Monday, December 15, 2014

சிங்கத்தை, அதன் குகையில் சந்தித்தது எப்படி? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 6)

பெங்களூரு போகலாமுன்னு முடிவானபோதே... நம்ம மக்களை சந்திக்க மனசு பரபரத்தது உண்மை. ஆனால்  அது ஜஸ்ட் தீபாவளிக்கு  முன்னே வரும் கடைசி வீக் எண்ட். ஷாப்பிங் பிஸியில் இருக்கும் மக்களை தொந்திரவு செய்ய மனம் வரலை.  ஆனாலும் கிடைக்குதா பார்க்கலாமுன்னு  நம்ம ஷைலஜாவுக்கும் ராமலக்ஷ்மிக்கும் மடல் அனுப்பி  வச்சேன். பிரச்சனை ஒன்னும் இல்லைன்னா  அன்று மாலை ஒரு  நாலுமணி போல  நாம் தங்கி இருக்கும் சிட்ரஸ்லே கூடினாலாச்சு.

ஷைலு வீட்டில் ஏற்கெனவே தீபாவளிக்கும் சேர்த்து வேறேதோ திட்டம் போட்டு வச்சுருந்தாங்க. அதை முதலில்  குடும்பத்தோடு அனுபவிச்சு மகிழ்ச்சியா இருங்க.  பின்னொரு காலத்தில் சந்திச்சால் ஆச்சுன்னு மடல் அனுப்பிட்டேன்.

ராமலக்ஷ்மி,  உள்ளூர் பதிவர்கள் இயலாமையைச் சொல்லி,  அவர்கள் மட்டும்தான் சந்திப்புக்கு என்றால்  நாலு மணிக்கு  ஹொட்டேலுக்கு வருவதாகச் சொன்னாங்க.

அடுத்து  இன்னொரு பதிவரைச் சந்திக்க ஆவலாக இருந்தேன். அவருக்கும்  நியூஸியில் இருந்தே தனிமடலில்  சேதி அனுப்பியதும்,  'கட்டாயம் சந்திக்கலாம். பகலுணவு எங்களுடன்' என்றார்.  மூத்த பதிவர் என்பதால் நான் போய் சந்திப்பதே முறை என்று....  அவரிடம் விலாசம் தொலைபேசி எண்கள் கேட்டு குறித்து வச்சேன்.

கீதைக்கு விளக்க உரை என்றில்லாமல், நேரடியா அதில் உள்ளவைகளுக்குப் பதவுரை எழுதப்போவதாகச் சொன்னதும்  எனக்கு  வாசிக்க ஆர்வமா இருந்துச்சு. பொருள் தெரிஞ்சுபோச்சுன்னா  அவரவர் மனோதர்மப்படிப் புரிஞ்சுக்க  இது ஒரு வழின்னு நினைச்சிருந்தேன்.  போதாததுக்கு  நம்ம பழனி கந்தசாமி ஐயா, 'எனது பெங்களூரு விஜயம்' என்று   மே மாதம்  ஒரு பதிவு போட்டு ஏற்கெனவே  என் ஆவலைக் கிளப்பி விட்டுருந்தார். அதான்  இந்த முறை பெங்களூரு போறோமே... அவரை சந்திக்கலாமேன்னு....


கீதையின் பதினெட்டு அத்தியாயங்களையும் பதினெட்டு பதிவுகளாகவே போட்டு பதவுரை எழுதி முடிச்சுட்டார்.   இது எவ்ளோ பெரிய  சமாச்சாரம், இதுக்கு எவ்ளோ உழைப்பு வேண்டி இருக்கும் என்றெல்லாம் நினைக்கும்போது மலைப்பாகத்தான் இருக்கு! விருப்பம் இருப்பவர்கள்  இந்தச் சுட்டியிலிருந்து  நூல் பிடிச்சுப்போகலாம்:-)

காலையில் நம்ம ராமலக்ஷ்மியிடம்  நாலுமணியை அஞ்சாக்கலாமுன்னு  செல்லில் சொல்லி வச்சதும்  நல்லதாப் போச்சு.

வலையிலே இருக்கு வழி என்பதால் கூகுளார் சொன்ன அரைமணியை நம்பினேன்:(   போக  அரை மணி, திரும்பிவர அரைமணி.  பதிவர் சந்திப்பு  ஒரு ஒரு மணி நேரம். அஞ்சுக்கு முன்னே வந்துடலாமுன்னு  என் திட்டத்தைப் பார்த்து எனக்கே பெருமை. 'என்னமா திட்டம் தீட்டிட்டேன்..பாரே'ன்னு  ஒரு ஷொட்டு.

