Monday, June 30, 2025

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் (2025 இந்தியப்பயணம் பகுதி 39 )

தெய்வலோகப் பசு காமதேனுவின் மகள் பட்டி, வந்து வழிபட்ட தலமாம்.  அத்னால் பட்டீஸ்வரம் என்ற பெயர் அமைஞ்சதாகச் சொல்றாங்க.  நாதன்கோவிலில் இருந்து கிளம்பின பத்தாவது நிமிட் ஏழுநிலை ராஜகோபுரம்  கோபுரம் கண்ணில் பட்டதும்  அங்கே போயிட்டோம்.
 'வாங்க'ன்னு கூப்பிட்டப் புள்ளையாரைக் கும்பிட்டுக்   கடந்ததும்  நந்திதேவருக்கு ஒரு சிறிய விமானத்துடன் கூடிய அழகான தனிச் சந்நிதி.  ரொம்பவே அழகான முகத்துடன் இருக்கார் நந்திதேவர். அவருக்கு முன்னால் பளபளக்கும் கொடிமரம்.




பெரிய வளாகமா இருக்கு.  நேரெதிரில் (கொஞ்சம் இடப்பக்கம் தள்ளி) கோவில் திருக்குளம்.  ஞானவாவின்னு பெயர். நேரெதிரா அஞ்சு நிலை கோபுரம்,  அருள்மிகு  தேனுபுரீசுவரர் திருக்கோவில். பட்டீச்சரம் என்ற பெயர்ப்பலகையுடன்.  நமக்கிடதுபக்கம் (குளத்தின் பின் சுவருக்கு முன் )இன்னொரு  அஞ்சுநிலைக் கோபுரம்.  இது அதைவிடக் கொஞ்சம் உயரம் குறைவுன்னு தோணுது.....  காட்சிப்பிழையாக இருக்கலாம்.....    நமக்கு வலதுபக்கம் குளத்தை நோக்கியபடி ஒரு பெரிய மண்டபம். 

கண்ணெதிரில் இருக்கும் கோபுரத்தை வணங்கி உள்ளே போறோம்.  கோபுர வாசலுக்கு நேரெதிரா மஹாமண்டபமும்......  அதோ தூரத்தில் கருவறையில் லிங்கவடிவில் தேனுபுரீஸ்வரரும். த்வாரபாலகர்கள், சொல்லமுடியாத அழகிலும், அளவிலும் !  அம்மாடீ..... பாடல்பெற்ற தலம் !!!! 
திருஞானசம்பந்தர் இறைவன் தரிசனத்துக்குக் கடும்  வெயிலில் நடந்து வர்றார்.  இதைக் காணப்பொறுக்காத தேனுபுரீஸ்வரர், தன் சிவகணங்களை அனுப்பி நிழல் தரும் விதமா முத்துப்பந்தலை(குடையாக )பிடிச்சுக்கிட்டு வரச் சொன்னாராம் ! இப்பவும்  முந்துப்பந்தல் விழான்னு வருஷாந்திர விழா நடக்குது,   ஆனி மாசம் முதல் தேதியில் !!!!

நம்ம  விஸ்வாமித்ர மஹரிஷிக்குப் ப்ரம்மரிஷி என்ற பட்டம்  கிடைச்சதும் இங்கேதானாம் !  காரணம்?  இவர் அருளிச்செய்த காயத்ரி மந்திரம் !!!!! 
                                      
