Wednesday, February 27, 2013

புள்ளிருக்கு வேளூர் போகலாமா?

சிதம்பரத்தில் இருந்து சீர்காழி வழியா வந்துருந்தால் ஒரு  இருபத்தி மூணுகிமீ தூரத்தை  குறைச்சுருக்கலாம். புள்ளிருக்கு வேளூரைப் பார்த்த கையோடு திருக்கடையூர்  என்று இருந்துருக்கலாம்.  இங்கே இப்படி நாள் முழுசும்  கல்யாணக்கொண்டாட்டமுன்னு தெரியாமபோச்சே:( வந்தவழியாவே திரும்பிப்போனோம்.  இது நம்ம பயணத்திட்டத்தில் இல்லாத ஊர். ஆனால்  தானாய் அமைஞ்சு போச்சு!

இந்தப்புள் தான் 'அந்த' ஜடாயு.  ராவணன் சீதையைத் திருடிக்கொண்டு போன சமயம் பார்த்துட்டு அவனோடு சண்டை போட்ட அதே ஜடாயுவேதான். சண்டையில் இறகுகள் வெட்டப்பட்டு குற்றுயிராகக் கிடந்தது. சீதையைத் தேடிக்கொண்டு ராமலக்ஷ்மணர்கள் அந்த வழியில் வந்தபோது சமாச்சாரத்தைச் சொல்லிவிட்டு உயிர் நீத்த அற்புதப் பறவை. அதற்கு சிதை மூட்டி உடலைத் தகனம் செய்த இடம்தான் இந்தக்கோவிலில் இருக்கும் ஜடாயு குண்டம்.

காஞ்சீபுரத்திலிருந்து ஒரு 12 கிமீதூரத்தில் திருப்புட்குழின்னு ஒரு ஊர் உண்டு. அங்கே பெருமாள் ஸ்ரீ விஜயராகவன் கோவில் கொண்டுள்ளார். இது திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம். அந்த 108 இல் ஒன்னு. இங்கே விசேஷம் என்னன்னா.... ஜடாயுவுக்கு  ஸ்ரீராமர் ஈமக்கடன் செய்தது.  இப்படி ஒரு இடம் இருக்க,   இங்கே சுமார் 235 கிமீ தாண்டி வைத்தீஸ்வரன் கோவிலில் எப்படி ஜடாயுவை  தகனம் செய்த குண்டம் இருக்கு(ம்) என்பது கொஞ்சம் புரியத்தான் இல்லை.  ஆனாப் பாருங்க.... இது  சிவஸ்தலம். இங்கே ஜடாயு குண்டம் என்பது இன்னொரு சிறப்புதான் இல்லையா?  ஒரே சம்பவம் ரெண்டு இடத்துலே ஒருத்தருக்கே சம்பவிச்சதை  ஒரு அதிசயமுன்னு  எடுத்துக்கலாம். இன்னும் நான் திருப்புட் குழி போகலை. பெருமாள் வரச்சொல்லலைன்னு  அர்த்தம்.

நான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதம் இங்கே சிவனை வழிபட்டது.  கையினில் வேல்பிடித்த சிவபாலன்  முத்துக்குமரன் இருக்குமிடம். சூரியன் வந்து ஈசனை  வழிபட்டதும் இங்கேதான்.மேலும்  இந்த 'புள்'ளைத் தகனம் செய்த   குண்டம் இப்படி எல்லாத்தையும்  கலந்து கட்டி இந்த இடத்துக்கு புள்  (ரிக்கு) இருக்கு வேளூர் என்று ஒரு புராணப்பெயர் இருக்கு. ஆனால்  நமக்கெல்லாம்  வைத்தீஸ்வரன் கோவில் என்றதும் சட்ன்னு  தெரிஞ்சுருது பாருங்க.  சிவன் சுயம்புவாக இருக்கிறார். வைத்திய நாதன்.  சென்னை  திருவான்மியூர் மருந்தீஸ்வரர் மாதிரின்னு  வச்சுக்கலாம்.

