Wednesday, February 13, 2008

'புல்லட்' பூஜைசூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரெஸ் வண்டி, புல்லட் ட்ரைன் வரப்போகுதுன்னு சொன்னதும் எவ்வளவு ஆனந்தமா இருக்கு. இதே ஆனந்தம் எல்லாருக்கும் வரட்டுமுன்னு கொஞ்சநாளா பூஜை பார்த்துக்கிட்டு இருக்கோம்.

எந்த ராஜா எப்படிப்போனாலும் 'டாண்'னு 7 மணிக்குப் பூஜை ஸ்டார்ட் ஆகிரும். அதிலும் நாம் சனிக்கிழமையாப் பார்த்துக் கோவிலுக்குப் போறோம் இல்லையா? அங்கே அநேகமா ஏகாந்த சேவைதான் நமக்கு.

வழக்கமா 'சங்கு'ஊதி (பூஊம், பூஊஊம் ,பூஊஊஊஊஊஊம் மூணுவாட்டி) பூஜை ஆரம்பிக்கும். நாலைஞ்சு ஊதுபத்தியைக் கத்தையா வச்சுக்கிட்டு ஏத்தி,அதை கையை ஒரு வீசு வீசி அணைச்சுட்டுத் தீயில்லாமப் புகைய ஆரம்பிச்சதும், இடது கையில் சின்ன பூஜை மணி( வெங்கலம்/பித்தளை) ஆட்டிக்கிட்டே ஒரு மூணு நாலு நிமிஷம்.
அடுத்து அஞ்சு திரி போட்ட தீப ஆராதனை.அது ஒரு அஞ்சு நிமிஷம். அது முடிஞ்சதும் அந்த விளக்கை ஒரு சின்ன பளிங்கு ஸ்டூலில் வைப்பாங்க. அதை யாராவது பக்தர்கள் எடுத்துக்கிட்டுப்போய், சாமிக்கு நேர் எதிரா இருக்கும் ஸ்ரீலஸ்ரீ பிரபுபாதா சிலைக்குக் காமிச்சுட்டு, கூடி இருக்கும் பக்த ஜனங்களுக்கு வரும்.கையில் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கலாம்.

மூணாவதா, தீர்த்தம். சின்ன வலம்புரி சங்கில் எடுத்து விக்கிரஹங்களுக்கு ஆராதனை செஞ்சுக்கிட்டே கொஞ்சம் கொஞ்சமா ஒரு சின்ன அழகான பளபளன்னு தேய்ச்சு மினுக்கப்பட்ட குட்டியூண்டு குடத்தில் ஊத்தி, பளிங்கு ஸ்டூலுக்கு வரும். பக்தர் ஒருத்தர் அதை எடுத்துக்கிட்டுப்போய் ஸ்ரீலஸ்ரீக்குக் காமிச்சு அவருக்கு துளியெடுத்துத் தெளிச்சுட்டு, உள்ளங்கையில் கொஞ்சம் கொஞ்சமா ஊத்திப் பக்த ஜனங்களுக்கு சிரசில் தெளிக்கறொமுன்னு மழைத்துளியா வீசுவார்......

இதுக்குப்பிறகு ஒரு கைகுட்டை. கட்டைவிரல் & நடுவிரலால் பிடிச்சு ஒரு ரெண்டு நிமிஷம் சுத்து. ஆச்சா?

அஞ்சவது ஒரு சின்னத் தட்டுலே கொஞ்சம் பூக்கள். தட்டோடு எடுத்து மூணு நிமிஷம் சுற்றல். அது முடிச்சுட்டு தட்டிலே இருக்கும் பூக்களை விக்கிரகங்களுக்குக் காலடியில் அங்கங்கே படைச்சுட்டு, ஏற்கெனவே அங்கே இருக்கும் பூக்களை எக்ஸ்சேஞ்ச் செஞ்சு பளிங்கு ஸ்டூலுக்கு வரும். பக்தர் அவைகளை ஸ்ரீலஸ்ரீக்குக் காமிச்சுட்டு, அங்கே ஒரு பூவை அவருக்குப் படைச்சுட்டு மீதி இருப்பதில் ஒண்ணோ ரெண்டோ அங்கே அருகில் இருக்கும் பக்த மகா ஜனங்களில் ஒருவருக்குத் தருவார். அவர் கையில் வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டோ, இல்லை முகர்ந்து விட்டோ அடுத்து நிற்பவர் ( ஆங்.... சொல்ல மறந்துட்டேனே. சங்கு ஊதியவுடன் எல்லோரும் எழுந்து நிற்கணும். ஆரத்தி முடியும்வரை நின்னபடிதான் எல்லாம்) கைகளில் தருவார். இப்படி எல்லார் கையும் மாறிக் கடைசி நபர்வரை பயணம் செய்யும் அந்தப் பூக்கள்.
பூக்கள் பயணிக்கும் சமயம் விக்கிரகங்களுக்கு விசிறி கொண்டு காற்றுவீசும் சேவை நடந்து கொண்டிருக்கும். வெய்யில் காலமாக இருந்தால் மயிலிறகு விசிறியும், குளிர்காலமாக இருந்தால் வெள்ளிப்பூண் போட்ட வெள்ளை ரோமம் உள்ளதும் சேவையில் இருக்கும்.