குருக்களைக் காணோம். நமக்கு ஏகாந்த ஸேவை. கம்பிகளூடே தரிசனம். 
இந்தப்பக்கம் நவக்ரஹங்கள்.    
உட்ப்ரகாரத்தில்  சுத்திவர மேடை அமைப்பில் அருள்மிகு வேதலிங்கம்,  பைரவர், சனி, சூரியன், கீர்த்திவாசர்.......   உட்ப்ரகாரம் சுற்றிவந்து,  அம்மன் சந்நிதிக்குப் போனோம். ஞானாம்பிகை ! தனிச்சந்நிதியும் தனிக்கோவில் அமைப்புமாக ! 
சிங்கத்தூண்களுடன் மண்டபமும், பின்புறச் சுவரில் அழகான ஓவியங்களும் !  
தூணைத்தாங்கி உக்கார்ந்திருக்கும் சிங்கக்குட்டிகளைப் பார்த்ததும் எனக்கு நம்ம ஜீகே நினைவு வந்தது..... பாவம்.குழந்தை..... ப்ச்....
இந்த மண்டபத்தை நிர்மாணித்து ஓவியங்களை வரைந்த கோவிந்த தீட்சிதர் -நாகமாம்பிகா அவர்களைப்பற்றிய சிறுகுறிப்பு  மண்டபத்தில் எழுதி வச்சுருக்காங்க. வாசிச்சுக்கிட்டே வரும்போது சட்னு ஒரு இனிய அதிர்ச்சி !  முந்தாநாள் போன திருப்பாலைத்துறை நாதர் கோவில் களஞ்சியம் கூட இவர்தான் கட்டியிருக்கார் !  ஆஹா..... 182830இவுங்களுக்கு இங்கே சிலையும்  வச்சுருக்காங்க. 
அம்மன் சந்நிதியிலும் கம்பிக்கதவினூடேதான் தரிசனம். 
பதினாறு கைகளுடன் சாந்தஸ்வரூபியான துர்கையின் பழங்கால ஓவியம் ஒன்னு மஹாமண்டபச் சுவரில்.  கங்காதரன் என்ற ஓவியர்  '93 இல் வரைஞ்சுருக்கார்.  ஒரு முப்பத்தியிரண்டு வருஷம்தானே ஆகி இருக்கு! எப்படிப் பழங்கால ஓவியமுன்னு  எனக்குத் தோணுச்சு?  சரியான பராமரிப்பு இல்லாமல் வண்ணங்கள்  கொஞ்சம் வெளிறி இருப்பதாலோ ? ஙே....  

இன்னொரு ஓவியம் கும்பகோணம் 'வி கே எஸ் சிவம் 'வரைஞ்ச ஆதிபராசக்தி.  சீறும் சிங்கம் அருமை ! 
அடுத்தாப்லெ இன்னொரு மண்டபம். யாழித்தூண்கள், நம்ம சேஷராயர் மண்டபத்தை ஞாபகப்படுத்தியது உண்மை. இந்த மண்டப விதானத்தில் வட்டமான ஒரு கற்பலகை யில் ஊஞ்சல் சங்கிலி !  இந்த வட்டம் சுழலுமாம் !!!!!   அட!!!!
சோழமன்னர், சிவனை வணங்குவதாக  ஒரு சிற்பம். 
 பிரகாரம் சுற்றிவரும்போது,   காளை வாகனம் இருக்கும் குட்டியா ஒரு தேர்/ ரதம்.    உட்ப்ரகார புறப்பாட்டுக்குன்னு நினைக்கிறேன்.  நம்மவருக்குத் தேர் இழுக்கப்பிடிக்குமே ! ஓடிப்போய் இழுத்தார்.  உற்சவர் இல்லைன்னா  என்ன.... மனசில் அவரை நினைச்சுக்கலாம்தானே ! 
வெளிப்ரகாரத்தில்  வாகனங்கள் நிறுத்தி வச்சுருக்கும்   மண்டபத்தின்  ஒரு இடத்தில்  உயரமான ஒரு தனிச்சந்நிதியில்  விரிசடையுடன் காலபைரவர்.  முதலில்  சடை முகத்தைப் பார்த்து அக்னி ன்னு நினைச்சேன். அப்புறம் பார்த்தால் அவர் முன்னால் நந்தி தேவர்.  அக்னிக்கு எதுக்கு நந்தின்னு கவனமாப் பார்த்தால் நம்ம பைரவர் சுருட்டிய வட்ட வாலுடன் இருக்கார் !  

