பெரிய பெரிய புத்தர் சிலைகளை வச்சு விற்கும் ஸ்கைலைன் கடைவாசலில் ஹேப்பி புத்தான்னு தொப்பை வயிறுடன், நிற்பவரின் தொப்பையில் காசு போட்டுட்டு தொப்பையைத் தடவிக் கொடுத்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையாம். போறவங்களும் வாரவங்களும் போடும் காசுகள் தர்ம காரியங்களுக்குச் செலவாகுது. இங்கே அடுத்தடுத்து ரெண்டு கோவில்கள், ஒன்னு கிருஷ்ணனுக்கு இன்னொன்னு க்வான் இம் (Kwan Im Thong Hood Cho Temple) சீனக்கடவுளுக்கு.
சீனக்கோவில் வாசலில் கலகலன்னு பெருங்கூட்டம். முதலில் கிருஷ்ணரைப் பார்த்துட்டு வந்துடலாமுன்னு போனோம். அழகான ஆஞ்சநேயரும் கருடருமா கோபுர வாசலின் ரெண்டு பக்கமும் நிற்க, கொஞ்சம் உள்ளே தள்ளி பெரிய திருவடி உள்வாசலில் நின்னு மூலவரைப் பார்க்க நாம் அவருக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு உள்ளே ஓடினோம். சந்நிதி மூடப்போறாங்க. சட்னு தரிசிக்க முடிஞ்சது. ஸ்ரீவேணுகோபாலன்.
முன்மண்டபம் முழுசும் பெருமாளும் தாயாரும் சரஸ்வதியும் லக்ஷ்மியுமா நிற்கும் இடத்தில் ஒரு சீனமாதாவும் கோவில் கொண்டிருக்காங்க. Guan Yin, the Goddess of Mercy. தொட்டடுத்துள்ள சீனக்கோவிலுக்கு வர்றவங்க அப்படியே இங்கேயும் எட்டிப் பார்த்துக் கும்பிடுவதால் 'தயை நிதி'க்கு ஒரு சந்நிதி வச்ச கோவில் நிர்வாகத்தைப் பாராட்டத்தான் வேணும்.
பிரகாரம் சுற்றிவரலாமுன்னு தலையைத் திருப்பினால்...... அட! இதைப் பார்றா...... யானை மேக்கர்! நமக்கான ஸ்பெஷல் இல்லையோ!!!! குட்டி யானைக்கு அலங்காரம் நடக்குது. கோவிலைப் புதுப்பிக்கும் வேலை மும்முரம். 1958லே வச்ச தூண்களை இப்போ மாற்றிப் புது டிஸைனில் செய்யறாங்க. பரவாயில்லையே பழைய தூண்கள் அம்பத்தி ரெண்டு வருசமாவாத் தாக்குப் பிடிச்சிருக்கு!!! ஊழல் இல்லா ஊராச்சே. அதான்! வரும் கிருஷ்ண ஜெயந்திக்குள்ளே முடிக்கும் அவசரமாக இருக்கணும். தூண்களும் அதில் இருக்கும் சின்ன மாடங்களில் விளக்கு வரிசையும் யானை வரிசையுமா அமைச்சுக்கிட்டு இருக்காங்க. குட்டி யானைகள் ஒவ்வொன்னும் முன்னால் இருக்கும் யானை வாலைப் பிடித்தபடிதான் வரிசை கலையாமல் நடக்கணும்.
சீர்காழிக்காரர் இளைஞர் தண்டபாணி. ரெண்டு வருசமா இங்கே தங்கி கோவிலின் சிற்பவேலைகளைச் செஞ்சுக்கிட்டு இருக்கார். ஒவ்வொரு யானையும் கண்ணுலே ஒத்திக்கிறமாதிரி இருக்கு. ஆனா சிமெண்ட் பூசுமுன் ஒத்திக்கிட்டா கம்பி குத்திரும்!
கோவிலுக்குள்ளில் வலம் வந்தால் மூச்சடைத்து நிக்கத்தான் வேணும். சின்னக்கோவில்தான். காம்பவுண்டு சுவருக்கும் கோவில் சந்நிதிக்கும் இடையில் ரெண்டு பக்கங்களிலும் ஒரு ஆறடி அகலம் இடம் விட்டுருக்காங்க. இந்த ரெண்டு பக்கமும் அழகழகான சிற்பங்கள். இவை எல்லாமே ரெண்டு வருசத்துக்குள்ளில்தான் வந்துருக்கணும். 2009 மார்ச்சில் இவை இல்லை!
