இந்த 'குரங்கு' எனக்கு 'டார்ட்டாய்ஸ்' ஏத்திவச்சிருச்சு.
'மூக்குக் கண்ணாடி' ஹைதராபாத் குரங்குகளைப் பத்திச் சொன்னப்ப எனக்கு நம்ம பெங்களூர்
குரங்குகளைப் பத்தி எழுதிரணுமுன்னு ஒரு வேகம் வந்துருச்சு!
அப்ப நாங்க இருந்தது பெங்களூர். வாசம் கோக்கோகோலா ஃபேக்டரி மாடிலே. அங்கேதான்
அப்ப கோபாலுக்கு வேலை. அங்கேயும் குரங்குங்க ஜாஸ்தி. இவர் அங்கே தனிக்குடித்தனம்.
எனக்கு மெட்ராஸ்லே வேலை. அதனாலே அப்பப்ப வீக் எண்ட், இல்லேன்னா ஒரு வாரம் லீவுன்னு
வண்டி ஓடிக்கிட்டு இருந்துச்சு. இவர் சமையல் செய்யறேன்னு எல்லாப் பாத்திரத்தையும் 'தீச்சு'வச்சுருப்பார்.
அடுப்புலே சோறாக்கிறென்னு வச்சுட்டுக் கீழே ஃபேக்டரிக்குப் போனா,' சோறு' வச்சது
மறந்துட்டு, ரெண்டு மணிநேரம் கழிச்சுவந்து பார்த்தா பின்னே எப்படி இருக்கும்?
நான் அங்கே போனப்ப எல்லாப் பாத்திரத்தையும் தேச்சு, மினுக்கி மொட்டைமாடியிலே காய வச்சுட்டேன்.
கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா 'எல்லாரும்' வந்து ஆளுக்கு ஒண்ணு எடுத்துப் பாத்துக்கிட்டு இருக்காங்க.
விரட்டுனவுடனே கையிலே இருக்கறதை அப்படியே எடுத்துக்கிட்டுப் போறாங்க. அப்புறம் மனுஷங்க எல்லாம் கத்துன
கத்தலிலே அங்கே இருந்து விசிறி அடிச்சுப் பல பாத்திரங்களிலே பெரிய சொட்டை!
அப்புறம் 'பாட்டிலிங் ப்ளாண்ட்'லே கோக் நிறைக்கும் போது சிலது சரியா முழுசும் நிறையாது. அதையெல்லாம்
விற்பனைக்கு அனுப்ப முடியாது. அதெல்லாம்தான் அப்ப எங்களுக்குக் குடிதண்ணி. ஒரு நாள் நான் கொஞ்சம்
குடிச்சுட்டுப் பாக்கியை ஜன்னலிலே வச்சுட்டு வேற வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். ஒரு கை 'மெதுவா' உள்ளெ நீண்டு
பாட்டிலை எடுக்குது. என்ன நடக்குதுன்னு பார்த்தா, 'ரொம்ப அமெரிக்கையா எடுத்து , சாய்ச்சு வாயிலே வைக்குது. முழுசும்
குடிச்சுட்டு அதே போல மெதுவா ஜன்னல் கட்டையிலே வச்சது.'
அப்பலே இருந்து அங்கங்கே அரை பாட்டில் கோக், ஃபாண்டா வைக்கிறது எனக்குப் பிடிச்சிருந்தது.
ஆனா, ஒரு நாள் அடுக்களைக்குள்ளே ஒரு பெரிய குரங்கு( இவர் இல்லே) வந்துருச்சு. துரத்தரதுக்காகக்
குச்சியை எடுத்துட்டு வந்தா, அது உடனே சாமர்த்தியமா அங்கே இருந்த கரண்டியைத் தூக்கிக்கிட்டு என்னைத்
துரத்த வந்துச்சு. நான் அலறுன்ன அலறல்கேட்டு கீழே வேலை செஞ்ச ஆளுங்கெல்லாம் வந்து ஒரு வழியா
அதை ஓட்டுனாங்க.
இப்படிப் பலதும் சொல்லலாம். அப்புறம் என்ன நடந்துச்சா?
யாருக்குத் தெரியும்? இவர் மூணு மாசத்துக்கு மேலே அந்த வேலையிலே தங்கலே! வேற ஊருக்குப் போயிட்டோம்!
Tuesday, August 30, 2005
டார்ட்டாய்ஸ் ஏத்துன குரங்கு!
Posted by துளசி கோபால் at 8/30/2005 09:12:00 AM 15 comments
Friday, August 26, 2005
நியூஸி வலைப்பதிவர் மகாநாடு.
அன்புள்ள சகவலைப்பதிவர்களே,
செப்டம்பர் மாதம்...செப்டம்பர் மாதம்ம்ம்ம்ம்ம் னு பாட்டுக் கேக்குதா?
வரும் செப்டம்பர் மாதம் 30, 31 தேதிகளில் நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த
தமிழ் வலைப்பதிவர்களின் மகாஆஆஆஆஆஆஆஆநாடு நடைபெற இருக்கின்றது.
தெள்ளுத் தமிழிலே எழுதறதுக்கு வராததாலே, அப்படியே என் போக்குலே
சொல்லிடறேன்.
இங்கே இந்த நாட்டிலே இருக்கற தமிழ் வலைப்பதிவர்களில் 66.6% நபர்கள் ஏற்கெனவே இதுலே
கலந்துக்கறதா 'உறுதிமொழி' கொடுத்துட்டாங்க. இந்த சிறப்பு மகாநாட்டுலே கலந்துக்க இன்னும்
வேற யார்யாருக்கு 'வசதி'ப்படுமோ அவுங்க கட்டாயம் தகவல் தெரிவிச்சா நல்லது.
எதுக்காகவா? எத்தனை ஜாங்கிரி, எத்தனை போண்டா தேவைப்படுமுன்னு தெரிஞ்சுக்கிட்டு
ஆர்டர் கொடுக்கத்தான்:-)))))))
அப்புறம் 'ஏன் முன்னாடியே சொல்லலை? தெரிஞ்சிருந்தா வந்திருப்போமே'ன்னு குத்தம்
சொல்லக்கூடாது,ஆமாம். சரியா இன்னும் 35 நாள் இருக்கு.
என்றும் அன்புடன்,
துளசி.
பி.கு: டிக்கெட்டுக்கு ஷ்ரேயா ஏற்பாடு செய்வாங்க. பணம் அவுங்களுக்கு அனுப்பிருங்க.
Posted by துளசி கோபால் at 8/26/2005 05:01:00 PM 36 comments
Thursday, August 25, 2005
தன் பேரை மறந்த ஈ....
நீங்கல்லாம் ச்சின்னப்புள்ளையா இருந்தப்ப இந்தக் கதையைப் படிச்சிருக்கலாம், இல்லேன்னா
யாராவது பெரியவுங்களொ,டீச்சருங்களோ பள்ளிக்கூடத்துலே சொல்லியிருப்பாங்க.
போட்டும், தெரியாதவங்களுக்காக இப்பச் சொல்லட்டுமா?
ஒரு ஊர்லே ஒரு(!)ஈ இருந்துச்சாம்.திடீர்னு ஒருநா அதுக்குத் தான் யாரு என்றது மறந்து போச்சாம்.
என்னடா செய்யலாமுன்னு யோசிச்சுப் பாத்துட்டு, அக்கம்பக்கம் இருக்கறவங்ககிட்டே கேக்கலாமுன்னு
போச்சாம். மொதல்லே பாத்தது, ஒரு மாட்டை. அதுகிட்டே போய் என் பேரு என்ன, நான் யாருன்னுச்சாம்.
அப்ப மாடு சொல்லுச்சாம் 'ம்மா ம்மா'னு!
அதுக்கப்புறம் ஆடு, கோழி, பன்னி,காக்கா,குருவின்னு எல்லார்கிட்டேயும் கேட்டுக்கிட்டேப் போச்சாம்.
அதுங்கெல்லாம் 'மே..... க்ளக்க்ளக்,ஹொய்ங்க் ஹொய்ங்க், காகா, ச்சிர்க் ச்சிர்க்' இப்படியெல்லாம்
சொல்லுச்சுங்களாம். தளர்ந்துபோன ஈ கடைசியிலே ஒரு குதிரை கிட்டேபோய் கேட்டுச்சாம்.
அப்ப குதிரை 'ஈஈஈஈஈஈஈஈ'ன்னு சொல்லுச்சாம். அப்பத்தான் ஈக்கு நினைவுக்கு வந்துச்சாம் தான் ஒரு 'ஈ' ன்றது!
சரி. இப்ப என்னாத்துக்கு இந்தக் கதைன்னு கேக்கறீங்களா? சொல்லிப்புடறேன்.
இந்தக் கதை நம்மகிட்டே கிடைச்சா, இஷ்டமுன்னா படிச்சுட்டு, இஷ்டம் இல்லேன்னா இது ஒரு கதையான்னு
நினைச்சுக்கிட்டு கடாசிருவோம். ஆனா இது கிடைச்சது ஒரு சினிமா இயக்குனர் கையிலே! விடுவாரா? இல்லே
விடத்தான் முடியுமா? பின்னே? அப்படியே சினிமாவா எடுத்துப்புடவேண்டியதுதான்! எடுத்தாச்சு!
தலையிலே அடிபட்டதுலே ஒரு ஆளு, (அவர்தாங்க கதாநாயகன்) பழைய நினைவுகளை மறந்துட்டார். அப்புறம்
தான் யாருன்றதை எப்படிக் கண்டுபிடிச்சார், யார் யாரு எப்படி உதவி செஞ்சாங்க, மொதல்லே ஏன் அப்படி தலையிலே
அடிபட்டுச்சு இதெல்லாம்தான் 'செல்வம்'ன்ற சினிமாவா வந்துருக்கு!!!!
இந்த சுதர்சனும், ஷ்ரேயாவும் ரொம்ப அலட்டிக்கிட்டாங்களே, நான் எப்பவும் பழைய படங்களையோ, இல்லே
தியேட்டரையே எட்டாத படங்களையோ மட்டும் பாக்கறேன்னு, அவுங்களுக்குப் பதில் சொல்லத்தான் இத்த
வேலைமெனக்கெட எழுதிக்கிட்டு இருக்கேன்.(ம்ம்ம்ம்ம்...ஆவேசம் வந்துச்சு!)
நான் என்ன புதுப் படங்கள் பாக்காத ஆளா? இல்லே ஒரேடியா பழைய பஞ்சாங்கமா? க்கும்......
புதுசுபுதுசாப் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேனப்பு! ஆனா, இதைப்பத்தியெல்லாம்'தம்பட்டம் அடிக்காமக்
கொஞ்சம் அடக்கிவாசிச்சுக்கிட்டு இருந்தேன்'. என்னை உசுப்பிவிட்டாங்க இவுங்க.ம்ம்ம்ம்ம்ம்ம்....
சாது மிரண்டால்......கதையாகிப்போச்சு இப்ப. சரி எங்கே விட்டேன்?ஆங்....
கதை, திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு, இயக்கம் இப்படி எல்லாமெ 'ஒன்மேன் ஷோ' செஞ்சுருக்கார்
அகத்தியன்.
ஒரு பாட்டுலே சிலவரிகளை அப்படியே நைசா நம்ம ஆண்டாளம்மாகிட்டே இருந்து சுட்டுட்டாரு. அவுங்களுக்கே வயசு
நாலாயிரத்துச் சொச்சமுன்னு யாரோ கொஞ்ச நாளுக்கு முன்னாலே அவுங்க பதிவுலே போட்டுருந்தாங்கல்லெ.
சாமிகூடவே போயிட்ட அந்தம்மா இதுக்காக திரும்பிவந்து 'கேஸ்'போடமாட்டாங்கன்ற நம்பிக்கைதானப்பு!
'திட்டாதே பேசாதே செல்லப்பெண்டாட்டி'ன்னு பாட்டுவந்தப்பவே எங்கேயோ கேட்டமாதிரி இருக்கேன்னு யோசிச்சேன்.
போட்டும், நம்ம ஆண்டாளம்மா அனுக்ரகம் இருக்கும்!!!
இசை நம்ம தேவா! பாட்டுங்க நல்லாவே இருக்கு. பின்னணி இசைகூட அருமை. ரீரிகார்டிங்ன்னுட்டு இரைச்சலா
இல்லாம வசனம் எல்லாம் தெளிவாக்கேக்குது.இல்லேன்னா மிருதுவாப் பேசற உமா வோட டயலாக் கேக்காதுல்லெ!
அந்த மாரியாத்தா பாட்டுதான் நீஈஈஈஈஈஈஈஈஈளமாப்போச்சு. கிளைமாக்ஸ்ம் இப்படித்தான் நீண்டுக்கிட்டே போகுது.
'அட, பஸ் போயிரப்போகுது, சீக்கிரம் ஏறுங்க'ன்னு நான் கத்தவேண்டியதாப் போச்சு!
சரி, படம் நல்லா இருக்கா இல்லையா? அத்த நீங்க பாத்துட்டுல்லெ சொல்லனும்:-)
Posted by துளசி கோபால் at 8/25/2005 11:56:00 AM 34 comments
Wednesday, August 24, 2005
காளிங்கன் எங்கே?
இப்ப என்ன திடீர்ன்னு காளிங்கனைப் பத்திப் பேச்சு? அது போட்டும், மொதல்ல இந்தக் காளிங்கன் யாரு?
அதைச் சொல்லுன்னு, யாருப்பா அங்கே குரல் விடறது?
கிருஷ்ணஜெயந்தி வந்துக்கிட்டே இருக்குல்லெ. இந்த வருசம் அந்தநாள் வெள்ளிக்கிழமையாப் போச்சு.
நல்ல கிழமைதான், ஆனா வேலைநாளாப் போச்சே. ஆற அமர கிருஷ்ணனைப் பத்திப் பேச நேரம்
வேணாமா? அதுக்காக நேத்தும் முந்தாநேத்துமா ரெண்டு நாளா பூஜை வச்சுருந்தாங்க. வழக்கம்போல
எனக்கும் அழைப்பு.( நான் இல்லாம இங்கே ஒண்ணும் நடந்துராது! அப்படி நடக்க விட்டுருவேனா?) நமக்கும்
ஒரு ஃபிஜி கனெக்ஷன் இருக்குல்லே!
