Monday, January 23, 2023

பெருமாளை நேரில் பார்த்தபடிக்கு ஸ்ரீவைகுண்டத்தில்........... (கோவிட்டுக்குபின் பயணம்) பகுதி 4

இன்றைய நாள் நம்ம பெரியத்தைக்கானது.  தாம்பரம் போயிருக்கோம்.  சம்ப்ரதாயமான கர்மம் செய்யக் காலையில் கிளம்பிப்போய் எல்லாம் முடிச்சுட்டு வந்துருந்தவங்க எல்லாம்  கொஞ்சம் களைப்பா உக்கார்ந்துருந்தாங்க.  அத்தையின் படத்தைப் பார்த்ததும் ரொம்ப துக்கமாப் போச்சு !  எப்பேர்ப்பட்ட புண்ணியாத்மா !  என்ன ஒரு மனதிடம் !  என்ன ஒரு பெருமாள் பக்தி !  இதுலே நூற்றில் ஒரு பங்கு எனக்கிருந்தால் போதுமே ! 
தீபாராதனை ஆச்சு.  உள்ளூர் கேட்டரிங்லே இருந்து எல்லாமும் வந்திருந்து, அவுங்களே பரிமாறுனாங்க. கீழே தோட்டத்தில் பந்தல் ஏற்பாடு. நம்மவருக்குப் பரிமாறுதல்  ரொம்பப்பிடிச்சதாச்சே..... விளம்பப்போனார்.  எதோ ஒரு ஆர்டரில் ஐட்டங்களை இலையில் வைக்கணுமாம். அதான் நாங்களே செஞ்சுடறோமுன்னு கேட்டரர் சொன்னார். அதுதான் சரி. கையிலே எடுத்ததோடு ஒரு போஸ் கொடுத்துருங்கன்னேன் :-)
சாயங்காலம், திருநீர்மலைக் கோவிலில்   கோஷ்டி சொல்லும்  குழுவிலிருந்து சிலர் வந்து ப்ரபந்தம் சொல்ல ஏற்பாடாகி இருக்கு !  எங்க தாம்பரம் அத்தைக்கு ரொம்பவே பிடிச்ச விஷயம் இதுதான் !  இந்நேரம்  பெருமாளை நேரில் பார்த்தபடி ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பாங்கதானே !!!!

மறுநாள் நம்ம காசி யாத்திரை ஆரம்பிக்குது , கொஞ்சம் வேலைகளை முடிச்சுக்கலாமுன்னார் இவர்.  கிளம்பினோம். எனெக்கென்னவோ  சாயங்காலம் வரை அங்கே இருக்கத்தான் ஆசை. ஆனால் 'நம்மவர்' சொல்வதிலும்  ஞாயம் இருக்கே !
நடிகர்கள் எல்லோருக்கும்(! ) அகில இந்திய ரசிகர் படை வேற  இருக்காமே ! 

லோட்டஸுக்குப்  போனதும்,  சின்னப்பயணத்துக்குத் தேவையானவைகளைத் தனியா எடுத்து வச்சுட்டு, மற்றவகைகளை  பெரிய பெட்டிகளில் ஒழுங்கா பேக் பண்ணிக்கணும். முக்கியமா எந்தவிதமான க்ரீம்களையும் துணிகளோடு சேர்த்து வைக்கப்டாது. உள்ளுர் விமானங்களில் செக்கின் பேக் எடை 15 கிலோ மட்டும்தான் இருக்கணும்.  மேற்கொண்டு வேணுமுன்னா தனியாக் காசு கட்டணும். அதிலும் ப்ளைட்டுக்கு  முதல்நாள் வரை  ஆன்லைனில் வாங்கினால் மலிவு. ஏர்ப்போர்ட்டில் போய் வாங்கினால் மூணு மடங்கு.  இப்போதைக்கு நமக்கு 15 + 7 ன்னு  ஒரு ஆளுக்கு இருப்பது போதும்தான்.

ஒரு நல்ல உதவி லோட்டஸில் என்னன்னா.... நமக்கு இப்போதைக்குத் தேவையில்லாத பொருட்களைப் பெரிய பெட்டிகளில் போட்டு வச்சு, இங்கேயே பாதுகாப்பா வச்சுட்டுப் போகலாம். திரும்ப இங்கேயே வருவதால் பிரச்சனை இல்லை. அப்படித்தான் இத்தனை வருஷங்களா வச்சுட்டுப் போறோம்.
ஒருவழியா பேக்கிங் ஆச்சு.  பயணத்துக்குக் கொஞ்சம் நொறுக்குத் தீனி வாங்கிக்கணும்.  அதை நம்ம சுஸ்வாதில் வாங்கினால் ஆச்சு. 

