Friday, December 07, 2018

ஓம் சக்தி...பராசக்தி.... !!!!! (பயணத்தொடர், பகுதி 42 )

அடுத்துப்போனதும், நாம் இந்த ஹைவேயில் போகும்போதும் வரும்போதும் கணக்கற்ற முறை பார்த்துக்கிட்டே போன இடம்தான். இன்றைக்குத்தான் இதுவும் வாய்ச்சது!
 ஹைவேயில் வலப்பக்கம் வருது கோவில்.  தனி சாம்ராஜ்ஜியம் !  ஆதிபராசக்தி சித்தர் பீடம். ஒன்னு சொல்லணும்....   இந்தத் தனியார் கோவில்களில் முக்கியமாப் பாராட்ட வேண்டியது அப்பழுக்கு சொல்லமுடியாத சுத்தம்!  இங்கேயும்  அப்படியே!




பெரிய தொழிற்சாலைகளில் இருக்கும் ஷெட் போலத்தால்  தகரக்கூரை போட்டு வச்சுருக்காங்க, இவ்ளோ பெரிய இடத்தில்! தெருவை அடைச்சுப் பந்தல் போட்டமாதிரிதான்!

கோவிலுக்குள்ளே மட்டும்  படம் எடுக்க அனுமதி இல்லை. 




(வலையில் சில படங்கள் கிடைச்சது போட்டுருக்கேன்.) 


உள்ளே நுழைஞ்சதும் முதலில்  ஒரு அறை மாதிரி இருக்குமிடத்துக்குள் போனால்.....  ஹைய்யோ!  சப்த மாதாக்கள் ! திறந்த வெளியில் மேற்கூரை இல்லாமல்தான் இருக்கு இந்த சந்நிதி!
ரொம்பவே அருமையா அழகா இதைக் கட்டி இருக்காங்க. 1974 ஆம்  ஆண்டு கட்டியதாம்.  பெரிய சிலைகளும் அலங்காரமுமா ரொம்ப அழகு!

1960களில்  இங்கே இந்த கோவிலெல்லாம் கிடையாது. ஒரு வேப்பமரம் மட்டும் இருந்துருக்கு! வேப்பமரத்துலே பால் வடியுதுன்ற சமாச்சாரமெல்லாம் கேள்விப்பட்டுருப்பீங்கதானே?  இதுக்கு விஞ்ஞானபூர்வமா ஒரு பதில் இருக்குன்னு சொன்னாலும்,  நமக்கெல்லாம் இது தெய்வச்செயல்தான்.

நான் சின்னப்பிள்ளையா இருந்தப்ப இப்படி ஒரு சமாச்சாரம் தேவதானப்பட்டியில் நடக்குதுன்னு வண்டி கட்டிக்கிட்டுப் போய்ப் பார்த்தது நினைவுக்கு வருது. அப்புறம் நாங்கள் ஃபிஜியில் இருக்கும்போது பக்கத்து ஊர் மாரியம்மன் கோவிலில்  வேப்பமரத்துலே பால் வருதுன்னு போய்ப் பார்த்தோம்.

இங்கே மேல்மருவத்தூரில் வேப்பமரத்துப் பால் ஒரு அதிசயம், அற்புதம் என்ற கணக்கில்  ஊர்சனம் மரத்தைச் சுத்திச் சின்னதா வேலிபோட்டுக் காப்பாத்தி இருக்கு!  இந்த வேப்பம்பாலைப் பிரஸாதமா சுவைத்தவர்களுக்கு  உடம்பு நோய் சரியானதையும் பார்த்துட்டு, மரத்தை வழிபடறாங்க.

 பொதுவா வேப்பமரத்தை  மாரியம்மனாக் கும்பிடறது நம்ம முன்னோர்களால் வழிவழி வந்த வழக்கம்தான்.  குழந்தைகளுக்கு அம்மை போட்டால், வேப்பிலையை பரத்தி, அதில் படுக்கவைப்பதும், வீட்டு வாசலில் வேப்பிலைக் கொத்தை சொருகி வைப்பதும்  (அம்மை போட்டுருக்கும் வீடுன்னு அடையாளப்படுத்தத்தான்) வழக்கம்தானே?

