Wednesday, February 11, 2009

குரங்காய்த்தான் ஆரம்பிச்சு.......

மூணு குரங்குகள் பொம்மையைப் பார்த்ததும் என்ன ஞாபகம் உங்களுக்கு வரும்? (இன்னும் ஒரு குரங்கைக் கூடுதலாச் சேர்த்து நாலு குரங்குகளாகவும் சில இடங்களில் கிடைக்குதாமே) இந்த கூட்டு எல்லாம் நமக்கு வேணாம். இந்த மூணே போதும், இல்லை?

மூணு என்ற எண்ணுக்கு உரிய விசேஷ குணங்கள் என்னென்ன? தெரிஞ்சவுங்க சொல்லுங்க பார்க்கலாம்.

குரங்கைவிட்டுட்டு எங்கியோ போயிட்டேன்........

இந்தக் குரங்குகள் பலவிதமா மாறி யானைவரைக்கும் வந்துருக்கு.
அதுக்குப்பின்?

யானைக்கொரு காலமுன்னா பூனைக்கொரு காலம் இருக்கே.....

இப்பப் பூனையாவும் ஆகியாச்சு.


( எல்லாம் மகள், அவ்வப்போதுத் தாய்க்குக் கொடுத்த பிறந்தநாள் பரிசுகள் )


இதுகள் எல்லாம் என்ன சொல்லுதுன்னு கவனிச்சீங்களா?

கெட்டதைப் பார்க்காதே

கெட்டதைப் பேசாதே

கெட்டதைக் கேட்காதே

மூணே மூணு அன்புக் கட்டளைகள்.

கடைப்பிடிச்சுக்கிட்டு அமைதியா இதுவரை நடந்த பாடங்களை 'எப்பவாவது' படிச்சுக்கிட்டு ஓய்வு எடுத்துக்குங்க. பாவம். உங்களுக்கும் வகுப்புக்கு வந்து அலைச்சலா இருக்கும். பரிட்சை வேற வருது!!!!

மூணு வாரம் நல்லா ஓய்வெடுத்துக்கிட்டு வாங்க.

அப்ப டீச்சர்....?

உங்களுக்காக ஒரு டூர் போய் மேட்டரைத் தேத்திக்கிட்டு வரேன்.

பத்திரமா இருங்க. டேக் கேர்.

இதுதான் உங்களுக்கு ரிவிஷன் ஹாலிடேஸ்.

The One & Only !!!!

குழியிலே வச்சப் பழைய சமாச்சாரத்தையெல்லாம் இப்படித் தோண்டவச்சுட்டாங்களே.......

மின்னி (Minnie Dean ) என்று அறியப்பட்ட வில்லியமினா Williamina என்ற பெண்மணி ரொம்ப வருசங்களுக்கு முன்னே நியூஸிக்கு வந்து குடியேறி இருக்காங்க. இவுங்க எப்ப வந்தாங்கன்றதுக்குச் சரியான சான்றுகள் இல்லை. 1868 லே வந்தாங்கன்னு ஒரு ஆவணத்துலே படிச்சேன். ஆனா அவுங்க பிறந்த வருடம் ரெண்டு விதமா 1844, 1847 ன்னுக் குறிப்பிடப்பட்டு இருக்கு இருவேறு இடங்களில் . இதே போல ரெண்டு குழந்தைகளுக்கு அம்மான்னு இருந்தாலும் ஒரு இடத்துலே... ரெண்டு குழந்தைகளொடு இங்கே வந்தாங்க/ ரெண்டு குழந்தைகளைப் பற்றிய மேல் விவரம் இல்லை ..... அடடா....என்ன குழறுபடின்னு தெரியலை. ஆனா ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் எந்த விதமான குழப்பமும் இல்லை. அது என்னன்னு பார்க்கலாம்.

பண்ணை நடத்திக்கிட்டு இருந்துருக்காங்க. என்ன பண்ணையாம்? குழந்தைப் பண்ணை. 'வேண்டாத' குழந்தைகளை வளர்க்கிறோமுன்னு சொல்லி விளம்பரம் பண்ணி இருந்துருக்காங்க. திருமண பந்தத்துக்கு வெளியே பெத்துக்கும்படியா ஆன பிள்ளைகள் இவுங்ககிட்டே வந்துருக்கு. ஸோலோ மதர் என்பது சமூகத்தில் அங்கீகாரம் இல்லாமல் விபரீதமாகப் பார்க்கப்பட்டக் காலக்கட்டம். குழந்தைகளைக் கொண்டுவந்து கொடுக்கும் சிலர் மொத்தமாக ஒரு தொகையும் கொடுத்துருவாங்க. சிலர் வாராவாரம், மாசாமாசமுன்னு செலவுக்குக் கொடுத்துக்கிட்டு இருந்துருக்காங்க.

ஒரு சமயம் இந்தம்மாகிட்டே 9 குழந்தைகள் இருந்துருக்கு. சில சமயங்களில் குழந்தை இவுங்க கைக்கு வந்த சில நாட்களிலேயே இறந்தும் போயிருக்கு. மருத்துவப் பரிசோதனையில் இயற்கை மரணம் என்றுதான் எழுதியிருக்காங்க.
சில சமயங்களில் திடீர்ன்னு குழந்தைகள் காணாமலும் போயிருக்கு. தன்னிடம் 'வளர வந்த' குழந்தைகளுடைய விவரங்கள் ஒன்னும் மின்னி எழுதி வச்சுக்காததால்..........சரியா எத்தனை பிள்ளைகள் பண்ணையில் இருந்துச்சுன்னு தெரியலையாம்.

