Friday, March 31, 2006

அழகரும் முருகனும்

பயண விவரம் பகுதி 13


'கூடலழகர் கோயிலுக்குப் போயிட்டு வாங்களேன். இது 108 திவ்ய தேசத்திலே ஒண்ணு. இங்கே என்ன விசேஷமுன்னா நவகிரஹங்களுக்கு ஒரு சந்நிதி இருக்கு. வழக்கமா பெருமாள் கோயில்களிலே நவகிரஹம் இருக்காதில்லையா'னு நண்பர் சொன்னதும் இதோன்னு கிளம்பியாச்சு.

அதுக்குக் கொஞ்ச நேரம் முன்னாலேதான் இவுங்க வீட்டுக்கு ரெண்டு வீடுதள்ளி இருக்கற சின்மயானந்தா மிஷனோட தியான மண்டபம் போயிட்டு வந்தோம். நல்ல பெரிய ஹால். அங்கேஒரு விளக்கு மாத்திரம் இருந்ததாக நினைவு. ஆனா எங்க இவர் சொல்றார்,மேடையிலே சிவலிங்கம் ஒண்ணு வச்சிருந்தாங்கன்னு.( கண்ணை மூடி தியானம் செஞ்சதுலே மேடையை(யே)கவனிக்கலே!)


ஷங்கர் காலையிலேயே வந்துட்டார். தோழி மட்டும் கூட வந்தாங்க. கோயில் வாசலில் பயங்கரக்கூட்டம். உள்ளே அதுக்கு மேலே. அன்னிக்கு நல்ல முஹூர்த்தநாளாம். இன்னிக்குக் கோயிலிலே மட்டும் 25 கல்யாணம் நடக்குதாம். கோவில்உத்தியோகஸ்த்தர்களுக்கு, நம்ம தோழியையும் அவங்க வீட்டுக்காரரையும் நல்ல பழக்கமாம். அவர் பெரிய உத்தியோகத்தில்
இருந்தாருல்லெ. சீக்கிரம் போங்க. தாயார் சன்னதியை மூடிருவாங்கன்னு அவசரப்படுத்தினார். 'அம்மா, மதுரவல்லி'ன்னுநாங்க போய்ச்சேரவும், திரையை இழுத்து மூடவும் சரியா இருந்துச்சு. அங்கேயும் ஏகப்பட்டக் கூட்டம். இனி அலங்காரம்முடிஞ்சுதான் திரை விலகும். ஆனா என்ன ஆச்சரியம்!


தோழி, அங்கிருந்த பட்டரிடம்( மூடுன திரையை இன்னும் கையில் பிடிச்சுக்கிட்டு இருந்தவர்) நம்மை அறிமுகப்படுத்தினார்.அடுத்த க்ஷணம் திரை விலகியது. அடக்கடவுளே, இது என்ன? கோயிலில் அலங்காரத்துக்குத் திரையை மூடிட்டா,ஆனானப்பட்ட மகாராஜாவே வந்தாலும் திரையை விலக்கக்கூடாது. ஆனா இங்கெ மதுரவல்லி நமக்கு ஸ்பெஷலா தரிசனம் தர்றாள். அங்கே காத்துக்கிட்டு இருந்தவங்க முகத்திலே பரம சந்தோஷம்.


'உங்க ஊர்லே கோயிலுக்கு பூஜைக்கு வேணுமுன்னா நான் வரனே.ஏதாச்சும் சான்ஸ் இருக்கா?' கேட்டார் பட்டர்.


' இல்லயே. அங்கே நாங்க இருக்கற ஊருலே கோயிலே கிடையாது. கட்டணுமுன்னு ஒரு ஐடியா இருக்கு. அப்பப் பாக்கலாம்' சொன்னது நான்.


'என்ன அக்கிரமம் பாருங்க. அப்படியே கோயில் கட்டுனாலும் இவருக்கு இடம் இல்லை. நியதியை மதிக்காம இருக்கறார்'னுமனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டேன். கடவுளுக்கு முன்னாலே எல்லாரும் சமம் இல்லையோ?


அடுத்துப் போனது கூடலழகர் சன்னதி. பெருமாள் ஆஜானுபாகாக உட்காந்துருக்கும் திருக்கோலத்திலே இருக்கார். வலது கைவிரல்கள் மட்டும் நம்மை 'வா'ன்னு கூப்புடறமாதிரி முன்னாலே குமிஞ்சிருக்கு. இந்தக் கோயிலிலே நின்றார், இருந்தார்,கிடந்தார்னு மூணு விதமாவும் பெருமாள் காட்சி கொடுக்கறார்னு பட்டர் விளக்கிச் சொன்னார். மேலே கோபுரத்துலே போய்ப் பாருங்கன்னும் சொன்னார்.


கோயில்லே குடமுழுக்கு நடக்கப் போகுதுன்னு நிறைய வேலைங்க நடந்துக்கிட்டு இருந்துச்சு. கோபுரத்தை ஓலைகளாலே மறைச்சிருந்தாங்க. நாங்க மேலே படிக்கட்டுலே ஏறிப்போனோம். இதுவரை எந்தக் கோயில்லேயும் இந்த மாதிரி மேலே ஏறிப்போனதே இல்லை. சினிமாலே 'க்ரூப் டான்ஸ்' கோபுரம் பின்னணியா வச்சு ஆடுனதைப் பார்த்ததோடச் சரி.


மேலே வந்து பார்த்தா, அப்பாடா எவ்வளோ பெரிய இடம். பிரமாண்டமான மொட்டை மாடி போல இருக்கு.கோபுரம்அங்கிருந்து ஆரம்பிக்குது. ச்சின்னப் படிக்கட்டுகளிலெ ஏறினோம். கம்பி அழி போட்ட ச்சின்னக்கதவுக்குப் பின்னாடிஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நிற்கிறார். எத்தனையோ நூற்றாண்டுகள் ஆகியிருந்தும், வர்ணமெல்லாம் இன்னும் நல்லாவே இருக்கு.முகத்தில் 'பெருமாளுக்கே' உரிய அந்த வசீகரம். சினிமாலெ கிருஷ்ணனையோ, விஷ்ணுவையோ என் டி ஆர் ரூபத்துலேபார்த்துப் பார்த்துச் சாமியை நினைக்கறப்ப சினிமாலே பார்த்தமாதிரியே மனக்கண்ணுலே வர்றது நினைவு வந்துச்சு.


அதுக்கும் மேலே இன்னும் குறுகிய படியிலே ஏறிப் போனோம்.

ஆஹா.....அங்கே அனந்த சயனத்தில் இருக்கார்பள்ளி கொண்ட பெருமாள். அவரைச் சுத்திவரச் சுவத்துலே தசாவதாரங்களை வரைஞ்சு வச்சிருக்காங்க. காலடியிலே முனிவர்கள்.நாக்கை வெளியே நீட்டிக்கிட்டு இருக்கற அனந்தன். அழகோ அழகு. என்ன வர்ணங்கறீங்க? எவ்வளவு நாள் ஆகியிருக்கும்இதையெல்லாம் இப்படிப் பாத்துப்பார்த்து பெயிண்ட் செஞ்சதுக்கு? அடடாடா.... எப்படிங்க இதையெல்லாம் செஞ்சுருப்பாங்க?
ஒரு ஃப்ரேமுலெ அடங்குறதுல்லெ. ரெண்டுரெண்டா இப்படியும் அப்படியுமா கம்பிக்குள்ளே படம் எடுத்தோம்னு வையுங்க.


மனசில்லா மனசோட கீழே இறங்குனோம். 'ஜேஜே'ன்னு கல்யாணக் கூட்டம். மாலையும் கழுத்துமா சுற்றம் சூழ மாப்பிள்ளைகளும், பொண்களும். ஒரு கல்யாண ஜோடியைக் கிளிக்குனேன். அவுங்க பேரைக் கேட்டுக்கிட்டு,நல்லா இருங்கன்னு ஆசி வழங்கிட்டு போற போக்குலெயே பல ஜோடிகளையும் 'கிளிக்'கினேன். அதுலே ரொம்பக் கூட்டமில்லாம ஒரு ஜோடி இருந்தாங்க. பொண்ணு பேரு ஷர்மிளா. அவுங்களே சொன்னாங்க, 'நாங்க காதல் கல்யாணம்'னு.


'அடிச் சக்கை.சந்தோஷமா இருங்க. நாங்களும் 32 வருசத்துக்கு முன்னாலே காதல் கல்யாணம்தான். நீங்க நல்லா இருப்பீங்க. ஒரு குறைவும்வராது'ன்னு மனசாரச்சொல்லி வாழ்த்திட்டு வந்தோம். கோயில் பிரகாரங்களைச் சுத்தி வந்தப்ப அங்கே ஏகப்பட்டவாகனங்கள் அழகழகா இருந்துச்சுங்க. சேஷவாகனம் பலே ஜோர். இதை வெள்ளை யானைகள் தாங்கிக்கிட்டு இருக்குங்க.எங்க இவருக்கு பாம்புன்னா பயமாச்சா, அதனாலே இன்னும் கொஞ்சம் கலாய்ச்சிட்டு வந்தேன். படம் எடுத்தப்ப ரெண்டு பாகமாஎடுக்கவேண்டி இருந்துச்சுங்க. பாம்பு நல்லா வந்துச்சு. யானைதான் கொஞ்சம் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆயிருச்சு.


நவகிரக சன்னதியிலே கும்பிட்டுக்கிட்டு வராந்தாலெ இறங்குனா 'மதுரவல்லி' நிக்கறாள். கோயில் பிரசாதம் விக்கற கடையிலே வாழைப்பழம் வாங்கிக் கொடுத்தோம். இப்ப மருந்து கொடுத்துருக்கு. கொஞ்ச நேரம் கழிச்சுக் கொடுக்கறேன்னுபாகர் வாங்கி வச்சுக்கிட்டார். மதுரவல்லி ஓரக்கண்ணாலே அவரை முறைச்சது.


108 திவ்ய தேசத்துலெ எத்தனை பார்த்துருக்கேன்னு எண்ணிப் பார்த்தா ஒரு பத்துதான் தேறுது. மீதியை எப்பப் பார்க்கப்போறேன்னு தெரியலையே!


'வேல்முருகனை' பார்க்கணுமுன்னு இருந்தேன். அப்ப சங்கர் சொன்னார், 'தங்கமயில் நல்லதுங்க. அங்கே ஹால்மார்க் கிடைக்குது'னு.ஆமாம், சில இடங்களிலே பார்த்தேனே, 'தங்கம் வாங்க, தங்கமயிலுக்கு வாங்க'ன்னு. தோழியும் அங்கே இதுவரை போனதில்லைன்னு சொன்னாங்க. சரின்னு தங்கமயிலுக்கே போனோம். பழைய கால டிஸைனுலே எதாவது வாங்கணுமுன்னுஇருந்தேன். ஆனா எல்லாம் நவநாகரீக டிஸைன்கள், தேசலா இருக்குங்க. கொஞ்ச நேரம் தேடுனபிறகு, பழங்கால'கெஜ்ஜலு மாலை'ன்னு ஒண்ணு கண்ணுலே பட்டுச்சு. சரின்னு அதை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப்போய்ச் சேர்ந்தோம்.எங்கெயாவது ஊர்களுக்குப் போனா நினைவுப்பொருள்னு ஒண்ணு வாங்கிறணுமுல்லே அதுக்குத்தான்.........இதையே அக்ஷ்யதிருதியைக்கு வச்சுக்கிட்டா ஆவாதுங்களா? நிபுணர்களைக் கேக்கணும்:-)


அன்னிக்கு இரவுக்காக ஏற்கெனவே ராயல் கோர்ட்டுலே இடம் போட்டு வச்சுருந்ததாலே அங்கே இடத்தை மாத்திக்கிட்டோம்.தோழிக்கு வருத்தம்தான். ஆனா மருந்தும் விருந்தும் மூணு வேளையில்லையா?சாயங்காலமாக் கிளம்பி திருப்பரங்குன்றம் போயாச்சு. மறுநாள் தைப்பூசம். அதனாலேயோ என்னமோ மூலவருக்குமுன்னாலே இருக்கற மயிலுக்கு எண்ணெய்க்காப்பு போட்டாங்க. பக்கத்துலே உக்கார்ந்து பார்த்தோம். ஒரு குழுவினர்அங்கே உக்காந்து பஜனைப் பாடல்கள் பாடிக்கிட்டு இருந்தாங்க. இன்னொரு பக்கம் அங்கே வேதபாடசாலைன்னு ச்சின்னப் பிள்ளைங்கவேதம் படிச்சுக்கிட்டு(!) இருந்தாங்க. கையிலே நிஜமாவே நோட்டுப் புத்தகம்.


அங்கிருந்து கிளம்பி வண்டியூர் தெப்பக்குளம். தண்ணி எக்கச் சக்கம். படகு சவாரி நடந்துக்கிட்டு இருந்துச்சு. பெடல்போட்டுக்கூட இருந்துச்சு. படகுக்காக ஒரு குடும்பம்(?) வரிசையா உக்கார்ந்து இருந்தாங்க. எதுருலே மாரியம்மன் கோவிலுக்குப் போகணுமா,வேணாமான்னு கொஞ்சம் யோசிச்சுட்டு, தெப்பக்குளத்தையே பார்க்கலாமுன்னு அங்கேயே கொஞ்சம் உக்காந்தாச்சு.தண்ணிக்கு நடுவிலே மண்டபம் ஒய்யாரமா இருந்துச்சுங்க.


அங்கிருந்து கிளம்பி ச்சும்மா மருதையை ஒரு சுத்து சுத்துனப்ப ஒரு சர்ச், ரெட்டைக் கோபுரத்தோட ஸ்பானிஷ்ஸ்டைலா இருந்துச்சுங்க.சுத்துனப்பக் கண்ணிலே பட்டுச்சு ஒரு வாட்டர் டேங்க். அதுமேலே அனுமான் உக்காந்துருக்கார்.அப்புறம் உத்துப் பார்த்தப்பத்தான் தெரிஞ்சது அது வாட்டர் டேங்க் இல்லே, உண்மைக்குமே அனுமார் கோயில்.அந்த ஆஞ்சநேயர் வாலைச் சுருட்டிச்சுருட்டி, ராவணன் சபையில் ஆசனமாக்கி உசரத்துலே உக்காந்தாரே அப்படிஇங்கே உக்காந்துருக்கார்னு. நல்ல யுக்திதான்.


நாளைக்கு இன்னும் சில இடங்களைப் பாக்கலாமுன்னு முடிவு செஞ்சுட்டு ரூமுக்கு திரும்ப வந்தோம். அந்த ஹோட்டலிலேஒரு 'ரூஃப் கார்டன் மொஹல் ரெஸ்டாரண்ட்' இருக்கு. சாப்பாடும் சரி, சைட்டும் சரி அட்டகாசம். இளந்தென்றல் வீசறப்ப,மொட்டை மாடியிலே இருந்து, லைட்டுக்களாலே ஜொலிக்கிற கோபுரங்களையும், ஊரையும் பார்த்துக்கிட்டேச் சுடச்சுடருமால் ரோட்டியும் இன்னபிற வஸ்துக்களையும் சாப்புடற ஆனந்தம் இருக்கே.......... அற்புதம். விலையும் ரொம்ப இல்லைங்க. ரீஸனபிள்தான்.


-----ப்ளொக்கர் சொதப்புவதால் படங்கள் இருந்தும் போடமுடியவில்லை(-:

Thursday, March 30, 2006

எங்கே போச்சு என் வத்தலகுண்டு?

பயண விவரம் பகுதி 12


'ஏம்மா, வத்தலகுண்டு வழியா மதுரைக்குப் போகலாமா?' ன்னு கேட்ட எங்க இவரைக் காதலோடு முறைச்சேன்,'இது என்ன கேள்வி? போகலைன்னாத் தானே இருக்கு?'ன்னு.


திரும்ப தேனி வந்து பெரியகுளம், தேவதானப்பட்டி ...ஆ......... இங்கெதானே பல வருசங்களுக்கு முந்தி வேப்பமரத்துலே பால் ஒழுகுதுன்னு வண்டி கட்டிக்கிட்டு வந்து பார்த்துட்டுப் போனோம். இங்கே ஒரு அம்மன் கோயில்இருக்குமே. கோயில் ஓலைக்கூறை போட்டதுதான். 'அந்தக் கூறையை வேயறவங்க கண்ணைக் கட்டிக்கிட்டுத்தான் வேயணுமாம். கண்ணைத் திறந்து பார்த்தாக் கண்ணு அவிஞ்சு போயிருமாம். இப்படி பார்த்த சில பேருக்கு உண்மையாவேகண்ணு போயிருச்சாம். ரொம்ப பயபக்தியா விரதமெல்லாம் இருந்துதான் இந்த வேலை செய்வாங்களாம். இப்பேர்ப்பட்ட மகிமையான ஆத்தா இருக்கற கோயில் வேப்ப மரத்துலே பால் ஒழுகுது. கட்டாயமாப் போய்ப் பார்த்துட்டு வரணுமு'ன்னுசொன்ன நண்பர் குடும்பத்தோட ஒட்டிக்கிட்டே வந்து பார்த்துட்டு, பிரசாதமுன்னு அந்தப் பாலைக் கொஞ்சூண்டு குடிச்சிட்டு( ஆ... கசப்பு) போனதெல்லாம் மனசுக்குள்ளெ வந்து போச்சு.


பெரியகுளம் நல்லாவே இருக்கு. எங்கெ பார்த்தாலும் அருமையான பெரிய பெரிய கட்டிடங்கள். தாலுக்காவாச்சே. அரசாங்கஅலுவலகங்கள் எல்லாம் புதுசுபுதுசா நிக்குதுங்க. ரோடும் அருமையா இருக்கு.


நம்ம ஞானவெட்டியாருக்கு ஒரு போன் போட்டு எப்படி இருக்காருன்னு விசாரிச்சுக்கிட்டேன். திண்டுக்கல்லுக்குவரலையான்னு கேட்டார். அடுத்த முறைதான் முடியும்போலன்னு சொன்னேன்.


இதோ வத்தலகுண்டுக்குள்ளெ வண்டி நுழைஞ்சுருச்சு. என் வத்தலகுண்டே, இதோ வந்துட்டேன்......


ஐய்யய்யோ.... ஏன் இப்படி ரோடெல்லாம் சின்னதா, தார் பூசிக்கிட்டு இருக்கு? எவ்வளோ அட்டகாசமான, அகலமானசிமெண்ட்டு ரோடுங்க இருந்துச்சு. ஒரு மழை பேய்ஞ்சாப் போதும், அப்படியே கழுவிவிட்டமாதிரி அப்படி ஒரு பளிச்!என்னமா இருக்கும்? இப்ப.......இந்த மெயின் ரோடுலெ இவ்வளோ கடைங்க எப்பருந்து வந்துச்சு?


'நாப்பது வருசத்துலே எல்லாமே மாறித்தானே போயிருக்கும்'ன்ன எங்க இவரைப் பார்த்து நிஜமாவே முறைக்கிறேன்.ஊர் உலகம் மாறும்,மாறட்டும். ஆனா என் வத்தலகுண்டு எப்படி மாறலாம்?


புலம்பிப் பயனில்லை. மாறிப்போச்சு! அங்கே இருந்த ஒருத்தர்கிட்டே விசாரிக்கறேன்,'ஏங்க ராஜாஜி மைதானத்துக்குஎந்தப் பக்கம் போகணும்?'


திடுக்கிட்டுப் போயிட்டார் மனுஷன். 'அப்படி ஒண்ணும் இல்லீங்க' இப்ப 'திடுக்' என்னோட முறை. எவ்வளோ பெரிய மைதானம்அது எப்படி இல்லாமப் போகும்? சரியான ஊர்தானா?..ம்ம்ம்ம் அதோ அந்த மலை இருக்கு. அதானே சென்றாயன் மலை? அப்ப இது வத்தலகுண்டுதான். சென்றாயன் மலையா இல்லே சேர்வராயன் மலையா? மறந்து போச்சே...ம்ம்ம் என்ன்னவா இருக்கும்?


இன்னொருத்தரைக் கேட்டா , அவரும் அதே முழி முழிச்சார். மக்கள்ஸ் பெருகிப் போனதாலெ எல்லா இடமும் வீடுங்க ஆயிருச்சா? இல்லே அந்த திடலுக்குப் பெயரை மாத்திட்டாங்களா?


இருட்டறதுக்குள்ளே மதுரைக்குப் போய்ச் சேரணுமே. சரி நம்ம ஸ்கூலையாவது பார்த்துட்டுப் போகலாமுன்னு ஹைஸ்கூல் எங்கன்னு கேட்டா ரெண்டாவது தெருவுலே திரும்புங்கன்னார். அப்பாடா அதாவது இருக்கே.


நல்ல அகலமான செம்மண் வீதி. மெயின் ரோடுலே இருந்து ரொம்ப தூரம் போகணும். அங்கே பெரிய கேட் இருக்கும். ரெண்டு பக்கமும் ஆளுயரத்துக்கு மருதாணிச்செடி நிக்குமுன்னு பார்த்துக்கிட்டே போனேன்.


ஹா................. இதோ ஸ்கூல் கட்டிடத்துக்கு முன்னாலே நிக்கறேன். எங்கே போச்சு நான் மேலே சொன்னதெல்லாம்?இதோ இருக்கு அந்தச் செம்மண் பூமி! எங்கே? நான் நிக்கறேனே, இங்கே.


ரெண்டு லாரிங்க பக்கம்பக்கம் போனாலும் இடிக்காமப் போகக்கூடிய அந்த செம்மண் வீதி, இப்போ எங்க கார்( ச்சின்னதுடாடா இண்டிகா) போறதுக்கெப் பத்தாம ஒடுங்கி இருக்கே.


மருதாணிச் செடியெல்லாம் போச்சு. படிக்கற பசங்களும் கூடிப்போனதாலே எல்லா இடத்துலேயும் வகுப்பறைகள் கட்டிட்டாங்க.
அமைதியா( எங்கே அமைதி, அதான் மனம் ஓன்னு கூச்சல் போடுதே) நின்னு சுத்திப் பார்த்துட்டு ரெண்டு படம் எடுத்துக்கிட்டு வந்தோம்.ஆங்....மாறாத ஒண்ணு இருக்குன்னா அது மெயின் பில்டிங்கோட கொலாப்ஸபிள் கேட். இதாவது அப்படியே இருக்கே.


முந்தியெல்லாம் எல்லாமே மதுரை ஜில்லான்னு இருந்துச்சுங்க. இப்ப என்னென்னா ஏகப்பட்ட ஜில்லாக்களா பிரிஞ்சுபோயிருக்கு. வத்தலகுண்டு, திண்டுக்கல் ஜில்லாவாம். இந்த ஜில்லா ஜில்லான்னு சொல்றது என்ன தெரியுமா? மாவட்டம்!


இப்போ கொஞ்ச நேரத்துக்கு முந்தி நம்ம தமிழ்நாட்டு வரைபடம் ஒண்ணைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அதுலேபோட்டுருக்கு, வத்தலகுண்டு, ஸ்பெஷல் வில்லேஜ் பஞ்சாயத்துலே இருக்குன்னு. போச்சுரா..... இவ்வளோதானா?
என் ச்சின்ன வயசுலே, 'மதுரைக்கு அடுத்த பெரிய ஊர் இதுதான்'னு ஒரு நினைப்பு இருந்துச்சு.