கொஞ்சம் இளைச்ச முகத்தோடு லக்ஷ்மி நரசிம்மர், ஊஞ்சலாடும் கண்ணனும் ராதையும் ( வடக்கத்திச் சாயல். மதுராக்காரன் அப்படித்தான் இருந்தானோ என்னவோ! நமக்குத்தான் என் டி ராமராவ் முகம் வந்து மனசில் ஒட்டிப் பிடிச்சுருக்கு) இவுங்களுக்கு ரெண்டு பக்கமும், முரசின் தாளத்துக்குக் கோலாட்டம் ஆடும் குஜராத்தி மக்களோ? ஊஹூம்... என் கணிப்பு தவறு. ராசக்ரீடையாம். கோபியர்கள் கூட நடனமாடும் கிருஷ்ணர்கள்! இந்தக் குறிப்பிட்ட சிற்பங்கள் செய்ய பத்தே மாசங்கள்தான் ஆகி இருக்கு! சந்நிதிக்கும் முன்மண்டபத்துக்கும் வெளியே இடப்புறச்சுவர் முழுசும் இவை இடம்பிடிச்சுருக்கு!
இனி நம் வலத்தில் வலதுபக்கம் திரும்பினால் கருவறையின் பின்பக்கச்சுவர். நடுவில் அன்னபூரணி தங்க ஆசனத்தில் அமர்ந்து அருள் பாலிக்க, பாரதத்தின் புண்ணிய நதிகள் கங்கா, காவேரி, தாமிரபரணி வைகை, கோதாவரி, சரஸ்வதி, க்ருஷ்ணா அனைவரும் கம்பீமா நிற்கும் நீராழிமண்டபமா இருக்கு .எல்லாரும் குடங்களில் தண்ணீர் ஊத்தறாங்க கீழே இருக்கும் தொட்டி அமைப்பில்.
அடுத்த வலப்பக்கம் திரும்பினால் அரவணையில் பள்ளி கொண்டவனை ஏகாந்தமா தரிசிக்கலாம். அடுத்து ஆதிசேஷன் குடைபிடிக்க மஹாவிஷ்ணு நால்வருடன் அமர்ந்த கோலம். இந்த மூணாவது நபர் யாருன்னு தெரியாமல் கொஞ்சம் திகைச்சுத்தான் போனேன். ஸ்ரீதேவி, பூதேவி, *** & ஆண்டாள். (வீடு திரும்பினதும் முதல்வேலையா தோழிக்குப் படத்தை அனுப்பிக் கேட்டதும் முதலில் குழம்பின பிறகு நாலாவது மடலில் பெயரைச் சொன்னாங்க. நேத்து இந்தப் பதிவு எழுதும்போது நம்ம பதிவுலக 'அத்தாரிட்டி' ( ஆழ்வார்ன்னு சொல்லப்பிடாதாம்)யிடம் சந்தேகம் சொல்லி, நிவர்த்தியாச்சு. நப்பின்னை என்னும் நீளா தேவி (அட! நம்ம ஆண்டாளே இவுங்க ரெண்டுபேரும் ஈஷிக்கிட்டு இருந்ததைப் பாடியிருக்காங்களே)
சின்ன இடத்துலேயே இத்தனை சிற்பங்களை வச்சுருந்தாலும் நெரிசலா இல்லாம நின்னு பார்த்து ஒவ்வொன்னா ரசிச்சு அனுபவிக்கும்படி நீட்டாவே அமைச்சுருப்பதைப் பாராட்டத்தான் வேணும். சுவரில் ஒரு காலி இடம்கூட விட்டு வைக்கலை:-))))
ஹயக்ரீவர், ப்ரம்மா கண்ணனை வணங்குவது, ஆண்டாள்ன்னு ஏராளமான சிற்பங்கள். ரெண்டு பக்கமும் மூலையில் எதிரும் புதிருமா சிரிக்கும் சிம்மமும் பூவராகனும். பார்த்துப்பார்த்துக் கலை நயத்தோடு அமைக்கப்பட்ட சிற்பங்கள். காங்க்ரீட் சிமெண்டுக் கலவைதான் , ஆனால் முக லக்ஷணம் அப்படியே அள்ளிக்கிட்டுல்லே போகுது!!!!!
