Thursday, April 26, 2007

நீ இரங்காயெனில், கிருஷ்ணா !!!

நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 17 )


ஏய் மந்திரமில்லை தந்திரமில்லை, மருந்து மாயம் ஒண்ணுமில்லை......... எல்லாரும் கொஞ்சம் தள்ளி நில்லுங்கப்பா. அட..சொன்னாக் கேக்க மாட்டீங்களா? இந்த மாவாலே ஒரு வட்டம் போடறேன். அதுக்கு அந்தாண்டை இருந்து பாருங்க.யாராவது பாதியிலே இங்கிருந்து போனா அப்படியே ரத்தம் கக்கி செத்துருவான்.......... இப்படியெல்லாம்( இப்படித்தானோ?)ச்சீன மொழியிலே சொல்லிக்கிட்டு இருந்தவரைச் சுத்திச் சின்னதா ஒரு கூட்டம். தரையில் விரிச்ச ப்ளாஸ்டிக்லே சில சாமான்கள். நாட்டு மருந்து?

இன்னொரு பக்கம் ஒரு கட்டு ஊதுவத்தியை ஏத்திவச்சுக்கிட்டு இன்னொருத்தர். அவரைச் சுத்தியும் ஒரு கூட்டம். இது எதோ சாமி கும்பிடற வகையாம். படம் எடுக்க(வே)க் கூடாதுன்னார். இன்னொரு பக்கம் கடைகண்ணிகள். விதவிதமானடெனிம் போட்டுக்கிட்டு அரை உடம்பு பொம்மைகள். பூகி ஸ்ட்ரீட் மார்கெட். எங்கே பார்த்தாலும் மக்கள்ஸ் சாப்புட்டுக்கிட்டே இருக்காங்க. பெரிய ஃபுட் கோர்ட்லே கூட்டம் நெரியுது.
வெய்யிலுக்கு இதமா இளநீர் விற்பனை ஜரூரா நடக்குது.வெறும் ஒரு டாலர்தான். ஜில்லுன்னு குடிக்க அருமை. உள்ளே தேங்காயைச் சுரண்டித் தின்ன ஒரு ப்ளாஸ்டிக் ஸ்பூன். எனக்கு இங்கே ரொம்பப் பிடிச்ச விஷயம் இதுதான். பார்க்கவே சுத்தமா இருக்கு.

இன்னொரு இடத்தில் பெரிய 'சிரிக்கும் புத்தா' வயித்தில் சில்லறையைப் போட்டுட்டு, தலைமுதல் கால்வரை'அவரை'த் தடவிக் கொடுக்கும் இளைஞிகள். அதிர்ஷ்ட தேவதையாம். வயித்துலே சேரும் காசு தர்ம காரியத்துக்குப் போகுதாம். இங்கிலாந்து, ஐரோப்பாவெல்லாம் 'விஷ்ஷிங் வெல், நீருற்று'ன்னு இருக்குல்லே அதைப்போல.அதானே, ச்சும்மா க் காசு கொடு'ன்னா யாருதான் தருவாங்க? 'கொடு, உனக்கு அதிர்ஷடம் வந்துக்கிட்டு இருக்கு'. மக்கள் மனசு பூராவும் 'லோகமந்த்தா ஒக்கட்டே' !!! நம்ம பங்குக்கு நாமும் ஜோதியில் ஐக்கியம். தொப்பையைத் தடவுனப்ப, அவர் குலுங்கிச் சிரிக்கிற மாதிரி இருந்துச்சு:-)

பக்கத்துலே ஒரு பெரிய கடை. புத்தர் சிலைகள் விற்பனை. இங்கேயும் போட்டோ தடா. ரொம்ப அழகான சிலைகள்.ஆனா பயங்கர விலை. பார்த்துக்கிட்டே வரும்போது செந்தாமரைப்பூவில் அமர்ந்து அருள் பாலிக்கும் உருவம். சிகப்பு,பச்சை ஆடை, அழகான அணிகலன்கள்னு. முகம் மட்டும் ச்சீன முகம். அட! ச்சீன மகாலச்சுமி. சிங்கப்பூரின் பெரியகடைன்னு விளம்பரம் வேற.

வெளியே வந்து ஒரு பத்து எட்டு வச்சவுடன் ஒரு பெரிய ச்சீனக்கோயில். அங்கே மேசைகள் போட்டு கட்டுக்கட்டா ஊதுவர்த்தி புகையுது. நம்மளை மாதிரி ஒண்ணு ரெண்டு ஊதுவர்த்தி கொளுத்தறபழக்கமில்லை போல. வாசனை ஒண்ணும் இல்லை(-: வெறும் புகைதான். வழிபாட்டுக்காக வாசலில் பூக்கள் விற்பனை.இதுவரை பார்க்காத நிறங்களில் எல்லாம் தாமரை மொட்டுக்கள். நல்ல இரத்தச்சிகப்பு நிறத்தில்கூட இருக்கு. வாசலில் நல்ல கூட்டம். நமக்கு அனுமதி உண்டான்னு தெரியாம நின்னேன்.

இந்தக் கோயில் இரக்க தேவதைக்காம். தயைக்கு ஒரு தேவதை. ( Guanyin, the Chinese Goddess of Mercy) கோயிலுக்கு வேற ச்சீனப்பெயர்கள் கூட இருக்கு.Kwan Im Thong Hood Cho. Kuan Im Hood Cho Temple. Kwan Im Tong Hoon Che Temple இப்படியெல்லாம் இருக்காம். எனக்குத்தான் பேர் வாயில் நுழையலை(-:இந்தக்கோயில் கட்டுனது 1884லே. அப்புறம் ஒருவாட்டி திரும்பக் கட்டி, இப்ப 1982லே இன்னும் ஜோரா இப்ப இருக்கறமாதிரி கட்டிட்டாங்க. ச்சீனப் புத்தாண்டுக்குக் கூட்டம் குவிஞ்சுருமாம்.

இந்தக் கோயிலுக்கு அடுத்த கட்டிடம் ஒரு கிருஷ்ணன் கோயில். இங்கேயும் வாசலில் நிழலுக்குக் கேன்வாஸ் கூரை. வாசலின் ரெண்டு பக்கமும் கைகூப்பிய நிலையில் நம்ம கருடரும், ஹனுமாரும். இந்தக் கோயிலைக் 'கண்டு பிடிச்சு' எனக்குச் சொன்னவர் கோபால்தான். முந்தி ஒரு சமயம் இந்தப் பக்கம் பொடி நடையா வந்தப்பப் பார்த்துருக்காராம். கைப்பேசியில் படம் எடுத்து அப்பவே அனுப்பி இருந்தார். இங்கேயும் வாசலில் மேசை போட்டு ஊதுவர்த்திக்கட்டுக் கொளுத்திக்கிட்டு இருக்காங்கச் சீன மக்கள்.
அக்கம்பக்கத்துலே இருக்கற கட்டடங்களோடு அப்படியே அடிச்சுப் பிடிச்சு இடம் பிடிச்சமாதிரி இருக்கு இந்தக்கோயில் கட்டிடம்.

