Wednesday, December 05, 2018

நெற்றிக்கண் நரசிம்ஹர் !!!!! (பயணத்தொடர், பகுதி 41 )

எல்லாத்துக்கும் வேளை  வரணுங்கறது ரொம்பச்சரி. ஜிஎஸ்டி (இது வேற ஜிஎஸ்டிப்பா...) ரோடுவழியா கணக்கில்லாத முறை பயணங்கள் போய் வந்துக்கிட்டே இருக்கோம்தான். ஆனால்  சென்னைக்குப் பக்கத்துலே இருக்கும்  சிங்கப்பெருமாள் கோவிலுக்கு இதுவரை போகலை.  மீனம்பாக்கத்தில் ஆரம்பிச்சுரும்  வண்டிகளின் நெரிசல்,  கூடுவாஞ்சேரி வரை  நம்ம மென்னியைப் பிடிக்கிற பிடியில்   திக்கித் திணறி வெளியே வந்ததும், அப்பாடான்னு  ஹைவேயில் பறந்து போறவழியில் இதப் பெயரைப் பார்க்கும்போதெல்லாம் ஒருநாள் போகணும்னு நினைச்சுக்கறதுதான். அந்த ஒரு நாள் இன்று!
மெயின் சாலையில் இருந்து  இடதுபக்கம் பிரிஞ்சு போகும் சாலையில்  கொஞ்ச தூரம் போய்  இன்னொரு  லெஃப்ட் எடுத்து இன்னும் கொஞ்சம் உள்ளே போகணும்.  கூடுவாஞ்சேரியில் இருந்து ஒரு பதினைஞ்சு கிமீ தூரம் இருக்கும்.   தெருவின் வலப்பக்கம் இருக்கும் 'பார்க்கிங்' இல்  வண்டியை நிறுத்திட்டு, தெருவின் எதிர்ப்பக்கம் கடைகளுக்கு நடுவில்   நடந்து போனால்  நமக்கிடப்பக்கம் கோவில் வாசல் வந்துருது.

அங்கெ ஒரு குன்று இருக்கறதே  தெரியாது ! குன்றில் ஒரு குகைக்குள் இருக்கார் சிங்கப் பெருமாள்!
புது ட்ரைவர் ரமேஷ், வண்டியை நிறுத்தினதும், நம்ம சீனிவாசனுக்குச் சொல்ற மாதிரியே 'வண்டியைப் பார்க்கிங்கில் போட்டுட்டு, நீங்களும் வாங்க'ன்னு அழைப்பு ஆச்சு.  தலையை ஆட்டினார்.

நாங்க இறங்கிக் கோவில் வாசலுக்குப்போயிட்டோம்.  பாடலாத்ரி ந்ருஸிம்ஹப் பெருமாள் திருக்கோவில்! கோவிலோட முகப்பு சரியாத் தெரியாத விதத்தில் தகரக்கூரை எல்லாம் போட்டு வச்சுருக்காங்க.
முந்தி இப்படி இருந்துருக்கு !  (கூகுளாண்டவர் அருளியது ! )
குன்றின் முன்புறமுள்ள இடத்தில்  தனிச்சந்நிதிகள், மண்டபங்கள்னு கட்டிவிட்டுருக்காங்க.
ஜாபாலி என்ற முனிவர், நரசிம்மரைக் காண  வேண்டி ஒரு குகைக்குள்  தவம் செய்யறார். தவம் முற்றிய (! ) நிலையில்  செகசெகன்னு சிவந்த கண்களோடு உக்ரநரசிம்மர் காட்சி கொடுக்கறார். அன்றைக்கு பிரதோஷ தினமா இருந்துச்சு.    என்ன வரம் வேணுமுன்னு கேட்டதும்,  அக்கால   ரிஷிமுனிவர்கள் வழக்கப்படி, 'இப்படியே இங்கே தங்கி உலக மக்களுக்கு நன்மை செய்ய வேணுமு'ன்னு  வேண்டினார்.  அதே போல ஆச்சு.

