Thursday, April 28, 2005

யெஸ், யுவர் ஆனர்!!!!! தொடர்ச்சி

இன்னைக்குப் பரவாயில்லே. குற்றம், போதை மருந்து வச்சிருந்தது!!!!

ஜூரியாக செலக்ட் செஞ்ச நாங்க ஏழு பேரும் ஒரு அறைக்குக் கொண்டு போகப் பட்டோம். அங்கே எங்களுக்குள்ளே
ஒரு லீடரைத் தேர்ந்தெடுக்கணுமாம். கொஞ்சம் துடிப்போட ஒருத்தர் இருந்தாரு. அவரையே லீடரா ஆக்கிட்டோம்.
இதுக்கு நிஜமாவே ரெண்டெ நிமிஷம்தான் ஆச்சு!


அப்புறம் யாரு லீடருன்னு கேட்டுக்கிட்டு வந்தவுங்க, எங்களையெல்லாம் கூட்டிக்கிட்டுப் போய் ஜட்ஜுக்கு இடப்பக்கம்
உக்காரவச்சாங்க. லீடர் கடைசியா உக்காரணுமாம்! வழக்கு விவரங்கள் அச்சடிச்ச பேப்பர் கத்தைகளை எங்களுக்குத்
தந்தாங்க. அது இருக்கும் ஒரு நாப்பது நாப்பத்தஞ்சு தாள்! கூடவே ஏதாவது குறிப்பெடுக்கறதுக்கு வெத்துத்தாளுங்க
ஒரு பத்து பதினஞ்சு. அப்புறம் பேனா, பென்சில்!

வழக்கம் போலக் குற்றப்பத்திரிக்கை படிக்க ஆரம்பிச்சாங்க. அதெல்லாம் நமக்குத் தந்த அச்சுக் காப்பியிலே இருக்கே.
ரொம்பக் கவனமா(!) அதை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருந்தோம். கோர்ட்டுக் கிளார்க் ரொம்பப் பாவங்க! சொன்னதையே
திருப்பித்திருப்பிச் சொல்றதுபோல, படிச்சதையே திருப்பித்திருப்பிப் படிச்சுக்கிட்டு இருந்தாரு. எனக்கே ஐய்யோன்னு
ஆகிப்போச்சு!

அப்புறம் அஞ்சு நிமிஷம் ப்ரேக்! ஜட்ஜ் உள்ளெ போனதும், நாங்கெல்லாம் எழுந்து அந்த ஜூரி ரூமுக்குப் போயிரணும்.
அங்கே காஃபி, டீ, கேக், பிஸ்கெட்ன்னு தீனிங்க இப்ப வச்சிருந்தாங்க. அங்கேயே ஒரு 'பவுடர் ரூம்'! அது ஒரு
'டாய்லெட்'தான். பொம்பிளைங்க மேக்கப் டச் செஞ்சுக்கறதுக்காக ஒரு பெரிய கண்ணாடி, வாஷ் பேஸின் எல்லாம்
வச்சிருந்தாங்க. வெள்ளைக்காரங்க ஊருலே இந்த பவுடர் ரூம் கட்டாயம் இருக்கணும். கைப்பையிலே வச்சிருக்கற
குட்டிப் பவுடர் காம்பாக்ட் எடுத்து, அந்த பஃப்பாலே மூக்குக்குப் பவுடர் போட்டுக்கறதாம். மூக்கை சுத்தி வேர்த்துவிட்டு
பவுடர் கலைஞ்சிடுமாம். அதாலே துரைசாணிங்க ஏற்படுத்தின பழக்கமாம்! ( நம்ம வீட்டுலேயே விருந்தாளிங்க வந்தா
அவுங்களுக்காக ஒரு பவுடர் ரூம் வச்சிருக்கோம்னா பாருங்களேன் இதோட ப்ரதான்யத்தை!)

ஒரு கோர்ட்டு ஆளு எப்பவும் நமக்கு உதவறதுக்கே இருக்காங்க. அவுங்கதான் நம்மை அந்த ஜூரி ரூமுகோ, கோர்ட்டு
நடக்கற இடத்துக்கோக் கொண்டு போகணும். அப்பப்ப தீனிங்க இருக்கான்னு பார்த்து வேணுமுன்னா கொண்டு வைக்கணும்.
அழுக்குக்கான காஃபி கப்புங்க எல்லாம் எடுத்துட்டு, புதுசாக் கொண்டு வந்து வைக்கணும். நமக்கு ராஜ உபசாரம்தான் போங்க!

