Tuesday, April 19, 2005

மேடை வேணுமா?

தமிழ்ச் சங்க புத்தாண்டு விழா!!!!!!!!!!!

இங்கெ எங்க தமிழ்ச் சங்கத்து புத்தாண்டு விழா, சனிக்கிழமையிலே நல்லபடியா நடந்துச்சு!

அதென்ன, புத்தாண்டு போய் மூணு நாளைக்கு அப்புறம்ன்னு சொல்றீங்களா?
நல்ல வேளையா இந்த வருசம் மூணாவது நாளு! சிலசமயம் ஒரு வாரம் பிந்தியும் கொண்டாடி இருக்கோம்.
'எல்லாருக்கும் ஒரு வழின்னா இடும்பனுக்கு வேற வழி'ன்னு சொல்றது நினைவுக்கு வருதா?. இங்கே
எல்லோரும் ஒன்று கூடிக் கொண்டாடறதுக்குத் தோதா வார இறுதி வரவேணாமா?



'எல்லா வெளிநாட்டுலேயும் நடக்கறதுதானெ இது' ன்னு யாருப்பா அங்கே முணுமுணுக்கறது?

இந்த வருசம் என்ன அப்படி சிறப்பு? இருக்கு! ஒண்ணாவது நான் 'கலை கலாச்சார(!)
ஒருங்கிணைப்பாளர் கிடையாது! இத்தனை வருசமா இந்தப் 'பதவி'யிலே இருந்து ரொம்பவே
அலுத்துப் போச்சுங்க. அதனாலே 'ஜாலி'யா புடவை கசங்காம ஒரு இடத்துலே உக்கார்ந்துக்கிட்டு
நிகழ்ச்சிகளை அனுபவிக்கலாம்.

எங்க தேர்தல் ( அப்படின்னு ஒண்ணும் பெருசாக் கிடையாது. இந்தப் பதவியிலே இருக்கற பிடுங்கல்களை
நினைச்சு, யாரும் சுலபத்துலே எக்ஸிக்யூடிவ் கமிட்டியிலே வந்துற மாட்டாங்க.) முடிஞ்சு, புது தலைவரும்,
மற்ற கமிட்டி அங்கத்தினர்களும் வந்திருக்காங்க. இது அவுங்களோட முதல் நிகழ்ச்சி இந்த வருசத்துக்கு.அதனாலே
ஏகப்பட்ட எதிர்பார்ப்பு!

உதவி அதிபரா( வைஸ் பிரஸிடெண்ட்) ஒரு தாய்க்குலம்!!!

நம்ம சிங்கை சித்ரா ரமேஷ் இருக்காங்கல்ல, அவுங்களோட தோழி, குடும்பத்துடன் இங்கே சுற்றுலா வந்திருக்காங்க.
என்ன டைமிங் பாருங்க, சரியா விழாவுக்கு மொதநா ராத்திரி! அவுங்களை விழாவுக்குக் கொண்டுபோனா, எங்க
நகர்வாழ் தமிழ்க் குடும்பங்களையெல்லாம் ஒரே இடத்துலே சந்திக்க வச்சுரலாம்தானே?

அவுங்களைக் கூட்டிக்கிட்டுப் போனோம். அவுங்களோட இன்னொரு தோழியின் குடும்பமும் வந்திருந்தாங்க.
அவுங்க புள்ளைங்களைப் பார்த்ததும் எனக்கு உள்ளுக்குள்ளே ஒரு 'ஒளி மின்னல்'

இதுவரைக்கும் இப்படி எத்தனைபேரைச் சந்திச்சிருக்கேன். (அகத்தின் அழகு முகத்தில் தெரியாதா?')
என்னுடைய 'பதவி'க் காலத்தில் நான் ஒரு 'புள்ளை புடிக்கறவளா!' இருந்திருக்கேன். எப்ப யாரைப் பார்த்தாலும்
அல்லது எங்கேயாவது வேற கலை நிகழ்ச்சிகளிலே பங்கெடுக்கறவங்களைப் பார்த்தாலும், கெஞ்சிக் கூத்தாடி( ஒரு பேச்சுக்குச்
சொல்றதுதான்,நான் கூத்தாடினால் நல்லாவே இருக்காது) நம்ம சங்கத்துக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சிருவேன்.

பலபாஷைகள் தெரிஞ்சதுதான் இப்ப கைவசம் இருக்கற மூலதனம்! அப்பத்தானே எல்லா க்ளப்புகளிலும் மெம்பரா
இருக்க முடியுது!

ஆஹா, இந்தப் பொண்ணுங்களைப் பார்த்தா பாடக்கூடிய களை முகத்துலேயே தெரியுதே!

'சிரங்கு பிடிச்சவன் கையும், கேட்டுப் பாக்கிறன் வாயும் சும்மா இருக்குமா?' கேட்டுப் பார்த்தேன். ரெண்டு பேருமா
சேர்ந்து பாடறேன்னு சொன்னாங்க. அதுவும் பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரி பாரதியார் பாட்டு!

