Friday, May 05, 2023

'தலை'க்கு வந்தது......... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 44

ஒரு   ஆறுமணி போல இருக்கும்..... நம்மவர் எழுந்து, ஒரு டாக்டரைப் பார்க்கலாமான்னார்.  இன்றைக்கு ஞாயிறாச்சே....  அதுவும்  ஆறு மணியாச்சு.  யார் இருப்பாங்க?   நாளைக்குக் காலையில் போகலாமுன்னேன்.
வலை எதுக்கு இருக்குன்னு வலை வீசியவர், பக்கத்துத் தெருவில் ஒரு 24 மணி நேர ஹாஸ்பிடல் இருக்குன்னார். சரின்னு அங்கே போனோம்.
மேலே படம் : வலையில் இருந்து !

Be Well  hospital.   இது விஜயராகவாச்சாரி ரோடு.  எப்பவும் மௌண்ட் ரோடில் இருந்து  தி.நகர் லோட்டஸ் வரும்போது இந்தத் தெரு வழியாகத்தான் வருவோம் என்றாலும் இப்படி ஒன்னு அங்கே இருக்குன்றதைக் கவனிச்சதே இல்லை.

உள்ளே போனதும் விவரம் விசாரிச்சுட்டு ஒரு படுக்கையில்  படுக்கவச்சு BP செக் பண்ணாங்க. எகிறிக்கிடக்கு !  அதுக்கான  மருந்தை ஏத்திட்டுக் கொஞ்ச நேரத்தில் ECG எடுத்தாங்க.  தனி அறைகளா இல்லாம  கட்டில்களுக்கிடையில்  ஸ்க்ரீன் போட்டுருந்தது. நான் டாக்டர் டேபிளுக்கருகில் காத்திருந்தேன். 
அப்பதான்  உள்ளே ஒரு படுக்கையில் இருந்து எழுந்து வந்த ஒரு நபர், டாக்டர் ஸீட்டில் வந்து உக்கார்ந்தார்.  எதுக்கு நோயாளி அங்கே உக்கார்றாருன்னு பார்த்தால் அவர்தான் டாக்டர் இன் சார்ஜ் !  


நீங்க எப்படி பேஷிண்ட் பெட்டில் படுக்கலாமுன்னு கேட்டேன்.  கொஞ்சம் முழிச்சவர் , தலையை ஒரு மாதிரி ஆட்டுனார்.  நான் சரசரன்னு எங்கே படிச்சீங்க? என்ன பெயர்னு கேட்டுக்கிட்டு இருந்தேன்.....  தலையைக் குனிஞ்சபடி பதில் சொல்றார்..... நமக்குத்தான் காது ரிப்பேர் ஆச்சே.... ஹலோன்னு கொஞ்சம் சத்தமாக் கூப்பிட்டதும்  நிமிர்ந்து பார்த்தவரிடம், காது கேக்காதுன்னு சைகையால் சொன்னேன்.  பாவம்னு தோணியிருக்கும். 

பெயரையும்,  படிச்ச இடத்தையும் சொன்னார். நான் உடனே   இப்படி பேஷிண்ட் படுக்கையில் படுக்கறதெல்லாம்  சரியில்லை அன்லெஸ் யு ஆர் தெ பேஷிண்ட்னு......  இப்ப (இதை எழுதும்போதுதான்  நினைவில் வருது... நான் அங்கே இங்லிஷில் பேசிக்கிட்டு இருந்துருக்கேன்னு :-( )
எப்படி இருக்கார்னதுக்கு.... BP  கொஞ்சம் கொஞ்சமா இறங்கிக்கிட்டு வருது.  ECG  ரிப்போர்ட்டில் ஒரு  மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்ததாகக் காமிக்குதுன்னார்.  ஆமாம்.... ஏழு வருஷத்துக்கு முன் Gall Bladder எடுக்க வேண்டியாச்சு. அப்போ  ஹார்ட் அட்டாக் வந்ததாக சொன்னாங்கன்னேன். எதுக்கும் ஒரு ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்டைப் பாக்கறீங்களான்னார். அதுக்கென்ன பார்த்தால் ஆச்சுன்னதும்,  இன்றைக்கு ஞாயிறு, அதுவும்  எட்டு மணிக்கு மேலே ஆச்சு. நாளைக்கு வருவார்.  பகல் ரெண்டு மணிக்குப் பார்க்கலாம். அப்பாய்ண்ட் நேரம் குறிச்சுக்கறேன்னார். நான் உடனே நாளைக்கு எனக்கொரு முக்கியமான மீட்டிங் இருக்கு. அஞ்சு மணிக்கு நேரம் தாங்கன்னேன்.  சரின்னார். 

