Wednesday, July 31, 2019

அடுத்துப்போனது அபயகிரி விஹாரைக்கு! (பயணத்தொடர், பகுதி 124)

இங்கே ருவன்வெலிசாய விஹாரை விழாவை மனசில்லா மனசோட விட்டுட்டுப்போகும்போது கொஞ்ச தூரத்துலேயே இன்னொரு ஸ்தூபா. வழிக்கருகில்  இல்லாம கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கு.  ஸ்தூபாவை அடுத்து உள்புறமே அதைச் சுத்திக் கல் தூண்கள் வேலி கட்டுனமாதிரி!  தூபாரமா ஸ்தூபான்னு பெயர்.
ஆரம்பத்துலே இருக்கவேண்டிய  ஸ் ...  சைலண்ட் போல!  இதுவும் 3BCE காலத்துலே கட்டுனதுதானாம். புதுப்பிச்சதால் பளிச்ன்னு இருக்கு!
நமக்கு நேரம் இல்லைன்றதால் போறபோக்கிலே ஒரு க்ளிக். அபயகிரி விஹாரைக்கருகில்  போயிட்டோம்.

ரெண்டாயிரத்து நூறு வருசத்துக்கு முந்தி கட்டுனது.  செங்கல் கட்டுமானம். ரொம்பவே பெருசு. எல்லாமே  அரசர்கள் கட்டினவைகள்தான்.  ராஜ்ஜியம் முழுசும் கைவசம் இருக்கும்போது இடத்துக்கா பஞ்சம்?

 அரசர் வலகம்பா(கு) என்ற வட்டகாமினி அபயன் (நம்ம துட்டகாமினி மன்னரின் தம்பி மகன்.   சொந்த மகன் சலிய(ன்) காதலே பெருசுன்னு பட்டம் துறந்ததால்  சித்தப்பா குடும்பத்துக்கு அரசுரிமை போயிருச்சு, பாருங்க ) கட்டுன விஹாரை இந்த அபயகிரி.
 இதை சமீபத்துலே பழுதுபார்த்துருக்காங்க.  இருபத்திஎட்டு லக்ஷத்து முப்பத்துமூணு ஆயிரத்து, முன்னுத்தி நாப்பத்தியோரு செங்கல் செலவாகி இருக்காம் இந்த புனர் நிர்மாணத்துக்கு!  காசுக்கணக்கில் சொன்னால் அம்பத்திமூணு கோடி ரூபாய்!

இதுவும் பெரிய வளாகம்தான். ஆனால் உள்ளே போக சுத்துச்சுவரெல்லாம் இல்லை. பெரிய மரங்கள் அடர்ந்த இடத்தில் கம்பீரமா நிக்குது!

வாசல் படிக்கட்டுக்கு ரெண்டு பக்கமும் சின்னதா ரெண்டு சந்நிதிகள்.  பூமாலை கட்டித் தொங்கவிட்டாப்லே காகிதத்தில்  புத்த மந்திரங்களோ, இல்லை வேண்டுதல்களோ எழுதிக் கோர்த்துத் தொங்கவுட்டு இருக்காங்க. ஒரு பக்கம் வெள்ளை, அடுத்த பக்கம் சிகப்பு!

(நம்ம பக்கங்களில் கூட ஆஞ்சி சந்நிதியில் இப்படி ஸ்ரீராமஜெயம் னு எழுதுன காகிதங்களை மாலையாக் கட்டிப் போடறது உண்டுதானே? )
பத்துப்பதினொரு படிகள் ஏறி மேலே போறோம்.  பெரிய முற்றத்தில்  ரெண்டு பக்கங்களிலும் கல் தூண்கள். கூரை போட்டு மண்டபங்களா இருந்ததோ என்னவோ? அதுக்கு அந்தாண்டை  உயரமான பீடத்தில்  ரெண்டு குட்டிச் சந்நிதிகள்  ஸ்தூபா அமைப்பில்.


