Wednesday, September 05, 2012

கற்றதும் பெற்றதும்

கடந்துபோன (?) குளிர்காலத்தில் செய்த பரிசோதனைகளும் முடிவுகளும் என்னன்னு பார்க்கலாமா?

 தோட்டம்தான் பாடாய்ப் படுத்திருது. நம்ம ஊர்வேற பெண்களூருக்கு தங்கை என்ற உறவுமுறையில் இருப்பதால் தோட்டநகரம் என்ற பெயரைக் காப்பாத்த வீட்டுவீட்டுக்குக் கொஞ்சமாவது தோட்டப் பராமரிப்பு தேவைப்படுதே!

 முதலில் நம்ம தாமரைக்குளம். குளிர் காலம் வரும்போது டிவியில் வரும் வெதர் ரிப்போர்ட் பார்த்துட்டு ( இங்கே இதை 99% நம்பலாம்) பத்து டிகிரிக்குக் கீழே என்றால் ஒரு தெர்மாக்கோல் பலகை(??!!) போட்டு சாயங்காலம் அஞ்சு மணிக்கு மூடி வைக்கணும். காத்தில் பறந்து போகாமல் இருக்க நாலு மூலையிலும் ரொம்பகனமான ஒரு செங்கல்.(நைட் ஸ்டோரேஜ் யூனிட்டில் இருந்து எடுத்தது) வைக்கணும். காலையில் மறக்காமல் இதை அகற்றிடணும். திரும்ப மாலையில் இதுபோல......

 தண்ணீர் உறையும் குளிர்காலம் வந்துட்டால் புழக்கடைப்பக்கம் போகவே படு சோம்பல். ஆனாலும் தாமரையைக் காப்பாத்த அஞ்சு வருசமாப் படாத பாடு பட்டுட்டு, வீட்டை வாடகைக்கு விட்டுட்டு இந்தியா வந்தப்பக், குடித்தனக்காரர்கள் நமக்கு இனி தோட்ட வேலையே வேணாமுன்னு சுத்தமா எல்லாத்தையும் சாகடிச்சுட்டுப் போயிருந்தாங்க.

 எதையும் தாங்கும் இதயம் இதையும் தாங்குச்சு. வாட்டர்கார்டன் கடையில் சொல்லி வச்சு திரும்பத் தாமரைக்கிழங்கு வாங்கி சேவைகள் செய்து அதுலே மொட்டு வந்து மலர்ந்ததும்தான் மஹாலக்ஷ்மி வந்துட்டாடான்னு நிம்மதி.

 இந்த வருசக்குளிர் ஆரம்பிக்குமுன் பரிசோதனையா இருக்கட்டுமுன்னு ரெண்டு செடிகளையும் பக்கெட்களுக்கு இடம் மாற்றி கன்ஸர்வேட்டரியில் வச்சேன். மூணு மாசம் கப்சுன்னு இருந்தவை ஆகஸ்ட் கடைசியில் புது இலைகளை வெளியே கொண்டுவந்து காமிச்சது.


 எங்கூரில் செப்டம்பர் ஒன்று முதல் வசந்தம் என்பதால் (நம்பிக்கைதான் வாழ்க்கை) தாமரைகளை குளத்திற்கு மாத்துனேன். குட்டியா மூணு மொட்டுகள் அடிப்பாகத்துலே தலை நீட்டுது:-)

 போகைன்வில்லாச் செடியையும் கொய்யாமரத்தையும்(?) காக்டெஸ் கன்ஸர்வேட்டரியில் (ரெண்டு கன்ஸர்வேட்டரி இருப்பதால் வேறு படுத்திக்காட்ட இப்படி ஒரு அடையாளப்பெயர் கேட்டோ! )

 குளிர்கால இடமாற்றமுன்னு வச்சதால் அவை இரண்டும் தப்பிச்சது மட்டுமில்லாமல் காகிதப்பூ பூக்கத்தொடங்கி குளிர்காலமுழுசும் கலர் காமிச்சுக்கிட்டே இருந்துச்சு. கொய்யாவும் ஏற்கெனவே இருந்த பிஞ்சுகளையெல்லாம் கொட்டித் தீர்க்காம நிதானமா தினம் ஒன்னு என்று மூத்துப் பழுத்த பழத்தை சப்ளை செஞ்சது. ( தினம் ஃப்ரெஷ் ஃப்ரூட் சாப்பிடணுமுன்னு டாக்குட்டர் சொல்றாங்க)


 பாலியந்தஸ் என்று சொல்லப்படும் ப்ரிம்ரோஸ் செடிகள் வெளியில் தோட்டத்தில் போன சம்மருக்கு நட்டவைகள் குளிர் ஃப்ராஸ்ட் எல்லாத்தையும்தாக்குப்பிடிச்சு நின்னது இதுவரை நான் கவனிக்காத ஒரு விஷயம். குளிர்கால டிப்ரெஷனைப் போக்கவும் கலர் பார்க்கவும்(!) சில செடிகளை வாங்கியாந்து கன்ஸர்வேட்டரியில் வச்சுருந்தேன்.

