Thursday, February 28, 2008

அஞ்சலிகளும், அனுதாபங்களும்...'சுஜாதா'

எங்கள் வீட்டில் எதாவது ஒரு விஷயம் கருத்து வேற்றுமை இல்லாம எல்லாருக்குமேப் பிடிச்சிருக்குன்னா
அது 'சுஜாதா'வின் கதைகள்தான். எழுபதுகளில் வெளிவந்த எல்லாக் கதைகளையுமே அனுபவித்துப் படித்திருக்கிறோம். அவருடைய ஒரு கதையின் நாயகி என் வீட்டில் இருக்கிறாள்.

பெண்குழந்தையென்று தெரிந்ததும்
'சட்'என்று மனதில் வந்த பெயர்தான் மதுமிதா.


இப்போது பிரிந்தால் என்ன? என்றாவது ஒரு நாள் மேலுலகில் மீண்டும் சந்திப்போம் சுஜாதா.


உங்கள் எழுத்துக்கள் எங்கள் மனதில் வாழ்கின்றன.

எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது?

அஞ்சலிகளும், அனுதாபங்களும்

Wednesday, February 27, 2008

மலர்களே மலர்களே............

ஆரம்பப்பள்ளிக்கூடக் குழந்தைகளின் பிக்னிக் டே. குழந்தைகளைக் கட்டி மேய்க்கறது லேசுப்பட்டக் காரியமா? அதனால் 'பேரண்ட் ஹெல்பர்ஸ்' என்ற பெயரில் ஆறு குழந்தைக்கு ஒரு அம்மாவோ இல்லை அப்பாவோன்னு கூடவே போறது இங்கே வழக்கம். நம்ம வீட்டுலேதான் அப்பாவுக்கு ஆஃபீஸே கதியாச்சே. ஆன்னா ஊன்னா, இல்லே வேற எதுன்னாலும் அம்மாதான் பள்ளிக்கூடத்துலேயே வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழிச்சுக்கிட்டு இருந்தேனே......

அருகாமையில் இருக்கும் ஒரு தோட்டத்திற்குப் போயிருந்தோம். ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிஞ்சு மதியச் சாப்பாடும் ஆச்சு. அந்தத் தோட்டம் பூராவும் (Rhododendron) ரோடோடெண்ட்ரன் செடிகள் நிறைஞ்சுருக்கு. பூக்கும் சீஸன் வேற.சொல்லணுமா? இந்தப்பூ நம்ம நேபாள நாட்டின் தேசிய மலராம்.
பலவித நிறங்களில் கீழே உதிர்ந்துகிடந்த பூக்களுடன், புதரின் அருகே உட்கார்ந்திருந்தோம்.


பக்கத்தில் எதோ நார் போல ஒண்ணு கைக்கு அகப்பட்டது. ச்சும்மா இல்லாமல் அந்தப் பூக்களைத் தொடுக்க ஆரம்பிச்சேன். அது நீளமா சரமாகிறதைப் பார்த்த குழந்தைகளுக்குக் குஷி தாங்கலை. எனக்கு எனக்குன்னு கேட்டுக்கிட்டு இருந்துச்சுங்க. அக்கம்பக்கத்துச் செடிகளில் இருந்து உதிர்ந்து கிடந்த குவியலைப் பொறுக்கிட்டு வந்தாங்க. நானும் விடாமத் தொடுத்து ஆளுக்கு ஒரு மாலையாக் கழுத்தில் போட்டுக் கொடுத்தேன். ஊசி இல்லாம எப்படி அந்தப் பூவைக் கோர்க்கிறேன்னு அங்கே இருந்த எல்லாருக்கும் (பெரியவர்களுக்குத்தான்)ஒரே ஆச்சரியம். கிடைச்ச சான்ஸை விட்டுறாம, நம்மூரில் எப்படி பூக்களைக் கட்டி அதை ஒரு வியாபாரமாச் செய்யறாங்க, பெண்கள் எப்படி பூக்களைத் தலையில் சூட்டிக்கொள்ள விரும்புறாங்க, கோயில்களுக்கருகில் பூக்கடைகள் இல்லாமலே இருக்காதுன்னு ஒரு லெக்சர் அடிச்சுவிட்டேன்.

இது நடந்ததுக்கு ரெண்டு வாரம் கழிச்சு, நம்மூர் சிட்டிக் கவுன்ஸிலில் இருந்து ஒரு கடிதம் வந்துச்சு. அடுத்து வரப்போகும் ப்ளவர் ஷோவுக்கு உதவி செய்ய முடியுமான்னு........கேட்டுருந்தாங்க. செஞ்சாப்போச்சு......... இது என்ன பிரமாதமுன்னு அவுங்க சொன்ன எண்ணில் கூப்பிட்டுப் பேசினேன். இந்த வருஷம் உலகநாடுகளின் திருமண அலங்காரங்கள் என்று அலங்கரிக்கப் போறோம். உங்க நாட்டு அலங்காரங்களைச் செய்ய உதவணும்னு சொன்னாங்க. நம்மூர்லே ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு மாதிரியான அலங்காரம், சாஸ்த்திரம் சம்பிரதாயம் எல்லாம் இருக்குன்னு ஒரு லெக்சர் கொடுத்துட்டு, பொதுவாத் தமிழ்நாட்டுலே மணமகள் அலங்காரத்துக்கு உதவி செய்யறேன்னு சொல்லி செஞ்சு கொடுத்தேன். அட்டையில் ஜடை அலங்காரம் காகிதப்பூக்களால் செஞ்சு இன்னும் தேவையான ஆக்ஸெஸரீஸ் எல்லாம் கொண்டுபோய் ஜமாய்ச்சாச்சு. இங்கத்து டவுன் ஹாலில் இது நடந்து ஒரு 18 வருசமாச்சு.


இங்கே சம்மர் சீஸன் ஃபிப்ரவரி மாசம் இறுதிவரைதான். நம்மூரோ நியூஸியின் கார்டன் சிட்டிவேற. அதனால் ஃபிப்ரவரி மாசம் வரும் காதலர் தினத்தையொட்டியே இந்த பூக்கள் கண்காட்சி நடந்துக்கிட்டு இருந்துச்சு. வருசாவருசம் எதாவது ஒரு 'தீம்' சொல்லிருவாங்க. போன வருசம் பட்டாம்பூச்சி, அதுக்கு முந்தினவருசம் வண்டு இப்படி. ஒரு வருசம் டெடிபேர் கூட இருந்துச்சு. அதுக்கேத்தபடி கார்டன் செண்டர், ஸ்கவுட் டீம், கேர்ள் கைட்ஸ், இன்னும் சிலபல வியாபார நிறுவனங்கள்ன்னு ஒவ்வொரு குழுவும் அதை அனுசரிச்சு, ஊருக்குள்ளே போகும் ஏவான் நதிக்கரையில் அலங்காரம் செஞ்சு வைப்பாங்க. சிலபேர் ஆத்துத்தண்ணியிலே சின்னப் படகுகளை வச்சு அதை அலங்கரிச்சு இருப்பாங்க. இந்த ஆத்தை ஒட்டியே இருக்கும் விக்டோரியா சதுக்கத்தில் மலர் அலங்காரமுன்னு நகரசபை விதவிதமாப் பூத்துக்குலுங்கும் பூச்செடிகளை நட்டு வச்சிருக்கும்.பொதுவா வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறுவரைன்னு வீகெண்டையும் சேர்த்தே இருக்கும். மக்களுக்கும் ஓய்வா அதைப்போய்ப் பார்க்க நேரம் கிடைக்கும். இதுலே ஹைலைட் என்னன்னா நம்ம, நகரத்துக்கு மத்தியில் கதீட்ரல் இருக்கு பாருங்க ,அங்கே ரெண்டு வரிசை இருக்கைகளுக்கு நடுவில் இருக்கும் நடைபாதையில் மலர் அலங்காரம் செய்வாங்க. மலர்க்கம்பளம் விரிச்சிருக்கும். மொத்தம் 20 மீட்டர் நீளம். ரெண்டு மீட்டர் அகலம் வரும்.
இது இல்லாம அங்கே இருக்கும் தூண்களில் எல்லாம் மலர்க்கொத்து அலங்காரம் இருக்கும். இந்தத் திருவிழா (இப்படித்தான் சொல்ராங்க Floral Festival) நடக்கும் வாரமெல்லாம் அங்கங்கே வெவ்வேறு பூக்களுக்கான சொசைட்டிகளில் மலர் அலங்காரம், அந்தக் குறிப்பிட்டச் செடிகளை வளர்க்கும் முறைக்கான பயிற்சி வகுப்புகள், நம்ம பொட்டானிக்கல் கார்டனில் சில விரிவுரைகள்னு எதாவது இருக்கும்.
இந்த வருசம் கொஞ்சம் தாமதமாத்தான் திருவிழா ஆரம்பிச்சது, பிப்ரவரி 22 முதல் 24 வரைன்னு. நாங்களும் வழக்கம்போல் சனிக்கிழமை பகலுக்கு விக்டோரியா சதுக்கத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். வழக்கமான இடத்துலே போய்ப் பார்த்தா.......................

அங்கே ஒண்ணுமே இல்லை. எல்லாம் வெறிச்சோடிக்கிடக்கு. ஃபெரியர் ஃபவுண்டென்லே கொட்டும் தண்ணி கூட இல்லாம நீரூற்று மொட்டையா நிக்குது. இந்த மாதிரி தண்ணீர் இல்லாம ஒரு நாளும் பார்த்ததில்லை இந்த 20 வருசத்துலே. இது என்னடா நம்ம நகரத்துக்கு வந்த சோதனைன்னு அவசரஅவசரமா கேமெராவை எடுக்கறதுக்குள்ளே............ பக்ன்னு தண்ணீர் பீய்ச்சியடிக்க ஆரம்பிச்சது.