ஒரு குறிப்பிட்ட கோவிலைச் சொல்லி அங்கிருந்து  வீடு ரொம்பப் பக்கம் என்றார்  நம்ம ஜி எம் பி ஐயா. வெறும் 700 மீட்டர் தானாம்! பலே பலே பேஷ் பேஷ். கிளம்பிப்போய் கோவிலுக்குப் பக்கத்தில் வண்டியை நிறுத்தி  அவருக்கு  செல்லில் விவரம் சொன்னதும், நேரா அப்படியே வாங்க. வாசலில் நிற்பேன் என்றார்.

குழப்பமே இப்பத்தான் வந்துச்சு. நாங்கள் நிற்குமிடமோ ஒரு நாற்சந்தி.  எந்தப் பக்கத்தில் 700 மீட்டர் போகணும்?  வந்த வழியை விட்டுட்டால் மூணு பக்கத்தில் எது?  ரெண்டு வழிகளில் 700 போய் ஒன்னும் இல்லாம மூணாவது வழியில் போறோம்.  தெருவின் ஆரம்பம் குண்டும் குழியுமாக இருந்தது.   அதுலே  ஒரு கிமீ வரை போயும்  வீட்டுவாசலும் அங்கே நிற்பவரும் எட்டுகண்களிலும் படலை. எங்களுடன் மைத்துனரும் அவர் மனைவியும் இருக்காங்க.

மூணு முறை அந்தத் தெருவில் போய் வந்தோம். அதுக்குள்ளே  ஜி எம் பி ஐயா அவர்கள் மனைவி,  செல்லில் கூப்பிட்டாங்க.

"வாசலில் நிக்கறோம்."

  ஐயோ.... வீடு புலப்படலையே:(

"எங்கே இருக்கீங்க?"

கண்முன்னே தெரியும் தோட்டத்தின் மதில்சுவரைச் சொன்னேன். "அப்படியே நேரா வாங்க." மதில்சுவர்  ரோடுக்கு  வலப்புறமான்னா இருக்கு!  இதே ரோடில் ரெண்டு மூணு கல்யாண ஹால்கள் வேற  இருக்கு. கல்யாணத்துக்கு  வந்த மக்கள் கூட்டம் !குறுகலான ரோடில் ரெண்டு பக்கமும் வீட்டு எண்களை  பார்வைக்கு மறைச்சு நிக்கும்  கார்கள்  வேற!    பேசாம, வண்டியை விட்டு இறங்கி நடந்து போனால்  வீட்டு எண் தெரியுமோ? நடந்தும் பார்த்தோம்.  ஊஹூம்....

ஜி எம் பி ஐயாவின் மனைவி  சொன்ன  கோவிலின் பெயரில் உள்ள மெடிக்கல் சென்டர் தான் இருக்கு. சரி.  காரைத் திருப்புங்க.  இன்னும் கொஞ்சதூரம் போய்ப் பார்க்கலாம். இதுதான் கடைசி முறை. கண்டுபிடிக்க முடியலைன்னால்..... செல்லில் சொல்லிட்டுத் திரும்பி அறைக்கே போகலாம் என்ற முடிவோடு  போறோம்.  'அதோ.... வாசலில் நிக்கறாரு'ன்னு கோபால் சொன்னார்!

எப்படிக் கண்டுபிடிச்சார்?  ஏற்கெனவே நாம்  யாரைப் பார்க்கப்போகிறோமுன்னு சொல்லி அவர் படத்தையும் காமிச்சு வச்சதுக்குப் பலன்  கிடைச்சது:-)கிட்டத்தட்ட 50 நிமிஷம் பேச்சு எங்கள் மூச்சாக இருந்தது.  முகம் பார்த்த நேரம் முதல்,  அவர் மனைவி  கமலா  எனக்கு நெருக்கமான தோழியாக ஆகிவிட்டார்கள். அதைவிட, நம்ம சாந்திக்கு இன்னும் நெருக்கம். அலைபேசி எண்களையும் விலாசங்களையும் பரிமாறிக்கொண்டார்கள். ஒரே ஊர்க்காரர்கள் இப்போ. நட்பு தொடரட்டும் என வாழ்த்தினேன்.

