Sunday, December 23, 2018

அண்ணாமலையார்........ !!!!! (பயணத்தொடர், பகுதி 45 )

எனக்குமே பழசெல்லாம் மறந்து போய், இப்போதான் முதல்முதலாப் பார்க்கற மாதிரியே இருக்கு!  பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்தியதும் இறங்கிப்போறோம்.  ஏராளமான மாடுகள்  அங்கங்கே  உக்கார்ந்து அசைபோட்டுக்கிட்டு இருக்குதுகள். நந்தி தரிசனத்துக்கு வந்தவையோ?
இது ராஜகோபுர வாசல்தான். பதினொரு நிலை ராஜகோபுரம் கம்பீரமா உயர்ந்து நிக்குது.   கோபுரவாசலின் முழு அழகையும் பார்க்க முடியாமல்  கடைகளின் பின்புறம்தான்  கண்ணில் படறது.   ப்ச்.....
மணி இப்போ அஞ்சே முக்கால்.  சாயரக்ஷை பூஜை எப்போன்னு பார்க்கணும்....   கோபுரத்துக்குக் கணபதிக்கு ஒரு கும்பிடு.
கோவிலைக் கட்டிய  மன்னர்  கிருஷ்ணதேவராயர் சிலை!
கோவிலை ஒன்பதாம் நூற்றாண்டு சோழர்கள் (முதலாம் ஆதித்யன்  & பராந்தக சோழன்) ஆகியோர் கட்டி இருக்காங்க.  அதன்பின் ஹொய்சளா மன்னர்கள்  பல்லாளதேவன்,   விஜயநகர மன்னர் ஆட்சியில் கிருஷ்ணதேவராயர் என்று பல மன்னர்கள்  விரிவுபடுத்தி இருக்காங்க!

கோபுரவாசலைக் கடந்து உள்ளே போறோம்.  கண்முன்னே கொஞ்ச தூரத்தில் அழகான இன்னொரு கோபுரம்!  கோவிலுக்கு  பேக் ட்ராப்,  மலையேதான்!
நம் வலது பக்கம் ஆயிரங்கால் மண்டபமா இருக்கணும்.  கம்பிகளால் அடைச்சு வச்சுருக்காங்க. இடதுபக்கம்  தனித்தனியா சந்நிதிகள்.
  இந்தப் பயணத்தில் , நம்ம ட்ரைவர் ரமேஷ் .
இந்தாண்டை ஒரு திருக்குளம். சிவகங்கைத் தீர்த்தம். தொட்டடுத்து சிவகங்கை விநாயகர்.கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண மண்டபத்துக்குப் பக்கத்துலேயே வளைக்காப்பு  மண்டபம் !  உடனேவா?  இந்தியாவின் ஜனத்தொகைக்குக் காரணம் இப்படிபட்ட அவசரம்தான்....
முதல் சந்நிதி முருகனுக்கு!   கம்பத்திளையனார்  என்று பெயர்! !  அருணகிரிநாதருக்குக் கம்பத்தில் காட்சி கொடுத்த இடம்!


அதுக்கு அந்தாண்டை சம்பந்தப்பிள்ளையார் !  நல்ல பெரிய உருவம்!  வடக்கே ஆஞ்சிக்குச் செந்தூரம் பூசுவாங்க பாருங்க... அதைப்போல புள்ளையாரும் பூசிக்கிட்டு இருக்கார்!  சம்பந்தாசூரன் என்னும் அரக்கனை வதம் செய்ததால் இந்தப் பெயராம். அடப்பாவமே அவனை அழிச்சுட்டு, அவன் பெயரைத் தனக்கு வச்சுக்கலாமோ? இப்பப் பாருங்க...... இவரைப் பார்க்கும் போதெல்லாம் அசுரன் கதை நினைவுக்கு வரும்தானே? என்னமோ போங்க..... அசுரனை மனசில் இருந்து தூக்கி எறியாமல்... இப்படி... ப்ச்....