1870லே நம்ம மக்கள்ஸ்க்காக ஹனுமான் பீம்சிங்ன்னு ஒரு தனவந்தர் கட்டுனதாம். அப்ப இந்த இடத்துலே ஒருபெரிய ஆலமரம் இருந்துச்சு. உழைக்கும் நம்ம மக்கள் இங்கே மரத்தடியில் வந்து கூடும் வழக்கம். அப்பதான் ஹனுமான் பீம்சிங், இந்த ஜனங்களுக்கு ஒரு வழிபாட்டுக்கு இடம் செய்யலாமுன்னு நினைச்சுச் ச்சும்மா ஒரு மேடைபோட்டு ரெண்டு சிலைகளை வச்சாராம். அப்புறம் அந்த மேடை விரிவாச்சு. இப்ப ஆலமரம் இருந்த சுவடும் இல்லை.கோயில் மட்டும் வளர்ந்து கிடக்கு. ஆலிலைக் கண்ணன்!!!

உள்ளே போனால் அழகான ஒரு ஹால். அதுலே நேரா ஒரு சந்நிதி. கதவு மூடி இருக்கு. பூஜை நேரம் முடிஞ்சு, இனி மாலையில்தான் திறப்பாங்களாம். நுழைவு வாசலில் உள்பக்கமா அழகான சரஸ்வதி சிலை. ஹாலில் ஒருத்தர் எண்ணெய்பாட்டிலும் குத்து விளக்குமா வச்சுக்கிட்டுத் தரையைத் துடைச்சுக்கிட்டு இருந்தார். தமிழ்க்காரர்தான். கோயில் ஊழியர்.போட்டோ எடுக்கலாமான்னு கேட்டுக்கிட்டேன். ஊஹூம்....... கூடாதாம். அப்பச் சரி.

ஹாலில் உட்கார்ந்தோம். நல்ல வழுவழுப்பானச் சுத்தமான பளிங்குத் தரை. இடது பக்கம் ஒரு ச்சின்ன மேடையில் நம்ம ச்சீன மகாலெச்சுமி. முன்னாலே ச்சின்னச் சின்ன அகல் விளக்குகள் நிறைய எரிஞ்சுக்கிட்டு இருக்கு. ஒருச் சீனப்பெண்மணி ரெண்டு கையும் கூப்பி, மண்டி போட்டுக் கண் மூடி எதோ மந்திரம் சொல்லி சாமியை மனம் உருகக் கும்பிடறாங்க. 'நீ இரங்காயெனில் ............... ' ! வெள்ளிக்கிழமை, லச்சுமியைக் கும்பிடறது நல்லதுதானே?

ச்சீனலெச்சுமிக்கு வலது புறம் பெருமாளும் தாயாருமா ஆளுயரச் சிலைகள். ச்சும்மா துணித்திரை போட்டு மறைச்சிருக்கு. நமக்குன்னே பெருமாள் வழக்கம்போல(!!)த் திரையைக் கொஞ்சமா நகர்த்திக்கிட்டார். ஓரப்பார்வையில் கண்டுக்கிட்டார். நானும்தான். விடமுடியுமா? இன்னும் சில சிலைகள் அங்கங்கே இருக்கு. ஆனாலும் என் கண்ணுலேபட்டதே தவிர மனசில் பதியலை(-: உற்சவ மூர்த்திகள்.

அந்தச் சந்நிதிக்கு ஏறிப் போக ரெண்டு படிகூட வச்சுருக்காங்க. உள்ளே சாமி எப்படி இருப்பாரோ? சந்நிதியை வலமாவது வந்துக்கலாமுன்னு வெளியே இடது பக்கம் நுழைஞ்சேன். அம்மாடி.......... மூச்சே நின்னு போச்சு. சுவரில் திருப்பாவை. அதுவும் எப்படி?அழகான ஓவியங்கள். கொஞ்சம் புடைப்புச் சித்திரம்போல இருக்கு. ஒரு ஒன்னரை அடிக்கு ரெண்டடி இருக்கும் ஓவியங்கள். பக்கத்திலே 'மார்கழித் திங்கள்.....' பாட்டு, செதுக்கின பளிங்குக் கல்வெட்டு. அந்தப் பாடலில் வரும் காட்சிக்கு ஏதுவாப் படம். அடுத்து 'வையத்து வாழ்வீர்கள்.......' இப்படியே 30 திருப்பாவைக்கும் பாட்டும் படமுமா அட்டகாசம். சந்நிதிக்குபின்னாலே மூணு பக்கமும் முப்பது பாட்டுக்கள். அட........... என்ன ஒரு ஐடியா? படத்தில் பெண்கள் மூக்கும்முழியுமா, அலங்காரத்தோட பட்டும் ஜரிகையுமா, நகையும் நட்டுமா அடடாடா.......... இதுபோல நான் இதுவரைப்பார்த்ததே இல்லை. பிரமிப்பு தாளலை. அப்படியே தேன் குடிச்ச வண்டா மயங்கித் திரும்ப வந்து சந்நிதி முன் உக்கார்ந்தேன்.
கோயில் ஊழியர் என்னவோ பூஜைச் சாமான்களை வைக்க சந்நிதிக் கதவைக் கொஞ்சமாத் திறந்து உள்ளெ போறார். பட்டுத்திரை பாதி விலகிய நிலையில்........... சாமி!!!!!!! உத்துப் பார்க்க முடியாம கண்ணுலே'சட்'னு தண்ணி கரை கட்டிருச்சு. என்னைப் பார்த்துட்டார். அதுவே போதும். அடுத்தமுறை இங்கே இன்னும் கொஞ்சம் நேரமெடுத்து வந்து ஆராயணும்.

இப்படிக் கிறங்கிக் கிடக்கும் நேரம் இளவயசுப் பெண்கள் சிலர்(எல்லாம் ஒரு இருபது இருந்தாலே ஜாஸ்தி) மேல் தொடைவரை வெட்டிய ச்சின்ன அரைஅரைக்கால் டெனிம் ட்ரவுஸரோடு வந்து ச்சீன லெச்சுமி முன்னே சாஷ்ட்டாங்கமா விழறாங்க.

