Monday, December 31, 2018

பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹர் !!!!! (பயணத்தொடர், பகுதி 48 )

கூத்தாண்டவர் கோவிலில் இருந்து கிளம்பின பத்தாவது நிமிட்டில் பரிக்கல் வந்துருந்தோம். ஒரு அஞ்சு கிமீ தூரம்தான் இருக்கவேணும்.

ராஜகோபுரம் பழுது பார்த்துக்கிட்டு இருக்காங்க  போல.....    நல்லபடி நடக்கட்டுமுன்னு வேண்டிக்கிட்டுக் கோவிலுக்குள் போறோம்.  பெரிய முற்றத்தில் கண் எதிரே பளபளக்கும் கொடிமரம்!

வாசலிலேயே  யாகசாலை!  யாகம் முடியும் தருணம். பூரணாஹுதியில் சகலமும் சமர்ப்பியாமி.....  அக்னியும் விடாமல் ஸ்வாஹா  பண்ணிக்கிட்டே இருக்கான்.  தனியார் விழா போல இருக்கு!  குழந்தைக்கு ஆயுஷ்ஹோமமோ?
இந்தக்கோவிலில் ஏகப்பட்ட சமாச்சாரங்களுக்குப் பிரார்த்தனைகள்  செஞ்சால் கைமேல் பலன் என்ற  காரணத்தால் எப்பவும் எதாவது நடந்துக்கிட்டேதான் இருக்காம்! பரிகார ஸ்தலம்!
சந்நிதியை மூடிடப்போறாங்களேன்னு பரபரப்பா உள்ளே ஓடினோம்.  தரிசனம் அருமையாகக் கிடைச்சது!  ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹர்!  தாயார் , சிங்கத்தின் மடியில் கொஞ்சம் கூடப் பயமே இல்லாம உக்கார்ந்துருக்காள் :-)  பொதுவா    இந்தமாதிரி கோவில்களில் லக்ஷ்மி, ரெண்டு கைகளையும்  முன்னால் வச்சபடிதானே உக்கார்ந்துருப்பாள்? இங்கே என்னடான்னா.... லேசாக் கொஞ்சம் பெருமாள் பக்கம் திரும்பி உக்கார்ந்து, தன் வலக்கையைப்  பெருமாளின் இடுப்பைச் சுற்றி அணைத்து உக்கார்ந்திருக்கும் கோலம்!  வேறெங்கும் காணாத காட்சியாமே!!!!   பெருமாளும், தன் இடக்கையால் லக்ஷ்மியின் இடுப்பை வளைத்துப் பிடிச்சுக்கிட்டு....   ஆஹா.....  ஆஹா....   கட்டிப்பிடி  கட்டிப்பிடி.....
மூலவர் சந்நிதியிலேயே  குட்டியா நம்ம ஆஞ்சி !  (இதைப்போல மூலவர் சந்நிதியிலேயே ஆஞ்சி இருக்கும் இன்னொரு பெருமாள்கோயில் எதுன்னு சொல்லுங்க, பார்க்கலாம். )

கோவிலுக்கு வயசு  ஆயிரம் வருஷங்களுக்கு மேலே இருக்குமாம்!  எப்போ என்னன்றதைத் தேடி  விசாரிச்சால் ரெண்டுவிதமான கதை கிடைச்சது.  அதுலே 'கொஞ்சூண்டு' மசாலா சேர்த்தேன் :-)

கதை நம்பர் 1 :

வடநாட்டுக்காரரான  வியாசராஜர்,  நாடு முழுக்க எழுநூத்தி முப்பத்தியெட்டு ஆஞ்சநேயர் கோவில்களைக் கட்டணுமுன்னு  (அதென்ன கணக்குன்னு தெரியலையே?) ஆரம்பிச்சு அப்படியே தென்னாட்டுக்கு வந்துருக்கார்.  இந்த கிராமத்தைப் பார்த்ததும்  இங்கே ஒரு கோவிலைக் கட்டிடலாமுன்னு திருப்பணியை ஆரம்பிச்சார்.

