Wednesday, May 31, 2023

பேசிமுடிக்க ஒரு லிஸ்ட் போட்டுருக்கலாம்..... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 55

1939 இல்  சங்குண்ணி நாயர் ஆரம்பிச்சு நடத்தின  ஸலூன் கடை.   ஆச்சு இப்போ 83 வருசம்!    மூணு தலைமுறைகள் மாறி இருக்கு.  சங்குண்ணி நாயரின் மகன் அரவிந்தாக்ஷன்,  அப்புறம்  அரவிந்தாக்ஷனின் மகன் சந்தீப்  என்று  கடையை நடத்திக்கிட்டு இருக்காங்க.  அப்பெல்லாம் பாண்டி பஸார், ஒரு மார்கெட் ஏரியாதான்.  பத்துப்பதினைஞ்சு  கடைகள் இருக்கும் பகுதி. இதுக்கிடையில் இந்த  முடி திருத்தகம். பழைய தெலுங்கு, கன்னட , தமிழ் நடிகர்களும், மற்ற பிரபலங்களும்தான் வாடிக்கையாளர்கள்.  பெரிய பங்களாக்களும் அதைச் சுற்றி  இருக்கும் பரந்த தோட்டங்களுமாத்தான்  அந்தப் பகுதி  (டவுன் ) இருந்துருக்கு.  இப்பவும் கூட சில  பங்களாக்கள்  அங்கங்கே இருக்குன்னாலும்   அடுக்குமாடிகளும்  கடைகண்ணிகளும்   டவுனையே புரட்டிப்போட்டுருச்சு என்பதே உண்மை.  ஷாப்பிங் என்றாலே முதலில் மனசில் வருவது தி.நகர் இல்லையோ!!!!
அப்போ அந்தக்காலத்தில் எப்படி  இருந்ததோ.... அதைக் கொஞ்சம்கூட மாற்றாமல் அப்படியே கடையை வச்சுருக்காங்க என்பதுதான் இதன் விசேஷம். தேக்குமரத்தாலான சுழல் நாற்காலிகள்.  சுவர்முழுக்க  தேக்குமரத்தினால் ஆன ஃப்ரேம் போட்ட பெரிய  கண்ணாடிகள்.  இடையிடையே   கண்ணாடியில்  வரைஞ்ச பழங்காலச் சித்திரங்கள் இப்படி   அமைதியுடன் ஒரு அமர்க்களம்! சுவர்க் கடிகாரம் மட்டும் இப்போ புதுசு !













சந்தீப் நம்மை மறக்கலை. நலம் விசாரிப்பெல்லாம் ஆச்சு.  'வேலை 'நடக்கட்டுமுன்னு நான் வெளியே வந்து பக்கத்துக்கடையில்  சின்னதா ஒரு ஷாப்பிங் செஞ்சுக்கிட்டேன் :-)  பெண்களூரில்  வாங்கிய சமாச்சாரம் எல்லாம் இங்கே மலிவு !  

ஸலூனில் வேலை செய்பவர்கள் மட்டும் அப்பப்ப மாறிடறாங்க. ஆனால் சும்மாச் சொல்லக்கூடாது.....  யாராக இருந்தாலுமே தொழிலை ரசிச்சுச் செய்யறாங்கன்னு கொஞ்ச நேரம் உக்கார்ந்து பார்த்தால் புரிஞ்சுரும்.
அறைக்குத் திரும்பி ஒரு சின்ன ஷவர் முடிச்சுட்டு,  நெருங்கிய தோழி 'அலைகள் ' அருணாவை சந்திக்கப் போனோம். மறுநாள்  லண்டன் கிளம்பறாங்க.  மகன் வந்துருந்தார்.




கோவில் நடை சாத்தியிருக்கும் நேரம்.....அநந்தபதுமனை  மனசால் நினைச்சுக்கிட்டுக் கிளம்பி வர்றோம். எதெதுக்கு எவ்ளோன்னு ஒரு பட்டியல் பார்த்தேன்.  கூடவே பிடிபட்டால் எதெதுக்கு எவ்ளோ கையில் கொடுக்கணுமுன்னு போட்டுருக்கப்டாதோ ? 
லோட்டஸுக்குத் திரும்பினோம். பகல் சாப்பாடு இங்கேயே !  சாயங்காலம் ஆஸ்பத்ரிக்குப் போகணும். 