கோவிலைவிட்டு மனசில்லா மனசோடு வெளியில் வந்தால் சீனக்கோவில் போல இங்கேயும் வாசலில் மேசை போட்டு அதில் சீன ஊதுபத்திகள் கட்டுக்கட்டா வச்சுருக்காங்க. சீனர்கள் அதைக் கொளுத்தி அங்கே இருக்கும் அலங்காரப்பாத்திரத்தில் நட்டு வச்சுட்டுக் கைகூப்பி வணங்கறாங்க. அவுங்க மட்டும் இங்கே கும்பிட்டால் போதுமா? நாமும் அங்கேபோய் கும்பிடவேணாமா? பழிக்குப் பழி:-))) நாங்க பக்கத்துச் சீனக்கோவிலுக்குள் போனோம். வாசலில் ஏகப்பட்ட ஊதுவத்திகள் வச்சுருக்காங்க. அதையே எடுத்துக் கொளுத்திப் பிரார்த்தனை செஞ்சுக்கலாம். நம்ம ஊர்க் கோவில்களிலும் இப்படி வச்சுருந்தால் எவ்வளவு நல்லா இருக்குமுல்லே?
உள்ளே தங்கமான தங்கம்.(படம் எடுக்க அனுமதி இல்லை) ஸ்டேஜ் போட்டமாதிரி ஆளுயர மேடைகளில் அலங்கார சந்நிதிகளில் வெவ்வேறு சீனச்சாமிகள். வணங்கிட்டு பக்கத்துலே தட்டுகளில் வச்சுருக்கும் பிரஸாதங்களை எடுத்துக்கலாம். பிரஸாத வகைகளைப் பாக்கெட் பாக்கெட்டாப் பிரிச்சுப் போட்டுத் தட்டுகளை நிரப்பிக்கிட்டே இருக்காங்க கோவில் ஊழியர்கள். எல்லாம் ரொம்ப மெனெக்கெடாத வகைகள். கலர் காகிததில் சுத்தி இருக்கும் (லாலீஸ்) மிட்டாய்கள்கள்தான்.
இந்தக் கோவில் காலை 6 மணியிலிருந்து மாலை 6.15வரை தினமும் திறந்திருக்கும். அமாவாசை பவுர்ணமி தினங்களில் காலை 5 முதல் மாலை 6.45 வரை. சீனர்கள் சந்திரக் காலண்டர் பயன்படுத்தறாங்களாம். சீனப்பண்டிகைகள் நடக்கும்போது காலை 4 மணிக்கே கோவில் திறந்துருவாங்களாம். நம்மூர்லேயும் சமீபகாலமா வருசப்பிறப்புக்கு முத ராத்ரி பெருமாளைத் தூங்கவே விடறதில்லை! அதிலும் முக்கியமா ஆங்கில வருசப்பிறப்புக்குத்தான் முதலிடம் கொடுத்துருக்காங்க. ராத்ரி 12 மணி ஆனதும் முதல்லே சாமியைப்பார்த்துட்டா வருசம் பூராவும் நல்லதுன்னுற நம்பிக்கை. உலகம் பூரா மனுச குலத்துக்கு இப்படி பல நம்பிக்கைகள்
பகல் 'லஞ்சு அவர்' நேரமானதும் சதுக்கமும் மார்கெட் பகுதியும் மக்கள் கூட்டத்தால் நிறையத் தொடங்குச்சு. செஸ்ட்நட்டைப் புதுவிதமா வறுத்துக் கொடுத்துக்கிட்டு இருந்தார் ஒரு கடைக்காரர். கறுப்பா சின்ன விதைகளைப் போல் இருக்கும் பொடிக்கற்களை ஒரு தொட்டி போன்ற அமைப்பில் சூடாக்கி அதில் செஸ்ட் நட்டுகளைப் போட்டு தொட்டியைச் சுத்தவிடறார். அந்தக் கற்களின் சூட்டிலேயே இது வறுபட்டுப் போகுது. ( நியூஸியில் ஏராளமா இந்த மரங்கள் இருக்கு. பேசாம நாமும் இந்த பிஸினஸை ஆரம்பிக்கலாமா............)
