Friday, August 31, 2012

வசந்தம் வந்ததம்மா............

ஜாதகம் பார்த்ததுலே மூணு மாசமா ஆட்டிவச்சது இன்றோடு முடிஞ்சுருமுன்னு சொன்னாங்க. ரொம்பச்சரி! ஒரு வழியா குளிர்காலம் முடிவுக்கு வருது. நாளைமுதல் அஃபீஸியலா வசந்தம்.

 அப்ப அடையாளம் உண்டா? உண்டே! பல்புகள் எல்லாம் முளைக்கத்தொடங்கி ஹலோ நலமான்னு கேட்கும் விதமா புன்சிரிப்பைக்காட்டி முதலில் வந்தவை,  டாஃபோடில்கள்.

 நம்மூர்லே இந்த டாஃபோடில் பூக்களுக்கு இன்னொரு விசேஷ மரியாதை உண்டு. ஒவ்வொரு வருசமும் ஆகஸ்ட் மாசம் கடைசி வெள்ளி டாஃபோடில் டே! இந்த வருசம் இது இன்றைக்குத்தான்! மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் பரவலா உண்டியல் குலுக்கி வசூலாகும் தொகை முழுசும் கேன்ஸர் சொஸைட்டிக்குப் போகுது. நமக்கும் சட்டையில் குத்திக்க ஒரு (செயற்கை) பூ கொடுப்பாங்க. இந்த வருசம் 7000 வாலண்டியர்கள் உண்டியல் குலுக்க முன்வந்துருக்காங்க(ளாம்)

 இதுதான் எனக்குக் கொஞ்சம் பேஜாரு. இந்தப்பூவை செஞ்சு கொடுக்கும் கம்பெனிக்கு வசூலாகும் பணத்தில் ஒரு பகுதி போயிருதே. அதுக்குப் பேசாம இந்த ஊரில் கும்பல்கும்பலாப் பூத்திருக்கும் பூக்களையே ஒன்னு கொடுக்கலாம்.

 எங்க நியூஸிக்கு மேலே வானத்துலே பொத்தலாம். ஓஸோன் லேயரில் ஓட்டை! அதனால் வெய்யில் அடிக்கும் போது ( அடிச்சுட்டாலும்!) வெளிப்படும் UV Rays களினால் பாதிப்பு அதிகமுன்னு சொல்றாங்க. ஸ்கின் கேன்ஸர்தான் அதிகமாம். மூணு பேரில் ஒருத்தருக்கு கேன்ஸர்ன்னு இதுக்கான சொஸைட்டி சொல்லுது. இதைப்பற்றி இன்னொரு சமயம் விரிவாப் பார்க்கலாம். இப்போ..... டாபிக் வசந்தம்.

 எங்கூர் பொட்டானிக் கார்டனில் டாஃபோடில் லான் என்றே ஒரு பகுதி இருக்கு. அது பாட்டுக்குக் காடாய்ப் பூத்துக்குலுங்கும். இந்தப்பகுதியை ஒட்டியே சாலை இருப்பதால் போகும்போதும் வரும்போதும் கண்ணில் படாமப்போக நோ ச்சான்ஸ்:-)

 நல்ல மஞ்சள் நிறத்தில் ஆறு இதழ்கள் வெளிப்புற வட்டத்தில். நடுவில் இன்னும் கொஞ்சம் அழுத்தமான மஞ்சள் நிறத்தில் குட்டியா ஒரு கப். பார்க்க படு நேர்த்தி! நடுவில் மஞ்சளுக்குப் பதிலா ஆரஞ்சுகூட இருக்கும் சில வகைகள் உண்டு. வெளிவட்டம் முழுசும் வெள்ளை நிறமாவும் உட்புறம் நெளிநெளியா விளிம்பு வச்சக் குட்டிட் டம்ப்ளர் ஆரஞ்சு இல்லை மஞ்சளாகவும் பூக்கும் வகைகளும் உண்டு.

பெரிய பூக்கள் இல்லாமல் குட்டிக்குட்டிப் பூக்கள் உள்ள மினியேச்சர் வகைகளும் உண்டு, பொதுவா டாஃபோடில் செடிகள் லேசா விஷ குணமுள்ளது என்பதால் எந்தப் பூச்சிப்பொட்டும் விஷப்பரிட்சை செய்ய அண்டாது கேட்டோ! . நோ ஹனி டூ:( சுமார் அம்பது வகைகள் இருக்காமே இதுலே! ரோஜாப்பூவை காதலுக்கு அடையாளமாச் சொல்வதைப்போல டாஃபோடில்கள் நட்புக்கு அடையாளமாம். ஃப்ரெண்ட்ஷிப் டே க்கு ஒரு கொத்து டாஃபோடில்ஸ் இனி கொடுத்துடலாம் இல்லே?

