Monday, March 09, 2020

யானைக்கு பதிலாப் பூனை....... (பயணத்தொடர் 2020 பகுதி 24 )

அடாது மழை பெய்தாலும் விடாது கோவிலுக்குப் போயே ஆகணுமுன்னு ஒத்தைக் காலில் நின்னேன்.  அதுவும் இருட்டுமுன் போகணும். எத்தனை முறை பார்த்தாலும், மனநிறைவே இல்லாத கோவில்னு சொன்னால்  இதுதான்.   கொட்டிக்கிடக்கும் அழகை, எத்தனை முறை பார்த்தாலும்  சலிப்பு வரலையே...   'அதைப் பார்க்கலையே.... இதைப் பார்க்கலையே'ன்னுதான் எப்பவும்.... போய் வந்தபின் புலம்பல்.


கோவில் வாசலில் இறங்கி மழையினூடாகவே உள்ளே போறோம்.  மராத்தா வாசலுக்குமுன் வழக்கம்போல் கடைகள்.   பூ.........  வர்றப்ப  வாங்கிக்கணும்.... இந்த வாசலுக்கு ரெண்டுபக்கங்களிலும்  சின்ன மாடங்களில்  புள்ளையாரும் முருகனும்!  நின்ற கோலப் புள்ளையாரை இப்படிக் கோலம் பண்ணி வச்சுருக்காங்க.
உள்ளே நுழைஞ்சு வலப்பக்கம் கொஞ்சதூரத்தில் இருக்கும்  காலணி பாதுகாப்புக்குன்னு இருக்கும் இடத்தில் செருப்பை விட்டுடலாம். அங்கேயே ஒரு பொம்மைக்கடை வச்சுருக்காங்க. அழகு பொம்மைகள் ஆனால் எதுவும் வாங்கிக்கலை.


ராஜராஜன் வாசல் வழியா உள்ளே நுழையறோம். சாமி குடையும், பூரணகும்பமுமா சின்னக்கூட்டம் ஒன்னு  காத்திருக்கு.  இருக்கட்டும் இருக்கட்டும்.... நான் வரப்போறேன்னு உங்களுக்கு யார் சொன்னா?  நினப்புதான் பொழப்பைக் கெடுக்குது இல்லே?  :-)


ஆதீனம் வர்றாராம். அட!   வரட்டும் வரட்டும்....  பெரியவர்தான் போயிட்டாரே....   அதுக்கப்புறம் தாந்தான் வாரிசுன்னவரும் 'தனிநாட்டை சிருஷ்டிச்சு'க்கிட்டுக் காணாமப்போயிட்டார். அப்போ புதுசா யாரு வந்துருப்பான்னு நினைச்சுக்கிட்டே உள்ளே போயிட்டேன்.

எப்பப் பார்த்தாலும் அப்படியே கண்ணைக்கட்டும் காட்சி !  ஹம்மா........... எவ்ளோ பெரிய நந்தி ! நந்தி மண்டபத்துக்கு முன்னால் கொடிமரமேடை !




சுத்தி நடப்பது எதையும் கண்டுக்காதேன்னு நந்தியார் கண்ணைக் கட்டிவிட்டுருக்காங்க. அப்படியே முகத்தையும் சேர்த்து....  பாவம்....
கோவிலைப்பழுது பார்க்கும் பணி நடந்துக்கிட்டு இருக்கு. ஃபிப்ரவரி அஞ்சாம் தேதி கும்பாபிஷேகமாம்.  ஆஹா.... ரொம்பவே நல்ல நாள் அது இல்லையோ !!!!  அவதார தினம் :-)

