Friday, January 20, 2023

சோகத்தோடு பொழுது விடிஞ்சது........... கூடவே சண்டையும் (கோவிட்டுக்குபின் பயணம்) பகுதி 3

காலையில்  விழிப்பு வந்ததும் புதிய ஆத்திச்சூடியின் படி, கை நேரா செல்ஃபோனை எடுத்துப் பார்த்தால்  சுத்தம். ஒரே இருட்டு...... சார்ஜே ஆகலை, ராத்ரி முழுசும் சார்ஜரில் போட்டுருந்தும்கூட....  வேற இடத்துக்கு மாற்றினால் அப்பவும் இப்படியே....  கை ஒடிஞ்சு போச்சேன்னு  குளிச்சுட்டு வந்து இன்றைக்கான உடையைப் பெட்டியில் இருந்து எடுத்தால்... ஒரே ப்பிச்சுக்.....  அடராமா....  போன பயணத்தில் தைச்சும் கூட இதுவரை போட்டுக்காத உடையாச்சேன்னு.....   என்ன ஆச்சுன்னு பார்த்தால்..... நம்மவர் நேத்து  தடதடன்னு டாய்லெட்ரியை எடுத்து இந்தப் பெட்டியில் கடாசி இருக்கார். பாடிவாஷ் பாட்டிலை சரியா மூடாமலேயே  போட்டுருக்காரா.... அதெல்லாம் ஒழுகி  ஸால்வார் கமீஸ் செட் முழுசா நனைஞ்சுருக்கு. போதாதா ? 
ஏற்கெனவே துர்க்குணி. அதிலே இப்ப கர்ப்பிணின்றது போல இடும்பிக்கு ப்ரெஷர் எகிறிப்போச்சு ! என்னதான் இப்படித் திறந்து வச்சுட்டுப் போற  வழக்கம் இருக்குன்னாலும்....  என்வரை வந்ததில்லை.......  ப்ச்......... வந்த சண்டையை விடுவானேன்னு ஒரு ஆட்டம் ஆடித்தீர்த்தேன்.  கையிலே ரெண்டு கொத்து வச்சுக்கலாம்னா எட்டலை! 
மறக்காம மூஞ்சியைத் தூக்கிவச்சுக்கிட்டு, ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குப்போய், இருந்த கோபத்தை உணவில் காமிச்சேன்,  ரெண்டு இட்லி, ரெண்டு வடைன்னு.............
செல்ஃபோன்  கஷ்டத்தைக்  கூகுளாராண்டைச் சொல்லி அழுதால்.... 'அதைப்  படைச்சவன் கிட்டே போ' ன்னுட்டார். T Nagar Samsung Authorized Service Center ஹபிபுல்லா ரோடு போனோம். ஃபோனுக்குள்ளே ஈரம் இறங்கியிருக்காம். எப்படி ? குளிப்பாட்டிவிட்டேனா என்ன ? இல்லே மெட்ராஸ் சூட்டுக்கு, அதுக்கும்  வேர்த்து ஊத்துதா?  ஙே........ 
உள்ளே கொண்டுபோய் ஹீட்டர்லே வச்சாங்களா என்ன ?  திருப்பிக் கொடுத்தப்ப நல்ல சூடா இருந்துச்சு. அங்கேயே சுவரில் பதிச்சுருக்கும் சார்ஜரில் போட்டுப் பார்த்ததும் சார்ஜ் ஆகுது !   லோட்டஸ் ப்ளக் பாய்ண்ட்டில் ஏதோ  குழப்பம் இருக்குமோ?  எதுக்கும்  ஒயர்லெஸ் சார்ஜர் நல்லதுன்னாங்க. அவுங்களாண்டையே வாங்கிக்கலாமுன்னா....  விக்கறதில்லையாம்....    வேற கடையைத் தேடணும்.
பாண்டிபஸாரிலேயே ஒரு கடை கண்ணில் ஆப்ட்டது. ஒன்னே ஒன்னு இருக்காம். ஆனால்  கடையில் டிஸ்ப்ளே பண்ணதாம்.  இப்ப இருக்கும் சார்ஜ் தீர்ந்தால்  என்ன செய்யறதுன்ற பயத்தில் ஊர் திரும்பும்வரை ஒப்பேத்திக்கலாமுன்னு  அதையே வாங்கிட்டார் நம்மவர்.  அஞ்சாயிரமாம்.  மூவாயிரத்துக்கு தந்தாங்க. 