அதுவரை ஒரு நாளுக்கான மாத்திரை எழுதித்தர்றேன்.  இங்கே பார்மஸியில் வாங்கிக்குங்க,  இப்போ இன்னும்  கொஞ்சநேரம்  இருக்கணும்.    BP  இறங்கட்டும்னு  சொல்லிட்டுப் போனார்.  நானும் முன் ஹாலில் இருந்த கவுண்ட்டரில் இன்றைய சிகிச்சைக்கான  கட்டணத்தைக் கட்டிட்டு,  மருந்து எங்கே வாங்கணுமுன்னு கேட்டேன்.  கதவுக்கு அந்தாண்டைன்னதும்  அங்கே போனேன். 
மருந்தை எடுத்துக் கவரில் போட்டவர், மூணுன்னு கை காமிச்சார். நான் மூன்னூறுன்னு  நினைச்சு ஐநூறை நீட்டினேன்.  மூணு ரூபாய்ன்னார்.  வெறும் மூணா ? சில்லறைக்காகப் பையைத் துழாவும்போது, என் பக்கத்தில் யாரோ வந்து நின்னாங்க.  இயல்பா தலை திருப்பிப் பார்த்தால் 'நம்மவர்'. எவ்ளோ வேணுமுன்னு கேட்டுட்டுச் சில்லறை எடுத்துக் கவுன்டரில் வச்சார். நான் மாத்திரை கவரை எடுக்கக் கை நீட்டறேன். 

கண்ணின் ஓரத்தில்  ஒரு காட்சி.... பக்கத்து உருவம் சாயுது.  ஒரு மைக்ரோ செகண்ட்தான். மூளையில் காட்சி பதியுமுன்...    நின்னவாக்கிலேயே  கீழே விழுந்தார் நம்மவர். பின்மண்டை காங்க்ரிட் தரையில் பட்ட ' டமால்'  சத்தம் காதுலே விழுது. பதற்றத்தில் நான் தலையைப் பிடிக்கிறேன். (ராமா ராமான்னு கத்திக்கிட்டு  இருந்தேனாம்.  )பல்லெல்லாம் கிட்டிக்கிட்டு  வாய் நடுங்குது. இடையில் நாக்கு !    எங்கே நாக்கு துண்டாகிருமோன்னு  என் விரலை  வாய்க்குள் விட்டு பல் நெருங்காமல் தடை போட்டுக்கிட்டு இருக்கேன். சட்னு இன்னொரு விரலும் வாய்க்குள்  வந்தது. ( அங்கே இருந்த நர்ஸ்ஸாம். அவுங்க அப்புறமா நடந்தது சொன்னாங்க ) அப்படியும்  என் விரலில் பற்கள் அழுந்தி  கொஞ்சம்  காயம் ஆகிருச்சு. அப்ப யாரு இதைக் கவனிச்சா ? எல்லாம் பிற்பாடுதான்.