மெளனமா திரும்பி, இதோ மதுரையைப் பாக்கப்போயிக்கிட்டு இருக்கோம். என்னதான் சொல்லுங்க மனசு ஆறலை.பேசாம இங்க வராமலேயே இருந்துருக்கலாம். கனவுலேயும் நினைவுலேயும் என் அருமை வத்தலகுண்டு வாழ்ந்திருக்கும்.செம்பட்டி வழியா திண்டுக்கல் பழனி பிரியற ரோடு வந்து, அங்கிருந்து மதுரைக்கு வந்து சேர்ந்தாச்சு. இன்னிக்கு ராத்திரி ஒரு குடும்ப நண்பர் வீட்டுலெ தங்குறதா ஏற்பாடு.


நம்ம மாமியோட பெரிய பொண்ணோட வீடு. நான் பூனாவுலே இருந்ததை எழுதியிருக்கேன் பாருங்க. அதைப் படிச்சவங்களுக்குப் புரியும் இந்த மாமி யாருன்னு. உண்மையைச் சொன்னா மாமிதான் நம்ம ஃப்ரெண்டு.


மாமி பொண்ணு மதுரையிலே ரொம்ப வருசமா இருக்காங்க. இவுங்க வீட்டுக்காரர் பெரிய பதவி வகிச்சு, ரிட்டையர் ஆகி இப்ப ஆறு மாசமாச்சு . நாங்க வீட்டுக்குப் போறதுக்குக் கொஞ்சம் முன்னாடிதான் திருச்செந்தூர் போயிட்டு அரக்கப்பரக்கத் திரும்பி வந்திருக்காங்க. ஸ்வாமிதரிசனம் எல்லாம் நல்லா ஆச்சான்னு கேட்டுக்கிட்டு அப்படியே நம்ம ராகவனையும் நினைச்சுக்கிட்டேன். அவரைப்பத்திச்சொல்லவும் செஞ்சேன்.


பேசிக்கிட்டு இருந்தப்ப, இதைப் பாருங்கன்னு ஒரு போட்டோ ஆல்பம் தந்தாங்க. அவுங்க மகன் அமெரிக்காவுலே இருக்கார்.அவரோட நிச்சயதார்த்தம் நடந்த அன்னிக்குத்தான், (அதாச்சு ஏழு வருசம்) நான் சென்னையிலெ போய் இறங்குறேன். ஒரு ஆட்டோ புடிச்சுக்கிட்டு, பொண்ணு வீட்டுக்காரங்க கொடுத்த விலாசத்தைத் தேடித்தேடிச் சுத்தி ஒருவழியாக் கண்டுபிடிச்சோம். அப்ப அந்த ஆட்டொக்காரர் சொல்றார், 'என்னங்க இது என்னென்னவோ சொல்லி இவ்வளோ சுத்த வச்சுட்டீங்க.விஜய் வீட்டுக்கு எதிர்வீடுன்னு சொல்லியிருந்தா அப்பவே கொணாந்து வுட்டுருப்பேன்லெ'ன்னு. 'அட, சினிமா நடிகர் விஜய் வீடா?எங்கே இருக்கு?' இது நான்.


ஒரு அற்பப்புழுவையோ அல்லது வேத்து கிரகவாசியையோ பாக்கற மாதிரி ஒரு பார்வையை வீசிட்டு, ரைட்டுலேபாருங்கன்னு அந்த வீட்டைக் (வீடா அது? பங்களா) காமிச்சாரு. நாங்க நிச்சயதார்த்த விருந்து நடக்கறப்பதான்போய்ச்சேர்ந்தோம். விருந்து மொட்டை மாடியிலே ஷாமியானா போட்டு நடந்துக்கிட்டு இருந்துச்சு. வந்திருந்த பொடிசுங்கஎல்லாம் விஜய் வீட்டையே பாத்துக்கிட்டு இருந்துச்சுங்க. நாங்க மட்டும் அப்பப்பப் பார்த்ததோட சரி:-))


இதாங்க, எதாவது சொல்லிக்கிட்டு இருக்கறப்பவே அப்படியே அங்கிருந்து வேற எங்கியாவது போயிடறேன். அவுங்கமகனுக்கு இப்போ ஒரு மகள் அஞ்சுவயசுலே இருக்கு. பேத்தி போட்டோவா இருக்குமுன்னு அதைத் திறக்கறேன், அடியாத்தீ, இதெல்லாம் எப்படி இங்கே?


எல்லாம் என் மகளோட படங்கள். பொறந்ததிலெ இருந்து அனுப்பிக்கிட்டு இருந்தது. 'நீங்க அம்மாவுக்கு அனுப்புனபடங்கள் இதெல்லாம். அவுங்க பார்த்துட்டுப் பத்திரமா வைக்கச் சொல்லி என் கிட்டே கொடுத்து வச்சிருந்தாங்க.இங்கே வர்றப்பெல்லாம் எடுத்து வச்சுக்கிட்டுப் பார்ப்பாங்க' அவுங்க சொல்லச் சொல்ல என் கண்ணு நிறைஞ்சு போச்சுங்க.


இந்த மாமிக்கும் எங்களுக்கும் பூர்வ ஜன்ம பந்தம் ஏதோ இருந்திருக்கு போல. உண்மையான அன்பு. இவுங்க நமக்குசொந்தம்கூட இல்லை. மாமி இந்த உலகைவிட்டுப் போனபிறகும்கூட நம்ம நட்பு இந்தக்குடும்பத்தோட தொடர்ந்துக்கிட்டுத்தான்இருக்கு. நல்லவங்களை நண்பர்களா அடையறதுக்கும் புண்ணியம் செஞ்சிருக்கோணும், இல்லையா?


படங்கள் : வத்தலகுண்டு கடைவீதி பின்புலத்தில் தெரிவது அந்த சென்றாயன் மலை. உயர்நிலைப்பள்ளி
மருதாணிச் செடிகள் இருந்த இடம்.இப்போ?

Tuesday, March 28, 2006

சாம்பாரா இல்லே சட்டினியா?

பயண விவரம் பகுதி 11


"பதினொன்னரைக்கு ஒரு போட் இருக்கு. இப்பவேக் கிளம்புனா சரியா இருக்கும். என்னா, ஒரு ஒண்ணரை மணி நேரம்தான் ஆகும். சீக்கிரம் கிளம்புங்க."


" இப்பப் போனா அப்புறம் மத்தியானச் சாப்பாடு? விருந்து தயாராகுதுலெ?"


" சாப்புட்டுப் போட்டு போங்க. நாலரைக்குக்கூட ஒரு போட் இருக்கு"


ஆளாளுக்கு நம்ம பயணத் திட்டத்தை வகுக்குறாங்க. பகல் உணவுக்கு 250 பேராமே. அதுலெ மூணு கட்! மெனுவேற அவ்வளவாச் சரியில்லே :-) பேசாம கிளம்பிப் போயிட்டு வந்துரலாமுன்னு புறப்பட்டாச்சு. எங்கே? தேக்கடிக்கு!

போடிலே இருந்து கிளம்பினா சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம்,குமிழி, தேக்கடி.

வழியெல்லாம் நல்ல பசுமைதான். அதிலும் அந்த 'உத்தம பாளையம்' பேருக்கேத்த மாதிரியே உத்தமமா இருக்கு.ச்சின்ன வாய்க்கால்/ ஆறு பாலம். ரெண்டு பக்கமும் தென்னந்தோப்புன்னு.அடாடாடா....


குமிழியிலேயே கடைகளிலே இருக்கற போர்டுகளிலே 'மலையாளம்' ஆரம்பிச்சுருது. எங்கே பார்த்தாலும் டூரிஸ்ட்நடமாட்டம். வெள்ளைத்தோல்கள் அதிகமாத் தெம்படுது. அங்கங்கே ஆயுர்வேத மசாஜ்'க்கு ஏற்ற இடமுன்னுகட்டி விட்டிருக்காங்க. அங்கேயே தங்கி மசாஜ் செஞ்சுக்கிட்டு இயற்கையோடு சேர்ந்து இருந்துட்டு வரலாமாம்.ஊர் எல்லை முடியுற இடத்துலே செக் போஸ்ட். கேரள மாநில பார்டர்! உள்ளே போக அனுமதி வாங்கிரணும்.


காருக்கு 50 ரூபான்னு நினைவு, இல்லே 100 ரூபாயா? உள்ளே மலைப்பாதை. ச்சின்னதுதான். வழியெல்லாம்அடர்த்தியான மரங்கள். தேக்கு நிறைய இருந்துச்சு. புலி, யானை, குரங்கு, காட்டெருமைன்னு ரோடுக்கு ரெண்டுபக்கமும் நிக்குதுங்க, கட் அவுட்டா!


சரியா 11.25க்கு போயிட்டோம். போட் நிக்குது. 'ஆனா டிக்கெட் கொடுக்க முடியாது. கணினி 11.20க்கே டிக்கெட் பதிஞ்சு கொடுக்கறதை நிறுத்திரும். ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாலே வந்துருக்கலாமே'ன்னு மலையாளத்துலே பரஞ்ஞு அவிடே. ஆனா நின்னுக்கிட்டு இருந்த போட்11.40க்குத்தான் கிளம்பி நம்ம வயித்தெரிச்சலைக் கொஞ்சமாக் கொட்டிக்கிட்டுப் போச்சு.


போனாப்போட்டுமுன்னு அப்படியே ஒரு சுத்து நடக்கலாமுன்னு போனா..... அட! நமக்கு வேண்டப்பட்டவங்க!


மரத்துக்கு மரம் தாவறதும், ஒண்ணோட ஒண்ணு சண்டை போடறதும், ஒண்ணை ஒண்ணு துரத்தறதுமா அடாடாடா.. அங்கே ஒரு குடும்பம்( மனுஷக் குடும்பங்க) உக்கார்ந்துக்கிட்டு இருக்காங்க. தலைவர் உரிச்ச வேர்கடலையைக் கையிலே அள்ளி நீட்டறார். நம்மாளு ஒண்ணு, அருமையாப் பக்கத்துலேயே உக்கார்ந்துக்கிட்டு ச்சின்னக்கையாலெ கொஞ்சமா வாரி எடுத்து, ரெண்டு கைக்கு நடுவிலே வச்சுப் 'பரபர' ன்னு தேய்ச்சு, தோலையெல்லாம் 'ஃப்பூ' ஊதிட்டுதிங்கற அழகை இன்னைக்கெல்லாம் பார்த்துக்கிட்டே நிக்கலாம். தலைவரோட தலைவியும் புள்ளைங்களும் பயந்துக்கிட்டுத்தள்ளி நின்னு வேடிக்கை பாக்கறாங்க. அவர் 'ஒரு போட்டோ எடு'ன்னு சொல்றார். அந்தம்மா பயந்துக்கிட்டு தூரக்க நின்னுஎடுக்க முயற்சிக்கறாங்க. நடக்கற காரியமா? நாம எதுக்கு இருக்கோம்? உடனே அந்தம்மாகிட்டே இருந்து கேமெராவை வாங்கி, அந்தம்மாவையும் அவருக்கு அந்தப் பக்கத்துலே ஃப்ரேம்லெ வர்ற மாதிரி நிக்கவச்சு படம் எடுத்துக் கொடுத்துட்டோமுல்லெ.ஆனா அவர் அதை டெவலப் பண்ணும்போது தான் தெரியும் நாம எடுத்த லட்சணம்!


இந்த வேர்க்கடலை எங்கெ விக்குதுன்னு கேட்டதுக்கு, வீட்டுலே இருந்தே கொண்டு வந்தாராம். நீங்களும் போடுங்கன்னு சொன்னார்தான். ஆனா பரவாயில்லெ, நீங்கதான் போடுங்கன்னு சொல்லிட்டேன். அடுத்த போட் ரெண்டு மணிக்குதான்.அதுக்குள்ளே சாப்பாட்டை முடிச்சுக்கலாமுன்னு திரும்ப குமிழிக்கே வந்தோம். நாலு கிலோ மீட்டர்தான்.

வழியெங்கும் மிருகங்கள் நின்றிருந்தன:-)))


சாப்பாட்டுக்கு வந்தோமுன்னு செக்போஸ்ட்டுலே சொல்லிட்டுப் போனோம்.
சாப்பாடு சுமாரா இருந்தது. கேரளா செஃப்தான். ஆனா நல்ல இடம். ரெஸ்ட் ரூம் பரவாயில்லாமல்( மோசமா இல்லாமல்)இருந்துச்சு. இந்த மாதிரி பயணங்களில் 'ரெஸ்ட் ரூம்'தான் கொஞ்சம் பிரச்சனையாப் போகுது. இந்த செளகரியம்இருந்துச்சுன்னா, சாப்பாடு கொஞ்சம் சுமாரா இருந்தாலும் பரவாயில்லேன்றதுதான் நம்ம சாய்ஸ். இங்கே வாசலிலேஒரு மரத்தோட வேர்ப்பகுதியை அப்படியே வெட்டி வச்சிருந்தாங்க. புள்ளையார் மாதிரியே இருக்கு. வெளியே ஒரு கடையிலேரெண்டு பாக்கெட் நிலக்கடலை வாங்கிக்கிட்டோம்.


திரும்ப வந்து, குரங்குக்குக் 'கடலை போடலாமுன்னு' அதே இடத்துக்குப் போனா, யாருமே இல்லை! மாயமா மறைஞ்சுட்டாங்க.ரொம்ப உச்சாணிக் கிளையிலே சிலர் ஆடிக்கிட்டு இருந்தாங்க. 'வாங்கடா, வாங்கடா'ன்னு கூப்புட்டா, ஒருத்தன் சட்டை செய்யணுமே!ஊஹூம்..... கடலையை அங்கங்கே ச்சின்னக் குவியலா வச்சுட்டு வந்தோம்.அதிர்ஷ்டம்(-:


டிக்கெட் எடுத்துக்கிட்டு ரெண்டு மணி 'போட்'டுலே ஏறி உக்காந்தாச்சு. மேலெ இருக்கற தளம். கொஞ்சம்காசு கூடுதல். அதனாலென்ன? தினமுமா வரப்போறோம்? மேலே யாருமே இல்லை. முன்னாலே வரிசையிலே நாங்க. ஒருஅஞ்சு நிமிசம் இருக்கறப்ப ரெண்டு பஸ் வந்து நின்னுச்சுங்க. திமுதிமுன்னு கூட்டம் வந்து போட், 'ஹவுஸ் ஃபுல்'!


நமக்குப் பக்கத்துலே ஒரு எட்டுப் பேர் கொண்ட குஜராத்தி குடும்பம், தாத்தா முதல் பேரன்வரை. கையிலே பைனாகுலர்.அங்கெயே வாடகைக்குக் கிடைக்குதுதான். ஆனா யானையைப் பார்க்க இது அவசியமான்னு இருந்துட்டோம்.


படகு கிளம்பிருச்சு. 'நெஞ்சினிலே நெஞ்சினிலே'ன்னு ஷாரூக் & ப்ரெய்ட்டி ஸின்டா பாடி ஆடுன இடம் இதோ! பட்டுப்போனமரங்கள் மொட்டையா தண்ணிக்கு நடுவுலே அங்கங்கெ நிக்குது. சிலதுலே 'ஷாக்(shag)' பறவைக்கூடு இருந்துச்சு.


ஏரிக்கு நடுவிலே ஒரு மேடான இடத்துலே டூரிஸ்ட் பங்களா இருக்கு. அங்கே சில நாட்கள் தங்க வெள்ளைக்காரர்கள் நிறைய வராங்களாம். ரெண்டு நாள் அங்கே தங்கி, இயற்கை அழகை அனுபவிச்சால் எவ்வளோ நல்லா இருக்கும்? ஹும்...


'சாம்பார், சாம்பார், உதர் தேக்கோ சாம்பார்'னு பக்கத்துலே இருந்து கூவல். பாத்தா மான் கூட்டம். இந்த மானோடகொம்புகள் மகா உறுதியானதுன்னு கத்தி, துப்பாக்கி இதுக்கெல்லாம் கைப்பிடிக்குப் பயன் படுது. இண்டியன் சாம்பார்!


அங்கங்கே இந்த சாம்பார்கள் இருக்கறதும், பக்கத்து சீட் குஜ்ஜுபாய் கூவுறதுமாப் போச்சு. அப்ப நான் கேட்டேன்,'சாம்பார் த்தோ வஹாங் ,ச்சட்னி கஹாங்?' மொத்த குடும்பமும் 'கொல்'ன்னு சிரிக்கறாங்க. சாம்பாரைப் பாக்க பைனாகுலர்வேணுமான்னு கேக்கறார்.


ஒரு இடத்துலே காட்டெருமைகள் மேய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு. அப்ப ரொம்ப தூரத்துலே ஏரியின் அக்கரை ஓரமாசில யானைகள் போகுது. அதுலே ஒரு குழந்தையும் இருக்கு. எல்லாம் சில நொடிதான். அடடா யானையைச் சரியாப்பார்க்கலையேன்னு மனசுக்குள்ளெ ஒரு வருத்தம்.


படகு அதுபாட்டுக்கு ஏரியைச் சுத்தி வந்துக்கிட்டு இருக்கு. வெறும் சாம்பாரையேப் பார்த்துக்கிட்டு இருந்து ஒரு அலுப்புத் தட்டும் சமயம், கரைக்கு மேலே கொஞ்ச தூரத்துலே சாம்பல் கலருலே நாலு மேடுங்க மெதுவா அசையுது.யானைங்க. படகை மெதுவா நிப்பாட்டிட்டாங்க. நாங்க வச்ச கண்ணை எடுக்காமப் பார்த்துக்கிட்டு இருக்கோம்.


திடீர்னு அங்கிருந்து ஒரு யானை( ரொம்ப ச்சின்னது. ஏழெட்டு வயசு தான்இருக்கும்) ஓடிவந்து கரைக்குப் பக்கத்துலே நின்னு தும்பிக்கையை உயர்த்தி ஒரு பிளிறல்...ஹாய் ஹலோ!!!! எங்களுக்கு பயங்கர சந்தோஷம்.அப்புறம் அவரே ஒரு ஸைடா திரும்பி நின்னுக்கிட்டு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கறார். க்ளிக் க்ளிக் க்ளிக்.....ஒரு அஞ்சு நிமிஷம் அப்படியே நிக்கறார். நான் அதுக்கு 'டெலிபதி'யிலே செய்தி அனுப்பிக்கிட்டு இருக்கேன்.


அவருக்கே போதுமுன்னு தோணிருச்சு. திரும்பி நேரா நின்னு எங்களைப் பார்த்து தும்பிக்கையைத் தூக்கி சத்தம்கித்தம் போடாம 'டாடா' சொல்றார். 'சரிடா ச்செல்லம் பை பை' ன்னு நான் கத்திச் சொன்னேன். எனக்கென்னமோ என்னைப்பார்க்கவே வந்தார்னு ஒரு தோணல். அப்ப எங்க இவரும், 'அதுக்கும் தெரிஞ்சிருக்கு யானைக்காரி வந்துருக்கேன்னு.அதான் அப்படி ஓடிவந்து போஸ் கொடுத்துட்டுப் போச்சு'ன்னார். மகா திருப்தி.


கரைக்குத் திரும்ப வர்றோம், அடுத்த போட் சவாரிக்கு எக்கச்சக்கக் கூட்டம் நிக்குது. சாயங்காலம் மிருகங்கள் எல்லாம்(!)தண்ணி குடிக்க வருமாம், அதுனாலே நாலரைமணி ட்ரிப் எப்பவும் இப்படித்தானாம். இருக்கட்டும் இருக்கட்டும். நம்ம யானைநம்மளை வந்து கண்டுக்கிட்டுப் போனாரே, இதைவிட வேற என்ன வேணும்?


போனவழியாவே திரும்ப போடிக்கு வந்து சேர்ந்தோம். கல்யாணம் முடிஞ்சாலும், இன்னும் கங்கை பூஜை, அது இதுன்னுசில சாஸ்த்திர சம்பிரதாயங்கள் இருக்காமே!


மறுநாள், ஊரைச் சுத்திப் பாக்கக் கிளம்பியாச்சு. எங்க இவருக்கு ஒரே 'ஆட்டோகிராஃப்'! படிச்ச ஸ்கூலை எனக்குக் காமிக்கணுமாம். போனோம், பாத்தோம். அதுக்கப்புறம் அங்கே 'பரமசிவன்'ன்னு ஒரு மலைக்கோயில் இருக்குன்னுபோனோம். அங்கே ஊருக்கு நல்ல தண்ணி சப்ளை செய்யறதுக்கு ஒரு 'வாட்டர் ட்ரீட்மெண்ட் ஸ்டேஷன்' இருக்கு.மலைமேலே இருந்து ராட்சஸ குழாய்களில் தண்ணி வந்து கீழே பிரமாண்டமான தொட்டிகளில் நிரம்புது.அதைச் சுத்திகரிச்சு ஊருக்குள்ளே போற குழாய்களிலெ அனுப்பறாங்க. பிரிட்டிஷ் காலத்துலே கட்டுனதாம். இதுதான் முதல் ஸ்டேஷனாம். அப்புறம்தான் மத்த ஊர்களிலே வந்துச்சாம். உள்ளெ போய்ப் பார்த்தோம்.


பரமசிவன் மலையிலே இருக்கற கோவிலுக்கு ரெண்டு நாளிலே கும்பாபிஷேகம் நடக்கப்போகுது. வெளியே மலைஅடிவாரத்துலே தரையைச் சமன் செய்ய ஏற்பாடு நடந்துக்கிட்டு இருந்துச்சு. அப்ப நம்ம நிர்மலா( ஒலிக்கும் கணங்கள்)கல்கத்தாவிலெ இருந்து கூப்புட்டுப் பேசுனாங்க. சந்தோஷமா இருந்துச்சு.


அங்கிருந்து கிளம்பி புள்ளையார் அணைன்னு ஒரு ச்சின்ன அணைக்கட்டுக்கு வந்தோம். பேருக்கேத்தாப்புலே அங்கே ஒரு புள்ளையார் கோயில் இருந்துச்சு. அதுக்கு எதுத்த கரையிலே தென்னந்தோப்புங்க ஏராளம். ஆனா அணையிலே தண்ணி இல்லெ. நூலாட்டம் ஒரு ஆறு. அதுலெயும் துண்டை வச்சு அயிரை புடிச்சுக்கிட்டு இருந்துச்சுங்க புள்ளைங்க.


மாப்பிள்ளை வீடு போடற மதிய விருந்து. அதை முடிச்சுக்கிட்டு அங்கெருந்து கிளம்பினோம். இனி என்னோடஆட்டோகிராஃப்!

Monday, March 27, 2006

எதுக்கெடுத்தாலும் விளம்பரமுன்னா எப்படிங்க?

