Monday, December 31, 2018

பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹர் !!!!! (பயணத்தொடர், பகுதி 48 )

கூத்தாண்டவர் கோவிலில் இருந்து கிளம்பின பத்தாவது நிமிட்டில் பரிக்கல் வந்துருந்தோம். ஒரு அஞ்சு கிமீ தூரம்தான் இருக்கவேணும்.

ராஜகோபுரம் பழுது பார்த்துக்கிட்டு இருக்காங்க  போல.....    நல்லபடி நடக்கட்டுமுன்னு வேண்டிக்கிட்டுக் கோவிலுக்குள் போறோம்.  பெரிய முற்றத்தில் கண் எதிரே பளபளக்கும் கொடிமரம்!

வாசலிலேயே  யாகசாலை!  யாகம் முடியும் தருணம். பூரணாஹுதியில் சகலமும் சமர்ப்பியாமி.....  அக்னியும் விடாமல் ஸ்வாஹா  பண்ணிக்கிட்டே இருக்கான்.  தனியார் விழா போல இருக்கு!  குழந்தைக்கு ஆயுஷ்ஹோமமோ?
இந்தக்கோவிலில் ஏகப்பட்ட சமாச்சாரங்களுக்குப் பிரார்த்தனைகள்  செஞ்சால் கைமேல் பலன் என்ற  காரணத்தால் எப்பவும் எதாவது நடந்துக்கிட்டேதான் இருக்காம்! பரிகார ஸ்தலம்!
சந்நிதியை மூடிடப்போறாங்களேன்னு பரபரப்பா உள்ளே ஓடினோம்.  தரிசனம் அருமையாகக் கிடைச்சது!  ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹர்!  தாயார் , சிங்கத்தின் மடியில் கொஞ்சம் கூடப் பயமே இல்லாம உக்கார்ந்துருக்காள் :-)  பொதுவா    இந்தமாதிரி கோவில்களில் லக்ஷ்மி, ரெண்டு கைகளையும்  முன்னால் வச்சபடிதானே உக்கார்ந்துருப்பாள்? இங்கே என்னடான்னா.... லேசாக் கொஞ்சம் பெருமாள் பக்கம் திரும்பி உக்கார்ந்து, தன் வலக்கையைப்  பெருமாளின் இடுப்பைச் சுற்றி அணைத்து உக்கார்ந்திருக்கும் கோலம்!  வேறெங்கும் காணாத காட்சியாமே!!!!   பெருமாளும், தன் இடக்கையால் லக்ஷ்மியின் இடுப்பை வளைத்துப் பிடிச்சுக்கிட்டு....   ஆஹா.....  ஆஹா....   கட்டிப்பிடி  கட்டிப்பிடி.....
மூலவர் சந்நிதியிலேயே  குட்டியா நம்ம ஆஞ்சி !  (இதைப்போல மூலவர் சந்நிதியிலேயே ஆஞ்சி இருக்கும் இன்னொரு பெருமாள்கோயில் எதுன்னு சொல்லுங்க, பார்க்கலாம். )

கோவிலுக்கு வயசு  ஆயிரம் வருஷங்களுக்கு மேலே இருக்குமாம்!  எப்போ என்னன்றதைத் தேடி  விசாரிச்சால் ரெண்டுவிதமான கதை கிடைச்சது.  அதுலே 'கொஞ்சூண்டு' மசாலா சேர்த்தேன் :-)

கதை நம்பர் 1 :

வடநாட்டுக்காரரான  வியாசராஜர்,  நாடு முழுக்க எழுநூத்தி முப்பத்தியெட்டு ஆஞ்சநேயர் கோவில்களைக் கட்டணுமுன்னு  (அதென்ன கணக்குன்னு தெரியலையே?) ஆரம்பிச்சு அப்படியே தென்னாட்டுக்கு வந்துருக்கார்.  இந்த கிராமத்தைப் பார்த்ததும்  இங்கே ஒரு கோவிலைக் கட்டிடலாமுன்னு திருப்பணியை ஆரம்பிச்சார்.