சந்நிதி கொஞ்சம் உயரமா மண்டபம் போல இருந்துச்சு. நான் மண்டபத்தாண்டை போய், கண்மூடி  மனசில்  தியானிச்ச அந்த நொடியில்,  என் கழுத்தில்  யாரோ கை வச்ச மாதிரி  ஒரு உணர்வு. புள்ளையார்தான் தும்பிக்கையை நீட்டித் தொட்டாரோன்னு திகைச்சுக் கழுத்தைத் தொட்டுப் பார்த்தேன்,  கழுத்தையொட்டித் தோளில்  ஒரு மாவிலை!   கண்ணை உயர்த்திப் பார்த்தால்.... மண்டபத்தில் கட்டிவிட்டுருக்கும் மாவிலைக்கொத்து தோரணம். அதில் இருந்துதான் வந்துருக்கும் போல!  இது புள்ளையாரின் ஆசிகள்னு ஒரு எண்ணம் தோணியது உண்மை!
இன்னொரு முருகனும் இருக்கார், கோபுரத்திளையனார்! கோவில் பூரா அங்கங்கே தனித்தனி சந்நிதிகளில் அண்ணனும் தம்பியுமா பல பெயர்களில் இடம்பிடிச்சு உக்கார்ந்துருக்காங்க!
 அருணகிரி(நாதர்) வாழ்க்கையில் மனம் வெறுத்து, (ஆடற ஆட்டமெல்லாம் ஆடி முடிச்சுட்டுத்தான்)   வல்லாளக் கோபுரத்தின் மேலே ஏறி, அங்கிருந்து கீழே குதிச்சுத் தற்கொலை பண்ணிக்கத் தயாரான போது, முருகன் அவரைத் தடுத்து ஆட்கொண்டாராம். அதுக்குப்பின்தான்  திருப்புகழ் பாடி இருக்கார். அதில் எழுபத்தியொன்பது பாசுரங்கள் (பதிகமுன்னு சொல்லணுமோ? )  இந்த முருகனைப்பற்றித்தானாம்! அந்த நிகழ்வையொட்டி, இந்த சந்நிதிக்கு இப்படி கோபுரத்திளையனார் என்ற பெயர்.

இன்னொரு சந்நிதியும் பிச்சை இளையனார் என்ற பெயரில் இருக்காம். நாம் அங்கே போகலை... இருட்டிவேற போச்சு....  கோவில் பற்றிச் சொல்ல யாரும் கிடைக்கலை.  ஹோம்ஒர்க் வேற பண்ணாமல் போயிருந்தேன்..... (ஒரு டீச்சர் செய்யற வேலையா இது? )  ஏகப்பட்ட சந்நிதிகளை தரிசிக்கலை.  இந்தக் கோவிலுக்கு நல்ல பகல் நேரத்தில் வந்துருக்கணும். நின்னு நிதானமாப் பார்க்க வேண்டிய கோவில் இது.  அரை இருட்டில் பார்க்கும் வகை, இல்லையாக்கும். பார்க்கலாம்.... இன்னொரு முறை வாய்க்குமான்னு......   ஒருநாள் காலையில் கோவிலுக்கு வந்துட்டோமுன்னா  நிம்மதியாப் பார்க்கலாம்தான்.

தனியா உயரமா இருக்கும் மண்டபத்தில் பெரிய நந்தியார்!  உக்கார்ந்துருக்கார். வழக்கமான ஸ்டைல்தான்,  ஆனால்  இடதுகாலை மடிச்சுக்குந்தாம, வலதுகாலை மடிச்சுக்கிட்டு ஒரு போஸ்!  (அதானே எத்தனை யுகம், ஒரே காலை மடிச்சுப்போட்டு உக்கார்றது?  மரத்துப்போகாதோ? )
ஆமாம்.... நந்திமண்டப விமானத்துலே யார் தெரியுமோ?  எம் பெருமாள், சங்கு சக்ரத்தோட............  ஆஹா.....

