Friday, August 31, 2012

வசந்தம் வந்ததம்மா............

ஜாதகம் பார்த்ததுலே மூணு மாசமா ஆட்டிவச்சது இன்றோடு முடிஞ்சுருமுன்னு சொன்னாங்க. ரொம்பச்சரி! ஒரு வழியா குளிர்காலம் முடிவுக்கு வருது. நாளைமுதல் அஃபீஸியலா வசந்தம்.

 அப்ப அடையாளம் உண்டா? உண்டே! பல்புகள் எல்லாம் முளைக்கத்தொடங்கி ஹலோ நலமான்னு கேட்கும் விதமா புன்சிரிப்பைக்காட்டி முதலில் வந்தவை,  டாஃபோடில்கள்.

 நம்மூர்லே இந்த டாஃபோடில் பூக்களுக்கு இன்னொரு விசேஷ மரியாதை உண்டு. ஒவ்வொரு வருசமும் ஆகஸ்ட் மாசம் கடைசி வெள்ளி டாஃபோடில் டே! இந்த வருசம் இது இன்றைக்குத்தான்! மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் பரவலா உண்டியல் குலுக்கி வசூலாகும் தொகை முழுசும் கேன்ஸர் சொஸைட்டிக்குப் போகுது. நமக்கும் சட்டையில் குத்திக்க ஒரு (செயற்கை) பூ கொடுப்பாங்க. இந்த வருசம் 7000 வாலண்டியர்கள் உண்டியல் குலுக்க முன்வந்துருக்காங்க(ளாம்)

 இதுதான் எனக்குக் கொஞ்சம் பேஜாரு. இந்தப்பூவை செஞ்சு கொடுக்கும் கம்பெனிக்கு வசூலாகும் பணத்தில் ஒரு பகுதி போயிருதே. அதுக்குப் பேசாம இந்த ஊரில் கும்பல்கும்பலாப் பூத்திருக்கும் பூக்களையே ஒன்னு கொடுக்கலாம்.

 எங்க நியூஸிக்கு மேலே வானத்துலே பொத்தலாம். ஓஸோன் லேயரில் ஓட்டை! அதனால் வெய்யில் அடிக்கும் போது ( அடிச்சுட்டாலும்!) வெளிப்படும் UV Rays களினால் பாதிப்பு அதிகமுன்னு சொல்றாங்க. ஸ்கின் கேன்ஸர்தான் அதிகமாம். மூணு பேரில் ஒருத்தருக்கு கேன்ஸர்ன்னு இதுக்கான சொஸைட்டி சொல்லுது. இதைப்பற்றி இன்னொரு சமயம் விரிவாப் பார்க்கலாம். இப்போ..... டாபிக் வசந்தம்.

 எங்கூர் பொட்டானிக் கார்டனில் டாஃபோடில் லான் என்றே ஒரு பகுதி இருக்கு. அது பாட்டுக்குக் காடாய்ப் பூத்துக்குலுங்கும். இந்தப்பகுதியை ஒட்டியே சாலை இருப்பதால் போகும்போதும் வரும்போதும் கண்ணில் படாமப்போக நோ ச்சான்ஸ்:-)

 நல்ல மஞ்சள் நிறத்தில் ஆறு இதழ்கள் வெளிப்புற வட்டத்தில். நடுவில் இன்னும் கொஞ்சம் அழுத்தமான மஞ்சள் நிறத்தில் குட்டியா ஒரு கப். பார்க்க படு நேர்த்தி! நடுவில் மஞ்சளுக்குப் பதிலா ஆரஞ்சுகூட இருக்கும் சில வகைகள் உண்டு. வெளிவட்டம் முழுசும் வெள்ளை நிறமாவும் உட்புறம் நெளிநெளியா விளிம்பு வச்சக் குட்டிட் டம்ப்ளர் ஆரஞ்சு இல்லை மஞ்சளாகவும் பூக்கும் வகைகளும் உண்டு.

பெரிய பூக்கள் இல்லாமல் குட்டிக்குட்டிப் பூக்கள் உள்ள மினியேச்சர் வகைகளும் உண்டு, பொதுவா டாஃபோடில் செடிகள் லேசா விஷ குணமுள்ளது என்பதால் எந்தப் பூச்சிப்பொட்டும் விஷப்பரிட்சை செய்ய அண்டாது கேட்டோ! . நோ ஹனி டூ:( சுமார் அம்பது வகைகள் இருக்காமே இதுலே! ரோஜாப்பூவை காதலுக்கு அடையாளமாச் சொல்வதைப்போல டாஃபோடில்கள் நட்புக்கு அடையாளமாம். ஃப்ரெண்ட்ஷிப் டே க்கு ஒரு கொத்து டாஃபோடில்ஸ் இனி கொடுத்துடலாம் இல்லே?

 இந்த பூக்களில் ஹைப்ரீடு வகைகள் மட்டுமே பதிமூணாயிரம்வரை இருக்குன்னு டாஃபோடில் டாட்டா பேங்க் சொல்லுது!!!!

 ஸ்பெயின், போர்ச்சுக்கல், துருக்கி போன்ற பிரதேசங்களில் இருந்துதான் டாஃபோடிலின் மூத்தகுடி வந்திருக்குன்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது. காலம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு!

 ரோமானியர்களும், கிரீஸ் நாட்டுக்காரர்களும் , மருத்துவ குணமிருக்குன்னு இதை நிறையப் பயன்படுத்தி இருக்காங்க. பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் இங்கிலாந்துக்கு இது போனது ரோமானியர்கள் தயவால்.