ஊர் முழுக்க ஏடு பார்த்துச் சொல்லும்  நாடி ஜோஸியம் கொழிக்குது. போனபிறவியும் வரும் பிறவியும் இருக்கட்டும். இந்தப்பிறவியில் பதிவர் அவதாரம். இதுக்கு மேல் வேறென்ன தெரிஞ்சுக்கணுமுன்னு  நாடி பார்க்காம  இருந்தேன்.  எங்க தாடி மாமாவுக்கு இதிலெல்லாம் பயங்கர நம்பிக்கை. கதைகதையாச் சொல்வார். அவருக்கு ரொம்ப வேண்டப்பட்ட நண்பர் இறந்தவுடன்,  தந்தை மரணம் பற்றி  மனம் நொந்துபோயிருந்த நண்பரின் மகன்களை நாடி ஜோஸியம் பார்க்க கூட்டி வந்தாராம். இங்கே ஓலைச்சுவடி வாசிச்சப்போ தெரிஞ்சதாம்  ஒரு குறிப்பிட்ட ஊரில் சலவைத்தொழிலாளி வீட்டில் அப்பா மீண்டும் பிறவி எடுத்துருக்கார்ன்னு.  உடனே அங்கே போய்  அவரிடம் மன்றாடிக்கேட்டு, எங்கப்பாவை திருப்பி எங்களுக்குக் கொடுத்துருங்கோன்னு அழுது புலம்பி  ஒரு தொகை கொடுத்து  வீட்டுக்குக் கூட்டி வந்துட்டாங்களாம். வீட்டின் உள் முற்றத்தில் அப்பாவைக் கட்டிப்போட்டு தினமும் நல்ல புல் கொடுத்து  சேவை செய்ஞ்சாங்களாம். தாடி மாமா ஒரு சுவாரஸியமானவர். அவரைப்பற்றி முந்தி எழுதியது இங்கே:-)


பிரமாண்டமான  கோவில்தான். இந்தப்பக்கங்களில் அநேகமா எல்லாக் கோவில்களுக்கும் வயசு  கேட்டால் ரெண்டாயிரமுன்னே  பதில்வருது.  மக்கள் தொகை அதிகமில்லாத அந்தக் காலக்கட்டங்களில்  ஊரே கோயிலுக்குள் குடி இருக்கும் அளவுக்குக் கட்டிவிட்டுருக்காங்க  பாருங்க!


 கோவிலுக்கு முன்னால் இருக்கும்  வெளிப்புற முன்மண்டபத்தின் ரெண்டு பக்கமும் வரிசையா இருக்கும் கடைகள் 'அந்தக்கால'  மதுரை மீனாட்சி அம்மன் கோவில்கடைகளை நினைவூட்டியது.

 இதைக்கடந்து  இருக்கும் இன்னொரு வாசலில் நுழைஞ்சால் அங்கேயும் நீண்ட மண்டபம்!

உள்பிரகாரம் இன்னும் ஜோரா இருக்கு!  சிதம்பரம் கோவில் விமானத்தைப்போலவே இங்கும்!

பெரிய முற்றம்போன்ற  அமைப்பில் நடுவில்  அழகான சின்னச்சின்ன கோபுரங்களுடன் தனித்தனிச் சந்நிதிகள்.  வலம் சுற்றிவரும் நமக்கிடப்புறம்  மேலே வெளிச்சம் வர  ஏதுவான பலகணிகளும்  நடையிலமைந்திருக்கும்  கடவுளர்களின்,  தேவர்களின் சந்நிதிகளும்  அருமை!  நிறைய சந்நிதிகள் மூடியே இருந்தன.கிட்டப்போய் கம்பிக்கதவின் உள்ளெ கண்களை அனுப்பினால்........  இருட்டு!






முத்துக்குமரன் சந்நிதியில் தரிசனம் கிடைச்சது. முக்கிய இடங்களில் எல்லாம் பெரிய தாம்பாளத்திலும்  பூக்கூடைகளிலும் , குட்டியா ஒரு பேப்பர் கவரில்   தருமை ஆதீனம், வேளூர் தேவஸ்தானம், வைத்தீஸ்வரன் கோவில், வைத்தியநாத சுவாமி திருச்சாந்துருண்டை, மூலிகை தீர்த்த மண்மருந்துன்னு  ஒரு சிகப்புக்கயிறுடன் ஸ்வாமி பிரசாதமும் கூடவே ஒரு குருக்களும்.

