Friday, December 26, 2014

சூப்பர் ஸ்டாரின் கேள்வி!

கடந்த  பல வருசங்களாக  இந்த சீஸனுக்கு  இவர்தான் சூப்பர் ஸ்டார் உலகம் முழுசுக்கும். இவர் வரவை ஆவலோடு எதிர்பார்க்கும் இளமனசுகளின் எண்ணிக்கைகளுக்குக்  குறைவில்லைதானே!

Have you been a  good girl/boy  this year ? 

ஸாண்ட்டா கேட்ட கேள்விக்கு என் பதில்......

ஆமாம் ,ஸாண்ட்டா. இந்த வருசம் மட்டுமில்லை  கடந்த நாப்பது வருசத்துக்கும் மேலேயே  ஒவ்வொரு வருசமும், ஒவ்வொரு மாசமும், ஒவ்வொரு நாளுமே  வெரிகுட் கேர்ளாத்தான் இருக்கறேன்!!!!

ரொம்ப மகிழ்ச்சி. இந்தா உனக்கான  கிறிஸ்மஸ் பரிசுன்னு சொல்லி சின்னப் பொட்டலம் ஒன்றைக் கொடுத்தார்.   குட் திங்ஸ் கம் இன் அ ஸ்மால் பேக் என்பதால் ஒன்னும்சொல்லாம வாங்கிக்கிட்டேன்.

பிரிச்சுப் பார்த்தால்......   ஒரு  கணையாழி !  அதுவும் வைரம்!!

தேங்க்ஸ்ன்னு சொல்றதுக்குள்  வாயுவேகத்தில் கிளம்பிப் போயிருந்தார்!
நம்ம ரஜ்ஜு, ஜூபிட்டர் பசங்களுக்கெல்லாம்,  அவுங்க ஸாண்ட்டா ஆற அமர வந்து  நம்ம வீட்டுலே  இடம்பிடிச்சு உக்கார்ந்தாரா....  ஏராளமான பரிசுப்பொதிகள் அவருடன்!

ரஜ்ஜுவிடமும், சூப்பர் ஸ்டார்  இதே கேள்வியை மியாவ்  மொழியில் கேட்டுருப்பார் என்பது நிச்சயம்:-)  ஆமாம்னு சொல்றதுமாதிரி தலையை லேசா ஆட்டிட்டுக் கள்ளமா சிரிச்சான்:-)))) அவனுக்கு  ஒரு புது ப்ரஷ். சீவிச் சிங்காரிச்சுக்க  முடியும்,இன்னும் அழகாக!

கிறிஸ்மஸ் ஈவுக்கு  ராத்திரி பத்துக்குக் கிளம்பி சர்ச்சு எதாவது திறந்துருந்தா போயிட்டு வரலாமுன்னு  போனோம். சொல்லி வச்ச மாதிரி அனக்கமே இல்லாத நகரமும், மூடிக் கிடக்கும் சர்ச்சுகளும்தான்:(  கடைசியில் நம்மூர் அட்டைக்கோவிலுக்குப் போனோம்.  அது ஒன்னுதான் திறந்திருக்கு. இரவு 11.45க்கு  சர்வீஸ் ஆரம்பமாம்.

அப்போ  மணி பத்தரைதான். இன்னும் ஒன்னேகால் மணி நேரம் தேவுடு காக்கமுடியாதுன்னு கோபால் சொன்னதால்....  கொஞ்சூண்டு க்ளிக்கிட்டு எதிரில் கண்ணில்பட்டவர்களுக்கு மெர்ரி க்றிஸ்மஸ் சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.

நம்ம தெருவின் ஆரம்பத்தில் ஒரு வீட்டில் கிறிஸ்மஸ் அலங்கார விளக்குகளாப் போட்டு ஜமாய்ச்சுருக்காங்க. கராஜில் பக்காவா ஒரு பார் வசதி!  இதை விட்டால் நம்ம வீட்டில்  சாமி அறை ஜன்னலில்  கொஞ்சூண்டு விளக்கு அலங்காரம்!  மத்தபடி தெருவில்  வேறெங்கும் அலங்காரம் ஒன்னுமே இல்லை:(

நம்ம வீட்டு  எவர்க்ரீன் க்றிஸ்மஸ் மரத்துக்கு (இது நம்ம கப்பு மரம்!) கொஞ்சம்   அலங்காரம்  செஞ்சேன்.  பழசெல்லாம் அடிக்கும் காத்துலே கீழே விழுந்து உடைஞ்சு போயிருச்சு:(

எங்க சம்மர் கடைசியில் வந்தே வந்துச்சு!!!  ரெண்டு மூணு நாட்களா 23 டிகிரி!!!  அதுவும் பகல் பனிரெண்டரை முதல். இன்றைக்கும் அதே 23 தான். ஆனால் அதிசயமாக காலை பத்து முதலே சூடு கிளம்பியிருக்கு.  சதர்லீ இல்லை. அதுதான் காரணம்.  நம்ம ரஜ்ஜுவுக்கு சூடு தாங்காது,கேட்டோ!   நேற்று கிறிஸ்மஸ் தினம், காலையில் எட்டுமணிக்குக் காணாமப் போனவன்  சாயந்திரம்  ஆறுமணிக்குத்தான் வீடு திரும்பினான்!