நதிக்கரையில் பார்வையிட ஒரு அலங்காரமமும் இல்லாததால் கூட்டமும் இல்லை. ஒரு வாத்து மட்டும் 'என்னாத்துக்கு நீ இங்கே வந்தே?'ன்னு
கேக்கறது போல ஒரு பார்வை பார்த்துச்சு. நம்மைக்கடந்து போன ஒரு ட்ராம் வண்டியில் பக்கவாட்டு ஜன்னலில் . திருவிழா இந்த வாரம்தான்ன்னு உறுதி சொல்லி நாலு பூவைக்குத்தி வச்சிருந்தாங்க.


அப்படியே காலார நடந்து சதுக்கத்துக்கு வந்தோம். சதுக்கத்திலே கொட்டாய் போட்டு கொஞ்சம் பூக்கள், ஓவியங்கள், செப்புத்தகடு, கம்பிகளால் செஞ்ச மெட்டல் ஆர்ட்ஸ்னு விற்பனைக்கு இருந்துச்சு.

கதீட்ரல் உள்ளே மலர்க்கம்பளம் விரிச்சிருக்காம். வழக்கமா அங்கே ரெண்டு டாலர் வசூலிப்பாங்க தலைக்கு. அதுவும் எதோ தருமக் கைங்கர்யங்களுக்குப் போகும்.உள்ளே நுழைஞ்சதும் முன் வெராந்தாவுலே ஒரு மேசை போட்டு, நுழைவுச்சீட்டு விப்பாங்க.இன்னிக்கு என்னன்னா..... விற்பனைச்சீட்டுக்குன்னு வெளியே சின்ன கூடாரம், கதீட்ரல் வாசலுக்கு முன்னாலே ரெண்டு பக்கமும் நாலு தொட்டியில் செடிகொடிகளைவச்சு அலங்காரம். காசேதான் கடவுளடான்னு பக்காவா வியாபாரமாக்கி வச்சுருக்காங்க. பெரியவங்களுக்கு 10 டாலர். முதியோர் இல்லத்துலே இருந்து வந்தவங்கன்னா 5 டாலர்களாம். விலைவாசி இப்படி 400 சதமானம் ஏறிடுச்சா? நாலுபேர் இருக்கும் குடும்பம் கோயிலுக்குள்ளே போய்ப் பார்க்க நாற்பது வெள்ளின்னா.................... எப்படிங்க?போன வருசக்கடைசியில் இருந்து எங்களுக்கு புது நகரத் தந்தை வந்திருக்கார். இங்கே நகரத்தில் இருக்கும் மக்களைப் பிழிஞ்சு வரிகளை ஏறக்குறைய 25 சதமானம் ஏத்துனதோட நிக்காம, இந்த வருசம் மலர்களின் திருவிழாவை வழக்கம்போல உள்ளூர் மக்களை அனுபவிக்க விடாமல் செஞ்ச புண்ணியவான்.கொஞ்சம்கூட இதயமில்லாமல் இப்படித் திருவிழாவில் கைவச்சுட்டாரேன்னு, இவுங்க எல்லாம் சிந்திக்கவே மாட்டாங்களான்னு நினைச்சப்பத்தான் இந்த வருசத் திருவிழாவுக்கான 'தீம்' தெரியவந்தது.தலை, கை,& இதயமாம்.!!!!

"Head, Hand & Heartநல்லா இருங்கப்பா. நல்லா இருங்க.


நரகமுன்னு ஒண்ணு இல்லைன்னு நாலுபேருக்குச் சொல்லிக்கிட்டு இருந்தார் ஒருத்தர். உங்களை ஒரு படம் எடுத்துக்கவான்னு கேட்டப்ப, ச்சும்மாத் தோளைக் குலுக்கிட்டு போஸ் கொடுத்தார்.


வரவர நம்முலகே நரகமா ஆகப்போது..., அப்புறம் தனியா ஒண்ணு எதுக்குன்னு இருக்கோ என்னமோ?

Tuesday, February 26, 2008

ஏம்பா...பொண்ணை விட்டுட்டுப் போயிருக்கலாம்லெ......

சாகற வயசா இது? வெறும் இருபத்தியாறுதான். இன்னும் வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு. போனவருசம் ஷாங்காயில் நடந்த ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்லே இந்த நாட்டின் பிரதிநிதிகளாய்ப் போன டீம் மெம்பரில் ஒருத்தர் ஸேரா ஜேன். பவர் லிஃப்டிங்லே நியூஸியில் நாலாவது ரேங்க். போனவருஷமுன்னு நீட்டி முழக்கறேனே, இது ஒரு நாலு மாசம் முந்திதான்.


தெற்குத்தீவின் கடைசிப்பகுதியில் இருக்கும் விசேஷ கவனிப்பு வேண்டியுள்ள குழந்தைகளுக்கான பள்ளியில் படிப்பு. கற்பதில் கொஞ்சம் தாமதம். மூளை வளர்ச்சிக் கொஞ்சம் குறைவாம். தனியாக விடமுடியாது. எப்போதும் யாராவது கூடவே இருக்கணும். மிருகங்கள் மேல் அளவில்லாத பாசம். அனிமல் ஷெல்ட்டர்க்குப் போய் வாரம் ஒரு நாள் வாலண்டியர் வேலை செய்வது வழக்கம். உள்ளூரில் ஒரு சிகை அலங்கார நிறுவனத்தில் உதவியாளரா வேலை செய்ய ஆரம்பிச்சுச் சில வருசங்கள் ஆகுது. தனக்கே தனக்குன்னு ஒரு செல்ல நாயும் இருக்கு.


அழகான அருமையான குடும்பம். ரெண்டு அண்ணன்மார். நல்லாப் படிச்சுப் பெரிய வேலையில் இருக்காங்க. ஒரு அண்ணன் உள்நாட்டில், ஒரு முப்பது நிமிஷ கார்ப் பயணத்தூரத்தில். மூத்த அண்ணன் இங்கிலாந்தில் இஞ்சிநீயர்.
அம்மா மருத்துவத் துறையில் உள்ளூர் மருத்துவரின் கன்ஸல்டிங்கில் க்ளினிக்கல் நர்ஸ். சவுத் ஐலண்ட் ஸ்பெஷல் ஒலிம்பிக் கமிட்டீயின் தற்போதைய சேர் பர்ஸன்.


அப்பா...........பண்ணை அதிபர். பண்ணையில் ஐந்தாயிரம் ஆடுகள். இவரோட கட்டளைக்குக் காத்திருக்கும் மூன்று ஷீப் டாக்ஸ்( sheep dogs). இது தவிரக் குறைந்த எண்ணிக்கையில் பசுக்கள் கூட்டம் ஒண்ணு. இது தவிர வழக்கமான பண்ணையில் உள்ள பறவைகளாகக் கோழிகள் முதலானவை. பவுலிங் விளையாடுவதில் ஆர்வம். மகள் படிக்கும்/படித்த பள்ளியில் பேரண்ட் & டீச்சர்ஸ் அசோஸியேஷன் தலவரா பல ஆண்டுகள் இருந்துருக்கார். பவுலிங் க்ளப்பின் தற்போதைய ப்ரெஸிடெண்ட்.


அக்கம்பக்கம் பதினெட்டுப் பட்டியிலும் பேர் கேட்ட குடும்பம். நாற்பத்தி அஞ்சு வருசம் இங்கேயே இதே இடத்தில் இருக்குறாங்க.


ஒன்பதுநாள் நிகழ்வாக அப்பாவும் அம்மாவும் ஷாங்காய் போனார்கள். அப்பா, தன் மகளுக்கு மட்டுமில்லாமல் அந்தக் குழுவில் இருக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருந்துருக்கார். எல்லாருக்கும்தான் எதாவது உதவி வேண்டித்தானே இருக்கு. நிகழ்வுகள் முடியும் நாளில் அவருக்கு நெஞ்சுவலி. மருத்துவமனையில் சேர்த்து, முதல் சிகிச்சைக்குப்பின் அவரை ஹாங்காங் மருத்துவ மனைக்கு மாற்றி இருக்கிறார்கள். சேதியறிஞ்ச மூத்த மகன் லண்டனில் இருந்து ஹாங்காங் வந்து மருத்துவ மனையிலிருந்து அவர் வெளிவரும்வரை துணையாக இருந்து உதவி செஞ்சுட்டு, அப்பா அம்மாவை நியூஸிக்கு விமானத்தில் அனுப்பிவிட்டு, அவர் திரும்பிப் போனார்.


அம்மாவுக்கு ஒரே யோசனை. மகன்கள் இருவரும் வெவ்வேறு தொழிலில் வேறு இடங்களில். கணவருக்கோ உடல்நிலை சரியில்லை. மகள் ஒரு பாவம். பண்ணை வேலைகளோ அதிகம். பேசாமல் பண்ணையை விற்றுவிட்டு நகரத்தில் குடியேறிவிடலாம். ஏற்கெனவே இதைப் பற்றிச் சிலவருடங்களாகவே சிந்தித்துக் கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தவர்தான். இப்போது பண்ணையைப் பற்றி ஒரு முடிவு செய்யவேண்டிய தருணம். அப்பாவுக்கு ஒரு தயக்கம். பண்ணையை விட்டுப்போவதா? மண்டைக் குடைச்சல் அவருக்கும்.மனதின் ஒரு பகுதி இதைச் சரி என்று சொன்னாலும் அடுத்த பகுதி கேட்டால்தானே? உடல்நலக் குறைவு கொஞ்சம்கொஞ்சமாகக் கூடிவருகிறது.
உள்ளூர் மருத்துவமனையில் அவ்வப்போது தங்கும் நிலமை. மன அழுத்தம் கூடுகிறது. இதற்கும் மருந்து கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறை மருத்துவ மனையில் தங்க நேரிடும்போதெல்லாம் பிழைப்பாரோ மாட்டாரோ என்ற பெருங்கவலை மனைவிக்கு.