பெருமாளுக்கும் ஒரு தனிச்சந்நிதி இருக்காமே!  அப்புறம்தான் தெரிஞ்சது. இன்னொருக்காப் போயே ஆகணும் போல :-)

கண்ணில் தெரியும் சந்நிதிகளையெல்லாம் தரிசனம் செஞ்சுக்கிட்டே ஒரு  மண்டபத்துக்குள் போயிருந்தோம். லேசா மசமசன்னு.... இருட்டு.  அதுக்குள்ளே போகும் வழியில் நட்டநடுக்கா... நந்தி உக்கார்ந்தாப்போல.... சிவலிங்கம்.  வெறும் லிங்கம் மட்டும்தான். ஒரு வேளை வெறுங்கல்லாக்கூட  வச்சுருக்கலாம்.  மனசுலே சிவலிங்கமுன்னு தோணிப்போச்சு எனக்கு..... அவர் கோவில், அவரே அங்கும் எங்குமென நிறைஞ்சுருக்க மாட்டாரா என்ன?


ப்ரம்ம தீர்த்தக்கரையில் செல்லங்கள் ரெண்டு. பிஸ்கட் சமர்ப்பியாமி....அததுக்குத் தனி மண்டபங்கள். ஆழ்ந்த தூக்கத்தில் அங்கே ஒவ்வொருவர்....    சிவன் மேல் பாரத்தைப் போட்டவுடன், தூக்கம் வந்துருது போல!  நம்மாளின் இடம் காலி.... பகலில் சம்பாரிச்சுக் கொடுத்துட்டுத்தான் ஓய்வெடுக்கப் போயிருக்கணும்.....னு நினைச்சேன். அப்புறம் விசாரிச்சதில் ஒரு  துக்க சேதி.  கோவில் யானை ருக்கு, இப்ப ஒரு மூணரை மாசம் முன்னே .... சாமிகிட்டே போயிருச்சாம்.  'அம்மா' தந்த யானையாம்!  ப்ச்....  பாவம்....
கோவில் மாடல் கண்ணாடிப்பெட்டியில்!  ரொம்ப நல்லது..... மொத்தமும் சுத்த நேரம் ஏது? இப்படிப் பார்த்தால்தான் உண்டு!  எத்தனை கோபுரங்கள்? ஹைய்யோ!!!

அடுத்த பகுதிக்குள்ள படிகளேறி இன்னொரு மண்டபத்துக்குள் நுழைஞ்சு வலப்பக்கமாப் போறோம்....  உள்பிரகாரம் சுற்றல்.... அப்படியே பக்கவாட்டு வாசலுக்கு வந்துருக்கோம்..... ஒரு கோவில் ஊழியர், 'சீக்கிரம் இந்தப்பக்கம் வாங்க.... திரை போடப் போறாங்க'ன்னார்.  சட்னு நுழைஞ்சு போனால்.....  ஐயன்..... அபிஷேகம்..... நிர்மால்ய தரிசனம்!  சின்னதா ஒரு காவியை இடுப்பில் (!) சுற்றிக்கிட்டுக் குளிக்கிறார், அபிஷேகப்ரியர்!  ஒரு ருத்திராக்ஷ மாலை மட்டுமே கழுத்தில் (!)

அடிமுடியைக் காண்பிக்காம பிரமாண்டமான விஸ்வரூபம் எடுத்தவர், சின்ன உருவமா  முடி(!) காமிக்கிறார் நமக்கு!  தேவரும் மூவரும் காணாத ......    ஏன் சிவனே தன்னுடைய தலையைப் பார்த்துருக்க முடியுமோ?   அடியை வேணுமுன்னா குனிஞ்சு  பார்த்திருப்பார். முடி?  ப்ரம்மாவும் பார்க்க முடியாத  தலை!  எனக்கு மனசுக்குள்ளே எப்படியோ ஆகிப்போய் கண்ணுலே  ஜலம் வச்சுண்ட்டேன் !

