Thursday, June 26, 2008

ஹனிமூனுக்குத் தனியா.....

இங்கே பக்கத்துலே ஒரு தீவுக்கு நாலுநாளைக்குப் போறோம். நீங்களும் வர்றீங்களான்னு கேட்டாங்க தோழி. நினைச்சவுடனே கிளம்புற கதியிலா இருக்கேன்? மொதல்லே இவர் டூர் கிளம்பாம இருக்கணும். அப்புறம் ஆஃபீஸ்லே லீவு..... எல்லாத்துக்கும் மேலா கோகிக்கு இடம் கிடைக்கணும். சட்னு ஏர்லைன்ஸ் டிக்கெட் கிடைச்சாலும் கிடைக்குமே தவிர இவனுக்கு இடம் கிடைக்கறது கஷ்டம்(-:


ஆஸ்தராலியாவுக்கும் நியூஸிக்கும் இடையில் வடக்கே இருக்கும் நார்ஃபோ(ல்)க் தீவு. தனி அரசாங்கமுன்னு சொன்னாலும் ஆஸ்தராலியாவின் ஆதரவுடன் ஆஸிக் கரன்ஸியை வச்சுச் சமாளிக்கிறாங்க.



நியூஸியைக் 'கண்டுபிடிச்ச' கேப்டன் குக் தான் இதையும் கண்டு பிடிச்சார். வர்ற வழியில் இருக்கேன்னு பார்த்துவச்சுக்கிட்டார். பிரிட்டனில் இருக்கும் குற்றவாளிகளை வேற எங்கியாவது வச்சுத் தண்டிக்கறதுக்கு அவுங்களுக்கும் இடம்வேணுமே. எத்தனையோ இடங்களைக் காலனிகளாப் பிடிச்சாச்சு, இதுவும் இருந்துட்டுப் போகட்டும். என்னா கொறைஞ்சுறப்போகுதுன்னு....... 1788லே இந்தத் தீவைக் கவனிச்சுக்கன்னு ஒரு 7 பேர் பிரிட்டிஷ் காரங்க ஆஸியில் இருந்து வந்தாங்க. இவுங்களுக்குச் சேவகம் செய்ய 9 ஆம்பிளைங்களும் 6 பொம்பளைங்களுமா ஒரு 15 பேர். இந்தப் பதினைஞ்சும் ஆஸியில் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள்.


இப்ப இங்கத்து மக்கள் தொகை 2114. எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும்!!!ஒரு பதினைஞ்சு சதுரமைல் தான் இந்தத் தீவு. ஒரு ஆறுகிலோ மீட்டர் தூரத்துலே இருக்கும் இன்னொருதீவும் இதைச் சேர்ந்ததுதான். (பக்கத்துவீடு?)


வேலையில்லாத் திண்டாட்டம் அறவே இல்லை!!!!! அனாவசியமா ராணுவம் ஏதும் வச்சுக்கலை. பாதுகாப்பு வேணுமுன்னா ஆஸ்தராலியா கொடுக்கணுமுன்னு அம்மா (மாட்சிமை தாங்கிய மஹாராணியம்மா) சொல்லிட்டாங்க.


காலநிலை அருமையா இருக்கு. சப் ட்ராப்பிகல் க்ளைமேட். வாழை, மா, பப்பாளி எல்லாம் எக்கச்சக்கம். முக்கிய தொழில் சுற்றுலாப் பயணிகளை வரவேற்று உபசரிச்சு ஆனந்தப்படுவது.


வாரத்துக்கு ரெண்டு ஃப்ளைட் ஞாயிறும் வியாழனுமா, இங்கே ஏர்நியூஸிலாந்து, ஆக்லாந்துலே இருந்து போய்வருது. 95 நிமிசப் பயணம். 660 மைல்தான்.


1856 வது வருசம் பக்கத்துலே இன்னொரு தீவில் Pitcairn Island கலகம் நடந்து அங்கே உயிரோடு பாக்கி இருந்தவங்க அஞ்சுவாரம் கப்பல் பயணம் செஞ்சு இங்கே வந்து தங்கிட்டாங்க. 193 பேர் கப்பல் ஏறுனாங்க. இங்கே வந்து இறங்கும்போது 194 பேரா இருந்தாங்க. ஒரு குழந்தை இந்தப் பயணத்துலே பிறந்துருச்சு:-)))) இவுங்க வந்ததை நினைவுகூரும் விதமா ஜூன் மாசம் 8 இங்கே தேசிய விடுமுறை.



எல்லாருக்கும் செய்யறதுக்குன்னு ஒரு வேலை இருப்பதால் குற்றங்களின் எண்ணிக்கை ரொம்பக் குறைவு. இதுவரை நடந்த குற்றமுன்னு சொன்னால் ரெண்டு கொலை. அதுலே ஒருத்தரை அவர் மகனே சுட்டுட்டார். (குடும்பத் தகராறு?) இன்னொருத்தரைக் கார் ஏத்திக் கொன்னுட்டாங்கன்னு போனவருசம் தீர்ப்பு ஆகி இருக்கு. இப்ப அது கொலை இல்லை. விபத்துன்னு மனு கொடுத்துருக்கு. பார்க்கலாம், என்ன தீர்ப்புச் சொல்லப்போறாங்கன்னு.



திருடு, பிக்பாகெட்ன்னு ஒன்னுமே இல்லை. திருடிட்டு வேற எங்கே தப்பிச்சுப் போக முடியும்? இல்லே..... திருடுன காசைத்தான் எங்கேன்னு போய் செலவழிக்கிறது?



ஆங்.... சொல்ல மறந்துட்டேனே....... இங்கே வருமான வரிகூட கட்டவேண்டியதில்லையாம். சுற்றுலாப் பயணிகள் மூலமாக வரும் வருமானமே அரசாங்கம் நடத்தப் போதுமானதா இருக்காம். வரிச் சுமையும் இல்லை. வேலை இல்லாமையும் இல்லை. க்ரேட்......!!!!


நார்போ(ல்)க் பைன் மரம் ரொம்பவே பேர் போனது. தீவு முழுக்க எக்கச் சக்கமா விளைஞ்சு நிக்குதாம். இந்த 'நாட்டு'க்கொடியிலும் இதுவே இடம் பிடிச்சிருக்கு. இங்கே நியூஸியிலேயும் இந்த மரக்கன்று வாங்கலாம்.


தோழி ஊரில் இல்லாத சமயம் தோழியின் ரங்கமணி நல்ல ஆஃபர்லே வந்துருக்கேன்னு பயணத்துக்கு புக் செஞ்சுட்டார். இவர் ஒரு ஒர்க்கஹாலிக். லீவு எடுப்பதே ரொம்ப அபூர்வம். சொந்த பிஸினெஸ். பயணம் போறதுக்கே பிடிக்காது. எல்லாருக்கும் உதவி செஞ்சாகணும். நண்பர்கள் இவருக்குச் சொல்லாம வீடு மாத்துனா அவ்ளொதான்.....வீடு மாத்தச் சாமான்செட்டுகளை எடுத்துப்போய் அங்கே இறக்கிவைக்க ரெடியா இருப்பார்.(இந்தக் காலத்துலே..... இப்படி ஒரு மனுசன்)

இவர் ஏற்பாடு பக்காவாச் செஞ்சுட்டார். ஒருவாரம் இவரோட வேலையைப் பார்க்க மாற்று ஆளை ரெடி பண்ணியாச்சு. ஃபுட்(food) டிஸ்ட்ரிப்யூஷன் என்பதால் நிறுத்தி வைக்க முடியாது. இன்னொரு ஜோடியும்( நம்ம நண்பர்கள்தான்) இவுங்ககூடப் போறாங்க. அந்த ரங்கு, தோழியின் ரங்குவின் நெருங்கிய நண்பர்.

