Wednesday, January 30, 2013

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா? நோ ஒர்ரீஸ்!!!


மன்னிப்பு கேட்கும் தொனியில்  ரெண்டு டாலர் கட் டணம் என்று சொன்னாங்க கவுண்ட்டரில் இருந்த பெண். அதுகூட இந்த இடத்தை மெயிண்டெய்ன் செய்யத்தான் என்று சொன்னதைக் கேக்க எனக்கே பாவமாப் போச்சு.வெறும் 400 பேர் வசிக்கும் ஊரில் உள்ளூர் மக்கள் தினமும் ம்யூஸியம் வந்து போவாங்களா என்ன? (இங்கே வேலை(!) செய்யும் பெண்மணி தவிர)


சின்ன இடம்தான் என்றாலும் வெளிப்புற வெராண்டாவில்  ரெண்டு மூணு பெஞ்சு இருக்கைகள் போட்டு மழைச்சாரல் அடிக்காமல் இருக்க முன்புற மறைப்பும் அதில் மழைக்கோட்டு, குடைகள் எல்லாம் மாட்டி வைக்க வசதியுமா நல்லாவே இருக்கு.
வெளி வாசலில் ஒரு ப்ரொப்பல்லர். அந்தப் பக்கமா திமிங்கிலக்கொழுப்பு காய்ச்சி எடுக்கும் கொப்பரைகள். கடலும் கப்பலுமா இருக்கும் பகுதி என்பதால் இந்தப்பக்கங்களில் எல்லாம் கப்பல் சமாச்சாரத்தை வாசல் முற்றத்தில் வைப்பது  ஒரு ஃபேஷனாப் போயிருக்கு. இல்லேன்னா  வாஸ்து காரணமோ???)  ஆனா ஒன்னு சொல்லணும். எல்லாவே விதவிதமான டிஸைன்கள்தான்.  ப்ளஃப் மியூஸிய வாசலில் அஞ்சு இதழ் பூ மாதிரி ஒன்னு அட்டகாசமா இருக்கு!


 மவொரிகளில் அந்தக்கால உடைகள், மட்டன் பர்ட் சமைச்சுப் பார்சல் செய்ஞ்சு வைக்கும்  ஓலைப்பைகள் , அவர்கள் பயன்படுத்திய  மீன்பிடிக் கருவிகள் இப்படி ரெண்டு மூணு டிஸ்ப்ளே இருக்கு. தவிர... இங்கே மற்றவர்கள் வர ஆரம்பித்தபின் அவர்கள் கொண்டுவந்த,பயன்படுத்திய  பொருட்கள் ஏராளம்.

இங்கத்து சரித்திரம்  ஒரு 200 வருசம்கூட இல்லை என்பதால் அகழ்வாராய்ச்சி எல்லாம் செய்யாமலேயே   அப்போதைய மக்களின் வழிவந்த குடும்பத்தினர்  தானமாக கொடுத்தவைதான். தங்கள் முன்னோர் பயன்படுத்தியவை சரித்திர முக்கியத்துவம் பெற்றது. அவைகளை ஊருலகம் பார்த்து ரசிக்கணும் என்ற ஆர்வமும் பெருந்தன்மையும்தான் காரணமா இருக்கணும். (ஐயோ... எங்க கொள்ளுப்பாட்டி போட்டுருந்த கெம்புக்கம்மல்  இப்ப இருந்துருந்தா நான் நம்மூர் மியூஸியத்துக்குக் கொடுத்துருப்பேனா என்பது சந்தேகம்தான்.  நல்ல மாதுளைமுத்துப்போல் ஜொலிக்குமாம் கம்மல்!! சுத்தத்தங்கம்! )


மைக்கூடும் தொட்டு எழுதும் கட்டைப்பேனாவும்  படிச்சவங்க வீட்டுலே இருக்கும்  அற்புதப்பொருள்!

ஆதிகாலத்து அமெரிக்கன் டைப்ரைட்டர் இது!

டெலிபோன்  எக்ஸ்சேஞ்ச்.  பிபிஎக்ஸ். நீங்க ரிஸீவரை எடுத்தவுடன் இங்கே விளக்கெரியும். ஆபரேட்டர்  என்ன நம்பர் வேணுமுன்னு கேட்டு  கனெக்‌ஷன் தருவாங்க.

இது என்னன்னு சொல்லுங்க?  துருத்தி!  ஹைய்யோ... பார்த்து எவ்ளோ நாளாச்சு!  வத்தலகுண்டு வாழ்க்கையில்  வாசலில் ஈயம் பூசித்தர வரும்  ஆட்கள் வச்சுருப்பாங்க.  ராஜாஜி மைதானம் மாரியம்மன் கோவிலாண்டை மாட்டுக்கு லாடம் கட்டறவங்களும் இதை வச்சுத்தான் தீக்கனலை ஜொலிக்க வைப்பாங்க.


அய்ய... எச்சில் கும்பா!!!

புகைபிடிக்க பைப் அதுக்கு ஒரு மரக்கவர்!

சிகெரெட் வர ஆரம்பிச்சதும் அதை வச்சுப்பிடிக்க ஒரு ஹோல்டர்.

காஃபி கொட்டை அரைக்கும் மிஷின் இருக்கு. ஃபில்டரைத்தான் காணோம். இல்லேன்னா அடிக்கும் மழைக்கு ஒரு ஃபில்டர் காஃபி போட்டு சூடாக் குடிச்சால் எவ்ளோ நல்லா இருக்கும் இல்லே?நுரை பொங்கும் காபி மீசையில் ஒட்டாமக் குடிக்கணுமுன்னா இது வேணும். என்னமா (உக்காந்து) யோசிச்சு இருக்காங்க பாருங்களேன்!!!!


தையல் மிஷின்கள்!!  கடந்து வந்த தூரம் அதிகம் இப்போ. கண் சரியாத் தெரியாத என்னைப் போன்றோருக்கு தையல் மெஷீனில் தானே ஊசியில் நூல்கோர்க்கும் வசதி கூட வந்துருச்சு. ஒன்னரை வருசத்துக்கு முந்தி நான்  நியூஸி திரும்பினதும்  அட! அப்படியான்னு ஒன்னு வாங்கிக்கிட்டேன்! ரெடிமேடில் விஸ்தரிப்பு வரலாம்!!!)

ஆமாம்..   மேலே உள்ள படம் ,இது என்னவா இருக்குமுன்னு சொல்லுங்க பார்க்கலாம்.