சல்வார் போட்டுக்கிட்டுக் கோவிலுக்கு வரக்கூடாதுன்னு சொன்ன நம்மூரு ஆன்மீக உபதேசகர்கள் நினைவு மனசில் வந்து போச்சு. கோயிலின் வெளிப்புற மதிள்(ல்) சுவத்தின் உள்பக்கமா, சுவரிலேயே நிறைய சிற்பங்கள் இருக்கு. இடம் பத்தாக்குறையை எவ்வளவு லாகவமா சமாளிச்சுட்டாங்க பாருங்க. ஆனாலும் ஒரு ஆள் தாராளமா வெளியே வலம் வரும் அளவுக்குக் கல் பாவிய பாதை. கோயில் சந்நிதிக்குப் பின்னால் வரப்போகும் விசேஷத்துக்காக நூத்துக்கணக்கான ச்சின்ன அகல்கள் திரி போட்டு வச்சுக்கிட்டு இருக்காங்க ரெண்டு பேர். அழகான அடக்கமான கோயில். கோபாலுக்கு ஒரு நன்றி சொல்லிக்கறேன். வாட்டர்லூ தெரு & மிடில் ரோடு கார்னர்லே இருக்கு இந்தக் கோயில். கோயில் முகப்புக் கோபுரத்தில்
மகாவிஷ்ணு, மகாலக்ஷ்மியைத் திருமணம் செய்யும் காட்சி. சிவன், பார்வதி, பிரம்மா, நாரதர்னு எல்லோரும் வந்து கல்யாணத்தை நடத்தி வைக்கிறாங்க.
நாங்க இருந்த அவ்வளவு நேரமும் ச்சீனர்கள் மட்டுமே வந்து கும்பிட்டுக்கிட்டு இருந்ததைப் பார்த்தோம். மனத்திருப்தியுடன் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். சிங்கை நண்பர் (எழுத்தாளரரும் கூட) சந்திக்க வரேன்னு சொல்லி இருந்தார். அவரோடு கிளம்பி சரவண பவன் வந்தோம். நேத்து இவர் வீட்டுலேதான் பகல் சாப்பாடு. ஆனா இவர் மனைவி (என் தோழிதான். இவுங்களும் சிங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளர்) மட்டும் தான் இருந்தாங்க. வேலையில் இவர் மாட்டிக்கிட்டாராம். அதனாலே இன்னிக்கு மகனோடு வந்தார். எங்ககிட்டே ரெண்டு கேபின் பேக் மட்டும்தான். அதையும் கையோடு கொண்டு வந்தாச்சு. காபி டிபன் ஆனதும் டாக்ஸி எடுக்க நிக்கறோம். ஒண்ணும் கிடைக்கலை. நண்பர்கிட்டே பக்கத்தில் டாக்ஸி ஸ்டாண்டுலே விடச் சொல்லி போய்க்கிட்டு இருக்கோம்.வண்டி எங்கேயும் நிக்காம ஏர்ப்போர்ட்டுக்கே போயாச்சு.

பச்சைக்கலரு சிங்குச்சா, சிகப்புக் கலரு சிங்குச்சா, மஞ்சக்கலரு சிங்குச்சான்னு பல நிறத்துலே புதுக்கட்டிடங்கள் ஏராளமா வந்திருக்கு, சிங்கை பூராவும்.

லாக்கர் ரூமில் இருந்த மற்ற பெட்டிகளை எடுத்துக்கிட்டு 'செக்கின்' செஞ்சு லவுஞ்சுக்குப் போனோம். மறுநாள் பகல் பன்னிரெண்டுக்கு இங்கே வந்து சேர்ந்தாச்சு. சாயங்காலம் நம்மூர் (ஹரே) கிருஷ்ணனைப் போய் கண்டுக்கிட்டோம். இப்போதைக்கு இதுதான் சாஸ்வதம். இல்லையா?

இந்தத் தொடரை இத்துடன் முடிக்கின்றேன்( யாரோ அங்கே பெருமூச்சு விடும் சத்தம் இங்கே கேக்குது:-)...)ஆதரவு தந்த அன்புள்ளங்களுக்கு நன்றி.

முற்றும்.

Wednesday, April 25, 2007

ஆஸ்தராலியா நியூஸிலாந்து தினம்


இது ஒரு மீள் பதிவு.

Australia NewZealand Army Corps Day.

ஒவ்வொரு வருசமும் ஏப்ரல் மாசம் 25 ஆம் தேதி இந்த தினத்தை இங்கே நியூஸிலாந்துலே அனுஷ்டிக்கிறோம். தலைப்பே உங்களுக்கு விஷயத்தைச் சொல்லிடும்.ஆனாலும் அப்படியே விட்டுட்டா நான் 'துளசி'யா இருக்க முடியுமா?


உங்க பள்ளி நாட்களிலே அசோகரின் காலம், பொற்காலம் என்று ஏன் கூறப்படுகிறது என்ற கேள்விக் கட்டாயமா எல்லோருக்கும் ஒருமுறையாவது பரீட்சையில் கேக்கப் பட்டிருக்குமே!
இல்லைன்றவங்க கை தூக்குங்க! இதெல்லாம் ஹிஸ்டரிங்க!!!1915லே உலக மஹா யுத்தம் நடந்ததுன்னு அநேகமா எல்லோரும் சரித்திரப் பாடத்தில் படிச்சிருப்பீங்கதானே! இது முதல் யுத்தம்!
யுத்தம் மஹா மும்முரமா நடந்துக்கிட்டு இருக்கு. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு ஒத்தாசையா இருக்கறதுக்காக நியூஸிலாந்து, ஆஸ்தராலியாவிலிருந்து ராணுவ உதவியாக போர்வீரர்கள் போறாங்க.என்ன இருந்தாலும் தாய்நாட்டுப் பாச உணர்வு போகாதில்லையா?அங்கிருந்து வந்தவங்கதானே இவுங்க!
இப்ப இந்த நாடுகளிலே அரசாங்கம் சுயேச்சையா நடந்துக்கிட்டு இருந்தாலும், இங்கே நாட்டு அதிபர், முதல் குடிமகன்( ப்ரெஸிடெண்ட்) கிடையாது. இப்பவும் கவர்னர் ஜெனரல்தான் இருக்காங்க!
\

இவுங்களுக்கு போஸ்டிங் துருக்கியிலே இருக்கற Gallipoli Peninsula என்ற இடத்துலே. முக்கிய காரணம் கருங்கடலிலே மாட்டிக்கிட்ட கோதுமைக் கப்பலை Dardanelles Straits வழியாக் கொண்டு போகறதுக்கு உதவியா, அந்த ஜலசந்தியைத் திறக்கணும்.நியூஸியிலே இருந்து 8556 வீரர்கள் புறப்பட்டுப் போனாங்க. அதில் முக்காவாசிப் பேரு இளைஞர்கள்.அங்கே யுத்தத்திலே ஈடுபட்டு 2721பேர் 'வீரமரணம்' அடைஞ்சாங்க! மொத்தம் 260 நாட்கள் யுத்தம் நடந்தது.4852 பேருக்குக் காயம்! மீதி ஆட்கள் நல்லபடியா சேதமில்லாம திரும்பி வந்துட்டாங்க!


இவுங்க அங்கே போய்ச் சேர்ந்த நாளுதான் இந்த ஏப்ரல் 25ன்றது! அதுக்கப்புறம் இந்த நாளை நினைவிலே வைக்கணும்,இவ்வளவு ச்சின்ன நாட்டுலே எவ்வளவு தேசபக்தி, ராஜ விசுவாசம், தைரியம் எல்லாம் இருக்குன்னு வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லணுமுன்னு திரும்பி வந்த ராணுவ வீரர்களும், வீராங்கனைகளும் முடிவு செஞ்சு, அரசாங்கமும் இவுங்களோட தேசபக்தியைப் பாராட்டும் விதமா இதை அரசாங்க விடுமுறையாக அறிவிச்சது!மரணமடைஞ்சவங்களை புதைச்சிட்டு,துருக்கியிலேயே ஒரு நினைவு மண்டபம்( வார் மெமோரியல்) கட்டினாங்க.இங்கேயும் எந்தெந்த ஊர்களிலே இருந்து ராணுவ வீரர்கள் போனாங்களொ அங்கெல்லாமும் நினைவு மண்டபம் எழுப்பினாங்க. வீரமரணம் அடைஞ்சவங்க பேருங்களையும் அங்கே செதுக்கி வச்சிருக்காங்க.