அதென்னவோ தெரியலை.... ஏகப்பட்ட இடையூறுகள், ஒன்னு  மாத்தி ஒன்னுன்னு....  அப்படியே இது நின்னுபோயிருக்கு.....

வசந்தராஜ மன்னர் காலத்துலே, திரும்பவும் கோவில் திருப்பணியை ஆரம்பிச்சுருக்கார். திரும்பவும்  தடங்கல்களாவே இருந்துருக்கு  :-(

நாட்டுமக்கள் எல்லோருமா ,  கவலையோடு பெருமாளைக் கும்பிட்டுருக்காங்க. நரசிம்மர் உருவத்துலே காட்சி கொடுத்த பெருமாள்,  'அந்தப்பகுதியிலே இருக்கும் அசுரன் பரகலா, கோவிலைக் கட்டவிடாமல்  உங்களுக்கெல்லாம் தொல்லை கொடுக்கறான்'னு  சொல்றார்!

(நல்லா இருக்கு?  மக்களுக்குத் தொல்லை கொடுப்பவனை உடனே வதம் செய்யாமல்.... எதனால் இப்படின்னு குறி சொல்லிக்கிட்டு இருக்கார், பாருங்களேன்.... )

'ஓ அப்படியா?  அசுரனை நீரே அழிக்கக்கூடாதா?'ன்னு சனம் மன்றாடுது....  'அப்டீங்கறீங்க? அழிச்சால் ஆச்சு' ன்னு  அதே நரசிம்ஹ ஸ்வரூபத்தை அசுரன் பக்கம் திருப்பினார்.

அசுரன் கொஞ்சம் நல்லவனோ என்னவோ.... ' பெருமாளை  வணங்கி, என்னைக் கொல்வதால்  உமக்கு என்ன லாபம்? ' னு கேக்கறான்.

'நீ ஏன் கோவில் கட்டறதைத் தடுத்துக்கிட்டே இருக்கே? அதனால்  உனக்கென்ன லாபம்?' னு கேட்கப்டாதோ?   ஙேன்னு முழிச்சவர்,  'சரி, உன்னை வதம் செய்யாமல்,  மோக்ஷம்  கொடுத்து மேலே அனுப்பப்போறேன்'னு சொல்லி அவ்வண்ணமே செஞ்சார்.


அசுரனும் பாருங்க.... 'உம்மை இப்படி நேரில் தரிசிக்க வேண்டிதான்  கோவில் எழுப்புவதைத் தடை செஞ்சுக்கிட்டு இருந்தேன்'னு சொல்லி இருக்கப்டாதோ?   என்னவோ போங்க.....

ஊர்சனத்தைப் பார்த்து இப்போ உங்களுக்கு சந்தோஷம்தானே? என்ன வரம் வேணுமோ ... கேளுங்கன்னார் பெருமாள்.  ஊர்சனமும் அப்போ நல்லவங்களா இருந்துருக்காங்க. (கலி பொறக்கலையோ என்னவோ? )

நீரே இங்கே கோவில் கொண்டு எங்களை ஆசிர்வதிக்கணுமுன்னு வேண்டிக்கறாங்க. சரின்னுட்டார் எம்பெருமாள்!

  பாதிவரை கட்டி நின்னுபோயிருந்த ஆஞ்சி கோவிலை, முழுசுமாக் கட்டிமுடிச்சு இப்போ இவரையும் குடி வைச்சுடறாங்க. ஒண்ட வந்தவர் தனக்கே எல்லாமும்னு எடுத்துக்கிட்டா நல்லவா இருக்கும்?  கருவறையில் ஆஞ்சிக்கும் இடம் கிடைச்சது  இப்படித்தான்!