பனிரெண்டரை மணி. லஞ்ச் டைம்.  ம்யூஸியம் வாசல் பெஞ்சில் உக்கார்ந்து  கொண்டு போன சாப்பாட்டை முடிச்சதால் கோபாலுக்கு கனம் குறைஞ்சது நிஜம்:-)


தொடரும்..........:-))

பி.கு: போன இடுகையில் படம் இல்லாத குறையை இந்த இடுகையில் தீர்த்தாச்சு:-)))) 

Tuesday, January 29, 2013

என்னப்பா....இன்னிக்கு இப்படிப் படுத்தறே ப்ளொக்ஸ்பாட் ஆண்டவா?Monday, January 28, 2013

கடலின் அக்கரை போவோமே...கட்டமரத்துலே போவோமே.....

இன்னொருக்கா   செக் லிஸ்ட்டை சரிபார்த்தேன். பகல் சாப்பாட்டுக்கு சாண்ட்விச், பழங்கள்,  பிஸ்கெட்ஸ் ஓக்கே. இன்ஹேலர்ஸ் ரெண்டு எடுத்து  ஒன்னு தோள்பையிலேயும் ஒன்னு என் ஜாக்கெட்  பைக்குள்ளும்  ஆச்சு.  டேஷ் மாத்திரையை சரியா ஏழரைக்கு ரெண்டுஎடுத்து விழுங்கியாச்சு.  பயணத்துக்கு  இன்னும் ரெண்டு மணிநேரம் இருக்கும்போது  போகும் பயணத்தில் டேஷ் வராமல் இருக்க இதை  முழுங்கணுமுன்னு உத்தரவாகி இருக்கு. எதுக்கும் இருக்கட்டுமுன்னு  அந்த ஸ்ட்ரிப்பை   தோள்பையில் போட்டு வச்சுருக்கு.  நல்லவேளை கோபால் , நம்ம வீட்டில் இருந்து கிளம்பும்போதே  என் ஜாக்கெட், கைக்கான  க்ளவுஸ் எல்லாம்  பொட்டியிலே முன் ஜாக்கிரதையா எடுத்து வச்சுருந்தார்.  எதுக்கு வீண் சுமை? கோடைதானே ஒரு லைட் வெயிட் ஜெர்ஸி போதுமுன்னு இருந்தேன். இப்படி அதீத நம்பிக்கை வைக்கலாமோ?   குடை இருக்கா? இருக்கு.  கேமெராவுக்கு ஒரு ஸ்டேண்டர்ட் லென்ஸ் போதும். நாம் எடுக்கும் அழகுக்கு வர்றது வரட்டும்.


நேற்று இரவு ஆரம்பிச்ச பெருமழை இன்னும் விடலை:(


இன்னிக்கு (Rakiura) ரகியூராவுக்குப் போறோம். இது ஸ்டீவர்ட் ஐலண்டுக்கான மவொரி பெயர். இங்கே நியூஸியில் எல்லா நகரங்களுக்கும் மவொரி பெயர் ஒன்னு இருக்கு. மவொரி மொழியும் இந்த நாட்டு அதிகாரபூர்வமான  மூன்று மொழிகளில் ஒன்று. ஆங்கிலம், மவொரி மொழிகள் மட்டுமே முந்தி இருந்தவை. இப்போ 2006 முதல்  New Zealand Sign Language என்றதை செவிப்புலன் குறைந்தவர்களுக்காக சேர்த்துருக்காங்க.

ஒன்பதரைக்கு படகு புறப்படும். அரைமணிக்கு முன்னே செக்கின் செய்ஞ்சுக்கவேணும்.  நேத்து டிக்கெட் புக் செய்யும்போதே  கால்மணிக்கு முன்னால் வர்றோமுன்னு சொல்லி வச்சுருந்தோம்.  இங்கே அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. இண்டர்நேஷனல் ப்ளைட்டுக்கே ஒரு மணி நேரத்துக்கு முன்னால் போனால் போதும்.


Murihiku (இன்வெர்கார்கில்) வில் இருந்து,  இங்கே    Motupohue (ப்ளஃப் )வரணுமுல்லே  Rakiura ( ஸ்டீவர்ட் ஐலேண்ட்) வுக்குப் போகணுமுன்னா?   சொல்லிப்பாருங்க...நாக்கெல்லாம் சுளுக்கிக்கிது இல்லை? அதான் ஆங்கிலப்பெயர்களே போதுமுன்னு எல்லோரும் இருக்கோம்:-)

இலவசக் கார் பார்க்கிங் ஒன்னும் கிடைக்கலை. போயிட்டுப்போகுதுன்னு  ஒரு நாளுக்கு 7 டாலர் கட்டணம் வசூலிக்கும் கார்பார்க்கில் (இது படக்குத்துறைக்கு எதிரில் இருக்கு) வண்டியை விட்டுட்டு  படகுத்துறை அலுவலகத்தில் நுழைஞ்சு பயணச்சீட்டைக் காமிச்சு, போர்டிங் பாஸ் வாங்கிக்கிட்டோம். ஒரு ஆளுக்கு ரெண்டு பெட்டிகள்வரைதான் அனுமதி. மேற்கொண்டு இருந்தால் கூடுதல் கட்டணம் உண்டு.  Bicycle, Kayak,Dinghy,motorbike விருப்பப்பட்டால் தனிக்கட்டணம் கட்டிக் கொண்டு போகலாம். இதோ இப்பப்போயிட்டு மாலை திரும்பிவரப்போறோம். இதெல்லாம் நமக்கெதுக்கு?

 ஒன்பதரைக்குப் படகு  டாண்ன்னு கிளம்பிருச்சு. சுத்தும் முத்தும் பார்த்தால்  அந்நிய(நாட்டு) முகங்கள். பலர் அருமையான  ட்ரெக்கிங் ஷூஸ் போட்டுக்கிட்டு இருக்காங்க.  காடுமலையேறும் முடிவோடுதான் இருக்காங்க போல.

23 மீட்டர் நீளமுள்ள கட்டமரன். பயணிகளுக்கு 100 இருக்கைகள். கேப்டன் தவிர  மூணு உதவியாளர்கள். பின்னால் உள்ள டெக்கில் லக்கேஜ் அடுக்கும் இடம், டாய்லெட், நின்னு வேடிக்கை பார்க்க  கம்பித்தடுப்புகள். கண் போகும் இடத்தில் எல்லாம் ஸிக் பேக் வச்சுருக்காங்க. நம்மைப்போல் டேஷ் கேஸ்கள் ஏராளம் இருக்கு!

படகினுள்ளே காஃபி, டீ போட்டுக் குடிக்க வசதி. எதாவது சாப்பிடணுமுன்னா  ஸ்நாக்ஸ் விற்பனைக்கு வச்சுருக்காங்க.பிக்னிக் லஞ்சு வேணுமுன்னா டிக்கெட் புக் பண்ணும்போதே சொல்லிட்டால் அதுக்கு தனிக் காசு வாங்கிக்கிட்டு ஏற்பாடு பண்ணி, படகு விட்டு இறங்கும்போது கையில் கொடுத்துருவாங்க.

