Thursday, February 29, 2024

இதோடு முடிஞ்சதா சரித்திரமே இல்லை !

திவாலின்னு நான் ஆற அமரப் பதிவு எழுதும்போதே அடுத்த தீபாவளி வந்துரும்போல இருக்கு. இன்னைக்கு CFCESSA வோட திவாலி.   Christchurch Fiji Culture, Education, Sports Social Association. 2002ம்  ஆம் வருஷம் ஆரம்பிச்ச க்ளப்.  நாங்க இங்கே வந்த சமயம் (1988 ) நம்ம ஃபிஜி மக்கள் ஏற்கெனவே  புலம்பெயர்ந்து வந்துருந்தாங்க.  கோவில்னு ஒன்னும் இல்லாததால்  வீடுகளிலேயே சாமி கும்பிடுவதோடு,  ராமாயண வாசிப்பும்  மட்டுமே !
இப்படி  ராமாயணம் வாசிக்க சிலபல குழுக்கள் ஏற்கெனவே  அமைச்சுட்டாங்க.  இந்தக் குழுக்களுக்கு ராமாயண் மண்டலின்னு என்ற பொதுப்பெயர் இருக்கு.  இந்தக்குழுக்களின் தலைவர்கள் பெயரால்  இன்னாரின் ராமாயண் மண்டலி குறிப்பிடுவது வழக்கம். நாங்களும் 'பாசுதேவ் கா ராமாயண் மண்டலி'க்குப் போய்க்கிட்டு இருந்தோம்.  வெவ்வேறு குழுக்கள் என்றாலும்,  எல்லாரும் எல்லாருடைய  மண்டலிக்கும் போய்வர்றதுதான். தனித்தனியாக இருப்போம், அதே சமயம் எல்லோரும் ஒன்னாச் சேர்ந்தும் இருப்போம் என்றதுதான் உண்மை.

அப்படி இருந்த காலத்துலேதான்  ஃபிஜியில்  ஸ்கூல்மாஸ்டரா இருந்த ஜகத் சிங் இங்கே நியூஸிக்கு  வந்துட்டார்.  அவர்  தன் பங்குக்கு ஒரு  ராமாயண் மண்டலின்னு  ஆரம்பிக்காம, குழுவுக்கு ஒரு பெயரும் கொடுத்தார்.  இதில்  ராமாயண வாசிப்பும் உண்டு என்றாலும் கலை, கலாச்சரம், விளையாட்டுன்னு  சேர்த்துக்கிட்டதால்  ஃபிஜி மக்கள்  க்ளப் உருவாகிருச்சு.  
இதுக்கு முதலிலேயே 1995 இல்  நம்  ஸ்ரீலங்கா  நண்பர்களோடு சேர்ந்து ஆரம்பிச்ச தமிழ் அசோஸியேஷனும், 1997 இல்  நாம் ஆரம்பிச்ச இண்டியன் க்ளப்பும் ( ISCC   Indian Social Cultural  Club )நல்லாவே இன்னும்  நடந்துக்கிட்டு இருக்கு. 

இந்த ஃபிஜி க்ளப்பில் நாமும் போய்ச் சேர்ந்துக்கிட்டோம். ஸ்ரீராமநவமி, ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி,  திவாலி கொண்டாட்டங்களோடு ராமாயண வாசிப்பு, தேவி பாகவதம் வாசிப்பு ன்னு  ஆன்மிக சமாச்சாரங்களும்  இருக்கே ! 