டெய்லருக்கு ஃபோன் பண்ணினால்  இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு. எட்டுமணிக்கு வாங்கன்னுட்டார். எட்டுமணிக்குப்போய், உடைகளை வாங்கிக்கிட்டோம். இந்தக் கடை ராம்ஸ் பில்டிங்லே இருக்கு. உள்ளே போனால் ஒரு ஏழெட்டு டெய்லர் கடைகள்.  பக்கத்துலே முந்தி டிவிடி வித்துக்கிட்டு இருந்த  இடத்தில்  இப்போ சீஸனல் கடை வந்திருக்கு.  பொதுவா பிள்ளைகளுக்கான விளையாட்டு சாமான்கள் விற்பனை. இப்போ தீபாவளியை முன்னிட்டு, வாட்ஸ் அப், ட்விட்டர், கூகுள், யாஹூ, ரெட்ஜெயண்ட் எல்லாம் வந்துருக்கு. தயாரிப்பாளர்கள் பொழுதன்னிக்கும் செல்லில் மேய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க போல !   காலத்துக்கேற்ற  பெயர்கள்,  விற்பனையை மலை ஏத்திடாதா என்ன ?    நல்ல அறிவுதான் !  அப்புறம் ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை,  வழக்கமான  பெயர்களில் கொஞ்சம்னு  கொளுத்திப் போடறாங்க !  பார்க்க ஆசைதான்.  






நியூஸியில்  வருஷத்துக்கொரு முறை நவம்பர் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிவரை பட்டாஸ் விற்பனை. அதிலும் வெடிகள் ஏதும் இருக்காது. எல்லாம் ஒளிச்சிதறல்கள் மட்டுமே. மேலே போகும் ஷூட்டர்ஸ் மட்டும், ஹீனமா ஒரு 'டப்'  சொல்லும். இதுக்கே வீட்டுச் செல்லங்கள் பயந்து போகுது,  பட்டாஸ் விற்பனையைத் தடை செய்யணுமுன்னு  ஒரு கூட்டம் கிளம்பியிருக்கு.  நிசப்தமா இருக்கும் ஊரில் ஊசி விழுந்தாலே  ஓசைதான் இல்லையோ !!!

மறுநாள் பொழுது விடிஞ்சது,  அடப்ரதமனோடு !  நமக்கு இனி பனிரெண்டு நாட்களுக்கு  நல்ல ப்ரேக்ஃபாஸ்ட் கிடைக்காது என்பதால்  கொஞ்சம் நல்லாவே சாப்புட்டுக்கிட்டேன் :-)  பயணத்துக்குக் கொஞ்சம் காசு கைவசம் இருக்கட்டுமேன்னு நம்ம  பேங்க் வரை போயிட்டு, அப்படியே அடுத்தாப்லெ இருக்கும் சாந்திநாதரை தரிசிக்கப்போனோம். எனக்குப் பிரியப்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்னு ! புதுவருஷம் பொறக்கப்போகுதுன்னு  அலங்கரிச்சு வச்சுருக்காங்க. 








எப்பவும் ஏகாந்த தரிசனம்தான் லபிக்கும். அபூர்வமா பெண்கள் யாராவது  உள்ளே மண்டபத்தில் அரிசி/கோதுமையினால் ஸ்வஸ்திக்  வரைஞ்சுக்கிட்டு, சாமி கும்பிட்டுக்கிட்டு இருப்பாங்க.  அவுங்க கம்யூனிட்டி மக்கள் உள்ளே போய் மூலவரைக் கும்பிட்டுப் பூஜையும் செஞ்சுக்கலாம். ஆனால் அங்கே கோவிலேயே குளிச்சுட்டு, வாயைக் கட்டிக்கிட்டுத்தான்  உள்ளே போகணும். அதற்கான வசதிகளைக் கோவில் செஞ்சுகொடுத்துருக்கு !

வெவ்வேற சந்நிதிகளில் தீர்த்தங்கரர் (ஜெயின் குருக்களின்) சிலைகளைத் தவிர பத்மாவதி, புள்ளையார், வராகமூர்த்தின்னு இருக்காங்க.... வெவ்வேற பெயர்களில் ! எனக்குப் பிரச்சனையொன்னும் இல்லை. அவுங்க பெயர் அவுங்களுக்கு, நம்ம பெயர் நமக்கு. அம்புட்டுதான் ! 