பாதுகாப்பு வசதிகள். லைஃப் ஜாக்கெட் போட்டுக்கும் முறைன்னு (விமானத்தில்  டெமோ கொடுப்பதுபோல்) இங்கேயும்  காமிச்சார்  ஒரு ஊழியர். நல்லா வேடிக்கை பார்க்கணுமுன்னு முன் வரிசையில் போய் உட்கார்ந்திருந்தோம்.  ஆனா பெஸ்ட் ஸீட் கேப்டனோடதுதான்.

முன்னால் வரிசையில் ரொம்ப தூக்கித் தூக்கிப்போடும். அதனால் கொஞ்சம் பின்வரிசைகளில் பரவலா உக்காருங்கன்னார் கேப்டன்.  100 பேர் போகும் படகில் எண்ணிப்பார்த்தால் இப்போ வெறும் 13 பேர்தான்.  அடிக்கும் மழையில்  வெளிக்காட்சிகள் ஒன்னுமே கண்ணுக்குப் படலை.  போதாக்குறைக்கு இன்னிக்குக் கடல் கொந்தளிப்பு அதிகம். பெரிய அலைகள் எழுந்து அப்படியே கண்ணாடியில் வந்து அடிக்குது. ரொம்ப நல்லநாளாப் பார்த்து வந்துருக்கோமேன்னு இருக்கு:(அடிக்கும் மழையும்  ராட்சஸ அலைகளுமா படகை உண்டு இல்லைன்னு பண்ணுது. வானத்துக்கும் தண்ணிக்குமா போய் வர்றோம்.  விமானத்துலே டர்புலன்ஸ் போல தண்ணீரில் தள்ளாட்டம். ஒரு விநாடி எழுந்து நின்னு  ஒரு படம் எடுக்க முடியலை.  இதுலே டேஷைப்பற்றிய பயம் வேறு வயித்தைக் கலக்குது!

சரியா ஒரு மணி நேரப்பயணம். முப்பத்தியஞ்சு  கிலோமீட்டர். ஹாஃப் மூன் பே (Half Moon Bay) ஓபான்  (Oban) படகுத்துறையில் வந்திறங்கினோம்.  வெளியேஒரு அம்பது மீட்டர் தூரத்தில் தகவல் நிலையம். வழிகாட்டி நம்மை நடத்திக் கூட்டிப்போய் தீவைச்சுற்றிக் காமிக்கும் டூர் ஒன்னு இருக்கு.  ரெண்டு மணி நேரம்.  51 டாலர் ஒரு நபருக்கு. குறைஞ்சபட்சம் ரெண்டு பேர் இருந்தால்தான் டூர் கொண்டு போவாங்க.  ரெண்டு பேர் இருக்கோம். பிரச்சனையும் ரெண்டேதான்.  அடாத மழையும், பொருத்தமான காலணி இல்லாமையும்.இந்தத் தீவுக்கு நடக்கணுமுன்னே வெளிநாட்டு மக்கள்ஸ் வர்றாங்க.சின்னதா பத்து நிமிட வாக் முதல்  5 நாட்கள்  நடை வரை உண்டு.  அஞ்சு நாள்  நாம் நடக்க கட்டணம் 1995  டாலர் மட்டுமே!

அக்கம்பக்கமா சிலபல தீவுகள் இருக்கு. மட்டன்பர்ட் தீவு   உல்வா தீவு(Ulva Island) Port William, Horseshoe Bay இங்கெல்லாம் போய் பார்த்துவர   Water Taxi கூட இருக்கு. இந்தத் தீவுகளிலு குறிப்பாக தேசிய பூங்காவின்  அக்கரை ஓரங்களிலும்  அஞ்சு வகை பெங்குவின்கள், மூணுவகை ஆல்பட்ராஸ் பறவை இனங்கள், அண்டார்க்டிக் பறவைகள், கிவி பறவைகள்  இப்படி ஏராளமானவைகளைப் பார்க்கலாம். டால்ஃபின்ஸ், ஸீ லயன்ஸ் இப்படி  சிலஇனங்களும் உண்டு.

இந்த ஸ்டீவர்ட்  தீவின் பரப்பளவு  மொத்தம்  1570 கிமீ. இதுலே 85 %  மலையும் காடுகளுமே. ரகியூரா தேசிய பூங்கா.  கடலையொட்டி இருக்கும் சின்ன நிலப்பரப்பில்  சின்னச் சின்ன கிராமங்கள்.பெரிய ஊர் (டவுன்)என்று சொன்னால் இந்த ஓபான் (Oban) தான்.  மக்கள் தொகை இந்த முழுத்தீவுக்கும் சேர்த்து  வெறும் (400) மட்டுமே!

இங்கே அதிகம் விலை உயர்ந்த  ஒன்னு மின்சாரம்! நியூஸியின் மற்ற பகுதிகளைவிட நாலுமடங்கு அதிகம். எல்லாம் டீஸல் பவர் என்பதுதான் காரணம். மற்றபடி ஒரு சூப்பர் மார்கெட், போஸ்ட் ஆஃபீஸ்,  நாலைஞ்சு  சாப்பாட்டுக்கடைகள்,  ஒரு ம்யூஸியம்,  வார் மேமோரியல் , ரெண்டு சர்ச்சுகள் , நூலகம், சில ஹொட்டேல்கள், பேக் பேக்கர்ஸ்க்கு  நாலைஞ்சு லாட்ஜ்கள் இப்படி இருக்கு.  செல்ஃபோன் சர்வீஸ் பல சமயங்களில் வேலை செய்யாது.

டாக்  அலுவலகம்(Doc.  Department ofConservation)  பக்கத்து தெருவில்(!) இருக்குன்னு அங்கே போனோம். எல்லாம் மழையில் முக்கால்வாசி நனைஞ்சுக்கிட்டேதான். சின்ன குடையில் ரெண்டு குண்டூஸ்க்கு இடமில்லை:-)


மழைக்கு இதமா  கதகதன்னு இருக்கு இடம். ஹீட்டர்கள் ஓடிக்கிட்டே இருக்கு. உள்ளே நல்ல கூட்டம்.  காடுசுற்றிகள் அடைமழையில் காடுகளுக்குள் போக முடியாமல் இங்கே வந்து காலநிலை மற்ற விவரங்களுக்காகவும் கொஞ்சம் ஓய்வெடுக்கவுமா காத்து நிக்கிறாங்க. ட்ராக் கண்டிஷன்ஸ், அடுத்த சில நாட்களின் காலநிலை எல்லாம் அப்பப்ப எழுதிப்போட்டுக்கிட்டே இருக்காங்க.