அக்கம்பக்கத்து மக்களுக்கு லேசுபாசா ஒரு சந்தேகம் வர ஆரம்பிச்சது. 1895 வது வருடம் ஒரு நாள் ஒரு கைக்குழந்தையோடு ரயிலில் ஏறுனதாகவும், ரயிலில் இருந்து வேற ஊரில் இறங்கிப்போனப்ப வெறுங்கையோடு போனதாவும் அந்த ரெயிலில் இருந்த கார்டு சொல்லி இருக்கார். காவல்துறைக்கு, இப்படி ஒரு சாட்சி கிடைச்சதும் இந்தம்மாவைக் கைது செஞ்சுருக்காங்க. ரயில் போன வழியெல்லாம் தண்டவாளத்தையொட்டித் தேடலும் ஆரம்பிச்சது. ஒன்னும் கிடைக்கலை. மின்னியை விட்டுட்டாங்க. ஆனால்....மேற்கொண்டு துப்புத் துலக்கும்போது ஒரு மாசக் கைக்குழந்தை ஒன்னை, அந்தக் குழந்தையின் பாட்டி, மின்னியிடம் கொடுத்தது தெரியவர, மின்னி வீட்டைச் சோதனை போட்டப்பக் குழந்தையின் துணிமணிகள் கிடைச்சது. குழந்தையைக் கொன்னுட்டு, கையில் வச்சுருந்த ஹேட் பாக்ஸ்லே புள்ளையின் சவத்தை ஒளிச்சுக் கொண்டுவந்தாங்கன்னும் சொல்றாங்க.

சந்தேகம் அதிகமானதும் வீட்டுத் தோட்டத்தில் தோண்டிப் பார்த்தப்ப மூணு பிள்ளைகளுடைய சவங்கள் கிடைச்சது. பிரேதப் பரிசோதனை செஞ்சதில்
குழந்தைகளுக்கு மயக்கமருந்து கொடுத்து மூச்சை நிறுத்துனது புலனாச்சு. மறுபடியும் கைது செஞ்சு விசாரிச்சுக் குற்றம் உறுதிப்பட்டவுடன் (ஆறுவார விசாரணை) தூக்கு தண்டனை கொடுத்து அதை உடனடியா நிறைவேத்திட்டாங்க. 12ன் ஆகஸ்ட் 1895 எல்லாம் முடிஞ்சது. விண்ட்டன் என்ற ஊரில் இவுங்களைப் புதைச்சாங்க. இவுங்கதான் நியூஸியிலேயே தூக்குதண்டனை பெற்ற முதல் பெண். இதுக்குப் பிறகு, நியூஸியில் மரணதண்டனை என்பதே ரத்து ஆகிருச்சு.சம்பவம் நடந்து 113 வருசங்களான பிறகு, போனமாசம் ஜனவரி 30 (2009) தேதிக்கு அவுங்களைப் புதைச்ச இடத்தில் ஒரு நாள் திடீர்ன்னு ஒரு ஹெட்ஸ்டோன் ( headstone) இருந்துருக்கு. அதுலே பொறிக்கப்பட்ட வாசகம் இது "Minnie Dean is part of Winton's history Where she now lies is now no mystery". யார் கொண்டுவந்து வச்சதுன்னே தெரியலை. அவுங்க உறவினர்களிடம் விசாரிச்சால் அவுங்க யாருக்குமே தெரியலையாம்.

நகரசபை பார்த்துச்சு. நல்லதோ கெட்டதோ இது மின்னியின் வாழ்க்கையும் சரித்திரத்தில் ஒரு பகுதிதானே....பேசாம நாமே ஒன்னு வச்சுறலாமுன்னு அழகான ஒரு ஹெட்ஸ்டோன் செஞ்சு கல்லறையில் வச்சுட்டாங்க. விழாவுக்கு சுமார் 100 ஆட்கள் வந்துருந்தாங்க. கூட்டமான கூட்டம்( நம்ம ஊரில்தான் 4 பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்று கொள்ளணுமே)


இதை எதுக்கு இப்போ சொல்றேன்?

நேத்து தொலைக் காட்சியில் காமிச்ச முக்கிய சேதி இது.

அண்டை நாடான அஸ்ட்ராலியாவில் மெல்பெர்ன் நகரத்தில் இருந்து 40 கி.மீ தூரத்தில் சில கிராமங்கள் தீப்பிடிச்சு எரிஞ்சுபோய் 181 பேர் இறந்துட்டாங்க. இன்னும் பலர் ஆபத்தான நிலையில், மருத்துவமனைகளில் இருக்காங்க. இந்தத் தீயை , யாரோ விஷமிகள் வேணுமுன்னே மூட்டி விட்டதா ஒரு தகவல் கசிஞ்சு, விசாரணை ஆரம்பிச்சு இருக்கு. செய்தி உண்மையாக இருந்தால் பிடிபடும் குற்றவாளிக்கு என்ன மாதிரியான தண்டனை ? அங்கேயுந்தான் கேப்பிட்டல் பனிஷ்மெண்ட் ரத்தாகி இருக்கே!

Tuesday, February 10, 2009

ஜலக்ரீடை

குளிக்கும்போது பார்க்கக்கூடாதுதான். ஆனா நாமென்ன அவுங்க பாத்ரூமிலயாப் போய் எட்டிப் பார்த்தோம். நம்ம கண்ணுமுன்னாலேயே தண்ணீரில் ஆடி அட்டகாசம் பண்ணுனா ......எப்படிங்க?

இன்னும் நல்லத் தெளிவா எடுக்கலாமுன்னா...... நடுவிலே ஒரு டபுள் க்ளேஸ்டு விண்டோ...நந்தி போல(-: மேலும் வெளிப்புறம் 'படப்பிடிப்பு'க்குன்னு போனால்..... நடிகநடிகையர்கள் 'பறந்து' போயிருவாங்க.படப்பிடிப்புக்குன்னு நான் தயாரா இல்லாத சமயம். அடுக்களை ஜன்னலில் கிடைச்ச காட்சி. ரெண்டு நிமிசம்தான் என்றாலுமே ஸ்டெடியாக் கேமெராவைப் பிடிக்கவும் முடியலை. (வயசாகுதே) ஊமைப்படத்துக்கு இசை சேர்க்கும் வழி யாராவது சொல்லிக் கொடுத்தால்....முயற்சிக்கலாம்.

நம்ம நானானி ஒரு சமயம், குருவிகளே அருகிப்போச்சு, பார்க்க முடியலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அவுங்களை நினைச்சுக்கிட்டே இந்தப் பதிவைப் போட்டேன்.