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது போல் ஒரு கலைஞர், நாம் குடிச்சுட்டு வீசியெறியும் ஜூஸ் கேன்களைவச்சு அலங்காரச் சாமான் செஞ்சு வித்துக்கிட்டு இருக்கார். சின்னக் கைப்பிடியுடன் இருக்கு. பேனா பென்ஸில் போட்டு மேஜையில் வச்சக்கலாம்.
கடைகண்ணிகளை கொஞ்சம் சுத்திப் பார்த்துட்டுப் பொடிநடையில் மீண்டும் செராங்கூன் சாலைக்கே வந்தோம். கோமளவிலாஸ் கடக்கும்போது அங்கேயே சாப்பிடலாமேன்னு தோணுச்சு.
தொடரும்.......................:-)
Friday, September 30, 2011
யானை மேக்கர் ஆஃப் சீர்காழி ( சிங்கை சந்திப்புகள் 2011 பகுதி 4)
Posted by துளசி கோபால் at 9/30/2011 02:46:00 PM 29 comments
Labels: அனுபவம்
Wednesday, September 28, 2011
பொம்மை(இல்லா) கொலு!!
நவராத்ரி வந்தாச்சு. இனி நம்ம வீட்டில் பனிரெண்டு நாளுக்கு அமர்க்களம்தான். வழக்கம்போல் கோபால் தன் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றிக் கொடுத்தார். அவர் சரியாச் செஞ்சாரான்னு கவனிக்கத்தான் நம்ம கோகி இல்லாமப் போயிட்டான்:( அஞ்சு படிகள்.
முதல்படியில் தாயாரும் பெருமாளும். குட்டியா ஒரு கலசம். பிள்ளையார் புக் எண்ட்ஸ் இருபுறமும்.
ரெண்டாம்படியில் மகிஷாசுரமர்த்தினி, லக்ஷ்மி, சரஸ்வதி, புள்ளையார் முருகன். எங்கே இருக்கோமுன்னு அவுங்களுக்குக் குழப்பம் வந்துருமோன்னு இருக்குமிடம் சொல்ல பெங்குவின் குடும்பம். நம்ம ட்ரேட் மார்க்கா யானைகளும் பூனைகளும்.
மூணாவதில் செம்பருத்திப்புள்ளையார், பாலகிருஷ்ணப்புள்ளையார், வேணு வாசிக்கும் புள்ளையார், கீரைக்காரம்மா. அப்புறம் இந்த வருஷ ஸ்பெஷலா ஒரு பதிவர். யுவாங் சுவாங் என்ற ஆதி காலத்துச் சீனப் பதிவர். இவர்மட்டும் பதிவு பண்ணாமப் போயிருந்தால் நமக்கு சரித்திர சம்பவங்கள் பாதி தெரிஞ்சே இருக்காது. வெட்டிப்போட்ட மரத்தடியில் அதே மரத்தின் ஒரு பகுதியை மேசையா வச்சுக்கிட்டு 'உக்காந்து யோசிச்சு' எழுதறார் பாருங்க:-)))))
நாலாவது வாத்துக் குடும்பங்களும் வெள்ளைப்புலியும் நாயும் பூனையுமா இருக்கும் சூழலில் ஒருவருக்கொருவர் எப்படி அன்பா ஆறுதலா இருக்கணுமுன்னு சிம்பாலிக்காச் சொல்லும் இருவர்.( உபயம்: மகள்)
அஞ்சாவதில் யானைக்கூட்டம்.
எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் யானைகளின் அணிவகுப்பு ஒரு புறம். விருச்சிகப்புள்ளையார் மறுபுறம்.
நைவேத்தியமா மாம்பழக்கேஸரி, வேர்க்கடலை சுண்டல் & பழங்கள்.
பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் சிரமம் பார்க்காம ஒரு நடை வந்து ஒரு பாட்டுப் பாடிட்டுச் சுண்டல் எடுத்துக்குங்க. (அம்பி, சீக்கிரம் வந்தால் மொத்த கேஸரியும் உமக்கே:-)
சின்னவளை ரெடி பண்ண இவ்வளோ நேரமாயிருச்சு. அதான் ..... இப்போ வந்து நிக்கிறாள்.