ஜி எம் பி ஐயா,  பார்க்கத்தான் வயசானவர்.  உள்ளத்து வயசுக்கும் உடம்புக்கும் சம்பந்தமே இல்லை. கல்லூரி மாணவனின்  துள்ளல், கலைகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம்,  ஒரு இடத்தில் உட்காரமல் ஓடியோடி உபசரித்த பாங்கு,   எதைச் சொல்ல எதைவிட!

அவர் வரைந்த ஓவியங்களைக் காண்பித்தார். வீடு முழுக்க இவர் கைவண்ணமே!

நம்ம கோபாலிடம் இருக்கும் ஒரு  குணம் அப்படியே  நம்ம கமலாவுக்கும்  இருக்கு! மறுபாதிகளின் நண்பர்களைத் தன் நண்பர்களாகவே பாவித்து உரையாடி உபசரிக்கும் அற்புதமான பண்பு.

சுடச்சுட அருமையான காஃபி எங்களுக்கும், காஃபி குடிக்காத சாந்திக்காக ஹார்லிக்ஸும்.


விடைபெறும் நேரம், தான் எழுதிய 'வாழ்வின் விளிம்பில்' சிறுகதைகள் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தார் நம்ம ஜிஎம்பி.

வாசல்வரை வந்து வழி அனுப்பிய தம்பதிகளோடு,  இந்திய வழக்கத்தையொட்டி, அங்கே நின்னே இன்னும் அஞ்சு நிமிசம் பேசினோம்:-)

இனிய தம்பதிகளை சந்தித்த இனிய நினைவுகள்  மனதின் அடுக்குகளில்  இடம் பிடிச்சது!

PIN   குறிப்பு:     '  வாழ்வின் விளிம்பில்'  வாசித்துவிட்டேன்.  மாறுபட்ட சிந்தனையோடு எழுதப்பட்ட சிறுகதைகள்.

26 comments:

said...

இனிய மகிழ்ச்சியான சாதிப்பு...

பதவுரை இணைப்பிற்கு செல்கிறேன்...

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இன்னிக்குக் கடையிலே ஆளே இல்லை!!!!

சிட்னி பயங்கரவாதம் பார்த்துக்கிட்டு இருக்காங்களோ என்னவோ?

said...

மூத்த பதிவரும் நல்லதொரு சிந்தனையாளருமான ஜிஎம்பி ஐயாவை எப்படியோ சந்திக்க முடிந்ததே.. அவ்வளவு தூரம் போய்விட்டு பார்க்கமுடியாமல் போயிருந்தால் எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்? கீதைக்கான அவரது பதவுரை முயற்சி அசாத்தியமானது. அதை இங்கே குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி.

ராமலக்ஷ்மியை சந்தித்தீர்களா? விவரம் அறியக் காத்திருக்கிறோம்.

said...

இனிய தம்பதிகளை சந்தித்த இனிய நினைவுகள் மனதின் அடுக்குகளில் இடம் பிடிச்சது!

இனிய சந்திப்பிற்கு வாழ்த்துகள்..

said...

இதுவரை பதிவில் மட்டும் வாசித்தவரை நேரிலும் பார்க்கமுடிந்ததற்கு மகிழ்ச்சி துளசி. ஓவியங்கள் வெகு அழகு. மிகவும் திறமை படைத்த பதிவாளர். படங்கள் வழக்கம்போல் அழகு

said...

ஐயாவைச் சந்திக்கும் எவரும் தாங்கள் உணர்ந்தவாறே உணர்வர். மதுரை வலைப்பதிவர் விழாவில் சந்தித்தபோது, தாங்கள் தங்கள் சந்திப்பில் கூறிய அனைத்து குணங்களையும் கண்டேன்.

said...

நல்லா இருக்கு. விட்டுப் போனதையும் பிடிச்சாச்சு. நாம எப்போ வரோம்??

said...

பெங்களூரு இளைஞர் G.M.B அவர்களுடனான சந்திப்பை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. ஒரே வரியில் நூல் விமர்சனம். சுருக்கமாகச் சொன்னாலும் நறுக்கெனவே விமர்சனம் சொன்னீர்கள்.

said...

ஜி.எம்.பி ஐயாவை சந்தித்த தருணங்கள் படங்களிலும், வரிகளிலும் தெரிகிறது.

said...

நீங்கள் எங்கள் ஊருக்கு வந்தும் உங்களை மிஸ் பண்ணியது நான் ஒருத்தி தான் போலிருக்கு. அடுத்தமுறை நிச்சயம் சிந்திப்போம்.

said...

