Saturday, April 30, 2005

நம்ம வீட்டு 'சாமி'


Image hosted by Photobucket.com

முதியோரும் இளையோரும்!!!

நம்ம பத்மா 'தோழியர்'லே முதியோர் இல்லம் தேவையா இருக்கறது காலத்தின் கட்டாயமான்னு கேட்டங்கல்லெ.

முதியோர் இல்லம்னு சொன்னதும் மனசுக்குள்ளே பல நெருடலான விஷயங்கள்
ஓட ஆரம்பிச்சிருச்சு!

இங்கே இது ஒரு நல்ல 'பிஸினஸ்' ஆகிப் போச்சு! பத்மா சொல்றதுபோல அங்கங்கே பரவலாக
பல அநியாயங்கள் நடக்குதுதான். என்னுடைய தோழி ஒருவர்( வெள்ளைக்காரங்கதான்) நர்ஸ். பிள்ளைங்களையும்,
குடும்பத்தையும் கவனிச்சுக்கிட்டு முழு நேரவேலைக்குப் போக இயலாம பகுதி நேர வேலை செய்யறாங்க.


அவுங்க இப்படி முதியோர் இல்லத்துலேதான் வேலை செய்யறாங்க. இங்கெல்லாம் இதை நர்ஸிங் ஹோம், ரெஸ்ட் ஹோம்
அண்ட் ஹாஸ்பிடல்னு சொல்லறாங்க. நம்ம தோழி அங்கங்கே நடக்கற சில அநியாயங்களைப் பார்த்துட்டு
'நமக்கென்ன'ன்னு இருக்கமாட்டாங்க. அங்கே மேனேஜ்மெண்ட்டோட சண்டைதான். இப்படியே அவுங்க எக்கச் சக்க
இடங்களிலே வேலைக்குச் சேரறதும். சில மாசத்துலேயே அங்கே வேலையை விட்டுட்டு அடுத்த இடம் போறதுமா
இருக்கறாங்க. இப்ப இந்த நர்ஸிங் ஹோம் நடத்துற ஆளுங்ககிட்டே இவுங்களைப் பத்தின விவரம் பரவிடுச்சு.
இவுங்களுக்கு இப்ப வேலையெ கிடைக்கறதில்லை. இவுங்க 'மனசாட்சிக்குப் பயப்படற டைப்' அதான் இப்படி இருக்காங்க.

அவுங்க அப்பப்ப என்கிட்டே சொன்ன விவரங்களைக் கேட்டுட்டு எனக்கு மனசு ரொம்பக் கவலை ஆகிடும். அதுவும்
போதாதுன்னு இங்கே ஆஸ்பத்திரிகளிலே பெயின் மேனேஜ்மெண்ட்க்கு. செல்ஃப் ஹெல்ப் & கண்ட்ரோல்ன்னுட்டு
அவுங்கவுங்களே வலி நிவாரணியை ஒரு டோஸ் ஏத்திக்கற மாதிரி வச்சிருக்காங்க. அதுலே பலபேரு ச்சின்ன வலியைக்கூடப்
பொருட்படுத்தாம அடிக்கடி மருந்து ஏத்திக்கிட்டு அதுலெயே அடிக்ட் ஆயிடறாங்களாம். இது வேற ஒரு பயங்கரம்.

இதுக்கு நடுவிலே மகளோட பியானோ டீச்சர் ஒரு பாட்டி இருந்தாங்க. அவுங்க அந்தக் காலத்துலே 'போலியோ'வால
பாதிக்கப்பட்டு கொஞ்சம் காலை இழுத்து இழுத்து நடப்பாங்க. இது காரணமோ என்னமோ அவுங்க கல்யாணமே
செஞ்சுக்கலை. தனியா இருந்தவங்க உடம்பு பலகீனமாகி, சுகமில்லாப் போயிட்டங்க. அப்புறம் பியானோ க்ளாஸ்
எடுக்கறதையும் நிறுத்திட்டங்க. அவுங்க ரெண்டு பெட் ரூம் ஃப்ளாட்லே இருந்தாலும், எப்பவும் வீட்டைச் சாத்தியே
வச்சிருந்ததாலே, (அவுங்க வீட்டுக்கு மகளை பியானோ ட்யூஷனுக்குக் கொண்டு போய் விட்டுட்டு அங்கியே இருந்து
கூட்டிட்டு வருவேன்) ஒரே மக்கல் வாடையா இருக்கும். தாங்க முடியாம வெளியே வந்து தோட்டத்துலே இல்லாட்டா
குளிர் ரொம்ப இருந்தால் காருலெ உக்காந்திருப்பேன்.

ட்யூஷனை நிறுத்துனதும், சொந்தக்கரங்க வந்து அவுங்களைக் கூட்டிட்டுப் போய் ஒரு முதியோர் இல்லத்துலே
சேர்த்துட்டாங்க. வீட்டையும் காலி செஞ்சு, காலி என்ன காலி, ஒரு கராஜ் சேல் போட்டு சாமான்களையெல்லாம்
ஒழிச்சுக் கட்டினாங்க. அப்புறம் அந்த வீடும் விக்கறதுக்குப் போட்டுட்டாங்க. ( இந்த கராஜ் சேல் பத்தித் தனியா
ஒரு பதிவே போடப்போறேன்!)

அவுங்களைக் கேட்டு அந்த முதியோர் இல்லத்தைத் தெரிஞ்சுக்கிட்டு ஒரு நாள் அங்கெ போனோம்.

வெளியே அலங்காரமான தோட்டம், உள்ளெ நுழைஞ்சதும் வரவேற்பு அறை எல்லாம் படு ஜோரா அட்டகாசமா
இருந்துச்சு.

இந்த மாதிரி, இன்னாரைப் பார்க்க வந்திருக்கோமுன்னு சொன்னதும் எங்களை ( மகளும் நானும்) உக்காரவச்சு
உபசரிச்சுட்டு, அவுங்க ரூமுலே போய் தூங்கறாங்களா இல்லே முழிச்சிருக்காங்களான்னு பார்த்துட்டு வந்து
எங்களைக் கொண்டு போனாங்க.

ச்சின்ன ரூம்தான். அங்கே ஒரு அட்டாச்சுடு பாத்ரூமும் இருந்துச்சு! ஒரு சிங்கிள் கட்டில் போட்டு இருந்துச்சு.
அப்புறம் ஒரு மேசையும் நாற்காலியும். சுவருக்குள்ளெ ஒரு கப்போர்டு & வார்ட்ரோப். அவ்வளவுதான். ஜஸ்ட் பேசிக்!

எங்களைப் பார்த்ததும் பாட்டி டீச்சர்க்கு பயங்கர சந்தோஷம்!!! கொஞ்ச நேரத்துலே அந்த நர்ஸ்/உதவியாளர் ஒரு
ட்ரேயிலே பிஸ்கெட், டீ எல்லாம் கொண்டுவந்து வச்சாங்க. அது டீச்சருக்குன்னு நாங்க நினைச்சப்ப,
அதெல்லாம் விசிட்டருங்களுக்கு சொன்னாங்க. பரவாயில்லையே, வந்து பாக்கறவங்களுக்கும் வீடு மாதிரி உபசரணை
செய்யறாங்களேன்னு மனசுக்குச் சந்தோஷமா இருந்துச்சு!

மறக்கறதுக்கு முன்னாலே ரெண்டு விஷயத்தைச் சொல்லிடறேன்.

இந்த ஊர்லே 'டீ'ன்னா என்னா தெரியுமா? ராச் சாப்பாடு!!!! எனக்கென்ன தெரியும்? நாங்க வந்த புதுசுலே ,
இங்கே இருக்கற வெள்ளைக்காரங்க உங்க டீ டைம் எப்பன்னு கேப்பாங்க, நம்ம வீட்டுக்கு விசிட் வர்றதுக்கு
முன்னாலே! நானும் நாலு நாலரைன்ன சொன்னேன். அவ்வளவு சீக்கிரமாச் சாப்பிட்டா அப்புறம் 'சப்பர்' உண்டா?
எப்பன்னு கேட்டாங்க. நானும் சளைக்காம எட்டரை, ஒம்போதுன்னு சொன்னேன்.

ஒண்ணு கவனிச்சிங்களா? நம்ம ஆளுங்க அதாங்க இந்தியர்ங்க, ஒரு நேரத்தைச் சொல்லும்போது நாலு, எட்டு. பத்து
அப்படின்னு ஒரு ரவுண்ட் ஃபிகராச் சொல்ல மாட்டோம். எப்பவும் ஒரு கிரேஸ் டைமும் சேத்துக்கிட்டுதான் சொல்றது வழக்கம்.
இல்லையா?

எப்ப வருவீங்கன்னு கேட்டா, ஒரு பத்து பத்தரைக்கு வந்துருவோம்ல! இந்த அரைமணிநேரம் போதாதுன்னு அப்புறமும் ஒரு மணி
நேரம் கழிச்சு ஆடி அசைஞ்சு பதினொன்னரை, பன்னெண்டுக்கு வருவாங்கல்ல! பாருங்க! நான் சொல்லவந்ததை விட்டுட்டு
'டைம் கீப்பரா' போய்க்கிட்டு இருக்கேன்(ல) சரி சரி, டீ விஷயத்துக்கு வரேன்.

நான் எப்பவும் முன் ஜாக்கிரதையா, உங்க வீட்டு வழக்கம் எப்படின்னு கேட்டு வச்சுக்குறதுதான். அப்படித் திருப்பிக்
கேட்டாக்க, அவுங்க வீட்டுலே 'டீ' ஆறு மணின்னே பலரும் சொல்றது. அது ஏன்னா, ஆறு மணிக்கு 'டீ'முடிச்சுட்டு,
ஏழு மணிக்குப் புள்ளைங்களைக் குளிப்பாட்டி, ஏழரைக்குத் தூங்க வைக்கவாம்! இங்கெ இது ஒரு கதை. சாயந்திரம்
ஏழரைக்குப் புள்ளைங்கெல்லாம் தூங்கப்போயிரணும். கொஞ்சம் பெரிய புள்ளைங்க எட்டரைக்கு. டி.வி.லே சரியா
எட்டரைக்கு, 'குட் நைட் ச்சில்ரன்'னு ஒரு கார்டு காட்டுவாங்க. அதுக்கப்புறம் வர்ற நிகழ்ச்சிங்கெல்லாம் பெரியவங்களுக்கு!
அப்ப டி.வி. ச்சேனல் கூட ரெண்டுதான் இருந்துச்சு. அதுலெயும் டி.வி ஒன் காலையிலே 10 மணிக்குத்தான் ஆரம்பிக்கும்.
மொதல்லே இங்கத்து தேசிய கீதம் போடுவாங்க!!!!!! அப்பத் திரையிலே இங்கத்து இயற்கை காட்சி, நகரங்கள்ன்னு
படங்கள் ஓடிக்கிட்டு இருக்கும்! இப்ப இதொண்ணும் இல்லை. அதான் இருவத்துநாலு மணி நேரமும் தொல்லைக்காட்சி
நடக்குதே!

ஐய்யய்யோ ( வெள்ளைக்கார பாஷையிலே இதை எப்படிச் சொல்றது? ஓ மை காட் ன்னா?) வெறும் சாயாவைக்
குடிச்சுட்டு பசங்க வெறும் வயத்துலயா தூங்கும்? போட்டு வாங்குனதுலே அப்புறம்தான் முழு விஷயமும் வருது.
'டீ'ன்னா ராச் சாப்பாடு. அதுதான் மெயின் மீல்!

ரொம்ப வருசத்துக்கு முன்னாலெ , ஒரு பதினேழு வருசத்துக்கு முந்தி நடந்ததைக் கேளுங்க!

இது தெரியாம, புதுசா வந்த ஒரு இந்திய நண்பர், அவரோட கூட வேலை செய்யறவங்களை அவரோட வீட்டுக்கு
சாயந்திரம் 'டீ'க்கு கூப்பிட்டு இருக்கார். அவுங்க வந்தவுடனெ செஞ்சு வச்சிருந்த வடை/ பஜ்ஜியைக் கொடுத்து
தேநீர் கொடுத்திருக்கார். அவுங்களும், அது இந்தியன் ஸ்டைல் ஆன் ட்ரேய்/ அப்பிடைசர்/ஸ்டார்ட்டர் நினைச்சுக்கிட்டு
அதையும் தின்னுட்டு, மெயின் கோர்ஸ் வருமுன்னு உக்காந்துகிட்டுப் பேசிக்கிட்டே இருந்திருக்காங்க. நம்ம நண்பரோ,
'இது என்னடா, சாப்பிட்டு முடிச்சிட்டும் போகாம அவங்கபாட்டுக்கு உக்கார்ந்துக்கிட்டே இருக்காங்க. மணி வேற
ஆகிக்கிட்டு இருக்கு. நம்ம சாப்பாடு, சாப்ட்டுட்டுப் படுத்தாதானே நாளைக்கு வேலைக்குப் போகமுடியுமுன்னு' இருக்கார்.

அவருக்கோ தூக்கம் வந்துக்கிட்டு இருக்கு! தாங்க முடியாம 'சரி. நீங்கெல்லாம் வந்ததுக்கு ரொம்ப நன்றி. நாளைக்கு
வேலை நாளாச்சே. ஆஃபீசிலே பார்க்கறென், குட் நைட்'ன்னு சொல்லி அனுப்பியிருக்கார். அவுங்களும் கொஞ்சம் திகைப்போட
போனதை இவர் புரிஞ்சுக்கவே இல்லை. மறுநாள் அவரோட ஆஃபீஸிலே விஷயம் பரவிடுச்சு! அப்ப யாரோ சொல்லப்
போய் தான் இவர் செஞ்சது இவருக்கே புரிஞ்சிருக்கு! அப்புறம் அவுங்க கிட்டே மன்னிப்புக் கேட்டுக்கிட்டு இன்னொரு
நாள் நிஜமாவே சாப்பிடக் கூப்ட்டாராம்! இதே நண்பர்தான், 'ப்ரிங் அ ப்ளேட்'ன்னு சொன்ன நிகழ்ச்சிக்குக் வெறும் தட்டு
ஒண்ணை, சாப்பிடறதுக்குக் கொண்டு போனவரு:-)

இந்த மாதிரி, ஆளுங்களை கூப்புடறதுக்கு ஜஸ்ட் ஸ்நாக்ன்னா, 'ஜஸ்ட் கம் ஃபார் அ கப்பா'ன்னு சொல்லணுமாம்.
இதுலே கூடப் பாருங்க, வீட்டுக்கு விஸிட் வந்தவங்ககிட்டே காஃபி, டீ எதாவது குடிக்கிறீங்களான்னு கேட்டா, சிலர்
அதிலும் லேடீஸ்ங்க சொல்றது, எனக்கு இன்னும் வேடிக்கையா இருக்கும். ' நீயும் குடிக்கறதா இருந்தா நானும்
குடிப்பேன்'னு சொல்வாங்க! எனக்கு வேணாமுன்னா அவுங்களுக்கும் வேணாமாம்! இது எப்படி இருக்கு?

பழையபடி என்னவொ சொல்ல வந்து எங்கியோ போயிட்டேன்!

எங்கெ விட்டேன்? ம்ம்ம்ம்... டீச்சர் ரூம்!

இது இன்னும் நீண்டு போகும்.






Thursday, April 28, 2005

யெஸ், யுவர் ஆனர்!!!!! தொடர்ச்சி

இன்னைக்குப் பரவாயில்லே. குற்றம், போதை மருந்து வச்சிருந்தது!!!!

ஜூரியாக செலக்ட் செஞ்ச நாங்க ஏழு பேரும் ஒரு அறைக்குக் கொண்டு போகப் பட்டோம். அங்கே எங்களுக்குள்ளே
ஒரு லீடரைத் தேர்ந்தெடுக்கணுமாம். கொஞ்சம் துடிப்போட ஒருத்தர் இருந்தாரு. அவரையே லீடரா ஆக்கிட்டோம்.
இதுக்கு நிஜமாவே ரெண்டெ நிமிஷம்தான் ஆச்சு!


அப்புறம் யாரு லீடருன்னு கேட்டுக்கிட்டு வந்தவுங்க, எங்களையெல்லாம் கூட்டிக்கிட்டுப் போய் ஜட்ஜுக்கு இடப்பக்கம்
உக்காரவச்சாங்க. லீடர் கடைசியா உக்காரணுமாம்! வழக்கு விவரங்கள் அச்சடிச்ச பேப்பர் கத்தைகளை எங்களுக்குத்
தந்தாங்க. அது இருக்கும் ஒரு நாப்பது நாப்பத்தஞ்சு தாள்! கூடவே ஏதாவது குறிப்பெடுக்கறதுக்கு வெத்துத்தாளுங்க
ஒரு பத்து பதினஞ்சு. அப்புறம் பேனா, பென்சில்!

வழக்கம் போலக் குற்றப்பத்திரிக்கை படிக்க ஆரம்பிச்சாங்க. அதெல்லாம் நமக்குத் தந்த அச்சுக் காப்பியிலே இருக்கே.
ரொம்பக் கவனமா(!) அதை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருந்தோம். கோர்ட்டுக் கிளார்க் ரொம்பப் பாவங்க! சொன்னதையே
திருப்பித்திருப்பிச் சொல்றதுபோல, படிச்சதையே திருப்பித்திருப்பிப் படிச்சுக்கிட்டு இருந்தாரு. எனக்கே ஐய்யோன்னு
ஆகிப்போச்சு!

அப்புறம் அஞ்சு நிமிஷம் ப்ரேக்! ஜட்ஜ் உள்ளெ போனதும், நாங்கெல்லாம் எழுந்து அந்த ஜூரி ரூமுக்குப் போயிரணும்.
அங்கே காஃபி, டீ, கேக், பிஸ்கெட்ன்னு தீனிங்க இப்ப வச்சிருந்தாங்க. அங்கேயே ஒரு 'பவுடர் ரூம்'! அது ஒரு
'டாய்லெட்'தான். பொம்பிளைங்க மேக்கப் டச் செஞ்சுக்கறதுக்காக ஒரு பெரிய கண்ணாடி, வாஷ் பேஸின் எல்லாம்
வச்சிருந்தாங்க. வெள்ளைக்காரங்க ஊருலே இந்த பவுடர் ரூம் கட்டாயம் இருக்கணும். கைப்பையிலே வச்சிருக்கற
குட்டிப் பவுடர் காம்பாக்ட் எடுத்து, அந்த பஃப்பாலே மூக்குக்குப் பவுடர் போட்டுக்கறதாம். மூக்கை சுத்தி வேர்த்துவிட்டு
பவுடர் கலைஞ்சிடுமாம். அதாலே துரைசாணிங்க ஏற்படுத்தின பழக்கமாம்! ( நம்ம வீட்டுலேயே விருந்தாளிங்க வந்தா
அவுங்களுக்காக ஒரு பவுடர் ரூம் வச்சிருக்கோம்னா பாருங்களேன் இதோட ப்ரதான்யத்தை!)

ஒரு கோர்ட்டு ஆளு எப்பவும் நமக்கு உதவறதுக்கே இருக்காங்க. அவுங்கதான் நம்மை அந்த ஜூரி ரூமுகோ, கோர்ட்டு
நடக்கற இடத்துக்கோக் கொண்டு போகணும். அப்பப்ப தீனிங்க இருக்கான்னு பார்த்து வேணுமுன்னா கொண்டு வைக்கணும்.
அழுக்குக்கான காஃபி கப்புங்க எல்லாம் எடுத்துட்டு, புதுசாக் கொண்டு வந்து வைக்கணும். நமக்கு ராஜ உபசாரம்தான் போங்க!

அஞ்சு நிமிஷம் ஆனதும் நம்மைக் கொண்டு போய் உக்கார வச்சாங்க. அடுத்த நொடி ஜட்ஜ் வந்து உக்காந்தாரு. எல்லாம்
ஒரு ஒழுங்கு முறையிலே நடந்துக்கிட்டு இருக்கு.

எதிர்க்கட்சி வக்கீல் சாட்சிங்களைக் குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பிச்சார். அப்பப்ப, தினத்தந்தியிலெ வர்றமாதிரி
'கோர்ட்டில் பலத்த சிரிப்பு' வருமுன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன். அச்சுபிச்சா பதில் சொல்றப்பவும் யாரும் சிரிக்கலெ.
ஏன், ஒரு புன்முறுவல் கூட இல்லாம ரொம்ப சீரியஸ்ஸா இருந்தாங்க. நாந்தான் தினத்தந்தியை நினைச்சுக்கிட்டு
உக்காந்திருந்தேன். சில ஜுரிங்க ஏதோ பரிட்சை எழுதறாப்போல சாட்சிங்க சொல்றதையெல்லாம் வேக வேகமா எழுதிக்கிட்டு
இருந்தாங்க! அதான் கோர்ட் க்ளார்க் எழுதறாங்களே, நாம வேற எழுதணுமான்னு எல்லாத்தையும் மனசுலே சேமிச்சுக்
கிட்டு இருந்தேன்.

இப்ப உணவுக்கு இடைவேளை வந்துருச்சு! ஜூரி ரூமுலே பிட்ஸா, ஸாண்ட்விச், ஃபில்டு ரோல்ஸ்ன்னு என்னென்னவோ
வச்சிருந்தாங்க. நம்ம ஜூரிங்க ச்சும்மா பூந்து விளையாடிட்டாங்க! நாந்தான் ,அதுலே என்ன 'மீட்' இருக்கோன்ற
பயத்துலே பிஸ்கெட், கேக்குன்னு 'ஆபத்தில்லாததா எடுத்துக்கிட்டேன்.

பழையபடி கோர்ட்டு ரூம்! எல்லாம் அதே போல! ஒருவழியா பேசறதெல்லாம் பேசி, படிக்கறதெல்லாம் படிச்சு முடிச்சாச்சு!
இப்ப ஜட்ஜ் எங்க பக்கம் திரும்பி ஒரு லெக்சர் கொடுத்தார். இந்த வழக்குலே நாங்க ஜூரிங்க சொல்றது சமுதாயத்துக்கு
ரொம்ப முக்கியம். அதனாலே நாங்க கூடிப் பேசி முடிவு எடுக்கணுமுன்னு சொல்லிட்டு எழுந்து போயிட்டார்.

திரும்பி எங்களை ஜூரி ரூமுக்குக் கொண்டு போயிட்டாங்க. எனக்குத் தெரியாதே இப்படி எனக்கு ச்சேலஞ்ஜ் கிடைக்காதுன்னு!
வெளியே போற வரைக்கும் ஃபோன் பேசக்கூடாது. செல் ஃபோனை ஆஃப் பண்ணி வைக்கச் சொல்லிட்டாங்க. வீட்டுக்கும் ஃபோன்
செஞ்சு லேட்டாகுமுன்னு சொல்லமுடியாம ஒரு தவிப்பு! வழக்கு விவரம் வெளியே போகாம இருக்கவாம். அப்ப
பொது ஜனங்களும்தானே உக்காந்து இதுவரை நடந்ததையெல்லாம் கவனிச்சுக்கிட்டு இருந்தாங்க. அவுங்க போய்
சொல்ல மாட்டாங்களாமா? போதாக்குறைக்கு எங்க கிட்டே ஒரு ப்ரமாணம் வேற செய்யச் சொன்னாங்க, மனசாட்சிக்கு
விரோதமில்லாம நடந்துக்குவோமுன்னு!

ஜூரி ஜனங்க கவலை ஏதுமில்லாம, அங்கிருக்க தீனிங்களையெல்லாம் ஒரு கை பார்த்துக்கிட்டே இதுவரை நடந்த
விசாரணைகளையும் அந்த பதில்களையும் விவாதிச்சுகிட்டே இருந்தாங்க. எனக்கு மனசுலே பட்டதைச் சொன்னேன்.
எல்லோரும் ஒரு மனசா முடிவெடுக்கணுமாம். மாற்றுக் கருத்து இருக்கறவங்களைக் கன்வின்ஸ் செஞ்சு அவுங்களையும்
நம்ம பக்கம் சேர வைக்கணுமாம்! ஏதோ 'புது போப் ஆண்டவர் எலக்ஷன்' ரேஞ்சுலே போய்க்கிட்டு இருக்கு! வெள்ளைப்
புகையோ கறுப்புப் புகையோ விடற ஏற்பாடு மட்டும்தான் இல்லை!