இப்படித் தடாலடியாத் தன்னைக் கேக்காம பயண ஏற்பாடு செஞ்சுட்டாரேன்னு ஒரு பக்கம் இருந்தாலும், அட்லீஸ்ட் இப்பவாவது ரெண்டுபேருமாச் சேர்ந்து போக ஒரு வாய்ப்பு கிடைச்சுதேன்னு தங்குவுக்கு மகிழ்ச்சி. ரெண்டாவது தேனிலவா இருக்கட்டுமுன்னு நானும் சொல்லிவச்சேன்.



ஞாயிறு காலை 5.45க்கு இங்கிருந்து ஆக்லாந்துக்கு விமானம் ஏறணும். இது 70 நிமிஷப் பயணம். பிறகு அங்கேயிருந்து தீவுக்கு 95 நிமிஷம். சனிக்கிழமை இரவு இங்கே பயங்கரமான பனி. ஸ்நோ விழுந்து ஊரெல்லாம் வெள்ளை. ஷட்டில் புக் பண்ணி காலையில் 4.45க்கு ஏர்ப்போர்ட்ப் போய்ச் சேர்ந்தாச்சு.
கூட வரும் இன்னொரு ஜோடி ஏற்கெனவே செக் இன் செஞ்சுட்டுக் காத்துருக்காங்க. இங்கேயே ரெண்டு ப்ளைட்டுக்கும் போர்டிங் பாஸ் கொடுத்துருவாங்க. தோழியோட டிக்கெட்டு, பாஸ்போர்ட் எல்லாம் ஸ்கேன் செஞ்சு போர்டிங் பாஸ் கையில் வந்துருச்சு. இப்ப தோழியின் ரங்குவின் முறை.


ஸ்கேன் செஞ்சால்....... ஐயகோ...... பாஸ்போர்ட் காலாவதி ஆகி இருக்கு!!!!!!
ஞாயித்துக்கிழமையாப் போச்சு. இல்லேன்னா அவசரகாலக் கடவுச்சீட்டுன்னு 100 டாலர் கட்டி எடுக்கலாமாம். குறைஞ்சபட்சம் ஸ்கேன் செய்யுமுன் பார்த்திருந்தா வேற எதாவது செஞ்சுருக்கலாம்.ஒரு தடவை ஸ்கேன் செஞ்சுட்டா அது பதிவாகிரும். இப்ப ஒன்னும் செய்ய முடியாதுன்னுட்டாங்க.
தோழி மட்டும் இன்னைக்குப் போகட்டும். அடுத்த ப்ளைட்டுக்கு இவர் போய்ச் சேர்ந்துக்கலாமுன்னா..... அது வியாழக் கிழமைதான். ஏற்கெனவே செஞ்ச பேக்கேஜ் டீல் படி இவர் போய் இறங்கும் ப்ளைட்டில் தோழி கிளம்பி வந்துறணும்.


அப்புறம்?



தோழியை வற்புறுத்தி 'நீயாவது போயிட்டுவா இல்லேன்னா கட்டுன காசு பாழாகிருமு'ன்னு அனுப்பி வைச்சுருக்கார்.



இதனால் அறியப்படும் நீதி என்ன?


கடவுச் சீட்டுக் காலாவதியாகும் நாளைக் கணக்கு வச்சுப் புதுசு வாங்கிக்கணும்.


நம்ம வகுப்புக்கு ஒரு இன்ப அதிர்ச்சி:

இந்த வாரம் முழுசும் பயணம் செஞ்சு அலுத்துப்போன வகுப்புக் கண்மணிகளுக்கு ஒரு 10 நாள் விடுமுறை விட்டுருக்கேன். நல்லா ஓய்வெடுங்க.


நானும் அப்படியேப் பொடிநடையா ஃபிஜித் தீவுகளுக்குப் போயிட்டு வாரேன். அங்கே ஒரு கல்யாணம். ரங்குவும் கூட வருகிறார். ரெண்டு பேருக்கும் கடவுச் சீட்டு காலாவதி ஆகலை. ஆனால்....... ரங்குவின் சீட்டில் இன்னும் ஒரு தாள் (அதுவும் ஒரே ஒரு பக்கம்)தான் பாக்கி இருக்கு. பின்னே மாசம் நாலுமுறை நாட்டைவிட்டுப் போனா எப்படி?


எஞ்சாய் த ப்ரேக். பை பை. ஸீ யூ !!

Tuesday, June 24, 2008

ஒளிரும் புழுக்கள் ( தொடரின் நிறைவுப் பகுதி)

அந்த மலைப்பாதை முழுசும் ரெண்டு பக்கங்களிலும் பெயர் தெரியாத ஏதேதோக் காட்டுப்பூக்கள், பல வண்ணங்களிலும் 'கொல்'ன்னு பூத்துருந்துச்சு.
இன்னொரு படகில் ஏறுனதும் சாப்பாடு ஆச்சு. அதுதான் சவுண்டுப் பயணம்.



வழி நெடுக அங்கங்கே சின்னக் குன்றுகளில் கடல் சிங்கங்கள் கூட்டம் கூட்டமாப் படுத்துருக்குங்க. அதனால் கரையை ஒட்டி ரொம்ப ஓரமா இல்லாம நடுவிலேயே படகு போகுது. கொஞ்சம் குறுகலான இடம். ரெண்டு பக்கமும் மலைகள் கைக்கு எட்டும் தூரத்தில். இங்கேயும் சின்னச் சின்னதா நீர்வீழ்ச்சிகள் எல்லாப் பக்கங்களிலும். எதுவுமே கூடிப்போயிட்டால் ஒரு அலட்சியம் வந்துருமில்லே? அதேதான்.... அதோ...நீர்வீழ்ச்சி! இருந்துட்டுப் போகட்டுமே.........



ஒரு பெரிய குளம் போல இருக்கும் இடத்துக்கு வந்ததும், 'இங்கே டால்ஃபின்கள் இருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பார்க்கலாமுன்னு கேப்டன் சொன்னார். சுத்திவரப் பார்த்துப் பார்த்து ஏமாற்றமா ஆயிருச்சு. ஒன்னும் காணலை. கேப்டன் படகின் எஞ்சினை நிறுத்தினார். யாரும் பேசிக்கலை. நிசப்தமா இருக்கும் சூழலில் திடீர்னு ஒரு 'க்ளக்'ன்னு மெலிசாக் கேட்டுச்சு.'



அட! டால்ஃபின்! குதிச்சு மறைஞ்சது. ஒரு நிமிசம் மறுபடி நிச்சலனம். இப்பப் படகைச் சுற்றி எல்லாப் பகுதிகளிலும் 'க்ளக்' சப்தமும் துள்ளலுமா அங்கே ஒரு நாட்டிய நாடகம். ஆஹாகாரமும் ஊஹாகாரமுமா நாங்க எல்லாரும். பலே பலே பேஷ் பேஷ் சபாஷ்.......கைதேர்ந்த இயக்குனரின் கட்டளைக்கு ஆடும் நடன மங்கையர்கள். முதல்லே வந்து பார்த்துட்டுப்போனது பைலட். ஆடியன்ஸ் எல்லாரும் வந்தாச்சான்னு பார்த்து அரங்கத்தை ஸ்டடி பண்ணுமோ?


