Thursday, September 01, 2011

இப்படியும் பண்ணுவளோ ஒருத்தி..........

"கன்னத்துலே (தும்பிக்)கையை வச்சுக்கிட்டுக் கேக்கிறதைப் பாரு!"

"நானும் பார்த்துக்கிட்டேதான் மகா பொறுமையா இருக்கேன். இந்த 38 வது வருசமும் உன்னாலெ ஜெயிக்க முடியலை பாரு. அது எனக்கு உண்மைக்குமே கொஞ்சம் ( சிரிப்பை அடக்கி முகத்தைக் கொஞ்சம் சோகமா வச்சுக்கிட்டு) வருத்தம்தான்"


"என்ன செய்யறது புள்ளையாரே? நானும்தான் வருசாவருசம் கஜனி மாதிரி படையெடுக்கறேன். அவன் ஒவ்வொரு சமயமும் செல்வத்தை வாரிக்கிட்டுப் போனான். நானோ ........."

"போனாப் போகட்டும் போ. நீ என்ன வேணுன்னா இப்படிச் செய்றே?"

"அதையேதானே நானும் சொல்றேன். இன்னிக்குக் காலையில்கூட கொழுக்கட்டைகள் செய்முறையெல்லாம் ராதா பதிவில் படிச்சுட்டுத்தான் செய்ய ஆரம்பிச்சேன். வாட் வெண்ட் ராங்குன்னு புரியலை:( "

" ச்சீச்சீ...கண்ணைத் தொடைச்சுக்கோ. நாளும் கிழமையுமா பொம்னாட்டிகள் அழுதா நேக்குத் தாங்காது கேட்டோ! "

"ஹை..... நோக்கும் இது ஞாபகம் இருக்கா? பேஷ் பேஷ். அதுலே கமல்..... ராமா ராமா.... எப்பப் பார்த்தாலும் என்ன சினிமா வேண்டிக்கிடக்கு:( இப்பச் சொல்லு..... எங்கே தப்பு பண்ணோம்? "

"என்ன...... பண்ணோமா? நானும் உடந்தையா? "

"இல்லையா பின்னே? அவனன்றி ஒரு அணுவும்....... அது இருக்கட்டும்.....ஒரு கப் மாவுக்கு ரெண்டரைத் தண்ணின்ற கணக்குலே மேல்மாவு கிளறினது சரியாத்தானே வந்தது? "


"ஆனா....நீ பூரணம் பண்ணாம பர்ஃபி பண்ணப்பவே எனக்குத் தெரிஞ்சு போச்சு இந்த வருசமும் நீ என்ன 'சோதிக்க'த்தான் போறேன்னு."

"இப்பச் சொல்றீரே.... அப்பவே சொல்றதுக்கென்ன? வாயிலே கொழுக்கட்டையா வச்சுருந்தீர்? "

"சரியாப்போச்சு. என் ஹேப்பி பர்த்டேவுக்கு முதக் கொழுக்கட்டை இந்த முப்பது வருசமா எப்பவுமே நீதானே? பாவம்....இன்னிக்குன்னு பார்த்து ங்கொய் ங்கொய்ன்னு விடாம டெலிஃபோன் வேற அடிச்சுக்கிட்டே இருந்துச்சு. இந்த கலாட்டாவில் பாகு முத்திப்போச்சு. "

"தோட்டத்தை சுத்தம் செய்ய ஒரு ஆள் ஏற்பாடு செய்யலாமேன்னு காலையில் கேட்டா இன்னிக்கே வந்து பார்க்குறேன்றார். இப்போ விட்டுட்டா அப்புறம் ஆளைப் பிடிக்கிறதே கஷ்டம். இன்று முதல் நியூஸியில் வசந்த காலம் தொடங்கியாச்சே! இதுலே 'இவர்' வேற கண்ணுக்குக் கண்ணா வளர்ந்திருக்கும் காக்டெஸ்ஸை ஒழிச்சுக் கட்டறதுலே குறியா இருக்கார். ஏகத்துக்கும் வளர்ந்துருச்சாம்! அப்படியா????"