 மருக்கொழுந்துச்செடி ( இங்கே இதுக்கு மார்ஜோரம் என்னும் பெயர்) கொஞ்சம் காய்ஞ்சமாதிரி இருந்தாலும் தப்பிப் பிழைச்சுருச்சு. லாவண்டரும் அப்படியே! இவையெல்லாம் வெளியில் இருந்தன.

 எலுமிச்சை மண்டையைப் போட்டுருச்சு:(

 நம்ம வீட்டுலே ஒரு ஆறுமாசமா புதுவரவு வெத்திலைச்செடி! எட்டு இலை வந்தாச்சு. இனி வெத்தலைபாக்கு வச்சு(ம்) அழைக்கலாம்.

 இம்பேஷின்ஸ் என்று ஒரு வகைச்செடி. இதுவும் பெயர் தெரியாத இன்னொரு செடியும் கன்ஸர்வேட்டரியிலே வச்சுருந்ததால் இன்னும் உயிரோடும் மலரோடும் இருக்கு:-)



 ஏதோ மீலி பக்ஸ் பீடிக்கும் நோய் வந்து சாகத்தெரிஞ்ச வாழையை மனசைக் கல்லாக்கிக்கிட்டு இலைகளைத் தரிச்சதால் ப்ளேகேர்ள் மாதிரி நின்னது இப்போ இன்னும் நாலு இலைகளோடு!

 காஃபிச் செடியும் இதே மீலிபக்கால் மண்டையைப்போட்டதால் சொந்தக்காஃபிக்கொட்டையில் காஃபி குடிக்கும் அதிர்ஷ்டம் கைநழுவிப்போயிருச்சு:( மொட்டை அடிச்சு வச்சுருக்கேன். வேரிலும் தண்டிலும் உயிர் உள்ள அடையாளம் தெரியுது. பார்க்கலாம்.

 கருவேப்பிலையும் நோயில் அடிபட்டு மீண்டு வந்துருக்கு.(டச் வுட்)

 ஏர்லி சியர்ஸ் என்று பெயர் உள்ள ஒரு வசந்தகாலப்பூக்கள் பல்பு நட்டதால் முளைச்சுவந்து மலர்களோடு நிக்குது. டாஃபோடில் குடும்பமுன்னு சொல்லிக்கலாம். ஒரு கொத்தில் நாலைஞ்சு வெள்ளைப்பூக்கள். பார்க்க நம்மூர் குண்டு மல்லிபோல இருக்கு. நல்ல மனசை மயக்கும் நல்ல நறுமணம்.

 ஹையஸிந்த Hyacinths மலர்கள் தானாகவே பூக்கத்தொடங்கியாச்சு. அஞ்சாறு வருசமாக் கடமை தவறாமல் செயல்படும் வகை!

 எல்லோரும் அவரவர் கடமையை மறக்கூடாதுன்னு செடிகள் நமக்குக் கற்பிக்கின்றனவே!!!! கடமை கடமைன்னதும் இன்னொரு முக்கிய விஷயம் நினைவுக்கு வருது. நமக்கு எழுத்து மட்டுமா கடமை? பயணம் கூடத்தானே?

 சனிக்கிழமை பயணம் போகணும். சிங்காரச்சென்னை அழைத்துவிட்டது.   துளசிதளம் மாணவக் கண்மணிகளுக்கு லீவு விட்டாச்சு.  இனி அடுத்த மாசம்தான் வகுப்புக்கு வரணும்,கேட்டோ!

டீச்சரைக்காணோமுன்னு யாரும் அழாதீங்க:-)

 ஆங்............... டீச்சர்ஸ் டே வேற இன்னிக்கு. யாருக்காவது நினைவிருக்கோ? அனுபவப்பாடம் சொல்லித்தரும் இயற்கையை விட மேலான ஆசிரியர்கள் உண்டோ?

 அகில உலக ஆசிரியர்களுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

Monday, September 03, 2012

நோகாமல் வடை 'சுடுவது' எப்படி?

என் சொல்பேச்சு கேக்காத பலகாரங்களில் எப்பவும் முன்னுக்கு வந்து நிற்பது இந்த வடைதாங்க. அதிலும் உளுந்துவடைதான் சரியான தகராறு பிடிச்சது. 

நமக்கு ஃபேவரிட் சமாச்சாரம் மசால்வடைதான். போன ஜென்மத்தில் எலியாக இருந்ததன் விளைவு. அதுக்காக மத்த வடைகளைப்  புறம் தள்ளக் கூடுமா?