பயண விவரம் பகுதி 10


அம்மாவோட பொறந்தநாள் வருதுன்னு எங்கே பார்த்தாலும் பேனருங்க. ஒவ்வொண்ணும் ஜெய்ஜாண்ட்டிக்காஇருக்கு. அம்மாவோட படம் பெரூசாப் போட்டு, யார்யார் (இந்த பேனர் வைக்க செலவு செஞ்சவுங்க?) அம்மாவை வாழ்த்தியோ/வணங்கியோ இருக்காங்கன்னு அவுங்க பெயர்களும், சில பேனர்களிலே இவுங்களோட படமும்(ச்சின்ன சைஸு!)போட்டு இருந்துச்சுங்கதான். ச்சென்னையிலே ஒரு பேனருலே '.............நாச்சியாரே'ன்னு கூடப் பார்த்தேன்.


தமிழ்நாடு பூராவும் இப்படியே இருக்கறப்ப மதுரை மட்டும் என்னாங்க, மட்டமா? அதுவும் தமிழ்நாட்டோட ஒரு பகுதிதானே? உசிலம்பட்டிலே போஸ்ட்டர் பார்த்துக்கிட்டே போறப்ப, திடீர்னு ஒரு பேனருலே என்னமோ வித்தியாசமாக்கண்ணுலே பட்டுச்சு. ஆங்......அம்மா படம் இல்லை. ஆனா மாலையும் கழுத்துமா ஒரு ஜோடி! வண்டியை நிறுத்தச் சொல்லிப்பார்த்தா நிஜமான கல்யாண ஜோடிங்கதான் அவுங்க. யாரோ, அரசியல்வாதி வீட்டுக் கல்யாணமுன்னு நினைச்சுக்கிட்டேன்.நம்ம தெய்வராஜ் இருக்கார் பாருங்க, அவரோட ஊரும் இதே உசிலம்பட்டின்றது ஞாபகம் வந்துச்சு.


நமக்காகஎதாவது மலர் வளையம்...ச்சீச்சீ மலர் அலங்கார வளைவு ஏற்பாடு செஞ்சிருக்காரான்னு கவனிச்சேன். ஊஹூம்...அப்படி ஒன்னுமே இல்லை(-:


ஆண்டிப்பட்டி வந்துச்சு. நல்ல அகலமான ரோடுங்க, தெரு விளக்குன்னு ஏரியாவே அட்டகாசம். என்ன இருந்தாலும் அம்மாவோட தொகுதி இல்லீங்களா? ஆனா இந்தக் கல்யாண பேனர்கள் மட்டும் விதவிதமாக் கண்ணுலே பட்டுக்கிட்டே இருந்துச்சுங்க.நம்ம ஷங்கரும்,'மதுரையிலேகூட நிறைய இப்படிச் செய்யறாங்க. நீங்க கவனிக்கலே போல'ன்னு சொல்லி நம்ம கவனிப்புத் திறனுக்கு ஒரு 'பஞ்ச்'வச்சார். ஏங்க நீங்களே சொல்லுங்க. கல்யாணம்ங்கறது நம்மோட சொந்த விஷயம் இல்லையா, அதை என்னத்துக்கு இப்படி ஊர்ச்சாலைகளிலே எல்லாம் விளம்பரப்படுத்தணும்ன்றது புரியாம இருந்தது. 'ஜனங்களுக்கு ரொம்பத்தான் ஆயிக்கிடக்கு'ன்னு சொல்லிக்கிட்டே வந்தேன்.


தேனி வந்தோம். பாரதிராஜா நினைவும் ஆட்டோமேட்டிக்கா வந்துச்சு. இதுதான் கொஞ்சம் பெரிய ஊர். மணியோ ரெண்டடிக்கப் போகுது.பேசாம இங்கேயே சாப்புட்டுப் போயிரலாமுன்னு ஒரு இடத்துலே சாப்ட்டோம். இருக்கறதுலேயே பெரிய ஹோட்டலாம். வீட்டுச் சாப்பாடுமாதிரி இருந்துச்சு. ஒரு கீரைக் கூட்டும், பீன்ஸ் பொரியலும். அவ்ளோதான். வேற ஒண்ணும் இல்லையாம் சைவத்துலே! நான் வீட்டுச்சாப்பாடுன்னு சொன்னது எங்க வீட்டுச் சாப்பாடு:-) நானும் தினப்படிக்கு வகைவகையாச் செய்ய மாட்டேன். ஒரு குழம்பு, ஒரு காய் மட்டும்தான்.வகைவகையாச் செஞ்சாலும் திங்கஆள் வேணாமா? இது வீட்டுக்குச் சரி. ஆனா ஒரு ஹோட்டலுக்கு? ஆனா இந்தக் குறையைச் சரிசெஞ்சுட்டாங்க, வெளியே முகப்புலே ஒரு யானை( சிலை)யை வச்சு.


தேனியிலே இருந்து போடி வந்து சேர்ந்தோம். வந்த காரணம்? குடும்பத்துலே ஒரு கல்யாணம். உசிலம்பட்டி தாண்டுனவுடனேஎங்கே பார்த்தாலும் கொஞ்சம் பசுமை கூடுதலாத்தான் இருந்துச்சு. அதிலும் போடி போற வழியெல்லாம் இன்னும் நல்லாவே இருந்துச்சு.மாமியார் வூடு இருக்கற இடமாச்சே, விட்டுக் குடுத்தற முடியுங்களா?:-)


எங்க இவர் ஏறத்தாழ 32 வருசத்துப்பிறகு பொறந்த ஊருக்கு வரார். அவர் என்னதான் கஷ்டப்பட்டு முகத்தைப் 'பாவமா வச்சுக்கமுயன்றாலும் கண்ணுலே ஒரு உற்சாகம் கொப்புளிக்கறதைத் தடுக்க முடியலை. நானும் எங்க கல்யாணத்துக்குப் பிறகு மொதமொத ஊருக்கு வரேன். தூரத்துச் சொந்தங்களையெல்லாம் பாக்கணும்.


ரெண்டுபக்கமும் வயல்கள், கரும்புன்னு இருந்த ரோடு 'சட்'னு திரும்புது. ஊருக்குள்ளே வந்துட்டோம். புழுதியோடு இருக்கும் தெரு பெருசாதான் இருக்கு. போடி ஜமீந்தாரின் அரண்மனைச் சுற்றுச்சுவர் கொஞ்சம்கூடப் பொலிவில்லாமல் இருக்கு. வெள்ளை கண்டு எத்தனை மாமாங்கம் ஆச்சோ?


இன்னும் ஊருக்குள்ளே போகப்போக குறுகலான தெருக்கள். நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடைபட இருக்கற ஊர்.வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். கல்யாண வீடுகளுக்கே உரிய கூட்டம். நட்பும் சுற்றமுமா பரபரன்னு கல்யாண வேலைகளில் மும்முரமா இருந்தாங்க.


கல்யாண மண்டபம், இங்கே பக்கத்துலேதான் இருக்குன்னு,(ஒரு மூணு நிமிஷ நடை) அங்கே போனா....அடக்கடவுளே! நம்ம வீட்டுக் கல்யாண பேனர்! இதுலே பொண்ணுக்கும் பையனுக்கும் நெருங்கிய சொந்தங்கள்பேரெல்லாம் போட்டு வச்சிருக்காங்க. அதுலெ நம்ம பேரும் இருக்கு. போச்சுரா!


ஆமாம், கல்யாணச் செலவுகள் போதாதுன்னு இதுவேறயா? மேற்கொண்டு சேகரிச்ச விஷயம்,' ஊரோடு ஒத்துப்போகவேண்டியிருக்கு. செலவு பொண்ணு வீட்டுக்காரங்கதான்.( நாங்க பையன் வீட்டுக்காரங்க!) ஒவ்வொரு கல்யாணத்துலேஇந்த மாதிரி வெவ்வேற இடத்துலே நாலஞ்சு வைக்கறதும் உண்டு. நம்ம வீட்லே இது ஒண்ணு மட்டும்தான்'.


கிட்டெப்போய்ப் பார்த்தப்ப, நல்ல ப்ளாஸ்டிக் ஷீட்லே ப்ரிண்ட் செஞ்சு, போட்டோவெல்லாம் அழகா, மென்மையாஇருக்கறது தெரிஞ்சது. பையனுக்கு நிறம் கூடி இருந்ததே! ச்சும்மா ஒரு பத்தடிக்கு இருபது அடி சைஸு, பானரைச்சொல்றேன்!


ஆமாம், முந்தியெல்லாம் புது சினிமாப் படங்கள் விளம்பரத்துக்கு அங்கங்கே பெருசா வைக்கற விளம்பரத்துக்கு மூங்கில் ஏணி, சாரம் மாதிரி கட்டி ஆட்கள் வரையறதையெல்லாம் பார்த்திருக்கேன். சுவத்துலே ஒட்டுற பெரிய போஸ்டருங்களைக்கூட நாலா எட்டாப் பிரிச்சு ப்ரிண்ட் செஞ்சு கவனமாப் பார்த்து ஒட்டுறதையும் பார்த்திருக்கேன்.கொஞ்சம் ஒரே ஒரு மில்லிமீட்டர் ஏறத்தாழ இருந்தாலும் வாயும் கண்ணும் இன்னும் என்னெல்லாமோ கோணலா ஆயிரும். இப்ப அதெல்லாம் குறைஞ்சு போச்சு போல. பிரிண்ட்டிங் டெக்னாலஜி ரொம்பவே வளர்ந்துருச்சு. ப்ளாஸ்டிக் பேனர்மழையிலே நனைஞ்சாலும் ஒண்ணும் ஆகாம அப்படியே பளிச்'னு இருக்கு.

எல்லாஞ் சரிதான். ஆனா அந்த பேனரைக்கையால் எழுதும் தொழில் இப்ப போயிருச்சே! அப்படி எழுதிக்கிட்டு இருந்த ஆர்ட்டிஸ்ட்டுங்க இப்ப என்ன செய்யறாங்க?ச்சின்ன ஸ்டில்லை வச்சுக்கிட்டு பிரமாண்டமா எப்படி எழுதுவாங்க தெரியுமா? அதுலே இருக்கற நடிக,நடிகையர்யார்யாருன்னு 'டக்'னு கண்டுபிடிச்சுறலாம். கெட்டிக்காரங்கப்பா! இதெல்லாம் வந்து நாளாயிருக்கும் போல. மெல்ல வந்த இந்த மாறுதலைப் புரிஞ்சுக்காம இருந்துருக்கேனே.


வர்றவழியெல்லாம் இன்னொண்ணையும் கவனிச்சேன். வேல்முருகன் ஜுவல்லரி! ரோடுக்கு ரெண்டு பக்கமும் பச்சைப்பசேர்னுவயலும் பயிருமா இருக்கேக்க, மோட்டார் ஷெட் அங்கங்கெ நிக்கத்தானெ வேணும். அதோட சுவத்துலே எல்லாம்ப்ரவுண் நிறம் அடிச்சு, 'பளிச்'னு மஞ்சக்கலருலே விளம்பரம் 'நகைக்கடை'க்கு. மதுரையிலே இருக்கற கடைக்கு பட்டிதொட்டியெல்லாம் விளம்பரமப்பா. பொண்ணுங்க கண்ணுலே இருந்து தப்பவே முடியாது. அவுங்க நோக்கமும்அதுதானே! காசு கிடைச்சவுடனே வீட்டு ஆளுங்களைப் பிச்சுப் புடுங்கிறணுமில்லெ.


ரெண்டு நாள் கல்யாண ஆர்ப்பாட்டங்களிலே கலந்துக்கிட்டு நேரம் ஓடிப்போச்சு. இங்கெ முக்கியமா நான் கவனிச்சதுஎன்னன்னா, டைனிங் ஹால் சுவத்துலே கல்யாண சாப்பாடு 'மெனு' ஒட்டி வச்சிருந்தது. இது நல்ல ஐடியாவா இருக்கே. இங்கே ஒண்ணும் சரிப்படலைன்னா, இதோ நாலு கட்டிடம் தள்ளி இருக்கே இன்னொரு கல்யாண மண்டபம் அங்கே போயிரலாம்.இல்லே?


உறவினரில் ஒருத்தர், இங்கே நியூஸியிலே ஒரு ஸ்போர்ட்ஸ் க்ளப்க்கு ஸ்பெஷலா டி ஷர்ட், ஸ்வெட் ஷர்ட்னுதயாரிச்சு அனுப்பறார். இருக்கட்டும். அதுக்கென்ன? ......என்னவா?


விருந்து சமைச்சுப் பரிமாறும் க்ரூவுக்கு ஸ்வெட் ஷர்ட் சப்ளை செஞ்சிருக்கார். அவுங்களும் 'குவீன்ஸ் டவுன், நியூஸி'ன்னுபோட்டுக்கிட்டு இட்டிலி அவிக்கறதும், இலைகளிலே கொண்டுவந்து போடறதுமா இருந்தாங்க. இங்கே 18 வருசமாஇருக்கேனே, பாசம் இருக்காதா? ஓடிப்போய் படம் புடிச்சுக்கிட்டேன்.


விடியக்காலையிலே தாலிக் கட்டு. ஒம்பது மணிக்கெல்லாம் காலை உணவு முடிஞ்சு ஹாலே முக்காவாசி காலி. வேலை நாளாச்சே. எல்லோரும் ஜோலிக்குப் பொயிட்டாப்பலெ. பகல் விருந்துக்கு நெருங்குன சொந்தம் மட்டும்தானாம்.250 பேர்னு மெனு லிஸ்ட்டுலெ எழுதிப்போட்டுருந்தாங்க. பகல் பன்னெண்டரை வரைக்கும் அரட்டைக் கச்சேரியா?


சொந்தக்காரங்க எல்லாம் எங்க வீட்டுக்கு வாங்க, எங்க வீட்டுக்கு வாங்கன்னு விடாமக் கூப்புடறாங்க. அதுலே ஒருத்தர் 200 வருஷப் பழைய வீட்டுலே இருக்காங்களாம். போய் பார்க்கணுமுன்னு மனசு அடிச்சுக்கிச்சு. அவுங்க கொஞ்சம்(!)தூரத்துச் சொந்தமாம். மத்தவங்க வீட்டுக்குப் போகாம இங்கே மட்டும் போயிட்டு வந்தா நல்லா இருக்காதுல்லெ?அதுக்குன்னு 150 வீடுகளுக்குப் போக முடியுமா? இந்தக் கஷ்டத்துலெ இருந்தும் எனக்குக் கை கொடுத்தது யானைதான்!

Friday, March 24, 2006

மீநாக்ஷி, நல்லா இருக்கியாம்மா?

பயண விவரம் பகுதி 9


'கடக் முடுக்'குன்னு ஒவ்வொரு ச்சீடையா வாய்க்குள்ளெ போய்க்கிட்டு இருக்கு. டைம் பாஸ்! வேற என்ன செய்ய?இதோ, மதுரைக்குப் போகறதுக்காக 'ஏர் டெக்கன்' லே ஏறக் காத்துக்கிட்டு இருக்கோம். மாலை நாலரைக்குன்னு 'நெட்'லே பார்த்தோம். இங்கிருந்தெ பதிவும் செஞ்சாச்சு. நேத்து இதே விமானத்துலே கிளம்புன 'மாப்பிள்ளை' ஏர்ப்போர்ட்லே இருந்து ஃபோன் செஞ்சு, நாலரை கிடையாதாம். 'அஞ்சரையாம்' ன்னு சொல்லியிருந்தார். ஆனா இப்பமணி ஏழாகப்போகுது. நாலரையை அஞ்சரையா மாத்துனதுக்கோ, இல்லே இப்படி எல்லாரையும் காக்க வச்சதுக்கோ ஒரு அறிவிப்பும் கிடையாது. ஒரு குற்ற உணர்ச்சியோ அல்லது மக்கள் கிட்டே ஒரு மன்னிப்பு சொல்றதோன்னு எதுவுமே இல்லை. நம்ம மக்களும் இதெல்லாம் ரொம்பவே சகஜமப்பான்னு எதுருலே இருக்கற டிவியிலே கிரிக்கெட்டுகேம் பார்த்துக்கிட்டு இருக்காங்க.


வரவர, இந்த கேம் ஒரு போதைப் பொருளாட்டம் ஆயிருச்சு. ஜனங்கள் சுற்றுப்புறத்தை மறந்து கேள்வி ஏதும் கேக்காம இருக்கணுமுன்னா, இந்த கிரிக்கெட்டு கேம் (முந்தி எப்பவோ விளையாடி முடிச்சதா இருந்தாலும் பரவாயில்ல. மறு மறு மறு ஒளிபரப்போ, இல்லே டேப் செஞ்சு வச்சுக்கிட்டு போடறாங்களோ தெரியாது) ஒண்ணைப் போட்டுட்டாப் போதும்! பயணிகள் காத்திருக்கற பகுதியிலே 'நடிகை கீதா' உக்காந்துக்கிட்டு, செல்லுலே மும்மரமாப்பேசிக்கிட்டு இருந்தாங்க. இதை நான்கூடக் கவனிக்கலை. எங்க இவர்தான் பார்த்துட்டுச் சொன்னார். இந்த மாதிரி முக்கிய விஷயம் எல்லாம் இவர் கண்ணுலேதான் படும்!


ஒருவழியா ஏழரைக்குக் கூப்புட்டு உள்ளெ ஏத்துனாங்க. ரொம்ப குறுகலா ஒரு பாதைவிட்டு ரெண்டு பக்கமும் ரெவ்வெண்டு ஸீட் வச்ச விமானம். இதோட ரெக்கைகளைப் பார்த்தாவே, இது என்னாத்த சுத்தி, என்னாத்தைக் காத்துகிளம்பி, எப்படி இதை தூக்குமுன்னு ஒரு சந்தேகம் இருக்கத்தான் செஞ்சது. படிக்க எதாச்சும் இருக்கான்னு முன்னாலேபார்த்தா ஒரு 'இன் ப்ளைட் மேகஸீன்' இருந்துச்சு. அதுலெ வர்ற கூப்பான் ஸ்பெஷல் எல்லாம் யார்யாரோ நீட்டாக் கிழிச்சுட்டாங்க போல, மீதி இருக்குற நாலு பக்கம் அம்போன்னு தொங்குது. சரி, இருக்கட்டுமுன்னு ஒரு சின்ன தூக்கம் போட்டேன். துப்பட்டா இருக்கறது நல்லாத்தான் இருக்கு, மூஞ்சை மூடிக்கிட்டுத் தூங்க:-)


நண்பர் ஏற்கெனவே ஹொட்டலே ரூம் போட்டுருந்தார். ஹொட்டல்காரவுகளே 'பிக் அப்' செஞ்சுக்கிட்டாங்க. நமக்காகஹொட்டல்லே காத்துக்கிட்டு இருந்த நண்பருக்குப் ஃபோன் செஞ்சு 'வந்துக்கிட்டே இருக்கொம்'னு சொல்லியாச்சு.


அங்கெ போய்ச் சேர்ந்ததும் நண்பரோடு கூட இன்னொரு நண்பரும் இருந்தார். நம்ம கையிலே ஒரு ச்சின்னப் பொட்டி மட்டும்தான். அதைக் கொண்டு போய் ரூம்லே போட்டுட்டுக் கீழே வந்தோம். அங்கேயே ஒரு ரெஸ்டாரண்ட்,பேரு'கிறிஸ்டல்' இருக்கு. சாப்புட்டுக்கிட்டே பேசலாமுன்னு உள்ளெ போய் உக்காந்து, மெனுவைப் பார்த்தா, வறுத்த குழந்தை இருக்குன்னு போட்டுருக்கு. அதுவும் தங்க நிறத்துலே வறுத்ததாம்.'என்னாடா இது சிறுதொண்டர் காலமா? 'ன்னு நினைச்சுக்கிட்டே இன்னும் படிச்சா, ஆந்திரா மிளகாய் விளக்கு! போச்சுரா, இது என்ன அற்புத விளக்கா?


'ராயல் கோர்ட்' லே கொஞ்சம் சொல்லி வைக்கணும்! அட்டகாசமா யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு அலங்காரமா சர்வ் செய்யறவரைக்கும் சரி. இத்தையும் கொஞ்சம் கவனிக்கக்கூடாதா? இந்த 'மெனு' பார்த்துச் சிரிக்கிற வழக்கம்என் மக கிட்டே இருந்து தொத்திக்கிச்சு. மெட்ராஸ் 'கீதா கஃபே' லே cali flover பார்த்து ஆரம்பிச்சது மூணரை வருசம்முந்தி.( இன்னும் அப்படியேதான் இருக்குன்றது வேற விஷயம்!)


மதுரைன்னதும் நம்ம நண்பர்கள் யாருன்னு ஊகிச்சிருப்பீங்கல்லே? நம்ம தருமியும், காகாபிரியனும்! வலை நண்பர்களைச்சந்திக்கறப்ப, அவுங்களை இப்பத்தான் மொதமொதப் பாக்கறோமுன்ற உணர்வு வர்றதில்லைங்க. காலங்காலமாய்தெரிஞ்சவுங்கன்னு தோணிப்போகுது. பேசுனோம், பேசுனோம் அப்படிப் பேசிச் சிரிச்சோம்.


ஒரு வழியா ' இரண்டாம் இண்ட்டர்நேஷனல் வலை மாநாடு' முடிஞ்சப்ப இரவு 11 மணி ஆயிருச்சு. நம்ம 'காகா'வோடபெயர்க் காரணத்தையும்( ரொம்ப முக்கியம் பாரு?) கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். யாருகிட்டேயும் சொல்றதில்லைன்னு கையிலே கிள்ளி சத்தியம் செஞ்சுட்டேன்லெ:-) அவர் ஒரு நாளைக்கு 'கொசுவத்தி' ஏத்தறப்ப சொல்லிருவார்,இல்லியா?ஆனா அதுக்கு நாளாகும். இப்ப ச்சின்னப் பையனா இருக்கார். இஞ்சிநீயரிங் கடைசி வருஷ மாணவர். ஆனாலும் இப்படிச்சின்னவயசுக்காரங்க நிறையப்பேர் தமிழிலே எழுதறதும், வாசிக்கறதுமா இருக்கறது மெய்யாலுமே சந்தோஷமாத்தான் இருக்கு.


மறுநாள் காலையிலே 'மீநாக்ஷி'யைப் பாக்கப் போனோம். கடைசியாப் பார்த்து 16 வருசத்துக்கும் மேலே ஆயிருச்சு.அர்ச்சனைத் தட்டு வாங்கிக்கிட்டு உள்ளே போனா ,நம்ம 'பார்வதி' ஓரக்கண்ணாலே தட்டையே நோட்டம் விடுது.சரி, இந்தான்னு அதுலே இருந்த வாழைப் பழங்களை பார்வதி'கை'யிலே கொடுத்துட்டு உள்ளே போனா, பள்ளிக்கூடப்பசங்க கூட்டம். ஸ்கூல் பிக்னிக்? இருக்கும்.