அண்ணாமலையார், அருணாசலேஸ்வரர்.....  இங்கே அக்னி வடிவில் இருக்கார் என்பது ஐதீகம். அதான் கார்த்திகை தீபத்தன்னிக்கு, மலையில் விளக்குக் கொளுத்தியாறது! எங்க தாய் (தாடி)மாமா கதை சொல்றதில் கில்லாடி !  எதையும் தெரியாதுன்னு   சொல்லமாட்டார். எல்லாத்துக்கும் ஒரு கதை இருக்கும், அவரிடம்.  சின்னப்பிள்ளையா நிறைய கேட்டுருக்கேன். ஒரு சமயம் கார்த்திகை தீபத்திருநாளில்  மலையில் விளக்கு ஏத்தறதைப் பத்திச் சொன்னார். இன்னும்  என்  மனசுலே இருக்கும் பண்டோரா பாக்ஸில் இருக்கு. தேவையான நேரம் டக்னு வெளியே வரும் :-)

டின் டின்னா நெய் எடுத்துக்கிட்டு மலை மேலே ஏறிப்போவாங்க. ரோடெல்லாம் இல்லை.  காட்டுவழி போலத்தான். மேலே பெரிய கொப்பரை ஒன்னு இருக்கு. அதுலே இந்த நெய்யை நிரப்பிட்டு, ஒரு பீஸ்  காடாத்துணியை (20 கஜம் = ஒரு பீஸ்) நீளமா திரி போலச் சுருட்டி அந்த நெய்யில் ஊறப் போட்டுருவாங்க. இதெல்லாம் ஒரு நாலைஞ்சு நாளைக்கு முன்னாலேயே ஆரம்பிச்சுரும்.  இன்னும் ஏராளமான நெய் டின்களையும் கொண்டு வந்து வச்சுக்கிட்டு, திரி ஊற ஊற ஊத்திக்கிட்டே இருப்பாங்க. கொப்பரைக்கு முன்னால் சுத்திவர தகரத்துலே மறைப்பு வச்சு வுட்டுருப்பாங்க. தீபத்திருநாள் மதியம்  அந்தத் திரியைப் பெரிய பந்தம் வச்சுக்கொளுத்துவாங்க.  தடித்துணியில் தீ பத்திக்கவே  ரொம்ப நேரம் ஆகும்.  அது காத்துலே அணையாம நின்னு எரியும்வரை  பந்தம் வச்சுக்  கொளுத்தும்  வேலை நடக்கும்.

அதுக்குள்ளே சாயங்காலம்  இருட்ட ஆரம்பிக்கும்போது,  கோவிலில் பூஜை மணி அடிக்கத் துவங்கும். (எதோ சிக்னல் கொடுப்பாங்க போல.... அந்தக் காலத்துலே செல்ஃபோனா என்ன?)  அப்போ, மறைப்புக்கு வச்சுருக்கும் தகரத்தை எடுத்துருவாங்க.  உயரமா  ஜோதி எரியும் பாருங்க..... கீழே கோவில் முற்றத்துலே   அடைச்சு நிக்கும் சனக்கூட்டம் ஜோதியைப் பார்த்து ஆர்ப்பரிச்சு, அண்ணாமலையாருக்கு அரோஹரான்னு  கூவறது மலைக்குக் கேக்கும். இந்தத் தீ சுத்திவர இருக்கும் எல்லா ஊர்களும் தெரியும்! அவ்ளோ உயர மலை! கிட்டத்தட்ட ரெண்டாயிரத்து எழுநூறு அடி உயரம் !  ஜோதி பார்த்துட்டு,  அந்தந்த ஊர் சனம் வீட்டுலே விளக்கேத்துவாங்க.

டின்டின்னா நெய்யை ஊத்திக்கிட்டே இருப்பாங்க. மூணு நாள் தொடர்ந்து  ஜோதி எரிஞ்சுக்கிட்டே இருக்கும்!

நாங்கெல்லாம்,  பிள்ளைகள் மட்டுமில்லாம எங்க சித்திகள், சின்ன மாமாக்கள், பாட்டி உட்பட எல்லோரும் 'ஆ'ன்னு வாயைப்  பொளந்தபடி பெரியமாமா சொல்றதைக் கேட்டுக்கிட்டு இருப்போம்!