அனைவருக்கும் இந்த நவராத்ரி விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
PIN குறிப்பு: அதென்ன இப்படி ஒரு தலைப்பு? இன்னும் நம்ம வீட்டுச் சாமான்கள் வந்து சேரலைங்க. பொம்மைகள் எல்லாம் கப்பலில் இருக்கு. பொழைச்சுக்கிடந்தால் அடுத்தவருசம் கூடவே ரெண்டு படிகள் கட்டிடலாம். சரக்கு வருதுல்லே:-))))))
Posted by துளசி கோபால் at 9/28/2011 12:11:00 PM 42 comments
Labels: அனுபவம் நவராத்ரி நியூஸிலாந்து
Tuesday, September 27, 2011
சிங்கைக் கோவில்களில் சில.
மக்கள் நாட்டைவிட்டுப் போகும்போது துணிமணி பாத்திர பண்டங்களை மட்டும் கையோடு சுமந்துகொண்டு போனாலும் தன் கலாச்சாரத்தையும் கடவுளையும் கூடவே மனசில் சுமந்து கொண்டு போவது யுகம்யுகமா நடக்கும் சமாச்சாரம் இல்லையோ?
தினமும் காலையில் நாம் போய் தரிசனம் செய்யும் 'சிங்கைச் சீனு'ன்னு நான் குறிப்பிடும் அந்த ஸ்ரீநிவாசன் இங்கே செராங்கூன் சாலையில் கோவில் கொண்டது 1855 வது ஆண்டு. மஹாவிஷ்ணு காக்கும் கடவுளாச்சே! நம்மையும் நம் குடும்பத்தையும் ஊரில் விட்டு வந்த நம் மக்களையும் அவன் காக்கவேணும். தினமும் அவனுக்கு இந்தக் கோரிக்கையை ஞாபகப்படுத்தணுமுன்னால் அவன் இங்கே நின்னால்தான் முடியும் என்ற நம்பிக்கையோடு புலம்பெயர்ந்து வந்த நம் மக்கள் வெறும் செங்கலால் கட்டிய சாதாரணக் கோவில் இது. படம் பாருங்க!
தென் இந்தியாவில் இருந்து இங்கே வந்து குடியேறும் மக்கள் தொகை கொஞ்சம் கொஞ்சமா உயர உயர பக்தர்களும் அதிகமாகிக்கிட்டே வந்தாங்க. ஒரு நூறு ஆண்டு காலம் போனபிறகு 1960 ஆம் ஆண்டுதான் இப்போ நாம் பார்க்கும் இந்தக் கோவிலின் வடிவமைப்பை உறுதி செஞ்சு மதராஸில் இருந்து சிற்பிகளைக் கொண்டு வந்து கோவில் வேலைகள் ஆரம்பமாச்சு.
கோவிலுக்கு அஞ்சு நிலை ராஜகோபுரம் கட்ட நிதி உதவியவர் சிங்கை சமூக ஆர்வலர் வள்ளல் பி. கோவிந்தசாமிப் பிள்ளை அவர்கள். பதிள் சுவர்களில் சிற்பங்கள் மனசை அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுதுன்னால்..... கோவிலின் உள்ளே நெடுக ஒவ்வொரு தூணின் நாலு புறமும் இருக்கும் சிற்பவேலைகள் மனசைக் கொள்ளையடிக்குது.
கருவறையின் முன்மண்டபச் சுவர்களில் சுத்திவர பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமான், குருவாயூரப்பன், தசாவதாரத் திரு உருவங்கள் இப்படி..... எதைச் சொல்ல எதைவிட? எல்லாமே ஏதோ நேற்றுதான் கட்டி முடிச்சதோன்னு நினைக்கும்படி பளபளன்னு ஜொலிக்குது. துளியும் அழுக்கு இல்லாத பரிசுத்தம். கண்ணை மூடிக்கிட்டு எங்கே வேணுமானாலும் சட்னு உக்காரலாம் விழுந்து கும்பிடலாம்.
கோபுர வாசலில் இருந்து கருவறைவரை நேரா ஒரு மண்டபம். முன்மண்டபத்துக்கு எதிரில் பெருமாளைப் பார்த்துக் கை கூப்பிய நிலையில் பெரிய திருவடி. அவருக்குப் பின்னே ஜொலிக்கும் தங்கக்கொடி மரம். கொடிமரம் கடக்கும் விதானத்தில் பனிரெண்டு ராசிக்கான உருவங்கள்.