"சேச்சே....கூரையை மட்டுதான் தொடறது, அப்படியே அந்த பெட் ரூம் ஜன்னல் கண்ணாடியையும் ......"

"அதைத் தொட்டால் துளசியின் வேற முகத்தைப் பார்க்க நேருமுன்னு மிரட்டவேண்டியதாப் போச்சு. ஒரே ஃபோன் சண்டை! சொப்பு பண்ணும் போதுதான் ஃபோன் வரணுமா? இப்போ ரிஸீவரை டிஷ்வாஷர்லே போட்டு எடுக்கணும்.ஒரே பிச்சுக்! "

" போறது போ..... நல்லவேளையா சேமியாவைக் கேசரியா பண்ணினே. இல்லாட்டா ஐயா குடி அம்மா குடின்னு வாரக்கணக்கா ஃப்ரிட்ஜுலே வச்சுருப்பே:-) "

" உமக்கு எல்லாமே கிண்டலாத்தான் இருக்குவோய்! விசேஷ நாட்களில் ஒரு பாயஸம் வச்சாத்தானே பண்டிகை களைகட்டும்? அந்த நாளிலே எல்லாம் பெரிய பெரிய கூட்டுக்குடும்பங்கள். அண்டாப் பாயஸம் வச்சாலும் கடைசியில் சாப்பிடும் மருமகள்களுக்கு சொட்டு மிஞ்சாது. இப்போ அப்படியா? ரெண்டே பேர் இருக்கும் வீடுகளில் சம்பிரதாயமாச் சமைச்சால், திங்கறது யாரு? சின்ன வயசா என்ன.... எதைத் தின்னாலும் ஜீரணிச்சுப்போக? கொலஸ்ட்ரால்....... நெய் போட்டுக்காதே. சக்கரையா? வேணவே வேணாம். உப்பைக் கட் பண்ணு. இருக்கற (ப்ளட்) ப்ரெஷர் போதாதுன்னு இந்தமாதிரி ப்ரெஷர்கள் வேற. ஒன்னும் போடாம எப்படித்தான் சமைக்கிறது? அததுக்கு அததைப் போட்டால்தானே ருசி?"

" ருசின்னதும் ஞாபகத்துக்கு வருது.... அந்த சன்னாவை மட்டும் ரொம்ப நல்லா வேகவச்சுடறே! சுண்டலுக்கு ரெண்டு மொளகாய........."


" 'மூச்' பேசப்டாது. எல்லாத்துலேயும் தாளிச்சுக் கொட்டணுமா? எண்ணெய் வேற....... அதான் ஹெல்தியா இருக்கட்டுமேன்னு உமக்கு(ம்) பாயில்ட் சன்னா. லேசா உப்பைக் காமிச்சுருக்கேன். ஸ்லோ குக்கரில் போட்டு வச்சுட்டால் அது பாட்டுக்கு வெந்துட்டுப் போறது. கஷ்டமே இல்லை. என்னோட கஷ்டமெல்லாம் இந்தக் கொழுக்கட்டை இப்படிப் படுத்துதேன்னுதான்:( நல்லா ப்ராக்டீஸ் செஞ்சுக்கணுமுன்னா...."

" எப்படிப் பண்ணுவே? இதென்ன இட்லி தோசையா எப்பப்பார்த்தாலும் பண்ணிண்டே இருக்க? வருசத்துக்கு ஒரு தடவை.... இந்த வருசம் சரியா வரலைன்னா... அடுத்த வருசம் சரியா வருமுன்னு ஆனாலும் உனக்கு ஏகப்பட்ட நம்பிக்கை!"

" என்ன புள்ளையாரே.... இப்படிச் சொல்றீர்? நம்பிக்கைதானே வாழ்க்கை? பொழைச்சுக்கிடந்தா முப்பத்தியொன்பதாம் தடவை மூடக்கொழுக்கட்டை பண்ணினால் ஆச்சு. அது foolproof! சொப்பும் பூரணமும்தானே பிரச்சனை, இல்லையோ?"