உடனே ஸ்ட்ரெச்சரை யாரோ தள்ளிவர நம்மைச் சுத்தி இருந்தவர்கள் எல்லோருமாச் சேர்ந்து இவரைத் தூக்கி அதுலே வச்சதும் உருட்டிக்கிட்டு உள்ளே ஓடுறாங்க. ஒரு நொடி 'எல்லாம் முடிஞ்சது'ன்னு தோணுச்சு. கீழே தரையில் சிதறிக்கிடந்த  நம்மவரின் பர்ஸ், என் ஹேண்ட் பேக்,   மருந்துக் கவர், ரூபாய் நோட்டுகள் எல்லாத்தையும் யாரோ சேகரிச்சுக் கைப்பையில் போட்டு  திக்கிச்சு நிக்கும் என் கையில்  மாட்டறாங்க. யாரோ என் கையைப்பிடிச்சு உள்ளே கூட்டிப்போனாங்க. 

எமர்ஜென்ஸி  ஹாலில் அதே படுக்கை. செக்கப் செய்யறாங்க.  டாக்டர் என்னாண்டை வந்து  தலையில் அடிபட்டுருக்கு.  ஸ்கேன் செஞ்சு பார்க்கணும்.  CT  எடுக்கறீங்களா இல்லை MRI எடுக்கறீங்களான்னார்.  எது  துல்லியம்னதுக்கு  MRI தானாம். செலவு கொஞ்சம் அதிகமாகும். பிரச்சனையில்லைன்னதும்   ஸ்கேன் எடுக்க ஏற்பாடு செய்யறதாச் சொல்லிப்போனார்.  இங்கே இல்லையாம்.  வேற இடத்துக்குப் போகணும். ஆம்புலன்ஸ் இருக்கான்னதுக்கு அதையும் ஏற்பாடு பண்ணிடலாமுன்னு  சொன்னாங்க.

அப்ப ஒரு பணியாளர் வந்து  உடைகளையெல்லாம் மாத்தி  ஹாஸ்பிடல் கௌன்  போட்டுருக்கோம்.  உடைகளை இந்தப் பையில் போட்டுருக்கோம்ன்னு ஒரு பையை என்னாண்டை கொடுத்துட்டு உள்ளே போனவங்க....   உங்களைக்கூப்பிடறார்னு சொன்னதும் உள்ளே பாய்ஞ்சேன்.  ஆக்ஸிஜன் மாஸ்கை லேசாத் தூக்கிப்பிடிச்சு  நாலு நம்பரைச் சொல்றார். பேங்க் கார்ட் பின் நம்பராம்.  ஓக்கே அப்ப நினைவுக்கு ஒன்னும் ஆகலைன்னு  மனம் சொன்னது. அப்பாடா......

என் கார்டும் என்னிடம் இருக்குன்னாலும், புதுசா கொஞ்சநாள் முன்னாலே  நியூஸியில் இருக்கும்போதே வந்ததால்.... இன்னும் ஆக்டிவேட் செஞ்சுக்கலை.  ஆன் லைனில் செஞ்சப்போ சரியாகலை. எப்படியும்  ரெண்டு நாளில் இந்தியா போறோம்தானே அங்கே பேங்கில் போயே பார்த்துக்கலாமுன்னு இருந்தது... பயணத்தில் மறந்தே போச்சு.

ஆம்புலன்ஸ் வரக் காத்திருக்கோம்.  அப்பதான் நினைவுக்கு வருது உள்ளூர் மச்சினருக்குத் தகவல்  தெரிவிக்கணுமேன்னு.....  எல்லா தொடர்பு எண்களும் 'நம்மவரின்  செல்லில்.  அது எங்கே இப்போ ?   எதுக்கும்   உடைகள் கொடுத்த பையில் பார்க்கலாமுன்னு தேடினதில் ட்ரௌஸர் பாக்கெட்டில் இருந்துச்சு.   செல்லை ஆன் செஞ்சால் இருட்டு. நோ பவர். சார்ஜ் பண்ணாமல் இருந்துருக்கார். 