அதென்னவோ தெரியலை.... ஏகப்பட்ட இடையூறுகள், ஒன்னு  மாத்தி ஒன்னுன்னு....  அப்படியே இது நின்னுபோயிருக்கு.....

வசந்தராஜ மன்னர் காலத்துலே, திரும்பவும் கோவில் திருப்பணியை ஆரம்பிச்சுருக்கார். திரும்பவும்  தடங்கல்களாவே இருந்துருக்கு  :-(

நாட்டுமக்கள் எல்லோருமா ,  கவலையோடு பெருமாளைக் கும்பிட்டுருக்காங்க. நரசிம்மர் உருவத்துலே காட்சி கொடுத்த பெருமாள்,  'அந்தப்பகுதியிலே இருக்கும் அசுரன் பரகலா, கோவிலைக் கட்டவிடாமல்  உங்களுக்கெல்லாம் தொல்லை கொடுக்கறான்'னு  சொல்றார்!

(நல்லா இருக்கு?  மக்களுக்குத் தொல்லை கொடுப்பவனை உடனே வதம் செய்யாமல்.... எதனால் இப்படின்னு குறி சொல்லிக்கிட்டு இருக்கார், பாருங்களேன்.... )

'ஓ அப்படியா?  அசுரனை நீரே அழிக்கக்கூடாதா?'ன்னு சனம் மன்றாடுது....  'அப்டீங்கறீங்க? அழிச்சால் ஆச்சு' ன்னு  அதே நரசிம்ஹ ஸ்வரூபத்தை அசுரன் பக்கம் திருப்பினார்.

அசுரன் கொஞ்சம் நல்லவனோ என்னவோ.... ' பெருமாளை  வணங்கி, என்னைக் கொல்வதால்  உமக்கு என்ன லாபம்? ' னு கேக்கறான்.

'நீ ஏன் கோவில் கட்டறதைத் தடுத்துக்கிட்டே இருக்கே? அதனால்  உனக்கென்ன லாபம்?' னு கேட்கப்டாதோ?   ஙேன்னு முழிச்சவர்,  'சரி, உன்னை வதம் செய்யாமல்,  மோக்ஷம்  கொடுத்து மேலே அனுப்பப்போறேன்'னு சொல்லி அவ்வண்ணமே செஞ்சார்.


அசுரனும் பாருங்க.... 'உம்மை இப்படி நேரில் தரிசிக்க வேண்டிதான்  கோவில் எழுப்புவதைத் தடை செஞ்சுக்கிட்டு இருந்தேன்'னு சொல்லி இருக்கப்டாதோ?   என்னவோ போங்க.....

ஊர்சனத்தைப் பார்த்து இப்போ உங்களுக்கு சந்தோஷம்தானே? என்ன வரம் வேணுமோ ... கேளுங்கன்னார் பெருமாள்.  ஊர்சனமும் அப்போ நல்லவங்களா இருந்துருக்காங்க. (கலி பொறக்கலையோ என்னவோ? )

நீரே இங்கே கோவில் கொண்டு எங்களை ஆசிர்வதிக்கணுமுன்னு வேண்டிக்கறாங்க. சரின்னுட்டார் எம்பெருமாள்!

  பாதிவரை கட்டி நின்னுபோயிருந்த ஆஞ்சி கோவிலை, முழுசுமாக் கட்டிமுடிச்சு இப்போ இவரையும் குடி வைச்சுடறாங்க. ஒண்ட வந்தவர் தனக்கே எல்லாமும்னு எடுத்துக்கிட்டா நல்லவா இருக்கும்?  கருவறையில் ஆஞ்சிக்கும் இடம் கிடைச்சது  இப்படித்தான்!