.
அப்பா அம்மா இருவரும் சேர்ந்துதான் மகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று முன்பே தீர்மானித்துக் கொண்டதுதான். அப்பாவுக்கு மகள் ரொம்பவே செல்லம். அவருடைய அருகாமையில் மகள் இருக்கும்போது மேனேஜ் செய்வது சுலபம். அம்மாவுக்குத் தன் ஒருத்தியால் மட்டும் மகளைப் பார்த்துக்கொள்வது சிரமம் என்று அவ்வப்போது பேச்சு வருமாம். இந்த சமயத்தில் இளைய மகனுக்குக் கல்யாணம் கூடிவந்தது. நல்லவேளையாகப் பெண் வீட்டுக்கார்களே எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டதால் அம்மாவுக்கு நேரம் கிடைத்தது கணவரையும் மகளையும் பார்த்துக்கொள்ள.


அடிக்கடி மருத்துவமனையில் இருப்பதால் மகனின் திருமணத்தில் அவரால் கலந்துகொள்ள முடியுமா என்பதும் ஒரு கூடுதல் கவலையாக இருந்ததாம்.
நல்லவேளையாக கூடுதலாக ஒன்றும் சம்பவிக்காமல் எல்லாம் நல்லமுறையிலேயே நடந்தது. அனைவரும் கலந்துகொண்ட மிகமகிழ்வான நிகழ்வு. மூத்த அண்ணனும் வந்து கலந்துகொண்டு சில நாட்கள் இருந்துவிட்டுப் போனார்.மகனின் திருமணம் முடிந்து பனிரெண்டு நாட்களில் வந்தது காதலர் தினம். . வேலைநாளாக இருந்ததினால், அம்மா காலை 7 மணிக்கே வேலைக்குக் கிளம்பிப் போய்விட்டார்கள். அதற்கு மறுநாள் மகளின் பிறந்தநாள். நல்ல பரிசாக ஒரு உடுப்பு வாங்கிக்கொண்டு வரணும் என்று மனதில் ஒரு திட்டம்.


அன்று மாலை ஐந்துமணி அளவில் வீடு திரும்பிய அம்மா கண்டது உயிரில்லாத கணவனையும், மகளையும். அவசர உதவியைக் கூப்பிட்டுவிட்டு,
இளைய மகனுக்கும் தொலைபேசினார். போலீஸ் உடனே பதறியடித்து வந்தது.


கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த மகளைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டிருக்கிறார் அப்பா. எல்லாம் அம்மா, பணிக்குப் போனதும் நடந்து முடிந்திருக்கிறது. பண்ணை வீடானதால் அருகில் மற்ற வீடுகள் இல்லை.
யாருக்கும் எந்த சப்தமும் கேட்கவில்லையாம்.


அங்கங்கே இதுபோன்ற மரணச்செய்திகளை அவ்வப்போது வாசிக்க நேர்ந்தாலோ, இல்லை தொலைக்காட்சிகளில் பார்த்தாலோ ஏற்படும் உணர்வை விட, மரணித்தவர்கள் நமக்குத் தெரிந்தவர்கள் என்றால் பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டு விடுகிறதல்லவா?

மூன்று வாரங்களுக்கு முன் எழுதிய ஒரு திருமணப்பதிவு நினைவிருக்கின்றதா? அந்த மணமகனின் தந்தையும் சகோதரியும்தான் இந்த அப்பாவும் மகளும்.

பிரேதப் பரிசோதனைக்குப் பின் இந்த வியாழந்தான் அவர்களது சவ அடக்கம் நடந்தது.


சவுத் ஐலண்ட் ஸ்பெஷல் ஒலிம்பிக் குழுவினரின் சிறப்பு மரியாதையோடு ஸேராவின் இறுதிச்சடங்கும், பவுலிங் க்ளப் அங்கத்தினர்களின் சிறப்பு மரியாதையோடு அப்பாவின் இறுதிச் சடங்குகளும் நடைபெற்றன.


இந்த நான்கு மாதங்களாக அவருக்கு மன அழுத்தம் கூடி இருந்ததாக மனைவி குறிப்பிட்டார். சரி.அப்பாவுக்குத்தான் வாழப்பிடிக்கவில்லை. மகளையாவது விட்டுவிட்டுப் போயிருக்கக்கூடாதா?


கணவரையும் மகளையும் இழந்து வாடும் அந்த அன்னைக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கவும், இறந்து போனவர்களின் ஆத்மாக்களுக்கு அஞ்சலியாகவும் இதை இங்கே பதிவு செய்கின்றேன்.

Saturday, February 16, 2008

ப்ரிவ்யூவுக்குப் போனோம்அக்பருக்கு இந்து மனைவி உண்டா, இல்லையா? அப்படி இருந்துருந்தா அவுங்க பெயர் என்ன? ஜஹாங்கீரின் மனைவி பெயர்தான் அக்பரின் இந்து மனைவி பெயரா? இப்படியெல்லாம் சரித்திரக் குழப்பங்கள் ஒரு பக்கம் இருக்க.......

ஜோதா அக்பருக்கு ப்ரிவ்யூக்குப் போகும்படியா ஆச்சு எங்களுக்கு. சரித்திர டீச்சருக்குச் சரித்திரப்படத்தைப் போட்டுக் காமிக்கணுமா இல்லையா?சரி. நம்ம பார்வையில் படம் எப்படி?

பிரமாண்டமான போரில் ஆரம்பிக்குது படம். சின்னப்பையன் ஜலாலுதீனுக்குப் பட்டம் கட்டி போரில் தோற்ற மன்னரின் தலையை வெட்டச் சொல்றார் அவரோட கார்டியன் கம் சேனாபதி பைரம் கான்.
இளகிய மனமுள்ள ஜலாலுதீன் வேணாமுன்னு மறுக்கவும், அந்தக் கத்தியை எடுத்தே, எதிரித் தலையைத் துண்டாடுறார்.

ஜலாலுதீன் மொஹம்மத் தன் ராஜ்ஜியத்தை விரிவாக்கிப் போகும்போது அவர் ஆட்சிக்கு உட்பட மறுத்தாங்க சில ராஜபுத்திர அரசர்கள். சிலர் சரின்னு சம்மதிக்கிறாங்க. இதன் காரணமா, ஜோதாபாய்க்கு சின்னவயசில் நிச்சயம் செய்த திருமணம் நின்னு போச்சு. மாப்பிள்ளைவீட்டார் வேணாமுன்னு போயிட்டாங்க.

ஜோதாவின் அப்பா, ஜலாலுதீனின் உதவி கேட்டு வர்றார். உதவிக்குப் பதில் உதவியா தன் பொண்ணைக் கட்டிக் கொடுக்கறேன்னு சொல்றார். இங்கதான் கொஞ்சம் உதைக்குது. ராஜபுத்திரர்களைப்பற்றி முந்தி எங்கியோ கொஞ்சம் படிச்சதில் அவுங்க வீரம், நேர்மை, மத சம்பிரதாயங்களில் அவுங்களோட பற்றுன்னு மனசுலே ஒரு 'படம்' இருந்துச்சு. இப்ப என்னன்னா.....ஒரு தகப்பனே வேற்றுமதக்காரருக்குத் தன்மகளை மணமுடிக்கத் தரேன்னு சொல்றாரே.......

ராஜ்ஜியமுன்னு வரும்போது நீதி நியாயங்கள் மாறிப்போகுதோ என்னவோ? அது இருக்கட்டும். இப்ப 'கதை'க்கு வருவோம்.....

கல்யாணமுன்னு சொல்லி ரெண்டு பகுதியையும் சேராத ஒரு பொது இடத்துக்கு(அப்படித்தான் இருந்துச்சு) வந்து சேர்ந்தாங்க. பொண்ணு ஒரு கூடாரத்தில் இருக்கு. அப்பாகிட்டே சொல்லுது நான் மணமகனை 'ரெண்டு கேள்வி'கேக்கணும். அதுக்கப்புறம்தான் கட்டிக்கச் சம்மதமா இல்லையான்னு சொல்வேன்னு.

ஜலாலுத்தீன் செய்தி கேட்டுப் பொண்ணைப்பார்க்க வர்றார். பொண்ணு கேட்கும் ரெண்டு நிபந்தனை, ஒண்ணு, கல்யாணம் கட்டுனாலும் மதம் மாறாம இப்படியே இருப்பேன். ரெண்டு, என்கூடவே என் சாமியையும் கொண்டு வருவேன். அதுக்கு ஒரு பூஜை ரூம் ( கோயில்னு சொல்லுது) கட்டிக்க அனுமதி வேணும்.

பொண்ணோட தைரியத்தையும் நேர்மையையும் பாராட்டுன ஜலால் ( செல்லமா இப்படிச் சொல்லிக்கறேன். முழுப்பெயரும் நீளமா இருக்கு) சரின்னதும் அங்கேயே 'அக்னி வளர்த்துச் சம்பிரதாயமா அக்னியை வலம்வந்து (ஸாத்ஃபேரே) கல்யாணம் முடிஞ்சுருது. முதலிரவு....பாட்டு வருமுன்னு பார்த்தா...ஊஹும்...... பொண்ணுக்கு இஷ்டமில்லாம அவளைத் தொட மாட்டேன்னு ஜலால் சொல்றார். மறுநாள் அதிகாலையில் அவர் அவசர அரசாங்க அலுவல்னு தில்லிக்குப் போயிடறார்.