புதுப்பிக்கும் வேலை ஆரம்பிச்சது 1997 ஆம் ஆண்டு.  அநேகமா வேலை முடியப்போகுதாம் இப்போ. ஆச்சே இருபத்தியொரு ஆண்டுகள்!
மேலே படம்: கூகுளார் உதவி.  பழுதுபார்க்கும் வேலை நடக்கும்போது எடுத்தது



பொதுவா இந்த ஸ்தூபா அமைப்பில்  வட்டமாக் கிண்ணம் கவிழ்த்து வச்சாப்லயும்,  பூஜை மணியைப்போலும் இருப்பவைதான் பெரும்பாலும்.   கவிழ்த்த கிண்ணத்துக்கு உச்சியில் ஒரு கூம்பு கோபுரம் போலக் கட்டறாங்க. உள்ளே போகக் கதவுகள் கிடையாது.  புனிதச்சின்னங்கள் உள்ளே இருப்பதாச் சொல்றதை, கும்மாச்சி கோபுரம் கட்டும்போது உள்ளே இறக்கி வைப்பாங்க போல!  ரெலிக்ஸ் என்னும்  (கெடாத) மனித  உடம்பின் பாகங்கள்தான். எலும்பு, பல், தலைமுடி இதெல்லாம்  உயிர்போனபின்னும் அழியாதாமே!

சுத்திவர நாலுபக்கங்களிலும் வெளியே  மாடங்களில் புத்தர் சிலைகளை வச்சுருக்காங்க. பக்தர்கள் ஸ்தூபாவை வலம் வந்து நாற்புறமும் சந்நிதிகளில் கும்பிட்டுக்கறதுதான்.  அப்புறம் ஸ்தூபாவுக்கு எதிரில் அதை நோக்கி உக்கார்ந்து  தியானம், மந்திரங்கள் உருப்போடுதல், இல்லை சும்மாவே  லயித்தல்னு  இருக்காங்க.

 (பல விஹாரைகளில் கவனித்தவை )

காவலுக்கு இருக்கேன்னு ஒரு செல்லம் உக்கார்ந்துருந்தது!
பொழுது சாயறதுக்குள்ளே  இன்னும்  கொஞ்சம் சுத்தலாம், வாங்க.  இனி ஓட்டம்தான்....... விஸ்தரிச்சுப் பார்க்கவும் எழுதவும் கூட  நேரமில்லையே.....


தொடரும்.........   :-)



Monday, July 29, 2019

அந்தக் காலத்து அநுராதபுரம் (பயணத்தொடர், பகுதி 123 )

நாட்டுக்கு  வருமானம் ஈட்டித்தரும் சுற்றுலாத்துறையை ரொம்பவே நல்லா ஆர்கனைஸ்டா நடத்தற நாடுன்னா நான் கம்போடியாவைத்தான்  சொல்வேன்.  அதுக்குப்பிறகு ரெண்டாவது இடத்தில் இருப்பது ஸ்ரீலங்கா என்றே என் எண்ணம்.
சரித்திர முக்கியத்துவம் உள்ள பழைய நகரைப் பார்வையிட வரும் பயணிகளிடம்  மொத்தமாக ஒரு தொகை வசூலிக்கறாங்க. ஒருநாள் , ரெண்டு நாட்கள்னு நம்ம பயணத்திட்டத்துக்கு ஏற்றபடி டிக்கெட் வாங்கிக்கலாம்.
நமக்கு ஒரு நபருக்கு மூவாயிரத்து,தொள்ளாயிரத்து எழுபத்தியஞ்சு ரூபாய். இது ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் டிக்கெட்.
காலையில்  அனுராதாபுரம் வந்த நாம் இசுருமுனிய கோவிலுக்குப் போயிட்டு  நேரா ஊருக்குள் போயிட்டோம். இன்றைக்குத் தங்கல்  த லேக் சைட் ஹொட்டேல். ஒரு ஏரிக்குப் பக்கத்தில்தான் இருக்கு!   இங்கெல்லாம் மனிதரால் கட்டப்பட்ட  நீர்த்தேக்கங்களை வெவா என்று சொல்றாங்க. வாவி என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்து வந்துருக்கலாமாம். இந்த ஏரிக்குக் கூட நுவராவெவா என்ற பெயர்.
ஹொட்டேல் என்னவோ சுமாராத்தான்  இருக்குன்னு எனக்கொரு தோணல்.  'இல்லை... இது இங்கத்து பெஸ்ட் ஹொட்டேலில் ஒன்னு..... ஃபோர் ஸ்டார்'னு சொன்னார் 'நம்மவர்'  ஆனா எல்லா  அறைகளும்  ஃபுல்லா இருக்காம்.  பேஸ்மென்ட் அறைகள்தான்  கிடைச்சது.  ஒரு நல்லது என்னன்னா..... கார் பார்க்கை ஒட்டியே இருப்பதால் சட்னு அறைக்குப் போயிடலாம்.  ஒரு ஏழெட்டுப் படிகள் இறங்கணும்தான்.