 இலை உதிர் காலக்கடைசியில் கொஞ்சம் பல்பு வாங்கி தோட்டதில் நட்டு வச்சால் போதும். வருசாவருசம் டாண்ன்னு தானே முளைச்சுக்கும். குளிர்காலத்தில் மனம் நொந்து கிடக்கும் மக்களுக்கு டாஃப் பார்த்தவுடன் மறு ஜென்மம் எடுத்தது போல் இருக்குமாம். வியாபாரத்துக்கு விளைவிக்கும் தோட்டங்களுக்கு அடிச்சது ப்ரைஸ். பத்துப்பூக்கள் இருக்கும் கொத்து எட்டு டாலர்கள்ன்னு பூக்கடைகளுக்கு ஆகஸ்ட் முதல் வாரமே வரத்தொடங்கும்

 சீஸன் சமயத்தில் அம்பது செண்டுக்கு அள்ளிக்கோ அள்ளிக்கோதான். கட் ஃப்ளவருக்காகவே அவதரிச்சது போல நீளமான தண்டுகளின் உச்சியில் பூ மலர்ந்து நிக்கும். பறிக்காமல் செடியிலேயே விட்டு வச்சால் குறைஞ்சது ரெண்டு வாரத்துக்கு ஜம்முன்னு நிற்பது கேரண்ட்டீ:-)

 வியாபாரநிமித்தம் வளர்க்கப்படும் செடிகள், பூத்து முடிச்சு ரெண்டு மூணு மாசத்துலே இலைகள் எல்லாம் பழுத்துக் காயத்தொடங்குனதும் செடிகளைத் தோண்டி அடியில் உள்ள கிழங்குகளை எடுத்துத் தனியா ஒரு காற்றோட்டமான இடத்துலே வச்சுக் காயவைப்பாங்க. அப்படியே ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கும் கிழங்குகளை மீண்டும் குளிர் காலம் வர ஒரு மாசம் இருக்கும்போது நட்டுவைப்பாங்க.

 கிழங்கின் உயரம் போல மூணு மடங்கு ஆழமான குழியில் நட்டுவைக்கணும். தண்ணிர் எதுவும் ஊத்த வேண்டிய அவசியமே இல்லை. அது பாட்டுக்குக் குளிர்காலம் முழுசும் வளர்வதற்கு ஆயுத்தம் செஞ்சுக்கிட்டே இருந்து வசந்தம் ஆரம்பிக்கும்போது தலையை வெளியே நீட்டிரும்.

 நம்மைப்போல இருக்கும் மக்கள்ஸ்க்காக பல்புகளே கடையில் விற்பனைக்கு வந்துருது. நோகாம நோம்பு கும்பிட்டுக்கலாம்.

 நம்ம பதிவில் இருக்கும் அத்தனை மலர்களையும் நண்பர்களுக்கு நட்பின் அடையாளமாகப் பகிர்ந்தளிக்கிறேன்.

 இணைய நட்புகளை இணைக்கும் பூ!!!!.

Wednesday, August 29, 2012

அத்தம் துடங்கி பத்தாம் நாள்.............

சரியாச் சொன்னால் இது கேரளா தசரா!! பத்து நாள் பண்டிகை இந்த ஓணம்.

 சிங்க மாசம்.... அட ..பயந்துட்டீங்களா? ஒன்னுமில்லைங்க. நாம் சித்திரை வைகாசின்னு ஆரம்பிச்சு பங்குனின்னு தமிழ் மாசப்பெயர்களைச் சொல்றோமில்லையா. இதுவே கேரளத்தின் மலையாள மொழியில் பனிரெண்டு ராசிகளை வச்சு மேஷம் முதல் மீனம் வரை. இங்கேயும் பாருங்க நாம் மேஷம் என்று சொல்றோம். அவுங்க மொழியில் அது மேடம்! (எஸ் மேடம்?)

 மேஷம் = மேடம் - சித்திரை
 ரிஷபம் = இடவம்-   வைகாசி
 மிதுனம் = மிதுனம்  -ஆனி
 கடகம்  =  கடகம் - ஆடி
 சிம்மம் =    சிங்கம் -ஆவணி
 கன்னி = கன்னி -   புரட்டாசி
 துலாம் =   துலா -   ஐப்பசி
 விருச்சிகம்  = விருச்சிகம் -  கார்த்திகை
 தனுசு = தனுர்  - மார்கழி
 மகரம்   =மகரம்  -  தை
 கும்பம்  = கும்பம்  - மாசி
 மீனம் =   மீனம் -பங்குனி.

 சிங்க மாசம் அத்தம் நாளில் ( ஆவணி மாச ஹஸ்தம் நட்சத்திரம் வரும் தினம்) ஓணத்திருவிழா ஆரம்பிக்குது. இன்றிலிருந்து பத்தாம் நாள் திருவோணம் நட்சத்திரம் வரும் தினம் ஓணப்பண்டிகை. மொத்தம் பத்து நாள் கொண்டாட்டம்.

நாள் நட்சத்திரமுன்னு சொல்றோம் பாருங்க.... இங்கே கேரளத்தில் இது ரொம்ப  முக்கியம். கொஞ்சம் வயசான பெரியவங்க  (முத்தச்சிமார்) நம்மை முதல்முதல் பார்த்துப் பரிச்சயம் செஞ்சுக்கும்போது , நாம் பேர் சொன்னதும் ,  'நாள் ஏதா?'ன்னு வாங்க.  விசாகம்ன்னு சொல்வேன்:-)

 மாவேலித் தம்புரான் தன் மக்களையெல்லாம் பார்க்க பாதாளத்திலிருந்து புறப்பட்டு வர்றார் என்பது ஐதீகம். ஏழு சிரஞ்சீவிகளில் மாவேலி(மஹாபலி)யும் ஒருவர் (மற்ற அறுவர்? வேத வியாஸர், பரசுராமர், அஸ்வத்தாமன், விபீஷணன், ஹனுமன், கிருபர். எட்டாவதா மார்க்கண்டேயன்கூட இந்த லிஸ்ட்டுலே சேர்ந்துக்கலாம். )

 மஹாவிஷ்ணு, தர்மசீலனாகிய அரக்க அரசர் மாவேலியை வஞ்சகமா 'கீழே' அனுப்பிய கதை உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்தானே? மெய்யாலுமே தெரியாதுன்னா கொஞ்சம் இங்கே போய்ப் பாருங்க. நம்ம வீட்டில் எழுதிவச்சதுதான். உள்ளே வந்து பாருங்க.