நல்ல சேதி சொன்னார் டாக்டர் கார்த்திக் !  இப்போது எடுத்துக்கும் மருந்துகளில்  ஒரு ஏழைக் கழட்டிவிட்டாச்!   சில மருந்துகள் அளவும் குறைச்சாச் !  ஆனாலும் கவனமா இருக்கணுமுன்னு சொல்லி என்னைப் பார்த்தார்.....   தீதும் நன்றும் பிறர்தர வாரா.....  எத்தனை மணி நேரப் பயணம் என்றார்.  நாலரையும் பத்தரையுமா  பதினைஞ்சு இல்லையோ !  நடுவில் ஒரு ப்ரேக் இருக்கு. சிங்கப்பூரில் ஒரு இரவு தங்கறோம் என்றதும் ரொம்ப நல்லதுன்னார். 
  

 சம்பவம் நடந்த  முதல்நாள்  எமெர்ஜன்ஸியில் இருந்த டாக்டர் வஸந்த் இருந்தார்.  எப்படி இருக்கீங்கன்னு சைகையால் விசாரிச்சார் !  நல்ல ஞாபகசக்தி ! ட்யூட்டி முடிஞ்சுட்டுக்   கொஞ்சம் வெளியே போய் ஷாப்பிங் & டின்னர்னு  கிளம்பின நர்ஸ்கள் , நம்மைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வந்து விசாரிச்சாங்க.  எங்களுக்குமே  ரொம்ப சந்தோஷமா இருந்தது. எல்லாம் சின்னப் பெண்கள். அம்மா அம்மான்னு கூப்பிடும்போது மன நிறைவா இருந்தது !
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்  இன்னும் ஒன்னும் சொல்லலை.  ஏர்ப்போர்ட்டுகளில் ரொம்ப தூரம் நடக்க வேண்டி இருப்பதால்.... இவர் சமாளிப்பாரான்னு தெரியலை. அதனால் வீல்சேர் உதவி வேணுமுன்னு சொல்லணும்.  என்னென்னவோ யோசனை..... ப்ச்....
மறுநாளும்  நண்பர்களையும் உறவினர்களையும்  தரிசனம்  பண்ணிக்க  ஏற்பாடு ஆச்சு. சென்னை நகரம் நடுக்கத்தில் னு பேப்பர் நியூஸ்.  குளிராம்!  25.6 C !  ( அடப்பாவி.... எங்கூர் சம்மர் இல்லையோ இது ! )

முதலில் நண்பர் கார்த்திக் இல்லம் நோக்கி ! சரியான அடையாளம் சொல்லி இருந்தார்.   அங்கே போனவுடன் தகவல் தெரிவித்ததும் தானே நேரில் வந்து வீட்டுக்கு அழைத்துப் போனார்.  வரவேற்பறையில் ஆண்டாளைப் பார்த்ததும்  மனசுக்கு நெருக்கமாயிட்டாங்க  ரெண்டுபேரும் !  அன்றைக்கு அவர் செய்த உதவியைக் காலத்துக்கும் என்னால் மறக்க முடியாது !  காலத்தினால் செய்த உதவி ! 


இனிமையான தம்பதிகள். ஏதோ ஜென்மாந்திரமாய்ப் பழகின உணர்வு.  பிள்ளைகளை சந்திக்க முடியலை. பள்ளிக்கூட நாள் ! எனக்கு ஒரு பட்டுப்புடவை வரவு !!!! ஆஹா.... என்ன தவம் செய்தனை.....  துல்ஸி......   'நல்லோரைக் காண்பதும் நன்றே, நலமிக்க நல்லோர் சொல்.......  '  ஒளவையார் மனசுக்குள் வந்தார் !