பிரதோஷ தினம் காட்சி கொடுத்தவருக்கு, ப்ரதோஷ தினத்தில்  திருமஞ்சனம் நடக்குது!

 பொதுவா குன்றுக்கு உண்டான  அத்ரி என்ற பெயரோடு, சிவப்பு நிறத்தைச் சொல்லும் பாடலம் என்ற சொல்லையும் சேர்த்து பாடலாத்ரி நரசிம்ஹர் என்ற பெயரும் பெருமாளுக்குச் சூட்டினார்.
நமக்கு  வலதுபக்கம் இருக்கும் தகதகன்னு மின்னும் கொடிமரத்தையும், பெரியதிருவடிக்கான சந்நிதியின் பின்புறத்தையும்(!) கும்பிட்டுக்கிட்டு  சந்நிதிக்குச் செல்லும்வழின்னு அம்பு காமிக்கும் இடது புறம்  மண்டபங்களைக் கடந்து போறோம்.

அஹோபிலவல்லித் தாயார், ஆண்டாள், ஸ்ரீநிவாசன்,  லக்ஷ்மிநரசிம்மர், பெரிய திருவடி, சிறியதிருவடி ஆகியோருக்கு அங்கங்கே தனித்தனிச்சந்நிதிகள். ஒவ்வொன்னும் ஒவ்வொரு திசையைப் பார்த்தபடி! (அதுவும் சரிதான். இருக்கற இடத்துலேயே தானே எல்லோருக்கும் இடம்  ஒதுக்கணும், இல்லையா?)
மூலவரை தரிசனம் செஞ்சுக்கப்போறோம்.  கொஞ்சம் இருட்டான வழிதான். குகை பாருங்க..... நல்ல பெரிய உருவம்! அகலமாச்  சிரிச்ச முகமும், பெரிய கண்களுமா வலது காலை மடிச்சு வச்சு, இடதுகாலைத் தொங்கப்போட்டுக்கிட்டு ரொம்பவே ரிலாக்ஸ்டா உக்கார்ந்துருக்கார்.  பின்னிரு கைகளில் சங்கும் சக்கரமும், முன்னிருகைகளில்  வலது கை 'அபயம் தந்தேன்'னு காமிக்க, இடதுகை, தொடையில்   வச்சபடி  அமர்க்களமா இருக்கார். நெற்றியில் மின்னும் வைரத்திருமண் ஜொலிக்கறது!
பட்டர் பிரான்,  தீபஆரத்தி காமிக்கும்போது,  சட்னு அந்த ஜொலிக்கும்  திருமண் பட்டையை நகர்த்தினாரா.....    ஹைய்யோ!!!    சிம்மத்துக்கு நெற்றிக்கண்  இருக்கு!  ஓ மை காட் !  இதுவரை இப்படி ஒரு பெருமாளைத் தரிசிச்சதே இல்லை!!!  அடடா....   இப்படி இருப்பாருன்னு தெரிஞ்சுருந்தால்  பல வருஷங்களுக்கு முன்னேயே வந்துருக்கலாமே..... அப்போ இவ்ளோ கூட்டமும் இருந்துருக்காது தானே.....

அந்த அழகை உள்வாங்கி, பிரமிப்பெல்லாம் அடங்க ஒரு பத்து நிமிட் ஆச்சு!

வெளியே  அஹோபிலவல்லித் தாயார் சந்நிதிக்குள் நல்ல கூட்டம்.  கொஞ்சம் எட்டிப் பார்த்துக் கும்பிடு போடும்படி ஆச்சு.
வலம் வரலாமேன்னு போறோம்.   அகலமான படிகள் ஆரம்பிக்குது. ஐயோ..... மலை  ஏறணுமான்னு தயங்குனதும், நம்மவர் ஒரு பத்தடி போய்ப் பார்த்துட்டு 'கொஞ்சதூரம்தான்'னார்.