அவனை எங்கே காணோமுன்னு  துடிச்சுச்சுட்டாங்க நம்ம  வீட்டுக்கு வந்திருந்த விருந்தாளிகள். நியூஸியை அதிலும் எங்க தெற்குத்தீவை மட்டுமே சுற்றிப் பார்க்கன்னு  ஒரு தம்பதிகள்  அமெரிக்க நாட்டிலே இருந்து  வந்துருக்காங்க.  லாஸ் ஏஞ்சலீஸ் யூனியில் வேலை.  இப்படிச் சொன்னாப் போதாது. நம்ம துளசிதளத்தின் தீவிர வாசகர்கள். செவ்வாய் மாலை  வந்து சேர்ந்தாங்க.  மறுநாள் புதனன்று   முழுநாள் அக்கரோவா என்னும் கடற்கரை நகரச் சுற்றுலா. வியாழன்,கிறிஸ்மஸ் நாளுக்கு நம்ம வீட்டில் மதிய  உணவு.

மெனு: அரைச்சுவிட்ட சாம்பார். தான்கள் கத்தரிக்காய், முருங்கைக்காய், பீன்ஸ்.   சன்னா, நூக்கோல்,  ப்ராட் பீன்ஸ் சேர்த்து  ஒரு கறி கொஞ்சம் க்ரேவியாக.  தக்காளி ரசம், தயிர்,   உருளைக்கிழங்கு  காரக்கறி, காலிஃப்ளவர் & சிகப்புக்குடை மிளகாய் , பச்சைப்பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்த  ஒரு கறி. நம்ம வீட்டு லெட்டூஸ், வெள்ளரிக்காய் , தக்காளி ஸாலட்.  இனிப்புக்கு  பூந்திலாடு,  எள்ளு ஹல்வா!!!

உள்ளூர் நண்பர் ஒருவரையும் கூப்பிட்டு இருந்தோம்.  அவர் மெதுவா சமையல் பரிசோதனைகள் செஞ்சுக்கிட்டு இருக்கார். மனைவி  ஊருக்குப்போயிருக்காங்க. புதுவித கத்தரிக்காய் கறி, தால் மக்கானி செஞ்சு கொண்டு வந்து எங்களை அசத்திப்புட்டார்:-)

பாவம்.  விருந்தினருக்குக் கடைசி வரை , ரஜ்ஜு முகம் காமிக்கலை!   சாப்பாட்டுக்கு அப்புறம்   அவுங்களை நம்ம ஹேக்ளி பார்க் வரைகொண்டு போய் விட்டோம்.   தோட்டத்தைச்  சுற்றிப் பார்த்துக்கிட்டே  போனால் தோட்டத்தின் மறு பக்கம் அவுங்க தங்கி இருக்கும் ஹொட்டேல் வந்துரும்.

போற வழியிலே  க்ரிக்கெட் மேட்சுக்கு  தாற்காலிக ஏற்பாடாகக் கட்டிய  ஸ்டேடியம் இருக்கு. அங்கே போய் எட்டிப்பார்த்தோம். இலங்கைக் குழு நெட் ப்ராக்டீஸ் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  புதுவருசத்தில்  உலகக்கோப்பை போட்டிகள் நியூஸியில்தான் நடக்கப்போகுதுன்னு தெரியும்தானே?

மைதானத்தின்  ப்ரிவ்யூ உங்களுக்கு:-)  எப்படியும் டிவியில் பார்ப்பீங்கதானே!








இந்த வருசம் புதுசா  நம்ம சென்னையில் இருந்து சில மாணவர்கள் இங்கே படிக்க வந்துருக்காங்க.  அதிசயம்தான்!
இடமிருந்து வலம்:  அருண்குமார்,  ரவிசங்கர், துளசி கோபால் ,  தர்மநாராயணன்,  ராம்.  துளசிதளத்தை வாசிங்கோன்னு சொல்லிட்டு வந்தேன்:-))))



Kumar  Sangakkara ன்னு கோபால் சொல்றார்.

விருந்தினர்  அவுங்க அறைக்குப் போய்ச் சேர்ந்தபிறகும் கூட ரெண்டு முறை செல்லில் கூப்பிட்டு ரஜ்ஜு வந்தானா, வந்தானான்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. அப்புறம் இவன் வந்து சேர்ந்ததும், வந்துட்டான்னு  செல்லில் கூப்பிட்டுச் சொன்னேன். அப்பதான் நிம்மதி ஆச்சாம்!

