Wednesday, December 12, 2018

மலையைச் சுத்தி........ !!!!! (பயணத்தொடர், பகுதி 43 )

மேல்மருவத்தூரில் இருந்து கிளம்பின  காமணியில் ஆர்யாஸ் கார்டன்  கண்ணில் பட்டது.  இங்கே  நம்ம லஞ்ச்சை முடிச்சுக்கலாம். வெளியே கட்டடம் நல்லா நீட்டா இருக்கு! அதேபோல் ரெஸ்ட் ரூம் வசதிகளும் ஓக்கே!
எனக்கு ஒன்னும் சாப்பிட வேணாமுன்னாலும்.....  'நம்மவர்' விடலை.  ஒரு வெறும் சப்பாத்தியைத் தின்னு வச்சேன். கூடவே ஒரு காஃபி.  சாப்பாட்டை விட இங்கே வச்சுருந்த  விற்பனைப்பொருட்கள் அட்டகாசமா இருந்துச்சு.





விற்பனையாளரிடம் பாராட்டிச் சொன்னதும், அவுங்க முதலாளி அறைக்கு அழைச்சுக்கிட்டுப் போயிட்டாங்க.  இவர்தான் ஹொட்டேல் ஓனரும் கூட. நல்ல டேஸ்ட்!  ரொம்ப அழகான பொருட்களை வச்சுருகீங்கன்னு நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டு வந்தேன்.  அவருக்கு இப்படிப்பட்ட கலை & அழகுப்பொருட்கள் விருப்பமாம். அதான் அங்கங்கே வாங்கி இங்கே விற்பனைக்கு வச்சுருக்கார். நேர்த்தியான அலங்காரம்!   ஒவ்வொன்னும் அழகோ அழகு!  அதிலும் அந்த யானைகள்....  ச்சான்ஸே இல்லை.... மனசை எப்படிக் கல்லாக்கிக்கிட்டேன்னு  சொன்னா... உங்களுக்குப் புரியும்தானே?

ஒரு பக்கம், சிலபல தீனிவகைகளும் விற்பனைக்கு வச்சுருக்காங்க. பயணிகளுக்கு நல்ல சேவைதான். ரெண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகளும்,  நமக்குக் கடலை உருண்டைகளும் வாங்கிக்கிட்டோம்.

செஞ்சி வழியாப்போறோம்.  ஹா..... செஞ்சிக்கோட்டை பார்த்ததே இல்லை. ஆனாலும்  அங்கே போய்ப் பார்க்க நேரம் இல்லை.  லுக் அவுட் பாய்ண்ட்டில் இருந்து  சிலபல க்ளிக்ஸ்.

மலைக்குப்போகும் படிகளைப் பார்த்தே மலைத்தேன். ஐயோ..... ஏறமுடியுமுன்னு தோணலையே......  கார் போகும் வழி இருக்கா ? தெரிஞ்சவுங்க சொன்னால் புண்ணியம்!
கீழே இருந்து பார்க்கும்போதே பிரமிப்பாத்தான் இருக்கு! கண்ணால் அதுவும் கெமெராக் கண்ணால் கொஞ்சம் ஏறிப்பார்த்தே தலை சுத்தல் வந்துருச்சு :-)

மேலே கோட்டைச்சுவர் மூணு மலைகளை இணைச்சுக்கிட்டு பனிரெண்டு கிமீ தூரத்துக்குப் போகுதாம். பனிரெண்டாம் நூற்றாண்டு சமாச்சாரம். ஆசையாத்தான் இருக்கு. ஆனால் இப்போ இன்றைக்குப் போக இயலாது.


பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்திட்டுக் கொஞ்சம் ஒரு நூறு  மீட்டர் நடந்து போய்ப் பார்த்தோம்.  சமதரைதான் :-)
அகழி மாதிரி இருக்கு ஒரு இடத்தில்.  சிலபல க்ளிக்ஸ் ஆச்சு!
அடுத்த முக்கால் மணியில் ஊருக்குள் நுழைஞ்சுட்டோம். நினைத்தாலே முக்தின் தரும் திருவண்ணாமலை ! பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்னு இது. அக்னி!  அக்னிவடிவமா இருக்கார் அண்ணாமலையார்!