இந்த தென்தமிழகப் பயணம் ரத்து ஆனதில் நம்மவரின் வேலை ஒன்னு தடைப்பட்டுப்போச்சு.  பாண்டிச்சேரியில் இருக்கும்  நண்பரின்  கம்பெனிக்கு  இவர் டெக். அட்வைஸர். அதனால் எல்லா இந்தியப்பயணங்களிலும்  ரெண்டு நாட்கள்  பாண்டிச்சேரிக்கு  ஒதுக்கி விடுவார்.  அங்கே அவர் ஆஃபீஸுக்கும், நான் ஊர் சுற்றலுக்கும்  போயிருவோம்.  இவர் ஆஸ்பத்ரியில் இருக்கும்போது, நண்பர்  ஒருநாள் வந்து பார்த்துப் பேசிட்டுப்போனார்.   நியூஸியில் இருந்து ஆன்லைனில்தான்  வேலை.  இன்றைக்கு ஏதோ அலுவல்,   தனக்குக் கொஞ்சம்  நேரம்  வேணும் என்றதால்  லோட்டஸுக்குத் திரும்பிட்டோம்.

வேலை ஆரம்பிக்குமுன், 'நீ என்ன செய்யப்போறேம்மா?'ன்னார்.... இதுக்குத்தானே காத்திருந்தாய்,  துல்ஸீ.................. அதே பாண்டிபஸார்..... கைராசி, வணிகவளாகம் எல்லாம் காத்திருக்கே....    என் வரவை நோக்கி !!!
ஸல்வார் செட்டாக எடுக்காததால்..... ஒவ்வொன்னுக்கும் தனியா துப்பட்டா வேண்டியிருக்கே !  அதுக்குக் கைராசியில் ஒரு தனிப்பகுதி இருக்கு. அங்கே  இருக்கும் வித்யா,  இப்ப எனக்கு ரொம்ப வேண்டியவங்களாப் போயிருந்தாங்க. அங்கே போய் மூணு துப்பட்டா வாங்கிக்கிட்டேன். கிளம்புமுன் வந்துட்டுப்போங்கன்னு  சொன்னாங்க. சரின்னு தலையாட்டிட்டு ஒரு க்ளிக் ஆச்சு. 


வணிக வளாகத்தில் ஒரு கடையில் நான் தேடிக்கிட்டு இருந்த சில பொருட்கள் கிடைச்சது.  எதிர்பாராத விதம்  சில அருமையானவைகளும் கூட !   கொஞ்சமாப்பூந்து வெளையாடிட்டேன்....  :-) 

லோட்டஸுக்குத் திரும்பி வந்தால்..... இவருடைய வேலை முடியும் நேரம் !  ஆஹா.... என்னவொரு டைமிங்  பாருங்க !!!

கிளம்பிப்போனது நம்ம பத்மா மணி அம்மா வீட்டுக்கு ! பெற்றதாய் போல அன்பான  மனசு.  தமிழ் உலகில் முதல் பத்திரிகையாளர் !  மூப்பின் காரணம் வீட்டுலேயே இருக்காங்க.  குடும்பமே நமக்கு நண்பர்கள் என்பதால் நேரம் போனதே தெரியலை. நாலு தலைமுறைகளைக் காணும் பேறுன்னு சொல்லிக்கறேன்.   பத்மா மணி அம்மாவின் பொழுதுபோக்கு.... மணி மாலைகள்  செய்வது.  சில மாலைகளை எடுத்துப்போன்னு  கேட்டுக்கிட்டதால்,  நம்மவர் ஒரு மாலையைத் தெரிந்தெடுத்தார் ! (இதுக்கு மேட்ச்சா உடுப்பு இல்லை. நாளைக்கே ஒன்னு வாங்கிக்கணும்! )


அங்கிருந்து அண்ணன் வீடு !  அடுத்த மாசம் சதாபிஷேகம் !  நாம்தான் இருக்கமாட்டோம்..... உண்மையில் இந்த மாசமே நடக்க வேண்டியது. ஆனால் குடும்பத்தில் பெரியவரான  எங்க தாம்பரம் அத்தை , பெருமாளிடம் போயிட்டதால்  தள்ளிப்போட்டுருக்கு.  முதலில் வேண்டாமுன்னுதான் மறுத்தார்.  ஆனால் இதெல்லாம் வாழ்நாளில் ஒரே ஒருமுறை நடக்கும் விழா இல்லையோ ?    விடக்கூடாது....  பெரியவர்கள்  நம்மை எங்கிருந்தாலும் ஆசிர்வதிப்பாங்கதானே !!!