தேசியப்பூங்காவுக்குள் நுழைய அனுமதி இலவசம் என்றாலும் முதலில் டாக் அலுவலக்ம் போய் நம்ம பெயரைப்பதிஞ்சு கொண்டு எதற்காக வந்துருக்கோம். எத்தனை நாளில் காட்டுக்குள் இருக்க உத்தேசம், அங்கிருந்து வெளிவரும்நாள் எப்போது என்றெல்லாம்    இன்டென்ஷன் ஃபார்மில் எழுதிக்கொடுக்கணும். அப்பதான் குறிப்பிட்ட நாளில் நாம் திரும்பி வரலைன்னா தேடிக்கண்டுபிடிக்க ஆள் அனுப்புவாங்க. .

இங்கே ஊர்வன (அதாங்க  பெருசு, பெயர் சொல்லாதது)  சிங்கம் புலி கரடின்னு  ஒன்னும் இல்லாததால் காட்டுக்குள்ளே பயமில்லாமல் போகலாம். மலைகளும் அடர்ந்த காடுகளுமா இருக்கு.  Mount Anglem மலைச்சிகரத்துக்கு  979  மீட்டர் உயரம் ஏறிப்போகணும். இதுதான் அதிக உயரமான சிகரம் இந்தத் தீவில்.

அந்தக்கால காடோடிகள் மலைஏறிகள் கொண்டு போன பொருட்கள். அவுங்க வாழ்க்கைமுறை, இருப்பிடம் இப்படி சில அங்கே டிஸ்ப்ளே வச்சுருக்கு. சாமான்களைப்பார்த்தால்...சிம்பிளான வாழ்க்கைக்கு இதுவே போதுமுன்னு தோணிப்போகுது. மவொரிகள் சமைக்கும் முறை, உணவுகளை ரெண்டு மூணு வருசம் கெடாம எப்படிப் பாதுகாத்து வச்சாங்க என்றெல்லாம் பார்க்கும்போது வியப்புதான் மிச்சம்!!!


மழை நிக்கட்டுமேன்னு கொஞ்ச நேரம் உக்கார்ந்திருந்தால்.... அந்த இளம்சூட்டுக்கு அப்படியே கண்ணைச் சுத்திக்கிட்டு வருது தூக்கம்.  வேலைக்காகாதுன்னு கிளம்பி வெளியே வந்தோம்.  மழை விடாமல் பேய்ஞ்சால் பூமிக்கடியில் இருக்கும் புழுப்பூச்சிகள் வெளியில் வந்துருமாம். வாத்துகளுக்கு நல்ல வேட்டை.

கடலை ஒட்டிப்போகும் தெருவில் நுழைஞ்சு நடக்கும்போது , ம்யூஸியம் போகும் வழின்னு போட்ட அம்புக்குறிக்குள் பாய்ந்தோம். அடிக்கும் மழையில் கெமெராவைக் காப்பாற்றக் கஷ்டப்பட்டுத்தான் போனேன்.

தொடரும்.......:-)

PINகுறிப்பு:  போனவருசம் (சரியா ஒன்னரை வருசத்துக்கு முன்) இந்தப்பதிவை வெளியிட்டபோது ப்ளொக்கர் படுத்திய பாடால் கன்னாபின்னா என்றானதை  இன்று ஜூலை 1, 2014 சரி செய்து மீண்டும் வெளியிட்டுள்ளேன்.

Friday, January 25, 2013

பொழுது விடிஞ்சால் புது வருசம்!

பார்ட்டிக்கு வா வான்னு கூப்புட்டுக்கிட்டே இருப்பதை இந்த ரெண்டு நாளாப்பார்த்துக்கிட்டே இருக்கேன்.   சிட்டி கவுன்ஸில்  சதுக்கம். Wachner Place. நாம் முந்தி மணிக்கூண்டு பார்த்தோம் பாருங்க. அதே இடம்தான்.  மூணுபக்கமும் கட்டிடங்களுக்கு இடையில் இருக்கும் திறந்தவெளி முற்றமா இருக்கு.  நாம் தங்கி இருக்கும்  இடத்துக்குத் தொட்டடுத்துதான்.


ராச்சாப்பாட்டுக்கு எதாவது  வாங்கிக்கணும். நேத்து வாங்கின பீட்ஸா பாதி அப்படியே இருக்கு. ஃப்ரிட்ஜ்லே போட்டு வச்சுருக்கேன். நாளைப் பகலுக்கும் இங்கிருந்தே எதாவது லஞ்ச் எடுத்துக்கிட்டுப்போனால் தேவலைன்னு மனசில் சட்னு தோணுச்சு.  பேக் அண்ட் ஸேவ் என்ற சூப்பர் மார்கெட்டுக்குப் போய்ப் பார்த்தால்  நேத்து ஸேலில் இருந்த வாழைப்பழம் இன்னிக்கு உச்சாணிக்கொம்பிலே  போய் உக்கார்ந்திருந்தது.   இன்னும்  கொஞ்சம் (2 நிமிச ட்ரைவ்) தூரத்தில் இருந்த  கௌண்ட் டவுன் சூப்பர்மார்கெட் போய்  மூணு வகை ஸாலட், கொஞ்சம் பழங்கள் எல்லாம் வாங்கினோம்.

 இங்கே சூப்பர்மார்கெட்டுகளும் சரி, மற்ற பெரிய கடைகள் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், ஹார்ட் வேர் இப்படி எல்லாமே நாடு முழுசும் கிளைகள் பரப்பி வச்சுருக்கு.  வடக்கு முனை முதல் தெற்கு முனை வரை  எல்லாம் ஒரே விலை.  ஸேல் ஐட்டங்களும் அப்படித்தான்  எல்லா இடத்திலும் ஒன்னு போல! கடைகளின் உள்கட்டமைப்பு கூட ஏறக்குறைய ஒன்னுபோலவே இருக்குமுன்னா பாருங்க. வேற ஊர்க் கடைகளில் வாங்குவது போலவே இருக்காது. இதுலே ஒரு நன்மை என்னன்னா.....  ஊர் ஊருக்கு ஸ்பெஷாலிட்டின்னு  ஒன்னும் இல்லாததால்  நண்பர்களுக்கு பரிசு அங்கங்கே போய் வாங்கிக் கொடுத்தால் ஆச்சு. இங்கிருந்தே மூட்டை கட்டத் தேவை இல்லை.சிவிக் தியேட்டர் கட்டிடம்  ஆரம்பகாலத்தில் கட்டுன அதே ஸ்டைலில்  இன்னமும். பாரம்பரிய லிஸ்ட்டில் இதுவும் இருக்கு.  அப்படி அப்படியே மெய்ன்டெய்ன் பண்ணிக்கிட்டு இருக்காங்க  இந்த ஊர் முழுசும் உள்ள விக்டோரியன் ,எட்வர்டியன் காலக் கட்டுமான டிஸைன்களை!


