Monday, March 30, 2020

மம்மி தரிசனத்துக்குப் போன மம்மி (பயணத்தொடர் 2020 பகுதி 33 )

நைல் நதிப் பாலத்தைக் கடந்து ஒரு  மணி நேரப் பயணம் போனதும்தான் .....  ப்ரமிட் கண்ணுலேயே பட்டது.  போகும் வழி ஆரம்பத்துலே நல்லாதான் இருக்கு. மெயின் ரோடை விட்டு மண்ரோடில் போகும்போது... எக்கசக்கமான   ஈச்சமரங்கள்.
ரெட்டைக்கழுதை பூட்டிய வண்டிகள்தான்,  அங்கேயும் இங்கேயுமா .... கழுதை பொதி சுமக்கும்னு ஒன்னாப்புப் புத்தகத்துலே நாம் படிச்சது ஞாபகம் இருக்கா ?
கடந்துவந்த கிராமத்து வீடுகள் எல்லாம் மண்கலரில்தான் இருக்கு. பளிச்ன்னு ஒரு பெயின்ட் அடிச்சதைப் பார்க்கவே இல்லை....  பாலைவனத்துக்கலரில்தான் எல்லாமே....   இதே கலரில் இருந்த ஒரு கட்டடத்தாண்டை வண்டி நின்னதும் ரெய்னா இறங்கிப்போய்  டிக்கெட் வாங்கி வந்து கொடுத்தாங்க.  ஆளுக்கு அறுபது   ஈஜிப்ட் பவுண்ட்.
(ஒரு பவுண்ட்.... எங்கூர்க் காசு   11 சென்ட்.  இந்தியக்காசுக்கு 4.75 ரூபாய். இப்போ எக்ஸ்சேஞ்சு ரேட் மாறி இருக்கணும் ) எங்கூர் பதினொரு சென்ட் என்றதைப் பத்து சென்ட்டுன்னு கணக்கு வச்சுக்கிட்டேன். அப்பதான் ஈஸி. பத்தாம் வாய்ப்பாடு சுலபம்:-)   எங்கே போனாலும் அது நம்மூர் காசுக்கு எவ்ளோன்னு கணக்குப் போடற புத்திமட்டும் மாறவே இல்லை. இந்தியாவை விட்டு வெளிநாடு வந்த முதல் சில வருஷங்கள்,  எத்தனை ரூபாய், எத்தனை ரூபாய்ன்னே கணக்குப் போட்ட மனசு,  அதுக்கப்புறம் மற்ற பயணங்கள் போக ஆரம்பிச்சதும் எத்தனை டாலர்னு எத்தனை டாலர்னு போட்டுக்கிட்டு இருக்கு.  இதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். எதாவது வாங்கும்போது  (குறிப்பா இந்தியாவில்) அதை டாலருக்கு மாத்தித்தான் நம்மவராண்டை சொல்வேன்.  சுலபமா இருக்க அம்பதுன்னு ஒரு கணக்கு. வகுத்துருவேன் :-)  சின்ன எண்ணா வருமுல்லே!  எல்லாம் 'நம்மவரு'க்கு ஒரு மனசமாதானம் கொடுக்கத்தான்.
இன்னும் கொஞ்சதூரம் போனதும் , கொண்டை தெரிஞ்சது.  இன்னும் கொஞ்சம் தூரம் போனதும்  ஒரு இடத்தில் நிறுத்திட்டு, 'அதோ பார்'னு கை காமிச்சாங்க ரெய்னா. தூரத்தில் ப்ரமிட்!  ப்ரமிச்சு நின்னேன், முழுசா ஒன்னு கண்ணு முன்னால் !
இது ஃபோட்டோ பாய்ன்ட். அதானே.... டூர் கைடுக்கு இதெல்லாம் அத்துபடி இல்லையோ!   க்ளிக்ஸ் ஆச்சு.  கிட்டக் கொண்டாந்து பார்த்தால் பாதி உயரத்தில்  உள்ளே போகும் வாசல் இருக்கு!  மலையில் ஏறிப்போறாப்போல ஒத்தையடிப் பாதை வேற !