படிகள்  ஆரம்பிச்சதும் இடதுகைப்பக்கம் ஒரு கடையா அது? கூட்டம் அம்முதே....   பிரஸாத ஸ்டால்!  தோசை இங்கே முக்கிய பிரஸாதமாம்.  இருக்கட்டும்..... வலப்பக்கம் திரும்பிப் பார்த்தால்  மூலவர் சந்நிதிக்கான விமானம் மலைக்குள்ளே இருந்து புறப்பட்டது போல !
இந்தாண்டை ஸ்ரீநிவாசரைக் கம்பிக்கூண்டுக்குள் வச்சுருந்தாங்க.  சனம் பாடாய் படுத்தி இருக்கு போல..... கையில் எட்டும் சிலையைச் சும்மா விடுமா என்ன?  பெருமாள் எங்கே ஓடிருவாரோன்னு கூண்டுலே பல பூட்டுகள்   வேற ! கம்பி கூண்டு போட்டுட்டா மட்டும் நாங்க ச்சும்மா விட்டுருவோமா?


படிகளில் சின்னச்சின்ன முடிச்சுகளா மக்கள் உக்கார்ந்து பிரஸாத தோசையை ஒரு கை பார்த்துக்கிட்டு இருக்காங்க.

அண்ணாந்து பார்த்தால் ரெண்டு விமானங்கள் தெரியுது. ஒன்னு மூலவருக்கான ப்ரணவகோடி விமானம், இன்னொன்னு தாயாருக்காக இருக்கலாம். பல்லவர் காலத்துலே கட்டுன குடவரைக்கோவில். விமானம் எல்லாம்  சமீபத்துலே ஒரு அம்பதாண்டுகளுக்குள் கட்டி இருக்கலாம்.

மூலவரே மலையில் (குகைக்குள்) இருப்பதால் கிரிவலம் வர்றது விசேஷம்னதும் முதலில் கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன்.  அப்புறம் பார்த்தால்  வெளிப்ரகார வலமுன்னு இப்போ படியேறிக்கிட்டு இருக்கோமே இதுதான் கிரிவலப்பாதைன்னதும்  அப்படியே ஜில்லுன்னு  வயித்துலே 'மேங்கோ லஸ்ஸி ' வார்த்தமாதிரி இருந்துச்சு :-)

கொஞ்சம் படியேறினதும்  சமதளமாவே பாதை போகுது. வெய்யில் கொள்ளாமல்  இருக்கத் தகரக்கூரையும் போட்டு வச்சுருக்காங்க.  அங்கே வலப்பக்கம் கற்பாறைகளால் ஆன குன்று. அதில் ஒருபக்கம் ஒரு  மரமும் அதில் வேண்டுதல்களாக் கட்டிவிட்டுருக்கும்.....  துணிகளும்....

மரத்தையொட்டிய பாறையிலேயே மரத்தின் அருமைகளை எழுதிவச்சுருக்காங்க.

கீழே கோவில் விவரத்தில் ஸ்தலவிருக்ஷம் பாரிஜாதம்னு போட்டுருந்தது இதுதானாக்கும்னு  பார்த்தால் இங்கே அழிஞ்சல் மரமுன்னு எழுதி வச்சுருக்காங்க.

எனக்கு ஒரே குழப்பம்தான். நாச்சியார் திருமொழி பாசுரம் 44 இல் இதைப்பற்றி இருக்குதுன்னதும் பார்த்தால்.....
பாசுரம் 537 இல் தான்  இவுங்க சொல்ற பாசுரம் வருது.

ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட
பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து
வாய்த்த காளியன் மேல்நட மாடிய
கூத்த னார்வரில் கூடிடு கூடலே

கடம்ப மரமுன்னுதானே(பூத்த நீள் கடம்பம்!) ஆண்டாள் பாடி இருக்காங்க. அழிஞ்சலும் கடம்பமும் ஒன்னோ? இல்லை.....  வெவ்வேறோ?