ரொம்பப்பெரிய கோவிலாகத்தான் இருக்கு.  ஒரு முறை பகல் நேரத்தில் வந்து போகணும்.  சுற்றி வரும்போது  இப்போ கோவில் நுழைவு வாசலாண்டை வந்துருக்கோம்.  கண்ணுக்கு முன்னால் தூரத்தில் ராஜகோபுரம் தெரியுது. திருக் குளத்தைப் பார்த்தபடி இருக்கும் ப்ரமண்டமான மண்டபப்படிகளில்   கொஞ்ச நேரம் உக்கார்ந்தோம். கோவிலுக்குப்போனால் ஒரு நிமிட்டாவது உக்கார்ந்துட்டு வரணுமுன்னு பெரியவங்க சொல்லிவச்சுருக்காங்கல்லே !  

கண்ணெதிரில்  திருக்குளத்துக்கு அந்தாண்டை இன்னொரு கோபுரம். அங்கே தான் துர்கை சந்நிதி இருக்கணும்.  அதென்னவோ போகணுமுன்னு அப்போ தோணவே இல்லை.  இந்தப் பதிவு எழுதும்போதுதான்.... அடடா.... கோட்டைவிட்டுட்டோமேன்னு  இருக்கு. 

 பதினாறு வருஷங்களுக்கு முன் பட்டீஸ்வரம் துர்கையை மட்டும் தரிசனம் செஞ்சுட்டுப் போயிருக்கோம்.   தகதகன்னு எலுமிச்சம்பழ மாலையோடு தரிசனம் ஆச்சு. நமக்கும் ப்ரசாதமா ரெண்டு எலுமிச்சம் பழம் கிடைச்சது.  தனி கோபுரவாசலுக்குள் நுழைஞ்சு அப்படியே திரும்பப்போயிருக்கோம்.  உள்ளேயே அடுத்த கோபுரவாசலில் போனால்  சிவன் கோவில் இருக்குமுன்னு  தெரியலை.  கார் டிரைவர் விநோத் (உள்ளூர்க்காரர்) கூடச் சொல்லலை பாருங்க. நவக்ரஹ டூர் னு கார் எடுத்துருந்ததால்...... அதை மட்டும் சொன்னால் போதுமுன்னு இருந்துட்டார் போல. திருவலஞ்சுழி வெள்ளைப்பிள்ளையாரைத் தரிசனம் செஞ்சுட்டு,  அப்போ தங்கியிருந்த  ஆனந்தம் போகும் வழியில் துர்கை தரிசனம் ஆச்சு. 

சரி. போகட்டும், யார் யார் எப்போ தன்னை தரிசிக்கணுமுன்னு கடவுளர்கள் ஒரு டைம்டேபிள் போட்டு வச்சுருப்பாங்கதானே !!!! 

இந்தக்கோவிலில் இப்படி ஒரு கூடுதல் வசதியும் இருக்கு !!!!
ராயாஸுக்குத் திரும்பியாச்சு.  எதுத்தாப்லே இருக்கும் காசி விஸ்வநாதர் கோவில் ராஜகோபுரம்  ஜொலிக்குது.   குளத்துக்கு அந்தாண்டை  ஸ்ரீஅபிமுகேஸ்வரர் கோவில் கோபுரமும் விளக்கலங்காரத்தில் !  எத்தனை முறை வந்தாலும் கும்பகோணம் கோவில்கள் முழுக்க தரிசிச்சோமுன்னு சொல்ல முடியாதபடி.......   எங்கெங்கு காணினும் கோவில்களே !
கொஞ்சம் ஓய்வுக்குப்பின் கீழே ரெஸ்ட்டாரண்டுக்குப்போய் டின்னர் ஆச்சு. எனக்குக் கல்தோசை!