பரகலாசுரன் இருந்த பகுதியாச்சேன்னு பரகலான்னு இந்த ஊருக்குப் பெயரும் கிடைச்சது. காலப்போக்கில் பரகலா,  பரிகலாவாக மாறி அப்புறம் பரிக்கல்னு ஆச்சு!

கதை நம்பர் 2:

அதே வசந்தராஜ மன்னன். அதே அசுரன், இப்போ  பரிகலான்னு பெயர்.  அரசன், நரசிம்ஹர் பக்தன்.  தன் இஷ்ட தெய்வத்துக்குக் கோவில் கட்டணுமுன்னு  ஆசைப்பட்டுத் திருப்பணியைத் தொடங்கறான். முதலில்  மூணுநாள் யாகம் ஒன்னு செஞ்சுக்கணுமுன்னு  அவனுடைய குரு வாமதேவ ரிஷி சொல்றார். அக்கம்பக்கத்து நாட்டு மன்னர்கள், தன்னுடைய அரசின் கீழ் இருக்கும் சிற்றரசர்கள் எல்லோருக்கும்  அழைப்பு வச்சு, அவுங்கெல்லாம் வந்ததும் யாகம் ஆரம்பிக்குது.

பரிகலாசுரன், யாகத்தைக் கெடுக்கப் படையுடன் வர்றான்.  அரசனுக்குக்  குரு வாமதேவ ரிஷி,  அசுரனை எதிர்க்கும் வல்லமை உள்ள ஒரு மந்திர உபதேசம் செஞ்சுவைச்சும், அசுரனுடைய பலம் குறையலை....   அரசனைக் கண்டபடி தாக்கினான்.

தன்னுடைய பக்தனுக்கு ஆபத்துன்னதும், பெருமாளுக்குப் பொறுக்கலை. இதோன்னு நரசிம்ஹமா வந்து பரிகலாசுரனை  வதம் செஞ்சுடறார்.

 (வதம் செய்யறதுக்குன்னே எடுத்த அவதாரம் இல்லையோ?  இப்ப  அதிலும் ஏற்கெனவே எக்ஸ்பீரியன்ஸ்டு ஆனதால்  சட்னு   உருவத்தை மாத்திக்க முடியறது, இல்லே? )

அரசன் வசந்தராஜனுக்குத் தரிசனம் கொடுத்து, 'இனி ஆபத்து ஒன்னும் வராது. நீ போய் கோவில்கட்டும் வேலையை முடிச்சுரு'ன்னதும்,  அரசனும், 'தேவரீர், அந்தக் கோவிலில் நீரே குடியிருந்து மக்களைக் காப்பாற்றணு'முன்னு வேண்டிக்கறான்.

'வதம் செய்ய வந்த ஆக்ரோஷமான நரசிம்ஹமா இல்லாமக் கொஞ்சம் சாந்த மூர்த்தியா இருந்தால் தேவலை. சனங்கள் பயப்படாம நின்னடி பணிவார்கள்'னு கூடுதல் கோரிக்கை வைக்கிறான்.

எப்பேர்ப்பட்ட கோபமும் மனைவிக்கு முன்னால் எடுபடாதுன்னு தெரிஞ்சுக்கிட்ட அனுபவஸ்தர் 'யாரோ', (நாரதராத்தான் இருக்கணும்!)  மஹாலக்ஷ்மியாண்டை போய்  'இங்கே  வந்து பாருங்க...  உங்க வீட்டுக்காரர் என்னமோ ஆக்ரோஷமா இருக்காரு'ன்னு சொல்ல, தாயார் ஓடோடி வர்றாங்க.   மனைவியைப் பார்த்ததும் சிம்ஹம் (பொட்டிப்) பாம்பா ஆயிருச்சு.  ஹிஹி.....