அஞ்சு நிமிஷம் ஆனதும் நம்மைக் கொண்டு போய் உக்கார வச்சாங்க. அடுத்த நொடி ஜட்ஜ் வந்து உக்காந்தாரு. எல்லாம்
ஒரு ஒழுங்கு முறையிலே நடந்துக்கிட்டு இருக்கு.

எதிர்க்கட்சி வக்கீல் சாட்சிங்களைக் குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பிச்சார். அப்பப்ப, தினத்தந்தியிலெ வர்றமாதிரி
'கோர்ட்டில் பலத்த சிரிப்பு' வருமுன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன். அச்சுபிச்சா பதில் சொல்றப்பவும் யாரும் சிரிக்கலெ.
ஏன், ஒரு புன்முறுவல் கூட இல்லாம ரொம்ப சீரியஸ்ஸா இருந்தாங்க. நாந்தான் தினத்தந்தியை நினைச்சுக்கிட்டு
உக்காந்திருந்தேன். சில ஜுரிங்க ஏதோ பரிட்சை எழுதறாப்போல சாட்சிங்க சொல்றதையெல்லாம் வேக வேகமா எழுதிக்கிட்டு
இருந்தாங்க! அதான் கோர்ட் க்ளார்க் எழுதறாங்களே, நாம வேற எழுதணுமான்னு எல்லாத்தையும் மனசுலே சேமிச்சுக்
கிட்டு இருந்தேன்.

இப்ப உணவுக்கு இடைவேளை வந்துருச்சு! ஜூரி ரூமுலே பிட்ஸா, ஸாண்ட்விச், ஃபில்டு ரோல்ஸ்ன்னு என்னென்னவோ
வச்சிருந்தாங்க. நம்ம ஜூரிங்க ச்சும்மா பூந்து விளையாடிட்டாங்க! நாந்தான் ,அதுலே என்ன 'மீட்' இருக்கோன்ற
பயத்துலே பிஸ்கெட், கேக்குன்னு 'ஆபத்தில்லாததா எடுத்துக்கிட்டேன்.

பழையபடி கோர்ட்டு ரூம்! எல்லாம் அதே போல! ஒருவழியா பேசறதெல்லாம் பேசி, படிக்கறதெல்லாம் படிச்சு முடிச்சாச்சு!
இப்ப ஜட்ஜ் எங்க பக்கம் திரும்பி ஒரு லெக்சர் கொடுத்தார். இந்த வழக்குலே நாங்க ஜூரிங்க சொல்றது சமுதாயத்துக்கு
ரொம்ப முக்கியம். அதனாலே நாங்க கூடிப் பேசி முடிவு எடுக்கணுமுன்னு சொல்லிட்டு எழுந்து போயிட்டார்.

திரும்பி எங்களை ஜூரி ரூமுக்குக் கொண்டு போயிட்டாங்க. எனக்குத் தெரியாதே இப்படி எனக்கு ச்சேலஞ்ஜ் கிடைக்காதுன்னு!
வெளியே போற வரைக்கும் ஃபோன் பேசக்கூடாது. செல் ஃபோனை ஆஃப் பண்ணி வைக்கச் சொல்லிட்டாங்க. வீட்டுக்கும் ஃபோன்
செஞ்சு லேட்டாகுமுன்னு சொல்லமுடியாம ஒரு தவிப்பு! வழக்கு விவரம் வெளியே போகாம இருக்கவாம். அப்ப
பொது ஜனங்களும்தானே உக்காந்து இதுவரை நடந்ததையெல்லாம் கவனிச்சுக்கிட்டு இருந்தாங்க. அவுங்க போய்
சொல்ல மாட்டாங்களாமா? போதாக்குறைக்கு எங்க கிட்டே ஒரு ப்ரமாணம் வேற செய்யச் சொன்னாங்க, மனசாட்சிக்கு
விரோதமில்லாம நடந்துக்குவோமுன்னு!

ஜூரி ஜனங்க கவலை ஏதுமில்லாம, அங்கிருக்க தீனிங்களையெல்லாம் ஒரு கை பார்த்துக்கிட்டே இதுவரை நடந்த
விசாரணைகளையும் அந்த பதில்களையும் விவாதிச்சுகிட்டே இருந்தாங்க. எனக்கு மனசுலே பட்டதைச் சொன்னேன்.
எல்லோரும் ஒரு மனசா முடிவெடுக்கணுமாம். மாற்றுக் கருத்து இருக்கறவங்களைக் கன்வின்ஸ் செஞ்சு அவுங்களையும்
நம்ம பக்கம் சேர வைக்கணுமாம்! ஏதோ 'புது போப் ஆண்டவர் எலக்ஷன்' ரேஞ்சுலே போய்க்கிட்டு இருக்கு! வெள்ளைப்
புகையோ கறுப்புப் புகையோ விடற ஏற்பாடு மட்டும்தான் இல்லை!