 உளுந்தை ஊறப்போட்டு எவ்வளவுதான் பக்குவமா அரைச்சாலும் சுடும்போது அது போண்டா! சரி...பதிவர் சந்திப்புக்கு ஆச்சுன்னு வச்சுக்கலாம்தான். ஆனால் சக பதிவருக்கு எங்கே போறது?

 நேயடுவுக்கு வடை மாலை போடணுமுன்னா கடைசியில் அது போண்டா மாலையாத்தான் முடியும்! அவர் கொடுத்து வச்சது அவ்ளோதான். அதுக்கு யார் என்ன செய்ய முடியும், சொல்லுங்க?

 வடைவரலைன்னு புலம்புனதைக்கேட்ட தோழி (இலங்கைத்தமிழர்) ஓசைப்படாம ஒரு நாள் வடைமாலை கொண்டுவந்து நம்ம அனுமனுக்குப் போட்டார். வடிவம் அளவு, நடுவில் உள்ள ஓட்டை எல்லாம் சரியாவே இருந்துச்சு. ஆனால் இது வடைமாலைக்கான (அப்ரூவ்டு )வடை அல்ல. ருசி அருமை. இதுக்குத்தான் நேயடு வீட்டில் இருக்கணும். அவர்தயவில் நமக்கு வடை கிடைச்சுருது பாருங்க;-)

 தோழியும் வடை ரகசியங்கள் பலதையும் சொல்லிக் கொடுத்தாங்க. மாவு அரைச்சு அதை ஃப்ரிஜ்ஜுலே ஒரு மணி நேரம் போல வச்சுட்டா கெட்டிப்பட்டுரும். வடை தட்ட எளிது.

 இன்னொரு சமையல் குறிப்பில் இருந்துச்சு, அரைமணி நேரம் மட்டுமே உளுந்தை ஊறவைக்கணும். இப்படி வடைக்குறிப்பை எங்கே பார்த்தாலும் ஆவலோடு படிச்சுருவேன். அப்படியாவது வடைகலை கைக்கு வருதான்னு.

 ஊஹூம்....... 

ஒரு சமயம் இங்கே புதுசா ஒரு இண்டியன் கடையில்( வந்து ரெண்டரை வருசமாச்சுதாம். ஆனால் அப்போ நான் நாட்டில் இல்லை!) ஃப்ரீஸர் செக்‌ஷனில் காய்களைத் தேடும்போது பளிச்ன்னு கண்ணில் ஆப்ட்டது ரெடி டு ஈட் உளுந்துவடை. ஆஹா...... இப்படியெல்லாம் வர ஆரம்பிச்சுருச்சா என்ன?

 அந்தப்பகுதியை நிதானமா ஆராய்ஞ்சதில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் எனக்காகவே இருக்கு! பருப்பு வடை, உளுந்துவடைன்னு வடைகளில் ரெண்டு பிரிவு. கேரளாவில் இருந்து வரும் ஐட்டம்ஸ். சாம்பிள் பார்க்க ரெண்டும் வாங்கியாந்தேன்.

 உளுந்துவடையுடன் தேங்காய்ச் சட்டினி. பேஷ் பேஷ்! பேக்கெட்டில் ஆறு வடைகள். ஒவ்வொன்னும் குண்டு குண்டாய் பெரூசு! உறைஞ்சு போய் கிடக்கு. ஒரு மணி நேரம் வெளியில் எடுத்துவச்சு ரூம் டெம்ப்ரேச்சருக்கு வந்ததும் கொஞ்சம் எண்ணெயில் இன்னொருக்கா ஒரு ரெண்டு நிமிசம் பொரிச்செடுக்கணும். லேசா ஒரு கரகரப்போட வரும். இல்லைன்னா மைக்ரோவேவில் சூடாக்கலாம். க்றிஸ்ப்பா இருக்காது. வடிவம் எல்லாம் பொதிக்குள்ளே அமுங்கி கொஞ்சம் இப்படி அப்படின்னுதான் இருக்கு. ஆனால் ருசி ஓகே! கையால் கொஞ்சம் அமுக்கினால் எண்ணெய் கூடுதலா இருப்பது தெரியுது. இவ்ளோ எண்ணெய் எதுக்கு? உடம்புக்கு நல்லதில்லையே:( அடங்கு மனசே..... தினமுமா தின்னப்போறே? என்றைக்காவது ஒரு நாள்தானே? வடை ஆசையையும் ருசியையும் மறக்காமல் இருக்க ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா போதுமே!

 பருப்புவடை என்னவோ கொஞ்சம் மென்னியைப் பிடிக்குது. ஊஹூம்..... சும்மாத்தின்ன கஷ்டம். பேசாம மோர்க் குழம்புலே தூக்கிப்போட்டேன். அருமை!