அங்கே நின்னு இந்தப்பக்கம் பார், அந்தப்பக்கம் பார்னு சுத்திவரக் கை காமிக்கறாங்க ரெய்னா....  சின்னதும் பெருசுமா  அங்கங்கே கூறு கட்டி வச்சாப்லெ.
ஒரு பெரிய கடற்கரையில்  பசங்க அங்கங்கே   மணல் கோட்டை கட்டி  விளையாடிட்டு அப்படியே விட்டுட்டுப் போறதைப்போலத்தான்.... கொஞ்ச நேரத்துலே நாம் திரும்பி வந்து பார்த்தால்  காத்துலே  கோட்டையெல்லாம்  கரைஞ்சு போயிருதுல்லே? இங்கே  இத்தனை வருஷம் பாலைவனத்துலே காத்தடிக்காமலா இருந்துருக்கும்? எப்படிக் கரையாம நிக்குது?  அதிசயம்தான். 
இப்போ பயணிகள் வசதிக்காகத் தார்ரோட் போட்டு வச்சுருக்காங்க. காத்தடிச்சுக் காத்தடிச்சு  அதிலும் மண் படிஞ்சுதானே இருக்கு.

இப்படி ஒன்னு கட்டணுமுன்னு 'யோசிச்சு டிஸைன் பண்ணது' யாராக இருக்கும்?  சரிவருமான்னு பார்க்க  முதலில் சின்னதாச் செஞ்சு பார்த்துருக்காங்க. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணிக் கடைசியில் பிரமாண்டமாக் கட்டிட்டாங்க, இல்லே?

இல்லே....  ஒருவேளை  இதெல்லாம்  மனிதக்கைகளால் கட்டுனவை இல்லை.  மேலோகத்தில் இருந்து வந்தவர்கள் கட்டுனதுன்னு சொல்லும் 'கதை' கூட நெசம்தானோ? நாம் வேணுமுன்னா.... நம்ம முப்பத்துமுக்கோடி தேவர்கள் இறங்கி வந்து கட்டி விட்டாங்கன்னு வச்சுக்கலாம். ஆர்க்கிடெக்ட் நம்ம மயன் !

இப்போ நாம் பார்க்கும் ப்ரமிடுகள் கூட்டத்தை  Dahshur Pyramids னு சொன்னாங்க. சரியான உச்சரிப்பு என்னன்னு புரியாததால்  இப்படி வர்றதையெல்லாம் இங்லிஷில் எழுதினால் போச்சு. முழிபெயர்க்கிறேன்னு கண்டபடி உச்சரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லையாக்கும், கேட்டோ!
இதே டோடில் (! ) இன்னும் போறோம்... அஞ்சாறு நிமிசத்துலே  ஒரு நுழைவு வாயில். ஆர்மி நிக்குது. கொஞ்சம் உயரமான மேடையில் அந்தக்காலத்து ஆசாமி, சம்மணம் போட்டு உக்காந்து படிச்சுக்கிட்டு இருக்கார்.  அஞ்சாயிரம் வயசு மாதிரி தெரியலை. 
அவரைக் கடந்து இன்னும் ரொம்ப தூரம் போனதும்  இன்னொரு இடத்தில்  கல்பதிச்ச பாதை. இங்கே வண்டியை நிறுத்திக்கலாம்.  ப்ரமிட் ஃபோட்டோ ஷூட் ஆச்சு.

இதுதான் கார்பாதையில் நாம் போகும்போது கிட்டக்க இருக்கும் தூரம். இதுவே ஒரு கிமீ இருக்கும்.  இன்னும் கிட்டக்கப் போயிருவாங்களோன்னு  கல்தடை போட்டு வச்சுருக்காங்க.  இந்த மணாந்தரத்துலே ப்ரமிடுக்குக் காவல் காக்குது ஒரு செல்லம் !   'உள்ளே மம்மி இருக்கா'ன்னு கேட்டதுக்கு இல்லைன்னு சொன்னாங்க ரெய்னா.  உள்ளே போய்ப் பார்க்க முடியுமான்னால்....   இல்லையாம். அப்போ அந்த  நடுவாசல்?  ஆராய்ச்சியாளர்களுக்கானவையாம்!  இப்போ   யாரும்  போகமுடியாது.