'நீ ஏம்மா இப்படி வேர்க்க விறுவிறுக்க வந்தே? வா, இப்படி வந்து மடிமேலே உக்காரு'ன்னதும் 'அடடா.....   சாந்தமா இருக்கும் இவரைப்போய், கோபமா இருக்கார்'னு  சொல்லிட்டாங்களேன்னு, காதலுடன் கணவரைப் பார்த்துக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க.
காணக்கிடைக்காத இந்த  அபூர்வக் காட்சியை, தேவலோகசிற்பி சட்னு சிலையா  வடிச்சுட்டார்!

கதைகள் வெவ்வேறன்னாலும் காட்சி ஒன்றே!   வேண்டுதல் எல்லாமே நிறைவேறுதுன்னா.... கூட்டத்துக்கும் புகழுக்கும் கேக்கணுமா? நித்ய அபிஷேகம் (திருமஞ்சனம்)  வேற  நடக்குது இங்கே!

ஆமாம்... இப்படிக் கோவிலைக் கட்டவிடாத அரக்கர்கள் எல்லாம் இப்போ எங்கே போனாங்க?  ஹாஹா.... எங்கேயும் போகலை....  அரசியல் என்ற முக்காட்டுக்குள்தான் ஒளிஞ்சுருக்காங்க !

ஸ்ரீலக்ஷ்மித்தாயார் கருவறையில் இருந்தாலும்  கனகவல்லித் தாயாருக்குத் தனி சந்நிதியும் உண்டு!
சுமாரான 'பெரிய' கோவில்தான். கோவில் பிரகாரம் வலம் வரணுமுன்னு போறோம்.  நமக்கு வலப்பக்கம் இருக்கும் மதில்சுவர் மேல்  தசாவதார சிற்பங்கள் !இடப்பக்கம் நாகரும்  ஆஞ்சியும் !
 கண்ணுக்கு நேரா இருக்கு ரெண்டு சந்நிதிகள். இடப்பக்கம் நம்ம புள்ளையார்!  வழக்கம்போல் சந்நிதிச் சுவரில்  விண்ணப்பம் வச்சுருக்கு சனம்.  (இப்படிக் கிறுக்கும் நபர்களின்  விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் னு  புள்ளையார் சொல்லணும்)


வலப்பக்கம்  ஊஞ்சல் மண்டபமோ?
   நாகர், வேண்டுதல் விருக்ஷம், வாஹனமண்டபம் இத்யாதிகள்!


வழக்கம்போல் சொர்கவாசல்  கவனிப்பில்லாமல் இருக்கு!  அதானே..... வைகுண்ட ஏகாதசிக்கு மட்டும்  சுத்தம் செஞ்சால் போதாதா என்ன?   ப்ச்....  :-(
அன்னதானக்கூடத்தில்  சிலர்  வெயிட்டிங் ஃபார் சாப்பாடு !
வலம் முடிச்சு முன்பக்கம் வந்துருந்தோம்.   யாகசாலையை ஒழுங்கு பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அடுத்த பார்ட்டி வந்தவுடன் ஆரம்பிக்கணுமா இல்லையா?