இப்படியிருக்க 1966 ஆம் ஆண்டு ஒரு புயல்மழை காலத்தில் மரம் வேரோடு சாய்ஞ்சு விழுந்துருச்சு. அப்பதான் மரத்தடிப் பள்ளத்தில் ஒரு சிலை இருப்பதைப் பார்க்கறாங்க. சிலையை வெளியே கொண்டுவந்து பார்த்தால்  அது அம்மன் சிலை!  ஸ்வயம்பு!  அம்மன் சிலைன்னு இப்ப நான் சொல்றேனே தவிர உண்மையில் அது ஒரு பெரிய நீள்வட்ட வடிவக் கல்தான், அதுலே  அம்மன்போல ஒரு உருவம்  செதுக்கினாப்போல லேசாத் தெரிஞ்சது.

நம்புனால்தான் தெய்வம். அதைக் கல்லுன்னு நினைச்சா வெறும் கல்தான். அதையே அம்மனா நினைச்சா அது அம்மன்தான். 

அந்த 'அம்மன்'  சிலையை  மரம் இருந்த அதே இடத்தில் ஒரு  ஓலைக்குடிலில்  பிரதிஷ்டை செய்யறாங்க. அந்த அம்மனையே வழிபட்டுக்கிட்டு வந்துருக்காங்க.
1977 நவம்பர் 25 ஆம் தேதிதான் இப்போ நாம் பார்க்கும் மூன்றடி உசரமான அம்மன் சிலை, மூலவரா ஆதிபராசக்தி என்ற பெயரில் இங்கே பிரதிஷ்டை ஆச்சு. ஆயிரம் இதழ் தாமரையில் வலதுகாலை மடிச்சு, இடதுகாலைத் தொங்கப்போட்டு கம்பீரமா உக்கார்ந்துருக்காள் !

இந்த மேல்மருவத்தூர் ஏரியாவில் 21 சித்தர்கள் ஜீவசமாதியிலிருக்காங்களாம்.  அதனால் இதை  சித்தர்கள் பீடம் என்ற பெயரில் திரு பங்காரு அடிகள் ஒரு நிறுவனமாக மேம்படுத்தி இருக்கார். கோவிலில் அனைத்து மக்களும் வந்து பூஜையும் செய்யலாம், பெண்களும் கருவறைக்குள் நுழைஞ்சு பூஜை செய்யலாம் என்றெல்லாம்   கொஞ்சம் இறைவழிபாட்டை நவீனப்படுத்தியதில் ஏராளமான பக்தர்கள் இதில் இணைந்து கொண்டார்கள்.

அடிகளாருக்கு அம்மன் அருள் பூரணமாக லபித்து இருப்பதால், 'அம்மன் இவர் வழியாகப் பேசுகிறாள்' என்று சொல்கிறார்கள்.  இந்த 'பேசும்' சமயங்களில் கூட்டம் அளவில்லாத வகையில்  வருகிறதாம். கோவிலில் சிலரிடம் பேசிப்பார்த்து, சேகரித்த விவரங்கள் இவை. அடிகளாரையே அம்மான்னுதான் சொல்றாங்க.

நாம்  சப்த மாதாக்கள் சந்நிதிக்கு அடுத்து,  புத்துமண்டபம் என்ற சந்நிதியில் சேஷனை தரிசித்தோம்.  இவருக்கு அவுங்க என்ன பெயர் வச்சுருக்காங்களோ தெரியாது..... எனக்கு சேஷனத்தான் தெரியும் என்பதால்  சேஷன்னு சொல்றேன். பராசக்திக்குக் குடை பிடிப்பதால் சேஷியாகவும் இருக்க வாய்ப்பு உண்டு.   அம்பாளே இங்கே  நாகவடிவில்  இருந்து அருள்பாலிப்பதால் நவகிரக சந்நிதின்னு ஒன்னு தனியாக இல்லை.