அங்கிருந்து படகு கிளம்பி ரொம்ப மெதுவா( டால்ஃபின் ஏதும் அடிபட்டுக்காத வேகம்) ஓட்டிக்கிட்டே டாஸ்மன் கடலுக்கு வந்துட்டோம். குளம் மாதிரி இருந்த சூழல் மாறி தண்ணீர் தூக்கித்தூக்கி அலையா ஆட்டுது. எனக்கு ஸீ சிக்னெஸ் உண்டு. தாக்குப் பிடிக்க முடியாமல் தலை சுத்துது. வாந்தி வரும்போல வயித்தைப்பிரட்டிக் குமட்டல். ஓடிப்போய் பாத்ரூம் சிங்லே தலை குனிஞ்சவள்தான். திரும்ப மலை அடிவாரப் படகுத்துறை வரும்வரை அங்கேயே இருக்கவேண்டியதாப் போச்சு(-:



காத்து நின்ன பஸ்ஸில் ஏறி மலைக்கு இந்தப் பக்கம் இன்னொரு படகுத்துறையில் கொண்டுவந்து விட்டாங்க. அஞ்சு நிமிசத்துலே காலையில் இங்கே கொண்டுவந்து விட்டுப்போன படகு வருவது தூரத்துலே கண்ணுக்குப் பட்டது. அதுலே ஏறி மானாபுரி துறைக்கு வந்து சேர்ந்தோம். காலையில் அங்கே நிறுத்திட்டுபோன காரில் அறைக்கு வந்தாச்சு.



மறுநாள் இடத்தைக் காலி செஞ்சுறப்போறோமேன்னு கேம்பின் உள்ளே கொஞ்சம் சுத்துனால்..... பசங்க விளையாட ப்ளேன் எல்லாம் வச்சுருந்தாங்க. வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பாகத்தையே அழகான சிம்மாசனமா செஞ்சு வச்சுருக்காங்க. நானும் அதில் அமர்ந்து அருள் பாலிக்கப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். ஒருநாள் பயன்படாமலா போயிரும்? அழகான அமைதியான இடம். முக்கியமா இங்கே டிவியில் ஒரு சேனல் மட்டுமே வேலை செய்யும்.




( மேலே உள்ள படத்தை ஸ்கேன் பண்ணச் சோம்பல்பட்டுக்கிட்டு ஃபோட்டோ எடுத்துப் போட்டுருக்கேன்)



மறுநாள் காலையில் 10 மணிக்குக் கிளம்பி டெ அனா(வ்) வந்தோம். 15 நிமிஷ ட்ரைவ்தான். கடைசி அட்ராக்ஷன்ன்னு க்ளோவொர்ம் கேவ்ஸ் பார்க்கணும். டெ அனாவ் ஏரியில் படகுத்துறையில் காத்து நிற்கும் படகில் பயணம்.. அரைமணி போல இருக்கலாம். மேற்குக்கரையில் ஒரு கட்டிடம் போல இருந்த இடத்துலே இறங்குனோம். எங்களுக்கு முன்பே வந்த ஒரு கூட்டம் அங்கே நிக்குது. வழிகாட்டி ஒருத்தர் வந்து குகையின் கதையைச் சொன்னார். மவொரிகளின் வச்ச பெயராம் இந்த டெ அனாவ் என்பது. குகையும் அதுக்குள்ளே கொப்புளிச்சுப்போகும் வெள்ளமும் என்று பொருளாம். அவுங்க ஆங்கிலத்தில் சொன்னது இதுதான்னு நினைக்கிறேன்.



முக்கியமா போட்டோ எடுக்க அனுமதி இல்லையாம். ஃப்ளாஷ் வெளிச்சம் அந்த ஒளிரும் புழுக்களுக்கு ஆபத்தாம். சத்தம்கூட இதுகளுக்குப் பிடிக்காதாம்.
(அங்கே தண்ணீர் போடும் சத்தத்தை விடவா?)1950களின் இறுதியில்தான் இந்தக் குகையை வெளியாட்கள் வந்து பார்த்துப்போகும் வசதிகளைச் செஞ்சாங்களாம்.



ஏழெட்டுப்பேர் மட்டுமே ஒருமுறை உள்ளே போகலாமாம். குகைக்குள்ளே கொண்டு போனார். மெலிசான வெளிச்சத்தில் இரும்புக் கிராதிகளைப் பிடிச்சுக்கிட்டே நடக்கறோம். சில இடம் ரொம்பவும் குறுகலா இருக்கு. தண்ணீர் சத்தம் மட்டும் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. குகையின் கூரையிலிருந்து வெள்ளி நூல்நூலா இறங்கிவருது. இது limestone குகையின் stalagmites போல இருப்பதில் எங்கிருந்தோ ஒரு மெல்லிய வெளிச்சம் வந்து விழுவதால் ஜொலிப்பு தூக்குது.


குனிஞ்சு வாங்கன்னு எச்சரிக்கை வருது. தலையை இடிக்கும் பாறைகள். வளைவில் திரும்புனதும் பொங்கிவரும் தண்ணீர்.
அதுலே ஆடும் படகு. ரொம்பச் சின்னது. கவனமா ஒவ்வொருத்தரையும் கையைப் பிடிச்சு படகில் ஏத்துனாங்க. கனமான இரும்புக் கயிறு(கேபிள்) குகையின் சுவர்களில் இணைச்சிருக்கு. அதைப் பிடிச்சுக்கிட்டேப் படகை நகர்த்தறார் படகோட்டி. தலையைக் குனிஞ்சுக்குங்கோன்னு ஒரு கட்டளை. சின்னதா இருந்த ஒரு இடைவெளியில் படகு நுழைஞ்சது. ஒரே இருட்டு. கண்ணே தெரியலை. எல்லாரும் குனிஞ்ச தலை நிமிராம மூச்சை அடக்கிப்பிடிச்சுக்கிட்டு இருக்கோம்.


மேலே பாருங்கன்னார். அட! நம்ம பாரதியார், வந்துட்டுப் போனாரா என்ன?

பட்டுக் கருநீலம் புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத்திரங்களடி


இதைவிட வேற யாராவது விளக்க முடியுமா?





திரும்ப இரும்புக்கயிறு வழிகாட்டப் படகு வெளியில் வந்தது. கவனமா இறக்கிவிட்டதும் கைப்பிடிக் கம்பியைப் பிடிச்சுக்கிட்டே வெளியில் வந்தோம். மறுபடி படகுத்துறை, படகுச் சவாரின்னு டெ அனாவ் ஊர்ப்பக்கம் கரைக்கு வந்து சேர்ந்தோம். இதுக்கே 3 மணி நேரம் ஆச்சு.



இந்தப் புழுக்கள் பார்க்க எப்படி இருக்குமுன்னே தெரியலை. சாதாரணப்புழுக்கள் மாதிரிதான் இருக்குமாம். பிசுபிசுன்னு அதுங்க வெளியேத்தும் ஒருவிதமான திரவத்தில் மேற்கூரையோடு ஒட்டிப்பிடிச்சுக் கிடக்குமாம். எதாவது சின்ன பூச்சிகள் இதோட வெளிச்சத்தால் கவரப்பட்டு அங்கே போனால் அந்த பிசினில் ஒட்டிக்கும். அதை இதுகள் ஸ்வாஹா செஞ்சுரும். நகர்ந்துக்கிட்டே போகுமுன்னு சொன்னாங்க. பார்த்தா அப்படித் தெரியலை.