மழையைக் கண்டுக்காம உள்ளேயும் நல்ல கூட்டம்தான்.  சரமழை நின்னு சின்னதா பன்னீர் தெளிக்குது இப்போ!  ஆளில்லாத ஒரு ஃப்ரேம்  கிட்டுமா?  ஊஹூம்... நோ ச்சான்ஸ்....  இருந்துட்டுப் போகட்டும்........வேற வழி?
முதலில் மூலவரை தரிசனம் செஞ்சுக்கிட்டு வந்துறலாம். கூட்டம் இல்லையேன்னு படிகளேறி உள்ளே போனால்  உள்ளேயும் நல்ல கூட்டம்.  கம்பித்தடுப்புகள் வச்சு அதன் வழியா சனம் ஊர்ந்து போகணும்.  முதல்லே ஒன்னும்  சரியாத் தெரியலை. போதுமான வெளிச்சமும் கிடையாது.... அப்புறம் பார்த்தா....  கருவறையை மறைச்சுப் பெரிய பலகைகளை வச்சுருக்காங்க.  மூலவர் தரிசனம் இல்லைன்னதும் 'என்னடா'ன்னு ஆகிப்போச்சு.
யானைக்குப் பதில் பூனையை வச்சாப்லெ சின்னதா குட்டியா ஒரு சிவலிங்கத்தை அந்தப் பலகைக்கு முன்னால் ஒரு மேடையில் வச்சு, பூஜை நடக்குது.  இங்கிருந்தே தரிசனம் ஆச்சு. திரும்பிப்போகலாமுன்னா நமக்குப்பின்னால் சனமோசனம்.  நல்லா நடுவிலே மாட்டிக்கிட்டோம்.  நமக்கு முன்னாலும் பின்னாலும் சபரிமலை போகும் பக்தர்கள்.

அப்பப் பார்த்து மண்டபவாசலில் நட்டநடுவில் இருந்த தடுப்பை நகர்த்தறாங்க. என்னன்னு பார்த்தா  பெரும்படை சூழ ஆதீனம் வந்துக்கிட்டு இருக்கார். அவருக்கான ஸ்பெஷல் தீப ஆரத்தி, பூஜை  எல்லாம் ஆச்சு. நாங்களும் இங்கிருந்தே  பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கிட்டோம்.   அவுங்க கிளம்பி வெளியே போனதும், நம்ம வரிசை நகர்ந்து, தரிசனம் முடிச்சு நாமும் வெளியே வந்தோம். பத்து ரூபாய் தக்ஷிணை போட்டால் (மட்டும்) விபூதிப் பொட்டலம் கிடைக்குது.
கோவிலை வலம் வந்துட்டுக் கிளம்பலாமுன்னு  சுத்தி வந்தால், சண்டிகேஸ்வரர் மண்டபத்தாண்டை (முருகன் சந்நிதி?) கொஞ்சம் கூட்டம்.   ஆதீனம் உள்ளே இருக்காராம்.  படம் எடுக்க அனுமதி இல்லையாம். காவல்துறையினர்  இவருக்குக் காவலாக் கூடி இருந்தாங்க.  ஒரு காவலரிடம் விசாரிச்சப்ப கோயமுத்தூர் ஆதீனம்னு சொன்னார்.  மதுரை, தருமபுரம், திருவாவடுதுறை தான் கேள்விப்பட்டுருக்கேன். கோயமுத்தூர் புதுசா இருக்கே.....

அப்புறம் தெரிஞ்சுக்கிட்ட சமாச்சாரம் இது...

சில ஆண்டுகளுக்கு முன்பாக கோவை பேரூர் ஆதீனம், தமிழில் குடமுழுக்கு செய்வதை பரவலாக்க ஆரம்பித்தார். ஆகம மந்திரங்களுக்கு இணையான பொருளுடைய தேவார, திருவாசகப் பாடல்கள் தேர்வு செய்யப்பட்டு ஓதப்பட்டன. இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ள கோயில்களில் இதற்கு அனுமதியில்லை என்பதால், தனியார் கோயில்களில் இந்த முறையின் கீழ் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

ஓ... அப்ப  குடமுழுக்கு சம்பந்தமாப் பேச்சுவார்த்தைக்கு வந்துருந்தார் போல!