கடைசியிலே எல்லோரும் 'ஒரு மனதா' ஒரு முடிவைச் சொன்னோம். அதை அந்த லீடர் ஒரு பேப்பரிலே எழுதுனார்.
நாங்க கையெழுத்துப் போட்டோம். அதை ஒரு கவர்லே வச்சு ஒட்டியாச்சு!

இதுவரை எங்க ரூம் கதவைச் சாத்திட்டு வெளியே காத்திருந்தார் உபசரிப்பாளர்.
லீடர் கதவைத் தட்டுனதும், அவுங்க கதவைத் திறந்தாங்க. முடிவு செஞ்சாச்சுன்னு சொன்னதும், கொஞ்ச நேரம்
காத்திருக்கச் சொல்லிட்டு அவுங்க போய் ஜட்ஜ்கிட்டே விவரம் சொன்னாங்க. அப்புறம் பழையபடி எங்களையெல்லாம்
கோர்ட்டு ரூமுக்குக் கொண்டு போனாங்க. ஜட்ஜ் வந்து சேர்ந்தார். பொது ஜனங்கெல்லாம் பேச்சை நிறுத்திட்டு
கொயட் ஆகிட்டாங்க.

எங்ககிட்டே, முடிவு ஒருமனசாச் செஞ்சீங்களான்னு கேட்டார். ஆமான்னு லீடர் சொன்னதும், அந்தக் கவரை ஒட்டியாச்சான்னு
கேட்டுட்டு, கொடுக்கச் சொன்னார். கோர்ட்டு க்ளார்க் எழுந்துவந்து அதை வாங்கிக்கிட்டுப் போய் ஜட்ஜ்கிட்டே கொடுத்தாங்க.

எங்களுடைய 'சேவை'யைப் பாராட்டி, இரு ரெண்டு நிமிஷம் புகழ்ந்துட்டு, எங்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் நன்றி
சொன்னார். அப்புறம், தீர்ப்பு இன்ன தேதியில் அறிவிப்பாங்க.அதோட ஒரு காப்பி உங்களுக்கும் அனுப்புவோம். அதுவரை
இங்கே 'நடந்ததை' பத்தி வெளியே பேசவேணாமுன்னு கேட்டுக்கிட்டார். எங்க கிட்டே கொடுத்த வழக்கு விவரம் அடங்கிய
காகிதக் கத்தைகளையெல்லாம் சேகரிச்சு, உடனே அங்கேயே ஒரு ஷ்ரெட்டர்லே போட்டுத் தூள் பண்ணியாச்சு!
ராஜாங்க ரகசியமில்லே!

ஆச்சு, நம்ம ஜூரி வேலை! குழம்புக்கு ஊற வச்சிட்டு வந்த புளியைக் கரைச்சு ஊத்திக் கொதிக்க வைக்கணும்னு
நினைச்சுக்கிட்டே பஸ்ஸைப் பிடிச்சு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

அடுத்த வாரமே படி, பஸ் சார்ஜ் எல்லாம் வந்துருச்சு! சொல்ல மறந்துட்டேனே, 'ஜூரியா வேலை'செஞ்ச நாளுக்கு
டபுள் காசு வேற!

மூணு வாரம் கழிச்சு மறுபடி ஒரு கடிதம் அனுப்புனாங்க. அந்த வழக்கோட தீர்ப்பு, நாங்க தைரியமா சமுதாயக்
கண்ணோட்டத்தோட எடுத்த முடிவை அனுசரிச்சுத்தான் எழுதப்பட்டதுன்னும், அதற்காக நன்றி தெரிவித்தும் ஒரு
கடிதமும், தீர்ப்போட ஒரு காப்பியும் வச்சிருந்தாங்க.

ஆமாம். நான் ஏன் இதைத் திடீருன்னு எழுதுனேன் தெரியுமா?

நேத்து எங்க ஊர் டி.வி'யிலே முக்கிய நியூஸ் என்னன்னா, அண்டை நாடான ஆஸ்தராலியாவுலே,கோர்ட்டு
நடக்கும்போது, ஜட்ஜ் தூங்குனது மட்டுமில்லாம குறட்டை வேற விட்டுட்டாராம்!!!!!!

எப்படியோ அந்த 'குறட்டை ஜட்ஜ்' நம்ம மலரும் நினைவுகளைக் கிளறி விட்டுட்டார்!!!!

இப்படிப் பக்கம் பக்கமா மணிக்கணக்கா திருப்பித்திருப்பி படிச்சதையே படிச்சிக்கிட்டு இருந்தா 'போரடிச்சு'
தூக்கம் வராதா? நீங்களே சொல்லுங்க:-)




Wednesday, April 27, 2005

யெஸ், யுவர் ஆனர்!!!!!

கொஞ்ச நாளைக்கு முன்னாலே கோர்ட்டுக்குப் போகும்படியா ஆகிடுச்சு! எனக்குக் கையும்
ஓடலே காலும் ஓடலே!

'அடப்பாவமே'ன்னு நீங்க பரிதாபப்படறது எனக்குப் புரியுதுதான்!



இன்ன தேதிக்கு நீங்க கோர்ட்டுக்கு வரணும். உங்களை ஜூரியாப் போட்டிருக்குன்னு
லெட்டர் வந்தப்ப என்னடா செய்யறதுன்னு கொஞ்சம் தடுமாறித்தான் போயிட்டேன்.
அதுவும் ஒரு வாரத்துக்குப் போகணும். அப்படிப் போக முடியாதவங்க, ஏன் போக முடியாதுன்ற
காரணத்தை விளக்கமா எழுதிப்போடணும். அது நியாயமான காரணமுன்னா, நீங்க வரவேணாமுன்னு
அவுங்களே பதில் போடுவாங்க. அப்படி இல்லைன்னா, உங்க மேலே அரசாங்கம் நடவடிக்கை
எடுக்கும்!( இந்த நடவடிக்கைன்றது என்னவா இருக்கும்? அக்கம் பக்கம் கேட்டுப் பார்த்தப்ப ஏதாவது
அபராதம் கட்டச் சொல்வாங்கன்னு சொன்னாங்க! இது நல்லாயிருக்கே!)

இதுபோல 'ஜூரர் சர்வீஸ்' செய்யறது ஒவ்வொரு குடிமகன்/குடிமகள் ( இது வேற 'குடி') கடமையாம்!
இது யாருக்கு வேணா வருமாம். 'ரேண்டமா கம்ப்யூட்டர் செலக்ட்' செஞ்சிரும்போல இருக்கு!

அந்த மாதிரி வர்றவங்களுக்கு, அந்த வாரம் முழுசும் அவுங்க வேலை செய்யற ஆஃபீஸ்/ கம்பெனி
இன்னும் எதாயிருந்தாலும் சம்பளத்தோட விடுப்பு கொடுக்கணுமுன்னு ஒரு சட்டமும் இருக்கு!

எனக்குதான் அனுபவத்துக்குமேலே அனுபவமா நடந்துக்கிட்டு இருக்கே! இதையும் விட்டு வைப்பானேன்?
முன்னேபின்னே கோர்ட்டுக்குப் போன அனுபவம் கிடையாது. இந்த சமாச்சாரத்தையெல்லாம் சினிமாவுலே
பார்த்ததோட சரி! எனக்குத் தெரிஞ்சதெல்லாம்,

'அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்'

'அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்ட்'

'அப்ஜெக்ஷன் சஸ்டெயின்டு'

இந்த மாதிரி சில வார்த்தைகள்தான் மை லார்ட்!

( பார்த்தீங்களா, கோர்ட்டுன்னதும் மை லார்ட் எல்லாம் சரளமா வருது!)

முதலாவதா இந்த ஊருலே கோர்ட்டு எங்கே இருக்குன்னே தெரியலை. லெட்டர்லேயே அட்ரஸ் போட்டிருந்தாங்க.
அந்தத்தெருவோ எனக்குத் தெரிஞ்சதுதான். ஆனா அங்கெ, இது எங்கெ இருக்குன்னு தெரியலையே?

ஞாயித்துக்கிழமையே அந்தப்பக்கமா ஒரு 'ரைடு' போய் இடத்தைக் கண்டுபிடிச்சேன். அட! இதுதானா? எத்தனை
தடவை இந்தப் பக்கம் வந்திருக்கோம். தலையை நிமிந்து அந்தக் கட்டிடத்தைப் பாக்கலை பாரு!

சொல்ல மறந்துட்டேனே. இந்த சர்வீஸ் செய்யறதுக்கு நமக்குத் தினப்படி வேற அளக்கறாங்களாம்! காரை நிப்பாட்டிட்டுப்
போனா, பார்க்கிங் காசுகூடத் தருவாங்களாம். சிடியிலே பார்க்கிங் எப்பவுமே கிடைக்கறது கொஞ்சம் கஷ்டம்தான்.
அதுக்கு பதிலா பஸ்ஸுலேயே போயிட்டு வந்துரலாம். இதோ, ஆத்து வாசல்லெயே இருக்கு பஸ் ஸ்டாப்!
நிஜந்தாங்க!

மறுநாள் சொன்ன டயத்துக்கு அங்கெ நான் ஆஜர்!!! என்னைப்போலவே ஒரு பத்து பதினைஞ்சு ஆளுங்க வந்திருந்தாங்க.
எல்லோர் முகத்துலெயும் 'நீதி தேவனுக்கு உதவ வந்திருக்கோம்' என்ற பெருமையும், லேசான கர்வமும் கலந்த
பார்வை!!!

எங்களையெல்லாம் வரவேற்று, ஒரு பெரிய அறையிலே உக்காரவச்சு, காஃபி, டீ வேணுமான்னு கேட்டு உபசரிச்சாங்க.
அப்புறம் கோர்ட்டு எப்ப ஆரம்பிக்கும், எங்க ட்யூட்டி என்ன என்றதெல்லாம் விளக்கமாச் சொன்னாங்க.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டாருன்னா எங்களுக்கு வேலையே இல்லை. அப்படி இல்லாம
அவர் மறுத்தால்தான் குறுக்கு விசாரணை நடத்துவாங்களாம். அப்பதான் ஜூரிகளோட உதவி தேவையாம்.

எங்க எல்லாருக்கும் ஒரே சமயம் வேலை இருக்காதாம். ஒரு கேஸுக்கு அவுங்களுக்குத் தேவை ஏழு பேர்தானாம்.
ஆனா, யார் ஜூரியா இருக்கணுமுன்னு முடிவெடுக்கறது எதிர்க்கட்சி வக்கீல்தானாம்.

கோர்ட்டு குமாஸ்தா, ஜூரியா வந்திருக்கறவங்க பேரை ஒவ்வொண்ணாப் படிப்பாராம். அப்ப அவுங்கவுங்க பேரு
வர்றப்ப அவுங்கவுங்க எந்திரிச்சு நிக்கணுமாம். அப்ப எதிர்க்கட்சி வக்கீல் ந்ம்மைப் பார்த்துட்டு 'யெஸ்'ன்னு சொன்னா
அந்த வழக்குக்கு நாம் ஜூரி. அப்படியில்லாம நம்மைப் பார்த்து 'ச்சேலஞ்ஜ்'ன்னு சொன்னா நமக்கு அந்த வழக்குலே
வேலை இல்லை! ஆமாம், நம்ம மூஞ்சைப் பார்த்தே அவருக்குச் சாதகமா இருப்போம்/இருக்கமாட்டொம்னு அவரே
தீர்மானம் செஞ்சுடுவார்போல!

அப்படி'ச்சேலஞ்ஜ்' சொல்லப்பட்டவுங்க அதை பெர்ஸனலா எடுத்துக்க வேணாமாம். நல்லா இருக்கே கதை!
நாமளா வரோம் வரோம்ன்னு சொல்லிக்கிட்டு ஓடிவந்தொம். இவுங்கதானே லெட்டர் போட்டு வரவழைச்சாங்க. வருந்திக்
கூப்பிட்டுட்டு வேணாமுன்னு அனுப்புவாங்களாமா?

சரியாப் பதினோரு மணிக்குக் கோர்ட் ஆரம்பிச்சது! அதுக்குக் கொஞ்சம் முன்னாலே எங்களையெல்லாம் கோர்ட்டு
ரூமுக்குக் கொண்டு போனாங்க. அங்கே ஏற்கெனவே வக்கீலுங்க உக்காந்திருந்தாங்க. பின்னாலே போட்டிருந்த
'பெஞ்சு'ங்களிலே ஜனங்க உக்கார்ந்திருந்தாங்க.

ஜட்ஜ் வந்தாரு. எல்லோரும் எழுந்திருந்து நின்னோம்( அதான் சினிமாவுலே பார்த்திருக்கோமே!)
அவர் உக்காந்தவுடனே நாங்கெல்லாம் உக்கார்ந்தோம்.

குற்றம் சாட்டப்பட்டவரைப் போலீஸ் கொண்டுவந்து ஏற்கெனவே ஒரு கதவுக்குப் பின்னாலெ நிறுத்தி வச்சிருந்தாங்க.
போலீஸ்தான் நீலக்கலர் யூனிஃபார்ம் போட்டிருந்தாங்க. கு.சா. நல்லா அட்டகாசமா கோட்டு, டை எல்லாம் கட்டிக்கிட்டு
ஜம்முன்னு இருந்தார். போலீஸ்கிட்டே சிரிச்சுப் பேசிக்கிட்டுவேற இருந்தார்.

சம்பிரதாயப்படி கு.சா.( குற்றம் சாட்டப்பட்டவர்) பேரைக் கூப்பிட்டவுடனே, கதவைத் திறந்து அவர் வந்து கூண்டிலே
நின்னார். இப்பக் குற்றப் பத்திரிக்கை வாசிச்சாங்க. வாசிச்சாங்க வாசிச்சாங்க அப்படி விலாவரியா வாசிச்சாங்க.
ஆதியோடு தொடங்கி விவரிச்சு விவரிச்சு வாசிக்கவே ஒரு பத்து நிமிஷமாயிடுச்சு.

கு.சா. குற்றத்தை ஒப்புக்கலை. உடனே ஜூரிங்க பேரை படிக்க ஆரம்பிச்சாங்க. என் பேரு வர்ரதுக்குள்ளேயே ஏழு
பேரை செலக்ட் செஞ்சுட்டாரு எதி(ரி)ர் வக்கீல்.ஆல்ஃபபெடிகல் ஆர்டர்லே என் பேரு கடைசியால்லெ வருது! அப்பவே
சில பேருக்கு 'ச்சேலஞ்ஜ்' கூடச் சொன்னாரு.

எங்கள்லெ பாக்கிப் பேரை, இருந்து கோர்ட்டு நடவடிக்கையைப் பார்க்கணுமுன்னா பார்க்கலாம். இல்லாட்டா வீட்டுக்குப்
போறதானாப் போகலாமுன்னு சொன்னாங்க. நானும் இதுவரை இதையெல்லாம் நேர்லே பார்க்காததாலே, இருந்து
என்ன ஆவுதுன்னு பார்க்கலாமுன்னுட்டு, உக்காந்திருந்தேன். அந்த ஏழு பேரும் ஒரு அறைக்குள்ளே போனாங்க.
ரெண்டு நிமிஷத்துலே வெளியே வந்து ஜட்ஜ்க்கு இடது கைப் பக்கம் போட்டிருந்த நாற்காலிகளிலே
வந்து உக்காந்தாங்க.

அவுங்க இருந்த பகுதி, தனியா விளக்குங்கெல்லாம் நிறைய வச்சு, ஒரு அந்தஸா இருந்துச்சு! நல்ல குஷன் வச்ச
வசதியான இருக்கைகள்!

நான் கோர்ட்டு ரூமை சுத்தி முத்திப் பார்த்துக்கிட்டு இருந்தேன். எல்லாம் நல்ல மரவேலைப்பாடுகள். 'க்வாலிட்டி
டிம்பர்'லே செஞ்ச சாலிடான ஃபர்னிச்சர்ஸ்!!!!

கேஸு விசாரிக்க ஆரம்பிச்சாங்க. இது ஒரு 'ரேப் & அப்யூஸ்' வழக்கு. நல்லவேளை அந்தச் சின்னப் பொண்ணை
இன்னைக்கு ஆஜர்ப்படுத்தலை!

பழையபடி விஸ்தாரமா விவரிக்க ஆரம்பிச்சுப் படிக்கறாங்க. சாதாரணமா நாம தினப்படி சொல்லாத வார்த்தைகள்,
உடலோட பகுதிகளின் பெயர்கள்ன்னு விஸ்தரிச்சுக்கிட்டே போகுது. எனக்கு அங்கே இருப்பே கொள்ளலை. அதையெல்லாம்
கேக்கவே கொஞ்சம் அன் ஈஸி யா இருந்துச்சு. அப்ப ஒரு அஞ்சு நிமிஷம் ஷார்ட் ப்ரேக் விட்டாங்க. ஜட்ஜ் எழுந்து உள்ளெ
போனார். அப்ப சொன்னாங்க, வெளியே போறவங்க போகலாமுன்னு. நான் இதுதான் சாக்குன்னு வெளியே வந்துட்டேன்.
அப்புறம் சென்ட்ரல் சிடியிலே கடைங்களுக்கெல்லாம் போயிட்டு, கையோடு கொண்டு போயிருந்த 'ஸாண்ட்விச்'சை
ஏவான் ஆற்றுப் பக்கத்துலே உக்காந்து தின்னுட்டு( இங்கேதான் தெனாலி படத்துலே கமலும் ஜோதிகாவும் டூயட்
பாடினாங்க. இவுங்க மட்டுமில்லே, இங்கெ எடுக்கற எல்லாப் படங்களுக்கும் இதுதான் பிக்சர் பாய்ண்ட்!)
ஆற அமர வீட்டுக்கு வந்தேன்.

கோர்ட்டுலே ஒரு ஃபோன் நம்பர் கொடுத்திருந்தாங்க. அதுக்கு தினமும் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலே ஃபோன்
போடணுமாம். அப்ப அதுலே சொல்வாங்களாம், மறுநாளுக்கு ஜூரி சர்வீஸுக்கு போணுமா, வேணாமான்னு!

அன்னைக்குச் சாயந்திரம் ஃபோன் போட்டப்ப வேணாமுன்னு ஒரு ரெகார்டட் மெசேஜ் வந்துச்சு!

புதன் கிழமைக்கு மறுபடி கோர்ட்டுக்கு போகும்படியாச்சு. இன்னைக்கும் நமக்கு வேலை இல்லை.'சேலஞ்ஜ்டு'! மறுபடி கடை,
ஸாண்ட்விச், ஊர் சுத்தரதுன்னு போயிடுச்சு. வியாழனும் இப்படியே! வெள்ளிக்கிழமை வந்துருச்சு. கடைசி நாள்.
போயிட்டு வந்து வீட்டுலே வேலையைப் பாக்கலாமுன்னு பாதி சமையலை முடிச்சுட்டுப் போனேன். என்னமோ
காலங்காலமா இப்படிக் கோர்ட்டுக்குப் போறமாதிரி ஒரு பாவனை வந்துருச்சு!

நம்ம நேரம் பாருங்க. என் பேரைக் கூப்பிட்டப்ப 'ச்சேலஞ்ஜ்'க்குப் பதிலா 'யெஸ்'ன்னு சத்தம் வருது!

மீதி நாளைக்குச் சொல்றேன். இப்பக் கோர்ட்டுக்குப் போணும்:-)))))









Tuesday, April 26, 2005

ஓரியண்டல் பாஸ்தா!!!!!!

ஓரியண்டல் தெரியும், இத்தாலியின் பாஸ்த்தாவும் தெரியும்! இது என்னா ரெண்டும் சேர்த்து?

சொல்றேன், சொல்றேன்.

நம்ம வீட்டுலே எப்பப் பார்த்தாலும்,சோறு, சாம்பார், கறி, சப்பாத்தின்னு செய்யறது மகளுக்குப் பிடிக்கலையாம்!
இது ரொம்ப வருசத்துக்கு முன்னாலே நடந்தது. இப்ப இதே மகள், சப்பாத்தியானாலும் சரி, சோறானாலும் சரி,
அவ்வளவா முணுமுணுக்காம திங்கறது வேற விஷயம் (வாரம் ஒரு நாள் அம்மா கை பக்குவம்ன்றதாலேயோ?)



சைனீஸ் சாப்பாடு வீட்டுலே செஞ்சு தருவேன். சில சமயம் இத்தாலியன் பாஸ்த்தா! எனக்குத்தான் எந்த ரெஸிபியையும்
ஒழுங்காக் கடைப்பிடிக்கணுமுன்னா தலைவலி வந்துருமே! அப்படி ஒரு நா செஞ்சதுதான் இது. இது என்னான்னு
மகள் கேட்டப்ப, ஜம்பமா 'ஓரியண்டல் பாஸ்த்தா'ன்னு சொல்லிவச்சேன். நல்லா இருக்குன்னு பேர் வந்துட்டதாலே
இது நம்ம வீட்டுலே நிலைச்சிடுச்சு!

இதை நான் வெஜ் சேர்த்தும், சேர்க்காமலும் செய்யலாம்ன்றது இன்னும் விசேஷம்!

சரி. செய்முறையைப் பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

பாஸ்த்தா 500 கிராம் பேக்.( எந்த வித டிஸைனா இருந்தாலும் ஓக்கே! )

சிக்கன் போன்லெஸ் & ஸ்கின்லெஸ் 500 கிராம் ( சின்னத்துண்டுகளா ஒரு அங்குல க்யூப் சைஸுலே இருக்கணும்)

மிக்ஸட் வெஜிடபுள் 500 கிராம் பேக்.( ஃப்ரோஸென் வெஜி இஸ் ஒக்கே)

பிரியாணி மசாலா/ இறைச்சி மசாலா 2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைச்ச விழுது 1 டேபிள் ஸ்பூன்( துளசி ஸ்டைல்ன்னா ஃப்ரீஸரில்,
ஏற்கெனவே அரைச்சு ஐஸ் க்யூப் செஞ்சு வச்சதுலே ஒரு க்யூப்)

உப்பு தேவைக்கு

ஆனியன் சூப் மிக்ஸ் 2 டேபிள் ஸ்பூன்( இது இல்லைன்னா ஒரு பெரிய வெங்காயம், பொடியா நறுக்கியது)

டொமேட்டோ பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்( இல்லைன்னா 2 தக்காளி நறுக்கியது அல்லது கொஞ்சம் கெச்சப்/சாஸ்
கூடப் போதும்)

சோயா சாஸ் ஒரு டீஸ்பூன் ( இஷ்டம் இருந்தால்)

எண்ணெய்/ மார்ஜரீன்/ நெய் + கொஞ்சம் எண்ணெய் இப்படி ஏதாவது 4 டேபிள் ஸ்பூன்.

கொத்தமல்லி இலை கொஞ்சம். (ச்சும்மா அலங்கரிக்கவும், வாசனைக்கும்!)

எல்லாம் ரெடியா? சரி. சமைக்க ஆரம்பிக்கலாம்!

பாஸ்த்தாவை, ஒரு பெரிய பாத்திரத்திலே தண்ணியைக் கொதிக்க வச்சு அதுலே போட்டு வேகவையுங்க. கொஞ்சம்
எண்ணெயும்(ச்சும்மா ஒரு டீஸ்பூன்) கொஞ்சம் உப்பும் சேர்த்து வேகவிட்டு எடுத்து வடிகட்டி வச்சுகுங்க. இது எப்படின்னு
அந்த பேக்கெட்டுலேயே இருக்கும். அதையே பார்த்துச் செய்யலாம்! ரெண்டு மூணு பர்னர் இருக்கறவுங்க ஒரு அடுப்புலே
இதை வேகவச்சுக்கிட்டே அடுத்த அடுப்பிலே மத்ததை தயாரிச்சா, ச்சும்மா ஒரு அரைமணியிலேயே செஞ்சுரலாம்!