கோபாலுக்கு  என்ன கொடுக்கணுமுன்னு  ஸாண்ட்டாவுக்கு நல்லாவே தெரியுது பாருங்களேன்.  ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் செஞ்சுக்கோன்னு  எலெக்ட்ரிக் ட்ரில்,  பெயிண்ட் செஞ்சுக்கும் ஸ்ப்ரே கன்.  (இவர்    அவ்ளோ நல்ல பையரா இல்லையோ என்னவோ!!!!)


கிடைச்ச பரிசுகளை எல்லாம் பயன்படுத்திப் பார்க்கணுமாம், நம்ம கோபாலுக்கு.  விழாக்கால விடுமுறையா  பதினோரு நாட்கள் கிடைச்சிருக்கு.  கூடமாட ஒத்தாசையா இருக்கணுமேன்னு  நம்ம தளத்துக்கும்  லீவு   நாளை முதல்.  நீங்களும்  விழாக்கால விடுமுறையை நல்லா அனுபவிச்சுட்டு அடுத்த வருசம் வகுப்புக்கு  நல்லபடியா வந்து சேருங்க.

இண்டியன் கல்ச்சுரல் க்ரூப்பின் விழாவில்  நம்ம கோபாலுக்கு  லைஃப் டைம் சர்வீஸ் அவார்ட்  கிடைச்சது.


கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் ஒன்றிரண்டு மைனஸ் பாய்ண்டுகள் இருந்தாலுமே  2014 நல்லபடியாத்தான் போச்சு.  இந்த இடுகையைச் சேர்த்தால்  இந்த வருசத்துக்கு  108.   போகட்டும்  நூத்தியெட்டுன்றது கூட நல்ல நம்பர்தான்:-)))))

ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் எப்படின்னு  அடுத்த வருசம்  எழுதுவேன்:-)

அனைவருக்கும்  ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

டேக் கேர்! 





Wednesday, December 24, 2014

விஸ்வரூபம் என் பார்வையில் ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 9)

ஆளுக்கு மூணே ரூபாய்தான்  டிக்கெட்!   இவ்ளோ மலிவான்னு வியப்புதான். ஏற்கெனவே  கொஞ்சம்  புகழாரங்களைக் கேட்டதால்  எப்படி இத்துனூண்டு காசுக்குக் கட்டுப்படியாகுதுன்னு   யோசிச்சதும் உண்மை!

அஞ்சு டிக்கெட்  ப்ளீஸ். யாராலும் ஆசையை அடக்க முடியாது என்பதால் என் கெமெராவுக்கும், மற்றவர்களின்  செல்ஃபோன்  கெமெராவுகளுக்குமா  சேர்த்தே டிக்கெட்டுகளை  வாங்கிக்கிட்டோம்.  கெமெரா சார்ஜ் 20 ரூ  ஒரு ஆளுக்கு.  போகட்டும் , படமெடுத்துத் தள்ளமாட்டோமா என்ன!

அங்கிருந்தே வலப்பக்கம் இருக்கும் சப்தநதி மாதாக்களின் சிலைகள்  மனதைச் சுண்டி இழுத்தன. உள்ளே  இன்னும் என்னெல்லாம் இருக்கோன்னு ஆசையைத் தூண்டிவிடும் வகை!

கங்கை,  யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவேரி என்னும் நதிப்பெண்கள்.  க்ரிஷ்ணா,  பிரம்மபுத்ரா ரெண்டு பேரும் ஆண் நதிகளா இருப்பதால் இங்கே சேர்த்துக்கலை:-) முதலில் பார்த்தபோது  அறுவர் நிற்க, ஒருவர் மட்டும் உக்கார்ந்து இருக்கும்  நிலை.  கங்கைதான் லிஸ்ட்டுலே முதலிடம் என்பதால் இருக்கை கிடைச்சிருக்குன்னு  நினைச்சேன்.  இன்னும்கொஞ்சம் கவனமாப் பார்த்தால்  முதலை வேற இருக்கு.  கங்கைக்குத்தானே  முதலை வாகனம், இல்லையோ? அப்போ அதில்  நிற்பவள்தான் கங்கா மாதா.  வரிசைப்படி பார்த்தால் இருக்கை கொடுத்திருப்பது நம்ம காவேரிக்கு!  சபாஷ்!

சின்னதா ஒரு நந்தவனம் .  சரியான பராமரிப்பு இல்லையோன்னு தோணல்.  இடது கைப்பக்கம் திரும்பினால்.... பகவத் கீதா மந்திர்.   இதைப் பின்புலமா வச்சு  ஒரு கீதோபதேச சிலை. கல்பாதையில் நடந்து போறோம்.  பராமரிப்பு  இல்லை என்பது உறுதியாச்சு. அங்கங்கே கற்பலகைகள்  உடைஞ்சு தூக்கிக்கிட்டு இருக்கு.  கவனமாப் போகலைன்னா  பாதம்  பங்ச்சர்:(