 இந்த பூக்களில் ஹைப்ரீடு வகைகள் மட்டுமே பதிமூணாயிரம்வரை இருக்குன்னு டாஃபோடில் டாட்டா பேங்க் சொல்லுது!!!!

 ஸ்பெயின், போர்ச்சுக்கல், துருக்கி போன்ற பிரதேசங்களில் இருந்துதான் டாஃபோடிலின் மூத்தகுடி வந்திருக்குன்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது. காலம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு!

 ரோமானியர்களும், கிரீஸ் நாட்டுக்காரர்களும் , மருத்துவ குணமிருக்குன்னு இதை நிறையப் பயன்படுத்தி இருக்காங்க. பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் இங்கிலாந்துக்கு இது போனது ரோமானியர்கள் தயவால்.

 இலை உதிர் காலக்கடைசியில் கொஞ்சம் பல்பு வாங்கி தோட்டதில் நட்டு வச்சால் போதும். வருசாவருசம் டாண்ன்னு தானே முளைச்சுக்கும். குளிர்காலத்தில் மனம் நொந்து கிடக்கும் மக்களுக்கு டாஃப் பார்த்தவுடன் மறு ஜென்மம் எடுத்தது போல் இருக்குமாம். வியாபாரத்துக்கு விளைவிக்கும் தோட்டங்களுக்கு அடிச்சது ப்ரைஸ். பத்துப்பூக்கள் இருக்கும் கொத்து எட்டு டாலர்கள்ன்னு பூக்கடைகளுக்கு ஆகஸ்ட் முதல் வாரமே வரத்தொடங்கும்

 சீஸன் சமயத்தில் அம்பது செண்டுக்கு அள்ளிக்கோ அள்ளிக்கோதான். கட் ஃப்ளவருக்காகவே அவதரிச்சது போல நீளமான தண்டுகளின் உச்சியில் பூ மலர்ந்து நிக்கும். பறிக்காமல் செடியிலேயே விட்டு வச்சால் குறைஞ்சது ரெண்டு வாரத்துக்கு ஜம்முன்னு நிற்பது கேரண்ட்டீ:-)

 வியாபாரநிமித்தம் வளர்க்கப்படும் செடிகள், பூத்து முடிச்சு ரெண்டு மூணு மாசத்துலே இலைகள் எல்லாம் பழுத்துக் காயத்தொடங்குனதும் செடிகளைத் தோண்டி அடியில் உள்ள கிழங்குகளை எடுத்துத் தனியா ஒரு காற்றோட்டமான இடத்துலே வச்சுக் காயவைப்பாங்க. அப்படியே ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கும் கிழங்குகளை மீண்டும் குளிர் காலம் வர ஒரு மாசம் இருக்கும்போது நட்டுவைப்பாங்க.

 கிழங்கின் உயரம் போல மூணு மடங்கு ஆழமான குழியில் நட்டுவைக்கணும். தண்ணிர் எதுவும் ஊத்த வேண்டிய அவசியமே இல்லை. அது பாட்டுக்குக் குளிர்காலம் முழுசும் வளர்வதற்கு ஆயுத்தம் செஞ்சுக்கிட்டே இருந்து வசந்தம் ஆரம்பிக்கும்போது தலையை வெளியே நீட்டிரும்.

 நம்மைப்போல இருக்கும் மக்கள்ஸ்க்காக பல்புகளே கடையில் விற்பனைக்கு வந்துருது. நோகாம நோம்பு கும்பிட்டுக்கலாம்.

 நம்ம பதிவில் இருக்கும் அத்தனை மலர்களையும் நண்பர்களுக்கு நட்பின் அடையாளமாகப் பகிர்ந்தளிக்கிறேன்.

 இணைய நட்புகளை இணைக்கும் பூ!!!!.

39 comments:

said...

அம்மாடி, எத்தனை பூக்கள், எல்லாத்தையும் எங்க வைக்கறது?

said...

வஸந்தத்தை வரவேற்கும் விதமாக
பூத்திருக்கும் அழகிய் பூக்களை பல்வேறு
நிலைகளில் வண்ணப் புகைப்படங்களாகக் கொடுத்து
தங்கள் பதிவினில் மட்டுமல்லாது எங்கள்
இதயங்களிலும் வஸந்தத்தை பூக்கச் செய்தமைக்கு
மனமார்ந்த நன்றி
மனம் கொள்ளை கொண்ட் பதிவு
தொட்ர வஸந்தகால வாழ்த்துக்கள்

said...