  எண்டே பொன் ஓணம்

  மாவேலி வருந்ந திவசம்

  மாவேலி நேரத்தே வந்நூ

  மாவேலியை இங்கோட்டு வரான் பறயூ

  கண்ணீரு கொண்டொரு கறிவைப்பு.

 மகாபலியை வரவேற்க வீட்டு முற்றத்து வாசலில் போடும் பூக்களம்ன்னு சொல்ற அலங்காரம் பண்டைய நாட்களில் ஹஸ்த்தம் ( அத்தம்) நட்சத்திரம் வரும் நாளில் ஆரம்பிக்குமாம். விழாவின் முதல்நாள் இது. குடும்பத்திலே இருக்கும் ஆண்பிள்ளைகள் அத்தப்பூன்னு பூக்களை சேகரிச்சுக்கிட்டு வருவாங்களாம். அதைத்தான் பூக்களத்துலே முதல்லே வைக்கணும். அப்புறம் தினமும் வெவ்வேறு பூக்களைச் சேகரிச்சு அலங்கரிச்சுக்கிட்டே இருப்பாங்களாம்.இப்படியே 10 நாள் ஆனதும் அந்தக் கோலம் பிரமாண்டமாய் பெரூசா இருக்குமாம்.

 அடிக்கிற வெயிலுக்கு மொத நாள் வச்ச பூ வாடாம இருக்கணுமே!

 அந்தக் காலக் கொண்டாட்ட சமாச்சாரங்களைக் கொஞ்சம் பார்க்கலாம் இப்போ!

 அத்தத்தின் மறுநாள் சித்திர (சித்திரை நட்சத்திரம்) வீடெல்லாம் சுத்தப்படுத்தும் வேலை. பூக்களத்தில் இன்னும் ரெண்டு நிறமுள்ள பூக்கள் சேர்க்கப்படும்.

 மூணாம் நாள் சோதி (ஸ்வாதி நட்சத்திரம்) புதுத்துணி, நகை நட்டுன்னு ஷாப்பிங். பூக்களத்தில் இன்னும் நாலைஞ்சு பூ வகைகள்.

 நாலாம் நாள் விசாகம்(விசாகம் நட்சத்திரம்) பண்டிகைக்கு வேண்டிய புது அரிசி போன்றவைகளை வாங்கிக்கும் மார்கெட் டே! அறுவடை முடிஞ்சு உழவர், தங்கள் பொருட்களையெல்லாம் சந்தைக்குக் கொண்டு வரும்நாள் இது. பூக்களம் இன்னும் கொஞ்சம் பெருசாகும்.

 அஞ்சாம் நாள் அனிழம் (அனுஷம் நட்சத்திரம்) வள்ளம் களின்னு சொல்லப்படும் படகுப்போட்டிகளுக்கு தயாராகும் நாள். பூக்களத்துக்கு இன்னும் சில வண்ண மலர்கள் சேர்க்கை.

 ஆறாம் நாள் த்ரிக்கேட்ட ( கேட்டை நட்சத்திரம்) வெளியூரில் இருப்பவர்கள் எல்லோரும் வந்து சேரும் நாள். குடும்பமும் பூக்களம்போல் விரிவடையும்.

 ஏழாம் நாள் மூலம் (மூல நட்சத்திரம்) வீடுகளும் மற்ற ஸ்தாபனங்களும் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். குடும்ப அங்கத்தினர்கள் நிறையப்பேர் வந்துட்டதால் விசேஷ விருந்து சாப்பாடு. பாவம் அங்கே என்னத்தை சாப்பிட்டாங்களோ? எதெல்லாம் கிடைக்கலையோன்ற ஆதங்கம் பெரியவர்களுக்கு இருக்குமே! புலி வேஷம் போட்டு ஆடுதல், திருவாதிரக்களின்னு பெண்கள் வீட்டு முற்றத்தில் கூடி நிலவிளக்கு(குத்து விளக்கு) ஏத்தி வச்சு சுத்தி நின்னு ஆடுதல் எல்லாம் நடக்க ஆரம்பிக்கும் நாள்.
விழா களைகட்டத்  தொடங்கிரும்:-)

எட்டாம் நாள் பூராடம் (பூராடம் நட்சத்திரம்) இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாராவது வீட்டில் இருந்தால் இன்று அவர்கள்தான் ஹீரோஸ். வீட்டில் உள்ள சிறிய மகாபலி, வாமனர் சிலைகளை நீராட்டி ஹீரோக்கள் கையால் அரிசி மாவு தடவி பூக்களத்தின் நடுவில் கொண்டு போய் வச்சு பூஜிக்கணும். இன்று முதல் அந்த சிலை(கள்) ஓணத்தப்பன். பூராட நட்சத்திரத்தில் பிறந்த யாரும் இல்லையா? நோ ஒர்ரீஸ்.... சின்னப்பசங்க எப்படியும் எல்லா வீடுகளில் இருப்பாங்கதானே? அவுங்களுக்குச் சான்ஸ் கொடுத்தால் ஆச்சு.

 ஒன்பதாம் நாள் உத்திராடம் (உத்திராடம் நட்சத்திரம்) ஓணத்தினு தலே திவசம். விருந்துக்கு வேண்டிய காய்கறிகள் வாங்கிக்கணும். பூக்களம் இன்னும் பெரூசா ஆகும். இந்த நாளை ஒன்னாம் ஓணம் என்று சொல்வாங்க.
 என்றும் சிரஞ்சீவியான மாவேலித் தம்புரான் பூமிக்குக் கிளம்பும் நாள்.