 'நம்மவருக்கு' இங்கே வர்றது  இதுதான்  முதல் முறை!  நான் சின்ன வயசுலே ஒருக்கா வந்துருக்கேன்.  கோவிலுக்குள் போய் கும்பிட்டது மட்டும் நினைவிருக்கு!  (அப்போ பதிவர் இல்லை பாருங்க.... அதான் ....  ) ஒரு நாப்பது சனத்தோடு  பஸ் டூரில் வந்ததால்  கோவிலைத்தவிர வேறொன்னும் பார்க்கலை. வந்தமா... சாமி கும்பிட்டமான்னு ஓடறதுதான்.

இப்பெல்லாம் திருவண்ணாமலைன்னதும் கிரிவலம்தான் 'டான்'னு  நினைவுக்கு வருதுல்லே? அப்பெல்லாம் அவ்வளவா இதைப்பற்றிய விவரம் எல்லாம் தெரிய வந்துருக்காது.  விஷயம் தெரிஞ்சவங்க மட்டும்  வலம் வந்துருப்பாங்களா இருக்கும். கிரிவலப்பாதை எப்படி இருந்ததோ?

மணி மூணுதான் ஆகுது என்பதால்,   முதலில் கிரிவலம் போயிட்டு அப்புறமா ஹொட்டேலில் செக்கின் பண்ணிக்கலாமுன்னார் 'நம்மவர்'.

பதினாலு கி மீ தூரம் என்றாலுமே நான் மறுப்பேதும் சொல்லலை.   காரில்தான் வலம் போறோம். (ஏற்கெனவே கோவர்தனகிரி  வலமும் இதே ஸ்டைலில்தான் செஞ்சுருக்கோம்!)

திருவண்ணாமலையில், மலையே சிவன் என்பதால்  வலம் வர்றது முக்கியமாம். மலையின் தோற்றம் ஒவ்வொரு பக்கத்தில், ஒவ்வொரு திசையில்  பார்க்கும்போதும் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்குது. மலையில் அஞ்சு சிகரங்கள் இருக்கு என்பதால் பஞ்ச முக தரிசனம் நமக்குக் கிடைக்குது!
மலையைச் சுத்தி எட்டு லிங்கங்கள் இருக்கு. அஷ்டலிங்கங்கள்.   வலம் வரும்போது கும்பிடலாம்.
நம்ம ட்ரைவர் ரமேஷ், ஏற்கெனவே பல முறை வந்துருக்காராம். அவர்தான் பஞ்சமுக சமாச்சாரம் எல்லாம் சொல்லிக்கிட்டே வந்தார்.
தேரடி வீதியில் இருந்து ஆரம்பிக்கிறோம்.  கோவிலின் முகப்பு வாசலைக் கடக்கும்போது ஒரு கும்பிடு போட மறக்கலை. முதல் லிங்கமா இருப்பது இந்திர லிங்கம். கடைவீதியிலேயே இருப்பதால் பார்க்கிங் பிரச்சனை காரணம், அப்புறம் பார்க்கலாமுன்னு சொன்னோம்.  ஆதிகாலத்துலே இந்திரன் வந்து பூஜித்த சமயம் இங்கே கடைவீதி இருந்துருக்காது. இப்ப சந்நிதியை மறைச்சுட்டு கடைகளோ கடைகள்.
கிரிவலம் போக சில நியமங்கள் இருக்குன்னும், முதலில் பூதநாராயணரை வணங்கி அவரிடம் உத்தரவு வாங்கிக்கிட்டுக் கிளம்பணும் என்றெல்லாம் இருந்தாலும், அதெல்லாம் ப்ராப்பரா பௌர்ணமிக்கு  நடந்தே கிரிவலம் போகும் பக்தர்களுக்குத்தான்னு நானே ஒரு சமாதானம்  சொல்லிக்கிட்டேன்.