என் செல்லில் சார்ஜ் இருக்கு. ஆனால் நெட் கனெக்‌ஷன் கிடையாது.   பயணகாலத்தில் நம்மவரின் செல்லில் இருந்து ப்ளூடூத் மூலம்தான் கனெக்‌ஷன் எடுத்துக்குவேன். பாருங்க ... ஒன்னு இருந்தால் ஒன்னு இல்லை.....

ஹாஸ்பிடல் ரிஸப்ஷனில் கேட்டதில்  என் செல்லுக்கு வைஃபை கனெக்ட் பண்ணாங்க.  உடனே மெஸேஜ் வருது.  நம்ம கார்த்திக் தான் 'மேடம் , சார் எப்படி இருக்கார் ?' னு யதார்த்தமாக் கேட்டுருக்கார்.    'மயக்கம் போட்டுக்  கீழே விழுந்துட்டார்.  ஹாஸ்பிடலில் இருக்கோம். ஸ்கேன் போகணுமு'ன்னு பதில் போட்டதும்  இதோ வர்றேன்னு பதில் அனுப்பினார்.  மனசுக்குக் கொஞ்சம் ஆஸுவாசமா இருந்துச்சு.

இப்ப மச்சினருக்குத் தகவல் சொல்லணும். நம்பர் ? ஙே.....    என்னோட பேஸ்புக்கில் ஓர்ப்படி  இருக்காங்கன்னு  அதுலே இருந்து கூப்பிட்டால், மச்சினர் மகள்  பேசறாள். என்னாச்சு பெரியம்மா ......  அம்மா கிட்டே சொல்லச் சொன்னேன். 

கொஞ்ச நேரத்தில்  ஓர்ப்படி கூப்பிட்டு, ஹாஸ்பிடல் அட்ரஸ் கேட்டுட்டு,  உடனே  கிளம்பி வர்றதாச் சொன்னாங்க.

அப்பப்ப இவரை எட்டிப் பார்த்துக்கிட்டு இருக்கேன்.   ஆம்புலன்ஸ் வந்த சமயம், நம்ம   கார்த்திக்கும் வந்துட்டார்.  நம்மவரை ஆம்புலன்ஸில் ஏத்த உதவி செஞ்சுட்டு,  முன்னால் ட்ரைவர் பக்கத்து ஸீட்டில் உக்கார்ந்தார்.  ஆக்ஸிஜன் மாஸ்க்கை  வண்டியில் இருக்கும்  ஸிலிண்டரில் பொருத்திக் கையில் பிடிச்சபடி ஒரு  நர்ஸும், நானும்  வண்டிக்குள் இருக்கோம். 
அப்போதான்  ஓர்ப்படி வந்தாங்க. கூடவே அவுங்க மருமகனும்.  ஆம்புலன்ஸைப் பின் தொடர்ந்து அவுங்க கார் வருது.

ரெண்டு நாளுக்கு முன் எனக்குக் காது பிரச்சனைக்கு ஸ்கேன் எடுத்த அதே இடம் ! Scan World.   MRI  எடுத்து முடிச்சதும், அங்கேயே பார்த்துட்டுத் தலைக்குள்ளே  ரத்தகாயம் எல்லாம் இல்லைன்னு சொன்னாங்க. கொஞ்சம் நிம்மதி ஆச்சு.
  
திரும்பி வரும்போது,  கூடவே இருந்த நர்ஸ், இவராண்டை , 'பயப்படாதீங்கப்பா. உங்களுக்கு ஒன்னும் ஆகலை.  சீக்கிரம்  நல்லாயிருவீங்க' ன்னு சொன்னது  ஒரு தைரியம் கொடுத்துச்சு. 