ஆக்ஷன் ஃபோட்டோ எடுக்கும் அளவுக்குத் திறமை இல்லைன்னாலும் சிலசமயம் சில ஷாட்கள் நல்லா அமைஞ்சுருதுன்னு எண்ணம். மேலே உள்ள படத்தை இந்த மாசம் பிட்டுக்கு அனுப்பியாச்சு. எல்லாம் இருத்தலின் அடையாளமே.

Monday, February 09, 2009

குளிரான குளிர்

குழந்தை பொறந்துருக்குங்க.

அட! சுகப்பிரசவம்தானே?

ஆமாங்க.

குழந்தை என்ன எடை?

அறுபது பவுண்ட் எடை இருக்குங்க.

என்ன பொறக்கும்போதே... அறுபதா?


அம்மாவும் குழந்தையும் பாருங்களேன்...ஹாய்யா வெய்யில் காய்ஞ்சுக்கிட்டு இருக்கறதை!

ஒருவிதத்தில் இப்பெல்லாம் அவ்வளவாக் கஷ்டம் இல்லாத வாழ்க்கைதான். முந்திதான் தோலுக்காகவும் மற்ற சமாச்சாரங்களுக்காவும் வேட்டையாடிக்கிட்டு இருந்தாங்க.

சாப்பாட்டு நேரம் ராத்திரி என்பதால் யாருக்கும் தொந்திரவு இல்லாம ராவோடராவாப் போயிட்டு வந்துரும் பழக்கம். ஆறுவயசில் வயசுக்கு வந்துருதுங்க. அதுக்குப்பிறகு வருசாவருசம் புள்ளைத்தாய்ச்சிதான்.

ஒரு ஆறு வாரமோ இல்லை மிஞ்சிப்போன எட்டு வாரமோதான் குழந்தைக்குத் தாய்ப்பால். அதுக்கப்புறம் அம்மா நீந்தச் சொல்லிக் கொடுத்துருவாங்க. தன் உணவைத் தானே தேடிக்கணும்.

இந்த எட்டு வாரத்துலேயே குழந்தை 200 பவுண்டு எடை கூடிரும். குழந்தையே இந்தக் கனமுன்னா? அப்பா, அம்மா? மகா கனம்தான். ஒரு ஆயிரம் பவுண்டு தேறுமாம். அம்மாதான் கம்பீரமா இருப்பாங்க. அப்பாங்க எல்லாம் கொஞ்சம் ஒல்லி. மத்தபடி நீளம் பத்தடி வரை இருக்கும். படுத்தே கிடப்பதால் அவ்வளவா உயரம் தெரியாது. இவுங்களுக்கு Weddell Sealsன்னு பெயர். James Weddel என்ற ப்ரிட்டிஷ்காரர் தெந்துருவத்தைத் தேடிப்போனவர். இவர் பெயரையே இந்த சீல் வகைகளுக்குக் கொடுத்தாச்சு.

நியூஸியின் தெற்குத்தீவில் கைக்கோரா என்ற ஊர் இருக்குங்க. அங்கேயும் கடற்சிங்கங்கள் காலனி ஒன்னு பெருசா இருக்கு. அந்த வகைகள் கொஞ்சம் ப்ரவுன் நிறம் கலந்தக் கறுப்புதான். அவ்வளவா ரோமமும் இருக்காது. பக்கத்தில் இருக்கும் சின்னக் குன்றின்மேல் ஏறிப் பார்த்தால் கோயில்திருவிழாக் கூட்டம்போலப் புள்ளையும் குட்டிகளுமாக் கூட்டமான கூட்டம்.

உங்களுக்கும் ஆசையாத்தானே இருக்கு? நேரில் பார்க்கலாமேன்னு ,மனசு கிடந்து அலையுதுல்லே? அதேதான் மனுசங்களுக்கு.....

கேப்டன் ஜேம்ஸ் குக் நியூஸியைக் கண்டுபிடிச்ச பிறகு ( 1769) வந்தக் காலக்கட்டத்தில் ( ஒரு அம்பது வருசங்களில்) பலருக்கு, உலகின் தென்கோடியில் என்னதான் இருக்குன்னு போய்ப் பார்க்கும் ஆவல். அங்கே ஒரே பசுமையான செழிப்பான இடங்கள் இருக்குன்னு புரளிவேற. தேடல் ஆரம்பிச்சாச்சு.
1820 வது வருசம் தெந்துருவ எல்லைக்குப் பக்கம் 20 மைல் வரை போய்வந்தவங்களும் சொல்லி இருக்காங்க அங்கே கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெள்ளையாப் பனிதான் கொட்டிக் கிடக்குன்னு. 1841 வது வருசம் James Clark Ross என்றவர் இன்னும் கொஞ்சம் கிட்டேபோய் ஒரு தீவு மாதிரி இடத்தைக் கண்டுபிடிச்சார். அவர் கடந்துபோன கடல்பகுதிக்கு ராஸ் கடல், அவர் கண்டுபிடிச்ச தீவு ராஸ் தீவு இப்படிப் பெயர் வந்துருச்சு. இங்கே இருக்கும் எரிமலைதான் மவுண்ட் எரபஸ். Mount Erabus. (இன்னும் உயிரோடுதான் இருக்காம்) இதையும் விடாம 1907 லே ஒரு குழு ஏறிப்பார்த்துருக்கு. எல்லாம் நாலைஞ்சு பேர் மிஞ்சுனா ஏழெட்டுப்பேர் கொண்ட சின்னக் குழுக்கள்தான்.
புதுக் கட்டிடம் இல்லாத காலத்தில் மரப்பலகைக் குடிசை.

இப்போ இருப்பதுபோல இயந்திரங்கள், குளிர் உடுப்புகள், வசதிகள் எல்லாம் இல்லாத காலம். மரப்பலகையில் குடிசைகள் கட்டிக்கிட்டுக் குளிரில் ஆராய்ச்சி செஞ்சுருக்காங்க பாருங்களேன்.


