Monday, December 03, 2018

இன்றும் ஒரு பதிவர் சந்திப்பு !!!!! (பயணத்தொடர், பகுதி 40 )

இந்தியாவுக்கு வர்ற விவரத்தை ஒரு ஃபேஸ்புக் குழுவுக்குத் தெரியப்படுத்தி,  நேரமும் வாய்ப்பும் இருந்தால்  ஒரு சிலரையாவது சந்திக்க விருப்பமுன்னு சொல்லி இருந்தேன்.  வீக் எண்ட்ன்னால் பலருக்கு முடியலாம். ஆனால் என்றைக்கு நாம் உள்ளூர்ப் பயணங்கள்  முடிச்சுத் திரும்புவோம் என்று சரியாகத் தெரியாததால்....   சென்னையில் இருக்கும் நாட்களை உறுதிப்படுத்த முடியலை.
ஃபேஸ்புக் பதிவர் தோழி இன்றைக்கு வரேன்னு சொல்லி நேரத்தைக் கன்ஃபர்ம் பண்ணாங்க.  பகல் பனிரெண்டு மணிக்கு  தோழியும் அவருடைய கணவருமா வந்தாங்க. அதுக்குள்ளே நாங்கள் கொஞ்சம் மூட்டை முடிச்சுகளை ஏறக்கட்டும் வேலையில் இருந்தோம்.  மறுநாள் இன்னொரு பயணம் போறதால், இங்கே வச்சுட்டுப்போற பெட்டிகள், நாம் எடுத்துக்கிட்டுப்போகும் பெட்டிகள்னு பாகம் பிரிக்க வேண்டி இருந்துச்சு.

இதுக்கு நடுவில் நம்ம சீனிவாசன், ஏற்கெனவே நம்மாண்டை சொன்னபடி பயணத்துக்கு நம்ம கூட வர்றாரான்னு  தெரியலை. கடைசியில் அவரால் வரமுடியலைன்னும், உடம்பு சரி இல்லாமல்  ஆஸ்பத்ரியில் இருக்காருன்னும் சேதி சொன்னார். அடப்பாவமே.....  முதலில் உடம்பு சரி ஆகட்டுமுன்னு சொல்லிட்டோம்.  சரியான நேரத்துக்குச் சாப்பாடில்லாமல், பொழுதன்னிக்கும் டீ குடிச்சே பொழுதை ஓட்டுறதுன்னு சிலபல பிரச்சனைகள் இந்த ட்ரைவர் வேலையில் இருக்கறதும் உண்மைதானே?  ப்ச்...பாவம்....

நமக்கு வேறொருத்தரை அனுப்புவதா சதீஷ் சொன்னார்.  தென்தமிழ்நாட்டுப் பக்கம் பரிச்சயம் உள்ளவர்தானாம்.

வலைப்பூக்கள் காலத்துலே எப்படி சக வலைஞர்கள் நட்புடன் இருந்தோமோ அதே போலத்தான்  ஃபேஸ்புக் பதிவர்களோடும் ஒரு நட்பு உருவாகி வந்துருக்கு, இல்லையா? தோழியும் அவர் கணவரும் நெடுநாள் நண்பர்கள் போலப் பழகுனது எங்களுக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு!

தோழியிடம் பேசிக்கிட்டு இருந்தப்ப,  அவுங்களுக்கும்  இதே உணர்வுதான்னு சொன்னாங்க.  சந்திக்க வரும் நண்பர்கள் எல்லாம்  சிலபல தீனிகளைக் கொண்டுவந்து கொடுத்துக்கிட்டே இருக்காங்க. நாங்க ரெண்டே பேர்தானே?  எதுக்கு இவ்ளோன்னாலும்  கேக்கறதே இல்லைப்பா..........
அவுங்க கிளம்பிப்போனதும், நாங்களும் ( தேவையில்லைன்னு எனக்குப் பட்ட) ஒரு வேலையாக் கிளம்புனோம். இப்பெல்லாம் என் ஆர் ஐ களுக்கும் ஆதார் கார்டு கொடுக்கறாங்கன்ற சேதியைத் தம்பி மூலம் கேள்விப்பட்டது முதல் 'நம்மவர்' ஒரு கார்டு வாங்கிக்கணுமுன்னு துடிச்சுக்கிட்டே இருந்தார். இங்கே தி.நகர்லேதான் அதுக்கான ஆஃபீஸ் இருக்குன்னதும்,  அங்கே போய் இறங்கினோம்.  முதலில் இடம் அதுதானான்னு தெரிஞ்சுக்கலாமேன்னு ஆட்டோக்காரரைக் காத்திருக்கச் சொன்னதும் நல்லதாப்போச்சு.  அங்கே போனா இப்படி ஒரு அறிவிப்பு ஒட்டி வச்சுருக்காங்க.
அதென்ன 'கோபில் 'டிவியோ? தமிழ்நாடு அரசின் நிறுவனம் இது!!!