அப்ப இது அவ்ளோதானா ?  ஆமாம்.  அதே சாலையில் திரும்பிப்போறோம். போகும்போதும் வரும்போதும் ஆர்மி, கை அசைச்சது.  பயணிகள்/ ப்ரமிடுகள் பாதுகாப்புக்கு வேண்டி இங்கெல்லாம் ஆர்மி காவல் இருக்கு. நாட்டுக்கு பணம் சம்பாரிச்சுக் கொடுக்கும் இடங்களாச்சே!
ஒரு இடத்தில் ஒரே மாதிரிக் கட்டடங்கள் ஏழெட்டு ரொம்பத் தொலைவில்  இருப்பது கண்ணில் பட்டது.  ஆர்மி தங்கும் இடங்கள்.  குடும்பமாவா இருக்காங்க ? ஐயோ.....   ஒன்னுமே சுத்துவட்டாரத்தில் இல்லையே..... 

இந்த ஏரியா எல்லாமே சஹாரா பாலைவனம், கேட்டோ !!!  எவ்ளோ பெருசாம்?  அதிகம் ஒன்னுமில்லை.....9.2 மில்லியன்  சதுர கிமீ !!!! 1100 மைல் அகலம், 3000 மைல் நீளம்..............  ஹைய்யோ......

ஈச்சமரக் காடுகள்,  இதுக்கிடையே போகும் ரோடுகள், ரெயில்வே லைன், சின்னச் சின்ன கிராமங்கள்,  அதைவிடச் சில பெரிய ஊர்கள்னு  அரைமணி நேரப்பயணத்தில் இருக்கோம்.


எங்கே பார்த்தாலும் கார்பெட் கல்லூரிகள் !  ஓரியன்டல் கார்பெட் நெசவு செய்யக் கத்துக் கொடுக்கறாங்க.  சில இடங்களில் விற்பனையும் உண்டு. முக்கால்வாசி ஏற்றுமதிதானாம்!
ஒரு பதிமூணு கிமீதூரம் போனதும், டிக்கெட் வாங்க இறங்கிப்போனாங்க ரெய்னா.  நம்ம டூரில்  எல்லா இடங்களுக்கும்  வாங்க வேண்டிய  நுழைவுச் சீட்டுகளுக்கு நாம் தனித்தனியாப் பணம் கட்ட வேண்டியதில்லை. டூர் கம்பெனியே  எல்லாத்துக்கும் சேர்த்தே மொத்தமா நம்மாண்டை இருந்து முதலிலேயே வசூலிச்சுருது.

சரி, வாங்க என்னன்னு பார்க்கலாம்.

தொடரும்.......... :-)

Friday, March 27, 2020

அதிசயம் பார்க்கும் ஆசையில்........... (பயணத்தொடர் 2020 பகுதி 32 )

அடுத்த ஃப்ளைட்டுக்காகக் காத்திருந்தோம். அதே எமிரேட்ஸ்தான். அதே ஸீட் நம்பரும் கூட!  ரெண்டு நாப்பதுக்கு போர்டிங் ஆச்சு.  மூணுமணிக்கு டேக் ஆஃப்.  இங்கே எக்ஸ்போ நடக்கப்போகுதில்லையா.... எல்லா ப்ளேனும்  விளம்பரம் ஒட்டிக்கிட்டு நிக்குதுகள்.