இப்ப ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னால்..... நம்ம மக்கள் எல்லோருக்காகவும் தனிப்பட்ட ஹால் இருந்தால் வசதியாக இருக்கும் என்பதால்.... சில நண்பர்களின் முயற்சியால் இடம் தேடப்பட்டு, எல்லோருமாச் சேர்ந்து குறிப்பிட்ட தொகையை வழங்கி ஒரு ஹாலையும் வாங்கி, அதை நம்ம சநாதன் தரம் ப்ரதிநிதி சபாவாக நாமகரணம் செஞ்சுட்டோம்.  நமக்கு ஒரு நல்ல அதிருஷ்டமா, ஃபிஜி பண்டிட்டே, ஈடுபாட்டுடன்   முன்னின்று எல்லாத்தையும்  நடத்திக்கொடுத்து வழிகாட்டறார்.  அவருடைய  தலைமையில்தான்   வருஷம் முழுசும் செவ்வாய்க்கிழமைகளில் ராமாயண வாசிப்பும்,  பண்டிகைகள், விழாக்கள் எல்லாமும் குறைவில்லாமல் நடக்குது.  முக்கியமா ,  பூஜை சம்ப்ரதாய முறைகளில்  ஹவன்  (ஹோமம்)செய்வது  அதிகம்.    
Our Sanatan Hall :  Then & Now 
 ஆரம்பகாலங்களில் பள்ளிக்கூட ஹால்கள், சிட்டிக்கவுன்ஸில் ஹால்கள் என்று வாடகைக்கு எடுத்துக்கிட்டு இருந்தோம்.  அங்கெல்லாம்  ஹாலுக்குள்  ஹவன் நடத்த அனுமதி இல்லை.  இப்ப இது நம்ம சொந்த கட்டடமா ஆனதால்  தீவளர்த்து  ஹோமம் செஞ்சுக்கத் தடையேதுமில்லை ! முக்கிய விழாக்கள், பண்டிகைகள் கொண்டாடும்போது  ஹவன் செய்வது   விசேஷம். 
நம்ம ஹால்  வளாகத்தில் இப்ப ஒரு ஆஞ்சநேயர் சந்நிதியும்  கட்டியாச்சு.!  அவரும்  இந்தியாவிலிருந்து நமக்கு அருள் பாலிக்க  வந்து செட்டில் ஆகிட்டார் !
காலநிலை பொருத்தமாக இருக்கும் சமயங்களில்  ஆஞ்சு சந்நிதிக்கு முன்னால் ஹவன் நடத்திக்குவோம்.  ஜனவரி முதல் தேதிக்கு  இங்கேதான் எப்போதும். எங்களுக்கு அது கோடைகாலம் !
அப்ப இந்த ராமாயண மண்டலிகள்  எல்லாம் என்ன ஆச்சுன்னா...  அவர்கள்  எங்கேயும் போகலை... இதே சநாதன் ஹாலில் செவ்வாய்க்கிழமை ராமாயண வாசிப்பிலோ, இல்லை வேறொருநாளோ,   அவரவர்கள் குழுவினருடன்  சேர்ந்து அவர்கள் சார்பில் அந்த நாளை நிறைவாக்கிக் கொள்கிறாங்க. 

நம்ம  மாஸ்டர் ஜகத்சிங் குழுவினர், மாசத்தின்  கடைசி வெள்ளிக்குப் பொறுப்பேத்துக்கிட்டாங்க.  இந்தக்குழுவிலும் நாம் அங்கம் என்றதால்  இதோ கிளம்பறோம், திவாலி கொண்டாட !

அங்கே சநாதன் ஹாலுக்குப் போகும்போது எப்பவும் போல்  முதலில் நம்ம ஆஞ்சி சந்நிதியில் கும்பிட்டோம். ஆரம்பகாலத்தில் கண்ணாடித்தடுப்பு இல்லாமல்தான்  வச்சுருந்தோம்.  நம்ம சனம், பக்தி மிகுதியால்  குங்குமத்தை எடுத்து அவர் முகம் முழுசும் பூசிட்டுப்போகுது.  செம்முகம் நல்லாவா இருக்கு ?   அவர் உடை முழுசும்  குங்குமம் வேற !  

அதனால்  கண்ணாடித் தடுப்புப்போட்டு, பாதங்களை மட்டும் தொடும்படி  செய்தாச்சு. பாதகமலங்களில் குங்குமம் அர்ச்சனை செய்யலாம்.  சுத்தப்படுத்துவதும் நமக்கு எளிது !  


திவாலி விழா ஆரம்பத்தில் வழக்கம்போல் ஹவன் ஆச்சு. அப்புறம்  ராமாயண வாசிப்புன்னு  ஒரு பத்து நிமிட். குழுவினரின் பஜன் !   அடுத்து ஆரத்தி!   எல்லோரும் தீபாரதனையில்  பங்கெடுக்கலாம்.  பிரசாத விநியோகம் முடிஞ்சதும், கலைநிகழ்ச்சிகள்.   பாட்டு, நடனம், கவிதை வாசிப்புன்னு பங்குபெற்ற  அனைவருக்கும்  சான்றிதழ் வழங்குதல். நம்மூர் தபலா கிங்கின் வாசிப்பும் இருந்தது!


மேடை நிகழ்ச்சி என்றெல்லாம் இல்லாமல் , சாதாரணமாகச்  சபையின் முன்  நடந்தவை எல்லாம் ரொம்பவே ஹோம்லி ! 