அங்கிருந்த ஒருவர், 'கோடம்பக்கம் பவர் ஹவுஸ் பக்கம் இன்னொரு ஆஃபீஸ் இருக்கு. அங்கே போங்க'ன்னார்.  ஆட்டோக்காரர் நம்மை அங்கே அழைச்சுக்கிட்டுப் போறார்.  அங்கேயும் அவரைக் காத்திருக்கச் சொல்லிட்டு, உள்ளே போனோம். இடம் சரி! ஆனால் நாம் போன வேலை அப்படி ஒன்னும்  உடனே நடப்பதுபோல் இல்லை. ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் சொன்னாங்க.  அதுலே ஒன்னு இங்கே கெஸட்டட் ஆஃபீஸர்கிட்டே வெரிஃபிகேஷன் வாங்கித் தரணும். அப்புறம்  மற்ற சாங்கியங்கள் எல்லாம் முடிச்சு,  நம்ம நியூஸி விலாசத்துக்கு ஆதார் கார்ட் அனுப்புவாங்களாம். எப்படியும் ஒன்னரை மாசம் ஆகுமாம்.  நாம் ஊர் வந்து சேர்ந்துருக்க மாட்டோமேன்னு சின்னதா ஒரு கவலை.

இதுக்கெல்லாம்  அங்கே இங்கேன்னு ஓடமுடியாது. அப்படி ஆதார் கார்டு வேணுமா என்ன?  நாந்தான் புலம்பிக்கிட்டே இருந்தேன். என் ஆர் ஐக்குக் கொடுப்பது உறுதின்னா, நியூஸிக்குப்போனபிறகு அப்ளை செய்யலாம், இல்லே? என்னவோ போங்க.....

திரும்ப லோட்டஸுக்கே வந்துட்டோம்.  ஆட்டோக்காரர் அதுவரை என்ன சார்ஜுன்னு பலமுறை கேட்டும் சொல்லாதவர், லோட்டஸ் வாசலில் இறங்குனதும் ஐநூறுன்னார். அப்புறம் நம்மவர், அதெல்லாம் அதிகம் முன்னூறுதான் தருவேன்னு கொடுத்தார். ஆட்டோக்காரர் முகத்தில் புன்னகை :-)

சரி, பேக்கிங்கையாவது முடிக்கலாமுன்னா, ஒரு பெட்டியில் ஸிப் சரியா இணையும் இடத்தில்  பூட்டும் கொக்கி உடைஞ்சு போயிருக்கு. அதை மாத்திக்கணுமுன்னதும் திரும்ப  பாண்டிபஸார் வணிக வளாகம் வந்தோம்.
போனபயணத்துலே இதே மாதிரி ஒரு பிரச்சனை வந்தப்பச் சரி செஞ்சு கொடுத்த இடம் நல்லாவே நினைவிருக்கு! 
அதே பெரியவரிடம்  பெட்டியைக் கொடுத்துட்டு ஒரு  அரைமணி நேரம்  அங்கே இருக்கும் கடைகளைச் சுத்திப்பார்த்துக்கிட்டு இருந்தோம். சுவாரசியமான ஐட்டங்கள் நிறைய இருக்கு அங்கே!
பெட்டியை வாங்கிக்கிட்டுத் திரும்ப  லோட்டஸுக்கு வரும் போது ஒரு நுங்கு வியாபாரம் நடப்பதைப் பார்த்துட்டு, கொஞ்சம் நுங்கும் வாங்கியாச்சு. ஹைய்யோ எவ்ளோ நாளாச்சுல்லே இதையெல்லாம் தின்னு?  தாய்லாந்துலே இருந்து  டின்களில் வரும் நுங்கை அப்பப்ப வாங்கினாலும், நம்மூர் சுவை அதில் இருப்பதில்லை. சக்கரைத் தண்ணியில் ஊறவச்சுடறாங்க.