கடைசிக் கட்டத்துக்கு வந்தாச்சு. மறுபடி சங்கு 3 முறை.
எல்லோரும் கீழே விழுந்து கும்பிடணும்.

இதுதான் வழக்கமான ஆரத்தி முறைகள் இங்கே. எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு 25 அல்லது முப்பது நிமிசம் பிடிக்கும்.

ஒரு மூணுநாலு மாசமா வேகம்பிடிக்க ஆரம்பிச்சிருக்கு இந்தியாவில் இருந்து புதுசா இங்கே வந்திருக்கும் ஒரு பூஜாரியால். இளவயது ஆள். வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆட்கள் வரிசை முறையில் பூஜை செய்யறாங்க. அதில் இவர் சனிக்கிழமை மாலையில் பொருந்தியிருக்கார்.
கடவுள் முன்னாலே நிக்கறோமே, கொஞ்சம் பதவிசா எல்லாத்தையும் செய்யலாம்ன்னு இல்லாம தடால்தடால்ன்னு ஆரத்தி எடுப்பார். முப்பது நிமிசம் எடுக்கும் பூஜை இவர் வந்தால் ஒரு இருபது நிமிசத்துலே முடிஞ்சுரும்.பாசஞ்சருக்கும் எக்ஸ்ப்ரெஸ்க்கும் உள்ள வித்தியாசம். அது பரவாயில்லைன்னு இருந்தாலும், பூக்கள் உள்ள தட்டைச் சுத்தும் வேகத்தில் அதில் இருக்கும் பூக்கள் பறந்து தரையில் விழும். கையில் இருக்கும் வெங்கலமணியின் மெல்லிய இனிய நாதம் எங்கோ தொலைஞ்சு போய், தீயணைப்பு வண்டி வரும் சத்தம் போல அடிச்சு எழுப்பும் வேகத்தில் வரும் சத்தம் இருக்கே............
அப்பப்பா...... சாமிக்கும் இதெல்லாம் வேண்டி இருக்கு என்றதைப்போல முகத்தில் எப்பவும்போல் ஒரு சின்னச் சிரிப்பு.

இதைப்பற்றி மற்ற மக்கள்ஸ் என்ன நினைக்கறாங்கன்னு தெரிஞ்சுக்கமுடியலை. ஏன்னா,அநேகமா நாங்க ரெண்டுபேர் மட்டுமேதான் பூஜையில் கலந்துக்கறோம்.

இதை எதுக்கு இப்பச் சொல்ல வரேன்னா......... இந்த சனிக்கிழமை எக்ஸ்ப்ரெஸ், ஒரு புல்லட் ட்ரெயினா மாறிப்போச்சு. பதிமூணு நிமிசத்துலே மொத்த ஆரத்தியும் முடிஞ்சிருச்சு. தட தடா, தட தடா.....தட் தட்........

நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து முழிச்சோம். அப்ப இவர்,

" ட்ரைவ் இன் கோயில் வச்சா எப்படி இருக்கும்?"

"பழனி கோயிலில் நூறு ரூபாய் கொடுத்தால் சாமியை காருக்கே கொண்டுவந்து காமிக்கிறாங்களாம்"

"நிஜமாவா?"

"அப்படித்தான் நம்ம ரஷ்யா ராமனாதன் ஒரு பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார்"

"ஓஹோ..... இப்ப நான் சொல்ரதும் இப்படித்தான்னு வச்சுக்க. கார்லே எல்லாம் வரிசையா மெக்டோனால்ட், கெண்டக்கிக்கு போறமாதிரி ட்ரைவ் த்ரூ போய் சாமியைக் கும்பிட்டுக்கிட்டு போய்க்கிட்டே இருக்கணும்."