எவ்வளவு அழகான மலர்கள். வசந்தகாலம் வருவதற்காகவே காத்திருந்து பூக்கும் மலர்களைப் பார்க்கும்போது வியப்பாதான் இருக்கு. மண்ணுக்குள்ளோ மரத்துக்குள்ளோ எங்கு புதைந்திருந்தாலும் காலநேரக் கணக்கெல்லாம் மிகத் துல்லியமா மரபணுவின் நினைவில் பதிஞ்சிருக்கே... அற்புதமான படங்களுடனான தகவல்பகிர்வுக்கு நன்றி மேடம்.

said...

பூக்களைப் பார்ப்பதே அழகு. அதை ரசிப்பது அதை விட பேரானந்தம். பொதுவா மஞ்சள் நிறமென்றால் உள்ள கவர் கள்ளியாக இருக்குது. வீட்டுத் தோட்டமெங்கும் இது போன்ற பூக்கள் நிறைந்த மரம் செடி இருந்தால் போதும். ஆழ்மன அழுக்குகள் அத்தனையும் துடைத்து அன்றாட வாழ்க்கையை ஒரு யோகியைப் போல மாற்றிவிடும் போல. தெருவில் உள்ள மரங்களே அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். உங்களோட பூ மகள் ஊர்வத்தில் வசந்தம் வந்ததம்மா என்று பாட்டு பாடிக் கொண்டு செல்வதாக கற்பனை செய்து பார்த்தேன்.

said...

கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் ரம்யமான படங்களுடன் பகிர்வு பிரமாதம்

said...

படங்களுடன் பகிர்வு (எழுத்து நடை சூப்பர்) அருமை... மிக்க நன்றிங்க...

said...

ஆரஞ்சு சாஸர்ல சிகப்புக் கப் ரொம்ப அழகாருக்குது!!!ஜூப்பரு.


said...

மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே - கவியரசர் கண்ணதாசன்

வெறும் மகரந்தச் சேர்க்கைக்காகவா ஆண்டவன் மலர்களைப் படைத்தான்? இல்லை. இல்லவேயில்லை.

இந்த உலகில் படைக்கப்பட்ட உயிரனங்களிலேயே மனிதனுக்குத்தான் வாழத் தெரியாது. தன்னுடைய வாழ்க்கையையே துன்பம் நிறைந்ததாக மாற்றிக் கொள்ள அவனால்தான் முடியும். அப்படித் தன்னைத் தானே துன்புறுத்தி வாழும் மனிதனுக்கு ஏதேனும் ஒருவகையில் மனமலர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் தான் இறைவன் செடிகளிலும் கொடிகளிலும் மரங்களிலும் மலர்களை மலர வைத்தான்.

அதனால்தான் மலர்களைப் பார்த்ததுமே நம் மனதில் மகிழ்ச்சி துளிர்க்கிறது.

டாஃபோடில் ரொம்பவே அழகு. அதிலும் கப்&சாசர் மாதிரி.. ஊலலல்லா!

said...

வசந்ததில் ஓர் நாள்னு பாட வேண்டியதுதான். :))

மலர்கள் அழகு.

said...

என்னமோ தெரியல... என் கம்ப்யூட்டர்ல மல்ர்கள் படங்கள் ஓபன் ஆகாம சதி பண்ணுது. அதனால உங்கள அன்பை மட்டும் எடுத்துக்கறேன்.

said...

வசந்தத்தை எங்களையும் உணரச் செய்து விட்டீர்கள்:)! மலர்கள் கொள்ளை அழகு. தகவல்களுக்கு நன்றி.

said...

அழகழகான மலர்களைக் கொடுத்து எல்லோருடைய உள்ளங்களைப் பறித்துக் கொண்டு விட்டீர்கள், துளசி!
எல்லோருடைய நட்பும் இதேபோல பூத்துக்குலுங்க வாழ்த்துக்கள்!
அன்புடன்,
ரஞ்ஜனி

said...

வசந்த வாழ்த்துகள்..

நட்பு மலர்களுக்கு !!!

said...

மனம் கொஞ்சும் மலர்கள்.மஞ்சளும் வெள்ளையுமா என்ன அழகு துளசி.
உங்க செடி நண்பர் பார்த்து அசந்து போயிட்டார். ஒரே மகிழ்ச்சி. கிஃப்டட் லாண்ட்னு சொல்லிட்டுப் போகிறார். அப்போ ஆடிட்டேன் இப்ப அழகு காண்பிக்கறேன்னு ஆறுதல் சொல்றதோ பூமி.வசந்தம்னா இதுதான். மனம் குளிர்ந்தது.

said...