அங்கிருந்து கிளம்பி லோட்டஸ் வரும் வழியில்   'திருப்பதி தரிசனம்' கிடைச்சது.  அடுத்து இருக்கும் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸில்  முரளி'ஸ்  மார்கெட்னு  தொடங்கி இருக்காங்களாம்.  அங்கே கொஞ்சம் எட்டிப்பார்த்தோம்.  வெளியே பழைய செட்டப் எல்லாம் காணோம். கோவிடின் வேலையாம் !  உள்ளே வழக்கமான ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடை இருக்கு. 


வெளியே டேக் அவே பகுதி. BOLI கூட இருக்காம் :-) ஒரு மாறுதலுக்கு இருக்கட்டுமுன்னு  ஒரு ஃப்ரைடு ரைஸ் & கொழுக்கட்டை வாங்கினோம். டின்னருக்கு ஆச்சு. ஆனால் ரொம்ப சுமார். மோர்க்களி  போர்டுலே இருக்கு.  

தொடரும்....... :-)



Monday, May 29, 2023

தீதும் நன்றும் பிறர்தர வாரா............ கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 54

இன்றைக்கு ஞாயிறு என்பதால் சில குடும்ப சந்திப்புகளை நடத்திக்க வேணும். மழையும் காணோம். ஆனால் எல்லாத்துக்கும் முந்தி இன்னொரு முக்கிய வேலை இருக்கே !  பதினொரு மணிக்குப் பூர்விகா போனோம்.   நேத்து சொன்னபடிக்கே என் S9+  இல்  இருந்து,   புது ஃபோனுக்கு  எல்லாத்தையும் மாத்திக் கொடுத்தாங்க.  
 ஒரு வழியா வேலை முடிய ஒன்னேகால் மணி நேரம் ஆச்சு. படங்களை மாத்தத்தான் ரொம்ப நேரம் ஆச்சு.   நௌ S9+   ஃப்ரீ ஆஃப் எவ்ரிதிங் !    இப்ப அதுதான்  நம்மவருக்குப் போகுது  !  அப்ப அவருக்கு புது ஃபோன்னு சொன்னது ?   அட ! அதுதாங்க இது.   ஏற்கெனவே வச்சுருக்கும் J7 க்கு இது எவ்ளோ தேவலைன்னு பாருங்களேன்!  பூர்விகா மக்கள் எல்லாத்தையும்   நல்லாவே ஒழுங்கு பண்ணிக் கொடுத்தாங்க. இன்னும் ஒன்னுதான் பாக்கி. அந்த ஸ்மார்ட் வாட்ச் .....