அறையும் சுமார். இது கெட்ட கேட்டுக்கு,  இது டீலக்ஸ் ரூமாம் !  தொலையட்டும் இன்றைக்கு ஒரு நைட்தானே..... போகட்டும். செக்கின் ஆனதும், இங்கே பார்க்கவேண்டிய முக்கிய சமாச்சாரங்கள் என்னன்னு கேட்டால் ஒரு ப்ரோஷர்(சின்னதா ஒரு கையேடு !  )  கிடைச்சது.  அதுலே ஒரு பதினேழு இடங்கள்  சரித்திரமுக்கியமானவைகள்.



இதை வச்சுக்கிட்டே முக்கியமான இடங்களைப் பார்த்துக்கலாம். அனுராதபுரத்தில்  பழைய புனித நகரம்தான் பார்க்கணும். புதுநகரத்துலேதான் நாம் தங்கறோம்.

 அவ்வளவா பசி இல்லைன்றதால் ( ஆளுக்கு அரைக் கொய்யாவைத் தின்னு  வச்சால் பின்னே எப்படியாம்? ) மஞ்சுவை மட்டும் சாப்பிட அனுப்பிட்டு, அவர் வந்ததும் கிளம்பினதுதான். டூரிஸ்ட் சென்டரில் போய் டிக்கெட் வாங்குனதும்  முதலில் போன இடம் ருவன்வெலிசாய ( Ruwanwelisaya)என்னும் புத்தர் கோவில். ஸ்தூபான்னும் சைத்யான்னும் சொல்றாங்க. நம்ம பூஜை மணியை  வச்சதுபோல் இருக்கும் அமைப்புதான் இது.   அடியிலே அரைவட்டம், அதன் உச்சியில் கோபுரம்.  நாமும்  பல நாடுகளின் புத்தர் கோவில்கள் (புத்த விஹாரைகள்) போனாலும் இந்த ஸ்தூபா டிஸைனை  அதிகமாப் பார்த்த இடம் நேபாள் நாட்டிலேதான்.  அதுக்கப்புறம் இங்கே ஸ்ரீலங்காவில். மற்ற நாடுகளைவிட  குட்டிக்குட்டி ஸ்தூபா டிஸைன்களை, எல்லா இடங்களிலும், சின்னச்சின்ன கிராமங்களிலும் (நம்மூர்  முக்குகளில் இருக்கும் புள்ளையார் கோவில்கள் போல)வச்சுருக்காங்க.  இந்தப் பயணத்தில்  சைத்யாக்கள் கண்ணில் பட்டுக்கிட்டேதான் இருந்துச்சு.

அரசர் துட்டகமுனு அவர்கள்தான் இப்போ நாம்  போயிருக்கும் ருவன்வெலிசாய ஸ்தூபாவைக் கட்டி இருக்கார்.   ரெண்டாயிரத்து நூத்தியம்பத்தியொன்பது வருஷங்களுக்கு முன்னே இருந்த காலக்கட்டம்.  இங்கே இருந்த  சோழ அரசர் எல்லாளனைப் போரில் வென்றபின் அரசராக முடிசூட்டிக்கொண்டாராம்.
(இந்த சோழப்பேரரசர்தான் மனுநீதி சோழன் என்றதும் கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். ....நீதி கேட்டு வந்த பசுவுக்காகத் தன்மகனைத் தேர்க்காலில் கிடத்திக்கொன்ற மனுநீதிச்சோழனா.... ...   அரசர் எல்லாளனுக்கு ஒரு சிலை வச்சுருக்காங்க  நம்ம சிங்காரச்சென்னை உயர்நீதிமன்றத்தில்!)
 துட்டகமுனு கட்டிய ஒரிஜினல் ஸ்தூபா 180 அடி உயரம்தானாம்.  காலப்போக்கில்  பிற்கால அரசர்கள் பலரும் புதுப்பிச்சுக்கிட்டே இருந்ததில்  வளர்ந்து போய் இப்போ 338 அடியில் கம்பீரமா நிக்குது. உயரத்துக்கேத்த  சுற்றளவு என்ற கணக்கில் 951  அடி இப்போ!  மஹாஸ்தூபா, ஸ்வர்ணமாலி, ரத்னமாலின்னெல்லாம் குறிப்பிடறாங்க.
பத்தொன்பதாம் நூற்றாண்டுலே இந்த ஸ்தூபா ஏறக்கொறைய அழிஞ்சு போச்சுன்ற நிலையில் புத்த பிக்ஷுக்கள் சேர்ந்து இதைப் பழுதுபார்த்துத் திருப்பிக்கட்டத் தீர்மானிச்சு,  1902 இல் ஒரு சங்கம் ஒன்னு அமைச்சு முழுசுமா இப்ப நாம் பார்க்கும் விதத்தில் கட்டி முடிச்சது 1940 ஜூன் 17 ஆம் தேதி !