 பத்தாம் நாள் திருவோணம் (திருவோண நட்சத்திரம்) ரெண்டாம் ஓணமுன்னு சொன்னாலும் இன்னிக்குத்தான் மெயின் டே! ஓணசத்ய என்னும் ஓண விருந்து இன்னிக்கு குறைஞ்சது 21 அயிட்டத்தோடு தூள் பறக்கும். காணம் விற்றும் ஓணம் உண்ணனும் என்று பழஞ்சொல்லு.  விழா இத்தோடு முடிஞ்சுருச்சுன்னு நினைச்சுக்கப்பிடாது.

பதினொராம் நாள் அவிட்டம் நட்சத்திரம் மூணாம் ஓணம். இன்னிக்குப் பூக்களத்துலே நடுவில் இருக்கும் ஓணத்தப்பனை எடுத்து புழையில் நீராட்டி வீட்டுக்குக் கொண்டு வரணும். புலி டான்ஸ் எல்லாம் ஆடி முடிச்சு , பூக்களத்தையும் கலைச்சு எடுக்கும் நாள்.

 நாலாம் ஓணமான சதயம் நட்சத்திர நாள். பண்டிகைக்கு எடுத்த எல்லா சாமான்களையும் பாத்திரங்களையும் சுத்தம் செஞ்சு அடுக்கி வச்சுன்னு வீட்டு வேலை பெண்டு நிமிர்த்தும் நாள். இதுவும் ஒரு கொண்டாட்டமே! அப்பாடான்னு நிம்மதி கிடைக்கும் நாளாச்சே!

 திருவனந்தபுரம் அரசர் சம்பந்தப்பட்ட அரண்மனைக் கொண்டாட்டங்கள் எல்லாம் நாலாம் ஓணத்தோடு முடியும்.

 இதெல்லாம் இப்படி இருக்க நியூஸியில் நாங்க எப்படி இந்த வருச ஓணம் பண்டிகை கொண்டாடுனோமுன்னும் சொல்லணும்தானே:-)
ஈஸ்ட்டரைத் தவிர எந்த விழான்னாலும் வார இறுதிக்குத்தான். எங்க மேல் பரிதாபப்பட்டு விழாநாள் சனிக்கிழமைகளில் அமைஞ்சா சந்தோஷம். முதல்நாள் இரவு ஒன்பது மணி போல் போய் சமையலுக்கு உதவி செஞ்சுட்டு வந்தோம். காய்கறிகளை வெட்டும் வேலை முடிஞ்சதும் ஒரு பத்தரை போல நாங்க திரும்பிட்டோம். ஆனால் சமையல் பொறுப்பு ஏத்துக்கிட்டவர் வேலைகளை முடிக்கும்போது நாலுமணியாம்.
சுந்தரக்குட்டன்மார் பூக்களம் ஒருக்கான் தய்யாராயி:-)

 என் வகையில் ரசம் செஞ்சுக்கிட்டுப் போகணும். 120 பேருக்கு வர்றமாதிரி. காலையில் கொஞ்சம் சீக்கிரமா எழுந்து வேலையை ஆரம்பிச்சேன். பருப்பு ரஸம் கேட்டோ:-))))
வேட்டியை  மடிச்சுக்கட்டு.....  தானாவே வந்துருது  பாருங்க:-))))

வண்டியில் வச்சுக் கொண்டு போகும்போதுதான் கொஞ்சம் பேஜாராப்போச்சு. தளும்பி விழாமல் கொண்டு போகணுமே! முப்பதுலே ஓட்டச் சொன்னால் பழக்க தோஷத்தில் ரெண்டே வினாடிக்குப்பிறகு அம்பதுக்குப் போயிடறார்:(

 பூக்களம் ஜொலிபோடு இருந்துச்சு. விளக்கை நடுவில் வைக்கலை. போயிட்டுப்போறது. விளக்கு உபயம் யாருன்னு விசாரிக்க மறந்துட்டேன். வழக்கமான வாழைப்பூ விளக்கில்லை:(

 எண்ணெய் ஊத்தித் திரியெல்லாம் போட்டு தயாராக்கினேன். நம்ம க்ளப்பில் இந்துக்கள் வகையில் ரெண்டு மூணுபேர்தான் இருக்கோம். விஐபி திரியைக் கொளுத்த ஒரு மெழுகுத்திரி வேணுமுன்னு தேடுனதில் நீளக்கேண்டில் ஒன்னை சர்ச் ஆல்ட்டரில் இருந்து அபேஸ் பண்ணினோம். கடன்தான். திருப்பி ஓசைப்படாம வச்சுட்டோமே!
சுந்தரக்குட்டன்மார் ஒருக்கிய பூக்களம்:-))))) எங்கூர் ஸ்ப்ரிங் ஃப்ளவர்ஸும் தேங்காய்ப்பூவும்.

 இன்றைய முக்கிய விருந்தாளி நியூஸி பார்லிமெண்டின் உள்ளூர் அங்கம். நிக்கி வாக்னர் ( கிறைஸ்ட்சர்ச் செண்ட்ரல் தொகுதி) தாலப்பொலியொடு வரவேற்பு கொடுத்ததும் பிரமிச்சுப் போயிட்டாங்க:-))))) கம்பெனி கொடுக்க வேண்டியதாப் போச்சு. பூக்களம் பார்த்து இன்னொரு பிரமிப்பு. சின்னப்பேச்சில் கொஞ்சம் பண்டிகையைப் பற்றிச் சொன்னேன். சரியான அரசியல்வாதின்னு அடுத்த பத்தாவது நிமிசம் நிரூபணமாச்சு. குத்துவிளக்கை ஏத்தச் சொல்லி, எப்படின்னு காமிச்சுக் கொடுத்த சேஷம் மேடை ஏறினாங்க. சின்னப்பேச்சில் நான் சொன்னதெல்லாம் அப்படியே தன்வாய்மொழி!!!!!
ஓணம் கதை சொல்லி வரவேற்பு முடிஞ்சதும் வழக்கம்போல் க்ளப் அங்கத்தினரின் நடனம் பாட்டுன்னு போனாலும் விசேஷ நிகழ்ச்சியா இருந்தவைகளை மட்டும் சொல்றேன்.
மாவேலித் தம்புரான் தங்கக்குடை பிடிச்சு வந்தார். நாட்டுமக்களை விஸிட் செய்யும் திவஸமல்லே இது:-))))) அவரை மேடையில் இருத்தினோம். எங்க பசங்களுக்கு க்ரியேட்டிவிட்டி இருக்கு. ஆனால் அதை மிகச்சரியாக் கொண்டுவரத்தெரியலை:( ராஜாவு தானேவா குடைபிடிச்சுக்குவார்? ஆள் அம்போட வரவேணாமோ? அட்லீஸ்ட் குடை பிடிக்க ஒரு பணியாள்?