வாங்குன பொருட்களை அறையில் வச்சுட்டு மழைத் தூரலினூடே  குடையும் பிடிச்சுக்கிட்டு அப்படியே டீ தெருவில் ஒரு மெதுநடை. நூலகம்  கண்ணில் பட்டது. ஆனால் சாத்திட்டாங்க. பரவாயில்லை. எல்லா ஊர்களிலும் இருக்கும் நூலகங்களும் ஒன்னு போலவே சேவை.  ஒரு அட்டையில் எத்தனை புத்தகங்கள் வேணுமானாலும் எடுத்துக்கலாம். உள்ளுர்ப் பயணம்  போனால், உள்நாட்டுலே எந்த ஊர் நூலகத்திலும் அதைத் திருப்பிக்கொடுக்கலாம்.டிவிடி சிடி போன்றவைகளுக்கு மட்டுமே  ஒரு கட்டணம் கட்டணும். அதுவும் அதிகமில்லை.  அதுவே அங்கத்தினர் 16 வயசுக்குட்பட்டவரா இருந்தால்  எல்லாமே இலவசம்.   தேவைப்படும் புத்தகம் ஷெல்ஃபில் இல்லைன்னா அது திரும்பி வந்ததும் நமக்கு வேணுமென்று புக் பண்ணிக்கலாம். அதுக்கு ஒரு சின்னக் கட்டணம் உண்டு. பள்ளிக்கூடப்பிள்ளைகள் வீட்டுப்பாடம் செய்ய ஒரு பகுதியும்,  நிறைய கணினிகள் வச்சு  இன்ட்டர்நெட்  வசதிகளோடு  ஒரு பகுதியும் உண்டு, இதுவும் முழுக்க முழுக்க  அனைவருக்கும் இலவசமே.  15 நிமிசம் என்ற கணக்கு உண்டு. யாரும் வரிசையில் இல்லைன்னா எவ்வளவு நேரமுன்னாலும்  வலை மேயலாம்.


 நூலகப் புத்தப் பட்டியல் பார்க்க,  நமக்கு வேண்டியது  எந்த ஷெல்ஃபில் இருக்குன்னு தெரிஞ்சுக்க, இப்ப இருக்கா அல்லது வெளியே போயிருக்கா, அப்படிப்போயிருந்தால் எப்போ திரும்பி வரும்  என்ற விவரங்கள் எல்லாம் தெரிஞ்சுக்க  தனியா ஒரு ஏழெட்டு கணினிகள்.

கண் பார்வை குறைந்துவரும் முதியவர்களுக்காக ,  பெரிய எழுத்து ப்ரிண்ட் உள்ள  புத்தகங்கள்  பல தலைப்புகளிலும்  ஏராளம். நாம் கட்டும் வீட்டு வரிகளில் கணிசமான பங்கு நூலகத்துக்குப் போயிருது.


திரும்பிப் போகும்போது  சதுக்கத்தில்   பார்ட்டி நடப்பதற்கான ஏற்பாடு ஒன்னையும் காணோம்.  எட்டுமணிக்கு மேல்தான் ஆரம்பம் என்பதால் நாங்கள் அறைக்கு  வந்துட்டோம்.  ஒன்னு சொல்லணும். இங்கே மாடியில் நம்ம அறைக்குத் திரும்பும் திருப்பத்தில் ஒரு திராக்ஷை கொத்துப் படம் மாட்டிவச்சுருக்காங்க. சாதாரணமான படம் என்றாலும் அதுக்குள்ளே ஒவ்வொரு  நிமிசத்துக்கும் ஒவ்வொரு நிறம் வந்துக்கிட்டு இருந்தது . எனக்கு ரொம்பப்பிடிச்சுப் போச்சு.

அந்தப்பக்கம் போகும்போதும் வரும்போதும், அறைக்கதவைத் திறக்கும்போதும்  இப்ப என்ன நிறமா இருக்குமுன்னு  ஒன்னை நினைச்சுக்கிட்டு அதே நிறம் அங்கே இருந்தால் மனசு (அல்ப )மகிழ்ச்சி  அடைஞ்சது உண்மை.  ஆரூடம்......  நீலம் வந்தால் போற(?) காரியம் வெற்றி.

ராச்சாப்பாட்டை முடிச்சபின் கொஞ்சநேரம் வலை மேய்ஞ்சுட்டு  'ஆச்சி மசாலா நீயா நானா ?'  பார்த்தோம். மழை வலுக்க ஆரம்பிச்சு பக்கத்து தகரக்கூரையில் பெரும்கூப்பாடு போடவும் அதையும் மீறிய பாட்டுச்சத்தம்  ஒலிக்கவும்  சரியா இருந்துச்சு. கச்சேரி ஆரம்பிச்சுட்டாங்க .


ஐயோ....ராத்திரி எல்லாம் தூங்கமுடியாது போலன்னு புலம்பிக்கிட்டே இவர்  பைக்குள்ளே  இயர்ப்ளக்ஸ் தேட ஆரம்பிச்சார். ஜன்னலை அடைச்சதும் சத்தம் குறைஞ்சு போனதென்னவோ உண்மை. நியூஸி வந்த பிறகு  எந்தவொரு நியூ இயர்ஸ் ஈவ் நிகழ்ச்சிக்கும் போனதில்லை. ராத்திரி ஊர் சுற்றல் கிறிஸ்மஸ் ஈவ்  மட்டும்தான். ஆனால் இரவு 12 வரை சும்மானாச்சுக்கும் முழிச்சுருந்து  12 மணிக்கு டிவிக்காரன் ஹேப்பி நியூ இயர் சொல்லி  பட்டாஸ் போட்டு வான /வாணவேடிக்கை காமிப்பதைப் பார்த்துட்டு  தூங்கப்போவோம். இங்கே கோடைகாலம். டேலைட் ஸேவிங்க்ஸ் நடைமுறை இருப்பதால் உண்மையில் அப்போ ராத்திரி 11 மணிதான் ஆகி இருக்கும்.  டேட்லைனில் வேற இருக்கு நியூஸி. ஊருலகத்துக்கு முன்னாடியில் இது இன்னும் முன்னாடி:-)))


வாங்க,  புது வருசப் பார்ட்டிக்குப் போய் வரலாமுன்னா  சோம்பலா இருக்கு மழையில் வெளியே போகன்னார். நல்லாருக்கு. நம்ம கட்டிடத்தைத் தொட்டடுத்து சதுக்கம். இதைவிட வேற சான்ஸ் கிடைக்குமா?