இந்தக் கோவிலில் இன்னுமொரு விசேஷம் என்னன்னா....   புத்தர் மஹாநிர்வாணமடைஞ்சபிறகு, அவருடைய உடல் பகுதிகளைப் புனிதச்சின்னங்களா எட்டு நாடுகளுக்குப் பிரிச்சு அனுப்பிட்டாங்களாம். அப்படி அந்த எட்டுநாடுகளில் ஒன்னு ஸ்ரீலங்கா. கொழும்புவில் பார்த்த கங்காரமய கோவிலில் தலைமுடியும், கண்டி விஹாரையில் பல்லும் வச்சுருக்கறதைப் போல் இங்கேயும்  வச்சுருக்காங்களாம். என்னன்னு விவரம் கிடைக்கலை. புனிதச்சின்னம் என்ற பதில்தான் கிடைச்சது. என்னவா இருக்குமுன்னு  அப்புறம் மண்டையை உடைச்சுக்கிட்டுத் தேடுனதில் கிடைச்ச விவரம் கழுத்தெலும்பாம் !   (ஓ )

புதுக்கோவில் கட்டிமுடிச்ச ஜூன் மாசத்துக்குப்பின்  ஜூலை மாசத்தில்  பௌர்ணமியையொட்டி பெரிய திருவிழா ஒன்னு வருஷாவருஷம் நடத்தறாங்களாம்.

இதைப்பற்றிய ஒரு விவரமும் தெரியாமத்தான் இன்றைக்கு இங்கே வந்துருக்கோம். பெரிய வளாகம் என்பதால் பார்க்கிங் ஏரியா கொஞ்ச தூரத்தில் இருக்குன்னும்,  இந்தக் கம்பித்தடுப்பு போட்ட பாதையை கடந்தால்  கோவிலுக்குள்ளே போகலாமுன்னும் நம்ம செருப்புகளை வண்டியிலே விட்டுடலாமுன்னும்  அங்கெ நின்னுக்கிட்டு இருந்தவர் சொன்னார்.  மஞ்சுவைப் போய்ப் பார்க் பண்ணிட்டு வரச்சொல்லிட்டு நாங்க இறங்கிப் போனோம்.
கோவில் சுத்துச்சுவர் முழுக்க யானைகள் நின்னு வாவான்னு கூப்புடுது !  ஹைய்யோ!!!

ஒரு உசரமான கல்மேடையில் செல்லம் ஒன்னும் கம்பீரமா உக்கார்ந்துருக்கு!
ஸ்தூபாவுக்கு முன்னால் போய்ச் சேர்ந்ததும் பார்த்தால் நல்ல கூட்டம். ஸ்தூபாவின் நாலு பக்கமும் சந்நிதிகள் போல அமைப்பு. நாம் நுழைஞ்ச இடத்துச் சந்நிதி இப்படி! நாமும் புத்தரைக் கும்பிட்டு வலம் போறோம்.  அந்தப்பக்கம் சந்நிதிக்குப் போகும்  வழியில்




மன்னர் துட்டகமுனு அவர்களுக்குச் சிலை வச்சுருக்காங்க. கண்ணாடி வழியாப் பார்க்கிறார்.  (இவரை துட்டகமினின்னு சொல்றதுதான் சரியாம்! )
கோவிலில்  புத்தமதக்கொடிகள் (நீலம், மஞ்சள், சிகப்பு, வெள்ளை என்ற  நிறங்களில் பட்டை பட்டையா இருக்கு )எல்லா இடங்களிலும் எக்கச்சக்கம். (இதுலே பச்சை வண்ணம் இல்லைப்பா.... )  ப்ரேயர் ஃப்ளாக்னு  இதை புத்தர்கோவில்களில் தோரணங்களாக் கட்டி விடுவது பௌத்தர்களின் வழக்கம்.