பொண்ணு மாமியார் வூட்டுக்குப்போகுது. ஆக்ரா கோட்டை. பொண்ணோட கூடவே சில தோழியர் சேடிப்பெண்கள் போறாங்க. அங்கே மாமியார் எல்லோரையும் அறிமுகப்படுத்தும்போது ஒரு பெரியம்மாவையும் அறிமுகம் செய்யறாங்க. ஜலாலின் செவிலித்தாய். அந்தம்மா முகமே வில்லத்தனமா இருக்கு. இந்தம்மா என்னவோ குருத்தக்கேடு காமிக்கப்போகுதுன்னு என் மனம் சொன்னது சரியாப்போச்சு. எத்தனை சினிமாப் பார்த்துருக்கோம். இதைக் கணிக்கத்தெரியாதா?

முழுக்கதையையும் சொல்லப்போறதில்லை. எப்படியும் நீங்க பார்க்கத்தான் போறீங்க. அப்ப நீங்களே புரிஞ்சுக்கலாம்.

பேரரசர் ஜலாலுத்தீன் மொகம்மத் தன்னுடைய கருணையின் காரணம் மக்களால் மிகப்பெரியவர் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். அக்பர் என்ற பட்டப்பெயர் கிடைக்குது ( இனிமேப்பட்டு அக்பர்னு சொல்றேனே)

அக்பரா வரும் ஹ்ரித்திக் ரோஷன் நல்லாவே அவர் பாகத்தைச் செய்யறார். அந்த உடையலங்காரத்தில் நெடுநெடுன்னு ஒரு 'பீன்போல்' போல குச்சியா இருக்கார். காலை மடிச்சு அரியாசனத்தில் (தொழுகைக்கு உட்காரும் விதத்தில்) உட்காருவது அருமை. திருமணம் முடிஞ்சு முதல்முறை மனைவியைச் சந்திக்கும்போது ஒரு மாகாணி விநாடி முகத்தில் வரும் புன்னகை சூப்பர்.

சின்னவயசுப் பாடப்புத்தகத்தில் குண்டு முகத்துடன் கையிலொரு பூவை வச்சிருக்கும் அக்பர் படம் மனசில் பதிஞ்சதால் இந்த ஒல்லி அக்பரை மனசு ஏத்துக்கலை. சரி. வயசானதும் கொஞ்சம் சதை போட்டுருப்பார்னு சமாதானப் படுத்திக்கிட்டேன். (இவரோட கைகளைக் குளோஸ் அப் காமிக்கும்போதெல்லாம் அந்த ஆறாவது விரல் தெரியுதான்னு பார்ப்பது ஒரு பழக்கமாப் போச்சு) அக்பருக்கு ஜோதி பாய்னு ஒரு இந்து மனைவி இருந்தாங்க. தீன் இலாஹின்னு ஒரு புது மதத்தை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக ஏற்படுத்தினார்ன்னும் அந்தப் பாடப்புத்தகத்தில் இருந்துச்சே.


ஜோதாவா வரும் ஐஸ்வர்யா (ராய்)பச்சன் அவுங்களுக்குத் தந்த பகுதியை நல்லாத்தான் செஞ்சாலும் என்னவோ மிஸ்ஸிங். வயசு தெரிய ஆரம்பிச்சுருக்கோ? இல்லை அந்தக் கால மேக்கப்னு என்னவோ செஞ்சுருக்காங்களோ? பழைய ஐஸ்வர்யாவின் பளிங்கு போன்ற ஜொலிக்கும் (எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. 'ஹம் தில் தேச்சுகே சனம்' படத்தில் இருப்பாங்க பாருங்க அப்படி) அழகு காணாமப் போயிருக்கு. நளினம் நாசூக்கு எல்லாம் அப்படியே இருக்கு. ஆனாலும்....................

இன்னொரு ராஜ்புத் இளவரசனா வரும் (இவர்தான் ஜோதாவுக்குக் கத்திச்சண்டையெல்லாம் சொல்லிக்கொடுக்கும் பாய்சா(ப்) முகம் மட்டும் எங்கியோ பார்த்த நினைவு. ராஜ் பப்பரின் முகச்சாயல் இருந்துச்சோ. அப்புறம் தெரிஞ்சது அவர் பெயர் 'சோனு சூட்'னு.

மத்தபடி ஏகப்பட்ட பாத்திரங்கள். ரொம்ப நாளா இந்தி சினிமா உலகில் கவனம் வைக்காததால் யார் என்னன்னே தெரியலை. கூட்டமான கூட்டம்.

கோட்டை கொத்தளங்கள் எல்லாம் அட்டகாசமா இருக்கு. எல்லாம் சரித்திர சம்பந்தமுள்ள இடங்கள். இவ்வளவையும் கட்டிக்காப்பாத்திப் பழுதில்லாமப் இளைய தலைமுறைக்கு வச்சுட்டுப்போக வேண்டியது நம்ம மக்களுடைய கடமை. இதுபோல ஒண்ணைக் கனவிலாவது கட்ட முடியுமா? அந்த சமையலறையும், அடுப்பும், பாத்திரமும் பிரமாண்டம்.....ஹைய்யோ..........

போர்க்காட்சிகள் அருமையா எடுத்துருக்காங்க. பானிப்பட் யுத்தம் எப்படி இருந்துருக்குமுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஆக்ரா கோட்டையில் ராணியின் படுக்கையறைன்னு ஒண்ணு காமிக்கிறாங்க. அட்டகாசம்.

போர்ன்னு சொன்னதும் யானைப்படையைச் சொல்லலைன்னா நான் என்ன துளசி? ஏராளமான யானைகள். ஆங்..... மறக்கறதுக்கு முந்தி சொல்றது. நம்ம ஜலாலுக்குக் 'டைம் பாஸ்' என்னன்னா முரட்டு யானைகளை அடக்கிப் பழக்குவதாம்!

அக்பர் காலத்து நகைநட்டெல்லாம் மனசுலே அப்படியே பதிஞ்சதுன்னு நான் சொன்னா அது ஒரு பெரிய பொய். என்னவோ இருக்கு.

வசனங்களில், இந்து முஸ்லீம் ஒற்றுமையை முக்கியமா மனசில் வச்சு எழுதுனமாதிரி இருக்கு. அதுவும் இந்தியாவில் பிறந்த முஸ்லீம்கள் இதைத் தங்கள் சொந்தநாடாத்தான் நினைக்கிறாங்கன்னு (வலியுறுத்திச்)சொல்றாங்க. இது என்னவோ நிஜம்தான். பலர் இப்படித்தானே இருக்காங்க.

இன்னொண்ணு, மதிப்புக்கு உரியவர்கள் குற்றம் செஞ்சா, அவுங்களைத் தண்டிக்கறது எப்படின்னா...... 'மெக்காவுக்குப் போ'ன்னு அனுப்புவது. ஒருவேளை இறைவன் சன்னிதியில் தங்கள் குற்றங்களை மனமாற ஒப்புக்கொண்டுக் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக்கறதுக்குன்னு நினைக்கிறேன்.

இவ்வளோ சொல்லி நம்ம ரெஹ்மானைச் சொல்லைன்னா எப்படி? ராஜ்புத் நாட்டுப்பாடல் ரெண்டு மூணு இருக்கு. ஒரு சூஃபி பாட்டு நல்லாவே இருக்கு. முதல் முறை கேட்கும்போதே மனசில் பதிவதுபோல ஒண்ணும் இல்லை. ஆனா ரெஹ்மானோட பாட்டெல்லாம் ஒயின் மாதிரி கொஞ்சம் ஊறணும் இல்லை?

உண்மையான சரித்திரம் அடங்கிய படமுன்னு சொல்லாம, சரித்திர நாயகனை வச்சுப் பின்னப்பட்டக் கற்பனைக் கதைன்னு சொல்லி இருக்கலாம்.
*

ப்ரீவியூலே படம் முடிஞ்சதும், கையைப் பிசைந்துகொண்டு நிக்கும் இயக்குனர், தயாரிப்பாளர், நாயகன், மெயின் டிஸ்ட்ரிப்யூட்டர் எல்லார்கிட்டேயும் 'படம் ரொம்ப நல்லா இருக்கு'ன்னு ஆறுதலாச் சொல்லலாமுன்னா அங்கே யாரையும் காணோம்.


மூணுமணிக்கு ஆரம்பிச்ச படம் (நடுவில் ஒரு 10 நிமிச இடைவெளி) முடியும்போது சரியா ஏழடிக்க ஏழு நிமிசம். படத்தோட நீளத்துக்குச் சற்றும் குறைவில்லாம கடைசியில் ஓடும் டைட்டில். ஒருத்தரையும் விடாம படப்பிடிப்பு நடந்த இடம் ஒண்ணு விடாம, க்ரெடிட் போய்க்கிட்டே இருக்கு. இவர் என்னடான்னா 'போதும் பார்த்தது எழுந்து வா'ன்னு கத்திக்கிட்டு இருக்கார். நானா? ஊஹும்..... சுபம் போட்டாத்தான் எந்திரிப்பேன்னு கண்டிஷனாச் சொல்லிட்டேன். இவர்தான் குறுக்கு நெடுக்குமா பூராத் தியேட்டர் ஹாலையும் அளந்துக்கிட்டு இருந்தாரா...... ஒரு வேலை கொடுக்கலாமுன்னு மொத்தம் எத்தனை இருக்கைன்னு எண்ணி வையுங்கன்னேன்:-)


மொத்தம் 106 இருக்கை இருக்கும் தியேட்டரில் நாங்க ரெண்டு பேர் மட்டும்தான். படம் போட்டவருக்கு வெறும் முப்பது டாலர்தான் முதல் ஷோவுக்கான வரவு. ஹூம்...பாவம் அந்தப் பையன். இதுதான் பகல் மூணுமணிக் காட்சி. இப்ப ஏழுமணிக்கு இன்னொரு காட்சி இருக்கே.
வெளியே நிற்கும் கூட்டத்துக்கு படம் நல்லா இருக்குன்னு சொல்லி மனசை ஆத்திக்கணும்.