இப்பெல்லாம் கோவில்களில் சின்ன அளவு தட்சிணை பத்து ரூபாய் என்று இருப்பதால்  அந்தத் தட்டுகளிலே  பத்துரூபாய்த்தாள்களா நிறைய கிடக்கு. நாமும்  பிரசாதம் வாங்கிக்கறோம். இது நோய் தீர்க்கும் மருந்துன்னு  ஐதீகம்.  4448 நோய்களைத் தீர்த்து வைக்கிறார்  ஸ்ரீ வைத்தியநாதர் .

 ஜடாயு குண்ட விபூதியுடன்  சித்தாமிர்த தீர்த்த நீரையும் சேர்த்து குழைச்சு, முத்துக்குமரன் சந்நிதி முன்னால் இருக்கும்  குழி அம்மியில் வைத்து  அரைக்கிறாங்க. அரைக்கும்போது  இடைவிடாமல் ஓம் நமசிவாய மந்திரத்தை ஜெபிக்கணும். அரைச்ச  சாந்தை சின்னதா உருட்டி மாத்திரை மாதிரி செஞ்சுடறாங்க.  மாத்திரைகளை அம்பாள்  தையல் நாயகியின் சந்நிதியில் வச்சு  பூஜிச்சவுடன்  மருந்து ரெடி!   ஈசனுக்கு உதவ, மருத்துவகுணமுள்ள தைலத்தை ஏந்தி வந்ததால் அம்பாளுக்குத் தைலநாயகின்னும் ஒரு பெயர் உண்டாம்!


சரி...மருந்துக்கான சித்தா அமிர்த தீர்த்ததுக்கு  எங்கே போறது?   நோ ஒர்ரீஸ். இங்கே இந்தத் தலத்துலேயே அது  நிரம்பி இருப்பது  கோவிலின் திருக்குளத்துலேதான்.  சித்தர்கள் அனைவரும் சேர்ந்து அமிர்தத்தால் ஈசனை அபிஷேகம் செய்தார்கள். அந்த அமிர்தம் வழிஞ்சு நிரம்பி இருக்குது இங்கே.

கோவில் குளம் படு சுத்தமா இருக்கு! காணக் கண் கொள்ளாத காட்சி. ஹப்பா..... எத்தனை நாளாச்சு இப்படி சுத்தமானதொரு குளத்தைப் பார்த்து!!!!  நடுவிலே இருக்கும் நீராழிமண்டபம் அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு!  சிம்பிள் அண்ட் ஸ்வீட் வகை!



  குளத்தைச் சுற்றிலும்  மண்டபத்தோடு கூடிய நடைபாதை.  மனசுக்கு நிம்மதியா இருக்குன்னு அஞ்சு நிமிசம் உக்கார்ந்துட்டு  வந்தோம்.  குமரகுருபரர் இத்தலத்தைப் பாடிய பாடல்களில் ஒன்னு  சுவரில்  பதித்த  கரும்பளிங்குலே செதுக்கி இருக்கு.





கடவுள் என்பது முற்றிலும்  நம்ம நம்பிக்கைதான். நம்பினோர் கெடுவதில்லை என்பதால் நம்பிக்கையோடு அந்த மருந்தை உண்பவர்களுக்கு நோய்களில் இருந்து விடுதலை.  நம்பணும். நம்புனால்தான் சாமி. நமக்கு  வந்த நோய் தீரலைன்னா  ஒன்னு நம்ம நம்பிக்கை வீக்கா இருக்கு. இல்லைன்னா நம்ம வியாதி அந்த  4448 லிஸ்டுலே இல்லை. புதுசாக் கண்டுபிடிச்ச கலிகால நோய்ன்னு வச்சுக்கணும்.

இதேபோல  முத்துக்குமரனுக்கு  அணிவிக்கும் சந்தனக்காப்பு சந்தனமும் ' புழுக்காப்பு ' என்னும் பெயரில் பிரசாதமாக் கிடைக்குது.   போர் புரியக்கிளம்புமுன் தேவசேனாதிபதி முருகன் இங்கே வந்து அம்மை அப்பனை வணங்கியதாகவும் அப்போது அன்னை  பார்வதி  சக்தி வேல்  வழங்கியதாகவும் புராணக்கதை சொல்லுது.