படங்கள் எடுக்க அனுமதி இல்லாததால் இங்கேபோய்ப் பாருங்க. அவுங்களே சில படங்களைப்போட்டு வச்சுருக்காங்க.



குவீன்ஸ் டவுன் வழியா கிறைஸ்ட்சர்ச்சுக்கு ஒரு வழியா வந்து சேர்ந்தோம். கிட்டத்தட்ட 10 மணி நேர ட்ரைவ். வரும் வழியில் வழக்கம்போல் எங்களைக் கண்டுக்கிட்ட கூட்டம் (உண்மையான கூட்டம் இதுதாங்க. எங்க ஒவ்வொருத்தருக்கும் 14 ஆடுவீதம் இருக்கு!!)



கூடவே வந்து உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி.


பி.கு: சின்ன சைஸில் இருக்கும் 3 கு(பு)கைப்படங்கள் சூடா இருக்கும். பார்த்துக் கவனமா இருங்க. சுட்டதாச்சே.......:-)))))


இன்னொரு விஷயம் சொல்ல விட்டுப்போச்சு. இந்தப் பயணம் போய்வந்தது சமீபத்தில்தான், ஒரு 13 வருசமாச்சு. இன்னும் எல்லாம் அப்படிக்கப்படியே இருக்கு. மலையை நகர்த்திவைக்க யாரால் முடியுது? நம்ம சின்ன அம்மிணியைத் தவிர:-))))




சந்தேகம் என்னும் ஒரு சரக்கு..... (தொடர் பகுதி 4)

பெண்களுக்கு மட்டுமா இருக்கு? ஆண்களுக்கும் இருக்குன்னு நிரூபிக்க ஒரு சவுண்டுக்கே இந்தப் பெயரை வச்சவுங்களை........ஒருவேளை இது சவுண்டுக் கணக்கில் வருமோ இல்லை வராதோ என்ற டவுட்டா?


மறுநாள் டவுட்ஃபுல் சவுண்டு போறோமாம். முழுநாள் பயணம். இங்கே மானாபுரியில் இருந்தே கிளம்பறாங்க. காலையில் எட்டுமணிக்கு படகாஃபீஸ் வந்துறணும். வந்துட்டோம். அங்கேயே நம்ம டிக்கெட்டைச் சரிபார்த்துட்டு, இதுலே உங்களுக்கான பகல் சாப்பாடும் சேர்ந்துருக்கு. இதுலே எதுவேணுமுன்னு சொல்லுங்கன்னு ஒரு பட்டியலைக் காமிச்சாங்க. சாகபட்சிணிக்கு என்ன இருக்குன்னு பார்த்தேன். கிடைச்சது வெஜி ரோல்ஸ். எல்லாம் பர்கர் சமாச்சாரம்தான். bun பன்னா வட்டமா வச்சா பர்கர். சிலிண்டராட்டம் நீளமா இருந்தா ரோல். எல்லாம் அதே மாவுதான். அதே லெட்டூஸ், தக்காளின்னு உள்ளே வைக்கும் சமாச்சாரமும் ஒன்னுதான்.
அவுங்க அதையும், ஒரு ஜூஸ் டப்பாவும், ஒரு இனிப்புத் தயிரும் வச்ச பொதியைத் தந்து லஞ்சுக்கு வச்சுக்குங்கன்னாங்க.
அடப் பாவிகளா..... படகுலே இப்படித்தான் பகலுணவுன்னு தெரிஞ்சுருந்தா நாமே எதாவது கொண்டுவந்துருக்கலாமேன்னு இருந்துச்சு. நாங்க இங்கெல்லாம் இப்படிப் பயணம் போகும்போதுச் சின்னதா ஒரு ரைஸ் குக்கர், ஒரு கடாய், கொஞ்சம் மசாலா, அரிசி, சின்னதா ஒரு பாட்டிலில் எண்ணெய், காலை உணவுக்குன்னு சீரியல்கள், ப்ரெட், ஜாம், மார்ஜரின், நாலைஞ்சு வெங்காயம், ரெடிமேட் உப்புமா(ரெஸிபி இன்னொருநாள் சமையல் வகுப்பில் சொல்றேன்) முக்கியமா காஃபி, டீ, சக்கரை, ஒரு கேன் பால் எடுத்து ஒரு அட்டை டப்பாவில் வச்சு கார் டிக்கியில் வச்சுக்குவேன். உப்பு ஒரு சின்ன டப்பாவில் எடுத்துக்கணும். மறந்துறாதீங்க. ஒரு ஃப்ளாஸ்க் இருந்தால் உத்தமம். இப்பெல்லாம் உடையாத வகையில் கிடைக்குதே. நம்ம வயிறு வாடக்கூடாதில்லே........

நான் பொதுவா வீட்டில் பாட்டிலில் இருக்கும் பொருட்களை அப்படி அப்படியே எடுத்து வச்சுருவேன். அதுபாட்டுக்கு வந்துட்டுப்போகட்டும் கழுதைன்னு:-)

அங்கங்கே காய்கறிகள் கிடைக்கும். இல்லைன்னா எதாவது ஒரு கடையில் கண்டிப்பா மிக்ஸட் வெஜிடபிள் (உறைஞ்சது) கிடைக்கும். எல்லா மோட்டல், கேம்ப் டூரிஸ்ட் ப்ளாட்களிலும் பாத்திரங்கள் வச்சுருப்பாங்க. ஆனா....... எனக்கு ......கொஞ்சம் பேஜார்தான். அதனால் காபி மக், தட்டுகள், கரண்டி, ஸ்பூன் இப்படிக் கொஞ்சூண்டு கையில் எடுத்துக்கிட்டுப் போயிருவேன். நானா சுமக்கப்போறேன். கார்தானே? ஊறுகாய் பாட்டில், புளிக்காய்ச்சல் எல்லாம் நினைவிருக்கட்டும். ஃப்ரிட்ஜ் எல்லா இடத்திலும் இருக்கு. பொதுவான கிச்சன்னு சொன்னா அங்கே இருக்கும் ஃபிரிட்ஜில் பால், தயிர் டப்பாவில்நம்ம பெயரை எழுதி வைக்கலாம். யாரும் எடுக்க மாட்டாங்க. தனியா டூரிஸ்ட் ப்ளாட் கிடைக்கலேன்னா இப்படி ரூம் மட்டும் எடுத்துக்கலாம். இது ரொம்ப மலிவுதான். டெண்ட் வச்சுருந்தா பிரச்சனையே இல்லை. புக்கிங் கூட பண்ண வேணாம். மோட்டார் கேம்ப்லே நம்ம டெண்டுக்கு ஒரு இடம் கொடுப்பாங்க. அதுலே கூடாரமடிச்சுத் தங்கிக்கலாம். அடுக்களை, பாத்ரூம், டிவி ரூம், வாஷிங் மெஷீன் & ட்ரையர் ரூம் எல்லாம் பொதுவா படு நீட்டா இருக்கும்.
எனக்குத்தான் இன்னும் கூடாரம் அடிச்சுக்கத் தோணலை. டூரிஸ்ட் ஃப்ளாட் இருக்கான்னு பார்த்து புக் பண்ணிக்கிறதுதான் சரியா இருக்கு.