தளதளன்னு கொய்யாப்பழம்! கோவிந்தம்மாவின் மகள், இன்றைக்கு ஞாயிறு என்பதால் , அம்மாவுக்கு உதவியாக வந்துருக்காளாம்.  குட்டிப்பெண் நல்லா படிக்கிறாளான்னு கேட்டதுக்கு க்ளாஸ் ஃபர்ஸ்ட்டாம்!  குழந்தை நல்லா இருக்கட்டும்!  கொஞ்சம் கொய்யாப்பழங்கள் வாங்கிக்கிட்டோம்.
காலையில் ஆறு மணிமுதல் பகல் ஒரு மணிவரையிலும், மாலையில் ஆறுமுதல் எட்டுவரையிலும் கோவிலைத் திறந்து வைக்கிறாங்க. நான் நினைக்கிறேன் நடை திறந்து வைக்கும் நேரம்தான் இதுன்னு.  மத்யானத்தில் அஞ்சுமணி நேரம், இந்த  யாகங்கள், மற்ற தனியாருக்கான பூஜை, விசேஷங்கள் நடக்குமா இருக்கும்! யாகசாலை வெளிப் ப்ரகாரத்தில்தான்!!
மூன்று நரசிம்ஹர்கள் ஒரே நேர்கோட்டில் கோவில் கொண்டுள்ளனராம். பரிக்கல், பூவரசங்குப்பம், அபிஷேகப்பாக்கம்னு  இந்த மூணு கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்கணுமாம்!
இப்படியெல்லாம் யாரு ஆரம்பிச்சு வச்சதுன்னு தெரியலை.  நின்னு நிதானமா ஸேவிக்கறது நல்லதா? அவதி அவதின்னு எண்ணிக்கை  முக்கியமுன்னு ஓடுறது நல்லதா ? என்னமோ போங்க....  இப்பவாவது  வண்டி வாகன வசதி,   ஓரளவு நல்ல சாலைன்னு இருக்கு. அந்தக் காலத்துலே  நடந்தோ, இல்லை மாட்டுவண்டியிலேயோதான்  க்ஷேத்ராடனம்.  எப்படிப் போயிருக்க முடியும்?   .....  மேலூர், திருமுல்லைவாயில், திருவொற்றியூர் அம்மன்களுக்கும்  இப்படித்தான் .....  ப்ச்...
கிளம்பின  அரை மணியில் ஆர்யாஸ் கண்ணில் பட்டது. லஞ்ச் முடிச்சுக்கிட்டோம்.   வாசலில் புத்தகக்கடை!
 நண்பர்களின் புத்தகம் பார்த்து மகிழ்ச்சி! 


இனி நேரா....  பூலோக வைகுண்டம்தான் :-)


தொடரும்.....  :-)

Friday, December 28, 2018

தெய்வம் காட்டிய வழி.... (பயணத்தொடர், பகுதி 47 )

காலையில்  க்ளிக்ஸ் , செல்ஃபீ  கடமைகள் முடிச்சேன். நந்திதான் முகம் காட்டலை :-)  எட்டுமணிக்குக் கீழே போய் ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு.  கொஞ்சம் நல்லாதான் சாப்பிடணுமாம். இன்றைக்கு ஒரு 210 KM பயணம் இருக்குன்னார் 'நம்மவர்'!


செக்கவுட் செஞ்சு ஒன்பது மணிக்குக் கிளம்பணும். வரவேற்பில் இருக்கும் ஒரு படம் எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அப்பனும் புள்ளையுமா என்ன ஆட்டம்....  கூடவே அந்த  மாடும்.... :-)
இந்த ஹொட்டேலுக்கு எதிர்வாடையில் சில ரதங்கள் !  நேரா  சொர்கம்தான் கேட்டோ!!!   சும்மாச் சொல்லக்கூடாது, ரொம்பவே அழகான டிஸைன்ஸ் !  பேசாம ஏறிப் படுத்துக்கலாம்!!!   சென்னையில் இப்படிப் பார்த்த நினைவில்லை !
வரவேற்பில் நமக்கு ஒரு அண்ணாமலையார் & உண்ணாமுலை அம்மன் படம் (குட்டியூண்டு!) நினைவுப்பரிசாகக் கொடுத்தாங்க.  ரிஸப்ஷனிஸ்ட் கூட ஒரு க்ளிக் ஆச்சு. கடமை முக்கியம், இல்லையோ!
கிரிவலத்தில் இருக்கும் அஷ்டலிங்கங்களில்  முதல் லிங்கமான இந்திர லிங்கத்தை நேத்து தரிசனம் செய்ய முடியலையேன்னு இப்போப் போகும்போது தரிசனம் செஞ்சுக்கலாமுன்னு அங்கே போனோம்.  போகும் வழியிலேயே  சாலையைப் பார்த்தபடி  ஸ்ரீகெங்கையம்மன்!
இன்றைக்கு ஞாயிறு என்பதால் கடைவீதி ஆரவாரங்கள் இன்னும் ஆரம்பிக்கலை.   இந்திரலிங்கம்  சந்நிதியிலும் கூட்டம் இல்லை. தெருவில் இருந்து உள்ளே சாய்வான படிகள் கீழே போகுது!