நவகிரகக்கோயில்களுக்கு  ஒரு நாலு வருசத்துக்கு முன்னே யாத்திரை (!!)  போனப்ப இங்கே ஜஸ்ட் எட்டிப் பார்த்துட்டு ஓடுனதோடு சரி. ஒரே நாளில் ஒன்பது கோயில்களுக்கும் போய் வரணுமுன்னா  இப்படித்தான்,  ஹாய் ஹாய் பை பைன்னு  முடியுது. செவ்வாய் கிரகத்துக்கான அங்காரகன் இங்கே இருக்கார்.  செவ்வாய் தோஷமுள்ளவர்கள் வந்து பிரார்த்தனை செஞ்சுட்டுப் போறாங்க.



சுத்து வட்டாரத்தில் நிறையப்பேருக்கு முருகனும், வைத்தியநாதரும்  குலதெய்வம் என்பதால்  கல்யாணங்களும், குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காது குத்தல் விழாக்களும்  கோவிலில் நடந்துக்கிட்டேதான் இருக்கு. நாம் போனது புரட்டாசி மாதம் என்பதால்  எந்த மொட்டையையும் பார்க்கலை!

இன்னும் கொஞ்சநேரம் சுத்திப்பார்க்க ஆசை இருந்தும் நேரக்குறைவால் கிளம்பவேண்டியதாப் போச்சு.  கொலைவெறியோடு அடுத்த ஊரை நோக்கிப் போறார் கோபால். கூடவே  அப்பாவியா நானும்:-)

தொடரும்........:-)

பின்குறிப்பு:  பதிவுலகத்தோழி  ஒருவர்  'அன்று' பின்னூட்டியது இப்படி.

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஒரே ஒரு லைன் தானா? அநியாயம். அந்த கோவில் மரம், காலைல கிடைக்கிற மருந்து, கோவில் குளம், சந்தனக்குழம்பு விரிவா சொல்லாம இப்படி செய்தா எப்படி. சரி உப்பிலியப்பன் கோவில் பத்தியாவது டீடெயிலா எழுதுங்க.

3/30/2009 8:58 AM
 அன்று துளசி கோபால் said...

வாங்க பத்மா.

ரொம்ப விரிவாச் சுத்திப் பார்க்கலைப்பா இந்தக் கோயில்களை.

நவகிரக டூர்ன்னு ஒரே நாளில் முடிச்சுடறாங்க(-:

அப்புறம் தனியாத்தான் இன்னும் ஒருமுறை மனசுக்கு உகந்தவைகளைப் போய் விலாவரியாப் பார்க்கணும்.

இந்த  இடுகை அன்புத்தோழி பத்மா  அர்விந்த் அவர்களுக்கு  சமர்ப்பணம்.

. உப்பிலியை அப்புறம் ஒரு சமயம் பார்க்கலாம் பத்மா.





Monday, February 25, 2013

தில்லையில் அவள் பெயர் சிவகாமி. திருக்கடையூரிலே அபிராமி

ரொம்ப வெய்யிலுக்கு முன்னே கிளம்பினால்  நல்லது. ஏழரைக்கு  கீழே டைனிங் ரூம் போனால் பளிச்!  அருமையான மர நாற்காலிகளும் மேசைகளுமா அட்டகாசமா இருக்கு. இவ்ளோ நல்ல ஃபர்னிச்சரான்னு  வியப்போடு சுவரை அலங்கரிச்ச சில படங்களைப் பார்த்தால்.... அட! நம்ம சிவாஜி! இந்த ஹொட்டேலுக்கு  திறப்புவிழா  நடந்த சமயம் எடுத்த படங்கள்.  இன்னும் ரெண்டே வாரத்தில்   அம்பது வயசு நிறையப்போகுது  வாண்டையார் மேன்ஷன் என்ற  இந்த  ஹொட்டேல் பேலஸ்க்கு . (அப்போ அப்படித்தான் பெயர்!.  க்ராண்ட் ஒரு வேளை சமீபத்தில் சேர்த்திருக்கலாம்)