ஓம்சக்தி மேடைன்னு அம்மனின் திரிசூலம்  வச்சு பூஜிக்கறாங்க.! 
மூலவரை தரிசனம் செஞ்சுக்கப்போனோம். உச்சிகால பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருந்தது. கருவறை ரொம்பவே சின்னதுதான். பத்தடிக்குப் பத்தடிதானாம்.  மேடையில் கனகம்பீரமாக ஆதிபராசக்தி உக்கார்ந்திருக்காள். அருமையான அலங்காரம். பூக்களால் அலங்கரிச்சு இருக்காங்க. நகையும் நட்டுமா ஜொலிப்பு!  அம்மனுக்கு நம்மைப்போல ரெண்டே கைகள்தான்!  
கருவறையில் ஸ்வயம்புவாகத் தோன்றிய நீள்வட்டக்கல்லும்  பிரதிஷ்டை பண்ணி இருக்காங்க. சந்நிதிக்குள் ரெண்டு மூணு பெண்கள்தான் இருந்தாங்க.
அப்போ ஒரு தேங்காயில்  கற்பூரம் ஏத்தி, சந்நிதி வாசலுக்கு நேர் எதிரா  இருக்கும்  ரெண்டு மேடை போன்ற அமைப்பில்  ஆரத்தி போல சுத்திட்டு  வெளியே கொண்டு போயிட்டாங்க.  அப்போ நான் கருவறை வாசலில் நிக்கறதாலே யார்கிட்டேயும் விவரம் கேக்க முடியலை. ஆதிபராசக்தியைக் கும்பிட்டுக்கிட்டு வெளியே வந்தோம்.  
பிரமாண்டமான ஹால் இது. ஒரு பக்கம் பிரஸாத விநியோகம்.  வேப்பிலைதான்.
'கொஞ்ச நேரத்தில் அன்னதானம் ஆரம்பிக்கும். இருந்து சாப்பிட்டுட்டுப் போங்க'ன்னு சொன்னாங்க பிரஸாதம் கொடுத்த  அம்மா(ஒரு பெண்மணி)
எல்லா பெண்களும் சிகப்பு வண்ணப்புடவைகள்தான் கட்டி இருந்தாங்க. ஆண்கள் சிகப்பு வேஷ்டி.  இவுங்க யூனிஃபார்ம் இது. ஆனாலும்  ஸ்கூல் யூனிஃபார்ம் போல மாதிரி இல்லை. கலர் கோட் சிகப்புன்னு கணக்கு!

இந்தாண்டை ஒரு பத்ரகாளி (ப்ரத்யங்கரா தேவி)  சந்நிதியும் இருக்கு!  அப்புறம்  யாகம் செய்யும் இடம்,  மற்ற விசேஷ பூஜைகள் செய்யும் இடமெல்லாம் பரந்து விரிஞ்சுருக்குன்னாலும், நாங்க அங்கெல்லாம் போகலை. சுத்தி வரும்போது பார்த்ததுதான்.
காலையில் மூணு மணிக்குக் கோவில் திறந்துடறாங்க. நாலு மணிக்கு அபிஷேகம். அப்புறம்  தினப்படிப் பூஜைகள் எல்லாம் அவுங்க நியமித்தபடி. பகல் ஒரு மணிக்கு  நடை சாத்திட்டுத் திரும்ப மூணு மணிக்குத் திறக்கறாங்க. ராத்ரி எட்டு வரை கோவிலில் தரிசனம் செஞ்சுக்கலாம். அப்புறம் நடை அடைப்பு.  விசேஷ நாட்கள், ஞாயிறு, செவ்வாய்,வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பகலிலும் நடை சாத்தறது இல்லை.  தொடர்ந்து  திறந்தே வச்சுருப்பாங்களாம்.

நாங்க பார்த்துக்கிட்டு இருக்கும்போதே  கம்பித் தடுப்புகளை எல்லாம் ரெண்டு பெண்கள் துடைச்சுச் சுத்தம் செஞ்சுக்கிட்டே போறாங்க. அதுபாட்டுக்கு நீளநீளமாப் போகுது!  இவுங்க எல்லோரும்   ஓம்சக்தி  மன்றத்தின் அங்கங்களாம்.