அப்படியே  அடுத்தாப்லெ இருக்கும்  கார்ப்பொரேஷன்  காம்ப்ளெக்ஸில்  கொஞ்சம் துணிமணி அலங்காரங்கள்.  எல்லாம் பழைய ப்ளவுஸ்களுக்கு மறுவாழ்வு கொடுக்கறதுக்குத்தான்.  இன்னும் போட்டுக்காததே, ஏகப்பட்டவை இருக்கு. எல்லாம் ஆட்டோ எடுத்துக்கிட்டுதான் சுத்தறோம். புது டிசைன் ஆட்டோ நல்லாதான் இருக்கு. மூணு லக்ஷமாம். 
பகல் சாப்பாடு லோட்டஸிலேயே ஆச்சு.  மூணுமணிக்கு வண்டி வந்ததும் தோழி கவிதாயினி மதுமிதா அவர்கள் வீட்டுக்குப் போனோம். மூணு வருஷத்துக்கதைகளில் பாதி பேசியாச். குடும்பநண்பர்கள் ஆனதால் பேச்சுக்கு என்ன குறை ? இப்ப அவுங்க சிலம்பம் கத்துக்கறாங்க.  நாலுவீடு கட்ட நமக்கும் ஆசைதானே ! அங்கிருந்து கிளம்பி தில்லக்கேணி மீசைக்காரனை தரிசிக்கப் போனோம்.  உள்ளே பிரகாரத்தில் இருந்து பார்த்தாலே மின்சார விளக்கொளியில் பளிச்ன்னு காட்சி கொடுக்கிறார்.   கடவுள்  எப்படிக் காட்சிக்கு எளியவனா இருக்கணும் என்றதை இவரைப் பார்த்துக் கத்துக்கணும் 'ஒருத்தர்' !  எல்லாத்துக்கும் ஆகமம், ஆகமம்னு நீட்டி முழக்கினால் எப்படி ?  அந்தக் காலத்துலே  மின்சாரமே  கண்டுபிடிக்கலைதானே ? காலத்துக்கேற்ற  மாதிரி மக்கள் மாறும்போது, கடவுளும் நமக்காகக் கொஞ்சம் விட்டுக்கொடுக்க மாட்டாரா என்ன? 


அங்கே போனால்  வெளி மண்டபத்துத் தூணில் இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மரையும்,  அசோக மரத்தடி சீதையைக் கண்ட ஆஞ்சியையும் தரிசனம் பண்ணிக்காமல்  என்னால் வரமுடியாது.  ஆண்டாள் சந்நிதியில் தூமணி மாடமும் ஆச்சுதான் :-)

கோவிலையொட்டி இருக்கும் கடைகளில் நிக்கற லக்ஷ்மி இருக்காளான்னு தேடினேன். 'நிக்கற லக்ஷ்மியை யாருமே வாங்கமாட்டாங்களாம். உட்கார்ந்திருக்கும் லக்ஷ்மிதான் நல்லதாம். வீட்டுலே  செல்வம் நிலைக்குமாம்.' கடைக்காரரின் வியாக்யானம். ஏன் ? லக்ஷ்மி ஓடாமல் வீட்டுலே நின்னால் ஆகாதோ ? எனக்கு நம்ம ரவிவர்மாவின் நிற்கும் லக்ஷ்மிமேலேதான்  கண்ணும் நினைப்பும். கடையில் இருக்கும் சொற்ப பொம்மைகளை நோட்டம் விட்டபோது,  விட்டலனும் ருக்மாயியும்  நம்மோடு வர ஆசைப்பட்டமாதிரி தோணுச்சு. வாங்கன்னு கூட்டிக்கிட்டேன்.  நிக்கற லக்ஷ்மி கிடைக்கலைன்னா...... இருக்கவே இருக்காள் நம்ம ருக்மாயி. 