ஹாஸ்பிடல் வந்து சேர்ந்ததும், ' கொஞ்சநாள் கவனிப்பில் இருக்கணும்.   இங்கேயே அட்மிட் ஆகறீங்களா இல்லை வேறெந்த ஹாஸ்பிடலுக்காவது போறீங்களா'ன்னு கேட்டாங்க.  எனக்கு மனசுக்குள் நியூஸி ஹாஸ்பிட்டல்னு இருந்தது.  ஓர்ப்படி சொன்னாங்க.... 'இன்னும் பெரிய ஆஸ்பத்ரிக்குப் போயிடலாம். அப்பல்லோ நல்லா இருக்கும்' ! 

ஐயோ... அப்பல்லோவா.... இட்லி வாங்கக் காசில்லை ன்னு  சொன்னேன். ஆனாலும் அவுங்க செகண்ட் ஒப்பினியன் வேற டாக்டர்கிட்டே கேக்கலாமுன்னு சொன்னாங்க. எனக்கென்னமோ இந்த இடம் போதும்னு தோணுச்சு.  இதுவரை எல்லோரும்  நல்லாவே பழகறாங்க. டாக்டர்ஸும்  கவனம் எடுத்துக்கறாங்க.  நாளைக்கு ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் வேற வர்றார்.  பார்த்துக்கிட்டுச் சொல்லலாமுன்னு... 'இங்கேயே அட்மிட் செஞ்சுருங்க'ன்னேன். 

ஏஸியுடன் தனி அறை கொடுத்தாங்க. முதல் மாடிதான்.  அறைக்குப்போய் இவரை படுக்கவச்சாச்சு.  நினைவு இருக்கு. அப்பப்பக் கண்ணைத் திறந்து பார்க்கிறார்.  இங்கேன்னு   முடிவானதும்தான், அறைக்குப்போய் சில பொருட்களைக் கொண்டுவரணுமேன்னதும்   மச்சினர் மாப்பிள்ளை, நம்ம வண்டியில் போய் வந்துறலாமுன்னார்.  நானும், கார்த்திக்கும் போனோம்.

மச்சினர் மருமகன், நமக்கும் மருமகன்தான் இல்லையோ !  போன வருஷம்தான் மகளுக்குக் கல்யாணம் ஆச்சு.  கோவிட் காலம் . நியூஸி பார்டர் க்ளோஸ்டு  என்பதால்  கல்யாணத்துக்குப் போக முடியலை.  இந்தப் பயணத்தில்,  தனிக்குடித்தனக் கிளிகளைப் போய்   சந்திக்கணும்னு இருந்தோம். ஆனால் இப்படி ஒரு கட்டத்தில் மருமகனின் சந்திப்பு ஆச்சு. ஜஸ்டின் ரொம்ப நல்ல மாதிரின்னு பார்த்தவுடன் மனதில் பட்டது. அதுவே உண்மையும்.  மச்சினர் ஊரில் இல்லை. இன்னும் சிலநாட்களில் திரும்பி வந்துருவாராம்.

அறைக்குப் போய், ரெண்டு தலையணை, ரெண்டு பெட்ஷீட், டவல்ஸ் வேணுமுன்னு  ஹௌஸ்கீப்பிங்கில்  சொல்லிட்டு,  என்னுடைய மருந்துகள், முக்கியமா நம்மவரின் ஃபோன் சார்ஜர் எல்லாம் எடுத்துக்கிட்டேன். ஜஸ்டின் , கெட்டிலையும், காஃபிக்குத் தேவையானவைகளையும்,  ஸ்பூன் & கப்ஸ் எல்லாமும் எடுத்து வச்சார். எதுக்குன்னு இருந்தது.... ஆனால் எவ்வளவு உபயோகமுன்னு பின்நாட்களில் தெரிஞ்சது. என் நன்றியை ஜஸ்டினுக்கு இங்கேயும் சொல்லிக்கறேன்.