 இதே சென்னையா இருந்தால் ஒரு சிம்மாசனச்சேர் வாடகைக்குப்பிடிச்சு ராஜாவை உக்காரவச்சுருக்கலாம். (அதான் விழாக்களில் மந்திரிகளெல்லாம் ராஜாவாட்டம் போஸ் கொடுக்கறாங்களே ) இங்கே..... நோ சான்ஸ். உள்ளது கொண்டு ஓணம் என்றாச்சு.

திருவாதிரைக்களி, வள்ளங்களி பாட்டு, பரத நாட்டியம் இன்னும் சில பழைய பாட்டுகள் ஆனதும் மாவேலித் தம்புரானைக் கடத்திக்கிட்டுப் போயிட்டாங்க. ஒய்????? க்ரிஷ்ணனே அறியும்:-))))

 CKA Boys ( Christchurch Kerala Association) நிகழ்ச்சியில் கன்ஃப்யூஷன் தீர்க்கணுமேன்னு கிருஷ்ணன் வந்து கோபிகைகளுடன் ஆடினார்:-)))) உங்களுக்காக அது இங்கே:-))))க்ளப்புக்கு ஒரு வெப்ஸைட் தொடங்கி இருக்கு.


பிள்ளைகளுக்கு மலையாளம் சொல்லிக்கொடுக்க வகுப்பு தொடங்கி இருக்காங்க.,. ஆசிரியருக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கினார் மூத்த அங்கத்தினர்:-)))

 ஸ்போர்ட்ஸ் பிரிவில் (பேட்மின்ட்டன்) ஜெயித்தவர்களுக்கு தங்கப்பதக்கம்!!!! ஒலிம்பிக் சீஸனாச்சே:-))))

'கிறைஸ்ட்சர்ச் கானகந்தர்வன்'  ஆலன் ஃபிலிப், சரியான வில்லனா மாறி இருக்கார். நடிப்பு ஏ ஒன், கிறைஸ்ட்சர்ச் சல்மான் கான், ஷான் இப்போ யூனி மாணவர். அவருடைய இயக்கத்தில் ஒரு குறும்படம் எடுத்து அதையும் மக்கள்ஸ்க்குப் போட்டுக் காமிச்சாங்க. படத்தின் பெயர் ப்ளாட்டர்.
நடுவில் இருப்பவர் ஷான் த  இயக்குனர்:-)

ஒவ்வொன்னா நிகழ்ச்சிகள் முடிய ரெண்டேகாலாயிருச்சு. இலையில் விருந்து சாப்பாடு . கட்டாயம் இருந்து சாப்பிட்டுட்டுப் போங்கன்னு எம்.பியிடம் சொன்னதுக்கு சரின்னாங்க. இவ்ளோ நேரம் ஆகுமுன்னு எனக்குத் தெரியாதே:( ஒன்னரை ஆனப்போ பசிக்குதான்னு கேட்டேன். ஆமாம்ன்னு தலையாட்டுனாங்க. எனக்கே பாவமாப் போயிருச்சு.


கடைசி ஐட்டமா  எல்லா மொழிப்பாடல்களையும் கொஞ்சம் கொஞ்சம் கலந்துகட்டி மெட்லி மாதிரி ஒன்னு.   'அடி என்னடி ராக்கம்மா,   நான்தாண்டா பால்காரன், இப்படி.... அதுலே பாதி வரும்போதே  சபையில் உள்ள இளைஞர்களும் , இளைஞிகளுமா சேர்ந்து கூட ஆடி ஹால் முழுக்க ஓடின்னு ஒரே கலாட்டா.

திருதிருன்னு முழிச்ச  விஐபிக்கு  எங்க நாட்டுலே 22 அஃபிஸியல் லேங்குவேஜ் இருக்கு. அதனால்  வீ ஹேவ் மோர் ச்சாய்ஸ்ன்னதும் 22 ஆ...........  வாய் பிளந்தாங்க. நியூஸியில்  இங்லீஷ், மவொரின்னு  ரெண்டு இருந்து இப்ப சமீபமா மூணாவதா ஸைன் லேங்குவேஜைச்  சேர்த்துருக்காங்க.


பாலடப்ரதமன், பருப்பு பாயஸம் சேர்த்து பதினாறு ஐட்டங்களோடு ஓண சத்ய.
 எதெது என்ன, எப்படி சாப்பிடணுமுன்னு சொல்லிக் கொடுத்துக்கிட்டே என் வேலையைக் கவனிச்சேன். ரொம்ப சமத்தா என்னைக் காப்பி அடிச்சாங்க. ஆனால் விரல்நுனி பளிச்சுன்னு இருந்துச்சு:( ஃபிங்கர் லிக்கிங் டேஸ்ட்:-))))

  ஓணம்  இன்னு வந்நல்லோ.......... எல்லாவர்க்கும் மங்களம் நேரிடுந்நு.

 பதிவுலக மக்கள் அனைவருக்கும் மனம் நிறைஞ்ச இனிய ஓணம் ஆசம்ஸகள்..

Monday, August 27, 2012

போனால் வராது.... பொழுது போனால் கிடைக்காது..... (ப்ரிஸ்பேன் பயணம் 29)

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையாமே! பனிவிழாத ஊரில் ஐஸ் ஸ்கேட்டிங் செஞ்சுக்க வேற வழி? கிங் ஜியார்ஜ் சதுக்கத்துலே விண்ட்டர் ஃபெஸ்டிவல் நடக்க ஏற்பாடாகுதுன்னு நேத்து பார்த்து வச்சுக்கிட்டதை ஞாபகமா கோபாலிடம் சொல்லி வச்சேன்.