இந்தியாவிலும், மற்ற வெளிநாடுகளிலுமா  சுமார் அஞ்சாயிரம் மன்றங்கள் இருக்காம்.  ஒவ்வொரு மன்றமும் இங்கே ஒருவாரம் வந்து தங்கி இருந்து அம்மனுக்கு(அம்மாவுக்கு) சேவை செஞ்சுட்டுப் போறாங்களாம். வேலையாட்கள்னு இல்லாம எல்லோருமே  வாலண்டியர்களாக இருப்பதால்  இஷ்டப்பட்டு வேலை
செய்யறாங்க.





ஏகப்பட்ட கடைகள், சாமி சமாச்சாரங்கள்,  பக்தர்களுக்கான செவ்வாடைகள்னு  வச்சு விக்கறாங்க. நானும் சின்னதா ஒரு அம்மன் விக்ரஹம்  வாங்கினேன். தலைக்குப்பின் பாம்புக்குடை !
மூக்கும் முழியும் சரி இல்லைன்னார் 'நம்மவர்'. 'கொடுத்த காசுக்கு இவ்ளோதான் வரும்'னேன்!
கருவறை அம்மன் வலதுகாலை மடிச்சு  உக்கார்ந்துருக்காங்க.  நான் வாங்கின விக்ரஹத்தில்  இடதுகால் மடிஞ்சுருக்கு.  அடிஷனல் அட்ராக்‌ஷன் தலைக்குப்பின்   இருக்கும் 'பாம்பு' !   சரி. போகட்டும்......  எத்தனை நாள்தான் காலை ஒரே மாதிரி மடிச்சு வச்சுக்கமுடியும்?  மரத்துப்போகாது?  நினைவுக்குன்னு வாங்கினதுதானே!


அடிகளார் குடும்ப அங்கங்களும் கோவில்  அண்ட் மற்ற  பொறுப்புகளில் இருக்காங்கன்றது அங்கே வச்சுக்கும் படங்களில் தெரிஞ்சது. நல்லாவே  எஸ்டாப்ளிஷ் ஆகி இருக்காங்க !

திருமண மண்டபம், பாலிடெக்னிக், பள்ளிக்கூடம், ஆஸ்பத்ரி, கல்லூரின்னு இவுங்களும் ஏகப்பட்டவைகளை நடத்தறாங்க.
அதான் சொன்னேனே .... தனி சாம்ராஜ்ஜியமுன்னு!

ரொம்ப நாளாப் போய்ப் பார்க்கணுமுன்னு இருந்த  கோவில்களில் ரெண்டு இன்றைக்கே கிடைச்சது. அதுவரை ரொம்பவே சந்தோஷம்!
வாங்க, இன்னும் இன்றையப் பயணம் முடியலை... கேட்டோ!

தொடரும்......:-)

PINகுறிப்பு: துளசிதளத்துக்கு ஒரு ரெண்டு வாரம் விடுமுறை வேணும். நெருங்கிய தோழியின் நியூஸி விஜயம், கொண்டாடணும் :-) முடிஞ்சால் வாரம் ஒரு பதிவு போட எண்ணம். 

11 comments:

said...

இதுவரை நான் படித்திராத விவரங்கள். என் நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள் எல்லாம் இந்தக்கோவிலின் பக்தர்கள். இவர்களின் உறவினர்கள் இரண்டுபேர் எனக்கு மேலதிகாரிகளாக இருந்திருக்கிறார்கள். ஒருவர் என்னிடம் ஸ்ரீராம், போ வேணும்னாலும் என்ன உதவி வேணும்னாலும் கேளுங்க என்று கூட சொன்னார்!

said...

இந்த அளவு விவரமாக இந்தக்கோவில் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். சிகப்பு கலர் இல்லாத ஆடையுடன் நாம் உள்ளே போகலாமா?

said...

நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்.

தீவிர பக்தர்கள்தான் செவ்வாடை உடுத்திக்கிட்டுப் போறாங்க. திருப்பதிக்கு மஞ்சள் உடை போலன்னு வச்சுக்கலாம்.

மற்றபடி எந்த நிற ஆடை உடுத்திப்போனாலும் பிரச்சனை இல்லை. நானெல்லாம் வெறும் பக்தைதான்.

இடத்தின் சுத்தம் பார்க்கவே ஒருமுறை போகலாம்தான்! அருமை!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி!

said...