பரகலாசுரன் இருந்த பகுதியாச்சேன்னு பரகலான்னு இந்த ஊருக்குப் பெயரும் கிடைச்சது. காலப்போக்கில் பரகலா,  பரிகலாவாக மாறி அப்புறம் பரிக்கல்னு ஆச்சு!

கதை நம்பர் 2:

அதே வசந்தராஜ மன்னன். அதே அசுரன், இப்போ  பரிகலான்னு பெயர்.  அரசன், நரசிம்ஹர் பக்தன்.  தன் இஷ்ட தெய்வத்துக்குக் கோவில் கட்டணுமுன்னு  ஆசைப்பட்டுத் திருப்பணியைத் தொடங்கறான். முதலில்  மூணுநாள் யாகம் ஒன்னு செஞ்சுக்கணுமுன்னு  அவனுடைய குரு வாமதேவ ரிஷி சொல்றார். அக்கம்பக்கத்து நாட்டு மன்னர்கள், தன்னுடைய அரசின் கீழ் இருக்கும் சிற்றரசர்கள் எல்லோருக்கும்  அழைப்பு வச்சு, அவுங்கெல்லாம் வந்ததும் யாகம் ஆரம்பிக்குது.

பரிகலாசுரன், யாகத்தைக் கெடுக்கப் படையுடன் வர்றான்.  அரசனுக்குக்  குரு வாமதேவ ரிஷி,  அசுரனை எதிர்க்கும் வல்லமை உள்ள ஒரு மந்திர உபதேசம் செஞ்சுவைச்சும், அசுரனுடைய பலம் குறையலை....   அரசனைக் கண்டபடி தாக்கினான்.

தன்னுடைய பக்தனுக்கு ஆபத்துன்னதும், பெருமாளுக்குப் பொறுக்கலை. இதோன்னு நரசிம்ஹமா வந்து பரிகலாசுரனை  வதம் செஞ்சுடறார்.

 (வதம் செய்யறதுக்குன்னே எடுத்த அவதாரம் இல்லையோ?  இப்ப  அதிலும் ஏற்கெனவே எக்ஸ்பீரியன்ஸ்டு ஆனதால்  சட்னு   உருவத்தை மாத்திக்க முடியறது, இல்லே? )

அரசன் வசந்தராஜனுக்குத் தரிசனம் கொடுத்து, 'இனி ஆபத்து ஒன்னும் வராது. நீ போய் கோவில்கட்டும் வேலையை முடிச்சுரு'ன்னதும்,  அரசனும், 'தேவரீர், அந்தக் கோவிலில் நீரே குடியிருந்து மக்களைக் காப்பாற்றணு'முன்னு வேண்டிக்கறான்.

'வதம் செய்ய வந்த ஆக்ரோஷமான நரசிம்ஹமா இல்லாமக் கொஞ்சம் சாந்த மூர்த்தியா இருந்தால் தேவலை. சனங்கள் பயப்படாம நின்னடி பணிவார்கள்'னு கூடுதல் கோரிக்கை வைக்கிறான்.

எப்பேர்ப்பட்ட கோபமும் மனைவிக்கு முன்னால் எடுபடாதுன்னு தெரிஞ்சுக்கிட்ட அனுபவஸ்தர் 'யாரோ', (நாரதராத்தான் இருக்கணும்!)  மஹாலக்ஷ்மியாண்டை போய்  'இங்கே  வந்து பாருங்க...  உங்க வீட்டுக்காரர் என்னமோ ஆக்ரோஷமா இருக்காரு'ன்னு சொல்ல, தாயார் ஓடோடி வர்றாங்க.   மனைவியைப் பார்த்ததும் சிம்ஹம் (பொட்டிப்) பாம்பா ஆயிருச்சு.  ஹிஹி.....