 இன்னிக்கு லஞ்சு முடிச்சுட்டு  நடந்து வேடிக்கை பார்த்துக்கிட்டே போனபோது  'மேக்பேக் ' கடையில் ஸேல் போட்டுருக்குன்னு நுழைஞ்சதுலே  இவருக்கு ஒரு ஜாக்கெட் வாங்கினோம்.  66% கழிவு. ஆனாலும் இதுலேயே அவுங்களுக்கு லாபம் இல்லாமல் போகாது. முதலில் அந்தத் தொழிற்சாலை இங்கே எங்கூரில்தான் இருந்துச்சு. தயாரிப்புச் செலவு கட்டுப்படி ஆகலைன்னு  இப்ப சீனாவுக்கு மாறிட்டாங்க. ரொம்ப லைட் வெயிட். ஆனால் கொஞ்சம்கூட குளிரே தெரியாது. வாட்டர் ப்ரூஃப் வேற. பனிச்சறுக்கு, மலையேற்றம் போன்ற சகல குளிர்கால விளையாட்டுகளுக்கும் தேவையான  உள்ளாடை முதல் பெரிய கூடாரம் வகைகள் வரை இவுங்கதான் ஸ்பெஷலிஸ்ட்.  புது ஜாக்கெட்டைப்போட்டுக்கிட்டுக் கிளம்பினார்.


1942 முதல் 1950 வரை எட்டு வருசம் மேயரா இருந்தவர்  Abraham Wachner. ராணுவ வீரர். முதலாம் உலகப்போரில் தலையில் அடிபட்டு ஸ்டீல்ப்ளேட் வச்சுருக்காங்க. அப்படியும் கல்லிப்போலி போரிலும்  கலந்துக்கிட்டார். இவர் சேவையை பாராட்டி இவருக்கு 1946 இல் O.B.E. (Order of the British Empire) பட்டம் கொடுத்து கௌரவிச்சது அரசு.   நகரசபையும் ,  புதுப்பிக்கப்பட்ட சதுக்கத்துக்கு    Wachner Place என்று இவர் பெயரை வச்சுருக்கு.  தொழில் முறையில் இவர் ஷூ கடை நடத்திக்கிட்டு இருந்துருக்கார்.  இவருடைய கடை ஒரு மாடியில் இருந்துச்சுன்னு நியூஸி சரித்திரக் குறிப்புகள் சொல்லுது.


சின்னதா இருக்கும் மேடைப்பகுதியில்  நால்வர்  இசைக்குழு.  முன்னே சதுக்கத்தில் கொட்டும் மழையில்  இசைக்கேற்ப நடனமாடிக்கிட்டு  பார்ட்டியை அனுபவிக்கும் மக்கள்  மூன்று பேர் உள்ள  கூட்டம். எல்லாம் சின்னப்பசங்க. ஒரு 12 இல்லை 13 வயசு இருக்கலாம்.


சதுக்கத்தின்  ரெண்டுபக்கமும் இருக்கும் கடைகளுக்கான மேற்கூரையின் கீழ் அங்கங்கே சிலர். பசங்களோட அப்பா அம்மாவா இருக்கலாம். "வீட்டுக்கு வா. காலை ஒடிக்கிறேன். இப்படி மழையில் ஆட்டம் போட்டு, நாளைக்கு ஜுரம் வந்தா யார் க்ஷ்டப்படப்போறது? "  இப்படி  மனசுக்குள்ளே ஆங்கிலத்தில் பொருமிக்கிட்டு இருந்துருக்க வேணும் அவுங்க. உலகம் எங்கும் பெற்றோர் அநேகமா ஒரே மாதிரிதான் புள்ளைகள் நலத்தில்!

இசைக்குழுவினரைப் பார்த்தால் எனக்கே பாவமாப்போச்சு. யாருக்காக? யாருக்காக .....ன்னு நான் மனசுக்குள்ளே  டி எம் எஸ் குரலில் பாடினேன்.  மழையில் நனையாம ஓரமாவே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமா போய் கொஞ்சம் க்ளிக்கிட்டு (அடாத மழையிலும் விடாமல் கடமையைச் செஞ்சுருவொம்ல)  விழா முடிஞ்சு கூட்டம் வீடு போய்ச்சேரணுமுன்னு  பஸ்  மையத்துலே எல்லா ரூட்டுகளுக்கும் வண்டிகள் காத்து நிக்குது. இங்கே  மூணுபேர் இருக்காங்கன்னு  பஸ் செண்டர் அதிகாரி புலம்பினார்.  உள்ளூர் பஸ் ஸ்டாண்டு சதுக்கத்தின் பின்னால்தான்.

 எங்கூர்லே கூட  ஆபீஸ் நேரம் இல்லாத பல சமயங்களில்  மாலை 6 க்கு மேல்  ஆளில்லாமல்தான் பஸ்கள் ஓடிக்கிட்டு இருக்கும். அபூர்வமா சில நாட்களில் ஒருத்தரோ ரெண்டு பேரோ இருப்பாங்க. எப்படிக் கட்டுப்படியாகுதுன்னு  வியப்புதான்.

 பத்து நிமிசத்துக்குமேலே தாக்குப்பிடிக்கமுடியாமல் அறைக்கு வந்துட்டோம். மணி பத்தேகால்கூட ஆகலை. தெருவில் இருக்கும் கிறிஸ்மஸ் அலங்காரங்களில் கலர்லைட்ஸ் எரிஞ்சுக்கிட்டு இருக்கு. ஆஹா.... பெரிய ஊர் என்று சொல்லிக்கும் கிறைஸ்ட்சர்ச்சில் கூட இதெல்லாம் இல்லை:(


நாளெல்லாம் சுத்துனதுலே  உடல் சோர்ந்து தூக்கம் கண்ணைச் சுழட்டிக்கிட்டு வருது.  ரொம்ப லேசா அப்பப்பப் பாட்டு கேட்டுக்கிட்டே இருந்துச்சு. டப் டப்ன்னு ஒரு அஞ்சாறு சத்தம். ஓ.... 12 மணி ஆச்சு. பட்டாஸ் வெடிக்கறாங்க.  அம்புட்டுதான்  நிசப்தம் சூழ்ந்தது.  ஹேப்பி நியூ இயர்  டு த  ஹோல்வொர்ல்ட் னு  நினைச்சுக்கிட்டு  கோபாலுக்கு  வாழ்த்து  சொன்னால்.......   அசைவில்லாம அவர் வேற உலகில் இருந்தார்.

காலையில் சீக்கிரம் எழுந்திரிக்கணும். குட் நைட்.

தொடரும்.............:-)
Wednesday, January 23, 2013

எப்படி வந்தனரோ!!!!!


மனுசனைப் போல கொடிய  மிருகம் உண்டோ? அதுபாட்டுக்கு தேமேன்னு படுத்திருக்கும் கடல்சிங்கத்தைப் பின்னால் நின்னு  கொல்றான். அது வலியில் அலறுது. ஐயோன்னு இருந்துச்சு எனக்கு. என்னால் முடிஞ்சது அவனை  மனசார சபிக்க  மட்டுமே:(  தோலுக்கும் இறைச்சிக்கும் கொன்னு குவிச்சவைகள் ஏராளம்  ஏராளம்.  நல்லவேளையா இந்தக்கொடுமைகள் 'இப்ப' நியூஸியில் அறவே இல்லை என்பது ஒரு சின்ன சமாதானம்.