ஆமா எதுக்கு  இந்தத் தீ? அக்னியா இருக்காருல்லே அதுக்கடையாளமாத்தான்.  கதை உங்களுக்கெல்லாம் தெரிஞ்சுதான் இருக்கும். ஆனாலும் 'சுருக்' னு சொல்லி வைக்கிறேனே.... ப்ளீஸ்...

ஒரு சமயம், ப்ரம்மாவுக்கும், மஹாவிஷ்ணுவுக்கும் தம்மில் யார் பெரியவர்னு ஒரு வாக்குவாதம் வந்துருக்கு.  உண்மையில் பெருமாளின் கொப்பூழ்த்தாமரையில் பிறந்தவர் ப்ரம்மா என்பதால்  அவர் பெருமாளின் பிள்ளை என்ற இடத்தில்தான் இருக்கார்.  அப்பனுக்கும், பிள்ளைக்கும் இந்தப்போட்டி தேவையா?  (இப்பத்துப்பிள்ளைங்க தாய்தகப்பனைவிடக் கொஞ்சம் அதிகம்  படிச்சுட்டு ஆடுதுங்க பாருங்க.....  அதுக்கு இதுதான் முன்னோடி!)
 மொத்தமே மூவர்தானே இருக்காங்க.  அதில் இந்த  இருவரும் மூணாவதுகிட்டே நியாயம் கேக்கப்போனாங்க.  சிவலோகம்.  எங்க ரெண்டுபேரில் யார் பெரியவர்னு நீங்களே சொல்லணுமுன்னு விண்ணப்பிக்க....   ( பெருமாள் நினைக்கிறார்....  என்ன இருந்தாலும் நான் மச்சான் இல்லையோ .... என்னைத்தான் சொல்வாரா இருக்கும்! )

சிவன் ரொம்பவே நியாயஸ்தர். நல்ல நீதிபதி..... இப்ப மாதிரி  காசுக்காக சைடு வாங்கறவர் இல்லையாக்கும்... ..

'ரெண்டு பேருக்கும் பொதுவா நான் நடுவிலே  பூமிக்குள்ளே என் பாதம்  மறைய நிக்கறேன்.  உங்களில் ஒருவர் என்னுடைய தலையைப் போய்ப் பார்த்துட்டு வரணும். மற்றவர் என்  பாதம் கண்டு வர வேணும். யார்  போய்ப் பார்த்துட்டு வந்து சொல்றாங்களோ அவரே பெரியவர்' னு  சொல்லிட்டார்.  உம்.... இப்ப  யார் அடி, யார் முடின்னு   உங்களுக்குள் தீர்மானம் செஞ்சுக்குங்க....

பெருமாள் சட்னு சொன்னார் 'நான் அடி பார்க்கப்போறேன்'  இதுலே ஒரு கேட்ச் உண்டு கேட்டோ...  ஏற்கெனவே வராஹ அவதாரத்தில் பரபரன்னு பூமியைத் தோண்டுன அனுபவம் இருக்கே!  மேலும், காலடி பார்க்கிறேன்னு சொன்னதும் 'நான் ரொம்ப அடக்கமானவன், அகங்காரம் இல்லை'ன்ற  நல்ல பெயரும் போனஸாக் கிடைக்குமே!

ப்ரம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். அன்னவாஹனத்தில் ஏறிப் பறந்தால்.... நொடியில் போய்ப் பார்த்துட்டு ரிட்டர்ன் ஆகிடலாம்!

ரெண்டுபேரும் அவுங்க வேலையைப் பார்க்க ஆரம்பிச்சாங்க.   சிவனும்  ஜோதி மயமா விஸ்வரூபம் எடுத்துக்கிட்டே போறார்!  விஷ்ணு தோண்டிக்கிட்டே போறார்.... எல்லா உலகமும்  கடந்து போய்க்கிட்டே இருக்கார்.........