எதுக்கும் விவரம் தெரிஞ்சவங்ககிட்டே கேட்டுக்கலாமுன்னு  நேத்து ஃபேஸ்புக்கில் கேட்டுருந்தேன். முக்கியமா வீரமணி வீராஸ்வாமி ஐயாவை Tag பண்ணி இருந்தேன். நான் நினைச்சதுபோலவே வெவ்வேற மரமுன்னு விளக்கங்களும் அதுக்குண்டான சுட்டிகளுமா பதில் சொல்லிட்டார்.

எதுக்காக கோவிலில் இப்படி எழுதிவச்சுருக்காங்கன்னு தெரியலையே.... யாருமே சொல்லலையா? இல்லை,  இவுங்கதான்  ஆண்டாளம்மா சொன்னதுக்கு அத்தாரிட்டின்னு இருந்துட்டாங்களா?


நாம் கட்டி இருக்கும் ஆடையில் இருந்து ஒரு நூலை உருவி இந்த மரத்தில் கட்டினால் மாமேதை ஆகலாமாம்!  அந்தக் காலத்துலே எல்லோரும் பருத்தி நூல் புடவை, வேஷ்டி ,அங்கவஸ்த்திரமுன்னு போட்டுருந்ததால்  நூலை உருவி எடுப்பது சுலபம். முடியவும் முடியும். இந்த ஸல்வார் கமீஸ் காலத்துலே முடியுமோ? அதுக்குத்தான் போல துணித்துண்டுகளாக் கொண்டுவந்து  கட்டி வச்சுருக்காங்க.  பில்லியன் கணக்கில்  இருக்கும் மக்கள் தொகையை நினைச்சுப் பார்த்தால்,  முடிச்சுகள்  எண்ணிக்கை ரொம்பவே குறைவுதான்:-)

இதுக்குப்பின் இன்னுமொரு ஏத்தம். படிகள் ஏறிப்போகணும். ஆனா இதுதான் கடைசி ஏத்தம். அப்புறம் எல்லாம் இறக்கமே.... ரெண்டு நிமிட் நாமும் உக்கார்ந்துருந்தோம்.  கடமைகளில் செல்ஃபி ஒன்னு பாக்கி இருக்கே :-)


கீழே படிகள் முடியும் இடத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர் சந்நிதி! கம்பிக்கதவைத் திறந்து வச்சதால் விளக்கேத்தி வச்சுக் கும்பிடறாங்க மக்கள்ஸ்.




வலப்புறம் திரும்பறோம். (நாம் வலம் வந்துக்கிட்டு இருக்கோம்தானே?)  இடதுபக்கம் வாகனங்கள் இருக்கும் மண்டபம்.  நல்ல அழகான ஆஞ்சியும் கருடரும். அழகா அடுக்கி வைக்காம அப்படியப்படியே போட்டு வச்சுருக்காங்க.








(இந்த இடத்தில் ஒன்னு சொல்லிக்கறேன். எதையும் வச்சுக் காப்பாத்த ஏன் நம்ம மக்களுக்குத் தெரியலை ? நான் பார்த்தவரையில் அடையார் அநந்தபதுமன் கோவிலில் மட்டும்தான் வாகனங்களை ரொம்பவே நல்ல முறையில் பராமறிக்கிறாங்க. ஒவ்வொன்னும் ஒரு  ஃபைபர் க்ளாஸ்  மூடிக்குள் பத்திரமா இருக்கு.  இந்த நொடி ஒரு வாகனம்  வேணுமுன்னா  அடுத்த நொடியில்  தயார் நிலையில் இருக்கு, அங்கே! )