பொதுவாப் படம் பார்க்கறதில்லை என்பதால்  கொஞ்சம் தூங்கினேன். கொஞ்ச நேரம் நோட்புக்கில் கதை வாசிப்பு, இல்லைன்னா ஃப்ளைட் பாத்ன்னு போகுது. நாலேகால் மணி நேரம் இப்படிப் போரடிச்சுக்கிட்டு இருக்கணும். 'நம்மவர்' சினிமாவே சினிமான்னு.....
சாயங்காலம் தொழுகை நேரம் எப்போன்னும் சொல்றாங்க. அந்த அஞ்சு நேரத் தொழுகையை ஞாபகப்படுத்துறாங்க போல.
வேடிக்கை பார்த்துக்கிட்டே போகும்போதுதான் உறைக்குது நாம் பாலைவனத்துக்குமேலே பறக்கறோமுன்னு....
கய்ரோ நேரம் அஞ்சேகாலுக்கு  தரையைத் தொட்டது விமானம்.  குளிர்காலம் என்றபடியால்  சீக்கிரமே இருட்டிப்போயிருக்கு. இங்கே விஸா வாங்கிக்கணும்.  விஸா ஆன் அரைவல்.

இந்த ஊர் நம்ம பக்கெட் லிஸ்ட்டில் இருக்கறதுதான். நியூஸியில் இருந்து போனால்  ரொம்ப தூரமாச்சேன்னு யோசனையா இருந்தப்ப, 'நம்மவர்'தான்  சொன்னார்,  ஒரு இந்தியப் பயணத்தில்  ஒரு வாரம்  சென்னையில் இருந்தே போயிட்டு வரலாமான்னு....  அதுவும் நல்ல ஐடியாதான். ஒருவாரம்தானான்னு  முணுமுணுத்துக்கிட்டே சரின்னேன்.  விஸா விவரம் தேடுனப்பதான்  அங்கே இறங்கினதும் வாங்கிக்கலாம்னு தெரிஞ்சது.

(அந்த ஒரு  பயணம், இந்தப் பயணத்தில் வாய்க்கும் என்பது  நமக்கு அப்போ தெரியாது.  சென்னையில் இருந்து டிக்கெட் புக் பண்ணினபிறகும்,  எனக்கு உடல்நிலை சரி இல்லையேன்னு  கேன்ஸல் பண்ணவான்னு இவர் கேட்டுக்கிட்டே இருந்தார். அரை மனசா இருந்துச்சு....)
எல்லா ஏர்ப்போர்ட்டுகளும் புதுவருஷத்தை வரவேற்க ரெடியா இருக்குதுகள்.
விஸா காசைக் கட்டி , அதை வாங்கிக்கிட்டு மத்த ஃபார்மாலிட்டீஸ் முடிச்சு வெளியே வரவே முக்கால் மணி நேரமாச்சு. நமக்கு செக்கின் பேக்ஸ் இல்லாததால் அதுக்குக் காத்திருக்கும் நேரம் மிச்சம். ஹொட்டேல் போறதுக்காக ஏற்கெனவே புக் பண்ண டாக்ஸி நமக்காகக் காத்திருந்தது.
 ஏர்ப்போர்ட்டில் இருந்து நாம் தங்கப்போகும் ஹொட்டேல், சுமார் இருபத்தியொரு கிமீ தூரத்தில், சிடிக்குள்ளே இருக்கு.  ஒருமணி நேரத்துக்கும் அதிகமான பயணம். பயங்கர ட்ராஃபிக் வேற.

 வர்றவழியில் ஒரு சுரங்கப்பாதையில்  போறோம்.  2.6 கிமீ  நீளமாம்.  ஆனால் என்னமோ அது பாட்டுக்குப் போய்க்கிட்டே இருந்தமாதிரி தோணுச்சு. வெளிவேடிக்கை இல்லை பாருங்க.....
ஒருவழியா நம்மை ஹொட்டேலில் கொண்டு சேர்த்தார் அஹ்மத்.  ராம்ஸேஸ்  ஹில்டனில் தங்கறோம். இந்த ஒரு வாரமும் இங்கேதான். Hotel Ramses Hilton, Cairo. ரிவர் வியூ வேணுமுன்னு கேட்டே புக் பண்ணி இருந்தோம். முப்பத்தியாறு மாடி இருக்கும் இங்கே நமக்குப் பதினெட்டாம் மாடியில் அறை.  நமக்கு வைஃபை  ஃப்ரீயாம். மனசு சமாதானமாச்சு :-)