நாங்க ஹாஸ்பிடலுக்கு வந்துட்டோம்.  அதுக்குள்ளே  நைட் ட்யூட்டி டாக்டர்ஸ் வந்து பார்த்துட்டு மருந்தெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சுருந்தாங்க. நம்மவரை கவனிச்சுக்க ரெண்டு நர்ஸுகள்.  மானீட்டர் ஹார்ட் பீட் காமிச்சுக்கிட்டு இருக்கு.  மணிக்கொருமுறை பிபி செக் பண்ணறாங்க.

ஒரு சின்னூண்டு பெஞ்ச் மாதிரி  இருக்கும் கட்டிலில் என் படுக்கை. ஸ்ட்ரெச்சர் சைஸ் கூட இல்லை.  உண்மையைச் சொன்னால்..... கடைசி காலக்கட்டுமானம் போல!  ஆடாமல் அசையாமல் நேராக் கிடக்கணும்.  நோ ஒர்ரீஸ்....  

ராத்ரி மணி ரெண்டு இப்போ ! ஓர்ப்படியும் மருமகனுமாக் கிளம்பிப்போனாங்க.  கொஞ்ச நேரத்தில் கார்த்திக்கும் கிளம்பினார். நானும் கட்டிலில் செட்டில் ஆனேன். 

ராமாயணம் வாசிக்கும்போது, கைகேயி  பரதனுக்குப் பட்டம் கட்டவேணும் என்று சொன்னதும்,  ஏன் என்ற குழப்பத்தில் இருந்த தசரதர், ராமன்  வனவாசம் போகணும் என்றதைக் கேட்டவுடன்.............  அடியற்ற மரம்போல்  வீழ்ந்தார் என்று வரும் ஸீனை நேரில் பார்த்துட்டேன்...........

 PIN குறிப்பு:  இந்தப் பதிவை இன்றைக்கு எழுதும்போது....  ரொம்ப நெர்வஸாப் போச்சு.  கெட்டதில் நல்லதுன்னா ஹாஸ்பிடல் கேட்டுக்குள்தான் இத்தனையும் ஆச்சு. வேறெங்காவது பயணத்தில் இருக்கும்போதோ, வேற ஊர்களிலோ,  தெருவில் நடந்து போகும்போதோ....  சம்பவம் நடந்துருந்தால்..... ஐயோ.... நினைச்சுப் பார்க்கவே முடியலை. பெருமாள்தான்  வந்த கஷ்டத்தையும்  கடுமையாக்காமல், லகுவா ஆக்கினார்னு நம்பறேன். நம்ம கர்ம வினைப்படி அனுபவிக்க வேண்டியது  வந்தாலும், கடவுள் கருணையால் கடுமையில் இருந்து தப்பிக்கலாம். பெருமாளே  பெருமாளே....


சம்பவம் நடந்தபின்  செல்லில் கெமரா இருக்குன்றது நினைவில் இல்லை.

தொடரும்...... :-)


9 comments:

said...

எல்லாம் நல்லபடியா நடந்திருக்கும். அந்த ஹாஸ்பிடலுக்கு அன்று போனது நல்லதுதான்.

said...

எல்லாம் நல்லதுக்கே, க்ருஷ்ணார்ப்பணம்.

said...

மிகவும் பதட்டமான தருணங்கள்.  நல்லவேளை, பெருமாள் உங்களை நல்ல நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

said...

அருமை பகிர்வுக்கு நன்றி...

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

கடவுளாப் பார்த்து அங்கே அனுப்பினார்னு சொல்லணும்தான் !

said...

வாங்க விஸ்வநாத்,

பூரண சரணாகதி !

said...

ஹாஸ்பிட்டலில் நிற்கும் போதே நடந்தது அவனருளே. காத்த இறைவனுக்கு நன்றி. அனைத்தும் நலமானது மகிழ்ச்சி.

said...

வாங்க மாதேவி,

ரொம்பக் கஷ்டப்படுத்தாமக் காப்பாத்திட்டார் !

said...

வாங்க பிரபா,

நன்றி !