அறை வாடகையோடு காலை உணவும் தர்றாங்க.  ஆனால் நம்மைத்தவிர வேற யாரும் நேற்று இரவு தங்குனமாதிரி தெரியலை. வரவேற்பிலும் சரி, டைனிங்  ஹாலிலும் சரி  எதிர்ப்பட்ட  பணியாட்கள் யாருமே  உற்சாகத்தோடு இல்லை:(  மெனுவைப்பார்த்து  பூரி உருளைக்கிழங்கு கேட்டதுக்கு  ஒரு  கால்மணி நேரம் கழிச்சு  ரொம்பவே சூடாகிட்ட எண்ணெயில்போட்டு பொரித்த 'கரும்பூரி'  வந்துச்சு.  காஃபிக்கு சொன்னோம்.  அதுக்கு ஒரு பத்து நிமிசம்.  அக்கம்பக்கத்துலே வேறெங்கியோ  இருந்து வாங்கி வர்றாங்களோ என்னமோ?  பக்கத்துலேயே ரயில்வே ஸ்டேஷன் கேண்டீன் இருக்கே!

அடுக்களையைப் பார்க்கலாமான்னு  பூரி  பரிமாறின அபுல்ஸன்  கிட்டே கேட்டதும்  ஒருமாதிரி முழிச்சார்.  ஸம் திங் இஸ் நாட்  ரைட் தேர்:(

அரை நூற்றாண்டு பழசுக்கு பராமரிப்பு வேலைகள்  நடந்துக்கிட்டு  இருக்கு போல!  ஆனா மொத்தத்துலேயும் பெஸ்ட் அந்த டைனிங் ஹால்தான். செகண்ட் பெஸ்ட் ஃபோயர் சுவரில் இருக்கும் சாமிப் படங்களும் குத்துவிளக்கும். கண்ணாடியில் மீன் தொட்டியும். தேர்ட் பெஸ்ட், மாடிப்படிகள் முடியும் ஒவ்வொரு தளத்திலும் இருக்கும்  அரைவட்ட டிஸைன் லேண்டிங். தோட்டம் பார்க்கும் வகையில் கண்ணாடி அமைப்பு.

அபி அம்மா சொன்னபடி  தில்லை அம்மன்கோவிலுக்குப்போய்க்கிட்டு இருக்கோம் இப்ப. தங்கிய இடத்தில் இருந்து  மூணு  கிமீ தூரம் இருக்கும்.  பெரிய கோவிலைத் தாண்டிப்போகும்போது ராத்திரி வரமுடியலையேன்னு  என்மேல் எனக்கே  பரிதாபமா இருந்துச்சு. டூர் பஸ்கள்  வரிசைகட்டி நின்னுருக்கு.  ஊரின் வடகிழக்குப்பகுதி.அருள்மிகு தில்லை காளி அம்மன் திருக்கோவில் நுழைவு வாயில், ரெண்டு பக்கமும் கூரைவீடுகளும்  திறந்த சாக்கடையும்,  பராமரிப்பு இல்லாத  தெருவுமா.....   கோடியில்  பாழாகிக்கிடக்கும் திருக்குளத்தின் எதிரே கோவில்.

முன்மண்டபத்தின் நடுவிலொரு  பலிபீடம்.  குங்குமம் கொட்டி இருக்கும் மேடையில் சில அகல்கள் எரியுது. உள்ளே நுழைஞ்சதும் ஆளுயர அம்மன். சாந்தமான முகங்கள்!  ஆமாம்..... நாலு முகங்களோடு இருக்காள். ரொம்பவே அழகான அமைதியான பாவம்!

நடனப்போட்டியில்  தோத்தவங்க ஊரைவிட்டு விலகி இருக்கணுமாமே..... என்னங்கடா இப்படி ரூல்ஸ்:(  கோபாவேசத்தோடு ஊர் எல்லைவரை வந்தவள்  நின்ன இடம் இது.  இப்படி ஆங்காரமா இருந்தால் , கண்டுக்கிட்டுப்போகலாமுன்னு வர்ற மக்களுக்கு எப்படி இருக்கும்?  கோபம் இருக்கும் வீட்டில் கால்குத்த நாமும் கொஞ்சம் யோசிக்கமாட்டோமா?