எல்லா இடங்களிலும் செக் அவுட் டைம் 10 மணி. ஒருநாள் மட்டுமுன்னு போறவழியில் அங்கங்கே என்ன இடத்தில் தங்கறோமுன்னு பார்த்து பதிவு செஞ்சுக்கலாம். இப்ப நம்ம பயணத்தில் மூணு நாள் தங்கணுமுன்னு ஒரே இடத்தில் 3 படுக்கை அறை ப்ளாட் எடுத்துக்கிட்டோம். ரைஸ் குக்கரில் சாதம் செஞ்சுக்கணும். எதாவது ஒரு காயை கொஞ்சம் மசாலாவோட கறியா செஞ்சுக்கிட்டு, கடையில் தயிர் (ப்ளெயின் நேச்சுரல் யோகர்ட்) வாங்கிக்கலாம். சிப்ஸ் இத்தியாதிகள், நொறுக்குத்தீனிகள் எல்லாம் வீட்டில் இருந்தே கொண்டு போயிறணும். இதெல்லாம் காலை 10 மணிக்கு முன்னாலே டிக்கியில் ஏத்திறனும்:-)))))

சுத்திப்பார்த்து மாலை தங்குமிடம் வந்துட்டால் ராத்திரி சாப்பாட்டுக்கு எதாவது செஞ்சுக்கலாம். இண்டியன் ரெஸ்டாரண்டு தேடுவது முதல் வேலை. ஒன்னும் இல்லைன்னா சமைச்சுக்கலாம். களைப்பா இருக்கும்போது சிம்பிளா ஒரு தயிர்சாதம் போதாதா?

ரெண்டு ஃப்ளாஸ்க் வச்சுக்குவேன். ஒன்னு கொதிக்கும் வெந்நீர். இன்னொண்ணு சூடாக்குன பால். பச்சைப்பாலை ஊத்துன காஃபி & டீ குடிக்கச் சகிக்காது. யக்(-: பயணத்துலே பகல் சாப்பாடு, மிட் மார்னிங் காஃபி ப்ரேக், மாலை டீ டைம் இப்படி டாண் டாண்னு அந்த நேரத்துக்கு வண்டியை ஓரங்கட்டிருவோம். எனக்கு முந்தியெல்லாம் மாலை 4 மணிக்கு டீ குடிச்சே ஆகணும், கார் எங்கே போய்க்கிட்டு இருந்தாலும். இப்ப ரொம்பவே மாறிட்டேன்.

பாருங்க பேச்சு சுவாரசியத்துலே எங்கியோ போயிட்டேன்....... படகாஃபீஸ்லே கொடுத்த லஞ்ச் பேக்கை பையில் போட்டுக்கிட்டு படகில் ஏறுனோம். குட்டிக்குட்டியா அங்கங்கே சில தீவுகள். ஒரு தீவுமட்டும் பளிச்ன்னு தீ பிடிச்சாப்புலெ சிகப்பா இருக்கு. எல்லாம் ராட்டா மரங்கள் பூத்துக்குலுங்கும் சமயம். . இதுதான் நியூஸியின் கிறிஸ்மஸ் மரம். இதுக்கு பொஹுட்டுக்காவான்னு (Pohutukawa) மவோரி பெயர். இதுவும் ராட்டாவும் வெவ்வேற மரங்கள்ன்னும் சொல்றாங்க. ஒரு பெரிய மலை அடிவாரத்தில் படகுலே இருந்து இறங்கி எங்களுக்காகக் காத்து நின்ன பஸ்ஸில் ஏறினோம். மலைப்பாதையில் போய்க்கிட்டே இருந்த வண்டி கொஞ்சம் கொஞ்சமாக் கீழே போய்க்கிட்டு இருக்கேன்னு பார்த்தால் ஒரு குகைக்குள்ளே இருக்கோமுன்னு புரிஞ்சது.

ரெண்டு கிலோமீட்டர் நீளமான குகை. அங்கே ஒரு இடத்தில் மலையின் அடித்தளத்தைக் குடைஞ்சு பவர் ஸ்டேஷன் அமைச்சு இருக்காங்க. மானாபுரி ஏரியில் இருந்து இந்த இடத்துக்கு 178 மீட்டர் உயர வித்தியாசம் இருக்குதாம். அந்தத் தண்ணீர் இதுலே பைப்லைன் வழியா இறங்கி இங்கத்து டர்பன் சுத்தும்போது மின்சாரம் எடுக்கறாங்க. அதுக்கப்புறம் வெளியேறும் தண்ணீர் மலைக்கு அடுத்தபக்கம் வந்து சவுண்டில் கலந்துருது. பவர் ஸ்டேஷனுக்காக தரையில் தோண்டுன குகை 39 மீட்டர் ஆழம். 111 மீட்டர் நீளம் & 18 மீட்டர் அகலம்,. இதோட வயசு வெறும் 39 தான். 1969 லே இருந்து மின்சாரம் சப்ளை தொடங்குச்சு. வெளியேறும் தண்ணிக்கான(tailrace) ரெண்டாவது குகைவழியை இப்போ ஒரு 6 வருசத்துமுன்னால் தோண்டி இருக்காங்க. இப்ப அங்கே 7 டர்பைன்கள் இருக்கு.

கட்டுமானப்பணிகள் & ஆரம்பகால ஆராய்ச்சிகள்ன்னு எடுத்துக்கிட்ட காலம் 65 வருசம். நல்லாத்தான் செலவு செஞ்சுருக்காங்க அந்தக் காலத்துலே. இதைப் பார்க்கணுமுன்னு துடியாத் துடிச்சவர் கோபால்தான். எல்லாம் தொழில் பக்தி!!. எலெக்ட்ரிகல் எஞ்சிநீயர் ஆச்சுங்களே. விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்த பவர் ஸ்டேஷன் நபரிடம் என்னென்னவோ கேட்டுக்கிட்டு இருந்தார்.

பக்காக் கட்டிடம். நாங்க நிக்கும் பெரிய மாடி ஹாலில் நடுவில் திறந்த வெளியா சரேல்ன்னு இறங்கும் இடத்தில் பெரூசா வட்டவட்டமா இரும்புத் தட்டுகளை வச்சா மாதிரி இருக்கு. பளபளன்னு காங்க்ரீட் தரை மின்னுது. 'ஹம்'ன்னு ஒரு ரீங்காரம் தம்புரா வாசிக்கிறதுபோல தொடர்ந்து கேட்டுக்கிட்டு இருக்கு. அவ்வளோ பெரிய இடத்தில் ஒரு நாலைஞ்சு ஆட்கள்தான் கீழே இங்கேயும் அங்கேயுமாப் போய்வந்துக்கிட்டு இருக்காங்க. யாரும் கீழ்ப்புறம் இறங்கிப் போக அனுமதி இல்லை.

நான் படிக்கும்(!) காலத்துலே மேட்டூர் பவர் ஸ்டேஷன் போயிருக்கேன். அது போல இல்லாம இது வேற மாதிரி இருக்கேன்னு சுத்திவரப் போட்டுருக்கும் கைப்பிடிக் கம்பியைப் பிடிச்சுக்கிட்டு எட்டிப் பார்த்துக்கிட்டே யோசிச்சுக்கிட்டும் பராக்குப் பார்த்துக்கிட்டும் நிக்கும்போது 'தடால்'ன்னு ஒரு சத்தம்.