'நீ ஏம்மா இப்படி வேர்க்க விறுவிறுக்க வந்தே? வா, இப்படி வந்து மடிமேலே உக்காரு'ன்னதும் 'அடடா.....   சாந்தமா இருக்கும் இவரைப்போய், கோபமா இருக்கார்'னு  சொல்லிட்டாங்களேன்னு, காதலுடன் கணவரைப் பார்த்துக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க.
காணக்கிடைக்காத இந்த  அபூர்வக் காட்சியை, தேவலோகசிற்பி சட்னு சிலையா  வடிச்சுட்டார்!

கதைகள் வெவ்வேறன்னாலும் காட்சி ஒன்றே!   வேண்டுதல் எல்லாமே நிறைவேறுதுன்னா.... கூட்டத்துக்கும் புகழுக்கும் கேக்கணுமா? நித்ய அபிஷேகம் (திருமஞ்சனம்)  வேற  நடக்குது இங்கே!

ஆமாம்... இப்படிக் கோவிலைக் கட்டவிடாத அரக்கர்கள் எல்லாம் இப்போ எங்கே போனாங்க?  ஹாஹா.... எங்கேயும் போகலை....  அரசியல் என்ற முக்காட்டுக்குள்தான் ஒளிஞ்சுருக்காங்க !

ஸ்ரீலக்ஷ்மித்தாயார் கருவறையில் இருந்தாலும்  கனகவல்லித் தாயாருக்குத் தனி சந்நிதியும் உண்டு!
சுமாரான 'பெரிய' கோவில்தான். கோவில் பிரகாரம் வலம் வரணுமுன்னு போறோம்.  நமக்கு வலப்பக்கம் இருக்கும் மதில்சுவர் மேல்  தசாவதார சிற்பங்கள் !



இடப்பக்கம் நாகரும்  ஆஞ்சியும் !
 கண்ணுக்கு நேரா இருக்கு ரெண்டு சந்நிதிகள். இடப்பக்கம் நம்ம புள்ளையார்!  வழக்கம்போல் சந்நிதிச் சுவரில்  விண்ணப்பம் வச்சுருக்கு சனம்.  (இப்படிக் கிறுக்கும் நபர்களின்  விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் னு  புள்ளையார் சொல்லணும்)


வலப்பக்கம்  ஊஞ்சல் மண்டபமோ?
   



நாகர், வேண்டுதல் விருக்ஷம், வாஹனமண்டபம் இத்யாதிகள்!


வழக்கம்போல் சொர்கவாசல்  கவனிப்பில்லாமல் இருக்கு!  அதானே..... வைகுண்ட ஏகாதசிக்கு மட்டும்  சுத்தம் செஞ்சால் போதாதா என்ன?   ப்ச்....  :-(
அன்னதானக்கூடத்தில்  சிலர்  வெயிட்டிங் ஃபார் சாப்பாடு !
வலம் முடிச்சு முன்பக்கம் வந்துருந்தோம்.   யாகசாலையை ஒழுங்கு பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அடுத்த பார்ட்டி வந்தவுடன் ஆரம்பிக்கணுமா இல்லையா?