கடைசியிலே எல்லோரும் 'ஒரு மனதா' ஒரு முடிவைச் சொன்னோம். அதை அந்த லீடர் ஒரு பேப்பரிலே எழுதுனார்.
நாங்க கையெழுத்துப் போட்டோம். அதை ஒரு கவர்லே வச்சு ஒட்டியாச்சு!

இதுவரை எங்க ரூம் கதவைச் சாத்திட்டு வெளியே காத்திருந்தார் உபசரிப்பாளர்.
லீடர் கதவைத் தட்டுனதும், அவுங்க கதவைத் திறந்தாங்க. முடிவு செஞ்சாச்சுன்னு சொன்னதும், கொஞ்ச நேரம்
காத்திருக்கச் சொல்லிட்டு அவுங்க போய் ஜட்ஜ்கிட்டே விவரம் சொன்னாங்க. அப்புறம் பழையபடி எங்களையெல்லாம்
கோர்ட்டு ரூமுக்குக் கொண்டு போனாங்க. ஜட்ஜ் வந்து சேர்ந்தார். பொது ஜனங்கெல்லாம் பேச்சை நிறுத்திட்டு
கொயட் ஆகிட்டாங்க.

எங்ககிட்டே, முடிவு ஒருமனசாச் செஞ்சீங்களான்னு கேட்டார். ஆமான்னு லீடர் சொன்னதும், அந்தக் கவரை ஒட்டியாச்சான்னு
கேட்டுட்டு, கொடுக்கச் சொன்னார். கோர்ட்டு க்ளார்க் எழுந்துவந்து அதை வாங்கிக்கிட்டுப் போய் ஜட்ஜ்கிட்டே கொடுத்தாங்க.

எங்களுடைய 'சேவை'யைப் பாராட்டி, இரு ரெண்டு நிமிஷம் புகழ்ந்துட்டு, எங்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் நன்றி
சொன்னார். அப்புறம், தீர்ப்பு இன்ன தேதியில் அறிவிப்பாங்க.அதோட ஒரு காப்பி உங்களுக்கும் அனுப்புவோம். அதுவரை
இங்கே 'நடந்ததை' பத்தி வெளியே பேசவேணாமுன்னு கேட்டுக்கிட்டார். எங்க கிட்டே கொடுத்த வழக்கு விவரம் அடங்கிய
காகிதக் கத்தைகளையெல்லாம் சேகரிச்சு, உடனே அங்கேயே ஒரு ஷ்ரெட்டர்லே போட்டுத் தூள் பண்ணியாச்சு!
ராஜாங்க ரகசியமில்லே!

ஆச்சு, நம்ம ஜூரி வேலை! குழம்புக்கு ஊற வச்சிட்டு வந்த புளியைக் கரைச்சு ஊத்திக் கொதிக்க வைக்கணும்னு
நினைச்சுக்கிட்டே பஸ்ஸைப் பிடிச்சு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

அடுத்த வாரமே படி, பஸ் சார்ஜ் எல்லாம் வந்துருச்சு! சொல்ல மறந்துட்டேனே, 'ஜூரியா வேலை'செஞ்ச நாளுக்கு
டபுள் காசு வேற!

மூணு வாரம் கழிச்சு மறுபடி ஒரு கடிதம் அனுப்புனாங்க. அந்த வழக்கோட தீர்ப்பு, நாங்க தைரியமா சமுதாயக்
கண்ணோட்டத்தோட எடுத்த முடிவை அனுசரிச்சுத்தான் எழுதப்பட்டதுன்னும், அதற்காக நன்றி தெரிவித்தும் ஒரு
கடிதமும், தீர்ப்போட ஒரு காப்பியும் வச்சிருந்தாங்க.

ஆமாம். நான் ஏன் இதைத் திடீருன்னு எழுதுனேன் தெரியுமா?

நேத்து எங்க ஊர் டி.வி'யிலே முக்கிய நியூஸ் என்னன்னா, அண்டை நாடான ஆஸ்தராலியாவுலே,கோர்ட்டு
நடக்கும்போது, ஜட்ஜ் தூங்குனது மட்டுமில்லாம குறட்டை வேற விட்டுட்டாராம்!!!!!!

எப்படியோ அந்த 'குறட்டை ஜட்ஜ்' நம்ம மலரும் நினைவுகளைக் கிளறி விட்டுட்டார்!!!!

இப்படிப் பக்கம் பக்கமா மணிக்கணக்கா திருப்பித்திருப்பி படிச்சதையே படிச்சிக்கிட்டு இருந்தா 'போரடிச்சு'
தூக்கம் வராதா? நீங்களே சொல்லுங்க:-)




10 comments:

said...