சுபம். வெளியே வந்து பார்த்தா ஈ, காக்கை இருக்கணுமே........ நொந்து போயிட்டோம். இந்த காம்ப்ளெக்ஸில் எட்டு தியேட்டர் இருக்கு. ஒரு வேளை வேற எண் தியேட்டரில் அடுத்த ஷோ இருக்கோ என்னவோ? கார்ப் பார்க்கில் வண்டியை எடுக்கும்போது, கொஞ்ச தூரத்தில் ஒரு இந்திய இளம் ஜோடிகள் கையில் ஒரு குழந்தையோடு கட்டிடம் நோக்கிப்போறாங்க. குழந்தை ஓடியாட நிறைய இடம் இருக்கு. போங்கன்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டே வீடு வந்தோம்.

இது எங்கூரு தியேட்டருக்குள்ளே வச்ச விளம்பரம்.

Wednesday, February 13, 2008

'புல்லட்' பூஜைசூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரெஸ் வண்டி, புல்லட் ட்ரைன் வரப்போகுதுன்னு சொன்னதும் எவ்வளவு ஆனந்தமா இருக்கு. இதே ஆனந்தம் எல்லாருக்கும் வரட்டுமுன்னு கொஞ்சநாளா பூஜை பார்த்துக்கிட்டு இருக்கோம்.

எந்த ராஜா எப்படிப்போனாலும் 'டாண்'னு 7 மணிக்குப் பூஜை ஸ்டார்ட் ஆகிரும். அதிலும் நாம் சனிக்கிழமையாப் பார்த்துக் கோவிலுக்குப் போறோம் இல்லையா? அங்கே அநேகமா ஏகாந்த சேவைதான் நமக்கு.

வழக்கமா 'சங்கு'ஊதி (பூஊம், பூஊஊம் ,பூஊஊஊஊஊஊம் மூணுவாட்டி) பூஜை ஆரம்பிக்கும். நாலைஞ்சு ஊதுபத்தியைக் கத்தையா வச்சுக்கிட்டு ஏத்தி,அதை கையை ஒரு வீசு வீசி அணைச்சுட்டுத் தீயில்லாமப் புகைய ஆரம்பிச்சதும், இடது கையில் சின்ன பூஜை மணி( வெங்கலம்/பித்தளை) ஆட்டிக்கிட்டே ஒரு மூணு நாலு நிமிஷம்.
அடுத்து அஞ்சு திரி போட்ட தீப ஆராதனை.அது ஒரு அஞ்சு நிமிஷம். அது முடிஞ்சதும் அந்த விளக்கை ஒரு சின்ன பளிங்கு ஸ்டூலில் வைப்பாங்க. அதை யாராவது பக்தர்கள் எடுத்துக்கிட்டுப்போய், சாமிக்கு நேர் எதிரா இருக்கும் ஸ்ரீலஸ்ரீ பிரபுபாதா சிலைக்குக் காமிச்சுட்டு, கூடி இருக்கும் பக்த ஜனங்களுக்கு வரும்.கையில் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கலாம்.

மூணாவதா, தீர்த்தம். சின்ன வலம்புரி சங்கில் எடுத்து விக்கிரஹங்களுக்கு ஆராதனை செஞ்சுக்கிட்டே கொஞ்சம் கொஞ்சமா ஒரு சின்ன அழகான பளபளன்னு தேய்ச்சு மினுக்கப்பட்ட குட்டியூண்டு குடத்தில் ஊத்தி, பளிங்கு ஸ்டூலுக்கு வரும். பக்தர் ஒருத்தர் அதை எடுத்துக்கிட்டுப்போய் ஸ்ரீலஸ்ரீக்குக் காமிச்சு அவருக்கு துளியெடுத்துத் தெளிச்சுட்டு, உள்ளங்கையில் கொஞ்சம் கொஞ்சமா ஊத்திப் பக்த ஜனங்களுக்கு சிரசில் தெளிக்கறொமுன்னு மழைத்துளியா வீசுவார்......

இதுக்குப்பிறகு ஒரு கைகுட்டை. கட்டைவிரல் & நடுவிரலால் பிடிச்சு ஒரு ரெண்டு நிமிஷம் சுத்து. ஆச்சா?

அஞ்சவது ஒரு சின்னத் தட்டுலே கொஞ்சம் பூக்கள். தட்டோடு எடுத்து மூணு நிமிஷம் சுற்றல். அது முடிச்சுட்டு தட்டிலே இருக்கும் பூக்களை விக்கிரகங்களுக்குக் காலடியில் அங்கங்கே படைச்சுட்டு, ஏற்கெனவே அங்கே இருக்கும் பூக்களை எக்ஸ்சேஞ்ச் செஞ்சு பளிங்கு ஸ்டூலுக்கு வரும். பக்தர் அவைகளை ஸ்ரீலஸ்ரீக்குக் காமிச்சுட்டு, அங்கே ஒரு பூவை அவருக்குப் படைச்சுட்டு மீதி இருப்பதில் ஒண்ணோ ரெண்டோ அங்கே அருகில் இருக்கும் பக்த மகா ஜனங்களில் ஒருவருக்குத் தருவார். அவர் கையில் வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டோ, இல்லை முகர்ந்து விட்டோ அடுத்து நிற்பவர் ( ஆங்.... சொல்ல மறந்துட்டேனே. சங்கு ஊதியவுடன் எல்லோரும் எழுந்து நிற்கணும். ஆரத்தி முடியும்வரை நின்னபடிதான் எல்லாம்) கைகளில் தருவார். இப்படி எல்லார் கையும் மாறிக் கடைசி நபர்வரை பயணம் செய்யும் அந்தப் பூக்கள்.
பூக்கள் பயணிக்கும் சமயம் விக்கிரகங்களுக்கு விசிறி கொண்டு காற்றுவீசும் சேவை நடந்து கொண்டிருக்கும். வெய்யில் காலமாக இருந்தால் மயிலிறகு விசிறியும், குளிர்காலமாக இருந்தால் வெள்ளிப்பூண் போட்ட வெள்ளை ரோமம் உள்ளதும் சேவையில் இருக்கும்.

கடைசிக் கட்டத்துக்கு வந்தாச்சு. மறுபடி சங்கு 3 முறை.
எல்லோரும் கீழே விழுந்து கும்பிடணும்.

இதுதான் வழக்கமான ஆரத்தி முறைகள் இங்கே. எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு 25 அல்லது முப்பது நிமிசம் பிடிக்கும்.

ஒரு மூணுநாலு மாசமா வேகம்பிடிக்க ஆரம்பிச்சிருக்கு இந்தியாவில் இருந்து புதுசா இங்கே வந்திருக்கும் ஒரு பூஜாரியால். இளவயது ஆள். வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆட்கள் வரிசை முறையில் பூஜை செய்யறாங்க. அதில் இவர் சனிக்கிழமை மாலையில் பொருந்தியிருக்கார்.
கடவுள் முன்னாலே நிக்கறோமே, கொஞ்சம் பதவிசா எல்லாத்தையும் செய்யலாம்ன்னு இல்லாம தடால்தடால்ன்னு ஆரத்தி எடுப்பார். முப்பது நிமிசம் எடுக்கும் பூஜை இவர் வந்தால் ஒரு இருபது நிமிசத்துலே முடிஞ்சுரும்.பாசஞ்சருக்கும் எக்ஸ்ப்ரெஸ்க்கும் உள்ள வித்தியாசம். அது பரவாயில்லைன்னு இருந்தாலும், பூக்கள் உள்ள தட்டைச் சுத்தும் வேகத்தில் அதில் இருக்கும் பூக்கள் பறந்து தரையில் விழும். கையில் இருக்கும் வெங்கலமணியின் மெல்லிய இனிய நாதம் எங்கோ தொலைஞ்சு போய், தீயணைப்பு வண்டி வரும் சத்தம் போல அடிச்சு எழுப்பும் வேகத்தில் வரும் சத்தம் இருக்கே............
அப்பப்பா...... சாமிக்கும் இதெல்லாம் வேண்டி இருக்கு என்றதைப்போல முகத்தில் எப்பவும்போல் ஒரு சின்னச் சிரிப்பு.

இதைப்பற்றி மற்ற மக்கள்ஸ் என்ன நினைக்கறாங்கன்னு தெரிஞ்சுக்கமுடியலை. ஏன்னா,அநேகமா நாங்க ரெண்டுபேர் மட்டுமேதான் பூஜையில் கலந்துக்கறோம்.

இதை எதுக்கு இப்பச் சொல்ல வரேன்னா......... இந்த சனிக்கிழமை எக்ஸ்ப்ரெஸ், ஒரு புல்லட் ட்ரெயினா மாறிப்போச்சு. பதிமூணு நிமிசத்துலே மொத்த ஆரத்தியும் முடிஞ்சிருச்சு. தட தடா, தட தடா.....தட் தட்........

நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து முழிச்சோம். அப்ப இவர்,

" ட்ரைவ் இன் கோயில் வச்சா எப்படி இருக்கும்?"

"பழனி கோயிலில் நூறு ரூபாய் கொடுத்தால் சாமியை காருக்கே கொண்டுவந்து காமிக்கிறாங்களாம்"

"நிஜமாவா?"

"அப்படித்தான் நம்ம ரஷ்யா ராமனாதன் ஒரு பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார்"

"ஓஹோ..... இப்ப நான் சொல்ரதும் இப்படித்தான்னு வச்சுக்க. கார்லே எல்லாம் வரிசையா மெக்டோனால்ட், கெண்டக்கிக்கு போறமாதிரி ட்ரைவ் த்ரூ போய் சாமியைக் கும்பிட்டுக்கிட்டு போய்க்கிட்டே இருக்கணும்."