தொடரும்.......... :-)

Friday, June 27, 2025

நந்திபுரவிண்ணகரம்(2025 இந்தியப்பயணம் பகுதி 38 )

உடையாளூர் பள்ளிப்படையிலிருந்து திரும்பி வரும் வழிக்காக கூகுள் மேப்பை பார்த்துக்கிட்டே வந்த நம்மவர்.... இங்கே ஒரு பெருமாள் கோவில் இருக்குன்னதும், சட்னு அந்தப் பக்கம் போகச் சொன்னேன் நம்ம விஜியை. கோவில் முகப்பைப் பார்த்தால்  ஏற்கனவே பார்த்தோமோன்னு சம்ஸயம்.  இந்தாண்டை இருந்த  போர்டு கண்ணில் பட்டது. ஆஹா....  இது நம்ம நாதன்கோவில் இல்லையோ ? திவ்யதேசக்கோவிலும் கூட....எப்படி மறந்தேன் ?
ஏதோ விசேஷம் நடந்துருக்கு போல..... கோபுரவாசலில் கட்டிவிட்ட வாழைமரமும் காய்ஞ்சுபோய்க்கிடக்கே..... சாம்ராஜ்ய லக்ஷ்மி ஹோமம், வாராவாரம் வெள்ளிகளிலாமே.... 


இந்தாண்டை சுந்தரசோழரும் அநிருத்த ப்ரம்மராயரும்....  ஆஹா.... கோவிலைக்கட்டியவர்  சோழரே !  சைவம் வைணவம் என்ற பேதம் இல்லாமல்  சிவனுக்கும் பெருமாளுக்கும் கோவில்களை கட்டி விட்டுருக்கார் இல்லை !!!!! 

 ராஜகோபுரம்தான்.  அதிகம் கோபுரச்சிலைகள்  இல்லாமல் ஸிம்பிளா நீட்டா இருக்கு. தசாவதாரச்சிலைகள்  கோபுரத்தின் (நமக்கு)இடதுபக்கம். அந்த எண்ணிக்கைக்கு மேட்ச் ஆகணுமேன்னு  பத்தாழ்வார் சிலைகள் வலப்பக்கம்.  ரெண்டு பேரை  வேணாமுன்னுட்டாங்க. ரங்கனே கதின்னு அரங்கத்திலேயே இருந்த  தொண்டரடிப்பொடி ஆழ்வாரை ஒருவேளை கணக்கில் சேர்த்துக்கலை போல..... ஆனால்  அந்த இன்னொருவர் யார் ? யாராக இருக்கணும்...... 
தசாவதாரத்துலேயாவது பத்தும் பத்து வகை. கண்டுபிடிப்பது சுலபம். ஆனால் இந்தப் பத்தில்   புடவை கட்டிய ஆழ்வாரையும், தலையில் க்ரீடம்  வச்சுருக்கும் ஆழ்வாரையும் தவிர மற்ற எட்டுபேரும் ஏறக்கொறைய ஒரே மாதிரி.....  பெயர்கள் தெரிஞ்சுக்கும் அடையாளம் ஒன்னுமே இல்லை.....   பெருமாளே....  இப்படிப் புலம்ப வச்சுட்டீரே..... நீரே சொல்லும்..... விடுபட்டவர்கள் யார் யார்......

கோவில் வளாகத்தின்  இடதுபுறம் ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளின் மடம் ! ஸ்வாமிகள்  இப்போ இருக்காரான்னு  விசாரிக்கணும். இருந்தால்.... போய் வணங்கிவரணும். இந்தக்கோவில் ,  இந்த மடத்தின் ஆளுகையில்தான் இருக்கிறது. 
வாசலில் இருக்கும் பூக்கடையில் கொஞ்சம் துளசி வாங்கியதும். கோபுரவாசல் கடந்து உள்ளே போனோம். பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடியின் சந்நிதி சேவிச்சு முன்மண்டபத்தில் நுழைஞ்சாச்சு. 
விழா நடந்ததன் அடையாளங்கள் அங்கங்கே !
 
கரும்பளிங்குக் கல்வெட்டில்  திருமங்கையாழ்வார் பாசுரங்கள் பத்து.  இவர் மட்டும் எங்கேயும் பத்துக்குக் குறைஞ்சு பாடினதாக சரித்திரமே இல்லைன்னுதான் சொல்லணும்.  ஒரு பக்கம் ஸ்ரீக்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அருளிய கீர்த்தனாவளி. 
கருவறை மண்டபத்துக்குள் போனால் அதோ தூரத்தில் ஸ்ரீநிவாஸர்,  தேவிகளுடன்  அமர்ந்த கோலத்தில் !  மேற்குதிசை நோக்கி !  உண்மையில் ஏகாந்த தரிசனம்தான் நமக்கு !!!!