உள்ளே போனதும், அந்த ரிவர் வியூ என்னமாத்தான் இருக்குன்னு பால்கனிப் பக்கம் பார்த்தால் மூச்சு நிக்காத குறை !  வாவ்!
நைல் நதியைப் பார்க்கிறேன் என்றதை என்னால் முதலில் நம்பவே முடியலை!  எத்தனை நாள் கனவு !
நைல்நதிப் பாலத்தில்  ட்ராஃபிக் ஜாம் ஆகி இருக்கு.  வேலை முடிச்சு வீட்டுக்குத் திரும்பும் கூட்டம்!
நதியின் எதிர்க்கரையில் ஏகப்பட்ட பெரியபெரிய அடுக்குமாடிப் படகுகள். அதெல்லாம் ரெஸ்ட்டாரண்டுகளாம்.  அப்புறம் சின்னச் சின்னப்படகுகள் இங்கேயும் அங்கேயுமாச் சுத்திக்கிட்டு இருக்குதுகள். டின்னர் க்ரூஸ்  என்ற வகையில் சில பெரிய படகுகள்....
அகலமா இருக்கும் நதியின் தண்ணீர், ஓடாம நிக்கறதைப்போல இருக்கு.
ராச்சாப்பாடுக்கு ஒரு பீட்ஸா, ரூம் சர்வீஸில் சொல்லியாச்சு. ரொம்பப் பெரூசா ஒன்னு வந்தது.....  நைலைப் பார்த்துக்கிட்டே சாப்பிட்டால் நல்லாத்தான் இருக்கு :-)

காலையில் எட்டுமணிக்கு நாம் ரெடியா இருக்கணும்.  அதுக்குமுன்னால் போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கணும். எட்டுமணின்றதை எட்டரை ஆக்கலாமான்னு கேட்டதுக்கு சரின்னுட்டாங்க.

நமக்கான டூர் கைடு, கார், ட்ரைவர் எல்லாம் வயாடர் கம்பெனி ( Viator ) ஏற்பாடு. போனமுறை நம்ம க்ராண்ட் கேன்யன் பயணத்துக்கு இவுங்களிடம்தான்  புக் பண்ணினோம். அருமையா நம்மைக் கூட்டிப்போய்க் கொண்டுவந்தாங்க. நல்ல  டூர் கம்பெனி. அதான் இப்பவும்  வயாடரில் புக் பண்ணினோம்.
காலையில்  கண் முழிச்சதும்  நைல் தரிசனம்!  ராத்ரியெல்லாம் ஜிலுஜிலுன்னு மின்னிக்கிட்டு இருந்த  எதிர்சாரி, இப்போ 'நான் அப்படியெல்லாம் இல்லையாக்கும்' என்றதுபோல் அமைதியா அடக்கமா  இருக்கு!  கீழே சாலையிலும் பாலத்திலும் போக்குவரத்து....  ஊமைப்படம் போல் பார்க்கலாம் :-)

ரெடியாகி, கீழே ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குப்போனால்......   ஐயோ...........  அப்படி ஒரு கூட்டம். பஃபேதான்.  உக்கார்ந்து சாப்பிட இடமே  இல்லை.  முக்கால்வாசிப் பயணிகள், இந்தியர்கள்.  உண்மையில் இந்தியாவில் இருந்து  இப்படிக் குழுவாகச் சுற்றுலா வந்தால்  கொஞ்சம்  விலை மலிவுதான்.  வாராவாரம்  டூர் இருக்கு. நமக்கு அப்படிப் போகணுமுன்னா ... முன்னாலேயே  புக் பண்ணி இருக்கணும்.  நமக்குத்தான்  நேரமும் நாளும் ஒத்துவர்றதில்லை.