மீநாக்ஷி அப்ப பார்த்த மாதிரியேதான். முன்னாலே உக்காந்து கொஞ்சம் குசலம் விசாரிச்சேன். குருக்கள் அர்ச்சனையை'திவ்யமாப்' பண்ணார். 'பழம் வைக்கலையா'ன்னு கேட்டார். 'பார்வதி'க்குக் கொடுத்துட்டேன்னதும், 'கடைக்காரங்க பழம்வைக்காம விட்டுட்டாங்களோ?'ன்னு நினைச்சேன்னார்.
நம்ம சுந்தரேஸ்வரரும் அப்படிக்கப்படியே இருந்தார். மண்டபத்துலே 'யாராவது' இருக்காங்களான்னு பார்த்தேன்.கோயிலைச் சுத்தி வர்றப்பக் கோயில் கடைகளையும் ஒரு நோட்டம் விட்டேன். முந்தியெல்லாம் அழகான கலர்களிலே கல்லுரல், திருகைக்கல், குடம், பாத்திரமுன்னு, மரச் செப்புகள் குவிஞ்சு கிடக்கும்.இப்ப ஸ்டிக்கர் பொட்டும் வளையலுமா இருந்துச்சு. ரிப்பன் கடைகள் கூட இப்பெல்லாம் காணாமப் போயிருச்சுல்லே?


இன்னொரு பிரகாரத்துலே மூணு ஒட்டகங்கள் உக்கார்ந்திருந்தன, அலங்கார 'ச்சத்தர்' மேலே போர்த்திக்கிட்டு! ஆமா, எப்பருந்து ஒட்டகம் கோயிலுக்கு வந்துச்சுன்னு யாருக்காச்சும் தெரியுமா? அதுக்கும் ஒரு கதை இருக்கணுமே? அப்படியே மெதுவா நகர்ந்துப் பொற்றாமரைக் குளம் வந்தோம். நிஜமாவே தங்கத்தாமரை ஒண்ணு ஜொலிச்சுக்கிட்டு இருந்துச்சு.


இங்கே போறதுக்கு முன்னலெ ஒரு வாசலைக் கடந்து வந்தோமா, அங்கே இருந்த ஒரு விளக்கலங்காரம் அடடா...பித்தளையிலே செஞ்சு சுவத்துலேயே பதிச்சு இருக்காங்க. அந்தச் சிற்பத்தோட விரல், நகம் எல்லாம் சொல்லமுடியாத அழகு!


இப்ப எவ்வளவுக் கஷ்டப்பட்டாலும் இது போல ஒரு கோயிலை உண்டாக்க முடியுமா? ச்சின்ன இடைவெளியிலும் கூடபார்த்துப் பார்த்துச் செய்த சிற்ப வேலைகள். ஒவ்வொண்ணையும் அனுபவிச்சுச் செஞ்சிருக்காங்க. மனுஷனுக்கு இவ்வளவு அழகுணர்ச்சியும், கலையைப் பரிபூரணமா உணர்ந்து படிச்சு, அதை கண்முன்னே கொண்டுவர முடிஞ்சதையும் பார்த்தா, அப்பத்து மக்கள் எல்லாம் ரொம்பவே ஆனந்தமா இருந்திருக்கறாங்கன்னு தோணுது.


கோயிலைச் சுத்திப் பார்த்துட்டு( கொஞ்ச நேரம்தான், முழூஊஊஊஊஊஊசாப் பாக்கறதுன்னா வாழ்நாள் பத்தாதே!) பொற்றாமரைக் குளத்துப் பக்கத்துலே பூ வித்துக்கிட்டு இருந்த அம்மாகிட்டே,(ம்ம்ம்ம்ம் என்ன பூவா? மதுரையிலே என்ன வாங்குவாக? மதுரை மல்லிதான்!) என்னா விலைன்னு கேட்டா நூறு அஞ்சு ரூவாயாம். ஆமாம் எப்படி எண்ணுவீங்கன்னு கேட்டா அப்படியே கட்டைவிரல் நகத்தாலே நகத்தி எண்ணிக் காமிச்சாங்க. பத்து ரூபாய்க்குப் பூவை வாங்கி மணக்கமணக்கத் தலையிலே வச்சுக்கிட்டு ( எண்ணாமத்தான் ஒரு அளவாக் குடுத்தாங்க அந்தம்மா) இன்னொருக்கா நம்ம 'பார்வதி'யைப் பார்த்துட்டு வெளியே வந்தோம்.


நமக்காக ஷங்கர் வெளியே காத்துக்கிட்டு இருந்தார். ஓ... சொல்ல மறந்துட்டேன் இல்லே ஷங்கர் யாருன்னு?ஒரு அஞ்சு நாளைக்குக் கார் வேணுமுன்னு ட்ராவல்ஸ்லே கார் எடுத்தோம். அதோட ட்ரைவர்தான் நம்ம ஷங்கர்.வெளியே வந்து காருக்குள்ளெ ஏறரதுக்குள்ளே பொண்ணுங்க, ஒவ்வொருத்தரும் ஒரு கைக்குழந்தையோட வேறநம்மளைச் சூழ்ந்துக்கிட்டு தர்மம் செய், தர்மம் செய்ன்னு பிச்சுப் புடிங்கிட்டாங்க. நிறைய இடங்களில் கோவிலுக்குப் பக்கத்துலே இப்படி தர்மம் கேட்டு ஆட்கள் இருக்காங்கன்னாலும், இங்கே கொஞ்சம் வித்தியாசமா உணர்ந்தேன்.ஏறக்குறைய ஒரே வயசுப் பொண்கள், ஒரே வயசுக் குழந்தைகள். பாவம்தான். இல்லேங்கலே. ஆனா இரக்க குணம் இருக்கறவங்களையும் அரக்க குணமா மாத்தறதுபோல இருந்தது அவுங்க செயல். என்னன்னு புரியலை(-:இதை எழுதவேணாமுன்னு தான் நினைச்சேன். ஆனா இதுலே என்னமோ இருக்கு, அதெப்படி எல்லாரும் ஒரே வயசு?யாராவது இவுங்களை வச்சு இந்தப் பிச்சைத்தொழிலைச் செய்யறாங்களோ?


அறைக்கு வந்ததும் பொட்டியை எடுத்துக்கிட்டு உடனே கிளம்பிட்டோம், போடியை நோக்கி. அடடா, தாழம்பூ குங்குமம் கோயில்கிட்டே இருந்துச்சே, வாங்காம வந்துட்டமே. சரி, எப்படியும் இங்கேதானே ரெண்டு மூணு நாளுலே திரும்பவரப்போறோம், அப்ப வாங்கிரலாம்.

Thursday, March 23, 2006

துள்ளுவதோ முதுமை?பயண விவரம் பகுதி 8


"ஹை, ஹவ் ஆர் யூ யங் மேன்?"

50+ ஐப் பார்த்து 80 கேக்கற கேள்வி!

கூடப் பேசறவங்களுக்குத் தன்னாலேயே உற்சாகம் தொத்திக்கும்!

இந்தப் பதினெட்டு வருச நட்பு ஆரம்பிச்சது 'இங்கேயும் இல்லே'ன்றதாலே. அதைச் சொன்ன விதத்தைவிட, சொல்லப்பட்டமொழி நம்மளை அப்படியே இழுத்துருச்சு. என்ன மொழியா? தமிழைத் தவிர வேற என்னவாம்?


சூப்பர் மார்க்கெட். ராத்திரி ஒரு எட்டு மணி இருக்கும். வியாழக்கிழமை.அன்னைக்கு இங்கே 'லேட் நைட்'ன்னு சொல்ற நாள்.(இப்பக் காலம் மாறிப்போச்சு. 24 மணிநேரம் திறந்திருக்கற சூப்பர் மார்க்கெட்டெல்லாம் வந்துச் சக்கைப்போடு போடுது!)நானும், நாலுவயசு மகளும் ஒரு ஷெல்ஃபுலே சாமான்களை எடுத்துக்கிட்டு இருக்கோம். எங்க இவர் வேற ஷெல்ஃப்லே ஏதோ தேடிக்கிட்டு இருக்கார். 'இங்கேயும் இல்லே'ன்னு குரல் ஒண்ணு காதுலே வுழுது. என்னோட தலை அந்த மொழிக்குக் கட்டுப்பட்டுஅப்படியே ஒரு திரும்பல். அங்கே யாரும் இல்லை, ஆனா என் காலு மட்டும் சத்தம் வந்த திசையிலே பாயுது.கொஞ்சம் வயது முதிர்ந்த பெண்ணும்,ஆணும்.


" இந்தியாவா? தமிழ் பேசுனீங்களே?"

" அட, நீங்களும் தமிழா?"

'அப்பா, தமில் தமில்' னு சொல்லிக்கிட்டே அப்பாவைத் தேடி ஓடும் மகள்!

'வாங்க வீட்டுக்கு, இங்கே பக்கத்துலேதான்'ன்னு கையோடு கூட்டிக்கிட்டு போயாச்சு. 'விட்டாக் காணாமப் போயிருவாங்களோ'ன்ற பயம்?:-)


அரக்கப் பரக்க உப்புமா செஞ்சு விருந்தோம்பலை முடிச்ச சமயம் நாங்க 'திக் ஃப்ரெண்ட்ஸ்' ஆயாச்சு.நல்ல நட்புக்கு வயசு வித்தியாசமெல்லாம் இருக்கா என்ன?


இங்கே பஸிஃபிக் சமுத்திரத்துலே இருக்கற 'நவ்ரு'தீவுலே இருந்து வந்திருக்காங்க. 'ஏர் நவ்ரு'விலே'சீஃப் இஞ்சிநீயர்'. இதுக்கு முன்னாலே இந்தியன் ஏர்லைன்ஸ்லெயும், ஏர் இண்டியாவிலேயும்  வேலை செய்து ரிட்டையர் ஆனவர்.


இவுங்க ஏர் நவ்ரு ப்ளேன்களை எல்லாம் சர்வீஸ் செய்யறது, இங்கத்து ஏர் நியூஸிலாந்து. அதனாலே ப்ளேனை சர்வீஸுக்குக் கொண்டு வந்திருக்கார். ஒவ்வொரு தடவை வரும்போதும் ஏறக்குறைய ரெண்டு மாசம் ஆயிருமாம். இங்கே மோட்டலில் தங்கல். கூடவே மனைவியும்.


தினமும் காலையில் மாமா வேலைக்காக'ஹேங்கர்' போயிட்டால், திரும்ப வரும்வரை மாமி எங்க கூடவே!


ஒரு மாசம் போனதெ தெரியலை. சனி, ஞாயிறுன்னா ஒண்ணா ஊர் சுத்தல்!
அதுக்கப்புறம் இவுங்க ச்சென்னைக்கே திரும்பப் போயிட்டாங்க. நாமும் ச்சென்னை வரும்போதெல்லாம் தவறாம 'விஸிட்'னு நட்பு தொடர்ந்துக்கிட்டுத்தான் இருக்கு.


இப்ப மாமாவுக்கு எம்பது முடிஞ்சுருச்சு. மாமிக்கு எழுபத்தாறு. இன்னும் பழைய சீண்டல், கேலி எல்லாம் அப்படியே இருக்கு.


இன்னமும் மாமா வேலை பார்த்துக்கிட்டுத்தான் இருக்கார். ரஷ்யா( ராம்ஸ் கவனிக்க)விலே இருந்து இங்கெ 'பைலட் ட்ரெயினிங்' எடுக்க வர்றவங்களுக்கும், ரஷ்ய விமானங்களில் வேலை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்யப் பெண்களுக்கு 'ஏர்ஹோஸ்ட்டஸ் ட்ரெயினிங்' கொடுக்கவும் இருக்கற ஏவியேஷன் கம்பெனிக்கு ஜெனரல் மானேஜர்.


முந்தி இருந்த வீடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். மாடியில் உக்கார்ந்து 'கடல்' பார்க்கலாம். நியூஸி மேலே ஒரு தீராத மோகம். இங்கே பார்த்த 'மோட்டல்'களின் டிஸைனை வச்சு அங்கேயும் வீட்டுலே ஒரு அவுட் ஹவுஸ் கட்டி வச்சிருந்தாங்க. ரொம்பப் பெரிய வீடு! இப்ப மெயிண்டெயின் செய்ய முடியலையாம். ஏர்கண்டிஷனரில் பீச் மண் வந்து நிறைஞ்சுருதாம். அதனாலே வீடு மாறியாச்சு.இப்பவும் அதே ஏரியான்னாலும் 'ஸீ வ்யூ' இல்லை.ப்ச்சு...(-:


ஆனா, கண்ணுக்குக் குளுமையா வேற காட்சிகள் இருக்கு. சடைசடையாக் காச்சுத் தொங்குற புளியமரங்கள். இதெல்லாம் ஒரு காட்சியான்னு நினைச்சா, அவுங்க பக்கத்து வீட்டுக்கு வரப்போறவங்களை வேணுமுன்னாச்
சொல்லலாம். சூரியா & ஜோதிகா. வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க. அடுக்குமாடிதான். ஆனா ஒரு மாடி முழுசும் எடுக்கறாங்களாம். நல்ல நெய்பரா இருப்பாங்கல்லே?(படம் எடுத்தேன். போடலாமுன்னு ...)


'பெரிய பெரிய ஆளுங்கெல்லாம் நம்ம வீட்டு வழியாத்தான் போறாங்க தெரியுமா? ஆனா நான் வேற வழியாப்போவேன்'னார்.


மொதல்லெ புரியலை. அப்புறம் புரிஞ்சது. மின்சார மயானம் போற வழிதான் இது. அப்ப அது என்ன வேற வழி? உடல்தானம் செஞ்சுருக்கார். அதனாலெ மயானம் போகாம எதிரே இருக்கும் மலர் ஹாஸ்பிடலுக்குப் போயிருவாராம்.'இந்த லேடியை நினைச்சாத்தான் கவலையா இருக்கு. போனபிறகு அஞ்சுமணி நேரத்துக்குள்ளே என்னை அங்கே அனுப்பிறணும். வண்டியெல்லாம் ரெடி பண்ணனுமே'ன்னு மனைவியைப் பார்த்துக் கண்ணடிச்சுக்கிட்டே சொல்றார்.


எனக்கு அந்தப் பழைய வீட்டு மேலே 'தீராத மோகம்' ன்றதாலே எல்லோருமா கிளம்பி அங்கே ஒரு 'ரைடு' போயிட்டுஅப்படியே ஒரு 'செட்டிநாடு ரெஸ்டாரண்ட்'டில் ராச்சாப்பாட்டையும் முடிச்சுக்கிட்டுத் திரும்பினோம்.


சாவை பத்தின பயம் இல்லாததாலே ஒவ்வொரு நிமிஷ வாழ்க்கையையும் அனுபவிக்கறாங்க. மாமா ஒரு பக்கம் பிஸின்னா,மாமியும் ஆன்மீகம், கோயில், வாக்கிங், எக்ஸ்னோரா பொறுப்புன்னு ஒரே ஓட்டம்தான். அழகான வீடு நிறையநியூஸியின் இயற்கை எழில் கொஞ்சும் படங்கள்.( இங்கே நம்ம வீட்டுலே ஒண்ணுமே இல்லை)


மூணுமணி நேரம் பறந்ததை நம்பவே முடியலை. அதுக்குள்ளே தொட்ட விஷயங்கள் ஒரு மூணு கோடி இருக்கும்!

Tuesday, March 21, 2006

இந்த நாள் இனிய நாள் (ரியலி?)
பயண விவரம் பகுதி 7


இன்னியோட ஊருக்கு வந்து 9 நாளாயிருச்சு. பொழுது விடியறப்பவே மனசு குதியாட்டம் போட்டுச்சு, அதே சமயம் பெரு மூச்சும் வந்துச்சு. காரணம்? ம்ம்ம்ம்ம்........இருக்கே!


கோயிலுக்குப் போய் 'பெருமாள்' கிட்டே விஷயத்தைச் சொல்லிறலாமுன்னு போனோம். இன்னிக்கு ஒரு விசேஷம்( எனக்குத்தான்) இருக்குன்றதாலே அர்ச்சனை செஞ்சுறலாமுன்னு, அதுக்குன்னு விக்கறதை வாங்கிக்கிட்டு உள்ளெ போயாச்சு. கூட்டம்தான். ஆனாலும் பொறுமை காத்து நின்னோம். எங்க இவர் நீட்டுன அர்ச்சனைப் பையைப் பட்டர் வாங்குனார், அதுலே இருந்த தேங்காயை மட்டும் எடுத்து அங்கெ இருந்த ஒரு கூடையிலே (வழக்கம் போல்) கடாசுனார்.அதுலேயெ இருந்த தேங்காய் மூடிகளில்(ஏற்கெனவே உடைக்கப்பட்டிருந்தது) ஒண்ணை எடுத்துப் பையிலே போட்டார்.அப்புறம்? அதைத் திருப்பி இவரிடம் கொடுத்துட்டார். உள்ளே இருந்த பூவையோ, பழங்களையோ, குங்குமத்தையோ பார்க்கக்கூட இல்லை. பை, முந்தி இருந்தது போலவே இருக்கு,ஆனா முழுத்தேங்காய்க்கு பதில் அரைத்தேங்காய்!!!!! ஆச்சு அர்ச்சனை? யாருக்கு...?

தட்ஸ் இட். இன்னிக்குப் பூரா கோபத்துக்கு இடம் கொடுக்கக்கூடாதுன்னு காலையில் நினைச்சதுக்குப் பலத்த அடி.மண்டபத்துக்குள் போய் உக்காரலாமுன்னா அதையும் தடுத்து வச்சிருக்காங்க. வெளியே போறதுக்கு பின்னாலே வழியாத்தான் போகணும். எப்படியும் வெளியே போய்த்தானே ஆகணுமுன்னு அது வழியாப் போனா அது போய் ஒருக்யூவுலே சேருது. இப்ப எதுக்கு வரிசை கட்டி விடறாங்கன்னு முணுமுணுத்துக்கிட்டே நகர்ந்து போறொம். ஒரு பத்தடி தொலைவிலே ஒரு கவுண்ட்டர் திறந்திருக்கு, நமக்கு முன்னாலே இருக்கறவங்க எல்லாம் பரபரன்னு பாக்கெட்லே இருந்து காசை எடுத்துக்கிட்டு இருக்காங்க.


என்னன்னு விசாரிச்சப்பத் தகவல் கிடைச்சது. ஒவ்வொரு மாசமும் முதல் ஞாயிறுக்குத் திருப்பதியில் இருந்துஅர்சிக்கப்பட்ட லட்டு இங்கே வருமாம். அதை இங்கே பக்த கோடிகளுக்கு விற்பார்களாம். இன்னிக்கு மாசத்தின் முதல் ஞாயிறாம். அட்ரா சக்கை!


ஆங்....... 'அல்வா' குடுக்கறது கேள்விப்பட்டிருக்கேன். ஆனா சாமி இப்படி 'லட்டு' கொடுத்துட்டாரே! 'கரெக்ட்டாகாசு வச்சிருந்தா இந்த கவுண்ட்டர்லே வாங்க'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தார் ஒருத்தர். கரெக்ட்டுன்னா எவ்வளோ?10 ரூபாயாம் ஒரு லட்டு . சரி. எத்தனை தருவாங்களாம்? ஆளுக்கு ரெண்டு. நின்னது நின்னாச்சு, ரெண்டுபேருமே ரெண்டுரெண்டு வாங்கிரலாம்னு வாங்கிட்டோம். நமக்கு முன்னாலே வாங்குன மக்கள் முகத்தில் 'பார்த்தாலே ஒரு பரவசம் '.


'நீ சாமிக் கிட்டே கோவிச்சுக்கிட்டதுக்கு , உனக்கு ஸ்பெஷலா லட்டு குடுத்து விட்டுருக்கார் பாரு'ன்னு எங்க இவர்சொல்லிக் கலாய்ச்சார்.

''நாலு லட்டு, என்ன பண்ணப்போறே?"

நமக்கு இல்லாத உறவா, நட்பா? இவுங்களோடு பகிர்ந்துக்கலாமுன்னு சொன்னேன்.

நட்புன்னதும் ஞாபகம் வருது. இந்த ஒரு வாரமா நட்பு வட்டங்களொட ஃபோன் உரையாடல்தான். அருணா( அலைகள்) அடிக்கடிபோன் செஞ்சு நலம் விசாரிச்சுக்கிட்டே இருந்தாங்க. அவுங்களுக்கு 'திசைகள்' வேலை தலைக்கு மேலே கிடக்குது.ஆனாலும் அப்பப்ப நம்மளையும் நினைச்சுக்கிட்டாங்க. நம்ம ரஜினிராம்கி கிட்டேயும் கிருபாகிட்டேயும், ஒரு வலைப்பதிவாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வீங்களான்னு கேட்டதுக்கு 'நோ ப்ராப்ளம்'னு சொல்லிட்டாங்க. ஒரு ஞாயித்துக்கிழமையின்னா எல்லாருக்கும் வசதியா இருக்குமேன்னு சொன்னாங்க. அதுவுஞ்சரிதானே? அடுத்த ஞாயிறு ஃபிப்ரவரி 12 சரியாஇருக்கும். 19 ன்னா எங்க இவர் இருக்கமாட்டார். என் தம்பி தங்கைகளை இவரும் பாக்கணும் தானே?


அன்னிக்குப் பகல், இந்த நாளைக் கொண்டாடியே தீரணுமுன்னு அண்ணன் குடும்பத்தோடு வந்து 'ஹோட்டல் ரெஸிடன்ஸி'க்குகொண்டு போயிட்டார். பஃபே விருந்து. பழைய காலத்து இங்கிலாந்துலே இருக்கற ஒரு தெரு போல அலங்கரிச்சுஇருந்துச்சு அந்த ஹால். ஏராளமான சைவ, அசைவ உணவு வகைகள். 'டிஸ்ஸர்ட்' வகைகளும் ஏராளமா இருந்துச்சு.பால்பாயாசம் கூட இருந்துச்சுங்க. பிரியாணி வகைகள் எல்லாம் அருமை. ஒண்ணோடு ஒண்ணு ஒட்டாம உதிரி உதிரியாவும், அதே சமயம் நல்லா வெந்தும் மெத்துமெத்துன்னு இருந்துச்சு. அண்ணனோட மகளும் குடும்பத்தோட நியூ ஜெர்ஸியிலேஇருந்து வந்திருந்தது டபுள் சந்தோஷம். அவளோட கல்யாணத்துலே கூட கலந்துக்க முடியாமப் போச்சு.ஆச்சு 8 வருஷம். இப்ப என்னன்னா ரெண்டு குழந்தைகளோடு வந்துருக்கா.சாப்பாடு ஆனப்புறம் ஒரு சினிமாவுக்குப் போகலாமுன்னு நினைச்சா, குழந்தைங்க ( ஒன்னேகாலும், ரெண்டரையும்)சிணுங்குதுங்க. சரின்னு நாங்க ரெண்டு பேரு மட்டும் விடாகண்டனா அண்ணாசாலைக்குப் போனோம். 'தன்மந்த்ரா'ன்னுமலையாளப்படம். மோஹன்லால். ஆனந்த் தியேட்டர். கூட்டமான கூட்டம், சேச்சிகளும், சேட்டன்மாரும்! ஹவுஸ் ஃபுல்.