இங்கே ஃபிஜியைச் சேர்ந்த இந்தியர்கள் ஒரு 'சத் சங்கம் ' வச்சிருக்காங்க. இதுக்குப் பேரு 'ராமாயண் மண்டலி'
வாராவாரம் ராமாயணம் படிக்கிறது, ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி, தீபாவளிக்கு ஸ்பெஷல் பூஜைன்னு
நடக்கும். கொண்டாட்டமுன்னா ச்சும்மா ஒரு நாளுலே முடியாது. எல்லாமே பத்து நாள் உத்சவம்தான்.
ரொம்ப ஒழுங்குமுறையா இது பலவருஷங்களாவே நடந்துக்கிட்டு இருக்கு.
1879வது வருஷம் மே மாசம் 14ஆம் தேதி 498 இந்தியர்கள் ஃபிஜி மண்ணில் காலடி எடுத்துவச்சாங்க. அந்தக்
காலத்துலே கப்பல் யாத்திரைதானே. அதுவும் வந்து சேர மூணுமாசம் ஆகுமாம். வர்றவழியிலேயே பலர்
கடல்பயணம் ஒத்துக்காம சீக்கு வந்து 'போயிட்டாங்க'ளாம்! போனதுபோக பாக்கி ஆளுங்கதான் வந்தது.எதுக்கு?
கரும்புக் காட்டுலே கூலி வேலைக்கு வெள்ளைக்காரங்களாலே கொண்டுவரப்பட்டவங்க. அப்புறமும் கொஞ்சம்
கொஞ்சமா ஆளுங்களைக் கொண்டுவந்துக்கிட்டே இருந்தாங்கதான். இந்தப் பழக்கம் 1916லே நின்னுபோச்சு.
அதுவரைக்கும் வந்தவுங்களோட எண்ணிக்கை எவ்வளவுன்னா கிட்டத்தட்ட அறுபதினாயிரம்!!!! போனவருசம்
மே மாசம் 125 வருசமானதைக் கொண்டாடுனாங்க.
எல்லா ஜனங்களுக்கும் உள்ள பொதுவான குணம் என்ன? எங்கே போனாலும் சம்பிரதாயத்தையும், பழக்க
வழக்கங்களையும் கூடவே கொண்டு போறதுதானே? அது இவுங்ககிட்டேயும் இருந்துச்சு. இந்த 126 வருசமா
விடாம இதைச் செஞ்சு ஒரு பாரம்பரியத்தைக் காப்பாத்திக்கிட்டு இருக்கறதைக் கட்டாயம் புகழத்தான் வேணும்.
அநேகமா எல்லாப் பூஜைகளுக்கும் குழந்தைகுட்டிங்களோட வர்றாங்க. பிள்ளைங்களும் இதையெல்லாம் பார்த்துப்
பழகறதாலேதான் இந்தச் சங்கிலி இதுவரை அறுந்துபோகாம தொடர்ந்துக்கிட்டு இருக்கு!
இவுங்க பேசறது போஜ்புரி வகை ஹிந்தி. சாமிப் பாட்டுங்களும் இதுலேயே இருக்கு. டோலக், தப்லா, ஹார்மோனியம்னு
இசைக்கருவிங்களோடதான் பஜனைப் பாட்டுங்க பாடறது. அநேகமா எல்லாமே ஒரே ட்யூன் தான். கணேசவந்தனம்,
அப்புறம் எந்த சாமியோட பூஜையோ, அதுக்குண்டான பாட்டு, ஆரத்தி, ராமாயணம்/பாகவதம் படிச்சு விளக்கம் சொல்றது
பிரசங்கம், கடைசியா சாந்தி சொல்லி முடிக்கிறது.
நேத்துப் பிரசங்கத்துலே கண்ணனோட சிறுவயது விளையாட்டுக்களைச் சொன்னாங்க. கோவர்த்தன மலையைக் குடையாப்
பிடிச்சது, பூதகியைக் கொன்னது, வெண்ணெய் திருடித்தின்னதுன்னு. இதுலே காளிங்கன் என்னும் பாம்பைக் கொன்னதும்
வந்துச்சு.
ஒரு மடுவிலே காளிங்கன் என்னும் விஷப் பாம்பு இருந்துச்சு. அதோட மூச்சுக் காத்துலேயும் கடுமையான விஷம்.
அதனாலே அந்தப் பக்கம் வர்ற ஜீவராசிங்க எல்லாமே மூர்ச்சை போட்டு விழுந்துருமாம். அந்த மடுவிலே இருக்கற
தண்ணியைத் தப்பித்தவறிக் குடிக்கிற ஆடு, மாடுங்க எல்லாமே மேலே போயிரும். அவ்வளவு விஷம்.
இதையெல்லாம் பார்த்த கண்ணன் ஒரு நாள் அந்த மடுவிலே விழுந்த பந்தை எடுக்குற சாக்குலே அங்கே போறார்.
அந்தத் தண்ணிக்குள்ளெ குதிச்சு அந்தப் பாம்புகூட சண்டைப்போட்டு அதைக் கொல்லப்போறார். அப்ப அந்தப் பாம்போட
மனைவி தனக்கு மாங்கல்யப் பிச்சை(!) கொடுக்கணுமுன்னு வேண்டிக்கறதாலே, இந்த கோகுலத்துலே ( கண்ணனோட ஊர்)
இனி இருக்கக்கூடாது. வேற எங்கேயாவது போயிடணுமுன்னு சொல்றார். அதேபோல அவுங்க போயிட்டாங்க.
அதுலே இருந்து கோகுலத்துலே பாம்பே கிடையாது. இதைவச்சுப் பார்த்தா ஃபிஜிதான் 'கோகுலமா' இருந்திருக்கணும்.
அங்கேதான் பாம்பு கிடையாதேன்னு சொன்னார். அப்ப அந்த காளிங்கன் போன இடமோ? ஒரு வேளை அது ஆஸ்தராலியாவா
இருக்ககூடும். அங்கேதான் விஷப் பாம்புகளும், விஷச் சிலந்திகளுமா இருக்கு. இதையும் அவரேதான் சொன்னார்.
அப்பத்தான் நான் நினைச்சேன், ஒருவேளை கோகுலம், நியூஸியோன்னு. இங்கேயும்தான் பாம்பு இல்லை!!! அதுமட்டுமா
கோபாலும், நம்ம கோபாலகிருஷ்ணனும்கூட இருக்காங்களே:-)))))
பி.கு: பண்டிகைக் காலங்கள் வந்துக்கிட்டு இருக்கு. அதனாலே பெரியமனுஷியா, லட்சணமா பல விசேஷங்களிலே
கலந்துக்கிட வேண்டிய கட்டாயம்.
எல்லோருக்கும் 'மூத்தோர் சொல்' வேண்டியிருக்கே:-))))
அதனாலே அப்பப்ப இதுமாதிரி எதாவது எழுதநேரிடும். கோச்சுக்காதீங்க.
Posted by துளசி கோபால் at 8/24/2005 02:33:00 PM 13 comments
Monday, August 22, 2005
டியர் டாக்டர்.......
எனக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு. சந்தோஷமா இருக்கவேண்டிய இந்த சமயத்துலே எனக்கு
மனசுக்குள்ளெ பயமா இருக்கு. காரணம் நான் கல்யாணம் செய்யப்போறவங்க என்னைவிட உயரம் கூடுதல்.
அது மட்டுமா என்னைவிட அழகுகூடுதல். நல்ல நிறம் வேற.
இன்னும் ஒரு மாசம்தான் இருக்குக் கல்யாணத்துக்கு. அதுக்குள்ளே என்னை அழகா மாத்த முடியுமா? நாலு வாரத்துலே
உயரமா வளர்றதுக்கு ஏதாவது மருந்து இருந்தாச் சொல்றீங்களா? எதுவுமே இல்லைன்னா குறைஞ்ச
பட்சம் என் கறுப்பு நிறம் மாற எதாவது வழி இருக்கா? இது எதுவுமே சாத்தியம் இல்லைன்னா.... என் வாழ்க்கைக்
கஷ்டமாப் போயிரும். என் மனைவி என்னை மதிக்க மாட்டாள். உடல் அழகைக் கொண்டு ஒண்ணும் சாதிக்கலேன்னாலும்
என்னுடைய மூளையை, அறிவுத்திறனை வச்சு அவளை எப்படியாவது என் 'முதலிரவு'லெயே அடக்கிரணும். இதுக்கு
எதாவது வழி இருந்தாச் சொல்லுங்க.இது என் வாழ்க்கைப் பிரச்சினை. சீக்கிரமா நீங்க வழக்கமா பதில் சொல்லுற
வார இதழில் பதில் எழுதுங்க. சீக்கிரம் சீக்கிரம்.
இப்படி ஒரு மனுஷன் இருப்பானோ? இருக்கானே! எக்கச்சக்கமான தாழ்வு மனப்பான்மை. அதனாலே வர்ற கஷ்டங்கள்.
வீட்டில வயசுக்கு வந்த தங்கை, வேலை கிடைக்காத தம்பி, விதவைத் தாயார் இவுங்களையெல்லாம் சமாளிச்சுப்
புதுமனைவியோட இதயத்தை வெல்லறதுக்கு இவன் எடுக்குற ஒவ்வொரு நடவடிக்கையும் அபத்தமா முடிஞ்சிருது.
புதுமனைவியை ஒரு சினிமாவுக்குக் கொண்டு போறான். அங்கேயும் சினிமாவைப் பார்க்காமல் தன் மனைவியை
யாராவது எதாவது செஞ்சிருவாங்களொன்னு கவலை. சாதாரணமா காலை முன் சீட்டில்( மனைவி உக்கார்ந்திருந்த சீட்)
வச்ச ஒரு ஆளிடம் சண்டை போட்டு, பாதியிலேயே தியேட்டரைவிட்டு மனைவியோடு கிளம்பிவிடுகிறான்.
வீட்டுக்கு வந்த மனைவி, 'நல்ல சினிமா. பாதியிலேயே கூட்டிட்டு வந்துட்டீங்க. எனக்கு மோகன்லால் படம் ரொம்பப்
பிடிக்கும். எவ்வளவு அழகான நடிகன். எவ்வளவு அருமையான நடிப்பு'ன்னு யதார்த்தமா சொல்லப்போக இவனோட
தாழ்வுமனப்பான்மை இன்னும் கூடிப்போகுது. மனைவி மேல சந்தேகம், ரொம்ப பொசஸிவ்னஸ்ன்னு எல்லாம் கூடிக்கூடி
மனநிலை மருத்துவரைப் பார்க்கும் அளவுவரைபோய், கொஞ்சநாள் சிகிச்சையெல்லாம் எடுத்துக்கிட்டுக் குணமாகி(!)
வந்து சேர்றான்.
குணமானானா? தெரிஞ்சுக்கணுமுன்னா நீங்க பார்க்க வேண்டியது,'வடக்கு நோக்கி யந்திரம்'ன்ற மலையாளப் படத்தை.
இத்கு 1989லே வந்த படம். நம்ம ஸ்ரீநிவாசனோட கதை, இயக்கம் & நடிப்பு. சந்தேகப் பிராணியா இருக்கற கணவனா
ரொம்ப இயல்பா நடிச்சிருக்கார். அவருக்கு ஆலோசனை(!) சொல்ல ஒரு நண்பரும் இருக்கார். அவர்தான் இன்னொசெண்ட்.
படத்தோட தலைப்பே விஷயத்தைச் சொல்லிடுது இல்லே? எப்பவும் வடக்கு நோக்கி இருக்குற இயந்திரம் என்ன?
அதே போல 'கொக்குக்கு ஒன்றே மதி'ன்னு இருக்கானாம்!!! பாவம் தானே இந்தமாதிரி ஆட்களுக்கு வாழ்க்கைப் பட்ட
மனைவிகள்?
Posted by துளசி கோபால் at 8/22/2005 02:43:00 PM 12 comments
Friday, August 19, 2005
குப்புசாமி பூஜை?
'அடுத்த சனிக்கிழமை குப்புசாமி பூஜை இருக்கு நீங்க கட்டாயம் கலந்துக்கணும்.'
நம்ம ருசிகாவோட பாட்டி இந்தியாவுலெ போனவாரம் இறந்துட்டாங்க. ருசிகாவும்
அவுங்க பாட்டியும் ரொம்ப க்ளோஸ். அதனாலெ எங்க வீட்டுலே ஒரு சின்ன பூஜைக்கு ஏற்பாடு
செஞ்சிருக்கோம். பெரூசா ஒண்ணுமில்லை. பகவத் கீதை 18வது அத்தியாயம் படிக்கறோம்.சொன்னது
ருசிகாவோட வீட்டுக்காரர்.
அடடா, பாட்டி இறந்துட்டாங்களா? ( ஐய்யோ இதென்ன பாட்டிங்களுக்குப் போறாத காலமா?
இப்பத்தான் நம்ம ரம்யாவோட பாட்டி இறந்துட்டாங்க. அதுக்குள்ளெ ருசிகாவோட பாட்டி......த்சு த்சு த்சு)
கட்டாயமா பூஜைக்கு வர்றோம். போனோம். எல்லாம் நல்லபடியா நடந்தது.
அப்பத்தான் தெரிஞ்சவுங்க ஒருத்தர் குப்புசாமி பூஜைக்கு நம்மை அழைச்சது!
இந்தக் குப்புசாமி யார்? எதுக்காக இவருக்குப் பூஜை? இதை யார் நடத்துறது? மேல்விவரம் வேணுமேன்னு
கொஞ்சம் 'ஆராய்ஞ்சது'லெ கிடைச்சது இதுதான்.