"அப்ப உண்டியல்?"

"ஓஓஓஓ அது ஒண்ணு இருக்கா? இதைப்பாரு. கார் போய் நிக்குது. அங்கே இருக்கும் ஸ்லாட்லே காசு போட்டதும் ஒரு எலெக்ட்ரானிக் கர்ட்டன் உயரும். உள்ளே சாமி. நாம கும்பிட்டுக் கன்னத்துலே போட்டுக்கிட்டதும் கர்ட்டன் கீழே இறங்கிரும். நாம அப்படியே வெளியே வண்டியை ஓட்டிக்கிட்டு வந்துறலாம்."

"நாட் பேட்! எவ்வளவு நேரம் தரிசனம்?"

"ஒரு 20 நொடிகள். இதுவே தாராளம்"

"அப்ப தீபாராதனை? "

"அதுக்கு ஸ்பெஷல்லா ரெண்டாவது ஒரு ஸ்லாட். அதுக்கு டபுள் த ரேட். எலெக்ட்ரானிக் உதவியால் பளிச்சுன்னு ஒரு தீபாராதனை நடக்கும். மொத்தம் 30 விநாடி."

ம்ம்ம்ம்....................விஐபி வந்தாங்கன்னா? அதுக்கு வேற இடத்தில் தனிக் கவுண்ட்டர் வைக்க வேண்டியதுதானே?".

"ஊஊஹுஊஊஊஊஊஉம்..........இந்தக் கோயிலில் எல்லாம் சமத்துவம்தான்.
ஒரு கார் மட்டுமே நுழையும் வசதி உள்ள ட்ரைவ் வேதான் வைக்கணும். அகலமா வச்சா ஓவர் டேக் பண்ணுவாங்க"

"ஒன்லி கார் மட்டுமா? அப்பக் காரில்லாத மக்களுக்கு?"

"அதென்ன அப்படிச் சொல்றே? இப்பத்தான் ஒரு லட்ச ரூபாக் கார் வந்துருச்சே!"

"அட! ஐடியா நல்லாதான் இருக்கு. நம்மூர்லே இது ஹிட் ஆனாலும் ஆயிரும். பேசாம ஃப்ரான்சைஸிஸ் போட்டுக்கலாம். "

கார் போய் நிக்கும்போதே ரெண்டு பக்கமும் கைக்கு எட்டும் தூரத்தில் ஆட்டொமேடிக்கா ரெண்டு கிண்ணத்தில் குங்குமம், சந்தனம், விபூதி இத்தியாதிகள் ஒரு ட்ரேயில் வச்ச இயந்திரக் கை நீளனும். அதுலே இருந்து எடுத்து நெத்திக்கு வச்சுக்கலாம்.

அந்தக் கிண்ணங்களை நல்லா ஸ்க்ரூ போட்டு இணைச்சிருக்கணும்.
அம்பது ரூபாய்ன்னு ரேட் வச்சுக்கலாம். வருமானம் எல்லாம், கோயிலுக்கு டைரக்டாப் போய்ச் சேர்ந்துரும்.

இன்னும் இதை எப்படியெப்படி இம்ப்ரூவ் செய்யலாம் என்பதற்கான ஆலோசனைகளும், கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.


நானே முதல் கல்லைப்போட்டு ஆரம்பிச்சு வைக்கறேன்:
இஷ்ட தெய்வமுன்னு ஒண்ணு இருக்கே. அதுனாலே எந்த சாமின்னு ஒரு பட்டியல் வச்சுக் காசு போட்டுட்டு அந்த நம்பரை அழுத்தணும். எல்லா மதக்காரர்களுக்கும் இங்கே இடம் உண்டு. சமத்துவம் இப்படியாவது வரட்டுமே.

பதிவின் கருத்து தானம்: கோபால்.

Friday, February 08, 2008

நான் டக்ளஸாமே!!

கூடத்துக்குள்ளே போகும் கூட்டத்தில் ஏறக்குறைய கடைசியா நின்னுக்கிட்டு இருந்தோம், மலேசியாவிலிருந்து வந்த ஒரு பத்திரிக்கையாளருடன் பேசியபடிக் கையில் ஒரு ஆரஞ்சுப் பழச்சாறு உள்ள கோப்பையுடன். முன் வரிசையில் நிற தோழி , 'நீங்க டக்ளஸ்' என்றார். 'டக்ளஸா?'ம்ம்ம்ம்ம்ம் ஓஓஓஓ டக்ளஸ்.
எனக்கு ஒரே மகிழ்ச்சி.


டக்ளஸ் ரொம்பக் குறும்புக்காரன், அது இப்போ. பிறந்தப்ப ரொம்ப மெலிஞ்சு, பிழைக்கமாட்டான் என்ற நிலையில் இருந்த அவனை வேணாமுன்னு அவுங்க அம்மா தள்ளிட்டாங்க. வச்சுக் காப்பாத்தமுடியாதுன்னு அந்தம்மா கொண்டுவந்து சுனிதாகிட்டேக் கொடுத்துருக்காங்க. ஒரே ஒரு ஊசி போட்டாப் போதும். சரியான ஆள்கிட்டே பொறுப்பை ஒப்படைக்கணுமுன்னு தெரியாதவங்க அந்த அம்மா.அதோ....அந்தக் கர்ட்டன்மேலே ஏறி ஒளிஞ்சு விளையாடுறவனைப் பாருங்க.
'கடமை தவறிய சுனிதா' வீட்டுலேதான் இந்த ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கான். மீ(க்)காவைப் பார்த்தும் பயமே இல்லை. இந்த மீகாவையும்தான் பாருங்களேன்....
பார்வை நமக்குத்தான் கொஞ்சமாக் குலை நடுங்க வைக்கும்.ஆனால் அந்தப் பொடியன்கிட்டே மட்டும் என்ன பொறுமை,என்ன விளையாட்டு. வாலைச் சுருட்டிக்கிட்டு இருக்குது போல!


மீ(க்)கா & டக்ளஸ்


ஒரு மனுசனுக்கும், மிருகத்துக்கும் ஒரே இடத்துலே ஒரே சமயம் அடிபட்டா, சுனிதா ஓடி உதவுவது மனிதனுக்கல்ல.
ரூபிதனிவீட்டுக்குப் போனதும் ரூபிதான் முதல்லே வந்தது. அக்கம்பக்கம் நடக்கும் போட்டிகளில் பங்கெடுத்து சிலபல பரிசுகளை வென்றவள். அதுக்கப்புறம் வந்த கரிஷ்மாவுக்கு நீலக்கண்ணு.
பங்கெடுக்கும் போட்டிகளில் வெற்றிதேவதை இப்ப இவள் பக்கம்தான். பாருங்களேன், இந்த தேவதை எப்படி கட்சித் தாவல் செஞ்சுட்டாளுன்னு.கரிஷ்மா


மூணு மாசத்துமுன்னே வீட்டுலே ஒரே டென்ஷன். கரிஷ்மா பிள்ளையாண்டிருக்காள். குழந்தை பிறக்கும் சரியான நேரம் ஆனானப்பட்ட மகாதேவனுக்கே ( கடவுள்) தெரியாதாம். அப்படி இருக்க சாதாரண மனுசங்களுக்கு?க்ளோஸ்ட் சர்க்ய்யுட் கேமெரா, பிரசவ வலி கண்டு துடிக்க ஆரம்பிச்சவுடன் அலறும் அலாரம் இப்படி ஏகப்பட்ட நவீன சமாச்சாரங்களை வாங்கி எல்லா ஏற்பாடும் கச்சிதமாச் செஞ்சு வச்சது சுனிதாதான். ராத்தூக்கம் சரியா இல்லாம நடுநடுவில் ரெண்டொருமுறை கரிஷ்மா அறைக்குப்போய்ப் பார்த்துவரும் வழக்கமும் சேர்ந்துக்கிச்சு.
ஒரு சுபயோக சுபதினத்தில் 'என் குழந்தை பிறந்தாச்சு'ன்னு இ-மெயில் வந்துச்சு. எனக்கும் மன நிம்மதியாச்சு.
சுனிதாவும், நண்பர் ஹெய்டனும் நம்ம வீட்டுக்கு வந்தவுடனே, நம்ம கோபாலகிருஷ்ணன் பயந்து பதுங்கி ஒளிஞ்சுக்குவான்.இப்ப என்ன திடீர்ன்னு சுனிதா புராணம்? அது ஒன்னுமில்லை. சுனிதாவுக்குக் கல்யாணம். இது 'நிச்சயமாயி' ஒன்னரை வருசம் ஆச்சு. இவ்வளவு நாள் ஏன்னு கேட்டால்.............. கோயில் கிடைக்கலை!இது என்னடா கோவிலுக்கு வந்த கிராக்கி?வசந்தம் & கோடையில் மட்டுமே கல்யாண சீஸனாம். அது ஒரு ஆறுமாசம்தானே?
சனிக்கிழமையா வேற இருக்கணுமாம் கல்யாணம் நடத்த. அப்படிப் பார்த்தா ஒரு 26 சனிக்கிழமை. இங்கே பலபிரிவுகளில் சர்ச்சுகள் ஏகப்பட்டது இருந்தாலும் 'ஆகி வந்தவை'கள் என்ற வகையில் அதிகமாத் தேறாதாம்.
சுனிதாவின் அம்மாதான் எல்லா ஏற்பாடுகளையும் கவனிச்சுச் செஞ்சாங்க. எந்த விழாவையும் நினைவில் இருக்கும்படியாச் செய்ய சில சின்ன நுணுக்கங்களைப் பார்த்துக் கவனிச்சா 200 மடங்கு வெற்றிதான். இதை அனுபவிக்க எனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைச்சது.கல்யாணப்பொண்ணுக்குப் பிடிச்ச கலர் பிங்க் என்பதால் பத்திரிக்கை முதல், விருந்து மேசையின் நடுவில் வைக்கும் அலங்காரப்பூத்தொட்டி வரை பிங்க்கோ பிங்க்!ஒரு எட்டுவருசத்துக்கு முன்னே, என்னிடம் தமிழ் கற்றுக்கொள்ள வந்த இரண்டு மலேசியப் பெண்களில் ஒருத்தர்தான் சுனிதாவின் அம்மா. எழுத்துக்கூட்டிப் படிக்கவும், எழுதவும், இன்னும் சொன்னா நல்லாப் பேசவும்(??) சொல்லித் தந்தாச்சு. பாடங்கள் முதல் ரெண்டு வருசம்தான். அப்புறம் எல்லாமே ப்ராக்டிக்கல் க்ளாஸ்:-))))
அழைப்பிதழிலேயே தெரிஞ்சுரும் பொண்ணும் மாப்பிள்ளையும் என்ன தொழில்ன்னு.
அதான் paw prints அங்கங்கே போட்டுருந்ததே. ரெண்டு பேரும் 'வெட் நரி'கள்:-))))