அதுக்குப்பிறகுதான் நம்ம ஸ்காட் 1912 வருசம் போய்ப் பார்த்துத் திரும்பவராமலேயே போனது. இவர் பனியில் போகும் நாய்களை உதவிக்குக் கொண்டுபோகாததும் ஒரு காரணமுன்னு சொன்னாங்க. ஸ்காட் குழு போனபிறகு 1933 வருசம் நியூஸிலாந்து அண்டார்ட்டிக் சொஸைட்டின்னு ஒன்னு ஆரம்பிச்சாங்க. அதுக்குபிறகு 20 வருசம் கழிச்சு 1953 இல் நியூஸி அரசுடன் சேர்ந்து ஒரு ஆராய்ச்சி மையம் கட்ட அனுமதி வாங்கி 1956 இல் கட்டிடம் கட்டுனாங்க. மொத்தம் 8 கட்டிடங்கள். எல்லாத்தையும் இணைக்கும் சுரங்கப்பாதைகள்னு ஆரம்பிச்சது. ஸ்டீல் தண்டுகள் பயன்படுத்தி இங்கே வெலிங்டனில் கட்டடம் கட்டி அதுக்கு எண்கள் எல்லாம் கொடுத்துப் பிரிச்சு எடுத்துக்கிட்டுப்போய் பேஸில் கட்டுனாங்க. பிரிச்சு எடுக்குமுந்தி பொதுமக்கள் பார்வைக்குன்னு கண்காட்சியாக் கொஞ்ச நாள் வச்சுருந்தாங்க.
இதுதான் அந்த ஸ்காட் பேஸ் கட்டிடங்களின் மாடல். 85 பேர் இங்கே தங்கி ஆராய்ச்சி செய்யறாங்க. அக்டோபர் மாசம் முதல் அடுத்த அக்டோபர்வரைன்னு ஒரு குழு வேலைசெய்யுது. கோடைகாலத்துக்குன்னு மட்டும் இன்னொரு குழு அக்டோபர் முதல் ப்ப்ரவரிவரை போய் இருந்து வேலை செய்யும். சகலவசதிகளுன் அட்டகாசமா இருக்குன்னு கேள்வி. உள்ளே வசிக்கும்போது வெறும் டி ஷர்ட் போட்டுக்கலாமாம். அவ்வளவுக்கு சூடான வெப்பம் இருக்காம்.
இந்தக் கட்டிடம் கட்டுனது 1957 வது வருசம். இந்த கடந்த 50 வருசங்களில் இன்னும் ரொம்ப நல்ல வசதிகளுடன் இதைப் புதுப்பிச்சு ரெண்டு நிலைக் கட்டிடங்களா ஆக்கிட்டாங்க.

ராஸ் தீவு, ஸ்காட் பேஸ் போயிட்டோமுன்னா தென் துருவம் போயிட்டேன்னு சொல்லிக்க முடியாது. அங்கே இருந்து இன்னும் தெற்கே 1500 கிலோமீட்டர் போனால்தான் தெந்துருவத்தின் மையப்புள்ளியைத் தொடமுடியும். அப்படித் தொட்டவர்களும் இருக்காங்க. அங்கே போய்வந்த அடையாளமா அவுங்கவுங்க தங்கள் நாட்டுக் கொடிகளை நட்டுவச்சுட்டு வந்துருக்காங்க. ( ஒரு விவரணப் படத்தில் பார்த்தேன்)


அண்டார்டிக் ஒரே உறைபனியா இருக்கும்முன்னு சேதி பரவ ஆரம்பிச்சதும் அதையும் போய்ப் பார்க்கணுமுன்னு ஆசை பலருக்கும் இருந்துச்ச்சு. நியூஸியின் விமானச் சேவையான 'ஏர் நியூஸிலாந்து' மக்கள் ஆசையைப் புரிஞ்சுக்கிட்டுத் தெந்துருவம் வரை போக முடியாது. ஆனால் ராஸ் தீவுவரை போய் ஜஸ்ட் ஒரு பார்வைப் பார்க்கன்னு ஒரு சர்வீஸ் ஆரம்பிச்சது 1977 ஃபிப்ரவரி. எங்கேயும் நிறுத்தமாட்டாங்க ஆக்லாந்து நகரத்துலே,விமானம் ஏறி நேராப்போய் மவுண்ட் எரெபஸ் என்னும் எரிமலை இருக்கும் இடத்துக்கு மேலே ஒரு வட்டம் அடிச்சுத் திரும்ப வந்து ஆக்லாந்துலே இறக்கி விட்டுருவாங்க.


1979 லே இப்படிப்போன ஒரு விமானம் நவம்பர் மாசம் அதே எரிமலையில் மோதி அதுலே இருந்த 257 பேரும் மரணமடைஞ்சாங்க. அவுங்க உடலைக்கூட மீட்கமுடியாமல் போயிருச்சு. இப்பவும் கோடை காலத்துலே பனி உருகும்போது அந்த விமானத்தின் உடைஞ்ச பகுதிகள் சிலசமயம் வெளியே தெரியுமாம். whiteout கண்டிஷந்தான் காரணமாம். சிலசமயம் பனிப்புயல், காலநிலைக் காரணத்தால் எதிரில் இருப்பது ஒன்னுமே தெரியாமல் வெறும் வெள்ளையாவே இருக்குமாம். கண் தெரியாமப்போய் முட்டிக்கிட்டக் கதைதான்(-:


ஸ்காட் பேஸ், விஸிட் பண்ணனுமுன்னா நாம் போயிட்டும் வரலாம். ஆனா அதுக்கான கண்டிஷன்கள் ஏராளம். முதலில் சர்வதேச ஒப்பந்தப்படி போடப்பட்டுள்ள சட்டதிட்டங்கள். ரெண்டாவது நம்ம உடம்பு. ஆரோக்கியம். நல்ல நிலையில் இருக்கணும். முதலுதவிக்கான பயிற்சி (16 மணி நேரப் படிப்பு) முடிச்சு அதுக்குண்டானச் சான்றிதழ் வாங்கிக்கணும். சாமான்கள் பேக்கிங் செய்ய பாலிஸ்டைரின் சம்பந்தமுள்ள எதையும் பயன்படுத்தக்கூடாது. ஆராய்ச்சிக்காகக் கொண்டுப்போகும் சாமான்களை ஒன்னுவிடாமத்திருப்பிக் கொண்டுவரணுமுன்னு ஏகப்பட்ட சட்டங்கள். எல்லாத்துக்கும் மேலே இந்தப் பயணத்துக்கு ஆகும் செலவுகள்...... ஐயோ நம்மாலே முடியாது. ஆனா அதுக்காக அப்படியே விட்டுற முடியுதா?
snow mobil