காரில் கிரிவலம் என்றதால்  ரன்னிங்லே இருக்கும்போது  இடதுபக்கம் இருக்கும் கோவில்கள், காட்சிகள் எல்லாம்  என் கெமெராவுக்கும்,  வலப்பக்கம் இருப்பவை 'நம்மவர்' செல்ஃபோனிலுமா பாகம் பிரிச்சாச்சு.
ஒரு  புள்ளையார் கோவில். ஓம் ஸ்ரீஅக்னி விநாயகர் ஆலயம்! வித்யாசமான மண்டப அமைப்பில்.   (பழைய மண்டபத்தைத்தான்  இப்படி மாத்தி வச்சுருக்காங்க!)  புள்ளையாரைவிட அவருடைய  மூஞ்சூறு அட்டகாசம்.
பிரமாண்டமான பெருச்சாளியா ஒரு ஆசனத்துலே  உக்கார்ந்துருக்கு!   சந்நிதியில் ரெண்டு சீன Laughing Buddha சிலைகள் !  (சீனா எதுவரை வந்துருக்குன்னு பாருங்களேன்! )
நம்ம சாமி உருவங்களை எவ்ளோ அட்டகாசமா, அருமையா செய்யறாங்கன்னு தெரியுமோ?  நம்ம வீட்டுலே இருக்கும் சாமி 'பொம்மை'கள்  முக்கால்வாசி சீனத்தயாரிப்புகளே!  சிங்கையில் வாங்கியவை!


அஷ்டலிங்கத்தில் ரெண்டாவது அக்னி லிங்கம். பாதையின் வலப்பக்கத்தில் கோவில். கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கு.  அஷ்டலிங்கங்களுக்கும் பெயர், விவரங்கள் எல்லாம் அருமையாப் போட்டு வச்சுருக்காங்க என்பதால்,  பூசாரிகள் யாரும் அங்கே  இல்லைன்னாலும் நமக்கு விவரங்கள் கிடைச்சுருது.
சந்நிதி வாசலில் செல்லம் இருந்தது.  பிஸ்கட் முதல் போணி இவருக்குத்தான்:-)
தொட்டடுத்து  சாலை ஓரமாவே ஒரு கோவில். வெளியில் மூலவரைப் பார்த்தாப்போல  ஒரு யானை!  முழங்கால் போட்டு உக்கார்ந்துருக்கு! அதைச் சுத்தி எலுமிச்சம்பழச் சிதறல் .....   திருஷ்டி கழிச்சுப் போட்டுருக்காங்களோ?
யானைக்குப்பின்னால் சூலங்கள் நட்டுவச்சு அதுலே எலுமிச்சம்பழங்களைக் குத்திவச்சுருக்காங்க. அதான்  .....  யானைன்னதும் இறங்கிப்போய்ப் பார்த்தேன்:-)
எல்லைக்காளியம்மன் ஆலயம் இது. கோவிலுக்கு வலப்பக்கம்  ஏழு மாடங்கள்!  சப்தமாதாக்களோன்னு நினைச்சுக் கிட்டப்போனால்.....  நாகர், அம்மன்னு  வெவ்வேற  சிலைகள்.

அடுத்து ஒரு தக்ஷிணாமூர்த்தி கோவில்.  விமானம் எல்லாம் வச்சு அழகா இருக்கு. அழகைக் கெடுக்கறமாதிரி ஸின்டெக்ஸ் டேங்க் .... ப்ச்...

எதிர்வாடையில் ஸ்ரீ ரமணாஸ்ரமம்.  உள்ளே போகலை....
ரொம்பப்பக்கத்துலேயே யோகி ராம்சுரத்குமார் (விசிறி சுவாமி) ஆஸ்ரமம்.  பெயர் பார்த்ததும்   நம்ம பாலகுமாரன் நினைவு வந்தது உண்மை. சத்குரு சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஸ்ரமமும் இங்கே பக்கத்துலேதான் இருக்காம். அங்கே இருபத்தியிரண்டு மகான்களின் ஜீவசமாதி இருக்குன்னு கேள்வி.
கிரிவலப்பாதையில் அடிக்கு ஒரு ஆஸ்ரமம், கோவில்னு வரிசைகட்டித்தான் நிக்குது.  இறங்கி இறங்கி ஏறுவதைவிட நடந்து போயிட்டால் நல்லது. பதினாலு கிமீ என்றதுதான் கொஞ்சம் பயங்காட்டிருச்சு :-)
சொர்கரதம் ஒன்னு சூப்பர்!


அஷ்டலிங்கத்தில் மூணாவது  எமலிங்கம்!   அட! என்ன பொருத்தம் பாருங்க!  கோவிலைத் தொட்டடுத்து சமாதிகள் வேற !