 காலையில் வழக்கம்போல் எழுந்து கடமைகள் முடிச்சு காலை உணவுக்கு கீழே ரெஸ்ட்டாரண்ட் போய் வந்ததும் முதல் வேலையா பொட்டிகளை அடுக்கி வச்சோம். இன்னிக்கு மாலை ஃப்ளைட்டில் வீடு திரும்பணும்.


 ஆறுமணிக்குத்தான் விமானம் என்பதால் லேட் செக்கவுட்டு கேட்டு மதியம் மூணு வரை கிடைச்சது. பக்கத்து பேட்டையில் ஒரு மால் இருக்கு, அங்கே போகலாமுன்னு குவீன்தெரு மாலுக்கடியில் இருக்கும் பஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். ஜிலோன்னு கிடக்கு. தகவலில் பார்த்தால்.... நாம் போய் கொஞ்சம் சுத்தி வரவே குறைஞ்சது நாலு மணி நேரம் ஆகும்போல இருக்கு. இதே வெஸ்ட்ஃபீல்ட்ஸ் நம்ம ஊரில் இருக்கே. வேணாமுன்னு தோணுச்சு.

 பார்த்துவச்ச பையை வாங்கிக்கலைன்ற துடிப்பு கோபாலின் முகத்தில் தெரிஞ்சது. குவீன்தெரு மாலில்தானே இருக்கோமுன்னு மையர்ஸ் கடையில் போய் பையை வாங்குனதும்தான் புள்ளி முகத்தில் மகிழ்ச்சி. மடிக்கணினியும் ஒரு நாளுக்குள்ள துணிமணியும் வச்சுக்க வாகாய் இருக்காம்! சும்மாவே பை பைன்னு ஆடுவார்., இப்போ இந்த மடிக்கணினி தூக்கும் வழக்கமும் சேர்ந்துக்கிட்டதால் வகைவகையா இந்த ரகம் பைகள் சேர்ந்து கிடக்கு வீட்டுலே!

 விலை கொஞ்சம் கூடுதலுன்னு நானும், நியூஸியை விட விலை மலிவுதான். பத்து வருச இன்ட்டர்நேஷனல் கேரண்டீ வேற இருக்குன்னு அவருமா எண்ணம். ஆமாம்... பத்து வருசம் இந்தப் பையை வச்சுருக்கப் போறதுமாதிரிதான்......

 அப்படியே பார்த்து வச்ச ஷர்ட்ஸ்ம் வாங்கிக்கிட்டு காலாற நடந்து ஒரு ஆர்கேடுக்குள் நுழைஞ்சோம். கப் அண்ட் சாஸர்ஸ் விக்கும் கடையில் புது அலங்காரம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. பூனை டீ ஜக் ஒன்னு நல்லா இருந்துச்சு. மால் கலகலன்னு இருக்கு. வீக் எண்ட் கூட்டம் வேற! பலூன்காரர் ரொம்ப மகிழ்ச்சியோடு இருக்கார். எங்க சாமிதான் ஒஸ்த்தின்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க ஒருத்தர். இருந்துட்டுப் போகட்டும் எனக்கு பிரச்சனை இல்லை!


 கிங் ஜியார்ஜ் சதுக்கத்துக்கு வந்தோம். விழா ஆரம்பிச்சு ஃபுல் ஸ்விங்க்லே இருக்கு. 23 டாலர் டிக்கெட்டுலே 45 நிமிஷம் பனிச்சறுக்கு விளையாடிக்கலாம். ஸ்கேட்ஷூவும் தர்றாங்க. டவுன் கவுன்ஸில் முன்னால் இருக்கும் இடத்துலே தண்ணீரைத் தேக்கி Ice Skating Rink போட்டுருக்காங்க.

 Bobby is a seal skating aid ஒன்னு ஏழரைக்குக் கிடைக்கும். இது 12 வயசுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு மட்டும். ஆனா.... 2 டைம்ஸ் பன்னிரெண்டு வயசெல்லாம் அதுலே ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தாங்க.. போனா வராது, பொழுது போனாக் கிடைக்காதுன்னு ...... கொண்டாட்டம்தான்.

 நமக்கோ........ ஐஸைப் பார்த்துப்பார்த்துப் போதுமுன்னு ஆகிருச்சு. எங்கூர்லே நம்ம வீட்டிலிருந்து ஒரு மணி நேர ட்ரைவ் போனால்.... முழுசா ஒரு ஏரியே உறைஞ்சு கிடக்கும். இலவச ஸ்கேட்டிங்தான். பக்கத்துலே இருக்கும் குன்றுச் சரிவில் கொட்டிக்கிடக்கும் பனியில் மெள்ள ஏறி ஒரு முப்பது மீட்டர் போனதும் ப்ளாஸ்டிக் விரிச்சு அதுலே உக்கார்ந்தால் சர்ருன்னு ஒரே சறுக்கு. சின்னப்பிஞ்சுகளையெல்லாம் கூட்டிவந்து அஞ்சாறு மீட்டர் சரிவில் உக்கார வைப்பாங்க. சறுக்கி வரும்போது சிரிப்பைப் பார்க்கணுமே!!!!

 பெரிய பெரிய ஸ்கீ ஃபீல்ட் இருக்குன்னாலும் அதுக்கெல்லாம் போய் ஆட நேரம் ஏது? ஒரு ஆசைக்கு இப்படி அநேகமா எல்லாக் குடும்பங்களும் வந்துரும். என்ன ஒன்னுன்னா..... முதல்நாள் நல்ல பனி பேய்ஞ்சு மறுநாள் நல்ல வெய்யில் இருக்கணும்!