கீழே சில வீடியோ க்ளிப்ஸ் (ஃபேஸ்புக்கில் போட்டவை)  லிங்க் கொடுத்துருக்கேன்.  நேரம் இருந்தால் நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.


https://www.facebook.com/1309695969/videos/1477032929537918/

https://www.facebook.com/1309695969/videos/710570847648085/

https://www.facebook.com/1309695969/videos/265480586526453/

https://www.facebook.com/1309695969/videos/707948544587781/

https://www.facebook.com/1309695969/videos/691345899727490/

பஜன்

https://www.facebook.com/1309695969/videos/210784125383398/

கலை நிகழ்ச்சிகள் முடிஞ்சதும்  மஹாப்ரஸாதம் என்னும் வகையில் விருந்து சாப்பாடு ! 

பொதுவாகவே ஃபிஜி இந்தியர் விழாக்களில்  முதலில் தீபாராதனை  முடிஞ்சதும் ஒரு ப்ரஸாதம். பக்தர்கள்  கொண்டு வருபவை.  உடனே ஒரு டீ !   விழாவின் கடைசியில் மஹாப்ரஸாத் என்னும் வகையில்  விருந்து. இதை யாராவது ஸ்பான்ஸார் செய்துவிடுவார்கள்.  இல்லையெனில்  சநாதன் சபா சார்பில்  நடக்கும்.  சமையல் ஏற்பாடுகளில் ஆண்களே, அடுப்புக்கு  முன்னின்று  சமைப்பார்கள்.  பெண்கள் பூரி மாவு பிசைந்து, பூரி திரட்டிப்போடுதல் போன்ற வேலைகள் மட்டுமே ! 

நல்லா இருக்குல்லே !!   
Friday, February 23, 2024

விடாது இந்த திவாலி........

இங்கே க்றிஸ்மஸ் கொண்டாட்டங்கள் கூட   நவம்பர் மாசமே ஆரம்பிச்சுரும்.  பண்டிகைக்குச்  சர்ச்சுக்குப் போறாங்களோ இல்லையோ.... பார்ட்டி பார்ட்டின்னு க்றிஸ்மஸ் பார்ட்டிகளா  நடந்துக்கிட்டு இருக்கும். நம்மவர் வேலையில் இருந்தப்ப .... ஆஃபீஸ் பார்ட்டின்னே ஒரு ஏழெட்டு இருக்கும். மொத்தமாக் கொண்டாடப்டாதா?  ஒவ்வொரு டிபார்ட்மென்டுக்கும் தனித்தனியா..... அப்புறம் க்றிஸ்மஸ் & கோடை விடுமுறைன்னு  கடைசியா ஒன்னு.....  
இதே நிலைதான் இந்த தீபாவளிப் பண்டிகைக்கும் ! வீக்கெண்ட் வந்தால் விழா!
இந்த வீகெண்ட் முடிஞ்சுருச்சு. இனி அஞ்சு நாட்கள் நம்ம வேலைகளைப் பார்க்கணும்.
இதோ வசந்தகாலத்தின் கடைசி மாசம் நவம்பர் என்பதால்  செடிகொடிகள் எல்லாம் ரொம்பவே சந்தோஷமா இருக்காப்ல எனக்கொரு தோணல். அந்த சந்தோஷம் கொடுக்க , நாம் நம் உழைப்பைக் கொஞ்சம் தரணும். புதுசா ஒன்னும் செடிகள் வாங்கிக்கலை.  இருப்பதைப் பார்த்துக்கிட்டாலே போதும்.  சீஸன் முடிஞ்சாட்டு, ரூத்லெஸ்ஸா இருக்கப்போறேன்.  தோட்டச் சீரமைப்பு செஞ்சாகணும்.  வீடு முழுக்க ஒரே வீடு !மகளும் பேரனும் வந்தாங்க. நம்மவன் உடனே மூஞ்சைத்தூக்கி வச்சுக்கிட்டான்.  அவுங்க கிளம்பும்போது எட்டிப் பார்த்தான்.  மகள் தூக்கினதும் கொஞ்சம் சமாதானமாச்சு. 
நான் என்ன வேலை செய்தாலும்  உடனே அதை எப்படியாவது தடுக்க நினைக்கிறான் போல.  புடவை முந்தானைக்கு சுஷ்ருஷை செய்யலாமுன்னு எடுத்தால்  அதில் படுத்துக் குறட்டை விட்டால் நான் என்ன செய்ய ? 

லுக் ஷார்ப்னு  இங்கே ஒரு கடை இருக்கு.  முக்கியமா பார்ட்டி சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களே ! சின்னச்சின்ன  க்ராஃப்ட்  வேலைகளுக்கான அலங்காரப்பொருட்களும் கிடைக்கும். என்னோட ஃபேவரிட் கடையா இதை  ஆக்கியாச்சு.  ஒருநாள் வேற வேலையா அந்தப் பக்கம் போனவள்,   'கவனமாப் பார்க்க'  இதுக்குள் போனால்.... 