கீருபடிப்பு வெற்றிகரமா அருமையான ரேங்க்கோட முடிஞ்சதும், தெற்குத்தீவின் தென்கோடியில் உடனே வேலை கிடைச்சது. கிராமப்புறங்களில் வேலை செய்ய ஆரம்பிச்சால்தான் நல்ல அனுபவம் கிடைக்குமாம். சுனிதா, விசேஷப் படிப்பா மாடுகளை எடுத்துருக்காங்க. ஆகஸ்ட் மாதத் தொடக்கத்திலேயே கன்னுக்குட்டிகளுக்கான சீஸன் தொடங்கிருமாம். ஆள் பயங்கர பிஸி. வேலை பார்க்கும் வட்டாரத்தில் ரொம்ப நல்ல பேர் கிடைச்சிருக்கு. வைத்தியம் பார்த்துக்க வந்த ஒருத்தர் ஒரு yak கன்னுக்குட்டியைப் பரிசாக் கொடுத்துருக்கார். அதோட பெயர்தான் பேட்ஸ்மேன்:-)))) ( இங்கே பரிசோதனை வளர்ப்புக்காக அவர் நேபாளத்தில் இருந்து இந்த வகையை இறக்குமதி செஞ்சாராம் பலவருசங்களுக்கு முன்னே)
நாங்களும் சுனிதா ஹெய்டன் வீட்டுக்கு ஒரு நாள் போகணும். காரில் ஒரு ஏழரை மணி நேரப்பயணம். mini zoo மாதிரி இருக்காம் வீடு:-))))


போன சனிக்கிழமை மத்தியானம் மூணரைக்குக் கல்யாணம். ரொம்ப அழகான அளவான சர்ச். முதல்முறையா அங்கே போனோம். கத்தோலிக் பிரிவைச் சேர்ந்தது. கோபால் பல்பொடி விளம்பரம் தான் சட்ன்னு நினைவுக்கு வந்தது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்ட்ராலியா, இங்கிலாந்து ,அமெரிக்கான்னு உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்துருக்காங்க மக்கள்ஸ். எல்லாம் பொண்ணின் அம்மா பக்கத்து உறவினர்கள். இதுலே விசேஷம் என்னன்னா புடவைகள்தான். மலேசியத்தமிழர்கள் ஆச்சே. கலர் ஃபுல் மலேசியா! பொண்ணோட அப்பா இங்கத்துக்காரர். அவர் பக்கத்து உறவினர்களுக்கு வெள்ளைக்கார உடைகள். அந்தப் பக்கமா என் பார்வையைப் பிடிச்சுத் தள்ளவேண்டியதா ஆச்சு.
மணமகனுடன் நம்மாளு

திருமண விழா நிகழ்ச்சி நிரல்கள் இளம் ரோஜா வண்ணத்தில் அச்சடிச்சு இருந்துச்சு. முகப்பில் ரெண்டு பெங்குவின்கள் வெள்ளைக்கார பாரம்பரிய கல்யாண உடைகளில். கடைசிப் பக்கம் ஜிகேவின் சொந்தங்களின் காலடிகள்.
அளவான நிகழ்ச்சி. ஒரு மணி நேரத்தில் 'ஐ வில், ஐ டூ' எல்லாம் சொல்லி
பதிவேடுகளில் கையெழுத்துப்போட்டாச்சு.வெளியே சர்ச்சின் முன் வாசலில் ஒரு முக்கால்மணிநேரம் வாழ்த்துச் சொல்றதும், விருந்தினர்கள் ஒருவரோடு ஒருவர் அறிமுகம் ஆகறதுமுன்னு இருந்தபின், விருந்து நடக்கும் இடத்துக்கு புறப்பாடு.


சிலசமயம் சனிக்கிழமைப் பகல் பொழுதுகளில் சில சர்ச்களின் வாசலில் இப்படிக் கல்யாணக் கூட்டத்தைப் பார்த்திருக்கோம். ஒரு பத்து இருபது பேர் இருந்தாவே பெரிய கல்யாணமுன்னு சொல்வாங்க. அதிலும் ஒரு புடவையைக்கூட மருந்துக்கும்(?) கண்டதில்லை. (இதுக்குத்தான் நம்மளைக் கூப்புடணும் என்றது.)
கேக் ஷாப் நடத்தும் ஒரு இந்தியத் தோழி செய்த கேக்
விருந்து இங்கே ஒரு ஹோட்டலில் ஏற்பாடு. இது நம்ம வீட்டருகில் என்றதால் நாங்க நேரா வீட்டுக்கு வந்துட்டு, நம்ம ஜிகே சாருக்குச் சாப்பாடு கொடுத்துட்டு, உடுப்பு மாத்திக்கிட்டு கொஞ்சம் மெதுவாத்தான் விருந்துக்குப் போனோம். சாப்பாட்டுக்கு முந்தி தீர்த்தாடனம் நடக்குது. கோபாலும் இந்த புது வருசம் எடுத்த முடிவின்படி நோ குடி:-)
உட்புறத் தோட்டத்தில் எல்லாரும் ஊத்திக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் ஒரு க்ளாஸ் ஆரஞ்சுப்பழ ரசம் எடுத்துக்கிட்டோம். உறவுகளையெல்லாம் அறிமுகம் செஞ்சுக்கிட்டு இருக்கும்போது, நிறையப்பேருக்கு என்னை 'டீச்சர்' என்று தெரிஞ்சிருக்கு:-))))
சாப்பாட்டுக்குக் கூடத்துக்குள்ளே போறப்பதான் 'நீங்க டக்ளஸ்' ன்னு தோழி சொன்னாங்க. ஹாலின் கதவுக்கருகில் யார்யார் எந்த மேசைன்னு ஸீட்டிங் லிஸ்ட் வச்சிருந்தாங்க. மீகா, மிலி, டக்ளஸ், கரிஷ்மா, ரூபி, பேட்மேன், கீரு இப்படி 18 பெயர்களோடு 18 வட்ட மேசைகள். ஒரு மேசைக்குப் பத்து ஆட்கள்.
நான் குறிப்பிட்டச் சின்னச்சின்ன கவனங்கள் இங்கேதான் வருது.அந்தந்த செல்லங்களின் படங்களோடு கூடிய மேசை ஸ்டேண்ட்.


நாப்கின் சுருட்டிவச்சு அதில் அந்த இடத்துக்கு வரும் ஆட்களின் பெயரை பிங்க் ரிப்பன்லே, குட்டி இதயத்தோடு க்ளிப் செஞ்சு வச்சுருந்தாங்க. மேசையில் பிங்க் நிறப் பூக்கள் பிங்க் நிற வாளிவடிவத் தொட்டிகளில். இதய வடிவில் பிங்க் நிறத்தாளில் இருக்கும் சாக்லேட், இள ரோஜா நிற கப் கேக் ன்னு எல்லாத்திலும் சூப்பர் கவனம்.
ஒருத்தர் பை நிறைய டிஸ்போஸபிள் கேமெரா கொண்டுவந்து ஒவ்வொரு மேசைக்கும் ஒண்ணு கொடுத்துட்டுப் போனார். போட்டோகிராஃபர் ரெண்டுபேர் இருந்தாலும், மக்கள் பார்வையில் நிகழ்ச்சி எப்படி இருக்குன்னு நாம் எடுக்கற படங்கள் சொல்லிருமாம். கேமெராவை வச்சு, எதிரில் இருப்பவர்களை ஆளாளுக்கு கிளிக் செஞ்சுக்கிட்டு இருந்தோம்.
சர்ச்சிலும் ஒரு வயசான( என்னைவிடவும்!) வெ.பெண்மணி இதுபோல ஒரு கேமெரா வச்சுக்கிட்டு, 'ஐ வாஸ் டோல்ட் டு டேக் பிக்சர்ஸ் ஆஃப் ஹேப்பனிங்க்ஸ்' னு சொல்லிக்கிட்டு இருந்தது இதுக்குத்தானா? எனக்கு இப்பத்தான் புரியுது. அந்தம்மாதான் இந்தக் கல்யாணப்பொண்ணு உலகில் 'தலைகாட்டுனப்ப, முதல்முதலில் தாங்கிப்பிடிச்ச மருத்துவத்தாதி'யாம். ஆஸ்ட்ராலியாவில் இருந்து வந்துருக்காங்க.
விவரம் தெரிஞ்சதும் எனக்கு ஒரே ஆச்சரியமாப் போச்சு. தோழிக்கு நண்பர்கள் வட்டம் பெருசு. அதை மதிக்கவும் தெரிஞ்சிருக்கு. நாமும்தான் எத்தனையோ பேரை வாழ்க்கையில் சந்திக்கறோம். எல்லாரோடும் தொடர்பை விடாம வச்சுக்கிட்டு இருக்கோமா?
சர்ச்சிலே ஒவ்வொரு இருக்கைவரிசையில் நடுப்பாதையை நோக்கும் பலகையில் க்ரீம் கலர் சாட்டின் ரிப்பனில் ரெவ்வெண்டு பிங்க் ரோஸ் வச்சது முதல், கல்யாணப்பெண்ணின் கையிலுள்ள பூச்செண்டுவரை தயாரிப்பு தோழியேதான்.