 இங்கே வந்த புதுசில் நாங்க போடாத ஆட்டமா? இப்போ ஒன்னும் வேணாம். குளிர் குளிருன்னு கொஞ்சம் வெறுப்பாக்கூட இருக்கு. ஆனா இள ரத்தத்துக்குக் குளிர் தெரியாது. இங்கத்து மக்களுக்குக் குளிர்காலம் ரொம்பப் பிடிக்குமாம். ஈ ஒன்னும் இருக்காதே அப்போன்னு ஒரு சந்தோஷம். லிப்டன் சாய்க்காரங்க தனிக் கூடாரம் போட்டு உள்ளே ஃபயர்ப்ளேஸ், ஹீட்டர்ஸ் எல்லாம் வச்சு இருக்கைகள் போட்டு வச்சு அதிதி உபச்சாரம் செய்யறாங்க. இலவச ச்சாய் வேற! சூடாக் குடிச்சுக்கிட்டே ஸ்கேட்டிங் ரிங்க் பார்த்துக்கலாம்.

 ச்சாய் நல்லாத்தான் இருக்கு. ஆனால் பெரிய கப்! குடிச்சு முடிக்க நாலுநாளாகும் போல இருக்கு! வீட்டுலே போய் போட்டுக் குடிக்க இலவசப்பாக்கெட் நாலும் கொடுத்தாங்க. எல்லாம் அதுலே இருக்கு. கொதிக்கும் நீர் ஊத்துனால் போதும் ச்சாய் ரெடி!

 நல்லா ஹெவியா விளம்பரப்படுத்திக்கறாங்க லிப்டன் டீ நிர்வாகத்தினர்.


 எந்த ஊருக்குப் போனாலும் கிளம்பும் சமயம் வந்துட்டால்.... கொஞ்சம் ஃபீலிங்ஸ் ஆகிப்போகுதுல்லே? ஆன்ஸாக் சதுக்கம்வழியா அறைக்கு வந்துக்கிட்டு இருக்கோம். செயிண்ட் ஆண்ட்ரூஸ் சர்ச்சை உள்ளே போய்ப் பார்க்கலையேன்னு போனால்.... காலை 12 மணி வரைதான் திறந்திருக்குமாம் சனிக்கிழமைகளில்:( போயிட்டுப்போகுது. அடுத்த முறைக்கு வச்சுக்கிட்டால் ஆச்சு.

 எதிரில் ரயில் ஸ்டேஷனில் வண்டிகள் கிளம்ப ரெடியா இருக்கு. பேசாம ஏர்ப்போர்ட்டுக்கு ரயிலில் போகலாம். :"வேணாம்மா.... பெட்டிகளை உருட்டிக்கிட்டு தெருவிலே வரணும். " (வந்தால் என்ன ? )

 பகல் சாப்பாடு இப்போதைக்கு வேணாம். குடிச்ச ச்சாய் பசியைப் போக்கடிச்சுருச்சு:(   ஏர்ப்போர்ட் லவுஞ்சில் போய் (ஓசியில்) சாப்பிட்டுக்கலாம்.

 அறைக்கு வந்ததும் புதுப்பையிலே கொஞ்சம் பொருட்களை எடுத்து அடுக்கி அழகு பார்த்தார்! முகம் முழுசும் ஒரு பூரிப்பு! இப்போ நாம் போகப்போவது ஏர் நியூஸிலண்ட் விமானச்சேவை. அதுலே கோபாலுக்கு ரெண்டு கேபின் பைகள் அனுமதி உண்டு.

 சாமான்களை எடுத்துக்கிட்டு லாபிக்கு வந்தோம். கணக்கை முடிச்சுக்கிட்டு டாக்ஸிக்குச் சொன்னப்ப, அப்போதான் யாரையோ கொண்டு இறக்குன வண்டியே தயாரா இருக்குன்னாங்க.

 ஐயோ..... வேன்... வேணாமுன்னா.... ட்ரைவரைப் பார்த்துட்டு, இதுலேயே போலாமுன்னு கோபால் சொன்னார். ட்ரைவர் ஒரு இந்தியர். பஞ்சாப். லூதியானாக்காரர் வந்து ஒரு வருசம் ஆச்சாம். கொஞ்சம் கூட நளினமே இல்லாத சாரத்யம். நிதானமா போகச்சொன்னால்..... கேட்டுட்டாலும்.....

 சமையல் வேலைக்கு படிக்க வறேன்னு அளந்துட்டு விஸா வாங்கிக்கறாங்க. இங்கே வந்ததும் காசு சம்பாரிக்க எதாவது ஒரு வேலை கிடைச்சுருது..

 வடக்கே முக்கியமா தில்லி, சண்டிகர் பஞ்சாப் ஹரியானா பயணங்களில் எங்கே பார்த்தாலும் ஆஸி, நியூஸி, இங்கிலாந்து, அமெரிக்கா,கனடா போகணுமான்னு ஏகப்பட்ட விளம்பரங்களும் ஏஜன்ஸி ஆஃபீஸ்களும் பார்த்தோம். விஸா, டிக்கெட், படிக்கக் கட்டவேண்டிய ஃபீஸ், இங்கே வந்தால் தங்கவும் உணவுக்கும் ஆகும் செலவுக்குக் காசுன்னு எல்லாத்தையும் கூட்டிப்பார்த்தால் சில லட்சங்களுக்குக் குறையாது.. ஆனால் எப்படித்தான் சமாளிக்கலாம் என்ற தைரியத்தில் வர்றாங்களோ தெரியலை:(

 சென்னையில் இப்படி ஏஜன்ஸிகளின் விளம்பரம் பார்த்த நினைவில்லை எனக்கு. ஒருவேளை அந்த ஏரியாவுக்கு நான் போகலையோ என்னவோ!

 ச்சைனா டவுனைத் தாண்டும்போதுதான் .... அட இதை எப்படி மறந்தோமுன்னு நினைச்சேன். ப்ரிஸ்பேன் நதியையொட்டிப் போகும் சாலையில் பயணம். ஹொட்டேலை விட்டுக் கிளம்புன இருபத்தியஞ்சாவது நிமிசத்துலே ஏர்ப்போர்ட். வந்தோமுன்னா வேகம் எப்படி இருக்குமுன்னு பாருங்க.