க்றிஸ்மஸ்ஸுக்கான சமாச்சாரங்கள்  ஒருபக்கம் குமிஞ்சு கிடக்க, நம்ம தீபாவளி விழாவுக்கான  அலங்கார விளக்குகள், தோரணங்கள்,   பார்ட்டிக்கான  தட்டுமுட்டு சாமான்னு இருக்கு!   இந்த 36 வருஷத்துலே முதல்முறையா இப்படிப் பார்த்ததும்  விடமுடியுமா ?  பேரனுக்குத் தலைதீபாவளி வேற !  ஆனா ச்சும்மாச் சொல்லக்கூடாது..... சீனர்களுக்குத்தான் நம்மேல் எவ்ளோ அன்பு !!!! சிந்திச்சுச் சிந்திச்சு நமக்காக உழைக்கிறாங்க, இல்லே!!!! 
உள்ளுர் நண்பர் வீட்டுக்குக் கொலு பார்க்கப்போனப்ப, அந்த கொலுப்படிகள் நல்லா இருக்கேன்னு விவரம் கேட்டுட்டு வந்தேன்.  கிரியில் வாங்கியதாம். வலையில் பார்த்தப்ப நல்லாதான் இருக்கு. இப்பதான் நமக்குக் கொஞ்சம் பெரிய பொம்மைகள் வந்துருக்கே...... நம்ம வீட்டுக் குட்டிக் கொலுப்படிகளில் நிக்க வைக்க முடியாதுதான்.  அதான் எப்படி வரவழைக்கணுமுன்னும் தெரிஞ்சுபோச்சே. அப்பப்பக் கொஞ்சம் வாங்காமயா இருக்கப்போறோம் ?  மெட்ராஸ் கொலு டால்ஸ் நினைவு வச்சுக்கணும்.

வலையில் நீள அகல உயர விவரங்கள் எல்லாமும் கொடுத்துருக்காங்கன்னு  அந்த அளவு நமக்குச் சரிப்படுமான்னு  பார்த்தேன்.  ஒன்பது படிகள்தான் லக்ஷியம். ஆனால் ஸீலிங் வரை போகுது.  ஏழே இருக்கட்டுமுன்னு முடிவு செஞ்சுக்கிட்டு, குடும்ப நண்பரிடம்  கொஞ்சம் விசாரிக்கச் சொன்னதும், அவர் போய்ப் பார்த்துட்டு நல்லாவே இருக்குன்னார்.  வாங்கி அனுப்பறேன்னு வாங்கி ரெண்டு பொட்டிகளில் நிரப்பியும்  அனுப்பிட்டார்.   பொட்டிகளும் பத்திரமா வந்து சேர்ந்தன.கஸ்டம்ஸ்லே பிரிச்சுப் பார்த்துட்டு அனுப்பியிருக்காங்க.  எதுக்குன்னு தலையைப் பிச்சுக்கிட்டாங்கன்னு நினைக்கிறேன் :-)
ஒரு பொட்டியைத் திறந்து பார்த்தால்..... மஹாலக்ஷ்மியும் ஆண்டாள் கிளியும், நம்ம சுஜாதா தேசிகனின் திருப்பாவை புத்தகமாய், தீபாவளிப் பரிசுகளை நண்பர் அனுப்பி இருந்தார். இன்னொரு பொட்டியைத் திறக்க நல்ல நேரம் கிடைக்கலை.
வீட்டுக்கு வந்த மஹாலக்ஷ்மியைக் கொஞ்சூண்டு அலங்கரிச்சு,  நைவேத்யமா, நமக்காகி வந்த கேஸரி !


உள்ளூர்தோழி ஒருவர் புடவை வியாபாரம் ஆரம்பிச்சுருக்காங்க. 'ஊக்குவித்தல் நம் கடமை'ன்னு ஒரு புடவை வாங்கினேன். அப்படியே  குட்டனுக்கும் ஒரு ராம்ராஜ் வேஷ்டி & சட்டை செட்.  மறுநாள் எங்க யோகா வகுப்பில் திவாலி கொண்டாடறோம்.  முக்கிய பண்டிகைகளைக் கொண்டாடாமல் விடமாட்டோமே ! ஆளாளுக்கு ஒரு பலகாரம் கொண்டு போனால்  விழா அமர்க்களமாக  அமைஞ்சுறதா என்ன ? ஐ டிக்ளேர் த  திவாலி செலிப்ரேஷன் ஒப்பன் !!!!
புதுப்புடவையுடன், அலங்கார விளக்கையும் கொண்டுபோய்க் கொண்டாடியாச்சு :-)   கர்பா ஆட்டமும், பாட்டமும் இல்லாமலா !