ஒரு வழியா இடம் கிடைச்சு, சாப்பிட்டு முடிச்சுட்டு, கெமெரா, பேக்கப் பேட்டரி, எல்லாம் எடுத்துக்கிட்டு, நிறைய நடக்கவேண்டி இருக்கும் என்பதால் ஷூஸ்  மாட்டிக்கிட்டு எட்டரைக்கு அஞ்சு நிமிட் இருக்கும் போது கீழே  வரவேற்புக்கு வந்துட்டோம்.  நம்ம டூர் கைடு வந்துட்டாங்க. அறிமுகம் ஆச்சு. கிளம்பிட்டோம். ரெய்னான்னு பெயர் சொன்னாங்க.  ட்ரைவர் பெயர் இஸ்லாம். எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமா இருந்தது.

உலக அதிசயங்கள்  ஏழுன்னுதான் அந்தக் காலத்தில் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அப்புறம் புராதன  உலகம், புதிய உலகம், இடைப்பட்ட காலத்து உலகம், கின்னஸ் புக்கிலே அந்தந்த வருஷத்துக்கான  ஏழு அதிசயம், பத்து, இருபத்தியஞ்சுன்னு  ஏகப்பட்ட அதிசயங்களாக் கிடக்கு உலகமெல்லாம்.

இந்த அதிசயங்களில் நாமும் ஏதோ கொஞ்சம் பார்த்துருக்கோமுன்னு சொல்லிக்கலாம். ஆனா இப்பப் பார்க்க வந்துருக்கறது கொஞ்சம் மூத்த அதிசயம்.

தொடரும் :-)


Wednesday, March 25, 2020

மெட்ராஸ், ஃப்ரம் பாண்டிச்சேரி .... அப்புறம் ? (பயணத்தொடர் 2020 பகுதி 31 )

பாண்டிச்சேரியில் இருந்து கிழக்குக் கடற்கரைச்சாலை வழியே நேராச் சென்னைதான். மாமல்லபுரத்தாண்டை,  முருகனுக்கு ஒரு டீ ப்ரேக். எனக்கு சுசிலா சிற்பக்கலைக்கூடம் :-)  சிலைகளைப் பார்க்கும்போது ஆசையாத்தான் இருக்கு!  நியூஸிக்கு அனுப்பி வைப்பாங்கதான். ஆனால் இன்னும் இங்கே கோவில்  கட்டலையே.... 

பெரிய சிற்பங்கள் கூடவே சின்னச் சின்ன வீட்டு உபயோகச் சாமான்களும்  செஞ்சு வச்சுருக்காங்க. அத்தனைக்கும் ஆசைப்பட்டு, ஒரு பெருமூச்சோடு கிளம்பி லோட்டஸ் வந்து சேர்ந்தப்ப மணி அஞ்சே முக்கால்.   முருகனை அனுப்பிட்டு அறைக்குப் போனோம்.  கீழே ஸ்டோரேஜில் போட்டு வச்ச பெட்டிகள் திரும்ப வந்தன.


துவைக்கவேண்டிய துணிகளை எல்லாம் எடுத்துத் தனியா வச்சோம். லோட்டஸில் என்ன ஒரு கூடுதல்  வசதின்னா.... காலையில் லாண்ட்ரிக்குக் கொடுக்கும் துணிகள், அன்று மாலையே சுத்தமாத் திரும்பி வந்துரும்.    மற்றவைகளை நாமே  இங்கே துவைச்சுருவோம். 'நம்மவர்' அவருடைய   எல்லாத்துணிகளையும் லாண்ட்ரிக்கு அனுப்புவார்.