சொர்கவாசல் கதவுக்குப் பக்கம் ஒரு நரசிம்ஹர் சந்நிதி (கம்பி கூண்டுக்குள்தான்!) இருக்கு.  அங்கே பூட்டுப்போடாதீர், விளக்கு கொளுத்தி வைக்காதீர்னு  அறிவிப்பும் வச்சுருக்காங்க. அப்பக் கோவில்னா விளக்கு ஏத்த வேணாமா? வேணும்தான். அதுக்குன்னு ஒரு தாமரை வடிவ அமைப்பு வச்சுருக்காங்க. அதுலே விளக்கு வச்சுக் கும்பிடலாம். பேசாம பூட்டுக்கும் ஒரு  கம்பிச்சட்டம் அடிச்சு வச்சுட்டாத் தேவலை. போடற பூட்டை அங்கே போட்டுட்டுப் போவாங்க.  பூட்டு வியாபாரிகள்  நல்லாப் பிழைச்சுட்டுப் போகட்டும்..... பூட்டு ஒரு பிரச்சனைன்னா,  பிரச்சனைகள் இருப்பவர்கள், அதை இங்கே பெருமாளிடம் பூட்டி வச்சுட்டால், அவர் பிரச்சனைகளை ஒழிச்சுக் கட்டிடுவாராம். இங்கே இப்படி ஒரு பிரச்சனை.




(நான்  முதல்முதலில் இந்த பூட்டு சமாச்சாரத்தை பாரிஸ் நகரில் ஒரு பாலத்துலே பார்த்தேன். 1999 ஆம் ஆண்டு. காதலர் இணைபிரியாம இருக்கணுமுன்னு வேண்டிக்கிட்டுப் போடும் பூட்டாம். அது எப்படியோ இந்தியாவுக்கு வந்துருச்சு. இங்கே ஏது காதல்? சாதி விட்டு சாதின்னா அரிவாளைத்தானே தூக்கறாங்க?  ஒரே சாதி, அந்தஸ்த்து எல்லாம் பார்த்துட்டுக் காதலிக்கணும் போல ! என்னவோ போங்க.... )
திரும்ப ஒருக்காக் கொடிமரத்தை ஸேவிச்சுட்டுக் கோவில்கடைகளை ஒரு பார்வை பார்த்துட்டுப் பார்க்கிங் இடத்துக்கு வந்துட்டோம். அழகான பொருட்கள் சில இருந்தாலும்.....

இருந்தாலும்..... ?


ஒன்னும் வாங்கிக்கலை. இப்ப ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னால்தான்   இந்தப்பயணம் ஆரம்பிச்சுருக்கு. இப்ப இருந்தே நம்மவருக்கு பிபி ஏத்தவேணாம்தானே?

இந்தக்கோவில்  நூத்தியெட்டு திவ்யதேசப் பட்டியலில் இருப்பதாக ஒருவர் எழுதி இருந்தார். ஆனால் அஃபீஸியல் லிஸ்ட்டில் இல்லை என்பதே உண்மை.  அதிசய நெற்றிக்கண்  உள்ள கோவிலை ஏன் சேர்க்கலைன்னு தெரியலையே....

கிளம்பிப்போகும்போது  நம்ம நரசிம்ஹரின் நெத்திக்கண் அதிசயத்தை நாங்க ரெண்டுபேரும் எங்களுக்குள் சிலாகித்துப் பேசிக்கிட்டு இருந்தோமா.... அப்ப ரமேஷ் சொல்றார்... 'நெத்திக்கண்ணா இருக்கு? தெரிஞ்சுருந்தால்  வந்துருப்பேனே....'

'உள்ளே வரவே இல்லையா?'ன்னு கேட்டதுக்கு, ' வண்டியிலேயே இருந்துட்டேன்'னார்..... 

வாசல்வரை வந்தும்....  கொடுப்பினை இல்லை பாருங்களேன்....  ப்ச்....

தொடரும்......... :-)


21 comments:

said...

வாசல் வரை வந்தும்.... :(

நல்ல கோவில் - ஒவ்வொரு முறை இந்த இடத்தினைக் கடக்கும்போதும், கோவில் சென்று பார்க்க வேண்டும் எனத் தோன்றும். சென்னையில் தங்குவது போல வருவதே இல்லையே. நேரே திருவரங்கம்/தில்லி தானே!

சுவையான தகவல்கள். பயணத்தில் நானும் தொடர்ந்து வருகிறேன்!

said...