இந்தச் சந்நிதியாண்டை நிறையப்பேர் நின்னு பூக்களை அடுக்கிவச்சு, ஊதுபத்திக் கொளுத்தி வச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.  நேரெதிரா  அகலமான ஒரு அமைப்பு நீண்டு போகுது. அங்கே போகும்வழியெல்லாம்  விளக்கு அலங்காரம். இன்னும் லைட்ஸ் எரியலை.  இருட்டும் சமயம் விளக்கேத்துவாங்களாம்! இதுதான் கோவிலுக்குள்  வரும் முகப்பு வாசல் !  (அடடா.....  நம்ம வழக்கப்படி  வேற வாசல் வழியா  வந்துட்டோமே.... )

ரெண்டு பிக்ஷுக்கள்  கூடை நிறைய தாமரை மலர்களைக் கொண்டுவர்றாங்க.
கோவில் புஷ்கரணி அருமை!
நம்மாட்கள் நடமாட்டம் அதிகம்.  முகம் கருப்பா இருக்கும் வகையினர்.

இந்தாண்டை கட்டிடத்தில் மடமோ என்னவோ....  பாத்திரம் தேய்க்கும் மோரி போல ஒரு இடத்தில் குழாயடி.  தேங்கி இருக்கும் தண்ணீரைக் குனிஞ்சு குடிக்கும் ஆஞ்சியைப் பார்த்தால் பாவமா இருந்துச்சு. தண்ணீர் பிடிச்சு வைக்கக்கூடாதோ....
இன்னொரு பக்கம் பார்த்தால்  ஏகப்பட்ட சனம். விழா ஏதோ நடக்கப்போகுது. வரிசை கட்டி ஒருபக்கமா நின்னுருக்காங்க.  சின்ன சப்பரம் ஒன்னைத் தோளில் சுமந்தபடி சிலர். பூக்கள் நிறைந்த தட்டுகளை ஏந்தியபடி பலர், மங்கல இசைக்கான வாத்யகோஷ்டி, புத்த பிக்ஷு ....... 

ரெவ்வெண்டு பேரா நிற்கும் வரிசையில்  ஒரு நீளமான துணியைப் பிடிச்சுக்கிட்டு நிக்கறாங்க. அதுபாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கு!  என்ன கலர்ஃபுல்லா இருக்கேன்னு பார்த்தால் புத்தமதக்கொடி!  பெரிய ரோல்.... பிரிச்சுவிட்டுக்கிட்டே போறாங்க......

விசாரிக்காமல் விடலாமோ?  ஸ்தூபாவைச் சுத்தி இந்தக் கொடித்துணிச்சுருளைக் கட்டிவிடப்போறாங்களாம்.  Flag wrapping ceremony. 336 மீட்டர் நீளம் கொடி ப்ரிண்ட் போட்ட துணியை ஊர்வலமாக் கொண்டுபோய்  சுத்தி விடுவாங்களாம்.
இப்பதான் மக்கள் வந்துக்கிட்டு இருக்காங்க. எப்படியும் இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகுமாம்  கொடி சுத்தி முடிக்க..... அதுக்குள்ளே இருட்ட ஆரம்பிச்சுரும் விளக்கு போட்டுருவாங்க. ஜொலிக்கும் இல்லே?

நமக்குக் கொடுப்பனை இல்லை.... அவ்ளோ நேரம் இங்கே இருக்கமுடியாது..... இன்றைக்கு மட்டும்தான்  இங்கே தங்கறோம்.  மற்ற இடங்களைப் பார்க்க வேணாமா?
நுழைவு டிக்கெட்டில் காலை ஏழு முதல் மாலை அஞ்சரை வரைன்னுதான் போட்டுருக்கு.  இப்பவே மணி நாலரை. இன்னும் ஒரு மணி நேரத்துலே  எவ்ளோ முடியுமோ அவ்ளோ....

குறைஞ்சபட்சம் இதுவரையாவது கிடைச்சதேன்னு , மஞ்சுவை செல்லில் கூப்பிட்டு இந்த வாசலுக்கு வண்டியைக் கொண்டுவரச்சொல்லி கிளம்பிட்டோம்.
இந்த ஸ்தூபாவை மாடலா வச்சுத்தான் பர்மாவில் புத்தர் கோவில் ஸ்தூபா கட்டுனதாக ஒரு கொசுறுத்தகவல்.
ஸ்தூபான்னு சொல்றமே இது சமஸ்கிரதச் சொல்.  Dagoba, Pagoda ன்னு குறிப்பிடறாங்க. எனக்கு சமஸ்கிரதம் மதி :-)

தொடரும்....... :-)