 மற்ற அவைலபிள் ஐட்டம்ஸ் பற்றி அப்பப்பச் சொல்வேன் கேட்டோ! பதிவு சமாச்சாரம்:-)))

 நிலநடுக்கம் வந்து ஊர் அழிஞ்சபின் சிட்டியில் இருந்த வீட்டு உபயோகத்துக்கான மின்சார சாதனங்கள் கடைகள் எல்லாம் போயே போச். அதுக்காக வியாபாரத்தை மூட முடியுமா? தாற்காலிகமா ஒரு இடத்தில் கடை போட்டு இருக்கும் பொருட்களையெல்லாம் ஸேலில் வித்துக்கிட்டு இருக்கு ஒரு நிறுவனம். நாப்பது டாலர் சமாச்சாரங்கள் எல்லாம் பதினாலுக்குப் போட்டுருக்கு. இப்படியே மற்ற எல்லா பொருட்களும் நல்ல தள்ளுபடியில் 65 இஞ்சு டிவி ஒன்னு நல்ல மலிவு. அதுக்கு ஏற்ற சுவர் நம்மிடம் இல்லை:(



 டோனட் மேக்கர் ஒன்னு பார்த்தேன். நான் அதைக் கையில் எடுத்ததும் 'வடையா?' என்றார் கோபால். அப்பாடா..... வாங்கும் பொருளை நியாயப்படுத்த வியாக்கியானம் கொடுக்கும் வேலை மிச்சம்:-)

 முதலில் நோகாம ஒரு சொந்த சாஹித்த்யத்தில் செஞ்சு பார்த்துட்டு அப்புறமா பாரம்பரிய சமையலுக்குப் போகலாமேன்னு..........

 முயற்சி திருவினை ஆக்குமுன்னு சும்மாவாச் சொல்லி இருக்காங்க!!

 மகள் வந்ததும் ஓசைப்படாம எடுத்து நீட்டுனேன். மனசுக்குள்ளே மட்டும் திக் திக். கினிபிக்கை சமாளிச்சுடலாம். ஆனால் ஃபுட் க்ரிட்டிக்கை? ஒன்னும் சொல்லாம சாப்பிட்டு முடிச்சாள்.

 எப்படி இருந்துச்சு?

 வாட் ஸ்பெஷல் அபௌட் இட்? யூ ஆல்வேஸ் மேக்.

 ஆஹா....வெற்றியோ வெற்றிதான்.

 இன்னும் கொஞ்சம் dos and don'ts தெரிஞ்சுக்கணும் அனுபவம் பெரிய பாடம்:-)

 வாங்க, செய்முறை பார்ப்போம்.

 தேவையான பொருட்கள்:

 ஒரு கப் ரெடிமேட் உளு(த்தம்)ந்து மாவு.
 பெரிய வெங்காயம் 1 (பொடியா நறுக்கிக்கணும்)
 பச்சை மிளகாய் 4 ( பொடிசா அரிஞ்சது)
 கருவேப்பிலை 1 இணுக்கு ( இதயும் பொடியாவே அரிஞ்சுகுங்க)
 உப்பு முக்கால் டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் ரெண்டு சிட்டிகை
 எண்ணெய் அரைக் கப்

 ஆக்கம்:-)

 மேலே சொன்ன பொருட்கள் எல்லாத்தையும் ஒன்னாச்சேர்த்து தண்ணீர் விட்டு வடை மாவு பதத்துக்குக் கலக்கி வச்சுக்குங்க.

 நம்ம வடை மேக்கரை (?!!) ப்ளக்கில் பொருத்தி ஆன் செஞ்சுருங்க. டேஞ்சருன்னு சிகப்பு விளக்கு ஒளிரும்:-) அஞ்சு நிமிசத்தில் சூடாயிருச்சுன்னு விளக்கு அணைஞ்சுரும்.

 கலக்கி வச்சுருக்கும் வடை மாவை ஒர் ஸ்பூனால் கோரி வடைக்குழியில் ஊத்திட்டு மூடியை கவுத்துடலாம்.. அஞ்சாறு நிமிசங்களில் திறந்து பார்த்தால் டடா............ முக்கால்வாசி வெந்து மேற்புறத்தில் வெள்ளை மாவு தெரியும். லேசா திருப்பிப்போட்டு மூடியைக் கவுத்தால் போதும். நாலு நிமிசத்தில் இப்படி இருக்கும்.

 மேற்படி அளவு மாவுக்கு, பாந்தமா பனிரெண்டு வடைகள் வந்துச்சு. சுட்ட எண்ணெய் மீதியாகும் சங்கடம் ஒன்னும் இல்லையாக்கும் கேட்டோ:-)