முடியை நோக்கி அன்னம் ஜிவ்னு பறக்குது. மேலே மேலே போய்க்கிட்டே இருக்காங்க. ஆல்ட்டிட்யூட்  அதிகமாகிக்கிட்டே  இருக்கே தவிர  உடம்பு முடிஞ்சு கழுத்து வர்ற பாடேக் காணோம். எப்ப கழுத்து வர்றது? தலை எப்பத் தெரியறதுன்னு...... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்   அப்பாடா.....  பாவம் அந்த அன்னப்பறவை.....  வராஹமாவது  தான் மட்டுமே மூச்சிரைக்கத் தோண்டுது. இங்கே ப்ரம்மாவையும் சுமந்துக்கிட்டுத் தானும்  மேலே பறக்கணுமுன்னா.....   ரெக்கையெல்லாம் வலி பிடிங்கி எடுக்காதோ?

காலம் கடந்து போய்க்கிட்டே இருக்கு.... அப்போ மேலே இருந்து பூமியை நோக்கி என்னமோ வருது.....  என்னவா இருக்குமுன்னு  ப்ரம்மாவுக்கு யோசனை. கிட்டக்க வந்தாட்டுப் பார்த்தால் அது ஒரு தாழம்பூ !   அட!  எங்கிருந்து வருகிறாய்?  கேட்டதுக்கு பதில் சொல்லுது தாழம்பூ.  'சிவன் தலையில் இருந்தேன். தூக்கத்துலே ரொம்ப ஓரமாப் போயிட்டேன் போல... தடக்குன்னு விழுந்துட்டேன். அதான் கீழே கீழேன்னு போய்க்கிட்டே இருக்கேன்.'

ப்ரம்மாவுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி!  தலையாண்டை வந்துட்டோம்.... இன்னும் கொஞ்சம் மேலே போனால் போதும்.... ஹப்பாடா.....

"அதுசரி, எவ்ளோ நேரமா வந்துண்டுருக்காய்? "

"நேரமா..... ?  ஹா.....  அது இருக்கும் ஒரு நாப்பதாயிரம் வருசங்கள்!  இன்னும் எவ்ளோ தூரம் விழணுமோ... தெரியலையே.....

ஙே........

ப்ரம்மாவுக்கு வயித்துலே புளிக்கரைச்சல்.......  ஐயோ.... இது நடக்கற காரியம் இல்லை.......  பேசாம தாழம்பூவாண்டை பேசிச் சரிக்கட்டலாம்னு டக்னு ஒரு யோசனை....
தாழம்பூ அவர்களே  ( காரியம் ஆகணுமேன்னு ஏகப்பட்ட மரியாதை...) எனக்காக ஒரு  சின்ன, தக்குனூண்டு பொய் சொல்வீரா?

தாழம்பூ பதறிப்போச்சு....  "ஐயோ... பொய்யா?   என்னாலே ஆகாது..... வழியை விடும். நான் கீழே போகணும்... அந்தரத்துலே என்னால்  ரொம்ப நேரம் நிக்க முடியாது."

"அட..  பொறுப்பா.... உனக்கு என்ன வேணுமுன்னாலும் நான் தரேன்.......  (முதல் லஞ்சம்! ) நீ வாயத் தொறந்துகூட ஒன்னும், ஒரு சொல்லும் சொல்ல வேணாம்.  ச்சும்மா  லேசாத் தலையை ஆட்டுனாப் போதும்.  என்ன சொல்றே?   நான் எல்லாத்தையும் பேசிக்குவேன்.  நான் சொல்லிட்டு, உன்னைப் பார்க்கும்போது  தலையை ஒரு ஆட்டு. அம்புட்டுதான்.  இப்பப் பாரு... நீ என் மடியில் வந்து உக்கார்ந்துக்கோ. நாம் டபுள்ஸ்லே கீழே போயிடுவோம் "

போரடிச்சுக்கிட்டுக் கீழே போகாமல், ஜாலியா அன்னக்கார்லே போயிடலாமேன்னு  தாழம்பூவுக்குச் சபலம்.  அந்த நொடித் தயக்கத்துலே  ப்ரம்மா,  தன் மடியிலே தூக்கி  வச்சுக்கிட்டு, அன்னத்தைக் கீழே புறப்பட்ட இடத்துக்குப் போன்னார்.