"அப்ப உண்டியல்?"

"ஓஓஓஓ அது ஒண்ணு இருக்கா? இதைப்பாரு. கார் போய் நிக்குது. அங்கே இருக்கும் ஸ்லாட்லே காசு போட்டதும் ஒரு எலெக்ட்ரானிக் கர்ட்டன் உயரும். உள்ளே சாமி. நாம கும்பிட்டுக் கன்னத்துலே போட்டுக்கிட்டதும் கர்ட்டன் கீழே இறங்கிரும். நாம அப்படியே வெளியே வண்டியை ஓட்டிக்கிட்டு வந்துறலாம்."

"நாட் பேட்! எவ்வளவு நேரம் தரிசனம்?"

"ஒரு 20 நொடிகள். இதுவே தாராளம்"

"அப்ப தீபாராதனை? "

"அதுக்கு ஸ்பெஷல்லா ரெண்டாவது ஒரு ஸ்லாட். அதுக்கு டபுள் த ரேட். எலெக்ட்ரானிக் உதவியால் பளிச்சுன்னு ஒரு தீபாராதனை நடக்கும். மொத்தம் 30 விநாடி."

ம்ம்ம்ம்....................விஐபி வந்தாங்கன்னா? அதுக்கு வேற இடத்தில் தனிக் கவுண்ட்டர் வைக்க வேண்டியதுதானே?".

"ஊஊஹுஊஊஊஊஊஉம்..........இந்தக் கோயிலில் எல்லாம் சமத்துவம்தான்.
ஒரு கார் மட்டுமே நுழையும் வசதி உள்ள ட்ரைவ் வேதான் வைக்கணும். அகலமா வச்சா ஓவர் டேக் பண்ணுவாங்க"

"ஒன்லி கார் மட்டுமா? அப்பக் காரில்லாத மக்களுக்கு?"

"அதென்ன அப்படிச் சொல்றே? இப்பத்தான் ஒரு லட்ச ரூபாக் கார் வந்துருச்சே!"

"அட! ஐடியா நல்லாதான் இருக்கு. நம்மூர்லே இது ஹிட் ஆனாலும் ஆயிரும். பேசாம ஃப்ரான்சைஸிஸ் போட்டுக்கலாம். "

கார் போய் நிக்கும்போதே ரெண்டு பக்கமும் கைக்கு எட்டும் தூரத்தில் ஆட்டொமேடிக்கா ரெண்டு கிண்ணத்தில் குங்குமம், சந்தனம், விபூதி இத்தியாதிகள் ஒரு ட்ரேயில் வச்ச இயந்திரக் கை நீளனும். அதுலே இருந்து எடுத்து நெத்திக்கு வச்சுக்கலாம்.

அந்தக் கிண்ணங்களை நல்லா ஸ்க்ரூ போட்டு இணைச்சிருக்கணும்.
அம்பது ரூபாய்ன்னு ரேட் வச்சுக்கலாம். வருமானம் எல்லாம், கோயிலுக்கு டைரக்டாப் போய்ச் சேர்ந்துரும்.

இன்னும் இதை எப்படியெப்படி இம்ப்ரூவ் செய்யலாம் என்பதற்கான ஆலோசனைகளும், கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.


நானே முதல் கல்லைப்போட்டு ஆரம்பிச்சு வைக்கறேன்:
இஷ்ட தெய்வமுன்னு ஒண்ணு இருக்கே. அதுனாலே எந்த சாமின்னு ஒரு பட்டியல் வச்சுக் காசு போட்டுட்டு அந்த நம்பரை அழுத்தணும். எல்லா மதக்காரர்களுக்கும் இங்கே இடம் உண்டு. சமத்துவம் இப்படியாவது வரட்டுமே.

பதிவின் கருத்து தானம்: கோபால்.

27 comments:

said...

லாஸ் வேகஸ் நகரத்தில் இந்த மாதிரி சர்ச் உண்டு. ட்ரைவ் இன் கல்யாணமே பண்ணிக்கலாம். நீங்க வேற!!

இங்க பாருங்க.

Anonymous said...