முன்மண்டபம் ஏறிப்போனால் திகுதிகுன்னு நெருப்புப்போல் ஜொலிப்புடன் நின்ற பெருமாள் நகையும் நட்டும் பூவும், பட்டுமாய்.......'வா வா. இங்கே நோ ஜருகு. நல்லாக் கண் குளிர ஸேவிச்சுக்கோ'ன்றார், அவர் காலடியில் உற்சவ மூர்த்திகள் அழகுக்கே அழகு செஞ்சதுபோல் நிகுநிகுன்னு இருக்காங்க. (உணர்ந்து அனுபவிக்கணும். அதை எனக்குச் சரியாச் சொல்லத் தெரியலை. மன்னிக்கணும்.)
மூலவர்
உற்சவர்
கோபுர வாசலைத் தாண்டி உள்ளே காலடி எடுத்து வச்சதும் நமக்கு வலது புறம் ஆஞ்ச நேயர். தனிச்சந்நிதியில். அவரைச் சுற்றி வரும்போது சந்நிதிச் சுவர்களில் விதவிதமா போஸ் கொடுத்து அனுகிரகம் செய்யறார்.
நேயடு
இடது பக்கம் தலையைத் திருப்பினால் நம்ம புள்ளையார். அவருக்கு இடப்பக்கம் தனிச் சந்நிதியில் சுதர்ஸனன். ரெண்டு சந்நிதிகளுக்கும் இடையில் கொஞ்சம் பின்னால் தள்ளி நடுவாந்திரமா ஸ்ரீ விஷ்ணு துர்கை. இந்த மூணு சந்நிதிகளுமே தனிக் கட்டிடமா பாந்தமா அமைஞ்சுருக்கு. புள்ளையாருக்கு முன்னால் தேங்காய் உடைக்கத் தனித் தொட்டி அமைப்பு. சிரட்டைத் துண்டுகள் கண்ட இடத்தில் தெறிச்சு விழுந்து நம்ம காலில் குத்தாது .
புள்ளையார் சந்நிதியில் அவர் பக்கத்திலேயே தம்பி வேல்முருகன், 'வேல்' வடிவத்தில் நிக்கிறார். சுதர்ஸனருக்குப் பின்பக்கம் வழக்கம் போல் நரசிம்ஹர், சிரிச்ச முகத்துடன்! எலுமிச்சம்பழ மாலையுடன் துர்கை. (கனமா இருக்காதோ கழுத்தில்?) ஒவ்வொரு சந்நிதியையும் தனித்தனியே வலம் வர வசதியான ஏற்பாடு.நாமும் மொத்தமா ஒரு முறை வலம் வந்துட்டு மூலவரையும் தரிசனம் பண்ணிட்டு பெருமாளுக்கு வலப்புறம் இருக்கும் தனிச்சந்நிதியில் ஸ்ரீமகாலக்ஷ்மித் தாயாரையும் இடப்புறம் இருக்கும் தனிச்சந்நிதியில் நம்ம 'ப்ரியை' ஆண்டாளம்மாவையும் வலம்வரும் வழியிலேயே தரிசனம் செஞ்சுக்கலாம். ஆண்டாளுக்குத் துணையா அவள் முன்னால் துளசி. எப்பவும் பசுமை மாறாமல் இருக்காள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னே விசேஷங்களுக்காக உண்டாக்கிய சின்ன வஸந்த மண்டபம் பெருமாள் வரவுக்குக் காத்திருக்கு.
ஊர்வலம் போக தங்கரதம் இன்னொரு பக்கம். கொடுத்து வச்ச பெருமாள்.