ஆளரவம் இல்லாத விமான நிலையத்தில் எப்பவும்போல ஒரு கருப்புப் பசு நின்னுக்கிட்டு இருக்கு. நானும் ஒரு ஆறேழுவருசமாக் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். இரத்தப்புற்று நோய்க்கு ஆளான சின்னஞ்சிறு சிறுவன் நாலுவயசு Lachlan வரைஞ்ச படங்களை,  தன் உடலெங்கும் தாங்கிப்பிடிச்சு நிக்கும் பசு. சிகிச்சை நடக்கும்போது ஏற்பட்ட பலவிதமான உணர்வுகளுக்கு வடிகாலா பெயிண்டிங் செஞ்சவைகள்.

 தூரத்தில் ப்ரிஸ்பேன் நகரின் வானளாவும் அடுக்குகள். 

செக்கின் செஞ்சுட்டு லவுஞ்சுப்போய் கொஞ்சம் சாப்பிட்டோம். அப்புறம் தமிழ்மணம் மேய்ச்சல். அஞ்சரைக்கு அறிவிப்பு வந்துச்சேன்னு நம்ம கேட்டாண்டை போனால்..... நம்ம டிக்கெட் ஆறரை மணி ப்ளைட்டுக்காம்.

 நாம் முதலில் செவ்வாய் மாலை மகளுடனே திரும்பிவர்றதாத்தான் திட்டம். அது இதே ஆறுமணி விமானம்தான். அதுக்குப்பிறகு கோபாலின் அலுவல் காரணம் எங்க ரெண்டு பேருக்கு மட்டும் இன்னும் நாலுநாள் கழிச்சு மாற்றி எடுக்கச் சொன்னப்ப, கோபால் ஆஃபீஸ்லே ட்ராவல் கவனிக்கும் நபர் செஞ்ச மாற்றம் இப்படி. ஜெட் ஸ்டாருக்கு ஏர் நியூஸிலேண்ட் தேவலைன்னு நினைச்சிருப்பார் போல!

 நல்லவேளை அரைமணி தாமதமானது. ஒருவேளை காலை ஃப்ளைட்டுக்கு மாற்றி இருந்தா? பொழுதன்னிக்கும் போறார் வாரார். அப்படி இருக்க ஏன் டிக்கெட்டை எடுத்துப் பார்க்கலைன்னா.......... ஙே..........

  'உன் கூட வரும்போது (பயத்தில்) உலகையே மறந்துடறேன்' னு சொல்லத் தெரியலை பாருங்க:-))))

 சரியா நடுராத்திரிக்கு விமானம் விட்டிறங்கி வர்றோம்.... எங்க முன்னாலே நடந்து போகும் பயணியின் ஜாக்கெட் பையில் ஒரு வாழைப்பழம் எட்டிப் பார்க்குது. அவரைக்கூப்பிட்டு பழமெல்லாம் கொண்டு போனால் 200 டாலர் ஃபைன், போர்டைப் பாருன்னா.... ஐயோ என்ன செய்யறதுன்னு முழிக்கிறார். பேசாம உரிச்சுத் தின்னுட்டுத் தோலை குப்பைத்தொட்டியில் போடு. ஆச்சு. ஒரு ஆஸி பயணியின் காசைக் காப்பாத்திக் கொடுத்த புண்ணியம் நம்ம கணக்குலே:-)

 சாப்பாட்டு ஐட்டம் இருக்குன்னு என் கார்டில் எழுதி வச்சுருந்தேன். என்னன்னு கேட்டப்ப ச்சாய் னு எடுத்துக் காமிச்சப்ப, அதிகாரியின் கண்ணில் மின்னல். அட சுடுதண்ணீ ஊத்துனாப் போதுமா!!!!

 ஆஹா.... அப்ப இன்னும் இது  நியூஸிக்கு வரலை போல!!!!

 டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வந்தப்ப மணி பனிரெண்டரை! வழியெங்கும் நாலுநாளைக்கு முன்னே விடாம ரெண்டு நாளாக் கொட்டுன பனி கெட்டிப்பட்டுக் கிடந்துச்சு.

 மறுநாள் 'ஞாயிறு' வீட்டின் புழக்கடைப் பனியைக் கரைக்க முயன்று கொண்டிருந்தது!

  கடைசியா ஒரு சேதி!  ' பயணம் முடிஞ்சு வந்து ஒரு மாசம் கழிச்சு கோபிட்வீன் ப்ரிட்ஜ் பாதையில் போனப்ப டோல் கட்டாம போயிட்டே. அதுக்கு 30 டாலர் அபராதம் கட்டணுமுன்னு நோட்டீஸ் வந்துருக்கு அதையும் உன் க்ரெடிட் கார்டுலே சார்ஜ் பண்ணிட்டோமுன்னு கடிதாசு போட்டுருக்கு வாடகைக்கார் நிறுவனம்! காரெடுக்கும் பயணிகளுக்கு எங்கெங்கே டோல் கட்டணுமுன்னு ஒரு விவரம் வச்சுருக்கக்கூடாதா?

 கண்ணுக்குப் புலப்படாத இடத்தில் டோல் பூத் வச்சுருந்தா நாம் என்ன செய்வது? இந்தியாவில் இருப்பது போல சாலையை வழிமறிச்சு வசூல் பண்ணத்தெரியலை பாருங்க:(

 போகட்டும் எல்லாம் நமக்கொரு படிப்பினைதான்.

 அதுக்காக பயணம் போகாமல் இருக்க முடியுமா?

 பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!!!  பி.கு: எங்க ஊரில் டோல் ரோடு எதுவுமே இல்லை. இன்னும் சொன்னால் தெற்குத்தீவில் சாலைப்பயணம் முழுசும் இலவசமே! தைரியமா வாங்க:-))))