வெள்ளைக்காரர்கள் ஃபிஜித் தீவுகளிலே, கரும்புக்காடுகளிலே வேலை செய்யறதுக்கு இந்தியர்களைப்
பிடிச்சுக்கிட்டு வந்தாங்கன்னு உங்களுக்குத் தெரியுமுல்லே. 'பாரதியின் கரும்புத் தோட்டத்திலே' நினைவு
வருதா? அப்பத் தமிழ்நாட்டுலே இருந்து வந்தவங்களிலே, (ஒரு ரெண்டு தலைமுறைக்குப் பிறகு) கொஞ்சம் விவரமான
மனிதரா இருந்த குப்புசாமி 'சங்கம்'என்ற அமைப்பை உருவாக்கி இருக்கார். இதுதான் ஃபிஜியின் முதல் தமிழ்ச் சங்கம்!
மொழியைத் தக்கவச்சுக்க வேண்டி உண்டானது. இந்தக் காலக்கட்டத்துலேதான் மூணாம் தலைமுறை ஜனங்க
தமிழை மறக்கவேண்டியதா ஆயிருச்சாம். மொதமொதல்லெ வந்தவங்க வடக்கத்திக்காரங்கன்றபடியாலே ஹிந்தி மொழி
ஏற்கெனவே அங்கெ இடம் புடிச்சிருச்சு. அதுக்கப்புறம் வியாபாரம் செய்யவந்த குஜராத்திங்களும் ஹிந்தியையே பேச
( ஆனா வீட்டுலே மட்டும் கட்டாயம் குஜராத்திதான் பேசுனாங்க, பேசறாங்க, பேசுவாங்க) ஆரம்பிச்சதாலே அங்கே ஹிந்தி
ஒரு தேசிய மொழியாவும் ஆயிருச்சு.
புள்ளைங்க தமிழ் படிக்கவும் பேசவும் வழி செய்யணுமுன்னு இந்த 'சங்கம்'தான் அங்கங்கே பள்ளிக்கூடங்களை
ஆரம்பிச்சது. இந்தப் பள்ளிக்கூடங்களிலே தமிழ் வழிக் கல்வி தொடங்கினாங்க. 'சங்கம் ஸ்கூல்' லே தமிழ் சொல்லிக்
கொடுக்க தமிழ்நாட்டிலிருந்தே அந்தக் காலத்துலே சில ஆசிரியர்கள் வந்தாங்க.ஆனா காலக்கிரமத்துலே அவுங்க
எல்லோரும் ஹிந்தி பேசக் கத்துக்கிட்டாங்க. இப்ப ஆறேழு தலைமுறைக்குப் பிறகு 'ஹம் பி மந்த்ராஜி ஹை. மகர்
மந்த்ராஜி நை ஜானே.நானிகோ சக்கே'ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க தமிழ்க்காரப் புள்ளைங்க. இந்த 'மந்த்ராஜி'ன்னா
என்னவா? மதராஸி. தமிழுக்கு இவுங்க வச்சுருக்கற பேரும் மந்த்ராஜி. அட தேவுடா!
ஆகக்கூடித் தமிழ்ச் சங்கத்தை ஸ்தாபித்தவர்தான் குப்புசாமி. அவர் மறைந்தபிறகு அவரது சேவையைப் பாராட்டி
அவருக்காக ஒரு பூஜையும் செய்ய ஆரம்பித்து இதுநாள்வரை அதை விடாமல் செஞ்சுக்கிட்டும் இருக்காங்க. நிறைய
ஃபிஜி ஆட்கள் குறிப்பாக மந்த்ராஜிகள் இங்கே நியூஸிக்கு குடியேறியதும், இங்கேயும் அந்த 'சங்கம்' வந்துவிட்டது.
எப்படியாவது ஒரு கோயில் கட்டிவிடவேண்டுமென்பதுதான் இப்போதைக்கு இவுங்க குறிக்கோள்.அதே சமயம்
இனியாவது மந்த்ராஜிகளுக்கு மந்த்ராஜி கற்றுக்கொடுக்கவேணும் என்று இப்ப இதனோட தலைவர் முயற்சி செய்யறார்.
பாவம், அவருக்கும் தமிழ் பேச வராது(-:
சனிக்கிழமை வந்தது. குப்புசாமி பூஜைக்குப் போனோம். அங்கெ அவருடைய உருவப்படம்( ஃபோட்டோ)
அலங்கரிச்சு வச்சிருந்தாங்க. கீழே ஜமக்காளம், பாய் எல்லாம் விரிச்சு எல்லோரும் உக்கார்ந்து சாமிப் பாட்டுக்களைப்
பாடிப் பஜனை நடந்தது.அது முடிஞ்சதும் தீபாராதனை. அவுங்கவுங்க வீடுகளிலே இருந்து கொண்டு வந்திருந்த
பிரசாதங்களைப் படைச்சிட்டு எல்லோருக்கும் விநியோகம் செஞ்சாங்க. அது முடிஞ்சவுடனே 'சங்கம்' ஏற்கெனவே
சமைச்சு வச்சிருந்த சாப்பாடு. ஃப்ரைய்டு ரைஸ், வெள்ளைச் சாதம், பருப்பு, பூரி, தக்காளிச் சட்டினி, பரங்கிக்காய்
கறி,ஆலூ பைங்கன்( கத்தரிக்காய்+உருளைக்கிழங்கு) அப்புறம் ஒருசாலட். இதுதான் இங்கே ஃபிஜி மக்கள்கிட்டே
எப்பவும் இருக்கற செட் மெனு!
அந்த மொத்தக் கூட்டத்துலேயும் இந்தியாவிலிருந்து வந்த ஒரே குடும்பம் நாங்கதான்.அதனாலே விசேஷ மரியாதை.
பின்னே சும்மாவா? தமிழ் பேசற ஆளுங்களாச்சே!
கோயில் கட்ட, வேண்டிய உதவியைச் செய்யறதாச் சொன்னார் கோபால். இது நம்ம ரொம்பநாள் ஆசையாச்சே.ஊர்கூடித்தானே
தேர் இழுக்க முடியும்? தனியா நடக்கற காரியமா என்ன?
நானும் இங்கே நம்ம தமிழ்ச்சங்கத்துலே தமிழ்ப்பள்ளி நடக்கறதைச் சொல்லி அங்கே வந்து சேரச் சொன்னேன். இதுலேயும்
ஒரு கஷ்டம் இருக்கு. நம்ம தமிழ்ச் சங்கத்துலே எல்லோருமே தமிழ்ப் பேசத்தெரிஞ்சவுங்க. வீட்டுலே தமிழ் கதைக்கறதாலே
பிள்ளைங்களும் அதைக்கேட்டு வளர்ந்து வராங்க. இந்த ஃபிஜி ஜனங்க யாருமே தமிழே பேசாத குடும்பம். வாரம் ஒரு நாள்
மட்டும் தமிழ் வகுப்புக்கு ஒரு மணிநேரம் வர்றதாலே எவ்வளவு தூரம் கத்துக்க முடியும்? எவ்வளவு ஆர்வம் இருக்கும்னெல்லாம்
தெரியாது. மேலும் அவுங்களுக்கு விளக்குறப்ப ஆசிரியருக்கு ஹிந்தி தெரிஞ்சிருக்கறது ஒரு அட்வாண்டேஜ்.
இதையெல்லாம் யோசிச்சுப் பார்த்துட்டு, 'அவுங்களுக்குத் தனியா தமிழ் சொல்லிக் கொடுக்கணுமுன்னா நான் உதவறேன்'னு
சொல்லிட்டு வந்தேன். ஏதோ நம்மாலான உதவி. நீங்க என்ன சொல்றீங்க? தமிழ் சொல்லிக் கொடுத்தரலாமா?
Posted by துளசி கோபால் at 8/19/2005 02:18:00 PM 20 comments
Thursday, August 18, 2005
நியூஸி முதல்!!!!
இங்கே தேர்தல் வரப்போகுது. எல்லா நாட்டுலேயும் இருக்கற வழக்கமா அந்தந்தக் கட்சிங்க அவுங்கவுங்க
பாரம்பரியத்தைச் சொல்லிக் கூவிக்கிட்டு இருக்குதுங்க. என்ன நம்ம ஊர் மாதிரி பொதுக்கூட்டமெல்லாம்
கிடையாது. கட்சிக் கொள்கையைப் பத்தி அழகா ப்ரோஷர், (இதுக்குத் தமிழ் என்ன?) அச்சடிச்சு வீட்டு மெயில்
பாக்ஸ்க்கு வந்துருது. இந்த வருஷம்தான் அங்கங்கே பில்போர்டு வைக்க ஆரம்பிச்சு இருக்காங்க. இன்னும்
வருசம் போகப்போக போஸ்ட்டர் கலாச்சாரம் வந்துருமுன்னு நினைக்கிறேன்.( ஒரு அச்சாபீஸ் வச்சுரணும்.
செமலாபம் பாக்கலாம்!)
இங்கே நேஷனல், லேபர்னு ரெண்டு பெரிய கட்சிங்கதான் நாங்க இங்கே வந்தப்ப இருந்தது. இந்த 18 வருச
காலத்துலே ச்சின்னச் சின்னதா அதுலே இருந்து பிரிஞ்சவுங்க, அதென்ன சொல்றது, தாய்க் கட்சி/கழகம்ன்னா?
வெவ்வேறு கட்சி ஆரம்பிச்சுட்டாங்க. அப்படியே எலக்ஷன்லெ நின்னு கிடைச்ச சில சீட்டுக்களை வச்சுக்கிட்டு
கூட்டணியா அப்பப்ப அங்கங்கே சேர்ந்துக்கிட்டுதான் இங்கேயும் இப்ப ஆட்சி நடந்துக்கிட்டு இருக்கு. பேரம்
எவ்வளவு தூரம் போகுதுன்னு சரியாத் தெரியலை:-)))
ஆக்ட், கிரீன், நியூஸிலெண்ட் ஃபர்ஸ்ட், கிறிஸ்டியன் ஹெரிடேஜ், அல்லயன்ஸ், மவோரி, டெஸ்டினி நியூஸிலண்ட் ,
அயோடீரோவா லீகலைஸ் கேன்னிபஸ் பார்ட்டி இப்படி சில்லரையாவும் மொத்தமாவும் 18 கட்சிங்க! இத்துனூண்டு
நாட்டுக்கு இத்தனை அடுக்குமா?
இதுலே நியூஸிலெண்ட் ஃபர்ஸ்ட் கட்சியோட பல கொள்கைகள் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. இதோட தலைவர்
வின்ஸ்ட்டன் பீட்டர் என்றவர். இவர் எதைப் பத்தியும் கவலைப்படாம வெளிப்படையாப் பேசறவர். அதோடு இந்த
'வழவழா கொழகொழா' பேச்செல்லாம் இல்லை. ஒரே கட் அன்ட் ரைட்டுதான். அதனாலே இவர் ஒரு இனவாதின்ற
மாதிரி ஒரு இமேஜ் முந்தி உருவாச்சு. ஆனா அது உண்மை இல்லை. இவுங்க கட்சியோட கொள்கைகள் உண்மைக்குமே
நியாயமானதாகவும் இருக்குன்றதாலே எனக்கு இதுலே ஒரு ஈடுபாடு வந்துருச்சு.
ரெண்டு நாளைக்கு முன்னாலே இவுங்க 'தலை'க்கு ஒரு இமெயில் தட்டிவிட்டேன், இன்னும் கொஞ்சம் விலாவரியா
விளக்கம் வேணுமுன்னு! இப்பக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே ஒரு ஃபோன் வந்துச்சு. எனக்கு நேரம் இருந்தா,
'கட்சிக் கொள்கை' விளக்கம் சம்பந்தமா வந்து பாக்கறதாக 'ப்ரையன் ராஸ்வெல்'ன்றவர் பேசுனார். எப்பன்னு கேட்டதுக்கு
ஒரு 15 நிமிஷத்துலே வரேன்னார். சரி வாங்கன்னு சொன்னேன். அட்ரஸ் தெரியுமான்னு கேட்டதுக்கு, அவுங்க தலை
என் மெயிலை ஃபார்வேர்டு பண்ணியிருக்கார்னு சொன்னார்.
வந்தவர்தான் இங்கே எங்க பகுதிக்கு எலக்ஷன்லே நிக்கறவராம். ஒரு ஆள், அம்பு இல்லாம 'ஜிலோ'ன்னு தனியாத்
தானே காரை ஓட்டிக்கிட்டு வந்தார். இதுலே அதிசயம் ஒண்ணுமில்லேதான். இங்கெல்லாம் 'அண்ணன் வாழ்க'ன்னு
கூவறதுக்கு கூட்டம் (இதுவரைக்கும்) இல்லைதானே?
ஒரு இந்தியர் அதுவும் பெண்மணி (என்னைப் பத்தி இவருக்கு இன்னும் தெரியாதுல்லெ) இந்தக் கட்சியிலே
ஆர்வமா இருக்கறது இவருக்கு ரொம்பவே ஆச்சரியமா இருக்காம். விளக்கவுரையெல்லாம் கொடுத்துட்டு, 'கட்சியிலே
அங்கத்தினரா சேர்ந்துடறீங்களா'ன்னு கேட்டார். நான் மதிப்பா, 'இப்ப இல்லை. இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாத்
தெரிஞ்சுக்கிட்டு அப்புறம்'னு சொன்னேன். எதா இருந்தாலும் ஒருஃபோன் போட்டீங்கன்னா, உடனெ நேர்லேவந்து
விளக்கம் சொல்வோம். தலைவரைச் சந்திக்கணுமுன்னாலும் சொல்லுங்கன்னார்!
'உங்க கணவருக்கு இந்தக் கட்சியிலே விருப்பம் இருக்கா'ன்னு கேட்டதுக்கு, 'எனக்குத் தெரியாது'ன்னு சொன்னேன்.
கோபால் என் கிட்டே ஏற்கெனவே சொல்லியிருக்கார், 'நீ மட்டும் இந்தக் கட்சியிலே சேர்றேன்னு சொல்லு, 'லட்டு'
மாதிரி எடுத்துக்குவாங்க'ன்னு!