தளதளன்னு கொய்யாப்பழம்! கோவிந்தம்மாவின் மகள், இன்றைக்கு ஞாயிறு என்பதால் , அம்மாவுக்கு உதவியாக வந்துருக்காளாம்.  குட்டிப்பெண் நல்லா படிக்கிறாளான்னு கேட்டதுக்கு க்ளாஸ் ஃபர்ஸ்ட்டாம்!  குழந்தை நல்லா இருக்கட்டும்!  கொஞ்சம் கொய்யாப்பழங்கள் வாங்கிக்கிட்டோம்.
காலையில் ஆறு மணிமுதல் பகல் ஒரு மணிவரையிலும், மாலையில் ஆறுமுதல் எட்டுவரையிலும் கோவிலைத் திறந்து வைக்கிறாங்க. நான் நினைக்கிறேன் நடை திறந்து வைக்கும் நேரம்தான் இதுன்னு.  மத்யானத்தில் அஞ்சுமணி நேரம், இந்த  யாகங்கள், மற்ற தனியாருக்கான பூஜை, விசேஷங்கள் நடக்குமா இருக்கும்! யாகசாலை வெளிப் ப்ரகாரத்தில்தான்!!
மூன்று நரசிம்ஹர்கள் ஒரே நேர்கோட்டில் கோவில் கொண்டுள்ளனராம். பரிக்கல், பூவரசங்குப்பம், அபிஷேகப்பாக்கம்னு  இந்த மூணு கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்கணுமாம்!
இப்படியெல்லாம் யாரு ஆரம்பிச்சு வச்சதுன்னு தெரியலை.  நின்னு நிதானமா ஸேவிக்கறது நல்லதா? அவதி அவதின்னு எண்ணிக்கை  முக்கியமுன்னு ஓடுறது நல்லதா ? என்னமோ போங்க....  இப்பவாவது  வண்டி வாகன வசதி,   ஓரளவு நல்ல சாலைன்னு இருக்கு. அந்தக் காலத்துலே  நடந்தோ, இல்லை மாட்டுவண்டியிலேயோதான்  க்ஷேத்ராடனம்.  எப்படிப் போயிருக்க முடியும்?   .....  மேலூர், திருமுல்லைவாயில், திருவொற்றியூர் அம்மன்களுக்கும்  இப்படித்தான் .....  ப்ச்...
கிளம்பின  அரை மணியில் ஆர்யாஸ் கண்ணில் பட்டது. லஞ்ச் முடிச்சுக்கிட்டோம்.   வாசலில் புத்தகக்கடை!
 நண்பர்களின் புத்தகம் பார்த்து மகிழ்ச்சி! 


இனி நேரா....  பூலோக வைகுண்டம்தான் :-)


தொடரும்.....  :-)

10 comments:

said...

அந்த யானை படம் எடுப்பவரை ஓரக்கண்ணால் பார்ப்பது போல இருக்கிறது. அழகு.

said...

இந்தக் கோவிலில் சேவை செய்யும் பட்டர் என் அப்பாவோடு பணிபுரிந்த கண்ணன் என்பவரின் சகோதரர். இந்தக் கோவிலுக்கு வரச்சொல்லி முன்னர் அழைத்திருந்தார். இப்போதும் அவர்தான் இருக்கிறாரா என்று தெரியாது. அழகான கோவில். இன்னமும் பார்க்கவில்லை.

said...

கும்பகோணம் ராமஸ்வாமி கோவிலிலும் ஆஞ்சநேயரைப் பார்த்தேனே

said...

இராமர் சம்பந்தப்பட்ட கோவில்கள் எல்லாவற்றிலும் ஆஞ்சநேயர் இருப்பாரே

said...

லஷ்மி நரசிம்மர் தரிசனம்.
குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

said...

பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹர் ...திருக்கோவில் அறிந்துக் கொண்டேன் மா...

said...

வாங்க ஸ்ரீராம்.

அருமையான அழகான கோவில்! கட்டாயம் பார்க்க வேண்டிய கோவில்களில் ஒன்னு ! விரைவில் கிடைக்கட்டும்!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ரொம்பச் சரி. கும்பகோணம் ராமர் கோவிலேதான்! வீணை வாசிக்கும் ஆஞ்சி!

மத்தபடி எல்லா ராமர் கோவில்களிலும் ஆஞ்சி இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கலை. கோவில்களில் ராமர் சந்நிதின்னதும் ஆஞ்சியும் இருக்காரே!

said...

வாங்க மாதேவி.

உங்களுக்கும் புதுவருட வாழ்த்துகள் ! அடுத்த தமிழ்ப்புத்தாண்டுக்கு அட்வான்ஸா வச்சுக்குங்க :-)

said...

வாங்க அனுராதா ப்ரேம்,

சீக்கிரம் தரிசனம் லபிக்கட்டும்!