Returned Service men & women Association (RSA) இதையெல்லாம் செயல்படுத்தறதுலே கவனம் செலுத்தி எல்லாம் முறைப்படி நடக்க உதவுச்சு!
ஒவ்வொரு வருஷமும், இந்த நாளுலே அதிகாலையிலே அந்தந்த ஊர்களிலே இருக்கற நினைவு மண்டபங்களில் விசேஷமான ப்ரேயரும், அங்கங்கே உள்ள ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடக்கும். அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்வார்கள். லோகல் கம்யூனிட்டி ஆட்களும் ஏராளமா இதுலே பங்கெடுத்துக்குவாங்க.வீரமரணம் அடைந்தவரின் குடும்பத்துக்கு( அவுங்க பரம்பரைக்கு) அன்னைக்கு விசேஷ மரியாதை! அவுங்களும்அவருக்குக் கிடைத்த மெடல் மற்ற சமாச்சாரங்களை நல்லா மினுக்கி எடுத்துக் கொண்டுவருவாங்க!

முதியோர்கள் இல்லத்துலே இருக்கற வயதான ராணுவ வீரர்கள், இந்த நாளுக்கு ஒரு மாசத்துக்கு முன்னேயேஅவுங்க மெடல்களையெல்லாம் பாலீஷ் செஞ்சு, அடுக்கி, ராணுவ உடையோட கம்பீரமா இதுலே பங்கெடுக்க ஆர்வம் காட்டுவாங்க. சக்கர நாற்காலியிலே இருந்தாலும் கம்பீரம் கொஞ்சம் கூட குறையாம, ஒரு பெருமிதத்தோட அன்னைக்கு வலம் வருவதைப் பார்த்தா நமக்குமே ஒரு உற்சாகம் வந்துரும்!நம்ம ஊர் கொடிநாள் போலத்தான் இதுவும். சிகப்புக் கலருலே இருக்கற பாப்பிப் பூ( ப்ளாஸ்டிக் தான்)சட்டையிலே குத்திக்கிட்டு, உண்டியல் குலுக்குவாங்க. காசு போட்டவுடன் நமக்கும் ஒரு பாப்பிப் பூ கிடைக்கும். அன்னைக்கு டெலிவிஷனில் வர்றவுங்க( செய்தி அறிவிப்பாளர், வானிலை சொல்றவுங்க, விளையாட்டு நியூஸ் சொல்றவுங்கன்னு)எல்லாம் பாப்பிப் பூவோட தரிசனம் தருவாங்க! இந்தக் கூட்டத்துலே நாமும் சட்டையிலே பூவோடு இருப்போம்.இந்த 'பாப்பி டே'ன்றது ஏப்ரல் 25 க்கு முன்னாலே வர்ற வெள்ளிகிழமை. அதனாலே இந்த வருசத்து 'டே'20 ஆம் தேதியே முடிஞ்சிடுச்சு! நிறைய வாலண்டியருங்களும், பழைய ராணுவ வீரருங்களுமா எங்கே பார்த்தாலும்,குறிப்பா எல்லா ஷாப்பிங் மால்களிலும் நிறைஞ்சு இருப்பாங்க( இருந்தாங்க!)


அரசாங்க விடுமுறையை எல்லோரும் அனுபவிப்பாங்க. கடைகண்ணிங்கெல்லாம் பகல் 12 மணிவரை மூடி இருக்கணும்.காலையிலே தேவாலயங்களிலும் விசேஷ பூஜை நடக்கும். இதேமாதிரி அண்டைநாடான ஆஸ்தராலியாவிலேயும் நடக்குமுன்னு நினைக்கறேன்.


கல்லிபோலியிலே இருக்கற வார் மெமோரியலுக்கு, இந்த நாட்டுப் பிரதமர் வருசாவருசம் போய், அங்கே நடக்கற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, அரசாங்க மரியாதையைச் செலுத்திவிட்டு வருவார்!நாங்க இருக்கற ஊரான கிறைஸ்ட்சர்ச்சிலே ஊருக்கு நடுவிலே ஒரு வார் மெமோரியல் இருந்தாலும், இங்கேஓடற நதியின் குறுக்காக ஒரு பாலம் கட்டி, அதுக்கு 'ப்ரிட்ஜ் ஆஃப் ரிமெம்பரன்ஸ்'ன்னு பேரு வச்சிருக்காங்க.அங்கே ஒரு நுழைவாயில் ஒண்ணு, கற்களால் கட்டி, ஒவ்வொரு கல்லுலேயும் இந்த போரிலே ஈடுபட்ட நாட்டோட பேரையெல்லாம் செதுக்கி இருக்காங்க! வருசாவருசம் இதுக்கு பெயிண்ட் அடிச்சு, இந்த இடத்தை அழகுபடுத்தி வைப்பாங்க. இதுவும் ஒரு டூரிஸ்ட் அட்ராக்ஷந்தான்!


இங்கிருந்து டூரிஸ்ட்டுங்களைக் கொண்டுபோய், கல்லிப்போலியைச் சுத்திக் காமிச்சு, அங்கே 'அன்ஸாக் வாக்'கொண்டு போய் திருப்பிக் கூட்டிட்டு வர்றதும் இப்ப ஆரம்பிச்சு,நல்ல பிஸினெஸா ஓடிக்கிட்டு இருக்கு!இப்ப 90 வருசமாச்சு. நூறாவது ஆண்டு விழாவை அட்டகாசமாக் கொண்டாடுறதுக்காக இப்பவே தீவிரமாத் திட்டம் தீட்டறாங்களாம்.
எது எப்படி இருந்தாலும், ராணுவம்ன்னு சொல்றது ஒரு நாட்டுக்கு எவ்வளவு தேவையானதுன்னு உங்களுக்கேத் தெரியும்.


உலக நாடுகளிலே எதுவானாலும் சரி, தாய் நாட்டுக்காக உயிரிழந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தறது அந்தந்த நாட்டுலே இருக்கற ஒவ்வொரு குடிமகன்/மகளுக்கும் கடமை இல்லையா?


ராணுவ வீரர்கள் செய்யற பணி நிஜமாவே மகத்தானதுதான்!!!!

Monday, April 23, 2007

காணக் கிடைத்ததே.............

நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 16 )

குதிரைக்குக் கண்பட்டை கட்டுனது போல நானுண்டு என் ச்சீனு உண்டுன்னு இருந்ததை இன்னிக்கு மாத்திக்கலாமுன்னு நானும் என் கண்பட்டையைக் கழட்டுனேன். கோயிலுக்கு இடது பக்கம் கொஞ்சம் ஒரு 200 மீட்டர் போனா ஒரு காளியம்மன் கோயில்இருக்கு. முதல்முறையா அங்கே நுழைஞ்சோம். ஸ்ரீ வடபத்ர காளியம்மன். பாருங்க, பேருலேயே 'வ(டை) ட' இருக்கு!ஆனாலும் எப்படி இத்தனை வருஷம் விட்டு வச்சேன்? சிராங்கூன் ரோடு ஆரம்பத்துலே இருக்கும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலின் அதே செட்டப்தான் இங்கேயும். ஆனா அங்கே இருக்கறது மாதிரி அவ்வளவாக் கூட்டம் இல்லை. அதான் போன பதிவில் சொன்னதுபோல மக்கள்ஸ் முஸ்தாஃபாவோட நின்னுடறாங்க.