இன்னும் சரியா 4 வாரம்தான் இருக்கு,தேர்தலுக்கு. அதுக்குள்ளே தெரிஞ்சுக்கவேண்டிய விவரமெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா
கட்சிப் பிரச்சாரத்தை ஆரம்பிச்சு( எல்லாம் நம்ம வீட்டுலேதான்!) இன்னும் ஒரு ஓட்டுக்கு வழி செஞ்சுரலாம்!
Posted by துளசி கோபால் at 8/18/2005 02:54:00 PM 19 comments
Wednesday, August 17, 2005
ரெடிமேட் பகுதி 9
என்னங்க ஆச்சு? ஏன் இப்படி இருக்குறீங்க? ஏது இந்தப் பழைய கட்டில்? மத்தியானம் சாப்புட்டீங்களா? கேள்வி
மேலே கேள்வியா அடுக்கிக்கிட்டே போறேன். பதிலே வரலை. கவலையாப் போச்சு. அப்புறம் மெள்ள மெள்ள
விஷயம் வெளியே வருது.
காலையிலே அந்த வீட்டுக்குப் போனாரில்லையா? அப்ப அந்த ஓனர் வெள்ளையடிக்க ஒரு ஆளையும் ஏற்பாடு
செஞ்சாராம். ரெண்டு பேருமாப் போய் ஒரு கடையிலே டிஸ்டம்பர், அதைக் கலக்க ஒரு வாளி, அடிக்கறதுக்கு
மட்டை( பிரஷ்?) எல்லாம் வாங்குனாங்களாம். பக்கத்துக் கடையிலே இரும்புக் கம்பிலே செஞ்ச கட்டில்,
மேசை, நாற்காலின்னு வித்துக்கிட்டு இருந்தாங்களாம். நமக்கும் ஒரு கட்டில் வேணுமே,
இப்பக் கூட ஒருஆள் இருக்கறப்பக் கொண்டு போயிடறது சுலபமாச்சேன்னு இவர் ஒரு கட்டிலையும் வாங்கிக்கிட்டு
அந்த வீட்டுக்குப் போய் வெள்ளை(!)யடிக்க ஆரம்பிச்சாங்களாம். சுவர் மேல்புறம் கைக்கு எட்டலைன்னதும் அந்தக்
கட்டிலையே ஏணியாட்டம் உபயோகிச்சிருக்காங்க. சீக்கிரம் வேலை முடியட்டுமுன்னு இவரும் கூடவே வேலை செஞ்சிருக்கார்.
எல்லாம் முடிஞ்சு பக்கெட்டைக் கழுவறப்ப, வீட்டு ஓனரோட மகன் வந்து அவுங்க அப்பாகிட்டே ஒரே சண்டையாம்,
எப்படி அந்த வீட்டை வாடகைக்கு விடப்போச்சுன்னு? கடைசியிலே மகன் தான் ஜெயிச்சதாம்(!) வீடு நமக்கு இல்லைன்னு
ஆகிப் போச்சு. நம்ம செலவுலெ அந்த வீட்டுக்கு வெள்ளையடிக்கணுமுன்னு இருந்திருக்கு! 'நான் அடிக்கறமாதிரி அடிக்கறேன்,
நீ அழுவறமாதிரி அழு'ன்னுஒருவேளை எல்லாம் 'செட்டப்'போ?
ரெண்டு மாசம் கழிச்சு ஒரு நல்ல இடம் கிடைச்சது, எங்க இவர் வேலைசெய்யற கம்பெனிக்குப் பக்கத்துலே! ஒரு அஞ்சாறு
நிமிஷம் சைக்கிள்சவாரி. பங்களா டைப் வீடு. தனிக் காம்பவுண்டு. கீழே நாலு அறை, பாத் ரூம், டாய்லெட். மாடியிலே
மூணு அறை, தனியா பாத் ரூம், டாய்லெட். தரையெல்லாம் மொசைக். அட்டகாசமான வீடு. இவ்வளவு பெரிய வீடான்னு
அசந்துராதீங்க. இதுலே கீழே மூணும், மாடியிலெ ரெண்டுமா மொத்தம் அஞ்சு குடித்தனங்க.
நம்மது மாடி. ரெண்டு ரூம். ஒண்ணு ரொம்பப் பெரூசு. இதுலேயே ஒரு ச்சின்ன பாத் ரூம் அட்டாச்சுடா இருந்துச்சு.
அடுத்த ரூம் இதைவிடச் சின்னது.ஆனா அங்கே ஒரு பெரிய பால்கனி( மேலே கூரை) இருந்துச்சு. மாடியிலே இருந்த
இன்னொரு ரூமுக்கு பால்கனிக்குப் பதிலா ஒரு மொட்டைமாடி இருந்துச்சு. ரெண்டு குடித்தனத்துக்கும் பொதுவா
ஒரு பெரிய பாத்ரூமும் தனியா ஒரு டாய்லெட்டும். அந்தப் போர்ஷனிலே ஒரு தென்னிந்தியர்( தெலுங்குக்காரர். அவர் மனைவி
பார்ஸி இனத்தைச் சேர்ந்தவங்க) இருந்தார்.
நாங்க அங்கெ குடி போன அன்னைக்கு மாடியிலெ வேற யாருமெ இல்லை. எலெக்ட்ரிக் கனெக்ஷனும் இல்லை.
மெழுகுத்திரி வச்சுக்கிட்டு, ராத்திரி சாப்பாட்டைச் சாப்புட்டுக்கிட்டு இருக்கோம். மாடிக் கதவை 'தடதட'ன்னு யாரோ
தட்டுறாங்க. யாருன்னு போய்ப் பார்த்தா ஒருவயசான அம்மா, ஒரு இளம் பெண் கையிலே குழந்தையோட நிக்கறாங்க.
யாரு என்னன்னு விசாரிச்சப்பத்தான் தெரியுது, அவுங்கதான் நம்ம சகக் குடித்தனக்காரங்கன்னு. மூணுவாரமே
ஆகியிருந்த அழகான ஆண் குழந்தை,பேரு கேஷவ். 'கலப்புக் கல்யாணம் செஞ்சுக்கிட்டது இவுங்க அப்பாவுக்கு
இஷ்டமே இல்லை. வீட்டுலேயே சேர்க்கமாட்டேன்னு சொல்லிட்டார். நாந்தான் ஆஸ்பத்திரியிலே இருந்து கூட்டிக்கிட்டுப்
போய் தெரிஞ்சவுங்க வீட்டுலெ வச்சு மூணுவாரம் பார்த்துக்கிட்டேன். இனிமேயும் அங்கெ இருக்கமுடியாது.அதான் கொண்டு
விட வந்தென். நீங்கதான் பார்த்துக்கணும்'னு சொல்லிட்டு அந்தம்மா போயிட்டாங்க. நைட் டூட்டிக்குப் போயிருந்த
தெலுங்குக்காரர் காலையிலே வந்ததும் குழந்தையையும் மனைவியையும் பார்த்து ஆச்சரியமாயிட்டார்.
கேஷவ் எங்ககூட ரொம்பவே ஒட்டிக்கிட்டான். தவழ ஆரம்பிச்சதும், காலையிலே மொத வேலையா நம்ம ரூம் கதவைத்
தட்டுவான். அவனோட அம்மா அவனைக் கண்டுக்கவே மாட்டாங்க. நாந்தான் இடுப்புலே தூக்கிவச்சுக்கிட்டு வீட்டுவேலையெல்லாம்
செஞ்சுக்கிட்டு இருப்பேன். கேஷவோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வந்துரும். சிலநாளுலே
சண்டை முத்திப் போய் அம்மாவை மாடிப்படிக்கு வெளியே தள்ளிட்டுக் கம்பிக்கதவை சாத்திடுவார் அப்பா. அந்தம்மா
தங்தங்குன்னு கதவே உடையறமாதிரி தட்டும். இந்த மாதிரி சமயத்துலே எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியாது.
அதிர்ஷடம் என் பக்கமுன்னா நான் சமையல்( அந்தப் பெரிய ரூம்)அறையிலே இருப்பேன். சிலநாளுலே பால்கனி
இருக்கற ரூமிலே இருந்தேன்னா அவ்வளவுதான். இந்த ரெண்டு ரூமுக்கும் இடையிலேதான் மாடிப்படிக் கதவு இருக்கு.
வெளியே வரப் பயந்துக்கிட்டு உள்ளேயே இருப்பேன்.அடுப்பிலே வச்சிருக்கறதெல்லாம் தீஞ்சு போயிரும். நல்லவேளை,
நம்மகிட்டே அப்ப கெரோசின் ஸ்டவ்தான். வாரம் மூணு இல்லேன்னா நாலுதடவை சண்டை. எப்ப ஆரம்பிக்குமுன்னே தெரியாது.
அவுங்க ரூமிலே பாத்திரம் வீசியடிக்கிற சத்தம் வந்தவுடனே நான் சமையல் அறைக்குள்ளெ போயிருவேன். அங்கே இருந்து
பார்த்தா ரெயில் தண்டவாளம் தெரியும். போறவர்ற ரெயிலுங்களை வேடிக்கைப் பார்க்கலாம்.
கீழே இருக்கற குடித்தனக்காரங்களோட நட்பு வந்தது. பஞ்சாப், கர்நாடகா, குடகுன்னு மூணு பேரும் மூணு பாஷைக்காரங்க.
எல்லோருமே எஞ்சினீயருங்க. அதான் ரோடைக் கிராஸ் செஞ்சவுடனே ஹடப்ஸார் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் இருக்கே.
இதுலே கர்னாடகாக்காரர் கொஞ்சம் வயசானவர். ஆனா அப்பத்தான் கல்யாணம் கட்டுனவர். தங்கைகளுக்குக் கல்யாணம்
முடிச்சு வச்சுட்டுத்தான் இவரோட கல்யாணம் ஆச்சாம். பஞ்சாபிங்களுக்கு ஒரு மூணுமாசக் குழந்தை இருக்கு.
நம்ம ஃபேவரைட் அந்தக் குடகுக்காரங்கதான்.மூணு புள்ளைங்க. மூத்தது பையன். மத்த ரெண்டும் பெண்குழந்தைங்க.
மூத்தது ரெண்டும், மூணாவதும், ஒண்ணாவதும் படிச்சுக்கிட்டு இருக்குங்க. ச்சின்னவ கவிதாவுக்கு வயசு ரெண்டரை.
அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு,பொம்மையாட்டம். மெதுமெதுவா மாடிப்படியேறி வந்துரும்.அவுங்க அம்மா
பேரு மோஹினி. பேருக்கேத்த மாதிரியே உருவம். கொள்ளை அழகு. நாங்கெ ரெண்டு பேரும் சீக்கிரமே 'ஜிகிரி தோஸ்த்'
ஆகிட்டோம்.
அப்பத்தான், இவர் வேலை செய்யற கம்பெனியிலே தொழிலாளர் ஸ்ட்ரைக் வந்துருச்சு. இவுங்க ஸ்டாஃப்ன்றதாலே
தினமும் வேலைக்குப் போகணும். போயிருவாங்க.அங்கேதான் ஒரு மெஷினும் ஓடறதில்லையே. அதனாலே அங்கே இருக்கற
தோட்டத்துக்குத் தண்ணி ஊத்திட்டு, அங்கே இருக்கற 'வெஜிடபிள் கார்டன்'லே இருந்து காய் பறிச்சிக்கிட்டு வருவார்.
ச்சும்மா ஒரு பத்து மணிக்குப் போய் கையெழுத்துப் போட்டுட்டு, மத்தவங்களோட கொஞ்சநேரம் அரட்டை, தண்ணி பாய்ச்சறது,
காய் பறிக்கிறதுன்னுட்டு ஒரு பன்னெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்துருவார். அந்தக் காய்ங்களுக்காக நான் காத்துக்கிட்டு
இருப்பேன். குக்கர்லெ சாதமும், பருப்பும் வெந்து ரெடியா இருக்கும். காய் வந்தவுடனே குழம்புலெ போடவேண்டியதுதான்.
இவ்வளவு ஃபிரெஷா இதுவரை சாப்புட்டதேயில்லை:-) கிட்டத்தட்ட ரெண்டு மாசம் இப்படியே போச்சு. அப்புறம்
சமாதானப் பேச்சுக்கு வந்து கம்பெனி திறந்துட்டாங்க. காசு கொடுத்து காய்கறி வாங்கவேண்டியதாப் போச்சு!
இந்த ஊருக்கு வந்து ரெண்டு வருசத்துக்குமேலே ஆயிருச்சே. எப்ப சொந்தங்களைப் பாக்கப் போறோமுன்னு ஏக்கம்
வர ஆரம்பிச்சுருச்சு. ரெண்டு வாரம் லீவு கிடைக்கும். போகலாமுன்னு முடிவு செஞ்சோம். அப்பத்தான் மோஹினியும்,
மத்தக் குடித்தனக்காரங்களும் குண்டைத் தூக்கிப் போடறாங்க. அப்படியே வீட்டை பூட்டிக்கிட்டு போயிரமுடியாதாம்.
அங்கே பக்கத்துலே ஒரு திருட்டுக் கும்பல் இருக்காம். அவுங்க வந்து பூரா வீட்டையும், (கட்டிலை விட்டுட்டு) காலி
செஞ்சுக்கிட்டுப் போயிருவாங்களாம். கீழே இருக்கற பஞ்சாபிக்கும், கர்நாடகாக் காரருக்கும் இப்படித்தான் ஆச்சாம்.
அப்படீன்னா? போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கலையா? அதெல்லாம் முடியாதாம். அப்புறம் வந்து கத்தியாலே
குத்திட்டுப் போயிருவாங்களாம்.
இப்ப என்ன செய்யறது?
இன்னும் வரும்.
Posted by துளசி கோபால் at 8/17/2005 03:26:00 PM 7 comments
Sunday, August 14, 2005
The Greatman of NZ is no more.
திரு.டேவிட் லாங்கி நேற்று இரவு காலமானார்.