அப்படியிப்படின்னு இங்கேயே நேரம் ஓடிப் போச்சு.  வேளச்சேரிக்குப் போறோம். ஸ்ரீ குப்தா பவனில் பகல் சாப்பாடு.  கீழே  ஸ்நாக்ஸ் விற்பனை, மாடியில் ரெஸ்ட்டாரண்ட்.  இப்பெல்லாம் லிஃப்ட் இருந்தால்தான்  எங்கேயும் போகணும். மாடிப்படியில் இவரை ஏற வைக்கும் ரிஸ்க் வேணவே வேணாம்.  நார்த் இண்டியன் மெனுதான்.  நம்மவருக்கும் விஜிக்கும்  தாலி. எனக்கு  காலிஃப்ளவர் மஞ்சூரியன் & ஸ்வீட் லஸ்ஸி.   இந்த மஞ்சூரியன் சமாச்சாரத்தை சைனீஸ்ன்னு சொல்றோமே....   அசல் சீனக்கடைகளில் இப்படி ஒரு பெயருள்ள வஸ்துவே இல்லை !  இங்கே நம்மூர் சீனக்கடைகளிலும்,  நம்ம சீனதேசப் பயணத்தில் பெய்ஜிங்கிலும் நல்லா விசாரிச்சுப் பார்த்துட்டேன்.
கீழே இருக்கும் ஸ்நாக்ஸ் செக்‌ஷனில் கொஞ்சம்  தீனிகள் வாங்கிக்கிட்டு நேரா மச்சினர் வீடு. மகளும் மாப்பிள்ளையும் அங்கே வந்துருக்காங்க. இவுங்க கல்யாணத்துக்கு வரமுடியாமத்தான் கோவிட் வினை வச்சுருச்சு.  மாப்பிள்ளை ரொம்பத் தங்கமானவர்னு  மகள் காதில் ஓதி விட்டேன். நல்ல செலக்ஷன்தான்.  எங்களைப்போல்  காதல் கல்யாணம் !  நல்லா இருக்கட்டுமுன்னு ஆசிகள் வழங்கினோம்.  இன்னும்  மூணு மாசத்தில்  குடும்பத்தில் புதுவரவு !  
மகனும் வீட்டுலே  நம்ம வரவை எதிர்பார்த்து இருந்தார். இருக்கச் சொல்லி இருந்தேன். சண்டே ஆனால் போதும்  சினிமா சினிமா......ன்னு (பெரியப்பா குணம்) ..... இப்பதான் ஒரு ஒன்பது மாசங்களுக்கு முன் புது பைக் வாங்கியிருக்கார். என்ஃபீல்ட் தயாரிப்பு.  கஸ்டம் பில்ட் !  அட்டகாசமா இருக்கு ! ஒரு காலத்துலே என் கனவு வண்டி இது. அப்போ அது  வாய்க்கலை. (பேசாம மகனோடு ஒரு ரௌண்ட் போயிருக்கலாம், இல்லே ? ) 



'வச்சுக்கொடுத்தவை'களை வாங்கினதும்,  அங்கிருந்து கிளம்பி நாத்தனார் வீடு.  இந்த வீடு இருக்குமிடம்தான்  எப்பவும் குழப்பம்.  வழக்கம் போல் சொதப்பிட்டுப் போய்ச் சேர்ந்தோம். நாளைக்கு ஒருநாள், வீட்டுக்கே வரலைன்ற  பேச்சு கூடாது, பாருங்க :-)

இன்றைக்கு ஃப்ளையிங் விஸிட் என்ற கணக்கில்  நெருங்கிய தோழியின் வீடு.... கோயம்பேடு !  'ஒலிக்கும் கணங்கள்' நிர்மலா நிவேதா .  'நுனிப்புல் 'ராமசந்திரன் உஷா வீட்டுப் பாத்திரங்களை இங்கே கொடுத்துட்டுப் போறோம்.  அடுத்த சந்திப்பில் அவுங்க எடுத்துக்குவாங்க. ஞாயிறு என்பதால் மகனையும் சந்திக்க முடிஞ்சது.  இவர் கல்யாணமும் கோவிட் காலத்தில் என்றதால்  அவரவர் ஊரில் இருந்து  லைவாகப் பார்த்தோம். 

இன்னும் சில சந்திப்புகளை முடிச்சுட்டோமுன்னா.... சிங்கப்பூர் ஏர்லைன் மனசு வச்சால் சட்னு கிளம்பிடலாம். 

டின்னருக்கு பிரியாணி !
மறுநாள் நம்மவருக்குப் பிடிச்ச ஐட்டம் ப்ரேக்ஃபாஸ்ட்டில் !  நம்மவருக்குத் தலைக்கு மேல் வேலை இருக்காம்.  ச்சலோ  பாண்டிபஸார் !  எல்லாப்பயணங்களிலும் இங்கே ஒரு விஸிட் போகாமல்  வரமாட்டார். 

தொடரும்.......... :-)