இவர் சம்பந்தமா எதாவது மேல்விவரம் கிடைக்குமோன்னு தேடுனதில் எனக்கு ஒரு அதிர்ச்சி கிடைச்சதுதான் மிச்சம். விவரம் தெரிந்தவர்கள்தான் இது மெய்யா இல்லையான்னு சொல்லணும்.


நத்தி மண்டபத்தாண்டை, தொல்லியல் துறை வச்சுருக்கும் விவரம், கொஞ்சம் குழப்பமா இருந்தது.  நந்தி மண்டபத்தைத்தானே நாயக்கர் காலத்தில் கட்டுனாங்க. நந்தியே அவுங்க செஞ்சதா எழுதிட்டாங்களே....  (இல்லே எனக்குத்தான் பொருள் விளங்கலையோ !) மனசு நம்பாம, போனமுறை இங்கே வாங்கின தலவரலாறு போல இருக்கும் புத்தகத்தில் விவரம் தேடுனதில்,  நந்தியும், மண்டபமும் நாயகர்கால ஆட்சியில்தானாம்! செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்பர் நாயக்கர் காலம்!

இந்த ராஜராஜன் , கோவிலைக் கட்டுனவன், நந்தியை விட்டுட்டானே......   நேரமில்லாமல் போச்சோ.....  நல்லவேளை.... கோவிலின் அளவுக்கு ஏத்தாப்ல   நல்ல சைஸில்தான்  செஞ்சுருக்காங்க நாயக்கர்கள் !

சுத்திவரும்போதே சில பல க்ளிக்ஸ் ஆச்சு.  இப்பப் பார்த்தால் போனமுறை (ஆச்சு எட்டு வருஷம்) முந்தி எடுத்த படங்களே இதைவிட நல்லா வந்துருக்குன்னு தோணுது. அந்தப் பதிவின் சுட்டி இது. நேரமும் விருப்பமும்  இருந்தால் எட்டிப் பாருங்க.




நிம்மதியா ஒரு முறை வந்து, நின்னு நிதானமா ஒவ்வொரு சந்நிதியையும் விடாம தரிசிக்கணும். எப்ப வாய்க்குமோ தெரியலையே....

எப்பவும் போல முழுமையாப் பார்த்தோம் என்ற மனநிறைவில்லாமல்தான்  இப்பவும் கிளம்பவேண்டியதாப் போச்சு.

வாசலில் பூ வாங்கியாச் :-)
அடுத்துப்போனது, இதுவரை போகாத கோவில்தான்.  பக்கத்துலேதான் இருக்கு. வாங்க போகலாம்....

தொடரும்.... :-)



14 comments:

said...

காலையில் இனிய தரிசனம்...

said...

எப்போது பார்த்தாலும்
எங்கிருந்து நினைத்தாலும்
தன்னிகரில்லாப் பெருங்கோயில்...

said...

// நான் வரப்போறேன்னு உங்களுக்கு யார் சொன்னா?//

..........
மணியோசை வரும் முன்னே.


//கோவிலைக் கட்டுனவன், நந்தியை விட்டுட்டானே//
The original Nandi built by Rajarajan is kept on the left side பிராகாரம்.

said...

//சென்சிருக்காங்க நாயக்கர்கள்// - இதற்குக் கீழே உள்ள படம்தான் ராஜராஜன் நுழைவாயிலா என்று நான் எடுத்த படங்களோட ஒப்பிட்டுப் பார்க்கணும். இது கோவிலை நோக்கி நிற்கும்போது நம் வலது கை பக்கத்தில் இருக்கும். அதன் படிகளுக்கு வலது புறம் இராஜராஜன் கீர்த்தி இருக்கும். அங்கு பல இடங்களில் ராஜராஜன் பெயரைப் பார்க்கலாம்.

ராஜராஜன் காலத்து நந்தியை எடுத்துவிட்டு அங்கு நாயக்கர்கள் அளவில் பெரிய நந்தியை நிர்மாணித்தார்கள்.