துணிந்த பின் மனமேன்னு எங்க இவர் 'கறுப்பு'லே டிக்கெட் கிடைக்குமான்னு ஆராய்ஞ்சார். ஒரு டிக்கெட் மட்டும் இருக்காம்.என்னதான் நாங்க ரெண்டுபேரும் ஒர் மனசுன்னாலும் ஓர் உடல் கிடையாதுல்லையா?(-:வேணாமுன்னுட்டு திரும்ப கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்தோம். ஒரு தெருவுலே திரும்புறப்ப 'டக்'னு கண்ணுலெ பட்டுச்சுஅந்த அறிவிப்புப் பலகை,'எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்'.


ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்! இன்னிக்கு இங்கேதான் போறொம். உள்ளே நுழைஞ்சவுடன் நம்ம காலணிகளை விட்டுவைக்கஒழுங்கு செஞ்சிருக்காங்க( இலவசம்)


ஹாலுக்குள்ளே நுழைஞ்சா அந்தக் காலத்துலே எம்ஜிஆர் பயன் படுத்திய கார். அதுக்குப் பக்கத்திலே நாலுபேர்நின்னு போஸ் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. ஒரு போட்டோக்காரர் அவுங்களைப் படம் புடிச்சுட்டு அவுங்க விலாசத்தையெல்லாம் கேட்டு எழுதறார். அப்புறம் அனுப்பி வைக்கவாம். மக்கள்ஸ் கண்களிலே தெரிஞ்சசந்தோஷம் உண்மையானதுன்னு 'டக்'னு புரிஞ்சு போச்சு.


நம்ம கேமெராவுலே படம் எடுத்துக்கலாமுன்னு கேட்டதுக்கு, 'கூடாது'ன்னுட்டார் அந்த போட்டோக்காரர்.அவரோட பிழைப்பு கெட்டுருமுல்லே?


எம்ஜிஆருக் கிடைச்ச பரிசுப்பொருட்கள், வெள்ளிவிழாக் கேடயங்கள், சினிமாவைத் தவிர அரசாங்க வாழ்க்கை மூலமா கிடைச்சதுன்னு ஏகப்பட்டதுகள் அழகா அடுக்கி, அததுக்கு விளக்கம் எல்லாம் எழுதிக் கண்ணாடி அலமாரிகளிலே இருந்தன.


சில பொருட்களைப் பார்த்ததும் 'அடடா.. இது ரொம்ப நல்லா இருக்கே. நமக்கும் ஒண்ணு கிடைச்சாத் தேவலையே'ன்னுஆசை வந்துச்சு. சும்மா சொல்லக்கூடாது, கலை அழகோடு கூடியவைகள்!


கீழே ஹாலைச் சுத்திப் பார்த்துட்டு மாடிக்குப் போனோம். அங்கே 'சதி லீலாவதி'யிலே இருந்து 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' வரை இவர் நடித்த படங்கள் எல்லாம் வரிசைக் கிரமமா ஸ்டில்ஸ்! நிறையப் படங்களைமிஸ் செஞ்சுருக்கேன் (-: நிறையப் படங்களில் 'அம்மா' இருக்காங்க.
அப்புறம் அவர் ஆஃபீஸ் ரூம், முக்கியமானவர்களைச் சந்திக்கும் ஹால்னு எல்லாம் பார்த்துட்டு கீழே வந்தோம்.


இதுக்கு முன்னாலே நான் போயிருந்த சில நாடுகளிலே அங்கத்து முக்கியஸ்த்தர்கள் வீடுகளை இப்படி நினைவகமாசெஞ்சு வச்சிருந்தது ஞாபகம் வந்தது. அதுக்கெல்லாம் எந்த வகையிலும் தரத்திலே குறையாம இங்கே நம்ம ஊருலேயும் வச்சிருக்கறதைப் பார்த்து கொஞ்சம் திருப்தியாவே இருந்துச்சு.


என்னதான் சொல்லுங்க, 'சாதாரண நடிகனா ஆரம்பிச்ச வாழ்வு, தமிழ்நாட்டின் பெரிய பதவியிலே வந்து முடிஞ்சது'ன்றதுகொஞ்சம் பிரமிப்பாத்தான் இருந்தது. அதெ எண்ணத்துலே இந்த 'ஸ்டில்ஸ்'லே ஜெயலலிதா ( அந்தக் காலத்துலேஎன்னோட ஃபேவரைட் நடிகைகளிலே ஒருத்தர்)வைப் பார்க்கும் போதும், தான் இப்படி முதன் மந்திரியாகி இத்தனைபேரை அடிபணிய வைக்கப்போறோமுன்னு நினைச்சுக்கூடப் பார்த்திருப்பாங்களா?ன்னு தோணுச்சு.


ஒன்னரை மணிநேரம் போனதெ தெரியலை. வெளியே வந்தா அப்பதான் வந்து நின்ன டூரிஸ்ட் பஸ்ஸுலே இருந்து திமுதிமுன்னுஜனங்கள் இறங்குறாங்க, முகத்தில் சந்தோஷம் கொப்புளிக்க.


சாயங்காலம் வேற என்ன செய்யலாமுன்னு தினசரியிலே தேடுனா..ஆஆஆ....ஆப்டுடுச்சு.


'நடன அரங்கேற்றம். கே.ஜே.சரசாவின் மாணவிகள். அனைவரும் வருக. '

இதோ, வந்துட்டோம். இடம் வாணி மஹால்.

இங்கே எங்க தமிழ்ச்சங்கத்துலே நடனம் பயில்கிற பிள்ளைகளுக்கு பயன்படுமுன்னு நினைச்சு ஒரு எட்டு டிவிடி இருக்கற ஒரு செட், பரதநாட்டியம் அறிமுகம்னு வாங்கியிருந்தோம், அதுலே பாருங்க ஒருவெள்ளைக்காரப் பெண்மணி எட்டு வெவ்வேற நடன ஆசிரியர்களை பேட்டி எடுக்கறாங்க. எல்லோருக்கும்ஒரே மாதிரியான கேள்விங்கதான். இதுலே அவுங்க ஒவ்வொருத்தரும் அவுங்கவுங்க பள்ளியிலே இருக்கற மாணவ மாணவிகளை வச்சு 'டெமோ' கொடுத்துருந்தாங்க.


தனஞ்செயன் சாந்தா, கலாக்ஷேத்திரா, கெ.ஜெ.சரசான்னு எல்லாம் பெரியபெரிய ஆளுங்க. இதுலே மத்தவங்கஅந்த வெள்ளைக்காரப் பெண்மணிக்குப் புரியணுமுன்னோ என்னவோ ஆங்கிலத்துலெயே பதில் சொல்லிக்கிட்டுஇருந்தாங்க. ஆனா நம்ம சரசாம்மா மட்டும் தமிழிலே பதில் சொன்னது மட்டுமில்லாம நல்லா 'டாண் டாண்'னுபொட்டுலே அடிச்சமாதிரி விஷயத்தை விளக்கியும் சொன்னாங்க. இதைப் பார்த்தது முதல் எனக்கு 'சரசா'ம்மா மேலேஒரு அன்பும் அன்னியோன்னியமும் ஏற்பட்டுப் போச்சு. நான் எல்லாம் 'சரசா'ம்மாவை நம்ம 'ஜெயா'ம்மா வோட டான்ஸ் டீச்சர்ன்ற வகையில் மட்டுமே தெரிஞ்சு வச்சிருந்தேன்.


எங்களுக்கு இந்த பாட்டு, நடனம், நாடகம் எல்லாம் ரொம்ப ஆசை. ஒரு வருஷமாவது இந்த டிசம்பர் மாச மியூஸிக் சீஸன்சமயம் ச்சென்னைக்கு வந்து கச்சேரிகள், நடனங்கள் எல்லாம் போகணும்னு தீராத மோகம் இருக்கு. ஆனா நமக்குவாய்க்க வேணாமா? அது போட்டும், வெளிநாடெல்லாம் இந்த 24 வருசமாத்தானே? அதுக்கு முன்னே இந்தியாலே இருந்தப்பமெட்ராஸ்க்குப் போய் பார்த்திருக்கக்கூடாதான்னு நினைச்சீங்கன்னா, அப்ப ஏதுங்க ஐவேஜு? நம்ம நிதி நிலமைபடு பாதாளத்துலே இல்லே கிடந்துச்சு.


இப்படி இருந்த நேரத்துலே கே.ஜே.சரசாவின் மாணவிகள் நடனம்னு தெரிஞ்சதும் 'ச்சலோ'ன்னு புறப்பட்டாச்சு. வாணிமஹால் எங்கே இருக்குன்னு கூடத் தெரியாது. அதுக்காக விட்டுற முடியுமா? வாயிலே இருக்கு வழி.அங்கெ போய்ச் சேர்ந்தா, கீழே படிக்கட்டுலே உக்காந்திருந்த ஒருத்தர், மாடிக்குப் போங்கன்னு சொன்னாங்க.மாடியிலே ஒரு அழகான ஆடிட்டோரியம். ஒரு 200 பேர் உட்கார வசதி இருக்குன்னு நினைக்கறேன். ஆனா இப்ப ஒரு இருபது பேர் இருந்தா ஜாஸ்தி! மேடையில் பதினேழு வயசு ( இருக்கும்) பொண்ணு ஆடிக்கிட்டு இருக்கு.ஜதி சொல்லிக்கிட்டு இருக்கறது யாருங்கறீங்க? சாக்ஷாத் சரசாம்மாவேதான், கலைமாமணி கே.ஜே.சரசா!வயசு எம்பதுக்கு மேலே ஆயிருச்சாம். ஆனா அந்தக் குரல், இன்னும் கணீர்னுதான் இருக்கு. விஜயலக்ஷ்மினு ஒருத்தர் பாடறாங்க. இவுங்களும் கலைமாமணி விருது வாங்குனவங்களாம். குரலழகுக்குக் கேக்கணுமா?


ரொம்பக் கவனமெடுத்து ஆடுதுங்க, அந்தப் பொண்ணு. ச்சும்மா சொல்லக்கூடாது. அருமையான நடனம். 'ஆமாம்,உனக்கு டான்ஸ் பத்தி ரொம்பத் தெரியுமாக்கும்?'னு கேக்க மாட்டீங்கதானே? ஊரூராப் போய்க்கிட்டிருந்த ச்சின்னவயசு வாழ்க்கையிலே போற ஊர்லே எல்லாம் 'டான்ஸ் டீச்சரை'த்தேடிப் பிடிக்கறதும், அடுத்த வருசம் இதேபோல இன்னொரு ஊர்லே தேடறதும்னுதான் தொடர்கதையா ஆயிருச்சேங்க. ஆனா அதுக்காகக் கலையை ரசிக்கத் தெரியாமப் போயிருமா?பாட்டு கத்துக்கிட்ட கதையை இன்னொருநாள் சாவகாசமாச் சொல்றேன்:-)


ஒருமணி நேர ஆட்டத்துக்குப் பிறகு, இன்னொரு பொண்ணு ஆட வந்து அருமையா ஆடுனாங்க. இதுக்கு நடுவிலே கலைஞர்களின் அறிமுகம் ஆச்சு. சரசாம்மா எல்லோரையும் அரவணைச்சும், தட்ட வேண்டிய இடங்களில் தட்டிக்கொடுத்தும்,குட்ட வேண்டிய இடங்களில் தலையிலேகுட்டியும் பேசுனாங்க. ரெண்டாவதா ஆடுனவங்களுக்கு 20 வயசாம். இஞ்ஜிநீயரிங்படிக்கிற மாணவியாம். மொதல்லெ ஆடுனவுங்களும் கல்லூரியிலே மொத வருசம் டிகிரி வகுப்பாம்.நல்ல பிள்ளைங்க. படிப்போட விட்டுறாம, கலைகளும் படிக்கறாங்கல்லே? நல்லா இருக்கட்டும்! கலை சம்பந்தப்பட்டஇரண்டு பிரமுகர்கள் ,மாணவிகளைப் பாராட்டிப் பரிசு கொடுத்தாங்க.


நிகழ்ச்சி நடந்துக்கிட்டு இருக்கப்பவே நமக்கு முன்னாலே வரிசையிலே இருந்தவர் ஒரு நோட்டுப் புத்தகத்தில்அப்பப்ப விறுவிறுன்னு எழுதிக்கிட்டு இருந்தார். 'சுப்புடு'வோன்னு சந்தேகத்தோடு பார்த்தோம்:-) இடைவேளையில்எங்க இவர், அவர் பக்கத்துலெ போய் உக்கார்ந்துக்கிட்டுப் பேச்சுக் கொடுத்தப்ப விஷயம் தெரிஞ்சது. அவர் ஒருதெலுங்கு பத்திரிக்கைக்காக விமரிசனம் எழுதிக்கிட்டு இருக்காராம். நடனம் எப்படின்னு கேட்டதுக்கு நல்லாவேஇருக்குன்னும் சொன்னார். ஏதோ நாந்தான் அந்தப் பொண்களோட அம்மா மாதிரி, 'அப்பாடா'ன்னு இருந்துச்சு.


அரங்கேற்றத்துக்கு நிறைய செலவு செஞ்சுருக்காங்க போல. 'லைவ் ம்யூசிக்' பார்ட்டி ரொம்பக் கவனமாத் தெரிஞ்செடுக்கப்பட்டவங்களாம். மேக்கப் ஆர்டிஸ்ட், அரங்க வாடகை, உடுப்பு, அலங்கார நகைகள்னு நிறையத்தான் ஆயிருக்கும். ரெண்டு பேர் என்றதாலே செலவைப் பகிர்ந்துக்கிட்டாங்களாம். எங்கியாவது போனமா, பார்த்தமா,வந்தமான்னு இருக்குற ரகமா நானு? வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியுதா?


நேரமாக ஆக கொஞ்சம் கொஞ்சமா மக்கள்ஸ் வந்து அரங்கம் ஏறக்குறைய நிரம்பிருச்சு. கிளம்பி வரும்போதுஎன் பிறந்தநாள் இவ்வளவு இனிமையா, பல்வேறு அனுபவங்களால் சந்தோஷமா அமைஞ்சதுக்குக் கடவுள்கிட்டே நன்றி சொல்லிக்கிட்டே ( எல்லாம் மனசுக்குள்ளேதான்!) மணி பத்தரை ஆயிருச்சே, சரவணா இன்னேரம் திறந்திருக்குமான்ற'கவலை'யோட ஆட்டோவில் ஏறுனோம். ஹூம்... ஒருவேளை உணவை ஒழி என்றால் ஒழியாய்......

Sunday, March 19, 2006

நம்பிக்கையின் புகைப்படங்கள்

வகுப்பில் முதல் மாணவி 'தமிழரசி'

நம் செல்லக் கண்மணிகளுடன் கட்டுரை ஆசிரியை:-))

சந்தோஷ் & நளினி குடும்பம்

பட்டுப் போன்ற குழந்தைகளில் சிலர்

என் புலம்பலைப் பார்த்து

ப்ளொக்கருக்கெ பாவமாயிருச்சு போல.

படங்களைப் போட்டுக்கோன்னு சொல்லிருச்சு.

நன்றி ப்ளொக்கர்!

நம்பிக்கைதான் வாழ்க்கையா?

பயண விவரம் பகுதி 6


குஷ்டரோக வியாதியஸ்தர்களுக்கு சேவை செய்யற மிஷன்லே சேர்ந்து, அதன்காரணமா தமிழ்நாட்டுப் பக்கம்வந்துட்ட இவுங்க ரெண்டு பேரும் 'ஆதி'யிலே பெங்களூருவைச் சேர்ந்தவுங்க. அங்கே 'பிபிஎல்' கம்பெனியிலே வேலை செஞ்சுக்கிட்டு இருந்த கேரளத்துக் கொல்லம் சந்தோஷ், கர்நாடகாவைச் சேர்ந்த நளினியை( இவுங்க டீச்சர்)க் காதல் மணம் செஞ்சுகிட்டவர். ஏதோ ஒரு நிமிஷத்துலே 'டக்'ன்னு முடிவு செஞ்சு வேலையை விட்டுட்டுஇந்த மிஷன்லே சேர்ந்துட்டாங்க. இது நடந்து ஒரு ஒம்போது வருசமாச்சு.


இங்கே ச்சென்னைக்கு வந்தப் பிறகு தாம்பரம் டி.பி.சானடோரியத்துலே வேற யாரையோ பார்க்கப்போக, அங்கே 'போற இடம் தெரியாம' தவிச்சுக்கிட்டு இருந்த எய்ட்ஸ் நோயாளிகளோடு ஒருவித இரக்கம் ஏற்பட்டு, அவுங்களுக்கு எதாவது செய்யணுமுன்னு 'ஹோப் பவுண்டேஷன்'கூடச் சேர்ந்து இப்ப ஒரு சேவை மையம் நடத்திக்கிட்டு இருக்காங்க.


கிராமத்துலே இருந்து வியாதி( என்னன்னு தெரியாமலேயே) பிடிச்சு டி.பி. ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ற ஜனங்களிலே 78% திரும்பப்போக வழி இல்லாமப் போயிருது. உறவினர்கள், சிலசமயம் சொந்தப் பெற்றோர்கள் கூட இவுங்களைத் தள்ளி வச்சுடறாங்களாம்.மூணுமாசம்,ஆறுமாசம் சிகிச்சைக்குப் பின்னே நோய் ஓரளவுக்குக் கட்டுப்பட்டாலும்....... ஆஸ்பத்திரியோ காலம் பூராவும் வச்சுக்காது.


இதுலே ஆம்பிளைங்க அங்கெ இங்கேன்னு இடம்மாறிப் போயிடறாங்க. சிலர் தெருக்களிலே பிச்சை எடுத்து வாழறாங்க. பெண்களுக்கோ இதுலே 'வேற'மாதிரி தொல்லை. இதுலே பலரும் ரொம்ப இளவயசுப் பெண்கள், கேக்கணுமா?


மொதல்லே ஓரளவு குணமான இவுங்களைத் தங்க வைக்க வீடு வாடகைக்கு எடுக்கவே தலையிலே தண்ணி குடிச்சுட்டாங்களாம்.அக்கம்பக்கத்து ஆட்கள் ஒரே புகார். எல்லாத் தடைகளையும் காவல்துறை உதவியோடு(!) சமாளிச்சு மொதல்லே ஏழு பேரோடஇந்த ஹோமை ஆரம்பிச்சிருக்காங்க. அப்புறம் அவுங்க குழந்தைங்களையும் சேர்த்துக்கிட்டாங்க. அந்தப் பிள்ளைகளைத் தத்துக்கொடுக்கலாமுன்னா, 'ஹெச் ஐவி பாஸிட்டிவ்' இருக்கற குழந்தைகளை யாரு எடுத்துப்பாங்க?


மொதல்லே கொஞ்சம் குணமான பெண்கள் திரும்ப நோய்வாய்ப்பட்டு இறக்கவும், அவுங்க பிள்ளைங்க அநாதைங்களா ஆயிருச்சுங்க.சொந்தக்காரர் யாரும் சட்டையெ செய்யறதுல்லை. வேணாம்னே சொல்லிடறாங்களாம். பாவம், அந்தப் பிஞ்சுங்க.செய்யாத தவறுக்கு தண்டனை(-:


சரியான பராமரிப்பு , மருந்து, சாப்பாடுன்னு பலதுக்கும் பணம் வேண்டியிருக்கே.ஆனா எப்பவும் பத்தாக்குறைதான்.அதுலெயும் ச்சின்னக்குழந்தைகள் இறப்பு நிறையவே இருந்துருக்கு. கொஞ்சம் குணமான பெண்களுக்கு இந்தக் குழந்தைகளை பாத்துக்க, நேரத்துக்கு மருந்து கொடுக்கன்னு பயிற்சி கொடுத்துருக்காங்க. ஓரளவு விவரம்தெரிஞ்ச புள்ளைங்களுக்கும் எந்த மருந்து எப்பெப்ப சாப்புடணும், ஓடி விளையாடறப்ப கீழே விழுந்து அடிகிடி பட்டுட்டா உடனே என்ன செஞ்சுக்கணுமுன்னெல்லாம் நல்லாச் சொல்லிக் கொடுத்துருக்காங்க.


பெண்களுக்கு தையல் வேலை, சில கம்பெனிகளில் சின்னச்சின்ன வேலைன்னு தேடிக் கொடுத்துருக்காங்க.கொஞ்சம் பொருளாதார நிலையில் சமாளிக்கத் தெரிஞ்ச பெண்கள் தனியா வீடு எடுத்தும் வசிக்க ஆரம்பிச்சிருக்காங்க.பெண்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்த்து, அவுங்க காலுலேயே நிக்க வைக்கிற முயற்சியிலே ஓரளவு வெற்றியும்கிடைக்க ஆரம்பிச்சிருக்கு.


சமீபத்துலே ஒரு 21 வயதுப் பொண்ணுக்கும் இதே நிலைமையிலே இருந்த 25 வயது இளைஞருக்கும் நடந்த கல்யாணம்தான்இந்த 'ஹோம்' லே நடந்த முதல் கல்யாணம்.


ஒவ்வொரு பிள்ளைக்கும் மாசம் 2000 ரூபாய் மருந்து செலவு மட்டுமே. இப்பக் கணக்குப் போட்டுப் பாருங்க 23பிள்ளைங்களுக்கு எவ்வளோ ஆகுமுன்னு?அரசாங்கம் கொடுக்கற நிதி கிடைக்குதுதானாம். ஆனாலும் அது எந்த மூலைக்கு?


இவ்வளோ காசை எப்படி சேர்க்கப் போறொமுன்னு, அதுவும் மாசாமாசம் கவலை பிடுங்கித் தின்னுக்கிட்டு இருந்த நிலமை இப்பக் கொஞ்சம் சீர் அடைஞ்சிருக்கு. உலக சுகாதார மையம் இப்ப உதவி செஞ்சு மருந்துங்களை இலவசமாக் கொடுக்குதாம்.


ஆனா தலைவலி போனாத் திருகுவலி வந்துச்சுன்னு சொல்றது மாதிரி இப்ப இன்னொரு கவலை வந்து சேர்ந்திருக்கு.அது என்னன்னா இந்த வியாதியிலே இறந்துட்டவங்களை கடைசி யாத்திரைக்கு அனுப்பறது. ஆஸ்பத்திரியிலேயே இறந்து போனவங்களை, அவுங்க குடும்பத்துக்குத் தகவல் சொல்லி அனுப்புனாலும் யாரோ ஒருத்தருக்குத்தான் உறவுங்க கையாலே கொள்ளி கிடைக்குதாம். அப்ப மத்தவங்களுக்கு?


"என்னக்கா செய்யறது? அப்படியே விட்டுற முடியுதா? அரசாங்கம் கேட்டுக்கிச்சேன்னுதான் செய்ய ஆரம்பிச்சேன்."


" ஏன், அவுங்க உங்களைக் கேட்டாங்க? "


" 'ஹோம்'க்கு நிதி உதவறாங்களே. அப்ப ஒரு சந்தர்ப்பத்துலே கேட்டாங்க. நானும் சரின்னுட்டேன். இப்ப ..."

" அப்படியா? எவ்வளோ செலவாகுது?"