ப்ரம்மதேவர்,  அம்பாளைச் சாந்தப்படுத்த முயற்சிகள் எடுத்தார்.  அவரிடம் இருக்கும் நான்கு வேதங்களும் துணை செய்ய  மனசமாதானம் அடைஞ்சவள், வேதங்களைக் குறிக்கும்   நான்கு முகங்களோடு  ப்ரம்ம சாமுண்டீஸ்வரியா செட்டில் ஆனாள்.

நான் கோபமா இருந்தப்ப இப்படித்தான் இருந்தேன்னு சொல்லிக்கலாமுன்னா  அந்தக்காலத்தில்  ஃபோட்டோ புடிச்சு வச்சுக்க  ஏது சான்ஸ்?  சம்பவம் நடந்தது 2000 வருசங்களுக்கு முன்பாக இருக்கணும்.  கோவிலுக்கு வயசு அதேதான்.  ஆக்ரோஷ போஸ் ஒன்னு எடுத்து நின்னாள் அம்பாள்.
பயமா இருக்குல்லே?  ஆத்தா...  உள்ளெ போய் உக்காருன்னதும்  சட்ன்னு உள்ளே போய்  கிழக்கு  பார்த்து உக்கார்ந்தாள்.

கோபத்தில் சிவந்த  முகத்துக்கு குங்கும அபிஷேகம்  செய்வதால் தரையெல்லாம் குங்குமம் சிதறிக்கிடக்கு. இந்த சந்நிதியில் காளியைக் கும்பிட்டுக்கிட்டு  கோவிலை வலம் வர்றோம்.  வலம் வரும் பாதையெல்லாம்  சிகப்பு!  நம் உள்ளங்காலும்  சிவந்துதான் போகுது.  இவ்ளோ கோபம் கூடாதுன்னு மறுபடி சாந்த ஸ்வரூபிணியை சேவிச்சோம்.  வீணை ஏந்திய வித்யாம்பிகையையும்  இப்போபார்த்தேன். கோவில் சமாச்சாரம் விளக்கிச் சொல்ல அங்கே பூசாரிகள் யாரும் கண்ணில் படலை:(   தங்க்ஸ் கோபத்தோடு போனதைப்பார்த்து உள்ளூர ஒரு பயம் இருந்துருச்சோ என்னவோ  தட்சிணாமுர்த்தி இங்கே பெண்வேசங்கட்டிக்கிட்டு கடம்பவன தக்ஷண ரூபிணி என்ற பெயரில் இருக்கார்.

கோவிலை வெளிப்புறம் இருந்து  க்ளிக்கிட்டுக் கிளம்பி  ஒரு மணி நேரப்பயணத்தில்  இன்னொரு ஊருக்குள் நுழைந்தோம்.  அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்குப்போகும் வழியிலேயே  ஊரின் பிரசித்தி ஹொட்டேல்கள் பெயரில்  தெரியவந்தது.  ஹொட்டேல் மணிவிழா, ஹொட்டேல்  சதாபிஷேகம் இப்படி.

கோவில் ஒரே  கல்யாணக்கூட்டம்.  எங்கெ பார்த்தாலும் மாலயும் கழுத்துமா பொண்ணு மாப்பிள்ளைகள். கோவிலுக்கும் நுழைந்ததும்  கண்ணில் பட்டவள் அபிராமி.  இங்கே மூலவர்களைவிட பயங்கர பிஸியில் இருக்காள் இவள். கல்யாணங்கட்ட வந்த ஜோடிகளை ஓடோடி வரவேற்பது முக்கிய தொழில். உபதொழில்  நம்மைப்போல வருபவர்களுக்கு  ஆசிகள் அளிப்பது!

ஒரு நிமிசம்கூட அக்கடான்னு ஓய்ஞ்சு உக்கார நேரமில்லைன்னா பாருங்களேன். இங்கே  கல்யாணம் செய்ய வருபவர்கள் நாள் நட்சத்திரம் திதி ஒன்னும் பார்க்க வேணாமாம். அதனால் வருசம் 365 நாட்களும் ஜே ஜேன்னு இருக்கு கோவில்.