ரொம்ப ஜம்பமாப் போய், இப்போதைய கலை கலாச்சார ஒருங்கிணைப்பாளர் கிட்டே விருந்தினர் நிகழ்ச்சியைப்
பத்திச் சொன்னேன்.

நிகழ்ச்சிகள் ஆரம்பிச்சு நல்லமுறையில் நடந்துக்கிட்டு இருந்துச்சு. இப்ப நம்ம சிங்கைப் பிள்ளைகளின் பாடல்!

'ஒளி படைத்த கண்ணினாய் வா, வா, வா' ஒரே தூள்!!!!!! ரொம்பவே நல்லாப் பாடினாங்க!!!

கூடவே ஒரு இலவச இணைப்பும் கிடைச்சது. அந்தப் பொண்களிலே ஒருத்தர், 'கல் ஹோ ந ஹோ' படத்திலிருந்து
ஒரு ஹிந்திப் பாட்டும் பாடினாங்க. நிஜமாவே அருமையான குரல்ங்க. அட்டகாசமாப் பாடுச்சுங்க அந்தப் பொண்ணு!
'காலரைத் தூக்கி' விட்டுக்கலாமுன்னு பார்த்தா, அன்னைக்குன்னு பார்த்துப் புடவை கட்டிக்கிட்டு இருந்தேங்க!

ஃபிஜி இந்தியக் குடும்பத்துப் பொண்ணோட ரெண்டு நடன நிகழ்ச்சி, ஹரே க்ருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த இன்னொரு
குடும்பத்துக் குழந்தைகளின் ரெண்டு நடன நிகழ்ச்சி( அதென்ன ரெண்டு ? நமக்கு ஒத்தப் படை ஆகாதுங்க!)
தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளின் பாடல், ஆடல்ன்னு ஜமாய்ச்சுட்டாங்க!!!

ரொம்பவே மனநிறைவா இருந்துச்சுங்க எனக்கு! ஆமா, நான் என்ன செஞ்சேன்னு கேக்கறீங்களா? நான் நாலு
ஜோக் சொன்னேங்க. மேடையிலே ஏறாட்டா எனக்கு கையும் காலும் துவண்டு போயிருமே!

யாருக்காவது மேடை ஏறி உங்களொட கலை திறமையை 'உலகு'க்கு வெளிச்சம் போட்டுக் காட்டணுமுன்னா
எங்க ஊருக்கு வாங்க! ஆனா இதுமாதிரி ஏதாவது விழா நடக்கற சமயமாப் பார்த்து வாங்க.

மேல்விவரத்துக்கு என்னைக் கேளுங்க.





5 comments:

said...

ரொம்ப தூரமில்லை. பக்கத்தில தான்.. இருக்கன்.. எப்ப வரலாம்ணு சொல்லுங்க

said...

அன்புள்ள சயந்தன்,

மெய்யாலுமா சொல்றீங்க? நம்ம அடுத்த விழா 'மிட் வின்டர் ஃபெஸ்டிவல்'

அது ஜூலை முதல்/இரண்டாவது( ஸ்கூல் ஹாலிடே டைம்) வரும். அப்ப ஒரு தனி மடல்
போடறேன். வந்துருங்க!!!!

என்றும் அன்புடன்,
துளசி.

said...
This comment has been removed by a blog administrator.
said...

இந்த மாதிரி எல்லோரும் மேடை ஏறறதுங்கறது நம்மள மாதிரி அதாவது NRI, மக்களுக்கே சாத்தியம். க்ரைஸ்ட்சர்ச் பரவாயில்லை போலிருக்கிரதே தமிழ் புத்தாண்டெல்லாம் அமளி படுகிரது? இங்கு வெலிங்டன்னில் (வெலிங்றன் -னுன்னும் சொல்லாறாங்கோ) அமைதி காக்கப்பட்டது. தாமரை இலை மேல் தணணீர் போல இங்கு இருக்கும் தமிழ் சமூகம் பற்றி ஒரு பதிவு போடனும்னு இருக்கேன், பார்க்கலாம்.

said...

அன்புள்ள சுரேஷ்,

நாங்க வருசத்துக்கு 6 விழா நடத்தறோம். பொங்கல்,தமிழ்ப் புத்தாண்டு, மிட் வின்ட்ர், நவராத்ரி, தீபாவளி,

கிறிஸ்மஸ்!!!

தமிழ்ப் பள்ளி நடக்குது. கூடவே பாட்டு சொல்லித்தர( இசை பள்ளி) தனியா ஒரு டீச்சர் இருக்காங்க.

அப்புறம் சனிக்கிழமை 3 மணிநேரம் ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டியா 'பேட் மின்டன் 'விளையாடறோம்.

சம்மர் வந்தா வழக்கமா 'கிரிக்கெட்' விளையாடுவாங்க. இப்படிப் போகுது இங்கே. நீங்க கட்டாயம் ஒருக்கா
கிறைஸ்ட்சர்ச் வாங்க.

என்றும் அன்புடன்,
துளசி.