வழியிலே எங்கியாவது 'நம்ம எஞ்சினுக்கு பெட்ரோல் ' ஊத்திக்கலாமேன்னு நினைச்சது நடக்கலை. நேரா சக்ரபாணி கோவிலுக்குத்தானே போய் இறங்கினோம். அங்கே தரிசனம் முடிச்சு அடுத்த கோவில்னு வந்தப்பக் கோவில் வாசலையொட்டியே நமக்கான 'பெட்ரோல்பங்க்' இருந்தது. நல்ல கூட்டம் வேற ! அப்ப நல்லாத்தான் இருக்கணும். கோபுரவாசலுக்கு எதிர்ப்புறம் கிடைச்ச பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திட்டு எதிர்வாடைக்குப் போனோம்.
பொங்கள், கருவப்பிள்ள சாதம் எல்லாம் கூட விக்கறாங்களாம் !!!!
அட ராமா.......
எனக்கானது கைக்கு வரும்வரை பக்கத்துக்கடையில் நின்னு வேடிக்கை பார்த்தேன். அரிசி வச்சுருக்கும் ட்ரம் பார்த்ததும்.... கொசுவத்தி பத்திக்கிச்சு. ஒரு பதினாறு வருஷத்துக்கு முந்தி இதே கடைக்கு வந்துருக்கேன்.
கடைக்காரரும் இப்போ ஃப்ரீயாத்தான் உக்கார்ந்துருந்தார். கடையின் ஒரு பகுதியில் கம்ப்யூட்டர் டேபிள் வச்சுருந்தாங்க. மகன் செட்டப் செஞ்சு கொடுத்தாராம். சுமார் நூறு வருசமா அரிசி வியாபாரந்தானாம். ஒரு ஏழெட்டு தலைமுறைன்னார். இப்போ மகன்கள் ரெண்டுபேரும் கம்ப்யூட்டர் படிப்பெல்லாம் படிச்சுட்டு வேற வேலையில் இருக்காங்களாம். தனக்கப்புறம் கடை என்னவாகுமோன்ற கவலை இருக்குன்னார்.
"கவலைப்படாதீங்க.... மனுச உயிர்கள் இருக்கும்வரை அரிசிக்கடைக்கு மதிப்பு குறையவே குறையாது. நல்ல ஆட்களாப் பார்த்து வேலைக்கு வச்சுட்டு, நீங்க மேற்பார்வை பார்த்துக்குங்க. ரொம்ப ஓடியோடி உழைப்பதைக் கொஞ்சம் குறைச்சுக்கலாம். எதுக்குக் கவலைபடறீங்க? அந்த ராமன் பார்த்துக்குவான்"
ஏற்கெனவே ஒருமுறை இந்தக் கடையைப் பத்தி எழுதியிருந்தேனே.... அது இங்கே....
https://thulasidhalam.blogspot.com/2009/03/5.html
அந்தப் பதிவில் இருந்த கடையின் படத்தைக் காமிச்சதும் சந்தோஷப்பட்டார்.
மேலே : முதல் படம் அன்று ரெண்டாவது இன்று !
இதுக்குள்ளே நம்ம டீக்கடை சமாச்சாரமும் முடிஞ்சது. அடுத்தாப்லே இருக்கும் கோவிலுக்குள் போனோம்.
போனமுறை பார்த்ததுக்கு இன்னும் மோசமாகத்தான் இருக்கு....... கருவறைக் கம்பிக்கதவை சாத்தப்போன பட்டர்ஸ்வாமிகள், நம் பேச்சு சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவர், ஒரு சின்ன வேலை இருக்கு..... பத்தே நிமிஷத்துலே திறந்துருவேன். அவசரம் இல்லைதானே? ன்னார்.
ப்ரகாரம் சுத்திட்டு வர்றோமுன்னதும் சாவிக்கொத்தைத் தோளில் தூக்கிப் போட்டுக்கிட்டு வேகமாப் போனார். ஒரே ஒரு பட்டர் ட்யூட்டியில் இருப்பதால் அங்கே இங்கேன்னு ஓடவேண்டியிருக்கு போல..... நாங்க உள்ப்ரகாரம் நோக்கிப்போனோம். மூணுபக்கமும் முழு ராமாயணம் இருக்கும் இடம். நிம்மதியா உக்கார்ந்து சித்திரங்களைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். நம்மவருக்கு முந்தி வந்தது அவ்வளவா ஞாபகம் இல்லையாம் ! 'ஒரு சுத்து சுத்திட்டு வாங்க'ன்னேன்.