மேலே படங்கள்: வலையில் கிடைத்தன. நன்றி !

மூலவருக்கு முன்னால் உற்சவர் ஜகந்நாதப்பெருமாள். இவர்பெயரில்தான் ஊரும் கோவிலும்.....  ஜகத்துக்கே   'நாதன்'      
நம்ம சிபிச்சக்ரவர்த்தி இருந்தார் பாருங்க. அவருக்கு தரிசனம் கொடுத்த பெருமாள் இவர்.  சிபிச்சக்ரவர்த்தியின் பெயரைக் கேட்டதும் புறாவும் மனசுக்குள் டான்னு வந்துரும், இல்லே ? சின்னவயசுலே ஆரம்பப்பள்ளியில்  படிச்சவைகள் மறந்துபோவதில்லை.

ஒரு சமயம் இந்திரனும், அக்னி தேவனும் சந்திச்சுப் பேசிக்கிட்டு இருக்காங்க.  உலகில் அதிகமான இரக்ககுணம் கொண்டவர் சிபி என்னும் சோழமன்னர்னு எல்லோரும் பேசுவது மெய்யான்னு பார்க்கலாமேன்னு ரெண்டு பேரும் கிளம்பி மாறுவேடத்தில் பூலோகத்துக்கு  வர்றாங்க. இந்திரன் ஒரு பருந்து  & அக்னி ஒரு புறா.

 பருந்து  புறாவைக்  கொல்லப் பார்க்கும்போது, பதறிப் பறந்த புறா, கோவிலில் சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்த   சோழன் சிபியின் மடியில் வந்து விழுந்துருது. அடப்பாவமேன்னு அதைத் தடவிக் கொடுக்கும் போது பருந்து வந்து  அது நான் குறி வச்ச புறா. எனக்குக் கொடுத்துருங்க.  என் லஞ்ச்  அதுதான் என்கிறது. புறாவோ பயந்து நடுங்கி  வெடவெடக்குது.

வேற சாப்பாடு உனக்குத் தரேன். இந்தப் புறாவை விட்டுருன்னு பருந்திடம் கெஞ்ச,  முடியவே முடியாது. எனக்குப் புறா இறைச்சிதான் வேணுமுன்னு அடம்பிடிக்கிறது பருந்து. (பேலியோ டயட் !) ஓக்கே... உனக்கு இறைச்சிதான் வேணுமுன்னா என் உடம்புச்சதையை இந்தப் புறாவின் எடைக்கு எடை கொடுத்தால், புறாவை விட்டுருவையான்னா... சரின்னு சம்மதிக்கிறது.
பணியாளர்களிடம் கத்தியும் தராசும் கொண்டு வரச்சொன்ன  மன்னன்,  புறாவை தராசின் ஒரு தட்டில் உக்காரவச்சுட்டு, தன் தொடைச்சதையை அறுத்து மறு தட்டில் வச்சான். புறா இருக்கும் தட்டு  கீழே ரொம்பத் தாழ்ந்து இருக்கு. அது சமன்நிலைக்கு வரணுமுன்னு  கொஞ்சம்கொஞ்சமா தன் தசைகளை அறுத்து  வைக்க வைக்கப் புறாத் தட்டு மேலே ஏறும் வழியைக் காணோம்!
மன்னனுக்கோ உடம்புலே இருந்த தசைகள் எல்லாம் போய் ரத்தவிளாறியாக் கிடக்கு. என்ன செய்யலாமுன்னு யோசிச்ச மன்னன், சட்னு தராசுத் தட்டிலே ஏறி உக்கார்ந்துட்டான். இப்ப ரெண்டு தட்டுகளும் சமநிலையில்!