அருமை... அருமை...

கண்குளிர தரிசனம்.

அருகிலேயே இருந்தும் நான் இதுவரை சென்றதில்லை.

ஒன்றிரண்டு படங்கள் ரிப்பீட் ஆகி இருக்கின்றன.

said...

மறைமலைநகரில்தான் மாமியார் வீடு. பத்துப் பதினைந்து வருடங்களாக அடிக்கடி போய்வரும் ஊர். ஆனாலும் இந்தக் கோவில் பக்கம் போனதே இல்லை. உங்க தயவால் தரிசனம் கிடைத்தது. சமீபத்தில்தான் முதன்முறையாக ஸ்ரீரங்கத்தில் இந்த பூட்டு சமாச்சாரம் பார்த்தேன். விளக்கம் இப்போதுதான் அறிகிறேன். நன்றி டீச்சர்.

said...

நான் பல வருடங்களாகப் பார்க்க ஆசைப்பட்ட கோயிலை இன்று உங்கள் பதிவு மூலமாகக் கண்டேன். நன்றி.

said...

// திவ்யதேசப் பட்டியலில் இல்லை //

அப்போ ஆண்டாள் பாடியது மரத்தைப் பற்றி மட்டுமோ, கோவிலை இல்லையோ ....

அருமை நன்றி;

said...

idhey idathil innum oru 10 km oorukku ullay ponal , hanumanthapuram ennum edathil Veerbadrar koil varum ... ingae pournami , ammavasai andru , pei pidithavargalai angae azhaithu vanthu pragarathil katti vittu viduvargal ... adutha naal kaalai seri agi vidumam...

said...

நெற்றிக்கண், குகை கோவில் அருமை.

said...

அடிக்கடி சென்றுவந்த அருமையான கோவில் .நரசிம்மர் தரிசனம் கண் நிறைய இருக்கும், பானக பிராத்தனை விஷேஷம் , பிரசாத தோசையும் அதற்கு தொட்டுக்கொள்ள பொடியும் தருவார்கள் அதும் அருமையாக இருக்கும் .

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நாங்களும் பலமுறை கடந்துபோனாலும், இந்த முறைதான் வாய்த்தது!

ஒரு முறை காரில் நீங்க மூணு பேரும் கிளம்பி சென்னைக்கு வாங்க. வர்ற வழியில் இவரை தரிசனம் பண்ணிட்டு, சென்னை திரு அல்லிக்கேணி பார்த்தசாரதி, அடையார் அநந்த பதுமன், இன்னும் கயிலையாம் மயிலைன்னு ஸேவிச்சால் ஆச்சு! விரைவில் 'அவன்' அருள வேணும்!

said...

வாங்க ஸ்ரீராம்.

ரிப்பீட் சொன்னதுக்கு நன்றி. எடுத்துட்டேன்.

said...

வாங்க கீதமஞ்சரி.

ஆஹா... மறைமலை நகரா? ரொம்பப்பக்கம்ப்பா! அடுத்த முறை போயிட்டு வாங்க. அதியசப்பெருமாள் !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நேரிலும் தரிசனம் கிடைக்கட்டும். விரைவில் வாய்க்க வேணுமாய்...... வேண்டிக்கறேன்.

said...

வாங்க விஸ்வநாத்.

ஆண்டாள் பாடியது கடம்ப மரத்தைப் பற்றித்தான். இங்கே ஏன் அதை அழிஞ்சலுக்கு எழுதி வச்சுருக்காங்கன்னு தெரியலையே.....

said...

வாங்க சரவ்,

ஹனுமந்தபுரம் ரோடுக்குள்தான் நாமும் போனோம். வீரபத்திரர் கோவில் இருக்குன்னு இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும்.

போனால்.... எனக்கும் இதே மாதிரி ஆகலாம்! எழுத்துப் பைத்தியம் முத்திப்போச்சு !

said...

வாங்க மாதேவி.