வர்ற வழியில் தன் திட்டத்தைத் தாழம்பூவுக்குச் சொல்லி விளக்கினார்.  'நான் சிவன் தலையைப் பார்த்துட்டேன். அப்போ முடியில் இருந்த உன்னை, என் சாட்சிக்காகக் கூட்டிக்கிட்டு வந்தேன்' னு சொல்லிட்டு,  ஆமாவா இல்லையான்னு உன்னாண்டை கேப்பேன். நீ லேசா தலையை ஆமான்னு ஆட்டுனாப் போதும்.  இடமும் வலமுமா ஆட்டிடாதே.....  ஸோ...  சிம்பிள்! சரின்னு தலையை ஆட்டுச்சு தாழம்பூ.  வெரி குட். இப்பத் தலையை ஆட்டுனே பாரு... அதேதான். அங்கெ வந்து இன்னொருக்கா ஆட்டு. அம்புட்டுத்தான். 'ஒன்னேமுக்கால் லக்ஷம் கோடி' உனக்கே!

கீழே தோண்டிப்போன வராஹம்....  கையிலே இருக்கும் நகமெல்லாம் கரைஞ்சு  விரலே ரத்தக்களறி ஆகி, வலி பொறுக்க முடியாமப்போனதும்.....   இனிமேல் நம்மால் ஆகாது.  பேசாமத் திரும்பிப்போய் நம்ம தோல்வியை ஒத்துண்டால் ஆச்சுன்னு மேலே வர்றார்.  மனசுக்குக் கொஞ்சம் பேஜாராத்தான் இருக்கு.... போயிட்டுப்போகுது.... புள்ளைதானே ஜெயிக்கப்போறான்... னு  சமாதானம் சொல்லிக்கிட்டே  வந்து சேர்ந்தார்.

ரெண்டு பார்ட்டியும் வந்ததும், சிவன் பேக் டு நார்மல்.  என்ன மச்சான்.... பாதம் கண்டீரோ?  இல்லை மச்சான்.  என் கைகாலைப் பாரும்..... உருத்தெரியாமத் தேய்ஞ்சு போனதுதான் மிச்சம்.  ஐ அக்ஸெப்ட் மை டிஃபீட்.

என்னப்பா ப்ரம்மா? நீர் எப்படி? முடிகண்டீரோ?

ம்ம்ம்  ம்ம்ம்  கண்டேன்.  ரொம்ப நல்லாக் கண்டேன். ரொம்ப அழகான முடி. நிறையப் பூக்கள் அலங்காரம் !  கண்டதுக்கு அடையாளமா ப்ரஸாதம் எடுத்துக்கலாமுன்னு அங்கே இருந்த தாழம்பூவை எடுத்துக்கிட்டேன்.  நான் உன்னை தலையில் இருந்து எடுத்தேந்தானே? ன்னு தாழம்பூவைக் கேக்க அது 'ஆமா'ன்னு லேசாத் தலையை ஆட்டுச்சு!

அவ்ளோதான்..........    சாந்த ஸ்வரூபன் சிவனுக்குக் கோபமும் அதிகம் தெரியுமோ? நெத்திக்கண் இருப்பதை நினைவில் வச்சுக்கணும் நாம்!

  பொய் சொன்ன ப்ரம்மாவுக்கு இனி பூலோகத்தில் கோவிலே இல்லாமல் போகட்டுமுன்னு சொல்லிட்டார்.  ப்ரம்மா எப்பவோ பண்ண சின்ன புண்ணியம் காரணம்  இப்போ புஷ்கரில் ஒரு கோவில் மட்டும் இருக்கு.

பொய்சாட்சி சொன்ன (! ) தாழம்பூவுக்கு, 'இனி என் அருகில் வர்றதுக்கு அருகதையே இல்லை.  கண் முன்னால் நிக்காமல் எங்கியாவது ஒழிஞ்சு போ' ன்னு ஒரு சாபமும் கிடைச்சது. அதுதான் பூஜைப்பூக்களில் தாழம்பூ சேர்த்தி இல்லாமல் போன கதை! (ஒரே ஒரு கோவிலில் மட்டுமே சேர்த்தி !) 