நான் இரண்டுமுறை போயிருக்கிறேன். நண்பர்கள் போக வேண்டும் என்று விரும்பியதால். எல்லா மத அமைப்புகளுமே தனி அரசுதான் என்றாலும், எனக்கு ஏற்பு மறுப்புகள் இருந்தாலும் மேல்மருவத்தூரைப் பொறுத்தவரை இரண்டு நடப்புகளை சிறப்பென்று சொல்வேன். ஒன்று சாதி வேறுபாடின்றி சட்டையணிந்து பூசை செய்வது. இரண்டாவதாக அதனிலும் சிறப்பாக பெண்களும் பூசை செய்வது. இவையிரண்டையும் எல்லா இந்துக் கோயில்களுக்கும் கொண்டு சென்றால் மட்டுமே இந்துமதம் சமச்சீரான மதமாக பெருமை கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது.

சிவப்புச் சேலைகள் ஒரேமாதிரி இல்லாம விதவிதமா இருக்குறது நல்லாத்தான் இருக்கு. ஆனா பாருங்க... ஆண்களுக்கு இந்த வசதி இல்ல. ஒரே செக்கச்செவேல்னு வேட்டி சட்டைதான். பெண்களுக்குதான் இந்த உலகம் எவ்வளவு உதவி செய்யுது.

சின்ன சிலைகள்ள ரொம்ப நுணுக்கமான வேலைகள் சற்றுக் கடினந்தான். அதான் கோபால்சார் அப்படிச் சொல்லியிருக்காரு.

said...

விவரமாக் கொடுத்திருக்கீங்க. அது சாம்ராஜ்யம்தான்.

சமீபத்துல ஒருத்தர் கோவிலைப் பற்றிச் சொன்னபோது (பொதுவா), எல்லாம் பிசினெஸ் சென்டரா ஆகிட்டுது. பக்தி, பாரம்பர்யம் என்பதைவிட, எப்படி அதிக வசூல் பண்ணலாம் என்பதிலேயே கவனம் போகுது என்றார்.

said...

வாங்க ஜிரா.

பெண்கள் 'அந்த' நாட்களிலும் கூடக் கோவிலுக்கு வரலாம் என்று சொன்னதும் அருமை. விலக்கி வைக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது உடல் அமைப்பு சார்ந்ததுன்னு புரிதல் இருக்கு பாருங்க. ஆனால் பழக்க வழக்கம் காரணம் பொதுவாகப் பெண்கள் இந்த சமயங்களில் வர்றதில்லை என்பதுதான் உண்மை.

ஆண்களுக்கு சிகப்பில் என்ன வகைகள் காமிக்க முடியும் சொல்லுங்க :-) ரெண்டு சிகப்பு வேஷ்டி இருந்தால் உங்களுக்குப் போதும். ஏன் ஒன்னே ஒன்னு இருந்தாலும் பிரச்சனை இல்லை. அதையே துவைச்சுக் கட்டிக்கலாம். நாங்க இன்றைக்குக் கட்டுனதையே நாளைக்கும் கட்ட முடியுமா? அதான் விதவிதமா :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

எல்லாக் கோவில்களுமே இப்படிப் பிஸினஸ் சென்ட்டராத்தான் ஆகி இருக்கு இந்தியாவில். பெருமாளை ஸேவிக்க காசில்லாமல் முடியுமா? இல்லைன்னா நேரங்காலம் இல்லாம வரிசையில் காத்திருக்க வேண்டி இருக்கே.....

தங்கக்கோவில், இலவச தரிசன வரிசையில் வந்தால் துளி குங்குமம் கூட தர்றதில்லையாம்..... தோழி போயிட்டு வந்து சொன்னாங்க. அதுவும் ரொம்ப தூரத்துலே இருந்துதான் தரிசனமாம்.

காசே தான் கடவுள் என்பது சரியாத்தான் இருக்கு :-(

said...

நானும் இதுவரை போனதில்லை. நண்பர்கள் சிலர் இக்கோவிலுக்கு அடிக்கடி செல்வதுண்டு.

தகவல்கள் தெரிந்து கொண்டேன் - மகிழ்ச்சி.

said...

ரொம்ப சுத்தமா இருக்கே....