கோவிலில் (அதுவும் சரித்திரப் பிரசித்தி பெற்ற இடத்தில்), சாயம் பூசிய புதிய கடவுளர்கள், பொம்மைகள் சிலைகளை வைப்பதைத் தடை செய்யணும். தரிசனம் செய்யக் காத்திருந்த வரிசையில் உங்கள் இடது புறத்தில் பின்புறம் இராசராசன் சிலை (குஜராத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்தது) இருக்கும். பார்த்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.

அந்தக் கோவிலில் நடக்கும்போதே நாம் சரித்திரத்தின் அந்தப் பகுதிக்குள் சென்றுவிடுவோம்.

said...

பெரிய கோவில் தரிசனம் பெற்றோம். ஒரு தடவை நேரிலும் தரிசித்திருக்கிறேன்.

said...

நந்தி - ராஜராஜன் அமைத்ததும் உண்டு துளசி டீச்சர். இடப் புறத்தில் தனியாக வைத்திருக்கிறார்கள். முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தான் என்னுடைய பயணத்தில் மேலதிகத் தகவல்களைத் தந்தார்.

எத்தனை முறை சென்றாலும் அலுக்காத இடங்களில் இக்கோவிலும் உண்டு - திருவானைக்கோவிலும் எனக்கு மிகவும் பிடித்த கோவில்களில் ஒன்று.

said...

வாங்க துரை செல்வராஜூ,

உண்மை. அலுக்கவே அலுக்காத கோவில் என்பது உண்மை !

said...

வாங்க விஸ்வநாத்,

யானைக்கு(ம்) வயசானால் மறதி வந்துரும்போல ! So sad...

பழைய பதிவில் போய்ப் பார்த்தால் பழைய நந்தியின் படமும் போட்டு எழுதியும் இருக்கேன்.....

ஐயோ....

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

நந்திக்குப் பின்புறம் இருக்கும் வாசல்தான் ராஜராஜன் வாசல். முதலில் இருக்கும் கேரளாந்தகன் வாயிலை விட உயரம் குறைஞ்ச கோபுரம்.

தரிசனத்துக்கு உள்ளே போய் ஒன்னும் பார்க்க வாய்ப்பில்லை. வெளிச்சமும் இல்லை, கூட்டமும் அதிகம். பார்க்கலாம் இன்னொருமுறை போக வாய்ப்புக் கிடைக்குமான்னு.....

said...

வாங்க மாதேவி.

இன்னொருமுறை பார்க்கும் ஆவல் இருந்துருக்குமே !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அடுத்தமுறை போகும்போது ஜம்புலிங்கம் ஐயாவுடன் போகத்தான் வேணும். பார்க்கலாம், வாய்ப்புக் கிடைக்குமான்னு.....

போனபதிவில் ராஜராஜன் நந்தியைப் பற்றி எழுதி இருப்பதை இப்பத்தான் பார்த்தேன்.... என்ன ஒரு மறதி.....

திருவானைக்கால் கோவிலும் எனக்குப் பிடிக்கும்! என்ன அழகு சிற்பங்கள், இல்லை !!!!

said...

நான் அதைச் சொல்லவில்லை. கோவிலின் கருவறையில் நுழைய இரண்டு பெரிய பக்க வாயில்கள் உண்டு. பேர்ரசன் ராஜராஜன் வலது புற வாயில் வழியாக நுழைவானாம்.

நீங்கள் குறிப்பிடுவது கோவில் வளாக நுழை வாயில்களை

said...

@நெல்லைத்தமிழன்,

ஓ... அந்த வாயில்களா? அரசர் நுழையும் வாயிலும், அரசகுலமகளிர் நுழையும் வாயிலும் மூலவருக்கு இடதுவலது பக்கங்களில் இருக்கு. ஆனா யாருக்கு எந்த வாயில்னு தெரியலை.

said...

ஆஹா பெரிய கோவில் பார்க்க பார்க்க இன்பம் தரும் இடம் ...