மூத்த பதிவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது மனதிற்கு இனிமை . கீதையின் பதவுரை சுட்டியமைக்கு நன்றிகள் பல .
//நம்ம கோபாலிடம் இருக்கும் ஒரு குணம் அப்படியே நம்ம கமலாவுக்கும் இருக்கு! மறுபாதிகளின் நண்பர்களைத் தன் நண்பர்களாகவே பாவித்து உரையாடி உபசரிக்கும் அற்புதமான பண்பு.//
நம் சந்திப்பின் போது நாங்களும் கோபால் அவர்களை பற்றி இப்படியே தான் பேசிக்கொண்டோம் !!!

said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோhttp://blogintamil.blogspot.com/2014/12/2009.html?showComment=1418843328533#c6833658329650163781

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

said...

வாங்க கீத மஞ்சரி.

முதலில் புத்தகம் வெளிவந்தமைக்கு எங்கள் வாழ்த்துகளைச் சொல்லிக்கறேன்.

மொழிபெயர்ப்பு அவ்வளவு சுலபமில்லை.

அதுவும் நம்மூர் பெயர்கள் இல்லைன்னா...... பல்லு சுளுக்கல்தான்:-)

சந்தித்தேன்:-))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கு நன்றிப்ப்பா.

said...

வாங்க வல்லி.

ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை திறமைகள் ஒளிஞ்சுருக்குன்னு பார்த்தால்..... ஹைய்யோ!!!!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தங்களை மதுரை விழாவில் பார்த்தேன். ஆனால் அருகில் வந்து பேசமுடியாமல் போனது வருத்தமே:(

said...

வாங்க கீதா.

இந்த சந்திப்பு நாங்கள் இந்தியா வந்து சேர்ந்த மறுநாள்.

நம்ம சந்திப்பு இதுக்கு 15 நாள் கழித்து!

இடையில் எத்தனை இடுகைகளோ!

பெருமாளுக்கே வெளிச்சம்:-))))

said...

வாங்க தமிழ் இளங்கோ.

சரியாச் சொன்னீங்க.... இவர் முதியோர் உடம்பில் இருக்கும் இளைஞரே:-)))

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

பதிவர் குடும்ப சந்திப்பு எப்போதும் மனமகிழ்ச்சிதானேப்பா!!!

said...

வாங்க ரஞ்ஜனி,

உங்க நிலையைத்தான் தனி மடலில் சொல்லிட்டீங்களே.

பரவாயில்லைப்பா.... நீங்க எங்க ஊருக்கு வாங்க. தவறாமல் சந்திக்கலாம்.

said...

வாங்க சசி கலா.

அப்ப சொன்னது உண்மை என்பதற்கு நீங்களே சாட்சி:-))))

said...

வாங்க ரூபன்.

வணக்கம்.

தகவல் சொன்னதுக்கு நன்றி.

said...

எங்கள் வீட்டுக்கு வர அவ்வளவு சிரமப் பட்டீர்களா. எங்கோ கம்யூனிகேஷன் காப். எங்கள் தெரு( வீதி) யின் பெயரைக் குறிப்பிட்டுதானே 700 மீட்டர் தூரம் என்று சொன்னேன். வீதியின் பெயரைச் சொல்லி வழி கேட்டிருந்தால் இன்னும் கூட அரை மணி நேரம் சேர்ந்து இருந்திருக்கலாம். All is well that ends wellஎன்பார்கள். மிகவும் தாமதமாக வரக் காரணம் சுமார் 15 நாட்கள் வீட்டில் மராமத்து வேலைகள் இருந்ததே. இனி விட்ட இடத்தில் இருந்து தொடரலாம்தானே.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கோவில் என்றதில்தான் குழப்பம் வந்துருச்சு. இனி கோவில் மெடிக்கல் செண்டர் என்று நினைவு வச்சுக்கறேன்.

கஷ்டப்பட்டுக் கண்டு பிடிச்ச வீடு, இனி மறக்கவே மறக்காது:-)

தாமதம் என்று ஒன்னுமில்லை. வலையில் இருப்பதை எப்போது வேணுமுன்னாலும் வாசிக்கலாம்தானே! மராமத்து நல்லபடியாக நடந்து முடிஞ்சதா?

நானும் விழாக்கால விடுமுறையா 10 நாள் இந்தப் பக்கமே வரலை:-)

said...

இனிய சந்திப்பு கண்டுமகிழ்ந்தோம்.

said...

வாங்க மாதேவி.

வருகைக்கு நன்றி.