கவலையேபடாதீங்க. கிறைஸ்ட்சர்ச் நகரத்தில் (நம்ம ஊருதான்) அண்டார்ட்டிக் செண்டர்ன்னு ஒன்னு கட்டிவச்சுருக்காங்க. தென் துருவத்துக்குப் போனா எப்படி காலநிலை இருக்குமோ அதே போல இதுக்குள்ளே செஞ்சுவச்சாச்சு. பனிப்புயல்கூட வீசும். மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்துலே பனிக்காத்து. இதைச் சமாளிக்கத் தேவையான உடுப்புகளும், காலணிகளும் அங்கேயே கொடுக்கறாங்க. (நல்லவேளை வீட்டுலே இருந்து நாம் சுமந்துக்கிட்டுப் போகவேணாம்) பெங்குவின் பறவைகளும் வச்சுருக்காங்க. அவை சின்ன சைஸில் உள்ள ப்ளூ பெங்குவின்கள். ஒரு அனுபவத்துக்காக ஒரு முறை போய்வரலாம். இப்போதைய டிக்கெட் விலை 68 டாலர்கள்.

நம்ம ஊரில் இருந்துதான் அண்ட்டார்டிக் South Pole airdrop க்குன்னே தனி விமானம் அங்குள்ள ஆராய்ச்சி மக்களுக்கான சப்ளையெல்லாம் கொண்டுபோய்ப் போட்டுட்டு வருது. கோடைகாலம்தான் இதுக்கு ஏற்றது. (இன்னிக்கு இந்தப் பதிவு எழுதும் நாள் சப்ளை விமானம் கிளம்பிப் போகும் சத்தம் கேட்டுச்சு) அவசரம் ஆபத்துன்னா மெடிக்கல் டீம் போறது, அங்கிருந்து நோய்வாய்ப்படவர்களை இங்கே மருத்துவத்துக்குக் கொண்டு வர்றதுன்னு ஏகப்பட்ட விஷயங்கள் ஓசைப்படாம நடந்துக்கிட்டு இருக்கு.

அண்ட்டார்டிக் ப்ரோக்ராம் என்ற திட்டத்தில் அமெரிக்காவுக்கான விமானத்தாவளமும் நம்ம ஊரில்தான் இருக்கு. நத்தானியல் பி. பால்மர் என்ற ஐஸ் ப்ரேக்கர் கப்பல் Nathaniel B. Palmer ( அமெரிக்கநாட்டின் விஞ்ஞான ஆராய்ச்சிக் கப்பல்)கூட நம்மூர் துறைமுகத்துக்குத்தான் அப்பப்ப வந்து போகுது. ஒருமுறை உள்ளே போய்ப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சது. தென் துருவத்துக்குப் பக்கம் இருக்கும் பெரிய ஊர் நம்மதுதான் என்பதால் இப்படி விசேஷமான சிலதைக் காண்பது கொஞ்சம் எளிது:-)


மனுஷன் தன்னுடைய அதீத ஆர்வத்தால் பூமியே தனக்கு மட்டுமுன்னு நினைக்காமல் மத்த ஜீவராசிகளோடு பங்குபோட்டுக்கிட்டு வாழக் கத்துக்கணும். எல்லாத்துக்கும் மேலா வரப்போகும் சந்ததிகளுக்கு உலகத்தை நல்லமுறையில் விட்டுட்டுப்போகணும் என்பதுதான் என் ஆசை. உங்களுக்கும் இப்படித்தானே?

Wednesday, February 04, 2009

ஆண்கள் பொல்லாதவர்களா?

வைக்கோல் இருக்கு பாருங்க அதுலே கொஞ்சம் எடுத்துப் பிரிபோல சுத்தி, அதை காலணிக்குள்ளே வச்சுக்கிட்டால் நடுக்கும் குளிரில் இருந்து கொஞ்சூண்டு தப்பிக்கலாமாம். நெல்லே விளையாத ஊருலே வைக்கோலுக்கு எங்கே போவேன்? ஏன்? கோதுமை விளையுதுல்லே அந்த வைக்கோலை எடுத்து வச்சுக்கோ. அதுவும் சரிதான். ஆனா இதுக்குன்னு பெரிய அளவுள்ள காலணி வாங்கணுமே..... துருவப் பிரதேசம் போகணுமுன்னா வாங்கித்தானே ஆகணும்?
நம்ம வீட்டுலே இருந்து பொடி நடையா தெற்குத் திசை நோக்கி 3832 கிலோ மீட்டர் நடந்தால் ஸ்காட் பேஸ்'' Scott Base வந்துரும்! ராபர்ட் ஃபால்கன் ஸ்காட் என்ற வீரர் (கடற்படை)தான் முதல் முதலில் தெந்துருவத்தில் கால் குத்துனவர். அங்கிருந்து திரும்பும் வழியில் , அதீதக் குளிர், களைப்பு, பசி போன்ற காரணங்களால் அவரும், அவர் தலைமையின் கீழ் கூடவே போன இன்னும் நால்வருமாய் (பஞ்சபாண்டவராய் அஞ்சு பேர்) மேலே போய்ச் சேர்ந்துட்டாங்க. சம்பவம் நடந்த வருசம் 1912. அவருடைய பெயரில்தான் இந்த ஸ்காட் பேஸ் என்னும் ஆராய்ச்சி மையம் நியூஸியின் அதிகாரபூர்வமானதா இயங்கி வருது. இந்த மையம் ஆரம்பிச்சது 1957. இப்போ ரெண்டு வருசம் முந்திதான் பொன்விழா கொண்டாடி, புது தபால்தலை வெளியிட்டோம்.
இங்கே கோடைகாலத்துலே மட்டும்தான் போய்வரமுடியுது. ஆறு மாசம் வரை பகல் பொழுதுகளாவே இருக்கும். கோடையில் குளிரும் கம்மிதான். வெறும் மைனஸ் முப்பது டிகிரி. அப்பக் குளிர்காலமுன்னா? மைனஸ் எண்பது.