இந்திரன் பூஜித்த சிவலிங்கம். இந்த சந்நிதிக்கு எதிரே இந்திராணியம்மன் சந்நிதி இருக்கு. மூடி இருந்தது. தரிசனம்  முடிச்சு ஊரை விட்டு அகலும் போது பூதநாராயணர்  கண்ணில் பட்டார்!சின்னப் பாலகனா கொழுக் முழுக்ன்னு  இருக்கார் இவர்.  கம்சனால் ஏவப்பட்ட பூதகியின்  பாலை முழூசுமாக் குடிச்ச முகம், கூடவே அவள் உயிரையும்தான்!

தெருமுனைக்கோவில்தான். வாசலில் அழகான ஆஞ்சி !  பட்டர்ஸ்வாமிகள்  நல்லா தரிசனம் பண்ணி வச்சார். படம் எடுத்துக்க அனுமதியும் கொடுத்தார். அவரே  முந்தி ஒருக்காச் சிறப்பாச் செஞ்ச  அலங்காரப் படத்தை,  அவர் செல்லில் இருந்து என் செல்லுக்கு ஷேர் செஞ்சும் கொடுத்தார்!  இந்தக் கோவிலைப்பத்திப் பத்திரிகையில் (தினமலர்- ஆன்மிக மலர்) வந்த  கட்டுரையை அங்கே ஃப்ரேம் போட்டும் வச்சுருக்காங்க.
 பிள்ளைகளின் அறிவாற்றலைப் பெருக்கும் பெருமாள்  இவர்!!
இன்றையப் பயணத்தில் பரிக்கல் நரசிம்ஹரைத் தரிசனம் செஞ்சுக்கிட்டுப் போகணும் நாம்.  நெருங்கிய தோழியின் இஷ்ட தெய்வம் ! கூகுள் சொன்ன வழியில் போய்க்கிட்டு இருக்கோம். ஒரு இடத்தில் சாலையில் ஏதோ பழுது பார்ப்பதால்  மாற்றுப்பாதையில் போக வேண்டி இருந்துச்சு.  அறுவடை செஞ்சதைக் காயப்போடப்  பப்ளிக் ரோடுதான் ......  வண்டிகளின் சக்கரத்தில்  மாட்டிக்கிட்டா  எவ்ளோ கஷ்டம்?  களத்துமேடுன்னு ஒன்னு இருக்குமே... அதெல்லாம் என்ன ஆச்சு? ப்ளாட் போட்டு வித்துட்டாங்களா என்ன?


 வயல்களுக்கு நடுவில் போகும் சின்ன ரோடில் போகும்போது தற்செயலா ஒரு  தகவல் கண்ணில் பட்டுச்சு. குவாகம் 2 கிமீ. ஆஹா......   ரெண்டே ரெண்டு கிலோ மீட்டரா? போயிட்டே போகலாமுன்னு  ரமேஷிடம் சொன்னேன்.

கூத்தாண்டவர் கோவில்!! நம்ம திருநங்கைகளுக்கான விசேஷக் கோவில் இது!

முந்தி ஒருக்கா ஒரு பதிமூணு வருஷங்களுக்கு முன் மகளுக்குச் சொன்ன கதையை இங்கே கீழே கொடுத்துருக்கேன், பாருங்க.  முழுப்பதிவு இங்கே! 