வசந்தம்... பூக்கள் வரவேற்கின்ற வசந்தம்....

படங்கள் பார்த்ததும் - உள்ளம் கொள்ளை போனது!

said...

மலர்களின் மணம் இங்கு வீசுகிறது.

வசந்தம் வருக! வருக!

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

வீடு முழுக்க அலங்கரிச்சு வையுங்களேன்:-)

said...

வாங்க ரமணி.

மூணு மாசக் கடுங்குளிருக்குப்பின் நாடு முழுசுமே வசந்தத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கு!

அதான் இதைக் கண்டதும் மனம் கொள்ளா மகிழ்ச்சி!

வாழ்த்துக்ளுக்கு நன்றி.

said...

வாங்க கீதமஞ்சரி.

சரியாச் சொன்னீங்க.காலண்டரை எங்கே ஒளிச்சு வச்சுருக்கேன்னு கூட முன்பு ஒரு பதிவு போட்டேன்:-)

said...

வாங்க ஜோதிஜி.

நம்மூரில் ரொம்ப அழகான சீஸன் வசந்தம்தான்.

கார்டன் சிட்டி ஆஃப் நியூஸி என்பதால் எங்கே பார்த்தாலும் பூக்களே பூக்கள்!

நீங்கள் சொன்னதுபோல் தெருக்களில் காலாற நடப்பதே ஒரு தவம்.

said...

வாங்க ஸாதிகா.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

நெளிநெளியா விளிம்புள்ள கப்ஸ் அழகுதான், இல்லையா!!!

said...

வாங்க ஜீரா.

மலர்களை மட்டுமா? இன்னும் ஏகப்பட்ட சமாச்சாரங்களையும் கூடவே படைச்சுட்டானே.

நின்னு ரசிக்க நமக்குத்தான் நேரம் இல்லை!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

பாட்டு ஒரே பாட்டா இருக்கே!

நன்றிப்பா.

said...

வாங்க பால கணேஷ்.

அடடா.... என்ன இப்படி? அழகை அண்ட விடாதா? அச்சச்சோ!

said...

வாங்க ராமலக்ஷ்மி.


உங்க ஊருக்கு எங்கூரு தங்கச்சி இல்லையோ!

அக்காவின் மகிழ்ச்சியே தங்கைக்கும்:-)

said...

வாங்க ரஞ்ஜனி.

வணக்கம். முதல் வருகைக்கு நன்றி.

இப்பத்தானே ஏராளமான நண்பர்களை மாநாட்டில் சந்திச்சுட்டு வந்துருக்கீங்க.

எல்லாம் இணையம் கொடுத்த கொடை!

நட்'பூ'க்களுக்குப் பஞ்சமே இல்லை:-))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

மலர்களே மலர்களுக்குச் சொல்லும் நன்றியாக இருக்கே!!!!!

said...

வாங்க யாழ் மஞ்சு.

தனி மடல் அனுப்பறேன்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

செடி நண்பருக்கு என் நன்றிகள்:-)

ஆட்டத்துக்கு பரிகாரமா? இல்லைப்பா

அது ஆட்டமுன்னா இது கொண்டாட்டம்:-)))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க பத்மாசூரி.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வசந்தத்தை வரவேற்கும் மஞ்சள் மலர்கள் ரொம்பவே கவர்ந்தன.

said...

டாஃபோடில் பூக்கள் கொள்ளை அழகு அதை பற்றிய விரிவான தகவல்கள் அருமை.
துளசி மேடம் இதோ உங்களுக்காக ஒரு கொத்து டாஃபோடில் பூக்கள் நட்புக்காக.
நன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்.

மஞ்சள் மங்களகரமான நிறம் என்பதால் எல்லோருக்கும் பிடிச்சுப்போகுது போல .

செடியின் பச்சை இலைகளுக்கு சரியான கான்ட்ராஸ்ட் மஞ்சள்தானே!

இங்கே நட்புக்கு மஞ்சள் ரோஜாதான்:-)

said...

வாங்க முரளிதரன்.

டாஃபோடில் கொத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

said...

அழகிய வசந்தப் பூக்கள் குலுங்கி வரவேற்கின்றன நட்பு மலர்களை.

said...

வாங்க மாதேவி.

நட்பூக்களை ரசித்தமைக்கு நன்றிகள்:-)