போகும் வழியில் பேரசர் பெங்குவின் பறவைகளை நிறையப் பார்க்கலாம். பெயருக்குத் தகுந்தாப்போல நாலடி உயரம். 45 கிலோ எடைவரை இருக்கும். உடம்பில் ரெண்டு பக்கமும் கைகள் போல இறக்கைகள் இருந்தாலும் பறக்க முடியாத பறவைகள். அந்தக் கைகள் தண்ணீரில் நீந்தும்போது துடுப்புமாதிரி( நாம் நீந்தும்போது கைகளால் தண்ணியைத் தள்ளுறோமே அதே போல) செயல்படுது.
(நியூஸியில் பலவிதமான பெங்குவின் பறவைகள் இருக்கு. சில வகைகள் கோழி சைஸுக்குத்தான். நின்னால் ஒரு அடி இருந்தால் கூடுதல்.)

இந்த பேரரசர்களுக்குத் தோல் கனம் கூடுதல். கொழுப்புப் படிமானங்கள் தோலுக்கடியில் சேர்ந்து குளிரைத் தாங்கும் சக்தியைக் கொடுக்குது. இனப்பெருக்கம் சமயத்தில் ஆண்கள் துணைவியைத் தேடி 120 கிலோமீட்டர் தூரம்வரைகூட நடந்தே வருதுங்க. ஜோடி சேர்ந்தபிறகு , உனக்கு நான் எனக்கு நீ. வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன்னு 'ஏக பத்தினி, ஏக பத்தனன்' விரதம்தான்.

ராணி ஒரே ஒரு முட்டைதான் இடுவாங்க. ஏறக்குறைய அரைக்கிலோ எடை. எங்கே பார்த்தாலும் உறை பனி இருக்கும் இடத்தில் முட்டையை எங்கே வச்சு அடை காக்க முடியும்? முட்டையைப் பிரசவித்த ராணி, குளிர்காற்று முட்டையை அண்டவிடாமல் கவனமாத் தன் பாதங்களின் மேல் ஏந்திக்கும். இதுக்குள்ளே ராணிக்கு, புள்ளைப்பெத்த உடம்பாச்சா.... பலகீனம் அதிகமாவேற . ராஜா உதவி செய்யறேன்னு முட்டையை ஆடாம அசங்காமத் தன் பாதங்களில் மாத்தும்விதம் சொல்லால் விளக்கமுடியாத வகையில் இருக்கும். சிலசமயம் முட்டை தவறுதலாக் கீழே விழுந்து உடையவும் வாய்ப்பு இருக்கு. குளிர் தாங்காம 'சட்'னு உறைஞ்சுபோகவும் வாய்ப்பு இருக்கு.


தன் காலில் வந்த முட்டையை அடிவயித்துச் சிறகுகளால் கவனமாக மூடிக்கிட்டு, ராஜா அசையாம நிக்கும். எதுவரை? முட்டை அடைகாத்துக் குஞ்சு வெளிவரும்வரை! இதுக்கு எத்தனை நாள் ஆகுமாம்? 64 நாட்கள். ராணி, முட்டையைக் கணவனிடம் கொடுத்துட்டு, தளர்நடைபோட்டு ( 120 கிலோ மீட்டர் கூட இருக்கலாம்) கடல்தண்ணீருக்கு வரணும். அப்பத்தான் அதுக்குச் சாப்பாடு. ரெண்டு மாசம்வரை தினமும் சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கிட்டு குழந்தைக்கு வேண்டிய சாப்பாட்டுக்கான மீன்களை முழுங்கி அதையும் வயித்துக்குள்ளே சேமிச்சுக்கிட்டு, ராஜாவைத் தேடிப் புறப்பட்டுரும்.

இதுக்குள்ளே கொட்டும் பனியில், கொடுமையான பனிப்புயல் வீசும்போதும் ஒரு துறவி தியானம் செய்யறது போல அசையாமல் நின்னு முட்டையைக் காப்பாத்தும் இந்த ராஜாக்கள். படத்துலே இந்தக் காட்சியைப் பார்த்து மனம் கசிஞ்சு போச்சு. கண்கள் பனித்தன. இதயம் விம்மியது. ஆண் என்னும் இனத்தின் மேல் உண்மையான பரிதாபம் வந்தது எல்லாம் அப்போதான்.

இயற்கையின் அதிசயத்தை என்னன்னு சொல்ல? அங்கே சிலைகள் மாதிரி கூட்டமா ஆயிரக் கணக்கில் நின்னுக்கிட்டு இருக்கும் ராஜாக்களில் தன்னுடையவனை மிகச்சரியாக் கண்டுபிடிச்சு, குஞ்சு வெளிவரும் சமயம் அம்மா ஆஜர் ஆகிருது. முட்டையின் ஓடு கொஞ்சம் கடினமானதா இருக்கறதாலே முழுசா ஓடு உடைஞ்சு குஞ்சு வெளிவர சில சமயம் 3 நாள் கூட ஆகுமாம்.குழந்தை பொறந்த நிமிஷம்முதல் அதுக்குப் பசியும் கூடவே வந்துருதே. அம்மா கொண்டுவந்த மீனை வயித்துக்குள்ளே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக் கக்கி வெளியே கொண்டுவந்து குழந்தைக்கு ஊட்டுது. சில அம்மாக்களுக்குக் கணக்குத் தவறிப்போய் தாமதமாத் திரும்பிவருவதும் உண்டு. ஆனால் இது குழந்தைக்குத் தெரியுமா? பசிபசின்னு அழ ஆரம்பிக்கும்போது, ராஜா அப்பா...தன்னுடைய தொண்டையினுள்ளே இருக்கும் ஒரு சுரப்பியில் இருந்து தயிர்மாதிரி இருக்கும் புரோட்டீனைக் குழந்தைக்கு ஊட்டி விடும். அம்மா வரும்வரை தாங்கணுமே.....