இப்படியாக  அக்னி ரூபம் எடுத்ததால்  இங்கே  கார்த்திகைக்கு ஜோதி ஏத்தும் வழக்கம் வந்ததுன்னு ஒரு ஐதீகம்.

என்ன ஏதுன்னு குறுக்குக் கேள்வி கேக்காமக் கதை வாசிச்சுட்டுக் கூடவே வாங்க.....  இன்னும் கோவிலை நாம் முழுசுமாச் சுத்திப் பார்க்கலை, கேட்டோ... :-)

தொடரும்......  :-)


9 comments:

said...

அருமை நன்றி

said...

வர்ணனை அருமை அம்மா! நேரிலே பார்த்த உணர்வு, கதை சொல்லும் விதமும் அழகு

நன்றி அம்மா

ஒரு தகவல் :தாழம்பூ சேர்க்கும் கோவில் மங்களேசுவரி சமேத மங்களேசுவரர்,உத்திரகோசமங்கை சரியா அம்மா ?

said...

அண்ணாமலையாரும் கார்த்திகை தீபமும் சொல்லில்அடங்கா.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க செந்தில்ப்ரசாத்.

நான் ஒரு கதைசொல்லிதான்! வலையில் அப்படித்தான் இருக்கு என் அடையாளம் :-)


//ஒரு தகவல் :தாழம்பூ சேர்க்கும் கோவில் மங்களேசுவரி சமேத மங்களேசுவரர்,உத்திரகோசமங்கை சரியா அம்மா ?//

ரொம்பச் சரி! போனாப்போகட்டுமுன்னு மன்னிச்சு விட்டுட்டார் மங்களேஸ்வரர்!

said...

வாங்க மாதேவி.

நினைச்சு நினைச்சு முக்தி அடைஞ்சுட்டோம்!

said...

ஆமாம் அம்மா அத்தலம் திருவண்ணாமலைக்கு முன் தோன்றிய தலம்

said...

வள்ளாள மன்னர் ஆட்சியில்தான் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் வழக்கம் தொடங்கியதாகப் படித்திருக்கிறேன். அன்று முதல் இன்றுவரை நெய்விளக்கு ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. சபரிமலையிலும் திருவண்ணாமலை மாதிரியே வெளிப்படையாக விளக்கேற்றியிருக்கலாம். மகரஜோதி என்று பல்லாண்டுகளாக மறைத்து மறைத்து செய்துவிட்டு, நீதிமன்ற வழக்கு என்று வந்தபிறகு உண்மையைச் சொல்லி அதுவரை நம்பியவர்களை முட்டாளாக்கியிருக்க வேண்டியதில்லை.

பிள்ளையாருக்கு செந்தூரம் பூசி திருவண்ணாமலைலதான் மொதல்ல பாத்தேன். அந்தப் பிள்ளையார் உங்களுக்கு மாவிலை ஆசி வழங்குனது சிறப்பு.

அருணகிரிநாதரோட வாழ்க்கை பலவகைல உலகத்துக்குப் பாடம். ஆனாலும் கத்துக்காமலே போயிட்டிருக்கோம்.

ஆயிரங்கால் மண்டபத்தை பகல்ல குறிப்பிட்ட நேரங்கள்ள திறந்துவிடுவாங்களாம். நீங்க இருட்டுற நேரம் போனதாலதான் பாக்க முடியலை. இல்லைன்னாலும் ஆயிரங்கால்களையும் சுத்தி வர்ரதுக்குள்ள தாவு தீந்துரும்.

said...

அண்ணாமலையார் தரிசனம் கண்டேன்....

என்ன அழகா கதை சொல்றீங்க்க் தெரிஞ்ச கதைனாலும் நீங்க சொல்ல படிக்கும் போது ரொம்ப சுவாரஸ்யம் ...