைண்ட் த ஸீன்ஸ்........ இவை.





கட்டியவருக்கு நன்றிகள்.



 வீட்டுப்பொண் ரெடியாகிட்டாள். அவளுக்கான நகைநட்டுக்கள்(???) எல்லாம் வாங்கியாந்தேன் இந்த பயணத்தில். புடவைதான் குவாலிட்டி சரி இல்லை. எல்லாத்திலும் போலி வந்தது போல் இதிலும்:(


முதல்படி: தாயார் பெருமாள் (மரப்பாச்சிகள்) கணக்குப்புள்ளையார்,  ஆனந்தநிலையம், கண்ணப் புள்ளையார்.

இரண்டாம் படி:  கண்ணன்ஸ் ஒன்லி:-)  வெண்ணைத்தாழிக் கண்ணன், மாடு மேய்க்கும் கண்ணன், உரலில் கட்டுண்ட கண்ணன்.

மூன்றாம் படி:  குகனின் படகில் கங்கையைக் கடக்கும் ஸ்ரீ ராமன், சீதை & லக்ஷ்மணன்.  குகனின் மெய்க்காப்பாளர்கள் , வனத்தில் சில (நியூஸி) பறவையினம்.

நாலாம் படி: ( இந்திர லோக)நாட்டியம். கச்சேரி, மாட்டுவண்டியில் வந்த புதுக் கல்யாண ஜோடி.

அஞ்சாம் படி:  யானைப்படை, குதிரைப்படை & பூனைப்படைகள்!

மத்ததெல்லாம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ்:-)))))

கோலம்: கிரி ட்ரேடர்ஸ் புதுவரவு!


பிரசாதம் : இன்னும் வெந்துக்கிட்டு இருக்கு. முடிஞ்சதும் படம் வரும்:-))))

(போட்டாச்சு. போனமுறை சரியாக வேகலைன்னு கீதா சாம்பசிவம் சொன்னதால் இந்தமுறை ரொம்பநேரம் வேகவிட்டுட்டேன்:-)

அனைவருக்கும் நவராத்ரி விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள். கட்டாயம் வந்து ஒரு பாட்டுப் பாடிட்டு, சுண்டல் வாங்கிப்போகணுமுன்னு தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.