உள்பிரகாரம் சுத்திவர  மணவரைகள்தான்.  செல்விருந்து வருவிருந்து  மாதிரி ஒரு கல்யாணம் முடிஞ்சு மணமக்கள் எழுந்த அடுத்த நிமிசமே புது ஜோடி வந்து  மணையில் உட்கார்ந்துருது.  அக்னி கூட புதுசா  வளர்க்க வேண்டியதில்லை போல. அணையாத்தீதான்.   யாருடைய  கல்யாணத்துக்காவது  நாம் போயிருந்தால் புகை மூட்டத்தில் நம்மை அழைச்ச கல்யாண வீட்டாரையோ, இல்லை  மாப்பிள்ளை பொண்ணையோ கண்டு பிடிப்பதும் கஷ்டம்தான்.  வெவ்வேற கல்யாணத்துக்கு வந்த மக்கள்ஸ் கூட  கலந்துகட்டி நெருக்கியடிச்சு உக்கார்ந்துருக்காங்க. தப்பான ஜோடிக்கு மொய் போயிரும் அபாயம் இருக்கு:-)

மூலவர் அமிர்தகடேஸ்வரர்,  எமனுக்கு டெர்ரர்ரா இருந்தவர்!  மார்கண்டேயர் என்றும் பதினாறாக இருப்பதற்கு இவரே காரணம்.  மார்கண்டேயன் உயிரைப் பறிக்க எமதர்மன் வந்து கூப்பிட்டதும் வரமாட்டேன்னு சொல்லி அவர்  அமிர்தகடேஸ்வரரைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டார்.  அப்படியெல்லாம் உயிரை எடுக்காமல் விட்டுட்டுப் போகமுடியாதுனு பாசக்கயிற்றை வீசுனப்ப  அது மார்க்கண்டேயர் கட்டிப்பிடிச்சுருந்த  சிவலிங்கத்தையும் சேர்த்தே சுருக்கு போட்டுருச்சு. அவ்ளோதான்! ' என்னையேவா இழுக்கறே' ன்னு   ஆவேசமா  கால சம்ஹாரமூர்த்தியாக சிவன் தோன்றியதும்  எமனுக்கே பயம் வந்து  மன்னிப்பு கேட்டு அழுதார்.

அப்புறம்  மார்கண்டேயரை  விட்டுட்டுப் போகும்படியாத்தான் ஆச்சு.  இனி லெட்ஜரில்  திருப்பி அவர் பெயரைப் பதிய முடியாமல் போய் , மார்கண்டேயரும் பதினாறாகவே நிலைச்சு நின்னுட்டார்.  எமனின் பாசக்கயிறு விழுந்த அடையாளம் சிவலிங்கத்தின் மேனியிலே இன்னும் இருக்காம். பாலபிஷேகம் செய்யும்போது தடம் நல்லாவே தெரியுமாம்.

மூலவருக்கு முன் இருக்கும்  கொஞ்ச  இடத்தையும் விட்டுவைக்காமல்  அங்கேயும்  கல்யாணங்கள் நடக்குது. ஒரே புகை மூட்டத்தில் எல்லாமே  தேவலோக ஸீன்கள்தான். இதைத்தொட்டடுத்த பிரகாரத்திலும்  திண்ணைகள் ஓடும் அமைப்பில்  கல்யாணத்துக்கு வந்திருந்தவர்களின் கூட்டம்.   மாலையும் கழுத்துமா மக்கள் வெள்ளம்!

இங்கே வந்து  60,  70, 80, 90, 100ன்னு  கல்யாணம் செஞ்சுக்கறவகளுக்கும், ஆயுஷ்ஹோமம்,  ஜாதகரீதியில்கோளாறுன்னு விசேஷ பூஜை செய்யறவங்க  இப்படி எல்லோருக்கும் எம பயம் இல்லாமல் ஆயுசும் ஆரோக்கியமும் நீடிச்சு இருக்கும் என்று ஐதீகம்.  அதான் தமிழ்நாடு முழுவதும்போதாதுன்னு , வெளி மாநிலம்,வெளிநாடுன்னு மக்கள் அறுபதாங்கல்யாணம், எழுபதுக்கு செய்யும் பீமரதசாந்தி, எம்பதுக்கான சதாபிஷேகம், தொன்னூறுக்கான கனகாபிஷேகம், நூறுக்கான பூர்ணாபிஷேகம்ன்னு கொண்டாடி மகிழ திருக்கடையூருக்கு படையெடுக்கறாங்க.