நடுவில் சந்நிதிகளில் அம்மன், வலது பக்கம் விநாயகர், இடதுபக்கம் முருகர்னு இருக்காங்க. மண்டபத்தின் இடது பக்கம் கலை நிகழ்ச்சிகள் நடத்தத் தோதா ஒரு அரங்க அமைப்பு. அதுலே புள்ளையார்கள் இசைக்கருவிகளை வாசிக்க,நர்த்தன விநாயகர் நடுவிலே ஆடறார். அம்மன் சந்நிதிக்கு எதிர்ப்புறம் மஹா விஷ்ணுவின் வர்ணச் சிலை. அதுக்கு முன்னாலே பிரமாண்டமான ஒரு உண்டியல். அப்புறம் 'பெருமாளும், தாயாரும், ஆண்டாளும் அனுமாரும்'னு மூர்த்தங்கள். வெள்ளிக் கவசங்களும், தங்கக் கிரீடங்களுமா ஜொலிப்பு. ச்சும்மாச் சொல்லக்கூடாது.......
சிங்கையில் நம்ம சாமிகளும் வளமாவே இருக்கு. கோயிலுக்கு கொடுக்கற மனசு இருக்கும் மக்கள். கோயிலும் கிடைக்கும் வருமானத்தைப் பலவிதங்களில் நல்லவிதமாகவே செலவு செய்யுது. கோயில் சொத்தைக் கொள்ளையடிக்கும் புத்தி இல்லைன்றதே ஒரு சந்தோஷமான செய்திதானே?

உள்ளூர் குடும்பம் ஒண்ணு எதோ விசேஷ பூஜைக்கு அங்கே ஆயுத்தமா இருந்துச்சு. பூசாரி ஒருத்தர் சின்னதாஒரு ரெடிமேட் அக்னிகுண்டத்தில் தீ வளர்த்துக்கிட்டு இருந்தார். மடியில் இருந்த குழந்தைக்குப் பிறந்தநாள் போல.

இந்தக்கோயிலில் வெளியில் காலணிகளை விட அருமையான இடம் அமைச்சு இருந்தாங்க. மத்த கோயில்களில் அப்படியப்படியே வாசலில் விட்டுட்டுப் போறதுதான்(-: இங்கேயும் கோயில் பராமரிப்பு ரொம்ப நல்லா இருக்கு.

அப்படியே அராப் தெருவரை போய்வரலாமுன்னு அங்கிருந்து கிளம்பி, ஒரு ச்சேஞ்சா இருக்கட்டுமுன்னு சரவணபவன்( சிங்கைக்கிளை Belilios street)லே காலை உணவை முடிச்சுக்கிட்டுப் போனோம்.'லிட்டில் இண்டியா'ன்னுபேரு வச்சுக்கிட்டு இருக்கும் இந்தப் பகுதிகளில் , ரொம்ப நீளமாப் போகும் சிராங்கூன் ரோடுக்கு ஆதி, அந்தமுன்னு( ச்சும்மா அந்தமுன்னு சொல்லி வச்சுருக்கேன். இந்த ரோடு நிஜமாவே ரொம்ப நீளம். அது பாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கு, நாட்டின் எல்லை வரை) ரெண்டு பக்கமும் காவல் தெய்வங்களா நிக்குறாங்க நம்ம வீரமா காளியும் வடபத்ர காளியும். இதுலே வீரமா காளியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் வரும் குறுகிய தெருவிலேதான் சரவண பவன்.


இதோ உங்களுக்காக வீரமா காளியம்மன் கோவில் முகப்பு.

கோமளவிலாஸை இன்னும்விடலைன்னாலும், இப்ப வரவர அங்கே தரம் கொஞ்சம் இப்படியப்படின்னு இருக்கோன்னு தோணுது. இந்த 23 வருஷத்துலே அங்கே ருசியில் ஏகப்பட்ட மாற்றங்கள் மெல்ல வரத்தொடங்கி இருக்கு. மாறாதது இப்பவுமங்கே குடிக்கத் தண்ணீர் கொண்டுவந்து மேஜையில் வைக்கும் (சீன)பெரியவர். இந்த ருசி மாற்றம்கூட நாங்கள் உணரத் தொடங்குனது இப்ப சமீபத்துலே. பொதுவா இங்கே இருந்து போகும்போது, கா.மா.க.விழுந்த கதைதான்:-)))) இப்ப ஒரு ஒன்னரை மாசம் ச்சென்னைச் சாப்பாட்டுக்கு நாக்கை வளர்த்து வச்சுக்கிட்டதாலெ வந்த வினை.

அராப் தெருக் கடைகளில் சில. வரப்போகும் ச்சீனப்புத்தாண்டுக்கான அலங்காரங்கள் கொட்டிக்கிடக்கு.

ஒரு கடையில் நம்ம 'ஆள்' இருக்கார்.


அராப் தெருக் கடைகளில் புகுந்து புறப்பட்டுக்கிட்டு இருந்தப்ப ஒலி பெருக்கியில் மக்களை தொழுகைக்குக்கூப்புடும் அழைப்பு. மஸ்கட் தெருவில் இருக்கும் சுல்தான் மசூதியின் கிண்ணக்கூரை உண்மையிலேயே தங்க நிறத்தில் பளபளன்னு ஜொலிக்குது, சிங்கப்பூரின் நட்டநடுப்பகல் வெயிலில். ரொம்ப அழகான கட்டிடம்.

சிங்கப்பூர் பிரிட்டிஷார் வசம் இருந்த காலக்கட்டத்தில் ஜோஹுர் சுல்தானுக்கு இங்கே ஒரு இடம் ஒதுக்கப்பட்டுச்சாம்.அங்கே அவர் ஒரு அரண்மனை கட்டி இருந்துருக்கார். அப்புறம் அதுக்குப் பக்கத்துலேயே, வழிபாட்டுக்குன்னு ஒரு மசூதி கட்டிக்கலாம்னு கட்டி இருக்கார். 1824 லே ஆரம்பிச்சு 1826 லே கட்டி முடிச்சுட்டாங்க. கிழக்கிந்தியாக் கம்பெனி சிங்கப்பூர்லே யாவாரம் பண்ணிக்க அனுமதி கொடுக்கறதாலே அவுங்க சுல்தானுக்குக்காசு ( கப்பமோ?)கட்டணும்னு ஒரு ஒப்பந்தம் ஆச்சு. அந்த ட்ரீட்டியிலே இவர்தான் கையெழுத்துப் போட்டாராம். கம்பெனி இவருக்கு மூணாயிரம் டாலர் கொடுத்துச்சாம். அதைத்தான் வச்சு இந்த மசூதி கட்டுனாராம்.

இந்த மசூதிக்கு நூறு வயசுவரை இங்கேதான் வழிபாடு நடந்துச்சு. அதுக்கப்புறம்தான் கட்டடம் ரொம்ப பழசாப் போச்சு,பழுது பார்க்கணுமுன்னா ஏகப்பட்ட செலவு, இடமும் பத்தலை, இன்னும் கொஞ்சம் பெருசாக் கட்டலாமுன்னு இப்ப இருக்கறதைக் கட்டி இருக்காங்க. 1928லே கட்டி முடிச்சது இப்பவும் பிரமாண்டமா வசீகரிக்குது. அறுபதுகளுக்கு நடுவுலே கொஞ்சம் மராமத்து பார்த்துருக்காங்க.