இப்ப இன்னொரு அடுப்பிலே ஒரு பெரிய கடாய்/ ஃப்ரையிங் பேன் வச்சுச் சூடானதும் எண்ணெய்/ மார்ஜரீன்/ நெய் + கொஞ்சம்
எண்ணெய் இப்படி ஏதாவது ஊத்திக் காய்ஞ்சதும் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைச்ச விழுதும், ச்சிக்கன்
துண்டுங்களையும் போட்டு வதக்கணும். கூடவே மஞ்சப் பொடியை சேர்க்கணும்( இல்லைன்னா ஒரு நீச்ச வாசனை
இருக்குமே!) வதங்கறப்பவே முக்காவாசி வெந்துரும். நிறம் மாறி கொஞ்சம் வெள்ளையா வரும். இப்ப பிரியாணி
மசாலாவைச் சேர்த்து இன்னும் கொஞ்சம் வதக்கணும். வெங்காயம் நறுக்கி வச்சவுங்க அதையும் போட்டு வதக்கணும்.
ஆச்சா, இப்ப மிக்ஸட் வெஜிடபுள்ஸை சேர்த்து வதக்கணும். எல்லாம் ஒரே வதக்கல்தான்:-)

தண்ணி சேர்க்க வேணாம். ச்சிக்கன்லேயும், ஃப்ரோஸன் வெஜிலேயும் இருக்கற தண்ணியே போதும். தக்காளிப்பழம்
நறுக்கி வச்சவுங்க அதையும் போட்டுடுங்க. மத்தவங்க கொஞ்சம் நேரம் வதக்கிக்கிட்டே இருங்க. உப்பும் சேர்த்துருங்க.
அடுப்பு நிதானமா எரியட்டும். எல்லாம் வெந்துருச்சுன்னா, டொமேட்டொ சாஸ்/ சோயா சாஸ் சேர்க்கறவங்க அதையும்
போட்டுக் கிளறுங்க. ஆனியன் சூப் மிக்ஸை ரெண்டு டேபிள் ஸ்பூன் தண்ணியிலே கலக்கி ஊத்துங்க.

ரெடியா வெந்து இருக்கற பாஸ்த்தாவை ( சைடு பை சைடா செய்யறவங்களுக்கு: இப்ப பாஸ்த்தா சரியான பதமா
வெந்து இருக்கும். தண்ணியை வடிச்சுடுங்க) இதுலே சேர்த்து மறுபடி கொஞ்ச நேரம் ஒரு நாலைஞ்சு நிமிஷம்
வதக்குனாப் போதும்!

இப்பக் கொத்துமல்லித்தழையை நறுக்கித் தூவுங்க. அவ்வளவுதான். விருப்பம் இருக்கறவங்க ரெண்டு டேபிள் ஸ்பூன்
நெய்/ மார்ஜரீன் மேலாகச் சேர்த்துக்குங்க. ஒரு பளபளப்பாவும், ஒண்ணோடு ஒண்ணு ஒட்டாமயும் இருக்கும்.
ஹெல்த் கான்ஷியஸ்ன்னா இது வேணாம்!

செவிக்குணவு இல்லாதபோது சாப்புடுங்கன்னு வள்ளுவரே சொல்லிட்டாரே!

சாப்பிட்டுப் பார்த்துட்டு ஒரு வரி எழுதுங்க! லெஃப்ட் ஓவரை ஸ்கூல்/ஆஃபீஸ் லஞ்சாவும் கொண்டு போலாம். மறக்காம
ஒரு ஃபோர்க்/ ஸ்பூன் கொண்டு போங்க!

பி.கு: வெஜிடேரியன்ங்க ச்சிக்கனைச் சேர்க்கவேணாம்:-)))))))))

Monday, April 25, 2005

எல்லாம் விதி!!!!

உங்ககிட்டே சொன்னாப்புலெ 'கிரிவலம்' பாக்கலாமுன்னு படத்தைப் போட்டேன்.
ச்சீன்னு போயிருச்சுப்பா!

இதுவும் ஒரு ரீ மேக் படம்தான்.

அது ஹிந்திப் படம். 'ஹம்ராஸ்'



பாபி டியோல்,அக்ஷய் கன்னா, அமீஷா படேல் நடிச்சது. இந்த ஹிந்திப் படமே
ஒரு இங்கிலீஷ் படத்தோட 'தேசி வர்ஷன்'தான்! ' எ பெர்ஃபெக்ட் மர்டர்'ன்னு எங்கியோ
படிச்சேன்!

அது போகட்டுமுன்னு பார்த்தா, கதாநாயகி பேரு ஹிந்திப் படத்திலும் ப்ரியா!

இப்படிக்கூட பேருக்குப் பஞ்சமா?

இது பல பாஷை தெரிஞ்சிருக்கறதாலே வர்ற கஷ்டம் !!! எங்கே போய்ச் சொல்லுவேன்?

நடிச்சவுங்க யாருன்னு சொல்லலையே, ஷாம் & ரிச்சர்ட்( அஜீத்தோட மச்சானாம்!)இப்பெல்லாம் ரீ மேக்குன்னா நிஜமான ரீ மேக்தான். கருத்து, கருப்பொருள்ன்னு எடுத்துக்காம
ஸீன் பை ஸீன் அப்படியே எடுத்துடறாங்க! மூளைக்கு வேலை மிச்சம். இல்லே?

வேணாமய்யா, வேணாம்.

கொஞ்ச நாளைக்குப் படமெல்லாம் வேணாம். சும்மா இருப்பதே சுகம்னு இருக்கப்போறேன்!

ANZAC DAY!!!!!

Australia NewZealand Army Corps Day.

ஒவ்வொரு வருசமும் ஏப்ரல் மாசம் 25 ஆம் தேதி இந்த தினத்தை இங்கே
நியூஸிலாந்துலே அனுஷ்டிக்கிறோம். தலைப்பே உங்களுக்கு விஷயத்தைச் சொல்லிடும்.
ஆனாலும் அப்படியே விட்டுட்டா நான் 'துளசி'யா இருக்க முடியுமா?


உங்க பள்ளி நாட்களிலே அசோகரின் காலம், பொற்காலம் என்று ஏன் கூறப்படுகிறது
என்ற கேள்விக் கட்டாயமா எல்லோருக்கும் ஒருமுறையாவது பரீட்சையில் கேக்கப் பட்டிருக்குமே!

இல்லைன்றவங்க கை தூக்குங்க! இதெல்லாம் ஹிஸ்டரிங்க!!!

1915லே உலக மஹா யுத்தம் நடந்ததுன்னு அநேகமா எல்லோரும் சரித்திரப் பாடத்தில்
படிச்சிருப்பீங்கதானே! இது முதல் யுத்தம்!

யுத்தம் மஹா மும்முரமா நடந்துக்கிட்டு இருக்கு. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு ஒத்தாசையா இருக்கறதுக்காக
நியூஸிலாந்து, ஆஸ்தராலியாவிலிருந்து ராணுவ உதவியாக போர்வீரர்கள் போறாங்க.என்ன இருந்தாலும்
தாய்நாட்டுப் பாச உணர்வு போகாதில்லையா?அங்கிருந்து வந்தவங்கதானே இவுங்க!

இப்ப இந்த நாடுகளிலே அரசாங்கம் சுயேச்சையா நடந்துக்கிட்டு இருந்தாலும், இங்கே நாட்டு அதிபர்,
முதல் குடிமகன்( ப்ரெஸிடெண்ட்) கிடையாது. இப்பவும் கவர்னர் ஜெனரல்தான் இருக்காங்க!

இவுங்களுக்கு போஸ்டிங் துருக்கியிலே இருக்கற Gallipoli Peninsula என்ற இடத்துலே. முக்கிய காரணம்
கருங்கடலிலே மாட்டிக்கிட்ட கோதுமைக் கப்பலை Dardanelles Straits வழியாக் கொண்டு போகறதுக்கு
உதவியா, அந்த ஜலசந்தியைத் திறக்கணும்.

நியூஸியிலே இருந்து 8556 வீரர்கள் புறப்பட்டுப் போனாங்க. அதில் முக்காவாசிப் பேரு இளைஞர்கள்.அங்கே
யுத்தத்திலே ஈடுபட்டு 2721பேர் 'வீரமரணம்' அடைஞ்சாங்க! மொத்தம் 260 நாட்கள் யுத்தம் நடந்தது.4852 பேருக்கு
காயம்! மீதி ஆட்கள் நல்லபடியா சேதமில்லாம திரும்பி வந்துட்டாங்க!

இவுங்க அங்கே போய்ச் சேர்ந்த நாளுதான் இந்த ஏப்ரல் 25ன்றது! அதுக்கப்புறம் இந்த நாளை நினைவிலே வைக்கணும்,
இவ்வளவு ச்சின்ன நாட்டுலே எவ்வளவு தேசபக்தி, ராஜ விசுவாசம், தைரியம் எல்லாம் இருக்குன்னு வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லணுமுன்னு
திரும்பி வந்த ராணுவ வீரர்களும், வீராங்கனைகளும் முடிவு செஞ்சு, அரசாங்கமும் இவுங்களோட தேசபக்தியைப்
பாராட்டும் விதமா இதை அரசாங்க விடுமுறையாக அறிவிச்சது!

மரணமடைஞ்சவங்களை புதைச்சிட்டு,துருக்கியிலேயே ஒரு நினைவு மண்டபம்( வார் மெமோரியல்) கட்டினாங்க.
இங்கேயும் எந்தெந்த ஊர்களிலே இருந்து ராணுவ வீரர்கள் போனாங்களொ அங்கெல்லாமும் நினைவு மண்டபம்
எழுப்பினாங்க. வீரமரணம் அடைஞ்சவங்க பேருங்களையும் அங்கே செதுக்கி வச்சிருக்காங்க.

Returned Service men & women Association (RSA) இதையெல்லாம் செயல்படுத்தறதுலே கவனம்
செலுத்தி எல்லாம் முறைப்படி நடக்க உதவிச்சு!

ஒவ்வொரு வருஷமும், இந்த நாளுலே அதிகாலையிலே அந்தந்த ஊர்களிலே இருக்கற நினைவு மண்டபங்களில்
விசேஷமான ப்ரேயரும், அங்கங்கே உள்ள ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடக்கும். அரசாங்கத்தின் பிரதிநிதிகள்
மலர்வளையம் வைத்து மரியாதை செய்வார்கள். லோகல் கம்யூனிட்டி ஆட்களும் ஏராளமா இதுலே பங்கெடுத்துக்குவாங்க.
வீரமரணம் அடைந்தவரின் குடும்பத்துக்கு( அவுங்க பரம்பரைக்கு) அன்னைக்கு விசேஷ மரியாதை! அவுங்களும்
அவருக்குக் கிடைத்த மெடல் மற்ற சமாச்சாரங்களை நல்லா மினுக்கி எடுத்துக் கொண்டுவருவாங்க!

முதியோர்கள் இல்லத்துலே இருக்கற வயதான ராணுவ வீரர்கள், இந்த நாளுக்கு ஒரு மாசத்துக்கு முன்னேயே
அவுங்க மெடல்களையெல்லாம் பாலீஷ் செஞ்சு, அடுக்கி, ராணுவ உடையோட கம்பீரமா இதுலே பங்கெடுக்க
ஆர்வம் காட்டுவாங்க. சக்கர நாற்காலியிலே இருந்தாலும் கம்பீரம் கொஞ்சம் கூட குறையாம, ஒரு பெருமிதத்தோட
அன்னைக்கு வலம்வருவதைப் பார்த்தா நமக்குமே ஒரு உற்சாகம் வந்துரும்!

நம்ம ஊர் கொடிநாள் போலத்தான் இதுவும். சிகப்புக் கலருலே இருக்கற பாப்பிப் பூ( ப்ளாஸ்டிக் தான்)சட்டையிலே
குத்திக்கிட்டு, உண்டியல் குலுக்குவாங்க. காசு போட்டவுடன் நமக்கும் ஒரு பாப்பிப் பூ கிடைக்கும். அன்னைக்கு
டெலிவிஷனில் வர்றவுங்க( செய்தி அறிவிப்பாளர், வானிலை சொல்றவுங்க, விளையாட்டு நியூஸ் சொல்றவுங்கன்னு)
எல்லாம் பாப்பிப் பூவோட தரிசனம் தருவாங்க! இந்தக் கூட்டத்துலே நாமும் சட்டையிலே பூவோடு இருப்போம்.
இந்த 'பாப்பி டே'ன்றது ஏப்ரல் 25 க்கு முன்னாலே வர்ற வெள்ளிகிழமை. அதனாலே இந்த வருசத்து'டே'
22ஆம்தேதியே முடிஞ்சிடுச்சு! நிறைய வாலண்டியருங்களும், பழைய ராணுவ வீரருங்களுமா எங்கே பார்த்தாலும்,
குறிப்பா எல்லா ஷாப்பிங் மால்களிலும் நிறைஞ்சு இருப்பாங்க( இருந்தாங்க!)

அரசாங்க விடுமுறையை எல்லோரும் அனுபவிப்பாங்க. கடைகண்ணிங்கெல்லாம் பகல் 12 மணிவரை மூடி இருக்கணும்.
காலையிலே தேவாலயங்களிலும் விசேஷ பூஜை நடக்கும். இதேமாதிரி அண்டைநாடான ஆஸ்தராலியாவிலேயும்
நடக்குமுன்னு நினைக்கறேன்.

கல்லிபோலியிலே இருக்கற வார் மெமோரியலுக்கு, இந்த நாட்டுப் பிரதமர் வருசாவருசம் போய், அங்கே நடக்கற
நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, அரசாங்க மரியாதையைச் செலுத்திவிட்டு வருவார்!

நாங்க இருக்கற ஊரான கிறைஸ்ட்சர்ச்சிலே ஊருக்கு நடுவிலே ஒரு வார் மெமோரியல் இருந்தாலும், இங்கே
ஓடற நதியின் குறுக்காக ஒரு பாலம் கட்டி, அதுக்கு 'ப்ரிட்ஜ் ஆஃப் ரிமெம்பரன்ஸ்'ன்னு பேரு வச்சிருக்காங்க.
அங்கே ஒரு நுழைவாயில் ஒண்ணு, கற்களால் கட்டி, ஒவ்வொரு கல்லுலேயும் இந்த போரிலே ஈடுபட்ட
நாட்டோட பேரையெல்லாம் செதுக்கி இருக்காங்க! வருசாவருசம் இதுக்கு பெயிண்ட் அடிச்சு, இந்த இடத்தை
அழகுபடுத்தி வைப்பாங்க. இதுவும் ஒரு டூரிஸ்ட் அட்ராக்ஷந்தான்!

இங்கிருந்து டூரிஸ்ட்டுங்களைக் கொண்டுபோய், கல்லிப்போலியைச் சுத்திக் காமிச்சு, அங்கே 'அன்ஸாக் வாக்'
கொண்டு போய் திருப்பிக் கூட்டிட்டு வர்றதும் இப்ப ஆரம்பிச்சு,நல்ல பிஸினெஸா ஓடிக்கிட்டு இருக்கு!

இப்ப 90 வருசமாச்சு. நூறாவது ஆண்டு விழாவை அட்டகாசமாக் கொண்டாடுறதுக்காக இப்பவே தீவிரமாத்
திட்டம் தீட்டறாங்களாம்.

இன்னைக்கு திங்கக்கிழமையாப் போனதுலே எல்லோருக்கும் பயங்கர சந்தோஷம். சனி, ஞாயிறு, திங்கள்ன்னு
'லாங் வீக் எண்ட்' கிடைச்சிருச்சே!!

எது எப்படி இருந்தாலும், ராணுவம்ன்னு சொல்றது ஒரு நாட்டுக்கு எவ்வளவு தேவையானதுன்னு உங்களுக்கேத்
தெரியும்.

உலக நாடுகளிலே எதுவானாலும் சரி, தாய் நாட்டுக்காக உயிரிழந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தறது
அந்தந்த நாட்டுலே இருக்கற ஒவ்வொரு குடிமகன்/மகளுக்கும் கடமை இல்லையா?

ராணுவ வீரர்கள் செய்யற பணி நிஜமாவே மகத்தானதுதான்!!!!





Sunday, April 24, 2005

பொன் மேகலை!!!!

ஆளாளுக்கு 'சந்திரமுகி'யைப் பத்திப் பேசி, விமரிசனம் செஞ்சு, அதை அக்கு அக்காப்
பிரிச்சு மேஞ்சு, அடிச்சுத் துவைச்சுக் கிழிச்சும் தொங்க விட்டாச்சு!( நானும் பார்த்தேங்க.
ஆனா ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை,'மணிச்சித்திரத்தாழ்' மனசுலே பதிஞ்சு போனதால!
இயல்பாவே ரீ மேக் படத்தை ஒரிஜனலோடு ஒப்பிட்டுப் பாக்கற குணம் மனுஷனுக்கு வந்துருது இல்லையா?



அது போகட்டும். இப்ப நாஞ்சொல்ல வந்தது, 'பொன் மேகலை'யைப் பத்தி!

தமிழ் சினிமாவுக்கு இருக்கவேண்டிய எல்லா அம்சமும் நிறைஞ்சு இருக்கு! ஒரு பெரிய பட்டியலே
போடலாம்!

சுயநலமுள்ள அரசியல்வாதி (ஆஸ்பத்திரிக்கே 'பாம்' வைக்க ஏற்பாடு செய்யறாரு!)

கெட்ட போலீஸ் அதிகாரி ( கூட வேலை செய்யற பெண் போலீஸை கற்பழிக்கிறாரு)

இதையெல்லாம் வீடியோ எடுத்த வீடியோகிராஃபர்!

நல்ல மனசு இருக்கற பத்திரிக்கையாளர் ( இவர்தான் கதா நாயகன்!)

கடமை தவறாத நல்ல போலீஸ் அதிகாரி ( சமயத்துலே குற்றவாளியைப் பிடிச்சுட்டார்!)

அரசாங்க அதிகாரி, இவர் எல்லாக் கெட்ட குணமும் இருக்கறவர், கதாநாயகியை 'அட்ஜஸ்ட்' பண்ணச்
சொல்றாரு.( பொண்ணொட அப்பா செஞ்ச வேலையை வாங்கறதுக்காம்!)

அம்மா இல்லை. அப்பா மட்டுமே குடும்பத்தை( அவருக்கு ரெண்டு பொண்கள்!)காப்பாத்தறவர்.

ரெண்டு சீன்லே வந்துட்டு, மண்டையைப் போட்டுருவார்.( வழக்கமான ஹார்ட் அட்டாக்தான்!)

அக்கா தங்கைப் பாசம்! அக்கா நாட்டியத்துலேயும் பாடறதுலேயும் நம்பர் ஒன்! தங்கைக்கு வழக்கம்போல
ஐ.ஏ.எஸ். கனவு!

தங்கை வயசுக்கு வந்தவுடன் அதைப் பெரிய அளவிலே கொண்டாடுறது( கழுத்துச் செயினை வித்து!)

குடும்ப நண்பரான இன்னொரு பெண்!

புகழ்பெற்ற ஒரு பாதிரியாரின் முதுகு எலும்பை வச்சு பண்ணின சிலுவை( இது விலை மதிப்பே இல்லாதது!)
இதைத்திருடற ஒரு கோஷ்டி! இதன் தலைவன் நல்லாத்தமிழ் பேசற ஹிந்திக்காரன். இதை வெளிநாட்டுக்கு
விக்க ஏற்பாடு செய்யற ஒரு தாத்தா!( இவர் தமிழந்தான்!)

எல்லாக் கெட்டவங்களையும் ஒரே நாளுலே சந்திக்கும்படியா ஆயிடுது நம்ம கதா நாயகிக்கு! அவள் ஓட, இவுங்கல்லாம்
துரத்தோ துரத்துன்னு துரத்தறாங்க!

அவளை எப்படியாவது கொன்னுடணுமுன்னு எல்லோருக்கும் ஒரு காரணம் இருக்கு!

சண்டைக் காட்சிகள், தனியா இருக்கற பொண்ணை கெட்ட எண்ணத்தோட துரத்துற இளைஞர்கள்! (அதிலும்
முக்கியமானவனா இருக்கறவன் ஏன் பெரிய நெக்லஸ் போட்டுக்கணும்?)

அனு மோகனும், பாண்டுவும் போலிஸ், திருடனா வர்ற அச்சுபிச்சுக் காமெடி!

ஹைய்யோ. கொஞ்சம் இருங்க. எழுதறப்பவே எனக்கு மூச்சு வாங்குது.


படத்துலே நல்ல விஷயம் ஒண்ணும் இல்லையான்னு கேக்கறீங்கதானே? இருக்கே!

இசை நம்ம இளையாராஜா! பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், பவதாரிணி எல்லாம் பாடி இருக்காங்க!

ரெண்டு மூணு பாட்டு, நிஜமாவே நல்லா இருக்கு. கர்னாட சங்கீதம்! என்ன ராகமுன்னு கேக்க மாட்டீங்கதானே?

தெரிஞ்ச முகங்களா சிலர் இருக்காங்கதான்!

நல்ல போலீஸ் ஆஃபீஸர் 'சரண்ராஜ்'

அப்பா சாருஹாஸன்!( அவர் ஃபோட்டோவா தொங்கறப்ப, நம்ம கமலோட முகம் அப்படியே மனசுலே வந்து
போச்சு! கமலுக்கு ரொம்ப வயசாயிட்டா அப்படியேதான் இருக்கும்!)

அப்புறம் அந்த அரசியல்வாதி, பேரு தெரியலை!

இன்னோன்னு, இதுலே வர்ற கோயில், குளம் எல்லாம் அருமையா இருக்கு! எந்த ஊரோ?

ஒருவழியாப் பாத்து முடிச்சுட்டேன். இன்னொரு படம் 'கிரிவலம்'. அதையும் இன்னொருநா பாத்துட்டு, தோணுச்சுன்னா
விமரிசனம் போடறேன்.

என்னவோப்பா, இப்படிச் சொல்லாமக் கொள்ளாம வர்ற படங்களைப் பத்தி, நானும் சொல்லலேன்னா, உங்களுக்கெல்லாம்
யாரு சொல்லுவா?

அந்த நல்ல எண்ணம்தான்!!!!






Thursday, April 21, 2005

ரெடிமேட்!!!!! பகுதி 8

'வீனஸ் டெய்லர்ஸ்' அலங்கார லைட்டுங்க கலர் கலராப் போட்ட கடை வாசல்லே நிக்கறோம். நாங்களும், மாமியோட
புள்ளையும், பொண்ணுமா!

இது ஆம்பிளைகளுக்குத் துணி தைக்கற கடையாச்சே, இங்கே ஏன் போனோமுன்னு கேக்கறீங்களா?

எங்க இவருக்குத் துணி தைச்சுக்கறதுக்குத்தான்! துணி ஏதா? ஹஹ்ஹஹ்ஹா....

நான் பயத்தோட மாமி வீட்டுலே உக்காந்துக்கிட்டு இருந்தேன்னு சொன்னது ஞாபகம் இருக்கா? வழக்கம் போல
இவர் வேலையிலே இருந்து அங்கே வந்தார். எல்லாம் ஒரு முன்னேற்பாடுதான்!


நானும் மாமியும் புடவை சின்னதா(!) இருந்த விவரமா, துணிக்கடைக்குப் போனதையும், நியாயம்(!) கேட்டுட்டு
வர்றப்ப இன்னும் ரெண்டு புடவைங்க வாங்கினதையும் தெரிஞ்சிக்கிட்டவுடனே ஒரு ஆட்டம் ச்சின்னதா ஆடிட்டு,
(எனக்கு மட்டும் தெரியறமாதிரி!)புடவைங்களைத் திருப்பிக் கொடுக்கப்போறேன்னுட்டு, மாமியோட புள்ளை பாபுவோடு
அந்தக் கடைக்குப் போனார். என்னையும் கூப்பிட்டார். நான் வரலை, நீங்களே போய் குடுத்துடுங்கன்னு சொல்லிட்டேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு ரெண்டு பேரும் ஆளுக்கொரு பையைத் தூக்கிக்கிட்டு வராங்க. ஒண்ணு, கொண்டு போன
புடவைப் பை. இன்னொண்ணு புதுசா இருக்கேன்னு பார்த்தா அதுலெ ரெண்டு ஷர்ட் பீஸும், ஒரு பேண்ட் பீஸும்
இருக்கு! என்னன்னு கேட்டா, நம்ம ரூப்மல் சேட், இவரைச் சமாதானப் படுத்திட்டு, இவர் தலையிலே கட்டிட்டாராம்
அந்தத் துணிங்களை!!!! அவசரமே இல்லை. உங்களுக்கு இஷ்டப்பட்டப்ப பணம் கொடுத்தாப் போதும். அதுவும்
கொஞ்சம் கொஞ்சமா! மாமியை ரொம்பநாளாத் தெரியும். அவுங்க கிட்டே வியாபாரம் நிறையப் பண்ணியிருக்கேன்.
அந்தப் பணம் எங்கேயும் ஓடாது, அது இதுன்னு பேசினவுடனே, இவரும் தனக்கு இன்னும் ரெண்டு செட் துணி இருந்தாத்
தேவலைன்னு வாங்கிகிட்டு வந்திருக்கார்!!!!