" பிரச்சனைன்னு நினைச்சால் எல்லாமே பிரச்சனைதான். இல்லைன்னு நினைச்சுக்கோ..... எல்லாம் ஓடியே போச்:-) "

" ஆமாமாம் எதாவது சமாதானம் சொல்லி என் வாயை அடைச்சுருவீரே!
செஞ்சு முடிச்சதையெல்லாம் கொண்டுப்போய் படைக்கிறேன். முன்னேபின்னேதான் இருக்கும். கோச்சுக்காம எடுத்துக்குவீராம். இங்கேயே நல்லதாக் கிடைச்சுட்டா இதுக்கு அப்புறம் லோகம் முழுசும் கிடைக்கும் படையல் ருசிக்காது. இன்னும் 24 மணி நேரம் அங்கங்கே உமக்குக் கொழுக்கட்டைதானாக்கும், கேட்டோ? "


வாசக்கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும் குடுகுன்னு ஓடி 'தேமே'ன்னு மணைமேல் உக்காந்துக்கறார் 'தங்க'ப்பிள்ளையார்.

" என்னம்மா ரொம்ப வேலையா? எனக்கும் ஒரு மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு. பத்து நிமிசத்தில் சாப்ட்டுக் கிளம்பணும்."

ஹேய்.... அதெல்லாம் ஒன்னுமில்லை. பிரசாதம் செஞ்சாச்சு. சாமிக்குக் கண்ணுலே காட்டிட்டு நீங்க எடுத்துக்கலாம்.

நைவேத்யம் ஸமர்ப்பியாமி!!!!!

அன்பர்கள் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.


30 comments:

said...

படத்தில பார்க்கும் போது நன்னயிருக்கிற மாதிரி இருக்கே.
பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்..

said...

வாங்க ராம்வி.

பூனாவில் இருக்கும்போது வாங்கின ஒரு மோதக அச்சு இருக்கு. அதை வச்சு ஃபைனல் டச் கொடுத்தாச்சாக்கும்:-)

உங்களுக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.

said...

அங்க முதல்ல சாப்பிட்டாரில்லயா.. குட்..

பிள்ளையார் பர்த்டேக்கு ஸ்கூல் லீவு போடலாமான்னான்.. இல்லடா பார்டிய சாயங்காலம் வச்சிக்கலாம் நீ போய்ட்டுவான்னேன்..:)

said...

அதானே.. மோதக அச்சு எதுக்கு இருக்காம் :-)))

ஜொலிக்கிறார் பிள்ளையார்.

said...

தங்கப்பிள்ளையார் வாகனத்தோட அழகாகவே இருக்கார். பலகாரம் எல்லாம் பார்க்கும்போதே ரொம்ப டேஸ்ட்டாத் தெரியுதே.
அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்

said...

பிறந்த நாள் அதுவா...டக்குன்னு சாப்பாடு கொடுக்கமால் இம்புட்டு பேசிட்டு சுண்டல் கொடுத்திங்களா ! ;-))

டீச்சருக்கும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ;-)

said...

:))) பர்த்டே பாயோட டிஷ்கஷன் செஞ்சுகிட்டே இருந்தீங்களா?

மோதகம் செய்ய மேல்மாவுக்கு 2 1/2 தண்ணி ஜாஸ்தின்னு நினைக்கிறேன். நான் 2 தான் விடுவேன். கிளறும்பொழுது இளகலா இருக்கும் போல இருந்தா கொஞ்சம் ட்ரை மாவு சேர்த்து கிண்டி விட்டால் ரெடி.

(என் மெத்தட் இது)

said...

இந்த மாதிரி எழுதறது நல்லா இருக்கே :)

said...

இந்த சொப்பு செய்ய கஷ்டப்பட்டுதான் ரொம்ப வருஷம் முன்னாடியே சொப்பு மோல்ட் விக்க ஆரம்பிச்சாங்க!

