கவலைப்படக் கொஞ்ச நேரம் கொடுக்காம எண்ணி நாலாவது நிமிட்லே வலப்பக்கம் திரும்பி வண்டியை நிறுத்தினார் ரிக்ஷாக்காரர். அட, ராமா.... ரிக்ஷாவில் ஏற மல்லுக்கட்டுன நேரத்துக்குப் பொடிநடையாவே வந்துருக்கலாம் ! கண்ணுக்கு எதிரா இருக்கும் கடையின் பெயர்ப்பலகை.... ஆஹா... இறங்கி வலப்பக்கமா நடந்து போகணுமாம். இதுவும் சந்துன்னு தனியாச் சொல்ல வேண்டியதில்லைதானே? ஆனால் கொஞ்சம் அகலமான சந்து.
எப்படி இறங்குனேன் ? இறக்கப்பட்டேன் ! இந்தாண்டை கீழே குதிச்ச கோபாலும். ரிக்ஷாக்காரருமா இறக்கியே விட்டுட்டாங்க. காசிக்கு வந்தா எதையாவது விடணுமாமே......... நான் சைக்கிள் ரிக்ஷாவை விட்டேன் !
பராக்குப் பார்த்துக்கிட்டே நடந்ததுலே ஒன்னரை நிமிட்டில் பெயரைப் பார்த்துட்டேன். சின்ன முகப்பு வாசல். செக்யூரிட்டி, நம்மை லிஃப்டுக்குள் போகச் சொல்லி முதல் மாடிக்கு அனுப்பினார். சின்ன வராந்தா முழுசும் காலணிக்கடல்....... அதுலே நீந்திப்போகணும் போல.... கடலிலே நம்மதையும் சேர்த்துட்டுபோனால்.... வலப்பக்கம் ஒரு பெரிய கூடத்திலே டைனிங் ஹால்..... 'வாங்க.... அங்கெ உக்காருங்க'ன்னு இடத்தைக் காமிக்கிறார் ஒருவர்.
'இல்லைங்க. நாங்க சாப்ட்டாச்சு. இங்கே ஆஃபீஸ் எங்கெ ? ' ன்னதும், வலப்பக்கம் கையைக் காண்பித்தார்.. அங்கே நடுவில் உள்ள கதவு வழியாக உள்ளே போறோம். ஹம்ம்மா....... வெளியில் இருந்து பார்க்கத்தான் சின்னதாக இருக்கே தவிர பெரிய பெரிய கூடங்களாகப் பரந்து விரிஞ்சு, அதுபாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கு !
வலப்பக்கக்கூடத்தில் அலுவலகம். ஏராளமான சனம் ! நடுவில் போட்டுருக்கும் பெரிய மேஜையைச் சுத்தி மக்கள் கூட்டம் ! பின்புறச் சுவர்மாடங்களில் நம்ம ஸ்வாமிகள் ! நம்ம முழியைப் பார்த்தே புது ஆட்கள்னு ஒருவர் நமக்கு வணக்கம் சொல்லி 'வாங்க'ன்னார். குசலபிரசனம் ஆரம்பிச்சது. நம்மவர் சொந்த ஊர் போடின்னதும் அவர் முகத்தில் ஒரு பளிச்! பக்கத்தூர்க்காரராம்!
'வாங்க. முதல்லே கோயிலைப் பார்த்துட்டு வரலாம்'னு நம்மைக் கீழ்தளத்துக்குக் கூட்டிப்போனார். திறந்த வெளி முற்றத்துக்கு இங்கிருந்தே படி இறங்குது. பாதாளஈஸ்வரர் சந்நிதி முதலில் ஒரு தனியறையில் ! தரையிலேயே பிரதிஷ்டை ஆகி இருக்கு. பஞ்சலிங்கங்கள் என்றேன். கோவில் விளக்கம் சொல்லிக்கிட்டே வந்தவர் 'உலகில் வேறெங்கும் இல்லாத பஞ்சநந்திகள் இங்கே இருக்காங்க'ன்னார்.
அடுத்தாப்லே இருக்கும் இடைவெளியைக் கடந்து இன்னொரு வாசல் வழியா உள்ளே போனால் கோவில்! முழுசா ஒரு கோவிலே இருக்கு, ஒரு ப்ரகாரத்துடன்!
பஞ்சநந்தி.... ன்னதும் ஓடிப்போய் மூலவர் நகரேஸ்வரர் முன் உக்கார்ந்துருக்கும் நந்தியின் கழுத்தில் இருக்கும் ருத்ராக்ஷ, பூ மாலைகளை நகர்த்திக் காமிச்சாரா... அட! ஆமாம்........ கழுத்துக்குக்கீழே நாலு நந்திகள் !
மூலவர் சந்நிதியை வலம் வந்தோம். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி!
நமக்கிடதுபக்கம் சிறு மேடைபோல சுவர் முழுக்கக்கட்டி அதில் சிவலிங்கங்கள், ஒரு மூலையில் நம்ம முருகர் மனைவிகளுடன் !
அம்மன் சந்நிதி! அம்பாள் பெயர் நகரேஸ்வரியாம் ! கீழ்தளத்தில் இப்படி ஒரு முழுக்கோயில் பார்த்துட்டுப் பிரமிச்சு நின்னது உண்மை. நிலைவாசப்படியின் மேல் சின்னதா ஒரு சரித்திரம்!
கோவிலைக் கூட்டிப்பெருக்கும் சோனாலி. ஆறுவருஷமா இங்கே வேலை செய்யறாங்களாம்.
ரெண்டு பக்கங்களிலும் இருக்கும் விஸ்தாரமான பெரிய திண்ணைகளில் சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் !
கோவிலைச் சுத்திக்காட்டிய ராஜேந்திரனுடன் திரும்ப மாடிக்கு வந்தோம். நம்மவர் ஒரு தொகையை நன்கொடையாகக் கொடுத்தார். காசி விஸ்வநாதர் தரிசனம் ஆச்சான்னு கேட்ட ராஜேந்திரனிடம், இன்னும் இல்லை. நேத்து ராத்ரிதான் வந்தோம். இப்போ போய் விசாரிக்கணும் என்றதும், இதே ரோடில் நேரா கேட் நாலுக்குப் போயிருங்க. அங்கே உங்களுக்கு எல்லா விவரமும் கிடைக்குமுன்னார். பகல் சாப்பாட்டுக்கு மறக்காம வந்துருங்கன்னார்.
ராஜேந்திரன், தீபாவளி சமயத்தில் வந்து ஒரு வாரம் தங்கி, இங்கே உதவி செஞ்சுட்டுப் போவாறாம். இது இல்லாமல், 'எப்பத் தோணுதோ அப்போ வந்துட்டுப் போவேன்'னார்! என்ன ஒரு கொடுப்பினை !
கண்ணில் பட்டதை யெல்லாம் க்ளிக்கினப்ப, ஒரு இடத்தில் பகல் சமையலுக்குக் காய்கறிகளை நறுக்கிக்கிட்டு இருந்தாங்க.
இங்கேயே தங்கறதுக்கு அறைவசதிகள் இருக்குன்னேன். அப்ப உன் கங்கைக்கரை ? ன்னார் நம்மவர் !
அதானே....... ?
தொடரும்............. :-)