இழைய இழைய சந்தனம் அரைச்சுக்கிட்டு இருந்தார் ஒரு பக்தர்.  அந்த மஞ்சள் நிறம் வர்றதுக்குக் குங்குமப்பூவை சேர்த்து அரைக்கறாங்க ! அட!   அரைச்ச குங்குமத்தை பக்தர்கள் நெற்றிக்கிட்டுக்கறதுக்கு வசதியா ஒரு மேடையும் அதுலே சுவரில் பதிச்ச கண்ணாடியும்  வச்சுருக்காங்க. கோணாமாணான்னு இல்லாம சந்தனம் இட்டுக்கலாம். கோவில் முழுசும் வெள்ளைப்பளிங்குக் கட்டடமானதால்  பளிச்ன்னு இருக்கு.

நாமும் கொஞ்சநேரம்  உக்கார்ந்து தியானம் செஞ்சுட்டு, சுவர் முழுக்க இருக்கும் யானைவரிசைகளை ரசிச்சும் க்ளிக்கியும் ஆச்சு. 

வெயில் ஏறிக்கிட்டுப்போகுதுன்னு நம்ம லோட்டஸுக்குத் திரும்பிட்டோம். கீழே லாக்கர் ரூமுக்குப் போகும் பெட்டிகளாண்டை என்னமோ கருப்பா துகள்கள்.  என்னன்னு  பார்க்கலாமுன்னு திறந்தால்  ஒரு பெட்டிக்குள் நிறையவே கொட்டி இருக்கு. துணிமணிகளை வெளியில் எடுத்துட்டுத் தட்டிக்கொட்டிப் பார்த்தால்  கருப்புப்பொடிகள் உதிருது. ஸூட்கேஸின் ப்ளாஸ்டிக் மோல்டு, சிதைஞ்சு போய் இருக்கு. மூணு வருஷமா வெளியே எடுக்காமல் போட்டு வச்சுருந்ததில் மனசொடைஞ்சு போயிருச்சு போல !
 எல்லாத்துக்கும் ஆயுசு ஒன்னு இருக்குல்லெ?  வந்து பார்த்துக்கலாமுன்னு பெட்டியைச் சுத்தம் செஞ்சு  துணிமணிகளை அடுக்கினோம்.    முதலில் நான் பயந்துட்டேன். அந்தப்பெட்டியில்தான் நம்ம விட்டலன் & ருக்மாயி தம்பதிகளை, பபுள் ராப்பில் பொதிஞ்சு வச்சுருந்தார் நம்மவர். பேப்பர் மாஷி என்பதால்  அதுக்கேதும்  ஆபத்து வந்துருச்சோன்னு  மனசு அடிச்சுக்கிட்டது.  நல்லவேளை... விட்டலன் காப்பாத்திக்கிட்டார் !