அவசரம் அவசரம்னு சாமி கும்பிடறதுக்கு கூட யாருக்கும் நேரமில்ல பாருங்க. கோயிலுக்குப்போயி ஒரு அஞ்சு நிமிஷம் உக்காந்து சாமி கூட பேசுனாத்தான நல்லா இருக்கும். அதனால இதை இம்ப்ரூவ் பண்ண நான் ஆலோசனை சொல்ல மாட்டேனே!!!

said...

ஸ்ரீலஸ்ரீக்குக்
யாருங்க இவர்? புதிதாக இருக்கே!!
ஐடியாவெல்லாம் ஓகே தான்,ஐபோடில் இந்த வசதி இருக்கே!
என்ன? அந்த ஐபோடு வர (யாராவது கேட்டால்) 2 வருடம் ஆகும். :-)

said...

வடுவூர் குமார் அது ப்ரபு பாதர மறியாதையா அழைக்கரது.ஸ்ரீலஸ்ரீ ப்ரபு பாதா...ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் மாதிரி.ISKCON Interantional Society for Krishna Consciousness ஆரம்பிச்சவர்.

துளசி இங்கேயும் ISKCON கோவில் இருக்கு ஆனா இந்த அவசரம் இல்ல!!!ஆனாலும் உங்க ஊரு சாஸ்த்ரிஜிக்கு ஸ்பீடு ஜாஸ்திதான் :):) மொதல்லலாம் அவங்க யாருக்காவது பிறந்தநாள்னா "happy birthday to you" வ Hare Hrishna to you Hare Rama to you" ன்னு பாடரத கேக்க ஒரு மாதிரி வித்யாசமா உணர்ந்தேன்.இப்ப பழகிருச்சு...நல்ல பகவன் நாமா தானே சொல்ல்ராங்க!!:):)

said...

ம்ம்ம்ம்...டீச்சர்..ஜடியா எல்லாம் சூப்பர் தான்...ஆனா எனக்கு என்னாமே மாதிரி இருக்கு.

said...

வரிசையில் கார் காத்திருக்காமல் இருக்க சிறப்புக் கட்டணத்தில் சிறப்பு வழி...

புல்லட் குருக்கள் நம்ம ஊர்க் கோவில்களிலும் பார்த்ததுண்டு..அர்ச்சனைத் தட்டைப் பிடுங்கிக் கொண்டு போவர்கள்..நம் அர்ச்சனைகளைப் பற்றிக் கவலைப்பாடாமல்...

said...

டீச்சரம்மா.. இப்பவே எல்லாக் கோயில்லேயும் இதுதான் நடக்குது.. ஒரு அஞ்சு நிமிஷம் எங்கப்பன் முகத்தைப் பார்க்க முடியல.. எல்லாத்துலேயும் அவசரம்.. எங்கேயும் அவசரம்.. காலப்போக்குல மொபைல் கோவில் வரத்தான் போகுது.. இங்க மெட்ராஸ்ல திருப்பதிக்கு பிராஞ்ச் கோவில் வைச்ச மாதிரி..

இப்படியெல்லாம் செஞ்சா ஏன் நாத்திகர்கள் நம்மைத் திட்ட மாட்டாங்க..? என்ன நான் சொல்றது..?

said...

வேண்டியதுதான். நாங்களெல்லாம் மும்பையிலிருந்து சென்னை செல்லும்போது விமானத்திலிருந்தே பாலாஜியை தரிசிப்பது போல :) ஏன், இணையத்தில் சித்திவிநாயக் கோவிலின் ஆரத்தியைக ் காணலாமே !

பேசாமல் tollக்கு காத்திருக்கும் நேரங்களில் இந்தக் கோவில்களை அங்கு அமைத்தால் சாலைவரி கட்டிக்கொண்டே சாமிதரிசனமும் முடித்துக் கொள்ளலாம்.

சடங்குகள் சம்பிரதாயங்கள் ஆனால் சாமியாவது, பூஜையாவது :(

said...

சிறப்பு ட்ரைவ் இன் மூலமா சாமி கும்பிடாதீங்க. பொது தரிசனத்திலேயே போங்க.

அப்புறமா உண்டியல்ல காசு போடாதீங்க.

:)

said...