மூணு கோர்ஸ் டின்னர். சிக்கன், லேம்ப்ன்னு இருந்துச்சு. நம் 'ராமனாதன் சொல்படி' (டாக்குட்டர் சொன்னாக் கேட்டுக்கணும்) சைவத்தைப் புறக்கணிக்க முடியுதா? ஃபில்லோ பேஸ்ட்
டரின்னு உள்ளே மரக்கறிகள் வச்சது நமக்கு.
மணப்பெண்ணின் தந்தை

விருந்து முடிஞ்சதும் நடனம் ஆரம்பமாச்சு. அன்னிக்குப் பகல் 12 மணியளவில்தான் கோபால் ஸ்பெயினில் இருந்து வந்தார். பயணக்களைப்பு.
கண் இமைகள் அப்படியே ஒட்டிக்கிட்டு வருது. தள்ளாட்டம். இனிமேத் தாங்காதுன்னு கிளம்பிட்டோம். ( எனக்கு வேற அந்த வகை நடனம் ஆடத்தெரியாது. தவறிப்போய் அங்கே நின்னு பரதநாட்டியம் ஆடிட்டேன்னா?)
வரவேற்பில் மணமகன் ஹெய்டனோட பேச்சு சூப்பர். டச்சிங் டச்சிங்.
சுனிதாவோடு இருந்த எட்டு வருச நட்பை முடிச்சுக்கிட்டு மனைவியா ஆக்கிக்கிட்டேன்னு சொன்னார்:-)))))
சம்பந்தி வீட்டுலே கேட்டுருக்காங்க, நாங்களும் கல்யாணச்செலவைப் பங்கு போட்டுக்கறோமுன்னு. பொழைக்கத்தெரியாத ஆளுங்கப்பா:-)))))
அதெல்லாம் வேணாம். எங்க பொண்ணு கல்யாணத்துக்கு நாங்களே நடத்திக்கொடுக்கறதுதான் முறைன்னு தோழி 'அடிச்சு'ச் சொல்லிட்டாங்க.
பர்ஃபெக்ட் வெட்டிங் நடத்திய தோழியை, இனி வரும் கல்யாணங்களுக்கு வெட்டிங் ப்ளானரா ஆக்கிரணும். கைவசம் தொழில் இருக்கு. ஒன்னரை வருச உழைப்பு வீண்போகலை. உள்ளூர் நிலவரம் பார்த்தா.....இது ஒரு பிரமாண்டமான கல்யாணம்.மணமகனின் மாமியார் & கட்டுரை ஆசிரியர்:-)மணமக்கள் நீடூழி வாழ்ந்து அருமையான இல்லறம் என்ற நல்லறம் காண பதிவர்கள் சார்பில் அன்போடு வாழ்த்துகின்றோம்.குணால் சிங்????

மக்கள்ஸ்,

குணால் ன்னு ஒரு நடிகர் நினைவு இருக்கா? அவர் தற்கொலை செஞ்சுக்கிட்டாராம். இன்னிக்குத் தினமலர்லே இருக்கு.

அவருக்கு என்ன கஷ்டமோ?

காரணம் எதுவா இருந்தாலும், அவர் விட்டுட்டுப்போன மனைவி மக்களுக்கு
அதிர்ச்சியா இருக்கும்தானே? ப்ச்...........

Wednesday, February 06, 2008

அன்புக்கு நான் அடிமை

ரெண்டாம்பேருக்குத் தெரியாமக் கொண்டாட ஆரம்பிச்சுப் பல வருசங்களாச்சு. முப்பது தாண்டுனவுடன் ஒரு அதிர்ச்சி வந்துருதுல்லே?
இந்த முறை என்ன ஆச்சுன்னா......?
சரி. அதைவிடுங்கோ.........

போஸ்டர் ஒட்டும்வரைக்குப் போயிருக்கு.


நாச்சியார் துளசிதளமுன்னு ஆரம்பிச்சு வைக்க, நம்ம கேயாரெஸ் சுவரொட்டி தயாரிச்சு ஒட்டி, நம்ம செந்தழல் ரவி வாழ்த்துகள் அறிவிப்பு சொல்ல, நம்ம நானானி திக்கெட்டும் முழங்கன்னு நாலாபக்கமும் சேதி பரவி,
வலை நண்பர்களின் வாழ்த்துகளும் பின்னூட்டங்களா நிறைய வந்துருக்கு மேற்படிப் பதிவுகளில். இத்தனை அன்பு கிடைக்க நான் என்ன செய்தேன்னு தெரியலை.

எல்லோரையும் தனித்தனியா அன்போடு விசாரிக்கணும்ன்னு ஒரு மலைஉச்சிக்குப் போனேன். சுத்திமுத்தி 360 டிகிரி கண்ணுக்கெட்டிய தூரம்வரைப் பார்த்து டெலிபதியில் உங்களுக்கெல்லாம் நன்றி அறிவிப்பை அனுப்பி இருக்கேன்.

டீச்சருக்குப் பிறந்தநாளுன்னு லீவெல்லாம் விடமுடியாது. உங்களுக்காக நகரின் சரித்திரத்தில் ஒரு பகுதி இங்கே.

போர்ட் ஹில்ஸ் (Port Hills)மலைத்தொடரில் கடல்மட்டத்திலிருந்து ஏறக்குறைய 1500 அடி உயரத்தில் இருக்குது, மவுண்ட் கேவண்டிஷ் (Mount Cavendish ) சிகரம். இங்கேயிருந்து பார்த்தால் முழு நகரமும் உங்கள் கண்முன்னே.

கிழக்குப்பக்கம் துறைமுகம், வடக்கே பசிபிக் கடலும் அதன் வளைந்துபோகும் கடற்கரையும், மேற்கே கிறைஸ்ட்சர்ச் மாநகரம், அதன் பின்புலமாக தெற்கு ஆல்ப்ஸ் மலைத்தொடர்களும் , தெற்கே போர்ட் ஹில்ஸ் மலத்தொடர்கள். பேங்க்ஸ் பெனின்சுலா, எல்லஸ்மியர் ஏரி என்று வானத்தின் அடிவரை
தடங்கல் இல்லாத காட்சிகள்.

துறைமுகம் அமைந்துள்ளது , ஒரு காலத்தில் எரிமலையாக இருந்து, இப்போது அணைந்து, குளிர்ந்து போன அதன் க்ரேட்டர் பகுதி. கைக்கு அடக்கமாச் சின்னதா இருக்கு. துறைமுகத்தின் பெயர் லிட்டில்டன்.

மேலே போக கோண்டோலா என்னும் ரோப்கார் வசதி இருக்கு. 945 மீட்டர் நீளமான இரும்புக்கயிறு. ஒரு பெட்டியில் நாலுபேர் வரை போக முடியும்.
11 மில்லியன் டாலர்களும், ஏழு வருச உழைப்பும் செலவானதாம். 1992 முதல்
பொதுமக்கள் பயனுக்கு வந்துருக்கு. ஆரம்பிச்ச காலத்தில் ஒரு முறை போனதோடு சரி. இப்ப உங்களுக்காக 15 வருசம் கழிச்சு நேத்துப்போய் வந்தோம்.
( இது என் பங்கா இருக்கும் 14 ஆடுகளோ?)

அங்கேயுள்ள கட்டிடத்தில் டைம் டன்னல் என்று ஒரு ஆறு நிமிஷ வீடியோ காட்சி ஓடிக்கிட்டே இருக்கு. சுவர் முழுசும் டைனோசார்களின் பிரமாண்டமான படங்கள். அருமையான ஒரு உணவுவிடுதி இருக்கு. சாப்பாட்டின் தரம் 1 0 சதமானம், கண்முன் விரிந்து நிற்கும் காட்சிகளுக்கு 90 சதமானமுன்னு விலை நிர்ணயம்:-))))

எல்லா இடத்திலும் இருக்கறது போலவே நினைவுப்பொருட்கள் விற்கும் கடைன்னு ஜகஜ்ஜோதியா இருக்கு.
குழந்தைகளுக்கு விளையாட ஒரு பகுதி

மேலே ஏறிவர நல்ல சாலைவசதியும் இருக்கு. பலசாலிகள் சைக்கிள் சவாரி செய்வாங்க போல!

அதிவேகமான காற்று வீசும் சமயம் போக்குவரத்தை நிறுத்திருவாங்க. நல்லவேளையா நேத்து அருமையான காலநிலை. கோடையானதால் இரவு ஒன்பதரைவரை நல்ல வெளிச்சமாக இருந்துச்சு. எல்லாம் உங்க அன்புதான் காரணம்.


வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியோ நன்றி.
தனிமடலிலும், நம்ம பதிவிலும் வாழ்த்தியவர்களை அன்புடன் நினைவு கூருகின்றேன்

பிகு: ஒவ்வொருவரையும் பெயர் குறிப்பிட்டு நன்றி சொல்ல ஆசை இருந்தாலும், மு.சொ. என்று சொல் விழுந்திருமோன்ற பயம் ஆசையைத் தடுத்து நிறுத்தியிருக்கு. சரிசரி. கோண்டோலா குறிப்பு பரிட்சைக்கு வரும்.கவனமாப் படிச்சு வச்சுக்குங்க:-))))

மகள் அளித்த யானை வாழ்த்து