கோவிலுக்குள்ளேன்னு இல்லாமல் பலவித கல்யாண  ஹால்களும்  ஊர் முழுசும்  இருக்கு. எல்லோருக்கு அமோகமா வியாபாரம்!

அபிராமி சந்நிதி தனியா இன்னொரு கோவிலாட்டம் இந்தக் கோயிலுக்குள்ளேயே இருக்கு. அங்கேயும் மக்கள்கூட்டம் அதிகமுன்னாலும் அஞ்சு நிமிசம்  நின்னு தரிசிக்க முடியுது. சக்தி வாய்ந்த அம்மன்.  அபிராமி அந்தாதியே இந்த அம்மனைப் பாடியதுதான்.



கல்யாண விசேஷங்களுக்குக் கோபூஜை பண்ணிக்க வசதியா  கோமாதா குழந்தையுடன் காத்திருக்காள்.  இவளும் பூம்பூம் மாடு போல பழக்கப்படுத்தியவள்தான்.  பயமில்லாம  தொட்டுக்கும்பிட வாகா முதுகை  காமிக்கிறாள்.

இந்தக்கோவிலில் இன்னுமொரு முக்கிய விசேஷம்..... கெமெராவுக்கு டிக்கெட் ஒன்னும் வாங்கிக்க வேணாம். கல்யாணத்தில்   போட்டாகிராஃபர்களுக்கு  என்ன தடை:-))) அதுவும் இப்பெல்லாம் கல்யாணங்களில் டைரக்‌ஷனே  வீடியோக்காரகள்தானே!  தாலி கட்டும் ஸீன் சரியா வரலை ரீ டேக்  இந்தப்பக்கம் பார்த்துச்  சிரிங்க.   ரெடி ஸ்மைல்(  கெமெராவைப்பார்த்து  கையில் தாலியுடன் சிரிச்சால்  பொண்ணு கழுத்து எங்கேன்னு  எப்படி பார்க்க? அதிலும்  மாலையை சரி பண்ணறேன். நெக்லெஸ் சரிஞ்சுருக்கு, தலையை ரொம்பவே குனிஞ்சுட்டாள்ன்னு  சரி செய்ய எத்தனை பெண்கள் மணமகளின் முகத்தருகில் குனிஞ்சு இருப்பாங்கன்னு நினைச்சுப் பாருங்க.

ரொம்ப வயசானவரா இருந்தவரின் ஜோடியை சதாபிஷேகமான்னு கல்யாணம் விசாரிச்சு ,பல்பு வாங்கினபிறகு கப்சுப் ஆனேன். சஷ்டியப்த பூர்த்தியாம். அதுக்குப்பிறகு  எதிர்ப்பட்ட  பல் ஜோடிகளுக்கு  வாழ்த்துக்கள் சொன்னதோடு சரி.எதுக்கும் வாயைத்திறக்கலை:-)))

கோவில்  வாசலில்  வளையல், பூக்கள் மஞ்சள் குங்குமம் என்று மங்கலப்பொருட்கள், பூஜை சாமான்கள்  விற்கும் கடைகளிலும்  கூட்டத்துக்குக் குறைவே இல்லை. அழகழகான மண் உண்டியல்கள் கண்ணைப்பறிச்சது!   தாகத்துக்கு இளநீர் குடிச்சுட்டுக் கிளம்பினோம்.

ஒரு சோக சம்பவம் என்னன்னால்....  இந்த அபிராமி உடல்நலமில்லாமல் போய்  இந்த ஜனவரி 18 காலை (18/1/2013) காலை  சாமிக்கிட்டே போயிட்டாளாம்:(   இத்தனைக்கும் வயசு ஒன்னும் அதிகமில்லை வெறும் 26 தான். நாலு வயசுலே கோவிலுக்கு வந்தவள் . 22 வருசம்  ஓடியோடி உழைச்சுட்டுப் பொழுதோடு போயிட்டாள்:(  ப்ச்.....

இந்நேரம்  புது அபிராமி வந்துருப்பாள் என்றே நினைக்கிறேன். அவளுடைய சேவையும் தேவையும்  அதிகமா இருக்கே!

தொடரும்..............:-)