இப்பவும் தரையைத் தொடாமல் குழந்தையைத் தன் காலில் மாத்தி எடுத்துக்கும் நிகழ்ச்சி நடக்கும். ராஜா பட்டினியில் துடிச்சுக்கிட்டு இருப்பார். துணைவியைத் தேடி வெகுதூரம் நடந்துவந்து, இணை சேர்ந்து, அடை காத்துன்னு இதுக்குள்ளே 115 நாளுக்குக்கிட்டே ராஜா சாப்பிட்டே இருக்கமாட்டார்.கிட்டத்தட்ட நாலு மாசம்!!!!! கொலைப் பட்டினின்னா இதுதான். குழந்தையைத் தாயிடம் ஒப்படைச்சுட்டு ராஜா நடையான நடை நடந்து கடலுக்கு வரணும் உணவைத்தேடி. சில சமயங்களில் பலகீனப்பட்டுப்போன ராஜாக்கள் நடந்துபோகும் வழியிலேயே முடியாமப்போய் மயங்கி விழுந்து மரணம் அடைவதும் உண்டு. ஐயோ....பாவம்.....(-: தலைவிதி நல்லா அமைஞ்ச ராஜாக்கள் போய் வயிறார சாப்பிட்டுக் களைப்பைப் போக்கிக்கிட்டு குழந்தைக்குச் சாப்பாடு சேகரிச்சுக்கிட்டு 24 நாளில் திரும்பிவரும். இதுவும் தன் குடும்பத்தைக் கரெக்ட்டாக் கண்டு பிடிச்சுரும்.
முட்டையைக் கால் மாற்றும் சமயம் சரியான பாதுகாப்பு இல்லாம முட்டை உடைஞ்சு விரிசல் விட்டோ, இல்லேன்னா குளிரில் உறைஞ்சோ போயிருந்தால் அதுலே இருந்து குஞ்சு வெளிவராதுதானே? ஆனா இதை ஒன்னும் புரிஞ்சுக்காம அந்தக் கெட்ட முட்டையையும் தெய்வமேன்னுக் காலில்வச்சு நிக்கும் ராஜாவைப் பார்க்கும்போது கல்மனசும் கரைஞ்சுரும்.

ஆபத்து ஒன்னுமில்லாம எல்லாம் நல்லபடியா நடந்த தம்பதிகள் ஒருத்தர் மாத்தி ஒருத்தர்ன்னு குஞ்சுகளைக் காலில் வச்சே வளர்த்துடறாங்க. ஒன்னரை மாசம் வரை கீழே இறக்காமல் வளர்த்த பிறகு பசங்களை எல்லாம் ஒரு இடத்துலே கூட்டிக்கிட்டுவந்து வச்சுட்டு ராஜா ராணிகள் சிலர் மட்டும் (குழந்தைகள் காப்பகம், அங்கே குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பெரியவர்கள்மாதிரி) காவலுக்கு இருக்காங்க. மத்தவங்க எல்லாரும் கடலுக்குப்போய் சாப்பிட்டுட்டு, பிள்ளைகளுக்குப் பார்சலும் வாங்கிவந்துருவாங்க. மறுநாள் இவுங்க காவலுக்கு நின்னா மத்தவங்க சாப்பிடப் போவாங்க. ஒழுங்குமுறையோடு 'முறை ' போட்டுக்கிட்டுப் புள்ளைங்களை வளர்க்கறதைப் பார்க்கணுமே!!!!
எல்லாக் குழந்தைகளும் பிழைச்சுக்குமுன்னு சொல்ல முடியாது. குளிர் தாங்காமச் செத்துப்போறதும் உண்டு. இந்தப் பிள்ளைகளைப் பிடிச்சுத் திங்க ஒரு விதமான (Skua)கழுகுக்கூட்டம் வேற காத்துக்கிட்டே இருக்கும். அண்டார்ட்டிக் போனாலும் ஆபத்து இல்லாம இருக்கா? எல்லா இடத்திலும் வாழ்க்கை என்பது ஒரு போராட்டம்தான்.
(உள் நாட்டுலே இருக்கும் சின்ன வகை பெங்குவின்கள் ரெண்டு முட்டைகள் இடும்.)


குழந்தையை எதிர்பாராதவிதமா இழந்துட்ட மனிதத் தாயின் மனநிலைக்குக் கொஞ்சமும் குறைஞ்சதுல்லே இந்தப் பெங்குவின் தாய். குழந்தையை இழந்த துக்கத்துலே இன்னொருத்தர் குழந்தையை நைஸாத் திருடி எடுத்து வச்சுக்கும் தாய்களும் உண்டு. ஒரு பிள்ளை இரு தாய்கள். சண்டை வந்து பிறகு அக்கம்பக்கத்தார் சேர்ந்து, 'இதோ பாரு..... இது அவ பிள்ளை. உன் பிள்ளை இது இல்லை' ன்னு நாட்டாமை செஞ்சு சண்டையை விலக்கிப் பிள்ளையை உரிய தாயிடம் சேர்க்கறதும் உண்டு.

இப்படி நடையா நடந்துக்கிட்டு இருக்காம, கடலுக்குப் பக்கத்துலேயே வாழ்க்கை நடத்தக்கூடாதா? எதுக்காக இம்மாந்தூரத்துலே காலனிகளை வச்சுக்கிட்டு இருக்கு? அதுகளுக்கும் ஊர், கிராமம் இப்படி எதாவது கட்டுப்பாடு இருக்கோ?

இப்பச் சொல்லுங்க...... இதை விட உலகில் பாவப்பட்ட உயிர்கள் (இப்படியாகப்பட்ட வாழ்க்கையை எனக்குக் கொடுத்துட்டயேன்னு புலம்ப) எதாவது இருக்கா?

(இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு.நாளைக்குச் சொல்றேன்)

Monday, February 02, 2009

இலவசக்கொத்தனாரைப் பத்திப் புரிஞ்சுபோச்சு!!!