முப்பதடி உசரத் தேர்!  தசைகள் திரண்டு கம்பீரமான பார்வையுடன், பாய்ச்சல்  போஸில் கால்களை வைத்து, கண்ணன் கடிவாளம் இழுத்ததால் திமிறிக்கொண்டு மூக்கு துவாரங்கள் விடைக்க நிற்கும்  நான்கு குதிரைகள்.  கவலையோடு கன்னத்தில்  இடக்கை வைத்திருக்கும் பார்த்தன்.  தேர்த்தட்டில் உக்கார்ந்த நிலையில் உடம்பைத் திருப்பி  பார்த்தனைப் பார்த்துக் கைநீட்டி 'தா பாரு. மரியாதையா வில்லை எடுத்து அம்பு பூட்டி எதிரிகளை த்வம்ஸம் செய்யப்பார். சண்டைக்கு வந்துட்டு, என்னமோ கப்பல் கவுந்தாப்ல கன்னத்தில் கை வச்சுக்கிட்டு போஸா கொடுக்கறே'என்று மிரட்டும் பார்த்தஸாரதி!

கீதையை உபதேசிக்கிறாராம்.  அனுமனை கொடியில் தேடினேன்.  தேரின் கொடிக்கம்பத்தில் சுற்றி இருக்கும் கொடியில்  அனுமனின்  கால்கள் தெரிஞ்சது.  ஓஹோ....  ஆஞ்சியின் சித்திரம் கொடியில் எழுதப்பட்டிருக்கு!  அற்புதம்!  தேரின் பெரிய,சிறிய சக்கரங்களுக்கு மேல் பக்கத்துக்கொன்றாய் சீறும் சிங்கங்கள்.  சூப்பர்!

தேருக்குப் பின்பக்கம் பெரிய மண்டபத்துக்குள்ளே போகும் வழியில் போய் படிகள் ஏறணும். அங்கே சுவரில் சிற்பி  காசிநாத், ஷிமோகான்னு அலைபேசி எண்களுடன்  எழுதி வச்சுருக்கு.  இது என்னங்கடா  அநியாயம்? இவ்வளவு  அற்புதமா சிலை வடிச்சவருக்கு  இதுதான் மரியாதையா?  சின்னக் கல்வெட்டில் பெயர் செதுக்கி  பதிச்சு இருக்கலாமே!  ஊஹூம்.....  கலையை ஆராதிக்கத் தெரியலையே:(

விசனத்தோடு இன்னும் ரெண்டு படிகளேறிப்போனால் கல்வெட்டு ஒன்னு,  இந்த கீதோபதேசத் தேரை,  பகவத்கீதா தர்ஷன் மந்திர்க்கு  அர்ப்பணித்தவர்களின் பெயரும், திறந்து வைத்த  கர்நாடக முதல்வர்  பெயரும் கல்வெட்டில்! மார்ச்  23 1997 ஆவது ஆண்டு.

ஓ  அப்ப  இந்த ஆஷ்ரம் தொடங்கி பதினைஞ்சுவருசத்துக்கு அப்புறம்தான்  பகவத் கீதா மந்திர்  கட்டி இருக்காங்க. ஆஷ்ரம் தொடங்குன கதையைக் கொஞ்சூண்டு பார்க்கலாமா?

பத்ரகிரி என்ற ஊரில் 1934 இல் பிறந்தவர் கேஷவ்தாஸ்.  தொழில் வழக்கறிஞர்.  படிப்பு பி ஏ , எல் எல் பி. தன்னுடைய  25 வயசுவரை  பெங்களூரில் வாசம். குடும்பம் குழந்தை குட்டின்னா மனைவியும் ரெண்டு மக்களும்.
எப்படியோ  ஆன்மிக நாட்டம் வந்து, புராணங்கள். உபநிஷதுகள், வேதம்,  சாதுக்கள் வாழ்க்கை சரித்திரம், பகவத்கீதைன்னு   அங்கங்கே  சொற்பொழிவு  செய்யறார்.  ரொம்ப நல்லா சொல்வார் போல!  கூட்டம்  திரள்திரளா வந்து கேட்க்குது.  அப்படியே அந்த ஊர்களை விட்டு, மெல்லமெல்ல இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போய்  பிரசங்கம் செஞ்சுக்கிட்டே இருந்தவர், வெளிநாடுகளிலும் போய்  சத்சங்கம் நடத்திக்கிட்டே  உலகம் சுற்றிக்கிட்டு இருந்துருக்கார்.