சந்நிதி நோக்கிப்போனோம். பட்டர்ஸ்வாமிகள் வந்திருந்தார். தீபாராதனை ஆச்சு. வீணை வாசிக்கும் ஆஞ்சிக்கு ஒரு கூடுதல் கும்பிடு ! இது தென்னக அயோத்தி என்பதால்..... வடக்கக அயோத்தி போய் வந்த விவரத்தையும், கூடவே குழந்தையை இங்கேயும் கொண்டுவந்துருக்கேன் என்ற சமாச்சாரத்தையும் ரகஸியமா ராமனுக்குச் சொல்லிவச்சேன். அவனுக்குத் தெரியாதா என்ன ?
ஒரு முதிய பக்தர் கோவிலுக்குள் வந்தவர் பாடினார். வயசு ஒரு தொன்னுத்தியாறுன்னு சொன்ன ஞாபகம். தினமும் கோவிலுக்கு வர்றவராம். நல்லாப் பாடறாரேன்னு இன்னும் கொஞ்சம் பாடுங்கன்னு கேட்டுச் சின்னதா விடியோ க்ளிப்ஸ் ஆச்சு. நேத்துதான் ஃபேஸ்புக்கில் போட்டுவச்சேன். கீழே இருக்கும் மூணு சுட்டிகளும் பெரியவர் பாட்டுகளுக்கே! (எல்லாமே ஒரு
நிமிட்டுக்குக் குறைவுதான்! )
https://www.facebook.com/share/v/1C7F4Lp8MA/
https://www.facebook.com/share/v/16WFjchcEc/
https://www.facebook.com/share/v/161d9doSRL/
கோவில் முன்மண்டபத்தூண்களில் அற்புதமான சிற்பங்கள் இருந்தாலும் சரியான வெளிச்சம் இல்லாததால் ஒன்னும் க்ளிக்கலை.
கோபுரவாசலுக்கு இந்தாண்டை ரெண்டு பெண்கள் பெரிய தூக்குவாளிகளில் வெள்ளைக்கடலை சுண்டல் கொண்டுவந்து பக்தர்களுக்குப் ப்ரசாதமாக் கொடுக்கறாங்க. நமக்கும் கிடைச்சது. என்ன விசேஷமுன்னு கேட்டேன். அமாவாசை என்பதால் ப்ரஸாத விநியோகமாம். எல்லா அமாவாசைக்குமா ? ஆமாம்னு சொன்னாங்க.
சுடச் சுடக் கையில் இருந்த சுண்டலை, நம்ம விஜிக்குக் கொண்டுபோய்க் கொடுத்தேன்.
தடுக்கி விழுந்தால் எதாவதொரு கோவில் வாசலில்தான் விழுவோம் என்ற கோவில்நகரில் அடுத்தடுத்து இருக்கும் கோவில்களில் முடிஞ்சவரை தரிசனம் கிடைச்சால் நல்லதுதானே?
இதோ வந்தேன்.... சார்ங்கா............
தொடரும்.......... :-)
6 comments:
அருமை நன்றி
ராமதரிசனம் கிடைத்தது. ராமாயண சித்திரங்கள் நன்றாக உள்ளன.
இந்த வயதிலும் பாடும் வயோதிபர் எல்லாம் ராமா உன் அருளே.
முன்னைய உங்கள் பகிர்வில் ஓவியங்களை பார்த்ததாகவும் நினைவு வருகிறது.
அடுத்து சாரங்கபாணி கோவிலா? பெரியவர் பாடல்களை முகநூலில் கேட்டு ரசித்தேன். எந்தரோ மகானுபவலு... இவரையும் சேர்த்து.
வாங்க விஸ்வநாத்,
நன்றி!
வாங்க மாதேவி,
எப்போது கும்பகோணம் போனாலும் இந்தக் கோவிலைத் தவறவிடுவதே இல்லை.
பெரியவர் நல்லா இருக்கணும்!
வாங்க ஸ்ரீராம்,
ஆமாம். சார்ங்கனை தரிசிக்காமல் விட முடியுமோ ?
Post a Comment