ஆனா மோல்ட் மட்டும் இருந்தா போதுமா? மாவு ஒழுங்கா வந்தாதானே மோல்ட் - க்கு வேலை :)))

”கொழுக்கட்டை கதைகள்” ஒவ்வொரு வீட்டிலும் நிறைய இருக்கிறது... ஒரு சீரியலே எடுக்கலாம்... :)))

said...

வாங்க கயலு.

வடக்குலே விநாயகனுக்கு விடுமுறை இல்லையா? அடடா.....

அண்ணாத்தையோட பார்ட்டின்னா அமர்களமா இருந்துருக்குமே!

said...

வாங்க அமைதிச்சாரல்.

அச்சு முப்பத்தியஞ்சு வருசப் பழசு. நல்லா 'கிண்'ன்னு காத்திரமா பெரிய சைஸ், புள்ளையார்
மாதிரி:-)

அவருக்கென்னப்பா தங்கமானவர். அதான்...... ஜொலிஜொலி ......

said...

வாங்க பிரகாசம்.

தேங்காய் வெல்லம் ஏலக்காய் மூணும் சேர்ந்தாலே தனி ருசி வந்துருதே!

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க கோபி.

நான் பாட்டுக்குக் கொழுக்கட்டையோடு போராடுவதைப் பார்த்த 'பர்த்டே பாய்'க்கு மனசு தாங்கலை. அதான் பேச்சுக் கொடுத்துக்கிட்டே என் வேலையை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தாருப்பா:-))))

உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

பாயோடு டைம்பாஸ் பேச்சுதான்:-)

ரெண்டு மடங்கு விட்டு போனவருசம் கற்கொழுக்கட்டையாப்போய் அதை ப்ளூ லீஃபில் மசிக்க, சரியா கண்டெய்னரைப் பொருத்தாம அது அந்த ப்ளாஸ்டிக் புஷ்ஷை அரைச்சுத் தேய்ச்சுருச்சு.
அதான் ராதா சொன்னபடிக்கு ரெண்டரை ஆக்கினேன்!

said...

வாங்க இளா.

மூச்சு வாங்கிக்க, அப்பப்ப இப்படி எழுதுன்னு ஐடியாக் கொடுத்ததே புள்ளையார்தானாக்கும்:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இப்பல்லாம் ப்ளாஸ்டிக்லே சின்ன சைஸா அச்சு வருதுல்லே? நான் ஒரு கடையிலே பார்த்தும் வாங்காம வந்துட்டேன்னா.... என்ன தைரியம் பாருங்க!!!!

மோல்டும் மாவும் என்ற தலைப்பில் மெகா சீரியலுக்குக் கதை ரெடி பண்ணிடலாமா? :-))))

said...

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்..

said...

உங்க பதிவைப் படிச்சு எனக்கு ஒரு ஆறுதல்!! ‘முப்பத்தெட்டேஏஏஏ’ இப்படிப் புலம்பும்போது, நீ ஆஃப்டரால் ‘பதினஞ்சுதானே’, வருத்தப்படாதேன்னு மனசு சொல்லுது!! ;-))))))

வருஷா வருஷம் நான் பெருநாளைக்கு மட்டும் செய்யும் ‘கிண்ணத்தப்பம்’ கதையும் இப்படித்தான்!! இந்த வருஷமும் கொஞ்சம் கல்லாகிப் போச்சு, தேங்காய்ப் பால் போதாதுபோல!! :-))))))

said...

செப்டம்பர் ஐந்துக்கு இன்னிக்கே வாழ்த்துகள். :0)
பிள்ளையாரும் கொழுக்கட்டையும் ஜோராப் போஸ் கொடுத்து இருக்காங்க.
உங்க வீட்டிலியே பிள்ளையாருக்கு இத்தனை கிடைச்சுதுனா இந்த ஊருக்கு லேட்டாதான் வந்திருப்பார்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ஹுஸைனம்மா.

வாழ்க்கை பூராவும் அனுபவப்பாடம் என்று இதைத்தான் சொல்லிட்டுப் போயிருக்காங்க முன்னோர்கள்:-))))))))))

எப்படியும் இருவதுக்குள் வெற்றி பெற வாழ்த்துகின்றேன்!!!!!

said...