வீனஸ் டெய்லர்ஸ்லே மாஸ்டர் (ஆளுங்களுக்கு அளவெடுத்துத் துணிங்களை வெட்டிக் கொடுக்கறவர்.
தைக்கறதுக்கு வேற ஆளுங்க இருக்காங்களாம்) அசப்புலே பாக்கறதுக்கு நம்ம ஹிந்தி சினிமா வில்லன்
நடிகர் பிரான் போலவே இருந்தார். அங்கே தைச்சுக்கிட்டா ரொம்பவே கரெக்டா இருக்குமாம். வேலை
ரொம்ப சுத்தமாம். கூலியும் நியாமானதாம். நம்ம பாபு எப்பவுமே அங்கெதான் தைச்சுக்கறாராம்.

மாஸ்டர் இவருக்கு அளவெடுத்தார். அப்ப 'பெல் பாட்டம்'தான் ஃபேஷன்! 'சத்தம்' நல்லா கேக்கட்டுமுன்னு
கொஞ்சம் அதிகமாவே 'பெல்' வைக்கச் சொல்லியாச்சு!

இப்பெல்லாம் அடிக்கடி, மூணு நாலு மாசத்துக்கு ஒருக்கா புதுத்துணி கிடைக்குது! கடைக்கு பாக்கி கட்டப் போறப்ப
அப்படி இப்படின்னு ஒண்ணு ரெண்டு வாங்கிக்கறதுதான். ஆள் பாதி ஆடை பாதின்ற மாதிரி, ஒரு கெத்து வேணாமா?
'பிரான்' மாஸ்டர் நல்லா பழக்கம் ஆயிட்டார்.

ஆச்சு கிட்டத்தட்ட ஒரு வருசம். இப்ப நம்ம சேட்டனுக்கு மாற்றல் வந்துருச்சு! நாமும் இடம் மாறணுமே. இது ஒரு
பெரிய விஷயமா, மாறிட்டாப் போச்சு! எங்க இவருக்குத்தான் இப்படி இருக்கறது கொஞ்சம் கஷ்டமாப் போச்சு.
கம்பெனியிலே தெரிஞ்ச ஆளுங்ககிட்டேச் சொல்லி, 'விஷ்ராந்த்வாடி'ன்ற இடத்துலே ஒரு வீட்டை ஏற்பாடு செஞ்சுட்டார்.

வீட்டுச் சொந்தக்காரங்க பஞ்சாபிங்க. ஒரு பெரிய வீடு மூணு ரூம், ஹால், கிச்சன், ரெண்டு பாத் ரூம்னு
கட்டியிருக்காங்க. கட்டறப்பவே ஒரு ரூமை வாடகைக்கு விடற ப்ளான் தானாம்! ஒரு பெரிய ரூம், அதோடு
இணைஞ்ச பாத்ரூம். அந்த ரூமிலேயே இடதுபக்கம் ஒரு நீண்ட வால்போல இருக்கற இடம் சமையல் கட்டு!
வாடகையும் பரவாயில்லே. அதுக்கும் குறைஞ்சு எங்கெ கிடைக்கும்? அட்வான்ஸ் மட்டும் 10 மாசத்து வாடகை.

ஒருமாதிரி அட்ஜஸ்ட் செஞ்சு பணத்தைச் சேர்த்துட்டோம். ஜனவரி மாசம், பொங்கல் பண்டிகைக்குப் புது இடத்துக்குக்
குடி போயாச்சு! சக்கரைப் பொங்கல், வடை, பாயசம்னு சமைச்சு, புது ஓனருக்கும் விளம்பினோம். அவுங்களுக்கும்
சந்தோஷமா இருந்துச்சு!

ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே, நமக்குத் தனியா வாசல் இருந்தாலும் நம்ம பாத் ரூமுக்கு மட்டும் இன்னொரு
கதவு இருந்தது. அதைத்திறந்தா, வீட்டு ஓனரோட பகுதிக்குப் போயிரலாம். அதே மாதிரி அவுங்களும் வரமுடியுமே!
அதாலே அந்தக் கதவை நல்லா அழுத்திப் பூட்டி வச்சாச்சு.

ரெண்டே நாளுலே, அந்த வீட்டுப் பொண்ணு இந்தப் பக்கமா வந்து, 'நீங்க பாத் ரூம் கதவைப் பூட்டி வச்சுட்டீங்களா?
அதைத் திறந்து வச்சிருங்க. நீங்க பாத்ரூம் யூஸ் செய்யறப்ப பூட்டிட்டு, அப்புறம் திறந்து வச்சிரணும். எங்க அம்மாவுக்கு
அந்த டாய்லெட்தான் ( இந்தியன் டைப்) பழக்கம். எங்க பாத்ரூமுலே இருக்கறது வெஸ்டர்ன் டைப். அதனாலே
அவுங்களும் உங்க பாத் ரூமையே யூஸ் செய்வாங்க'ன்னு சொன்னாங்க. அட தேவுடா?

மொதல்லே தலையை ஆட்டி வச்சாலும், இது ஒரு மஹாத் தொந்திரவாப் போச்சு. திறக்க மறந்துட்டா, அந்தப் பக்கம்
இருந்து இடி இடின்னு இடிப்பாங்க. சிலப்ப நாம பாதிக் குளியலிலே இருக்கறப்பவும் கதவைத் தட்டுவாங்க. ஒரே
சல்லியம்!

நாங்க வந்து ரெண்டு வாரம்தான் ஆயிருக்கு. மூணாவது வாரத்துலே ஒரு நாள், வெளியே போயிட்டு வீட்டுக்குத்
திரும்பிவந்து, லைட்டைப் போடாம உடை மாத்திக்கிட்டு இருந்தேன். அந்த வீட்டுலே ஜன்னலுக்கு இன்னும் திரை
போடலை! அக்கம் பக்கத்து வீட்டு வெளிச்சம் மங்கலாத் தெரியும். அதுலேயே உடை மாத்திக்கறதுன்னு ஒரு
பழக்கம் வச்சுக்கிட்டு இருந்தோம். அப்ப ஒரு மூலையிலே என்னவோ நெளிநெளியாப் போறமாதிரி இருந்துச்சு!

இவர் வாசல்லே நின்னுக்கிட்டு இருந்தார். நான் துணி மாத்தினதும் குரல் கொடுத்தா, அந்தப் பக்கம் இருக்கற
லைட் சுவிட்சைப் போட்டுட்டு உள்ளே வருவார். நான் மெதுவா சொன்னேன், வாசல்லே போட்டு வச்சிருக்கற
துடைப்பக் கட்டையை தயாரா எடுத்து வையுங்கன்னு! ஏன் ஏன்னு கத்தறார்.அதுக்குள்ளே நான் ஒருமாதிரி
உடையைப் போட்டுக்கிட்டுப் பின்னாலேயே நகர்ந்து போய் அந்தத் துடைப்பக்கட்டையை வாங்கிக்கிட்டேன்.
இப்ப லைட்டைப் போடுங்கன்னு சொல்லிக்கிட்டே அந்த மூலையைப் பார்த்தேன். பாம்பு!!!!!!

கீழே தரை மொஸைக். அதனாலே வேகமாப் போக முடியாம நகர்ந்துக்கிட்டு இருக்கற பாம்பை அப்படியே அந்தக்
கட்டையாலே அழுத்திப் பிடிச்சுக்கிட்டே, வேற தடி இருந்தாக் கொண்டு வாங்கன்னு இப்ப நான் கத்துனேன்.
எங்க இவருக்குப் பாம்புன்னா ஒரே பயமாம்! தூரமா நின்னுக்கிட்டு, ஒரு கட்டையை என் கையிலே கொடுத்தார்.
மறுகையாலே அதை வாங்கிப் போட்டேன் ஒரு போடு. ஒரு அடியோட விட முடியுமா? போடு போடுன்னு போட்டு
அதை ஒரு வழியா 'மேலே' அனுப்பிட்டேன்.

அப்புறமாப் பார்த்தா அது கிட்டத்தட்ட நாலடி நீளம் இருக்கு.கறுப்பும், மஞ்சளுமா கட்டுக் கட்டா இருக்கு. பாம்பைக்
கொன்ன தோஷம் வந்துருமேன்னு இப்ப பயம் வந்துருச்சு!

அப்படியே அதை வெளியே கொண்டுவந்து தீ மூட்டி அதை எரிச்சுட்டுச் சாஸ்திரமா இருக்கட்டுமுன்னு கொஞ்சம்
பாலையும் அதும்மேலே ஊத்துனேன். இவ்வளவு களேபரத்துலே இவர் ஒரு பத்தடி தள்ளி நின்னு வேடிக்கைப்
பாக்கறார். அவர் என்னைப் பார்க்கற பார்வையிலே ஒரு மரியாதையும், கொஞ்சம் பயமும் கலந்திருந்த மாதிரி
இருந்துச்சு!

அன்னைக்குப் பொழுது எப்படியோ போயிருச்சேத் தவிர, இப்பெல்லாம் எம் மனசுக்குள்ளெ பயமா இருக்கு.
எப்பப் பார்த்தாலும், பாம்பு வந்துருச்சோ, பாம்பு வந்துருச்சோன்னு தரையைச் சுத்திச் சுத்திப் பாத்துக்கிட்டே
இருக்கேன். தூங்கறப்பவும் மனசுக்குள்ளே ஒரே பயம்! அன்னைக்கு அந்தப் பாம்பை எப்படி அவ்வளவு வீரமா
அடிச்சேன்றது இதுநாள் வரை எனக்கே விளங்காத மர்மம்! எப்பப் பார்த்தாலும் மனசு 'திக்திக்'ன்னு இருக்கே!
நம்ம கிட்டே கட்டில் கூடக் கிடையாது. தரையிலேதான் படுக்கை!

நேரா மாமி வீட்டுக்குப் போனோம். பாம்புக் கதையைச் சொன்னவுடனெ, மாமி புரிஞ்சுக்கிட்டாங்க. கவலையே
படாதே. ஆர்மி வீடே ஏற்பாடு செஞ்சுரலாம் கொஞ்ச நாளைக்கு அதுலே இருந்துட்டு வேற வீடு பார்க்கலாமுன்னு
தைரியம் கொடுத்தாங்க.

வீட்டு ஓனர் கிட்டே நாங்க காலி செய்யறோமுன்னு சொன்னோம். சரியா மூணு வாரம் ஆகியிருக்கு.
நாங்க ஏற்கெனவே சாமான்களையெல்லாம் டெம்பொவிலே ஏத்திட்டு, பேங்குலே காசு எடுக்கப் போன
ஓனருக்காகக் காத்துக்கிட்டு இருந்தோம்.அவுங்க 8 மாச வாடகையைத் திருப்பிக் கொடுத்தாங்க.

அதுக்குக் கணக்கும் சொன்னாங்க.அவுங்களுக்கு மாசம்ன்னா ஒண்ணாம்தேதி கணக்காம். நாம் 15ஆம் தேதி
வந்தாலும் அந்த மாசம் முப்பத்தி ஒண்ணு வந்தப்ப ஒரு மாசமாம். இப்ப தேதி 5தான். ஆனாலும் இது ஒரு
மாசமாம். அதனாலே ரெண்டு மாசம் போக பாக்கி தர்றாங்களாம்!

நான் திகைச்சுப் போய் நிக்கறேன். இவர் சட்டுன்னு அந்தக் காசை வாங்கிக்கிட்டு, சரி, சரி வா,நேரமாச்சுன்னு
சொல்லிக்கிட்டே நிறுத்தி வச்சிருக்கற ஆட்டோவிலே போய் ஏறிக்கிட்டார். நானும் குழம்பின மனசோடு போய்
ஏறிக்கிட்டேன்.

விட்டுட்டுப் போன இடத்துக்கு 21 நாளுலேயே திரும்பியாச்சு! எங்களுக்கு இப்ப வேற ஆர்மிக்காரர் வீடு. இவர்
ஒரு பெங்காலி! ஆனா அக்கம் பக்கம் நம்மை மாதிரி வாடகைக்கு இருக்கறவங்க அமோக வரவேற்பு கொடுத்தாங்க.
அவுங்களையெல்லாம் பிரிஞ்சு இப்பத்தானே 3 வாரம் ஆச்சு. அதுக்குள்ளேயா நம்மளை மறந்துருவாங்க?

இங்கேயும் ஒரு ச்சின்ன சிக்கல் இருக்கு! இந்த பெங்காலியும் இன்னும் மூணு மாசத்துலே வேற ஊருக்குப்
போறாராம். 'அது ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை.அப்ப ஒரு மாசத்துக்கு இங்கேயே இன்னொரு
இடத்துக்கு மாறிட்டுத் திரும்ப இங்கேயே வந்துரலாம். புதுசா வர்றவங்ககிட்டே சொல்லிடறேன்னு 'வாக்கு' கொடுத்தார்!'

என்னடா இப்படி ஆகிப்போச்சேன்னு வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த ஏரியா நமக்கு ஆகிவந்ததுதானேன்னு
ஒரு சமாதானம் இருந்துச்சு!

இதுக்கு நடுவிலே எங்க இவர் பழையபடி கம்பெனி ஆட்கள்கிட்டே புலம்புனதிலே வேற ஒரு இடம் கிடைக்கறதுபோல
இருந்துச்சு.

அந்த இடம் கொஞ்சம் தொலைவுதான். ஆனா சைக்கிள்லே போற தூரம்தான். 'ஹடப்ஸார் என்ற இடம். அங்கே
வீடு இருக்கு. நான் போய்ப் பார்த்தேன். சுவரு எல்லாம் அழுக்கா இருக்கு. அது பரவாயில்லை வெள்ளை அடிச்சுக்கலாம்.
நிரந்தரமா இருக்கற இடம் வேணும். எப்பவும் மாறிக்கிட்டே இருக்க முடியாது. இந்த ஞாயித்துக்கிழமை ஒரு ஆளை வச்சு அங்கே
சுத்தம் செய்துடலாம். அடுத்த வாரம் போயிடலாம்'னு சொன்னார்.

ஞாயித்துக்கிழமை வந்துச்சு. இவர் காலையிலே கிளம்பிப் போயிட்டார். சாயந்திரம் ஒரு அஞ்சுமணி போல திரும்பி
வந்தார். ஆளே அடையாளம் தெரியாம இருக்கார். தலையெல்லாம் ஒரே வெள்ளை. தலை என்ன தலை? முகம்
உடம்பு, கை, காலுன்னு எல்லாம் ஸ்ப்ரே செஞ்சது போல வெள்ளை! ஆட்டோவிலே திரும்பி வந்திருக்கார்.
அவர் கூடவே ஒரு பழைய இரும்புக் கட்டில்! அதும் மேலேயும் ஒரே டிஸ்டெம்பர் வர்ணம் தெளிச்சிருக்கு. முகம்
சுண்டிப் போயிருக்கு.

என்ன ஆச்சுன்னு எனக்கு ஒரே பதற்றமா இருக்கு!


இன்னும் வரும்.....


Tuesday, April 19, 2005

மேடை வேணுமா?

தமிழ்ச் சங்க புத்தாண்டு விழா!!!!!!!!!!!

இங்கெ எங்க தமிழ்ச் சங்கத்து புத்தாண்டு விழா, சனிக்கிழமையிலே நல்லபடியா நடந்துச்சு!

அதென்ன, புத்தாண்டு போய் மூணு நாளைக்கு அப்புறம்ன்னு சொல்றீங்களா?
நல்ல வேளையா இந்த வருசம் மூணாவது நாளு! சிலசமயம் ஒரு வாரம் பிந்தியும் கொண்டாடி இருக்கோம்.
'எல்லாருக்கும் ஒரு வழின்னா இடும்பனுக்கு வேற வழி'ன்னு சொல்றது நினைவுக்கு வருதா?. இங்கே
எல்லோரும் ஒன்று கூடிக் கொண்டாடறதுக்குத் தோதா வார இறுதி வரவேணாமா?



'எல்லா வெளிநாட்டுலேயும் நடக்கறதுதானெ இது' ன்னு யாருப்பா அங்கே முணுமுணுக்கறது?

இந்த வருசம் என்ன அப்படி சிறப்பு? இருக்கு! ஒண்ணாவது நான் 'கலை கலாச்சார(!)
ஒருங்கிணைப்பாளர் கிடையாது! இத்தனை வருசமா இந்தப் 'பதவி'யிலே இருந்து ரொம்பவே
அலுத்துப் போச்சுங்க. அதனாலே 'ஜாலி'யா புடவை கசங்காம ஒரு இடத்துலே உக்கார்ந்துக்கிட்டு
நிகழ்ச்சிகளை அனுபவிக்கலாம்.

எங்க தேர்தல் ( அப்படின்னு ஒண்ணும் பெருசாக் கிடையாது. இந்தப் பதவியிலே இருக்கற பிடுங்கல்களை
நினைச்சு, யாரும் சுலபத்துலே எக்ஸிக்யூடிவ் கமிட்டியிலே வந்துற மாட்டாங்க.) முடிஞ்சு, புது தலைவரும்,
மற்ற கமிட்டி அங்கத்தினர்களும் வந்திருக்காங்க. இது அவுங்களோட முதல் நிகழ்ச்சி இந்த வருசத்துக்கு.அதனாலே
ஏகப்பட்ட எதிர்பார்ப்பு!

உதவி அதிபரா( வைஸ் பிரஸிடெண்ட்) ஒரு தாய்க்குலம்!!!

நம்ம சிங்கை சித்ரா ரமேஷ் இருக்காங்கல்ல, அவுங்களோட தோழி, குடும்பத்துடன் இங்கே சுற்றுலா வந்திருக்காங்க.
என்ன டைமிங் பாருங்க, சரியா விழாவுக்கு மொதநா ராத்திரி! அவுங்களை விழாவுக்குக் கொண்டுபோனா, எங்க
நகர்வாழ் தமிழ்க் குடும்பங்களையெல்லாம் ஒரே இடத்துலே சந்திக்க வச்சுரலாம்தானே?

அவுங்களைக் கூட்டிக்கிட்டுப் போனோம். அவுங்களோட இன்னொரு தோழியின் குடும்பமும் வந்திருந்தாங்க.
அவுங்க புள்ளைங்களைப் பார்த்ததும் எனக்கு உள்ளுக்குள்ளே ஒரு 'ஒளி மின்னல்'

இதுவரைக்கும் இப்படி எத்தனைபேரைச் சந்திச்சிருக்கேன். (அகத்தின் அழகு முகத்தில் தெரியாதா?')
என்னுடைய 'பதவி'க் காலத்தில் நான் ஒரு 'புள்ளை புடிக்கறவளா!' இருந்திருக்கேன். எப்ப யாரைப் பார்த்தாலும்
அல்லது எங்கேயாவது வேற கலை நிகழ்ச்சிகளிலே பங்கெடுக்கறவங்களைப் பார்த்தாலும், கெஞ்சிக் கூத்தாடி( ஒரு பேச்சுக்குச்
சொல்றதுதான்,நான் கூத்தாடினால் நல்லாவே இருக்காது) நம்ம சங்கத்துக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சிருவேன்.

பலபாஷைகள் தெரிஞ்சதுதான் இப்ப கைவசம் இருக்கற மூலதனம்! அப்பத்தானே எல்லா க்ளப்புகளிலும் மெம்பரா
இருக்க முடியுது!

ஆஹா, இந்தப் பொண்ணுங்களைப் பார்த்தா பாடக்கூடிய களை முகத்துலேயே தெரியுதே!

'சிரங்கு பிடிச்சவன் கையும், கேட்டுப் பாக்கிறன் வாயும் சும்மா இருக்குமா?' கேட்டுப் பார்த்தேன். ரெண்டு பேருமா
சேர்ந்து பாடறேன்னு சொன்னாங்க. அதுவும் பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரி பாரதியார் பாட்டு!

ரொம்ப ஜம்பமாப் போய், இப்போதைய கலை கலாச்சார ஒருங்கிணைப்பாளர் கிட்டே விருந்தினர் நிகழ்ச்சியைப்
பத்திச் சொன்னேன்.

நிகழ்ச்சிகள் ஆரம்பிச்சு நல்லமுறையில் நடந்துக்கிட்டு இருந்துச்சு. இப்ப நம்ம சிங்கைப் பிள்ளைகளின் பாடல்!

'ஒளி படைத்த கண்ணினாய் வா, வா, வா' ஒரே தூள்!!!!!! ரொம்பவே நல்லாப் பாடினாங்க!!!

கூடவே ஒரு இலவச இணைப்பும் கிடைச்சது. அந்தப் பொண்களிலே ஒருத்தர், 'கல் ஹோ ந ஹோ' படத்திலிருந்து
ஒரு ஹிந்திப் பாட்டும் பாடினாங்க. நிஜமாவே அருமையான குரல்ங்க. அட்டகாசமாப் பாடுச்சுங்க அந்தப் பொண்ணு!
'காலரைத் தூக்கி' விட்டுக்கலாமுன்னு பார்த்தா, அன்னைக்குன்னு பார்த்துப் புடவை கட்டிக்கிட்டு இருந்தேங்க!

ஃபிஜி இந்தியக் குடும்பத்துப் பொண்ணோட ரெண்டு நடன நிகழ்ச்சி, ஹரே க்ருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த இன்னொரு
குடும்பத்துக் குழந்தைகளின் ரெண்டு நடன நிகழ்ச்சி( அதென்ன ரெண்டு ? நமக்கு ஒத்தப் படை ஆகாதுங்க!)
தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளின் பாடல், ஆடல்ன்னு ஜமாய்ச்சுட்டாங்க!!!

ரொம்பவே மனநிறைவா இருந்துச்சுங்க எனக்கு! ஆமா, நான் என்ன செஞ்சேன்னு கேக்கறீங்களா? நான் நாலு
ஜோக் சொன்னேங்க. மேடையிலே ஏறாட்டா எனக்கு கையும் காலும் துவண்டு போயிருமே!

யாருக்காவது மேடை ஏறி உங்களொட கலை திறமையை 'உலகு'க்கு வெளிச்சம் போட்டுக் காட்டணுமுன்னா
எங்க ஊருக்கு வாங்க! ஆனா இதுமாதிரி ஏதாவது விழா நடக்கற சமயமாப் பார்த்து வாங்க.

மேல்விவரத்துக்கு என்னைக் கேளுங்க.





Monday, April 18, 2005

ஸ்ரீ ராம நவமி!!!!

இன்னைக்கு பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த நாள்!!!!

நம்ம பண்டிகைகளிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சது இந்த ஸ்ரீ ராம நவமிதான்!

நாந்தான் பெரிய 'காம்ச்சோர்' ஆச்சே!( இது ஹிந்தி) எனக்குத்தோதா அமைஞ்சிருக்கு இந்தப்
பண்டிகை.


பிரசாதம் செய்யறதுக்குன்னு ஒண்ணும் மெனக்கெட வேணாம். நம்ம வீட்டுலே மூணேமூணு வகைப்
பிரசாதங்கள்தான் எப்பவுமே!

1. பானகம்

2. நீர் மோர்

3. பயத்தம்பருப்பு கோஸ்மல்லி( கோஸ்மல்லிதானே சரியான பெயர்?)

இப்ப செய்முறை(!) பார்ப்போம்.( இதெல்லாம் இந்தியாவுக்கு வெளியிலே, என்னப் போல
இருக்கற மத்த காம்ச்சோர்களுக்கு:-)))) மட்டுமே)

1. பானகம். வெல்லம் கிடைக்கலேன்னா, பரவாயில்லை.அதான் ப்ரவுண் ஷுகர்( இது 'அந்த' ப்ரவுண்
ஷுகர் இல்லே!)இருக்கே. அதை எடுத்துத் தண்ணீரிலே ஒரு கலக்கு கலக்கி, கொஞ்சம் ஏலக்காய்ப் பொடியும்,
சுக்குப் பொடியும்( ட்ரை ஜிஞ்சர்) கலந்தா ஆச்சு!