இன்றைக்கு நமக்கு லஞ்சே நுங்குதான் :-)  அதுவும் தூத்துக்குடி நுங்கு! காமராஜ் கையால்  வெட்டித்தந்தவை!


இனி இன்றைக்கான கடமைகள் வேறென்ன பாக்கின்னு பார்த்தப்ப....   டெய்லர் கடைக்குப் போக வேண்டியது மட்டுமே  வெளிவேலை. கொஞ்சம் ஓய்வுக்குப்பின் சாயங்காலமா நம்ம  வெங்கியை தரிசனம் செஞ்சுக்கிட்டு, அப்படியே நாளையப் பயணத்துக்குக் கூடவே வரச்சொல்லி அப்பீல் பண்ணிக்கணும்.

கோவிலில் அவ்வளவாக் கூட்டமில்லை.  வெள்ளிக்கிழமை அம்மனுக்கோ?  இதுவே சனிக்கிழமைன்னா.....  அவ்ளோதான்.

காலையில் எதாவது புறப்பாடு இருந்ததான்னு தெரியலை.....  பெரிய திருவடியும் யானையாரும்  மாலை  அலங்காரத்தில்!
தரிசனம் முடிஞ்சதும்   முன்பக்கம் பிரகாரத்தில்  பத்துநி மிட் உக்கார்ந்துருந்தோம். தரிசன நேர விபரம் எல்லாம் பக்காவாப் போட்டு வச்சுருக்காங்க.
ஆட்டோ பிடிச்சு நேரா டெய்லர்கடை. மகள் உடுப்பில் சின்னச்சின்ன திருத்தங்கள் செய்யவேண்டியதாப் போச்சு.  அங்கேயே நின்னு வாங்கிக்கணும்.  ச்சும்மாச்சும்மா போறதும் வாரதுமா இருக்க முடியாது.



அதென்ன எப்பப் பார்த்தாலும் கீதா? இன்றைக்கு சங்கீதாவா இருக்கட்டுமே! முப்பது சொன்ன ஆட்டோக்காரர், இறக்கிவிட்டதும் இருவது போதுமுன்னு சொன்னார் !!!  அட!!! 
கூட்டம் அதிகமே!  கல்தோசை, பணியாரம், பாவ் பாஜி(ஸ்ட்ரீட் ஃபுட்டாம்!)ஆச்சு.


இன்னொரு ஆட்டோவில் லோட்டஸ் வந்து சேர்ந்தோம். நல்லா ஓய்வெடுக்கணும்.

காலை ஒன்பதுக்குக் கிளம்பிடணும்.
எல்லாம் ரெடியா இருங்க. ஒரு பத்துப்பனிரெண்டுநாள் ஊர் சுற்றலாம் !

தொடரும்......... :-)



13 comments:

said...

இனிமையான சந்திப்பு. அடுத்ததாக எங்கே என்று தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

said...

அடுத்தடுத்து, பதிவர்கள் சந்திப்பு. மகிழ்ச்சி. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

said...

நுங்கு செம்மயா இருக்கு மா...அப்புறம் அந்த bead work குந்தன் அழகு..

அடுத்த டூர் விடாம படிக்கணும் ...எனக்கு சொல்லிகிட்டேன்

said...

நுங்கு, பணியாரம் - அருமை

said...

சுவாரஸ்யம்.

said...

// எல்லாம் ரெடியா இருங்க. ஒரு பத்துப்பனிரெண்டுநாள் ஊர் சுற்றலாம் ! //

அட்டகாசம். பதிவில் சிறப்போ சிறப்பான வரின்னா இதுதான். இன்னும் பத்து பன்னிரண்டு பதிவுகளாவது எங்களுக்கு கிட்டும். :)

என்னது... டீச்சரும் கோபால்சாரும் இன்னும் என்.ஆர்.ஐயா? நீங்க நியூசி குடிமக்கள் ஆயிட்டீங்கன்னு நெனச்சேன். புதுக்கொடிக்கெல்லாம் ஓட்டு போட்டீங்களே.