பொது மக்கள் உள்ளெ போய்ப் பார்க்க அனுமதி இருக்குன்னாலும், இன்னிக்கு வெள்ளிக்கிழமை அவுங்களோட விசேஷத் தொழுகை நடக்கும்போது நாம தொந்திரவா இருக்கவேணாமுன்னு வெளியிலேயே சுத்திப் பார்த்தோம். பிறகு 'சிம் லிம்ஸ்கொயர்'க்கு நடந்து வந்தோம். வரும் வழியில் 'என்னம்மா.... என்னைக் கண்டுக்காமப் போறே?'ன்னு கேக்கற மாதிரிலூர்து மாதா தேவாலயம் நிக்குது. ரொம்பவே அழகான சர்ச். வெளியே வலது பக்கம் தனியா ஒரு மேடை அமைப்புலேமாதா நின்னுக்கிட்டு இருக்காங்க.

1888 லே கட்டுனதாம். ஜப்பான்காரங்க போட்ட ரெண்டு குண்டு இங்கே விழுந்தாலும், அற்புதமுன்னு சொல்லும்படி இந்த தேவாலயத்துக்கு ஒண்ணுமே ஆகலையாம். ரோமன் கத்தோலிக் பிரிவைச் சேர்ந்தது இது.
பாண்டிச்சேரியிலே இருந்து இங்கே வந்து தங்கிட்டத் தமிழ்க்காரங்களுக்காகவே இது கட்டப்பட்டதாம். பிரான்ஸ் நாட்டுலே இருக்கற லூர்து மாதா கோயில் டிஸைனை அப்படியே அனுசரிச்சு இதைக் கட்டுனாங்களாம். பால்வெள்ளையிலே ஒரு அன்னம்போல நிக்கும் தேவாலயம் பார்க்க ரொம்பவே அழகா இருக்கு. உள்ளே போய் அமைதியா அஞ்சு நிமிஷம் சாமி கும்பிட்டுக்கிட்டு, வெளியே வந்து லூர்து மாதாவையும் நமஸ்காரம் செஞ்சுக்கிட்டு அப்படியே நடந்து 'சிம் லிம் ஸ்கொயர்' போய்ச் சேர்ந்தோம். கட்டிடத்துக்குள்ளே போகலை. இடது பக்கம் இருக்கும்Bencoolen தெருவைக் கடந்து ஆல்பர்ட் செண்ட்டர், காம்ப்ளெக்ஸ் இருக்கு பாருங்க அதுக்குள்ளே போனோம்.

தொடரும்..........

Friday, April 20, 2007

கண்ணே, உனக்கிந்த கதியா?


நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 15 )

வெள்ளிக்கிழமை, காலைநேரம். தொடர்ந்து இன்னிக்கு மூணாவது நாளா நம்ம ச்சீனுவைப் பார்க்கிறேன். இன்னிக்குப் பார்க்கறதுதான் இப்போதைக்குக் கடைசி. சாயந்திரம் கிளம்பிடறோம். உல்லாசமா நடந்து கோயில் மண்டபத்துலே ஏறிப்போய் பார்க்கறேன், 'பக்'ன்னுச்சு நெஞ்சு. அலங்காரப் பிரியனான எம் பெருமா(ன்)ள் இப்படி ஒண்ணும் போட்டுக்காமஅசட்டையா இடுப்பில் ஒரு வேட்டியோடு நிக்கறார், ஏதோ இப்பத்தான் குளிச்சு முடிச்சு பாத்ரூமிலே இருந்து வந்தமாதிரி!கழுத்துலே மட்டும் ஒரே ஒரு மாலை,ச்சும்மா பெயருக்கு. சாமிக்கு ப்ரபைகூட இல்லையே! தலைவாரிக்க வரமாட்டேன்னு முரண்டு பிடிக்கும் குழந்தை போல இது என்ன கோலம்? இதென்ன தலை இத்தனை ச்சின்னதா இருக்கு? நெத்தித் திருமண் மட்டும் இல்லைன்னா எனக்கே(!) இது யாரோன்னு சந்தேகம் வந்துருக்கும், சினிமாக்காரங்களை மேக்கப் இல்லாமப் பார்த்து இது யாரோன்னு குழம்புறதைப்போல. இது எதையும் கண்டுக்காம, முன்னாடி பெஞ்சுலே உற்சவமூர்த்தி வழக்கம்போல் அலங்காரத்துடன்.

''என்னடா ஆச்சு? ஏன் இப்படி?' ஒண்ணும் சொல்லத் தோணாமல் அர்ச்சனைச் சீட்டை நீட்டுனேன். பட்டர் அர்ச்சனையை முடிச்சுட்டுப் பிரசாதம் கொடுத்தார்.சந்நிதி முன்னே உக்கார்ந்து உத்துப் பார்த்துக்கிட்டே இருக்கேன். சொல்லமுடியாத துக்கம் தொண்டையை அடைக்குது. சில வினாடிகளுக்கு மேலே தாங்கமுடியாமல் கரகரன்னு கண்ணீர் வழிஞ்சோடுது. அதை இவர் பார்க்காம இருக்கணுமேன்னு முகத்தைத் திருப்பிக்கிட்டாலும் திடீர்னு வந்த கேவல் காட்டிக் கொடுத்துருச்சு.நல்லவேளை..... கோவிலில் கூட்டமே இல்லை. நாங்க ரெண்டுபேர் மட்டும்தான். மணி ஒம்பதாகுதே....... எல்லாரும்வேலைக்கு அரக்கப்பரக்க ஓடிக்கிட்டு இருப்பாங்க.

கோபால் திடுக்கிட்டு போன முகத்தோட என்னம்மா, என்ன ஆச்சுன்றார். எனக்கு ஹார்ட் அட்டாக் நெஞ்சுவலியோன்னு அவருக்கு பயம். சாமிப் பக்கம் கை காமிச்சுக்கிட்டே,'பாவம் பெருமாளுக்கு ஒண்ணுமே இல்லை'ன்னு அழறேன். அவனைப்பத்தி ஏன் கவலைப்படறே? நம்மளைப் பத்திக் கவலைப்படு'ன்னு திருவாய் மலர்கிறார். கொஞ்சம் அழுகையை முடிச்சுக்கிட்டு,மனசைத் தேத்தினப்புறம் அங்கே மண்டபத்தில் ஒரு ஓரமா உக்கார்ந்திருக்கும் பட்டரிடம் 'ஏன் இன்னைக்குப் பெருமாள் ஒண்ணுமே போட்டுக்காம இப்படி மூளியா இருக்கார்?'னு கேட்டேன்.

'இன்னிக்கு வெள்ளிக்கிழமையாச்சே. அதான் நேத்ர தரிசனம்' புன்முறுவலோட சொல்றார் பட்டர். 'உச்சிப்பூஜை முடிஞ்சவுடன் பழையபடி எல்லா அலங்காரமும் செஞ்சுருவோம். சாயங்காலம் வாங்க. ஜொலிப்பார்'

நேத்ர தரிசனம்னு சொன்னா என்னன்னு தெரியலை. ஒருவேளை கண்ணை மறைச்சுப் போட்டுருக்க நாமத்தை இன்னிக்குப் போட்டுக்காம 'கண்ணைத் திறந்து' நம்மளைப் பாக்கறாரோ? இல்லே நம்ம நேத்திரத்தால் நாம் அவரை ஒரிஜனல்ரூபத்தில் பார்க்கறதாலா? ஏறக்குறைய 23 வருஷமா சிங்கைச்சீனுவைப் பார்க்க வந்திருந்தாலும் வெள்ளிக்கிழமையா அமைஞ்சது இதுதான் முதல்முறை. எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டு நகைநட்டு(?)ப் போட்டுக்காம ஹாயா இருந்தகாலங்கள் நினைவுக்கு வந்துச்சு.