'என்னையே ஆக்கித் தின்னுக்கோ'ன்னு பருந்திடம் சொல்ல, அடுத்த நொடி,  இந்திரனும், அக்னியும் சுயரூபத்தில் மாறி, மன்னரை பழையபடி முழு உடலா ஆக்கி, அவன் இரக்க குணத்தைப் பாராட்டி ஆசி வழங்கினாங்க.

நம்ம ஸ்ரீநிவாஸர்  சந்நிதிக்கு முன்னால்தான் சம்பவம் நடந்துருக்கு. பெருமாள் அப்போ கிழக்குத்திசை நோக்கி இருந்துருக்கார். தராசில்  புறா இருந்த தட்டு கிழக்காவும்,  சிபி தன் தசைகளை அரிஞ்சு வச்சுக்கிட்டு இருந்த   தட்டு மேற்காவும் இருந்துருக்கு.  என்ன நடக்கப்போகுதோன்னு பார்க்க  நம்ம மூலவர்  ஸ்ரீநிவாஸர்  மேற்கே திரும்பி  அமர்ந்தார் என்று கதை !

கருவறையில் நந்தி இருக்கார்.  அதுவும் கருவறைச் சுவரில் மனித ரூபத்தில் புடைப்புச் சிற்பமாக !   எப்படி இங்கே ?   

கயிலையில் சிவபெருமானுக்கு முன்னால் எல்லா முனிவர்களும் வந்து சேர்ந்து சத்சங்கத்தில், ப்ரம்ஹவிசாரம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. அப்போ வியாஸர், ' வேதத்துக்கு  மிஞ்சின எதுவுமே இல்லை. கடவுளர்களில் அச்சுதனை மிக்க தெய்வமும் இல்லை'ன்னு  கையை உயர்த்திச் சொன்னதும், 'ஆமாம். அதுவே சரி'ன்னு சிவன் ஆமோதிக்கும்போது, 'என் தலைவர் இருக்கும் இடத்துக்கு வந்து எப்படி  விஷ்ணுதான்  முதல்வர்'னு சொல்லப் போச்சுன்னு  நந்திக்கு மகா கோபம் வந்துருச்சு. தூக்கின கை அப்படியே  நிக்கட்டுமுன்னு சாபம் விட்டுட்டுத் தங்கப்பிரம்பால் வியாஸருக்கு  ஒன்னு வச்சார்.

சிவனுக்கு இப்போக் கோபம் வந்து நந்தியை  சபையை விட்டு வெளியே போ. இனிமேப்பட்டு  இங்கே வரவே வேணாமுன்னு சபை நீக்கம் செஞ்சார்.  சபை நீக்கம் செஞ்சதும்,  கேண்டீன்லே போய் சாப்பிட இது என்ன  பார்லிமென்ட்டா ?  ஐயோ... அபச்சாரம் பண்ணிட்டேன்னு அழுத நந்தியிடம்,  நீ  செண்பகாரண்யம்போய்  மகாவிஷ்ணுவை தியானம் செஞ்சு  அவர் மன்னிச்சால் திரும்ப  வரலாமுன்னு  சொன்னதும் நந்திதேவர் கிளம்பி  இங்கே வந்து தவம் செய்தார்.  அப்போ இங்கே செண்பகமரங்கள் நிறைஞ்ச காடாகத்தான் இருந்துச்சாம்.

சரி. இப்போ இன்னொரு வெர்ஷனைப் பார்க்கலாம்.  