சின்னப்பசங்களுக்கான குகை.  அதுலே பூந்து புறப்படும்போது சட்ன்னு ஒரு  டைனோஸார்  புதரில் இருந்து தலைகாட்டி உறுமுது. பசங்க அப்படியே ஸ்தம்பித்து நிற்கும்.  மனித அசைவை  கண்டதும் அதுக்கும்  பயம் வந்துருதுபோல:-)))) சென்ஸர் மூலம் இயக்கம்.
ஆல்பெட்ராஸ் என்ற பறவையினம் ஒன்னு. கடல்புறா (ஸீகல்ஸ்) இனம் என்றாலும் அவைகளோடு ஒப்பிட்டால் இது ராக்ஷஸ சைஸ்.  ரெண்டு  இறக்கைகளையும் விரிச்சால்   அஞ்சு மீட்டர் ! இதனால் காற்றில் மிதந்துகொண்டே வெகுதூரம் போக முடியும்.


சின்னதா இருக்கும் வாசல்வழியா பார்த்தால் கண் எட்டும்தூரம்வரை பெங்குவின்கள். இவர்களைப்பற்றி ஆண்கள் பொல்லாதவர்களா ?  என்று எழுதியது இங்கே.
அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்லின் கண்டுபிடிப்பும் கையெழுத்தும்.ஆரம்பகால  கேமெராக்கள் ஒரு இடத்தில். நல்லவேளை   நான் அப்போ பதிவர் இல்லை:-)

ஒரு சுவர் முழுசும் சாவியலங்காரம்.  நம்ம வீட்டில் இந்த 25 வருசங்களில் சேர்ந்துபோன சாவிகளுக்கு  விமோசனம்  கிடைக்கலாம். ஐடியா வந்துருச்சுல்லே!


விக்டோரியானா என்ற பகுதியில்  அந்தக்காலத்து  வீடு ஒன்னு. படுக்கை அறையும் சிட்டிங் ரூமுமா  காட்சிகள் கண்முன்னே!   மேரிபாப்பின்ஸ்  உடை அலங்காரம் அப்பெல்லாம்:-)

நேச்சுரல் ஹிஸ்டரி பகுதியில் கற்களும் சிப்பிகளுமா  ரெண்டு ஹால் முழுசும் டிஸ்ப்ளே. இந்த சமாச்சாரங்களை பல இடங்களிலும் ஊர்களிலும் பார்த்துட்டதால்  ஜஸ்ட் ஒரு பார்வையோடு  நகர்ந்துட்டேன்.


இங்கே பறவைகள் , 'இருந்தவைகளும்  இருப்பவைகளுமா' ஏராளம்.  ஒவ்வொன்னும் ஒரு அழகு.

ஒவ்வொன்னையும் க்ளிக்கும்போது  நம்ம கல்பட்டார் நினைவு வந்ததென்னமோ நிஜம். அவர் உசுரோட எடுத்தார். நான்.........

 
மவொரிகள் பகுதியிலே அந்தக்காலத்து தட்டுமுட்டு சாமான்களோடு அவர்கள் பயன்படுத்திய படகு. கனூ என்று சொல்லும் ரகம்.  முழு மரத்தையே குடைஞ்சு செஞ்சுருக்காங்க. இக்கட்டாத்தான் உக்காரமுடிஞ்ச அதுலே ஏறி எப்படித்தான் இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து நியூஸிக்கு வந்தார்களோ என்று நினைச்சுப் பார்த்தால்............. ஹைய்யோ!!!


இந்தப் பக்கங்களில் எங்கே பார்த்தாலும் நங்கூரங்களும் ப்ரொபெல்லர்களுமாத்தான்  போட்டு வச்சுருக்காங்க.  கடலோடிகள் என்பதைக் காமிக்கிறாங்கபோல. ம்யூஸியம்   மூடும் நேரம் வந்தாச்சு.  அதனால் நாங்களும் சட்புட்டுன்னு பார்த்துட்டு கிளம்பிப்போய் நின்னது வார் மெமோரியலில்.


ஊருக்கு ஒன்னுன்னு  சொன்னேன் பாருங்க, இங்கே இது கொஞ்சம் பெரிய அளவில் இருக்கு.  Invercargill Cenotaph. வீரர்களின் விவரங்கள்  முழுசும் கவனமாச் செதுக்கி இருக்காங்க. உலகப்போர்களில் மட்டுமில்லாமல்  அதுக்குப்பிறகு நடந்த போர்களிலும் கலந்துகொண்டு வீரமரணம் அடைந்த மக்களை நினைவுகூறுகிறது. அழகான பரந்த புல்வெளியும் இருக்கைகளுமா அமைதியா இருக்கும் இது மெயின்ரோடுலே (Dee Street ) இருக்குன்னா நம்புங்க. நினைவுத்தூணுக்கு முன்புறம் புல்தரையையே ஒரு டிஸைனாப் போட்டு வச்சுருக்காங்க. சிரத்தை கண்கூடு.


இதே தெருவில்  ரெண்டு பக்கமும் அங்கங்கே  விதவிதமான டிஸைனில் சர்ச்சுகள். இங்கெல்லாம் சர்ச்சுகள் நம்மூர் புள்ளையார் கோவில்கள் போலதான். ஆனால் ஒரே தெருவில் எட்டுப் புள்ளையார் கோவில்கள் இருந்து நான் பார்த்ததில்லை.

ஸேன்டி பாய்ண்ட் (Sandy Point)ன்னு ஒரு இடம்.  இங்கத்து   ஆறு ( Oreti River)    ஃபொக்ஸ்  ஜலசந்தியில் (Foveaux Strait ) சங்கமிக்கும் பகுதி. 2000 ஹெக்டேர் மணல் பரந்து விரிஞ்சுருக்குமிடம். totara மரங்கள் நிறைந்த  ஆற்றுப்பகுதி. இன்வெர்கார்கில்  ஊர்  உருவாகுமுன்னேயே இந்த இடம் மவொரிகள் நிறைஞ்ச பகுதி.  மட்டன்பர்ட் என்று சொல்லும் பறவையினங்கள் இங்கே ஏராளமா இருந்துச்சு. அவைகளை இந்த டோடரா மரத்தின் பட்டைகளைச்சேர்த்து சமைச்சு  இங்கே கிடைக்கும் ஒரு வகை ஓலைகளைக் கூடை போல் முடைஞ்சு அதுக்குள்ளே சமைச்ச இறைச்சியை வச்சுருவாங்க.  மூணு வருசம்வரை கெடாமல் இருக்குமாம்.