கோபால் வீடியோ எடுத்துக்கிட்டு இருந்தார். அவரோட கேமெராவிலே இருந்த பேட்டரி (நல்லா எருமைக்கனம் இருக்கும்) நழுவி அப்படியே விழுந்து தெறிச்ச சப்தம்தான் அது. நாங்க ஒரு பத்துப்பேர் மொத்தமா நின்னுருந்தோம். எல்லாரும் கப்சுப்ன்னு ஆகிட்டோம். நல்லவேளை அப்ப அந்த வழியா கீழே யாரும் நடமாடலை. அப்புறமா பவர் ஸ்டேஷன் நபர்தான் போய் எடுத்துக்கிட்டு வந்து கொடுத்தார். அந்தச் சத்ததுக்கு அது தூள் தூளா ஆகிருக்கணும். அதுக்கு ஆயுசு கெட்டி. லாங் லைஃப் பேட்டரி:-)))) வெளிப்புற ப்ளாஸ்டிக் கூடு திறந்துக்கிச்சு. அதை ஒரு ஸ்டிக்கி டேப் போட்டுச் சுத்துனதும் ஒருமாதிரி வேலை செஞ்சது:-)))) ( நல்லதா ஒரு புது வீடியோ கேமெரா வாங்கிக்கணும்.)

அங்கிருந்து அதே பஸ்ஸில் கிளம்பி மலையின் மறுபக்கத்தில் இருக்கும் படகுத்துறையில் இறங்கி விட்டாங்க. மலை உச்சிக்குப் போனப்ப 'லுக் அவுட் பாய்ண்ட்'ன்னு ஒரு இடத்தில் ஒரு அஞ்சு நிமிசம் நிறுத்தம்.
எல்லாம் படம் க்ளிக்கத்தான். டவுட்ஃபுல் சவுண்டு நீளமா மலைகளுக்கு இடையில் போய்க்கிட்டே இருக்கு.
பி.கு: சின்ன சைஸ் படங்கள் அன்பளிப்பு 'ஆண்டவர்' :-)


Sunday, June 22, 2008

யானைக்குப் பக்கத்திலே சிங்கம்!!(தொடர் பகுதி 3)

யானைக்குப் பக்கத்தில் சிங்கம் இருந்தா எப்படி இருக்குமுன்னு இங்கேதான் பார்த்தேன். சுத்திவர இருக்கும் மலைகளுக்கும் பெயர் வச்சுருக்காங்க. ஆனைமலை ன்னு ஒன்னு இருக்குன்னு சொன்னா நீங்க நம்பணும். இது என்னடாப் புதுக் கதை? நமக்காகச் சொல்றாங்களான்னு பார்த்தேன். இன்ன இடத்துலே நின்னு இன்ன திக்கைப் பாருங்க. அது யானைத் தலை, இது உடம்பு இது வால் பகுதின்னு அச்சடிச்சுக் கொடுத்துட்டாங்கல்லே? சிங்கமலை இருக்கு:-)))



மைட்டர் பீக் ன்னு ஒரு சிகரம் இங்கேதான் இருக்கு.
கிறிஸ்தவ மத பிஷப்புக்கள் போட்டுக்கும் தலைத் தொப்பிக்குத்தான் மைட்டர்ன்னு பெயராம். இந்த மலையின் சிகரம் அசப்புலே பார்க்க இப்படி இருக்குன்னு, இந்த பகுதியை சர்வே பண்ணவந்த குழுவில் இருந்த ஒருத்தர் மைட்டர் பீக் ன்னு இந்தப் பெயரை வச்சுட்டாராம். பெயர் வைப்பதில் கில்லாடிகளா இருக்காங்க இல்லே? இன்னொரு ருசிகரமான(?) தகவல் சொல்லிக்கவா? இதே பெயரில் பாகிஸ்தான்லே ஒரு மலைச்சிகரம் இருக்கு. அது ரொம்பவே பெருசு. நியூஸியைவிட மூணரை மடங்கு உசரம்.







மைட்டர் போட்டுருக்கும் பிஷப்பிடம் இருந்து ஆசி வாங்கும் கட்டுரை ஆசிரியை:-)
எங்களை இறக்கிவிட்ட படகே திரும்பிவந்து எங்களை ஏத்திக்கிட்டு அந்த சவுண்டுலே ரவுண்டு போய்க்கிட்டு இருக்கு. ஒரு பாறை முழுசும் இளவெயில் காஞ்சுக்கிட்டுச் சோம்பலாப் படுத்திருக்கும் ஸீ(ல்) லயன்கள் மனுசர்களின் பேச்சுச்சத்தம் கேட்டோ என்னவோ மெள்ளத் தலையை உயர்த்திப் பார்த்துட்டு,


"போங்கடா மனுசப்பயலுவளா...... வேற வேலை இல்லையாக்கும்?" என்றது போல ஒரு லுக் விட்டதுங்க.




'தினந்தினம் ஒரே மாதிரியான சாப்பாட்டைத் திங்கறீங்க இல்லே? அதான் நாக்குச் செத்து இப்படிப் போரடிச்சுக் கிடக்குறீங்க'ன்னு நானும் சொல்லிவச்சேன்.


பொழுதன்னைக்கும் தண்ணியிலே இருந்து ஒவ்வொண்ணும் மழமழன்னு யம்மா யம்மான்னு மினுங்குதுங்க. கோட்டுப் போட்ட சின்ன மச்சான்கள்தான்.ஃபர் சீல்கள்.( Fur seals) வகைகள்.



இவ்வளோ உசரத்துக்கு எப்படி இழைஞ்சு இழைஞ்சு ஏறிப்போயிருக்குன்னு பாருங்க!!!!





தமிழ்ச்சினிமாவில் குத்தாட்டம் ஸீன்லே ஆட்டக்காரி போட்டுக்கும் தாவணி மாதிரி அங்கங்கே பச்சை மாமலை மார்பில் மெல்லிசா நூலருவிகள்.








வேடிக்கையை இன்னும் நல்லாப் பார்க்கக் கப்பல் மேல்தளத்தில் போய் உட்கார்ந்தோம். எல்லாச் சனமும் இங்கேதான் இருக்கு. (நினைவிருக்கா? 4 பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்று கொள்க. )ஸ்ட்ர்லிங் ஃபால்ஸ் பக்கம் போய்க்கிட்டு இருக்கோம். கேப்டன் விலாவரியா காட்சிகள் விளக்கம் சொல்லிக்கிட்டே வந்தவர், எல்லாரும் கேமெராவை எடுத்து உள்ளே வச்சுருங்கன்னார். காட்சிகளைப் படம் புடிக்கவிடாம இது என்ன புதுசா? அழகை எல்லாம் அள்ளிக்கிட்டுப் போயிருவோமுன்னு நினைச்சுக்கிட்டாரா?



இல்லையாம். தள்ளிக்கிட்டுப் போயிருமாம் தண்ணின்னு சொல்லிப் படகை நீர்வீழ்ச்சிக்குச் சமீபமாக் கொண்டு போயிட்டார். என்ன ஏதுன்னு தலையை உயர்த்திப்பார்க்க முயலும் வேளையில் ஜாக்கெட் எல்லாம் போட்டுருந்தும் ஆகாசகங்கையில் தொப்பலா நனைஞ்சுட்டோம். அந்தப் பகுதியில் சுழன்று அடிக்கும் காத்துலே தண்ணி ஒரு ஆளையும் தப்ப விடலை. இந்த கலாட்டாவில் கூட்டத்தில் இருந்த ஒருத்தரின் மூக்குக்கண்ணாடி உண்மையில் 'பறந்தே' போயிருச்சு! புகையில் மாட்டிக்கிட்டதுபோல கண்ணையே திறக்கமுடியலை.