நந்தி தேவர் ஏதோ வேலையாகப் பெருமாளைப் பார்க்க ஸ்ரீவைகுண்டம் போனவர்,  வாசலில் காவலுக்கு இருக்கும் ஜெய விஜயர்களிடம் உள்ளே போக அனுமதி கேட்கணுமா இல்லையா? பின்னே எதுக்குக் கேட் கீப்பர் வச்சுருப்பது?  அட்லீஸ்ட், நான்  வரலாமான்னு எஜமானிடம் கேட்டுச் சொல்லும் என்றிருந்துருக்கப்டாதோ?  சட்னு மூடி இருக்கும் கதவைத் திறந்து 'ரைட் ராயலா ' உள்ளே போக முற்பட்டதும், காவலாளிகளுக்குக்  கோபம் வந்துருச்சு. இவுங்களுக்கும் தெய்வாம்சம் இருப்பதால்  தெய்வசக்தியும் இருக்கு. அனுமதி கேட்காமல் உள்ளே போக நினைத்த நந்திக்கு  சாபம் கொடுத்தாங்க. என்னன்னு?  உன்  உடல் எப்போதும் அளவுக்கதிகமான உஷ்ணத்தில் தகிக்கட்டும். (105டிகிரி ஜுரமா? )

இப்படி ஆகிப்போச்சேன்னு கயிலைக்கு ஓடுனவர், தன் எஜமானிடம் நடந்ததைச் சொன்னதும், 'நீ செஞ்சது தப்புத்தாம்ப்பா.  போய்  செண்பகாரண்யத்தில் மஹாவிஷ்ணுவைத் தியானத்தில் இருத்தி  தவம் செய்து கொண்டு இரு.  அவர் மனம் இரங்கி உனக்கு சாபவிமோசனம்  கொடுப்பார்'னு  அனுப்பி வச்சுருக்கார். அதே மாதிரிதான் ஆச்சு.


கதைதான் வெவ்வேறே தவிர  நந்தி வந்து தவம் இருந்த சம்பவம் உண்மை என்றாற்போல்  கருவறை சுவத்துலே , நம்ம நந்தி சார்  பெருமாளை  வணங்கும் புடைப்புச் சிற்பமுண்டு. மனுஷ்ய ரூபத்தில் இருக்கார்.

(போனமுறை, பட்டர் ஸ்வாமிகள் காமிச்சு ஒன் லைன் கதை சொன்னார். நாந்தான் கொஞ்சம் துல்ஸீ'ஸ் மசாலா தூவி டெவலப் பண்ணினேன்.  இப்பதான் சந்நிதியில் அவரைக் காணோமே....) 

ஆழ்வார்கள் பதினொரு பேரின் சந்நிதியை அடுத்து  நம்ம ராமானுஜரும் , ஆளவந்தாரும்  இருக்கும் சந்நிதி.   ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருநக்ஷத்திரங்கள் பட்டியல் ஒரு இடத்தில். தொட்டடுத்து பல்லவ அரசர் நந்திவர்மனும்,  தேவிகளும் சிலா ரூபத்தில்.  அவருடைய தேவியர் ஒருவர் கம்போடிய இளவரசி ராணி காம்போஜவல்லி !
அப்போ....  சோழர் காலத்துக்குப்பின் பல்லவர் ஆட்சியில் கோவிலை விஸ்தரிச்சுருக்கலாம்னு தோணுது. குழந்தைவரம் வேண்டி வந்தார்னு கோவில் குறிப்பு ! 

நம்ம ஆஞ்சு ஒரு தனி சந்நிதியில் !  

தாயார் சந்நிதிக்குப் போனோம். ஸ்ரீ செண்பகவல்லித்தாயார். கம்பிக்கதவினூடே தரிசனம்!
நம்ம ஆண்டாளம்மா தனிச் சந்நிதியில். (மனசுக்குள் தூமணிமாடம் ஆச்சு)
சின்னப்பசங்கதான் கோவிலில் விளையாடிக்கிட்டு இருந்தாங்க.   மத்தபடி கூட்டம் இல்லை. கோவிலும் சின்னக்கோவில்தான். 

 திரும்பிப் போகும்போது, பாதி வழியில் தான், மடத்தாண்டை போகலையேன்னு நினைப்பு வந்தது.  இந்த முறை நமக்கில்லை..... ப்ச்....

சரி நேரா ராயாஸ் போயிடலாமுன்னுப் போனவங்களை, இங்கே வந்துட்டுப்போன்னு யாரோ கூப்டமாதிரி இருந்தது.............

தொடரும்......... :-)