ரசித்தமைக்கு நன்றிப்பா !

said...

வாங்க செந்தில்பிரசாத்.

பொதுவா வெளியில் சாப்பிடக் கொஞ்சம் பயம்தான். கோவில் பிரஸாதமுன்னாலும் வயித்துக்கு ஒத்துக்கணுமே....

இன்னொரு தோழியும் தோசை பற்றிச் சொன்னாங்க. பார்க்கலாம் அடுத்த முறை!

said...

நீங்கள் சொல்லுறதும் சரிதான் அம்மா . சிங்கப்பெருமாள் கோவிலுக்கு அருகில் செட்டிபுன்னியம் என்ற ஊரில் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலும் இருக்குகிறது அதன் கோவிலும் நன்றாக இருக்கும் . அந்த கோவிலுக்கும் போனீங்களா ?

said...

@ செந்தில்பிரசாத்,

செட்டிப்புண்ணியம் போகலை. வேறொரு கோவிலுக்குப் போயிட்டோம். அதுவும் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கு! அடுத்த பயணத்தில் போகவேணும்.

said...

சிங்கபெருமாள் கோயில் இதுவரைக்கும் நானும் போனதில்ல. போகனும்னு ரொம்ப நாளா நினைச்சு வெச்சிருக்கேன். அதுலயும் தோசைதான் அங்க பிரசாதம்னு வேற சொல்லீட்டீங்க. திருநீர்மலைலயும் தோசை பிரசாதம் பிரமாதம்.

கடம்ப மரமும் அழிஞ்சல் மரமும் வெவ்வேறன்னு சொல்றாங்க. காலப்போக்குல பழைய மரத்துக்குப் பதிலா புதிய மரம் நட்டியிருக்கலாம். அப்படித்தான் கடம்பு போய் அழிஞ்சல் வந்திருக்கும்னு நெனைக்கிறேன்.

அழிஞ்சல் மரத்துல வசியமருந்து செய்யலாம்னு இணையத்துல போட்டிருக்கு. அதுனால அதை அதிசயமரம்னு சொல்றாங்க போல.

கோயில்ல சாமி தலையில் மீந்த தயிரை கொட்டனும்னு யாராவது சொல்லிட்டாக்கூட நம்ம மக்கள் அதை அப்படியே செஞ்சிருவாங்க. கோயில் சாமின்னு சொல்லி என்ன வேணும்னாலும் சொல்லலாம். எல்லாம் அதை அப்படியே பின்பற்றுவாங்க. யாரும் எதுவும் கேக்கவும் மாட்டாங்க. கேட்டாலும் அவங்கள அசிங்கப்படுத்திறலாம்.

said...

ஆஹா அருமையான தரிசனம் ...

said...

எனக்கு ஒருவர், ஐந்து வாரங்கள் (ஒரே தினமா இருக்கணும், பிரேக் ஆயிடுச்சுன்னாலும் அதே தினத்தில் தொடரலாம்), 9 முறை பிரதட்சணம் செய்து, பெருமாளை சேவித்தபிறகு, எங்கேயும் சாப்பிடாமல், வேறு எங்கயும் போகாமல் நேரே வீட்டுக்கு வந்துவிடவேண்டும் என்று சொல்லியிருந்தார். அதற்காகத்தான் முதல் முறையாக இந்தக் கோவிலுக்கு 5 மாதங்கள் முன்பு சென்றிருந்தோம்.

எனக்கு பிரசாதம் சாப்பிடணும்னு எண்ணம். என் மனைவி, 'நோ... சுத்தமாகவும் இல்லை, நாம எதையும் வாங்கக்கூடாது/சாப்பிடக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்' என்று சொல்லிவிட்டாள்.

கடைசி முறையில், (அவரிடம் கேட்டுக்கொண்டு) செட்டி புண்ணியமும் சென்று வீடு திரும்பினோம்.

முதலில் 9 முறை பிரதட்சணம் என்று சொன்னதும் கொஞ்சம் பயம் இருந்தது.