இங்கே கோயில்களின் சுத்தத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. எல்லா இடங்களும் பளிச். தூண்களில் இருக்கும்அலங்காரச் சிற்பங்களும் சரி, மேல் விதானத்தில் இருக்கும் ஓவியங்களும் சரி எப்போதும் வர்ண மெருகு கலையாமல் எதோ இன்னிக்குத்தான் வரைஞ்சு வச்ச்மாதிரி இருக்கு. அதிலும் மதுரை மீனாட்சி,என்ன களையான முகம்! அண்ணனை நேராப் பார்க்கறாப்போல மூலவரை நோக்கி இருக்கும் வண்ண ஓவியம் முன் மண்டபத்தூணில்.அருமையான பராமரிப்பு. கோவில்களில் பட்டர் 'தேமே'ன்னு இருக்கார். எல்லோரையும் ஒரேவிதமாத்தான் நடத்தறார். அவுங்க கண்களிலும் பெருந்தன்மை இருக்கு( என்னுடைய தோணலோ?)

வெறும் 60 காசுக்கு ஒரு அர்ச்சனைச்சீட்டு. அர்ச்சனைன்னா பெருசா ஒண்ணுமில்லை. ரெண்டு ஸ்லோகமோ, சஹஸ்ரநாமத்துலே நாலு வரியோ சொல்லி ஒரு தீபாராதனை. பிரசாதமா கொஞ்சம் உலர்ந்த திராட்சை( ச்சின்னச் சின்ன பாலித்லீன் பையிலே அஞ்சு கிராம் எடை வரும் அளவு. எல்லாம் மடியா, மிடில் ஈஸ்ட்டுலே இருந்து வருதுன்னு ரெண்டு கிலோ அட்டைப்பெட்டி சொல்லுது) போதுமே! இதுவே தாராளம். அங்கே கோயில் புறாக்களுக்கு இது ரொம்பப் பிடிச்சுப்போச்சு:-)

இந்தக்கோயில் அங்கே அரசாங்கத்தின் இந்து எண்டோவ்மெண்ட் போர்டின் நேரடிப்பார்வையில் இருக்குன்னு கோயிலைஒட்டியே இருக்கும் போர்டு ஆபீஸில் இருக்கும் நண்பர் சொல்லி இருக்கார். போனவருஷம் கும்பாபிஷேகம் நடந்துருக்கு.பக்கத்துலேயே ஒரு பெரிய ஹால் இருக்கு. கல்யாணம் போன்ற வைபவங்களுக்கு வாடகைக்குக் கிடைக்குது. சிராங்கூன் ரோடுலெ வழக்கமா இருக்கும் சுற்றூலாப் பயணிகள் கூட்டம் முஸ்தாஃபா செண்டரோடு நின்னு போகுது. ஃபேரர் பார்க் ஸ்டேஷனுக்கு இந்தப் பக்கம் யார் மேலேயும் இடிச்சுக்காம 'ஹாயா'வே நடக்கலாம்.

சனி ஞாயிறுகளில் இந்தக் கோவிலில் கூட்டம் ரொம்ப இருக்காம். நானும் ஒரு சனிக்கிழமை அதிகாலை அஞ்சுக்குப் போயிருக்கேன். சுப்ரபாத சேவை நல்லா இருக்கு. இங்கே கோயிலில் மூலவரையும் படம் எடுக்கலாம். இது எனக்குரொம்பப் பிடிச்ச இன்னொரு விஷயம்.

கோயிலில் எடுத்த சில படங்களை இங்கே உங்களோடு பகிர்ந்துக்கறேன். அந்தப் பெருமாளின் ஆசிகள் உங்களுக்குக் குறைவறக் கிடைக்கட்டும்.

( படங்கள் கூடியதால் பதிவு சின்னதா இருக்கு)

தொடரும்...........

Wednesday, April 18, 2007

அழகு அழகு அழகே அழகு.

அழகுன்னா என்னன்னு இலவசமாச் சொல்லிட்டார் நம்ம இலவசம். ரொம்பச் சரி.அழகை எங்கே பார்க்கலாம்? எங்கெவேணுன்னாலும் பார்க்கலாம்.நம்ம மனசு மட்டும் சுத்தமா, க்ளட்டரா இல்லாம இருக்கணும்.

எல்லாரும் இப்படி வந்து நம்ம Zen தோட்டத்துலே, ரெண்டு வரை வரைஞ்சு மனசைக் கிளியர் ஆக்கிக்குங்க. ஒன் பை ஒன்........ ஆங்........ அப்படித்தான்.

என்னைச் சுத்தி நிரம்பி இருக்கற அழகு ஏராளம். எதைச் சொல்றதுன்ற பரிதவிப்பில்தான் இத்தனை நாளா ஆறப் போட்டுட்டேன். அழைப்புகள் வர ஆரம்பிச்சுருச்சு. இனியும் ச்சும்மா இருக்கவேணாமுன்னுதான் 'சட்'ன்னு கண்ணைத் திறந்தவுடன் கிடைச்ச அழகுகளை இங்கே அள்ளிப் போட்டுருக்கேன்.


என் யானைங்க எல்லாமே அழகு. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு தினுசுலே. என் பூனையும் அழகுதான். அதிலும் அவன் தமிழ்மணம் படிக்கிற அழகைப் பாருங்களேன்:-)


பூக்களை ரசித்த என் மற்றொரு செல்லம்.


என் சாமியும் அழகுதான். நல்லா யோசனை செஞ்சு பார்த்தப்ப, 'திருப்பதி'ப் பைத்தியமா இருந்த நான் 'இவன்' வந்தபிறகு அங்கே போகவே இல்லை. போகணுமுன்னு முந்தியெல்லாம் ஒரு வேகம் வரும் பாருங்க, அது இப்பெல்லாம் இல்லை.சுமார் எட்டு வருஷத்துக்கு முந்தி ஒருசமயம் திருப்பதி போயிட்டுத் திரும்பி வந்த ரெண்டு நாளில் எங்கிட்டே வந்துட்டாங்க இவுங்க. அழகுக்கு அழகு செய்யறதுபோல என்னிஷ்டமான காம்பினேஷனில் பட்டுப்பாவாடைகளாத் தைச்சுத் தாயாருக்குச் சாத்திருவேன். அதெல்லாம் கூட ஒரு அழகுதானே?

உலகில் பூக்கும் ஒவ்வொரு பூக்களுமே அழகுன்னாலும் நம்ம தோட்டத்துலே பூக்கும் அபூர்வ( ???) மலருக்கு ஒரு தனி அழகு இருக்கத்தானே செய்யுது . இல்லீங்களா? பாருங்க நம்மூட்டுத் தாமரையை.