மணி ஆறுதான் ஆச்சு. மயிலாப்பூர் கோவிலுக்குப் போகலாமான்னார் நம்மவர்.  'எனக்கு விரோதம் ஒன்னுமிலை. போகலாம். ஆனால் பீச் ரோடு வழி'ன்னேன்.  அப்படியே ஆச்சு. சட்னு இருட்டிடறதால்  காட்சி ஒன்னும் கண்ணுக்குப் படலை. கடல்காற்றுதான் கொஞ்சம் ஆசுவாசமா இருந்தது.
                                                        அன்பே சிவம்  சிவசிவ!  

   புள்ளையாரையும், அண்ணாமலையாரையும் முருகனையும் கும்பிட்டுக்கிட்டு வலம் போறோம். ஒரு வேற்று மதத்தவர் பிரகாரத்தில் நின்னுக்கிட்டு இருந்தாங்க.  கொஞ்சம் ஆச்சரியமாத்தான் இருந்தது. என்னைப்போல் ஒருவராக இருக்கலாம் !. நான் சர்ச், தர்கா இப்படி எந்தக் கோவிலா இருந்தாலும் சந்தர்ப்பம் அமைஞ்சால் போய் கும்பிட்டுக்குவேன்தான். 

ஸோலார் விளக்கெல்லாம் புதுசாப் போட்டுருக்காங்க.  நம்ம கப்பு & கபாலி தரிசனம்  ஆனதும் கோவிலை வலம் வர்றோம். முந்தி பார்த்ததைவிட குடும்பங்கள் எண்ணிக்கை பெருகிக்கிடக்கு !   ஆண்டவன் படி அளப்பான் என்பதை நல்லாப் புரிஞ்சுக்கிட்டாங்க போல.  அவன் வீட்டுக்குள்ளேயே குடியும் குடித்தனமுமா இருக்காங்க.  பசு மடத்தில் மாடுப் பாப்பாக்கள் !

( துளசி வந்துருக்காள், தெரியுமோ ? ம்ம்ம்ம் .....  பார்த்தேன்.....)

சாயரக்ஷை பூஜை முடிஞ்சு, விளக்குகளையெல்லாம்  தேய்ச்சுக் கழுவும் சேவையில் இருக்கும் கோவில் ஊழியர்கள் சிவகாமி, சுமதி !  இவுங்க போஸ் கொடுப்பதைப் பார்த்ததும் லக்ஷ்மி ஓடிவந்தாங்க. இவுங்க சேவையை மனதாரப் பாராட்டினேன். கலை நிகழ்ச்சிக்களுக்கான மேடை அலங்காரம் அழகா இருக்கு !


மயிலையிலேயே ராச்சாப்பாட்டை முடிச்சுக்கலாமுன்னு 'நம்மவர்' சொல்லி பக்கத்துலேயே  புதுசா ஒரு இடம் இருக்காம். போகலாம்ன்னார்.  வழி ? வலையிருக்க பயம் ஏன் ? 
நித்ய அமிர்தம் என்று பெயர்.  மாடவீதி சரவணபவன் போலவே உள்ளே!  என்ன ஒன்னு... தோசைக் குடிலை நடுஹாலில் கொண்டுவந்து வைக்கலை.
ஒருத்தருக்கு இட்லி & ரவா தோசை, இன்னொருத்தருக்கு மசால் தோசை. எனக்குப் பொங்கல் ! காலையில் ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போட்டதோ ?  இல்லை. நாள் முழுசுமே மக்கள் கேட்டு வாங்கறாங்களாமே !  பரிமாறியவர், 'சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்கம்மா'ன்னார்.   உண்மையிலேயே அருமையாத்தான் இருந்தது.  காஃபியும் ஓக்கே !  அப்புறம் தோழி சொன்னாங்க....  க்ராண்ட் ஸ்வீட்ஸ் மக்கள்தான் இதை ஆரம்பிச்சுருக்காங்கன்னு. திநகர் நாயர் ரோடில்  சில வருஷங்களுக்கு முன்னேகூட வேற பெயரில் ஒன்னு இருந்தது. நாமும் போயிருக்கோம்.  அப்புறம் என்ன ஆச்சோ..... இந்தப் பயணத்தில் பார்த்தால் அந்த  இடத்தில் வேறொரு பெயரில் ஒன்னு......  வியாபாரமுன்னா இப்படித்தான் போல ! நிலைச்சு நிற்பது அபூர்வம் !
திரும்பி வரும்போது குளத்தங்கரை மூலையில் நெக்லேஸ்கள்  நாலு (! ) வாங்கினேன். 