2. நீர் மோர்.. இதுக்கு நிஜமாவே ரெஸிபி வேணுமா? தயிர்+ தண்ணீ கலந்து ப்ளெண்டர்லெ ஒரு அடி அடிச்சு
உப்பும் கருவேப்பிலையும் சேர்த்துடுங்க ப்ளீஸ்!!!

3. பயத்தம் பருப்பு கோஸ்மல்லி ( இது துளசி ஸ்டைல்)

தேவையான பொருட்கள்: பயத்தம்( பாசிப்) பருப்பு 1 கப்

வெள்ளரிக்காய் 1/2 ( இது டெலிக்ராஃப் க்யூக்கும்பரா இருந்தால். அது சரி இதுக்கு
ஏன் இந்தப் பேரு வந்துச்சுன்னு யாராவது சொல்லுங்களேன்)

சாதாரண வெள்ளரிக்காய் ன்னா 1

அப்புறம், உப்பு, தேங்காய்த்துருவல் 2 டேபிள் ஸ்பூன்) பச்சை மிளகாய் 2/3,
ஒரு சிட்டிகைப் பெருங்காயத்தூள்

தாளிக்கக் கொஞ்சம் கடுகும் ஒரு டீஸ்பூன் எண்ணெய்யும், கொஞ்சம் கறி வேப்பிலையும்.

செய்முறை:

பாசிப் பருப்பை ஒரு மணிநேரம் தண்ணிலே ஊற வச்சுடுங்க.

வெள்ளரிக்காயைத் தோல்சீவி, சின்னத்துண்டா ( பல்லுபல்லா!) நறுக்கிடுங்க.

தேங்காய் பத்தையையும் இப்படியே! துருவல்ன்னா துருவிக்கணும். காம்ச்சோர்ங்க போடறது 'டெஸிகேட்டட்
கோகோனட்)

ஊறின பருப்பைக் கழுவிட்டு, தண்ணியை வடிச்சுட்டு( சும்மா கொஞ்சம் தண்ணி 2 டீஸ்பூன்போல இருக்கட்டும்.
ஒட்ட வடிச்சுடாதீங்க) மைக்ரோவேவ்லே 2 நிமிஷம் 100% பவர்லே வச்சு எடுத்துக்குங்க.

இப்ப ஒரு வாணலி/நான்ஸ்டிக் பேன் அடுப்பிலே வச்சு எண்ணெய் ஊத்தி, அது காய்ஞ்சதும் கடுகு, கறிவேப்பிலை,
நறுக்கின பச்ச மிளகாய்த்துண்டுங்க, ஒரு சிட்டிகை பெருங்காயம்போட்டு வதக்கி, வெந்த பருப்பையும் போட்டுக்
கிளறி, உப்பும் தேங்காய்த்துருவல், வெள்ளரிக்காய் எல்லாம் சேர்த்து ஒரு நிமிஷம் வதக்கி எடுத்தா ஆச்சு.

நம்ம ஊருலே பருப்பை ஊற வச்சு,அப்படியே பச்சையாப் போடுவாங்க. அது நறுக் நறுக்குன்னு நல்லாத்தான் இருக்கும்.
அது ஒரு பச்சைவாசனையா இருக்குன்னு எங்க வீட்டுலே சொல்றதுனாலேதான் இப்படி!

அது போகட்டும். மாங்காய் கிடைக்கிற ஊருலே இருக்கற புண்ணியவதிகளும், புண்ணியவான்களும் மாங்காயைப்
பல்பல்லா நறுக்கி, இதோட சேர்த்துக்குங்க( ஹூம்....)

நேத்து நம்ம ஊர் ஹரே கிருஷ்ணா கோவிலிலே ஸ்ரீ நாம நவமி கொண்டாட்டம். பக்தியோட போய் சாமி கும்பிட்டோம்(!)
அதுக்கப்புறம் 'பேட் கி பூஜா' ( இதுவும் ஹிந்திதான்) கிச்சடி, பருப்பு, ஆலு கோபி( உருளை & காலிஃப்ளவர்) கறி,
தக்காளிச் சட்டினி, பப்படம், ஸாலட், சாக்லேட் கேக், கேசரி, பால் பாயாசம் & பானகம்!

அது சரி. இந்த வருசம் ஸ்ரீ நாமநவமி ஏன் இப்ப சித்திரை மாசத்திலே வந்துச்சு? எப்பவும் பங்குனியிலே, அதாவது
தமிழ் வருஷப்பிறப்புக்கு முந்தியே வருமே!

தெரிஞ்சவுங்க சொல்லுங்க.

உங்க எல்லோருக்கும் பண்டிகை தின வாழ்த்துக்கள்.

'ஹேப்பி பர்த்டே ஸ்ரீ ராம்!!!!!!'

Friday, April 15, 2005

உள்ளக் கடத்தல்( சினிமா விமரிசனம்?)

இந்தப் பேருலே ஒரு படம் வந்திருக்குன்னு நான் சொன்னா நீங்க நம்புவீங்கதானே?

வழக்கமா படங்களொட விமரிசனமும், முன்னோட்டம், பின்னோட்டம் எல்லாம்
சினிமா நியூஸ் கொடுக்கற பல தளங்களிலே வந்துருதுதான்.எனக்கு என்னமோ
அந்த விமரிசனக்களை, அதுவும் வணிக/வெகுஜனப்பத்திரிக்கைகளிலே வர்றதைப்
படிக்கவே தோணாது! ஒண்ணும் இல்லாத படங்களை ஒரேடியாத் தூக்கறதும்,
ஒண்ணுக்கும் லாயக்கில்லாததையெல்லாம் தலைமேல தூக்கி வச்சுக்கிட்டும் ஆடறதைப்
பார்த்தா, இந்த விமரிசனங்களை எழுதறவங்களைப் பத்தி ஒருவிதமான சந்தேகம்கூட
வருது!!!! என்னமோ நடக்குது, இதுக்குள்ளே புகுந்து பார்த்தாத்தான் தெரியும்!



அது போகட்டும். சினிமா என்றது பலபேரோட உழைப்பு. எந்தப் படத்திலையும் ஏதாவது
நல்லது, பாட்டோ, லொகேஷனோ, கதையோ, நடிப்போ, டான்ஸோ, இன்னும் எதுவோ ஒண்ணு
இருக்கத்தானே செய்யும்? சில பத்திரிக்கைகள் தான் படத்தோட வெற்றிக்கும் காரணமாயிடுது.
இது உங்களுக்கேத் தெரியும். நான் சொல்ல வந்தது என்னன்னா, ஏப்பையோ, சாப்பையோ,
குப்பையோ எந்தமாதிரி படமுன்னாலும், இந்த பேருலே ஒரு படம் வந்திருக்குன்னு
ஜனங்களுக்குச் சொல்லலாம்தானே!

இப்ப வந்திருக்கறது இந்த 'உள்ளக் கடத்தல்'

படத்துக்குப் பேரு வைக்கறதிலே கொஞ்சம் கவனம் காட்டியிருந்தால் நல்லா இருந்திருக்கும்.
இதுலே நடிச்சவங்க, குட்டி ராதிகா, யுகேந்திரன், விக்னேஷ் இன்னும் பலர்!

கதை என்னவோ காதலுக்கு எதிரியான பெற்றோர்களையும், அண்ணனையும் பற்றித்தான்!

கதாநாயகன் ஒரு அனாதை( வசதியாப் போச்சு!)

கதாநாயகிக்குக் குடும்பம் இருக்கு,. அப்பா, அம்மா, அண்ணன், அண்ணின்னு... கூடவே ஒரு உயிர்த்தோழியும்
இருக்காங்க.

முதலில் கதாநாயகி, தன் குடும்பத்தார் மேலே இருக்கற பாசத்தாலே, அவுங்க பார்த்துவைக்கற கழுதை, குதிரை
எதுவானாலும் கல்யாணம் பண்ணிக்கத் தயார்னு சொல்லிடறாங்க. அப்பாவும் அண்ணனும் மாப்பிள்ளையை முடிவு
செஞ்சிடறாங்க. இதுக்கு நடுவுலே கதாநாயகன் என்ட்ரியும், காதலும் வந்துடுது. காதலனா, குடும்பமான்னு பரிதவிப்பு.
அப்படியும் தன் காதலைக் குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தறாங்க. தவறான தகவலாலே, நாயகன் கெட்டவன்னு
நினைச்சுக்கறாங்க அப்பா & அண்ணன். கொஞ்சம் விசாரிச்சுப் பார்க்க வேணாமோ? இல்லை...

அப்பா சொல்றார், அந்தப் பையனைக் கல்யாணம் கட்டிக்கிட்டாச் செத்துப் போயிடுவேன்னு! அதுவும் அப்பாவியா
முழிக்கற அம்மாவையும் இவரே சேர்த்துச் சொல்லிக்கறார்! நானும் அம்மாவும் செத்துருவோம்!!!! அடப்பாவமே!!
அதே மாதிரி செத்தும் போயிடறார். இப்ப அண்ணன் தானும் செத்துருவேன்( இதுக்குள்ளேதான் கல்யாணம் ஆகி,
முதலிரவும் நடந்து, கதாநாயகி கர்ப்பம் ஆயிட்டாங்களே!!!)ன்னு சொல்லி தங்கையும், புருஷனையும் பிரிச்சு வைச்சு
சதி பண்றார்.

இந்தப் படத்துலே புத்திசாலித்தனமா நடக்கறது அண்ணிதான். நல்லா செஞ்சிருக்காங்க.அவுங்க பேருதான் தெரியலை!
அப்புறம் எப்படி நாயகனும், நாயகியும் ஒண்ணு சேர்றதுன்றதுதான் கதை.. அப்புறம் சுபம்!!!!

நடிக்கறதுன்னா என்னன்னு இப்ப எனக்கு சந்தேகம். நாயகன் சாதாரண மனுஷனா, நல்லவனா இருந்தா எப்படி
இருக்கும்? வீர சாகசம் காட்டுனாதான் நடிப்பா? நாம வாழ்க்கையிலே சந்திக்கற ஒருத்தராட்டம் இயல்பா இருந்தா
நடிக்கத்தெரியலைன்னு சொல்லிடுவாங்களோ? ஒரே கன்ஃப்யூஷன்!

இசை பரத்வாஜ். நாயகனும், நாயகியும் அவுங்களே வாயசைக்காம, பின்னணியிலே பாட்டு வருது. நாயகி சோக
கீதம் பாடாம, அதுவும் பின்னணியிலே பாட்டா வருது. இது நல்லாத்தானே இருக்கு ? பாட்டும் பரவாயில்லை!

கூட்டமான கோஷ்டி நடனம் வைக்கச் சான்ஸ் இருந்தும்( அதான் நாயகி காலேஜ்லே படிக்குதே!)வைக்கலே.
அப்பாடான்னு இருந்துச்சு!

நாயகனோட ஃப்ரெண்ட்ஸ் எதார்த்தமா இருக்காங்க. சொல்ல மறந்துட்டேனே, தோழியும் பரவாயில்லை!!!

அவ்ளொதான்... கிடைச்சா ஒருக்காப் பாருங்க.

எல்லாரும் சந்திரமுகி, மும்பை எக்ஸ்ப்ரெஸ்ன்னு இருக்கப்ப நான் இப்படி:-))))))


Thursday, April 14, 2005

ஊட்டமது கைவிடேல்!!!!

ஊட்டம் இல்லேன்னா புள்ளீங்க என்னாவும்? அப்படியே இளைச்சு, மெலிஞ்சு போயிராது?
அதே கதைதான், இந்த பதிவுகளுக்கும்! அதுலெயும் ஏதோ கொஞ்சநஞ்சம் வர்ற பின்னூட்டத்துக்கு
ஒரு மதிப்பும் மரியாதையும் கொடுத்து, 'இந்த மாதிரி.. பின்னூட்டம் கொடுத்தவங்களுக்கு
ரொம்ப நன்றி'ன்னு சொல்லிட்டாப் போகுதுன்னு பார்த்தா, சிலப்ப இந்த பின்னூட்டத்துக்கு நாம
போடப்போற பதிலே ஒரு பதிவு கணக்கா அமைஞ்சிருதுல்லையா?


இப்படி மாறிமாறிப் பின்னூட்டத்துக்கு
பதில் எழுதினா அதுவே ஒரு தொடராப் போயிடுமேன்னுதான் பலசமயம் வலைப்பதியறவுங்க ச்சும்மா
இருந்துறது. இல்லையா? ஆனா, பாருங்க, சில பின்னூட்டம் மட்டும் மனசுக்குள்ளே வட்டம் போட்டுக்
கிட்டே இருக்கும். அதுக்கு இன்னோரு பதிலை எழுதணுமுன்னு கை பரபரக்கும். நாலு நாளு போகட்டும்.
அப்புறமும் மனசுலெ அதே இருந்துச்சுன்னா, அதுக்குன்னு ஒரு பதிலைப் போடறதுதான் நல்லது!
இல்லேன்னா, மருந்தைக் குடிக்கறப்ப குரங்கை நினைக்காதே கதையாப் போயிரும்!

எதுவுமே அவுங்கவுங்க சொந்தக் கருத்துன்னு ஆமோதிச்சுக்கிட்டுச் சும்மா இருந்துறலாம்தான்.ஆனா..
இன்னும் வாங்கிக் கட்டிக்கணுமுன்னு 'விதி' இருந்தா அதை யாராலெ தடுக்கமுடியும்?

நம்ம விஜய் (அல்வாசிட்டி) அப்பப்ப ஊட்டம் கொடுத்து ஊக்குவிச்சுக்கிட்டே இருந்தார். நம்ம அன்பு
இருக்காரே அவர், அன்பளிப்பாக் கொடுத்த துணையெழுத்தை 'தொலைச்சிட்டேன்'!!!! அதுவே எனக்கு
இணையச் சந்திப்பு நிகழ்ந்த இடத்தை விட்டு வெளியே வந்தபிறகுதான் தெரிஞ்சது! அது எனக்குக் கிடைக்காத
விவரத்தை இந்தத்தொடர் படிச்சுத்தான் அன்புவும் தெரிஞ்சுக்கிட்டாராம்.

பாலு மணிமாறன், பாலாஜி பாரி, தைவான் கிறிஸ், நம்ம செல்வநாயகி, மதி, அருணா, மீனா, முருகன்,
ஈழநாதன், குமார், மூர்த்தி இவுங்கெல்லாம் நல்ல முறையிலே ஊட்டம் அளிச்சு உற்சாகப் படுத்தினாங்க.
அதிலும், நம்ம மூர்த்தி இருக்காரே, என் கூட 'டூ' விட்டுட்டாரு. 'மலேசியாவுக்கு வர்றதாச்
சொல்லி இருந்தா, நான் வந்து அழைச்சுக்கிட்டுப் போயிருப்பேனே'ன்னு எழுதுனார். இதுலே என்ன
ஒரு சங்கடமுன்னா, நாம அங்கெ போறதை முன்கூட்டியே முடிவு செய்யலைதானே! அப்படியும் ஜெயந்தி
கிட்டே பேசினப்ப, அவுங்களும் மூர்த்தியைக் கேக்கலாமுன்னுதான் சொன்னாங்கதான். என்னைக்கு, எப்பன்னு
தெரியாததாலேதான் மூர்த்தியைத் தொடர்பு கொள்ள முடியாமப்போச்சு! இவ்வளவு வருத்தம் என்னத்துக்கு?
அடுத்தமுறை, இந்த அக்கா அங்கே மாமாவோட வர்றப்ப, நம்ம மூர்த்திதான் எல்லா ஏற்பாடும் செய்யணும்!

ஆலாபனையெல்லாம் முடிச்சுட்டேன், இப்ப விஷயத்துக்கு வர்றேன்.

சென்னையிலே, தி.நகர் ரங்கநாதன் தெருவிலே இருக்கற, 'சரவணா ஸ்டோர்ஸ்'கடைக்கு யாராவது
போயிருக்கீங்களா? அப்படி யாராவது போயிருந்தா, அவுங்களொட அனுபவம் எப்படின்னு தெரிஞ்சுக்க
ஆசையா இருக்கு! நானும் ஒருதடவை 2002 நவம்பர்லே போயிருந்தேன்.

என்னோட அனுபவத்தை ஒரு நாளு இங்கே போடறேன். இன்னைக்கு வேணாம். வருசப்பிறப்பு!

எல்லோருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Monday, April 11, 2005

போயிட்டு வரட்டா?

ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் தொடர்ச்சி!!! பாகம் 10

நம்ம கண்ணன், இந்த முஸ்தஃபா கடையைப் பத்தி ஒரு பதிவு போட்டிருந்தது
நினைவிருக்கா?

இந்த முறை சிங்கை வந்தப்பவும் எப்பவும் போறமாதிரி அங்கெயும் போனோம். அட!!! பரவாயில்லையே!!!
பேஷ் பேஷ்ன்னு சொல்ற வகையிலே மாற்றங்கள் இருந்துச்சு! நிறைய இளவயதுக்காரர்கள் வேலை செய்யறாங்க.
அதிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியா பெண்கள் அதிகம்!!!! முந்தியெல்லாம் ஏனோதானோன்னு இருப்பாங்களே
அப்படியில்லாம,நாம கேக்கற பொருளைத் தேடிக் கொடுக்கற தன்மை( குறைஞ்ச பட்சம் எங்கே இருக்குன்னாவது
சொல்றாங்க) பெரிய நிறுவனம், நிறைய ஆளுங்கன்னு சொல்றப்ப பெண்களுக்கு சில இடங்களில் ஏற்படுகின்ற
'பாலியல் தொல்லைகள்' ஏற்பட வாய்ப்பு இருக்காதுதானே? ஒரு நம்பிக்கைதான்!!!!


பொருளாதார ரீதியில் ஆண்களைச் சார்ந்திருக்காம இருக்கறதுதான் உண்மையான 'பெண் சுதந்திரம்'னு நம்பறேன்.
'ஃபைனான்சியல் ஃப்ரீடம்' இருந்தாத்தான் பெண்கள்கிட்டே தன்னம்பிக்கை உருவாகும்.இதுவே ஒரு மனோதிடத்தையும்
தரும். இதுக்கெல்லாம் அடிப்படை, பொண்ணுங்க ஒரு வேலை செஞ்சு சம்பாரிச்சுத் தன்காலுலே நிக்கறது.என் மகளுக்கும்
இதைத்தான் சொல்லிவச்சுருக்கேன்.மத்தபடி எது சரி, எது இல்லைன்றதை அவுங்கவுங்க அனுபவத்துலே படிச்சுக்கணும்!

24 மணி நேரமும் இந்தக் கடை திறந்திருக்கறதுலேயும் ஒரு நன்மை இருக்கு. வேற வேற டைம்ஸோன்லே யிருந்து
வர்றவங்க தூக்கம் வராம இருக்கறப்ப ஷாப்பிங் செஞ்சுக்கலாம்! கடைகளிலே சாமான்கள் அடுக்குகளும் விஸ்தாரமா
இருக்கு! அதுலேயும் அந்த பழைய கட்டிடம்( முந்தி கல்யாண சுந்தரம் கடை இருந்த இடம்) சையத் ஆல்வித் தெரு
முஸ்தாஃபாவைவிட நல்லாவே இருக்கு!!! ஆனா இங்கே ராத்திரி 11 மணிக்கு மூடிடறாங்களாம். அதுக்கப்புறமும்
கடைக்குப்போகணுமுன்னா பக்கத்துச் சந்துலே போகலாம்தானே!!!!

சாமான்கள் வாங்கினபிறகு, 'செக் அவுட்'லே பையோட வாயை இறுக்கக் கட்டிக் கொடுக்கறாங்கன்னு நம்ம கண்ணன் அதைக்
குறையாக் குறிப்பிட்டு இருந்தாரு. கடைக்காரங்க நிலையிலே கொஞ்சம் இருந்து பார்த்தா, அதுலே அவ்வளவா ஒண்ணும்
தப்புல்லேன்னு தோணுது! நம்ம ஜனங்க சில பேர்கிட்டே இன்னும் நேர்மைக்குறைவு கொஞ்சம் இருக்கே! வழியெல்லாம்
ச்சின்னச் சின்னப் பொருளா ஏராளமா குவிச்சு வச்சிருக்கற இடத்துலே 'ஷாப் லிஃப்டிங்' நடக்காம கவனிக்கறது
ரொம்பவே கஷ்டம் இல்லையா? உலக அளவுலே இதாலெ எவ்வளவு நஷ்டம்ங்கறதும், இந்த நஷ்டத்தையெல்லாம்
ஈடு செய்யறதுக்காக எப்படி பொருளோட விலை கூடிப்போகுதுன்னும் யோசிச்சுப் பாருங்க! இப்ப 'சர்வீஸ்' நல்லா
இருக்கே, அதைப் பாராட்டலாம்தானே!!!! இதைப் பத்தி( கண்ணன் பதிவு)மககிட்டே சொல்லிக்கிட்டே வந்தேன்.
அப்ப மகள் அவளோட கையிலே இருந்த முஸ்தாஃபா பையைக் காட்டினா. அவுங்க கட்டி வச்சிருந்த 'வாய்'
கட்டவிழ்ந்து கிடந்துச்சு!!!!! ச்சும்மா பேருக்கு ஒரு கட்டு!!!!!!!

நிறைய வியாபாரம் ஆகறதாலே, விலையும் நியாயமாவே இருந்துச்சு! கொஞ்சம் வயசான கடைஆளுங்கதான்( பழைய
ஆளுங்களாயிருக்கும்!) ஏதோ சுமையைத் தூக்கிவச்சிருக்கற பாவனையுடன், அங்கங்கே கவலையோடு 'கதை' பேசிக்கிட்டு
இருந்தாங்க!ஆனா இளவயது விற்பனையாளர்கள் எல்லாம் அந்தந்த வயசுக்கே உரிய கேலி, குறும்புத்தனத்தோடு
அவர்களுக்குள் அப்பப்ப ஏதாவது பேசியபடி வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாங்க!!!! இனி ஒண்ணும்
வேணாமுன்னு இருந்த நாங்களும் சும்மா 'விண்டோ ஷாப்பிங்' செஞ்சுக்கிட்டு இருந்தோம்.

அப்படியே கொஞ்ச நேரம் போச்சு. மறுபடி வெளியே வந்து பொடிநடையா நடந்துபோய், காய்கறிக் கடைகளை
வேடிக்கை பார்த்தோம். அங்கிருந்த எல்லா நாளும் காய்கறிக் கடைகளைப் பார்த்தாக் கொஞ்ச நேரம் நின்னு,
அதை என் கண்ணாலே 'தின்னு'ட்டுத்தான் போவேன். இங்கே கிடைக்காத அருமையான பல காய்கறிகளைப்
பார்த்து, பெரு மூச்சு விட்டுப்போறதுதான். எவ்வளோ நீள முருங்கைக்காய்!!! ஹைய்யா.. சேப்பங்கிழங்கு
பாரேன்! அட வாழைப் பூ! புடலங்காய் ஏன் இப்படி குள்ளமா இருக்கு இப்படி......ஒரு கடையிலே
முருங்கைக்கீரை கூட இருந்துச்சு! தக்காளி மட்டும் தனியா வாங்குனா கிலோ 1.30 ஆம். மத்த காய்கறிகளோட
வாங்குனா 1 வெள்ளிதானாம்! இது நல்லா இருக்கே! ரெண்டு கத்தரிக்காய் வாங்கினாப் போச்சு -)))))

"சரி, நேரமாகுது. திரும்பலாம். ஏதாவது சாப்பிடணுமுன்னா சாப்பிட்டுக்கோ.ப்ளைட்டுலே சாப்பாடு வர
நேரமாகும். நமக்கு 'ஹிந்து மீல்ஸ்'ன்றதாலே ஊருக்கு முன்னாலே கொண்டுவந்து கொடுத்துருவாங்கதான்!!!
ஆனாலும் 11 மணி ஆயிரும்!"