இந்தச் செய்தி தெரிஞ்சப்போ கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு. உடம்பு சரியில்லாம
ஆஸ்பத்திரியில்தான் இருந்தார். கடுமையான சக்கரை வியாதி. அதன் காரணம் போனவாரம்
ஒரு காலைவேற எடுக்கும்படியா ஆனது. அது எடுத்த ரெண்டுநாளுலே அவருக்கு 63வது பொறந்தநாள்.
இவர் யாருன்னே தெரியாதவங்களுக்காக:
நியூஸிலாந்து நாட்டின் பழைய பிரதமர் இவர். நாங்க இங்கே வந்தப்ப இவரோட ஆட்சிதான். தொழிற்கட்சியைச்
சேர்ந்தவர். இவர் வந்த பிறகுதான் இமிகிரேஷன் விதியெல்லாம் தளர்த்தப் பட்டுச்சு. அதுவரை வெள்ளைக்காரங்க
மட்டுமெ இங்கே குடியேறி வரமுடியும். குஜராத்திங்க பலர் இருந்துருக்காங்களென்னு கேக்கலாம். அவுங்க
இடிஅமீன் காலத்துலே அங்கிருந்து தப்பிப் போய் பிரிட்டன்லே தஞ்சம் அடைஞ்சவுங்க. பிரிட்டிஷ் பாஸ்போர்ட்
வச்சிருந்ததாலேதான் அவுங்களாலெ இங்கெ வரமுடிஞ்சது.
இவரோட அரசாங்கம் வந்தபிறகுதான் பல நல்ல விஷயங்கள் நடந்ததுன்னு இங்கே இருக்கற அனைத்துக்
கட்சியினரும் ஒத்துக்கிட்டு இருக்காங்க. நியூஸியின் nuclear free policies அப்பதான் உருவாச்சு. இதை
எல்லோரும் ஏத்துக்கிட்டாங்க. இன்னைவரைக்கும் அதுலே மாத்துக் கருத்து இங்கே எந்தக் கட்சிக்கும் இல்லை.
ஆளும்கட்சி சொல்றதெல்லாம் அபத்தம்னு கூவுற வழக்கம் இன்னும் இங்கே வரலை.
பல அரசாங்க நிறுவனங்களைத் தனியாரிடம் கொடுத்ததும் இவர்காலத்துலெதான். இதனாலெ நாட்டின் செல்வநிலை
உயர்ந்துச்சு. சேவைகளும் தரம் மிகுந்ததா ஆயிருச்சு.
ரொம்ப நகைச்சுவை உணர்வுள்ள பிரதமர் இவர். எப்பவுமே சிரிச்ச முகம். அதுவும் பார்லிமெண்டுலே இவர்
ஒன் லைன் ஜோக் அடிச்சே எல்லோரையும் சிரிக்க வச்சுருவார். நம்ம ஸர்.எட்மண்ட் ஹிலரி( எவெரெஸ்ட் வீரர்)
இவரோட நெருங்கிய நண்பர். அதனாலேயே இந்தியர்கள்மேலே இவருக்கு நல்ல மதிப்பு இருந்தது.
மிகவும் எளிமையான மனிதர். பொதுமக்கள் கிட்டேயும், குறிப்பாக ஆரம்பப்பள்ளி மாணவர்கள்கிட்டேயும்
கலந்து பேசறதுலே மன்னன். இன்னும் சொல்லப்போனா அவரோட பிறந்த ஊர்லேயும் அவரோட தொகுதியிலேயும்
எல்லோரோடும் சுலபமாப் பழகிடுவாராம். சிம்பிள்ன்னா சிம்பிள் அப்படி ஒரு சிம்பிள்!
பிரதமராக இருந்தபோதே, பதவி வேண்டாம் என்று நாற்காலி ஆசையில்லாமல் அதை விட்டுவிட்டு, சாதாரண
பார்லிமெண்ட் அங்கத்தினராகப் போய்விட்டார்.
இவ்வளவும் நாங்கள் இங்கே வந்தபின்பு நடந்த சம்பவங்களே. அதனாலேதான் மனசுலே நின்னுட்டார்.
இப்படிப் பட்ட மகத்தான மனிதரின் மறைவுக்கு அரசாங்கத்தின் தரப்பில் சவ அடக்கத்தின்போது தரப்படும்
அரசாங்க மரியாதையை வேண்டாம் என்று இவரது குடும்பம் முடிவு செஞ்சிருக்கு.
எனக்கு ஒரே ஆச்சரியம்.எத்தனை பேருக்கு இப்படிச் சொல்லமுடியும்னு!
பின் குறிப்பு:
இதையெல்லாம் எழுதறப்பவே சிலவிஷயங்கள் மனசுலெ தானா வர்றதை நிறுத்தமுடியலை.எதுக்கெடுத்தாலும்
நம்ம நாட்டோட நிலையை கம்பேர் பண்ணிப் பாக்குறதை விடமுடியலை.
பாழாப்போன மனசே, அடச் சீ, அடங்கு! துக்கம் கொண்டாடுற சமயத்துலே இதெல்லாம் வேணாம்.
Posted by துளசி கோபால் at 8/14/2005 08:36:00 PM 3 comments
Friday, August 12, 2005
ஆடி வெள்ளிக்கிழமை!!!
என்னடா இது திடீர்னு, 'பக்தியோட பாவக்காய் சட்டியோட வேகுதே'ன்னு பாக்கறீங்களா?
ஆடிமாசம்ன்னதும் உங்களுக்கெல்லாம் 'பளிச்'னு நினைவுக்கு வர்றது என்ன? ஆடித் தள்ளுபடிதானே?
இந்தத் தள்ளுபடி விவகாரமெல்லாம் இப்ப சமீபத்துலே, என்ன ஒரு பத்து,இருவது வருசமா வந்ததுதானே?
அந்தக் காலத்துலே, பொங்கல் சமயத்துலே மட்டும் கோஆப்டெக்ஸ்லே ரிபேட்ன்னு சொல்லிக்கிட்டு
ஒண்ணு இருந்துச்சு. எங்கெ பார்த்தாலும் நைலான், நைலெக்ஸ்னு இருந்த காலத்துலே இந்தக் கைத்தறிப்
புடவையை யாரு வாங்குவான்னுட்டு, டவல், பெட்ஷீட்ன்னு அங்கெபோய் அந்த தள்ளுபடியையும் விடாம
இருந்தோம்.
அதுக்கப்புறம் நாட்டைவிட்டுவந்துட்டோம்லெ. வந்த இடத்துலே 'சேல்'ன்னு மொதமொதலாப் பாத்தோம். அதுவும்
பலசரக்கு சாமானுங்க மட்டும்தான். ஆனா, அங்கே வருசாவருசம் வர்ற 'புயல் திருவிழா' சமயத்துலே மட்டும்
கடைங்களுக்குள்ளெ வெள்ளம் வந்து பாழாகி(?)ப்போன சாமான்களுக்கு 'சைக்கிளோன்/ஹரிக்கேன் சேல்'ன்னு ஒண்ணு
அமர்க்களப்பட்டுக்கிட்டு இருந்துச்சு. இன்ஷூரன்ஸ் காசு வந்துர்றதாலே எல்லா சாமான்களையும் இப்படி வித்துருவாங்க.
அப்ப 'எவர்சிவர்'சாமான்கள் அதுவும் 'எக்ஸ்போர்ட் குவாலிட்டி' எல்லாம் அடிவிலைக்கு வந்துரும். ஊருக்குள்ளெ ஒரு
விசேஷமுன்னா நாம ச்சும்மாக்கையைக் கட்டிக்கிட்டு உக்காந்திருக்க முடியுமா? ஏதோ நம்மாலான உதவின்னுட்டுப்
போய் பாத்திரங்களை வாரிக்கிட்டு வர்றதுதான். இது இப்ப மாறிப் போச்சாம். 'வெள்ளத்துக்குக் கொடுத்துக்
கட்டுப்படியாவறதில்லேப்பா'ன்னு இன்ஷூரன்ஸ் கம்பெனிங்கள்ளாம் சொல்லிருச்சாம். எங்கேன்னு கேட்டா,
ஃபிஜித் தீவுகளிலே!
இங்கே நியூஸிக்கு வந்தபிறகு பார்த்தா, சேலே சேல்தான் எப்பவும். வருசம் பூராவும் எதாவது இருக்கு. புதுவருசம்
பொறந்ததும் 'நியூ இயர் சேல்'. அந்த மாசமே மொத ரெண்டு வாரம் போச்சுன்னா, ஸ்கூல் ரி ஓப்பனிங் சேல். மாசக்
கடைசியிலே கோடைவிடுமுறை முடிஞ்சு, கல்வி ஆண்டு ஆரம்பிக்குதே, அதுக்காக.
ஃபிப்ரவரி 6 ஆந்தேதி இங்கே வைடாங்கி ஒப்பந்தநாள். அதுக்காக ஒரு வாரம் முன்னாடியே 'வைடாங்கி சேல்' ஆரம்பிச்சுரும்.
அந்தமாசம்தான் இங்கே கோடைகாலம் முடியுற காலம். எண்ட் ஆஃப் த சீஸன் சேல் இதோ ஆரம்பிச்சாச்சு.
மார்ச் வந்துருச்சா? நியூ சீஸன் ஆட்டம் சேல். கொஞ்ச நாள்லே ஸ்கூல் ஆரம்பிச்சு மொத 'டெர்ம்' முடிஞ்சுரும். இங்கே
மொத்தம் 40 வாரம்தான் பள்ளி வேலைநாள். பப்பத்து வாரத்துக்கு ரெண்டுரெண்டு வாரம் லீவு. கோடைக்கு மட்டும்
6 வாரம் லீவு. இதோ 'ஸ்கூல் ஹாலிடே சேல்' ரெண்டே வாரத்துலே 'பேக் டு ஸ்கூல் சேல்' இது ஏப்ரல்லே. இதேபோல
மூணு டெர்ம்க்கும் மூட, திறக்கன்னு ஆறு சேல் உண்டு. அடுத்தாப்புலேயே குட் ஃப்ரைடே, ஈஸ்டர் சேல்!
மே மாசம் குறிப்பா ஒண்ணும் இல்லாததாலே, பல இடங்களிலே 'ஸ்டாக் டேக்கிங் சேல்', சில கடைங்க மூடுவிழா
நடத்திக்கிட்டு 'க்ளோஸிங் டெளன் சேல்'ன்னு போகும். அடுத்தமாசம் குளுர் ஆரம்பிக்குமுன்னு 'வின்டர் சேல், எண்ட்
ஆஃப் த ஆட்டம் சீஸன் சேல்'னு வேற போய்க்கிட்டு இருக்கும்.
ஜூன் தொடங்கிருச்சுன்னா, 'குவீன்ஸ் பர்த்டே சேல்'அப்புறம் ஜூலையிலே வருமானவரிக் கணக்குக் கொடுக்கற
நாள் வந்துரும். அதுக்கும் ஒரு சேல். ஆகஸ்ட்லே வரப்போற வசந்தகாலத்தை வரவேற்கற சேலும், எண்ட் ஆஃப் தெ
வின்டர் சேலும். இங்கே குளுர்கால விளையாட்டு 'ரக்பி'ன்றதாலே அந்தக் கப், இந்தக் கப், ஆஸி கப், நியூஸி கப்ன்னு
அதுங்களை முன்னிட்டு சிறப்பு சேல்.
செப்டம்பர் தொடங்கிடுச்சுன்னா ஸ்ப்ரிங் சேல். அக்டோபர்லே 'லேபர் டே சேல்' நவம்பர்லே கேன்டர்பரி ஷோ டே.
இது கிராமப் புற விவசாயிங்க, நகரங்களுக்கு அவங்களொட பெஸ்ட் ஆடு, மாடு,பன்னி, குதிரைன்னு மிருகங்களைக்
கொண்டுவந்து காட்டறது. இது மூணுநாள் திருவிழா. உண்மையைச் சொன்னா நம்மூர் கோவில் திருவிழாவேதான்.
ரங்கராட்டினம், பஞ்சு முட்டாய், ஜயண்ட் வீல்னு எல்லா சமாச்சாரமும் இருக்கும். இதுக்காக ஒரு சேல்!
இது முடிஞ்சவுடனே கிறிஸ்மஸ் சேல் ஆரம்பிச்சுரும். சில கடைகளிலே இப்பல்லாம் அக்டோபர்லே லேபர் சேல் முடிஞ்சவுடனே
கிறிஸ்மஸ் சேல் ஆரம்பிச்சுடறாங்க. கிறிஸ்மஸ் முடிஞ்ச மறுநாளே 'பாக்ஸிங் டே சேல்' ஒரு வாரம். அது முடிஞ்சவுடனே
நியூ இயர் சேல் மறுபடி! சக்கரம் சுழல ஆரம்பிச்சுரும்.
அடடா, சேல்லை விட்டுட்டமேன்னு கவலையே வேணாம். அதான் எதாவது ஒண்ணு வந்துக்கிட்டே இருக்குதுல்லெ.
நடுநடுவிலே எக்ஸ்ட்ராவா, ரீ லொகேஷன் சேல் வேற வரும். இந்த சேலுங்களிலே தங்கநகைக் கடைகள் கூட சேர்த்திதான்!
இந்தக் கடைங்களிலெ அநியாயத்துக்கு 'ஹாஃப் ப்ரைஸ் சேல்' அடிக்கடி வரும். நம்புங்க,அரைவிலைக்குத் தங்கங்க!
அது 'ஒம்போது கேரட்' ன்றபடியால நமக்கு வேண்டாததா ஆயிருச்சு. இதெல்லாம் பத்தாதுன்னு வீக் எண்ட் சேல், ஸ்பெஷல்னு
வருசத்துலே அம்பத்திரெண்டு வாரமும் சூப்பர் மார்க்கெட் சேலுங்க வேற மனுஷனைப் பாடாப் படுத்திரும்!