ஸ்ரீ சத்குரு சந்த் கேஷ்வ்தாஸ்ஜின்னு மக்கள் மரியாதையுடன்  சொல்லிக்கிட்டு இருக்காங்க. நிறைய வாழ்க்கைத் தத்துவங்கள், பக்தி,  பஜனைப் பாடல்கள் இப்படிப் புத்தகங்களா ஒரு பக்கம் எழுதித் தள்ளிக்கிட்டே இருக்கார்.
ஒரு சமயம் Trinidad & Tobago நாட்டுக்குப்போய் சத்சங்கம் நடத்திக்கிட்டு இருந்தப்ப,  ப்ரேம்ராஜ் பஜ்ரங்கீ என்ற பக்தர் ஒருவருக்கு ரொம்பவே ஈடுபாடு வந்துருக்கு.  அப்போ  கேஷவ்தாஜி,  ராம்சரிதமானஸ் என்ற ஸ்ரீ ராமரின் கதையை கதாகாலக்ஷேபம்  செஞ்சுக்கிட்டு இருந்துருக்கார்.திடீர்னு  பக்தருக்கு   அனுமன் தரிசனம்  மனசுக்குள்ளே வந்துருக்கு.

உடனே  சத்குருவுக்கு எதாவது செய்யணுமென்ற தீவிர ஆர்வத்தில்  இந்தியாவில் குருவுக்காக ஒரு ஆசிரமம் கட்ட இடம் தேடி இருக்கார்.  பெங்களூர்  டும்கூர்  சாலையில் , அரிசினகுண்ட்டே பகுதியில் நெலமங்களா என்னும் கிராமத்தில் வாகாய் ஒரு இடம் கிடைச்சிருக்கு.  பதினைஞ்சு ஏக்கர். 1982 வது வருசம், உடனே  நிலத்தை வாங்கிப்போட்டு ஆஷ்ரம் நடத்திக்கக் கொடுத்துட்டார்.  உலக சமாதானம் பரப்பவும் , பகவத் கீதை, பக்தி யோகம்  கற்றுத்தரும் வகையாகவும் ஆஷ்ரம் தொடங்கியதுதான் ஆரம்பம்.

உலகின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வந்துபோக இருந்து ஆஷ்ரம் நல்லாவே வளர்ச்சியடைஞ்சது.  36 அடி உசர விஜய விட்டலன்  சிலை (போன பதிவில் பார்த்தோம் பாருங்க !) பிரதிஷ்டை ஆச்சு.  அவருக்கு  முன்னால்   விட்டலனுக்கு  சந்நிதி.  முன் முற்றத்தில்  ஒரு துளசி மாடம்.  அதன் பீடத்தில் அழகழகான  தெய்வத் திருவுருவங்கள்.

விட்டலனுக்கு  ரெண்டு புறமும்  நவ்வாலு  லக்ஷ்மிகளா அஷ்டலக்ஷ்மிகளுக்கு  சந்நிதிகள்.  துர்கைக்கு ஒரு தனிக் கோவில்.  அப்புறம்  கேட்டுவாசலில் நுழைஞ்சப்பப் பார்த்தமே....  அந்த   ராமர் அண்ட் கோ, தத்தாத்ரேயா, புள்ளையார் ,  சுப்ரமண்யர்,  பாண்டுரங்கர், ராதா கிருஷ்ணா  இப்படி ஒரு பெரிய ஹாலில் மூணு புறமும்.  நவகிரகங்களுக்கும்   இங்கே ஒரு மூலை கிடைச்சது.   பக்கத்துலே தனிக் கட்டிடத்தில் போன பதிவில் பார்த்த  ஆஞ்ஜிக்குக் கோவில் இப்படி விரிவாக்கம்.


பகவத்கீதா மந்திர் ஒன்னும் கட்டஆரம்பிச்சாங்க. பெரிய கட்டிடம்!   உள்ளே  விஸ்வரூபம் காண்பிக்கும்  பெருமாள். ஆதிசேஷன் குடை பிடிக்க  ஹைய்யோ!!!!   சுற்றிவர  சுவர் முழுசும் கீதையின் வரிகள், கிரானைட் கற்பலகைகளில்.  மொத்தம் 800 கற்பலகைகள் பதிச்சுருக்காங்களாம்!    சமஸ்கிரதம், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில்! மக்கள் உட்கார்ந்து தியானம் செய்ய வசதியாகப் பெருசாகவே கட்டி விட்டுருக்காங்க. இந்த  மண்டபத்துக்குள்ளேதான் இப்ப நிக்கறோம்.

பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகான  முகம்!  கண்களில் ஒரு பார்வை இருக்கு பாருங்க.....  எனக்குச் சொல்லத் தெரியலை:(  நீங்களே பாருங்களேன்:-)




பாத தரிசனம்!