 சந்நிதித் தெரு கார்பார்க்கிங்கில் வண்டியில் ஏறுமுன் நம்ம காஞ்சிபுரம் கடைக்குள் எட்டிப் பார்த்தேன்.  உரிமையாளர்  சீதாராமன் & தம்பதியரின் உற்சாகமான வரவேற்பு! குசலம் விசாரிச்சுட்டு, லஸ் சர்ச் ரோடு கடை எப்படிப் போகுதுன்னால்..... மூடிட்டாங்களாம். மெட்ரோ அதன் வழியா வரப் போகுதுன்னு  நிறைய கடைகள் இடம் மாறிட்டாங்களாம்.  ரங்காச்சாரி மட்டும் இன்னும் இருக்குன்னாங்க. 

கடைப் பெண்கள் எல்லாருமே நமக்குத் தெரிஞ்சவங்க என்பதால் சந்திப்பு சந்தோஷமாக இருந்துச்சு.  காசிக்குப் போறோம். திரும்பி வந்தாட்டுதான்  மற்ற பர்ச்சேஸ்ன்னு சொல்லிட்டு  லோட்டஸுக்குப் போய்ச் சேர்ந்தோம். போற வழியில் தோழி வீட்டையும்  பார்த்து மனம் கனத்துப்போனது உண்மை.
அறைக்குப் போனதும்  சின்னதா ஒரு அலங்காரம் ! ரெண்டுநாள் போட்டுக்கட்டும்:-)


தொடரும்.......... :-)


6 comments:

said...

// ஏற்கனவே துர்ககுணி அதில இப்ப கற்பிணி // Hahaha, பாவம் கோபால் சார்

said...

அதென்ன அந்த ஒயர்லெஸ் சார்ஜரில் எந்த செல்லையும் சார்ஜ் பண்ணலாமா?  புது டிசைன் ஆட்டோன்னா பஜாஜ் மாக்சிமாவா?  கால் வச்சுக்க நிறைய இடம் இருக்கும்.  அது வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன.

said...

சிலம்பம் சூப்பரோ சூப்பர் : )

மயிலாப்பூர் தரிசனம் எமக்கும் கிடைத்தது.

நித்திய அமிர்தம் பெயரே அசத்தலாக இருக்கிறது.

said...

வாங்க விஸ்வநாத்,

புத்தம்புது உடையைக் கெடுத்து வச்சவர், ரொம்பவே பாவம்தான், இல்லே ?

said...

வாங்க ஸ்ரீராம்,

இதுலே சாம்சங் மட்டும்தான் அதுவும் எஸ் 11 வரை மட்டும்தானாம். ஹெட்செட்டும் ஸ்மார்ட் வாட்ச்சும் சார்ஜ் பண்ணிக்கலாம்.

TVS King Duramax Auto Rickshaw Gas powered இது. நமக்கு இது புதுசு. ஊருக்குப்போயே மூணு வருஷமாச்சே !

said...

வாங்க மாதேவி.

சிலம்பம் ஆடுனதுக்கு ஏதாவது பட்டம் கொடுக்கலாமுல்லே ? :-)

மயிலைதான் அந்தக் கயிலை, இல்லையோ !

பெயர் வைப்பதில் நம்மூர்க்காரர்கள் கில்லாடிகளாச்சேப்பா ! ஜஸ்ட் பிக்டு னு ஒரு காய்கறிக் கடை. உள்ளே போய்ப் பார்த்தால் எல்லாம் வாடிப்போய் காய்ஞ்சு இருந்தது !