மனசு பாருங்க, ஆடி மாசமுன்னதும் தள்ளுபடி ஞாபகத்துலே எல்லா சேல்லையும் ஒரு ரவுண்டு வந்துருச்சு. போட்டும்,
இன்னிக்கு நம்ம தோழி வீட்டுலே வரலட்சுமி நோம்பு கொண்டாடுறாங்களாம். ஆவணி மாசம் வரப்போறதை என்னாத்துக்கு
இப்பவே செய்யறீங்கன்னு கேட்டா, அடுத்தவாரம் பண்டிகையன்னிக்குத்தான் ஆவணி அவிட்டமும் வர்றதாலே,'ரெண்டையும்
சேர்த்துச் செய்யக்கூடாது(!)ன்னு ஊர்லே இருந்து ஃபோன்லே சொன்னாங்களாம்'.
ஆடி வெள்ளிக் கிழமையாவும் இருக்கறதாலே, சாயந்திரமாப் போய், அவுங்க தர்ற வெத்திலை பாக்கு வாங்கிக்கணும்.
அட, இந்த ஊர்லே வெத்தலைகூட கிடைக்குதான்னு 'குண்டக்க மண்டக்க'ன்னு கேள்வி கேக்கக் கூடாது.
கையைக் காலா நினைச்சுக்க முடியுமுன்னா, ஆப்பிளை வெத்தலையாவும், ஆரஞ்சைப் பாக்காவும் நினைக்கக்கூடாதா?
Posted by துளசி கோபால் at 8/12/2005 11:11:00 AM 26 comments
Wednesday, August 10, 2005
கனியக் கனிய மழலை பேசும்......
மூணுநாளாச்சு! முடிச்சுடலாமுன்னு பார்த்தா.......ம்ம்ம்ம்ம்ம்ம்
கொஞ்சம் அறுவைதான். ஓடிக்கிட்டு இருக்கப்பவே கண்ணு சொருகிடுதே! உக்காந்துக்கிட்டுப் பாத்தா சமாளிச்சுடலாமுன்னு
உக்காந்தாலும் ஊஹூம்...நடக்கலையேப்பா.... ரொம்பவே நீளமா இருக்கேப்பா......
ஆரம்பம் மட்டும் கனஜோராய் இருந்துச்சு. 'அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா....'
டொக்கு டொக்குன்னு குதிரை குளம்படிச் சத்தத்தோட வண்டி ஓட்டம். வாத்தியார் பாடிக்கிட்டே வரார். பல்லக்குலே
போற நாட்டியப்பேரொளி 'நர்த்தகி சித்ரா'அதைக் கேட்டுக்கிட்டே(?) வராங்க.
அதுக்கப்புறம் ஒரு நாட்டியப் போட்டி. வாத்தியார் ஜெயிக்கறார். தோல்வியடைஞ்ச நாயகி வழக்கம்போல(!) அவரைக்
காதலிக்கறாங்க. வஞ்சிநாட்டு அரசனும் அரசியும் தங்கள் மகனான வாத்தியாருக்குக் கரிகால் சோழனோட மகளைப் பொண்ணு கேட்க
ஆளனுப்பினாங்க. இந்தச் சரித்திரக்கதைக்கு ஆதாரம் எதுனா உண்டான்னு தெரியலை.ஒருவேளை அம்புலிமாமாகதை போல
.... நாட்டை ....... என்னும் மன்னன் வெகுகாலமாக ஆண்டுவந்தார் ஸ்டைலோ? சரி. போகட்டும். நாம வந்த வேலையைப் பாக்கலாம்.
ம்ம் அப்புறம்? வாத்தியாருடைய தாயின் குலம் அங்கே கேள்விக்குறியாகிவிடுகிறது. தாயைப் பழித்த மன்னனை பழிவாங்கப் போகிறார்
இளவரசர் வாத்தியார். போகப்போக சொதப்பல் கூடிப்போகுது. கதை,வசனம் கண்ணதாசன் அப்படின்னு வருது.
கரிகால் சோழனோட புதல்வி கற்பகவல்லி யார்? அஞ்சலிதேவி!!!! அப்பத்தான் தூக்கம் சுழட்டிக்கிட்டு வருது.
சரி, பாட்டுங்களாவது நல்லா இருக்கான்னு பார்த்தா அதுவும் இல்லை. எம்.எல்.வசந்தகுமாரி பாடற 'ஆடாத மனமும்
உண்டோ' வும். கனியக் கனிய மழலை பேசும் கண்மணி( டி.எம்.எஸ் & சுசீலா)யும் நல்லா இருக்கு. கூட்டம் கூட்டமா
குரூப் டான்ஸ் ஆடிக்கிட்டு( இதுலே ஒருத்தர் நம்ம சி.ஐ.டி. சகுந்தலா!) பாடறதுலே ஒண்ணுகூட நல்லாலே, ஆமாம்!
எனக்கோ ஒரே எதிர்பார்ப்பு, எப்ப இந்தப் படம் முடியும்னு? கையிலே இருக்கு மந்திரக்கோல். ரிமோட்டைத்தாங்க சொல்றேன்.
ஆனாலும் எடுத்தகாரியத்தை முடிக்கிற மன உறுதி மனுஷனுக்கு வேணாமா? எத்தனை நாளானாலும் பரவாயில்லே...
மொத்தம் மூணு வி.சி.டி டிஸ்க். ஒவ்வொண்ணையும் ரெண்டுரெண்டுமுறை பார்க்கவேண்டியதாப் போச்சு. அதான்
பாதியிலே தூங்கிட்டு மறுபடி, 'ஹா எங்கே விட்டேன்?'னு ஓட்டறதுதான்:-)
இசை யாருன்னு கேட்டீங்கன்னா, நம்ம விஸ்வநாதன் & ராமமூர்த்தி! பாடல்கள் எழுதுனது ,அட! நம்ம கவிஞர் கண்ணதாசன்.
கூடவே அ.மருதகாசின்னும் வருது. இதைப் படிச்சுட்டு நான் ச்சும்மா இருந்திருக்கலாம். ஆனா படம் வெளிவந்த வருஷம் சரியான்னு
பார்க்க 'ம்யூஸிக் இண்டியா ஆன்லைன்'( எதுக்கு இந்த வேண்டாத வேலை?) போய்ப் பார்த்தேன். அதுலே சொல்லுது ஒரே ஒரு பாட்டு மட்டும்,(ஆடாத
மனமும் உண்டோ )உடுமலை நாராயணக் கவின்னு! என்னான்னு கண்டேன்?
'அச்சம் என்பது மடமையடா'வை நான் இதுநாள் வரை பாரதிதாசனோடதுன்னு தப்பா நினைச்சுக்கிட்டு இருந்திருக்கேன். எப்படி, அப்படி
ஒரு நினைப்பு வந்துச்சுன்னே தெரியலை.
இதுலே பாருங்க வில்லன் வீரப்பா( கருவூர் நாட்டு மன்னனாம்) பத்மினியை நெருங்கும்போது, அவுங்க 'கலையோடு
பிறந்தது உண்மை'ன்னு பாடிக்கிட்டே ஆட(ஓட)றாங்க. அப்பத் திடீர்னு எனக்கு நினைவுக்கு வந்தது, பாலச்சந்தரோட
ஒரு படத்துலே 'ஆணையிட்டேன் நெருங்காதே'ன்னு ஜெயந்தி பாடிக்கிட்டு தப்பியோடப் பாக்கறதுதான். இப்படித்தான்
எதையாவது பாக்கறப்ப வேற எதாவது மனசுக்குள்ளெ வந்து தொலைக்குது. என்னத்தச் செய்ய?
இவ்வளவு சொன்னவ படத்தோட பேரை விட்டுட்டேன் பார்த்தீங்களா?
மன்னாதி மன்னன். வெளிவந்த வருசம் 1960.
'எனக்குத் தலைவர் படமுன்னா உசுரு! எல்லாப்படத்தையும் நிறைய தடவை பார்த்திருக்கேன். விட்டுப் போனது ஒண்ணு ரெண்டு மட்டும்தான்'னு
என்கிட்டே உதார் விட்டுக்கிட்டு இருந்த எங்க இவர், இந்தப் படத்துலே அஞ்சலி தேவி இருக்காங்கன்னு டைட்டில்
கார்டுலே பார்த்தவுடனே, 'எனக்கு அஞ்சலிதேவி பிடிக்காது நீயே பாரு'ன்னுட்டு எந்தலையிலே கட்டிட்டுப் போயிட்டார்!!!
இத்தோடு தலைவர் வாரத்தை முடிச்சுக்கிட்டு, கொஞ்ச நாளைக்கு வேற வேலை வெட்டி( வெட்டிவேலை?) பார்க்கலாமுன்னு
உத்தேசம். என்ன நாஞ்சொல்றது? சரிதானே?
Posted by துளசி கோபால் at 8/10/2005 02:04:00 PM 2 comments
Monday, August 08, 2005
எல்லோரும் எல்லாமாய்....
எப்படியெப்படியெல்லாம் மனசைத் திருப்பிக் கொண்டு போனாலும், சண்டிக் குதிரைபோல சுத்திச் சுத்தி சினிமா
வுக்கே வந்துருதே. ஹங்.. என்ன செய்யலாம்? மனசை அதும்போக்குலேயே விட்டுப் புடிக்கவேண்டியதுதான்...
ஒரு சினிமாவைப் பத்தின செய்தியோ, அதுலே நடிச்சவுங்க பெயர்ப் பட்டியலோ வருதுன்னு வையுங்க. அதைப் பார்க்கறப்பவே
சுமாரா அந்தக் கதை மனசுக்குள்ளெ ஓடுதுல்லே? வில்லன் முகம், கதாநாயகன் முகம், காமெடி ஆளுங்க முகம்ன்னு
பலமுகங்களும்தான் மனசுலே பதிஞ்சுபோய்க் கிடக்கே!
அப்ப, அந்தந்த முகம் இருக்கறவங்க அந்தந்த ரோல் செஞ்சுரணும். இல்லையா? இது ஏன் மாத்தி இருக்கக்கூடாது?
எனக்குத் தெரிஞ்சவரையிலே தமிழ்ப் பட உலகத்துக்கு எல்லோருக்கும் ஏற்கெனவே ஒரு 'செட்' ரோல் இருக்கு.ஆனா
மலையாளப் பட உலகத்துலே கொஞ்சம் வேற மாதிரி இருக்கே! இதுலேயும் பெரிய ஆளுங்களை விடுங்க. சாயி
குமாரையும், ராஜன் பி தேவையும் பார்த்தவுடனே வில்லன்கள்னு தெரியுதுல்லே. நாஞ்சொல்றது, சாதாரணமா
ச்சின்ன ரோல்லே வர்ற கொச்சின் ஹனீஃபா, ஜகதி ஸ்ரீகுமார், ஜகதீஷ்,சைனுத்தீன், ஹரிஸ்ரீ அசோகன், ஒடுவில் உன்னி கிருஷ்ணன்,
ஜனார்தனன், இன்னொசெண்ட், சித்திக், குஞ்சன் இப்படி பலரைப் பத்தி நினைச்சா, இவுங்க எல்லோருமே எல்லாவிதமான பாத்திரங்களிலும்
வராங்க.
நான் என்ன நினைக்கிறேன்னா, ஒரு ச்சீட்டுக் குலுக்கல் போல, சின்னதும் பெருசுமா வர்ற கேரக்டர்ஸ் பேரையெல்லாம் எழுதிப் போட்டுரணும்.
அவுங்கவுங்களுக்கு எதுவருதோ அதையே நடிச்சிரணும். எல்லாப் படத்துலேயும் அநேகமா எல்லாருமே வர்றாங்கன்னா இப்படி ஏதாவது
ஏற்பாடு இருக்கணும்,பார்த்தீங்களா?
ஒவ்வொரு படம் பார்க்க ஆரம்பிக்கறப்பவும் எங்க இவர் கிட்டே கேப்பேன்,'எல்லாரும் வந்தாச்சா?' 'வந்துக்கிட்டே இருக்காங்க'ன்னு
பதில் வரும். கெட்டவன், நல்லவன், அப்பாவி, கதையை நகர்த்துரவன் இப்படி எல்லோரும் எல்லாமாயும்.... எல்லாருக்கும் எல்லாவகை நடிப்பும்!!
தமிழ்ப் படத்துலே இப்படி வர்ற ஒரே ஆளு பிரகாஷ் ராஜோ? இல்லே வேற யாரும் இருக்காங்களா?
Posted by துளசி கோபால் at 8/08/2005 01:50:00 PM 15 comments
Friday, August 05, 2005
சிவகாமி, சிவகாமி...
மொதல்லே மூணு கேள்விக்குப் பதில் சொல்லுங்க.
1. மனிதன் ஒரு பொருளைச் செய்வான், எல்லாருக்கும் விற்பான்.ஆனா, அந்தப் பொருளைத் தனக்காகச்
செய்யறப்ப அவனாலே அதைப் பாக்க முடியாது. அது என்ன?
2.கன்னங்கரேல் என்றிருக்கும். இருள் அல்ல,காலம் போகப்போக வெளுக்கும் பகல் அல்ல.
ஆண்டவனை வேண்டிக்கொண்டு, போகும்போது இருக்கும், திரும்பி வரும்போது இருக்காது. அது என்ன?
3. உங்க குழந்தை காணமப் போயிருச்சு. ஒரு வாரம் கழிச்சுத் திரும்பக் கிடைச்சிருச்சு. உங்க குழந்தையைப்
பாத்ததும் நீங்க என்ன செய்வீங்க?
இதெல்லாம் என்னன்னு யாருக்காவது நினைவில்லேன்னா, நீங்க செய்யவேண்டியது என்ன? ரொம்ப சிம்பிள்.
'கலங்கரை விளக்கம்'படம் பாக்கணும்!
மன்னாதி மன்னனா அல்லது கலங்கரை விளக்கமான்னு ச்சீட்டுப் போட்டதுலே க.வி.தான் விழுந்துச்சு!
சரோஜாதேவி, ஜி.சகுந்தலா, கே.எஸ். கோபால கிருஷ்ணன், எம்.என். நம்பியார், நாகேஷ், வீரப்பன், மனோரமா
இவுங்கெல்லாம் நடிச்ச தலைவரோட படம்! 1965 லே வெளிவந்திருக்கு!