கலக்கல் பதிவு. எனக்கு ரொம்ப த்ரிலிங்கா இருந்தது. நன்றி.

said...

இனிமே வலைப்பதிவுல சண்டை நடந்தா உங்களை ஜூரியா கூப்பிடலாம்..

//நேத்து எங்க ஊர் டி.வி'யிலே முக்கிய நியூஸ் என்னன்னா, அண்டை நாடான ஆஸ்தராலியாவுலே,கோர்ட்டு
நடக்கும்போது, ஜட்ஜ் தூங்குனது மட்டுமில்லாம குறட்டை வேற விட்டுட்டாராம்!!!!!!//

அந்த கூத்தை ஏன் கேட்கிறீங்க...மீடியாக்காரங்க அந்த நீதிபதியை வாரோ வாருன்னு வாரிட்டாங்க. நட்ட ஈடெல்லாம் கேள்படுது என்று நினைக்கிறேன்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

துளசியக்கா,
சுவாரசியமா இருந்தது. இனிமேல் உங்களை நீதியரசி துளசியக்கா அப்படின்னு சொல்லலாம் :-).

said...

Simply Superb posting !
Enjoyed and laughed heartily ! : )))))))
sorry for english
anbudan J

said...

தமிழ்நாடு பக்கம் வந்துடாதீங்க...கோலிவுட்ல புடுச்சி எல்லா படத்லயும் ஜட்ஜா போட்ருவாங்க...நீங்க பாட்டுக்கு 'ஆர்டர்....ஆர்டர்'னு ஆக்ட் குடுக்கவேண்டியதா போய்டும்..

said...

அன்புள்ள பாலாஜி, செல்வா, ஷ்ரேயா, முத்து, ஜெயந்தி, கிறிஸ்,மோகன்

மிகவும் நன்றி!!!! (பிடிச்சிருக்கா? ஹை!!!)

தன் பின்னூட்டத்தைக் குப்பைத் தொட்டியிலே கடாசிய சுந்தரமூர்த்திக்கும் நன்றி!

செல்வா,

வக்கீலம்மா இருக்கறதை 'வசதி'யா மறந்துட்டேன் பார்த்தீங்களா?

மோகன்,

நிஜமாவா 'சினிமா ச்சான்ஸ்' கிடைக்குமுன்னு சொல்றீங்க? வந்துட்டாப் போச்சு!
இங்கே ஒரு நாளும் மரச்சுத்தியலாலே 'ஆர்டர் ஆர்டர்' சொல்லவேயில்லை. நானாவது
அங்கெ வந்து அதைத் தட்டிப் பார்த்துடணும்!

எனக்கு நாடகம் நடிக்கறதும் இயக்குறதும் பிடிக்கும். நம்மத் தமிழ்ச் சங்கத்துக்கு
இதுவரை 3 நாடகம் போட்டிருக்கேன்! ஆஹாஹாஹா.......

வேணுமுன்னா டி.வி. சீரியலிலே கொடுமைக்கார மாமியாரா( அதுக்கு நான் பொருத்தமா
இருப்பேனாம். கோபால் சொல்றார்!) நடிக்க ஏற்பாடு செஞ்சுடுங்க, வந்துடறேன்!

பின்னூட்டம் தராம மனசுக்குள்ளே பாராட்டிய(!) அனைவருக்கும் நன்றி.

என்றும் அன்புடன்
துளசி.

said...

//தினத்தந்தியிலெ வர்றமாதிரி
'கோர்ட்டில் பலத்த சிரிப்பு' வருமுன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்//

ஹா ஹா...கலக்கல் பதிவு துளசி !! தீர்ப்பு வரும் வறை காத்திருந்தீங்களா?

said...

//பின்னூட்டம் தராம மனசுக்குள்ளே பாராட்டிய(!) அனைவருக்கும் நன்றி.//

தேங்ஸ், யுவர் ஆனர்.

//வேணுமுன்னா டி.வி. சீரியலிலே கொடுமைக்கார மாமியாரா நடிக்க ஏற்பாடு செஞ்சுடுங்க//

மெட்டி ஒலி மாமியாரையே மிஞ்சிருவீங்க போல

said...

//பின்னூட்டம் தராம மனசுக்குள்ளே பாராட்டிய(!) அனைவருக்கும் நன்றி.//

உங்கள் பதிவுக்கு நன்றி .எனக்கும் நன்றி சொன்னதற்கும் உங்களுக்கு நன்றி. இன்று தமிழ்மனத்துக்கு வந்தவுடன் நான் உங்கள் பதிவைத்தான் ஆவலுடன் தேடினேன்.