Thursday, February 01, 2024

விஜயதசமி

நவராத்ரி  கடைசிநாள் நாம் ஸ்வாமி நமஸ்காரம் செஞ்சுட்டுப் படுக்கபோறதுக்கு முன்னால்  சாஸ்த்திரத்துக்கு ரெண்டு பொம்மைகளைப் படியிலேயே படுக்க வச்சுட்டுப்போகணும். காலையில் புனர்பூஜை செஞ்சுட்டுப் பொம்மைகளைப் பெட்டியில் அடுக்கிடலாம்னுதான் கொலுவுக்கான நியதி இருக்குன்னாலும், நம்ம வீட்டில் விஜயதசமிக்கு ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் உண்டு என்பதால்  அன்றைக்குப் பொம்மையைத் தூங்க வைப்பதில்லை.  இந்தப் பத்தாம் நாளைச் சேர்த்துத்தானே  தசரா என்கிறோம், இல்லையோ !
இது சனிக்கிழமையாக அமைஞ்சால் எனக்கு ரெட்டிப்பு சந்தோஷம்.  வேலைநாளில் வந்தால். அடுத்து வரும் சனிக்கிழமை வரை கொலுவை விட்டுவச்சுருவேன்.  இடும்பி ஸ்டைலே தனி ! ஆனால் இந்த  25 வருஷத்தில்   வழக்கமாகப்  பாராயணம் செய்ய வரும் நண்பர்கள் பலரும்  இந்தமுறைப் பயணத்தில் இருப்பதால்.....  அவர்கள் எல்லோரும் திரும்பிவந்தபின் வச்சுக்கலாம் என்ற முடிவு. எது எப்படின்னாலும்  விஜயதசமி நாளை வெறுமனே விடமுடியாது.  பிரசாதங்களைச் சின்ன அளவில் செஞ்சு, நானும் நம்மவரும் பாராயணம் செய்வோம்.  பெரிய எழுத்துப் புத்தகம்  நிறைய வச்சுருக்கேன். 
அப்பதான் 'சனிக்கிழமை நம்ம வீட்டுக்கு வரட்டுமா'ன்னு கேட்ட தோழிக்கு , அன்றைக்கு  நாம் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குப் போவதால்  செவ்வாய்க்கிழமை தசராவுக்கு வரச் சொன்னது  நினைவில் வந்தது.  அவர்கள் இன்னொரு தோழியையும் கூட்டிவர அனுமதி கேட்டார்கள். நோ ஒர்ரீஸ் என்று சொல்லி இருந்தேன். செவ்வாய் முடியவில்லை என்றால்  புதன் வரட்டுமான்னு இன்னொரு கேள்வி. ..... ஹாஹா.... பண்டிகையே முடிஞ்சு போச்சு!

கொலுவுக்கு இங்கே நம்ம நண்பர்களுக்குப் பொது அழைப்புதான். அதிலும் குறிப்பிட்டு சிலநாட்களில் வரச்சொல்லிருவேன்.  அப்படி வந்தால் நமக்கும் அவர்களுக்குமே வசதி. அதைத் தவறவிட்டால் வேறொரு நாளை எப்படியாவது ஒதுக்கித்தர முற்படுவேன். ஆனால் அதெல்லாம் அந்த ஒன்பது நாட்களுக்குள் இருக்கணுமா இல்லையா ? 
சக்கரைப் பொங்கல், வெண் பொங்கல். ததியன்னம் தான் இன்றைக்கு  நிவேதனம்.  நாங்க ரெண்டுபேரும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தோம். வழக்கமா நம்ம எம் எஸ் அம்மாவின் ஸிடிதான் நம்முடன். இந்தமுறை சூர்யகாயத்ரி இருக்கட்டுமே ! சின்னப்பெண், எவ்வளவு ஸ்பஷ்டமா இருக்கு உச்சரிப்புன்னு.... கொஞ்சம் ஆச்சரியம்தான் !





பேரனும் மகளுமாக  வந்து பூஜையில் கலந்துகொண்டார்கள் !     ஒரு நாலுமணிபோல  அவுங்க கிளம்புனதும், நம்மவன் மெதுவா எழுந்து வந்தான். முகத்தில் தாங்கவொன்னா சோகம்.  சவலைப்பிள்ளை மாதிரிதான்.....

கொஞ்சநேரம் தூக்கிவச்சுக் கொஞ்சுனதும் ஓரளவு சரியானான்.  

சாயங்காலமாத் தோழியும் தோழியுமா வந்தாங்க. அவுங்க பிள்ளைகளைப் பார்த்ததும் நம்மவன் வந்து ஹலோ சொன்னான் !  ஏற்கெனவே வந்து போன மக்களென்பதால்  நினைவில் இருந்துருக்குமோ என்னவோ !



கூட வந்த இன்னொரு தோழி, ஒரு சின்ன நடனக்குழு வச்சுருக்காங்க. பிள்ளைகள் நல்லாவே ஆடுவாங்க. ஒரு பத்துப்பிள்ளைகள் இருக்கலாம். நிறைய முறை மற்ற நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கேன்.  ஆடும் பிள்ளைகளை விட முடியுமோ ?  இங்கேயும் ஆடவச்சாச் ! 



இந்தத்தோழி நம்ம ஃபேஸ்புக் ப்ரெண்டும், நம்ம ஜன்னுவின் விசிறியும் கூட ! இன்னுமொரு முக்கியக்குறிப்பு.....   தமிழர் இல்லை !


6 comments:

said...

ரஜ்ஜுவின் சோகம் மனதைக் கவ்வுகிறது.  அல்லது அவன் அப்படி நினைத்துக் கொள்வான் என்று நமக்கு (உங்களுக்கு) தோன்றுகிறதோ?  அவன் அப்படி எல்லாம் இல்லையோ?!)

said...

விஜயதசமி கொண்டாட்டங்கள் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.

said...

வாங்க ஸ்ரீராம்,

நமக்குத் தோணுதோன்னு நமக்குத்தான் தோணுதே தவிர, செல்லங்களுக்கும் பொஸஸிவ்நஸ் உண்டுன்னு செல்லங்களுக்கான மனநிலை மருத்துவர்கள் சொல்றாங்கதான்.

என்ன ஒன்னு, செல்லங்களுக்கு நம்ம பாஷையில் வாய்விட்டுச் சொல்லத்தெரியலை :-(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

said...

விஜயதசமி பேரனுடன் மகிழ்ச்சியான கொண்டாட்டம். பேரன் கியூட்.

ரஜ்ஜு தனது முதலிடம் போய்விட்டது என நினைக்கிறானோ குறும்பு செல்லம். நீங்கள் அணைத்து வைத்திருப்பதில் மகிழ்வான்.

said...

வாங்க மாதேவி,

மனிதருக்குள்ள எல்லா குணமும் செல்லங்களுக்கும் இருக்கேப்பா ! நம்ம மொழியில் சொல்லத்தான் தெரியலை!