வாங்க ஹுஸைனம்மா.

வாழ்க்கை பூராவும் அனுபவப்பாடம் என்று இதைத்தான் சொல்லிட்டுப் போயிருக்காங்க முன்னோர்கள்:-))))))))))

எப்படியும் இருவதுக்குள் வெற்றி பெற வாழ்த்துகின்றேன்!!!!!

said...

வாங்க வல்லி.

டீச்சருக்கு வாழ்த்துகளா? இருக்கட்டும் இருக்கட்டும் நல்லது:-)

எங்கூர்லே இருந்து இப்போ நீங்க இருக்கும் ஊருக்கு வர எப்படியும் எட்டு மணி நேரம் ஆகுமே. நிதானமா அவருக்கும் ஜீரணம் ஆகிரும்:-)

said...

வாங்க வல்லி.

டீச்சருக்கு வாழ்த்துகளா? இருக்கட்டும் இருக்கட்டும் நல்லது:-)

எங்கூர்லே இருந்து இப்போ நீங்க இருக்கும் ஊருக்கு வர எப்படியும் எட்டு மணி நேரம் ஆகுமே. நிதானமா அவருக்கும் ஜீரணம் ஆகிரும்:-)

said...

தங்கபிள்ளையார் ஜொலி ஜொலிக்கிறார்.

பர்த்டே பார்ட்டி சூப்பராயிருக்குங்க. பர்த் டே கொண்டாடும் பயலுக்கு எல்லாமே ரொம்ப பிடிச்சிருந்ததாம்.

அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்து, வாணலியில் 2 தண்ணி ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கிளறி விடுவேன். இது நான் செய்யும் முறை.

வீட்டருகில் இருக்கும் பிள்ளையாருக்கு வேண்டுதலுக்காக இரு முறை இப்படித் தான் 108 கொழுக்கட்டைகள் செய்து கொடுத்திருக்கிறேன்.

said...

வாங்க கோவை2தில்லி.

108 ஆஆஆஆஆஆஆ!!!!!

இங்கே ஒரு பத்துப்பனிரெண்டுக்கே தாளம் போடறேன்:(

செய்முறை விளக்கத்துக்கு நன்றிப்பா.


இப்போதைக்கு அரைக்க சாதனம் ஒன்னும் இல்லை. வீட்டுச்சாமான்கள் வந்து சேர இன்னும் ஒன்னரை மாதம் ஆகுமாம்.

ஆட்டுக்கல் வரட்டும் அரைச்சுருவோம்:-))))

said...

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

said...

தாமதமான சதுர்த்தி , டீச்சர் தின வாழ்த்துக்கள்!!
தும்பிக்கையான் மிகவும் நம்பிக்கையோடு காத்திருந்ததுக்கு மூணு பிரசாதங்கள் கிடச்சிருக்கே!!!

கொழுக்கட்டை மாவு தயாரிக்க என்னோட 'கொழுக்கட்டை 'பதிவில் போட்டிருக்கேனே? பாக்கலையா?
அச்சு பிச்சு எல்லாம் இல்லாமெயே கொழுக்கட்டை செய்வதுதான் சாமர்த்தியம்!!!

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா. உங்களுக்கும் தாமதமாச் சொல்லிக்கறேன் வாழ்த்துகளை.

said...

வாங்க நானானி.

வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

சாமர்த்தியம் இருந்தால் இப்படியா இருப்பேன்!!!!!

நம்மவீட்டுலே இப்படி இருந்தால்தான் உங்க அருமை புள்ளையாருக்குத் தெரியும், ஆமாம்:-))))

இன்னிக்கு அனந்தசதுர்த்தசி பூஜைக்குத் தோழி வீட்டுக்குப் போயிருந்தேன். பிரசாதம் சாப்பிட்டபிறகு வாயையே திறக்கலை. க்ளூட்டேனியஸ் அரிசிமாவுலே கொழுக்கட்டை:-))))))

கப்சுப்!!!!!