வக்கீல் ரவி( எம்.ஜி.ஆர்) தன்னோட நண்பன் டாக்டர் கோபாலைப்( கே.எஸ். கோபால கிருஷ்ணன்)பார்க்க, மஹாபலிபுரம்
போறார். அங்கே மனநிலைசரியில்லாம தற்கொலை செஞ்சுக்கப்போகும் நீலா( சரோஜா தேவி)வைக் காப்பாத்தறார்.
அதுக்கப்புறம் ஒரு நாள் சரோஜாதேவி கலங்கரை விளக்கத்தின் மேலே இருந்து விழுந்து இறந்துடறாங்க.
மனக்கவையோடு இருக்கும் ரவியை ஒரு நிகழ்ச்சிக்குக் கூட்டிக்கிட்டுப் போறார் கோபால். அப்ப சொல்ற வசனம் நல்லா
இருக்கு. 'பாரதிதாசன் கவிதைகளுக்கு விழா நடக்கின்றது. நல்ல தமிழைக் கேட்டால் கொஞ்சம் மனக்கவலையை மறக்கலாம்'
( நான் எழுதற தமிழ் உங்க மனக்கவலையைக் கூட்டிரும்(-: ஆமா)
சங்கே முழங்கு!!! பாரதிதாசன் அவர்களின் அருமையான பாடல். அங்கே கலைக்குழுவினரோடு சேர்ந்து ஆடறது யார்?
உங்க ஊகம் சரி. சரோஜா தேவியேதான்? இறந்தவங்க, எப்படி வந்தாங்களா? வெள்ளித்திரையில் காண்க!!!
சஸ்பென்ஸ் த்ரில்லர் வகைப் படம்!! ரவி எப்படி இதைத் துப்பறிந்து உண்மையைக் கண்டுபிடிக்கறார்னு கதை போகுது.
பாட்டுங்க நல்லாவே இருக்கு. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.
என்னை மறந்ததேன் தென்றலே..
பொன்னெழில் பூத்தது புது வானில்....
பல்லவன் பல்லவி பாடட்டுமே.....
சங்கே முழங்கு....
என்ன உறவோ என்ன பிரிவோ....
காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கிவந்தேன்...
கதை நடக்கற இடம் மகாபலிபுரம். நாப்பது வருசத்துக்கு முன்னாலெ அங்கெல்லாம் ஏகப்பட்ட இடம் காலியா
இருந்துருக்கு. சின்னக் குன்று மேலே நடனக்காட்சி வர்றப்ப சுத்துப்பக்கம் எல்லாம் 'ஜிலோ'ன்னு கிடக்கு!
கறுப்பு வெள்ளைப் படம்தான். ஆனாலும் மகாபலிபுரத்து சிற்பங்கள், கோயில்கள், காட்சிகள் எல்லாம் தெளிவா இருந்துச்சு.
வாசு( நாகேஷ்) தேவா( வீரப்பன்) ரெண்டுபேரும் மகாபலிபுரத்துலே இருக்கற 'கைடு'ங்க. மனோரமா அவுங்க அப்பாவோட
ஊரைச்சுத்திப்பார்க்க வர்ற டூரிஸ்ட். இதுலே மனோரமா வாசுவைக் காதலிக்க, அவுங்க அப்பா, தேவாவை மருமகனாத்
தவறுதலா நினைச்சுக்கறார். எல்லாம் ஒரு தொப்பியால வந்த வினை. ச்சின்னவயசு நாகேஷ் & மனோரமா. நல்லா
இருக்காங்க!
கடைசியிலே மாப்பிள்ளை தேர்வுக்கு 'வாத்தியார்' கொடுத்த ஐடியாதான் மேலெ கேட்ட மூணு கேள்விங்க. சரியான
பதிலைச் சொன்னது யார்? மீண்டும் வெள்ளித்திரையிலேயே காண்க.
பழைய படங்களிலே ஒண்ணு கவனிச்சமுன்னா, இப்ப இருக்கறது போல எந்தப் பாட்டுன்னாலும் 40, 50 பேரு
கூட்டமா வந்து ஆடுறதெல்லாம் கிடையாதுங்க. கதைக்குத் தேவைப்பட்டா ச்சும்மா ஒரு ஏழெட்டு ஆளுங்க
ஆடுறாங்க. அவ்வளவுதான்.( அப்ப நாட்டோட ஜனத்தொகை எவ்வளவு, இப்ப எவ்வளவுன்றீங்களா? அப்பக்
கணக்குச் சரியாப் போச்சு!)
படம் பாக்கறப்ப 'இப்பத்தானே குழலி 'பல்லவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி'ன்னு ஒரு பதிவு போட்டிருந்தார்.
அருள் குமாரும் தன் தோழியின் நினைவாய் மகாபலிபுரம் கடற்கரைக் கோயிலை அற்புதமாக வரைந்திருந்தார்.
நாகேஷைப் பத்தி இன்னைக்குத்தானே மாலன் ஒரு பதிவு போட்டுருக்கார்.'ன்னு
நினைவு வந்துக்கிட்டே இருந்தது.
Posted by துளசி கோபால் at 8/05/2005 03:15:00 PM 17 comments
தெரிஞ்சாகணும்!!!
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். அதுவும் இப்பவே தெரிஞ்சாகணும்.
முதல் மரியாதையிலே வர்றது போல படிங்க!
சிலருடைய பதிவின் பின்னூட்டங்களிலே jsri ன்னு வர்றது பார்த்தேன். இவுங்க எந்த
ஜெயஸ்ரீ? மரத்தடியிலே இருக்கறவங்களா? ஆமாம்னு சொன்னீங்கன்னா எனக்கொரு
தனிமடல் போடுவீங்களா?
Posted by துளசி கோபால் at 8/05/2005 11:02:00 AM 5 comments
Thursday, August 04, 2005
ஜெராக்ஸ்
ஹாரீஸ் ஜெயராஜ் ஏ.ஆர்.ஆரைக் காப்பி அடிச்சுட்டார்.
ஏ.ஆர்.ஆர், பல ஃபாரின் ம்யூஸிக் ட்ரூப்லே இருந்து சுட்டுட்டார்.
தேவா என்னன்னா, எல்லாருக்கும் ஒருபடி மேலே போய் மத்தவங்களுதையும் சுட்டு, அது போதாதுன்னு
அவருடைய ம்யூசிக்கையே அடிச்சுட்டார்.
இன்னும் ரமேஷ் விநாயகம், சிற்பி, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா,
இவுங்க அப்பா இளைய ராஜா, எஸ்.ஏ. ராஜ்குமார், எம்.எஸ்.வி, வித்யாசாகர், ஆர்.டி.பர்மன்ன்னு லிஸ்ட்
நீண்டுக்கிட்டே போகுதுன்னு http://www.mail-bag.com/copycat.shtml இந்த இடம் சொல்லுது.
இப்ப நம்ம ஆனந்த், அண்டங்காக்கா வந்த விதத்தை தன் பதிவுலே சொல்லியிருக்கார்.
இதெல்லாம் இன்னைக்கு நேத்து ஏற்பட்ட விஷயமில்லெ அப்பூ. காலங்காலமாய் நடந்து வருது!
போன பதிவுலே போட்ட அலிபாபாவும் நாற்பது திருடர்களும் வந்தே அம்பது வருசமாச்சு. அதுலேயே
நம்ம தட்சிணாமூர்த்தி ஒரு பாட்டைச் சுட்டுட்டாருன்னு மேற்படி தளம் சொல்லுது!
மதுரைவீரன் படம் பார்த்துக்கிட்டு இருந்தேன். இதுவும் வந்தது அதே காலக் கட்டத்துலேதான்.என்ன, ஒரு
சில மாசம் பிந்தி.
எம்.ஜி.ஆர், பானுமதி, பத்மினி, பாலைய்யான்னு நல்ல 'வெயிட்'டான பார்ட்டிங்க நடிச்சது. மொதப் பாதிதான்
பானுமதியம்மாவுக்கு. அடுத்த பாதி பத்மினிக்கு. என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ. மதுரமும் இருக்காங்க.
திரைக்கதை,வசனம் நம்ம (கவிஞர் ) கண்ணதாசன்! சிலபாடல்களும் எழுதியிருக்கார். சிலது மருதகாசி!
பாட்டுங்கல்லாம் நல்லாவே இருந்துச்சு. இசை ஜி.ராமநாதன்.
'வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க'ன்னு கூட்டமா ஆடுறாங்க ஈ.வி.சரோஜா அண்ட் பார்ட்டி.
இந்தப் பார்ட்டிலே ஒரு தெரிஞ்ச முகம் இருக்கு. அது சுகுமாரி. இப்ப மலையாளப் படங்களிலே அம்மாவேசம்
கட்டறாங்களே அவுங்க. பழைய படம் பாக்கச்சொல்ல தெரிஞ்ச மூஞ்சிங்களைக் கண்டுபிடிக்கறது ஒரு சைடு
விளையாட்டு.
படத்தோட ஆரம்பத்துலே இளவரசன் பிறந்ததைக் கொண்டாட அரச சபையிலே ஒரு நடனம். குசலகுமாரி யாருக்காவது
ஞாபகம் இருக்காங்களா? அவுங்கதான் 'செந்தமிழா எழுந்து வாராயோ, உன் சிங்காரத்தாய் மொழியைப் பாராயோ'ன்னு
அருமையான பாட்டுக்கு ஆடறாங்க. அம்பதுவருசமாத் தமிழனைத் தட்டி எழுப்பிக்கிட்டே இருக்காங்க, ஆனா தமிழன்
எழுந்திருக்கற வழியைக் காணம்! ஹூம்.....
லலிதா& ராகினியோட நடனம் ஒண்ணும் இருக்கு.( ராகினியைப் பாக்கறப்ப நம்ம ஷோபனா நினைவு வருது. ஒரே சாயல்.
இருக்கட்டும், தம்பி பொண்ணூதானே!)
கதைப்படி வீரனுக்கு ( எம்.ஜி.ஆர்) மாறுகை, மாறுகால் வெட்டி மரணதண்டனை! தண்டனையும் நிறைவேறிடுது.
அப்பத்தான் எம்.ஜி.ஆர் நடிக்கவந்த ஆரம்பக்காலம் போல. தலைக்குப் பின்னாலெ 'ஒளிவட்டம்' கிடையாது.
இதே கதையை இவர் உச்சத்துலே இருந்தப்ப எடுத்திருந்தாங்கன்னா? முடிவையே மாத்தவேண்டியிருக்கும்.
கறுப்பு வெள்ளைப் படம்தான். ஆனா ஒண்ணு சொல்லணும். 'வாத்தியாருக்கு' முகத்துலே நல்ல களை. அம்சமான
முகம்தான்!
கத்திச் சண்டை ஏற்பாடு ஆர்,என். நம்பியார் & பார்ட்டின்னு டைட்டில் போடறாங்க. கத்திச் சண்டைக்கு ஒரு கவர்ச்சி
வந்ததுகூட எம்.ஜி.ஆரோட படங்களாலேதானே?
'அவர்க்கும் எனக்கும் உறவுகாட்டி அருள் புரிந்தது கதையா?'ன்னு ஒரே ஒரு பாட்டுத்தான் பானுமதிக்கு.
'நாட்டியப் பேரொளி'க்கு மூணு பாட்டுங்க. எல்லாமே ஆட்டம் சம்பந்தப்பட்டதுங்க.
'ஆடல் காணீரோ'
'நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே'
'ஏய்ச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?' இந்தப் பாட்டைக் கள்ளர் கூட்டத்துக்கு முன்னாலெயே பாடி ஆடறாங்க.
இப்படித் தங்களை 'அக்யூஸ்'பண்ணற பாட்டையும் ரசிச்சுக்கிட்டே இருக்காங்க அந்தக் கூட்டத்துலே!!! திருடங்களுக்குப்
புத்தி கொஞ்சம் கம்மி போல இருக்கு:-)
சொல்லவந்த விசயத்தைச் சொல்லலே பார்த்தீங்களா. 1939லே திருநீலகண்டர்னு ஒரு படம் எம்.கே.தியாகராஜ
பாகவதர் நடிச்சது வந்திருக்கு. அதுக்கு இசை அமைச்சவர் நம்ம பாபநாசம் சிவன்.
1955லே ஒரு படம் வருது. பேரு மதுரை வீரன். இசை ஜி.ராமநாதன். ஒரு பதினாறு வருச வித்தியாசத்துலே
உள்ளூருலேயே 'சுட்டபழம்' கொடுத்திருக்காங்க.
சரி. எங்கே பாடுங்க பாக்கலாம்.
தீனக் கருணாகரனே நடராஜா நீலகண்டனே....
ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க....
அடுத்த பாட்டுக்கு வாங்க.
உண்மையோடு உழைக்கோணும் தானேதன்னன்னே.....
ஏரு பூட்டிப் போவாயோ அண்ணே சின்னண்ணே....
மனுசனுக்கு மறதியைக் கொடுத்த கடவுளுக்குத்தான் இவுங்க மொதல்லே நன்றி சொல்லிக்கணும்.
Posted by துளசி கோபால் at 8/04/2005 10:33:00 AM 20 comments
Wednesday, August 03, 2005
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்!!!
பொதுமக்களின் ( அதாவது ஒருத்தர்) வேண்டுகோளை முன்னிட்டு இந்த வாரம்
'தலைவர் வாரம்'!!!! நம்ம வீட்டுலே பாதி ( இதுவும் ஒருத்தர்தான்)ஆளுங்க தலைவரோட ரசிகர்கள்.
(பொது மக்களுக்கு 'சிங்குலர்' என்ன? )
கிடைத்த படங்களின் விவரங்கள்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
மதுரை வீரன்
கலங்கரை விளக்கம்
மன்னாதி மன்னன்
தேடிவந்த மாப்பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
நேத்துப் பார்த்தது அலிபாபா.