பாதையின் அடுத்தே குடியிருப்புகள் இருக்கு....  சில இடங்களில் மட்டும்  சாலையின் ரெண்டு பக்கமும் மரங்கள்  இருக்கு.  முழுச்சாலையும் இதே போல மரங்களுக்கிடையில் அமைச்சுருந்தால்  இன்னும் அழகாக இருக்கும்தான்!

துர்வாசருக்குக்கூடக் கோவில் ஒன்னு !  (த்வார்காவில்  கிருஷ்ணன் கோவிலில் துர்வாசரைப் பார்த்தபின் இங்கேதான் மறுபடியும்......
நம்மாட்கள் ஏராளம்  :-) குழந்தையும் குட்டியுமாத் திரியறாங்க. கொஞ்சம் பிஸ்கெட்ஸ் அவுங்களுக்கும்.


நாலாவதாக நிருதி லிங்கம் கோவில்.  இங்கிருந்து பார்த்தால் மலையில் நந்தி முகம் தெரியுமுன்னு சொன்னதும் பார்த்தோம்.


அஷ்டலிங்கத்தில் நாலு தரிசனம் இதுவரை ஆச்சு. பாதி கிரிவலம் வந்தாச்சுல்லே?  இனி மீதி கிரிவலத்தை  அடுத்த பதிவில் பார்க்கலாம். இப்பவே பதிவு நீண்டுதான் போயிருச்சு.....

தொடரும்......... :-)


15 comments:

said...

திருவண்ணாமலை தரிசனம் இந்த வருடம் ஜூன் மாசம் எங்களுக்கும் கிடைத்தது ...

கிரிவலம் ஒரு தடவை போகணும் ...இப்போ உங்க கூடவே பார்க்குறேன்..

said...

நந்தி முகம் அட்டஹாசமா வந்திருக்கு. இதுவரை பார்த்ததில்லை. எல்லா முக்கிய கோவில்கள், நகரங்கள் இப்போ 'பிஸினெஸ் செண்டராகப் போய்விட்டன'. தொடர்கிறேன்.

said...

இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு போனிகளா அம்மா ?

said...

படங்களும் அருமை நாமும் கிரிவலம் வந்ததுபோல உணர்வு . அண்ணாமலையை நினைத்தாலே முக்தி நீங்கள் எங்களை முக்திக்கு வழி செய்து கொடுக்கிறீர்கள்

நன்றி அம்மா

said...

கிரி வலப்பாதையில் ஒரு இடத்திலிருந்து ஒரு மலை முகட்டில் நந்தியின் தலை மாதிரி தெரியும் என்று சொல்ல நினைத்தேன் ஆனால் அதன் படம் பார்த்து சும்மா இருந்திருக்கலாம் சொல்ல நினைத்ததை சொல்லாமல் விடலாமா

said...

உங்களுடன் நாங்களும் வலம் வந்துகொண்டிருக்கின்றோம், நிறைவான மனதோடு.

said...

மிக அருமை. நன்றி.

said...

ஆகா! கிரிவலம் வந்துவிட்டோம். நமக்கும் பிடித்த இடம்.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.


பௌர்ணமி நாளில் நல்ல கூட்டம் இருக்கும். நின்னு நிதானமாப் போய் வாங்க.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அதெப்படி 'சுட்ட' படம் மட்டும் டான் னு கண்ணுக்குத் தெரிஞ்சுருது :-) எனக்குக் கிடைச்ச கோணத்தில் தலையின் பின்பக்கம்தான் என்பதால் கோவில் பக்கத்தில் இருந்து எடுத்தேன்.

இப்ப எல்லாக் கோவில்களிலும் பணம்தான் பிரதானம்!

said...

வாங்க செந்தில்பிரசாத்.

இடுக்குலே மாட்டிக்கிட்டா வம்புன்னு போகலை!

முக்தி எல்லோருக்கும் கிடைக்கட்டும் என்றுதான்..... நல்லதுதானே?

said...

வாங்க ஜிஎம்பி ஐயா!

சொல்ல நினைத்ததை சொன்னது நல்லதே!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வருகைக்கு நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி!

said...

வாங்க மாதேவி!

நன்றிப்பா !