உயரம் என்னன்னு  தெரியலை. யாரிடம் விசாரிப்பது? ஆனால் கட்டாயம் ஒரு நாற்பதடி  இருக்கும். கேமெராவுக்கு ஓயாத வேலைதான்.  மனசில்லா மனசோடு வெளியே வர்றோம். அப்பப் பார்த்து  ஒரு  காவல்காரர்  , கேமெரா டிக்கெட்   வாங்கியாச்சான்னு கேக்கறார்.  கோபால் சட்டைப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தார். எண்ணிப் பார்த்த மனிதர், ஒரு  டிக்கெட் குறையுதேன்றார்.  இல்லையே.... வாங்கினோமேன்னால்....  தலையை ஒரு மாதிரி அசைச்சாரா..... எனக்கு பேஜாராப் போச்சு. சட்டைப் பைகளில் தேடறார், ஆனால்  கிடைக்கலை:(

 'சரி போங்க' ன்னதும்  கீழே படி இறங்கி கீழ்தளத்துக்குப் போனோம். டிக்கெட் எங்கே போச்சுன்னு இவர் கால்சட்டைப் பைகளில் குடைஞ்சுக்கிட்டே  இருந்தார்.  அதெப்படி ஒன்னு மட்டும் மிஸ்ஸிங்? புதிரா இருக்கேன்னு   இன்னொரு முறை குடைஞ்சு கைகுட்டையை வெளியில் எடுத்தால் அதிலிருந்து விழுந்துச்சு.

எங்க பின்னாலேயே வந்துக்கிட்டு இருந்த காவல்காரரிடம்  அதைக் கொடுத்தபிறகு தான் எனக்கு மனசு சமாதானம் ஆச்சு. அதுவரை கீழ்தளத்து சாமிமேல் கவனம் போகலை. காயத்ரி மந்திராம்.  ஆரத்தி காமிச்சார் அர்ச்சகர்.  ஐந்து முகம்! இதுவும் பெரிய சிலைதான்.   முன்னால் ஒரு பீடத்தில் சின்ன சிலை ஒன்னும் அதே ஐந்து முகங்களுடன்.

கும்பிட்டுட்டுக் கிளம்பி போன  வழியிலேயே நடந்து  விட்டலா சிலைக்கு வந்தோம்.  இங்கே தனிக் கட்டிடமா துர்கைக்கு ஒரு கோவில் இருக்குன்னேன் பாருங்க. அதுக்குள்ளே நுழைஞ்சு ஒரு கும்பிடு. ஸ்ரீ  ஸ்ரீ ப்ரஸன்ன துர்காதேவி மந்திரா! இங்கே  நிலம் தானம் செஞ்ச ப்ரேம்ஜியின் படம் மாட்டி இருக்காங்க.  நன்றி மறவாமை!



அட!  ரொம்பநாளைக்கு அப்புறம் தொட்டாச் சிணிங்கி :-)

மணியைப் பார்த்தால்....  ஐயோ பதினொன்னே முக்கால்.  பனிரெண்டுக்கு  செக்கவுட் செய்யணுமே....


தொடரும்.........:-)



PIN குறிப்பு. :  இந்தப் பதிவின் கடைசிப் பகுதி  எழுதிக்கிட்டு இருக்கும்போது  நிலம் ஆட்டம். ரஜ்ஜூ சட்னு எழுந்து வெளியே ஓடினான். நாலு இருக்குமுன்னு நினைச்சேன். அதே போல நாலு  மேக்னிடூட்தான்:-)))

'என்ன  நம்மை விடாது போலிருக்கே'ன்னார் கோபால். 

 "அது ஒன்னுமில்லை, ஸாண்ட்டா  வந்து இறங்கின சத்தம்.  பொழுது விடிஞ்சா கிறிஸ்மஸ் இல்லையோ!!!"

அனைவருக்கும் இனிய  விழாக்கால வாழ்த்து(க்)கள்.





Monday, December 22, 2014

ஆஞ்ஜி, ஆஞ்ஜி, ஹாஞ்ஜி! அனுமன் அருள் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 8)

காலை ஒரு எட்டேகால் போல  கீழே ப்ரேக் ஃபாஸ்டுக்குப் போனோம். அப்பதான்  சாந்தியும் பூபாலும் ஹொட்டேல் வாசலுக்குள் நுழையறாங்க.  ஆஹா..... பெர்ஃபெக்ட் டைமிங். இன்று நாள் முழுசும் இப்படியே  எல்லாம் ப்ளான்படி நடக்கட்டும்.  ததாஸ்து!

பஃபேயில்  இருந்த எல்லாத்தையும் நோட்டம் விட்டுட்டுப்போய் உட்கார்ந்தோம். அக்ரோட் ஹல்வா இருக்குன்னு மனசில் குறிச்சு வச்சேன்:-)  அவரவருக்கு  வேண்டியதை நாம் கொண்டு வரும் சிரமம் கூட இல்லாமல் எது  வேணும் என்று கேட்டுக்கேட்டுக் கொண்டு வந்துக்கிட்டு இருந்தாங்க பணியாளர்கள்.  நல்ல சர்வீஸ்.  அப்பதான்  ஹொட்டேல்  மேலாளர் ஒருவர் வந்து  அறையில் எல்லா வசதியும் சரியா இருக்கா? வேறு எதாவது  சௌகரியம் செஞ்சு தரணுமான்னு கேட்டார்.