இதுக்கெல்லாம் அசரமாட்டோமுன்னு ஒரு போலி வீரம் காமிக்கலாமுன்னாலும்........ ஹைய்யோ............ மேல்தளம் பூராவும் தெப்பக்குளம். கம்பியேணியில் அடிச்சுப்புடிச்சு இறங்கிக் கீழ்தளத்துக்கு ஓடுனோம். ஸ்டெர்லிங் நீர்வீழ்ச்சி இதுவரை லீவே எடுக்கலையாம். வருஷம் முழுசும் ஒரே 'ஜோ'தான்:-)



ஒரு பத்து நிமிஷம் இங்கே ஸ்டாப் போட்டுட்டார் நம்ம கேப்டன். அதுக்குப்பிறகு பயணம் நேராக் கரைக்குத்தான். வேற ஒன்னும் பார்க்க முடியாம எல்லாரும் துணிகளைப் பிழிஞ்சுக்கிட்டும் தலையைத் துண்டால் துடைச்சுக்கிட்டும் இருந்தோம். மஜாவான கூட்டுக்குளியல்தான்:-)))





அடிக்கும் குளிர் காத்துக்கும் ஈர உடுப்புக்கும் என்னதான் அப்படியொரு ஜோடிப்பொருத்தமோ....... சில்லான சில். காரில் இருக்கும் ஹீட்டரை முழு வேகத்தில் வச்சுக்கிட்டு ஒரு வழியாத் திரும்பிவந்தோம். அப்படியும் ஒரு இடத்தில் Chasm என்ற போர்டைப் பார்த்துட்டு ஒரு ஸ்டாப் போட்டுட்டுத்தான் வந்தோம். ஹோ என்ற இரைச்சலுடன் அதலபாதாளத்தில் இருக்கும் மலைக்குகையின் பாறைகளை முழுவேகத்துடன் முட்டிமோதிக்கிட்டு வெள்ளம் பாயுது. எத்தனையோ நூற்றாண்டுகளா ஓய்வு ஒழிச்சல் இல்லாம இதுக்கு இதுதான் வேலையாம். தண்ணீ நடமாட்டம் பாறைகள் எல்லாம் வழுவழுன்னு உருட்டிவச்சுருந்தது.





வழியெல்லாம் திடீர்திடீர்ன்னு சத்தம் வரும்பக்கம் பார்த்தால் அங்கெல்லாம் ஒரு நீர்வீழ்ச்சி இருக்குது. கேஸ்கேட் ஃபால்ஸ் ரொம்ப அழகு. கைக்கு எட்டும் தூரம்.
நாம்தான் இப்படி மூணுநாலு நாள் டூர்ன்னு போய் நோகாமப் பார்த்துட்டு வர்றோம். உண்மையாச் சுத்திப் பார்க்க வரும் இளவயசுக்காரங்க 10 நாள் ரெண்டு வாரமுன்னு மலை, காடுகள் எல்லாம் கால்நடையாவே ஏறி இறங்கிச் சுத்திப் பார்க்கறாங்க. எல்லாம் கைடட் டூர்தான். அங்கங்கே இதுக்காகவே கட்டி விட்டிருக்கும் குடில்களில் இரவைக் கழிச்சுட்டுப் பகல்முழுதும் சுற்றிவர்றாங்க.

நம்ம தோழி ஒருத்தரின் கணவர் தன்னுடைய நெடுநாள் ஆசை இதுன்னு சொல்லி மூணு வருசம் முந்தி இப்படி 8 நாள் போய்வந்தார். அப்ப அவருக்கு வயசு 77தான்!


'நம்ம கங்கை'யை ஒரு முறை பார்ப்பதுதான் வாழ்க்கையின் லட்சியமுன்னு எப்பவும் சொல்லிக்கிட்டே இருந்த நான், 'ஆகாசத்துலே இருந்து நேரா இறங்கிவரும் கங்கையை இன்னிக்கு அனுபவிச்சுட்டேன். இதுவே ஆயுசுக்கும் போதுமு'ன்னு புலம்பிக்கிட்டே ஒரு பரவச நிலையில் இருந்தேன்.



தொடரும்.........


விடுபட்டவை:
(மெய்மறந்த நிலையில்.....ஆனை மலையை படம் எடுக்கத் தவறிட்டேன்.)


Saturday, June 21, 2008

பதிவர்களில் ஒரு புதுத் தாத்தா:-))))

உங்களுக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியான செய்தி!

நம்ம டி.பி.ஆர். ஜோசஃப் தாத்தா ஆகிட்டார்.

அவரோட மகளுக்குக் குழந்தை பொறந்துருக்கு.

புதுத் தாத்தாவுக்கும் பேரக்குழந்தைக்கும் மனமார்ந்த வாழ்த்து(க்)களையும்
அன்பையும் நன் தமிழ்மணப் பதிவர்கள் சார்பில் தெரிவிப்பதில் அளவிலா மகிழ்ச்சி அடைகின்றேன்.

குழந்தைக்கு நம் ஆசிகள்.

Thursday, June 19, 2008

டிப்ஸ் வாங்கலையா......டிப்ஸு

அடுக்களை டிப்ஸ்.


சமையல் மட்டும் செஞ்சுகாமிச்சாப் போதாதாமே. இப்படிச் சமையல் வகுப்பு நடத்தறவங்க அப்பப்ப நேரம்/பணம் சேமிக்கும் டிப்ஸ்களையும் கொடுக்கணுமாம். இந்தக் கணக்கில் ஃப்ரீஸர் டிப்ஸ் இன்னிக்குப் பார்க்கலாம்:-)

ரங்கி பி ரங்கியா ( கலர்க்கலரான்னு தமிழில்(?) அர்த்தம்) கிடைக்கும் (சீஸனில் மலிவாக் கிடைக்குமே அப்ப) குடமிளகாய்களைக் கொஞ்சம் வாங்கிக்குங்க. தண்ணீரில் கழுவிட்டு அதைச் சின்னத்துண்டுகளா வெட்டுங்க.

ரொம்பச் சின்னதா வேணாம். ஒரு ரெண்டு ச.செ.மீ அளவுக்கு இருக்கட்டும்.
இப்ப எல்லா நிறத்துலேயும் இருப்பதை வகைக்குக் கொஞ்சம்,உங்க குடும்பத்துக்கு ஒரு வேளைக்கு எவ்வளவு வேணுமோ அந்த அளவு எடுத்து ஒரு ஃப்ரீஸர் பையில் போட்டு வச்சுக்குங்க. அதை அப்படியே நேரடியா ஃப்ரீஸர்லே வச்சுக்கலாம். இந்த ziplock பைகள் இப்பெல்லாம் நிறையக் கிடைக்குது.
உருளைக்கிழங்கு கறி, குருமா, வேற காரம்போட்டப் பொரியல், உப்புமா, கிச்சடி வகைகளுக்கு இந்த உறைஞ்ச குடமிளகாய் பொதியில் ஒன்னு வெளியே எடுத்து சமைக்கும்போது கூடவே சேர்த்துருங்க. இதை டீ ஃப்ராஸ்ட் எல்லாம் பண்ண வேணாம். சட்னு வெந்துரும்.இப்பப் பார்க்கறதுக்கு அழகா இருக்கும். குழந்தைகளும் (ஒருவேளை)விரும்பிச் சாப்பிடலாம். முக்கியமா ரங்கூஸ்களுக்கு 'கலர்' பார்த்தமாதிரியும் இருக்கும்:-)

இது ஃப்ரீஸர்லே இருந்து எடுத்து வெளியே வச்சது:-)

கிச்சன் காட்ஜெட்ஸ் பைத்தியம் நான். புதுசா எதையாவது பார்த்தால்போதும். 'இது இல்லே நம்மகிட்டே. அதனால்தான் சரியாச் சமைக்கவே வர்றதில்லை'ன்னு முழுசா நம்பிருவேன். வாங்கி ஒரு நாள் மட்டுமேப் பயன் படுத்திட்டு இது வேலைக்காகாதுன்னு எடுத்துவச்சதும் நிறைய இருக்கு.
ஆனா ...... வாங்குனதுலே உண்மையாவே நல்லவிதமா இருக்கும் ஒன்னு இந்த ஹாட் ஏர் அவன்.