அக்கா!
உங்கள் பதிவைப் படித்ததும் ,பக்தி வியாபாரம் போகும் வேகம் வேதனை தந்தது;
ஆனாலும் ஒரு காலத்தில்,ஏன் இன்றும் சிலர் பக்தி சிரத்தையுடன் பூசைசெய்யும் அழகே தனி!!
எனிலும் பக்தி பணம் தேடலான பின்பு; அது எந்த ரூபத்திலும் வந்தாலும் ஆச்சரியப்பட இல்லை.
பணம் கொட்டினால் போதும்.
இவ்வளவு அழிச்சாட்டியம் ஆண்டவனுக்கு செய்து கொண்டு; நாத்தீகன் கேள்வி கேட்டால் கோபிப்பதில்
நாயம் இல்லை

said...

மேடம்,

எனக்கு இரண்டு விஷயங்கள் ஞாபகம் வந்தன:

1. சுஜாதா மிகப்பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய 'திமலா' என்கிற விஞ்ஞானச் சிறுகதை. (திருப்பதி கோவிலில் சாமிதரிசனம் இப்படித்தான் நிகழப்போகிறது என்கிற அடிப்படையில்)

2. புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமி பிள்ளையும்' என்கிற சிறுகதை. (அதில் கந்தசாமிப் பிள்ளை வீட்டுக்கு வந்த கடவுள், பூஜை அறைக்குள் போனதும் அங்கே இருந்த சாமிபடங்களைப் பார்த்து மிரண்டு போய் வெளியே ஓடிவந்து விடுவார். இந்த so called ஸ்ரீலஸ்ரீ படங்களைப் பார்த்தால் எனக்கு அப்படித் தான் தோன்றும் ஒவ்வொரு முறையும்).

said...

இப்படி வராம இருக்கணும் சாமி:)0
யாரு கண்டா.
சில பூசாரிகள் இப்படித்தான் இருக்கிறார்கள்.:((

said...

துளசியின் கைவண்ணம் பாராட்டுக்குரியது. ஒரு நிகழ்வைப் பார்த்த உடன் அதைப் பற்றிய ஒரு சிந்தனை - ஒரு ஆதங்கம் - ஒரு பதிவு. அதுவும் நகைச்சுவையுடன் கூடிய பதிவு.

//வெங்கலமணியின் மெல்லிய இனிய நாதம் எங்கோ தொலைஞ்சு போய், தீயணைப்பு வண்டி வரும் சத்தம் போல அடிச்சு எழுப்பும் வேகத்தில் வரும் சத்தம் இருக்கே............//

சூப்பர் காமெடீஈஈஈஈஈஈ

என்ன செய்வது. நாமும் வேக வேகமாக தரிசனம் செய்கிறோம் - பொறுமை இல்லை. கூட்டம் தாங்க முடியவில்லை. அவசர யுகம் ......

said...

கருத்துக்கு உதவி செஞ்சவரைக் கேட்டுப் பதில் போடலாமுன்னா ஆளு கிடைச்சாத்தானே? ஒரு வேளை அடுத்த சனிக்கிழமைதான் முடியுமோ என்னவோ? அதனால் பின்னூட்டமளித்த மக்கள்ஸ் அனைவரும் தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.

said...

வாங்க கொத்ஸ்.

இந்தச் சர்ச் பற்றி முந்தியே செய்தித்தாளில் படிச்சிருக்கேன். இதே போல்
அஞ்சே நிமிஷத்துலே விவாகரத்தும் கிடைக்குமிடம் இருக்காமே.

said...

வாங்க சின்ன அம்மிணி.

காலம்போற போக்குலே உக்காந்து பேச நேரமில்லாமப் போச்சுன்னா என்ன செய்யலாம் என்றதுக்குத்தான் பதிவே.

said...

வாங்க குமார்.
நம்ம ராதா சொல்லிட்டாங்க உங்க ஐயத்துக்குப் பதில்.

said...

வாங்க ராதா.

நம்ம கோயிலிலும் கிருஷ்ணஜெயந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டையெல்லாம் கொடுப்பது 20 வருசம் முந்திப் பார்த்தப்பப் புதுமையா இருந்து சிரிப்பும் வந்துச்சு.

இப்ப? நாமே க்ரீட்டிங்ஸ் கொடுக்கறோம்:-))) சாமிக்கு கிஃப்ட் வேற தர்றோம்.

பாசுமதி அரிசி 10 கிலோ, பயத்தம் பருப்பு 5 கிலோன்னு சகலமும் கொடுக்கறதுதான். இப்பெல்லாம் கோயிலே என்ன ஐட்டம் கொடுத்தா நல்லதுன்னு லிஸ்ட் போட்டுருது.