" ஒருத்தருக்கு 1200 ரூபாய் ஆகுதுக்கா. அதுலே அரசாங்கம் 800 தருது. பாக்கியை நாங்களே போடறோம்.அதுவும் அந்தக்காசு உடனே கிடைக்காது. அது பாஸ் ஆகி வர நாள் செல்லும்"

" அரசாங்க இயந்திரம்? எண்ணெய் ரொம்பப் போடணும்.இல்லே?"

" ஆஸ்பத்திரியிலே மார்ச்சுவரியிலே இருந்து உடலை எடுத்து வெள்ளைத்துணி சுத்தித் தயார் செஞ்சு கொடுக்கவும்அங்கத்து ஆட்களுக்கு காசு வெட்டணும். அதுக்கப்புறம் உடலை மின்சார மயானம் கொண்டு போகணும். அங்கேயும்மூங்கில் முளை கட்டி, உடலை வைக்கவும் இன்னும் சில சில்லரை செலவுமுன்னு ஆகிருது. அதைச் செய்யன்னுஅங்கெ இருக்கறவங்களுக்குக் காசு கொடுத்தாத்தான் வேலையே ஆகுது."

"அடிக்கடி மரணம் நடக்குதா?"

"மாசத்துக்கு எப்படியும் 20 ஆகிருது."

"எப்படிக் கொண்டு போறீங்க?"

" இப்ப சமீபத்துலே ஒரு பழைய மாருதி வேன் வாங்கியிருக்கோம். ட்ரைவர் எப்ப வேணுமோ அப்ப சொல்லிட்டா வந்துருவார். அவருக்கு அன்னைக்கு மட்டும் சம்பளம் கொடுத்துருவோம். மொதநாளே சொல்லிருவோம். காலையிலே அஞ்சு மணிக்கு ஆஸ்பத்திரிக்குப் போய் உடலைத் தயார் செஞ்சு எடுத்துக்கிட்டு 6 மணிக்கு முன்னாலேமயானம் போயிரணும். நேரமாயிருச்சுன்னா விஷயம் பரவிடும்."


மனுஷனோட கடைசிப் பயணம்ன்றது எவ்வளவு முக்கியம்? ஒரு 'டீசெண்ட்டான எக்ஸிட்' வேணுமா இல்லையா?

கத்ரீனா ஆடிட்டுப் போனப்பறம் மொதந்த உடல்களை டிவி யிலே பார்த்தது ஞாபகம் வந்துச்சு.

'அக்கா, நீங்க இந்தியா வரப்போறிங்கன்னு மலர்விழி (Director-Women and Children Program) சொன்னாங்க.சரியான தேதி தெரியலைன்னாங்க. வாங்கக்கா, ஹோமுக்குப் போய் புள்ளைங்களைப் பார்க்கலாம்' சொன்னது நளினி( ஹோப் ப்ரோக்ராம் கோ ஆர்டினேட்டர் & கேர் கிவர்)

மூணு வருசத்துக்கு முன்னாலெ அவுங்களை மொத மொதல்லெ சந்திச்சப்பவும் இப்படிக் கூப்புட்டாங்கதான்.ஆனா, எனக்கு அவ்வளோ மன தைரியம் கிடையாது. ரொம்ப முடியாம மரணப்படுக்கையிலெ இருக்கும் குழந்தையை என்னாலெ எப்படிப் பார்க்க முடியும்? நானும் அழுது அரட்டிருவேனே. அப்ப நான் தனியாப் போயிருந்தேன், எப்படியோ சால்ஜாப்பு சொல்லித் தப்பிச்சுட்டேன். இப்ப எங்க இவர் வேற இருக்கார். இவருக்கும் மனசு தாங்காது.இப்ப என்ன சொல்லலாமுன்னு யோசிச்சது நளினிக்குப் புரிஞ்சு போச்சு போல.


"பிள்ளைங்கெல்லாம் இப்ப நல்லா இருக்காங்கக்கா. இந்த ரெண்டு வருசமா ஒரு மரணம்கூட நடக்கலை."

'அம்மாடி, வயித்துலே பாலை வார்த்தேம்மா'ன்னு நினைச்சுக்கிட்டுச் சரின்னு கிளம்புனோம்.

மாடி வீடு. தனிவீடுதான். நாங்க போன சமயம் சிலர் விளையாட்டு, சிலர் தூக்கம், சிலர் வீட்டுப்பாடம்னுஇருந்தாங்க. ஆறு பிள்ளைங்க பள்ளிக்கூடம் போறாங்க. இவுங்களைப் பத்தின விவரம் அந்த ஸ்கூல்தலைமைக்கு மட்டுமே தெரியும். விஷயம் பரவுனா மற்ற பிள்ளைகளோட பெற்றோர்களின் எதிர்ப்பு வரும்என்ற பயம். பிள்ளைகளுக்கு நல்ல பயிற்சி கொடுத்து வச்சிருக்காங்க. இவுங்கள்ளே ஒரு குழந்தை வகுப்பிலேயேமுதல் மாணவி. பேரு தமிழரசி.
'வாங்க பசங்களா'ன்னு கூப்புட்டவுடனெ எல்லோரும் ஓடிவந்து சூழ்ந்துக்கிட்டாங்க. ச்சின்னப் பிஞ்சுங்க எல்லாம்,பார்க்கவே ச்செல்லம் போல இருந்துச்சுங்க. ஒருத்தர் மட்டும் (9 வயசு) பத்து நிமிஷம் லேட்டா வந்தார். பார்த்தவுடனேதெரிஞ்சது காரணம். முகம் கழுவித் தலை வாரி, பவுடர் அடிச்சுக்கிட்டு( நிறைய) வர நேரம் ஆகாதா?


இவுங்களுக்குக் கொடுக்கற மருந்தோட வீரியம் கூடுதல். அதுகாரணமா கொஞ்சம் தோல் சொரிச்சல், நமைச்சல்எல்லாம் பலர்கிட்டே இருக்குது. மருந்து சாப்பிட்ட நாளில் இன்னும் கூடுதலாம். 'இன்னிக்குப் பரவாயில்லை'ன்னு சொல்லுச்சுங்க பசங்க

.
'பிள்ளைகளுக்கு ஒண்ணும் வாங்கிவரலையே'ன்னு எங்களுக்கு ஃபீலிங்கா இருந்துச்சு. இங்கே வர்ற ப்ளான் இல்லைதானே?நளினிகிட்டே ஒரு தொகையைக் கொடுத்து எதாவது வாங்கித்தரணுமுன்னு கேட்டுக்கிட்டேன். 'என்னென்னு நீங்களேசொல்லுங்கக்கா'ன்னாங்க. கொஞ்சம் யோசிச்சுட்டு, எல்லோரையும் ஒரு நாள் அவுட்டிங் கொண்டு போய் நல்ல ஹொட்டலிலே சாப்பிட வையுங்க'ன்னு சொன்னென். பசங்களுக்கு அப்பவே 'பிக்னிக்'போற சந்தோஷம் ஒட்டிக்கிச்சு.


ச்சும்மா ஒரு 500 ரூபாயில் ஆரம்பிச்ச உறவு. இப்ப மற்ற நிறுவனங்களுக்குக் கொடுத்துக்கிட்டு இருந்ததை நிறுத்திட்டு இவுங்களுக்கே கொடுக்கறதாலே கணிசமாக் கொடுக்க முடியுது. மற்ற இடங்கள்? அவுங்க ஏற்கெனவே நல்லாஎஸ்டாப்ளிஷ் ஆயிட்டாங்க. அங்கெ பிள்ளைகளும் ஆரோக்கியமானவுங்கன்னு மனசுக்குச் சமாதானம் சொல்லிக்கிட்டேன்.


இப்ப சந்தோஷ், இந்த நோய் தடுப்பு முறை, எப்படி வராம பாதுகாத்துக்கலாம்ன்ற விழிப்புணர்வு ப்ரோக்ராம் வெவ்வேற ஊர்களில் போய் கேம்ப் போட்டு நடத்தறார். இவுங்களுக்குத் தெரிஞ்சு 5 லட்சம் கேஸ் கவனத்துக்கு வந்திருக்காம்.


இப்பவும் அரசாங்கம் அறிவிச்சிருக்கற '10 ரூபாய் கட்டி நோய் இருக்கா இல்லையான்ற பரிசோதனை' ரொம்பவும்நல்லதுன்னு சொன்னார். அதான் தமிழ் டிவி சானல்லே கிளி சீட்டு எடுத்துக் கொடுக்குதே அது:-)


பின் குறிப்பு: இந்த விஷயங்கள் அடங்கிய சந்தோஷ்-நளினி தம்பதியரின் பேட்டியை 'திசைகள் -பிப்ரவரி' இதழுக்குத்தருவதாக நம் அருணாவிடம் கூறியிருந்தும், சிலபல காரணங்களால் குறிப்பிட்ட நேரத்தில் எதுவும் செய்யமுடியாமல் போய்விட்டது.அதற்காக நம் 'அலைகள்' அருணாவிடம் மன்னிக்க வேண்டுகின்றேன்.


பின் குறிப்பு 2: ப்லொக்கர் சொதப்புவதால் நிறைய படங்கள் இருந்தும் இங்கே போட முடியாத நிலை(-:

Friday, March 17, 2006
என்ன தவம் செய்தனை.....


பயண விவரம் பகுதி 5


இந்தப் பயணத்துக்கு ஒரு முக்கிய நோக்கம் இருந்துச்சுன்னாலும், தினப்படி என்ன செய்யப்போறொம்னெல்லாம்திட்டமுன்னு ஒண்ணும் போட்டுக்கலை. அன்னன்னைக்கு எப்படி வருதோ அப்படி!


'ஆதத் சே மஜ்பூரி'ன்னு சொல்றதுபோல மனுஷன் பழக்க வழக்கத்து அடிமையாயிடறான் இல்லே?தமிழ்மணம்பாக்காம நான் எப்படி இருக்கப்போறேனோன்னு எங்க இவருக்கு ரொம்பக் கவலை. பழக்கம் தப்பிட்டா தலை திரிகிபோகுமு( பைத்தியம் புடிச்சிரும்)ன்னு நினைச்சுக்கிட்டு, அவரோட மடிக்கணினியிலே கலப்பையை இறக்கிவச்சுக்கிட்டார். நம்ம அதிர்ஷ்டம் பாருங்க, நாம் தங்குன இடத்துலே இருந்த ஃபோன் கனெக்ஷனை எடுத்துட்டுருக்காங்க. 'அதான்எல்லார் கையிலும் செல் வந்துருச்சேங்க'ன்னு பதில் வருது. இல்லை, இது வேலைக்காகாது. ஃபோன் லைனை மறுபடிபோடுங்கன்னு சொல்லிட்டோம்.


கணினி மையத்துலே போய்தான் மெயில் பாக்கறது, அனுப்பறதுன்னு நாள் போய்க்கிட்டு இருக்கு. ஒரு ஃபோன் லைன்கனெக்ஷன், அவுங்க கணினிக்குப் பதிலா எங்க லேப்டாப்புக்குக் குடுங்கன்னு கேட்டதுக்கு, கணினிமைய உடமையாளர் ஏதோஅவர் மையத்தையே கேட்டுட்டாப்போல திகைச்சு நின்னுட்டார். சரி, அவருக்கு ஏன் தொல்லைன்னு பேசாம இருந்துட்டோம்.
அன்னிக்குச் சனிக்கிழமை. ஊர் வந்து எட்டு நாளாச்சு. தமிழ்மணம் பார்க்காத எட்டு நாட்கள்! வெற்றிகரமாச் சமாளிச்சுக்கிட்டு இருக்கேன்.எங்க இவருக்குத்தான் பயம். 'வித்ட்ராயல் சிம்ப்ட்ம்ஸ்' இருக்கான்னு கவனிச்சுக்கிட்டு இருக்கார். இன்னமும் 'கோல்ட் டர்க்கி'வரை போகலைன்றது ஒரு நிம்மதி. சனிக்கிழமைன்னதும் கோயிலுக்குப் போகணுமுன்னு நினைப்பு வந்தது. எனக்கு இதுலேயும் ஒரு 'ஆதத்' இருக்கு, எல்லா சனிக்கிழமையும் கட்டாயமாக் கோயிலுக்குப் போகணும். இந்தியா வந்தமுன்னா எக்ஸ்ட்ராவா தினமும் ஒரு கோயில்னு போறதுதான்.


வெங்கடநாராயணா சாலையிலே திருப்பதி தேவஸ்தான கோயில்லே சனிக்கிழமைன்னா கூட்டம் எக்கச்சக்கம். எல்லாரும் நம்மளைப் போலவேஆயிட்டாங்க போல! அவுங்களை ஒழுங்குபடுத்த கயிறுகட்டி, வரிசை உண்டாக்கின்னு ஏக அமர்க்களம். இது நமக்குச் சரிப்படாது. வேற எதாவது கோயிலுக்குப்போகலாம், எல்லா சாமியும் ஒண்ணுதானேன்னுட்டு, கோபதி நாராயணசாமி சாலையிலே இருக்கற ஜெயின் கோயிலுக்குப் போனோம்.


தெருவைப் பாக்காம கொஞ்சம் பக்கவாட்டுலே திரும்பி இருந்த பெரிய கேட்டைத் திறந்துக்கிட்டு உள்ளெ போனா....பிரமாண்டமான ஐராவதம் ரெண்டு,எதிரும் புதிருமா! ரெண்டுக்கும் நடுவிலே படிக்கட்டுங்க. ஒரு ஏழெட்டு இருக்கும்.பெரிய கூடம்.சுவத்தோரமா மூணு சந்நிதிங்க. கூடத்துலே ச்சின்னமேடையிலே ஒரு விக்கிரஹம். மூணு மார்வாடிப்பெண்கள். முகத்தை மறைக்கும் முக்காடு. அதிலே ரெண்டுபேர் விக்கிரஹத்துக்கு அபிஷேகம் செய்யறாங்க. ஒருத்தர்தரையிலே உக்காந்துக்கிட்டு கையிலெ இருக்கற பெரிய தட்டுலே இருந்து அபிஷேகப் பொருட்களை ஒவ்வொண்ணாஎடுத்துக் கொடுக்கறார். ச்சின்னக் குரலில் எதோ பாட்டும் பாடிக்கிட்டே இருக்காங்க.


நாமோ, இந்தக் கோயிலுக்குப் புதுசு. இவுங்க பூஜை முறைகள் ஒண்ணும் தெரியாது வேற.அதனாலே யாரையும் தொந்திரவு செய்ய வேணாமுன்னு நினைச்சுப் பேசாம பளிங்குத் தரையிலே உக்கார்ந்து கொஞ்ச நேரம் தியானம்(!) செஞ்சோம். அப்புறமா அந்தக் கோயிலை வலம் வரலாமுன்னு( நோஸி?) வந்தோம். படு சுத்தமா இருந்துச்சு. பின்னாலே ஒரு பெரிய ஹால் அப்புறம், பக்கவாட்டுலேயும் ( மெயின் ரோடைப் பார்த்தாமாதிரி)இன்னொரு ஹால். அவுங்க சம்பந்தப்பட்ட விசேஷங்களுக்கு பயன்படுதாம். நல்ல ஐடியா இல்லே? கோயில் வெளி வராந்தாவுலே ஒரு சந்தனம் அரைக்கிற ச்சின்னக் கல். அரைச்செடுத்த சந்தனம் கொஞ்சூண்டு ஒரு கிண்ணத்துலே,அதை இட்டுக்க ஒரு குச்சியும், முகம் பார்க்கும் கண்ணாடியும். கோணாமாணான்னு நெத்தியிலே இட்டுக்காமஅழகா அளவா இட்டுக்க முகம் பார்க்கும் கண்ணாடி. பேஷ் பேஷ். ( திருப்பதி தேவஸ்தான கோயில்லேயும் ஒரு பெரீய்ய்ய்ய்ய்ய கண்ணாடி இருக்கு, கவனிச்சீங்களா?) கேமெரா எடுத்துக்கிட்டு போகலையேன்னு வருத்தமா இருந்துச்சு. ஆனா போனவாரம் நம்ம 'கபாலி'யைக் கண்டுக்கினு வர்றப்ப அப்படியே குளத்துலே எட்டிப் பார்த்தாஆச்சரியமாப் போச்சு, குளம் நிறையத் த்ண்ணியும், துள்ளிக் குதிக்கும் மீன்களும்! உடனே மீனுக்குப் போடன்னபொரி வியாபாரம் அமோகமா நடக்குது. நானும் வாங்கிப்போட்டேந்தான். ஆனா மீன்கள் பாவம். பொரியே தின்னு போரடிச்சு கிடக்குதுங்க.எங்க இவர் சில இடங்களுக்குப் போகணுமுன்னு சொன்னதாலே, ட்ராவல்ஸ்லே ஒரு கார் எடுத்துக்கிட்டுக் கிளம்புனோம்.வேளச்சேரி எல்லாம் கடந்து தாம்பரம் போற ரோடு. அங்கே இருந்து கிளை பிரியும் ரோடுலே போறோம். புது கட்டிடங்கள் ஏராளமாக் கட்டிக்கிட்டு இருக்காங்க. பல அடுக்குமாடிகள். ஆனா வெனிஸ் ஞாபகம் வந்துச்சு.போனவெள்ளத்தோட மிச்சங்கள் இன்னும் இருக்கு. சில இடத்துலே எல்லாம் பச்சையா பாசி பிடிச்சுத் தேங்கிக் கிடக்குது.அதுக்கு அடியிலே இருக்கும் தரை விற்பனைக்கு! எனக்கோ,படகு விடத்தெரியாது,எதுக்கு ரிஸ்க்குன்னு திரும்பவந்தப்பதான் வண்டி தாம்பரம் கிட்டே போறதைக் கவனிச்சேன்.


இந்த ரோடிலெ நண்பர் வீடு இருக்கே, அங்கெ போயிட்டுப் போயிரலாமுன்னு அவருக்கு ஒரு ஃபோன் போட்டேன்.அதான் மூணுதாளும், செல்லும் கையிலே இருக்கே:-)


நண்பருக்குப் பேருக்கேத்தாப் போலவே சந்தோஷம். வீட்டுவாசலிலே இறங்குறப்பவே சந்தோஷின் மனைவி ஓடிவந்து கட்டிப் புடிச்சுக்கிட்டாங்க.
இவுங்களை எனக்கு ஒரு மூணுவருசமாத்தான் தெரியும். ஆனா இவுங்களைப் போல உள்ளவங்களைத் தெரிஞ்சுக்கறதுக்கும், நட்பு வச்சுக்கவும் நாம்தான் புண்ணியம் பண்ணி இருக்கணும்.


சந்தோஷ் நளினி தம்பதிங்களுக்கு மூணு குழந்தைங்க. அதுலெ ஒரு இரட்டையரும் இருக்காங்க. ஆனா இதுமட்டுமே அவுங்க குடும்பமில்லை. இன்னிக்குக் கணக்குக்கு மொத்தம் 26 புள்ளைங்க.

Thursday, March 16, 2006

கண்ணன் மனநிலையை.......


பயண விவரம் பகுதி 4


பல்வேறு முக்கியஅலுவல்களுக்கிடையிலே பழக்கம்(!) வுட்டுப்போயிறக் கூடாதுன்னு தங்க மாளிகைகளுக்கும்,ச்சென்னை சில்க்குகளுக்கும், சரவணாக்களுக்கும்,அடுத்தகட்ட முக்கியமாக தையல்கடைகளுக்கும் ஓடிநடந்த விவரங்கள் எல்லாம் பயண விவரமாப் பதிக்கலைன்னாலும் இங்கே ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.( ஐய்யோ தேர்தல் வருதாமே..... வருதுன்னு கேட்டமுதலே இப்படித்தான் பேச்சை ஆரம்பிச்சாநிறுத்த முடியலை!)


ரங்கநாதன் தெருவிலே இருந்த சரவணா ஸ்டோர்ஸ், இப்ப (அண்ணந்தம்பிங்க பிரிவினையாமே!) விஸ்வரூபமெடுத்துகிளை பிரிஞ்சு ஒண்ணையொண்ணு மிஞ்சிக்கிட்டு இருக்குதுங்க. 90 ரூபாய்க்கு சுரிதார் துணிங்க கிடைக்குதுன்னாபாருங்களேன். கடை வாசல்லேயே 12 இளம்பெண்கள் ரெண்டுவரிசையா அணிவகுத்து நிக்கறாங்க. ஒரே மாதிரிப்பட்டு(!)புடவை, கையிலே சீர்வரிசை வச்சிருக்கறமாதிரி தாம்பாளத் தட்டுங்க. அதுலே கல்கண்டு, சந்தனம், குங்குமம்,மிட்டாய்/சாக்லேட்டு வகைகள்ன்னு. வரவேற்புக் குழு! பலத்த வரவேற்புதான்.


என் வாய் ச்சும்மா இருக்குமோ? 'இது என்ன ஒரே மாதிரிப் புடவைங்க? யூனிஃபார்மா? தினமும் இதேவா, இல்லை வேற வேற கலர்களா?' கிடைச்ச பதில்கள், ரெண்டு நிறங்களிலே புடவைகளை நிர்வாகம் கொடுத்திருக்கு. இன்னிக்கு ஒரு கலர்ன்னாநாளைக்கு இன்னொண்ணு. ஆனா ப்ளவுஸ் அவுங்களே எடுத்துக்கணும். நாள் போகப்போக நம்மளைப் பாத்ததும்'நல்லா இருக்கீங்களா மேடம்?' கேட்கறவரை ஒரு அன்னியோன்யம் ஏற்பட்டுப் போச்சுன்னா பாருங்க.


கடையிலும், விற்பனைப்பிரிவு, துணிமணிகளை அடுக்க இப்படி ஏராளமான இளைஞர், இளஞிகளின் படை,மக்களுக்கு சேவை செய்யவே ஓடியாடிக்கிட்டு இருக்கு. இதனாலே எவ்வளோபேருக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டிருக்கு நினைக்கறப்ப ஒரு சந்தோஷம்தான். வேலை செய்யற இடத்துலே கஷ்டநஷ்டங்கள், ச்சின்ன சம்பளம்னு பலதும்இருக்குன்னாலும், இந்த சந்தர்ப்பமே இல்லைன்னு வச்சுக்குங்க, இவுங்கெல்லாம் என்ன செஞ்சுக்கிட்டு இருப்பாங்க?ஆண்பிள்ளைங்களாவது வெளியே வாசல்லே 'சுதந்திரமா'ப்போய் வருவாங்க.ஆனா இத்தனை பெண்களும் இந்தடிவி சனியனைக் கட்டிக்கிட்டுல்லே மாரடிச்சிருக்கணுமுன்னு ஒரு நினைப்பு.


ஆங்.... இந்த இடத்துலே ஒரு 'டிஸ்க்ளெய்மர்' கொடுத்துரணுமில்லை? எதுக்கா? அந்த 'டிவி சனியன்' பதப்பிரயோகத்துக்குத்தான்.டிவின்றது ஒரு நல்ல சாதனம்தான்.ஆனா இப்ப அதுலே வந்துக்கிட்டு இருக்கற மெகா சீரியல்கள்.....இதுலே தமிழ், தெலுங்கு,ஹிந்தின்னு வேறுபாடில்லாம ஒண்ணுக்கொண்ணு சளைக்கலைன்னு, சமத்துவமாத்தான் இருக்கு.இந்தியாவுலே எத்தனை மொழி இருக்கு? ஹூம் .....அத்தனையிலும் இதே நிலமைதான்.