எண்ணெய் இல்லாம இதுலே குழந்தைகளுக்கு ஆஃப்டர் ஸ்கூல் ஸ்நாக்ஸ் செஞ்சுகொடுக்கலாம். உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், சிக்கன் நக்கெட்ஸ், இப்படி பலதுக்கும் தோதா இருக்கு. அதுதான் அடுப்புலே இருக்கற அவன் போதாதான்னா....... இது சின்னதா இருக்கறதாலே அவனுக்கு ப்ரீ ஹீட் செய்யறதுபோல ஒண்ணும் முன்னேற்பாடு செஞ்சுக்க வேண்டாம். சமோசா, பீட்ஸா இப்படியானதுகளையும் மறுபடி சூடாக்க இது உத்தமம்.
மைக்ரோவேவில் வச்சா அந்த க்றிஸ்ப்னெஸ் வர்றதில்லை. ரெண்டு சமோசாவுக்கும், ரெண்டு ஸ்லைஸ் பீட்ஸாவுக்கும் மெனெக்கெட்டு அவனை எவன் ஆன் பண்ணுவான்?

உ. சிப்ஸ் சூப்பர்மார்கெட்டில் ஃப்ரீஸர் செக்ஷனில் கிடைக்கும். வாங்கும்போது விலையை மட்டும் பார்க்காம, ஹார்ட் ஃபவுண்டேஷனின் 'டிக்' இருக்கான்னு கவனிங்க. மலிவு வகை சிப்ஸ்களில் beef fat கலந்துருக்கும். பேக்கெட்டின் பின்னால் இருக்கும் விவரப்பட்டியலில் கெனோலா, சூரியகாந்தி எண்ணெய் இருக்கறதாப் பார்த்து வாங்குனா உடம்புக்கு நல்லது. நம்மூட்டுக்குன்னா ஜாக்கெட்டோடத்தான் வாங்குவேன்:-) கோபால், ஷ்ரேயா ரசிகர் இல்லையாம். சொன்னார். நானும் நம்பிட்டேன்:-)

நம்ம வீட்டில் தயிர் தோய்க்க, இட்லி தோசை மாவு புளிக்க வைக்க, நமுத்துப்போன பொரியை முறுமுறுன்னு ஆக்க, பூண்டு உரிக்க, மஃஃபின் கேக் போன்ற அயிட்டங்கள் செய்யன்னு இதைப் பயன்படுத்தறேன்.
வந்த புதுசுலே நிறைய விலையா இருந்தது. இப்பவும் 'ஈஸிகுக் ப்ராண்ட்' விலை கூடுதல்தான். நமக்காகன்னேச் சீனர்கள் செஞ்சு அனுப்புனது 99 டாலர் விலையில் வந்தப்ப ஒன்னு வாங்குனேன். அஞ்சு வருசம் கழிச்சு அது மண்டையைப் போட்டுருச்சு. (அந்தக் கண்ணாடிப் பாத்திரம் இப்ப வாட்டர் ஃபவுண்டென் வைக்கும் கண்டெயினரா இருக்கு!) இப்ப வீட்டில் இருப்பது சூப்பர் மார்கெட்டில் 60க்கு கிடைச்சது. போனவாரம் பார்த்தால் இது சேலில் வந்து 40க்குச் சீப்படுது..

இப்ப இந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவுதான்னு பார்த்துட்டுச் சொன்னீங்கன்னா.... அடுத்த பகுதி வந்தாலும் வரும்:-))))

Tuesday, June 17, 2008

ஷிவ்ஜி வாயிலே ஜிலேபி:-)

"யே ஷிவ்ஜிகா மந்திர் ஹை"



"ஓ... ஷிவாஜி கா மந்திர்?"


"நைநை....யே தோ பர்மேஷ்வர் ஷிவ்ஜி கா மந்திர்"


கொஞ்ச நேரத்துக்கு முன்னால் ஷிவாஜி மஹ்ராஜின் கோட்டை இருந்த 'ஷனிவார்வாடா' வைச் சுத்திக் காமிச்சது இதே கைடுதானே.


சுத்திக்காமிக்கன்னு அங்கே ஒன்னும் இல்லை. கோட்டைக்குள்ளே நுழைஞ்சால் வெறும் அஸ்திவாரம் போட்டுவச்சமாதிரி இருந்துச்சு.




அரைநாள் டூர்ன்னு பூனாநகரைச் சுத்திப்பார்த்துக்கிட்டு இருந்தோம். இந்த ஷிவ்ஜி கா மந்திரை சத்ரி மந்திர்ன்னு சொல்றாங்க.மராட்டியப் படைகளின் தலைவரா இருந்த Shindyanchi Chhatri என்றவர் கட்டிய கோயில் இது. வானவரி என்ற இடத்தில் இருக்கு. (இதையே வானவெடின்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்)



முழுக்கமுழுக்கப் பளிங்குக்கற்களால் கட்டி வழுவழுன்னு இருக்கு. பலவர்ணக் கண்ணாடிக்கூடுகளில் இருக்கும் தொங்குவிளக்குகள். ஜொலிப்பு அட்டகாசம். சிவலிங்கம் வச்சு பூசை நடக்குது. 1794லே கட்டுனதாம்.




ஷிவ்ஜி, ஷிவாஜின்னு மாறிமாறிக்கேட்டே ரொம்ப கன்ஃப்யூஸ் ஆகிப்போச்சு. ஹிந்தி அவ்வளவாத் தெரியாது பாருங்க அப்ப.





இப்ப நம்ம வல்லி என்னை ஜிலேபித் திங்கக் கூப்புட்டாங்களா ஓடி வரணுமுன்னு பார்த்தா என் ஜிலேபி இன்னும் வந்து சேரலையே...... காத்திருந்தேன். பலன் கிடைச்சது.



நம்ம சுதந்திர இந்தியாவுக்கும் சிங்கைக் கோமளவிலாஸுக்கும் ஒரே வயசு.



சிங்கை ஜிலேபியை சிவாஜி வாயிலே கொண்டு வைக்கணுமா என்ன? இல்லே ஷிவ்ஜி வாயில் வைக்கணுமா?



அவ்வளவுக்குப் பெருந்தன்மை இல்லாததால் இதோ
துளசி வாயிலே ஜிலேபி.:-))))



பி.கு: சரித்திர டீச்சர் என்றதால் புள்ளிவிவரம் இல்லாம ஒன்னும் சொல்ல முடியாது. ஹிஸ்ட்ரி சிவாஜிக்கு மட்டுமா? இந்தத் தட்டுலே இருந்த ஜிலேபிக்கும்தான்!!