இந்தப்பறவைகள்  கடல்புறாக்களில் ஒரு வகை. மவொரி மொழியில் இதை Titi ன்னு சொல்றாங்க.இவைகளை வலைவீசிப்பிடிக்கும் உரிமைகள் மவொரிகளுக்கு மட்டுமே.  36 சிறு தீவுகளில்  இவைகளைப்பிடிச்சுப் பக்குவப்படுத்தி விக்கறாங்க.  இதுக்கு ஆட்டிறைச்சியின் ருசி இருக்காம்.  இப்பவும் உப்பிலிட்ட  மட்டன்பர்ட் வியாபாரம் கொடிகட்டிப்பறக்குது .கிலோக் கணக்கெல்லாம் இல்லை. பக்கெட் இவ்ளோன்னு விலை.

 மட்டன்பர்ட் தீவுன்னு கூட ஒன்னு இருக்கு. ஆனால் Poutama Island Titi தான் பேர் வாங்கி இருக்கு. மார்ச் 15 முதல்  மே மாசம் கடைசிவரை ரெண்டரை மாசத்துக்கு மட்டன்பர்ட் சீஸன். ஹெலிக்காப்டரில் அங்கே போய் இறங்கி, இரவு நேரங்களில் புதர்களில் இருந்து வெளியே உலவவரும்  வளர்ந்த பறவைக் குஞ்சுகளைப் பிடிச்சுப்போட்டுக்கிட்டு வருவாங்களாம்.


இந்தப்பகுதிகளில் ஏராளமான கேப்பேஜ் மரங்கள் (Cabbage Trees) இருக்கு. Native Tree. சும்மா விளைஞ்சு நிக்குது என்பதைத் தவிர வேறொன்னும் எனக்குத் தோணலை. இப்படிக் காடுகரையில் இருந்தால் ஓக்கே. ஆனால் வீடுகளில் சிலசமயம் இருப்பதால் ரொம்ப சல்லியம். அதோட  இலைகள், ஓலைகள் போல இருப்பவை.  நம்ம வீட்டுப் புல்வெளியில் உதிர்ந்து லான் வெட்டும் மிஷினில் மாட்டிக்கும்.  மிஷின் ஓடாது. கழட்டிச் சரி பண்ணனும். இது பேஜார் புடிச்ச வேலை. மரத்தை வெட்டிப் போடலாமுன்னா.......   அதுக்கு நமக்கு ரைட்ஸ் இல்லை.நேடிவ் ட்ரீ என்பதால் இதுக்கு(ம்) பாதுகாப்பு.

பூமி புத்திரர்களான  மவொரிகளுக்கு இந்த மரத்தின் பயன் தெரிஞ்சுருக்கு. இது பூக்கும் சீஸனுக்குக் கொஞ்சம் முன்னால்  மரத்தின் அடியில் தோண்டி அதன் வேர் பாகங்களை எடுத்து  வேகவச்சுத் தின்னுவாங்களாம். நம்ம  பனங்கிழங்கு மாதிரியா!!!! ஆனால் இது ரொம்ப இனிப்பா இருக்குமாம்.

1863 முதலே  திமிங்கில வேட்டைக்கான  whaling stations இந்த முகத்துவாரத்துக்கருகில் அமைச்சதால் எப்பவும் படு பிஸியான இடமா  இருந்துருக்கு.  திமிங்கில எண்ணெயை இங்கே காய்ச்சி எடுத்து  கப்பலில் அனுப்பிக் காசு பார்த்தாங்க.

நல்ல அகலமான ஆறுதான். அடிக்கும் காற்றும் மழையும் நம்மை வண்டியைவிட்டு இறங்கவிடலை. இங்கே வரும்வழியெல்லாம்  மௌண்டன் பைக், கோல்ஃப் க்ளப், ரோயிங் க்ளப், ஆர்ச்செரி அண்ட் போ ன்னு அவுட்டோர் ஸ்போர்ட்ஸ் வகைகள் குத்தகை எடுத்துருக்கு.


வந்த வழியே திரும்பி மெயின்ரோடில் சேர்ந்து இன்னும் கொஞ்சதூரம் போய் இடம் எடுத்தா அது ஒரெடி பீச் ( Oreti Beach) போகும் வழி.  இங்கேயும் பிஸ்டல் க்ளப், ஸ்கௌட் க்ளப்ன்னு  வழி நெடுக....  பாதை முடியும்போது கண்ணுக்கு எதிரில் 'ஹோ'ன்னு ஆர்ப்பரிக்கும் கடலும்,  மணல்பரப்புமா  மனசில்  இனம்தெரியாத  லேசான ஒரு பயம் தரும்  காட்சி. பாதைக்கு ரெண்டு பக்கங்களிலும் மணல்குன்றுகள்.


இன்னும் கொஞ்சதூரம் மணலில் வண்டியை ஓட்டிப்போய் கிட்டே பார்க்கலாமுன்னு கோபால் சொன்னதுக்கு தடா போட்டேன். மணலில் கார்ச்சக்கரம் புதைஞ்சால் உதவிக்கு அக்கம்பக்கம் ஒரு ஜீவன் இல்லை. அடிக்கிற பேய்க் காற்றிலும்  விட்டுவிட்டுப் பெய்யும் மழையிலும் மாட்டிக்கிட்டு முழிக்கணுமா?  வண்டியைவிட்டு வெளியே  வந்து ரெண்டு க்ளிக்கலாமுன்னா கதவைத் திறக்க முடியாமல் காற்று தள்ளுது. கூடவே வாரி இறைக்கும் மணலும்.

நல்ல வெய்யில் இருக்கும் நாளில் இங்கிருந்து பார்த்தால் 70 கிமீயில் இருக்கும் ஸ்டீவெர்ட் ஐலேண்ட் தெரியுமாம்.  இடையில்  Foveaux strait  இருக்கே. இங்கே எப்பவும் காற்றில் பனித்துளி கலந்தே இருப்பதால்  மிஸ்ட்டியாகவே இருக்கும். கொஞ்ச தூரத்தில் நடந்துபோறவங்களைப் பார்த்துக்கிட்டே இருந்தால் காற்றில் மிதப்பதுபோல் தெரிஞ்சு அப்புறம் காணாமல் போயிருவாங்க.  நமக்கு அதிர்ஷ்டம் இல்லை காணாமப் போக!!


அறைக்குத் திரும்பினோம்.   அதிகம் ஒன்னும் தூரமில்லை. 11 கிமீதான். வரும்வழியில்  ஆற்றங்கரையில் ஒரு அழகான வீடு,அத்துவானக் காட்டில் எப்படிக் கட்டியிருக்காங்க பாருங்க.


தொடரும்........:-)