அதிர்ச்சிதான்...ஆனா அது இன்பமா துன்பமான்னு நீங்கதான் சொல்லணும்:-) கனவிலே கூட நினைச்சுப் பார்க்கலை இப்படிக் கொத்தனாரின் விஷயங்கள் அம்பலமாகுமுன்னு!!!! இலவசக் கொத்தனாரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைச்சும் விட்டுட்டோமோன்னு வீட்டுக்குவந்தபிறகு மனசு துடிச்சதென்னவோ நிஜம். இன்னும் ஒரு வாரம் வரை இங்கே இருப்பாராம். ஆனால்... நாளை மற்ற நாள் கோபாலுக்குச் சீனப் பயணம் இருக்கு. இவர் வரும்வரை இலவசம் காத்திருக்க வாய்ப்பில்லை. ஆனது ஆகட்டும் மறுநாள் அடிச்சுப்பிடிச்சுப் போய்ப் பார்த்தால்தான் உண்டு.

புட்டுப்புட்டு வச்சது போல மொத்தச் சரித்திரமும் கிடக்கு அங்கே. முதலில் இவுங்களோடச் சின்னம் இப்படியாம். Square & Compasses. இது ரெண்டும்தான் இவுங்க மொராலிட்டிக்கு ( ஒழுங்குமுறை, ஒழுக்க சிந்தனைன்னு தமிழ்ப் படுத்தவா?) அடையாளமாம்.
சின்னம் ( தேர்தலுக்கு நின்னா இதையே வச்சுக்கலாம்)

என்னென்ன எப்படின்னு சரிபார்க்க இவுங்களுக்குன்னு தனியா ஒரு புத்தகமே இருக்கு. இதுதான் இவுங்களுக்கு பைபிளாம். (இந்தியாவில் இருந்தால் ..... ஒருவேளை இதுதான் அவுங்களுக்கான கீதையா இருக்கும்)

1850 வது வருசம் நியூஸியில் செட்டில் ஆகறதுக்காக வந்தாங்க வெள்ளைக்காரர்கள்ன்னு சொன்னது நினைவிருக்கா? வந்து ஒரு வருசம்கூட ஆக்லை வேலையை ஆரம்பிச்சுட்டாங்க இந்த இலவசக் கொத்தனார்கள். அதென்னவோ லாட்ஜ் லாட்ஜா உலகம் பூராவும் கட்டிக்கிட்டு, இதே வேலையா இருப்பாங்க போல.

கேண்டர்பரிக் கொத்தனார்கள் எல்லாம் பெரிய பெரிய பதவியில் இருக்கும் முக்கிய புள்ளிகள். பத்திரிக்கையாளர் ஒருத்தர்கூட இதுலே இருந்துருக்கார். நகரத்தந்தை போட்டுக்கும் பட்டை(காசுமாலை) நெக்லேஸ் போல கண்ணாடிப் பொட்டிக்குள்ளே இருக்கு. அதுக்கு ஒரு பெண்டண்ட் இவுங்க சின்னதோட டிஸைன்லே. குழுத்தலைவர் போட்டுக்குவாரா இருக்கும். அதுக்கப்புறம் வெவ்வேற நிறத்துலே அலங்காரங்கள், அதுலே வெள்ளிக்கொலுசுலே இருக்கும் சலங்கை முத்துப்போல இருக்கு. ( நகை டிஸைன் பண்ணத் தெரியலைப்பா...... )சுருக்கமாச் சொன்னா..... நம்மூர் குஷன் கவர்ஸ்லே இருக்கும் டிஸைன்களாட்டம் என் கண்ணுக்குத் தெரிஞ்சதுப்பா!!(விவரம் கெட்ட டீச்சர் நான்) இதெல்லாம் என்னன்னு சொல்லுங்கன்னு கோபாலைத் தொணப்பிக்கிட்டே இருந்தேன். என்னவோ சொன்னார்...... மரமண்டையில் ஏறலை. இந்தக் குழு ஒருவேளை லயன்ஸ் க்ளப், ரோட்டரி க்ளப் இப்படி இந்த வகையைச் சேர்ந்ததான்னு கேட்டேன். அதுக்கும் ஒரு லெக்சர் அடிச்சார் ( இன்ஷூரன்ஸ் கம்பெனி பத்திரங்களில் பொடி எழுத்துலே சட்டதிட்டம் போட்டுருக்குமே அப்படி) ப்ளெய்ன் இங்லீஷ்லே சொன்னாப் புரிஞ்சு போயிருமாமே!!!!
லாட்ஜ் கட்டுவாங்க, லாட்ஜ் கட்டுவாங்கன்னே சொல்லிக்கிட்டு இருந்தால்.........
உள்ளூர் பெரிய மனுசங்க
நம்மூர்க் கொத்தனார் வச்சுருக்கும் கயித்துலே கட்டுன 'குண்டு' எல்லாம் வச்சுருக்காங்க...........

ஆமா..... கொத்தனார் குழுவிலே விமான ஓட்டிக்கு என்ன வேலை? பறக்கும் வீடு?

எப்படியோ 'நாலுவீடு கட்டுவாங்க' ன்னு நினைச்சுக்கிட்டேன். ( நான் ஒருத்தி...எதுக்கோ தெரியுமா கற்பூர வாசனை? ஐயோ..... பழமொழிவேற கரெக்டா நினைவுக்கு வந்து தொலைக்குது)
நீதிபது ஆர்டர் ஆர்டர்ன்னு தட்டும் மரச்சுத்தியல் இருக்கு.... அதாலே மண்டையில் ரெண்டு போட்டுக்கணுமோ என்னவோ!!!!
பேசாம நம்ம கொத்ஸ் கிட்டே கேட்டால் ஆச்சுன்னு அங்கே காட்சிக்கு வச்சுருந்த எல்லாத்தையும் க்ளிக்கிட்டுக் கொண்டுவந்து இங்கே போட்டாச்சு. இந்தப் பாடம் மட்டும் கொத்ஸ் நடத்துவார். நானும் உங்களில் ஒருத்தியா உக்கார்ந்து கேட்டுக்கணும்.

மண்டை நல்லாவே காஞ்சு போச்சு..... அடுத்த பகுதிக்கு ஓடுனேன், குளிர் பிடிக்க. உங்களுக்காவது புரிஞ்சதுங்களா? இல்லேன்னா நீங்களும் குளிர் புடிக்கக் கூடவே வந்துருங்க.

ஆனா ஒன்னுமட்டும் புரிஞ்சதுங்க...... 'இலவசக் கொத்தனார்' என்றாலே குழப்பம்தான்:-))))))