வெள்ளைக்கார சாமியார்கள் பூஜை இப்பவும் நின்னு நிதானமாத்தான் இருக்குப்பா. இந்த இந்தியச் சாமியார்தான் அட்டகாசம். ஊர்ப்பழக்கத்தை இங்கேயும் கூடவே கொண்டு வந்துட்டார். ப்ளேன் ஏறும்போதே விட்டுட்டு வரணும்னு தெரியலை போல(-:

said...

வாங்க கோபி.

கூட்டம் ஏறஏற இப்படி வந்தாலும் ஆச்சரியப்படாதீங்க.

said...

வாங்க பாசமலர்.

சரியாத்தான் சொன்னீங்க. அதான் இப்ப அர்ச்சனைக்கு மெனெக்கெடறதில்லை.

said...

வாங்க உண்மைத்தமிழன்.

மெட்ராஸில் மட்டுமில்லை, இன்னும் பல முக்கிய நகரங்களில் ப்ராஞ்ச் திறக்கப்போறாங்களாம்.
எது எப்படியானாலும், நாத்திகர்கள்தான் நம்மை விடவும் இதிகாசம், புராணங்களை ஆழ்ந்து படிக்கிறாங்க. எப்படி வசை பாடலாமுன்னு அல்லும்பகலும் அதே யோசனையில் இருக்காங்க.

நாமோ..... ஒரு அஞ்சு நிமிசம் கும்பிட்டுட்டு, மத்த வேலைகளைப் பார்க்க ஓடிடறோம்:-)

said...

வாங்க மணியன்.

உங்க ஐடியா நல்லா இருக்கே. டோல் பக்கமுன்னா சந்தனம் குங்குமம் தீரும்போது அதை நிரப்ப ஆள் இருக்கும்:-)))

இணையத்துலே பிள்ளையார், பெருமாள், அம்மன்னு இ பூஜா இருக்கே. ஆனா கணினி இல்லாதவங்க என்ன செய்ய? அடுத்த தேர்தலுக்கு இலவச கணினி கொடுத்துட்டா வம்பே இல்லை.

said...

வாங்க அரைபிளேடு.

இங்கே சமத்துவம்தான். நோ சிறப்பு லைன். ஆனா உண்டியல் உண்டு. மெயிண்டனன்ஸ் செலவு யாரு தருவா? காசு இல்லைன்னா திரை விலகாது:-)

said...

வாங்க யோகன்.

நம்மூர்க் கோவிலில் நடக்கும் அழிச்சாட்டியங்கள் கண்டு மனம் வெதும்பிக்கிடந்துதான் போச்சு. இப்ப என்னன்னா இங்கேயும் கொஞ்சம் கொஞ்சமா மாறுதோன்னு இருக்கு.

said...

வாங்க ரத்னேஷ்.

திமலா வலையில் இருக்கான்னு தேடறேன்.

ஸ்ரீலஸ்ரீ, இங்கே எல்லா இஸ்கான் கோயிலிலும் சிலையா இருக்கார் சாமிக்கு முன்னால். நானும் அவர்கிட்டே ரெண்டு வார்த்தை பேசிட்டுத்தான் வருவேன்.

"கொடுத்துவச்சவரைய்யா நீங்க. நிம்மதியா இப்படி உக்காந்து 24 மணிநேரமும் பகவானைப் பார்க்க முடியுது."

ஆம்பிளை சாமியாரா இருந்தா வீட்டுவேலை செய்யவேணாம். பூஜை, சம்பிரதாயங்கள் நிறைஞ்ச பல வீடுகளில் பாருங்க. ஐயா பூஜைக்கு உக்காருமுன்பே, பூஜை சாமான்கள் எல்லாம் தேய்ச்சு மினுக்கி செய்யவேண்டிய எல்லாம் பிரசாதம் உட்படச் செஞ்சு ரெடியா இருக்கணும். இல்லேன்னா ஐயாவுக்குக் கோவம் வந்துரும்.

அப்ப அம்மாக்கள்? அதான் கர்ம யோகமாம்.

said...

வாங்க வல்லி.

காலம் மாறுகிறதப்பா:-))))

said...

வாங்க சீனா.

ஆதங்கம்தான்.வழக்கமான நேரப்படிப் பூஜை. சாமிக்கு முன்னால் ரெண்டே பேர். இத்தனை அவசரம் வேணுமா?

சொல்லுங்க.