ஓ.... குறை கேட்டாச் சொல்ல வேணாமோ?  எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஆனால்.... முக்கியமானவைகளை வைக்க இரும்புப்பெட்டி  இல்லை.  வெளிநாட்டுப் பயணிகள் என்றால்  பாஸ்போர்ட்  ரொம்பவே முக்கியமானது பாருங்க. அதைப் பையில் வச்சுக்கிட்டே ஊர்சுத்தறது சிரமம் இல்லையா? எந்தநேரத்துலே  யார் அடிச்சுக்கிட்டுப் போயிருவாங்கன்னு  கவனம் பை மேலேயே இருந்தால் கண் பார்ப்பவைகளை எப்படி அனுபவிப்பது?

"ஆமாங்க. நீங்க சொல்றது சரி மேடம். ஏற்பாடு செஞ்சுருவோம்!"

பரவாயில்லை. இன்னிக்கு நாங்க செக் அவுட் செஞ்சுருவோம்.  அப்புறம் நீங்க  எல்லா அறைகளுக்கும்  ஏற்பாடு செய்யுங்க. மத்தபடி   சர்வீஸ் நல்லா இருக்கு. ஒரு நிறுவனம் நல்லா இருப்பது அங்கிருக்கும் பொருட்களால் மட்டுமில்லை.  அங்கே பணிபுரியும் மக்களால்தான் நல்ல பெயர் கிடைத்து வெற்றியாகவும் நடக்கும்.  இங்கே நாங்க  பார்த்தவரை  எல்லோரும்  இனிய முகத்துடன் விசாரிச்சு தேவையானவைகளை உடனுக்குடன்  செய்யறாங்க. எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எல்லோரும்  இளைஞர்கள்  வேற . ஃப்ரெஷ்ஷா  இருக்காங்க.  முக்கியமா முகத்தில்  புன்முறுவல். இனி வருங்காலத்தில் இன்னும்  நல்லபடியா  நடப்பது  உபசரிப்பின் தரத்தினால்தான். நல்லா இருங்கன்னு  வாழ்த்திட்டு கெஸ்ட் புக்கில் எழுதிட்டும் வந்தேன்:-)

செக்கவுட் டைம் பத்துமணியாம். நமக்கு  பனிரெண்டுவரை கிடைச்சது. போதும். தாராளம்.  ஒரு இருபத்தியஞ்சு கிலோமீட்டர்  போகணும். கூகுள்மேப் அரைமணின்னு சொல்லுது.  அரையும் அரையும் ஒன்னு.   அங்கே இங்கேன்னு வேடிக்கைக்கு ஒரு ஒன்னரை.  இப்படி அப்படி க்ரேஸ் டைம் அரை மணின்னு மனக்கணக்கு.

 நம்ம சீனிவாசனுக்கு செல்லடிச்சு, சாப்பிட்டாரான்னு  கேட்டதுக்கு  எல்லாம் முடிச்சு  ரெடியா இருக்காராம்.   வண்டியை  முன்வாசலுக்குக் கொண்டு  வரச் சொல்லிட்டு  அறைக்குப்போய்  பெட்டிகளைப் பூட்டிட்டுத் திரும்பும்போது,   'இங்கே யாரு  ஆமெர் கான்?' என்று  நம்ம  தளத்தின் காரிடோரில் இருந்த ஹவுஸ் கீப்பிங் பணியாளரிடம் கேட்டேன்.

லேசாக மிரண்ட பார்வையுடன்,  நாந்தான்னு சொன்னார் அந்த இளைஞர். நேம்டேக் அதையே சொல்லுச்சு:-)  டவல்  அலங்காரங்கள்  ரொம்ப நல்லா இருக்குன்னு பாராட்டுனதும், முகம் பளிச். உடனே  நானும் க்ளிக்:-)

கிளம்பி, டும்கூர்  ரோடில் பயணம்.  வழியில் அங்கங்கே எதோதோ தொழிற்சாலைகள், மக்கள் கூட்டம் இப்படி..... புதுப்புது  அடுக்குமாடிக் கட்டிடங்கள்  ஏராளமாகக் கட்டிக்கிட்டு இருக்காங்க.  எல்லா நகரமும் இப்படித்தான் ஆகிக்கிட்டு இருக்கு, இல்லே!  வீட்டு விலைகள் எல்லாம்  தாறுமாறாய் ஏறிக்கிட்டு இருக்குன்னு பூபால் சொன்னார்.

ஒருமணி நேரத்துக்கு  மேலே  போய்க்கிட்டு இருக்கோம். இன்னுமா 25 கிமீ முடியலை?  பிரமாண்டமா ஒரு கோவில் கட்டிடம் தென்பட்டது.  இது ஏதோ ஜெயின் கோவில் என்றார் கோபால். கோவிலை அடுத்த  அலங்கார நுழைவு வாசலில் நேயுடு போல இருக்கே. போய்ப் பார்க்கலாமுன்னா.....  நேரமாகிக்கிட்டு இருக்கு. வந்த வேலையை பார்க்கலாமுன்னாரா.....  நான் லேசா மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டேன்:-))

இன்னும்  அஞ்சு நிமிசம் போனதும் கோவில் கோபுரம் ஒன்னு கண்ணில்பட்டது. கூகுள் மேப் சொன்ன  அரிசினகுண்ட்டே ஆஞ்சநேயர் கோவில்  இது.  கட்டாயம்  உள்ளே போகத்தான் வேணும்.  ரொம்பப் பழைய கோவிலாம். ஆனால் சமீபத்தில் புதுப்பிச்சுக் கட்டி இருக்காங்க. மூணு கோவில்களாத் தனித்தனிக் கட்டிடங்கள்.    காங்க்ரீட்  த்வஜஸ்தம்பம்.