குண்டு சட்டிக்குள்ளெ குதிரை ஓட்டவேணாமுன்னு வெளியிலே வந்தால்.............

அடடா வானம் எப்படிக்கோலம் போடுது பார்த்தீங்களா? ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு அழகு. என்னா பெயிண்டிங்! எப்படிக் கலர் செலக்ஷன். மனுஷனாலே செய்யமுடியுமா? ஆஹா.......

இருக்கும் ஊர் மட்டுமில்லை, வசிக்கும் நாடே கொள்ளை அழகு. இல்லாமலா சினிமாக்காரங்க வந்து அள்ளிக்கிட்டுப் போறாங்க.

நாட்டைவிட்டு வெளியில் வந்து சொல்லட்டுமா? இந்தியாவுலே ஏகப்பட்ட இடங்கள் அழகுதான். இன்னும் அங்கேபல இடங்கள் பாக்கி இருக்கு. அதுக்கு நேரங்காலம் அமையலை(-: அதனாலே ..........

எதாவது ஒரு இடத்தை மறுபடி பார்க்கணுமுன்னு நினைச்சீங்கன்னா அது அழகானஇடம். கிரிமினல்கூடத்தான் கிரைம் நடந்த இடத்தைப் பார்க்கப் போவானாம். அப்ப? அட! அது அவனுக்கு அழகா இருக்கறதாலேதானே மறுபடி போறான்.?

ஆனா மறுபடி, மறுபடின்னு சதா போற இடம் இந்தக் கணக்குலே வராது.உதாரணம்: சூப்பர் மார்கெட்:-)

இன்னொரு ச்சான்ஸ் கிடைச்சாக் கட்டாயம் போகணுமுன்னு நினைக்கிறமே அது அழகு.


ஒரு சமயம் பயணத்தின்போது இத்தாலியில் சொரேண்ட்டோ என்ற ஊரில் சிலநாட்கள் தங்குனோம்.பக்கத்துலே ஒரு தீவு இருக்கு, ஒரு நாள் ட்ரிப்பா போய்வரலாமுன்னு சொன்னாங்க. காப்ரித் தீவு.

கிளம்பிப் போயாச்சு. நெட்டுக்குத்தா நிக்கிற மலையிலே வளைஞ்சு வளைஞ்சு ஏகப்பட்டத் திருப்பங்களோடுபாதை. சட் சட்ன்னு கண்ணுமுன்னாலே வந்து மறையும் வீடுகள். உயிரைப் பிடிச்சுக்கிட்டு பயணம் செய்யும்நாங்களும், அசால்ட்டா வண்டியை ஓட்டும் ட்ரைவரும். ஒரு இடத்துலே ஒரு மலையில் இருந்துஅடுத்த மலைக்கு ரோப் கார். ஒவ்வொரு ஆளாத்தான் போகணும். காலைத் தொங்கப்போட்டுக்கிட்டு, கம்பியைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டுப் போறேன். கீழே அதலபாதாளம். காடு. அழகா இருக்கு. ஆனா பயமாவும் இருக்கு. முன்னாலே போற கார்( பொல்லாத கார். ஒரு மணைக்கட்டையை மேலே இருக்கும் ஸ்டீல் கயிறோடு இணைச்சிருக்கு. கரணம் தப்பினால் மரணம்தான். காத்தடிக்கும்போது மணை ஆடுது) ஆபத்துலேயும்ஒரு அழகு இருக்குல்லே? அந்தப் பக்கம் போனால் மலை உச்சியிலே நிக்கறோம். கீழே கடல். நெட்டுக்குத்தா மலையை அப்படியே அரிஞ்சு வச்சுருக்கு. அதைப் பார்த்துட்டு அப்படியே மறுபடி இந்தப் பக்கம் இன்னொருக்கா மணைக்கட்டையில் உக்கார்ந்து திரும்பிவந்துட்டு, அந்தத் தீவைச் சுத்திச்சுத்தி போய்வரும் மினி வேன் பயணம்.ஒரு இடத்துலே ஆட்கள் கூட்டமா இருக்காங்க. ஷ்டாப். இறங்கிப் பார்த்தா.........

சரிவான பாதையில் இறங்கி மக்கள்ஸ் கடலுக்குப் பக்கத்தில் போறாங்க. கூடவே நாங்களும். அங்கே கட்டுமரம் மாதிரி சின்னப் படகுகள் நிறைய இருக்கு.ஒவ்வொண்ணுலேயும் ரெண்டு மூணு ஆட்களை ஏத்திக்கிட்டுப் போறாங்க. திரும்பக் கொண்டு வந்துவிடறாங்க. என்னவா இருக்கும்? நாங்களும் போனோம். படகு அப்படியே நகர்ந்து ஒரு அஞ்சாறு நிமிஷ தூரத்தில் இருக்கும் மலைக்குப் பக்கம் போகுது. மலை அடியில் சின்னக் குகை போல ஒரு துளை. கிட்டே போகும்போது நம்மை அப்படியே சாய்ஞ்சு படுத்தாப்போலகுனிஞ்சுக்கச் சொல்றாங்க. படகின் தரையோடு தரையாக் கவுந்துரணும். குகைவாசலைக் கடந்து படகு உள்ளெ போயிருது. இப்ப நிமிரலாம்.ஒரே கும்மிருட்டு. அப்படியே படகை இந்தப் பக்கம் திருப்பிக் குகை வாயிலை நோக்கித் திருப்புனாங்க. ஹப்பா.......நெஞ்சே நின்னு போச்சு. அப்படி ஒரு நீலக்கலரை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. azure . சூரிய வெளிச்சம்ஒரு ஆங்கிளில் அப்படியே தண்ணிக்குள்ளே ஊடுருவிப்போகுது பாருங்க. பிரமிச்சுப் போயிட்டேன்.
எல்லாம் ஒரு சில நிமிஷங்கள்தான்.மறுபடிப் படுத்துக்கிட்டே வெளியில் வந்துருவோம். அடடா.......... அதான் திரும்பிப்போகும் மக்கள் முகத்துலே ஒரு பரவசம் &ஒளிவட்டம் தெரிஞ்சதா? இங்கே இப்படி இருக்குன்னு கண்டுபிடிச்சு அதைக் காசாக்கிட்டாங்க பார்த்தீங்களா? ஆனாகொடுத்த காசுக்கு பழுது இல்லை. இயற்கை அழகே அழகு. அதை மறுபடி பார்க்க மனசு ஏங்குது.

ஆனா அழகுன்னதும் இவ்வளவு தூரம் போகணுமுன்னு அவசியமே இல்லைங்க. எல்லாம் இங்கேயே இருக்கு. அக்கம்பாருங்கஅழகு கொட்டிக்கிடக்கப் போகுது.


நானும் ஒரு மூணு பேரைக் கூப்புடணுமுன்னு 'விதி' இருக்காமே. ம்ம்ம்ம்ம்ம்ம் .........


அக்கா வீட்டுக்கு வெறும் மூணு பேரை(மட்டும்) கூப்புடணுமுன்னா அழகாவா இருக்கு? நோ ச்சான்ஸ்.பேசாம இதுவரைக்கும் வெள்ளாடாதவுங்க யாருவேணா கலந்துக்கிட்டு அடிச்சு ஆடுங்கப்பா. எல்லாம் பாசக்கார பயலுகளாமே :-))))