மற்ற நாடுகளில் எப்படியாம்? எனக்குத் தெரிஞ்சவரை தேசங்கள் தோறும் பாஷைகள் ( மட்டுமே) வேறு. சரியான நேரம் கொல்லி.'தமிழ்மணம்' இந்தக் கணக்குலெ வராதுல்லெ? :-)))))))


ஆங்... என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்? ம்ம்ம்ம்ம்ம்ம்... சரவணா ஸ்டோர்ஸ்,இல்லே? கடைக்குள்ளே வரவேற்பைத்தாண்டி நுழைஞ்சதுமே நம்ம நா. கண்ணனை நினைச்சுக்கிட்டேன். 'சிங்கப்பூர் முஸ்தாஃபா' கடையிலே தமிழன், தமிழனை நம்பாம பையைக் கட்டிட்டான்னு புலம்புனது தான் காரணம். அங்கெயாவது, வெளிநாடு, தமிழனுக்கு மட்டும்மில்லைஅங்கே ஷாப்பிங் செய்யற எல்லார் பையையும் அதுவும் அந்தக்கடையிலே நாம் வாங்கின சாமான்கள் அடங்கிய பையோட 'வாயை'த்தான் கட்டுறாங்கன்னு ஒரு சமாதானம் சொல்லிக்கலாம்.


ஆனா இங்கே? தமிழ்நாட்டுலேயே, ஒரு தமிழர் நடத்துற கடையிலேயே , அங்கே கஸ்டமராப் போறத் தமிழனையே நம்பலையேங்க?சில கடைகளிலே நாம கொண்டுபோற பையை வாங்கி வச்சுக்கிட்டு ஒரு டோக்கன் தர்றதும், நாம வெளியே வந்தாவுட்டு டோக்கனைக் காமிச்சு நம்ம பையை வாங்கிக்கறதும் பழக்கத்துலே இருக்கறது உங்களுக்குத் தெரியாததா,என்ன? இங்கே அதெல்லாம்வேலைக்காகாதுன்னு, 'நீ கொண்டுவந்த பையை நீயே சுமந்துக்கிட்டுப் போ'ன்றமாதிரி ஒரு பெரீய்ய ப்ளாஸ்டிக் பையிலேநம்ம (பாவ)மூட்டையை வச்சு, வாயைக் கட்டி நம்மகிட்டேயெ கொடுக்கறாங்க. இந்த வேலைக்குன்னே ரெண்டு பக்கம் இருக்கறமாடிப்படியின் ஆரம்பத்துலேயே சில இளைஞர்கள். கடையோ ஆறு அடுக்கு மாடி. எல்லா அடுக்குலேயும் இப்படியே! வாயைக் கட்டி,வயித்தைக் கட்டிச் சேர்த்துவச்ச காசைச் செலவு செய்யவந்த ஜனங்களுக்கு இப்படி ஒரு மரியாதை(-:


லிஃப்ட்டுலே போனா என்னா செய்வே?ன்னு நைஸா நினைச்சீங்களா? ம்ஹூம்... தப்பிக்கவே முடியாது. மின்தூக்கி(நன்றி ஜெயந்தி)வாசல்லெயும் இந்தப் பைக்'கட்டு' ! திரும்ப இறங்கி வரும்போது கட்டை அவுத்துக் கொடுக்கவும்ஆள் இருக்கு. ஒரு அடுக்குக்கு ஆறு வீதம் 'ஆறாறு முப்பத்தாறு பேருக்கு வேலைவாய்ப்பு'ன்னு சந்தோஷப் பட்டுக்கலாம்.


தோல் பொருட்கள் கண்காட்சி ஒரு மூணுநாளைக்கு நடக்குதுன்னும், அன்றே அது கடைசிநாள்னு தெரிஞ்சுஅங்கே போனதும், ( 200 ரூபாய் நுழைவுச்சீட்டு) தோல் பதனிடறது, அதுக்குச் சாயம் ஏத்தறது, தோலாடை உற்பத்திக்குனு இருக்கற மெஷினுங்களைப் பாக்கறதுன்னு கொஞ்சம் அறிவை விஸ்தரிச்சுக்கிட்டு, நங்கைநல்லூரில் இருக்கும் குடும்ப நண்பரைப் பார்க்கப் போறவரை அன்னிக்கு ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நடக்கப்போகுதுன்னு மெய்யாலுமே தெரியாது.


நங்கைநல்லூர்ன்னதும் மூளையில் ஒரு மணி அடிச்சுது. பயணம் முழுசும் என்னைவிட்டகலாது இருந்த மூணுதாளைப்பார்த்ததும் புரிஞ்சுருச்சு. நம்மளைச் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்த வலைஞர்கள் விவரம் அடங்குனதுதான் இந்த மூணுதாள் மேட்டர்.அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா... எத்தனை பேர்ங்கறீங்க?


அவர் தந்த தகவலின்படியே போய் இதோ வீட்டுக் கூடத்துலே நுழைஞ்சாச்சு. ஹை... ஊஞ்சல்!!!!ஓடிப்போய் உக்காந்துக்கிட்டேன். அவரோட மகளையும் சந்திச்சோம். பேச்சு பலவிஷயங்களைத்தொட்டுப் போய்க்கிட்டு இருந்தது. எங்க இவர் எப்பவாவது சில பதிவுகளை, நகைச்சுவையா எழுதறவங்களோடது படிச்சிருக்காரே தவிர, தமிழ்மணத்துலே அன்னாட நிகழ்ச்சிகளா(!) நடக்கறதை எதுவுமே அறியாதவர். சில விஷயங்களைக் கேட்டுட்டு இப்படியெல்லாம் கூட நடக்குமான்னு அதிசயப்பட்டுட்டார். போட்டும்,அப்பாவி!!!! பேசிக் களைச்சுட்டோமோன்னுச் சுடச்சுட ஒரு காஃபியும் தன்கையாலேயே(!)போட்டுக் கொடுத்தார் நண்பர். வீட்டுக்காரம்மா கோயிலுக்குப் போயிருந்தாங்க.


அப்படியே 'ஆஞ்சநேயரையும்' பார்த்துட்டுக் குசலம் விசாரிச்சுட்டுப் போகலாமுன்னு நினைச்சுக்கிட்டே, வழியனுப்பிவைக்க கூடவே வந்த நண்பரிடம், உங்களைப் பார்த்ததுலே ரொம்ப சந்தோஷங்க. போயிட்டு வரோம் 'டோண்டு'ன்னுசொல்லி ஆட்டோவுலே ஏறி உக்கார்ந்தாச்சு.


கோயிலுக்குப் போனா ,'அலங்காரம்' நடந்துக்கிட்டு இருக்கு. பிரமாண்டமான கதவுகள். சாத்தியிருக்குன்னு பேரே தவிர தெரிஞ்ச இடைவெளியில் துல்லியமாப் பார்க்க முடிஞ்சது. ஹைய்யோ... எவ்வளவு பெரியவர்?
அண்டா அண்டாவா, தோளில் சுமக்க முடியாமல் சுமந்துக்கிட்டு, கனம் தாங்கமுடியாம ஓடோடி வராங்க கோயிலைச்சேர்ந்த பரிசாரகர்கள். சூடாயிருக்கும் போல, பாத்திரங்களின் அடியிலெ கனமான துண்டு. எல்லாம் பிரசாதங்களாம்!!


இதோ எல்லாம் ஆச்சு. மூடுன கதவுக்குள்ளே நைவேத்தியங்களைப் படைச்சுட்டு, மறுபடி அதெ ஓட்டமும் நடையுமாவெளியே போனாங்க இந்த 'அண்டா'தூக்கிகள்.


மேள வாத்தியங்களோட சப்தம் உச்ச ஸ்தாயிலே ஒலிக்க, ரெண்டு கதவுகளும் திறக்க ஒரு ஜ்வொலிப்போட நம்மஆஞ்சநேயுடு! பார்க்கவே பரவசமா இருந்தது. திரும்பிப் பாக்கறேன், எனக்குப் பின்னாலே இவ்வளவு கூட்டம்! எப்பவந்தாங்க இவுங்கெல்லாம்?போகும்போது கிடைத்த பிரசாதங்களை( புளியோதரை) நாங்க பூ வாங்கின அம்மாவின் கையில் கொடுத்துட்டுதிருப்தியோடு கிளம்புனோம். பாவம் அந்த அம்மா, 'உள்ளெ போய் சாமியைக் கும்பிட நேரமில்லம்மா. இங்கெயேஇருந்து கையெடுத்துக் கும்புடறதோட சரி' சொன்னாங்களே, நான் போட்டு வாங்குனப்ப!

Wednesday, March 15, 2006

கோவை பிரதர்ஸ்

மென்னியப் புடிக்கற அளவுக்கு வேலை( எல்லாம் எழுதற வேலைதான்) இருக்கப்ப இது என்ன திடீர்னுஒரு சினிமா விமரிசனம்? கேப்பீங்க கேப்பீங்க, கேக்கமாட்டீங்க பின்னே?


நினைவலைகளில் 'பின்நீச்சல்' போட்டுக்கிட்டு இருக்கமே, நாட்டு நடப்பு இப்ப எப்படி இருக்கு? நம்ம தமிழ்சினிமாஉலகத்துலே 'என்னென்ன நடக்கு'ன்னு பாக்கலாமுன்னு இருந்தப்பக் கிடைச்சது சில சினிமாக்கள்,பரமசிவம், ஆதி,சரவணா,சண்டக்கோழின்னு........


எஸ்.ராவோட வசனம், குட்டி ரேவதி கலாட்டான்னு பிரசித்தமான சண்டக்கோழியைப் பார்த்தேன். என்ன இப்படி?பார்த்தேன்னு 'சப்'னு முடிச்சிட்டேனா? அதுலே சொல்லிக்க ஒண்ணும் இல்லை. அதுனாலதான் விளம்பரயுக்தியாஅந்த துப்பட்டா சுத்தற வசனத்தைச் சேர்த்தாங்களோ என்னவோ? அவுங்க எதிர்பர்த்தபடியே ஒரு ச்சின்ன கலாட்டாவும்நடந்து,அதையும் பத்திரிக்கைகள் செய்தியாக்கிக் கொடிபிடிக்கவும் செஞ்சு, அதனாலே இன்னும் ஒரு பத்து( அட ஒரு பேச்சுக்குத்தான்!)பேர் படத்தை அப்படி என்னாதான் இருக்குன்னுன்ற ஆவலுடன்(!) என்னையும் சேர்த்துத்தான் பார்த்திருப்பாங்களோ என்னவோ?


சரி, அதை விடுங்க.மத்த படங்களும் அப்படி ஒண்ணும் சொல்லிக்கற மாதிரி இல்லே. எடு கோவை பிரதர்ஸைக் கையிலே.சத்தியராஜ் படம். அவ்வளவு மோசமா இருக்கவும் வாய்ப்பில்லை, அதுக்காக ரொம்பவே எதிர்பார்ப்போடு நாமும் இருக்கவும் வாய்ப்பில்லைதானே.


நம்ம நாட்டுலே நடக்குற பல அக்கிரமங்களைப் பத்திரிக்கையிலே படிச்சுட்டுக் கொதிச்சுப்போய் பதிவாப் போட்டுப் புலம்பறோமுல்லே, அதையேதான் சினிமாவா எடுத்துருக்காங்க. பதிவுன்னா கிடைக்குற வாசகர்களைவிட சினிமாவோட ரீச் பெருசுல்லையா? ரீச் ஆயிருமுன்னு நினைக்கறேன். ஆனா, நம்ம பொதுஜனங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சாலும்'இங்கெ இப்படித்தான். நாம் சொல்லி என்ன ஆகப்போகுது'ன்னு ஒரு (விரக்தி)மனப்பான்மை இருக்கு பாருங்க. மொதல்லேஅதை மாத்தணும்.


மக்களைப்பத்திக் கவலையே இல்லாத அரசாங்க அதிகாரிகள், மனசாட்சி இல்லாம நடந்துக்கற மருத்துவர்கள், இதுலே'டேய், நான் சட்டையைப் போட்டுருந்தா டாக்டர். கழட்டிட்டேன்னா லோஃபர்'னு டயலாக்! யார்ரா அந்த டாக்குட்டர்? தெரிஞ்சமுகமா இருக்கேன்னு பார்த்தா, அட,நம்ம அருண் பாண்டியன்.


நம்ம கைப்புள்ளெவேற நினைவுக்கு வந்துக்கிட்டு இருந்தார் படம் பூரா! படத்துலே அவர் பேர் 'ஏகாதசி' ஜோசியச்சீட்டு எடுத்துக் குடுக்கற கிளிகூட அவரை என்னமா ஏசுது! கிளிவேசம் மனுசனுக்குப் படுபொருத்தமா இருந்துச்சுங்க.


இவ்வளோ சொல்லிட்டு ஹீரோ, ஹீரோயினைப் பத்திச் சொல்ல வேணாங்களா? ஹீரோயின்கூடப் பாட்டுப்பாடி ஆடறவர் தானேங்க படத்துக்கு ஹீரோ? அது சிபிராஜ். நாயகி நமீதா. அப்ப சத்தியராஜுக்கு யாரு ஜோடிங்கறீங்களா?அது எப்படிங்க, அவருக்கு ஜோடி இருந்தே ஆகணுமுன்னு கட்டாயமா? கோவை சரளா ஒன்சைடா அவரை 'லவ்ஸ்'வுடறாங்க, ச்சும்மா ஒரு நிமிஷக் கனவுப் பாட்டுலே!


டெல்லி கணேஷ் , ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரியா ஒரு சீன்லேவந்து, சோஷியல் சர்வீஸ் செய்யவேணாம், (வாங்குற)சம்பளத்துக்கு வேலை செய்யுங்க'ன்னு மெஸேஜ் கொடுத்தார்ங்க.


பரவாயில்லை, ஒருமுறை பார்க்கலாம், அட்லீஸ்ட் வடிவேலோட காமெடிக்காவது.


கடைசியிலே விகடன், குமுதம், குங்குமம்னு எல்லா கமர்சியல் பத்திரிக்கைகளும் வாசல்லே வீசப்பட்டன, அரசு அலுவலர்களால்!


நம்ம ஆக்களுக்கு இந்த வம்பு இல்லை. எதையும் வீசவேணாம், படிச்சுக்கிட்டுக்கற 'விண்டோ'வை மூடுனா ஆச்சு,இல்லீங்களா?

Tuesday, March 14, 2006

மூணு விருந்து ஒரே நாளில்.


பயண விவரம் பகுதி 3
இப்பெல்லாம் ச்சென்னயிலேயே செங்கல்பட்டு இருக்குது போல! அட, ஆமாங்க. புது வீட்டு கிரஹப்பிரவேசத்துக்குபோகணுமுன்னு 'கால் டாக்ஸி' யைக் கூப்புட்டாச்சு. முஹூர்த்தம் காலையிலே ஆறு முதல் ஏழரை வரை.அண்ணன் வீடுதான். இன்னும் முழுசா முடியலை. உள்புறம் வேலைங்க, அதாங்க வுட் ஒர்க், லைட்டிங், கிச்சன்எல்லாம் பாக்கி இருக்குதான். ஆனா இப்பத்தானே நாங்க அங்கே இருக்கோம். அதனாலே கொஞ்சம் முன்னாலே வச்சுக்கிட்டாங்க.


நமக்குத் தெரியாத மெட்ராஸா? அதெல்லாம் கவலைப்படவேணாம். 'டாண்'னு அஞ்சரைக்கே அங்கெ இருப்பேன்னு சவால் விட்டாச்சு.


போய்க்கிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கோம். அதிகாலை இருட்டுலே ஒண்ணும் சரியாத் தெரியலை. ராமச்சந்திராஆஸ்பத்திரி வாசல்லே வந்ததும்தான், சந்தேகம் வந்துச்சு. அதான் 'கைத்தொலைப்பேசி இருக்க எனெக்கென்ன மனக்கவலை'ன்னு ஃபோன் போட்டாச்சு.


" எங்கே இருக்கீங்க?"

" ராமச்சந்திரா வாசல்லே"

" சரி. அப்படியே நேரா வாங்க, ஒரு ரெண்டு கிலோ மீட்டர்தான்"

கால் டாக்ஸி ட்ரைவர் இந்தப் பக்கம் வந்ததே இல்லையாம். அதுக்கென்ன? ' நேராப் போங்க'ன்னாச்சு.

ஒரு பத்துகிலோ மீட்டர் போயாச்சு. கெரகம்பாக்கமோ, கரையான்சாவடியோ, இல்லே போரூரே வந்துட்டமோன்னும் தெரியலை.

போடு ஃபோனை. இந்த முறை ஃபோனை எடுத்தவர் யாரோ ஒரு விருந்தினர். அண்ணன் 'மந்திரம்' திருப்பிச் சொல்லிக்கிட்டு இருக்காராம்.


"நீங்க ரொம்ப தூரம் போயிட்டீங்களே. திரும்ப ராமச்சந்திரா மிஷன் ஆஸ்ரமம் வாங்க."

" அட, ராமச்சந்திரா! என்ன மிஷனா? ஆஸ்பத்திரிதானேங்க இருக்கு?"

" இல்லையே, மிஷனும் இருக்கே"

அப்படி இப்படின்னு மறுபடி விளக்கமெல்லாம் கேட்டு, அங்கே சுத்தி இங்கே சுத்தி இடம் கண்டுபிடிச்சு(சுப முஹூர்த்தநாளாம்.இன்னும் ரெண்டு வீட்டுக்கு அங்கேயே பூஜை நடந்துக்கிட்டுஇருக்கு.) எந்த வீடுன்னு தெரியாம பார்த்துக்கிட்டே போய் ஜன்னல்லே தெரிஞ்ச தலையை வச்சுக் 'கரெக்ட்டாக்' கண்டுபிடிச்சு 'டாண்'னு ஏழுமணிக்குபோய்ச் சேர்ந்தாச்சு.


பட்ட கஷ்டம் எல்லாம் தீர 'நம்ம ரேவதி சண்முகம்' (அதாங்க 'அவள் விகடன்'லே சமையல் சொல்லித்தருவாங்களே, கண்ணதாசனோட மகள்) கேட்டரிங்செஞ்ச காலை டிஃபன். மெனு சொல்லட்டுங்களா, வேணாமா?

கேசரி, இட்டிலி, நாலுவகைச் சட்டினிங்க, சாம்பார், தோசை, பொங்கல், பூரி உருளைக்கிழங்கு, இடியாப்பம் தேங்காய்ப்பால் அப்புறம் காஃபி.


அன்னிக்கு வேலைநாளா இருந்துச்சுங்களா, அதனாலே நிறையப்பேர் காலை டிஃபன் முடிஞ்சு உடனே போயிட்டாங்க.நெருங்கிய சொந்தங்கள் மட்டும் இருந்தோம். ரேவதியம்மா கையாலெ பகல் சாப்பாட்டையும் முடிச்சுக்கிட்டோம்.வழக்கமான தென்னிந்தியச் சமையல்தான்.சாம்பார், கறி, கூட்டு,புளிக்குழம்பு, ரசம் இத்தியாதி. கூடவே வடை, பாயாசம், பப்படம்.'சாப்பாடாங்க நமக்கு முக்கியம்?' வீடுதானே? வீட்டைச் சுத்திப் பார்க்கலாமுன்னா.....


அடுத்த வீட்டுக்கும் நமக்கும் எவ்வளவு தூரம்? அவசரத்துக்கு, ஒரு குழம்போ,கூட்டோ வேணுமுன்னா கையைக் கொஞ்சமே கொஞ்சம் எட்டினாப் போதும். ரொம்ப நீட்டிட்டா நீங்களே அவுங்க சமையலறையிலே இருந்து எடுத்துருவீங்க.அது, அவ்வளவா நல்லா இருக்காதில்லையா? ஒரு வார்த்தைக் கேக்கவேணாமா?


முன்னாலே ஒரு சாண்,பின்னலெ ஒரு சாண்( இது, பப்பரப்பான்னு நம்ம உள்ளங்கையை விரிச்சுவச்சா கட்டைவிரல்நுனிக்கும், சுண்டுவிரல் நுனிக்கும் இடைப்பட்ட தூரம். புது ஜெனரேஷனுக்குத் தெரியாதுன்னு ஒரு விளக்கம் கொடுத்துட்டேன்)மண் தரை. தோட்டம்(!) போட்டுக்கவாம். ஆமாமாம். புல் வெட்டற வேலை மிச்சம். விலையைக் கேட்டா மயக்கமெல்லாம் வராது,பைத்தியம்தான் பிடிக்கும். சாலைவிபத்துலே சாகற மனுஷ உயிருக்கு விலை இல்லை, ஆனா மண்ணுக்கு என்னா விலை,என்னா விலை? ஹப்பா.....


சாலை விபத்துன்னதும் ஒண்ணு நினைவுக்கு வருதுங்க. நாங்க ஊர் மண்ணுலே காலு குத்துனதும் ஒரு டாக்ஸிஎடுத்துக்கிட்டு வீட்டைப் பாக்கப் போய்க்கிட்டு இருக்கோம். இதென்ன நமக்குத் தெரியாத இடமா?'அதெல்லாம் யாரும்வரவேணாம். ராத்திரி 11 ஆயிரும். நாங்களே டாக்ஸியிலே வந்துருவொம்'னாச்சு.


"இப்பெல்லாம் சிகப்புதான் 'கோ சிக்னலா? மாத்திட்டாங்களா? முந்தி பச்சை இருந்துச்சுலே?"


" இல்லைம்மா. ராத்திரி 10 மணி ஆயிருச்சுன்னா நம்ம பாட்டுக்குப் போலாம்"
" அப்படியா? புது ரூல்ஸ் வந்துருச்சா?"


"................................" ( மெளனம்)


எந்தப்பக்கம் வண்டிவந்து நம்மைத் தாண்டிக்கிட்டுப் போகுதுன்னு தெரியாம எல்லாப்பக்கத்துலேயும் சீறிக்கிட்டுபோறாங்க. கிருஷ்ணார்ப்பணம்.

இதெல்லாம் ட்ராஃபிக்கே இல்லையாம். நாளக்குப் பகல்லே பார்க்கணுமாம். பார்த்தேனே..........


ஒருசிலர் 'ஹெல்மெட்' போட்டுக்கிட்டுப் போறதைப் பார்த்தேன். அதுலே சில பெண்களும் உண்டு. சந்தோஷமாஇருந்துச்சு. ஆனா யாராவது கீழே விழ நினைச்சாலும் முடியாதுங்க. அதான் தரையே தெரியாத அளவுக்கு அடைச்சுக்கிட்டுநிக்குதே வண்டிங்க. ஜனத்தொகை ரொம்பவே கூடிப்போச்சுன்றது முகத்துலே அறையும் உண்மை.