" பசியே இல்லைமா! வெறும் காஃபி குடிக்கலாம்"

சரின்னு கோமளவிலாஸ் போய் நல்ல ஸ்ட்ராங்கா காஃபி கேட்டுக் குடிச்சிட்டு வெளியே வந்தோம்.முத்துவும் இருந்தார்.
அவர்கிட்டேயும், 'போயிட்டு வரோம். நல்லா இருங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன்.

அங்கெயே ஒரு டாக்ஸி கிடைச்சது. அதுலேயே ஹோட்டெலுக்கு வந்து நம்ம பெட்டிங்களை எடுத்துகிட்டு ஏர்போர்ட்
போய்ச் சேர்ந்தோம். வர்றப்ப வழியெல்லாம் மனசு கொஞ்சம் வெறுமையா உணர்ந்தது. ஏதோ சொந்த ஊரை
விட்டுப் பிரிஞ்சுபோற உணர்வு!அதே சமயம் மறுநாள் நம்மவீட்டுக்குப் போயிருவோம்ன்றதும் ஒரு சந்தோஷத்தைக்
கொடுத்துச்சு!

ஏற்கெனவே எந்த 'ஸீட்'ன்னு 'நெட்'லே பதிவு செஞ்சிருந்ததாலே, லக்கேஜ் மட்டும் செக் இன் செஞ்சோம். ரெண்டு
பேராப் போனா, கடைசியிலே இருக்கற 'இரட்டை ஸீட்'தான் வசதி!!!!

போறப்ப பார்த்த அதே படங்கள்தான் இப்பவும். தமிழ்லே கில்லி, ஆயுத எழுத்து. ஹிந்தியிலே 'சோக்கர் பாலி,
Kyun, hO gaya na . கொஞ்ச நேரம் கேம்ஸ்( எல்லா கேம்ஸும் பழசுதான். இன்னும் அப்டேட் செய்யவே இல்லை)
விளையாடிட்டு, கொஞ்சநேரம் படிச்சுட்டு, சாப்பாடு கிடைச்சவுடன் சாப்பிட்டுட்டு தூங்கியாச்சு!

ப்ரேக் ஃபாஸ்ட் வந்தப்ப மகள் அதை முதல்லே ஒரு ஓரமாத் திறந்து பார்த்துட்டுச் சிரிச்சா. நான் பல்தேய்ச்சுட்டு
வந்து பார்த்தேன். ரவா கிச்சடியும், வடையும்!!!!!! வடை என்னை விடறதாயில்லே!!!!!

இமிகிரேஷன்லே நமக்கு முன்னாலெ இருந்த குடும்பத்து ஆட்களுக்கு ஏதோ குழப்பம். வரிசையிலே நிக்கறப்ப
எப்பவும் நமக்கு முன்னாலே நிக்கறவுங்க 'ஸ்டக்' ஆயிருவாங்க. சூப்பர் மார்கெட் க்யூவிலேயும் அடிக்கடி
இப்படித்தான்!!! இப்ப என்னன்னு பார்த்தா, அவுங்க 'காலாவதி'யான பாஸ்போர்ட்லே வந்திருக்காங்களாம்!
இந்த நாட்டு ஆளுங்கதான்!!!! எல்லாக்(3) கவுன்டரில் இருந்த ஆளுங்களும் இதுலேயே 'பிஸி' யாகிட்டாங்க!

ஒருவழியா எங்க முறைவந்து வெளியே வந்தோம். எப்பவும் செய்யறதுபோல எல்லாத் தீனிங்களையும், 'டிக்ளேர்'
செய்யற மத்த சாமான்களையும், தனியா ஒரு 'கேபின் பேக்' லே வச்சுடறதாலே எல்லாம் ரொம்ப ஈஸியாப் போச்சு!

வெளியே வந்தா குளுருது! 16 டிகிரி! 35லெ இருந்து வந்தவங்களாச்சே!

எல்லா விஷயத்துலேயும் நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கறதைப் போலவே இந்தப் பயணத்தாலெயும் சில நல்லதும்
ஒரு கெட்டதும் நடந்தது!!!

நன்மைன்னு சொன்னா, முடிஞ்சவரைக்கும் எல்லா நண்பர்களையும் சந்திச்சது! கோயில், நல்ல சாப்பாடு,இப்படி.
முக்கியமா ஒண்ணு சொல்லணுமுன்னா மகளோட 9 நாள் இருந்தது! இப்ப அவ தனியா ஃப்ரெண்ட்ஸ்களோட
ஃப்ளாட்டிங் செய்யறதாலே, தனியா அவளோடு ஒன் டு ஒன்னா பேச சந்தர்ப்பம் அமையறது இல்லை.எல்லா
உறவுகளையும் போலவே இந்த பெற்றோர், பிள்ளைங்க என்ற உறவுக்குமொரு கனமான பாலம் வேணும்,
இல்லையா?அதுவும் தோளுக்குமேல் வளர்ந்தாத் தோழி!! அதுதானே பழமொழி? அதுக்கு இந்தப் பயணம் ரொம்பவே
உதவியா இருந்தது!!!

கெட்டதுன்னா.....

நம்ம வீட்டுப் பூனைங்க ரெண்டும் கோபாலை நல்லா ஏமாத்தி இருக்குங்க! 'டின் ஃபுட்' கொடுத்தாச் சாப்பிடாம
இருந்துச்சுங்களாம். ஐய்யோ அதுங்க சாப்பிடலையேன்ற 'பயத்துலெ' இவர் தினமும் சூப்பர் மார்கெட்லே இருந்து
( அதான் நம்ம வீட்டுக்கிட்டே இருக்கற சூப்பர் மார்கெட் 24 மணி நேரமும் திறந்திருக்கே!)நல்ல இறைச்சியும்,
மீனுமாப் போட்டு( மனுஷன் தின்ற க்வாலிட்டி!!!)வந்திருக்கார்.என்னைப் பார்த்ததும், 'ஐய்யோ வந்துட்டாளே'ன்ற
விதமா ஒரு பார்வை பார்த்துட்டு, முதுகைத் திருப்பிக்கிட்டு போகுதுங்க!!!! போதாக்குறைக்கு பொன்னம்மான்னு
அதுங்க வர்றதுக்கு வச்சிருந்த வாசலை'கேட் டோர் ஃப்ளாப்' உடைச்சும் வச்சிருக்குதுங்கள்!!!!!

ரெண்டு வாரம் ஆகியும் இன்னும் அதுங்களை என் வழிக்குக் கொண்டுவந்த பாடில்லை(-


இதுவரை பொறுமையா இந்தத் தொடரைப் படிச்ச எல்லோருக்கும் நன்றி.அப்பப்ப பின்னூட்டத்துக்கு பதில்
எழுதிரலாமுன்னா 'ப்ளாகர்' மக்கர் பண்ணுது(((((-

பின்னூட்டப் பெட்டி ( சுரதா)சரியா இல்லேன்னும் சில பேரு தனிமடலிலே எழுதியிருந்தாங்க.
அவுங்களுக்கும்,தொடரின் ஆரம்பம் முதல் பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்திய அன்பு, அல்வாசிட்டி விஜய்,
மூர்த்தி, கிறிஸ்டோஃபர், மதி, செல்வநாயகி, பாலாஜி-பாரி,ஈழநாதன், முருகன், பாலு மணிமாறன்,
எம்.கே. குமார், வாய்ஸ் ஆன் விங்க்ஸ்( ஏம்பா, இவர் பேரே இதுதானா?), அருணா, மீனா இவுங்களுக்கும்,
இன்னும் பின்னூட்டம் எழுதாம இருந்த மத்த இணைய நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை
மீண்டும் சொல்லிக்கறேன்.

எல்லோரும் சிங்கை இணைய சந்திப்பைப் பத்தி எழுதி அது ஆறி அவலாகப் போனபிறகு, இதை எழுத ஆரம்பிச்சதால்
இதுக்கு 'ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் ( கோழி அடிச்சுக் கும்பிட்ட கதையா)னு தலைப்பு வச்சேன். அது என்னவொ எழுத
எழுத ஒரு ஆர்வத்தாலே நீண்டுபோய் பயணக்கட்டுரையா அமைஞ்சிடுச்சு!

வணக்கம். மீண்டும் சந்திப்போம்...









Saturday, April 09, 2005

விடுமுறையின் கடைசி நாள்!!!!

ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் தொடர்ச்சி!!! பாகம் 9


சனிக்கிழமை பிறந்தாச்சு! இன்னைக்கு இங்கேயிருந்து கிளம்பறதாலே, பெருமாள்கிட்டே சொல்லிக்கலாமுன்னு
அதிகாலையிலேயே போய் பூஜையிலே கலந்துக்கிட்டுப் பிரியாவிடையும் பெற்றுக் கொண்டேன். கோயிலிலே
கும்பாபிஷேகம், மே மாசம் 29 ஆம் தேதியாம். வேலைங்க ஜரூரா நடந்துக்கிட்டு இருக்கு!



திருப்பி தங்குற இடத்துக்கு வந்து, மகளையும் கூட்டிக்கிட்டு 'வழக்கமான இடத்துக்கு' ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடப்
போனோம்.

இந்தத் தங்கற இடம்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்ல. இதைப் பத்திக் கொஞ்சம் சொல்லிரணும். இல்லையா?

இந்த ஹோட்டல் பேரு 'நியூ பார்க் ஹோட்டல்'. நம்ம முஸ்தாஃபா கடைக்கு ஜஸ்ட் பின்னாலெ இருக்கு!
அஞ்சு நட்சத்திர அந்தஸ்து பெற்றது! எல்லா ஹோட்டலும் போல இங்கேயும் 'ரிசப்ஷன் கவுன்டரிலே' சின்னப்
பசங்கதான்! என்ன, வயசு ஒரு 22 இருந்தாலே ஜாஸ்தி!! அதே போல நம்ம முஸ்தாஃபா கடையிலேயும் பல
இளம் பெண்கள் வேலை செய்யறது மனசுக்குச் சந்தோஷமா இருந்துச்சு! இந்தக் கடையைப் பத்தி அப்புறம்
சொல்றேன். இப்ப சொல்லவந்தது என்னன்னா, இந்த ஹோட்டல் விஷயம்....

நல்ல சுத்தமான இடம். அறைகள் எல்லாம் வசதியா இருக்கு. இங்கே தங்கறதுக்கு சார்ஜ் ( நாம எடுத்த ரூமுக்கு)
ஒரு நாளைக்கு 270 சிங்கப்பூர் வெள்ளியாம். நாம இணையம் மூலம் பதிவு செஞ்சதாலே 65% தள்ளுபடி கிடைச்சது!
'நெட்'லே எவ்வளவு வசதி பாருங்க!!! இதுக்குன்னு ஒரு 'சைட்' இருக்கு. யாருக்காவது வேணுமுன்னா ஒரு
தனி மடல் போடுங்க, அந்த விலாசம் தாரேன்.

'நான்ஸ்மோக்கிங் ஏரியா' வேணுமுன்னு கேட்டதாலே 18வது மாடியிலே ரூம் கிடைச்சது. இந்த தளத்தைச் சுத்தம்
செய்யற 'ஹவுஸ்கீப்பர்' நல்லவங்களா இருந்தாங்க. நாந்தான், 'தினம்தினம் 'பெட்ஷீட்'எல்லாம் மாத்தவேணாம்
( நம்ம வீட்டுலே தினமுமா ஷீட் மாத்தறோம்?)மூணு நாளைக்கு ஒருக்கா மாத்தினாப் போதும். டவல்ஸ் மட்டும்
தினமும் மாத்துங்க'ன்னு சொன்னதும் அந்தம்மாவுக்கு ஒரே சந்தோஷம்!!! டீ, காஃபி தயாரிக்க வசதி இருக்கு.
(யாருக்கு வேணும்னு தினமும் ஃபில்டர்கஃபிக்கே போய்க்கிட்டு இருந்தேன்.) ஆனா, 'நல்லா வசதியா இருக்கு,
நினைச்ச நேரத்துக்குக் காஃபி குடிக்க முடியுது'ன்னு மக சொல்லிக்கிட்டு இருந்தா. இதெல்லாம் உங்களுக்கு ஏற்கெனவே
தெரிஞ்ச விஷயம்தான். புதுசா ஒண்ணுமில்லே. ஆனாலும் தெரியாத ஒரு சிலருக்குப் பயன்படலாமேன்னு எழுதுனேன்!

இந்தமுறைதான் கவனிச்சேன் சிங்கையிலும் எங்க ஊர் மாதிரி ஒரே 'ஸ்மோக்'!!!! சூரியன் நடு உச்சிக்கு வர்றவரை
மாடி ஜன்னலுவழியாப் பாக்கறப்ப 'ஹை ரெய்ஸ் பில்டிங்ஸ்' ஒண்ணும் தெரியலை!!!! இது கொஞ்ச நாளுலே
ஒரு பிரச்சனையாவறதுக்கு சான்ஸ் இருக்கு!

இப்ப முஸ்தாஃபா ஹோட்டல் புதுப்பிக்கறதாலே அது மூடியிருக்கா, அதாலே இங்கே ரொம்பக் கூட்டம்!!!! நிறைய
இந்தியர்களைக் குறிப்பா வட இந்தியர்கள் அப்புறம் ஆந்திரர்களைப் பார்த்தோம். நம்ம ஆளுங்க இப்பல்லாம்
வெளிநாடுகளுக்கு டூரிஸ்டாப் போறது சந்தோஷமான விஷயம்தான்! நாலு இடமும் சுத்தி, உலகத்தைப்பத்தித்
தெரிஞ்சுக்கறது நல்லதுதானே!

இன்னொண்ணும் இருக்கு. இந்த 'செக் அவுட்' நேரம் பகல் 12 மணின்றது நிறைய ஊர்களிலே இருக்குறதுதான்,
ஆனா, வாயிலே இருக்கு வழின்றதாலே நாம இன்னும் கொஞ்ச நேரம் தரும்படிக் கேட்டுக்கலாம்.( இங்கே
எங்க ஊர்லே காலையிலே 10 மணி. ரொம்ப அநியாயம் இல்லே?)

எங்களுக்கோ ராத்திரி 9 மணிக்குத்தான் ஃப்ளைட். பகல் 12லெ இருந்து எங்கே சுத்தறது? எக்ஸ்ட்ரா டைம் கேட்டதுலே
2 வரை தரேன்னு சொன்னாங்க. ஆனா, நானு ப்ளைட் நேரத்தைச் சொல்லி,(எட்டுநாளு அங்கெ ரூம் எடுத்ததையும்
சொல்லி!) குறைஞ்சது 5 மணிவரை வேணுன்னு கேட்டேன்.ச்சும்மா கேட்டுவைக்கறதுதான்.எப்படியும் 4 வரையாவது
கிடைக்குமே! அதேபோல 4 வரை கிடைச்சது.

எனக்கு யானை எவ்வளவு பிடிக்குமோ அதே அளவு பூனையும் பிடிக்கும். ஏதாவது யானை, பூனை பொம்மைங்க
வாங்கணுமுன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். முந்தி( கடைசியா அங்கே வந்து 2 வருசமாச்சு) அங்கே லிட்டில் இந்தியா
ஆர்கேட்லே ஒரே ஒரு கடையிலேதான் யானை டிஸைன் போட்ட நாப்கின்ஸ், டேபிள்க்ளாத், வால் ஹேங்கர்ஸ்'னு
இருக்கும். இப்ப என்னன்னா, எங்கெ பார்த்தாலும் யானைங்க!!! 'டூ மெனி'யாகிப்போச்சு!!நம்மளை மாதிரி
ஜனங்க பெருகிட்டாங்க போல!!!

நானு, யானையும், புள்ளையாருமா( அவரும் யானை முகத்தவனாச்சே!) கலெக்ட் செஞ்சுக்கிட்டு இருக்கேன். விதவிதமா
வச்சிருந்தாலும் இன்னும் புதுசா என்ன இருக்குன்னும் தேடிக்கிட்டே இருப்பேன். ரெண்டு மூணு வாங்கிக்கிட்டு
அப்படியே போறப்ப அங்கெ ஒரு கடையிலே... அடடா.....

ஒரு ச்சின்ன பட்டு மெத்தை, இள மஞ்சள் கலருலே! அதும்மேலே குப்புறப்படுத்திருக்கற குழந்தை! அதுவும் நல்ல
மஞ்சள் பட்டு 'நாப்பி' போட்டிருக்கு! உச்சியிலே ஒரு ச்சின்னக் கொண்டை,அதுலே ஒரு மயில் பீலி! கைவிரல்
வாயிலே போட்டு சூப்பிக்கிட்டு இருக்கு! ஓஓஓ.... தெரிஞ்சிடுச்சு! அதான் நம்ம பேபிக்கிருஷ்ணர். ஆனா
முகம் மட்டும் யானை!!!! அம்சமா இருக்கற யானைக்காது!!! ஐய்யோ...என்ன ஒரு அழகான
பேபிப் புள்ளையார்!!!!! ச்சின்ன பொம்மைதான். விலை கொஞ்சம் (10 வெள்ளி)கூடுதலோன்னும் இருந்தாலும் விட
மனசில்லை. அப்படியே பஃபெல்லோ தெரு போய் புதுசா புத்தகம் வந்துருச்சான்னும் விசாரிச்சேன். நாளைக்கு
வருதுன்னு ஒரு 'ஸ்டேண்டர்ட் ரிப்ளை' கிடைச்சுச்சு!-))))))

கொஞ்சம் ஓய்வெடுத்துகிட்டுச் சாமான்கள் எல்லாம் பேக் செய்யலாம். ராத்திரிக்கு நல்லதூக்கம் இன்னைக்குக் கிடையாது.
பத்தரை மணிநேரம் பிரயாணமாச்சே!எப்பவும் இருக்கற லாஸ்ட் மினிட் பர்ச்சேஸ் ஒண்ணும் பாக்கி இருக்கே, அதையும்
முடிச்சிடலாமுன்னு கோமளவிலாஸ் ஸ்வீட்ஸ் கடைக்குப் போனோம்.

வழக்கமா வாங்குறமாதிரி, ஜாங்கிரி, ஹல்வா வகைகள், முறுக்கு, காராசேவு போன்ற நொறுக்ஸ் எல்லாம் தூக்க
முடிஞ்ச அளவு வாங்கிகிட்டு ரூமுக்குப் போய்ச் சேர்ந்தோம். மழை பெய்ய ஆரம்பிச்சது! ரொம்ப நாளா மழையே
வரலைன்னு ஜெயந்தியும், சித்ராவும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நல்லவங்க(!) ஊரைவிட்டுப் போறாங்களேன்னு
மழை கொஞ்சம் வலுவா வந்துக்கிட்டு இருந்துச்சு!

சாமான்களையெல்லாம் அடுக்க ஆரம்பிச்சேன். மகள், அவளோட புதுக் கேமெராலெ இன்னும் சில படம் எடுக்கறேன்னு
சொன்னா.அப்பப் பார்த்து, அது வேலை செய்யலை!!! அதோட புத்தகத்தை எடுத்துவச்சுக்கிட்டு 'ட்ரபுள் ஷூட்டிங்'
பக்கத்தைப் படிச்சுக்கிட்டு இருக்கா. இது சரிப்படாது. இப்பவே 'சிம்லிம் ஸ்கொயர்' போகணுமுன்னா போய்வந்துறலாம்னு
சொல்லி, ஒரு டாக்ஸி எடுத்துக்கிட்டுப் போனோம். சரியான மழை!கார் இஞ்ச் இஞ்சா நகருது.'ஜலான் பெசார்'
ரோடுலே அப்படி ஒரு ட்ராஃபிக் ஜாம்!!!! மணியோ ஒண்ணாகப் போகுது!

ஒருவழியா அங்கெபோய்ச் சேர்ந்தோம். அந்தக் கேமெராக்கடை எனக்கு நல்ல பழக்கமானதுதான். நல்ல வேளையா
அந்த சேல்ஸ்மேன் பையனும் அங்கே இருந்தான்(ர்). விஷயத்தைச் சொன்னதும் வாங்கிப் பார்த்துட்டுக், கவலைப் படாதீங்க,
வேற தரேன்னுட்டு ஒரு புது 'பேக்'கைத்திறந்து இந்த 'ச்சிப்பை' அதுலே போட்டுக் கொடுத்தான்(ர்). அப்ப அதுக்கு
இன்னோரு ஸ்பேர் பேட்டரி என்ன விலைன்னு கேட்டு வச்சேன்.( மகள் அதை வேற ஒரு கடையிலே 85 வெள்ளிக்கு
ஏற்கெனவே வாங்கியிருந்தா!)40 வெள்ளியாம்!!!!!! மகளோட முகம் போன போக்கைப் பாக்கணுமே((((-

மழை நின்னு போச்சு! அப்படியே டெக்கா மால்வரை நடந்து வந்தோம். அதுக்குள்ளே நுழைஞ்சு வந்தா, அங்கே
ஒரு கடையிலே நாம வாங்குனதைப் போல ஒரு பேபிப் புள்ளையார்! எனக்கு ஒரு கெட்ட(!) பழக்கம் இருக்கு.
ஒரு சாமான் வாங்கினப்பிறகும்கூட, எங்கேயாவது அதைப் போல இன்னொண்ணைப் பார்த்தாவிலை விசாரிக்கறது!
கோபால்தான் இதைக் கெட்ட பழக்கமுன்னு சொல்லிக்கிட்டு இருப்பார். ச்சும்மா, நாம சரியான விலை கொடுத்தமா
இல்லை, ஏமாந்துட்டமான்னு தெரிஞ்சுக்கறதுக்குத்தான்!

அந்த பொம்மை அங்கே 16.90 வெள்ளி! மனம் சமாதானமாச்சு! அப்படி இப்படின்னு மணி 2 ஆயிருச்சு. பகல்
சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுப் போய் பேக் செய்யலாமுன்னு நினைச்சு, பழையபடி கோமள விலாஸ்! சாப்பாடே
சாப்பிட்டோம். மூணு மணிக்கு பேக் செய்ய ஆரம்பிச்சு, வேலையை முடிச்சுக்கிட்டு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டுச்
சரியா 4 மணிக்கு சாமான்களையெல்லாம் 'லாபி'க்குக் கொண்டு வந்து வச்சிட்டு, பில் எல்லாம் செட்டில் செஞ்சுட்டு
எதுத்தாப்புலே இருக்கற முஸ்தாஃபா ஷாப்பிங் சென்டருக்குப் போனோம். இன்னும் ரெண்டுமணி நேரம் இருக்கே!!!




Thursday, April 07, 2005

விசேஷ நாள்!!!!

ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் தொடர்ச்சி!!! பாகம் 8

ஹோலிப் பண்டிகை, பங்குனி உத்திரம், புனித வெள்ளின்னு மூணு பண்டிகையும் சேர்ந்து இருக்கு இன்னைக்கு!
வழக்கம் போல கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தேன். பிரகாரத்தைச் சுத்திக்கிட்டு அப்படியே ஆண்டாள் சந்நிதிக்கு
வந்து, கம்பிக்கதவுக்குப் பின்னாலெ இருக்கற 'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி'யைப் பார்க்கறேன். ஒரு வித்தியாசம்
இருக்கே! இன்னும் உத்துப் பார்க்கும்போது தெரியுது என்ன மிஸ்ஸிங்குன்னு! இடதுபக்கம் போட்ட கொண்டையை
வழக்கமா மூடி இருக்கும் தங்கக் கவசம் இன்னைக்குப் போட்டுக்கலை!!



அப்பத்தான் நினைவுக்கு வந்தது, நேத்து 'ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம்'னு கோயில் நோட்டீஸ்போர்டுலே
படிச்சது.ஆழ்வார்கள் கூட்டத்திலே இருக்கும் ஒரே பெண்! அஞ்சாப்புப் படிக்கையிலே ஸ்கூல் நாடகத்துலே
ச்சின்ன வயசு ஆண்டாளா வேஷம் போட்டு நடிச்சது, திருப்பாவை போட்டியிலே கலந்துக்கிட்டு முதல் பரிசு
வாங்குனது எல்லாம் மனசுக்குள்ளே வந்து போகுது. அப்பெல்லாம் ஃபோட்டோ எடுத்துக்கறதுன்னா ஸ்டுடியோ
வுக்குத்தான் போகணும். இப்ப கண்ட நேரத்துலே, தோணறப்ப 'க்ளிக்' செஞ்சுடறமே, அதெல்லாம் இல்லாத
காலம்! தகர டப்பா மாதிரி இருக்கற பாக்ஸ் கேமரா, அதுவும் கலர் ஃபிலிம் கிடையாது. என்னதான் அழகா
உடுத்திக்கிட்டு நின்னாலும், அழுதுவடியுற மாதிரி இருப்போம் அந்த ஃபோட்டோலே!!! அந்த டப்பாவே கூட
வாங்கிக்க முடியாத நிலமை! அதெல்லாம் மேல்தட்டுவாசிகளுக்குன்னே இருந்துச்சு!!!! அதனாலே நடந்தது
எல்லாமே நினைவுகளாவே மனசுலே பதிஞ்சு வச்சாச்சு.