மஹாபாரத யுத்தம் ஆரம்பிக்கப் போகுது.அதுக்கு முன்னாலே, எடுத்த காரியம் ஜெயமாகணுமுன்னு சாமியை வேண்டிக்கிட்டு ஏதாவது பலி கொடுக்கற வழக்கத்தின்படி பலி ஏற்பாடு ஆகுது. இந்தமுறை வேண்டிக்கற விஷயம் ரொம்பப் பெருசுன்றதாலே ஒரு மனுஷனையே பலியாக் கொடுக்கணுமுன்னு தீர்மானமாச்சு.

எல்லா நல்ல அம்சங்களும் பொருந்திய மனிதனை, சாமிக்குன்னு பலி கொடுக்கணும்.இதுக்கு யாரு பொருத்தமா இருக்கறாங்கன்னு பார்த்தா, அர்ஜுனனுடைய மகன் அரவான் சரியான ஆளா இருக்கான். அவனைக் கேட்டப்ப அவன் சரின்னு ஒத்துக்கிட்டான். நாளைக்கு அவனைப் பலி கொடுக்கப் போறாங்க.பாவம். ச்சின்ன வயசு!

அவனுடைய கடைசி ஆசை ஏதாவது இருந்தா, அதை நிறைவேற்றலாமுன்னு அவன் கிட்டே கேக்கறாங்க. 

அதுக்கு அவன்   சொல்றான், 'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. அதாலே பெண்சுகம் என்னன்னு தெரியாது. நான் பலியாகறதுக்கு முன்னாலெ அதைப் பத்தித் தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு' ன்னான்.

மறுநாள் சாகப் போறவனைக் கல்யாணம் செஞ்சுக்க யாரும் முன்வரலை.இன்னைக்குக் கல்யாணம். நாளைக்கு விடோன்னா யாரு வருவாங்க. கிருஷ்ணபகவான் பார்த்தாரு. இது சரியாவராதுன்னு, தானே பெண்ணா உருமாறிட்டாரு. அரவானைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு, அன்னைக்கு இரவு அவனோட மனைவியா இருக்காரு.

மறுநாள் அரவானை பலி கொடுத்துடறாங்க. கிருஷ்ணன் மறுபடி ஆணா மாறிடறாரு. அரவானோட மனைவி அரவாணி.

அதனாலே ஆணா இருந்து பெண்ணா மாறினவங்களை அரவாணின்னு சொல்லணும். இப்போ திருநங்கைன்னு சொல்றோம்! 

முதல்முதலில் நான் பார்த்த அரவான் சந்நிதி சிங்கையில் சவுத் ப்ரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோவிலில்தான்!  அந்தப் பதிவு இங்கே!  விருப்பம் இருந்தால் க்ளிக்கலாம் :-)


 கூவாகம் கோவில் ஒன்னும் அவ்வளவு பெருசா இல்லை. அதுக்குமுன்னால் வெளியே பெரிய திறந்தவெளி முற்றம்!
நமக்கிடதுபக்கம் ஒரு பெரிய ஆஞ்சி சிலை.  கண்ணெதிரே பெரிய முன்மண்டபமும் அதையொட்டி அர்த்தமண்டபம், அதுக்குப்பின் கருவறை!
முன்மண்டபத்துமேலே ரொம்பவே அழகான சுதைச்சிற்பங்கள்.!
உள்ளே போனப்ப, கருவறை அர்த்தமண்டபத்தில்  நாலுபேர். இப்போ எங்களுடன் அறுவர். பூசாரி ஐயா, நாங்க ரெண்டு பேர்,  ஒரு திருநங்கையும், அவர் பெற்றோர்களும்.  ஒரு பெரிய தாம்பாளத்தட்டில் பூச்சரங்களும், ரெண்டு பூமாலைகளும், தேங்காய் பழங்கள் வெற்றிலைபாக்குன்னு  வரிசை வச்சதுபோல் வச்சுருந்தாங்க.
கருவறை அரவான் கழுத்தில் இருந்து மஞ்சக்கிழங்குடன் இருந்த மஞ்சள் கயிறைப் பூசாரி ஐயா போய் எடுத்துக்கிட்டு வந்து அந்த திருநங்கை கையில் கொடுத்தார். கைகூப்பிக் கும்பிட்டுக்கிட்டு இருந்தவங்க, அதை வாங்கித் தன் கழுத்தில் கட்டிக்கிட்டாங்க. பூமாலைகளில் ஒன்னு அரவான் (மூலவர்) கழுத்திலும் இன்னொன்னு அவர் மனைவி கழுத்துக்குமா ஆச்சு. அரவானை விழுந்து கும்பிட்டக் கையோடு, தாய்தகப்பன் கால்களில் விழுந்து கும்பிட்டாங்க. அந்தத் தாயின் கண்களில் மளமளன்னு கண்ணீர் பார்த்ததும் எனக்கும் கண்ணுலே தண்ணி வந்துருச்சு...ப்ச்... பெத்த மனம்..... என்ன சொல்றது?