அடுத்த வேலை என்னன்னு பார்க்கணும்!  சென்னைக்குன்னு சில வேலைகள் எப்பவுமே இருக்கே. டெய்லர் கடைக்குப்போய் தைக்கக் கொடுத்தவைகளை வாங்கினதும்,  கீதாவில் ராச்சாப்பாடு,  பாண்டிபஸாரில் சின்னதா துப்பட்டா ஷாப்பிங்  எல்லாம் ஆச்சு. கைராசின்னு ஒரு சின்னக்கடை இருந்தது யாருக்காவது நினைவிருக்கோ?  அந்தக் காலத்துலே மேட்சிங் ப்ளவுஸ் ஸ்பெஷலிஸ்ட் ! அது இப்போ  அழகான பெரிய மாடிக் கட்டடம் !  அவுங்க கொடுக்கும் பளாஸ்டிக் பைகள் மக்கும் தன்மை உடையதாம்.  நல்லது !
மறுநாள் எங்கேயும் போகலை !!!!!   கொஞ்சம் நல்லா ரெஸ்ட் எடுக்கணும்.  சாப்பாடெல்லாம் இங்கே லோட்டஸ் க்ரீன்வேஸில்தான்.  திரும்பப்பெட்டிகளை அடுக்கும் வேலை. அடுத்த பயணத்துக்கு ஒரு வாரத்துக்குள்ளவைகளை எடுத்துத் தனியா வச்சுட்டு, லோட்டஸில் வச்சுட்டுப் போகும் பெட்டிகளில் மற்றவைகளை அடுக்கினோம். சாயங்காலம் லாண்ட்ரியில் இருந்து வந்தவைகளில்  தேவையானதை எடுத்துக்கிட்டார் 'நம்மவர்'.   காலையில் ஒரு ஏழே காலுக்குக் கிளம்பணும்.  ப்ரேக்ஃபாஸ்ட் ஏழரைக்கு என்பதால்  காலையில் ஒரு ஆறேமுக்காலுக்கு  எதாவது கிடைக்குமான்னு ரெஸ்ட்டாரண்ட் மேனேஜரிடம் பகல் சாப்பிடும்போது கேட்டு வச்சதில் 'சரி'ன்னார்.

காலையில்  சீக்கிரம் எழுந்து கடமைகள் முடிச்சு, பெட்டிகளை ஸ்டோரேஜுக்கு அனுப்பிட்டு கீழே ப்ரேக்ஃபாஸ்டில் எட்டிப் பார்த்தால்  இட்லியும் காஃபியும் கிடைச்சது. இது போதுமே நமக்கு !

ஏழு மணிக்கு முருகன் வந்துட்டார். ஏர்ப்போர்ட் ட்ராப் :-) ஏழே முக்காலுக்கு இன்ட்டர்நேஷனல் ஏர்ப்போர்ட் போயாச்சு. ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சு,  காத்திருக்கோம்.  ஒரு ம்யூரல் பார்த்ததும் நம்ம வித்யா சுப்ரமணியன்  நினைவு வந்தது உண்மை!

ஒன்பது இருபதுக்கு போர்டிங் ஆச்சு.  இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிடும் !  இதுதான் முதல்முறை எமிரேட்ஸில் போறேன்றதால்  ரொம்ப எதிர்பார்ப்புடன் இருந்தேன்.
  அப்படி ஒன்னும் பிரமாதமா இல்லை.....  ரெண்டு வரிசைகளுக்கிடையில் இடைவெளி (லெக்ரூம் ) கொஞ்சம் அதிகம்.

சென்னையா இது ? எந்த இடம் ? 

கிட்டத்தட்ட நாலரை மணி நேரப் பயணத்தில்  துபாய் போய்ச் சேர்ந்தோம்.   அடுத்த ஃப்ளைட்டுக்கு ரெண்டு மணி, இருபது நிமிட்ஸ்  காத்திருக்கணும்.

எனக்குக் கொஞ்சம் நகைக்கடைகள் பார்க்கணும்னு இருந்ததுதான். ஆனால் ட்ரான்ஸிட்டில் எங்கே இருக்குன்னு தெரியலை. 'நம்மவர்' ஏற்கெனவே  இங்கே போய் வந்தவர்தானேன்னு கேட்டதுக்கு, அதெல்லாம் அரைவலில்தான்னு அடிச்சுவிட்டார். பயமா இருந்துருக்கும் போல :-)


நல்ல பெரிய ஏர்ப்போர்ட். நடந்து நடந்து  ட்ரான்ஸிட் லவுஞ்சுக்குள் போகும்போதே  கால் வலி ஆரம்பம்.

தொடரும்..... :-)