மத்தியானமா 2 மணிக்கு நம்ம 'சித்ரா ரமேஷ்' வீட்டுக்குப் போறோம். நேத்தே இந்த சந்திப்பை ஏற்பாடு
செஞ்சாச்சு.நம்ம இணைய நண்பர்கள் சந்திப்புலே அவுங்களுக்குக் கலந்துக்க முடியாமப் போச்சு! வெளியூருக்குப்
போயிருந்தாங்க!

ஒருதடவை, 'திண்ணை'யிலே 'உக்காந்து' படிச்சுக்கிட்டு இருந்தப்பத் தற்செயலா அவுங்களோட கட்டுரை ஒண்ணைப்
படிச்சேன். எனக்கு ரொம்பவெ பிடிச்சுப் போச்சு. அப்புறம் அவுங்க எழுதுன தொடர் முழுசும் தேடிப் பிடிச்சுப்
படிச்சது முதலெ அவுங்களொட 'விசிறி' யாகிட்டேன். எங்களைப் பகல் சாப்பாட்டுக்கே வரச்சொல்லிடாங்க!!( மதி
கவனிக்க!) நாந்தான், மகளோட ப்ளான் என்னன்னு தெரியாம 'கமிட்' செஞ்சுக்க வேணாமுன்னு, சாப்பாடெல்லாம்
வேணாங்க, நாங்க ஒரு ரெண்டு மணிபோல வரோமுன்னு சொல்லிட்டேன்.

இன்னைக்குன்னு பார்த்து மகள் வெளியே கிளம்பத் தயாராகவே நேரமாயிருச்சு. நேத்து ராத்திரி முஸ்தாஃபாவுக்கு
ஷாப்பிங் போயிட்டு லேட்டாத்தான் வந்தா! பக்கத்து பில்டிங்லேதான் நாம் தங்கியிருந்தோம் என்றதாலே பிரச்சனை
இல்லே! சிராங்கூன் ரோடுலே இருக்கற வீரமா காளியம்மன் கோயிலுக்குப் பக்கத்துலே இருக்கற மதிள் சுவரை ஒட்டி
இருந்த இடத்துலே ஒரு ச்சின்னக் கூட்டம் இருந்துச்சு! என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்காட்டா, எனக்குத் தலை
வெடிச்சுடாதா? அதுலே நுழைஞ்சு பார்த்தேன். பங்குனி உத்திரம் ஆச்சே! வேண்டுதல் போல! ஒருத்தருக்கு
அலகு குத்திக்கிட்டு இருந்தங்க! நெத்தியிலே ச்சின்னக் கம்பியாலே குத்தியிருந்த தங்கக்கொடி வெய்யிலிலே மின்னுது!
கொஞ்சம் தடியான கம்பிங்களை அவரோட உடம்புலே குத்தி ஏத்திக்கிட்டு இருக்காங்க. ரொம்ப வலிக்குமோ?அவரோ
ரெண்டு பக்கத்திலேயும் அவரைத்தாங்கிப் பிடிச்சுக்கிட்டு இருந்தவங்க தோளிலே கைகளைப் போட்டுக்கிட்டு ஒருவித
மயக்க நிலையிலே இருக்கறவர்போல நிக்கறார்!

என் மகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! அவ தன்னை ஒரு atheist ன்னு சொல்லிக்குவா.நானும் அதைப்
பத்தி ஒண்ணும் சொல்றது இல்லை! 'கடவுள்'னு ஒரு விஷயம் இருக்கறதை அவுங்கவுங்க உணரணும். எதுவுமே
ஒரு நம்பிக்கைதான்! ஒரு கல்லையும் 'நம்புனாத்தான் அது தெய்வம். இல்லேன்னா அது வெறும் கல்தான்! ச்சின்ன
வயசு ஆளுங்களுக்கு நாஸ்திக உணர்வு வர்றது சகஜம்தான். நாளாக ஆக அவுங்களுக்குள்ளெ ஒரு மாற்றம் வந்து
கடவுள் என்ற சக்தியை உணருவாங்க. அதுக்குன்னு ஒரு நேரம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு!
தானாக் கனியற கனியை எதுக்குத் தடியாலெ அடிச்சுக் கனிய வைக்கணும்?

சில சமயம், இதைப் பத்தி பேச்சு வர்றப்ப, 'நீங்க சொல்ற சாமி, உங்களுக்குத்தான் நல்லது செய்யுது. எனக்கு ஒண்ணுமே
செய்யறதில்லை'ன்னு ச்சின்னப்பிள்ளைத்தனமாச் சொல்வா.இப்படிப் பட்டவளுக்கு, அங்கே நடந்துக்கிட்டு இருந்த சம்பிரதாயமான
வழிபாடு முறைகள் எரிச்சலையும், கோபத்தையும் உண்டுபண்ணிச்சு! வெய்யிலோ ச்சுள்ளுன்னு அடிக்குது. நேரம் 11 மணியைத்
தாண்டிடுச்சு! வெய்யிலிலே நிக்கற எல்லோருக்கும் குடிதண்ணீர் பாட்டிலை ஒரு அம்மா கொண்டுவந்து விநியோகம்
செஞ்சாங்க. நிறைய மயிலிறகுகளுடன் அலங்கரிச்ச ஒரு பீடத்துக்கு முன்னே பலவகை நிறங்களிலே உணவுப்
பொருட்களை வச்சுப் படைச்சிருந்தாங்க! அதும்மேலே ஈ மொய்க்காம இருக்க ப்ளாஸ்டிக் ஷீட் போட்டு வச்சிருந்தாங்க. இது எனக்கு
ரொம்பப் பிடிச்சது! ப்ளாஸ்டிக் கெடுதல்தான். ஆனா சாப்பிடற சாமான்லே ஈ வந்து உக்காந்தா அதைவிடக் கெடுதலாச்சே!

அதுக்கப்பறமும் மகள் அங்கே பொறுமையா நிக்க மாட்டானு இருந்த நிலையாலெ நாங்க அங்கிருந்து நகர்ந்துட்டோம்!
காலையிலே இருந்து இன்னும் ஒண்ணும் சாப்பிடலை. இனித் தாங்காதுன்னு எதுத்தாப்புலே இருந்த 'கோமளவிலாஸ்'
போனோம். கீழே ஒரே கூட்டம். லீவு நாளாச்சே! அதனாலே மேலே இருந்த 'டைனிங் ஹால்'க்கு போயிட்டோம்.

சாப்பாடே ரெடியா இருக்குன்னு தெரிஞ்சது. நானும் ரெண்டுநாளா என்னென்னவோ விழுங்கிக்கிட்டு இருக்கேன்.
சோறில்லைன்னா சரிப்படாதுன்னு எனக்குச் சாப்பாடே சொல்லிட்டேன். மகளுக்கு வேணாமாம். அவ ஒரு
பரோட்டாப் பிரியை'! கூடவே வடையையும் சொல்லிட்டோம். எனக்கு வடை பாயசத்தோட சாப்பாடு!!!!
திருப்தியாச் சாப்பிட்டு, கூடவே நல்ல ஸ்ட்ராங்கான ஃபில்டர் காஃபியும் குடிச்சுட்டுக் கிளம்பினோம். அப்ப நம்ம
நண்பர் முத்து( சப்ளையர்) வந்து, 'என்னங்க, ப்ரேக்ஃபாஸ்ட்க்கு வரலையேன்னு பார்த்தேன்'னாரு. இன்னைக்கு
'ப்ரேக்ஃபாஸ்ட்க்கு லீவு விட்டாச்சு'ன்னு சொன்னேன்!!!

அங்கே இங்கேன்னு கொஞ்சம் சுத்திட்டு, சித்ராவோட வீட்டுக்குக் கிளம்பிட்டோம். நம்ம டாக்ஸி ட்ரைவர் அந்தப் பக்கம்
இதுவரை போனதில்லையாம்.நான் சொன்னேன், 'ஒரு டாக்ஸி ட்ரைவருக்கு எந்தெந்த ஏரியா எங்கே வருதுன்ற ஒரு விவரம்
கட்டாயம் தெரிஞ்சிருக்கணுமே'ன்னு. இதே போலத்தான் இன்னும் சிலபேரு சில இடங்களுக்கு நாம போறப்பச்
சொல்லிக்கிட்டு இருந்தாங்க!!!! ஒருவழியாக் கண்டுபிடிச்சுப் போய்ச் சேர்ந்தோம். அங்கெ நமக்காக 'ஃபில்டர்
காஃபி' காத்துக்கிட்டு இருந்தாரு!!!!! அட!!! நம்ம எம்.கே.குமார் தம்பி!!!!

சித்ரா, ரொம்ப நாளாப் பழகுன ஒரு ஃபிரெண்டுபோல இருந்தாங்க!!! கலகலப்பாப் பேசுனாங்க. எங்களுக்காகக்
காத்துக்கிட்டு இருக்காங்க சாப்புடாம!!!! குமாரும், ரமேஷும், பிள்ளைங்களும் சாப்ட்டாச்சு. உங்களுக்குத்தான்
வெயிட் பண்றென்.வாங்க சாப்பிடலாமுன்னு தட்டெல்லாம் ரெடியா எடுத்து வச்சிருக்காங்க! எனக்கு ஒரே குற்ற
உணர்வாப் போச்சு! 'ஏங்க, நாங்கதான் சாப்பாட்டுக்கப்புறம் வரோம்'னு சொல்லியிருந்தோமேன்னு கொஞ்சம்
அசடு வழிஞ்சேன். எங்களுக்குச் சக்கரைப் பொங்கலும், மசால்வடையும் கொடுத்தாங்க. தென்னிந்தியச் சாப்பாடுதான்,
கூட்டு, கறி, சாம்பாருன்னு வச்சிருந்தேன்னு சொல்லிக்கிட்டே அவுங்க சாப்பிட்டு முடிச்சாங்க!( அடுத்தமுறை கூப்பிட்டா
ரொம்ப பிகு பண்ணிக்காம போயிரணும்!!!!)

குமாருக்கு 'ட்வைலைட் ஷிஃப்ட்'ன்றதாலெ கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்துட்டுக் கிளம்பிப் போனார். அப்ப அங்கே
எனக்கொரு ·போன் வருது! யாருன்னு பார்த்தா நம்ம ரமேஷ்( மனஸாஜென்)!!! அக்கா அக்கான்னு பிரியமாப்
பேசுனார். வீட்டுக்கு வரலையேன்னு ஆதங்கமாக் கேட்டார். அவுங்க வீட்டம்மாவுக்கு இப்ப டெலிவரி டைம்! மழை
பெய்யற நேரமும், குழந்தை பெத்துக்கற நேரமும் மஹாதேவனுக்குத்( இவர் சாமிங்க... கடவுள்!!!)தான் தெரியுமுன்னு
ஒரு பழஞ்சொல் இருக்கே! 'நல்லபடியா குழந்தை பிறக்கட்டும். நல்லா இருங்க. நான் அடுத்தமுறை கட்டாயமா
உங்க வீட்டுக்கு வாரேன்'ன்னு சொன்னேன். இந்தமாதிரி பிரியமான ஆட்களோட பழகற வாய்ப்புக் கிடைச்சது ஒரு
அதிர்ஷ்டம்தானே!!!! இந்த நட்பு வட்டத்தைக் கொடுத்த இணையத்துக்கும், எல்லாத் தமிழ் வலைப்பதிவாளர்களையும்
தன்னுடைய தமிழ்மணத்தாலே கட்டிப்போட்ட நம்ம காசிக்கும் எப்படி நன்றி சொல்றது?

ரமேஷ¤ம், சித்ராவும் செம ஜாலியான ஆளுங்க.ஒரு விதத்துலே நானும், கோபாலும் போலவே! இதைநான் அங்கேயே
உணர்ந்தேன்.திரும்பி வர்ற வழியிலே மகளும் அதையே சொன்னாள்,'தே ஆர் ஜஸ்ட் லைக் யூ அண்ட் டாட்'!!!!
நல்லாச் 'சிரிச்சுப் பேசி, பேசிச் சிரிச்சு'ன்னு நேரம் போச்சு!!!!

'நாளைக்கு இதே நேரம் ஏர்ப்போர்ட்டுக்குப் போகணும். எண்ணி 25 மணி நேரம்தான் இருக்கு. இன்னும் ஏதாவது
வாங்கிக்கணுமுன்னா, ரொம்ப யோசனை செய்யாம வாங்கிக்கோ'ன்னு மககிட்டே சொல்லிக்கிட்டேத் திரும்பி வந்தோம்.
ரொம்பவே பார்த்துப் பார்த்து செலக்ட் செய்யற ஆளாச்சே!!! நானும்கூட ஏதாவது வாங்கறதா இருந்தா.... மறக்காம
வாங்கிக்கணும்.

எட்டுமணிவாக்குலே மறுபடி ஒரு நடை, நம்ம சிராங்கூன் ரோடுலே! வழியெல்லாம் ஒரே சினிமாப்பாட்டு முழங்குது!
தமிழ், ஹிந்தி, தமிழ்ன்னு மாறி மாறி!!! இதே தெருவிலே காலையிலே கடைங்க திறக்கறப்ப வந்தா, ஒரே பக்தி மயம்!!!
கடைக்குக்கடை சாமிப் பாட்டு! அவுங்கவுங்க மதம் சார்ந்த பாட்டுங்க!!!! கேக்க நல்லாத்தான் இருக்கு ஆனா, சத்தம்
ரொம்பவே ஜாஸ்தி!!!! கொஞ்சம் மெதுவா வைச்சா இன்னும் நல்லா இருக்கும்!!! நாமோ சிலநாள் விருந்தாளிங்க.
ஆனா அங்கே கடைங்களிலே வேலை செய்யறவங்களுக்குச் சீக்கிரமே காது.... போயிரும்(-

ஒரு விசிடிக் கடைக்குள்ளே நுழைஞ்சோம். பழைய படங்கள் எல்லாம் புதுசா வந்திருக்குன்னு சொன்னாங்க!நாங்க
தமிழ்நாட்டைவிட்டு முப்பத்திரெண்டு வருசமாகுது. இப்ப நாலுவருசமா நாமே வீடியோ க்ளப் வச்சிருக்கறதாலே
எல்லா(!)சினிமாவையும் நல்லது, பரவாயில்லை, குப்பைன்னு ஒண்ணுவிடாம பாக்கக் கிடைச்சிருது.நடுவுலே
28 வருசமாப் பாக்கணுமுன்னு ஆசைப்பட்டு, விட்டுப் போன படங்களையெல்லாம் சந்தர்ப்பம் வாய்க்கறப்ப வாங்கிப்
பாத்துறணும்,இல்லையா? அதுவும் 'கமல்' படமுன்னா மகளும் பார்ப்பாள்! அப்படியே அந்த ஷெல்பைப் பார்த்துக்கிட்டு
இருக்கேன், ஆஆஆ.... கிடைச்சிருச்சு! நிழல் நிஜமாகிறது! இந்தப் படத்தைத்தான் 1978லே கோபால் ஜாம்ஷெட்பூர்
போயிருந்தப்ப அங்கே தமிழ்ச் சங்க விழாவுலே போட்டாங்கன்னு பார்த்துட்டு வந்தார். என்னை விட்டுட்டு எப்படிப்
படம் பார்க்கப் போச்சுன்னு அநியாயத்துக்கு அப்பச் சண்டை போட்டேன்!

நான் ஞாபக சக்தியிலே யானை மாதிரி! மறக்கவே மாட்டேன். அதுவும் கெட்ட விஷயம், என்னைப் பாதிச்சதுன்னா
அவ்வளோதான்!

அந்தக் கடைக்காரரும், 'இந்தப் படத்துலேதானெ இலக்கணம் மாறுதோ பாட்டு வருது?'ன்னதுக்குப் பாடியே காமிச்சார்.
நல்ல குரல்வளம். அருமையாப் பாடினார். அங்கெ இருந்த கடைக்காரப் பொண்ணும் பாடுனாங்க. அவுங்க குரலும்
நல்லா இருந்துச்சு. அதைவிட அவுங்களோட ஞாபக சக்தி... அடடா... இந்த வருசம், இவரோட டைரக்ஷன்னு
அப்படின்னு கோடி காட்டுனவுடனே படங்க பேருங்களை அப்படியே கடகடன்னு ஒப்பிக்கறாங்க! அடேயப்பா....

நானும் கூடவே சேர்ந்து பாடிக்கிட்டு, ரெண்டே ரெண்டு படங்கள் வாங்குனேன். மற்றது 'நிழல்கள்'






Wednesday, April 06, 2005

இளமையும் முதுமையும்!!!

ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் தொடர்ச்சி. பாகம் 7.

"பாட்டிக்கு இங்கிலீஷ் தெரியாது. அதுவும் உன் கிவி ஆக்ஸென்ட் சுத்தமாப் புரியாது. அதனாலே அவுங்க
ஏதானும் கேட்டா, நீ தமிழிலே பதில் சொல்லணும். சரியா?"

" ஐ வில் ட்ரை"



வழக்கமா வெளிநாடுகளில் இருக்கற முக்காவாசிக் குடும்பங்களிலே இந்த கதிதான்! எங்க வீட்டிலும் டிட்டோ!!
நான் லோலோன்னு தமிழிலே கத்திக்கிட்டு இருப்பேன். பதிலுங்க மட்டும் இங்கிலீஷ்லே வரும். காலப் போக்கிலே
இது ரொம்பவே பழகிட்டதாலே வித்தியாசமாவே உணரலை நாங்க! இதையும் நான் கண்டுபிடிச்சது இன்னொருத்தர்
சுட்டிக் காமிச்ச பிறகுதான்.

மறைந்த எழுத்தாளர் மணியன் அவர்கள் நியூஸிலாந்து பயணக்கதைக்காக இங்கே வந்திருந்தபோது நம்ம வீட்டுலே
தங்கியிருந்தார்.( அப்பப்ப சமயம் கிடைக்கறப்ப பெருமையாச் சொல்லிக்கறதுதான்!எழுத்தாளர்களோட தொடர்பு அப்பவே இருந்துச்சுன்னு!) அவரை இங்கே சில இடங்களுக்கு
நான் கொண்டு போனேன். மகளுக்கு அப்ப அஞ்சு வயசுதான். இங்கே 16 வயசுக்குட்பட்டக் குழந்தைகளைத்
தனியாக வீட்டில் விட்டுட்டுப் போகக்கூடாது. பேபி சிட்டர் வைக்கணும். அதுக்குச் செலவழிக்க மாட்டாமதான்
நான் எங்கே போனாலும் மகளையும் கூடக் கொண்டு போவேன். (மேலும் குழந்தையைக் கவனிக்கணும் என்ற
ஒரே காரணத்துக்காக வெளிவேலைக்குப் போக மறுத்தவ நானு!) அப்பத்தான் ஒரு நாளு மணியன் கேட்டார்,
'நீங்க தமிழிலேயே பேசறீங்க. உங்க பொண்ணு இங்கிலீஷ்லேயே பதில் சொல்றாளே'ன்னு. அட! அப்பத்தான்
உறைக்குது என்ன நடக்குதுன்னு! குறைந்த பட்சம் நாம பேசறது புரியுதேன்னு மனசைச் சமாதானப் படுத்திக்கிட்டது
வேற விஷயம்!!!

தாத்தா, பாட்டிக்கு நாலுவருசத்துக்கு முன்னே 'சதாபிஷேகம்' நடந்தது. பத்திரிக்கை அனுப்பியிருந்தும், சில காரணத்தாலே
போகமுடியலை! அதுக்கு அப்புறமும் சிலமுறை சிங்கை போனப்பவும் அவுங்களைச் சந்திக்கற சந்தர்ப்பம் அமையலை.
இந்த முறை பழைய நட்புகளைப் புதுப்பிக்கறதும் நம்ம ஹாலிடே அஜண்டாவுலே இருந்துச்சு! அவுங்க, ஊருலெ இருக்கணுமேன்னு
வேண்டிக்கிட்டு ஃபோனைப் போட்டேன்.'அம்மா' இருக்காங்களான்னு கேட்டதும், நீங்க யாருன்னு கேட்டாங்க ஃபோனை
எடுத்தவங்க. நான் துளசின்னு சொன்ன மறுவினாடியே, அம்மா லைன்லே வந்துட்டாங்க.' ஏம்மா துளசி.நியூஸிலாந்திலேருந்து
எப்பம்மா வந்தே? வேணுகோபால் வந்திருக்காரா? அலமு எப்படி இருக்கா?'ன்னு மடமடன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க!
என் மகளொட ஜாதகப் பேரு அலர்மேல் மங்கை. அதைத்தான் சுருக்கி அலமுன்னு கூப்பிடுவாங்க அவுங்க!!

'நீங்க இப்ப வீட்டுலே ஃப்ரீயா இருந்தா வரேன்'னு சொன்னேன். அதென்ன, அம்மா வீட்டுக்கு வர்றதுக்கு
ஃப்ரீயான்னு கேக்கறே'ன்னு பிடிச்சுட்டாங்க ஒரு பிடி! இது,இது, இதுதான் எனக்கு அவுங்ககிட்டே பிடிச்சது. எனக்கு
ஒரு தாய் போல இருக்கறது. அந்த மாறாத அன்பு!

வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். எதிர்பார்த்துக்கிட்டே வெளியே நிக்கறாரு ஐயா! அம்மா, ஒரு 'பாய்'லே உக்கார்ந்துக்
கிட்டு இருக்காங்க. எங்களைப்பார்த்ததும், முகத்திலே அப்படி ஒரு சிரிப்பு! சிலதைத்தவிர பல்லெல்லாம் கொட்டியிருக்கு!
இப்பெல்லாம் எழுந்து நடமாடவே முடியறதில்லையாம். வீட்டு வேலைக்கு ஒரு பொண்ணை ஊருலேயிருந்து
கொண்டு வந்திருக்காக. இடுப்பு எலும்பு ஒரேடியாத் தேய்ஞ்சு போச்சாம். ஆபரேஷன் பண்ணிக்க வேண்டிய
வயசுலே, அதைச் செஞ்சுக்காம தள்ளிப் போட்டதுக்கு இதுதான் பலன்! இப்ப ரொம்பவே வயசாச்சு. இனிமே
ஒண்ணும் செய்யமுடியாதுன்னு ஆகிருச்சு நிலமை!

ஐயா, எம்பத்திநாலு வயசுக்குப் பரவாயில்லே. தளர்ந்துட்டாரு. ஆனாலும் நடக்கக் கொள்ள கஷ்டம் இல்லை!
அம்மாதான் பாவம்! எப்படி இருந்த உடம்பு! எவ்வளவு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வாங்க.ஓய்வுன்னு
உக்காந்து நான் பார்த்ததில்லை! ஒருநாளைக்கு நூறுதடவை மாடியேறின காலுங்க இப்ப உக்காந்த இடத்துலே!
முதுமையை நினைச்சு மனசுக்குள்ளே அப்பப்ப வந்து போற பயம் இப்பவும் வந்துச்சு! கொஞ்சம் ஸ்ட்ராங்கா!

கணீரென்ற குரல் மட்டும் அப்படியே இருக்கு! இப்பெல்லாம் கோயில் குளமுன்னு போறதும் நின்னுருச்சாம். போன
முறை, கோயிலிலே நம்ம கணேசன் பார்த்துட்டுச் சொன்னாராம், நான் வந்து போனேன்னு! 'என்னடா, அம்மாவுக்கு
ஒரு ஃபோன்கூடப் போடலையெ'ன்னு நினைச்சுக்கிட்டாங்களாம். எனக்கே என் செய்கையை நினைச்சு வெக்கமாயிருச்சு!
மனுஷ வாழ்க்கையிலே அன்பா நாலு வார்த்தை பேசறது எவ்வளவு எளிமையான காரியம்! காசா, பணமா?