அந்தவரை, சில பெற்றோர்கள் தங்களுக்கு அவமானமுன்னு வீட்டைவிட்டுத் துரத்தாம (நிறைய கேட்டுருக்கேன், வாசிச்சும் இருக்கேன்)  இப்படி  அவுங்க மகன்  மாறுனதை ஏத்துக்கிட்டு மகளா வரிச்சு, அவுங்க விருப்பத்தை நிறைவேத்தினது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருந்தது உண்மை.  அப்புறம் பொதுவா எல்லோருக்கும் வணக்கம் சொன்னாங்க. 'நல்லா இருங்க'ன்னு  சொன்னேன்.  நல்லா இருக்கட்டும். 

 ஒன்னு சொல்றேன்.... எதையும் குடும்பம் ஒத்துக்கிச்சுன்னா.... அப்புறம் ஊரார் வாயைத் திறக்கமாட்டாங்க.  இதுபோல இருக்கும் சமாச்சாரங்கள்,  சாதிவிட்டு சாதியில் செஞ்சுக்கும் காதல் திருமணங்கள் இப்படி நடக்கும்போது.... கொம்பு சீவிவிட  சிலர் வருவாங்க..... அப்போ அந்தக் குடும்பம்  எதிர்த்து நின்னா.... எல்லாம் சரியாகிரும்.  என்ன ஒன்னு... இந்தப் பாழாப்போன சினிமாவைப் பார்த்துக் கொஞ்சம் கூடத் தகுதியில்லாத  நபரைக் காதலிக்கக்கூடாது. 
கொஞ்சம் சென்ஸிடிவ் சமாச்சாரம் என்பதால் அவுங்களையும், நிகழ்வுகளையும் படம் எடுக்கலை. அவுங்க  மூணுபேரும் வெளியே போனதும் பூசாரி ஐயாவின் அனுமதியோடு மூலவரை சில க்ளிக்ஸ்.  பிரசாதமாக குங்குமமும் பூச்சரமும்  கொடுத்தார் பூசாரி ஐயா. தட்சிணை தட்டில் போட்டப்ப, இன்னும்  கொஞ்சம் கொடுங்கன்னார்.  ஒன்னும் சொல்லாம 'நம்மவர்' இன்னொரு நூறு கொடுத்தார்.
ச்சும்மா தரிசனம் செய்ய வந்தவளுக்குக் கல்யாணகாட்சியும் கிடைச்சது பாருங்க!
எனக்குத் தெரிஞ்ச திருநங்கை நட்புகள் எல்லாம் மனசுக்குள் வந்துபோனது உண்மை.... கடவுள் செஞ்ச குழறுபடிகள்தானே? படைக்கும்போது இப்படிக் கவனக்குறைவா இருக்கலாமோ? ப்ச்..
வெளியே நின்ன ஆஞ்சியைக் கும்பிட்டுக் கிளம்பினோம்.


தொடரும்......  :-)