இந்தப் பயணத்தின் வேண்டுதலா விஷ்ணு சகஸ்ரநாமம் தினம் வாசிக்கணும். வாசிச்சுட்டுக் கிளம்பினோம். திங்கள் கிழமை. வேலை நாள். எல்லோரும் அவரவர் கடமையில் மூழ்கி இருப்பாங்க. நாம் பயணிகள் என்பதால் நம் வேலை ஊர்சுத்திப் பார்த்தல். பொடிநடையா அங்கிருந்து செராங்கூன் சாலையிலேயே வேடிக்கைகளைப் பார்த்துக்கிட்டே டெகா மால் வரை வந்து இடது புறம் திரும்பி சிம்லிம் சதுக்கம் கடந்து பென்கூலன் சாலையில் பிரியும் பர்லிங்டன் சதுக்கத்துக்குள்ளே வந்தோம். என்னதான் வெய்யில் ஆரம்பிச்சுருச்சுன்னாலும் சுத்தமான சாலைகளில் நடப்பதால் உடல் சோர்வு இல்லை. எந்த நேரம் எந்த வண்டி இடிக்குமோ என்ற கவலை இல்லாமல் நடைபாதையில் நடக்க முடியுதே! அங்கங்கே நடைபாதைப் பராமரிப்பு வேலைகள் நடந்துக்கிட்டு இருந்தாலும் பாதசாரிகள் நடக்க இடையூறு ஒன்னுமில்லாமல் வசதி செஞ்சுருக்காங்க.
சிங்காரச்சென்னையை, சிங்கப்பூர் ஆக்குவோமுன்னு அரசியல் வியாதிகள் அப்பப்போ முழங்குவது காதில் ஒலிக்குது. ஆனால் அது எப்போ? ரோசெர் வாய்க்காலை ஒட்டியே தான் இந்த சாலை. நம்ம கூவம் எப்போ இப்படி ஆகப்போகுதுன்னு காத்திருக்கேன்.
சதுக்கத்தின் நடுவில் சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் மிச்சம்மீதி அலங்காரங்கள் அப்படியே இருக்கு. முயலாண்டு ஆரம்பிச்சு ரெண்டரை வாரம்தானே ஆச்சு. பெரிய சீனச்சாமி சிலையைச் சுத்திவர பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி, எலி, காளை, புலி, முயல், ட்ராகன் இப்படிப் பனிரெண்டு ஆண்டுகளின் சுபாவங்களை எழுதி வச்சுருக்காங்க. மக்கள் தங்களுக்குரிய ஜாதகங்களைப் படிச்சுப்பார்த்துக்கிட்டுப் போறாங்க.
சதுக்கம் பூராவும் வரிசையாக் கடைகள். கண்டதையும் வித்துக் காசாக்கிக்கிட்டு இருக்காங்க. செடிகள் விற்கும் கடை ஜோர். நமக்குத்தான் இங்கே அதைக் கொண்டுவர முடியாது. கண்ணால் பார்த்துக்கலாம். இன்னொரு கடையில் மாம்பழம் மற்றும் பல பழவகைகள். பலாப்பழச்சுளைகள் வாவான்னு கூப்ட்டது. (சென்னை சிங்கை ஆனதும் அங்கே போய் இப்படி வெட்டிவச்ச பழங்களைத் தின்னணும். மூளையில் முடிச்சு. ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாதுதான். ஆனால் சுத்தமா இருக்கணும் என்பது நம்மூர்லே ஏன் புரியமாட்டேங்குது என்ற ஏக்கம்தான்)
தொடரும்............:-)
Posted by துளசி கோபால் at 9/27/2011 03:51:00 PM 18 comments
Labels: அனுபவம்
Saturday, September 24, 2011
ஒரு நாளில் இரு விழா
அதென்னவோ தெரியலைங்க.... ஒரு எட்டு வருசமா ரெண்டு விழா ஒரே நாளில் வந்துருது:-) மூச்சுள்ள வரை இனியும் வந்துக்கிட்டே தான் இருக்கும். வாழ்த்தும் வரிசையில் முதலில் நிற்கின்றேன். நம்ம தளத்துக்கும் (குடும்பத்)தலைவருக்கும் இன்று பிறந்தநாள். விளையாட்டுப்போல் ஆரம்பித்து இன்னிக்கு எட்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நம்ம துளசிதளத்தையும், வேர் கருகிவிடாமல் நீர் ஊற்றி வளர்க்கும் புரவலர் கோபாலையும் மனமார வாழ்த்துகின்றேன்.
வயதெல்லாம் பிரச்சனையே இல்லை. வாங்க மக்கா....... கூடி இருந்து கொண்டாடி மகிழ்வோம்.
ஆதரவு அளிக்கும் பதிவுலக, வாசக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Posted by துளசி கோபால் at 9/24/2011 02:22:00 PM 72 comments
Labels: அனுபவம்