அப்பத்தான் சொன்னேன், அவுங்க ஃபோன் நம்பர் மாறுனதை நான் எழுதிவச்சுக்க தவறிட்டேன்னு. இப்பவும்,
நேத்து கணேசன் வீட்டுக்கு விசிட் செஞ்சப்பத்தான் இவுங்க நம்பரைக் கேட்டு எழுதிக்கிட்டு வந்தேன்னு! அம்மாவுக்கு
அதைக் கேட்டதும் திருப்தியா இருந்துச்சுன்னு சொல்லுச்சு அவுங்க முகம்!!!!

கணேசனுக்குப் பையன் பிறந்திருக்கறது தெரியுமான்னு கேட்டாங்க.இமெயில் வந்த விவரம் சொன்னேன். இப்ப
ஆறுவாரம் ஆச்சு பையனுக்கு. நேத்துப் போய்ப் பார்த்தேன். அச்சு அசலா அவன் அப்பா மாதிரியே இருக்கான்.
எப்படியோ, ஒவ்வொருமுறை இங்கே வர்றப்பையும் கணேசனைத் தவறாமப் பார்க்கறதுக்கு அமைஞ்சிருது'ன்னும்
சொன்னேன்.

நாங்க இருந்த கொஞ்ச நேரத்துலே வீட்டுக்கு உதவியா இருந்த லட்சுமியை உக்காந்த இடத்துலே இருந்தே ஓடஓட
விரட்டிக்கிட்டு இருந்தாங்க!!!! மரத்துலே இருந்து நெல்லிக்காயைப் பறிச்சுக்கிட்டு வந்து அலமுக்குத் தா!
தோட்டத்துலே இருந்து பூவெல்லாம் பறிச்சுச் சீக்கிரமாத் தொடுத்து துளசிக்குக் கொடு, திங்கறதுக்கு பக்கோடா போடுன்னு
ஏகப்பட்ட விரட்டல்!!!

நான் சொன்னேன், 'அம்மா, எனக்கும் வயசாகிகிட்டு வரலையா? இப்பெல்லாம் எண்ணெய்ப் பண்டம் ரொம்ப(!)
சாப்பிடறது இல்லே. வெறும் டீ மட்டும் போதும்'னு. அதுக்குள்ளே அப்பம், முறுக்கு எல்லாம் தட்டுலே வந்துருச்சு!
மககிட்டே கேட்ட கேள்விக்கெல்லாம், தமிழிலேயே அழகாப் பதில் சொல்லிக்கிட்டு இருந்ததை, நான் கவனிக்காத
மாதிரி கவனிச்சுக்கிட்டு இருந்தேன். எனக்கு ரொம்ப மனசுக்குச் சந்தோஷமா இருந்துச்சு!

சதாபிஷேக ஃபோட்டோக்கள் இருக்கற ஆல்பத்தைக் கொண்டுவந்து கொடுக்கச் சொன்னாங்க! மகளும் என்கூடச்
சேர்ந்து எல்லாப் படங்களையும் பொறுமையாப் பார்த்தா. அவுங்க பேத்தி கட்டிக்கிட்டு இருக்கற நீலக் கலர் புடவை
மாதிரி தனக்கும் இருக்கறதைச் சொன்னா.'நீயும் என் பேத்திதானே! அதான் உனக்கும் அதேமாதிரி புடவை
அமைஞ்சிருக்கு'ன்னு அம்மா சொன்னாங்க!

சந்தடி சாக்குலே நானும், மககிட்டே இந்த 'சதாபிஷேகம், அறுபதாங்கல்யாணம்'இதைப் பத்தியெல்லாம் சொல்லி,
இதை நடத்தறது புள்ளைங்களொட பொறுப்பு. நம்ம வீட்டுலே ஆணாயும் பொண்ணாயும் இவ மட்டுமே இருக்கறதாலே
இதை நடத்தறது இவ பொறுப்புத்தானு நைஸாச் சொல்லிவச்சேன்! பாட்டியும் அதை ஆமோதிச்சுச் சொன்னாங்க.

அறுவதுக்கு இன்னும் காலம் இருக்கேம்மான்னு அம்மா சொன்னப்ப, நான்'அறுவது வரைக்கும் இருப்போமான்னு
தெரியலைமா. அதுக்குப் பொறுமையும் இல்லை. அதாலே அம்பத்துநாலு செஞ்சுக்கிட்டா என்னன்னு யோசனையா
இருக்கு'ன்னு சொல்லி அர்த்தத்தோட மகளைப் பார்த்தேன்.-)))))

பாட்டிக்கு ஞாபக சக்தி அபாரம்!!!! சதாபிஷேக ஃபோட்டொண்ணு எனக்கு அனுப்பியிருந்தாங்கல்லே அது எதுன்னு
கூடச் சரியாச் சொன்னாங்க!!! பழங்கதைகளைப் பேசிக்கிட்டு இருந்ததுலே நேரம் போனதே தெரியலை. மகளும்
தாத்தா, பாட்டியோட பேச்சுலே கலந்துக்கிட்டா. தாத்தாகிட்டே மட்டும் இங்கிலீஷூ!!!!

ராத்திரிக்குச் சப்பாத்திப் போடச் சொல்றென். சாப்பிட்டுட்டுத்தான் போகணுமுன்னு சொன்னப்ப, (பாவம் லட்சுமி.
வேலைச் சுமையை அதிகரிக்கக்கூடாதுன்னு) இப்ப அவுங்களையெல்லாம் பார்த்துப் பேசுனதிலேயே மனசு நிறைஞ்சுடுச்சு.
பசியே இல்லை. அடுத்தமுறை சாப்பிடறேன்னு சொல்லி, அவுங்க கிட்டே ஆசீர்வாதம் வாங்கிகிட்டுக் கிளம்புனோம்.
நான் சொல்லாமலேயே, தாத்தா பாட்டி காலுலே விழுந்து மகள் ஆசீர்வாதம் வாங்குனதுலே எனக்கு மனசும், கண்ணும்
நிறைஞ்சுடுச்சு! ( சபாஷ்! மகளை சரியாத்தான் வளர்த்திருக்கே!'ன்னு என் மனசு குதிக்குது!!!)

கிளம்பினப்ப, அடுத்தமுறை பார்க்க முடியுமோன்னு கலக்கமா இருந்துச்சு. ஆண்டவன் போட்ட கணக்கு யாருக்குத்
தெரியும்? அதுவரை, உடம்பை ரொம்பப் படுத்தாம இருக்கணுமுன்னு கடவுளை மனசுக்குள்ளே வேண்டிக்கிட்டேன்.

திரும்பி செரங்கூன் ரோடு வந்து, ராச்சாப்பாட்டுக்கு, 'ஆனந்தபவன்' போனோம். மகள் மட்டும் பானிப்பூரி,
ரோஸ்மில்க், பரோட்டான்னு சாப்பிட்டா. நானு, அங்கெ கல்லாவுல இருந்தவுங்க பேச்சைக்கேட்டு அன்றைய
ஸ்பெஷலான 'மஹாராஜா மசாலா'வை கொண்டுவரச் சொன்னேன். 'யக்... நல்லாவே இல்லை! மகளுக்கு
இருக்கற புத்திச்சாலித்தனம் தாய்க்கு இல்லையேன்னு ஒரு பெருமிதத்தோட உண்மையை ஒத்துக்கிட்டு
( மனசுக்குள்ளேதான்)வெளியே வந்து ஒரு இளநியைக் குடிச்சுக்கிட்டே தங்கற இடத்துக்கு வந்து சேர்ந்தோம்.






Tuesday, April 05, 2005

மலேசிய மண்!!!

ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் தொடர்ச்சி. பாகம் 6.


தமிழ்ப் பத்திரிக்கை விக்கற ஃப்ளாட்பாரம் கடைகள் ஒண்ணுவிடாமே கேட்டாச்சு, 'அவள்
விகடன்' இருக்கான்னு? எங்கேயுமே கிடைக்கலை. புதுசு நாளைக்கு வருமாம். எனக்கெதுக்கு?
இந்த இதழ்தான் வேணும். நம்ம 'உஷா'வோட கட்டுரையை நொறுக்கி ( சுருக்கி) போட்டுட்டாங்கன்னு
அவுங்க வருத்தத்தோட எழுதியிருந்தாங்க. நான்' இதழை வாங்கிப் பார்த்துட்டு பதில் போடறேன்னு,
ஜம்பமா பதில் எழுதியிருந்தேனே! கிடைக்கவேயில்லை!ஹூம்...( அப்புறம், திரும்பிவந்த பிறகு
இணையத்துலேதான் பார்க்க முடிஞ்சது. அவுங்க ஃபோட்டோ அட்டகாசமா இருந்தது. எண்ணி நாலே
நாலு வரிதான் அவுங்க பங்கு கட்டுரை!!!!!)


இதுக்கு நடுவிலே இங்கேயிருந்து 'ரிப்பேர்' செய்யக் கொண்டு போயிருந்த ஒரு சில தங்க நகைகளைப்
பழுது பார்த்துக்கிட்டு, அப்படியே சில நகைகளையும் புதுசா வாங்கியாச்சு! லிட்டில் இந்தியா முழுக்கக்
கண்ணைப் பறிக்கிற விதமா, 'வா, வா'ன்னு கூப்பிடற நகைக் கடைங்களை ஒரேடியா அலட்சியப்படுத்த
முடியுமா?

இங்கே நாம இருக்கற ஊருலேயும் நகைக்கடைகள் இருக்குதான். ஆனா யாருக்கு வேணும் இவுங்க விக்கற
ஒம்போது காரட்? அப்பப்ப 'அப் டு 50% ஆஃப்'ன்னு விளம்பரம் வந்து இம்சை செய்யும்! தங்கம் அரை
விலைன்றது கேக்க எவ்வளவு நல்லா இருக்கு? டிஸைன்களும் சூப்பரா இருக்கும். எடை போட்டு இத்தனை
கிராம், இத்தனை காசுன்ற கதை இல்லைதான். ஒரு பீஸ் இந்த விலை. இப்ப உங்களுக்காகவே அரை விலை!!!
எல்லாஞ்சரி! ஆனா இந்த ஒம்போதுன்றதுதான் உதைக்குது! வாங்கிப் போட்டு அனுபவிக்கலாம். பின்னாலே
விக்கணுமுன்னு நினைச்சா அம்பேல்!!!! நகைன்றது ஒரு கஷ்ட நஷ்டத்துக்கு உதவுற சேமிப்புன்னு சொல்லியே
வளர்க்கப்பட்ட நம்மாலே துணிஞ்சு இந்த ஒம்பது காரட்டை வாங்க முடியலையே!

உண்மையைச் சொன்னா, நான் இங்கே நியூஸியிலே ரொம்ப மிஸ் செய்யறது, நம்ம கோயில்களையும், நகைக்
கடைகளையும்தான். போனாப் போட்டும்னு புடவைக் கடைகளையும் சேத்துக்கலாம்!!! சிங்கையைவிட மலேசியாவுலே
ரொம்பவே விலை மலிவுன்னு, நம்ம மலேசிய நண்பர்கள் சொன்னதை நினைவு வச்சுக்கிட்டு, ஒரு நாள் ஜொஹூர்
பாரு' போயிட்டு வரலாமுன்னு கிளம்புனோம்.

நமக்கோ நேரம் நிறைய இருக்கு! ஹாலிடேலேதானே இருக்கோம். அதனாலே பஸ்ஸுலேயே போகலாமுன்னு
பஸ் எக்ஸ்சேஞ்சுக்குப் போனோம். டாக்ஸிக்கு 5 வெள்ளீ ஆச்சு. எதுக்குச் சொல்றேன்னா, எங்க ரெண்டு பேருக்கும்
ஜோஹூர்பாரு போகவே பஸ் கூலி 4.80தான்! இது எப்படி இருக்கு!!!!!

வழியெல்லாம் வேடிக்கை ஒண்ணுமில்லே.நல்ல அகலமான ரோடுங்களும், பறக்கற வண்டிகளும்தான்! ஒரு இடத்துலே
எல்லா பஸ்ஸுகளும் நெருக்கி அடிச்சு வரிசையா நிக்குது. நகர இடம் இல்லே.இஞ்சு இஞ்ச்சா நகருது. சில பேரு
கீழே இறங்கி நடக்கறாங்க. நாங்க முதல்முறையா இப்படிப் போறதாலே பொறுமை காக்கறது நல்லதுன்னு இருந்தோம்.
ரெண்டு வருசத்துக்கு முன்னே நான் ஒரு மலேசிய நண்பரோடு கோலாலம்பூர் போயிருந்தேன். அப்பவும் பஸ்தான்.
'நைஸ் ட்ரான்ஸ்போர்ட்' பேருக்கேத்தமாதிரியே நல்ல அருமையான வசதியான பஸ்!!! அஞ்சுமணி நேரப் பயணம்
அலுக்காத விதமா, அப்பப்ப தின்பண்டங்கள். காஃபி, டீ, ன்னு கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. மேலும் ஹைவேயின்
ரெண்டு பக்கமும் நல்ல இயற்கைக் காட்சிகள் கண்ணுக்கு விருந்தா இருந்துச்சு! இப்ப வெறும் நாப்பது நிமிஷப்
பயணத்துக்கு இதெல்லாம் இல்லைன்னு பினாத்தறது கொஞ்சம் ஓவர்,இல்லே? அதுவும் 2.40 கொடுத்துட்டு?

பஸ் நின்னதும் நமக்கு முன்னாலெ இறங்கி ஓடுன ஜனங்களைப் பார்த்துட்டு அப்படியே 'காப்பி' அடிச்சோம்.
சிங்கப்பூரை விட்டுப் போயிட்டோமுன்னு பாஸ்போர்ட்லே 'ஸ்டாம்பு' அடிச்சுக் கொடுத்தாங்க! அடுத்து எங்கே
போகணும்? 'ஃபாலோ த பிக் க்ரூப்'ன்னு போனோமா, வெளியே படி இறங்கிப் போனா நிறைய மஞ்ச பஸ்ஸுங்க
நிக்குது. எல்லாரும் ஓடி ஓடி ஏறிக்கிட்டாங்க. நாம வந்த வண்டியிலே இருந்த 'ட்ரைவர்'முகத்தை ஞாபகப்படுத்திப்
பார்க்கறேன். அதுக்குள்ளெ புறப்படத்தயாரா இருந்த இன்னொரு மஞ்ச பஸ் ட்ரைவர் 'இதுலே ஏறுங்கன்னு'ன்னு
தமிழிலே சொன்னார். என்னோட திகைச்ச பார்வையைப் பார்த்துட்டு, 2.40 டிக்கெட்தானேன்னார். தலையை
ஆட்டினதுக்கு, இதுலேயும் ஏறலாம் வாங்க'ன்னார்.சரின்னு ஏறிக்கிட்டோம். நிக்கறதுக்குத்தான் இடம் இருந்தது!
எவ்வளவுதூரம் இப்படி நிக்கணுமோன்னு நினைச்சு முடிக்கறதுக்குள்ளே பஸ் நின்னு, எல்லோரும் இறங்க ஆரம்பிச்சாச்சு!
மறுபடி ஒரு 'காப்பி'!

இமிகிரேஷன் அட்டைங்க எங்கே இருக்குன்னு தெரியலை. கவுண்டரில் இருந்தவர்கிட்டேயெ கேட்டு, வாங்கிப்
பூர்த்தி செஞ்சு கொடுத்துட்டு வெளியே வந்தோம்.மலேசிய மண்ணுலே கால் பதிச்சாச்சு! மறுபடி மஞ்ச பஸ் சவாரி
பஸ் ஸ்டாண்டுவரை இருக்குமுன்னு பார்த்தா,அப்படி ஒண்ணுமே இல்லை! அதுதான் பஸ் ஸ்டாண்டு போல.
ரோடுக்கு அடுத்த பக்கம் ரெண்டு மஞ்ச பஸ்கள் காலியா நிக்குது!!!!

ரொம்பத் தெரிஞ்சமாதிரி, அப்படியே நடக்க ஆரம்பிச்சோம். ஒரு வளைவுலே ஒரு கோபுரம் தென்பட்டது! அதை
நோக்கிப் போனோம். அங்கே ஒரு பெரிய ரோடு இருக்கு. அதைக் கடந்தாக் கோயில். ஆனா பாதசாரிகள்
கடக்க வழி ஒண்ணும் இல்லே. காருங்க சர்சர்ன்னு போகுதுங்க. ஜனங்க குறுக்கே புகுந்து, வண்டிங்களை
அப்படி இப்படின்னு 'டபாய்ச்சுக்கிட்டு' போறாங்க! மறுபடி காப்பி! நம்ம தி.நகருலே பனகல் பார்க் அருகே
குமரன் கடைக்கு முன்னாலே ரோடைக் கிராஸ் செய்வமே அப்படி!!!!!!

பக்திப் பரவசத்தோட கோயிலுக்குப் போய் சாமியைக் கும்பிட்டேன். மணி 10தான்.நடைபாதையிலே தமிழ் சினிமா
வி.சி.டிக்கடைகளும், கோயிலுக்குக் கொண்டு போற பூசைக்கான சாமான்கள் விக்கற கடைகளுமா இருந்துச்சு!
திரும்பி வர்றப்ப கொஞ்சம் பழைய சினிமாப் படங்களை வாங்கிக்கணும்! தெருவெல்லாம் அழுக்கா இருந்துச்சு!
மகள் சொன்னா, 'இந்த ஊர் அப்படியே உங்க மெட்ராஸ்தான்!'

இதப் பார்ரா! இருந்தா என்ன? அதான் பிடிச்சிருக்கு!!!!

இன்னும் கொஞ்சதூரம் நடந்து 'கோட்டேராயா ஷாப்பிங் மால்'ன்னு இருந்த இடத்துக்குப் போனோம்.அப்பத்தான்
கடைங்களைத் திறந்துக்கிட்டு இருக்காங்க. ச்சும்மா ஒரு சுத்து சுத்திவந்தோம். வாங்கிக்கற மாதிரி ஒண்ணும் கண்ணுலே
படலே! மூணு மாடி ஏறி இறங்கி வேடிக்கைப் பார்த்துக்கிட்டு வந்தப்ப ஒரு 'நியூஸிலாண்ட் ப்யூட்டி ப்ராடக்ட்'னு
ஒண்ணு கண்ணுலே பட்டுச்சு! ஆஹா, நம்ம ஊர் சாமானாச்சே! என்ன ஏதுன்னு பார்க்கலாமுன்னு நுழைஞ்சோம்.
இங்கே எந்தக் கடைகளிலும் கேள்விப்படாத சோப்புங்களும், கிரீம்களும் வச்சு, அழகை மேம்படுத்தறாங்க!!!

கீழ்த்தளத்துக்கு வந்தப்ப ஒரு இந்தியன் புடவை, சுடிதார் கடை தென்பட்டது. ஏதாவது கிடைக்குமான்னு சுத்திப்
பார்த்தப்ப, மகளுக்கு ஒரு சுடிதார் பிடிச்சிருந்தது. அளவு சரியா இருக்காதுன்னு ஒரு தோணல். அதனாலே
'இஞ்சு டேப்' வேணுமுன்னு கேட்டதுக்கு ஒரு விற்பனைப் பெண் கொண்டுவந்து தந்தாங்க.தமிழ் பேசுனாங்க!
அவுங்ககிட்டே பேச்சுக் குடுத்தது ரொம்பத்தப்பாப் போச்சு!

'இந்த ஊர்லே ரொம்பவே க்ரைம் நடக்குது. நீங்க என்ன இப்படி தோள் பை போட்டுட்டு வந்திருக்கீங்க? கையிலே,
கழுத்திலே நகை வேற தெரியுது! முதுகு பக்கம் இடிச்சு தள்ளீட்டு அப்படியே தோள்ப்பையை பறிச்சுக்கிட்டு ஓடிடுவாங்க!
வளையலை எடுக்க சில சமயம் கையை அப்படியே வெட்டிடுவாங்க. கழுத்தை மூடிக்கிட்டுப் போகலைன்னா, செயினைப்
பறிக்க கத்தியாலே குத்துவாங்க!. பாஸ்போர்ட் பத்திரம்மா வச்சுக்கணும். பிடுங்கிட்டு ஓடிடுவாங்க' இப்படியெல்லாம்
அந்தம்மா சொல்லிக்கிட்டே போறாங்க! எனக்கு என்ன செய்யறதுன்னே ஒரு நிமிஷம் புரியலை!

நாமோ ஒரு ஹாலிடே வந்திருக்கோம். அதுவும் மகளோட. ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா யாராலே அங்கே
இங்கேன்னு ஓடமுடியும்? பத்திரமா ஊர் போய்ச் சேரறதுதானே நல்லது. அப்படி என்ன ஷாப்பிங் கேக்குது?
எங்க திகைப்பைப் பார்த்துட்டு அந்தம்மாவே, எதிர் வரிசையிலே சிங்கை போற டாக்ஸி ஸ்டாண்ட் இருக்குன்னு
காமிச்சாங்க.( வாடிக்கையாளர்களைப் பயமுறுத்தி ஒண்ணும் வாங்காம ஓடவச்சதை முதலாளி பார்த்திருப்பாரோ?)

நாங்க ஒரு ரெண்டு நிமிஷம் யோசனை செஞ்சோம். மக கிட்டே கேட்டேன், இன்னும் ஏதாவது ஷாப்பிங் இடங்கள்
பாக்கணுமான்னு. என் தங்கம், வேண்டாம்னு சொல்லுச்சு!

உடனே ரோடைக் கடந்து டாக்ஸி இருக்கான்னு பார்த்தோம். அப்ப ஒரு ஆளு வந்து சிங்கை போற டாக்ஸி
ரெடியா இருக்கு. 40 சிங்கப்பூர் வெள்ளி சார்ஜ்ன்னு சொன்னார்.

நான் உடனே, 'ஃபார்ட்டி டாலர்ஸ் டூ மச்'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தப்ப, இன்னொரு மிடில் ஏஜ் மனிதர்,
என் டாக்ஸியிலே வாங்கன்னார். எவ்வளவுன்னு கேட்டதுக்கு 30 ரிங்கெட்! ( சிங்கப்பூர் 13டாலர் 13 சென்ட் !)
சரின்னுட்டு அதுலே ஏறிக்கிட்டுக் கிளம்பிட்டோம்.

இப்ப இமிகிரேஷன் ஓட்டமெல்லாம் இல்லை. அந்த டாக்ஸி ஒரு பூத் கிட்டே நின்னது. அதுக்கு முந்தியே டாக்ஸி
ட்ரைவர் ரெண்டு ஃபாரம் கொடுத்தார். அதைப் பூர்த்தி செஞ்சு கொடுத்தோம். இறங்கி ஓடற வேலையெல்லாம்
இல்லாம, டாக்ஸியிலே உக்கார்ந்துக்கிட்டே பாஸ்போர்ட்லெ ஸ்டாம்ப் அடிச்சு வாங்கியாச்சு! ஒரே ஒரு இடம்தாம்!

வர்றப்ப டாக்ஸி ட்ரைவர்( மலேய்) கேட்டார், 'எப்ப நாங்க திரும்பி வரப்போறொம்'னு. ஆஹா.. அப்பத்தான் விளங்குது
அவரு எங்களை லோக்கல் ஆளுங்கன்னு நினைச்சுக்கிட்டு இருக்கறது!!!

'நாளைக்கு, பங்குனி உத்திரம். கோயிலிலே விழா இருக்கு. அதையெல்லாம் பார்த்துட்டு, ரெண்டு நாள் கழிச்சுத்தான்
திரும்புவோம்'ன்னு அடிச்சு விட்டேன்! மக என்னை ஒருமாதிரியா(!) பாக்கறா.

30 நிமிஷம் கழிச்சு, நாங்க விக்டோரியாத் தெருவிலே நடந்து வந்துக்கிட்டு இருக்கோம்.அப்பத்தான் ஞாபகம் வருது,தமிழ்ப்
பட விசிடி வாங்காம வந்துட்டோமுன்னு! போகட்டும். இங்கேயே வாங்கிக்கலாம்!