சாயந்திரம் முக்கியமான நிகழ்ச்சி ஒண்ணு இருந்துச்சு. இந்தியா நீங்கலாக, வெளிநாட்டுலே இருக்கற வலைஞர்கள் சார்பில் அந்த நிகழ்ச்சியிலே கலந்துக்கப்போற ஒரே ஆளு நான் தான்றது அப்போ எனக்குத் தெரியாது. நான் வெறும் நியூஸி சார்பாப் போறேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.


காந்திலால் கல்யாண மண்டபம். நம்மை அழைச்சவர்தான் அங்கே முக்கிய 'புள்ளி'. ஆனா அவரை முன்னேபின்னே பாத்ததில்லை.இது என்ன பிரமாதம்? எல்லாம் அங்கே போய்ப் பார்த்துக்கலாம்.

கஷ்டப்படுத்தாம, மாலையும் கழுத்துமா இருந்தவரைக் கண்டுபிடிக்க அரைநொடிகூட ஆகலை.


கல்யாண நிச்சயதார்த்தம். சடங்கையெல்லாம் ஓடி ஓடிப் படம் எடுத்தார் என்னோட வந்த ஃபோட்டோகிராஃபர்.(பயணக்கதை எழுதற பிரபல எழுத்தாளர்கள் எல்லாம் கூடவே ஒரு ஃபோட்டோகிராஃபரைக் கொண்டு போவாங்க.உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமுன்னு நினைக்கிறேன்)

மாப்பிள்ளை தனது தாயாரைக் கூட்டிக்கிட்டு வந்து அறிமுகம் செஞ்சுவச்சார். அங்கே சென்னையில் உள்ள பிரபல மக்கள் ( நம்ம வலை உலகப் பிரமுகர்கள்) ரெண்டு பேரைப் பார்க்கும் பாக்கியம் கிடைச்சது. அறிமுகம் செஞ்சுக்கிட்டேன்.ஒருத்தர் நம்ம பா.ரா, இன்னொருத்தர் நம்ம பத்ரி. பா.ராவுடன் ஒரு வார்த்தை பேசினேன்,'வணக்கம்' அவ்ளோதான்.பெரிய எழுத்தாளர், அவர்கிட்டே என்ன பேசறதுன்னே தெரியலை(-:பத்ரிகூட கொஞ்சநேரம் நிறையவே பேசினோம். கிழக்குப்பதிப்பகம் டி.சர்ட் போட்டுக்கிட்டு இருந்தார். நட்போடு பழகினார்.


விழா முடிஞ்ச கையோட சாப்பாடு. கேசரி, இட்டிலி, சட்டினி வகைகள், லட்டு( லட்டா ஜாங்கிரியா?) இன்னும் பலவிதமா இருந்துச்சுதான். ஆனா, ரெண்டு நேரம் ரேவதியம்மா சாப்பாட்டை வெட்டுனதுனாலே அவ்வளவா(!) பசியில்லை.


வர்றப்ப தாம்பூலம் கொடுத்தாங்க. சணலில் செஞ்ச ஒரு ச்சின்ன ஷாப்பிங் பையும்( காய்கறி வாங்கிக்க வசதியாஇருக்கும்)கூடவே ஒரு பத்து ரூபாயும்.
ரூபாய் எதுக்குக் கொடுத்தாங்கன்னே தெரியலை. ஒருவேளை எதாவது காய் வாங்கி அந்தப் பையிலே போட்டுக்கறதுக்கோ?


மாப்பிள்ளைகிட்டே கேக்கணுமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். ஆனா கேக்கலை. எங்க இவரும் எதுக்குஅந்தக் காசுன்னு யோசிச்சு மண்டையை உடைச்சுக்கிட்டு இருந்தார்.


மாப்பிள்ளையும் இந்த விழாவைப் பத்தி நீங்க எழுதிறாதீங்கன்னு கேட்டுக்கிட்டார். நானும்,'மாட்டேன். இது உங்கவிசேஷம், நீங்க முதல்லே எழுதுங்க'ன்னு பெருந்தன்மையா சொல்லிட்டேன். (நானே எழுதலாமுன்னா தமிழ் ஃபாண்ட்டுக்குஎன்ன செய்யறதாம்?) இப்ப அவரே எழுதிப் படமெல்லாம் போட்டுட்டதாலே நானும் 35 நாளுக்கப்பறம் எழுதிட்டேன்.கல்யாணம் ஏப்ரல் 30. அதுவரை 'கடலை போடுங்க'ன்னு சொல்லிக் கொடுத்துட்டு வந்தேன். ஏதோ நம்மாலான உபகாரம்.


அச்சச்சோ...மாப்பிள்ளை பேரைச் சொல்ல மறந்துட்டேனே!!!!
நம்ம 'கிருபாசங்கர்'தான்.__________________

Monday, March 13, 2006

நவ்வாலு

பிடிச்ச விஷயம், பிடிச்ச பொஸ்தகம்னு நாலு சொல்லணுமாக்கும். எனக்குப் பிடிச்ச விஷயம் கிட்டத்தட்டநாலு லட்சத்துக்கு இருக்கறப்ப எந்த நாலைச் சொல்லுவேன்?


பிடிச்ச மிருகங்களிலே ஆரம்பிக்கவா? ஐய்யோ.... எல்லா மிருகங்களுமே எனக்குப் பிடிக்கும். அதுலேயும்குழந்தைங்க ( மிருகக்குழந்தைங்க)ன்னா, அடடாடா இன்னிக்கெல்லாம் பார்த்துக்கிட்டே நிப்பேன்( ஆனாயாராவது அப்பப்ப காஃபி, டீ, சாப்பாடுன்னு டயத்துக்குக் கொடுத்துரணும். அட, எனக்குத்தாங்க)


1. யானை
2. பூனை
3. நாய்
4. குரங்கு.


பிடிச்ச பூ


1. மல்லிகை
2. ரோஜா
3. தாமரை ( லட்சுமி இருக்குமாம்லெ?)
4. மேலெ சொன்னதைத்தவிர மத்த எல்லாப்பூவும்.


பிடிச்ச ஊர்


1. வத்தலகுண்டு

2. கிறைஸ்ட்சர்ச்

3. மரூக்கிடோர்

4. மில்ஃபோர்ட் சவுண்ட்

பிடிச்ச காய்கள்

1. புடலை
2. வெண்டை
3. பூசணி( வெள்ளை)
4.பீன்ஸ்


பிடிச்ச பண்டிகைகள்

1. ஸ்ரீ ராமநவமி( பிரசாதம் செய்யக் கஷ்டப்படவே வேணாம்!)
2. கிருஷ்ண ஜெயந்தி
3. பொங்கல் பண்டிகை
4. வைகுண்ட ஏகாதசி ( சமைக்கவே வேணாம்)


பிடிச்ச இடங்கள்

1. கடற்கரை ( கப்பல் கண்ணுலே பட்டா இன்னும் விசேஷம்)
2. கோயில் ( ரொம்பக் கூட்டமில்லாத பழைய கோயில்களா இருக்கணும்)
3. தென்னந்தோப்பு ( உக்கார ஒரு கயித்துக்கட்டில் கண்டிப்பா இருக்கணும்)
4. என்னோட கணினி இருக்கற ரூம்.


பிடிச்ச பழங்கள்

1. பலாப்பழம்
2. சப்போட்டா
3. மாம்பழம்
4. கொய்யாப்பழம்

பிடிச்ச எழுத்தாளர்

1. தி.ஜா.ரா

2. லா.ச.ரா

3. நரசய்யா
4. உமா கல்யாணி

இன்னும் பிடிச்சவுங்கன்னு ஏராளமா இருக்காங்க. யாரைச் சொல்ல, யாரை விட?

பிடிச்ச இனிப்பு வகைகள் ( தின்னிப் பண்டார அக்கா இதைச் சொல்லலைன்னா எப்படி?)


1. ஜாங்கிரி

2. அல்வா( யாரும் கொடுத்துறாதீங்க.வேணுமுன்னா நானே வாங்கிப்பேன்)

3. அதிரசம்

4. பொருள்விளங்கா உருண்டை ( அந்தக் காலத்துச் சமாச்சாரம்)

பிடிச்ச வேலை

1. பதிவு எழுதறது ( இப்பெல்லாம் இது பொழுதுபோக்குலே இருந்து உத்தியோகமா மாறிப்போச்சு!)

2. தையல் ( ஒரு காலத்துலே தையல் மெஷினே கதின்னு இருந்துருக்கேன்)

3. பசங்களுக்கு( நம்ம பூனைங்கதான்) பேன் பாக்கறது!

4. வீட்டுக்குள்ளே தோட்டவேலை

பிடிச்ச நடிகர்.

1. கமல்
2. கமல்
3. கமல்
4. கமல்


பிடிச்ச நடிகைகள்

1. பானுமதியம்மா
2. சாவித்திரி
3. தேவிகா
4.கண்ணாம்பா( எங்க அம்மாவோட முகச்சாயல் இருக்கு இவுங்ககிட்டே)அடடா....எல்லாரும் மேலே போயிட்டவங்கதான். போகாதவங்க லிஸ்ட்டு ஒண்ணு தந்துரலாமா?

1. மனோரமா
2. கோவை சரளா
3. பத்மினி
4. ஊர்வசி

பழையபடி அந்தக்கால லிஸ்ட்டாப் போயிருச்சே. சரி, சமீபத்திய நடிகைகளைப் பார்க்கலாம்
1. மீரா ஜாஸ்மின்
2. ஜோதிகா
3.????
4.????
ஒண்ணும் தோணலைங்க.புடிச்ச இசைக் கலைஞர்கள்.
1. யேசுதாஸ்
2. எம். எஸ். அம்மா
3. காயத்திரி (வீணை)
4. ஜாகீர் ஹுஸைன் ( தப்லா)இன்னும் எக்கச்சக்கமானவங்க இருக்காங்க. லிஸ்ட்டு ரொம்பப் பெரூசாப் போயிரும் ஆமா...


சினிமாப்பாட்டு பாடறவங்க.

சித்ரா ( தமிழ் & மலையாளம்)
ஆஷா போஸ்லே (ஹிந்தி மட்டும்)

தமிழைக் கொலை செய்யாமப் பாடற எல்லோரையுமே பிடிச்சிருக்கு.
பிடிக்காத நாலுபேர்.


1. முன்னாலெ ஒண்ணு பின்னலே வேற ஒண்ணுமா பேசித்திரியுறவங்க.
2. மனைவியையும், குழந்தையையும் அடிக்கறவங்க.

3. தெருவுலே அசிங்கம் செய்யறவங்க.

4. பெண்களையும், குழந்தைகளையும் பாலியல்ரீதியா துன்பப்படுத்தறவங்க.
(பாலியல் வன்முறை)இன்னொண்ணையும் சேர்த்துக்கறேனே ப்ளீஸ்....
5. மிருகங்களை அடிச்சுத் துன்புறுத்தறவங்க.


ஆமா, தெரியாமத்தான் கேக்கறேன், இந்த விளையாட்டை ஆரம்பிச்சது யாரு? நாலுக்குள்ளெ அடங்கற உலகமா இது?

யாரையும் விளையாட்டுலெ இழுக்கலை. உங்களுக்கு ஆசை இருந்தா நீங்களே வந்து சேர்ந்துக்குங்க.


அடப் போங்கப்பா. நாலுபேர் நாலு சொல்றதுக்குள்ளே இங்கனயெ இதை நிப்பாட்டிக்கறேன்.

Saturday, March 11, 2006

கிருஷ்ணா நீ பேகனே......


பயண விவரம் பகுதி 2


"எவ்வளோ நாள் ஆச்சு, இந்த மாதிரி தினப்பத்திரிக்கைகளைப் பார்த்து?

என்னதான் 'நெட்'லே பார்த்தாலும் இதுமாதிரி வராதுல்லே? ஹிந்து படிச்சு வருசக்கணக்காச்சு. ஆனா மாறுதல் ஒண்ணும் இல்லை. பேப்பர் மெலிஞ்சுருக்கு,அவ்வளோதான்."

"அதுவும் இந்த தினமலர் பத்திரிக்கையை இப்பத்தான் மொதமொதல்லே கண்ணாலே பாக்கறேன்."

"அது என்ன தினமலர் வேணுமுன்னு வாங்கிட்டே?"

"எல்லாம் ஒரு அபிமானம்தான். தினம் ஒரு தமிழ் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தறாங்களே!"

இப்படியெல்லாம் அளந்துக்கிட்டே பேப்பரைத் தரையில் பரத்திக்கிட்டு 'சென்னையில் இன்று' நிகழ்ச்சிகளைப்பார்க்கறேன்.

"அடடே, நம்ம இசைக்கல்லூரியிலே பொன்விழா நடக்குதாம். யேசுதாஸ் பாடறாராம். அனைவரும் வருகன்னுபோட்டுருக்கு, போலாமா? காலையிலே பத்தரை முதல் பன்னெண்டுவரையாம்."

"எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. அதை முடிச்சுக்கிட்டுப் போலாம்."

போனவேலை முடிஞ்சு, இசைக் கல்லூரிக்குள்ளே வாழ்க்கையிலேயே முதல்முறையா நுழையறோம்.பழங்காலத்துக் கட்டிடம். பாட்டுச்சத்தம் மெலிசாக் கேக்குது. அதைத் தொடர்ந்துகிட்டே ஹாலுக்குப்போயிட்டோம். வாசலில் அழகான கோலம் போட்டு, அதுக்கு வர்ணப்பொடி தூவி ரங்கோலி அட்டகாசமா இருக்கு.நாலைஞ்சு பெண்கள் பட்டுடுத்திச் சந்தனமும், குங்குமமும் கொடுத்து வரவேற்கிறாங்க.


கனகம்பீரமா பாடிக்கிட்டு இருக்கார் நம்ம யேசுதாஸ். அவர் முன்னாலே ஒரு மடிக்கணினி. பக்க வாத்தியக்காரர்கள் சூழ்ந்திருக்கும், அலங்காரமில்லாத சாதாரண மேடை. கீழே ஜமக்காளம் விரிப்பு. இசைக்கல்லூரி மாணவ மாணவிகள் நிறைந்திருக்காங்க. எல்லாம்இளவயசுப் பசங்க. பெண்கள் எல்லாம் ஜிலுஜிலுன்னு பட்டுலே ஜொலிச்சாங்கன்னா, ஆண்கள் எல்லாம் ஜிப்பா! பாக்கவே ரம்யமாஇருந்துச்சு.


இசைக்கல்லூரியின் பொன்விழா ஆண்டுக்காக 25 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செஞ்சிருந்தாங்களாம். அதுலே இதுதான் கடைசி நிகழ்ச்சியாம்.அரங்கத்துலே கொஞ்சம் போல நாற்காலிகள் போட்டு வச்சிருந்தாங்க. மாணவர் அல்லாதவர்கள்( பொது மக்கள்னு சொல்லலாம்) உட்கார்ந்து இசையை ரசிச்சுக்கிட்டு இருந்தாங்க. நமக்கு இடமா முக்கியம்? பாட்டுக் கேட்டாப் போதாதான்னு ஒரு ஓரமாநின்னுக்கிட்டு இருந்தோம். யாரோ ஒரு மாணவர்போல, ரெண்டு நாற்காலிகளைக் கொண்டுவந்து போட்டு நம்மை உக்காரச் சொன்னார்.யார் பெத்த பிள்ளையோ? நல்லா இருக்கணும். கொஞ்ச நேரத்துலே ரெண்டு பார்வையிழந்த இளம்பெண்கள் அங்கேவந்து சேர்ந்தாங்க. அவரே இன்னும் சில நாற்காலிகளைக் கொண்டுவந்து கதவருகிலே போட்டு உதவினார்.


ஒரு பாட்டு முடிஞ்சு, அடுத்த பாட்டா'அதிசய ராகம்'ன்னு ஆரம்பிச்சாரோ இல்லையோ, மாணவர்கூட்டத்துலே இருந்து அபார வரவேற்பு. அடுத்தடுத்து பாட்டுங்க பாடிக்கிட்டே இருக்கார். நாங்கெல்லாம் அப்படியே 'தேன் குடிச்ச நரி(!)' போலஒரு மயக்கத்துலே உக்கார்ந்திருக்கோம். அப்ப நிகழ்ச்சி அமைப்புக்கு உதவும் ரெண்டுபேர்( அதான் ஒரு பேட்ஜ் குத்திக்கிட்டுஇருந்தாங்கல்லே!) பச்சை பார்டர் போட்ட வெண்பட்டுச்சேலையில் இருந்த ஒரு அம்மாவைக் கூட்டிட்டுவந்து முன்பக்கமாமேடைக்கருகில் உக்காரவச்சாங்க. (பாதி மயங்கிய நிலையிலும் எனக்குப் பட்டெல்லாம் 'பட்'டுன்னு தெரிஞ்சிரும்,ஆமா) எங்கியோ பார்த்த முகம். யாருன்னு புரிபடலை. மணி பன்னெண்டரை ஆயிருச்சு. பரிசுப் பொருட்கள், பொன்னாடைகள் எல்லாம் எடுத்துக்கிட்டு நிர்வாகிகள் மேடைப்பக்கம் வந்தவுடனே, அடுத்த பாட்டு ஆரம்பிக்காம இருந்தார் யேசுதாஸ்.


சொற்பொழிவுகள் ஆரம்பமாச்சு, பி.பி.ஸ்ரீநிவாஸ் சுருக்கமாப் பேசுனார். அப்படியே இன்னும் சில பெருந்தலைகளும்.யேசுதாஸ் பேசும்போது அவருடைய பக்க வாத்தியக்காரர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்து புகழ்ந்துபேசினார்.அவர்களுக்குப் பொன்னாடைகள் போர்த்தினார்கள். அவருடைய இன்றைய நிகழ்ச்சிக்காகவே ஸ்பெஷலாவந்திருந்த ஃப்ரெண்ட்ன்னு சொல்லி, அந்தப் பச்சை பார்டர் அம்மாவைச்சுட்டி மேடைக்கருகிலே கூப்புட்டார்.அவுங்களை ரெண்டு வார்த்தை பேசச் சொன்னார்.


அந்த அம்மாவும், மைக்கைக் கையிலே வாங்கிக்கிட்டு,'நலம் தானா?'ன்னு கேட்டாங்க. அட! நம்ம நாட்டியப்பேரொளிபத்மினி! கைதட்டுனதுலே எங்க கையெல்லாம் அப்படியே சிவந்து போச்சுங்க. மொதநாள் ராத்திரிதான் அமெரிக்காவுலே இருந்து வரமுடிஞ்சதாம். களைப்பாத்தான் இருந்தாங்க. பாவம், வயசாச்சுல்லே? நகைச்சுவையாப் பேசுனாங்க.அன்னைக்குத்தான் யேசுதாஸ் அவர்களின் திருமண நாளாம். அவருடைய மனைவியும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தாங்க.கரகோஷமே கோஷம்...


இதெல்லாம் முடிஞ்சு, மறுபடி பாட ஆரம்பிச்சுப் பாடிக்கிட்டு இருந்தார். 'கிருஷ்ணா நீ பேகனே' பாட ஆரம்பிச்சாரோ இல்லையோ,நாட்டியப்பேரொளி எழுந்து நாட்டியமாட ஆரம்பிச்சுட்டாங்க. ஐய்யோ, எனக்குப் பாக்கியம்தான் போங்க. ரொம்ப இயல்பான,ஆரவாரமில்லாத அலங்காரமும், அபிநயமும், அதுக்கேத்த மாதிரி 'தேனாபிஷேகம் செஞ்சு கிடைச்ச குரல்'ன்னு சொல்வாங்க பாருங்க,அப்பேர்ப்பட்ட குரலில் சங்கீதமும் சேர்ந்து தேவலோகத்துலெ இருக்கறேன். ( அப்ப நான் இருந்த நிலைமையைச் சரியா வர்ணனைசெய்யத் தெரியலைங்க. மன்னிச்சுடுங்க)


பாட்டு நின்னப்பத்தான் மணியைப் பாக்கறேன், ரெண்டு! மாணவர்கள் கூட்டமெல்லாம் யேசுதாஸோடக் காலைத் தொட்டுக்கும்புடறாங்க.

வெளிவராந்தாவிலே வந்து உக்கார்ந்த பத்மினியம்மாகிட்டே ஆட்டொகிராஃப் வாங்க மாணவிகள் கூட்டம்மொய்க்குது. நாங்களும் எழுந்து பிரபா யேசுதாஸ் கிட்டே கொஞ்ச நேரம் பேசிட்டுக் கிளம்பினோம். அப்பத்தான் வெளிப்பக்கமாக் கண்ணை ஓட்டறேன். கட்டிடத்தை ஒட்டி பெரிய ஆறு ஓடுது. நிறைய மரங்கள். பசுமையா இருக்கு. பழங்காலக் கட்டிடமாச்சா,பெரிய பெரிய ஜன்னல்கள். பாட்டுக் கத்துக்கத் தோதான சூழ்நிலைதான். இது இருக்கற இடம் நம்ம சிங்காரச் சென்னையான்னு கூட நம்பமுடியலை.


வெளியே வந்து பார்த்தா,ச்சுள்'ன்னு வெய்யில். பசி வேற. சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு அருணாவோட வீட்டுக்குப்போகலாம். அவுங்க வீட்டுலே இருப்பாங்களான்னு கேட்டுக்கலாமுன்னு அவுங்களுக்கு ஃபோனைப் போட்டேன்.வீட்டு விலாசம் சொல்லுங்க, ஒருமணிநேரத்துலே வர்ரோமுன்னு சொல்லலாமுன்னா, இப்ப நாங்க எங்கெருந்துபேசறோமுன்னு அவுங்க கேட்டாங்க. இசைக்கல்லூரி வாசலில் நிக்கறொமுன்னு சொன்னதும், அசையாம அங்கேயே நிக்கணுமுன்னு ஒரே போடாப் போட்டுட்டாங்க.


ரெண்டே நிமிஷம்தாங்க. 'வாங்க துளசி'ன்னு குரல் கேட்டுத் திரும்புனா, 'அருணா'! அவுங்க வீட்டுக்குக் கூட்டிட்டுபோய்,ச்சுடச்சுட இட்டிலியும், காஃபியும்! தொட்டுக்கச் சட்டினி அரைக்கறேன்னு ஆரம்பிச்சாங்க. தேங்காய் வேணாங்க.மிளகாய்ப்பொடி இருக்கான்னு தெரியாத்தனமாக் கேட்டுட்டேன். இட்லிமொளகாய்ப்பொடி இல்லாத தென்னிந்திய வீடு இருக்கான்னு கேட்டுட்டு எடுத்துவச்சாங்க. இப்ப அவுங்க வீட்டுலே எந்த ஜாடியிலே அது இருக்குன்னு எனக்குத் தெரியுமே:-)))))


அன்னிக்குப் பூராவும் அந்தப் பாட்டும், நடனமும் மனசைவிட்டுப் போகாம சுத்திக்கிட்டே இருந்துச்சுங்க. ஏங்க, 'கொடுப்பினை'ன்னு சொல்றாங்களே, அது இதுதானா?


பி.கு: அன்னைக்கு எடுத்த படங்கள் கோபாலோட மடிக்கணினியிலே இருக்கு. அப்புறமா இங்கே போடறேன். சரியா? அதுவரைக்கும் 'பழங்களைப் பார்க்கலாமா?'