'அண்டா கா கஸம், அபுல் கா ஹூக்கும். திறந்திடு சிஸேம்!!!!!'
மாடர்ன் தியேட்டர்ஸ். வந்த வருஷம் 1955. கவனிங்க, அரை நூற்றாண்டுக்கு
முன்னே இருந்த வசதிங்களை வச்சு நல்லாவே எடுத்திருக்காங்க. 'தலையில்லாத முண்டம்'கூட வருது.
இதுலே நடிச்சப்பவே எம்ஜியாருக்கு 38 வயசு!!!! கூடவே அவரோட அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியும் அண்ணனாவே
வரார்.
பானுமதியம்மா நல்லா நடிச்சிருக்காங்க. மார்ஜியானா ஒரு ஆட்டக்காரி. துணையா ட்ரம் அடிக்கற
அன்னாடங்காய்ச்சிக்குப் பேரு 'தவுலத்'!!!
நடனத்துக்குன்னு தனி ஆளுங்க வேற. ஒரு நடனம் சாயி, சுப்புலட்சுமி சகோதரிகள். 'நாங்க ஆடுவதும் பாடுவதும்
காசுக்கு, சிலர் ஆளைக்குல்லாப் போடுவதும் காசுக்கு'
கதாநாயகன் எவ்வளவு 'வெள்ளந்தி'பாருங்க! பாட்டுலேயே 'க்ளியரா' இருக்கு எதுக்கு அந்த விருந்துன்னு!! ஹூம்ம்ம்..
இன்னொரு நடனம், சொன்னா நம்பணும், நம்ம 'வஹீதா ரெஹ்மான்'( சலாம் பாபு சலாம் பாபு என்னைப் பாருங்க
தங்கக்கையினாலே காசை அள்ளி வீசுங்க)
தமாசு நடிகருக்கும் டூயட் இருக்கு. 'சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனாக் கல்கண்டே' தவுலத்துக்கு ஜோடி புல்புல்!
சாரங்கபாணியும் எம்.என், ராஜமும் பாடி ஆடறாங்க.
தங்கவேலுக்கும் ஒரு பாட்டு. 'உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
ஜல்ஸா செய்யடா' (கண்டசாலாவின் குரலில்)
அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்
மாசில்லா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே
என்னை அன்பினாலே ஆள வந்த அழகுபூபதி
உன்னைவிட மாட்டேன் உண்மையில் நானே
என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
இதெல்லாம் பாடுனதும் நம்ம பானுமதியம்மாதான்!
இசை யாருன்னா, தட்சிணாமூர்த்தி. இசைகுழு நல்லா அடக்கி வாசிச்சிருக்கு.
பாட்டுங்க எல்லாம் நல்லா இருக்கறது மட்டுமில்லை, இன்னும் மனசுலே நல்லாவே நினைவில் இருக்குது.
பாடலோட வரிகள் தெள்ளத் தெளிவா காதுலே விழுது. மனசுலே நின்னதுக்கு அதுவும் காரணமோ? கூடவே
சேர்ந்து பாடிக்கிட்டு ஜோராப் படம் பார்த்தோம். நம்ம பூனைங்க தான் மிரண்டு போச்சுங்க. அம்மாவும் அப்பாவும்
நல்லாத்தானே இருந்தாங்க, திடீர்னு என்ன ஆச்சுன்னு! பாடல்வரிகளும் கதையோடு சம்பந்தப்பட்டதுதான் விசேஷம்.
மறக்காம சொல்லவேண்டியது பி.எஸ். வீரப்பாவின் குரல்!!! நல்ல அழுத்தமான உச்சரிப்பு. அழகாக வசனம்
பேசறார், கூடவே அந்தச் சிரிப்பு ஹா ஹா ஹா ஹா.......
படம் ஆரம்பிச்சப்ப, வசனத்துலே நான் கவனிச்சது, ரெண்டு மூணு இடத்துலே 'கடவுள்'ன்ற வார்த்தை. அட! பரவாயில்லையே,
அந்தக் காலத்துலே கூட கவனமா இருந்திருக்காங்களே! கதை நடக்கற ஊரு 'பாக்தாத்'ஆச்சே. அவுங்க 'அல்லா'ன்ற
பேரைத்தானே சொல்லியிருக்கணும்?
பத்தே நிமிஷத்துலே 'கவனிச்சுட்டாங்க' போல. ஊருக்கேத்த பேரும் வந்துருச்சு!!!
இது கலர்ப் படம். கேவா கலராம்! ப்ரவுனும், மரூனும் தூக்கலா இருந்துச்சு.
மொத்தத்துலே ரசிக்கவேண்டிய படம்தான்!!!! ஆங்.. அந்த மாளிகை இருக்கற இடம் 'ஒஹேனக்கல்'லா?
அட்டகாசமா இருக்கு!
'அண்டா கா கஸம், அபுல் கா ஹூக்கும். மூடிடு சிஸேம்!!!!!'
ஒரு நாளைக்கு மருதவீரனோடு வாரேன்.
Posted by துளசி கோபால் at 8/03/2005 11:04:00 AM 28 comments
Tuesday, August 02, 2005
உங்க அம்மாவும் எங்க அம்மாவும்!!!
அம்மான்னாவே தெய்வம்தான்.
அதுலே என்ன சந்தேகம்?
ஆனா உயர்ந்த இடத்துலே இருக்கறது
உங்கம்மாவா? இல்லை எங்கம்மாவா?
ச்சீச்சீ, இது என்ன பைத்தியமாட்டம் கேக்கறே? அவுங்கவுங்களுக்கு அவுங்கவுங்க அம்மா
ஒசத்தியில்லையா?
ஓ. அப்படியா? அப்ப அம்மான்னா அவுங்க புள்ளீங்களுக்கு நல்லதுதானே செய்யணும்?
ஆமா. இப்ப செய்யறதுலே எது கெட்டதுன்னு சொல்லறே?
அவுங்களுக்குக் காரியம் ஆகணுமுன்னா மட்டும் நல்லது செய்யறது. மத்த சமயத்துலே யாரையும் கண்டுக்காம
இருக்கறது. இதுமட்டும் நல்லதா?
'அம்மா'ங்களுக்கு இதெல்லாம் சகஜமாச்சே. இதையா ஒரு பெரிய தப்புன்னு சொல்ல வந்துட்டே?
இதெல்லாம் தப்பு இல்லைன்னு ஆயிருச்சா இப்பெல்லாம்?
ஆமாம். எலக்ஷன் வருதுல்லே. அம்மா தேதியைச் சொல்லாம மூடு மந்திரமா கொஞ்சநாளா இருந்துட்டு
இப்ப பட்டுன்னு தேங்காய் ஒடைச்சாப்புலே சொல்லிட்டாங்க செப்டம்பர் 17க்கு எல்லோரும் ஓட்டுப் போடணுமுன்னு!
அதுசரி. உனக்கு விஷயம் தெரியுமா? உலகத்துலே இருக்கற 'பவர் ஃபுல் பெண்மணிகள் வரிசையிலே 24வது
இடத்துக்குப் போயிட்டாங்க.
என்ன? போன வருசம் 43 வது இடத்துலே இருந்தவுங்களா? 19 படியை ஒரே தாண்டா தாண்டிட்டாங்க. உள்ளூர்
ஆளுங்க என்ன சொல்றாங்களாம் இதைப் பத்தி?
அம்மாவைப் பத்தி நல்லாத்தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அடுத்தவங்க கஷ்டத்தைப் பார்த்துக்கிட்டுச் சும்மா
இருக்க மாட்டாங்க நம்ம அம்மா. பரோபகாரம் ஜாஸ்தி. ஆனா என்ன உதவிக்கரம் நீட்டிக்கிட்டே இருக்கறதாலே
நம்ம வீட்டுலே கஷ்டம் இருக்கறதைக் கூட கவனிக்க நேரமில்லாம இருக்காங்க.
அதுவும் சரிதான். அவ்வளவு பெரிய நாடான ஆஸ்தராலியாவே 'தம்பா' கப்பல் ஆளுங்களை உள்ளே வரவிடாம
பிடிவாதமா நின்னப்ப, எல்லோரையும் இங்கே எடுத்துக்கிட்டு வரிகட்டுற ஆளுங்களோட சுமையை அதிகரிச்சது
இந்த அம்மான்ற வருத்தம் இன்னும் பலபேருக்கு இருக்குது.
தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கறதுலேமட்டும் ரெண்டு அம்மாவுக்கும் வித்தியாசம் கொஞ்சம்கூட இல்லே,
இல்ல?
ஏன்? வித்தியாசம் இருக்கே. அவுங்க தமிழிலே சொல்வாங்க. நம்ம அம்மா இங்கிலிபீஸூ!!!
இப்பப் புதுசா என்ன வாக்குறுதி கொடுத்தாங்க?
எல்லாம் 'ஸ்டூடண்ட்ஸ் லோன்' இருக்குலே அதுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யப்போறாங்களாம். அப்பத்தான்
படிச்சு முடிச்சவங்க இங்கேயே இருந்து வேலை செய்வாங்களாம். இந்தத் தள்ளுபடி இவுங்களுக்கு மட்டும்தானாம்.
அப்படியா? இவுங்க ஓட்டுங்களும் அம்மாவுக்குத்தான்னு சொல்லு!
அப்ப எல்லாமே ஒரே குட்டையில ஊறுன மட்டைங்கதானா?
பின்னே அரசியல்ன்னா என்னன்னு நினைச்சுக்கிட்டே?
பின் குறிப்பு: இதுலே எங்கம்மா பேரு ஹெலன் க்ளார்க். உங்கம்மா பேரு........ நீங்களே போட்டுக்குங்க.
Posted by துளசி கோபால் at 8/02/2005 01:10:00 PM 4 comments
Monday, August 01, 2005
வேகம் வேகம் வேகம்!!!!
இந்த மீள்பதிவின் காரணம் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. காவல்துறையினருக்கும்,
பிரதமரின் காரோட்டிக்கும் என்ன ஆகும் என்பதை வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் எழுதுவேன். இங்கெயும் ஒரு வழக்கு நீதிமன்றம்
வர ஒரு வருடம் ஆகிவிட்டது பாருங்கள்!!
ஒரு வேடிக்கை/உண்மை நிகழ்ச்சி
***********************
இந்த நாட்டுப் பிரதம மந்திரியின் 'கார்' வேகக் கட்டுப்பாட்டை மீறி சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதைக் கண்ணால் பார்த்த சாட்சிகள் தேசிய தொலைக்காட்சி களில் தோன்றி, அப்படி அந்த'கார்' மற்றும்
காவல்துறையைச் சேர்ந்த பாதுகாப்புக் கார்களும் கடும் வேகத்தில் (குறிப்பிட்ட இடத்தில் வேகம் 50 கிலோ மீட்டர்)
அதாவது 140 கிலோ மீட்டரில் சென்றதாகவும் சொல்லியிருக்கின்றனர்.
இங்கே தெற்குத்தீவைச் சேர்ந்த 'டிமரு'என்னுமிடத்திலுள்ள விமான நிலையத்திலிருந்து போகவேண்டிய
விமானம் ரத்து செய்யப்பட்டதால், பிரதம மந்திரி 'கிறைஸ்ட் சர்ச்' என்னும் ஊருக்கு வந்து, அங்கிருந்து
புறப்படும் விமானத்தைப் பிடிப்பதற்காக வேகக் கட்டுப்பாட்டை மீறி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இரண்டு நாளாக, ரேடியோவிலும், தொலைக்காட்சிகளிலும் இதேதான். மக்களுக்கு ஒரு நீதி, மந்திரிக்கு
ஒரு நீதியா?
உடனே, ஒரு இந்திய நாட்டைச் சேர்ந்த என் மனக்கண்ணில் விரிந்த காட்சி இது.
நம் இந்திய நாட்டில் இது போல நடந்திருந்தால்............
1. யாரும் 'கண்ணால் கண்ட சாட்சி'என்று முன் வந்திருக்க மாட்டார்கள். அப்படி யாரேனும் கூறும்
பட்சத்தில், காவல்துறையே அவர்களைப் பயமுறுத்தி, அடித்து நொறுக்கி இருக்கும்.வாயைத் திறக்க முடியுமா?
2. பிரதமரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் 'சாட்சிகளை' இல்லாமல் செய்திருப்பார்கள். இன்னேரம்
சாட்சிகள் 'மேலே' போயிருப்பார்கள். சாட்சிகளின் குடும்பம் சின்னாபின்னமாயிருக்கும்.
3. 'டிமரு' விமானம் ரத்து செய்யப்படாது. விமானம் இல்லாவிட்டால் என்ன ? ஹெலிகாப்ட்டர் இல்லையா ?
4. 'கிறைஸ்ட் சர்ச்' விமானத்தைப் பிடிக்க விரைவானேன்? பிரதமர் வரும்வரை விமானம் காத்திருக்காதா, என்ன?
5.முதலாவதாக அரசாங்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இதையெல்லாம் காண்பிக்குமா? கட்சித்தொண்டர்கள் இந்த
அக்கிரமத்தை சகிப்பார்களா? இன்னேரம் நிகழ்ச்சி வழங்கியவர் கதி என்னாவாயிருக்கும்?
இப்படிப் பல...
PM's Speeding Motorcade Investigated
21/07/2004 07:29 AM
NewstalkZB
The speeding prime ministerial motorcade has been reported to the Police Complaints Authority.
Police National Headquarters has also appointed a Dunedin inspector to investigate the incident on Saturday, when Helen Clark's motorcade broke the speed limit while travelling from Waimate to reach a flight at Christchurch.
Eyewitnesses say the cars hurtled through several built up areas, after Miss Clark's flight to Wellington out of Timaru was cancelled.
Waimate mayor David Owen recalls Miss Clark and her team leaving the township very quickly.
The Police Commissioner's office says police have to balance competing duties, including security, urgency and the safety of road users.
Miss Clark needed get back to Wellington to attend the Bledisloe Cup match.
Tulsi Gopal
from New Zealand
Posted by துளசி கோபால் at 8/01/2005 11:54:00 AM 14 comments