 நடுவில் இருக்கும் கோவில் முகப்பில்  ராமர் & கோ .  மூலவர் நம்ம ஆஞ்ஜி.  ஒரு பெரிய சதுரக் கல்லில்  வலப்புறம் திரும்பி சைடு போஸில் இருக்கார்.

கற்பூர ஆரத்தி ஆனதும்,  அர்ச்சகரிடம் படம் எடுக்கலாமான்னதுக்கு,  சரின்னு தலை ஆட்டினார். பிள்ளையார் சந்நிதி  இங்கேயே தனியாக இருக்கு.  நவகிரகங்கள் ஒரு  மூலையில். எதிர்க் கட்டிடத்தில்  சக்தி.  இன்னொன்னில்  சிவன், லிங்க ரூபத்தில்.


நாம் போக இருக்கும்  கோவில் இன்னும் அஞ்சு  நிமிச தூரத்தில் தானாம்.  அப்பாடா ஒரு வழியா வந்துட்டோமுன்னு வாசலில் இருந்த போர்டைப் பார்த்துட்டு உள்ளே போய் வண்டியை நிறுத்தினோம்.

விஸ்வ சாந்தி ஆஷ்ரம். கார் பார்க் சமீபத்துலேயே  கோவில் கட்டிடங்கள்.  பெரிய ஹாலா இருக்கும் இடத்தில் மூன்று பக்கமும் சந்நிதிகள். நடுநாயகமா  ராமர் அண்ட் கோ!  பிள்ளையார், லிங்க ரூப சிவன், பாண்டுரங்கன், வேணுகோபாலன், விஷ்ணு, சக்தி என்று  நம்மைச் சுத்திச் சந்நிதிகள்.  பட்டர்,  படம் எடுத்துக்கலாமுன்னு சொன்னார்.  ஆச்ரமம்  அந்தப் பக்கம் உள்ளே இருக்குன்னு கை காட்டினார்.

அதுக்குள்ளே அடுத்த கட்டிடத்துக்குள்ளே நுழைஞ்ச கோபால்,  அங்கிருந்தே  வா வான்னு கை காமிச்சார். உள்ளே நுழைஞ்சால்....  ஹாலின்  மறு கோடியில்  ஏழு படிகள் உயர மண்டபத்தில் வலது கையில் தூக்கிப்பிடிச்ச சஞ்சீவினி  மலையுடன்  நிக்கறார் நம்ம  நேயுடு!  நல்ல பெரிய உருவம். ஹனுமனுக்கு முன் ஒரு உற்சவமூர்த்தி, இடக்கையில் மலை ஏந்தி!



அவர் நிக்கும் பீடத்தைப் பாருங்கன்னு  சுட்டிக்காமிச்சாங்க சாந்தி. அட!   சிவலிங்கங்கள் . அதன் மேல் கிடக்கும் ஒரு உருவம். அதை ரெண்டு பாதங்களாலும்  மிதிச்ச மாதிரி  நேயுடு நிக்கறார்.

என்ன கதைன்னு பட்டரிடம் கேட்டேன்.   'ராக்‌ஷஸ்' என்றார் சுருக்கமாக!

கும்பிடு போட்டுட்டு   வளாகத்தின் உள்ளே நடந்தோம்.  தொலைதூரத்தில்   ஒரு பெரிய சிலை.  என்ன  சாமின்னு  அங்கிருந்து தெரியலை:(

கிட்டப்போய்ப் பார்த்தால்.....  ஸ்ரீ விஜய விட்டலன்.  36 அடி உசரம்!


"இன்னும்  ஏகப்பட்ட  சமாச்சாரம் இருக்கு. வாங்க போய்ப் பார்க்கலாம்."

'எப்படி அண்ணி இதெல்லாம்?  நாங்க இங்கேயே இருக்கோம்.  இதுவரை இப்படி ஒன்னு இருக்குன்னே தெரியாதே'ன்னார் பூபால்.

'வலை 'என்றேன் ரத்தினச் சுருக்கமாக:-)

தொடரும்............:-)

PINகுறிப்பு:  நேத்து நம்ம ஆஞ்ஜிக்கு ஹேப்பி பர்த்டே!  அந்த நாளையொட்டியே நம்ம தளத்திலும்  அவர் வந்துட்டார்.  அஞ்சனை மைந்தனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.