நுங்கு கெடாம இருக்க சர்க்கரைத்தண்ணில போட்டிருப்பாங்க போல. அதைவிட எங்க தூத்துக்குடி நுங்கு எவ்ளோ சுவை பாத்தீங்களா!

பணியாரங்களை நான் கடைல சாப்பிடுறதில்லை டீச்சர். மொறுமொறுன்னு எண்ணெய்யா இருக்கு. பணியாரம்னா பஞ்சு மாதிரி இருக்கனும். வீட்ல செஞ்சாதான் அந்தப் பக்குவம். நீங்க வாங்கியிருந்த கல்தோசை படம் பாக்கவே மெத்துன்னு இருக்கு. கூட வடகறி வேற கொடுத்திருக்காங்க.

பாவ்பாஜி பிடிக்கும்னா, அடுத்தவாட்டி நீங்க வர்ரப்போ அடையாறு கங்கோத்ரியில் வாங்கித்தர்ரேன். ரொம்ப நல்லாயிருக்கும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உள்ளூர் சுற்றல்தான் :-)

உங்கூரும் உண்டு !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பதிவுலக சந்திப்புகள் எப்போதும் மகிழ்ச்சியானவைகளே!

said...

வாங்க அனுராதா பிரேம்.

இது குந்தன் வொர்க்கா? வீடுலே அஞ்சாறு லேடீஸ் இருக்கோமே.... யாருக்காவது ஆச்சுன்னு வாங்கினவைகள்தான் :-)

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்.

ஆஹா.... நன்றி !

said...

வாங்க ஜிரா.

பனிரெண்டுநாளுக்குப் பத்துப்பனிரெண்டு பதிவுகள்தானா? டீச்சரைக் 'குறைவா' எடை போட்டுட்டீங்க :-)

நாங்க நியூஸிக்குடிகள்தான். அது ஆச்சு 28 வருஷங்கள். எங்களுக்கு இந்திய அரசு ஓ சி ஐ. கொடுத்துருக்கு. வாழ்நாள் முழுக்க விஸா இல்லாமல் இந்தியா வந்து போகலாம். இந்தியக்குடிகள் போலவே அங்கே தங்கவும் செய்யலாம். எல்லா உரிமையும் இருக்காம், ஓட்டுப்போடுவதைத் தவிர. அப்படியே இருந்தாலும், நம்ம ஓட்டை வேற யாராவது போட்டுருவாங்கதானே?

நம்ம ஊரில் இந்த ஓ சி ஐ. நிறையப்பேருக்குத் தெரியாது. அதுக்குத்தான் என் ஆர் ஐ.ன்னு சொன்னது.

பணியாரம், பாவ்பாஜி,எல்லாம் இங்கே நம்ம வீட்டுலேயே எப்பவும் பண்ணறதுதான். இப்போ பயணத்துலே பொழுதன்னிக்கும் தோசை வேணாமேன்னு ஒரு மாறுதலுக்கு வாங்கினதுதான்.

நீங்க நம்மூட்டுக்கு வரும்போது இவையெல்லாம் செஞ்சு தருவேன் !

said...

// பனிரெண்டுநாளுக்குப் பத்துப்பனிரெண்டு பதிவுகள்தானா? டீச்சரைக் 'குறைவா' எடை போட்டுட்டீங்க :-) //

தப்பு பண்ணீட்டேன் டீச்சர். தப்பு பண்ணீட்டேன். :)

// நம்ம ஊரில் இந்த ஓ சி ஐ. நிறையப்பேருக்குத் தெரியாது. அதுக்குத்தான் என் ஆர் ஐ.ன்னு சொன் //

அதான பாத்தேன். நான் நெனச்சது சரிதான். :)

// நீங்க நம்மூட்டுக்கு வரும்போது இவையெல்லாம் செஞ்சு தருவேன் ! //

நியூசிக்கு ஒரு டிரிப் போட்டுற வேண்டியதுதான்.