பகல் சாப்பாட்டுக்கு எங்கே போகலாமுன்னு யோசிச்சதில், பண்டிபஸாரில் புதுசாத் திறந்துருக்கும் ஞானாம்பிகை நினைவுக்கு வந்தாள்.  இவுங்கதானே பெரிய விசேஷங்களுக்கும், சங்கீத சீஸனில் சபாக்களுக்கும் கேட்டரிங் செய்யறவங்க. அங்கேயே போய்ப் பார்க்கலாமுன்னு போனால்.... பாண்டிபஸாரில் மெட்ரோ வரப்போறதால்  பூமியைத் தோண்டும் வேலைக்காக  போக்குவரத்தையெல்லாம்  ஒரு வழிப்பாதையா பண்ணி இருக்காங்க. சிலநாட்கள் பனகல் பார்க்கில் இருந்து உள்ளே வரலாம்.  சில நாட்கள்  நாயர் ரோடிலிருந்து ரைட் திரும்பலாம். இப்படி மாத்தி மாத்தி ஒரு வழி பண்ணிக்கிட்டு இருக்காங்க.  இதுலே  கொண்டாட்டம் என்னவோ ஆட்டோக்காரர்களுக்குத்தான். சுத்திக்கிட்டுப் போகணுமுன்னு சொல்லியே நிறைய வசூல் பண்ணிக்கறாங்க.  ஆனால்  ஒன்வே முறையைக் கடைப்பிடிக்காம  எதிரில் வரும் ட்ராஃபிக்கை மதிக்காமல் ஓரங்கட்டியே போகவும்  செய்யறாங்க.  இதையெல்லாம் அங்கங்கே போலிஸ் பூத்தில் உக்காந்திருக்கும் போலிஸ் கண்டுக்கறதே இல்லை... (எப்படி ? எல்லாம் அவுங்க வண்டிகள்தானாமே !)
அன்றைக்கு  பனகல் பார்க்கில் இருந்து உள்ளே வர்ற  நாள்  போல .... நாங்க  போலிஸ் ஸ்டேஷன் தாண்டிக் கொஞ்ச தூரத்தில் வண்டியை நிறுத்திட்டு, எதிர்வாடையில்  இருக்கும் ஞானாம்பிகாவை நோக்கிச் சாலையில் குறுக்காக நடந்து போறோம். வாசலில் ஏகப்பட்டக் கூட்டம்..... எல்லோரும்  எங்கே பார்க்கறாங்கன்னு பார்த்தால்  எதிர்சாரியில் இருக்கும் ட்ரான்ஸ்ஃபார்மரை.... அங்கேயும் ஒரு கூட்டம் நிக்குது. என்னன்னு விசாரிச்சால்.... ட்ரான்ஸ்ஃபார்மரைப் பழுது பார்க்க ஏறின ஆளை,  மின்சாரம் காவு வாங்கிருச்சாம்!   அடப்பாவமே...     பாதுகாப்புக்காக மெனெக்கெடணுமான்னு  ஒரு சுணக்கம்.......  அந்த ஆளின் குடும்பத்தை நினைச்சு மனம் கலங்கிருச்சு........ ப்ச்......... அவுங்களைத்தவிர  மற்றவர்களுக்கு இது ஒரு  சாவு.  அவ்ளோதான்.....  அடுத்து இதே வேலை செய்ய வரும் நபர், இதை ஒரு படிப்பினையா எடுத்துக்கிட்டா நல்லது.... எங்கே.........

இந்த கலாட்டா காரணம் கடைகளில் பவர் இல்லை. ஞானாம்பிகாவும்  அரையிருட்டில்தான். எமெர்ஜென்ஸி லைட் கொஞ்சநேரத்தில் வந்துச்சு. உள்ளே நீட்டாத்தான் இருக்கு.  நம்மவரும் சரத்தும் மினி மீல்ஸ், எனக்கு ஒரு தோசை.   

மெனு கார்ட் முன்பக்கம் பல சமாச்சாரம் இவுங்க வெற்றியைச் சொல்லுது.  பின்னால் கார் பார்க்கிங் வசதியும் இருக்காம். Valet parking. அட!! 


தினமும் மத்யானம் ஒன்னரைக்கு நம்ம லோட்டஸ், தேவலோக ஆக்ட் கொடுக்குதுன்னு  தெரிஞ்சது. கொசு, பூச்சி பொட்டு வகைகளில் இருந்து பாதுகாப்பு!  புகை அடங்கக்காத்திருந்து, பெட்டிகளைக் கீழே லாக்கர் ரூமுக்கு அனுப்பினோம்.  ரொம்ப வருஷமா இங்கே நாம் வந்து போறதால்  பணியாளர்கள்  எல்லோருக்கும் நம்மோடு நல்ல பழக்கம்தான். அதிலும் மணிமாறன் இருந்தாருன்னா.... ஓடியோடி உபசரிப்பார். ரெண்டு மணி போல நாமும் கிளம்பறோம்.  ஏர்ப்போர்ட்டுக்குப் போக குறைஞ்சது முக்கால்மணி ஆகும். 
நம்ம காசி யாத்ரை ஆரம்பம் !

தொடரும்........... :-)


8 comments:

said...

அருமை நன்றி

said...

ஞானாம்பிகா பார்த்ததில்லை. ஒருமுறை முயற்சிக்க வேண்டும்! (பதிவு முழுக்க சாமி பத்தி எழுதினாலும் என் புத்தி எதில் போகுது..?!)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

இதுவும் முக்கியம்தானே வாழ்க்கைக்கு ! வெறும் வயத்துலே கடவுளிடம்கூட ரொம்ப நேரத்துக்கு மனம் லயிக்காது !

said...

வெண்மையில் ஜொலிக்கும் சாந்திநார் கோவில் அழகு மா ...இங்க பெங்களூரில் இருக்கு போகணும்

said...

வாங்க அனுப்ரேம்,

சந்தர்ப்பம் அமைஞ்சால் கட்டாயம் போயிட்டு வாங்க !

said...

காசி யாத்திரை ஆரம்பம் நாமும் வருகிறோம். :)

said...

வாங்க மாதேவி,

நன்றிப்பா !